வியாழன், 26 ஏப்ரல், 2018

நம்முடைய முன்னோற்கள் வாழ்ந்த வாழ்க்கை

அது ஒரு காலம் ! மறக்க முடியாத நினைவுகள் ! கிட்டத்தட்ட  எல்லோருமே   உரக்க பாடினார்கள்.  குரலும்  ஒரே மாதிரியாக இருந்தது  என்று சொன்னாலும்  தவறில்லை. அவர்களுக்குள்  ஒரே வித்தியாசம் அவரவர்  பிரயோகித்த ஆலாபனைகளும்  அசுர சாதகமும்  குரல் வளமும்   தான்.  எல்லோருக்குமே பக்க வாத்தியம்  ஹார்மோனியம் தான்.  சில சமயம்  கிராமபோன் அவர்கள் பாடல்களை  கிணற்றுக்குள்ளே  இருந்து  பாடுவது போல் கேட்க  செய்தால்  அது  க்ராமபோனின்  கோளாறு.  அது  ரேடியோவில்  அப்படியே  பிரதிபலித்து  சில சாமயம் ஈனஸ்வரத்தில் பாடுவது போலவும்  காட்டியது  அவர்கள் தவறில்லை.  மெழுகு தட்டுகள் (plates ) சுற்றும் போது  வேகமாக  சுற்றினால்  பாடுபவர்  அவசரம் அவசரமாக   ரயிலைப்பிடிக்க ஓடிக்கொண்டே பாடுவது  போல இருக்கும்.  தட்டு மெதுவாக சுழன்றால்  கே. எல்.  சைகால் கால் நீட்டி  ஒரு மரத்தடியில் சாய்ந்து கொண்டு பால முரளியின்  தில்லானா  பாடுவது போல் இருக்கும்.

சிலர்  பாடிவிட்டு  தானே சபாஷ் சொல்லிக்கொள்வதையும்  கேட்டிருக்கிறேன்.  3 நிமிஷ தட்டுக்கள். ஒவ்வொரு தட்டில்  ஒரே  பாடகரின் குரல்  வேறு யாரோ ஒருவர்  பாடும் குரல் மாதிரியாக  கூட  காட்டியது.

மைசூர்  ராஜா அய்யங்கார்  என்பவற்றின் குரல்  அசாத்தியமாக  இருக்கும்.  ஜகதோ தாரணா என்று ஆரம்பித்தால்   சகல  சர்க்கஸ் வேலைகளும்  காட்டி  முடிப்பார்.  கேட்கவும்  கர்ணாம்ருதமாக இருக்கும். இப்போதும் அவர்  பாடியது  you tube ல்  கேட்க  வசதி இருக்கிறது. 

அவருடைய தேவகாந்தாரி ராக  க்ஷீர சாகர சயனா  பாட்டு  பெருமாளையே  ஆஷிசேஷன்  மேலிருந்து எழுந்து  நிற்க  செய்யும். அவ்வளவு  சக்தி வாய்ந்தது.

பி.யூ. சின்னப்பா  என்று ஒருவர் பொடி  போடுபவர்  மூக்கில்  பாடுவது போல்  தோன்றினாலும்  கேட்க  சுவாரஸ்யமாக  இருக்கும்.  சிறந்த  சங்கீத ஞானம் கொண்ட அவர்  ஜகதலப்ராதாபன்  படத்தில் ஒரு  தனி கச்சேரியே மூன்று நிமிஷத்தில் பண்ணினார்.  நிறைய சின்னப்பாக்கள். பிடில், மிருதங்கம், கொன்னக்கோல்,  வீணை, வாய்ப்பாட்டு, கஞ்சிரா , கேட்கவே  சுகமாக இருக்கும்போது பார்க்கவும் செய்தால். சொர்க்கம் தான்.  அவருடைய  நடிப்பு  தத்ரூபமாக  மிருதங்க, கஞ்சிர,  வயலின் வித்வான்களின் அனுபவ பூர்வ  பாவத்தை காட்டியது. இதையே  பின்னால் பல வருஷங்களுக்கு பிறகு திருவிளையாடல்  பாடலில்  சிவாஜி கணேசன்  பல  வித்வான்களாக ''பாட்டும் நானே''  பாடிய காட்சிக்கு  வழி கோலியது.  ஒரிஜினல் ஒரிஜினல் தான்.  பி.யு. சி.  ஒருமுறை  கேளுங்கள்.  அதுவும்  நான் சொன்ன பாட்டை. you   tube ல் இருக்கிறதே.

S.G .கிட்டப்பா ஒரு மறக்க முடியாத  நாடக நடிகர் என்று புகழ் பெறக்காரணமே  அவரது குரலின் கவர்ச்சிக்க்காகவே.  இன்னும்  நிறைய  அவரது  இசைத்தட்டுகள் இருக்கின்றன. நான்  ஒவ்வொருமுறை  கேட்கும்போதும்  அவை  புதிதாகவே அப்போது தான் முதல் முதலாக கேட்பது போன்ற ஆர்வத்தை இன்று காலை வரை  அளிக்கிறது. ஹர்மோனியக்காரன்   அபஸ்வரமாகவோ, அவசரமாகவோ வாசித்தாலும் அவரது  வான முகட்டில் கருட சஞ்சாரத்தை அவனால்  எட்ட முடியாது. கிட்டப்பா  அதை லட்சியம் செய்யாமல்  சபாஷ் தான்  சொல்லிக்கொண்டு  பாடுவார்.  அசுர சாதகம்.  அபார கற்பனை. அதிசயிக்க வைக்கும்  ஆலாபனை பிடிகள். அசாத்திய ராக ஞானம்.

இளம் வயதில் காணமல் போன  எத்தனையோ  அபூர்வங்களில் ஒருவர் கிட்டப்பா.  ஒலி பெருக்கி இல்லாத  காலத்தில்  இப்படி  தொண்டை கிழிய  உரக்க பாடி இன்பமூட்டிய அவர்களை   ஒன்ஸ் மோர்   கேட்டே  பொன் வாத்தை கொன்றுவிட்டார்கள். ஒரு சில  இசை தட்டுகள்  இன்னும்  அவரை ஞாபகப்படுத்தி  கண்ணில்  நீர்  வரவழைக்க  நாம்  கொடுத்து வைத்தது அவ்வளவு தான். ஒரு  வீடியோ கூட  கண்ணில் தென்படவில்லை  என்று அறியும் போது  ஒரு  செல்வத்தை  எப்படி  இழந்து விட்டோம் என்று புரிகிறதா?

இசையால் கவரப்பட்டு  மற்றொரு  துருவ நக்ஷத்ரம் அவரோடு மேடையிலும் வாழ்க்கையிலும்  இணைந்தது. அதுவே  KBS   என்று  உலகறிந்த  கே. பி. சுந்தராம்பாள் .  ஒரு ஞானப் பழத்தை சக்கையாக  பிழிந்து   ''என்ன  என்ன என்ன'' என்று  கேட்பாரே அது  இன்னும்  ஞாபகம் இருக்க வேண்டுமே  சங்கீதப் பிரியர்களுக்கு.


எனக்கென்னவோ கிட்டப்பாவின் பாதிப்பு  அநேக  பின்னோடிகளுக்கு  புகழை அளித்தது  என்று தோன்றுகிறது.   மேலே சொன்ன மைசூர்  ராஜா அய்யங்காரை  விட  அதிக பிரபலம் வாய்ந்த  எம். கே.  தியாகராஜ  பாகவதர்  கிட்டப்பாவை விட  அதிக  புகழ் பெற  ரெண்டு  காரணங்கள் முக்கியம்.

எம். கே.  டி  காலத்தில்  திரைப்படம்  வந்து விட்டது.   அவரது பாடியது  எளிதில் பட்டி தொட்டி  எல்லாம்  பரவி மக்களை அடைந்தது.  மற்றொன்று   எம். கே . டியின் இயற்கை  வசீகரம்.   மனிதர்  தனக்கென்று  ஒரு  சிகை  பாணியை  மட்டும் அல்ல. ஜவ்வாது போட்டு, காதில் மின்னும் வைரம். பட்டு  சட்டை அங்கவஸ்திரம்.   பாடும் போது  முகம் சற்றும் கோணாமல்  சௌலப்யமாக  சங்கதிகளை வாரி  வீசினார்.   பின்னணி  உத்திகள் வளர்ந்து மேனாட்டு இசை வாத்யங்கள்  திரையுலகை  ஆக்ரமிக்க ஆரம்பித்ததால் ஹார்மோனியம் இறந்து விட்டது. அதனால்  அதன்  சப்தமும் வீடுகளிலும்  மேடைகளிலும் திரையிலும்   நின்றது.

 ஒரு பாட்டை மட்டும்  நினைவூட்டுகிறேன்.  எந்த சினிமா  என்று ஞாபகமில்லை.  ''பவழமால் வரை''  என்ற  ஒரு அபூர்வ  பாட்டு  என்னை மிகவும்  உலுக்கியது.   அந்த ஒரு வரியை மட்டுமே   பாடிக்கொண்டு  பலகாலம்  சைக்கிளில் சென்றிருக்கிறேன்.  அவர் பாடலை பாடுவது  இயலாத காரியம்  யாருக்குமே.    காந்த சக்தி கொண்ட குரல் MKT க்கு. இந்த 3 நிமிஷ பாட்டில் அவரது ராக ஆலாபனைகளை  எழுத்தில் வர்ணிக்க  முடியாது.  கேட்டு  ரசித்து மகிழ தான்  முடியும்.என்ன  சங்கதி, என்ன  சஞ்சாரம், என்ன தாளம், என்ன  பாவம்!.  மனிதர்  ஒரு  அபூர்வ பிறவி என்பதில் சந்தேகமே இல்லை.  இன்றும் அவர்  முதல்  சூப்பர் ஸ்டார் என்று  புகழ் பெற்று நிலைத்திருப்பது இதனால்  தான்.   அவரது பாடங்கள்  அவர் பாட்டுக்காகவே  வருஷக்கணக்கில்  ஓடின  என்பது அப்பட்டமான உண்மை. ஒவ்வொரு படத்திலும் அந்த மனிதர் பேசியதைக் காட்டிலும் பாடியதே  அதிகம். 30-40 பாட்டுகள் பல தரப்பட்ட  மனிதர்களையும்  ஈர்த்தது.
  
கிட்டப்பா ஊரிலேயே, செங்கோட்டையிலேயே,   மற்றொரு  டூப்ளிகேட்  தோன்றினார்.  அதேமாதிரி  பாணியில்  அவரைப் பின்பற்றியே  ஆனால்  அனாயாசமாக  கிட்டப்பா  போலவே பாடினார்.  புகழும் பெற்றார்.  அவர்  வேறு யாருமில்லை   டி . ஆர்.  மகாலிங்கம்  தான்.  ஒரே  பெயரில் இருவர்  புகழ் பெற்று  இருந்த காலம்  அது.  ஒருவரை  அதனால்  மாலி  என்று  அழைத்தார்கள்.  மேலும் அந்த மற்றொரு  டி .ஆர். மகாலிங்கம் ஒரு  புல்லாங்குழல் சிம்மம்.   அவரைப் பற்றி  நிறையவே  சொல்ல  ஆவலாக இருக்கிறது.   பின்னால்  ஒரு சந்தர்ப்பம்  அதற்கு உபயோகப் படட்டுமே.

கருத்துகள் இல்லை: