பூஜை துவக்கத்தில் தொடை மீது கை வைத்து ஏதோ சொல்றாங்களே... என்ன அது?
சங்கல்பம் உறுதி மொழி. இப்படி நடக்க வேண்டும் என பிராத்திப்பது... இந்த இடத்தில், இந்த நேரத்தில், இந்த நாளில்... இப்படி துல்லியமாக கூறி, பிரபஞ்ச சக்தியிடம் முறையிடுவது.. மேலும்...
சங்கல்பம்
சங்கல்பம் என்பது உறுதி பூணுதல் ஆகும். திடசங்கற்பம் என இதனைக் கூறுவர். சங்கல்பம் இல்லாமல் எந்த ஒரு கிரியையும் நடைபெறுவதிற் பயனில்லை. இறை சந்நிதியில் நாம் செய்யப்போகும் கிரியையை விளக்கமாக கூறி, அதனை என்ன நோக்கத்திற்காகச் செய்கிறோம் என்பதயும் கூறி, இதன நான் செய்து முடிப்பேன் என்று உறுதி பூணுவதாகச் சங்கல்பம் அமைந்திருக்கும். சங்கல்பத்திலே இவற்றுக்கு அடுத்தபடியாக முக்கிய இடம்பெறுவது காலமும் இடமுமாகும். என்ன நாளில் எந்த இடத்தில் என்பது மிக விரிவாகவும், அழகாகவும் கூறப்பெறுகின்றது. பொருளுணர்ந்து இதனைக் கூறும்போது அதனைச் சுவைத்து இன்புறலாம்.
அதுமட்டுமல்லாமல் நமது முன்னோர்கள் எவ்வளவு தூரம் வரலாற்று உணர்வு உடையவர்களாக, காலக் கணக்குகளை நுணுக்கமாகப் பேணி வந்தவர்களாக இருந்திருக்கின்றனர் என்பதும், புவியியல் அறிவிலும் சளைக்காத ஞானம் உடையவர்களாகப் பிரதேசங்கள் பற்றிய தகவல்களைத் திரட்டி வைத்திருந்திருக்கிறார்கள் என்பதும் இதன் மூலம் அறிந்து வியப்புற முடிகின்றது.
கிரியைகள் நடைபெறும் காலமும் இடமும் மிக முக்கியமானவை. அதனால் எந்த இடத்தில் எந்தக் காலத்தில் இக்கிரியையைச் செய்கிறோம் எனக் கூறிக்கொள்வது மரபு.
இப்போது சாதாரணமாக நாம் அறிந்தவரையி ஆண்டு, மாதம், திகதி கூறுவதுடன் காலநிர்ணயம் முடிந்து விடுகிறது. பூவுலகத்தில், ஆசியாக் கண்டத்தில், இலங்கைத்தீவில், யாழ்ப்பாணப் பிரதேசத்தில்… என்னும் கிராமத்தில் என்று கூறுவதுடன் இடநிர்ணயம் முடிந்துவிடுகின்றது. ஆனால் இங்கே சுருக்கமாகன முறையிலும், விரிவான முறையிலும் தேவைக்கு ஏற்ற வகையிற் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்தப்படுகின்ற வேறு வேறு வகையான சில சங்கல்ப வாக்கியங்களின் தமிழ்க் கருத்து தரப்படுகின்றது.
“மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர
ப்ரீர்த்யர்த்தம் அஸ்யாம் வர்த்தமானாயாம் சுப திதௌ அஸ்ய தேவஸ்ய… அஹம் அத்ய கரிஷ்யே”
என்னால் செய்யப்பட்ட எல்லாப் பாபங்களும் அழிந்து போவதற்காகவும், பரமேஸ்வரனின் மகிழ்ச்சிக்காலவும் இன்றைய இந்த சுபதினத்தில், இன்ன தெவத்தின், இன்ன கிரியையை நான் செய்கிறேன். இது மிகச் சுருக்கமான சங்கல்பமாகும்.
ஒரு பெரிய திருவிழா அல்லது கும்பாபிஷேகத்தின் உட்பிரிவுகளாயமையும் சிறு கிரியைகள் ஒவ்வொன்றும் தொடங்கும் போது இவ்வாறு சிறு சங்கல்பங்களைச் சிவாச்சாரியார் செய்வது மரபு. ஆனால் ஆரம்பத்தில் கோவில் தர்மகர்த்தா மற்றும் உபயகாரர்கள் ஆகியோரின் பெயர், நட்சத்திரம் முதலியன கூறி; கிரியை நடைபெறும் இடம், நாள், நட்சத்திரம், திதி, கிழமை, பட்சம், மாதம், அயனம், வருடம் என்பன யாவும் கூறி இந்த சங்கல்பம் நடைபெறும்.
பொதுவாக நாளாந்தம் நடைபெறும் பூஜை, அர்ச்சனை முதலியவற்றிற் பயன்படுத்தப்படும் சங்கல்பம் ஒன்றின் முழுமையான கருத்தை இங்கு பார்ப்போம்.
“இறைவனின் கட்டலைப்படி, முதலாவது பிரமனின் இரண்டாவது பரார்த்தத்திற் சுவேதவராக கல்பத்தில், வைவஸ்த மனுவந்தரத்தில், இருபத்தெட்டாவது கால கட்டத்தில், கலியுகத்தில் முதற்பகுதியில், ஜம்புத் தீவில், பாரத வர்ஷத்தில், பரதகண்டத்தில், மேருமலைக்குத் தென்பாகத்தில் (இப்போது நடந்து கொண்டிருக்கும் பிரபவ முதலிய அறுபது வருடத்தில்)..…
என்ற பெயரையுடைய வருடத்தில்…. அயனத்திலே…. ருதுவிலே…. மாதத்திலே…. பட்சத்திலே…… திதியிலே….. நட்சத்திரத்திலே… கிழமையிலே அமைகின்ற இன்றைய சுபதினத்திலே… நட்சத்திரத்திற் பிறந்த…. பெயரையுடைய இந்த எசமானனுடையதும் (கர்த்தா) அவரது குடுமபத்தினரதும், இக் கிராமத்தில் இருக்கும் மக்களதும் சுகநலங்களுக்காகவும், தைரியம், வீரம், வெற்றி, ஆயுள், ஆரோக்கியம், அஷ்ட ஐஸ்வரியங்கள் ஆகியவற்றின் அபிவிருத்திக்காகவும், தர்மம், அர்த்தம், காம்யம், மோட்சம் (அறம், பொருள், இன்பம், வீடு) என்னும் நான்கு புருஷார்த்தங்களின் சித்திக்காகவும், சந்தான விருத்தியின் பொருட்டும் தெரிந்தோ தெரியாமலோ சென்ற பிறப்புகளிலும், இப்பிறப்பிலும் செய்த பாவங்கள் அகலுவதற்காகவும்…. இடத்திலுள்ள…. என்ற பெயரையுடைய இறைவனின்….. என்ற கிரியையைக் குருமுகமா நான் செய்கிறேன்.
இங்கு இரு வகையான சங்கல்பங்கள் பார்க்கப்பட்டன. சங்கல்பத்தில் முக்கியமாக மூன்று பகுதிகள் இருக்கும். ஒன்று “நான் இன்ன பலனை உத்தேசித்து இந்தக் கிரியையைக் குருமூலமாகச் செய்யப் போகிறேன்” என்று திடமாக உறுதி கொள்ளுதல்.
அதன் அங்கமாக வரும் மற்ற இரு பகுதிகளும் காலம் பற்றியதும் இடம் பற்றியதுமாகும். “இன்ன லாலத்தில் நான் செய்கிறேன்: என்பதை வருடம், அயனம், மாதம், பட்சம், திதி, நட்சத்திரம், வாரம் இவற்றைச் சொல்லிச் சுருக்கமாக நிறைவு செய்தல் முன்பு காட்டப்பெற்ற சங்கல்பத்தில் காணப்படும் ஒருவகை முறை. இதன் விரிவான முறையில் உலகின் உற்பத்தி முதல் இன்றுவரையான காலப்ப்குதிகளைச் சுவைபட வர்ணித்துக் கூறுதல்.
இதேபோல சங்கல்பத்தின் மூன்றாவது பகுதி, கிரியை நடைபெறும் இடத்தைப் பற்றியது. “எந்தச் சுவாமியின் சந்நிதியில்” எனச் சுருக்கமாகச் செய்யும் முறையும் உண்டு. அண்டங்கள் யாவற்றையும் வர்ணித்துக் கூறி அதனுள்ளே நமது கிராமம் வரை கூறிக்கொண்டு வருதல் விரிவான முறையாகும். இந்த முறையிற் சங்கல்பம் சொல்லி முடிக்கச் சுமார் ஒருமணி நேரம் தேவை. ஆனால் அதன் சுருக்கத்தை விளங்கிக் கூறும்போது சுவையான இலக்கியத்தைப் படிப்பதுபோல கற்பனை வளமும் சொல்லாட்சியும் சுவைத்து மகிழத்தக்கதாக இருக்கும். அந்த விரிவான மஹா சங்கல்பத்திலும் சில பகுதிகளை இங்கு பார்க்கலாம்.
ஓம் ஸ்ரீ பகவானும், மஹாபுருஷ்னும், ஸ்ரீமத் ஆதிநாராயண மூர்த்தியும் மனோதீதமான அளவிலாற்றலோடு சலனமின்றி இருக்கின்றவரும் அனந்தகோடி சூரியப்பிரபையோடு கூடினவரும் ஆகிய ஸ்ரீ மகாவிஷ்ணுவுடைய சுய மாயையாற் கற்பிக்கப்பட்டனவும் பெரும் ஜலப்பிரவாக மத்தியிலே சுற்றுகின்றனவும் அநேக வடிவுடையனவும் ஆகிய அநேககோடி பிரமாண்டங்களில் ஒன்றானதும்,
வெளிப்படாத சமநிலைக்களமுடைய பிரகிருதியானது மஹான், அகங்காரம், பிருதுவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் முதலிய ஆவரணங்களாற் சூழப்பெற்றதுமாகிய;
இந்த பெரிய பிரமாண்ட கண்ட மத்தியில் எல்லாவற்றையும் அதிட்டிக்கும் ஆதிவராகத்தின் கொம்பிலே உலகிற்கு மூலஸ்கந்தமாகிய ஆதாரசக்தி ஆதி கூர்னங்களும் அனந்த, வாசுகீ, தக்ஷ, சங்கபால, குளிக, பத்ம, மஹாபத்ம, கார்க்கோடகர்களாகிய அட்டமஹா நாகங்களும்;
ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பதந்தம், சார்வபௌமம், சுப்பிரதீகம் என்னும் அட்டமா யானைகளும் ஆகியா இவற்றின் மேல் வைக்கப்பட்டுள்ளதும்;
அதலம், விதலம், சதலம், தலாதலம், ரசாதலம், மஹாதலம், பாதாளம் என்னும் ஏழுலகங்களுக்கு மேலுள்ளதும்;
பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மஹாலோகம், ஜனலோகம், தபோலோகம், சத்தியலோகம் என்னும் ஏழுலகங்களுட் கீழுள்ள பூலோகமும்;
சக்கர்வாள சைல வலய நடுவிலே சூழப்படுவதால் பெரிய நாளம்போன்ற ஆதிசேடனது ஆயிரம் முடி வரிசைகளில் அலங்காரமாகத் தாபிக்கப்பட்டுள்ளதும் திக்கு யானைகளின் துதிக்கைகளால் தூக்கப்பட்டுள்ளதும் புறத்தே பேரிருளாற் சூழப்பட்டதும் அகத்தே சூரிய கிரணப் பிரகாச முடையதும்; அம்புவதி, நயனவதி, சித்தவதி, காந்தர்வவதி, காஞ்சிவதி, அளகாவதி, அசோகவதி என்னும் புண்ணிய புரிகளால் மேலிடப்பட்டுள்ளதும்;
இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என்னும் லோகபாலகர்களால் அதிட்டிக்கப்பட்டதும்;
சக்கரவாளகிரியால் சூழப்பட்டதும்; உப்பு, கருப்பஞ்சாறு, தேன், நெய், தயிர், பால், சுத்தஜலம் என்னும் ஏழு சமுத்திரங்களினால் சூழப்பட்டதும்;
ஜம்பு, ப்லக்ஷம், சால்மலி, குசம், கிரவுஞ்சம், சாகம், புஷ்கரம், என்னும் ஏழு தீவுகளொடு விளங்குவதும், மஹேந்திரம், மலயம், சையம், சுத்தி, ருக்ஷம், விந்தியம், பாரியாத்திரம் என்னும் ஏழு குலமலைகளொடு விளங்குவதும், மதங்கம், ஹிரண்யசிருங்கம், மாலியவான், கிஷ்கிந்தம், ருஷ்யசிருங்கம் என்னும் ஐந்து மலைகளினால் அதிட்டிக்கப்பட்டதும், இமயம், ஏமகூடம், சுதாசலம், நிசாசலம், சுவேதாசலம், சுநாசலம், சிருங்கவதம் என்னும் ஏழு பெரு மலைகளினால் அதிட்டிக்கப்பட்டதும்;
இந்திரகண்டம், கசேருகண்டம், தாமிரகண்டம், கபத்திகண்டம், நாககண்டம், சௌம்யகண்டம், கந்தர்வகண்டம், சரபகண்டம், பரதகண்டம் என்னும் ஒன்பது கண்டமயமானதும்;
மஹாமானசத் தாமரைவடிவவான ஐம்பது கோடி யோசனை விசாலமுடைய பூமண்டல நடுவிலே, சுமேரு, சிஷதம், ஏமகூடம், சந்திரகோணகூடம், மஹேந்திரகூடம்,விந்த்யாசலம், சுவேதாசலம் என்பனவற்றுக்கும், ஹரிவர்ஷம், கிம்புருவர்ஷம் என்பவற்றுக்குத் தெற்கே கர்மபூமியில்; மது, வன, குலம் என்பவற்றுக்குத் தென்புறத்திலே; பொதியமலைக்கு வடக்கே, தென்சமுத்திரத்திற்கும் இமயமலைக்கும் நடுவே உள்ளதும், ஒன்பது யோசனை அளவு கொண்டதும், பாரதம், கிம்புருஷ்ம், ஹரி, இளாவிருதம், குரு, பத்திராள்வம், ரம்யம், ஹிரண்மயம், கேதுமாலம் என்னும் ஒன்பது வர்ஷ்ங்களில் ஒன்றாகிய பாரத வர்ஷத்திலே, ஸ்வர்ணப்ரஸ்தம், சந்த்ரம், சுபித்தி, ஆவர்த்தகரமணம், மதங்கஜாவரணம், மஹ்வாரண, பாஞ்ச ஜன்யவகம், சிங்களம், இலங்கை என்னும் ஒன்பது கண்டங்களாகப் பிரிக்கப்பட்ட பாஸ்கர க்ஷேத்ரத்திலே, தண்டகாரண்யம், கதளிகாரண்யம், வடாரண்யம், தேவதாரண்யம் என்னும் பதினொரு வனங்களோடு கூடியதும்;
அங்கம், வங்கம், கலிங்கம், காம்போஜம், கௌசலம், காஸ்மீரம், கசூரம், கர்ஜூரம், பர்ப்பரம், மருதம், குரு, காந்தாரம், சௌவீரம், சௌராஷ்டிரம், மத்ரம், மகதம், ஆந்திரம், நிஷதம், சிந்து, தசார்ணம், மாளவம், நேபாளம், பாஞ்சாலம், வங்காளம், மலையாளம், சீழம்,, கேரளம், சிங்களம், கௌடம், கோடம், கீகடம், கர்நாடகம், கரகாடம், மரகாடம், பாநாடம், பாண்டியம், புளிந்தம், குந்தம், திரிகர்த்தம், லாவந்தி, அவந்தி, விதேயம், விதர்ப்பம், கேகயம், கோசலம், கொங்கணம், டங்கணம், ஹூணம், மற்சம், வற்சம், சகலம்பாகம், பாஹ்லிஙகம், யவனம், சாளுவம், சப்பன்னம், என்னும் ஐம்பத்தாறு தேசங்களாககிய பலவித பாஷைகளையுடைய விஷேடித்த இராச்சியங்களினாலே அலங்கரிக்கப்பட்டதும்;
ஸ்வாம்யவந்தி குருக்ஷேத்திரத்திலே, கங்கை, யமுனை, துங்கபத்ரை, சந்த்ரபாகை, ப்ரணீதை, பம்பை, பாபப்ரசமனீ, பயோக்ஷி, பல்குனி, பவநாசினி, பீமரதி, சரஸ்வதி, குமுதவதி, சிந்துநதி, அர்ஜூனி, கிருஷ்ணவேணி, பிநாகினி, கோதாவரி, மலாபஹாரி, தாம்ரபர்ணி, காவேரி, வேகவதி, வஞ்சுழி, சரயு முதலிய ஆயிரம் நதிகளோடு விளங்குவதும்;
அயோத்தி, மதுரை, மாயா, காசி, காஞ்சி, அவந்திகா, துவாரக முதலிய முக்திநகரங்களோடு கூடியதும் சுநகம், வற்சநகம், குல்மநகம், சவாமிநகம், மஹாமானச ஸ்ரீஓருஹ வடிவான புஷ்கரத்யம், திரிகூடம், கைலாசம் என்னும் இவைகளின் நடுவாகிய பூமண்டத்தில்;
பாற்கடல் நடுவே ஆதிசேடனது படமாகிய மஞ்சத்திற் சயனிக்கும் மஹாவிஷ்ணுவினுடைய உந்திக்கலத்திற் தோன்றியவரும் சகல வேத நிதியாயுள்ளவரும்;
சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் முதலிய மகானகளுக்கும் இந்திரன் முதலிய முபத்து முக்கோடி தேவர் திர்யக் மனுடர் மலை முதலிய எண்பத்து நான்கு நூறாயிரம் யோனிபேத சராசரங்களுக்கும் அனேககோடி பிரMஆண்டங்களுக்கும் ஆதாரபூதமான சிருஷ்டியில் முயன்றவரும், இரண்டுபரார்த்தம் சீவிப்பவருமான பிரம்மாவின் முதற் பரார்த்தமாகிய ஐம்பது வௌஅது கழிந்தபின் இரண்டாம் பரார்த்தமாகிய ஐம்பது வருடத்தின் முதலாம் வருடத்திலே ,முதலாம் மாதத்திலே முதலாம் பக்ஷத்திலே முதலாம் நாளிலே பகலிலே இரண்டாம் சாமத்திலே மூன்றாவது முகூர்த்தத்திலே பதின்மூன்றாம் நாழிகையிலே நாற்பத்திரண்டு வினாடி சென்று நாற்பத்திமூன்றாம் வினாடியிலே முதற்பிராணம் தொடங்கும் காலத்திலே;
பார்த்திவம், அனந்தம், கூர்மம், பதுமம், வராகம், சுவேதவராகம், பிரளயம், என்னும் ஏழு கற்பங்களுள் சுவேதவராக கற்பத்திலே;
சுவாயம்புவர், சுவாரோசிஷர், உத்தமர், தாமசர், ரைவதர், சாக்ஷூஷர், வைவஸ்வதர், சூரியசாவவர்ணி, பிரமசாவர்ணி, உருத்திரசாவர்ணி, இந்திரசாவர்ணி, அக்கினிசாவர்ணி, ரௌச்சியர், பௌச்சியர் என்னும் பதினான்கு மநுக்களின் காலமாகிய மன்வந்தரங்கஊள் ஏழாவதாகிய வைவஸ்வத மன்வந்தரத்திலே;
இருபத்தேழு சதுர்யுகம் கழிய இப்போது நிகழும் இருபத்தெட்டாவது சதுர்யுகத்திலே;
பதினேழுலக்ஷத்து இருபத்தெண்ணாயிரம் வருடமுடைய கிருதயுகம்கழிய;
பன்னிரண்டு லக்ஷத்துத் தொண்ணூற்றாறாயிரம் வருடமுடைய திரேதாயுகமும் கழிய;
எட்டுலக்ஷத்து அறுபத்துநாலாயிரம் வருடமுடைய துவாபரயுகமும் கழிய;
நாலுலக்ஷத்து முப்பத்தீராயிரம் வருடமுடைய நிகழ்வதான கலியுகத்திலே;
ஐயாயிரத்தொரு வருடம் கழிய ஐயாயிரத்திரண்டாம் வருடமும் மற்சம், கூர்மம், வராகம், நரசிங்கம், வாமனம், பரசுராமம், த்சரதராமம், பலபத்திரராமம், பௌத்தம், கல்கி என்னும் பத்து அவதாரங்களுள்ளே ஒன்பதான பௌத்த அவதாரத்திலே;
யுதிஷ்டிர, விக்கிரம, சாலிவாகன, விஜயாபிநந்தன, நரசிங்கத் துருபத, நாகார்ச்சுன சகர்களாகிய ஆறு சக்கரவத்திகளின் அப்தங்களுள்ளே மூன்றாவதாகிய சாலிவாகன சகாப்தத்திலே;
ஆயிரத்தெண்ணூற்றிருபத்திரண்டு வருடங்கழிய நிகழ்கின்ற ஆயிரத்தெண்ணூற்றிருபத்து மூன்றாம் வருஷ்மாகிய வழங்குகின்ற சௌரமானம், சாந்திரமானம், சாவனமானம், நக்ஷ்த்திரமானம், பார்ஹஸ்பத்தியமானம் என்னும் காலவகைகளாய் நடைபெறும் பிரபவ முதலிய அறுபது வருஷங்களுள்ளே:
மூன்றாம் விம்சதியான – சௌரமான – சார்வரி என்னும் பெயருடைய வருஷ்த்திலே தக்ஷிணாயத்திலே சரத்ருதுவிலே ஐப்பசித் மாதத்திலே பூர்வபக்ஷத்திலே வியாழக்கிழமையோடு கூடியதும், விசாகநக்ஷ்த்திரத்தோடு கூடியதும், ஆயுஷ்மான் யோகம், பாலவகரணம், துலாலக்னம் முதலிய புண்ணீய விசேஷங்களோடு கூடியதும் ஆகிய துவிதியை என்னும் புண்ணிய திதியிலே அநாதியே அவித்தையின் தொடர்பால் நிகழுகின்ற இந்தப் பெரிய சம்சாரசக்கரத்திலே பலவிதமாகிய கன்மகதிகளாற் பலவிதமாகிய யோனிகளிற் பின்னும் பின்னும் பலதரம் பிறந்து யாதோ ஒரு புண்ணிய கர்ம விசேஷத்தால் இப்போது மானுட உடம்பில் பிறவி விசேடத்தை அடைந்துள்ளேன்.
கோத்திரத்தில்……, நக்ஷத்திரத்தில்…, ராசியில் பிறந்த…… பெயருடைய எனது பிறவிப் பயிற்சியால் உடம்பெடுத்த நாள்முதல் இந்தக்கணம் வரையும் இடையில் நிகழ்கின்ற பால்யம், கௌமாரம், யைவனம், வார்த்திகம் என்னும் பருவங்களில்;
மனம், வாக்கு, காயம் என்னும் திரிகரணங்களாலும் செய்யப்படும் வினைகளால் சாக்கியம், சொப்பனம், சுழுத்தி என்னும் அவஸ்தகளில், காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் என்னும் இவைகளினாலே, மெய்ம் வாய், கண், மூக்கு, செவி என்னும் ஞானேந்திரியங்களினாலும்; வாக்கு, பாதம், பாணி, பாயு, உபஸ்தம் என்னும் கன்மேந்திரியங்களாலும் அறிந்தும், அறியாமலும் என்னாற் சய்யப்பட்ட புத்திபூர்வமாக விளங்குகின்ற பிரமஹத்தி கட்குடி, பொற்களவு முதலிய மகாபாதஙகங்களும் உபபாதங்களும்;
அறியாமையினால் ஒருதரம் செய்யப்பட்டவையும், அறிந்து ஒருமுறை செய்யப்பட்டவையும், அறிந்தும் அறியாமலும் ஒருமுறை செய்யப்பட்டவையும்,மிகப்பயின்று செய்யப்பட்டவையும், இடையீடின்றிப் பயிற்சியாகாக்ச் செய்யப்பட்டவையும், நெடுங்காலம் பயிலப்பட்டவையும், ஒன்பதும் ஒன்பது வகையும், பலவும் பலவையும் ஆகிய எல்லப் பாவங்களையும்;
உடனே தீர்த்தற்பொருட்டு ரத்னாகரம், மஹோததி ஆகிய இரு சமுத்திரங்களுக்கு நடுவே கந்தமான பர்வதத்திலே பாஸ்கரக்ஷேத்திரத்திலே காசி விஸ்வேஸ்வரர் ராமநாதர் சேதுமாதவர் காலபைரவ்ர் சீதா ல்க்ஷ்மண பரத சத்துருக்ன ஹனுமாரோடு கூடிய ராமச்சந்திரர் என்பவர்களின் சந்நிதியில்;
சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் சந்நிதியில், ஹரிகரர் முதலிய பல தேவர்களின் சந்நிதியில், தவப்பிராமணர்கள் சந்நிதியில்;
இயன்ற நியமஙத்தோடும் இயன்ற வகையில் இயன்ற டிரவியங்களோடு தர்மசாஸ்திரங்களிற் சொல்லியபடி சபையினரை வழிபடுதலை முன்னிட்டு அச் சபையாருபதேசித்தபடி சர்வ பாபப் பிராயச்சித்தமாக சர்வ பாபங்களும் ஒழியும் பொருட்டு ஸ்ரீராமதனுஷ்கோடிஸ்நானத்தை (பொருத்தமான கிரியையை கூறவேண்டும்) நான் செய்கிறேன்.
இந்த சங்கற்பத்தில் மிகப்பல விடயங்கள் பற்றி நாம் மனங்கொள்ளலாம்.
1. நாம் ஆலயங்களைலே கிரியைகள் ஆற்றத் தொடங்கும்போது திரிகரணங்களாலும் இறைவனை நாடி அவனையே சிந்தித்து மன ஒருமைப்பாடு கொண்டு அதன்பின் இச்செயலை நான் செய்து முடிப்பேன் என்று உறுதிகூறி சங்கல்பப் செய்வதன் அவசியம் புரிந்து கொள்ளப்படுவது.
2. அந்த சங்கல்பத்திலே என்ன கூறப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளுதல்.
3. அங்கு பயன்படுத்தப்படும் சொற்செட்டான வார்த்தைப் பிரயோகங்களும் அழ்கான அடுக்கு மொழிகளும் அற்புதமான கற்பனை வளமும் சுவைத்து இன்புறத்தக்கன.
4. புவியியல் ரீதியாக, உலக அமைப்பும் அதன் உட்பிரிவுகளும்சொல்லப்படும் முறை வியப்போடு உற்றுநோக்கத்தக்கவை. அதுமட்டுமன்றிப் புராண இதிக்ஹாசங்களிற் சொல்லப்பட்ட இத்தகைய விடயங்களையும் புவியியல், விஞ்ஞான, வரலாற்றாசிரியர்கள் கூறியிருக்கும் கருத்துக்களையும் ஒப்பிட்டு ஆய்வுசெய்தல்.
5. காலம் பற்றிய சிந்தனை எவ்வாறு நம் முன்னோர்கள் உள்ளத்தில் தெளிவுபடுதப்பட்டிருந்தது என்பதை அறிவதோடுபருவகாலங்கள், அதன் உட்பிரிவுகள் இவைபற்றிய விரிவான சிந்தனைகள் அவதானிக்கத்தக்கவை.
6. இவற்றோடு தத்துவார்த்தமான இன்னொரு சிந்தனையும் நமது உள்ளத்தில் துளிர்விடவேண்டும். நாம் ஒரு சிறிய கிராமத்தில் இருக்கிறோம். அந்தக் கிராமத்தின் பெயரையும் விரிவான சங்கல்பங்களின்போது சொல்கிறோம். அந்தக்கிராமத்தை அடுத்த நகரம், மாகாணம், நாடு, கண்டம் என விரிந்து கொண்டு போகின்ற இந்தப் பிரபஞ்சம் எனும் பெரும் அண்டத்தை இங்கு நாம் மனக்கண்ணீற் காண முடிகிறது. நாம் இந்தப் பேரண்டத்தின் ஒரு துளியில் நிற்கின்றோம் என எண்ணி நமது சிறுமையையும் ஆண்டவனின் பெருமையையும் கருதவேண்டும். இதேபோல் நமது வாழ்நாள் ஆகக்கூடியது நூறு ஆண்டுகள். இந்தச் சங்கல்பத்திலே சொல்லப்படுகின்ற காலக்கணக்குகள் – யுக யுகாந்திரமாக இந்தப் பிரபஞ்ச இயக்கத்தை நடத்தும் ஆண்டவனின் மகத்துவம்தான் என்னே என்ற வியப்பும் குறிப்பிடத்தக்கதன்றோ?