புதன், 16 அக்டோபர், 2013

ஸ்படிகமாலை எப்போது அணிய கூடாது?

அழகை எடுத்துக் காட்டுவதற்காகவே நகைகள் அணிகின்றோம். உடலில் பதிநான்கு இடங்களில் அணியும் நகைகளுக்கு ஆறு முக்கிய நன்மைகள் உண்டு. அழகு, தெய்வப்பிரியம்,ஆத்தும தரிசனம்,ஆரோக்கிய இரட்சை,ஸதானக் குறிப்பு,தோஷ  நிவாரணம் என்ற நன்மைகளுக்காகவே நகைகள் அணிகின்றோம். பதிநான்கு உலோகங்களின் சின்னமாக தலையிலும், நெற்றியிலும்,காதிலும், மூக்கிலும் உதட்டிலும் கழுத்திலும், தோளிலும், புஜத்திலும்,  கையிலும், மார்ப்பிலும், இடுப்பிலும், பாதங்களிலும், கால்விரலிலும், கைவிரலிலும், நகைகள் அணிவதுண்டு. தங்கமும் வெள்ளியும் அணியும் போது கைக் கொள்ளும் நம்பிக்கைகள் போலவே ஸ்படிக மாலை அணிவதன் பின்னும் சில நம்பிக்கைகள் உண்டு. இதை அணிய உத்தமமான நட்சத்திரம் கார்த்திகையாம். ஒரு நாள் பசுவின் சாணத்தில் மூழ்கவைத்து ஸ்படிக மாலையை தண்ணீர் பாலில் கழுவி குருவின் உதவியால் அணிய வேண்டும் என்பது ஆசாரவிதி. எந்த காலமானாலும் வெப்பத்தை தடையும் சக்தி இம்மாலைக்குண்டு. கிரகங்கள் மனிதரில் செலுத்தும் செல்வாக்கைக் கட்டுபடுத்த இம் மாலைக்கு இயலும். இரவு வேளை இம்மாலையை தண்ணீரில் இட்டுவைத்து மறுநாள் அத்தண்ணீரைக் குடித்தால் ஆண்மை விருத்தியடையும் என்று நம்புகின்றனர். பௌர்ணமி நாள் ஸ்படிகமாலை அணிந்தால் உடல் சக்தி கூடும் என்றும் தம்பதிகள் இம்மாலை அணிந்து தூங்கக் கூடாதென்றும் விதிக்கப்பட்டுள்ளன. ஸ்படிக மாலையை ஒருவர் அணிந்த பின் மற்ற வர்கள் மாற்றி அணியும் போது தண்ணீருக்குள் குறைந்தது 3 1/2 மணி நேரமாவது ஊறவிட வேண்டும். மற்ற ரத்தின உபயோகத்திற்கும் ஸ்படிக மாலை உபயோகத்திற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. ஸ்படிகத்தைத் தவிர மற்ற அனைத்து ரத் தினங்களையும் இரவில் அணியலாம். ஆனால் ஸ்படிகத்தைக் கண்டிப்பாக இரவில் அணியக்கூடாது. காரணம், அது உப ரத்தின வகையைச் சார்ந்தது மட்டுமல்ல. தானாகத் தன் அதிர்வுகளை வெளியேற்றும் சக்தி ஸ்படிகத்திற்குக் கிடையாது என்பதும் தான்.
பூஜையறையை மூடும் போது தீபங்களை அணைத்துவிட வேண்டுமா? அணையா தீபம் ஏற்றி வழிபடலாமா?

பூஜையறையை மூடும்போது தீபங்களை அணைத்துவிட வேண்டும். அணைத்தால் தான் மறு நாள் காலையில் தீபம் ஏற்ற இயலும், இல்லையெனில், தினம் தினம் காலையில் தீபம் ஏற்றும் சம்பிரதாயம் அற்றுப்போகும். அனுதினமும் காலையிலும் மாலையிலும் தீபம் ஏற்றவேண்டும் என்று இருக்கும்போது, நிரந்தர தீபவொளிக்கு இடமில்லாமல் போவதைத் தெரிந்துகொள்ள வேண்டும். பக்தி மேலீட்டால்... நந்தா தீபம் அணையா விளக்கு ஏற்றுகிறேன் என்ற தனிப்பட்டவரின் சிந்தனையை விதியாக மாற்றக்கூடாது. விளக்கைச் சுத்தம் செய்து புதுத் திரி போட்டு விளக்கேற்றுவது சிறப்பு. அணையா விளக்கு வீட்டுக்கு நல்லது என்பது தங்கள் கணிப்பு. எல்லோரது சிந்தனையும் அப்படித்தான் இருக்கவேண்டும் என்றில்லை. சாஸ்திரத்தை மீறி நமது சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுப்பது சரியில்லை. கோயில்களில்கூட கர்ப்பகிருஹத்தின் கதவைத் திறக்க ஒரு மந்திரம், தீபம் ஏற்ற ஒரு மந்திரம், நிர்மால்யத்தை விலக்க ஒரு மந்திரம், அபிஷேகத்துக்கு ஒரு மந்திரம் என்ற நடைமுறை உண்டு. கர்ப்பகிருஹத்திலும் அணையா விளக்கு இருந்தால் கோயிலுக்கு நல்லதுதானே... என்று சொல்லலாமா! ஸ்வயம்ப்ரகாசனுக்கு விளக்கு எதற்கு? நாம் அவனை தரிசிக்க விளக்கு வேண்டும். மேலும் அணையாவிளக்கு எதிர்பாராமல் அணைந்துவிட்டால், வீணாக மனநெருடலைச் சந்திக்கவேண்டி வரும். எதிர்பாராமல் விளக்கு தீபம் பற்றிக்கொண்டு பூஜையறையும் பாதிப்புக்குள்ளானால், அதுவும் அபசகுனம். ஆகையால், நமது ஆசையை நிறைவேற்ற எண்ணும்போது, ஆராய்ந்து செயல்பட வேண்டும். சாஸ்திரத்தைக் கடைப் பிடித்தால் அபசாரம் இருக்காது.
கோயிலுக்குச் சென்று வந்தால் நேராக வீட்டுக்குத்தான் வர வேண்டும் என்பது சரியா?

நாம் ஆலயத்துக்குச் சென்று நமது மனதின் மாசுகளைப் போக்கி மாசற்றவராகத் திரும்பி வருவதால், நமது புனிதத்தன்மை பாதிக்காவகையில் விளங்கக்கூடிய இடங்களுக்குச் செல்வதால் தவறில்லை. ஆலயத்துக்குச் செல்லும் முன் ஆண்டவனுக்குப் படைக்கப்படகூடியவற்றை நாம் ஏந்திச் செல்வதால் அப்போதும் இதே போன்ற ஒழுக்கத்தை கடைப்பிடிப்பது நன்மையைகொடுக்கும். ஆலயம் செல்வதற்கு முன்னரோ பின்னரோ துக்க நிகழ்ச்சிகள் நடந்த இடங்கள், மற்றும் தீண்டுதல் உள்ள இடங்களுக்கு கண்டிப்பாகச் செல்லக்கூடாது.
திருமணமான பெண்களை திருமதி என்பது ஏன்?

திருமணத்திற்கு முன் பொறுப்பில்லாமல் மற்றும் ஆண்கள் வீணாகச் செலவழித்து திரிவார்கள். திருமணத்துக்குப் பின் தறிகெட்டு அலையும் கணவனை மனைவி திருத்தி விடுகிறாள். அவள் கணவனின் வரம்பற்ற செலவுகளைக் குறைத்து வீட்டில் செல்வம் நிறைய முயற்சி செய்கிறாள். இதற்காக தனது மதிநுட்பத்தை (புத்திசாலித்தனம்) பயன்படுத்துகிறாள். அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்படுகிறது. திருவையும் மதியையும் இணைத்தே திருமணமான பெண்களுக்கு திருமதி என்ற பட்டம் தரப்பட்டது. திரு என்றால் லட்சுமி, மதி என்றால் அறிவு.
வாங்க பழகலாம் ...எளிய முறையில் யோகாசனம்!

யோகாசனம் செய்வதால் பெரு, சிறு நோய்கள் வராமல் தடுக்க வாய்ப்பு உள்ளது. வந்த நோயினைக் கட்டுக்குள் வைக்கலாம். உற்சாகம் பெருகும். உடல் ஆரோக்கியம் கூடும். உடலின் மண்டலங்கள் அனைத்தும் (நரம்பு, இரத்த ஓட்டம், ஜீரணம்) போன்ற மண்டலங்கள் சீரடையும். இளமையாய் இருக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி கூடும். வளர்சிதை மாற்றம் சீராகும். மனவலிமை கிட்டும். மனஅழுத்தம் குறையும். மூளை இதயத்திற்கு நல்ல ஓய்வு கிடைத்து, அதன் திறனை மேம்படுத்தலாம். ஆயுளை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஞாபக சக்தி பெருகும். உடலை வனப்பாக வைத்துக் கொள்ளலாம்.  சோம்பல், சோர்வு, கோபம், பயம் நீக்கலாம். சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இதய நோய்கள், ஆஸ்துமா, சைனஸ் ஸ்பாண்டிலோடிஸ், தூக்கமின்மை, அதிக உடல் எடை, முதுகு வலி, வலிப்பு நோய் தலைவலி மற்றும் கழுத்து வலி, முதுகு மற்றும் மூட்டுவலி, மாதவிடாய் பிரச்சனைகள், கருப்பை பிரச்சனைகள், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், மற்றும் பல்வேறு நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.

யோகாசனம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
ஆடியில் அம்பிகை நேரில் வருவாள்: அருளினை அள்ளித் தருவாள்!

தெய்வீகமான ஆடி : சூரியன் தெற்கு நோக்கி, தன் பயணத்தைத் துவக்கும் தட்சிணாயனத்தின் தொடக்க மாதமான ஆடியில், மாதம் முழுக்க தெய்வீக விழாக்கள் சிறப்பாக இருக்கும். ஆடி விருந்து என்று புதுமணத்தம்பதியருக்கு ஆடிச்சீர் அளித்து விருந்து கொடுப்பர். முதல் ஆடி, நடுஆடி, கடைசிஆடி ஆகிய மூன்று நாட்களும் விருந்துக்குரிய நாளாக உள்ளது. ஆடிசெவ்வாய், ஆடிவெள்ளி ஆகிய நாட்கள் அம்பிகை, முருகப்பெருமானுக்கு உகந்தவை. ஆடிப்பூரம் ஆண்டாளின் ஜென்ம நட்சத்திரம். இவைதவிர, ஆடிவெள்ளி, செவ்வாய், ஆடிஅமாவாசை, ஆடிப்பெருக்கு, கருடபஞ்சமி, வரலட்சுமி விரதம், மகாசங்கடஹர சதுர்த்தி ஆகிய விழாக்கள் வருகின்றன. மொத்தத்தில் வழிபாட்டுக்குரிய தெய்வீக மாதம் ஆடி என்றால் மிகையில்லை.

அம்பிகைக்குரிய மாதம் : ஆடிமாதத்தை அம்பிகை மாதம் என்பர். சுவாமியும், அம்பாளுமாக வீற்றிருக்கும் கோயில்களில் முளைகொட்டுத்திருவிழா இந்த மாதம் தான் நடைபெறும். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா பத்துநாட்கள் நடக்கிறது. இவ்விழா மீனாட்சியம்மனுக்குரிய தனி விழாவாகும். அம்மன் கோயிலுக்குள் இருக்கும் ஆடிவீதியில் வாகனத்தில் பவனி வருவதை தரிசிக்கலாம். விழா நடக்கும் மாதத்தின் பெயரையே இந்த வீதிக்கும் சூட்டியுள்ளனர் முன்னோர். ஆடிப்பூரத்தன்று மீனாட்சியம்மன் உற்சவர் கருவறைக்கு எழுந்தருள்வார். அங்கு மீனாட்சிக்கும், உற்சவருக்கும் ஒரே சமயத்தில் சடங்கு உற்சவம் (பூப்புனித நீராட்டு) நடத்துவர்.

தட்சிணாயன விழாக்கள் : ஆடிமுதல் மார்கழி வரை ஆறு மாதம் தேவலோகத்தில் இரவுப்பொழுது. தை முதல் ஆனி வரை பகல்பொழுது. ஆடியிலிருந்து சூரியன் தன் சுற்றுப்பாதையை தெற்கு நோக்கிச் செலுத்துவதால் இக்காலத்தை தட்சிணாயனம் என்று சொல்வர். "தட்சிணாயனம் என்பதற்கு "தெற்கு நோக்கிய பயணம் என்று பொருள். இதில் ஆடியில் மாரி, காளி, பேச்சி போன்ற பெண் தெய்வ வழிபாடுகள் கிராமப்புறங்களில் சிறப்பாக நடக்கும். அம்பாளுக்குய தனிவிழாவான நவராத்திரி புரட்டாசியில் கொண்டாடப்படுகிறது. நாடு வளம் பெற மழைவளமும், நல்ல மணவாழ்வு பெற கணவன் அமையவும் கன்னிப்பெண்கள் மேற்கொள்ளும் பாவைநோன்பும் தட்சிணாயனத்தில் வரும் மார்கழியில் இடம்பெறுகிறது.

மனசுக்கு புடிச்ச மாப்பிள்ளை அமைய... : கன்னிப்பெண்களும், சுமங்கலிப்பெண்களும் கடைபிடிக்கும் விரதம் அவ்வையார் விரதம். இவ்விரதமிருக்கும் பெண்களைப் பார்க்க ஆண்களை அனுமதிப்பதில்லை. மாவை உப்பில்லாமல் பிசைந்து கொழுக்கட்டை செய்து வேப்பிலை, புளிய இலை, புங்கஇலைகளைப் பரப்பி அதில் கொழுக்கட்டையைப் படைப்பர். நள்ளிரவில் நடத்தப்படும் இவ்வழிபாடு வயதான சுமங்கலியின் தலைமையில் நடக்கும். அப்போது அப்பெண் அவ்வையாரின் வரலாற்றை மற்ற பெண்களுக்கு எடுத்துச் சொல்வார். ஆடிச் செவ்வாயன்று இந்த விரதத்தை அனுஷ்டிப்பது மரபு. தை, மாசி செவ்வாய்க்கிழமைகளிலும் அவ்வையார் விரதம் மேற்கொள்வதுண்டு. இதனை சுலவடையாக" மறந்தா மாசி, தப்பினா தை, அசந்தா ஆடி என்பர். இவ்விரதம் மேற்கொள்ளும் கன்னியருக்கு மனதிற்கு பிடித்த மாப்பிள்ளை கிடைப்பார் என்பது ஐதீகம்.

மாங்கல்ய பலத்திற்கான விரதம் : ஆடி அல்லது ஆவணிமாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் மேற்கொள்ளும் விரதம் வரலட்சுமி விரதம். ஸ்கந்த புராணத்தில், இவ்விரதத்தின் மகிமை பற்றி சிவபெருமான் விளக்குகிறார். இந்த ஆண்டு ஆடி நான்காம் வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட்11) இவ்விரதம் அனுசரிக்கப்படுகிறது. பூஜையறையில் பசுஞ்சாணத்தால் மெழுகி மாக்கோலமிட வேண்டும். அரிசியைப் பரப்பி பூரணகும்பம் வைத்து லட்சுமியை ஆவாஹனம் செய்யவேண்டும். இயலாதவர்கள் லட்சுமி படம் வைத்து மலர் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். நெய் விளக்கேற்றி சர்க்கரைப்பொங்கல், இனிப்புவகைகளை நைவேத்யம் செய்ய வேண்டும். பூஜை முடிந்ததும் நோன்புக்கயிறு கட்டுவது அவசியம். வீட்டுக்கு வந்த சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுக்க வேண்டும். பெண்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால், கணவருக்கு நீண்ட ஆயுள், ஆரோக்கியம் உண்டாகும். இந்நாள் புதுநகை, புதுப்பொருட்கள் வாங்க உகந்தது.

முருகனுக்கு ஆடிக்கிருத்திகை : ஆடியில் வரும் கார்த்திகை முருகப்பெருமானுக்கு உகந்த சிறப்பான நாளாகப் போற்றப்படுகிறது. இதை "ஆடிக்கிருத்திகை என்பர். இந்நாளில் குன்றில் குடியிருக்கும் குமரப்பெருமானை வேண்டி கிரிவலம் வருதல் சிறப்பு. முருகப்பெருமான் அவதரித்த நட்சத்திரம் விசாகம் என்றாலும், இவருக்குரிய விரதமாக கார்த்திகை நட்சத்திரம் அமைந்துள்ளது. தன்னை வளர்த்த கார்த்திகைப் பெண்களுக்கு நன்றி தெரிவிக்கும் அடிப்படையில், இந்நாளில் முருகப்பெருமான், தன்னை வழிபடுவோருக்கு வேண்டிய வரங்களைத் தந்தருள்வார். சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில், கார்த்திகைப்பெண்கள் சிலைவடிவில் காட்சியளிக்கின்றனர். ஆடிக்கிருத்திகை நாளில் இவர்களையும் வழிபட்டு வரலாம். இவ்வாண்டு, ஜூலை25ல் ஆடிக் கிருத்திகை நிகழ்கிறது.

நகை வாங்க நல்லநாள் : தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்கக்கூடாது என்பார்கள். தண்ணீர் வாழ்விற்கு ஆதாரமாக இருக்கிறது. நீர்நிலைகளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஆடி மாதத்தில் "ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. காவிரியை பெண்ணாக பாவித்து மஞ்சள், குங்குமம், மலர்களால் பூஜிப்பர். புதுமணத்தம்பதியர் ஆற்றங்கரையில் நீராடி மாங்கல்யத்தைப் புதுகயிற்றில் கட்டிக் கொள்ளும் சடங்கு நடைபெறும். காவிரிக்கரையோரத்தில் மட்டுமில்லாமல், தீர்த்தம், ஆறு இருக்குமிடமெல்லாம் ஆடி18ல் (ஆக. 3ல்) நீராடி நதிகளை காவிரி அன்னையாக கருதி வழிபடும் வழக்கமும் உண்டு. நதி, குளக்கரைகளில் தீபம் மிதக்க விடும் வழக்கம் அந்நாளில் இருந்தது. நதித்தாயை வணங்கினால் இயற்கைச்சூழல் பாதுகாப்பும், விவசாயத்தில் நல்ல லாபமும் கிடைக்கும். ஆடியில் நகை, புதுப்பொருட்கள் வாங்க நன்னாள். தொழில்களும் பெருகி வளரும் என்ற அடிப்படையில், இந்நாளில் தொழிலும் துவங்குவதுண்டு.

ஆடியில் திருக்கல்யாணம் : ராமபிரான் வழிபட்ட சிவபெருமான் அருள்புரியும் ராமேஸ்வரம் சிறந்த பாவநிவர்த்தி தலமாகத் திகழ்கிறது. சைவமும், வைணவமும் சங்கமிக்கும் இத்தலத்தில், பர்வதவர்த்தினி அம்மனுக்கும், ராமநாதசுவாமிக்கும் ஆடியில் திருக்கல்யாண விழா(ஆக.4) சிறப்பாக நடக்கிறது. காசியாத்திரை சென்று வந்த பக்தர்கள் ராமேஸ்வரத்தில் தீர்த்தமாடுவதை பெரும் பாக்கியமாகக் கருதுகின்றனர். மற்ற மாதங்களைக் காட்டிலும் ஆடிமாதம் முழுவதும் இங்கு தீர்த்த நீராடுதல் சிறப்பானதாகும். பிதுர்வழிபாட்டுக்குரிய தலமாக ராமேஸ்வரம் திகழ்வதால், ஆடி அமாவாசையன்று இங்கு தர்ப்பணம் செய்வது சிறப்பு.

ஆடியே வருக .... ஆனந்தம் தருக!

ஆடி மாதப் பிறப்பு- தட்சிணாயண புண்ணிய காலம், ஆடிப் பண்டிகை என்று தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது. மார்கழியைப் போல ஆடி மாதமும் தெய்வீக மாதமாகும். சுப காரியங்கள் செய்வது தவிர்க்கப்பட்டு, இறைவழிபாட்டில் மக்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் மாதம். தட்சிணாயண சமயத்தில் சூரியன் பூமத்திய ரேகையின் தெற்குப் பக்கத்தில் சஞ்சரிக்கும்போது, வட பாகத்தில் வெயில் கடுமையாக இருக்காது. காற்று, மழை, பனி என்று பருவநிலை காணப்படும். ஆடி மாதம் அம்மனின் மாதமாகவும் கருதப்படுகிறது. இம்மாதத்தில் அம்மனின் அருள் பூரணமாக வெளிப்படும். அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, அம்மனுக்குப் பொங்கல் இடுதல், கூழ் காய்ச்சி ஊற்றுதல் என நிவேதனம் செய்து அவற்றை ஏழைகளுக்குப் பகிர்ந்தளித்து அவர்கள் பசி நீக்கும் மாதமும் இதுவே! ஆடி மாதத்தில்தான் ஸ்ரீவில்லிபுத்தூரில் துளசிப் பாத்திகளுக்கு நடுவே பெரியாழ்வார் என்கிற விஷ்ணு சித்தருக்கு அரங்கனையே ஆளப்போகும் ஆண்டாள் கிடைத்தாள்.

ஆடி என்பது ஒரு அசுரனின் பெயர். ஒருமுறை உமையம்மை, சிவபெருமானை விட்டு விலகி இருந்தபோது, சிவபெருமானது தனிமையைப் பயன்படுத்திக்கொண்டு இந்த அசுரன் பாம்புருவில் உள்ளே நுழைந்து பார்வதி தேவியாக உருமாறி, சிவபெருமான் அருகில் சென்றான். தன்னோடு மகிழ்ந்திருக்க வந்திருப்பது அசுரன் என்பதை உணர்ந்த இறைவன், அவனோடு களித்திருப்பது போல் உறவாடி அவனைக் கொன்றார். இந்த நிகழ்வின் நினைவாகவே இந்த மாதம் ஆடி எனப் பெயர் பெற்றது. ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியர் ஒன்றாக இருக்கக்கூடாது என்ற மரபு பின்பற்றப்பட்டு வருகிறது. ஏனெனில், ஆடி மாதத்தில் கர்ப்பம் தரித்தால் சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கும். அது கடுமையான வெயில் காலம். ஆகையால் தாய், குழந்தை இருவருக்குமே ஆரோக்கியக் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. கயிலையில் சிவபெருமானுக்கு அணுக்கத் தொண்டராய் இருந்த சுந்தரர் பூவுலகில் நம்பியாரூரார் என்ற பெயருடன் சிவபெருமானால் தடுத்தாட் கொள்ளப்பட்ட நாள் ஆடி மாத மூல நட்சத்திர நாளில்தான் ! இவ்வளவு சிறப்புகளைக் கொண்ட ஆடி மாதத்தில், அனைவரையும் வணங்கி வாழ்வில் வளம் பல பெறுவோம்.

கோமதிக்கு ஆடித்தபசு : அம்பிகை தவமிருந்த அற்புத தலம் சங்கரன்கோவில். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இக்கோயிலில், அம்பாளின் தவத்தை மெச்சிய இறைவன் அரியும் சிவனும் ஒன்று என்பதை நிரூபிக்கும் வகையில் சங்கரநாராயணராக காட்சி அளித்தார். இந்நிகழ்ச்சி ஆடிபவுர்ணமியில் நிகழ்ந்ததாக ஐதீகம். ஆடித்திருவிழாவின் 12ம் நாளில் "ஆடித்தபசு என்னும் பெயரில் இவ்விழா நடைபெறும். அன்று கோமதி அம்பாளுக்காக ரிஷபவாகனத்தில் சங்கநாராயணர் எழுந்தருள்வார். இவ்வாண்டு ஆகஸ்ட்11ல் இவ்விழா நடக்கிறது.

ஆண்டாளின் ஆடிப்பூரம் : பன்னிரு ஆழ்வார்களில் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாகத் திருமாலைப் பூமாலையாலும், பாமாலையாலும் துதிக்கும் பேறு பெற்றவள் ஆண்டாள். இவள் அவதரித்த நன்னாள் ஆடிப்பூரம். உயிர்கள் மீது கொண்ட கருணையால் அவர்களுக்கு அருள்பாலிக்க பூமாதேவி, ஆண்டாள் நாச்சியாராக பிறப்பெடுத்தாள். வேதங்களின் வித்தாக விளங்கும் திருப்பாவையை நமக்கு வழங்கினாள். திருப்பாவையில் முப்பது பாசுரங்கள் உள்ளன. "" ஏழேழு பிறவிக்கும் கண்ணா நீயே எனக்கு உற்ற உறவு என பாவைப்பாடலில் வலியுறுத்துகிறாள். ஆயிரமாயிரம் ஆபரணம் இருந்தாலும், கழுத்துக்கு அணிகலனான மாங்கல்யம் தான் உயர்ந்த ஆபரணம். இளம் பெண்களுக்கு மனதிற்கேற்ற நல்ல கணவன் வாய்க்க, ஆடிப்பூர நன்னாளில் ஆண்டாளை அவசியம் வணங்க வேண்டும். இவ்வாண்டு ஆகஸ்ட்2ல் ஆடிப்பூரம் நிகழ்கிறது.

மகா சங்கடஹர சதுர்த்தி : விநாயகருக்கு தேய்பிறை சதுர்த்தியும் உகந்ததாகும். இதனைச் சங்கடஹரசதுர்த்தி என்று சொல்வர். ஆவணியில் விநாயகர் சதுர்த்திக்கு முன்வரும் பெரிய சதுர்த்தியே மகா சங்கடஹர சதுர்த்தியாகும். இந்த ஆண்டு இச் சதுர்த்தி ஆடியின் கடைசி நாளான ஆக., 17ல் வருகிறது. ஆற்றல், அறிவின் அடையாளமாக விநாயகர் திகழ்வதால், இவரை "மேலான தலைவர் என்னும் பொருளில் "விநாயகர் என்று குறிப்பிடுகிறோம். செய்யும் செயல்கள் தடையின்றி நிறைவேற விநாயருக்கு உகந்த சங்கடஹரசதுர்த்தி வழிபாடு அவசியம்.
யார் இறையருள் பெற்றவன்?

ஒருவர் இல்லாதபோது, அவரைப் பற்றிப் பிறரிடம் அவதூறாகவோ அல்லது எதிர்மறையாகவோ சொல்வது புறங்கூறுதல், கோள்சொல்லுதல். இதிலும் கோள் என்றும் குறளை என்றும் இரண்டு வகை உண்டு. ஒருவரது துர்க்குணங்களைப் பற்றி, அவர் இல்லாதபோது அடுத்தவரிடம் சொல்வது கோள், கற்பனையாக.. இல்லாததையும் பொல்லாததையும் இட்டுக்கட்டிக் கூறுவது, குறளை, முன்னதைவிட அடுத்தது மிகவும் தீயது! ஆண்டாள் தனது திருப்பாவையில் பாவை நோன்பு பற்றிக் குறிப்பிடுகிறாள். உணவில் நெய்யும் பாலும் சேர்க்காமல், மலர் சூடிக் கூந்தல் முடிக்காமல், மையிடாத கண்ணுடன் நோன்பு இருப்பார்களாம். செய்யக்கூடாதன என்று சொல்லப்பட்டவைகளையும் செய்யமாட்டார்களாம். குறிப்பாக, தீக்குறளைச் சென்றோதோம் என்கிறாள். இங்கே, தீக்குறளை என்பது தீய செயலான புறங்கூறுதலையே குறிக்கிறது.

மனிதனின் ஐம்புலன்களில், வாய் மூலம் இழைக்கிற பாவப் பட்டியலில், புறங்கூறுதலையும் சேர்த்திருக்கிறது புத்த மதம். வள்ளுவர்கூட, புறங்கூறாமை பற்றித் தனி அதிகாரமே இயற்றியுள்ளார். ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும் புறங்கூறுதல் முக்கிய இடம் வகிக்கிறது. கைகேயியிடம் கூனி மூட்டிய புறங்கூறுதல் எனும் தீ, ராமாயணத்தில முக்கியத் திருப்பங்களை ஏற்படுத்தியது. அதேபோல், சகுனி கௌரவர்களிடம் புறங்கூறி, பற்ற வைத்த தீவினையே மகாபாரதப் போருக்கு முக்கியக் காரணம் ! குரு÷க்ஷத்திரப் போர்க்களத்தில் உறவினர்கள் மீதே அம்பு விட மனம் கலங்கிய அர்ஜுனன், பலவிதமான சந்தேகங்களை, கீதாசார்யனான ஸ்ரீகிருஷ்ணரிடம் கேட்டான். இறையருள் பெற்றவனின் லட்சணங்கள் என்ன? என்பது அர்ஜுனனின் கேள்விகளுள் ஒன்று. அதற்கு 26 நற்குணங்களைக் கொண்டவன் இறையருள் பெற்றவனாகிறான் என, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கூறி, பட்டியலிடுகிறார். அவற்றில், கோள் சொல்லாதிருத்தலும் ஒன்று! ஒருவர் அருகில் இல்லாதபோது, அந்த நபரின் எதிர்மறைக் குணங்களே நினைவுக்கு வருவது, பலருக்கும் வழக்கமாகிவிட்டது. இன்னும் சிலர் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம், மேலதிகாரிகளிடம் தங்களது அலுவலக சகாக்களைப் பற்றி எதிர்மறையாகச் சொல்லி வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். உயரதிகாரியிடம் தான் கொண்டுள்ள விசுவாசத்தைக் காண்பிக்கும் ஓர் உத்தி இது என்ற நம்பிக்கை ஒரு காரணம்; தான் செய்யும் தவறுகளில் இருந்து அதிகாரியின் கவனத்தைச் திசை திருப்பும் நோக்கமும் இதில் உண்டு.

மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் உத்தியாகவும், பிறரை விடத் தாங்கள் சிறந்தவர்கள் எனக் காட்டிக்கொள்ளும் சாதனமாகவும் சிலர் புறங்கூறுதலைக் கையாளுகின்றனர். இன்னும் சிலருக்கு மற்றவர்களின் ரகசியங்களை அம்பலமாக்குவதில் அற்ப மகிழ்ச்சி ! பிறர் துன்பப்படுவதில் மகிழ்ச்சி காணும் சாடிஸ்ட் மனப்பான்மை உள்ளவர்களும் புறங்கூறுதலில் ஈடுபடுவார்கள். தங்கள் பிரச்சனயைத் தாங்களாகவே தீர்த்துக்கொள்ள இயலாதவர்கள், மற்றவர்களிடம் உதவி நாடும்போது புறங்கூருகிறார்கள் என்பது உளவியலாளர்கள் கருத்து. அதேநேரம் , தீமை விளைவிப் போரைப் பற்றி உரியவர்களுக்குத் தகவல்கள் அளிப்பது. உண்மைகளை சாட்சியமாக அளிப்பது போன்றவை கோள் சொல்லுதலின் கீழ் வராது.

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யும் ஆறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்

- என்பது ஆண்டாள் வாக்கு.
வழிபாடு மற்றும் பண்டிகைகளில் வெற்றிலை முக்கிய இடம் வகிப்பது ஏன்?

இந்துமதப் பண்டிகைகள், விசேஷம், விரதம், திருமணம் என அனைத்திலும் முக்கிய இடம் வகிக்கிறது வெற்றிலை. துப்பிதழ்க்கேற்ற வாசனைத் தாம்பூலங்கள். இப்போது கொண்டு வைத்தேன் ஏற்றுக் கொண்டருள் தாயே என்று மானஸ பூஜையில் வரும் வரிகள் நெகிழச் செய்பவை. வெற்றிலையின் காம்பைக்கிள்ளி நீர் வார்த்து, கற்பூர தாம்பூலம் நிவேதன முடிவில் சமர்ப்பிக்கப்படுகிறது. தேவியின் நிறம் பச்சை; சிவனின் நிறம் வெண்மை ! இரண்டும் சேர்ந்து சிகப்பாகும்போது அதுவே சக்தியின் வடிவம். பச்சை இலையின்றி வெறும் சுண்ணாம்பின் வெண்மையால் பயன் இல்லை. சக்தி இல்லாமல் சிவம் இல்லாததுபோல் வெற்றிலையின்றி வழிபாடு இல்லை.

திருமணம் நிச்சயமாவதை நிச்சயதாம்பூலம் என்கிறார்கள். வெற்றிலைபாக்கு கொடுத்துவிட்டால் அது தாம்பூல சத்தியம். பிறகு அதை யாரும் மீறத் துணிய மாட்டார்கள், முற்காலத்தில். சிரார்த்தம் செய்யும் போதும் மற்ற சடங்குகளின் போதும் தானம் கொடுப்பவர்கள் வெற்றிலை பாக்கின் மீது உத்திரணியால் நீர் வார்த்துக் கொடுப்பது வழக்கம். வடஇந்தியாவிலும் இந்த வழக்கம் பரவலாக இருக்கிறது. வடநாட்டவர்கள், தீபாவளியன்று லக்ஷ்மி பூஜை செய்யும் போது மூன்று வெற்றிலையையும், மூன்று பாக்கையும் பூசாரி எடுத்துவைப்பார். லக்ஷ்மி, சரஸ்வதி, துர்க்காவை இது குறிக்குமாம். மாங்கல்யதாரணம் முடிந்ததும் வந்தோரனைவரும் வாழ்த்திவிட்டு விருத்துண்டு விட்டுப் புறப்படுகையில் முகூர்த்த வெற்றிலைபாக்கு கொடுக்காமல் அனுப்பமாட்டார்கள். திருமணத்தின்போது கணவன் மனைவி இருவருக்கும் பெண்ணின் சகோதரன் தாம்பூலம் மடித்துக் கொடுப்பது ஒரு சம்பிரதாயம். நலங்கின்போதும், முதல் இரவின் போதும் வெற்றிலை பாக்குக்கு முக்கிய இடம் உண்டு.

கம்பராமாயணத்தில் ஒரு உருக்கமானகட்டம். ராவணனால் சிறை எடுக்கப்பட்ட சீதை. இளம் வெற்றிலையையார் மடித்து வாயில் போட ராமன் உண்பான் என்று வருந்தினாளாம். தருமன் ராஜசூய யாகம் நடத்திய போது முதல் தாம் பூலத்தை கண்ணன் பெற்றுக் கொண்டான் என்று மகாபாரதம் சொல்கிறது. திவ்ய பிரபந்தத்தில் உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் எம்பெருமான் என்றென்றே கண்களில் நீர்மல்கி என்று மனம் உருகிப்பாடுகிறார் நம்மாழ்வார். காளமேகப்புலவர் ஆதி நாளில் திருவானைக்கா கோயிலில் பரிசாரகராக இருந்தாராம். அங்கே தாசியாக இருந்த மோகனாங்கி என்பவளின் அழகில் மயங்கி ஒருநாள், கோயில் பிரகாரத்திலேயே அவள் வருகைக்காக காத்திருந்த நிலையில் கண்ணயர்ந்தார். நள்ளிரவில் அகிலாண்டநாயகி அம்மன் அவர் முன் தோன்றி, தன் வாயில் இருந்த தாம்பூலத்தை அவர் வாயில் உமிழ்ந்தாளாம், அவர் அதைச் சுவைக்க, தெய்வப் பிரசாதமான தாம்பூலம் நாவில் பட்டதும் நாவன்மை பெற்ற காளமேகம், ஆசுகவி பாடுவதில் வல்லவரானாராம். இதுபோன்றே, கூத்தனூரில் தேவி சரஸ்வதி தன் வாய்த்தாம் பூலத்தின் சாறை அளித்து ஒட்டக்கூத்தரை கவி வித்தகர் ஆக்கியதாகவும் ஒரு வரலாறு உண்டு. வெற்றிலையை வாடவிடுவது வீட்டுக்கு சுபமல்ல என்பது நம்பிக்கை. வெற்றிலை பாக்கை எப்போதும் வலதுகையால்தான் வாங்கவேண்டும். மகிமை மிக்கதும், மங்களகரமானதுமான வெற்றிலை, சுபிட்சத்தின் அடையாளமாகவே கருதப்படுகிறது.
பூக்களில் 99 வகைகளா! இறைவனை வணங்க சிறந்த பூ எது?

குறிஞ்சிப்பாட்டு பாடியவர் கபிலர்.  இது 261 அடிகளைக் கொண்டது. காதலித்தவனை ஒரு பெண் திருமணம் செய்து இல்லறம் நடத்துவது குறித்து இதில் கூறப்படுகிறது. ஆரிய மன்னன் பிரகத்தனுக்கு தமிழின் மேன்மையை உணர்த்துவதற்காகக் கபிலர் இப்பாடலைப் பாடினார். பெருங்குறிஞ்சி என்ற பெயரும் இதற்கு உண்டு. குறிஞ்சிப்பாட்டின் தலைவி, தனது தோழியுடன் நீராடி மகிழ்கிறாள். பலபூக்களைப் பறித்துப் பாறையில் குவிக்கிறாள். அதில் 99 மலர்கள் இடம்பெறுகின்றன. இம்மலர்கள் 34 அடிகளில் தொடர்ச்சியாக வர்ணிக்கப்படுகின்றன. அப்பூக்களின் பெயர்கள் இதோ! காந்தள், ஆம்பல், அனிச்சம், குவளை(செங்கழுநீர்ப்பூ), குறிஞ்சி, வெட்சி, செங்கோடுவேரி, தேமா, மணிச்சிகை(செம்மணிப்பூ), உந்தூழ்(பெருமூங்கில்), கூவிளம்(வில்வம்), எறுழம், கள்ளி(மராமரப்பூ), கூவிரம், வடவனம், வாகை, குடசம்(வெட்பாலைப்பூ), எருவை(பஞ்சாய்க்கோரை), செருவிளை(வெண்காக்கனம்), கருவிளை(கருவிளம்பூ), பயினி, வானி, குரவம், பசும்பிடி (பச்சிலைப்பூ), வகுளம்(மகிழம்பூ), காயா(காயாம்பூ), ஆவிரை, வேரல்(சிறுமுங்கில் பூ), சூரல்(சூரைப்பூ), குரீஇப்பூளை (சிறுபூளை, கண்ணுப்பிள்ளை என்னும் கூரைப்பூ), குறுநறுங்கண்ணி(குன்றிப்பூ), குருகிலை(முருக்கிலை), மருதம், கோங்கம், போங்கம்(மஞ்சாடிப்பூ), திலகம், பாதிரி, செருந்தி, அதிரல்(புனலிப்பூ), சண்பகம், கரந்தை(நாறுகரந்தை), குளவி(காட்டுமல்லி), மாம்பூ, தில்லை, பாலை, முல்லை, குல்லை (கஞ்சங்கொல்லை), பிடவம், சிறுமாரோடம்(செங்கருங்காலிப்பூ), வாழை, வள்ளி, நெய்தல், தாழை(தெங்கிற்பாளை), தளவம்(செம்முல்லைப்பூ), தாமரை, ஞாழல், மௌவல், கொகுடி, சேடல்(பவளக்கான் மல்லி), செம்மல்(சாதிப்பூ), சிறுசெங்குரலி(கருந்தாமக்கொடிப்பூ), கோடல்(வெண்கோடற்பூ), கைதை(தாழம்பூ),வழை(சுரபுன்னை), காஞ்சி, நெய்தல்(கருங்குவளை), பாங்கர்(ஓமை), மராஅம்(மரவம்பூ, வெண்கடம்பு), தணக்கம், ஈங்கை(இண்டம்பூ), இலவம், கொன்றை, அடும்பு(அடும்பம்பூ), ஆத்தி, அவரை, பகன்றை, பலாசம், பிண்டி(அசோகம்பூ), வஞ்சி, பித்திகம்(பிச்சிப்பூ), சிந்துவாரம்(கருநொச்சிப் பூ), தும்பை, துழாஅய்(துளசி), தோன்றி, நந்தி(ந்நதியாவட்டைப்பூ), நறவம்(நறைக்கொடி), புன்னாகம், பாரம்(பருத்திப்பூ), பீரம்(பீர்க்கம்பூ), பைங்குருக்கத்தி(பசிய குருக்கத்திப்பூ), ஆரம்(சந்தனம்), காழ்வை(அகில்), புன்னை, நரந்தம்(நாரத்தம்பூ), நாகம், நள்ளிருள்நாறி(இருவாட்சிப்பூ), குருந்தம், வேங்கை, புழுகு(செம்பூ) என்பவை.

இத்தனை பூக்கள் இந்த மண்ணில் ஒரு காலத்தில் இருந்திருக்கின்றன. இப்போது ஒரு சிலவே உள்ளன. இவற்றின் பெயர்களைத் தொகுத்துத் தந்த கபிலரை இயற்கையை வர்ணிப்பதில் கபிலரே சிறந்தவர் என்று தமிழறிஞர் தனிநாயக அடிகளார் போற்றுகிறார். இவற்றிற்கெல்லாம் மேலாக சிறந்த பூ அன்பு என்கிறார் விவேகானந்தர். இந்த அன்பினால்,  அள்ளிக்கொடுக்கும் வள்ளலான இறைவனை பூஜித்தால் நமக்கு வேண்டியதைப் பெறலாம்.
நாம் அளிக்கும் நிவேதனத்தை சுவாமி சாப்பிடுவாரா?

தீபாவளி வந்தால் பலகாரங்களை சுவாமியின் முன் படைக்கிறோம். பொங்கல் வந்தால் வெண்பொங்கல், சர்க்கரைப்பொங்கலை நிவேதனம் செய்கிறோம். கிருஷ்ணஜெயந்தி வந்தால் சீடை, லட்டு, முறுக்கு என வைக்கிறோம். இதையெல்லாம் பார்க்கும் சிலர் கேலியாக, சுவாமியா சாப்பிடுகிறார், அவர் பெயரைச் சொல்லி நீங்கள் சாப்பிடுகிறீர்கள் என கேலி செய்வர். இவ்வாறு கேலி செய்பவர்களிடம் சற்றும் கோபப்பட நமக்கு உரிமையில்லை. ஏனெனில், அவர்கள் உண்மையைச் சொல்கிறார்கள். அவர்கள், நிவேதனம் என்பதன் பொருள் அறியாமல் பேசினாலும் நிஜம் அது தான். நிவேதனம் என்றால் சுவாமியை சாப்பிட வைத்தல் என்பது பொருள் அல்ல. அதற்கு அறிவித்தல் என்று அர்த்தம். இறைவா! இந்த சமயத்தில் எனக்கு இந்த உணவை உண்ணத்தந்து உயிர் காத்த உனக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்று அறிவிப்பதே நிவேதனமாகும். சுவாமியின் முன்னால் இலையைப் போட்டு பத்தி, சாம்பிராணி காட்டி நிவேதனம் செய்வது விசேஷநாட்களுக்கு மட்டும் தான் கருதுகிறார்கள். இந்த நிவேதனத்தை தினமும் செய்யலாம். நம் வீட்டில் அன்றாடம் சமைக்கும் வெள்ளை அன்னத்தை சுவாமிக்கு நிவேதனம் செய்துவிட்டு, அவரது நினைவோடு சாப்பிட்டால் உடலும் சுத்தமாகும், உள்ளமும் சுத்தமாகும். நோய் என்ற பேச்சுக்கே இடமிருக்காது.
அம்மனுக்கு என்ன அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?

இந்த உலகை படைத்து, காத்து வரும் ஜகன்மாதாவுக்கு  கீழ்கண்ட முறைப்படி  அபிஷேகங்களைச் செய்தால் சிறப்பான பலன்களைப் பெறலாம்

சந்தனாதித் தைலங்களால் அபிஷேகம் செய்பவர் சுகம் பெறுவர்.
அரிசி மாவு - மல நாசம் மலம் என்பது தீவினைகள்
மஞ்சள் பொடி - ராஜ வசியம், அரசாங்க அலுவல்களை விரைவில் சாதகமாக்கிக் கொள்ளலாம்.
பஞ்ச கவ்யம் - ஆத்ம சுத்தி, தெய்வீக சாதனைக்கு உதவுவது.
ரசபஞ்சாம்ருதம் - கார்யஸித்தி, எல்லாக் காரியங்களிலும் வெற்றி
பல(பழ)பஞ்சாமிர்தம் - தனவிருத்தி குறைவற்ற செல்வம் தரும்
பால் - தீர்க்காயுள், நீண்ட ஆயுள்தரும்
தயிர் - குழந்தைப்பேறு உண்டாகும்.
நெய் - மோக்ஷம் மோட்சத்தைத் தரும். ஞான விருத்தி, ஞானத்தை அளிப்பது.
தேன் - வாக்ஸித்தி, இனிமையான குரலையும், சங்கீதத்தில் திறமையையும் அளிக்கும்.
கருப்பஞ்சாறு - நித்ய சுகம், அளவற்ற இன்பங்களைக் கொடுக்கும்.
சர்க்கரை - சத்ரு நாசம், எதிரிகளை விரட்டி வெற்றி தரும்.
வாழைப்பழம் - தான்யவிருத்தி, பயிர் விருத்தி அமோக விளைச்சல் செழிப்பு.
பலாப்பழம் - எவரையும் வசப்படுத்தும் வசீகரத் தன்மை.
எலுமிச்சம்பழம் - ம்ருத்யு நிவாரணம், அகால மரணத்தை நிவிருத்தி செய்து வியாதிகளைத் தீர்த்து நலம் தரும்.
அன்னம் - ராஜகௌரவம், அரசுரிமை, அரசனுக்குச் சமமான போக போக்கியங்கள் தரும்.
இளநீர் - அபமிருத்யு நாசம். சத்புத்திரப்பேறு. கோரோசனை, தீர்க்காயுள், நீண்ட ஆயுள்.
பச்சைக்கற்பூரம் - பயத்திலிருந்து விடுவித்து மன நிம்மதியையும், சந்தோஷத்தையும் தரும்.
கஸ்தூரி - ஜயம் வெற்றி தரும்.
பன்னீர் - சாலோக்யம், தெய்வ உலகில் வாழும் பேறு கிட்டும்.
சந்தனக்குழம்பு - சாயுஜ்யம், சிறந்த ஞானம் பெற்று இறையுணர்வு பெற்று இறைவனோடு ஐக்கியமாகும் நிலை. சாயுஜ்ய நிலையளிக்கும்.

சுத்தமான குளிர்ந்த நீராலும், கங்கை முதலான புண்ணிய நதிகளின் தீர்த்தங்களால் அபிஷேகம் செய்பவர் அன்னையின் அருளுக்குப் பாத்திரமாகி அனைத்து வினைகளும் ஒழிந்து இவ்வுலக நலன்களும் மேலுகப் பேறும் ஒருங்கே பெறுவர்.