ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
38. ஸ்ரீ அபிநவ சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
முப்பத்தி எட்டாவது ஆச்சார்யர் [கி.பி. 788 - 840]
ஸ்ரீ அபிநவ சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள், சிதம்பரத்தில் வசித்த அந்தண குலத்தைச் சேர்ந்தவர். பெற்றோர் பெயர் ''விஸ்வஜித்'' "விசிஷ்டா'' தம்பதிகளின் மகனாக பிறந்தார். இளம் கருவாய் அன்னை வயிற்றில் இருக்கும் போதே தந்தை காலமானார். உடன் கட்டை ஏறப்போன விசிஷ்டாவை உறவினர்கள் "கர்ப்பவதி உடன் கட்டை ஏறக்கூடாது” எனத் தடுத்து விட்டனர்.
தாயைக் காப்பதற்காக நந்திகேஸ்வரரைப் போல மூன்று ஆண்டுகள் தாயின் கருவிலேயே இருந்தார் இவர்.
குழந்தை பிறந்து நடக்கும் தெம்பு வந்ததும் குழந்தையை எடுத்துச் சென்று தில்லை வனத்தில் வி்ட்டு விட்டு அவ்விடத்தை விட்டு சென்றாள் இந்த குழந்தையின் தாய்.
வண்டு நுகருமுன் தேன் சிந்தும் மலர்களைப் பறிக்க புலிக்கால்கள் வேண்டும் என்று பிரார்த்தித்துப் பெற்ற வியாக்கிரபாத ரிஷி, தன் துணைவியுடன் அவ்வழியே சென்ற போது, இந்த குழந்தையைக் கண்டார்கள். அருகில் யாரும் இல்லாமல் அநாதரவாய் இருக்கும் அந்த குழந்தையை எடுத்து வளர்த்தார். ஐந்து வயதில் உபநயனம் செய்வித்து சகல கலைகளையும் அருளினார்.
ஸ்ரீ மடத்தின் 37 ஆவது பீடாதிபதியான ஸ்ரீ வித்யா கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் யாத்திரையாக சிதம்பரம் வந்து நடராஜப் பெருமானைத் தரிசித்த நேரம் "ஸ்ரீ அபிநவ சங்கரரை காஞ்சி ஸ்ரீ காமகோடி பீடாதிபதியாக அமர்த்துக" என அசரீரி ஒலித்தது. இதை கேட்ட வித்யாகநேந்திரர் மெய்சிலிர்த்தார்.
அசரீரி வாக்கின் படி ஸ்ரீ அபிநவ சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் கி.பி.788 ஆம் ஆண்டு ஸ்ரீ மடத்தின் சங்கராச்சரியாராக தீட்சை பெற்றுப் பீடமேறினார்.
அப்போது காஷ்மீரத்தின் மன்னனாக இருந்தவர் ''ஜயாபீட விநயாதித்யர்''. [கி.பி. 780 - 810] அவரது சபையில்
1. க்ஷரஸ்வாமி
2. வாமனகவி
3. சடகன்
4. சிந்துமன்
5. சங்கமன்
6. தாமோதரன்
7. மனோ தேசன்
8. தக்யன்
என்கிற எட்டு பெரும் புலவர்கள் இருந்தனர். இந்த அஷ்ட புலவர்களையும், வாதத்துக்கு அழைழைத்து தோற்கடித்தார் "வாக்பதி பட்டர்" என்ற பண்டிதர். தோற்றவர்களுக்கு கடும் தண்டனை வழங்கினார் அவர்.
மிகவும் வேதனையுற்ற புலவர்கள், அச்சமயம் விஜய யாத்திரையாக காஷ்மீர் வந்திருந்த ஸ்ரீ அபிநவ சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களிடம் "கர்வம்'' கொண்ட அவரைத் தாங்கள் வாதிட்டு வெற்றி கொள்ள வேண்டும் என வேண்டினார்கள்.
"வாக்பதிபட்டரோடு" தர்க்கம் புரிந்து வெற்றி பெற்று ''சர்வக்ஞர்'', ''அபி நவதீரர்'' என்று போற்றப்பட்டார்.
இதை ''ராஜதரங்கணீயமும்'', மற்றும் ''சத்குரு சந்தான பரிமளம்'' என்ற இரு நூலும் சான்று.
காஷ்மீரத்தில் ஸ்ரீ ஆசார்யாள் ஆற்றிய அரும்பணிகள் ஏராளம்.
மதம் மாற்றும் மாற்று மதத்தினரான முகமதியரும், சீனரும், பெர்சிய நாட்டவரும் கூட இவரைப் புகழ்ந்து பாராட்டி இருக்கின்றனர்.
52 ஆண்டு காலம் அருளாட்சி புரிந்த இவர் இமயமலைத் தொடரில் உள்ள ''ஆத்ரேயர் குகையில் புகுந்து மறைந்தார்” என்று ‘'புண்ய ஸ்லோக மஞ்சரியும்'', "வாக்பதிபட்டர்" இயற்றிய ''சங்கரேந்திர விலாசம்'' என்னும் இரு நூலும் இவரின் சித்தி பற்றி தெளிவாகக் கூறுகின்றன.
இந்த நிகழ்ச்சி நடந்த நாள் கி.பி. 840 ஆண்டு, சித்தார்த்தி வருடம், ஆடி மாதம், அமாவாசை திதி அன்று சங்கரர் எப்படி காஞ்சியில் அம்பாளோடு ஐக்கியமானாரோ அதே போல் இவர் இந்த குகையில் ஐக்கியமானார் மறைந்தார். [காணாமல் மறைந்தார்]
இவர் 52 ஆண்டுகள் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தை அலங்கரித்துள்ளார்.