புதன், 10 ஜூலை, 2019

அத்தி வரதர் தரிசனம் - ஒரு சிறப்புப் பார்வை

ஒரு மாதமாக அத்தி வரதர் புராணம், ஒரு வாரமாக அத்தி வரதரை பார்க்க போகிறோம் என்ற மகிழ்ச்சி, இரண்டு நாளாக அதைப் பற்றிதான் அனைவரிடமும் பேச்சு..நாங்கள் 30 பேர் சேர்ந்து விட்டதால் மூன்று வேன்கள் புக் பண்ணிக் கொண்டோம். முகநூலிலும், வாட்ஸ்ஸப்பிலும் அத்தி வரதரை வசதியாக பார்க்க சிறந்த ஏற்பாடுகள் செய்யப் பட்டிருப்பதை அறிந்து எந்த சிபாரிசும், ஏற்பாடுகளும் இல்லாமல் பொது தரிசனத்திலேயே கலந்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம். இன்று விடிகாலை நாலு மணிக்கே எழுந்து கிளம்பி வழியில் குடிக்க கொஞ்சம் கஞ்சியை எடுத்துக் கொண்டு என் அம்மாவையும் அழைத்துக் கொண்டு கிளம்பினேன்.

எல்லோரும் வந்த பின் 6.20க்கு கிளம்பி காஞ்சி புரம் சென்று 8 மணிக்கு பச்சையப்பா பார்க்கிங்கை அடைந்தோம். அங்கு கஞ்சியை குடித்து இயற்கை உபாதைகளை (மிக சுத்தமாக இருந்தது) முடித்துக் கொண்டு ஷட்டில் சர்வீஸ் சிற்றுந்தில் ஏறி (பத்து ரூபாய் டிக்கெட்) கோவில் ஏதோவொரு கோபுர வாசலில் இறங்கினோம். நிறைய செல்ஃபி எல்லாம் எடுத்துக் கொண்டு  பந்தாவாக வரிசையில் சேர்ந்து கொள்ள ஆயத்தமானோம்.

 நடந்தோம்..நடந்தோம்..நடந்தோம். கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் நடந்து க்யூவில் இணைந்தோம். க்யூவிற்கு தடுப்போ கயிறோ கம்பியோ ஒன்றும் இல்லை.நெறிப் படுத்த கண்ணுக்கு எட்டிய தூரம் வரை போலீஸும் இல்லை. க்யூ நகரவே இல்லை. கால் மணிக்கு ஒரு தடவை நாலு அடி வைத்து பூப்போல நகர்ந்தோம். நேரம் ஆக ஆக சூரியனார் தன் வேலையைக் காட்டத் துவங்கினார். க்யூவின் நடுவில் மக்களும் கூட்டம் கூட்டமாக இஷ்டத்திற்கு நுழைந்து தங்கள் உரிமையை நிலை நாட்டினர். ஆங்காங்கே செருப்புக் குவியல் வேறு.  கட்டுப் படுத்ததான் யாரும் இல்லையே.
ஆனாலும் அத்தி வரதர் மேல் கொண்ட காதலில் எல்லோரும் மெதுவாக ஊர்ந்து சென்றோம்.

முல்லைக்குத் தேர் கொடுத்த மன்னர்கள் ஆண்ட தமிழ் மண்ணில் இந்த பாமர மக்களுக்கு  நிழல் கொடுக்க ஒரு பந்தல் போட வேண்டும் என்று யாருக்கும் தோணவில்லையே என்று புலம்பினேன்.   சுட்டெரிக்கும் வெயிலில் நாவறண்ட மக்களுக்கு தாகம் தீர்க்க ஒரு தண்ணீர் பந்தல்?? அதுவும் வள்ளல் பச்சையப்பர் வாழ்ந்த ஊரில்??  ம்ஹும்..

வழி நெடுக கடைகளில் தண்ணீர்,குளிர் பானம் விற்றனர். சாதாரண தண்ணீர் 20 ரூபாய்..குளிர்ந்த நீர் 25 ரூபாய். அவர்களும் பாவம். சமயம் வரும்போது கொஞ்சம் பணம் பார்க்க வேண்டாமா? திருச்சி, சேலம், கோயமுத்தூர் எல்லா ஊர்களிலிருந்தும் நிறைய செலவழித்துக் கொண்டு குடும்பத்தோடு வந்த மக்களுக்கு மேலும் செலவுதான். சரி.செலவையும் பார்க்காமல் அத்தி வரதர் தரிசனம் ஒன்றே குறிக்கோளாய் இந்த வெகுளிக் கூட்டம் இன்ச் இன்ச்சாக முன்னே நகர்ந்தது. இரண்டரை மணி நேரத்தில் கோவில் வாசல் கிட்டே கூட போக முடிய வில்லை. உள்ளே நுழைந்த பின் இன்னும் நிறைய தூரம் போக வேண்டுமாம்.

மனம் வலிமையானாலும் உடல் வலிமை வேண்டாமா? இப்போது தண்ணீர் கடைகளும் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக சூரியனுக்கும் தாகமோ என்னவோ எல்லோர் உடலிலிருந்தும் தண்ணீரை உறிஞ்ச ஆரம்பித்தான். முன்னே ஒரு பெண்,பின்னே ஒரு சின்ன பையன்,இந்தப் பக்கம் ஓரு பாட்டி அந்த பக்கம் ஒரு அம்மா என்று ஒருவர் ஒருவராக தலை சுற்றி சாய்கிறார்கள். யார் அங்கே?? முதலுதவிக்கு யாராவது??? கூட்டம் எல்லா பக்கத்திலிருந்தும் நெருக்க பயம் வந்து பாதி பேர் க்யூவிலிருந்து வெளியே போக முடிவெடுக்கிறார்கள். என் அம்மாவிற்கு வயது எண்பது. வயதானவர்களுக்கு பேட்டரி கார் இருக்கு என்றார்களே.. எங்கே? யாருக்கும் தெரியவில்லை.

அத்தி வரதர் பற்றிய எண்ணம் மறைந்து கணவரும் குழந்தைகளும் கடமைகளும் ஞாபகம் வர நாங்களும் ஒருவர் ஒருவராக வெளியேற ஆரம்பித்தோம். எங்கே போவது? எப்படி போவது? எல்லோரிடமும் கெஞ்சி நிறைய பேரிடம் திட்டு வாங்கிக் கொண்டு பல பேரை சிரமப் படுத்தி ஒரு வழியாக அந்த தகர தடுப்பினுள் நுழைந்து வெளியே வந்து சுதந்திரமாக.மூச்சு விட்டோம். நாங்கள்தான் அப்படியென்றால் அங்கங்கு பிரிந்திருந்த எங்கள் க்ரூப் மக்கள் எல்லோரும் ஃபோன் பண்ணி நானும் வந்துட்டேன், நீ எங்க இருக்க? என்று குசலம் விசாரித்துக் கொண்டு சேர்ந்து கொண்டனர்.

எங்கள் உறவினர் ஓருவர் கீழே விழுந்து விட்டார். உதவிக்கு  ஒரு போலீஸோ முதலுதவிக்கு எதாவது மருத்துவ வசதியோ இல்லை. தாகம் பசி தீர்க்க தண்ணீர் பந்தலோ ஒரு உணவு விநியோகமோ நடத்த ஒரு வாலன்டியர் கூட கண்ணில் தென்படவில்லை. நாம் பல வீடியோக்கள்,வாட்ஸ் அப் மெஸேஜில் பார்த்தது போல் பாட்டரி கார்???? எனக்குத் தெரிந்து யாருமே எங்குமே பார்க்க வில்லை. செருப்பு ஒரு வாசலில் போட்டால் இன்னொரு வாசலில் கலெக்ட் பண்ணிக் கொள்ளலாம் என்று ஓரு செய்தி. ஆனால் ஒரு செருப்பு போடும் இடம் கூட எங்கள் கண்ணில் பட வில்லை.

பார்க்கிங் ஏரியா போக ஆட்டோ காரர்கள் வாய்க்கு வந்த ரேட் கேட்டார்கள். ஒரு வழியாக அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்து பார்க்கிங் ஏரியாவிற்கு வரும்போது மணி இரண்டு. அத்தி வரதர் எங்களுக்கு எட்டாத அதிசய வரதராக ஆனதை நினைத்து வருந்திக் கொண்டே வேனில் உட்கார்ந்த வேளையில் வி.ஐ.பி பாஸ் வாங்கிக் கொண்டு, பணம் கொடுத்து போலீஸார் உதவியோடு உள்ளே நுழைந்து சர்வ சாதாரணமாக தரிசனம் செய்து திரும்பியவர்கள் ஏராளம் என்ற நிதர்சனத்தை நினைக்கையில் மனம் வலித்தது.

நான் சென்னையில் இருக்கிறேன். நிறைய பெரிய மனிதர்களை தெரியும். விஐபி பாஸ் வாங்கிக் கொண்டு போய் மீண்டும் ஒரு முறை போய் தரிசனம் செய்து விடலாம். ஆனால் தனக்கு வசதியான தரிசனத்தை இந்த அரசு மற்றும் காஞ்சிபுரம் நகராட்சி ஏற்படுத்திக் கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு தமிழகத்தின் பல மூலைகளிலிருந்து வந்த அப்பாவிக் கூட்டம் என்ன செய்யும்??

அவர்களுக்கு ஏன் இந்த சிரமம்??

நாற்பது வருடங்களுக்கு ஓருமுறை வரும் இந்த அபூர்வ நிகழ்வை அற்புதமாக நடத்தும் வாய்ப்பை ஏன் காஞ்சிபுரம் கோட்டை விட்டது??

மாவட்ட கலெக்டர் என்ன செய்கிறார்??

விஐபிக்களை அழைத்துச் செல்வதை தவிர இதில் போலீஸாரின் பங்கு என்ன??

ஏன் எந்த கார்பொரேட் கம்பெனிகளோ இந்த பட்டு நகரத்தின் பண முதலைகளோ எந்த வித ஆதரவும் கொடுக்க வில்லை?

எல்லாவற்றிற்கும் மேலாக இந்த நிகழ்வைப் பற்றி ஏன் தப்புத்தப்பாக செய்திகள் வெளியிட்டு அப்பாவி மக்களை ஏமாற்றுகிறார்கள்??

ஏன்??ஏன்??ஏன்??

பதில்....கேள்விக் குறி மட்டுமேதான்.

பி.கு. பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாமகத்தை எங்கள் கும்பகோணம் மிக மிக சிறப்பாக நடத்தியதை நினைத்து பெருமைப் படாமல் இருக்க முடிய வில்லை.

மேலும் ஒரு பின் குறிப்பு: பொது தரிசனத்தில் போக விரும்பினால் விடிகாலை ஆறு மணிக்குள் க்யூவில் நின்றால் இரண்டு மணி நேரத்தில் தரிசனம் கிடைக்கும். குறைந்த பட்சம் வெயிலிலிருந்து தப்பிக்கலாம்.

கருத்துகள் இல்லை: