வெள்ளி, 13 செப்டம்பர், 2013

இறை வழிபாட்டு முறை
 
கோயில்களுக்கு சென்று இறைவனை வணங்கும் போது முக்கியமான மூன்று வழிமுறைகள் உள்ளதாக ஆகம சாஸ்திரங்கள் கூறுகின்றன.
1. உத்தம நமஸ்காரம்: லட்சுமி வாசம் செய்யும் வேதரேகைகள், மந்திர உபதேசங்கள் நிறைந்த நமது இரண்டு கரங்களை இணைத்து, இதயத்திற்கு
அருகில் மார்பிற்கு நேரே மையத்தில் வைத்து, மனதில் மட்டுமே மந்திரங்களைக் கூறி இறைவனை ஒருநொடியேனும் மனதார வணங்க வேண்டும்.
மனிதனின் ஆத்ம இருப்பிடமான இதயத்தில் இருந்து வணங்குவதை இறைவன் செவிசாய்த்து கேட்பான் என்பது ஐதீகம்.
2. அஷ்டாங்க நமஸ்காரம்: இவ்வகையான நமஸ்காரமுறை ஆண்களுக்கு மட்டுமே உரித்தானது. இம்முறையில் அஷ்டாங்கமும் (அஷ்டம்  எட்டு;
அங்கம்  உடற்பாகம்) தரையில் படும்படியாக வீழ்ந்து, இறைவனிடம் தன்னை முழுமையாக அர்ப்பணித்து வணங்க வேண்டும். தலை, முகம், இரண்டு
தோள்பட்டைகள், உடல், இரண்டு முழங்கால்கள் மற்றும் பாதநுனி ஆகிய உடற்பாகங்களை தரையில் படும்படியாக படுத்துக்கொண்டு இறைவனின்  திருப்பாதத்தை சரணடைந்தால் வாழ்வில் பாவங்கள் நீங்கி நற்கதி உண்டாகும்.
3. பஞ்சாங்க நமஸ்காரம்: இந்த நமஸ்காரமுறை பெண்களுக்கு மட்டுமே பொருந்தும். இவ்வகையான வணங்கல் முறையில் பெண்கள் தங்களது பஞ்சாங்கத்தையும் (பஞ்சம்  ஐந்து; அங்கம்  உடற்பாகம்) இறைவனிடம் முழுமையாக சமர்ப்பணம் செய்து வணங்க வேண்டும். இம்முறையில் தலை, இரண்டு முழங்கால்கள் மற்றும் இரண்டு பாதநுனிகளை பூமியில் வைத்து இறைவனை வணங்கிட நற்பலன்கள் கிட்டும்.
மதுரையில் சுழலும் லிங்கம்!

இறைவன் இல்லாத இடம் ஏதுமில்லை. நம் கண்களுக்கு புலப்படாத அணுவிலும் அணுவாக உள்ள மிகச்சிறிய பொருளிலும் கூட அவர் வியாபித்திருக்கிறார். ஒருசமயம் அவ்வைப்பிராட்டி, சிவபெருமானைத் தரிசிக்க கைலாயம் சென்றார். நீண்டதூரம் நடந்து வந்ததால், களைப்பில் ஓரிடத்தில் அமர்ந்தார். அப்போது சிவன் இருந்த திசையை நோக்கி காலை நீட்டினார். இதைக்கண்ட பார்வதிக்கு கோபம் வந்துவிட்டது.  அவ்வையிடம் வந்த பார்வதி, அவ்வையே! உலகாளும் என் தலைவனாகிய சிவபெருமான், அமர்ந்திருக்கும் இடத்தை பார்த்து, காலை நீட்டி உட்கார்ந்திருக்கிறீர்களே! இது அவரை அவமரியாதை செய்வது போலல்லவா உள்ளது. எனவே, காலை வேறு பக்கமாக நீட்டிக்கொண்டு அமருங்கள் என்றாள்.  இதைக்கேட்ட அவ்வை சிரித்தார்.
அம்பிகையிடம், தாயே! என்ன சொல்கிறீர்கள்? சிவன் இல்லாத இடம் பார்த்து காலை நீட்டுவதா? அப்படியொரு இடம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லையே! அப்படியே இருந்தாலும் அந்த திசையை நீங்களே சொல்லுங்கள்! அத்திசை நோக்கி என் காலை நீட்டிக்கொள்கிறேன், என்றார்.  அப்போதுதான் சிவபெருமான் இல்லாத இடமென்று ஏதுமில்லை. அவர் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்ற உண்மை அம்பிகைக்கு விளங்கியது. இவ்வாறு இறைவன் எங்கும் இருப்பதை உணர்த்தும் விதமான சிவலிங்க ஓவியம், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் வரையப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் சன்னதியிலிருந்து, சுந்தரேஸ்வரர் சன்னதிக்குச் செல்லும் சிவன் சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் (முக்குறுணி விநாயகர் சன்னதி அருகில்) மேற்கூரையில் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது.  பேரொளியுடன் கூடிய ஒரு வட்டத்தின் மத்தியில், சிவலிங்கம் இருக்கும்படியாக இந்த ஓவியம் வரைப்பட்டுள்ளது. லிங்கத்தின் உச்சியில் தாமரை மலர் உள்ளது.
