வெள்ளி, 20 செப்டம்பர், 2024

அருள்மிகு வைகுண்டநாதர் திருக்கோவில்



108 திவ்ய தேசங்கள் : அருள்மிகு வைகுண்டநாதர் திருக்கோவில்

மூலவர்: ஸ்ரீ வைகுண்டநாதர் (நின்ற திருக்கோலம்)
உற்சவர்: ஸ்ரீ கள்ளப்பிரான்
தாயார்:வைகுந்த நாயகி, சோரநாத நாயகி
தீர்த்தம்:தாமிரபரணி தீர்த்தம், ப்ருகு தீர்த்தம், கலச தீர்த்தம்
பழமை:2000 வருடங்களுக்கு மேல்
ஊர்: ஸ்ரீ வைகுண்டம்
மாவட்டம்: தூத்துக்குடி
மாநிலம்: தமிழ்நாடு
பாடியவர்கள்:நம்மாழ்வார், மணவாள மாமுனிகள்,மங்களாசாசனம்

புளிங்குடி கிடந்து வரகுண மங்கை யிருந்து வைகுந்தத்துள் நின்று தெளிந்த என் சிந்தை அகங்கழியாதே என்னை யாள்வாய் எனக்கருளி நளிர்ந்த சீருலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனிவாய் சிவப்ப நீ காண வாராயே.-நம்மாழ்வார்
 
விழா:வைகுண்ட ஏகாதசி, தை தெப்பத்திருவிழா   
       
சிறப்பு:பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. நவதிருப்பதி தலங்களில் முதலாவதான இத்தலம் சூரியனுக்குரியது.   
       
திறக்கும் நேரம்:காலை 07.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 05.00 மணி முதல் இரவு 08.30 மணி வரை திறந்திருக்கும்.  
     
முகவரி: அருள்மிகு வைகுண்டநாதர் திருக்கோவில்,ஸ்ரீ வைகுண்டம் - 628601,தூத்துக்குடி மாவட்டம்.போன்:+91 4630 256 476  
      
தகவல்:சூரியத்தலம்:நவதிருப்பதி தலங்களில் முதலாவதான இத்தலம் சூரியனுக்குரியது. இங்கு ஸ்வாமி, இந்திர விமானத்தின் கீழ் நின்ற நிலையில் காட்சி தருகிறார். கையில் தண்டம் இருக்கிறது. தலைக்கு மேலே ஆதிசேஷன் குடையாக இருக்கிறார். ஸ்வாமியுடன் தாயார்கள் கிடையாது. பிரகாரத்தில் வைகுந்தவல்லித்தாயார் சன்னதி இருக்கிறது. சித்திரை மற்றும் ஐப்பசி மாத பவுர்ணமியன்று காலையில் சூரிய ஒளி வைகுண்டநாதர் பாதத்தில் விழும். இதற்கு ஏற்றாற்போல் சுவாமி சன்னதி எதிரிலுள்ள கொடி மரம், பலிபீடம் தென்புறம் விலகியிருக்கிறது. ஜாதகத்தில் சூரியன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் நிவர்த்திக்காக இங்கு வேண்டிக்கொள்ளலாம்.

கள்ளனாக வந்த பிரான்: வைகுண்டநாதர் பக்தனான காலதூஷகன் என்ற திருடன், தான் திருடியதில் பாதியை கோவில் சேவைக்கும், மீதியை தான, தர்மங்கள் செய்யவும் செலவிட்டான். ஒரு சமயம் மணப்படை என்ற ஊரில், அரண்மனை பொருட்களைத் திருடச் சென்ற போது, அவனுடன் சென்றவர்கள் சிக்கிக் கொண்டனர். கால தூஷகனைத் தேடி அரண்மனை சேவகர்கள் வந்தனர். இவ்வேளையில் இத்தலத்து பெருமாளே, திருடன் வடிவில் அரண்மனைக்குச் சென்றார். மன்னன் முன் நின்றவர், "மன்னா! நான் திருடியதாக குற்றம் சாட்டுகிறீர்களே! எதற்காக திருடினேன் என்று தெரியுமா? நாட்டில் ஒருவனுக்கு பணப்பற்றாக் குறை இருக்கிறதென்றால், அந்நாட்டு மன்னனின் ஆட்சி சரியில்லை என்று தான் அர்த்தம். என்னிடம் பொருள் இல்லாததால் தான் நான் திருடினேன். ஆகவே என்னை என குற்றப்படுத்த முடியாது,'' என்றார். இதைக்கேட்ட மன்னர் திடுக்கிட்டு, ஒரு திருடனால் இப்படி தைரியமாகப் பேச முடியாது எனப்புரிந்து கொண்டு, வந்திருப்பது யார் எனக்கேட்டார். ஸ்வாமி தன் சுயரூபம் காட்டியருளினார். மன்னன் உண்மை அறிந்து மன்னிப்பு வேண்டினான். திருடன் வடிவில் வந்ததாலும், பக்தர்களின் உள்ளங்களை கவரும் அழகுடன் இருப்பதாலும் ஸ்வாமிக்கு, "கள்ளபிரான்' என்ற பெயர் ஏற்பட்டது.

108 போர்வை அலங்காரம்: தை முதல் நாளில் கள்ளபிரானுக்கு, 108 போர்வைகள் அணிவித்து பூஜிப்பர். பின் அவர் கொடிமரத்தைச் சுற்றி வருவார். அதன் பின் ஒவ்வொரு போர்வையாக எடுத்து அலங்காரத்தைக் கலைப்பர். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் உள்ள அனைத்து பெருமாள்களும், இந்நாளில் கள்ளபிரான் வடிவில் காட்சி தருவதாக ஐதீகம்.

ஆச்சாரியாரின் அழகிய விளக்கம்: நம்மாழ்வார் தனது பாசுரத்தில், "புளிங்குடி கிடந்து, வரகுணமங்கை இருந்து வைகுந்தத்தில் நின்று'' என்று மங்களாசாசனம் செய்துள்ளார். "பசியாக இருக்கும் ஒருவர் சமையல் முடியும் வரையில் படுத்திருந்து காத்திருப்பார். பசி கூடும் போது ஆர்வத்தில் எழுந்து அமர்ந்து கொள்வார். சமையல் முடிய இன்னும் தாமதமானால் பொறுமையிழந்து எழுந்து நிற்பார். இதைப்போலவே நம்மாழ்வாருக்கு அருள வந்த பெருமாள் அவர் பக்தியில் உயர் நிலை அடையும் வரையில் முதலில் புளியங்குடியில் கிடந்தும் (படுத்த கோலம்) பின் வரகுணமங்கையில் அமர்ந்தும், இத்தலத்தில் நின்றும் காட்சி தருகிறார்,'' என வைணவ ஆச்சாரியாரான அழகிய மணவாளப்பெருமான் நம்மாழ்வாரின் பாசுரத்திற்கு விளக்கம் சொல்லியுள்ளார்.

நம்மாழ்வார் மங்களாசாசனம்: சித்திரை விழாவின் போது நம்மாழ்வார் அவரது பிறந்த தலமான ஆழ்வார் திருநகரியிலிருந்து அத்தலத்து பெருமாள் பொலிந்து நின்ற பிரானுடன் இங்கு எழுந்தருளுவார். ஸ்வாமியை மங்களாசாசனம் செய்த பின், அன்ன வாகனத்தில் எழுந்தருளுவார். அவ்வேளையில் கள்ளபிரான், பொலிந்து நின்ற பிரான், வரகுணமங்கை வெற்றிருக்கை பெருமாள், திருப்புளியங்குடி காய்சினவேந்த பெருமாள் ஆகிய நால்வரும் கருட சேவை சாதிப்பர். பக்தர்கள் பிறவாநிலை (மோட்சம்) கிடைக்க, இந்த இரு உலகங்களிலும் இடம் கேட்டு சுவாமியை வணங்குகின்றனர், ஜாதகத்தில் சூரியன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் நிவர்த்திக்காக இங்கு வேண்டிக்கொள்ளலாம்.
      
ஸ்தல பெருமை:நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ சேத்திரங்களும், நவகிரகங்களுடன் தொடர்புடையவை எனக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமாளே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது.  

அதன்படி
1. சூரியன் : ஸ்ரீ வைகுண்டம்
2. சந்திரன் : வரகுணமங்கை (நத்தம்)
3. செவ்வாய் : திருக்கோளுர்
4. புதன் : திருப்புளியங்குடி
5. குரு : ஆழ்வார்திருநகரி
6. சுக்ரன் : தென்திருப்பேரை
7. சனி : பெருங்குளம்
8. ராகு : 1. இரட்டைத் திருப்பதி (தொலைவில்லிமங்கலம்)
9. கேது : 2 . இரட்டைத் திருப்பதி
இங்கு பெருமாள் சந்திர விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.

சோழநாட்டில் அமைந்துள்ள நவகிரகங்களுக்கு ஒப்பாக இப்பாண்டி நாட்டு நவதிருப்பதிகள் நவகிரகங்களாக போற்றப்படுகிறது. இங்கு பெருமாளே நவகிரகங்களாக செயல்படுவதால் நவ கிரகங்களுக்கு என தனியே சன்னதி அமைக்கப்படுவதில்லை. அவரவர்க்கு உள்ள கிரக தோசங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும். பொதுவாக பெருமாள் ஆதிசேஷனில் சயனித்தபடி இருப்பார். ஆனால் இங்கு ஆதிசேஷன் குடைபிடிக்க பெருமாள் நின்ற திருக்கோலத்தில் இருப்பது தனி சிறப்பாகும்.

வைகுண்டமும் உண்டு... கயிலாயமும் உண்டு: காவிஷ்ணுவின் இருப்பிடம் வைகுண்டம். சிவபெருமானுக்குரியது கயிலாயம். பக்தர்கள் பிறவாநிலை (மோட்சம்) கிடைக்க இந்த இரு உலகங்களிலும் இடம் கேட்டு ஸ்வாமியை வணங்குகின்றனர். இத்தலத்தில் ஸ்வாமியே, வைகுண்டநாதராக அருளுவதால், இங்கு வேண்டிக்கொள்பவர்களுக்கு வைகுண்டத்தில் இடம் கிடைப்பதாக நம்பிக்கை. தவிர, இந்த ஊரிலேயே கயிலாசநாதர் [நவகைலாய தலம்] கோவிலும் உள்ளது. இந்தக் கோவிலில் வேண்டிக் கொள்பவர்களுக்கு கயிலாயத்தில் இடம் கிடைக்கும். இவ்வாறு ஒரே ஊரில் வைகுண்டம், கயிலாயம் என இரண்டையும் தரிசிக்கலாம் என்பது விசேஷம். மணித்துளி தரிசனம் வைகுண்ட ஏகாதசியன்று உற்சவர் கள்ளபிரானை அர்த்த மண்டபத்திற்குள் கொண்டு செல்வர். இவ்வேளையில் சன்னதியை அடைத்து விடுவர். பின் கண் இமைக்கும் நேரத்திற்குள் நடை திறந்து, ஸ்வாமிக்கு தீபாராதனை காட்டி உடனே அடைத்து விடுவர். ஒரு சில மணித்துளிகளுக்குள் இந்த வைபவம் நடந்து முடிந்து விடும். இவ்வேளையில் ஸ்வாமியை தரிசித்தால் பிறப்பில்லா நிலை கிடைப்பதாக நம்பிக்கை.

ஸ்தல வரலாறு:சோமுகன் என்னும் அசுரன், பிரம்மாவிடமிருந்து வேத சாஸ்திரங்களைத் திருடிச்சென்றான். இதனால் படைப்புத் தொழில் நின்று போனது. வருந்திய பிரம்மா, மகாவிஷ்ணுவை வேண்டி பூலோகத்தில் தாமிரபரணி நதிக்கரையில் தவமிருந்தார். அவருக்குக் காட்சி தந்த ஸ்வாமி, அசுரனை அழித்து வேதங்களை மீட்டுத் தந்தார். பிரம்மாவின் வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளி, "வைகுண்டநாதர்'' என்ற திருநாமம் பெற்றார்.

பால்பாண்டி தென்னகத்தில் குறிப்பாக மதுரை, திருநெல்வேலி பகுதிகளில் பால்பாண்டி என்ற பெயரை மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சூட்டும் வழக்கம் உள்ளது. இது இத்தலத்து பெருமாளின் பெயராகும். பல ஆண்டுகளுக்கு முன் இக்கோவில் வழிபாடின்றி மறைந்து போனது. ஸ்வாமி சிலையும் ஆற்றங்கரையில் ஓரிடத்தில் புதைந்திருந்தது. இவ்வேளையில் இங்கு மேய்ச்சலுக்கு வந்த அரண்மனை பசு, தொடர்ச்சியாக இங்கிருந்த புற்றில் பால் சுரந்தது. இதையறிந்து வந்த பாண்டிய மன்னன், அவ்விடத்தில் ஸ்வாமி சிலை இருந்ததைக் கண்டு கோவில் எழுப்பினான். அன்றிலிருந்து தினமும் ஸ்வாமிக்கு பால் அபிஷேகம் செய்து பூஜித்தான். இதனடிப்படையில் தற்போதும் தினமும் காலையில் இவருக்கு பால் திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யப்படுகிறது. பாண்டியன் பால் அபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்தமையால் இந்த ஸ்வாமிக்கும் "பால்பாண்டி' என்ற பெயர் ஏற்பட்டது.

அருள்மிகு திருமாகறலீஸ்வரர் திருக்கோவில்


274 சிவாலயங்கள் : அருள்மிகு திருமாகறலீஸ்வரர் திருக்கோவில்

மூலவர் : திருமாகறலீஸ்வரர்
உற்சவர் : சோமாஸ்கந்தர், நடராஜர்
அம்பாள் : திரிபுவன நாயகி
தலவிருட்சம் : எலுமிச்சை
தீர்த்தம் : அக்னி
ஆகமம் பூஜை : 4 காலம்
பழமை : 1800வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருமாகறல்
ஊர் : திருமாகறல்
மாவட்டம் : காஞ்சிபுரம்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர் 11 பதிகம் பாடியுள்ளார். தேவாரப்பதிகம்

மன்னுமறை யோர்களொடு பல்படிம மாதவர்கள் கூடியுடனாய் இன்னவகை யால்இனிது இறைஞ்சி இமை யோரிலெழு மாகறலுளான் மின்னை விரி புன்சடையின் மேல்மலர்கள் கங்கையொடு திங்களெனவே உன்னுமவர் தொல்வினைக ளொல்கவுயர் வானுலக மேறலெளிதே.-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 7வது ஸ்தலம்.
 
விழா : மாசி மாதம் பத்துநாள் பிரம்மோற்ஸவம்.   
       
சிறப்பு : இத்தல இறைவனுக்கு அடைக்கலம் காத்த நாதர், மகம் வாழ்வித்தவர், உடும்பீசர், பாரத்தழும்பர், புற்றிடங்கொண்டார், நிலையிட்ட நாதர், மங்கலங்காத்தவர், பரிந்து காத்தவர், அகத்தீஸ்வரர் ஆகிய பெயர்களும் உண்டு. இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவரின் விமானம் கஜபிருஷ்ட (யானையின் பின் பகுதி) அமைப்பில் அமைந்துள்ளது. திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடந்தது. இந்திரன் முருகனுக்கு திருமணப்பரிசாக வெள்ளை யானையை கொடுத்தான். புதுமணத்தம்பதிகளை வெள்ளையானையில் அமரச்செய்து அக்காட்சியை கண்ணாற கண்டு மகிழ்ந்தான். மகாவிஷ்ணுவும் இக்காட்சியை காண விரும்ப, முருகன் இத்தலத்தில் வெள்ளையானை மீது அமர்ந்து காட்சி தந்தார். இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது.   
       
திறக்கும் நேரம் : காலை 07:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை மணி 06:00 முதல் இரவு 08:00 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு திருமாகறலீஸ்வரர் திருக்கோயில், திருமாகறல் : 631 603, காஞ்சிபுரம் மாவட்டம். போன் : +91- 94435 96619.  
      
தகவல் : அழகிய சுதை சிற்பங்களோடு ஐந்து நிலை ராஜகோபுரமும், இரண்டு பிரகாரமும் உள்ளது. பிரகாரத்தில் கணபதி, ஆறுமுகன், அறுபத்து மூவர், நடராஜர், பைரவர், நவக்கிரக சன்னதி உள்ளது. விமானத்தில் வீணை ஏந்திய தெட்சிணாமூர்த்தியைக் காணலாம்.
 
பிரார்த்தனை : இத்தலத்தின் அபிஷேக தீர்த்தத்தை ஒரு மண்டலம் சாப்பிட்டால் ரத்தம் சம்பந்தப்பட்டவை, எலும்பு முறிவு, கண்பார்வை குறைவு, பக்கவாதம் ஆகிய நோய்களின் தாக்கம் குறையும் என்பது நம்பிக்கை. பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரவும், கிரக தோஷம் விலகவும் பூஜை செய்யலாம். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்கு அங்க பிரதட்சணம் செய்கிறார்கள்.
 
பெருமை : முருகப்பெருமான் சூரபத்மன் முதலிய அரக்கர்களை அழிக்க போர் செய்த போது தப்பிப் பிழைத்த மாக்கிரகன் என்ற அசுரன் சிவபூஜை செய்து வந்தான். அவன் இத்தலம் வந்த போது இங்குள்ள இறைவனுக்கு தன் பெயரால் மாக்கிரன் என பெயர் சூட்டினான். இப்பெயர் மருவி "மாகறலீசர்' என்று மாறியது.
 
ஸ்தல வரலாறு : முன்னொரு காலத்தில் பிரம்மா இத்தலத்தில் சிவபூஜை செய்து விட்டு சத்தியலோகம் செல்லும் போது ஆண்டு முழுவதும் காய்க்கும் அதிசய பலாமரம் ஒன்றை நட்டார். அப்பலாமரம் நாள் தோறும் கனி கொடுத்து வந்தது. ராஜேந்திர சோழ மன்னன் இந்த அதிசய பலாமரத்தைக் கண்டு வியந்து அந்த ஊரிலிருந்து தினமும் ஒருவர் தலைச்சுமையாக இந்த பழத்தை எடுத்து சிதம்பரம் நடராஜர் கோவிலில் சேர்க்க வேண்டுமென உத்தரவிட்டான். நடராஜருக்கு இப்பழத்தை மதிய வேளையில் நைவேத்தியம் செய்து அதை மன்னருக்கு கொடுப்பது வழக்கம். ஒருமுறை அந்தண சிறுவனின் முறை வந்தது. இந்த மரத்தில் இருந்து தினமும் பழம் பறித்துப் போக மக்களை ஏவும் மன்னன் வேலைக்காரர்களை இதற்கென நியமித்திருக்கலாமே என எண்ணிய அவன் ஒரு தந்திரம் செய்தான். அந்த ஊர் மக்களிடம் நான் சிறுவன். பழத்தை சுமக்க சிரமப்படுவேன். நீங்கள் எல்லோரும் போய் இந்த பழத்தை கொடுத்து வாருங்கள். நான் இங்கிருந்து உங்கள் வீடுகளை பார்த்து கொள்கிறேன் என்று கூற அனைவரும் சிதம்பரம் சென்று விட்டனர். இந்த மரம் இருந்தால் தானே பிரச்னை வரும். இதை அழித்து விட்டால் நம் ஊர் மக்கள் தினமும் பழம் சுமக்கும் தொல்லை இருக்காதே எனக் கருதியவன் அந்த மரத்தை எரித்து விட்டான். ஊர் திரும்பிய மக்களிடம் பலாமரத்தில் தானாக தீப்பிடித்து சாம்பலாகி விட்டதாக தெரிவித்தான். ஊராரும் நம்பி விட்டனர். மறுநாள் பலாப்பழம் சிதம்பரம் செல்லவில்லை. அந்த சிறுவனை அழைத்து மன்னர் விசாரித்தார். அப்போது அவன் பலாப்பழத்தை சிதம்பரம் கொண்டு வருவதற்கு தாங்கள் எங்களுக்கு எந்த வசதியும் செய்து தரவில்லை. எனவே தான் மரத்தை எரித்தேன் என்றான். அதற்கு மன்னன் தகுந்த வசதி வேண்டும் என நீ இதை என்னிடம் தெரிவித்திருக்க வேண்டும். இதை நீ செய்யாததால் உனது கண்களை கட்டி நாடு கடத்த உத்தரவிடுகிறேன் என்றான். காவலர்கள் சிறுவனை அழைத்துச் சென்ற போது மன்னனும் உடன் சென்றான். ஊர் எல்லையில் அவனை விட்டு விட்டு திரும்பிய போது ஓரிடத்தில் பொன்னிற உடும்பு தென்பட்டது. அதை பிடிக்க காவலாளிகள் சென்ற போது அது ஓர் புற்றினுள் சென்று மறைந்தது. காவலாளிகள் அந்த புற்றை ஆயுதங்களால் அந்த புற்றை கலைத்த போது உடும்பின் வாலிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. அப்போது அசரீரி தோன்றி சிறுவன் என்றும் பாராமல் நாடு கடத்தியதற்காக கண்டனக்குரல் எழுந்தது. மன்னன் மயங்கி விழுந்தான். மயக்கம் தெளிந்த மன்னனிடம் மீண்டும் அசரீரி தோன்றி சிவபெருமானே உடும்பாக வந்ததாகவும் அவ்விடத்தில் ஓர் சிவாலயம் கட்டி வழிபாடு செய்யும் படியும் ஆணையிட்டார். மன்னனும் அதன் படியே செய்தான். இன்றும் கூட உடும்பின் வால் அளவிலுள்ள லிங்கம் தான் மூலஸ்தானத்தில் உள்ளது. 




அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்


 274 சிவாலயங்கள்: அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்

மூலவர் : அமிர்தகடேஸ்வரர்
உற்சவர் : சோமாஸ்கந்தர்
அம்பாள் : வித்யூஜோதிநாயகி
தல விருட்சம் : கடம்பமரம்
தீர்த்தம் : சக்தி தீர்த்தம்
ஆகமம் பூஜை  : காமிகம்
பழமை : 2000 வருடங்களுக்கு மேல்
புராண பெயர் : திருக்கடம்பூர்
ஊர் : மேலக்கடம்பூர்
மாவட்டம் : கடலூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:சம்பந்தர், அப்பர்
       
தேவாரப்பதிகம்

நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன் தென்க டம்பைத் திருக்கரக் கோவிலான் தன் கடன் அடியேனைத் தாங்குதல் என் கடன்பணி செய்து கிடப்பதே.திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 34வது ஸ்தலம்.
 

விழா:சிவராத்திரி, அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம், புரட்டாசியில் சம்பந்தர் ஞானப்பால் அருந்திய உற்சவம்.   
       

சிறப்பு:இங்குள்ள சிவலிங்கம் நவபாஷாணத்தால் செய்யப்பட்டதாகும். பங்குனி மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுவதும், ஐப்பசி அன்னாபிஷேகத்தின் போது, இரவில் சந்திர ஒளி சுவாமி மீது விழுவதும் சிறப்பு. சனீஸ்வரருக்கு ஆரம்ப காலத்தில் கழுகுதான் வாகனமாக இருந்தது. ராமரின் தந்தையான தசரதர், அவருக்கு கழுகுக்கு பதிலாக காகத்தை கொடுத்தார். இங்குள்ள சனீஸ்வரர் கழுகு வாகனத்துடன் காட்சி தருகிறார். எனவே, இவர் ராமாயண காலத்திற்கும் முற்பட்டவர் என்கிறார்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது. இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.   
       
திறக்கும் நேரம்:காலை 07.30 மணி முதல்10.00 மணி வரை, மாலை 05.30 மணி முதல் இரவு 07.30 மணி வரை திறந்திருக்கும். பிற நேரங்களில் அர்ச்சகரை அழைத்துச் சென்று சிவனை தரிசிக்கலாம்.  
     
முகவரி: அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில், மேலக்கடம்பூர்- 608 304. கடலூர் மாவட்டம்.போன்:+91- 264 638, 93456 56982.  
      

தகவல்:தேர் வடிவில் அமைந்த கோயில் இது. விநாயகர் சக்கரத்தை மிதித்தன் அடையாளமாக இடது பக்க சக்கரம் பூமியில் பதிந்து இருக்கிறது. குஞ்சிதபாத நடராஜர் சற்றே பின்புறமாக சாய்ந்தபடி சிவகாமியுடன் இருக்கிறார். கோஷ்ட சுவரில் 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு சிற்பமாக உள்ளது. வலப்பக்க சுவரில் அர்த்தநாரீஸ்வரர் நந்தியுடன் இருக்க, அவருக்கு கீழே ரங்கநாதர் பள்ளிகொண்ட கோலத்தில் இருப்பது சிறப்பு. வைகுண்ட ஏகாதசியன்று இவருக்கு பூஜைகள் நடக்கிறது.

பின்புற சுவரில் மகாவிஷ்ணு அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். இவர் கையில் சிவலிங்கத்தை வைத்தபடி காட்சி தருவது சிறப்பு. இவருக்கு அருகில் ஆண்டாள், கருடன், ஆஞ்சநேயர் ஆகிய மூவரும் இருக்கின்றனர். இவருக்கு எதிரே முருகன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். இவரை அருணகிரியார் திருப்புகழில் பாடியிருக்கிறார். கோஷ்டசுவரிலேயே கங்காதரர், ஆலிங்கனமூர்த்தி ஆகியோரும் இருக்கின்றனர். விமானத்தில் தெட்சிணாமூர்த்தி புல்லாங்குழல், வீணையுடன் இருக்கும் காட்சியை தரிசிக்கலாம். இத்தலவிநாயகரின் திருநாமம் ஆரவார விநாயகர்.

பிரார்த்தனை:செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வழிபடவேண்டிய ஸ்தலம். இங்கு சஷ்டியப்த பூர்த்தி, ஆயுள் விருத்தி ஹோமம் அதிகளவில் நடக்கிறது.

பெருமை:நவக்கிரகங்கள் ஒவ்வொருநாளும் தங்களுக்கான நாளில் இங்கு சிவனை வழிபடுவதாக ஐதீகம். இதன் அடிப்படையில் சிவன் ஒவ்வொருநாளும், அந்தந்த கிரகங்களுக்கு உகந்த நிறங்களில் வஸ்திரம் அணிந்து தரிசனம் தருகிறார். எனவே, இத்தலம் கிரகதோஷ பரிகார தலமாகவும் இருக்கிறது. அம்பாள் சன்னதிக்கு எதிரே நவக்கிரக சன்னதி இருக்கிறது.

அம்பாள் காலையில் வீணை ஏந்தி சரஸ்வதியாகவும், உச்சிக்காலத்தில் யானையுடன் லட்சுமியாகவும், மாலையில் சூலாயுதத்துடன் துர்க்கையாகவும் காட்சி தருகிறாள். இதனால் இவளை, "வித்யஜோதிநாயகி' (வித்யா - சரஸ்வதி, ஜோதி - லட்சுமி, நாயகி - துர்க்கை) என்று அழைக்கின்றனர். இவளுக்கு "ஜோதிமின்னம்மை' என்றும் பெயர் உண்டு.

திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் அம்பாளுக்கு மஞ்சள் கிழங்கு, வளையல் படைத்து வழிபடுகிறார்கள். திருநாவுக்கரசர், ""என் கடன் பணிசெய்து கிடப்பதே,'' என்று இத்தலத்தில்தான் பதிகம் பாடினார்.

ரிஷபதாண்டவர் இத்தலத்தில் "ரிஷபதாண்டவமூர்த்தி' நந்தி மீது நடனமாடிய கோலத்தில் 10 கைகளுடன் உற்சவராக இருக்கிறார். இவருக்கு பிரதோஷத்தின்போது சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அன்று ஒருநாள் மட்டுமே இவரை தரிசிக்க முடியும்.

இவருக்கு கீழே பீடத்தில் பார்வதி, திருமால், பைரவர், வீரபத்திரர், விநாயகர், நாரதர், நந்திதேவர், பிருங்கி, மிருகண்ட மகரிஷி, கந்தர்வர் மற்றும் பூதகணங்கள் இருக்கின்றன. பிரகாரத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தி நந்தியின் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கிறார்.

ஆரவார விநாயகர்: இந்திரனின் ஆணவத்தை போக்கிய விநாயகர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவருக்கு, "ஆரவார விநாயகர்' என்று பெயர். அமிர்த கலசத்தை தூக்கிச்சென்றும், தேர் சக்கரத்தை மிதித்தும் ஆரவாரம் செய்ததால் இவருக்கு இந்த பெயர் வந்ததாம். இவர் தலையை இடதுபுறமாக சாய்த்தபடி கோப முகத்துடன் காட்சிதருகிறார்.

செவ்வாய்தோஷ தலம்: சூரனை அழிக்கச்செல்லும் முன் முருகன் இங்கு அம்பாளை வணங்கி வில் வாங்கிச்சென்றார். எனவே, இங்குள்ள உற்சவர் முருகன் கையில் வில்லுடன் இருக்கிறார். செவ்வாய் கிரகம், தனக்கு அதிபதியான முருகனை இத்தலத்தில் வழிபட்டுள்ளார். இதன் அடிப்படையில் இங்கு செவ்வாய் கிரகம் உற்சவராக இருக்கிறார்.

கோஷ்ட சுவரில் உள்ள பிரம்மா, சிவனை பூஜித்தபடி இருக்கிறார். இவருக்கு இருபுறமும் எமதர்மன், சித்திரகுப்தர் ஆகியோர் இருக்கின்றனர்.  அருகில் பதஞ்சலி முனிவர் இருக்கிறார். இவரது தலை மீது நடராஜரின் நடனக்கோலம் உள்ளது. நடராஜரின் நடனத்தை கண்ட மகிழ்ச்சியில் அவரை தன் தலை மீது வைத்துக் கொண்டாடினார் பதஞ்சலி. இதனை இச்சிற்பம் விளக்குவதாக சொல்கிறார்கள்.

அருகிலுள்ள துர்க்கை கட்டை விரல் இல்லாமல், சிம்ம வாகனத்துடன் இருக்கிறாள். இவளுக்கு கீழே மேரு மலை, ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த சக்கரம் இருக்கிறது.   
       
ஸ்தல வரலாறு:பாற்கடலில் அமுதம் கடைந்த தேவர்கள், விநாயகரை வணங்காமல் அதனை பருகச்சென்றனர். இதைக்கண்ட விநாயகர் தேவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணி, அமுதகலசத்தை எடுத்துச் சென்று விட்டார். அவர் கடம்பவனமாக இருந்த இத்தலத்தின் வழியாக சென்றபோது, கலசத்தில் இருந்த அமிர்தத்தில் ஒரு துளி தரையில் விழுந்தது. அவ்விடத்தில் சிவன் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார்.  தன் தவறை உணர்ந்த இந்திரனும், தேவர்களும் இங்கு வந்து விநாயகரிடம் தங்களது செயலை மன்னித்து அமுதத்தை தரும்படி வேண்டினர். அவர் சிவனிடம் வேண்டும்படி கூறினார். அதன்படி இந்திரன் சிவனை வேண்டினான். அவர் இந்திரனுக்கு அமுத கலசத்தை கொடுத்து அருள்புரிந்தார். இங்கேயே தங்கி "அமிர்தகடேஸ்வரர்' என்ற பெயரும் பெற்றார்.

தேவர்களின் தாயான அதிதி தன் மக்களுக்கு அமிர்தம் கொடுத்து அருள்செய்த அமிர்தகடேஸ்வரரை தொடர்ந்து வணங்கி வந்தார். அவர் இதற்காக தினசரி தேவலோகத்திலிருந்து இங்கு வருவதை இந்திரன் விரும்பவில்லை. எனவே, இங்குள்ள சிவனை கோயிலோடு இந்திரலோகத்திற்கு எடுத்துச் செல்ல எண்ணி, கோயிலை தேர் வடிவில் மாற்றினான். கோயிலை இழுத்துச் செல்ல முயன்றான். அப்போது விநாயகர் தேர்ச்சக்கரத்தை தன் காலால் மிதித்துக் கொண்டார். இந்திரன் எவ்வளவோ முயன்றும் ஒரு அடிகூட நகர்த்த முடியவில்லை.

விநாயகரின் செயலை அறிந்த அவன் அவரிடம், தான் தேரை எடுத்துச்செல்ல வழிவிடும்படி வேண்டினார். விநாயகர் அவனிடம், கோடி லிங்கங்களை பிரதிஷ்டை செய்தால் தேரை கொண்டு செல்லலாம் என்றார். இந்திரன் ஆணவத்துடன் லிங்கம் செய்தான். ஆனால் எல்லா லிங்கங்களும் பின்னப்பட்டன. தவறை உணர்ந்த இந்திரன் அமிர்தகடேஸ்வரரை வணங்கினான். அவர், ஆயிரம் முறை தன் நாமம் சொல்லி, ஒரு லிங்கத்தை செய்யும்படி கூறினார். அதன்படி, இந்திரன் "ருத்ரகோடீஸ்வர' லிங்கத்தை செய்தான். சிவன் அவனுக்கு காட்சி தந்து, ""தான் இங்கேயே இருக்க விரும்புவதாக சொல்லி, அதிதிக்கு பதிலாக நீயே இங்கு வந்து என்னை தரிசிக்கலாம்,'' என்றார். இந்திரனும் ஏற்றுக்கொண்டு தன் தவறுக்கு மன்னிப்பு பெற்றான். தற்போதும் தினசரியாக இங்கு இந்திரன் பூஜை செய்வதாக ஐதீகம்.




சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: பங்குனி மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுவதும், ஐப்பசி அன்னாபிஷேகத்தின் போது, இரவில் சந்திர ஒளி சுவாமி மீது விழுவதும் சிறப்பு. இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

ஆவணிஅவிட்டம்


ஆவணிஅவிட்டம்

புது பூணூல் மாற்றி கொள்வதற்காக மட்டும் அல்ல. ப்ராசீனமான நமது வைதிக சம்ப்ரதாயத்தில் பல பண்டிகைகள், விழாக்கள் உண்டு. ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு முக்கியத்துவம் உள்ளது என்பதையும் நாம் அறிந்ததே.

அதுமாதிரி வேதத்திற்காக ஒரு பண்டிகை, உண்டு என்றால் அது உபாகர்மா எனும் பண்டிகைதான்.

ஆவணியாவிட்டம் என்றும் சொல்லப்படும் இந்த பண்டிகை வேறு எதை உத்தேசித்தும் கொண்டாடப் படுவதில்லை.

ஆனால் இக்காலகட்டத்தில் நம்மில் எத்தனை பேர் ஆவணியாவிட்டத்தன்று இந்த பண்டிகை வேதத்தை உத்தேசித்துதான் கொண்டாடப்படுகின்றதுஎன அறிந்துள்ளோமா என்பது சந்தேகம்தான்.

ஆவணி அவிட்டம் என்ற உடனே புது பூணூல் மாற்றி கொள்வது மட்டும்தான் என்று நம்மில் பலர் நினைத்து கொண்டிருக்கலாம். ஓரளவிற்கு இதில் உண்மை இருந்தாலும், உபாகர்மா என்றும் அழைக்கப்படுகின்ற இந்த அருமையான பண்டிகை பல அபூர்வமான வேதோக்த அங்கங்களை தன்னகத்தே கொண்டுள்ளது என்பதுதான் சத்தியம்.

பொதுவாக ஆவணி மாதத்தில் அவிட்ட நக்ஷத்திரத்தில் இந்த பண்டிகை வருவதால் இதற்கு ஆவணி அவிட்டம் என்று ஒரு பெயர் வந்திருக்கலாம். ச்ரவண மாதத்தில் வருவதால் இதற்கு ‘ச்ரவணம்’ என்றும் ஒரு பெயர் உண்டு. ஆனால் உபாகர்மா என்பதுதான் இதன் உண்மையான பெயர்.

உபாகர்மா என்ற வார்த்தைக்கு "ஆரம்பம்" என்று அர்த்தம். அதாவது வேதாரம்பம்.

ச்ராவண்யாம் பெளர்ணமாஸ்யாம் அத்யாயம் உபாக்ருத்ய மாஸ ப்ரதோஷே ந அதீயீத, தேஷ்யாம் பெளர்ணமாஸ்யாம் ரோஹின்யாம் வா விரமேத்” என்று ஆபஸ்தம்பர் கூறுகிறார்.

இந்த வாக்யத்தின் முதல் பகுதியின் அர்த்தம் என்னவென்றால் *ஆடி அமாவாஸ்யைக்கு பிறகு வரும் பெளர்ணமி அன்று முதல் ச்ராவணமானால் ப்ரஹ்மச்சாரிக்கும், மற்ற க்ரஹஸ்தர்களுக்கும் இந்த நாள் வேதாரம்பம் ஆகும்.

மேலும் வேதத்திற்கு யாதயாம தோஷம் வருகின்றதாம். அதாவது ‘பழையது’ என சொல்லுகிறோம் அல்லவா அது மாதிரி. இந்த தோஷம் நீங்கவும் உபாகர்மா செய்யப்படுகின்றது.

வேதத்திற்குபோய் ‘பழையதுனு தோஷம்' எப்படி வரும் எனும் சந்தேகம் நமக்கு வந்தால் அது நியாயம்தான்.

வேதத்திற்கு இயற்கையாக எந்த தோஷமும் வராது. ஆனால் நாம், சாதாரண மனிதர்கள், வேதத்தை பாராயணம் செய்வதனால் அதற்கு அந்த தோஷம் வருகிறதாம்.

உதாரணத்திற்கு நாம் ஆலயங்களை எடுத்துக்கொள்ளலாம்.. கும்பாபிஷேகம், பவித்ரோத்ஸவம் நாம் ஏன் செய்கின்றோம் என யோசித்தால் நமக்கு இதன் அடிப்படை புரியும்.

பிரஹ்மாவும், உபாகர்மாவும்:

மேலும், உபாகர்மாவில் ப்ரஹ்மாவும் சம்பந்தப்பட்டுள்ளார். அதையும் பார்ப்போமா..

வேதத்தை ரிஷிகள் இயற்றவில்லை என்பது நமக்கு தெரிந்ததே. ஸர்வஞ்னான ஸர்வேஸ்வரன் ஸங்கல்பம் செய்து கொண்டதாக வேதமே கூறுகின்றது.

இதோ அதற்கான வாக்யம்:
ஸோ காமாயத பஹுஸ்யாம் ப்ரஜா யேயேதி !”
ஈஸ்வரனின் அறிவான அந்த வேதத்தை அவர் முதல் முதலில் ப்ரஹ்மாவிற்கு உபதேசித்தார்.

உபதேசம் செய்தார் என்னும்போது வாயால் உபதேசித்ததாக நினைக்க வேண்டாம். சங்கல்பத்தினாலேயே உபதேசித்தார்.

ப்ரஹ்மாவிற்கு பிறகு ப்ரஜாபதிகள் ‘சந்தை’ சொல்லி, ‘திருவை’ சொல்லி வேதத்தை வரப்படுத்தினார்கள். ப்ரஹ்மா உபதேசம் பெற்ற நாள் எது தெரியுமா? ஆவணி அவிட்டம் நாள்

ஆதலால் இது வேதத்தின் ‘ஆண்டு விழாவாகவும்’ Anniversary எடுத்துகொள்ளலாம்.

வேதத்தை கற்றவர்கள், வேதாத்யயனம் செய்தவர்கள், உபாகர்மா செய்து வேதம் சொன்னால்தான் வேதத்திற்கு மஹிமை உண்டு என சாஸ்திரம் சொல்லுகின்றது.

’நாம்தான் வேத அத்யயனம் செய்யவில்லையே ... அப்போ எனக்கு உபாகர்மா அனுஷ்டிப்பதிலிருந்து விதிவிலக்கு உண்டா? “’ என்று சிலர் யோசிக்கலாம். நியாயம்தான்.

வேதாத்யயனம் செய்யாமலிருக்கலாம். ஆனால் உபாகர்மா அனுஷ்டித்துதான் ஆகவேண்டும். எப்படி என்று பார்ப்போம்.

நித்யப்படி நாம் செய்யும் சந்தியா வந்தனத்தில் வரும் மந்திரங்கள், மேலும் காயத்ரி மந்திரம், பூஜை, புனஸ்காரங்களில வரும் மந்திரங்கள், ச்ராத்தம் போன்ற கார்யங்களில் வரும் மந்திரங்களை நாம் வருஷம் முழுவதும் சொல்லுகிறோம் அல்லவா, இவைகள் நமக்கு பலனளிக்க வேண்டுமானால் உபாகர்மா செய்தே ஆக வேண்டும். நாம் சொல்லும் மந்திரங்களுக்கு சக்தி வர வேண்டுமானால் உபாகர்மா ச்ரத்தையாக அனுஷ்டித்தே ஆக வேண்டும்.

இப்போது புரிந்ததா உபாகர்மாவுக்கும் வேதத்துக்கும் எவ்வளவு சம்பந்தம் உள்ளது என்று.

இந்த இடத்தில் மற்றொரு விஷயத்தையும் தெரிந்துக்கொள்ளுவோம்.

ஒருவனுக்கு உபநயனம் ஆனவுடன் வேத பாடசாலையில் சேர்ந்து வேதம் கற்க முடியாது. பூணூல் போட்ட மாத்திரத்திலேயே ப்ரஹ்மச்சாரிக்கு வேதம் கற்க யோக்யதை வருவதில்லை. முதல் உபகர்மா அதாவது தலை ஆவணியாவிட்டம் ஆன பிறகுதான் வேதம் கற்க யோக்யதை வருகின்றது.

உபாகர்மா அன்று நாம் செய்யும் வைதிக சடங்குகளில் வரும் சில அற்புதமான சில விஷயங்களை இங்கே இப்போ பார்ப்போம்:

நூதன யக்ஞோபவீத தாரணம்.

 காமோகார்ஷீத் ஜபம்:

ஆரம்பம் என்று ஒன்று இருந்தால் ‘உத்ஸர்ஜனம்’ ஒன்றும் இருக்க வேண்டும் அல்லவா. வேதத்தை யதோக்தமாக உத்ஸர்ஜனம் செய்யவேண்டும். இந்த உத்ஸர்ஜனத்தை அனுஷ்டிப்பவர்கள் மிக குறைவு. ஆதலால்தான் உத்ஸர்ஜனம் செய்யாததற்கு ப்ராயஸ்சித்தமாக ‘காமோகர்ஷீத்...’ என்கின்ற ஜபத்தை இன்று செய்கிறோம்.

மேலும் இது ஒரு சர்வ பாப ப்ராயஸ்சித்த மந்திரமாகவும் விளங்குகின்றது.

தர்ப்பணம், ஹோமம்

மந்திரங்களை நமக்கு ஆதியில் தந்த ரிஷிகளையும், தேவதைகளையும் பூஜித்து அவர்களது தபஸ்சக்தி மூலம் அவர்களுடைய அனுக்ரஹத்தை நாம் அடைய வேண்டித்தான் ச்ராவணத்தில் ப்ரஜாபதி முதலிய ஒன்பது பேர்களுக்கு காண்டரிஷி தர்ப்பணம் செய்கிறோம். தொடர்ந்து ஹோமமும் சொல்லப்பட்டுள்ளது.

மஹா சங்கல்பம்:

எல்லாவற்றிக்கும் முத்தாய்ப்பு வைப்பது போல் உபாகர்மா அன்று சொல்லப்பட்டுள்ள மஹா ஸங்கல்பம் மிகவும் விசேஷமானது என்பதை நாம் அறிவோம். பல பாவங்களும் தோஷங்களும் நீங்குவதற்கான பிரார்த்தனை வாக்யங்கள் அடங்கியுள்ள இந்த ஸங்கல்பத்தை நாம் பக்தி ச்ரத்தையோடு சொல்லுவது பலன் அளிக்கும். இந்த ஸங்கல்பத்தில் பல தேவதா மூர்த்திகளின் சன்னிதிகளையும், புண்ய க்ஷேத்ரங்களையும், புண்ய நதிகளையும் நாம் நினைவிற்கு கொண்டு வருகின்றோம் அல்லவா. நாம் பாக்யசாலிகள்தாம்.

எனவே வருஷத்தில் நாம் பல சந்தர்பங்களில் செய்யும் பலவிதமான கர்மாக்களில் வரும் மந்திரங்கள் பலம் உள்ளதாக நமக்கு ஸ்ரேயஸ் அளிக்க வேண்டும் என நாம் நினைத்தால் நாம் இந்த  உபாகர்மாவை ச்ரத்தையாக செய்ய வேண்டும்.

உபாகர்மாவை அனுஷ்டானம் செய்யாவிடில் தோஷம் ஏற்படும். சந்தேகமே வேண்டாம். இதை செய்தால்தான் நம்மிடமிருக்கும் சொல்ப வேத மந்திரமானது வீர்யத்தோடு கூடியதாகயிருக்கும்.




39. ஸ்ரீ சத்சித் விலாசேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்....


ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்மரா....

39. ஸ்ரீ சத்சித் விலாசேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்....

முப்பத்தி ஒன்பதாவது ஆச்சார்யர் [கி.பி. 840 - 873]

ஸ்ரீ சத்சித் விலாசேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள். இவரின் தந்தையார் பெயர் ''கமலேஸ்வரர்''. பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் ஸ்ரீபதி.

அப்போது காஷ்மீரத்தை ''அவந்தி வர்மன்'' [855 - 884] ஆண்டு வந்தான். அவனது அவையில் ''த்வனி'' என்ற நூலினை எழுதிய ''ஆனந்தவர்மன்'', ''ஹரவிஜயம்'' என்ற இரு புத்தகத்தை எழுதிய ''ராஜனகரத்னாகரன்'' ஆகிய புலவர்களும், ''முக்தா கணர்'', ''சிவஸ்வாமி'' ஆகிய கவிஞர்களும் இருந்தனர். அவர்கள் எல்லாம் இந்த ஆசார்யரைப் போற்றிப் புகழ்ந் திருக்கின்றனர். இவர் காஷ்மீர் வரை பாத யாத்திரையாக சென்று பல அற்புதங்களை நிகழ்த்திளுள்ளார்.

இவர் கி.பி. 873 ஆம் ஆண்டு, நந்தன வருடம் வைகாசி மாதம், பௌர்ணமி அன்று காஞ்சியில் சித்தி அடைந்தார்.

இவர் 33 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்துள்ளார்.

38. ஸ்ரீ அபிநவ சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்


ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

38. ஸ்ரீ அபிநவ சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்

முப்பத்தி எட்டாவது ஆச்சார்யர் [கி.பி. 788 - 840]

ஸ்ரீ அபிநவ சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள், சிதம்பரத்தில் வசித்த அந்தண குலத்தைச் சேர்ந்தவர். பெற்றோர் பெயர் ''விஸ்வஜித்'' "விசிஷ்டா'' தம்பதிகளின் மகனாக பிறந்தார். இளம் கருவாய் அன்னை வயிற்றில் இருக்கும் போதே தந்தை காலமானார். உடன் கட்டை ஏறப்போன விசிஷ்டாவை உறவினர்கள் "கர்ப்பவதி உடன் கட்டை ஏறக்கூடாது” எனத் தடுத்து விட்டனர்.

தாயைக் காப்பதற்காக நந்திகேஸ்வரரைப் போல மூன்று ஆண்டுகள் தாயின் கருவிலேயே இருந்தார் இவர்.

குழந்தை பிறந்து நடக்கும் தெம்பு வந்ததும் குழந்தையை எடுத்துச் சென்று தில்லை வனத்தில் வி்ட்டு விட்டு அவ்விடத்தை விட்டு சென்றாள் இந்த குழந்தையின் தாய்.

வண்டு நுகருமுன் தேன் சிந்தும் மலர்களைப் பறிக்க புலிக்கால்கள் வேண்டும் என்று பிரார்த்தித்துப் பெற்ற வியாக்கிரபாத ரிஷி, தன் துணைவியுடன் அவ்வழியே சென்ற போது, இந்த குழந்தையைக் கண்டார்கள். அருகில் யாரும் இல்லாமல் அநாதரவாய் இருக்கும் அந்த குழந்தையை எடுத்து வளர்த்தார். ஐந்து வயதில் உபநயனம் செய்வித்து சகல கலைகளையும் அருளினார்.

ஸ்ரீ மடத்தின் 37 ஆவது பீடாதிபதியான ஸ்ரீ வித்யா கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் யாத்திரையாக சிதம்பரம் வந்து நடராஜப் பெருமானைத் தரிசித்த நேரம் "ஸ்ரீ அபிநவ சங்கரரை காஞ்சி ஸ்ரீ காமகோடி பீடாதிபதியாக அமர்த்துக" என அசரீரி ஒலித்தது. இதை கேட்ட வித்யாகநேந்திரர் மெய்சிலிர்த்தார்.

அசரீரி வாக்கின் படி ஸ்ரீ அபிநவ சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் கி.பி.788 ஆம் ஆண்டு ஸ்ரீ மடத்தின் சங்கராச்சரியாராக தீட்சை பெற்றுப் பீடமேறினார்.

அப்போது காஷ்மீரத்தின் மன்னனாக இருந்தவர் ''ஜயாபீட விநயாதித்யர்''. [கி.பி. 780 - 810] அவரது சபையில்
1. க்ஷரஸ்வாமி
2. வாமனகவி
3. சடகன்
4. சிந்துமன்
5. சங்கமன்
6. தாமோதரன்
7. மனோ தேசன்
8. தக்யன்
என்கிற எட்டு பெரும் புலவர்கள் இருந்தனர். இந்த அஷ்ட புலவர்களையும், வாதத்துக்கு அழைழைத்து தோற்கடித்தார் "வாக்பதி பட்டர்" என்ற பண்டிதர். தோற்றவர்களுக்கு கடும் தண்டனை வழங்கினார் அவர்.

மிகவும் வேதனையுற்ற புலவர்கள், அச்சமயம் விஜய யாத்திரையாக காஷ்மீர் வந்திருந்த ஸ்ரீ அபிநவ சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களிடம் "கர்வம்'' கொண்ட அவரைத் தாங்கள் வாதிட்டு வெற்றி கொள்ள வேண்டும் என வேண்டினார்கள்.

"வாக்பதிபட்டரோடு" தர்க்கம் புரிந்து வெற்றி பெற்று ''சர்வக்ஞர்'', ''அபி நவதீரர்'' என்று போற்றப்பட்டார்.

இதை ''ராஜதரங்கணீயமும்'', மற்றும் ''சத்குரு சந்தான பரிமளம்'' என்ற இரு நூலும் சான்று.

காஷ்மீரத்தில் ஸ்ரீ ஆசார்யாள் ஆற்றிய அரும்பணிகள் ஏராளம்.

மதம் மாற்றும் மாற்று மதத்தினரான முகமதியரும், சீனரும், பெர்சிய நாட்டவரும் கூட இவரைப் புகழ்ந்து பாராட்டி இருக்கின்றனர்.

52 ஆண்டு காலம் அருளாட்சி புரிந்த இவர் இமயமலைத் தொடரில் உள்ள ''ஆத்ரேயர் குகையில் புகுந்து மறைந்தார்” என்று ‘'புண்ய ஸ்லோக மஞ்சரியும்'', "வாக்பதிபட்டர்" இயற்றிய ''சங்கரேந்திர விலாசம்'' என்னும் இரு நூலும் இவரின் சித்தி பற்றி தெளிவாகக் கூறுகின்றன.

இந்த நிகழ்ச்சி நடந்த நாள் கி.பி. 840 ஆண்டு, சித்தார்த்தி வருடம், ஆடி மாதம், அமாவாசை திதி அன்று சங்கரர் எப்படி காஞ்சியில் அம்பாளோடு ஐக்கியமானாரோ அதே போல் இவர் இந்த குகையில் ஐக்கியமானார் மறைந்தார். [காணாம‌ல் மறைந்தார்]

இவர் 52 ஆண்டுகள் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தை அலங்கரித்துள்ளார். 



37. ஸ்ரீ வித்யா கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - மூன்று

 ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

37. ஸ்ரீ வித்யா கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - மூன்று

முப்பத்தி ஏழாவது ஆச்சார்யர் [கி.பி. 758 - 788]

ஸ்ரீ வித்யா கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்... இவரின் தந்தை பெயர் '‘ஸ்ரீ பாலசந்திரர்''. பெற்றோர் இவருக்குச் வைத்த பெயர் ''சூரிய நாராயணர்''

இவர் வேற்று சமயத்தவர் தாக்கத்திலிருந்து நம் சமயத்தைக் [மதமாற்றம்] காத்த மஹான்.

இந்தியாவின் மேற்கு பகுதியில் முகலாய படை எடுப்பாளர்களால் நிகழ்ந்த அசம்பாவிதங்களை மாற்றி ஆறு சமயங்களும், அத்வைதமும் நிலை பெறும் படி செய்தார்.

இன்றும் ''குரு ரத்ன மாலை'' அதற்கு சான்றாக இருக்கின்றன. இவர பாரத தேசம் முழுவதும் விஜய யாத்திரை மேற் கொண்ட போது இரண்டாவது குருவான பத்மபாதர் பின் தொடர்ந்து இவரை வழி நடத்த்தி சென்றார்.

மேலும் முதல் குருவான ஸ்ரீ ஆதி சங்கரர் இவருக்கு காட்சி அளித்ததோடு மட்டும் இல்லாமல் ஆதிசங்கரரின் பாதுகையை இவரிடம் அளித்தார் பத்மபாதர்.

ஸ்ரீ வித்யா கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளிடம் “இது நம் குரு நாதரின் பாதரட்சை, இதை அனுதினமும் தொடர்ந்து பூஜித்து வர வேண்டும் என்று அருளினார்.

அந்த பாதுகைகள் தான் இன்றும் நம் ஸ்ரீ  காஞ்சி காமகோடி பீடத்தில் அனுதினமும் பூஜிக்கப்பட்டு வருகின்றது. சந்திர மௌலீஸ்வர பூஜை நடக்கும் சமயத்தில் இந்த பாதுகைக்கு இன்றும் பூஜை நடைப்பெற்ற வருகிறது.

யார் வேண்டுமானாலும் இந்த பாதுகை பூஜைக்கான பணத்தை ஸ்ரீமடத்தில் கட்டி இந்த பூஜையை செய்யலாம்.

இவர் கி.பி. 788 ஆம் ஆண்டு, பிரபவ வருடம், தை மாதம், சுக்லபக்ஷம் த்விதியை திதியில், சிதம்பரத்தில் சித்தி அடைந்தார்.

இவர் 20 ஆண்டுகள் இந்த பீடத்தை அலங்கரித்துள்ளார்....


 

திங்கள், 20 மே, 2024

தெரிந்து கொள்வோம்...

 தெரிந்து கொள்வோம்...

நான்கு வகை உயிரினங்கள்:

1. சுவேதஜம் - புழுக்கத்திலிருந்து பிறக்கக்கூடியன - புழு, பூச்சி, கொசு போன்றவை.

2. உத்பிஜம் - பூமியைப் பிளந்து கொண்டு வெளிவருவன - மரம், செடி, கொடி போன்றவை.

3. அண்டஜம் - முட்டையிலிருந்து வெளிவருவன - பறவைகள், சில நீர்வாழ்வன போன்றவை.

4. ஜராயுதம் - கருப்பையிலிருந்து வெளிவருவன - மனிதன், சில விலங்குகள் போன்றவை.
-------------------‐--------------------------‐--------------------------‐---
ஆதித்தனுடைய ஏழு புத்திரர்கள்:

1. கர்ணன்

2. காளந்தி

3. சுக்ரீவன்

4. தத்திய மகன்

5. சனி

6. நாதன்

7. மனு
-------------------‐--------------------------‐--------------------------‐---
பெண்களுக்குரிய ஏழு பருவங்கள்:

1. பேதை - 1 முதல் 8 வயது வரை

2. பெதும்பை - 9 முதல் 10 வயது வரை

3. மங்கை - 11 முதல் 14 வயது வரை

4. மடந்தை - 15 முதல் 18 வயது வரை

5. அரிவை - 19 முதல் 24 வயது வரை

6. தெரிவை - 25 முதல் 29 வயது வரை

7. பேரிளம் பெண் - 30 வயது முதல்.....
-------------------‐--------------------------‐--------------------------‐---
ஆண்களுக்குரிய ஏழு பருவங்கள்: [பெண்களின் வயது எல்லையும் ஆண்களின் வயது எல்லையும் ஒன்றுதான் என்பதை கவனத்திற்கொள்க]

1. பலன்

2. மீளி

3. மறவோன்

4. திறவோன்

5. காளை

6. விடலை

7. முதுமகன் 30 வயதிற்கு
-------------------‐--------------------------‐--------------------------‐---
நந்தியின் அருள் பெற்ற எட்டுப்பேர்:

1. சனகர்

2. சனாதனர்

3. சனந்தகர்

4. சனத்குமாரர்

5. வியாக்கிரபாதர்

6. பதஞ்சலி

7. சிவயோக முனிவர்

8. திருமூலர்
-------------------‐--------------------------‐--------------------------‐---
அஷ்ட பர்வதங்கள்:

1. கயிலை

2. இமயம்

3. ஏமகூடம்

4. கந்தமாதனம்

5. நீலகிரி

6. நிமிடதம்

7. மந்தரம்

8. விந்தியமலை
-------------------‐--------------------------‐--------------------------‐---
ஆத்ம குணங்கள்:

1. கருணை

2. பொறுமை

3. பேராசையின்மை

4. பொறாமையின்மை

5. நல்லனவற்றில் பற்று [உறுதி]

6. உலோபத்தன்மையின்மை

7. மனமகிழ்வு

8. தூய்மை
-------------------‐--------------------------‐--------------------------‐---
எண்வகை மங்கலங்கள்:

1. கண்ணாடி

2. கொடி

3. சாமரம்

4. நிறைகுடம்

5. விளக்கு

6. முரசு

7. ராஜசின்னம்

8. இணைக்கயல்
-------------------‐--------------------------‐--------------------------‐---
எட்டு வகை வாசனைப் பொருட்கள்:

1.சந்தனம்

2. கோட்டம்

3. கஸ்தூரி

4. கற்பூரம்

5. குங்குமம்

6. பச்சிலை

7. அகில்

8. விளாமிச்சை வேர்
-------------------‐--------------------------‐--------------------------‐---
ஏழுவகைப் பிறப்புக்கள்:

1.தேவர்

2. மனிதர்

3. விலங்குகள்

4. பறப்பவை

5. ஊர்பவை

6. நீர்வாழ்பவை

7. தாவரம்
-------------------‐--------------------------‐--------------------------‐---
ஈரேழு உலகங்கள்: மேல் உலகங்கள்

1.பூமி

2.புவர்லோகம்

3.தபோலோகம்

4.சத்யலோகம்

5.ஜனோலோகம்

6.மஹர்லோகம்

7.சுவர்க்கலோகம்
-------------------‐--------------------------‐--------------------------‐---
கீழ் உலகங்கள்:

8.அதலம்

9.கிதலம்

10.சுதலம்

11.இரசாதலம்

12.தவாதலம்

13.மகாதலம்

14.பாதாலம்
-------------------‐--------------------------‐--------------------------‐---
குபேரனிடம் இருக்கும் நவநிதிகள்:

1.சங்க நிதி

2.பதும நிதி

3.கற்ப நிதி

4.கச்சப நிதி

5. நந்த நிதி

6. நீல நிதி

7. மஹா நிதி

8. மஹாபதும நிதி

9. முகுந்த நிதி
-------------------‐--------------------------‐--------------------------‐---
அஷ்ட ஐஸ்வர்யங்கள்:

1. தனம்

2. தான்யம்

3. பசு

4. அரசு

5. புத்திரர்

6. தைரியம்

7. வாகனம்

8. சுற்றம்
-------------------‐--------------------------‐--------------------------‐---
எட்டு வகை போகங்கள்:

1. அணிகலன்

2. தாம்பூலம்

3. ஆடை

4. பெண்

5. பரிமளம்

6. சங்கீதம்

7. பூப்படுக்கை

8. போஜனம் [உணவு]
-------------------‐--------------------------‐--------------------------‐---
நவ நாகங்கள்:

1. ஆதிசேஷன்

2. கார்க்கோடகன்

3. அனந்தன்

4. குளிகன்

5. தஷன்

6. சங்கபாலன்

7. பதுமன்

8. மகாபதுமன்

9. வாசுகி
-------------------‐--------------------------‐--------------------------‐---
நன்மை தரக்கூடிய தச தானங்கள்:

1. நெல்

2. எள்

3. உப்பு

4. தீபம்

5. மணி

6. வெள்ளி

7. வஸ்திரம்

8. சந்தனக்கட்டை

9. தங்கம்

10. நீர் பாத்திரம்
-------------------‐--------------------------‐--------------------------‐---

ஞாயிறு, 19 மே, 2024

பாரத வர்ஷம நதிகளின் பெயர்கள்

பாரத வர்ஷ நதிகளின் பெயர்கள்...

கங்கை, ஸிந்து, ஸரஸ்வதி, கோதாவரி, நர்மதை, யமுனை, திருஷத்வதி, பருத்த மணலுள்ள விபாசை, ஆழமுள்ள வேத்திரவதி, கிருஷ்ண வேணி, இராவதி, விதஸ்தை, பயோஷ்ணி, தேவிகை, வேதவதி, த்ரிதிவை, இச்க்‌ஷலை, க்ருமி, கரீஷிணி, சித்திரவாகை, ஆழமான சித்திரசேனை,

பாபம் போக்கும் கோமதி, மஹானதியான வந்தனை, கவுசகி,க்ருத்யை, நிசிதை, லோஹிதாரணி, ரகஸ்யை, சதகும்பை, ஸரயு, சர்மண்வதி, வேத்ரவதி, ஹஸ்திஸோமை, திக், சாரவதி, பயோஷ்ணி, வேணை, பீமரதி, காவேரி, சுலுகை, வாணி, சதபலை, நீவாரை, அஹிதை, ஸுப்ரயோகை, பவித்ரை, குண்டலி, ஸிந்து, ராஜனி, புரமாலினி, பூர்வா பிரமை, வீரை, பீமை, ஓகவதி, பாசாசினி, பாபஹரை, மஹேந்திரை, பாடாலாவதி, கரீஷிணி, அஸிக்னி, மஹானதியான குசசீரை, மகரி, மேனை, ஹேமை, க்ருதவதி, புராவதி, அனுஷ்ணை, சைப்யை, காபி.

கலக்க முடியாத ஸதா நீரை, மஹா நதியான குசதாரை, ஸதாகாந்தை, சிவை, வீரவதி, வஸ்தரை, ஸுவஸ்தரை, கவுரி, கம்பனை, ஹிரண்யவதி, வரை, வீரகரை, மஹா நதியான பஞ்சமி, ரத சித்திரை, ஜோதிரதை, விஸ்வாமித்ரை, கபிஞ்சலை, உபேந்தரை, பஹுலை, குவீரை, அம்பு வாஹினி, வினதி, பிஞ்சலை, வேணை, துங்கவேணை, விதிசை, கிருஷ்ணவேணை, தாம்ரை, கபிலை, கலு, ஸுவாமை, வேதாஸ்வை, ஹரிஸ்ராவை, சீக்ரை, பிச்சலை, ஆழமுள்ள பரத்வாஜி, கவுசகி சோணை, பாஹுத்யை, சந்திரமை, துர்கை, சித்திரசிலை, பிரம்மவேத்யை, ப்ருஹத்வதி, யவ்க்‌ஷை, ரோஹி, ஜாம்பூ நதி, ஸுநஸை, தமஸை, தாஸி, வஸாமன்யை, வரணாசி, நிலை, த்ருதவதி, மஹா நதியான பர்ணாசை, மானவை, விருஷபை, பிரம்ம மேத்யை, பிருஹத்வனி.

எப்போதும் ரோகமற்றதான கிருஷ்ணை, மெதுவாக செல்லும் மந்த வாஹினி, பிராம்மணி, மஹாகவுரி, துர்கை, சித்திரோபலை, சித்ராதை, மஞ்சளை, மந்தாகினி, வைதரணி, மஹா நதியான கோஷை, சுக்திமதி, அனங்கை, வ்ருஷஸை, லோஹித்யை, கரதோயை, விருஷகை, குமாரி, ரிஷி, குல்யை, மாரிஷை, ஸரஸ்வதி, மந்தாகினி, ஸுபுண்யை, ஸர்வை, கங்கை இப்படியாக பல நதிகளும் இதற்க்கு மேலும் பாரத வர்ஷத்தை அலங்கரித்தன.

************************************************************************

எவர் தாய் போன்ற நதியை பழித்து அதை அசுத்தப்படுத்துகிறானோ அவனுக்கு தோல்வியாதி வந்து அவன் குலமும் சிதிலமடையும் என்பது பிரமாணம்.

இன்று இத்தனை நதிகளை தேடுவது சிரமம்... அது உங்கள் ஏரியாவில் [2 BHK, 3 BHK flat] யாக மாறி கூட இருக்கலம். யார் கண்டார்?.

இத்தனை நதிகளை கண்டிப்பாக பார்க்க முடியாது... குறைந்த பட்க்ஷம் வாய் விட்டு படியுங்கள். புண்ணியம் கிடைக்கும்.

ராம் ராம்*****************

ப்ரேத ஸப்தம், அ ப ஸ் வ ர ம் நாஸ்தி,

 ப்ரேத ஸப்தம், அ ப ஸ் வ ர ம் நாஸ்தி,

(முன்னுரை:- ஏனிந்த தலைப்பு?

காரணம் எல்லோரும் அபர க்ருத்யங்களை விரும்புவதில்லை. முயன்றால் ஜனனத்தை தவிர்க்கலாம், தள்ளிப்போடலாம். மரணத்தை தவிர்க்கவோ தள்ளிப்போடவோ முடியாது. மரணத்தை தொடர்ந்து செய்யப்படும் அபர க்ருத்யங்களுக்கு அந்தியேஷ்டி என்று பெயர். அந்தியேஷ்டியில் முக்கியமான க்ருத்யம் நடத்தும் நாள் ஒன்று உண்டு. அது நாள் வரை அபஸ்வரமாக ப்ரேதம்... ப்ரேதம் என்று ஒலித்து வந்த ஸப்தம் இன்று தான் நாஸ்தி [இல்லாமல்] ஆகிறது. இந்த அபஸ்வரம் நாஸ்தியாகும் நாளைப்பற்றிதான் இங்கே சாங்கோபாங்கமாக விளக்கப் போகிறேன்.

இங்கே உதாரணத்துக்காகத்தான் ஒரு மரணத்தை விளக்கப்
போகிறேன். சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப சம்ப்ரதாயங்கள் மாறக்
கூடும். [மரணித்த உதாரண புருஷன், யஜுஸ் ஶாகா ஆபஸ்தம்ப ஸூத்ர, கௌன்டின்ய கோத்ர அருணாசல ஶர்மா]

அருணாசலம் என்கிற அருணாசல ஶர்மா காலமாயிட்டார். எம்பளத்தஞ்சு வயசானவர். பார்யாள் அபீதா என்கிற அபீத குசாம்பாள் இவரை முந்திண்டு போயிட்டா. இவருக்கு மூணு பிள்ளைகளும் ரெண்டு பொண்களும் உண்டு. ரெண்டு பொண்களுக்கும் தன் ஆயுஸு காலத்துலயே வசதியான எடத்துல விவாஹம் பண்ணிக் கொடுத்தூட்டார். பிள்ளைகளுக்கும் கல்யாணம் ஆயிடுத்து. இந்தக்காலத்துல இல்லாத ஆச்சர்யம். மூணு பிள்ளைகளும் ஏக குடும்பம்.

அருணாசல ஶர்மாவுக்கு புத்ர கர்மா. ஜ்யேஷ்ட புத்ரன் சந்தானம் பண்ணிண்டிருக்கான். ஒடப்பொறந்தான்கள் கூட இருக்கா. மரணத்தன்னிக்கே தஹனம். மறுநாள் சஞ்ஜயனம். சஞ்ஜயனத் தன்னிக்கே நதி தீர குண்டம் வீட்டு ஆளோடில வச்சுண்டா. க்ருஹ குண்டம் மொட்டை மாடீல தென்னங்கீத்து பந்தல் போட்டு அங்க வச்சுண்டா. அன்னீலேர்ந்தே நித்யவிதி பண்ண ஆரம்பிச்சூட்டா. பொண்களுக்கு மூணு நாள் தீட்டு. ரெண்டு பொண்களும் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் நித்யவிதி பிண்டம் பொங்கினா. பத்தாம் நாள் தஸாஸ்து. ப்ரபூத பலி [பத்து கொட்றது]. தஸாஸ்து அன்னிக்கு வரவாளுக்கெல்லாம் பந்தி போஜனம் பொண்களோட செலவு.

ஆத்துல தீட்டுங்கறதால வெளீல மடி ஆச்சாரமா சமைச்சுத்தர கேடரரை ஏற்பாடு பண்ணிப்பா. இந்த பந்தி போஜனத்துல வைதீகாள், சொந்தக்காரா எல்லாருமே சாப்டலாம். சாயந்திரமா ஆத்து வாத்யார் சர்ம ஸ்லோகம் வாசிச்சார். வாசிச்ச கையோட, என்னென்னிக்கு 27ம் 45ம் நாள் ஊனம், மத்தபடி மாஸாந்த்ர மாஸிகம், ஸோதகும்பம் என்று எல்லாத்தையும் எழுதி தந்தூட்டார். போறி அப்பம் வினியோகம் பண்ணா. சர்ம ஸ்லோகம் வாசிக்கறச்சே பேத்தி உருண்டைன்னு பௌத்ரிகளும், தௌஹித்ரிகளும் தினுசு தினுசா ஸ்வீட் உருண்டை பிடிச்சு வைப்பா. மறுநாள் ஏகோத்திஷ்டம். ஒருத்தன்னு சொல்லி ஒரு ப்ராமணனை தானே சமைச்சு ப்ராம்ணார்த்தம் சாப்பிட்டுக்கணும். இந்த ‘ஒருத்தனு’க்கு நெறைய தக்ஷணை தரணும். இதுக்கு அடுத்த பன்னண்டாம் நாள் தான் ரொம்ப முக்யமான நாள்.

பன்னண்டாம் நாளன்னிக்கு ரெண்டு ரிச்யுவல்ஸ். மொதல்ல பண்றது ஸபிண்டீகரணம். இது ஶ்ராத்தத்தை விட அதிக ஶ்ரத்தையோட பண்ணப்படுவது. கர்மாக்கள் கொஞ்சம் அதிகம். இரண்டு ப்ராம்ணார்த்தக்காராள்ள ஒரு ஸபிண்டி ப்ராம்ணன் பித்ருவா இருப்பார். இவர் தனக்கான ஏதோ ஒண்ணை தானே சமைச்சுக்கணும். அனேகமா இவா ரவா கேஸரி மட்டும் செஞ்சுப்பா. மத்த ஐடங்கள்லாம் விஸ்வேதேவருக்கு என்னவோ அதே தான் இவருக்கும்.

ஒவ்வொரு ஆத்துக்கும் ஶ்ராத்த சமையல்னு ஒரு வழக்கம் இருக்கும். அந்த வழக்கப்படியே தான் ஸபிண்டீகரணத்துக்கும் சமைக்கணும். இது பரம்பரை வழக்கம். இனிமே தான் முக்யமான கர்மா வரது.

ஸபிண்டீகரணத்துக்கு கூட்டத்தாரோடு சேர்த்தல் என்கிற இன்னொரு பெயரும் உண்டு. அப்டீன்னா என்ன தெரியுமோ! இப்போ இறந்து போனவரை ஏற்கெனவே பித்ரு லோகத்துல இருக்கற மூதாதையர்களோட சேர்க்கறதுன்னு அர்த்தம். ஒவ்வொரொத்தருக்கும் பித்ரு லோகத்துல பித்ரு வர்க்கத்தில் மூணு பேரும், மாத்ரு வர்க்கத்தில் மூணு பேரும் இருக்கறதா ஐதீகம். இவாளை வஸு, ருத்ர, ஆதித்ய ஸ்வரூபம்னு சொல்லுவா. மரணிச்சிருக்கற அருணாசல ஶர்மாவுக்கு கீழ்கண்ட மாதிரி மூதாதையர் இருக்கறதா வச்சுக்குவொம். பெயர் எல்லாம் கற்பனை.

கௌன்டின்ய கோத்ரான்
                      ரூபம்:-      வஸு               ருத்ர               ஆதித்ய
பித்ரு வர்க்கம்.       கணேச       நாராயண             ஶ்ரீராம
                                        ஶர்மா               ஶர்மா                 ஶர்மா
                                        பித்ரு      பிதாமஹான்    ப்ரபிதாமஹான்

மாத்ரு வர்க்கம்.   விசாலம்   ஜானகி            சுந்தரி
                                      மாத்ரு        பிதாமஹி      ப்ரபிதாமஹி

ஶ்ராத்தம், தர்ப்பணம் பண்றவா கவனிச்சிருப்பேளே. ப்ராம்ணாள் சாப்ட்ட பின் தக்ஷணை, தாம்பூலம் வாங்கிண்டு ஆஸீர்வாதம் பண்ணீட்டு போனப்பறம் ஆறு பிண்டம் [மூன்று மூன்றாக வரிசைல] வச்சு அதுக்கு எள்ளும் தீர்த்தமும் விட்டு ஒரு கர்மா பண்ணியிருக் கேளோன்னோ. அதே மாதிரி ஸபிண்டீகரணத்துலயும் உண்டு. ஆனா ஆறு பிண்டத்துக்கு பதிலா ஏழு பிண்டம் இருக்கணும். இந்த ஏழாவது பிண்டம் யாருக்கு தெரியுமோ? அது தான் இப்போ மரணிச்ச அருணாசல ஶர்மாவுக்கு.

அவரைத் தான் இப்போ கூட்டத்தாரோட [மூதாதையர்களோட] சேர்க்கணும். அப்படி சேர்க்கறச்சே இந்த வரிசையை ரீஅரேன்ஜ் பண்ணணும். ஆதித்ய ரூபனாக இருக்கிற ஶ்ரீராம ஶர்மாவை நீக்கிப்பிட்டு நாராயண ஶர்மாவை அந்த எடத்துக்கு கொண்டு வரணும். உதாரணமாக ஶர்மா இருந்த எடத்துக்கு கணேச ஶர்மா வந்தூடுவார். அதிகப்படியா ஒரு பிண்டம் வச்சிருந்தோமே அதை வஸு ரூபன் எடத்துல வச்சா அருணாசல ஶர்மா கூட்டத்தாரோட சேர்ந்துட்டார்... இவ்ளோ நாள் ப்ரேத ரூபமா அலைஞ்சுண்டிருந்த அருணாசல ஶர்மா வஸு ரூபரா மாறி பித்ரு லோகம் போறார். அந்த வீட்டு அபஸ்வரம் நாஸ்தி ஆயிடுத்து.

அம்மா அபீதா காலமான பிறகு சந்தானம் ஸஹோதராள் அம்மாவுக்கு ஶ்ராத்தம் பண்ணிண்டிருக்கா. அதுல அவா கௌன்டின்ய கோத்ரான் அபீதா, விசாலம், ஜானகி, வஸு, ருத்ர, ஆதித்ய ரூபான் மம மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹின்னு சொல்றா. இந்த வரிசைல இப்போ ஏதும் மாற்றம் கிடையாது

இந்த பன்னண்டாம் நாளே ஸபிண்டீகரணம் முடிஞ்ச ஒடனே வீடு பூரா அளம்பி தொடைச்சு புண்யார்ஜனம் பண்ணீட்டு ஸோதகும்பம் பண்ணணும்.

சனி, 18 மே, 2024

கயா மற்றும் அக்ஷய வடம்

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
கயா மற்றும் அக்ஷய வடம்
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴

விஷ்ணு பாதம் தான் இங்கு பிரதானம் ...👣 கயாவில் திதி கொடுக்கும் போது மூன்று இடங்களில் திதி கொடுக்க வேண்டும்...

1. விஷ்ணு பாதம்

2. பால்குனி நதி

3. அக்ஷய வடம் {கோவிலில் இருந்து ஐந்து கிலோ மீட்டரில் உள்ளது இந்த மரம்}

முதல் இரண்டு இடங்களுக்கு பொதுவான ஒரிடத்தில் அமர வைத்து புரோகிதர்கள் திதி செய்து விடுகிறார்கள்... இதை முடித்து விட்டு இறுதியாக தான் அக்ஷய வடத்தில் திதி கொடுக்க வேண்டும். இங்கு இருக்கும் விஷ்ணு பாதம் என்பது யாரும் பிரதிஷ்டை செய்த பாதம் கிடையாது. யாரும் கொண்டு வந்து இங்கு வைத்த பாதமும் கிடையாது. பல யுகங்களுக்கு முன் கயாசுரன் என்ற ஒர் அசுரன் அங்கு வசித்து வந்தான். அங்கு வசிக்கும் மக்களுக்கு பெரும் தொந்தரவை அளித்து வந்தான். மக்கள் அனைவரும் மகா விஷ்ணுவிடம் முறையிட... சங்கு சக்கரம் மற்றும் கதையுடன் [அனுமார் கையில் வைத்திருப்பார்] இல்ல வந்து கயாசுரன் மார்பின் மீது கால் வைத்து அவன் மேலே எழும்பாதவாறு செய்தார். மகா விஷ்ணு பாதம் பட்டவுடன் அசுர குணம் அழிந்து மனிதனாக கயாசுரன் மாற்றம் அடைந்தான்.

அதன் பிறகு மகா விஷ்ணுவிடம் அவன் வரம் கேட்க துவங்கினான். அவரும் அவன் கேட்டவற்றை கொடுத்தருளினார்.

1. மகா விஷ்ணு பாதம் பட்ட இடம் தான் விஷ்ணு பாதமாக உருவெடுத்து இன்று பல கோடி மக்கள் தரிசித்து தங்களது பாவங்களைப் போக்கி புண்ணியம் அடைகிறார்கள் [இங்கு கொடுக்கப்படும் இரண்டு திதிகளில் ஒன்றை பிண்டங்கள் - உணவு விஷ்ணு பாதங்களில் சமர்ப்பித்து கயாசுரன் உணவாக உட்கொள்கிறார்] இன்னொன்றை பால்குனி நிதிக்கு சமர்ப்பிக்க வேண்டும். அந்த விஷ்ணு பாதத்தில் தலை வைத்து மனித ஜென்மம் கொடுத்ததற்கு கடவுளுக்கு நன்றி செலுத்தி அடுத்த ஜென்மம் இதைவிட மிகவும் உயர்வானது ஒரு ஜென்மமாக கொடுக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு இனி ஒருமுறை எந்த ஒரு பாவமும் செய்ய மாட்டோம் என உறுதி கொள்வோம்.

2. இங்கு வந்து திதி கொடுக்கும் அப்பா, அம்மா இல்லாத பிள்ளைகளின் வம்சம் விருத்தி ஆகி அப்பா, அம்மா மோட்சத்திற்கு சென்று அடைவார்கள்.

3. அந்த அசுரன் "கயாசுரன்" நினைவாகத்தான் இந்த ஊருக்கு கயா என்று பெயர் வந்தது...

கயாசுரன் இறைவனிடம் கேட்டார் ஸ்வாமி இங்கு திதி நடை பெறாத நாட்களில் எனக்கு அப்பொழுது எவ்வாறு உணவு கிடைக்கும் என்று வினவினான். அதற்கு மகா விஷ்ணு சூரியன் 🌕🌕 சந்திரன்🌛🌜🌛🌜🌚 இருக்கும் வரை இந்த திதியானது தினமும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நீ கவலைப்படாதே.

புனரபி ஜனனம் ...😊
புனரபி மரணம்.....😔

பிறந்த ஒவ்வொரு மனிதனும் என்றாவது ஒரு நாள் இறந்து தான் ஆக வேண்டும். இந்த மனித ஜென்மம் கொடுத்த கடவுள் அதற்காக அவர் வாழும் காலங்களில் நன்மைகளை செய்து நற்கதி அடைவார்கள் என்று இறைவன் அருளினார். கயா கால் தடம் பட்டாலே நாம் செய்த பாவங்கள் அனைத்தும் விலகி விடும். மீண்டும் எந்த ஒரு பாவங்களையும் நாம் செய்யாமல் இருத்தல் வேண்டும்.   

🍀🍀🍀🍀🍀🍀
அக்ஷய வடம்
🍀🍀🍀🍀🍀🍀

அக்ஷய வடம் என்பது அக்சய மரத்தைக் குறிக்கும். இந்த மரமானது பல யுகங்களை கடந்து இன்று வரை நீடித்திருக்கிறது. திரேதா யுகத்தில் ராமர் தசரதருக்கு இங்கு தான் திதி கொடுக்க வந்தார். அதன் பிறகு துவாபரயுகம் இப்பொழுது கலியுகம்.

பிரம்மா பூலோகத்தில் புண்ணிய காரியங்கள் செய்ய வேண்டும் அதன் காரணமாக அக்ஷய 🍁 மரத்தை நிழலுக்காக  இங்கு பூமியில் கொண்டு வந்தார். யாகங்கள் அனைத்தையும் நிறை வேற்றி விட்டு தேவர்களுடன் பிரம்மா மேலோகத்திற்கு புறப்பட்டார். அக்ஷய மரமும் புறப்பட எத்தனித்த போது நீ வேண்டாம் இங்கேயே இரு. இங்கு வந்து பிதுர் காரியங்கள் செய்த அனைவருக்கும் மோட்சம் நீ அளிக்க வேண்டும். கடைசியாக பிரளய காலம் வரும் போது கிருஷ்ணர் வாயில் விரல் வைத்து உனது இலையின் மீது தவழ்ந்தபடி உன்னை பிரம்ம லோகத்திற்கு அழைத்து வருவார் என்று பிரம்மா கூறி விடைபெற்றார். எனவே தான் இந்த அக்ஷய மரம் எப்பொழுதும் பசுமை நிறத்தில் காணப்படுகிறது.

அக்ஷயம் என்றால் வளர்ந்து கொண்டே இருக்கும். ஒரு நல்ல உதாரணம் அக்சயதிரிதியை. {அன்று நாம் எந்த ஒரு புண்ணியம் செய்தாலும் அது பன்மடங்கு பெருகும் என்பது ஐதீகம்} அப்படி என்றால் பிரம்மதேவர் வரம் கொடுத்த அக்ஷய மரம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்று எண்ணிப் பாருங்கள்.

ராமாயண காலத்தில் தசரதன் இறந்து பல ஆண்டுகள் கழித்து ராமரின் சொப்பனத்தில் தசரதர் வந்து எனது ஆன்மா இன்னும் முற்றுப் பெறவில்லை நீ  வந்து அக்ஷய மரத்தடியில் எனக்கு ஸிராத்தம் செய் என்று கூறினார். கனவில் தசரதர் கூறிய படி ராமர் தனது குருமார்களையும் & சீதையும் இங்கு அழைத்துக் கொண்டு வந்து தசரதருக்கு திதி கொடுக்க தயாரானார். அதற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக ராமர் வெளியே சென்றிருந்த நேரம் வானில் ஒரு பிரகாச ஒளி தோன்றியது தசரத தோன்றி சீதை இடம் எனக்கு பசி தாங்க வில்லை நீனே எனக்கு திதி கொடுத்து சாதம் போடு என்று கூறினார். சீதையோ சற்று பொருங்கள் ராமர் வெளியே சென்றிருக்கிறார் அவர்கள் வந்தவுடன் திதி ஆரம்பமாகிவிடும் என்று கூறினார். ராமர் வருவதற்கு மாலை ஆகிவிடும் அதற்கு முன்பாக நீ எனக்கு திதி கொடு என்று தசரதன் கேட்டுக் கொண்டார் அதற்கு சீதை ராமர் வந்து என்னை திட்டினால் நான் என்ன செய்வேன் என்று வினவினாள்.

பல்குனி ஆறு, அக்ஷய மரம், துளசி, பசுமாடு, பிராமணர் இவர்களை சாட்சியாக வைத்து எனக்கு திதி கொடு என்று தசரதன் கேட்டுக் கொண்டார். திதி கொடுக்க போதுமான பொருட்கள் என்னிடம் இல்லை நான் என்ன செய்வேன் மீண்டும் சீதை வினவினாள். இந்த நதி ஆனது புண்ணிய பூமி இங்கு பால்குனி நதியில் இருந்து மணல் எடுத்து எனக்கு திதி கொடு எனக்கு மோட்சம் கிடைக்கும் என்று தசரதன் கூறினார். அவ்வாறு சீதை செய்தவுடன் தசரதன் மோட்சத்திற்கு சென்றடைந்தார். சற்று நேரம் கழித்து ராமர் வந்த உடன் நடந்த அனைத்தையும் சீதை கூறினாள். ராமன் கோபம் கொண்டு நீ எப்படி திதி கொடுக்கலாம் என்று கோபம் கொண்டார்.

நான் திதி கொடுத்ததற்கு இங்கு ஐந்து பொருட்கள் சாட்சி இருக்கிறது அவர்களைக் கேட்டுக் கொள்ளுங்கள் என சீதை கூறியவுடன். கேட்கும் போது அக்ஷய மரம் தவிர அனைத்தும் மிகவும் அமைதியாக தான் இருந்தது. ராமர் அருகில் இருக்கும் முனிவரிடம் இதே போல சீதை திதி கொடுத்தால் எங்க அப்பா மோக்ஷம் அடைந்தாரா இல்லையா என்று பார்த்து சொல்லுங்கள் என கேட்டுக்கொண்டார். அவரும் தனது ஞான திருஷ்டியால் பார்த்து தசரதர் மோட்சம் அடைந்து விட்டார் மற்ற அனைவருக்கும் நீங்கள் திதி கொடுக்கலாம் சீதை கொடுத்த திதி போதுமானது என்று கூறினார். இதைக் கேட்டவுடன் ராமருக்கு சீதை மீது இருந்த கோபம் தணிந்து மற்றவர்களுக்கு திதி கொடுத்து தனது பிதுர் காரியங்களை நிறைவேற்றிக் கொண்டார்.

சீதை அக்ஷயா மரம் தவிர மற்ற நான்கு பொருட்களுக்கும் கலியுகத்தில் மதிப்பு இருக்காது என்று கூறினார்....

1. பால்குனி நதி - இந்த நிதியால் கலியுகத்தில் யாருக்கும் எந்த பலனும் இருக்காது வருடத்தில் பத்து இருபது நாட்களுக்கு தான் மேலே சொல்லும் {நாங்கள் சென்றிருந்த நேரம் நீர் இருந்தது ஆனால் குளிப்பதற்கு ஏதுவாக இல்லை}

2. துளசி - கலியுகத்தில் துளசி மூன்று மாதம் தான் இருக்கும் அதன் பிறகு மீண்டும் அழிந்து... அழிந்து துளிர் விடும்.

3. பசுமாடு - முகத்திற்கு யாரும் பூஜை செய்ய மாட்டார்கள். மாட்டிற்கு பின்னால் தான் பூஜை செய்து புண்ணியம் தேடுவார்கள். கலியுகத்தில் பசு மாடுகளுக்கு கோ பூஜை என்பது பின்னால் தான் செய்ய வேண்டும்.

4. கயா பிராமணர் - எவ்வளவு தட்சனை கொடுத்தாலும் கலியுகத்தில் இவர்களை திருப்தி படுத்த முடியாது.

சீதையின் சாபம் இன்றளவும் பலித்து கொண்டிருக்கிறது.
உண்மையைக் கூறியதால் அக்ஷய மரம் இன்றளவும் புண்ணிய மரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இங்கு கேட்கலாம் பெண்கள் எவ்வாறு திதி கொடுக்கலாம் ஆண்கள் தான் கொடுக்க வேண்டும் என்று அதற்கும் ராமாயணத்தில் ஒரு கதை இருக்கிறது. தசரதன் காட்டிற்கு வேட்டையாடச் சென்று இருக்கும் பொழுது சிரவண குமாரன் தன் தாய் தந்தையை தீர்த்த யாத்திரைக்காக அழைத்துக் கொண்டு காசி வரும் பொழுது ஒரு நதியின் ஓரம் இருவரையும் அமரவைத்து குடிப்பதற்காக தண்ணீர் எடுத்துவர சென்றிருந்தான். கண் தெரியாத தாய் தந்தையை தொட்டில் வடிவில் அமரவைத்து தீர்த்த யாத்திரை மேற்கொண்டிருந்தான். சிரவண குமாரன் தண்ணீர் எடுக்கும் காட்சியை தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது மான் நதியில் நீர் அருந்துவது போல இருந்தது. இதனைக்கண்ட தசரதச் சக்கரவர்த்தி சரவணகுமாரனை மான் என்று நினைத்து அம்பு எழுதினார் அப்பொழுது அம்மா என்ற குரலுடன் சிவகுமாரன் கீழே மடிந்தான். பதறிய தசரத சக்கரவர்த்தி அவனருகே சென்ற பொழுது தான் செய்த தவறை எண்ணி அவனிடம் நீ யார் என்று கேட்டார் அவன் அனைத்தையும் கூறியவுடன். ஐய்யகோ பெரும் பாவம் செய்து விட்டேன் என்று எண்ணி அவர் அங்கு சரவணகுமார் வைத்திருந்த தண்ணீரை எடுத்துக் கொண்டு இருவர் அருகிலும் சென்றார்.

அப்பொழுது அவர்கள் எனது மகன் சிரவண குமாரன் நீ இல்லை. நீ யார் என்று கேட்டார். நடந்த அனைத்தையும் தசரதன் கூறியதை கேட்டு அவர் சாபம் கொடுத்தார். நீ இறக்கும் தருவாயில் உனது மகன்கள் உன்னருகே இருக்க மாட்டார்கள். மகன்கள் கையால் உனக்கு மோட்சம் கிடைக்காது என்று சாபம் கொடுத்தார்.

இந்த சாபம் தான் தசரதன் இறக்கும் பொழுது நான்கு மகன்களும் அருகில் இல்லை. அதே போல திதியும் மகன்கள் கையால் கொடுக்கப்படாமல் சீதை கையால் தான் கொடுக்கப்பட்டது. இதனால் தான் தசரதர் ராமர் திதி கொடுப்பதற்காக பதில் சீதையிடம் வந்து பிண்டம் {உணவு} வாங்கிக் கொண்டு மோட்சத்திற்கு சென்றார்.

மூன்றாவதாக செய்யப்படும் திதி இங்கு இந்த அக்ஷய மரம் அருகில் தான் செய்யப்படுகிறது.