சனி, 14 செப்டம்பர், 2013

சீதை தீக்குளித்தது ஏன்?

ராவணனிடம் இருந்து மீட்கப்பட்ட சீதையின் கற்புநெறியை நிரூபிக்க தீக்குளிக்கும்படி ராமன் சொன்னதை பெண் சமுதாயம் ஏற்றுக்கொள்ளவில்லை. ராமனே இப்படி சந்தேகப்படலாமா? என்று கூறுவதுண்டு. ஆனால் சீதையால் அக்னிபகவான் தனது தூய்மையை மீண்டும் பெறவே இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது. ராவணனின் யாகசாலையில் வேலைசெய்த அக்னிபகவான் பல பாவங்களை செய்ய வேண்டியதாக இருந்தது. பல முனிவர்களையும் சாதுக்களையும் ராவணனின் உத்தரவுப்படி அவன் அழித்தான். இந்த பாவத்தில் இருந்து நீங்கி பரிசுத்தம் ஆகவேண்டுமானால் சீதாதேவி என்னுள் மூழ்கி எழவேண்டும் என கோரிக்கை விடுத்தான். ராமனும் அதை ஏற்றுக்கொண்டு சீதாவை தீயில் மூழ்கிவரும்படி உத்தரவிட்டான். பகவானின் உத்தரவை ஏற்ற சீதா தீக்குள் இறங்கினாள். அவளது கற்புத்தீ முன் அக்னியின் பாவங்கள் எல்லாம் அழிந்துபோயின. இதுதான் சீதாதேவி அக்னிக்குள் இறங்கிய வரலாறு. நெருப்பையும் பரிசுத்தமாக்கும் வல்லமை பெற்றவள் சீதா.

சீதை கடத்தப்பட்ட ஊர்
ராமனும் சீதையும் வனவாசம் செய்தபோது ராவணன் சீதையை தூக்கி சென்றான். பஞ்சவடி என்ற இடத்தில் தங்கியிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. பஞ்சவடி தற்போதைய நாசிக் என்ற ஊரின் ஒரு பகுதியாகும். மும்பையிலிருந்து 117 மைல் தூரத்தில் நாசிக் அமைந்துள்ளது. இங்கு கோதாவரி ஆறு பாய்கிறது. சூர்ப்பனகை இங்கு வந்துதான் சீதையை பார்த்து தனது அண்ணனிடம் தகவல் சொன்னாள். அப்போது லட்சுமணன் அவளது மூக்கை அறுத்தான். மூக்கு அறுபட்ட இந்த இடத்திற்கு நாசிகை என்ற பெயர் ஏற்பட்டது. அதுவே காலப்போக்கில் நாசிக் என்று ஆயிற்று.

கோயில்களில் தீபாராதனை காட்டுவது ஏன்?

கோயில்களில் கற்பூர தீபாராதனையும், நெய்விளக்கு தீபாராதனையும் செய்யப்படுகின்றன. கற்பூரமும் நெய்விளக்கும் கடைசிவரை எரிந்து போகும். எதுவுமே மிஞ்சாது. மனிதன் இறந்தபிறகும் இதே நிலைமைதான். எஞ்சும் சாம்பல் கூட தண்ணீரில் கரைக்கப்பட்டு விடுகிறது. இந்த தத்துவத்தை உணர்த்தவே கோயில்களில் தீபாராதனை காட்டுகிறார்கள். எனவே நம்மை இறைவனுக்கு அர்ப்பணிப்போம் என்பதை எடுத்துக் காட்டவே தீபாராதனை செய்யப்படுகிறது. மேலும் கற்பூர தீபாராதனைக்குப் பிறகு பிரசாதமாக கொடுக்க அதில் எதுவுமே மிஞ்சாது. இதரவகை வழிபாடுகள் மூலம் நைவேத்தியம் மிஞ்சும்.  அதை பிரசாதமாக கொடுப்பதற்கு வழி உண்டு. கற்பூரம் தன்னைத்தானே அழித்துக்கொண்டு ஒளி கொடுப்பதைப்போல நாமும் மற்றவர்களுக்காக நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் வகையிலும் இந்த தீபாராதனை செய்யப்படுகிறது.
தீர்த்தமாடும் முறை...

கடலிலோ, புண்ணிய நதிகளிலோ புனித நீராடும் போது ஒரே ஆடையை மட்டும் உடுத்தி நீராடக்கூடாது. உடுத்தியிருக்கும் ஆடையின் மீது இடுப்பில் மற்றொரு ஆடையை சுற்றி கட்டிக்கொள்ள வேண்டும். தீர்த்தத்தில் மூழ்குவதற்கு முன் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி இடுப்பு வரை தண்ணீரில் நனையும்படி நிற்கவேண்டும். மூன்றுமுறை சிறிதளவு தீர்த்தத்தை உள்ளங்கையில் எடுத்து ஆசமனம் (சிறிதளவு குடித்தல்) செய்ய வேண்டும். பின்பு புரோட்சணம் (தலையில் சிறிதளவு தெளித்தல்) செய்ய வேண்டும். முதல்முறை மூழ்கும்போது கண்கள், காதுகள், மூக்குத்துளைகளை கைகளால் மூடிக்கொண்டு மூழ்கவேண்டும். ஈர ஆடையுடன் மூழ்கக்கூடாது. இரவில் தீர்த்த நீரில் மூழ்கக்கூடாது. சிவராத்திரி, சந்திர கிரகணம் ஆகிய நாட்களில் மட்டும் இரவு நீராடலாம்.

முனிவர்கள் பெயரால் தீர்த்தங்கள்
ராமேஸ்வரம் : அகத்தியர் தீர்த்தம்
சிதம்பரம் : வியாக்ரபாதர் தீர்த்தம், கவுதமர் தீர்த்தம்,  அகஸ்தியர் தீர்த்தம்
சீர்காழி : அகத்தியர் தீர்த்தம், பராசர தீர்த்தம்
திருவாரூர் : விஸ்வாமித்திரர் தீர்த்தம்
பாணதீர்த்தம் : அகத்தியர் தீர்த்தம்
கல்யாணி தீர்த்தம் : அகத்தியர் தீர்த்தம்
பேரூர் : அகத்தியர், வசிஷ்டர், நாரதர் தீர்த்தம்.

அர்ச்சனை என்ற சொல்லின் பொருள் தெரியுமா?

அர்ச்சனை என்ற சொல் அர்ச்சா என்ற சொல்லில் இருந்து வந்ததாகும். அர்ச்சா என்றால் சிலை என பொருள். இந்த சொல்லில் இருந்தே அர்ச்சனை, அர்ச்சித்தல், அர்ச்சித்தர் என்ற சொற்கள் வந்தன. அர்ச்சித்தர் என்றாலும் சிலை என்றே பொருள்படும். ஆண்டவனுக்கு செய்யப்படும் ஆறுவகை உபசாரங்களுள் அர்ச்சனையே முக்கியத்துவம் பெறுகிறது.

ஆறுவகை உபசாரங்கள்
இறைவனுக்கு ஆறுவகையான உபசாரங்கள் செய்யப்படுகின்றன.
1. அபிஷேகம்: தண்ணீர், பால், தேன், தயிர், பன்னீர், இளநீர் மற்றும் பல பொருட்களால் செய்யப்படுவது.
2. அலங்காரம்: பட்டு பீதாம்பரத்தாலும், பொன்னாலும், மலர் மாலைகளாலும், தங்க நகைகளாலும், வைர வைடூரியங்களாலும் அழகுபடுத்துவதாகும்.
3. அர்ச்சனை: பூக்களாலும், பாக்களாலும் செய்யப்படுவது.
4. நைவேத்தியம்: பல்வேறு உணவு வகைகள், பால், பழம் முதலியவற்றை படைப்பது.
5. ஆராதனை: தூபம் காட்டுதல், தீபம் காட்டுதல்.
6. உற்சவம்: பெரு விழா நடத்தி மூர்த்தியை வலமாக வீதிகளில் கொண்டு செல்லுதல். 

யாகம் என்பது என்ன?

ஹோம சமித்துக்களை திரட்டிக்கொண்டு அக்னி குண்டங்கள் எழுப்பி வேதியர்களால் செய்யப்படுவது மட்டும் யாகம் ஆகிவிடாது. எந்த மனிதனிடமும் மிருகத்திடமும் பகைபாராட்டாமல் இருத்தல், இருப்பதைக் கொண்டு சிறப்போடு வாழ்தல், ஒழுக்கத்தை உயிர்மூச்சாக கொள்ளுதல், கர்வம் இன்மை, தியானம் செய்தல், மனதை கட்டுப்படுத்துதல், உண்மையே பேசுதல், தானம் கொடுத்தல் ஆகிய குணங்கள் ஒரு மனிதனுக்கு இருந்தாலே அவன் பெரிய பெரிய வேள்விகளை செய்தவனுக்கு சமமானவன் ஆவான்.
எலுமிச்சை விளக்கேற்றும் முறை.

ராகு கால துர்க்கா பூஜையில் முதலிடம் பெறுவது எலுமிச்சை பலி ஆகும். பழத்தை நறுக்கும்போது ஐம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மூடியை திருப்பும்போது க்ரீம் என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். அதில் பஞ்சு திரியை இடவேண்டும். எண்ணெய் ஊற்றும்போது க்லீம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்தவிளக்கை துர்க்கையின் முன் வைத்து ஏற்றும்போது சாமுண்டாய விச்சே என்று சொல்லி தீபம் ஏற்ற வேண்டும். விளக்கேற்றிய பிறகு கோயிலை ஒன்பது அல்லது 21 முறை சுற்றிவர வேண்டும். ஐம் என்ற சொல் சரஸ்வதியையும், க்ரீம் என்ற சொல் லட்சுமியையும், க்லீம் என்ற சொல் காளியையும் குறிக்கும். சாமுண்டாய விச்சே என்ற சொல்லுக்கு சரஸ்வதி கடாட்சம், லட்சுமி கடாட்சம், காளி கடாட்சம் ஆகியவற்றை வழங்கும் தெய்வமே
என பொருள்.

எலுமிச்சையின்  மகிமை
ராகு காலத்தில் எலுமிச்சையை துர்க்காதேவிக்கு தீபம் ஏற்று பயன்படுத்துகிறார்கள். சூலாயுதங்களில் எலுமிச்சை குத்தப்படுகிறது. இதற்கு காரணம் எலுமிச்சை தேவ கனி என்பதால் ஆகும். மாம்பழத்தில் வண்டு குற்றம் உண்டு. பலாவில் வியர்வை குற்றம் உண்டு. வாழையில் புள்ளி குற்றம் உண்டு. ஆனால் எலுமிச்சையில் மட்டும் இவ்வித குற்றங்கள் இல்லை. மனிதனுடைய எண்ணங்களை ஈர்க்கும் சக்தி மற்ற கனிகளைக் காட்டிலும் எலுமிச்சைக்கு அதிகம் உண்டு.

சித்தர்களும், சமாதி அடைந்த தலங்களும்..

கொங்கணவர் - திருப்பதி, போகர் - பழநி,  திருமூலர் - சிதம்பரம், பாம்பாடம் சித்தர் - விருத்தாச்சலம், இடைக்காட்டுச்சித்தர் - திருவண்ணாமலை,  சச்சிதானந்த சுவாமி - வள்ளிமலை,  கோரக்கர் - போரூர், நந்தீசர் - காசி,  குதம்பை சித்தர் - மாயவரம்
கமலமுனிவர் - திருவாரூர், வான்மீகர் - எட்டக்குடி,  கட்டமுனிவர் - ஸ்ரீரங்கம்,
மச்சமுனிவர் - அழகர்கோவில், ராமதேவர் - மதுரை, கந்தாநத்தித்தேவர் - வைத்தீஸ்வரன் கோயில்,  தன்வந்திரி - ராமேஸ்வரம்,  பதஞ்சலி முனிவர் -  திருவனந்தபுரம்
கும்பமுனிவர் -  சப்தகிரி.
சன்னதியை மறைத்து நிற்கக்கூடாது என்பது ஏன்?

ஆலய ஆகம விதிப்படி கர்ப்ப கிரகத்தினுள் இருக்கும் மூலவருக்கும் எதிரில் நந்தி இருக்கும் இடத்திற்கும் இடையில் நின்று வணங்கக்கூடாது. ஆலய சாஸ்திரப்படி மூலவருக்கு முன்னால் உள்ள நந்தியின் மூக்கிலிருந்து விடும் மூச்சுக் காற்றினால்தான், கர்ப்பகிரகத்தில் உள்ள மூலவருக்கு உயர்நிலை கிடைக்கும் என்பது நம்பிக்கை. மூலவரின் வயிற்றுப்பகுதியில் உள்ள தொப்புள் பாகத்தை உயர்நிலையாகக் கொண்டு, அந்த இட மட்டத்தின் நேராக நந்தியின் மூக்கு அமையுமாறு கோயில்களில் நந்தி அமைக்கப்படுகிறது. இம்மூச்சுக்காற்று தடைபடாமல் செல்வதற்காகவே குறுக்கே போவது கூடாது என்கின்றனர். சன்னதியைவிட்டு அகன்று நின்று வழிபட வேண்டும் என்று சொல்வதும் இதன் விளைவாக வந்தது தான்.
காகத்திற்கு உணவிடுவது ஏன்?

நாம் உணவு உண்ணும் முன் காகத்துக்கு ஒரு பிடி உணவு வழங்க வேண்டும். காரணம், நம்முடைய முன்னோர்கள் காகத்தின் வடிவில் வருவதாக ஒரு நம்பிக்கை இருக்கிறது. அவர்களுடைய ஆசியினால் தான் நாம் இவ்வுலகில் அமைதியாக, சந்தோஷமாக, நிம்மதியாக வாழ முடிகிறது. எனவே அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு காகத்திற்கு தினசரி உணவிடுகின்றனர். காகத்திற்கு உணவிடும் பழக்கத்தினால் கணவன், மனைவி ஒற்றுமை வளர்ந்து குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலைக்கும் என்பது நம்பிக்கை. சனீஸ்வர பகவானின் வாகனமாகையால், காகத்திற்கு உணவளிப்பதன் மூலம் சனி பகவான் தரும் கெடுபலன்களிலிருந்து விடுபடலாம். இறைவனின் பரிபூரண அருளையும், அன்பையும் பெறலாம். இதில் இன்னொரு தத்துவமும் இருக்கிறது. காகத்தை "ஆகாயத்தோட்டி என்பர். இந்தப் பறவை யாருக்கும் கெடுதல் செய்வதும்
இல்லை. இது நம்மைச் சுற்றியுள்ள அசுத்தங்களை அடியோடு களைவதாலும் இந்த இனம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதின் அடிப்படையிலும் உணவிடும் பழக்கம் வந்தது. எப்படியிருப்பினும், ஜீவகாருண்யம் மிக்க புண்ணியச்செயல் இது.
கீதையின் பொருள் தெரியுமா?

பகவத்கீதையை "பகவத்கீதா என்று சொல்வதும் வழக்கம். "பகவத் என்றால் "இறைவன். "கீதா என்றால் "நல்ல உபதேசம். இதற்கு இன்னொரு பொருளும் உண்டு. "கீதா என்ற சொல்லை வேகமாகச் சொல்லும் போது "தாகீ என்று மாறும். "தாகீ என்றால் "தியாகம். வாழ்வில் வரும் அனைத்து சுகதுக்கங்களையும் இறைவனிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்பதும் இதன் பொருள். "துறவு கொள்ளுங்கள்,  எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள் என்பதும் "கீதா விற்குரிய ஆழமான பொருளாகும். அர்ஜுனன் தன்  உறவினர்கள் மீது அம்பெய்யத் தயங்கிய போது, தர்மத்தைக் காக்க அவர்களை அழித்தாலும் தவறில்லை. அதற்குரிய பலாபலன்கள் தன்னையே சேருமென பகவான் கிருஷ்ணர் சொன்னார். எனவே, எந்தச் செயலைச் செய்தாலும் அதன் பலனை இறைவனுக்கே அர்ப்பணித்து விட வேண்டும் என்பதே கீதையின் பொருள். எனவே தான் கீதை இந்துக்களின் ஐந்தாவது வேதமாக விளங்குகிறது.
கும்பாபிஷேகம் : சில தகவல்கள் ...

கும்பாபிஷேகத்தின் போது என்னென்ன சடங்குகள் நடத்தப்படும் என்பதை பார்த்திருப்பீர்கள். அவற்றிற்குரிய விளக்கத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

ஆவாஹனம்
ஆவாஹனம் என்றால் கும்பத்தில் உள்ள நீருக்குள் மூர்த்திகளை எழுந்தருள செய்தல் என்பது பொருள். கும்பத்தை முதலில் கோயிலில் உள்ள தெய்வத்திருவின் அருகில் வைத்து தர்ப்பை, மாவிலை ஆகியவற்றைக் கொண்டு மந்திரங்கள் ஓதி, பிம்பத்தில் விளங்கும் மூர்த்தியை கும்பத்தில் எழுந்தருளச் செய்வார்கள். பிறகு அந்த கும்பத்தை யாகசாலைக்கு எழுந்தருளச் செய்வார்கள். தர்ப்பையின் மூலம் கும்பத்தில் உள்ள தெய்வீக சக்தியை பிம்பத்திற்கு மீண்டும் செலுத்துவார்கள்.

கும்பம்
யாகசாலையில் மந்திரம், கிரியை, தியானம் ஆகியவற்றுடன் வளர்க்கப்பட்டு எழும் புகையுடன் வேத ஒலி, சிவாகம ஒலி, மறை ஒலி ஆகியவற்றுடன் பக்தர்களின் நல்ல எண்ணங்களும், எங்கும் நிறைந்திருக்கின்ற திருவருள் சக்தியை தூண்டிவிட்டு கும்பத்தில் விளங்கச் செய்யும். அப்போது கும்பம் தெய்வீக சக்தி பெறும். இந்த கும்பத்தை சிவனின் வடிவமாக ஆகமங்கள் கூறுகின்றன.

பாலாலயம்
கும்பத்தை கோயிலில் உள்ள தெய்வச்சிலை அருகில் வைப்பார்கள். தர்ப்பை, மாவிலை கொண்டு மந்திரங்கள் ஓதி, தெய்வ வடிவில் விளங்கும் மூர்த்தியை கும்பத்திற்கு மாற்றுவார்கள். பின்பு அதை வேறிடத்திற்கு எழுந்தருளச் செய்வார்கள். இதை  பாலாலய பிரவேசம் என்பர்.

கிரியைகள்
கும்பாபிஷேகம் நடக்கும்போது ஒரு காலத்தில் 64  கிரியைகள் செய்யப்பட்டன. காலப்போக்கில் 55 கிரியைகள் செய்யப்பட்டன. ஆனால் தற்போது எல்லா கிரியைகளும் செய்யப்படுவதில்லை. 64ல் முக்கியமான 13 கிரியைகளை மட்டும் தேர்ந்தெடுத்து கும்பாபிஷேகத்தை நடத்துகின்றனர்.

ஆசாரியவர்ணம்
கும்பாபிஷேகத்திற்கென கிடைக்கும் பொருளுக்கு பூஜை செய்ய வேண்டும். இதை தன பூஜை என்பர். பூஜை செய்த பணம் அல்லது பொருளில் ஒரு பகுதியை கட்டட வேலைக்கும், ஒரு பகுதியை நித்திய, மாதாந்திர, விசேஷ நட்சத்திர பூஜை உற்சவத்திற்கும், மூன்றாவது பாகத்தை ஆபரணங்கள் வாங்கவும் ஒதுக்குவார்கள். இப்படியே கோயில் காரியங்கள் சம்பந்தப்பட்ட 11 பாகமாக இந்த செல்வத்தை பிரிப்பார்கள். கும்பாபிஷேகத்தை நடத்தும் பிரதான ஆசாரியரை வணங்கி, இந்த செல்வத்தைக் கொண்டு குடமுழுக்கு நடத்தி தாருங்கள் என கேட்டுக்கொள்ள வேண்டும். இதையே ஆசாரியவர்ணம் என்பர்.

அனுக்ஞை
கோயில் பழுது பார்க்கப்பட்டு திருப்பணிகள் நிறைவு பெற்ற பிறகு, ஒரு நல்ல நாளில் கும்பாபிஷேக நிகழ்ச்சியை முன்னின்று நடத்தி வைப்பதற்கு தகுதியான ஒருவரை தேர்ந்தெடுப்பதையே அனுக்ஞை என்கிறார்கள். விநாயகர் சன்னதி முன்பு இந்த நிகழ்ச்சி நடக்கும். சம்பந்தப்பட்டவரே கும்பாபிஷேகத்தை நடத்தித் தர அனுமதி தரவேண்டும் என விநாயகரிடம் வேண்டி கேட்டுக்கொள்வதே அனுக்ஞை ஆகும்.

பிரவேசபலி
கும்பாபிஷேகம் செய்யும் இடத்திலிருந்து எட்டு திசைகளிலும் வசிக்கின்ற ராட்சதர் முதலான தேவதைகளுக்கு உணவு கொடுத்து எழுப்பி, அவர்களை கடல், மலை, காடு, ஆறு, மயானம் ஆகிய இடங்களில் சென்று இருங்கள் என திருப்திப்படுத்தி வழி அனுப்புவதே பிரவேச பலி ஆகும். கும்பாபிஷேகங்களில் மட்டுமின்றி, கோயில்களில் திருவிழா நடக்கும்போதுகூட இதை செய்ய வேண்டுமென்று ஆகமங்கள் கூறுகின்றன.

வாஸ்துசாந்தி
ஆகமங்களிலும், சிவமகா புராணத்திலும் வாஸ்து பற்றி கூறப்பட்டுள்ளது. அந்தகாசுரன் என்பவனை கொல்வதற்காக தேவர்கள் சிவபெருமானிடம் கோரிக்கை வைத்தனர். சிவபெருமான் தனது வியர்வைத் துளியிலிருந்து ஒரு பூதத்தை உருவாக்கி அந்தகாசுரனை வதைத்தார். அந்த பூதம் சிவனிடம் பல வரங்கள் பெற்று உலகத்தை வருத்தியது. சிவபெருமான் பூதத்தை அடக்க அதிபவன் என்பவரை சிருஷ்டித்து அனுப்பினார். அதிபவன் அந்த பூதத்தின் உடலின்மீது 53 தேவதைகளை வசிக்க செய்து, மாயக்கயிறுகளால் கட்டினார். இதனால் இவர் வாஸ்துபுருஷன் என பெயர் பெற்றார். வாஸ்து புருஷனால் குடமுழுக்கு கிரியைக்கு இடையூறு நேராதபடி 53 தேவதைகளுக்கும் பூஜை, பலி, ஹோமம் ஆகியவற்றால் சாந்தி செய்ய வேண்டும். இதுவே வாஸ்துசாந்தி ஆகும்.

ரக்ஷா பந்தன்
காப்பு கட்டுதல் என இதற்கு பொருள். சிவாச்சாரியார்கள் நாகராஜனுக்கு பூஜை செய்து, மந்திரித்த மஞ்சள்கயிறை வலது மணிக்கட்டில் கட்டிக்கொள்வார்கள். கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளும் சிவாச்சாரியார்களின் குடும்பத்தில் எதிர்பாராதவகையில் ஏதாவது தீட்டு ஏற்பட்டால் காப்பு அவிழ்க்கப்படும்வரை அந்த தீட்டு அவர்களை பாதிக்காது. 

கடஸ்தாபனம்
கும்பாபிஷேகத்தில் மிக முக்கியமானது கடஸ்தாபனம்.  கலசம் நிறுவுதல் என்பது இதன் பொருள். தங்கம், வெள்ளி, தாமிரம், மண் ஆகிய ஏதாவது ஒன்றில் கும்பங்கள் செய்யப்படும். கும்பங்களை இப்படித்தான் அமைக்க வேண்டும் என்ற வரையறைகள் உள்ளன. இவ்வாறு அமைக்கப்பட்ட கும்பங்களை குறைகள் இல்லாமல் மந்திரித்து, அக்னியில் காட்டுவார்கள். சிவப்பு மண்ணை கும்பத்தின் மீது பூசி, நூல் சுற்றி ஆற்றுநீர் அல்லது ஊற்று நீரால் நிரப்புவார்கள். கும்பத்தின் மேல் வாய் பகுதியில் மாவிலைகளை செருகி, தேங்காய் வைப்பார்கள். கும்பத்திற்குள் நவரத்தினம், தங்கம், வெள்ளி, நவதானியம் ஆகியவற்றை பரப்புவார்கள். எந்த மூர்த்திக்கு குடமுழுக்கு நடக்கிறதோ அந்த மூர்த்தியின் உடலாக அந்த கும்பம் கருதப்படும்.

அஷ்டபந்தனம்
கும்பாபிஷேகத்தை அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் என சொல்வதுண்டு. பீடத்தின்மீது வைக்கப்படும் தெய்வ திருவுருவங்கள் அசையாமல் உறுதியுடன் நிலைத்து நிற்க, கொம்பரக்கு, சுக்கான்தான், குங்குலியம், கற்காவி, செம்பஞ்சு, ஜாதிலிங்கம், தேன்மெழுகு, எருமையின் வெண்ணெய் ஆகிய எட்டுவகை மருந்துகளை கலந்து சார்த்துவார்கள். அஷ்டம் என்றால் எட்டு என பொருள். இந்த எட்டுவகை மருந்துகளை சார்த்துவதற்கே அஷ்ட பந்தனம் என பெயர்.

மிகுத்சம்கிரஹணம்
இதற்கு மண் எடுத்தல் என பொருள். கும்பாபிஷேகத்தின்போது அங்குரார்ப்பணம் எனப்படும் முளையிடுதல் நிகழ்ச்சி நடக்கும். மண்ணைத்தோண்டி பாலிகைகளில் இட்டு, நவதானியங்களை தெளித்து, முளைப்பாலிகை அமைப்பார்கள். இதுவே மிகுத்சம் கிரகஹணம் எனப்படும்.