இந்த லிங்கத்தை எந்த திசையில் நின்று பார்த்தாலும், சிவலிங்கத்தின் ஆவுடை(பீடம்) நம்மை நோக்கியிருப்பது போல தோன்றும் என்பது தான் இதன் ஸ்பெஷாலிட்டி. கிழக்கு நோக்கி நீங்கள் நின்றால் உங்கள் பக்கம் ஆவுடை திரும்பி விடும், மேற்கே சென்றால் அங்கு வந்து விடும். குறுக்காக நின்று பார்த்தால் அந்தப் பக்கமாக வந்துவிடும். இப்படி ஒரு அதிசய ஓவியம் இது. சிவன் எங்குமிருக்கிறார் என்பதை இந்த ஓவியம் சுட்டிக்காட்டுகிறது. இந்த சிவலிங்க ஓவியத்துக்கு, மானசீகமாக அபிஷேகம் செய்வதாக  கற்பனை செய்தபடியே வழிபட்டால், அபிஷேக நீர் நம் மீது விழுவது போலவே இந்த அமைப்பு உள்ளது. சுற்றிச்சுற்றி எந்த திசையிலிருந்து பார்த்தாலும், நம்மை நோக்கி சுழன்றபடி காட்சியளிப்பதால் இதற்கு, சுழலும் லிங்கம் என்று பெயர் வைத்துள்ளனர்.  புராதனமான வரலாறுகள், சிவபெருமான் திருவிளையாடல் நிகழ்த்திய லீலைகள், காண்போர் வியக்கும் நுணுக்கமான கட்டடக்கலை, அற்புதமான சிற்பங்கள் என கணக்கிலடங்காத சிறப்புக்களுடன், அன்னை மீனாட்சியும், தந்தை சொக்கநாதரும் ஆட்சி செய்யும் புண்ணியத்தலமான மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு இந்த ஓவியம் மேலும் சிறப்பு சேர்க்கிறது.

பிரகாரம் எதற்கு?
தெய்வத்தை வணங்கிய பிறகு, பிரகாரத்தைச் சுற்றுவது தான் நடைமுறையில் பழக்கமாக இருக்கிறது. ஆனால், பிரகாரத்தை சுற்றிய பிறகு தான் கருவறைக்குச் செல்ல வேண்டும் என்பதே நிஜமான நியதி. ஏனெனில், பிரகாரங்களைச் சுற்றிவரும்போதும் மற்ற எண்ணங்களை எல்லாம் விட்டு, கருவறையில் சென்று தெய்வத்தை வணங்க வேண்டுமே என்ற எண்ணம் மட்டுமே நெஞ்சில் நிறைந்திருக்கும். இதன் தத்துவம் என்ன? இந்த உலகில் எங்கே சுற்றினாலும் சரி... இறுதியில், நீ அடையப்போவது தெய்வத்தின் சன்னதியை என்பதையே குறிக்கிறது.
மலர்களால் பூஜிப்பது ஏன்?

அன்றலர்ந்த மலர்களால் சுவாமியை பூஜிக்கும்போது சுவாமிகளின் மனம் குளிர்கிறது. இதனால், அகம் மகிழும் சுவாமிகள் நமக்கு வேண்டிய வரங்கள் தந்து பாவங்களைப் போக்கி அருள் புரிகின்றனர். எனவேதான், சுவாமி பூஜையின்போது பிற பூஜைப் பொருட்களை விட மலர்கள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இவ்வாறு, பூஜைக்கு சிறந்த சில மலர்களில் வாசம் செய்யும் சுவாமிகள்.
தாமரை -  சிவன்
கொக்கிரகம் - திருமால்
அலரி - பிரம்மன்
வில்வம்- லட்சுமி
நீலோத்பலம்-  உமாதேவி
கோங்கம் - சரஸ்வதி
அருகம்மலர்-  விநாயகர்
செண்பகமலர்- சுப்பிரமணியர்
நந்தியாவட்டை- நந்தி
மதுமத்தை - குபேரன்எருக்கம் - சூரியன்
குமுதம் - சந்திரன்
வன்னி - அக்னி

நால்வகை தீப பலன்கள்.

கிழக்கு முகத் தீபம் - துன்பம் நீங்கும்
மேற்கு முகத் தீபம் - பகை விலகும்
வடக்கு முகத்தீபம் - மங்களம் பெருகும்
தெற்கு முகத்தீபம் - பாவம் பெருகும்.
பஞ்சாங்கம் படிப்பது ஏன்?

பஞ்சாங்கம் படிக்கும் போது வாரத்தைப் பற்றிச் சொல்வதால் ஆயுள் அதிகரிக்கும். திதியைப் பற்றிச் சொல்வதால் ஐஸ்வர்யம் கிடைக்கும். நட்சத்திரம் பற்றிச் சொல்வதால் பாவங்கள் நீங்கும். யோகத்தைப் பற்றிச் சொல்வதால் நோய்கள் குணமாகும். கரணத்தைப் பற்றிச் சொல்வதால் காரியம் பலிதமாகும்.
தமிழ் ஆண்டு படிகள்!

அறுபடை வீடுகளில் நான்காவதாகக் குறிப்பிடப்படும் திரு ஏரகம் என்பது சுவாமி மலை. இக்கோயிலுக்கு அறுபது படிகள் ஏறிச் சென்று மூலஸ்தானத்தை அடைய வேண்டும். இப்படிகள் ஒவ்வொன்றுக்கும் தமிழ் ஆண்டுகளின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.
சிவனின் முகவகைகள்.

ஒரு முகம் - சந்திரசேகர்
இரு முகம் - அர்த்தநாரீஸ்வரர்
மூன்று முகம் - தாணு மாலயன்
நான்கு முகம் - நான்கு கொலாம் அவர்தம் முகமாவள
ஐந்து முகம் - சதாசிவம்
ஆறுமுகம் - முருகக் கடவுளை தோற்றுவித்தவடிவம்
இருபத்தைந்து முகம் - மகா சதாசிவர்.
பேரைச் சொல்லக் கூட வாய் வலிக்குமா என்ன?

பகவானுக்கு பக்தர்கள் மீது பிரியம்; பக்தர்களுக்கு பகவான் மீது பிரியம். இருவருக்குமே பகவான் நாமாக்களின் மீது மிகப் பிரியம். எந்த இடத்தில், எந்த வீட்டில், பகவான் நாமா சொல்லப்படுகிறதோ, நாம சங்கீர்த்தனம் நடைபெறுகிறதோ, அங்கே பகவான் நாராயணனும், மகாலட்சுமியும் வந்து விடுகின்றனர். ஸ்ரீமத் நாராயணனும், மகாலட்சுமியும் இருக்கும் இடத்தில், மங்களம் பொங்கி வழியும். அதனால் தான், பகவான் நாமாவுக்கு அவ்வளவு பெருமை! விஷயம் தெரிந்தவர்கள் அடிக்கடி, நாராயணா, கிருஷ்ணா, கோவிந்தா... என்று முணுமுணுத்துக் கொண்டே இருப்பர்; விவரம் தெரியாதவர்கள் பரிகாசம் செய்து கொண்டே போவர். நாமா சொன்னவன், நற்கதி பெறுகிறான்; பரிகாசம் செய்தவன் அதோகதி அடைகிறான்! வைகுண்டம் போக ஸ்ரீராமன் புறப்படும் போது, ஆஞ்சநேயரைப் பார்த்து, நீயும் வைகுண்டம் வருகிறாயா? என்று கேட்டாராம். அதற்கு, அங்கே ஸ்ரீமத் ராமாயணம் பிரவசனம் உண்டா, ராமநாமா சொல்லப்படுமா? என்று கேட்டாராம் ஆஞ்சநேயர். அதற்கு ராமன், அங்கே அதெல்லாம் கிடையாது. சதா, என்னை தரிசனம் செய்து கொண்டிருக்கலாம்; அவ்வளவு தான். ராமாயணம், ராமநாமா எல்லாம் இங்கு பூலோகத்தில் தான்... என்றாராம்.
அப்படியானால், எனக்கு ராமநாமா இல்லாத வைகுண்டம் வேண்டாம். நான் இங்கேயே ராம நாமத்தை ஜெபித்தும், ராமாயணம் கேட்டுக் கொண்டும் ஆனந்தமாக இருந்து விடுகிறேன்! என்றாராம் ஆஞ்சநேயர். ராமனும் அப்படியே அனுக்ரகம் செய்தாராம். அதனால், இன்றும் ஆஞ்சநேயர், ராமாயணம் நடக்கும் இடத்திலும், ராம நாமா கேட்கும் இடத்திலும் சிரஞ்சீவியாக இருப்பதாக கூறுவர். பகவான் நாமாவை சொல்பவர்கள், பகவானை விட உயர்ந்தவர்களாக கருதப்படுகின்றனர். பகவானுக்கு அபசாரம் செய்து விட்டால், அவர் பொறுத்துக் கொள்வார். பாகவதனுக்கு அபசாரம் செய்து விட்டால் அவர் பொறுக்க மாட்டார் என்று சொல்லப்பட்டுள்ளது. பக்தர்களுக்குத் தன்னிடம் உள்ள பக்தியையும், அன்பையும் கண்டு, பகவான் அவர்களுடைய பாவங்கள் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்வதால் அவனுக்கு, சஹிஷ்ணு என்று பெயர். பகவானுடைய ஆயிரம் நாமாக்களில் ஒவ்வொன்றுக்கும் இப்படி பொருள் உண்டு. மனிதன் செய்யும் எவ்வளவோ தவறுகளை அவன் பொறுத்துக் கொள்கிறான். அளவு மீறிப் போகும் போது தான் பொறுமையை இழக்கிறான்; தண்டிக்கிறான். சிசு பாலன் கதை தெரிந்திருக்கும். கிருஷ்ணனால் தான் அவனுக்கு வதம் என்று சிசுபாலனின் தாயாருக்குத் தெரிந்தது. கிருஷ்ணனிடம், நீ, என் மகனை கொன்று விடக் கூடாது... என்று வேண்டினாள். அதற்கு கிருஷ்ணன், அவன் என்னை நூறு முறை திட்டும் வரையில் பொறுத்துக் கொள் கிறேன். அதற்குமேல் போனால் வதம் செய்து விடுவேன்... என்றார். அப்படியானால், ஒரு நாளைக்கு நூறு என்று வைத்துக்கொள்... என்று (இவளும் கிருஷ்ணனுக்கு ஒரு அத்தை உறவு!) வேண்டிக் கொண்டாள்; பகவானும் சரி என்றார். அன்று முதல் கிருஷ்ணனை, நூறு தடவை திட்டிவிட்டு பேசாமலிருந்து விடுவான் சிசுபாலன்; பகவானும் பொறுத்துக் கொள்வார். ராஜ சூய யாகத்தின் போது, தன்னை மறந்து, நூறு தடவைக்கு மேல் கிருஷ்ணனைத் திட்டி விட்டான் சிசுபாலன். சக்ராயுதத்தால் உடனே அவனை வதம் செய்து விட்டார் பகவான். ஆக, பகவான் ரொம்பவும் பொறுமையுள்ளவர்; கருணை உள்ளவர்; பக்த ரட்சகர். அவரது நாமாவை சொல்லி, அவரை உபாசித்து வந்தால், நம் ஷேமங்களை கவனித்துக் கொள்வார்; கடைசியில்மோட்சத்தையும் அளிக்கிறார். இதைச் செய்வதில் நமக்கு என்ன சிரமம்? சொல்வது சுலபம், செய்வது தான் சிரமம் என்கிறீர்களா? அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? பகவான் விட்ட வழி!

யம பயம் நீங்கும் பிரார்த்தனை!

நாம் பரணி நட்சத்திரம் என்கிறோம். வேதம், அபபரணி என்கிறது. இந்த நட்சத்திரத்தின் தேவதை, யமதர்மன்(அபபரணீ நக்ஷத்ரம் யமோ தேவதா). பிறந்தவன் இறப்பான் என்பது நியதி. அதை நடைமுறைப்படுத்துபவன் யமன். உயிரினங்களின் உயிர்களைத் தன்னுள் அடக்கிக் கொள்ளும் பரம்பொருளின் வடிவம், யமன். மரணத்தைச் சந்திப்பவன் மர்த்யன்; அதாவது மனிதன்.
பூமியுடன் இணைந்த விதை முளைத்து, படிப்படியாக வளர்ந்து, பூக்களாகவும் காய்களாகவும் மாறுதல்களைச் சந்தித்து, கடைசியில் பூமியில் சந்தித்து மறைவான் என்கிறது உபநிடதம்(ஸஸ்யமிவமர்த்ய: பச்யதெ ஸஸ்ய மிவாஜாயதெ புன)பிறப்பு- இறப்பு ஆகிய இரண்டு நிலைகளிலும் திரும்பத் திரும்ப நடைமுறைப்படுத்தும் நியதியின் பாப-புண்ணியத்தை முற்றிலும் கரைத்து, அதன்பிறகு என்னை(ஜீவாத்மா) உன்னுள் அடக்கிக் கொள்; அப்போது, மறுபிறவியற்ற பேரின்ப நிலையை எட்டுவேன். அதற்கு உனது அருள் வேண்டும் என்று யமதர்மராஜனைப் பிரார்த்திக்கப் பரிந்துரைக்கிறது வேதம்(அப பாப்மானம் பரணீர் பரந்து) புலப்படும் பிரபஞ்சத்தின் அரசன் நீ. மகான்களுக்கு எல்லாம் மகான். உனது அருள், வீடுபேற்றை அளித்துவிடும் என்று யமதர்மராஜனின் தகுதியை வரையறுக்கிறது வேதம்(லோக ஸ்யராஜா...)
பரணிப் பெண் தரணி ஆளவாள் என்ற சொல், நட்சத்திரத்தின் பெருமைக்குச் சான்று. பரணம் என்றால், ஆட்சி செய்தல் என்று அர்த்தம்.அடக்கியாள்கிற திறமை யமதர்மராஜனின் அருளில் கிடைத்துவிடும். மூன்று தாரைகளை உள்ளடக்கியது பரணி. மேஷ ராசியில் இடம்பிடித்த நட்சத்திரம் இது. எடுத்த காரியத்தைச் செம்மையாக முடித்து வெற்றி பெறுபவன்; உண்மையை உரைப்பவன்; நோய் நொடியின்றி வாழ்பவன்; கெட்டிக்காரன்; மகிழ்ச்சியைச் சந்திப்பவன் என்று பரணி நட்சத்திரக்காரர்களின் இயல்பைச் சொல்கிறார் வராஹமிஹிரர். தைரியம், துணிச்சல், இடம் பொருள் ஏவல் ஆகியவற்றை அறிந்து, சந்தர்ப்பத்துக்கு இணங்க வெற்றியைச் சந்திக்க உண்மையை மறைக்கும் இயல்பு (அதுவும் சில தருணங்களில் அறமாகும்). பிறர் சொத்தைத் தனதாக்கிக் கொள்கிற எண்ணம், சபல புத்தி, எதிரிகளும் ஏவலாளிகளும் அதிகம் கொண்ட நிலை, அசைவ உணவில் அதீத விருப்பம்... ஆகியவை பரணியில் பிறந்தவர்களது இயல்புகள் எனச் சுட்டிக்காட்டுகிறார் பராசர மகரிஷி. பிறந்தவனின் கர்ம வினைக்கு ஏற்ப, மாறுபட்ட இயல்புகள் தோன்றும் என்கிறது ஜோதிடம். அதை உறுதிப்படுத்தும் விதமாக, பராசரரின் கணிப்பு அமைந்திருக்கிறது என்பது கவனத்துக்கு உரியது.
பரணியின் முதல் பாதத்தில் தோன்றியவன் தியாகி, 2 -வது பாதத்தில் தோன்றியவன் போகி 3-வது பாதத்தில் தோன்றியவன், தவறான செயலில் ஆர்வம் கொண்டவன். 4-வது பாதத்தில் தோன்றியவன் ஏழ்மையைச் சந்திப்பர் என்று பாதங்களுக்கு உரிய பலனை, பிருஹத் சம்ஹிதையில் வரையறுத்துள்ளார் வராஹமிஹிரர். முதல் பாத்தில் பிறந்தவர் அமைதியை விரும்புவர்; 2-வதில் பிறந்தவர் உண்மை பேசுபவராக இருப்பர். 3-வதில் பிறந்தவருக்கு பெண்ணாசை மேலோங்கியிருக்கும். 4-வதில் பிறந்தவர். சுயமரியாதையைக் காப்பாற்றுவர் எனும் விளக்கம் ஜோதிடத்தில் உண்டு.
மேஷ ராசிக்கு அதிபதி செவ்வாயாக இருந்தாலும் அம்சகத்தில் சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய்; இவர்களுக்கு தொடர்பு இருப்பதால்... சாந்தமும் சுறுசுறுப்பும் கொண்டு, சபலக்காரர்களாக, செல்வாக்கு நிறைந்தவராக, தடாலென்று செயல்படும் பலவீனராக இருப்பார்கள் என்கிறது ஜோதிடம் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர், முதலில் சுக்கிர தசையைச் சந்திப்பார்கள். எண்ணிக்கையில் அதிக கால அளவு (20 வருடங்கள்) சுக்கிரனுக்கு மட்டுமே உண்டு. உலகவியலில், சுகத்தை அள்ளித் தந்தாலும் ஒருவரின் முடிவையும் இறுதி செய்பவன், சுக்கிரனே. 2-க்கும் 7-க்கும் உடையவனை, மாரகன் என்கிறது ஜோதிடம். ஒருவரின் பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் (5) அதிர்ஷ்ட ஸ்தானத்திலும் (9) தென்படும் பூரம், பூராடம் ஆகிய இரண்டு நட்சத்திரங்களுக்கும் கிரகங்களின் தொடர்பு ஒன்றாகவே இருப்பதால், அவற்றுக்கும் தசாகாலங்கள் பரணியைப் போலவே ஏற்படும். ஆகவே பரணி ஜன்ம நட்சத்திரம் என்றால், பூரம் அனுஜன்மம்; பூராடம் த்ரிஜன்மம் என்கிறது ஜோதிடம்.
முதல் ஒன்பது நட்சத்திரத்துக்கு மட்டும் ஆரம்ப தசைகளைச் சொல்லும்; 2-வது ஒன்பது மற்றும் 3-வது ஒன்பது நட்சத்திரங்களுக்குத் தனியே தசைகளைச் சொல்லாமல், ஜன்ம நட்சத்திரத்தின் தசையை எடுத்துக் கொள்ளச் சொல்கிறது ஜோதிடம். இதனால், அந்த மூன்று நட்சத்திரங்களும் பரணி. பூரம், பூராடம் ஜன்ம நட்சத்திர அந்தஸ்தைப் பெற்று விடுகின்றன. 1,5,9 ஆகிய இடங்கள், ஒன்றுக்கொன்று முக்கோணத்தில் இணைந்திருக்கும். பிறந்த இடம், அதன் பூர்வ புண்ணியம், அதன் செழிப்பு ஆகியவையே, ஒருவரின் வாழ்நாளில் சந்திக்கும் அத்தனை விஷயங்களுக்கும் அடித்தளமாக அமைகின்றன. நட்சத்திரத்தின் அடிப்படையில், த்ரிகோண மாறுதல் தென்படுவதால், அதன் பங்கு சிறப்பு பெறுகிறது.
நட்சத்திர பாத மாற்றத்தில், பல மாற்றங்கள் நிகழ்வதால், அம்சத்தை இணைத்துப் பலன் சொல்லப் பரிந்துரைக்கிறது ஜோதிடம் (பலமம் சகர்ஷயோ) கண்ணுக்குப் புலப்படாத பூர்வ ஜன்ம கர்ம வினையின் அளவு, அதன் தரம் ஆகியவற்றை 5-ஆம் இடம் வரையறுக்கும் அதன் செழிப்பு, ஏற்றத்தாழ்வு, நடைமுறையில் எட்டுவது-எட்டாதது, வீண் செயல், எதிர்பாராமல் கிடைப்பது, முயற்சியின்றி வந்தது ஆகிய அனைத்தையும் 9-ஆம் இடம் சுட்டிக்காட்டும் மொத்த ராசியையும் எடுத்துக் கொள்ளாமல், நட்சத்திர பாதத்தின் தொடர்பு கொண்ட ராசி பாகத்தை கவனித்து, கர்ம வினையின் உருவத்தை ஊக்கித்துத் தெரிந்து கொள்ளலாம். அதற்கு நவாம்சம் உதவுகிறது என்பதால், நட்சத்திர பாதத்தின் பெருமை, புலப்படுகிறது. நிச்சயமாக நடந்தே தீரும் பலனை த்ருட பலன் என்கிறது ஜோதிடம். அதற்கு இடமிருந்தால், பலன் அளிக்கும் என்பதை அத்ருட பலன் என்றும் சந்தர்ப்பம் இருந்தாலும், நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம் எனும் பலனை, த்ருடாதிருடம் என்றும் வர்ணிக்கிறது ஜோதிடம். நிச்சியமாக நடக்கும் அதாவது பூர்வ புண்ணியம் அல்லது தங்குதடையின்றிச் செயல்படும் த்ருடபலனை நட்சத்திர திசைகள் வரையறுக்கின்றன (தசா பலேன விசிந்தயேத் த்ருடம்).
கர்ம வினையின் முழுஉருவத்தை வெளியிடும் தகுதி, தசா கிரகங்களுக்கு உண்டு. அந்த தசா வரிசையை நட்சத்திரம் நடைமுறைப் படுத்துவதால், நட்சத்திரத்தின் பங்கு புலப்படுகிறது. அஷ்டவர்க்கத்தை வைத்து கர்மவினையின் அத்ருட பலத்தை, ஊகிக்க வேண்டும். த்ருடம், அத்ருடம் கலந்த பலனை, யோகங்களை வைத்து ஊகிக்கலாம். அஷ்டவர்க்க பலனும் நிச்சியமில்லை; யோக பலனும் நிச்சியமில்லை; என்பதால், தசா பலனின் தகுதி சிறப்பு பெறுகிறது. இந்தச் சிறப்புக்கு ஆதாரம் நட்சத்திரம்.
ஜாதகத்தில் அமைந்திருக்கும் கிரகங்களின் மாறுபட்ட எண்ணக்கையில் உருப் பெற்றது அஷ்ட வர்க்கம், இடம், சேர்க்கை, பார்வை ஆகியவற்றைக் கொண்டு, உருவானதே யோகம்! இதற்கு அடிப்படை, நட்சத்திரம். அதன் பூர்வ புண்ணியம், அதிர்ஷ்டம் ஆகியவற்றுடன் தொடர்பில்லாத அஷ்ட வர்க்கமும் யோகமும் தசை அளவுக்குச் சிறப்புப் பெறவில்லை. ஆகவே, தசா, பலனை த்ருடம் என்றும், மற்றவற்றை அதிருடம், த்ருடாதிருடம் என்றது ஜோதிடம். யோகம் என்ற பிரிவு, ஜாதகத்தின் கிரக அமைப்பில் உருப்பெற்றது.
கிரகங்களுடன் மட்டும் தொடர்பு உடையது யோகம். தசை கிரகங்களுடன் இணைந்து, நட்சத்திரத்தையும் சேர்த்து தொடர்பு பெற்று, பூர்வ புண்ணியத்தை உள்ளது உள்ளதுபடி வெளியிடுவதால் அதற்குச் சிறப்பு உண்டு. உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், எல்லா நட்சத்திரங்களுடனும் ஒரு விதத்தில் தொடர்பு பெற்று, அதன் தாகத்தையும் சேர்த்து கர்மவினைக்கு அனுசரணையாக உகந்த பலனை கிரங்களும் வெளியிடுகின்றன. ஒவ்வொரு தசையிலும் அதன் புத்தியிலும் அந்தரத்திலும் ஒன்பது கிரகங்களும் பங்கு பெறும். ஒன்பது கிரகங்களும், அம்சகத்தின் இணைப்பில் அத்தனை நட்சத்திரங்களுடனும் தொடர்பு கிடைத்து விடும். இப்படியாக, ஒரு தசையில் பலனை இறுதி செய்ய, அத்தனை கிரகங்களின் ஒத்துழைப்பும் தேவை. கூட்டுப் பலன்தான் நடைமுறையில் தென்படும். தனியொரு கிரகத்தின் பலன், நடைமுறையில் பொருந்தாது. அதனால்தான், மேஷம் முதலான வீடுகளுக்கு ராசி என்று பெயர் வைத்தனர்.
ஒரு நெல் மணி, நெற்குவியல் ஆகாது; ஒரு படை வீரன், சைன்யமாகாது. ஒரு தனி மரம், தோப்பாகாது என்பார்கள். தான்ய ராசி, தான்யக் குவியல், காடு, படை போன்றவை கூட்டில் உருப்பெற்றவை. அதுபோல், கூட்டான பலனை அளிப்பது ராசி, மேஷ ராசியில், மூன்று நட்சத்திரம் இருந்தாலும் ஐந்திலும் ஒன்பதிலும் இருக்கும் 3+3 ஆறு நட்சத்திரங்களும் இணைந்தே பலனை இறுதி செய்ய வேண்டியிருக்கு. கிரகங்கள் 9, நட்சத்திரங்கள் 9, நவாம்சகம் 9 என மூன்றும் இணைவதால் ராசி என்ற சொல் சிறப்புப் பெறுகிறது.
சுபகாரியங்களுக்கு விலக்க வேண்டிய நட்சத்திரமாக பரணியைச் சொல்வர். சுபமுகூர்த்தங்களில் பரணி தவிர்க்கப்படும். பிரயாணத்துக்கும் உதவாது. முன்னோர் ஆராதனையில் பரணிக்குப் பெருமை உண்டு. மகாபரணி என பெருமையும் அதற்கு உண்டு. ஆலயங்களில், தீப விழாவின்போது, பரணி தீபம் ஏற்றுவர். பரணி உக்கிரமான நட்சத்திரங்களில் ஒன்று. எதிரிகளை விரட்டியத்தல், பொருட்களை அழித்தல், பிறரின் ஆணைக்கு உட்பட்டு அழிவு வேளையில் ஈடுபடுதல், எதிரிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல், விஷப் பிரயோகம், அக்னி, ஆயுதம் ஆகியவை இணைந்த வேலைகளைச் செய்தல், சத்ருக்களை அழித்து வெற்றி பெறுதல் ஆகியவற்றுக்கு பரணி நட்சத்திரம் ஒத்துழைக்கும் என்கிறது முகூர்த்த சாஸ்திரம்.
பரணியின் தேவதையான யமதர்மராஜனை வணங்குதல் சிறப்புப் பலன்களைத் தரும் மரணத்தை அளிப்பவன் என்ற தவறான எண்ணத்தில், அவனிடமிருந்து விலகி ஓடக்கூடாது. நசீகேதஸுக்கு, யமதர்மராஜன் பேரறிவை வழங்கினான். அவன் மனமிரங்கினால், நம்மிடம் உள்ள யம பயம் அகலும். அவன் உண்மை வடிவானவன். எதிரிகளிடம் இருந்து பயம் விலகினால், மட்டுமே வாழ இயலும்.
யமாய தர்மராஜாய ம்ருத்யவேச அந்தகாயச
வைவஸ்வதாய காலாய ஸர்வபூத க்ஷயாய ச
ஓளமதும்பராய தத்னா ய நீலாய பரமேஷ்டினே
விருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வைநம
என்ற செய்யுளை சொல்லி வணங்கலாம். இயலாதவர்கள், யம் யமாய நம என்ற மந்திரத்தை மனதல் அசை போட்டுப் பிரார்த்திக்கலாம். பரணி நட்சத்திர நாளிலேனும் இந்தச் செய்யுளை சொல்லி வணங்குவது நலம் தரும் யமதர்மராஜனின் அருள், ஆனந்தத்தை வழங்கும்.





தெய்வ முத்திரைகள் உணர்த்தும் தத்துவம்!
பாதுகாப்பு அறிக்கிறேன், விருப்பத்தை நிறைவேற்றுகிறேன் என்பது அபய வரத முத்திரையின் விளக்கம், நம் எண்ணத்துக்கு உகந்தவாறு பரம்பொருளின் பல வடிவங்களான இறையுருவங்களுக்கு முத்திரைகள் அமைந்திருக்கும். ஆன்ம ஞானத்துக்கு சின்முத்திரை ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும். இடையூறு வருமோ என்ற எண்ணம் மேலோங்கும்போது, ஸ்ரீவிக்னேஸ்வரரை அணுகுவோம். குழந்தைச் செல்வம் வேண்டும் என்றால், ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ணனை அணுகுவோம். குடும்ப ÷க்ஷமத்தை நிறைவு செய்ய ஸ்ரீசோமாஸ்கந்த பரமேஸ்வரரை ஏற்போம். அரக்கர் பயம் அகல மகிஷாசுரமர்த்தினியை வழிபடுவோம். அதேபோன்று கலையில் தேர்ச்சி பெற கலைமகளையும், வீரம் பெற்று விளங்க மலைமகளையும் வழிபடுவோம். இப்படி, நம் எண்ணத்துக்கு உகந்த முத்திரை அல்லது வடிவம் பெற்ற இறையுருவங்களை அணுகும்போது, மனம் அதில் எளிதில் லயித்துவிடும்.
பரம்பொருள் பல இறையுருவங்களாகக் காட்சியளிக்க நமது எண்ணம்தான் காரணம். உலகமே நான்தான் என்று காட்ட விஸ்வரூபம் எடுத்தார் ஸ்ரீகிருஷ்ணர். நீரில் மூழ்கித் தேடுவதற்காக மத்ஸ்யாவதாரம், மந்திர பர்வதத்தைத் தாங்க ஆமை வடிவம், பூமியைத் துறைபோட்டு இறங்க வராஹம்... இப்படிச் செயலுக்கு உகந்த வடிவங்களை எடுத்தார் ஸ்ரீமந் நாராயணன், பக்தனைக் காக்க நரசிம்மம், பலியை ஒடுக்க வாமனன், அரசர்களை அடக்க பரசுராமர், அரக்கனை அழிக்க ஸ்ரீராமன், எதிரிகளை வெல்ல பலராமன், அறிவைப் புகட்ட ஸ்ரீகிருஷ்ணன்....... இப்படி, அவரது செயல்பாடுகள் அத்தனையும் செயலை ஒட்டிய வடிவமைப்பில் நிறைவேறின அலை அலையாக வெளிவரும் ஆசைகளின் ஊற்று மனம் நிலைக்கும் திறன் மனம் (மனனாத்மன) ஆசைகளை நிறைவேற்ற ஆண்டவனை அணுகுவோம். ஆசைக்கு உகந்த இறையுருவத்தை ஆராதிப்போம். மாறுபட்ட ஆசைகள் தோன்றும்போது, மாறுபட்ட இறையுருத்தை அணுகத் தோன்றும். எல்லாப் பொருட்களிலும் தெய்வத்தன்மையைப் பார்க்கச் சொல்கிறது ஸனாதனம்.
நாக ப்ரதிஷ்டை, அச்வத்த ப்ரதிஷ்டை, கூப ப்ரதிஷ்டை, தடாக ப்ரதிஷ்டை, ஆராம ப்ரதிஷ்டை, இப்படிப் பாம்பிலும், மரத்திலும், குளத்திலும், குட்டையிலும், கிணற்றிலும் தெய்வாம்சத்தைப் பார்ப்பது உண்டு. பிரபஞ்சம் முழுவதையும் பரம்பொருளின் வடிவமாகப் பார்க்கும் பக்குவம் வரும்போது, நாமே எல்லாமும் என்று தெரிய வரும்(ஆத்மவத் ஸர்வ பூதானி ய பச்யதி ஸபச்யதி) ஆரம்ப காலத்தில் முத்திரையிலும் வடிவத்திலும் தெய்வாம்சத்தைப் பார்த்து, படிப்படியாக எல்லாவற்றிலும் காணும் பக்குவம் வந்துவிட்டால், துயர் தொடாத ஆனந்தத்தை உணரலாம்.
குறிப்பிட்ட தத்துவ முத்திரையாகச் சுட்டிக் காட்டப்படும் சின்முத்திரை- ஜீவ ப்ரம்ம ஐக்கியத்தைச் சொல்லும் (அங்குஷ்ட தர்ஜனி யோக முத்ரா வ்யோஜேன தேஹினாம். க்ருத்யுக்தம ப்ரம்ம ஜீவைக்யம் தர்சயன் னோவதாத் சிவ) கந்தம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்தியம் ஆகியவற்றை முத்திரை வழி செயல்படுத்தும்போது, ஆன்மாவை அமுதமாக நிவேதனம் செய்ய காமதேனு முத்திரை பயன்படும். மானசீக பூஜையில் முத்திரை பயன்படும். புராண விளக்கங்களில் உருப்பெற்றவை மூர்த்தங்களின் உருவங்கள். மகாபாரதம் எழுதுவதற்கு ஒரு தந்தம் பயன்பட்டதால், ஏகதந்தன் ஒரு தந்தம் பயன்பட்டதால் ஏகதந்தன் ஆனார் விக்னேஸ்வரர். மேலும் பஞ்சமுக கணபதி, ஸித்தி-புத்தி கணபதி போன்ற பல உருவங்களும் பக்தர்கள் மனதில் உருப்பெற்று உருவமாக வடிக்கப்பட்டன. நிர்குண தெய்வத்தை ஸகுணமாக்கும் முறை ஏற்றுக் கொள்ளப்பட்டதால், மனதின் கற்பனைக்கு உகந்தவாறு பலப்பல திருவுருவங்கள் தென்பட ஆரம்பித்தன.
பூஜை முறையிலும் முத்திரை உண்டு. சொல்லுக்குப் பதிலாக முத்திரை பயன்பட்டது. நாட்டிய சாஸ்திரத்தில் அபிநயங்களிலும் முத்திரை அரங்கேறியிருக்கும். இரண்டு கரங்களையும் சேர்ப்பதை நமஸ்கார முத்திரை என்றும் சொல்லலாம். மொழி வருவதற்கு முன்னால் கை, கால், கண், உடம்பு ஆகியவற்றின் அசைவுகளும் முகபாவங்களுமே எண்ணங்களைப் பரிமாறிக்கொள்ளப் பயன்பட்டதாக மொழி ஆராய்ச்சியாளர்கள் சொல்வார்கள். அவையும் ஒரு தகவலை விளக்கும் முத்திரைதான். பேச இயலாதவர்கள் கண், கைகள் மற்றும் கால்களின் குறிப்பால் கருத்தை வெளியிடுவர். ஆக, முத்திரைகள் என்பவை தகவல்களை உள்ளது உள்ளபடி விளக்குவதற்குப் பயன்படுகின்றன. வார்த்தைகள் மூலம் வெளிவரும் தகவல்கள் கேட்பவரின் சிந்தனைக்கு உகந்தவாறு மாறுபட வாய்ப்பு உண்டு. ஆனால், முத்திரைக்கு அது இல்லை.
புத்தரின் விளக்கவுரையை நான்கு சீடர்கள் நான்கு விதமாக எடுத்துக்கொண்டதாகச் சரித்தரம் கூறும். ஹீனயானம், மஹாயானம் யோகாசாரம், மாத்யமிகம் எனும் பிரிவுகள் அப்படி வந்ததாகச் சொல்லலாம். பிரம்ம சூத்திரத்துக்கு, படிப்பவரின் சிந்தனை மாற்றத்தால் பல விளக்கங்கள் உண்டு. பகவத் கீதையின் விளக்கவுரைகள் ஏராளம். பார்த்த காட்சியை சொல்லால் விளக்கும்போது காட்சியின் தரத்தை மாற்றிச் சொல்ல இயலும், கண்ணால் பார்த்த காட்சியை கண் மாற்றிக் கூறாது. வேதம், கண்ணால் பார்த்தது உண்மை என்று சொல்லும் (சக்ஷüர்வை ஸத்யம்) உண்மையை விளக்கும் தகுதி முத்திரைக்கும் உண்டு.