வியாழன், 15 ஜூன், 2017

வல்லப சித்தர்

தாதி பொன்னனையாள் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். அவளது குடிலில் தகரம், செம்பு, பித்தளை பாத்திரங்கள் மட்டுமே இருந்தன. பெண்கள் திறமைசாலிகள். தங்களுக்கு கணவனோ, பிறரோ கொடுக்கும் பணத்திலோ, தாங்கள் உழைத்து சம்பாதித்ததிலோ சிறிதளவாவது மிச்சம் பிடித்து வெள்ளியிலோ, தங்கத்திலோ சிறுநகைஒன்றாவது வாங்கி விடுவார்கள். பொன்னனையாளும் அதற்கு விதிவிலக்கல்ல. சிவபக்தையான அவள், கூடல் மாநகராம் மதுரை அருகிலுள்ள திருப்புவனம் என்ற ஊரில் வசித்தாள். அங்குள்ள பூவன நாதர் அவளது இஷ்ட தெய்வம். அவரது ஆலயத்தில் சேவை செய்தது மட்டுமின்றி, ஆலயத்துக்கு வரும் சிவனடியார்களுக்கு, தான் ஆடிப்பிழைக்கும் பணத்தில் மிச்சம் பிடித்து அவர் களுக்கு உணவளிக்கும் பழக்கத்தை யும் கொண்டிருந்தாள். அவளது கண்ணீருக்கு காரணம் தெரிய வேண்டுமே. அவளுக்கு நீண்ட நாளாக ஒரு ஆசை. திருப்புவனநாதர் லிங்கவடிவில் காட்சியளிக்கிறார். அவருக்கு உற்சவர் சிலை இருந்தால், அதைக்கொண்டு திருவிழா நடத்தலாம். திருவிழா நடந்தால், மக்கள் கூட்டம் கூட்டமாக தங்கள் ஊர் நோக்கி வருவார்கள். கோயிலின் வருமானம் பெருகும். கோயில் விருத்தியாகும். ஆனால், சிலை செய்ய யார் முன்வருவார்கள்? தானே செய்யலாம் என்றால் அதற்கு அந்தளவுக்கு பணமில்லையே! என்ன செய்வது? இதை நினைத்து நினைத்து கண்ணீர் வடித்தபடியே, தன்னையறி யாமல் உறங்கி விடுவாள். நடனமாடும் நேரத்தில் கூட, இந்த சிந்தனை அவளை வாட்டிக் கொண்டிருந்தது.

ஒருநாள், அவளது ஊருக்கு சில சிவனடியார்கள் வந்தனர். அவர்களை தனது இல்லத்துக்கு வரும்படி அழைப்பு விடுத்தாள் பொன்னனையாள். அடியார்களும், அவளது பக்தியைப் பற்றி ஊரார் சொல்லக் கேள்விப் பட்டு, அவளது இல்லத்துக்கு சென்றனர். அங்கு அனைவருக்கும் உணவு படைத்தாள். சம்பாதிக்கும் பணமெல்லாம், அடியவர்களுக்கு உணவளிப்பதிலேயே செலவழித்து விடுவாள். அவர்கள் சாப்பிட்டது போக மீதமிருந்தால், அதை மட்டுமே சாப்பிடுவது பொன்னனை யாளின் வழக்கம்.அன்று வந்திருந்த அடியவர் களில் ஒரு அடியவர் மிகுந்த தேஜஸுடன் இருந்தார். அவரது அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. பொன்னனையாளுக்கு உதவியாக இருந்த மற்ற கணிகைகளும், அவளுடன் இணைந்து அடியவர்களுக்கு உணவு பரிமாறினர். அழகாக இருந்த அடியவர் மட்டும் சாப்பிடாமல் அமர்ந்திருந்தார். அதற்கான காரணம் புரியாத கணிகைகள், பொன்னனையாளிடம் அதுபற்றிக் கூறினர். பொன்னனையாள் அவரருகில் சென்று, சுவாமி! மற்றவர்கள் நான் அளித்த இந்த எளிய உணவை சாப்பிடும்போது, தாங்கள் மட்டும் சாப்பிடாமல் இருக்கிறீர்களே! உணவு சுவையாக இல்லையா? தங்களுக்கு வேறு ஏதாவது கொண்டு வர வேண்டுமா? தாங்கள் கேட்பதை நொடியில் சமைத்து தருகிறேன், என்றதும், அந்த அடியவர் சிரித்தார்.

அவரது சிரிப்பில் சொக்கிப் போனாள் பொன்னனையாள். அவரது சிரிப்பு அந்த இடத்தையே ஆனந்தமயமாக்கியது. அம்மையே! உலகுக்கே படியளக்கும் எனக்கு, நீ இன்று படியளந்திருக்கிறாய். அதை நினைத்தேன், சிரித்தேன், என்ற அடியவரின் பேச்சில் இருந்த சூட்சுமம், பொன்னனையாளுக்கு புரியவில்லை. உடனே அடியவர் அவளிடம், வருந்தாதே, மகளே! நீ தந்த உணவின் மணம் என்னைச் சாப்பிடத் தூண்டுகிறது. ஆனால், உணவளிக்கும் போது, பெண்கள் மகிழ்ச்சியான மனநிலையைக்காட்ட வேண்டும். அது முகத்தில் எதிரொளிக்க வேண்டும். உன் முகத்தில் ஏதோ வாட்டம் தெரிந்தது. ஏதோ, சோகத்தை மனதில் தாங்கிய நீ தரும் உணவை எப்படி என்னால் மகிழ்ச்சியுடன் சாப்பிட முடியும். நான் சொல்வது சரிதானே! உன் மனதை ஏதோ ஒரு கவலை வாட்டுகிறது என்பது உண்மை தானே! என்றதும், அவளது கண்களில் கண்ணீர் வைகை நதியின் கரை புரண்ட வெள்ளம் போல் பெருகியது. ஐயனே! தாங்கள் என் மன நிலையைப் புரிந்து கொண்டீர்கள். ஆனால், இந்த வருத்தம் என் சுயநலம் கருதியது அல்ல. எம்பெருமானுக்கு, ஒரு சிலை வடிக்க வேண்டும். அதைக் கொண்டு உற்சவம் நடத்தி, மக்களை எனது ஊருக்கு ஈர்க்க வேண்டும். இங்கிருக்கும் பூவனநாதர் கோயில் பெரிய அளவுக்கு உயர வேண்டும்.

மன்னாதிமன்னர்களும், பிரபுக்களும் இங்கு வந்தார்கள் என்றால், அவர்கள் தரும் நன்கொடையைக் கொண்டு கோயிலை பெரிதாக்குவேன். உற்சவர் சிலையை வடித்து முடிப்பேன். இதெல்லாம், எப்படி நடக்கப் போகிறதோ என்ற கவலை தான், என் முகவாட்டத்துக்கு காரணம். இருப்பினும், தங்கள் முன்னால் கனிந்த முகம் காட்டாமைக்கு வருந்துகிறேன். அடியவர், இந்தச் சிறியவளின் தவறை புறந்தள்ளி, அமுது செய்ய வேண்டும், என அவரது பாதத்தில் விழுந்து வேண்டினாள். அடியவர் அவளைத் தேற்றினாள்.


கருத்துகள் இல்லை: