ஞாயிறு, 15 மே, 2022

அறுபத்தி மூன்று நாயண்மார்கள்

அறுபத்தி மூன்று நாயண்மார்கள் தொடர் பதிவு...    

 



3 அமர்நீதி நாயனார்...  பெயர்: அமர்நீதி நாயனார் குலம்: வணிகர் பூசை நாள்: ஆனி பூரம் அவதாரத் தலம்: பழையாறை முக்தித் தலம்: திருநல்லூர்  வரலாறு: சோழநாட்டிலே, பழையாறை என்னும் ஊரிலே, வைசியர் குலத்திலே, பெருஞ்செல்வமுடையவரும் சிவனடியார்களைத் திருவமுது, செய்வித்து அவரவர் குறிப்பறிந்து கந்தை கீள்கோவணம் என்பவைகளைக் கொடுப்பவருமாகிய அமர்நீதிநாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் திருநல்லூர் என்னுஞ் சிவஸ்தலத்திலே மகோற்சவதரிசனஞ் செய்ய வருஞ் சிவனடியார்கள் திருவமுது செய்யும் பொருட்டு ஒரு திருமடம் கட்டுவித்துக்கொண்டு, தம்முடைய சுற்றத்தார்களோடும் அவ்விடத்திற் போய்ச் சேர்ந்து, மகோற்சவ தரிசனஞ்செய்து, தம்முடைய மடத்திலே சிவனடியார்களைத் திருவமுது செய்வித்துகொண்டு, மன மகிழ்ச்சியோடும் இருந்தார்.  இருக்கும் நாட்களிலே, ஒருநாள், சிவபெருமான் பிராமண வருணத்துப் பிரமசாரி வடிவங்கொண்டு, இரண்டு கெளபீனங்களையும் விபூதிப்பையையும் கட்டியிருக்கின்ற ஒரு தண்டைக் கையிலே பிடித்துக்கொண்டு அந்தத் திருமடத்திற்கு எழுந்தருளி வந்தார். அதுகண்ட அமர்நீதிநாயனார் மனமகிழ்ச்சியோடும் முகமலர்ச்சியோடும் அவரை எதிர்கொண்டு வணங்கி, "சுவாமீ! தேவரீர் இங்கே எழுந்தருளிவருவதற்கு அடியேன் பூர்வத்தில் யாது தவஞ்செய்தேனோ" என்று இன்சொற் சொல்ல கூறினார்.  பிரமசாரியானவர் அவரை நோக்கி, "நீர் அடியார்களைத் திருவமுது செய்வித்து அவர்களுக்கு வஸ்திரங்களும் கந்தைகளும் கீள் கெளபீனங்களும் கொடுக்கின்றீர் என்பதைக் கேள்வியுற்று, உம்மைக் காணுதற்கு விரும்பி வந்தோம்" என்றார் ஈசன்.  அதுகேட்ட அமர்நீதிநாயனார் "இந்தத் திருமடத்திலே பிராமணர்கள் போசனம் பண்ணும்பொருட்டுப் பிராமணர்கள் பாகம் பண்ணுவதும் உண்டு. தேவரீரும் இங்கே திருவமுது செய்தருளல் வேண்டும்" என்று பிரார்த்தித்தார்.  பிரமசாரியானவர் அதற்கு உடன்பட்டு, நாம் காவேரியிலே ஸ்நானம் பண்ணிக்கொண்டு வருவோம். 'ஒருபோது மழைவரினும் தரித்துக்கொள்ளும் பொருட்டு நீர் இந்த உலர்ந்த கெளபீனத்தை வைத்திருந்து தாரும்" என்று சொல்லி, தண்டிலே கட்டப்பட்டிருக்கின்ற இரண்டு கெளபீனங்களில் ஒன்றை அவிழ்த்து, "இந்தக் கெளபீனத்தின் மகிமையை உமக்கு நான் சொல்லவேண்டுவதில்லை. நான் ஸ்நானம்பண்ணிக் கொண்டு வரும்வரைக்கும் நீர் இதை வைத்திருந்து தாரும்" என்று ஈசன் பெருமான் கொடுத்து விட்டு, காவேரியிலே ஸ்நானம் செய்வதர்க்கு செல்கிறார்.  அமர்நீதிநாயனார் அந்தக் கெளபீனத்தை ஒரு தகுந்த இடத்திலே சேமித்து வைத்தார். ஸ்நானம்பண்ணப் போன பிரமசாரியாக வேடம் கொண்ட ஈசன் அமர்நீதிநாயனார் சேமித்து வைத்த கெளபீனத்தை அது வைக்கப்பட்ட ஸ்தானத்தினின்றும் நீக்கும்படி(மறையும்) செய்து, ஸ்நானஞ்செய்து கொண்டு, மழை பொழிய நனைந்து திருமடத்தை அடைந்தார்.  அமர்நீதிநாயனார் அது கண்டு எதிர்கொண்டு, "சமையலாயிற்று", என்று சொல்லி வணங்க; பிரமசாரியார், இனி அந்நாயனாருடைய அன்பாகிய ஜலத்திலே முழுக வேண்டி, அவரை நோக்கி, "ஈரம் மாற்றவேண்டும்; தண்டிலே கட்டப்பட்டிருக்கிற கெளபீனமோ ஈரமாயிருக்கின்றது. உம்மிடத்திலே தந்த கெளபீனத்தைக் கொண்டு வாரும்" என்றார்.  அமர்நீதி நாயனார் சீக்கிரம் உள்ளே போய்ப் பார்த்து. கெளபீனத்தைக் காணாதவராகி, திகைத்து மற்றையிடங்களிலுந் தேடிக் காணாமையால் மிகுந்த துக்கங்கொண்டு, வேறொரு கெளபீனத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டு, பிரமசாரியார் முன் சென்று, "சுவாமீ! தேவரீர் தந்த கெளபீனத்தை வைத்த இடத்திலும் பிறவிடங்களிலும் தேடிக் கண்டிலேன். அது போனவிதம் இன்னதென்று அறியேன். வேறொரு நல்ல கெளபீனம் கொண்டு வந்தேன். இது கிழிக்கப்பட்ட கோவணமன்று, நெய்யப்பட்ட கோவணமே. தேவரீர் நனைந்த கெளபீனத்தைக் களைந்து இந்தக் கெளபீனத்தைச் சாத்தி, அடியேன் செய்த குற்றத்தைப் பொறுத்தருளும்" என்று பிராத்தித்தார்.  அதைக் கேட்ட பிரமசாரியார் மிகக்கோபித்து, "உம்முடைய நிலைமை நன்றாயிருக்கின்றது. நெடுநாட்கழிந்ததுமன்று; இன்றைக்கே தான் உம்மிடத்தில் வைத்த கெளபீனத்தைக் கவர்ந்து கொண்டு, அதற்குப் பிரதியாக வேறொரு கெளபீனத்தை ஏற்றுக் கொள்ளுமென்று நீர் சொலவது என்னை! சிவனடியார்களுக்கு நல்ல கெளபீனம் கொடுப்பேன் என்று நீர் ஊரிலே பரவச்செய்தது என்னுடைய கெளபீனத்தைக் கவர்தற்கோ! நீர் செய்கின்ற இவ்வாணிகம் நன்றாயிருக்கின்றது" என்று சொல்ல...  அமர்நீதிநாயனார் பயந்து முகம் வாடி நடுநடுங்கி, "சுவாமீ! அடியேன் இக்குற்றத்தை அறிந்து செய்தேனல்லேன். இதைப் பொறுத்தருளும், தேவரீருக்குச் செய்யவேண்டிய பணிவிடைகளெல்லாம் செய்கின்றேன். இந்தக்கோவணமன்றி வெகுபொன்களையும் பட்டாடைகளையும் இரத்தினங்களையும் தருகிறேன்; ஏற்றுக்கொள்ளும்" என்றார்.  அதற்குப் பிரமசாரியார் கோபந்தணிந்தவர் போலத்தோன்றி, "பொன்களும் பட்டாடைகளும் இரத்தினங்களும் எனக்கு ஏன்? நான் தரிப்பதற்கு உபயோகியாகிய கெளபீனத்துக்கு ஒத்த நிறையுள்ள கெளபீனம் தந்தாற் போதும்" என்று சொல்கிறார்.  அமர்நீதிநாயனார் மனமகிழ்ந்து, "எதனுடைய நிறைக்குச் சமமாகிய கெளபீனத்தைத் தரல் வேண்டும்" என்று கேட்டார்.  பிரமசாரியார் "நீர் இழந்த கெளபீனத்தின் நிறைக்கு ஒத்த நிறையையுடைய கெளபீனம் இது" என்று சொல்லி, தமது தண்டிலே கட்டப்பட்டிருந்த கெளபீனத்தை அவிழ்த்து, "இதற்கு ஒத்த நிறையுள்ளதாகக் கெளபீனத்தை நிறுத்துத் தாரும்" என்றார்.  அமர்நீதிநாயனார் "மிகநன்று" என்று சொல்லி, ஒரு தராசைக் கொண்டுவந்து நாட்ட; பிரமசாரியார் அந்தக் கெளபீனத்தை ஒரு தட்டிலே வைத்தார். அமர்நீதிநாயனார் தம்முடைய கையிலிருந்த நெய்யப்பட்ட கெளபீனத்தை மற்றத்தட்டிலே வைத்தார்.  அது ஒத்தநிறையிலே நில்லாமல் மேலெழுந்தது. அதைக்கண்டு, அடியார்களுக்குக் கொடுக்கும்படி தாம் வைத்திருந்த கோவணங்களெல்லாவற்றையும் கொண்டுவந்து ஒவ்வொன்றாக இட இட; பின்னும் தூக்கிகொண்டு எழும்பியது. அதைப் பார்த்து, ஆச்சரியம் அடைந்து, பலவஸ்திரங்களையும் பட்டுக்களையும் கொண்டுவந்து இட இட; பின்னும் உயர்ந்தது. அது கண்டு அநேக வஸ்திரப்பொதிகளைக் கொண்டுவந்து இட்டார். இட்டும், அத்தட்டு மேலே எழும்ப; கெளபீனத்தட்டுக் கீழே தாழ்ந்தது.  அமர்நீதிநாயனார் அதைக் கண்டு மிக அஞ்சி பிரமசாரியாரை வணங்கி, "எண்ணிறந்த வஸ்திரப்பொதிகளையும் நூற்கட்டுகளையும் குவிக்கவும், தட்டு உயர்கின்றது. தமியேனுடைய மற்றத்திரவியங்களையும் இத்தட்டிலே இடுதற்கு அனுமதி தந்தருளும்" என்றார்.  அதற்குப் பிரமசாரியார் "இனி நாம் வேறென்ன சொல்லுவோம்! மற்றத்திரவியங்களையும் இட்டுப் பாரும். எப்படியும் நம்முடைய கோவணத்துக்கு ஒத்த நிறையில் நிற்கவேண்டும்'. என்றார்.  அமர்நீதிநாயனார் நவரத்தினங்களையும் பொன் வெள்ளி முதலிய உலோகங்களையும் சுமைசுமையாக எடுத்து வந்து இட இட; தட்டு எழுந்தபடியே மேலே நின்றது.  அமர்நீதிநாயனார் அதைக்கண்டு பிரமசாரியாரை வணங்கி, "என்னுடைய" திரவியங்களில் ஒன்றும் சேஷியாமல் இந்தத் தட்டிலே இட்டேன். நானும் என் மனைவியும் புத்திரனும் மாத்திரம் சேஷித்து நிற்கின்றோம். தேவரீருக்குப் பிரீதியாகில் இனி, அடியேங்களும் இத்தட்டில் ஏறுதற்கு அனுமதி தந்தருளும்" என்றார்.  பிரமசாரியாரும் அதற்கு உடன்பட்டார்.  அது கண்டு, அமர்நீதிநாயனார் மனமகிழ்ந்து, பிரமசாரியாரை வணங்கி, தம்முடைய மனைவியாரோடும் புத்திரரோடும் தராசை வலஞ்செய்து "சிவனடியார்களுக்குச் செய்யுந் திருத்தொண்டிலே அடியேங்கள் தவறாமல் இருந்தோமாகில், அடியேங்கள் ஏறினமாத்திரத்தே இந்தத்தட்டு மற்றத்தட்டுக்கு ஒத்து நிற்கக்கடவது" என்று சொல்லி, திருநல்லூரில் வீற்றிருக்கின்ற பரமசிவனை வணங்கி ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஓதிக்கொண்டு மகிழ்ச்சியோடு தட்டிலே ஏறினார்.  ஏறினவுடனே, பரமசிவனுடைய திருவரையிலே சாத்தப்படும் கெளபீனமும் பத்தியிலே சிறிதுங் குறைவில்லாத அமர்நீதிநாயனாருடைய அடிமைத்திறமும் பெருமையில் ஒத்திருந்தபடியால், துலாக் கோலின் இரண்டு தட்டுக்களும் ஒத்து நின்றன.  அவ்வற்புதத்தைக் கண்டவர்களெல்லாரும் அமர்நீதிநாயனாரை வணங்கி ஸ்தோத்திரஞ் செய்தார்கள். தேவர்கள் ஆகாயத்தினின்றும் கற்பகவிருக்ஷங்களின் புஷ்பங்களை மழைப்போலப் பொழிந்தார்கள். திருகைலாசபதி தாங்கொண்டு வந்த பிரமசாரி வடிவத்தை ஒழித்து, ஆகாயத்திலே பார்வதிதேவியாரோடு இடபாரூடராய்த் தோன்றி;  தம்மைத் தரிசித்து அந்தத் தராசுத் தட்டிலே தானே நின்றுகொண்டு ஸ்தோத்திரஞ் செய்கின்ற அமர்நீதிநாயனார் அவர் மனைவியார் புத்திரர் என்னு மூவர் மேலும் திருவருணோக்கஞ்செய்து, "நீங்கள் மூவிரும் நம்முடைய அருளைப் பெற்று, நம்முடைய சந்நிதானத்திலே நம்மை வணங்கிக்கொண்டிருங்கள்" என்று அருளிச்செய்து மறைந்தருளினார்.  அமர்நீதிநாயனாரும், அவர் மனைவியாரும், புத்திரரும், அக்கடவுளுடைய திருவருளினால் அந்தத்தராசுதானே தேவவிமானமாகி மேலே செல்ல, அவரோடு சிவலோகத்தை அடைந்தார்கள். அமர்நீதிநாயனாரும் 63 நாயன்மார்களில் ஒருவராக மாறினார்...  தொடரும்..

மூன்று கால் சித்தர்

மூன்று கால் சித்தர்.

உலகிலேயே மூன்று கால்களை உடைய முனிவர் என்று போற்றப்படும் சிறப்பு வாய்ந்த பிருங்கிரிஷி முனிவர் சிவபெருமானை தவிர பிற தெய்வத்தை வழிபடக்கூடாது என்கிற கொள்கை கொண்டவர்.

இவர் நாள்தோறும் சிவனை மட்டும் வழிபட்டு வந்தார். அருகில் உள்ள அம்பாளை கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை. இதைக்கண்ட சக்தி சிவனிடம் முறையிட்டாள்.

நாம் ஒரே உருவமாய் நிற்போம் என்று கூறி அம்மையப்பனாய் நின்றனர். அன்று பூஜைக்கு வந்த பிருங்கிரிஷி முனிவர், அம்மையும் அப்பனும் ஓர்உருவாய் இருப்பதைக் கண்டு யோசித்து பின்னர் வண்டு உரு எடுத்து அம்மையப்பரின் தொப்புள் வழியே துளையிட்டு சிவனை மட்டும் வலம் வந்தார்.

இதைகண்ட சினம் உற்ற அம்மை பிருங்கியின் உடற்பாகத்தில் உள்ள தனது கூறாகிய சக்தியை நீக்கினாள். அதனால் வலிமை இழந்த பிருங்கிரிஷி  தடுமாறினார். உடனே சிவ பெருமான் வலிமையுள்ள மூன்றாவது கால் ஒன்றை கொடுத்து அருளினார் .

அருளியதோடு முனிவரே சக்தியில்லையேல் சிவன் இல்லை என்பதை உணர்ந்திர்ப்பாய். சிவசக்தி வழிபாடே சிறந்தது என்பதை புரிந்து கொள் என்றார்.

பிரிங்கிரிஷியும் அப்பனே. என்னை அறியாது நான் செய்த இத்தவறுகளை மன்னித்தருள்வாய் என்றும் பராசக்தியிடம் மன்னிப்பும் கோரினார்.

அறியாமற்செய்த தவறை மன்னித்தேன் என அன்னையும் அருள் கூறினார்.

(திருச்சி மாவட்டம் திருவானைக்காவல்
ஜம்புகேஸ்வரர் கோவிலில் சிவலிங்க சன்னதிக்கு இடது புறம் அமைந்துள்ள வெளிப்பிரகாரத் தூண்களில் இந்த சிற்பம் உள்ளது)


அறுபத்து மூன்று நாயன்மார்கள்..

அறுபத்து மூன்று நாயன்மார்கள்... தொடர்பதிவு...

2 - அப்பூதியடிகள்...

பெயர் : அப்பூதியடிகள் நாயனார்
குலம் : அந்தணர்
பூசை நாள் :தை சதயம்
அவதாரத் தலம் :திங்களூர்
முக்தித் தலம் :திங்களூர்

வரலாறு:

சோழமண்டலத்திலே, திங்களுரிலே பிராமணகுலத்திலே, பாவங்கள் என்று சொல்லப்பட்டவைகள் எல்லாவற்றையும் நீக்கினவரும், புண்ணியங்களென்று சொல்லப்படவைகள்
எல்லாவற்றையும் தாங்கினவரும், சிவபத்தி அடியார்களில் சிறந்தவருமாகிய அப்பூதியடிகணாயனார் என்பவர் ஒருவர் இருந்தார்.

அவர் சிவானுபூதிமானாகிய திருநாவுக்கரசுநாயனாருடைய மகிமையைக் கேள்வியுற்று, அவர்மேலே மிக அன்பு கூர்ந்து, தம்முடைய வீட்டினுள்ள அளவைகள் தராசுகள் பிள்ளைகள் பசுக்கள் எருமைகள் முதலிய எல்லாவற்றிற்கும் இந்நாயனாருடைய பெயரையே சொல்லிவருவார்.
இன்னும் அவர் மேலாசையினாலே, திருமடங்கள் தண்ணீர்ப்பந்தர்கள் குளங்கள் திருநந்தனவனங்கள் முதலியனவற்றை அந்நாயனார் பெயரினாற் செய்து கொண்டிருந்தார்.

இருக்குநாளிலே, அத்திருநாவுக்கரசு நாயனார் திருப்பழனமென்னும் ஸ்தலத்தை வணங்கிக்கொண்டு பிறதலங்களையும் வணங்கும்பொருட்டு, அந்தத் திங்களுருக்குச் சமீபமாகிய வழியிலே செல்லும்பொழுது, ஒரு தண்ணீர்ப்பந்தரை அடைந்து, திருநாவுக்கரசுநாயனார் என்னும் பெயர் எங்கும் எழுதப் பட்டிருத்தலைக் கண்டு, அங்கு நின்றவர்கள் சிலரை நோக்கி, "இந்தத் தண்ணீர்ப்பந்தரை இப்பெயரிட்டுச் செய்தவர்யாவர்" என்று வினாவினார்.
அவர்கள் "இப்பந்தரைமாத்திரமன்று, இவ்விடத்தெங்கும் உள்ள அறச்சாலைகள், குளங்கள், திருநந்தனவனங்கள் எல்லாவற்றையும் அப்பூதியடிகணாயனார் என்பவர் இத்திருநாவுக்கரசுநாயனார் என்னும் பெயரலேயே செய்தனர்" என்றார்கள்.

அதைத் திருநாவுக்கரசு நாயனார் கேட்டு, "இங்ஙனஞ் செய்தற்குக் காரணம் யாதோ" என்று நினைந்து, அவர்களை நோக்கி, "அவர் எவ்விடத்தில், இருக்கின்றவர்" என்று வினாவ; "அவர் இவ்வூரவரே இப்பொழுதுதான் வீட்டுக்குப்போகின்றார், அவ்வீடும் தூரமன்று சமீபமே" என்றார்கள்.

உடனே திருநாவுக்கரசுநாயனார் அப்பூதியடிகணாயனாருடைய வீட்டுத்தலைக்கடைவாயிலிற் செல்ல, உள்ளிருந்த அப்பூதிநாயனார் சிவனடியார் ஒருவர் வாயிலில் வந்து நிற்கின்றார் என்று கேள்வியுற்று விரைந்து சென்று, அவருடைய திருவடிகளிலே நமஸ்கரிக்க; அவரும் வணங்கினார்.

அப்பூதிநாயனார் "சுவாமீ! தேவரீர் இவ்விடத்திற்கு எதுபற்றி எழுந்தருளினீர்" என்று வினாவினார்.
திருநாவுக்கரசு நாயனார் 'நாம் திருப்பழனத்தை வணங்கிக்கொண்டு வரும்பொழுது, வழியிலே நீர் வைத்த தண்ணீர்ப்பந்தரைக் கண்டும் அப்படியே நீர் செய்திருக்கின்ற பிறதருமங்களைக்கேட்டும்' உம்மைக் காண விரும்பி, இங்கே வந்தோம்" என்று சொல்லி, பின்பு, "சிவனடியார்கள் பொருட்டு நீர் வைத்த தண்ணீர்ப்பந்தரிலே உம்முடைய பெயரை எழுதாது வேறொருபெயரை எழுதியதற்குக் காரணம் யாது" என்று வினாவினார்.

அப்பூதிநாயனார் "நீர் நல்லவார்த்தை அருளிச்செய்திலீர், பாதகர்களாகிய சமணர்களோடு கூடிப் பல்லவராஜன் செய்த விக்கினங்களைச் சிவபத்தி வலிமையினாலே ஜயித்த பெருந்தொண்டரது திருப்பெயரோ வேறொருபெயர்" என்று கோபித்து, பின்னும், பரமசிவனுக்குத் திருத்தொண்டு செய்தலாலே இம்மையினும் பிழைக்கலாம் என்பதை என்போலும் அறிவிலிகளும் தெளியும் பொருட்டு அருள்புரிந்த திருநாவுக்கரசுநாயனாருடைய திருப்பெயரை நான் எழுத, நீர் இந்தக் கொடுஞ்சொல்லை நான் கேட்கும்படி சொன்னீர். கற்றோணியைக்கொண்டு கடல்கடந்த அந்த நாயனாருடைய மகிமையை இவ்வுலகத்திலே அறியாதார் யாருளர்! நீர் சிவவேடத்தோடு நின்று இவ்வார்த்தை பேசினீர். நீர் எங்கே இருக்கிறவர்? சொல்லும்" என்றார்.

திருநாவுக்கரசுநாயனார் அவ்வப்பூதியடிகளுடைய அன்பை அறிந்து, "ஆருகதசமயப் படுகுழியினின்றும் ஏறும் பொருட்டுப் பரமசிவன் சூலைநோயை வருவித்து ஆட்கொள்ளப்பெற்ற உணர்வில்லாத சிறுமையேன் யான்" என்று அருளிச்செய்தார். உடனே அப்பூதிநாயனார், இரண்டு கைகளும் சிரசின்மேலே குவிய, கண்ணீர் சொரிய, உரை தடுமாற, உரோமஞ்சிலிர்ப்ப, பூமியிலே விழுந்து திருநாவுக்கரசுநாயனாருடைய ஸ்ரீபாதாரவிந்தங்களைப் பூண்டார்.

திருநாவுக்கரசுநாயனார் அப்பூதியடிகளை எதிர்வணங்கி எடுத்தருள, அப்பூதியடிகள் மிகக் களிப்படைந்து கூத்தாடினார்; பாடினார்; சந்தோஷமேலீட்டினால் செய்வது இன்னது என்று அறியாமல், வீட்டினுள்ளே சென்று, மனைவியாருக்கும் பிள்ளைகளுக்கும், பிறசுற்றத்தார்களுக்கும்

திருநாவுக்கரசுநாயனார் எழுந்தருளிவந்த சந்தோஷ சமாசாரத்தைச் சொல்லி, அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, நாயனாரை வணங்கும்படி செய்தார்.அவரை உள்ளே எழுந்தருளுவித்து, பாதப்பிரக்ஷாளனஞ் செய்தார்.

அங்ஙனம் செய்த தீர்த்தத்தை அவர்களெல்லாரும் தங்கண்மேலே தெளித்து, உள்ளும் பூரித்தார்கள். நாயனாரை ஆசனத்தில் இருத்தி, விதிப்படி அருச்சனை செய்து, "சுவாமீ, தேவரீர் இங்கே திருவமுது செய்தருளல் வேண்டும்" என்று பிரார்த்திக்க; அவரும் அதற்கு உடன்பட்டருளினார்.
அப்பூதிநாயனார் திருவமுது சமைப்பித்து, தங்கள் புத்திரராகிய மூத்ததிருநாவுக்கரசை வாழைக் குருத்து அரிந்துகொண்டு வரும்பொருட்டு அனுப்ப; அவர் விரைந்து தோட்டத்திற்சென்று, வாழைக் குருத்து அரியும்பொழுது, ஒரு பாம்பு அவருடைய கையிலே தீண்டி, அதனைச் சுற்றிக்கொண்டது.

அவர் அதை உதறிவீழ்ந்து, பதைப்புடனே அது பற்றிய வேகத்தினாலே வீழுமுன் கொய்த குருத்தை வேகத்தோடு கொண்டோடி வந்து, விஷம் முறையே ஏறித்தலைக்கொண்ட ஏழாம்வேகத்தினாலே பல்லுங் கண்ணும் சரீரமும் கருகித் தீய்ந்து உரை குழறி மயங்கி, குருத்தைத் தாயார்கையில் நீட்டி, கீழே விழுந்து இறந்தார்.

அதுகண்டு, தந்தையாரும் தாயாரும் "ஐயோ! இது தெரிந்தால் இனி நாயனார் திருவமுது செய்யாரே" என்று துக்கித்து, சவத்தை வீட்டுப் புறத்து முற்றத்தின் ஓர்பக்கத்திலே பாயினால் மறைத்து வைத்துவிட்டுனர்
அப்பமூர்த்தியிடத்திற்சென்று "சுவாமி, எழுந்து வந்து திருவமுது செய்தருளவேண்டும்" என்று பிரார்த்தித்தார்கள் அப்பமூர்த்தி எழுந்து கைகால் சுத்தி செய்துகொண்டு, வேறோராசனத்தில் இருந்து, விபூதி தரித்து, அப்பூதிநாயனாருக்கும் அவர் மனைவியாருக்கும் விபூதி கொடுத்து; புதல்வர்களுக்கும் கொடுக்கும்போது, அப்பூதிநாயனாரை நோக்கி "நாம் இவர்களுக்கு முன்னே விபூதி சாத்தும்படி உம்முடைய சேட்டபுத்திரரை வருவியும்" என்றார்.

அப்பூதிநாயனார் "இப்போது அவன் இங்கே உதவான்" என்றார். அப்பமூர்த்தி அதைக் கேட்டவுடனே சிவபிரானுடைய திருவருளினாலே தம்முடைய திருவுள்ளத்திலே ஒரு தடுமாற்றத் தோன்ற, அப்பூதிநாயனாரை நோக்கி, "அவன் என்செய்தான்? உண்மை சொல்லும்" என்றார்.

அப்பூதிநாயனார் அஞ்சி நடுங்குற்று, வணங்கி நின்று, நிகழ்ந்த சமாசாரத்தை விண்ணப்பஞ்செய்தார். அப்பமூர்த்தி அதைக்கேட்டு, "நீர் செய்தது நன்றாயிருக்கின்றது; இப்படி வேறியார் செய்தார்" என்று சொல்லிக்கொண்டு எழுந்து, சிவாலயத்துக்குமுன் சென்று சவத்தை அங்கே கொணர்வித்து, விஷத்தை நீக்கியருளும் பொருட்டுப் பரமசிவன்மேலே திருப்பதிகம்பாடினார்.

உடனே அப்புத்திரர் உயிர்பெற்று எழுந்து; அப்பமூர்த்தியுடைய திருவடிகளிலே விழுந்து நமஸ்கரிக்க; அப்பமூர்த்தி விபூதி கொடுத்தருளினார். அப்பூதிநாயனாரும் மனைவியாரும் தங்கள் புத்திரா பிழைத்தமையைக் கண்டும் அதைக்குறித்துச் சந்தோஷியாமல், நாயனார் திருவமுதுசெய்யாதிருந்தமையைக் குறித்துச் சிந்தை நொந்தார்கள்.

அப்பமூர்த்தி அதனை அறிந்து, அவர்களோடும் வீட்டிற்சென்று, அப்பூதி நாயனாரோடும் அவர் புத்திரர்களோடும் ஒருங்கிருந்து திருவமுது செய்தருளினார். அப்படியே சிலநாள் அங்கிருந்து, பின் திருப்பழனத்திற்குப் போயினார்.

அப்பூதியடிகள் சைவசமயாசாரியராகிய திருநாவுக்கரச நாயனாருடைய திருவடிகளைத் துதித்தலே தமக்குப் பெருஞ் செல்வமெனக்கொண்டு வாழ்ந்திருந்து, சிலகாலஞ் சென்றபின் பரமசிவனுடைய திருவடிகளை அடைந்தார். 63 நாயன்மார்களில் ஒருவராக ஈசன் அருளினார்.

தொடரும்..


கதிர்காம ஸ்வாமிகள்

கதிர்காம ஸ்வாமிகள்

ஸ்ரீகதிர்காம ஸ்வாமிகள். ஸித்துகள் அதிகம் நிகழ்த்தி இராத சித்த புருஷர் இவர். தான் இருந்த வரையிலும் எந்த ஒரு விளம்பரத்தையும் தேடாதவர். தன்னைப் பலர் முன்னிலையிலும் வெளிப்படுத்திக் கொள்வதை விரும்பாதவர். தனக்குப் பிறகு இவர்தான் சிஷ்யர் என்று எவரையும் அடையாளம் காண்பிக்காதவர். சுத்த சன்னியாசி, பரம யோகி. கதிர்காம சுவாமிகளின் குருவருளுக்குப் பாத்திரமான பக்தர்கள் பலரும். சுவாமிகள் இன்றைக்கும் ஜீவித்து வருவதாகச் சொல்கிறார்கள். தங்களது வாழ்வில் ஒவ்வொரு நிகழ்விலும் ஸ்வாமிகள் உடன் இருந்து நல்ல பல தீர்வுகளை வழங்கி வருவதாக மெய்சிலிர்ப்புடன் சொல்கிறார்கள். பக்தர்கள் தன் மீது கொண்டுள்ள நம்பிக்கை சிறிதும் பொய்த்துப் போகாமல் இருக்க. சிக்கலான நேரங்களில் அவர்களை இனிதே நல்வழிப்படுத்தி இன்றளவும் இயக்கி வருகிறார் ஸ்ரீகதிர்காம சுவாமிகள்.

சில ஆண்டுகளுக்கு முன் கோரமான ஒரு விபத்தில் பாதிக்கப்பட்டு. உயிருக்கே ஆபத்தான நிலையில் மருத்துமனைவில் அனுமதிக்கப்பட்டார் ஸ்வாமிகளின் பிரபலமான பக்தர் ஒருவர். நிச்சயம் பிழைக்க மாட்டார் என்று மருத்துவர்களால் கணிக்கப்பட்டார் அவர். ஆனால் கதிர்காம சுவாமிகளின் அருளால் அன்றைய தினம் இரவு. அவரது உடல் முழுவதும் யாரோ ஒருவர் திருநீறு பூசுவது போல் உணர்ந்தார் அவர். பிறகென்ன.... மருத்துவ உலகமே கைவிடப்பட்ட அவர், ஸ்வாமிகளின் அருளால் இன்றும் பூரணத் துடிப்புடன் நடமாடிக் கொண்டிருக்கிறார்.

ஸ்ரீகதிர்காம ஸ்வாமிகளின் அதிஷ்டானம்?

உமையம்மையால் ஞானப் பால் பெற்ற திருஞானசம்பந்தரின் அவதாரத் தலமான சீர்காழிக்கு அருகே ஸ்ரீகதிர்காம ஸ்வாமிகளின் அதிஷ்டானம் இருக்கிறது. சீர்காழியில் இருந்து மயிலாடுதுறை செல்லும் மார்க்கத்தில் சீர்காழியில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் - அதாவது சீர்காழி நகரத்திலேயே சட்டநாதபுரம் பகுதியில் காவிரியின் உபநதியான உப்பனாற்றங்கரையில் அமைந்துள்ளது ஸ்வாமிகளின் அதிஷ்டானம். 19.11.1962-ஆம் வருடம் பிலவ ஆண்டு கார்த்திகை 4-ஆம் தேதியன்று திங்கட்கிழமை தினத்தில் மக நட்சத்திரத்தன்று ஸ்வாமிகள் நிர்விகல்ப சமாதி ஆனார். அதுவரை சீர்காழித் தெருக்களில் நடமாடி, பக்தர்களை ஆசிர்வதித்து வந்த ஸ்ரீகதிர்காம சுவாமிகள். இப்போது அதிஷ்டானத்தில் இருந்தபடியே நகரையும் தம் மக்களையும் காத்து வருகிறார். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத மக நட்சத்திர தினத்தில் ஸ்வாமிகளின் குருபூஜை ஆராதனை விழா. அவரது பக்தர்களால் வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. மகான்களின் அவதாரத்தை அறிய முடியுமா? அது போல் ஸ்ரீகதிர்காம ஸ்வாமிகளின் அவதார தினத்தை இதுவரை எவரும் அறியவில்லை. பூர்வாஸ்ரமத்தைப் பற்றிய குறிப்புகளும் பெருமளவில் புலப்படவில்லை. ஸ்வாமிகளின் அருளுக்கும் ஆசிக்கும் பாத்திரமான பல பக்தர்கள் இன்றளவும் சீர்காழி. சென்னை உட்பட பல ஊர்களில் இருந்து வருகிறார்கள். கதிர்காம ஸ்வாமிகளுடன் தாங்கள் அளவளாவிய அந்த நாட்களைப் பற்றி அவரது பக்தர்கள் பேச ஆரம்பித்தாலே, உருகிப் போகிறார்கள். கிட்டத்தட்ட தங்களின்  பலரும் ஸ்வாமிகளை வழிபடுகிறார்கள். 


ஸ்வாமிகள் சரித்திரத்தில் இருந்து சில செய்திகள்.
ஸ்வாமிகள் பூவுலகில் வசித்த காலம் இருநூறுக்கும் மேற்பட்ட வருடங்கள் என்று சொல்லப்படுகிறது. வங்காள தேசத்தைச் சேர்ந்த பிரம்ம குலத்தில் அவதரித்தவர். நேபாள மந்திரி ஒருவரின் திருமகனார் என்றும் குறிப்பு உண்டு. வசதிகள், வாய்ப்புகள் இருந்தும் சுகபோக வாழ்க்கையில் நாட்டம் செல்லாமல். துறவறத்தை நாடியது சுவாமிகளின் மனம். இறைவனின் சித்தம் அதுவாக இருந்தால், எவர்தான் என்ன செய்ய முடியும்! எனவே, இளம் பிராயத்திலேயே வீட்டை விட்டுப் புறப்பட்டார்.

ஊர் ஊராகத் திரிந்தார். வயிற்றுப் பசிக்கு பிக்ஷை கைகொடுத்தது. இறைப் பசிக்கு தவம் கைகொடுத்தது. பல நாட்கள் பயணம் செய்து. பல ஊர்களைக் கடந்து ஆன்மிகத்தின் தாயகமான இமயமலைச் சாரலை அடைந்தார். தவ சீலர்களின் சொர்க்கபுரியான இமயம். இவரை இரு கரம் நீட்டி வரவேற்றது. ஏகாந்தமான சூழ்நிலையில் தன் தவத்தைத் துவங்கினார்.ஸ்ரீகதிர்காம சுவாமிகள் இமயமலையில் தவம் இருந்த காலத்தில்தான் ஸ்ரீஞானானந்த கிரி சுவாமிகளை (திருவண்ணாமலை அருகே திருக்கோவிலூர் தபோவனத்தில் அதிஷ்டானம் கொண்டுள்ள மகான்) சந்தித்தார். மகான்களின் மனங்கள் இரண்டாறக் கலந்தன. இறைவன் இருவரையும் இணைந்து வைத்தான். தவத்திலும் யோகத்திலும் நாட்களைக் கழித்தார்கள் இருவரும். அதன் பின் இருவரும் இலங்கை சென்றதாகக் கூறப்படுகிறது.கதிர்காம முருகன் இவர்களை ஆட்கொண்டான். புராணங்கள் புகழும் கதிர்காமத்தின் அடர்ந்த மலைப் பகுதிகளில் இருவரும் நீண்ட காலம் தவம் புரிந்தார்கள். சாதாரண தவம் அல்ல... சுமார் 65 ஆண்டு காலத்துக்கு இந்த தவம் நீடித்தது. அறப் பணிகள் புரிந்தனர்.இவர்களின் பக்தியிலும் தவத்திலும் பூரித்த  கந்தப் பெருமாள் இருவருக்கும் காட்சி தந்து அருளினார் (இதனால் தான் கதிர்காம சுவாமிகள் என்கிற திருப்பெயர் பின்னாளில் இவருக்கு வந்தது சுவாமிகளின் இயற்பெயர் பாலசுப்பிரமண்ய சுவாமி என்பாரும் உளர்.) அப்போது, கதிர்காம சுவாமிகளை பக்தி மார்க்கத்திலும் ஞானானந்த கிரி சுவாமிகளை ஞான மார்க்கத்திலும் செல்லுமாறு முருகப் பெருமானே வழிநடத்தியதாக. சுவாமிகளின் சரிதம் சொல்கிறது. 65 ஆண்டு கால தவம் முடிந்த பிறகு கதிர்காம சுவாமிகளும் ஞானானந்த கிரி சுவாமிகளும் தமிழகம் திரும்பும்போது, பிரியத் கூடாத உறவினர்களைப் பிரிவதுபோல், அந்த வனத்தில் உள்ள துஷ்ட மிருகங்கள் எல்லாம் துயரத்தால் கண்ணீர் விட்டதாக சுவாமிகளின் பக்தர்கள் சிலர் மெய் சிலிர்த்துச் சொல்கிறார்கள். அப்படித் திரும்பிய கதிர்காம சுவாமிகள் சீர்காழியைத் தேர்ந்தெடுத்தார். ஞானானந்த கிரி சுவாமிகள் திருக்கோவிலூரைத் தேர்ந்தெடுத்தார்.கதிர்காமத்தில் ஸ்ரீபிரம்மானந்தா என்கிற யோகிடம் சன்னியாச தீட்சை பெற்றார் சுவாமிகள். அதன் பின் காஷ்மீர், இமயமலை, பர்மா போன்ற தேசங்களுக்குச் சென்றுவிட்டு இறுதியாக சீர்காழிக்கு வந்து உப்பனாற்றங்கரையில் ஒரு சில பக்தர்கள் பனைமட்டை ஓலையால் அமைத்துத் தந்த குடிசையில் தங்கலானார். தன் உணவுத் தேவைக்காக சட்டநாதபுரம் மற்றும் தென்பாதி அக்ரஹாரத்தில் உள்ள வீடுகளுக்கு பிக்ஷை கேட்டுச் செல்வார். இதை அன்னக் காவடி என்கிறார்கள். துவக்க காலத்தில் ஒரு வேளை மட்டுமே உணவு உட்கொண்டார் சுவாமிகள். மிகவும் எளிமையான உணவு. மிளகு, கீரை, பருப்பு, சேர்த்த பதார்த்தத்தை உண்பார் சுவாமிகள். அதுவும் பிசைந்த அன்னத்தில் இருந்து மூன்றே மூன்று கவளங்கள் மட்டும் உட்கொள்வார். உணவில் உப்பு சேர்ப்பதை சுவாமிகள் விரும்ப மாட்டார். இரவில் பால் அருந்துவார். இட்லியும் அதற்குத் தொட்டுக்கொள்ள நெய் கலந்த சர்க்கரையும் சுவாமிகளுக்கு விருப்பம் என்று அவரது பக்தர் ஒருவர் சொன்னார்.

கப்பல்கார செட்டியார் எனப்படும் தனவந்தர் வீட்டுக்கு மாலை வேளைகளில் சென்று உணவருந்தி, அவரிடம் மனம் விட்டு உரையாடுவார் சுவாமிகள். இத்தகைய அற்புத மகான் ஒருவர், தங்கள் ஊருக்கு வந்து தங்கி இருக்கிறார் என்பதை அறிந்த சீர்காழி மற்றும் அதன் சுற்றுப்புற மக்கள் அவ்வப்போது பெருமளவில் திரண்டு வந்து. தங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லுமாறு கதிர்காம சுவாமிகளை நமஸ்கரித்துக் கேட்பார்கள். அவர்களில் பலருக்கு சுவாமிகள் அனுக்ரஹமும் செய்துள்ளார். வரும் பக்தர்களில் பலர் இனிப்புகள், திராட்சை, கல்கண்டு, பழங்கள், முந்திரி போன்றவற்றை சுவாமிகள் சாப்பிடட்டுமே என்று ஆசைப்பட்டு வாங்கி வருவார்கள். ஆனால், அவற்றின் மேல் தன் திருக்கரங்களைப் பதித்துவிட்டு, குழந்தைகளுக்கும் அங்குள்ள பக்தர்களுக்கும் தருமாறு சொல்லி, அதில் இருந்து எதையும் எடுத்துகொள்ள மாட்டார் சுவாமிகள்.ஸ்ரீகதிர்காம சுவாமிகள் உப்பனாற்றங்கரைக்கு வந்து ஓலைத் குடிசையில் அமர்ந்த காலத்தில் அந்தப் பகுதியே காடு போல காட்சி அளித்தது. பிறகு,  சுவாமிகளின் முயற்சியால் ஏற்றம் போட்டு நீர் இறைத்து அந்தப் பகுதியையே மணக்கும் நந்தவனமாக மாறினார். நந்தவனமாக இந்தப் பகுதி மாறுவதற்கு முன் ஏராளமான பாம்புகள் இங்கே நடமாடும். அவற்றுள் சில பாம்புகள் சுவாமிகளின் திருமேனி மேல் விழுந்து சுற்றிக் கொள்ளும். சுவாமிகளும் ரொம்ப சுவாதீனமாக, சரி... போ உன் இருப்பிடத்துக்கு. சிலர் உன்னைப் பார்த்து பயப்படுகிறார்கள் என்று சொல்ல... உடலில் இருந்து பாம்புகள் தரையில் இறங்கி ஊர்ந்து போய்விடும். இந்தக் காட்சியை நேரில் பார்த்த அன்பர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். தன் பக்தர்களிடம் பாம்பைக் கண்டு பயப்படாதீர்கள். அதைப் பார்த்தவுடன் ஜெய சீதாராம்..... ஜெய சீதாராம் என்று சொல்லுங்கள் அடுத்த கணமே அவை நம் கண்ணுக்குத் தெரியாமல் போய்விடும் என்பார் சுவாமிகள்.

அடியார்களுக்கு அன்னதானம் செய்வதென்றால் கொள்ளைப் பிரியம் சுவாமிகளுக்கு. தினமும் குறைந்தது பதினாறு பரதேசிகளுக்காவது தன் கைப்பட அன்னம் எடுத்துக் கொடுப்பார் சுவாமிகள். எது இருக்கிறதோ இல்லையோ, தயிர் சாதமும் ஊறுகாயும் நிச்சயம் இந்த அன்னதானத்தில் இடம் பெறும். அன்னதானம் முடிந்து சாதுக்கள் புறப்படும் போது. அவர்கள் கைச்செலவுக்குப் பணமும் கொடுத்து அனுப்புவார். இதெல்லாம் சாதாரண நாட்களில் நடக்கும் அன்னதானம் விசேஷ தினங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். சீர்காழியில் வசிக்கும் ஒருவர் தன் தந்தையார் கூறியதாக நம்மிடம் சொன்னார். பூசனிக்காயை சாம்பாரில் போடுவதற்காக உளியால் அதை சரசரவென்று வெட்டுவார்கள். கத்தியால் நறுக்கிக் கொண்டிருந்தால் நேரம் போதாது. இரண்டு கைகளாலும் பிடிக்கக்கூடிய அளவில்தான் லட்டு தயார் செய்யச் சொல்வார் சுவாமிகள். சாம்பார் இருக்கும் மிகப் பெரிய அண்டாவில் குனிந்து அதை எடுக்க முடியாது என்பதால், ஒரு வாளியில் கயிறு கட்டித்தான் சாம்பாரை எடுத்துப் பரிமாறுவார்கள். அப்படி என்றால், அந்த அண்டா எத்தனை பெரிதாக இருக்கும் என்று யோசியுங்கள். கேட்கவே மலைப்பாக இருக்கிறது. இதை எல்லாம் பார்த்து அனுபவித்தவர்கள், எத்தனை பாக்கியம் பெற்றவர்கள்! சுவாமிகளின் அனுபவங்களைப் பல பக்தர்களும் நெகிழ்ந்து போய்ச் சொல்கிறார்கள். அவற்றுள் சிலவற்றுள் இவை! பேச்சு சரியாக வராத தன் பெண்ணைக் கூட்டி வந்தார் ஒரு அம்மணி. இருவரையும் உப்பனாற்றில் மூழ்கிவிட்டு வரச் சொன்னார் சுவாமிகள். தரிசித்துவிட்டு நம்பிக்கையுடன் புறப்பட்டவர்கள். அவர்கள் ஊர் போய்ச் சேருவதற்கு முன்பாக, பாதி வழியிலேயே அந்தப் பெண்ணுக்குப் பேச்சு அட்சர சுத்தமாக வந்துவிட்டது.சதா எந்நேரமும் மது குடித்தே தன் வாழ்க்கையைத் தொலைந்துவிட்ட ஒரு அன்பர். சுவாமிகளைச் தரிசிக்க வந்தர். தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியை இதற்கே செலவழித்ததால். குடும்பம் நிர்க்கதியாகிப் போய்விட்டது. வீட்டிலும் நிம்மதி இல்லை. அந்த மது ப்ரியருக்கு. கதிர்காம சுவாமிகளிடம் போனால் எல்லா பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைப்பதாகச் சொல்கிறார்களே.... நாமும் போய்த்தான் பார்ப்போமே என்ற எண்ணத்தில் உப்பனாற்றங்கரைக்கு சுவாமிகளின் குடிசைக்கு வந்தார். அந்த மது ப்ரியர். வந்தவரின் மனதில் உள்ள எண்ணத்தைப் புரிந்துகொள்வதில் சுவாமிகளுக்கு சிரமம் இருக்குமா என்ன?

வந்த மது ப்ரியரின் கையில் ஒரு சொம்பை கொடுத்து உப்பனாற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வருமாறு சொன்னார் சுவாமிகள். அவரும் குழப்பத்துடனே உப்பானற்றுக்குப் போய் நீர் முகர்ந்து வந்து சுவாமிகளிடம் கொடுத்தார். அதைப் பத்து நிமிடங்கள் தன் கையில் வைத்திருந்தபடியே அவரிடம் சில விஷயங்களைப் பேசினார் சுவாமிகள். பிறகு, அந்தச் சொம்பு நீரை அவரிடம் கொடுத்துக் குடிக்கச் சொன்னார். அந்தச் சொம்பு நீரை மடமடவென்று குடித்து முடித்த அவர் அதிர்ந்து போனார். காரணம்-மதுவில் இருக்கும் அதே சுவை. கொஞ்சமும் குறையாமல் அந்த நீரிலும் இருந்ததுதான் சுவாமிகளின் அருளால் சாதாரண குடிநீர் இப்படி மாறிப் போய்விட்டிருந்தது. அன்பரே.... பாவம் எத்தனை நாட்களுக்குத்தான் கடைக்குப் போய் காசு கொடுத்து வாங்கிக் குடிப்பீர்கள்? இன்று ஒரு நாளைக்காவது நீங்கள் இலவசமாகக்  குடிக்கலாமே என்றுதான் இப்படிச் செய்தேன் என்றார் சுவாமிகள் புன்னகையுடன்  வந்திருந்தவருக்கு வெட்கமும் அவமானமும் சேர்ந்து கொண்டது. கண்ணீர் மல்க, சுவாமிகளின் திருப்பாதங்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.  நாளை முதல் குடிக்கிற எண்ணம் உனக்கு வருதானு பார் என்று சொல்லி அனுப்பினார் சுவாமிகள்.

என்னே ஆச்சரியம்! மறுநாளில் இருந்து அந்த அன்பர் குடிப் பழக்கத்தை அறவே நிறுத்திவிட்டார். இதை சுவாமிகளிடம் வந்து சந்தோஷமாகச் சொல்லிவிட்டுப் போனார் அவர். சில நேரங்களில் சுவாமிகள் தனியே அமர்ந்திருப்பார். ஆனால், எதிரே அமர்ந்திருக்கும் ஒருவரிடம் வெகு சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருப்பதுபோல் தோற்றம் இருக்கும். அது போன்ற வேளைகளில் ஞானானந்த கிரி சுவாமிகளிடம் கதிர்காம சுவாமிகள் உரையாடிக் கொண்டிருப்பதாகப் பின்னாளில் அவரின் பக்தர்கள் சொன்னார்கள். இரும்பைத் தங்கமாக்கும் ரசவாத வித்தையும் உடலை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துப் போட்டுச் செய்யும் நவகண்ட யோகமும் சுவாமிகளுக்குப் பரிச்சயமானவை. நவகண்ட யோகத்தில் சுவாமிகள் இருக்கும்போது பாம்புகள் அவரைச் சுற்றி இருக்கும். அந்த வேளையில் பக்தர்கள் எவராவது திடீரென முன்னேறிவிப்பே இல்லாமல் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்துவிட்டால், அவ்வளவுதான்!  இதனால், அக்கம்பக்கத்தில் உள்ள பக்தர்களிடம் கதவு மூடி இருந்தால், திறந்துகொண்டு உள்ளே வரும்போது ஜெய் சீதாராம் என்று சொல்லிவிட்டு உள்ளே வாருங்கள் என்பார் சுவாமிகள். அதாவது அப்படிச் சொல்லிவிட்டு, அவர்கள் உள்ளே வருவதற்குள் சுவாமிகள் இயல்பு நிலைக்கு வந்து விடுவார்.சீர்காழி தென்பாதியில் சுவாமிகளே கட்டிய முருகன் கோயில் ஒன்று இருக்கிறது. இங்கு முருகப் பெருமான் பிரதான மூலவராகவும், தவிர விநாயகர் மற்றும் வேணுகோபாலன் ஆகிய விக்கிரகங்களும் பிரதிஷ்டை ஆகி உள்ளன. சுவாமிகள் பயன்படுத்திய சில பொருட்களும் தரிசிக்கக் கிடைக்கும் இந்த கோயில் பூஜைகள் சிறப்பாக நடந்து வருகின்றன. நாயன்மார்கள் திருநட்சத்திரத்தன்று அபிஷேக, ஆராதனைகள் செய்யும் வழக்கத்தை சுவாமிகள் இந்த கோயிலில் துவக்கி வைத்தார். அது இன்றளவும் நடைபெற்று வருகிறது. இந்த கோயில் அடிக்கடி தங்கும் வழக்கம் சுவாமிகளுக்கு உண்டு. இங்கே தான் கட்டிய ஆறடி அகலமும் ஆறடி ஆழமும் உள்ள தனி அறையில் அவ்வப்போது சென்று நிஷ்டையில் கூடி விடுவது சுவாமிகளின் வழக்கம். நிஷ்டையில் உட்கார்ந்தால் ஸமாதி நிலைக்குப் போய்விடுவார் சுவாமிகள். இந்த ஸமாதி நிலைக்கு நேரம் காலம் எல்லாம் தீர்மானிக்க மாட்டார் சுவாமிகள். சில வேளைகளில் மூன்று நாட்கள், ஒரு வாரம். ஒரு மாதம் என்றெல்லாம்கூட நிஷ்டையின் நாட்கள் நீட்டிக்கப்பட்டு விடும்.

இந்தக் காலத்தில் அன்னம், ஆகாரம் எதுவும் இல்லை. சுவாமிகள் நிஷ்டையில் இருக்கும்போது பெரிய சைஸில் உள்ள நல்ல பாம்பு ஒன்று சுவாமிகளின் தலைக்கு மேலே படம் எடுத்த கோலத்தில் அவரைக் காவல் காத்து வரும் எப்போதாவது முக்கியமான பக்தர்கள் எவராவது வருவதாகத் தெரிந்தால், சுவாமிகளின் காதில் உஸ் உஸ் என்று சத்தம் எழுப்பி, அவருக்குத் தகவல் கொடுக்கும். உடனே சுவாமிகளும் நிஷ்டை கலைந்து. சரி... நீ போகலாம் என்று பாம்புக்கு விடைகொடுத்து வெளியே வருவார் சுவாமிகள். ஸ்ரீகதிர்காம சுவாமிகள் இருநூறு வயதைத் தாண்டியவர் என்பது அவரது பக்தர்களின் நம்பிக்கை. எப்படி  என்பதற்கும் அவர்கள் விளக்கம் தருகிறார்கள். கிழக்கிந்திய கம்பெனியினர் இந்தியாவுக்கு வந்து ஆட்சி செய்ததைப் பற்றித் தனது கருத்துகளை வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறார். அதாவது அப்போது கதிர்காம சுவாமிகள் இருந்திருக்கிறார் என்பது இதன் மூலம் தெரிகிறது. தவிர காஷ்மீரில் 25 வருடம் பர்மாவில் 25 வருடம். இமயமலையில் 25 வருடம். இலங்கையில் 65 வருடம் என்று அவர் இருந்ததாகச் சொல்கிறார்கள். இதை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது சுவாமிகள் வயதை ஊகிக்கலாம் என்கிறார்கள் அவருடைய பக்தர்கள்.1962-ஆம் வருடம் நவம்பர் மாதம் 19-ஆம் நள்ளிரவு சுமார் 12 மணிக்கு சுவாமிகள் நிர்விகல்ப சமாதி நிலையை அடைந்தார். தான் சமாதி ஆகப் போவதை முன் கூட்டியே உணர்ந்து கொண்ட ஸ்ரீகதிர்காம சுவாமிகள். முதல் நாள் முக்கியமான சில பக்தர்களை வரவழைத்தார். அடுத்த நாளின் திதி, நட்சத்திரம் இவற்றைச் சொல்லிவிட்டு, நாளை ஒரு முக்கியமான தினம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்றார். அதோடு உப்பு. சாம்பிராணி, கற்பூரம், விபூதி இவற்றைப் பெருமளவில் இன்றே வாங்கி வையுங்கள் என்றும் சொன்னார். சுவாமிகள் எது சொன்னாலும் அதை உடனே நிறைவேற்றும் அவரது பக்தர்களும் அன்றைய தினமே அந்தப் பொருட்களை வாங்கி வைத்து விட்டார்கள்.

அடுத்த நாள் நள்ளிரவு அமர்ந்த நிலையிலேயே சுவாமிகள் சமாதி ஆனார். அதுவரை, இதற்காகத்தான் பொருட்களை முதல் நாளே வாங்கி வைக்கச் சொன்னார் என்பது எவருக்கும் புரிபடவில்லை அதன் பின், சுவாமிகள் இருக்கும்போதே குறிப்பால் உணர்த்திய இடத்தில் அவரது நிர்விகல்ப சமாதி அமைந்தது. அதன் மேல் லிங்க பிரதிஷ்டையும் அமைந்தது. இந்த கோயில் உப்பனாற்றங் கரையில் அமைந்துள்ளது. பலிபீடம், நந்திதேவர், கருவறை, பிராகாரம் என்று இந்த அதிஷ்டானத் திருக்கோயில் காணப்படுகிறது.

தகவல் பலகை:தலம் :சீர்காழி.சிறப்பு :கதிர்காம சுவாமிகள் அதிஷ்டானத் திருக்கோயில்.

இருப்பிடம்: சீர்காழியில் இருந்து மயிலாடுதுறை செல்லும் மார்க்கத்தில் சீர்காழியில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் - அதாவது சீர்காழி நகரத்திலேயே சட்டநாதபுரம் பகுதியில் அமைந்துள்ளது சுவாமிகளின் அதிஷ்டானம்.மயிலாடுதுறையில் இருக்கும் சீர்காழிக்கும், சீர்காழியில் இருந்து மயிலாடுதுறைக்கும் எண்ணற்ற பேருந்துகள் உள்ளன. இறங்கவேண்டிய பேருந்து நிறுத்தம் - உப்பனாறு. அங்கே இறங்கிக்கொண்டால். உப்பனாற்றங்கரையில் ஓரத்தில் சுவாமிகளின் அதிஷ்டானம் அமைந்துள்ளது.

தொடர்புக்கு:
டாக்டர்: ஆர்.வி. நாதன் (தங்குடு),
ப.எண்: 16, பு.எண்: 29, வல்லபபாய் படேல் தெரு, தென்பாதி, சீர்காழி - 609 111, நாகை மாவட்டம், போன்: 04364 - 270650,

வெள்ளி, 13 மே, 2022

நாம் அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை

நாம் அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது.

1.தமிழ் வருடங்கள்(60)
2.அயணங்கள்(2)
3.ருதுக்கள்(6)
4.மாதங்கள்(12)
5.பக்ஷங்கள்(2)
6.திதிகள்(15)
7.வாஸரங்கள்(நாள்)(7)
8.நட்சத்திரங்கள்(27)
9.கிரகங்கள்(9)
10.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்(12)
11.நவரத்தினங்கள்(9)
12.பூதங்கள்(5)
13.மஹா பதகங்கள்(5)
14.பேறுகள்(16)
15.புராணங்கள்(18)
16.இதிகாசங்கள்(3)

இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது அவை:

1.ப்ரபவ
2.விபவ
3.சுக்ல
4.ப்ரமோதூத
5.ப்ரஜோத்பத்தி
6.ஆங்கீரஸ
7.ஸ்ரீமுக
8.பவ
9.யுவ
10.தாது(தாத்ரு)
11.ஈச்வர
12.வெகுதான்ய
13.ப்ரமாதி
14.விக்ரம
15.விஷு
16.சித்ரபானு
17.ஸுபானு
18.தாரண
19.பார்த்திப
20.வ்யய
21.ஸர்வஜித்
22.ஸர்வதாரி
23.விரோதி
24.விக்ருதி
25.கர
26.நந்தன
27.விஜய
28.ஜய
29.மன்மத
30.துன்முகி
31.ஹேவிளம்பி
32.விளம்பி
33.விகாரி
34.சார்வாரி
35.ப்லவ
36.சுபக்ருது
37.சோபக்ருது
38.க்ரோதி
39.விச்வாவஸு
40.பராபவ
41.ப்லவங்க
42.கீலக
43.ஸெளம்ய
44.ஸாதாரண
45.விரோதிக்ருத்
46.பரிதாபி
47.பிரமாதீச
48.ஆனந்த
49.ராக்ஷஸ
50.நள
51.பிங்கள
52.காளயுக்தி
53.ஸித்தார்த்தி
54.ரெளத்ரி
55.துன்மதி
56.துந்துபி
57.ருத்தோத்காரி
58.ரக்தாக்ஷி
59.க்ரோதன
60.அக்ஷய.

அயணங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:

1.உத்தராயணம்
(தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
2.தக்ஷிணாயணம்
(ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
இரண்டு அயணங்கள் சேர்ந்து ஒரு தமிழ் வருடமாகும்.

ருதுக்கள் மொத்தம் ஆறு வகைப்படும்:

1.வஸந்தருது (சித்திரை, வைகாசி)
2.க்ரீஷ்மருது (ஆனி, ஆடி)
3.வர்ஷருது (ஆவணி, புரட்டாசி)
4.ஸரத்ருது (ஐப்பசி, கார்த்திகை)
5.ஹேமந்தருது (மார்கழி, தை)
6.சிசிரருது (மாசி, பங்குனி)
இரண்டு தமிழ் மாதங்கள் சேர்ந்தது ஒரு ருது ஆகும்.

தமிழ் மாதங்கள் பண்னிரண்டு ஆகும் :

1.சித்திரை (மேஷம்)
2.வைகாசி (ரிஷபம்)
3.ஆனி (மிதுனம்)
4.ஆடி (கடகம்)
5.ஆவணி (சிம்மம்)
6.புரட்டாசி (கன்னி)
7.ஐப்பசி (துலாம்)
8.கார்த்திகை (விருச்சிகம்)
9.மார்கழி (தனுர்)
10.தை (மகரம்)
11.மாசி (கும்பம்)
12.பங்குனி (மீனம்)

பக்ஷங்கள் இரண்டு வகைப்படும் :

1.ஸுக்ல பக்ஷம் (அமாவசை திதி முதல் சதுர்த்தசி திதி வரை)

2.க்ருஷ்ணபக்ஷம் (பெளர்ணமி திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
சுக்ல பக்ஷத்தை பூர்வ பக்ஷம் என்றும் வளர்பிறை என்றும் கூறுவர்.

க்ருஷ்ண பக்ஷத்தை அமர பக்ஷம் என்றும் தேய்பிறை என்றும் கூறுவர்.
இரண்டு பக்ஷங்கள் சேர்ந்தது ஒரு தமிழ் மாதம் ஆகும்.

திதிக்கள் மொத்தம் பதினைந்து வகைப்படும் :

1.பிரதமை
2.துதியை
3.திருதியை
4.சதுர்த்தி
5.பஞ்சமி
6.ஷஷ்டி
7.சப்தமி
8.அஷ்டமி
9.நவமி
10.தசமி
11.ஏகாதசி
12.துவாதசி
13.திரையோதசி
14.சதுர்த்தசி
15பெளர்ணமி(அ)அமாவாசை.

வாஸரங்கள்(நாழ்) ஏழு ஆகும் :

1.ஆதித்யவாஸரம்
2.சோமவாஸரம்
3.மங்களவாஸரம்
4.ஸெளமியவாஸரம்
5.குருவாஸரம்
6.சுக்ரவாஸரம்
7.மந்தவாஸரம்(அ)ஸ்திரவாஸரம்

நட்சத்திரங்கள் மொத்தம் இறுபத்தி ஏழு ஆகும்:

1.அஸ்வினி
2.பரணி
3.கர்த்திகை
4.ரோகினி
5.மிருகசீரிஷம்
6.திருவாதிரை
7.புனர்பூசம்
8.பூசம்
9.ஆயில்யம்
10.மகம்
11.பூரம்
12.உத்திரம்
13.ஹஸ்த்தம்
14.சித்திரை
15.சுவாதி
16.விசாகம்
17.அனுஷம்
18.கேட்டை
19.மூலம்
20.பூராடம்
21.உத்ராடம்
22.திருவோணம்
23.அவிட்டம்
24.சதயம்
25.பூரட்டாதி
26.உத்திரட்டாதி
27.ரேவதி.

கிரகங்கள் ஒன்பது ஆகும்:

1.சூரியன் (SUN)
2.சந்திரன் (MOON)
3.அங்காரகன் (MARS)
4.புதன் (MERCURY)
5.குரு (JUPITER)
6.சுக்ரன் (VENUS)
7.சனி (SATURN)
8.இராகு (ASCENDING NODE)
9.கேது (DESCENDING NODE)

இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்:

இராசிகள் பண்ணிரெண்டு ஆகும் ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பகுதியாக (பாகங்கள்) பிரிக்கப்படும், நட்சத்திரங்களின் ஒன்பது பகுதிகள் (பாகங்கள்) சேர்ந்த்து ஒரு இராசி ஆகும்.

நட்சத்திரங்கள், இராசி, இராசிஅதிபதி.

அஸ்வினி, பரனி, கார்த்திகை முன் ¼ மேஷம், செவ்வாய்

கர்த்திகை பின்3/4, ரோகினி, மிருகசீரிஷம் முன்1/2 ரிஷபம்,
சுக்கிரன்

மிருகசீரிஷம்பின்1/2, திருவாதிரை, புனர்பூசம்முன்3/4, மிதுனம், புதன்

புனர்பூசம் பின் ¼, பூசம், ஆயில்யம்
கடகம், சந்திரன்

மகம், பூரம், உத்திரம் முன் ¼, சிம்மம்,
சூரியன்

உத்திரம் பின்3/4, ஹஸ்தம், சித்திரை முன்1/2, கன்னி, புதன்

சித்திரை பின்1/2, சுவாதி, விசாகம் முன்3/4, துலாம், சுக்கிரன்

விசாகம் பின்1/4, அனுஷம், கேட்டை
விருச்சிகம், செவ்வாய்

மூலம், பூராடம், உத்திராடம் முன்1/4
தனுசு, குரு

உத்திராடம்பின்3/4, திருவோணம், அவிட்டம் முன்1/2, மகரம், சனி

அவிட்டம் பின்1/2, சதயம், பூரட்டாதி முன்3/4, கும்பம், சனி

பூரட்டாதி பின்1/4, உத்திரட்டாதி, ரேவதி, மீனம், குரு

சோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் குணம் எந்த தெய்வத்தின் குணத்தை ஒத்துள்ளது என கண்டறிந்து, அந்த தெய்வத்தை அதிதேவதையாக கூறியுள்ளனர். ஒவ்வொரு தெய்வமும் ஒவ்வொரு கிரகத்திற்கு அதிதேவதை.

சூரியன் - சிவன், சந்திரன் - பார்வதி

பரமனும், பார்வதியும் படியளப்பவர்கள் என்ற வழக்கு உண்டு. அது போலவே அனைத்திற்கும் மூலகாரணாய் சூரியன் இருக்கிறான். அவன் கொடைக்கு நிகரில்லை. உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் அவன் உதவியின்றி பிராணன் கிடைப்பதில்லை. ஆகவே சூரியன் சிவனானார். பரமன் மனைவி பார்வதி, சந்திரனுக்கு அதிதேவதை. பூமியை தாயைப் போல் குளிரூட்டும் கிரகம். சூரியனிடத்தில் வெப்பத்தை பெற்று குளிர்ந்த ஒளியாய் தந்து நீர் நிலைகளை பொங்க வைக்கும்.
இந்த இரண்டுகிரகங்களின் நிலை சாதகத்தில் - நல்ல முறையில் இருந்தால், ஒரு ஜாதகர் தன் இன பந்துக்களுடன் இனிதே வாழ்வான் என்பது உறுதி.

செவ்வாய் :சுப்ரமண்யர்

ஜாதகத்தில் வீரத்திற்கு இன்றியமையாதது செவ்வாய் பலம். இரும்பு கிரகம். உடல் பலத்திற்கு இன்றியமையாதது செவ்வாயின் நிலை. வீரத்தில் சிறந்த தெய்வம் முருகன். சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சி தெய்வமும் இல்லை என்பது பழமொழி. அசுரர்களை தேவர்களுக்காக வதம் செய்த தெய்வம் முருகன். ஆதலால் செவ்வாய்க்கு அதிதேவதை சுப்பிரமணியர்.

புதன் :விஷ்ணு

ஒரே நேரத்தில் இருவேறு குணத்தைக் கொண்ட கிரகம். தற்சுழற்சி குறைவானது. தெய்வத்தில் இரு நிறம் கொண்ட தெய்வம் விஷ்ணு. அதுபோலவே ஒருபுறம் கடும் வெப்பமும் மறுபுறம் கடும் குளிரும் கொண்டது. எந்த கிரகத்தின் நேர்கோட்டில் 10 பாகைக்குள் உள்ளதோ அதன் குணத்தை பிரதிபலிக்க வல்லது. நியாயம் தவறாமல் கடமையை செய்வதற்கு இன்றியமையாதது இதன் நிலை.

குரு : பிரம்மா, தட்சிணாமூர்த்தி (குரு)

ஜாதகத்தில் கல்வி, கேள்வி, கீர்த்திக்கு வழிவகுக்கும் கிரகம். தற்சுழற்சி அதிகம் உள்ளது. இருக்கும் இடத்தைவிட பார்க்கும் இடமே விருத்தியாகும். ஆசிரியர் போன்ற குணத்தை உடையது.

சுக்ரன் : லக்ஷ்மி, இந்திரன்

ஒரு ஜாதகத்தில மற்ற கிரகங்கள் நிலை கெட்டிருந்தாலும் அதை நிவர்த்தி செய்ய வல்ல கிரகம் சுக்ரன். களத்திர காரகன். லக்ஷ்மியை போல் ஐஸ்வர்யத்தை கொடுக்கக் கூடிய கிரகம். ராஜயோகத்தையும், சுகபோக வாழ்க்கையையும், மனைவி வழி சொத்து சேர்க்கையையும் மனைவியின் குண நலத்தையும் கொடுக்கும். 8ம் இடத்திற்கு உரிய கிரகம். இந்திரன் குணத்தைக் கொண்டது. மழைக்கு காரணமான குளிர்ந்த கிரகம்.

சனி : எமன், சாஸ்தா

உஷ்ணத்தை பிரதிபலிக்கும் கிரகம். ஜாதகத்தில் சனியின் நிலையே மரணத்தின் வகையை நிர்ணயிக்கும். சனி 0 பாகையில் குளிர்ச்சியை கொடுக்கும். அதனால் சாஸ்தாவிற்கு நிகராக சொல்லப்பட்து. ஆனால் பார்வை உக்கிரமானது. கொடுப்பதிலும், அழிப்பதிலும் சனிக்கு நிகர் சனியே வேறு கிரகம் இல்லை (ஆயுள் காரகன்).

ராகு: காளி, துர்கை

கருமாரியின் நிழல் கிரகம். சந்திரன் தவிர மற்ற கிரகங்கள் இதன் 0 பாகையில் சாதகத்தில் வரும்போது பலன் தருவது அரிது. கருமை நிறம் உடையது. ராகு, கேதுக்கு இடையில் மற்ற கிரகங்கள் உடைபட்டு விட்டால் கால சர்ப்ப யோகம், தோஷம் என்று கூறுவதுண்டு. சாதகனின் பிற்பட்ட காலங்களிலேயே பலன் கொடுக்கும். இளம் வயதில் அவதிகளை சந்திக்க நேரும். துஷ்ட குணத்துடன் கொடுக்க வல்ல கிரகம்.

கேது :விநாயகர், சண்டிகேஸ்வரர்

ஞானத்தை கொடுக்கும் கிரகம். ஒரு ஜாதகன் பிறக்கும்போது 0 பாகை ஜன்மத்திலிருந்தால் அந்த ஜாதகனுக்கு சித்தியையும் முக்தியையும் கொடுக்கும். நீண்ட நேரம் ஓரிடத்தில் அசையாமலிருந்து பணி செய்வதில் வல்லமையைத் தரும். சோம்பல் சேர்ந்த திடீர் மாற்றத்தை தரவல்ல கிரகம். (நிழல் கிரகம்).

உடலுக்கு ஒன்பது வாசல் :

மனிதர்களுக்கு ஒன்பது வாசல் உள்ளது அவை ஒவ்வொன்றையும் கிரகம் ஆட்சி செய்கின்றது அவையானவன

1,சூரியன்-இடக்கண்
2,சுக்கிரன்-வலக்கண்வாசல்
3,சந்திரன்-வாய் வாசல்
4,புதன்-இடமூக்கு வாசல்
5,செவ்வாய்-வலமூக்கு வாசல்
6,வியாழன்-வலக் காதுவாசல்
7,சனி-இடக்காது வாசல்
8,இராகு-மலவாசல்
9,கேது-சிறுநீர் வாசல் ஆகும்

இவற்றுள் அடைக்கப்பட்ட வாயில் ஆகிய கொப்பூழை குளிகன் அல்லது மாந்தி ஆட்சி செய்கிறது! உயிர் பிரியும்போது எந்தத் திசை,எந்தப் புத்தி நடக்கிறதோ அதற்குரிய வாயில் வழியாக உயிர் பிரியும்!

நவரத்தினங்கள்:

1.கோமேதகம்
2.நீலம்
3.பவளம்
4.புஷ்பராகம்
5.மரகதம்
6.மாணிக்கம்
7.முத்து
8.வைடூரியம்
9.வைரம்.

பூதங்கள் ஐந்து வகைப்படும் :

1.ஆகாயம் - வானம்
சப்தம், ஓசை
2.வாயு - காற்று
ஸ்பர்ஷம், தொடு உணர்வு
3.அக்னி - நெருப்பு(தீ)
ரூபம், ஒளி (பார்த்தல்)
4.ஜலம் - நீர்
ரஸம், சுவை
5.பிருத்வி - நிலம்
கந்தம், நாற்றம் (மணம்)

மஹா பாதகங்கள் ஐந்து வகைப்படும் :

1.கொலை
2.பொய்
3.களவு
4.கள் அருந்துதல்
5.குரு நிந்தை.

பெறுகள் பதினாறு வகைப்படும்:

1.புகழ்
2.கல்வி
3.வலிமை
4.வெற்றி
5.நன்மக்கள்
6.பொன்
7.நெல்
8.நல்ஊழ்
9.நுகர்ச்சி
10.அறிவு
11.அழகு
12.பொறுமை
13.இளமை
14.துனிவு
15.நோயின்மை
16.வாழ்நாள்..

புராணங்கள் பதினெட்டு வகைப்படும்,  இவைகளை இயற்றியவர் வேத வியாசர் ஆவார்.

1.பிரம்ம புராணம்
2.பத்ம புராணம்
3.பிரம்மவைவர்த்த புராணம்
4.லிங்க புராணம்
5.விஷ்ணு புராணம்
6.கருட புராணம்
7.அக்னி புராணம்
8.மத்ஸ்ய புராணம்
9.நாரத புராணம்
10.வராக புராணம்
11.வாமன புராணம்
12.கூர்ம புராணம்
13.பாகவத புராணம்
14.ஸ்கந்த புராணம்
15.சிவ புராணம்
16.மார்க்கண்டேய புராணம்
17.பிரம்மாண்ட புராணம்
18.பவிஷ்ய புராணம்.

இதிகாசங்கள் முன்று வகைப்படும்.:

1.சிவரகசியம்
2.இராமாயணம்
3.மஹாபாரதம்.

இவையாவும் நாம் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டியது....

40வது பட்டம் அழகியசிங்கர்


மகாவிஷ்ணுவின் முதல் அவதாரமான மச்ச அவதாரம் நிகழ்ந்த தலம் துவரிமான். இங்குள்ள ரங்கராஜப்பெருமாள் கோயிலுக்கு அருகில் அகோபில ஜீயர் சுவாமியின் பிருந்தாவனம் உள்ளது. மடத்தின் 40வது பட்டமான இவரது திருநாமம் ரங்கநாத சடகோப யதீந்திர மகாதேசிகன் சுவாமிகள்.


1923ல் இவர் மதுரை கூடலழகர், அழகர்கோவில், திருமோகூர், ஸ்ரீவில்லிபுத்துார் தலங்களை தரிசித்து விட்டு, துவரிமானில் தங்கிய போது முக்தியடைந்தார். இவரது சமாதிக்கோயிலான பிருந்தாவனம் வைகைநதிக்கரையில் கட்டப்பட்டது. கருவறையில் ஜீயர் வலது கையில் திருத்தண்டும், இடது கையில் ஓலைச்சுவடியும் தாங்கிய கோலத்தில் காட்சியளிக்கிறார். செப்புத்திருமேனி ஒன்றும் உள்ளது.
ஜீயரின் அற்புதங்கள்: ஜீயர் மடாதிபதியாக இருந்த காலத்தில் அற்புதங்கள் பல நிகழ்த்தினார். ஆந்திராவின் கர்நுால் மாவட்டத்தில் உள்ளது அகோபிலம் மடம். இங்குள்ள நரசிம்மர் கோயிலுக்கு அருகில் பிரம்ம ராட்சஷன் ஒருவன் இருந்ததால் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். இதையறிந்த ஜீயர், நரசிம்ம மந்திரம் ஜபித்து ராட்சஷனை விரட்டினார். காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுடன் நேரில் பேசும் திருக்கச்சிநம்பி போல ஜீயரும் பேசும் சக்தி பெற்றிருந்தார். ஒருமுறை மடத்தின் யானைக்கு மதம் பிடிக்கவே, பாகனால் அடக்க முடியவில்லை. இந்நிலையில் ஜீயர், யானையின் முகத்தில் தீர்த்தம் தெளித்து கையால் தடவிக் கொடுக்க அது சாந்தமானது.

ஆந்திராவிலுள்ள கட்வல் சமஸ்தானத்தில் சோமபூபால் என்பவரின் ஆட்சிக்காலத்தில் சென்னகேசவப் பெருமாள் கோயில் கட்டப்பட்டது. அப்போது கோயிலுக்குள் பிராமணர் ஒருவர் கொல்லப்படவே சோமபூபாலுக்கு வாரிசு இல்லாமல் போனது. இதன்பின் கட்வல் வந்த ஜீயர் மூன்றாண்டுகள் தங்கி, பெருமாளுக்கு புதிய சிலைகளை நிர்மாணித்து கும்பாபிேஷகம் நடத்தவே நிலைமை சீரானது. இதன்பின் கட்வல் சமஸ்தானம் ஜீயருக்கு பொன்னும், பொருளும் அளித்து பெருமை சேர்த்தது.

பரிகார வழிபாடு: ஜீயரை தரிசித்து 16 முறை வலம் வந்தால் எதிரி பயம், நீதிமன்ற வழக்கு, கடன் பிரச்னை நீங்கும். மாணவர்கள் துளசிமாலை சாத்தி வழிபட ஞாபகதிறன் அதிகரிக்கும். கல்வி வளர்ச்சி உண்டாகும். விளக்கு ஏற்றி வழிபடும் கன்னியருக்கு நல்ல மணவாழ்வு கிடைப்பதோடு குழந்தைப்பேறும் உண்டாகும். துளசி தீர்த்தம் பருகினால் பயந்த கோளாறு, காரணமற்ற அச்சம் நீங்கும். அர்ச்சனை செய்த மிளகை சாப்பிட நீண்டநாள் நோய் விலகும். சனிக்கிழமையன்று தரிசித்து தீபமேற்ற கிரக தோஷம் பறந்தோடும். வருஷாபிேஷகமான ஆனிவிசாகத்தை முன்னிட்டு 10 நாள் திருவிழா நடக்கும். ஜீயரின் அவதரித்த மார்கழி விசாகம், நினைவு நாளான தைமாதம் தேய்பிறை திரயோதசியில் சிறப்பு பூஜை நடக்கும்.

எப்படி செல்வது? மதுரை– சோழவந்தான் ரோட்டில் மேலக்கால் வழியில் 8 கி.மீ.,
விசேஷ நாட்கள்:ஆனி விசாகம், மார்கழி விசாகம், தை தேய்பிறை திரயோதசி திதி
நேரம்: காலை 05:00 - 08:00 மணி, மாலை 04:00 – இரவு 07:00 மணி
தொடர்புக்கு: 94878 26722, 0452 – 247 5238
அருகிலுள்ள தலம்: துவரிமான் ரங்கராஜப்பெருமாள் கோயில்.

நடனகோபால நாயகி சுவாமிகள்


 நடனகோபாலநாயகி சுவாமிகள், மதுரையில் 1843, ஜனவரி 9 (மார்கழி மிருகசீரிட நட்சத்திரம்) வியாழக்கிழமை அவதரித்தார். இவரது தந்தையார் ரங்கார்யர், தாய் லட்சுமிபாய். பெற்றோர் பிள்ளைக்கு ராமபத்ரன் என்று பெயரிட்டனர். பள்ளியில் படித்த காலத்தில் ஓம் என்ற மந்திரத்தின் பொருளைக் கேட்டு ஆசிரியர்களையே திகைக்கச் செய்தார். அவரது மனம் எப்போதும் இறைச் சிந்னையிலேயே இருந்தது. இளமையில் வணிகர் ஒருவரிடம் கணக்கெழுதும் பணியில் சேர்ந்தார். ஆனால், வணிகர் ராமபத்ரனின் இறைச்சிந்தனையைக் கண்டு வேலையை விட்டு வெளியேற்றினார். பின்னர் தன் வீட்டுத் தொழிலான நெசவுத்தொழிலைச் செய்தார். திடீரென்று ஒருநாள் வீட்டைவிட்டு கிளம்பி, திருப்பரங்குன்றத்தில் துறவியைப் போல யோகத்தில் ஆழ்ந்தார். 12 ஆண்டுகால தவத்திற்கு பின், பரமக்குடி நாகலிங்க அடிகளாரிடம் சதாநந்தர் என்று தீட்சாநாமம் பெற்றார். சித்தரைப் போல பல அற்புதங்களை நிகழ்த்தி மக்களிடம் பிரபலமானார்.ஒருமுறை மதுரை அருகில் உள்ள அழகர்கோவில் சுந்தராஜப்பெருமாளை தரிசித்தார். அன்றுமுதல் ஆழ்வார்களின் மீதும், நாலாயிரதிவ்ய பிரபந்தங்களின் மீதும் அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. நம்மாழ்வார் அவதரித்த ஆழ்வார் திருநகரிக்குச் சென்றார். அங்குள்ள ஆதிநாதசுவாமியை தரிசித்தார். அங்கே, நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாடல்களை வடபத்ராரீயர் என்ற பக்தர் பாடிக் கொண்டிருந்தார். அந்த வரிகள் சதாநந்தரின் மனதை கொள்ளை கொண்டது. அவர் அந்த பக்தரை சாஷ்டாங்கமாக பணிந்து தமக்கு வழிகாட்டும்படி கேட்டுக் கொண்டார். அந்த பக்தர், அவரைத் தன் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றார். விஷ்ணுவின் அம்சம் நிறைந்த சதா நந்தருக்கு, நடன கோபால் என்று பெயரிட்டார். ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம், கீதாபாஷ்யம், பிரம்மசூத்திர பாஷ்யம், பகவத்கீதை, விஷ்ணு புராணம், நாலாயிரதிவ்ய பிரபந்தம் ஆகியவற்றை அவரிடம் கற்று முடித்தார். தன்னை ஒரு பெண்ணாகவும், திருமாலை ஆணாகவும் கருதி ஹரிபக்தியில் ஆழ்ந்தார். பின், பல திவ்யதேசங்களுக்கு தீர்த்தயாத்திரை புறப்பட்டார். ஸ்ரீரங்க ரங்க நாதர் மீது பாடல்கள் பாடினார். அங்கிருந்த ஸ்ரீரங்கநாராயண ஜீயர் நடனகோபாலை நடனகோபால நாயகி என்று அழைத்தார். தம்முடைய வாழ்நாள் முடிய இருப்பதை முன்கூட்டியே உணர்ந்து, அழகர்கோவில் அருகிலுள்ள காதக்கிணறு என்னுமிடத்தில் தமக்கான பிருந்தா வனத்தை(சமாதி) அமைக்குமாறு கூறினார். 1914 ஜனவரி 8, வைகுண்ட ஏகாதசி நாளில்பகவான் ஹரி வந்து விட்டார் என்று சொல்லிக் கொண்டே மகாவிஷ்ணுவின் திருவடிகளில் இணைந்தார். நடனகோபால நாயகி சுவாமிகள் என்று பக்தர்களால் இன்று போற்றப்படுகிறார். இவர் பிரபந்தப்பாடல்கள், பக்திரச கீர்த்தனைகள், நாமாவளிகள், தமிழ் கீதகோவிந்தம் ஆகியவற்றை இயற்றியுள்ளார். ஸ்ரீமதே ராமானுஜா என்ற மந்திரம் ஜெபித்தால் மனத்தூய்மை உண்டாகும் என்கிறார் சுவாமிகள். ராமானுஜரின் உரைகளையும்,உபதேசங்களையும் படிக்கவேண்டும் என்று நம்மை வேண்டுகிறார். பிருந்தாவனக்கோயிலில் இவர் வழிபட்ட ருக்மணி, சத்யபாமா சமேத நடனகோபால கிருஷ்ணர் விக்ரகம் உள்ளது. இவர் பயன்படுத்திய ஆண்டாள் கொண்டை, துளசிமணிமாலை, பாதுகையை (காலணி) ஆகியவற்றை இங்கு தரிசிக்கலாம். இவரது அவதார தினம் டிசம்பர் 21, மார்கழி மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிருந்தாவனத்தில் கொண்டாடப்படுகிறது.

குரு பாடல்கள்

குரு பாடல்-1

மறைமிகு கலைநூல் வல்லோன்
வானவர்க்கு ஆசான் மந்திரி
நறைசொரி கற்பகப்பொன்
நாட்டினுக்கு அதிபதியாகி
நிறைதனம் சிவிகை மன்றல்
நீடு போகத்தை நல்கும்
இறையவன் குரு வியாழன்
இருமலர்ப்பாதம் போற்றி போற்றி!

குரு பாடல் 2

அன்றால நீழற்கீழ் அருமறைகள் தானருளி
நன்றாக வானவர் மாமுனிவர் நாடோறும்
நின்றார வேத்து நிறைகழலோன் புனைகொன்றைப்
பொன்றாது பாடிநம் பூவல்லி கொய்யாமோ

குரு பாடல் 3

ஆலின்கீழ் அறங்களெல்லாம் அன்றவர்க்கு அருள்செய்து
நூலின் கீழ் அவர்கட்கெல்லாம்
 நுண்பொருளாகி நின்று
காலின்கீழ் காலன்தன்னைக்
கடுகத்தான் பாய்ந்து பின்னும்
பாலின்கீழ் நெய்யு மானார்
பழனத்தெம் பரமனாரே.

குரு பாடல் 4

குணமிகு வியாழ குருபகவானே
மணமுடன் வாழ மகிழ்வுடன் அருள்வாய்
பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா
கிரக தோஷமின்றி காத்தருள்வாயே

குரு பாடல் 5

பெருநிறை செல்வம் மேன்மை
பெற்றிடும் சுகங்கள் யாவும்
வருநிறை மரபு நீடி வாய்க்கும் சந்ததி தழைக்க
குருநிறை ஆடை ரத்னம்தான் பெற அருளும் தேவ
குருநிறை வியாழன் பொற்றாள்
குரைகழல் தலைக் கொள்வோமே.

குரு பாடல் 6

ஆலநிழல் கீழ் இருப்பதுவும் ஆய்வதறம்
ஆலம் அமுது செய்வ தாடுவதீ- ஆலம்
துறையுடையான் ஆனை உரியுடையான் சோற்றுத்
துறையுடையான் சோராத சொல்லு

குரு பாடல் 7

வேத நூல் தர்ம சாஸ்திரம்
மேன்மையை அறிந்தோனாகி
சாதனையால் கற்பகத்
தனிநாட்டின் இறைவனாகி
சோதியாய் குருவுமாகி
சொர்க்கத்தை மண்ணில் நல்கும்
ஆதியாம் குருவே! நின்தாள்
அடைக்கலம் போற்றி! போற்றி!!

குரு பாடல் 8

கல்லாலின் புடையமர்ந்து நான்மறை
ஆறங்கமுதல் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை
இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல்
நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.

துரத்தும் பலி, இனிக்கும் தேன்

துரத்தும் _ புலி _ இனிக்கும் _ தேன்

இதுதான் வாழ்க்கை! ஒரு காட்டில் ஒரு மனிதனை ஒரு புலி துரத்தியது வழியெங்கும் கற்களும், முற்களும் இருந்தாலும், சமாளித்து ஓடிக் கொண்டிருந்தான் தொடர்ந்து ஓடியவன் ஒரு மலைச் சரிவில் விழுந்தான்.
நல்லவேளையாக அந்தச் சரிவில் இருந்த ஒரு மரத்தின் வேர்களை கெட்டியாக பிடித்துக் கொண்டு தொங்கினான் தொங்கிக் கொண்டே கீழே குனிந்து பார்த்தால், சரிவின் கீழே ஒரு ஆறு ஓடியது அந்த ஆற்றில் ஒரு முதலை வாயைப் பிளந்து கொண்டு இவன் கீழே விழுவதற்காகக் காத்திருந்தது.

 
மேலே ஆற்றங்கரையில், புலி உறுமிக் கொண்டு காத்திருந்தது அதே நேரத்தில் அந்த வேர்களை ஒரு வெள்ளை எலியும், ஒரு கருப்பு எலியும் ஆளுக்கொரு பக்கமாக கொறித்துக் கொண்டிருந்தன அப்போது பார்த்து அவன் தலைக்கு மேலே இருந்த ஒரு தேன் கூட்டிலிருந்து தேன் சிந்தியது இவன் அந்த தேனை நாக்கில் ஏந்தி சப்பினான் நீங்கள் வாழும் வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது.

கீழே வாயைப் பிளந்து கொண்டு காத்திருக்கும் முதலைதான் மரணம் புலிதான் வாழ்க்கை  கருப்பு, வெள்ளை எலிகள்தான் இரவும், பகலும். எந்த நேரத்திலும் அந்த வேர்கள் அறுந்து நீங்கள் முதலைக்கு உணவாகலாம் அந்த நேரத்திலும் ஒரு சொட்டு தேன் உங்களை சந்தோஷப்படுத்துகிறது  அந்த சந்தோஷத்தில் நீங்கள் மரணத்தை மறந்துவிடுகிறீர்கள் அனைத்தும் நன்றாக இருப்பதாக எண்ணிக் கொள்கிறீர்கள்.  

   ஆனால் அது உண்மையல்ல இது முட்டாள்தனம் என்று எப்போது நீங்கள் அறிகிறீர்களோ, அப்போது ஆன்மீகம் உங்களுக்குள் இயல்பாகவே வரும்.

சிவ ஓம் நமசிவாய 🙏🌺🙏

திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

நரசிம்ம ஜெயந்தி

நலம் பல தந்து நல்வழிகாட்டும் நரசிம்ம ஜெயந்தி!

பெருமாளின் அவதாரங்களில் இது 4வது அவதாரமாகும்: அசுரன் இரண்யகசிபு, நாராயணனே பரம்பொருள் என்று வணங்கி வந்த தன் பிள்ளை பிரகலாதனைத் துன்புறுத்தி வந்தான். பிரகலாதனுக்காக தூணில் திருமால் சிங்கவடிவத்தில் வெளிப்பட்டு அரக்கனைக் கொன்றார். ஸ்ரீஹரி எடுத்த வராக அவதாரத்தில் தன்னுடைய உடன்பிறப்பாகிய ஹிரண்யாட்சனைக் கொன்று விட்டார் என்று கேட்டதும் இரண்யகசிபு துயரம் அடைந்தான். அதனால் அவனுக்குப் பரந்தாமன் மீது சொல்ல முடியாத கோபம் ஏற்பட்டது. உடனே சூலத்தைத் தன் கையில் எடுத்தான். தன் அரக்கர் குலக் கூட்டத்தைக் கூட்டி அவர்களிடம், அரக்கர் குலக் கொழுந்துகளே! நீங்கள் என் கட்டளைக்கு கீழ்ப்படிந்து உடனே செயலாற்றுங்கள். எனது தமையனின் இறப்பிற்கு காரணமான ஸ்ரீஹரியையும், தேவர்கள் அனைவரையும் அழிக்க வேண்டும். நீங்கள் உடனே புறப்பட்டுப்போய் அந்தணர்கள், தேவர்கள், பசுக்கள் முதலியவற்றை துன்புறுத்தி கொல்லுங்கள் என்றான். இரண்யகசிபுவின் கட்டளையை ஏற்ற அரக்கர்கள் நோன்பு, விரம் நோற்ற பெரியோர்களையும், அந்தணர்களையும் கொன்று குவித்தனர். யாராலும் வெல்வதற்கரிய வீரத்தைத் தான் பெற்றால் அன்றி ஸ்ரீஹரிஹரியை ஒழிக்க முடியாது என உணர்ந்தான். அழியாத ஆயுளையும் மூன்று உலகங்களையும் அடக்கி ஆளும் வல்லமையையும் வேண்டி பரமனை நோக்கித் தவம் செய்யப் புறப்பட்டான். மந்திரமலைச் சாரலுக்கு வந்தான். கால் கட்டை விரலைத் தரையிலே ஊன்றினான். கைகளை மேலே தூக்கினான். விண்ணுலகை நோக்கி நின்றான். ஊழிக்காலத்தில் காணும் சூரியனுடைய ஒளிக்கிரணங்களைப் போல செஞ்சடை விரியக் காட்சி அளித்தான்.

உக்கிரமான தவத்தில் பிரம்மதேவனை நோக்கி ஏகாக்ரசித்தத்துடன் ஆழ்ந்தான். நாட்கள் நகர்ந்தன. வருடங்கள் பல ஓடின. இவனுடைய தவத்தால் எழுந்த யோகாக்னியின் தகிப்பை தாங்கமுடியாமல் சகல ஜீவராசிகளும் வருந்தின. தலையிலிருந்து மேகக்கூட்டம் போன்ற புகைமண்டலம் எழுந்தது. மூன்று உலகத்தையும் அது சூழ்ந்தது. ஆறுகளும், சமுத்திரங்களும் கொந்தளித்தன. திசைகள் எங்கும் ஒரே தீப்பொறி கக்கி அனல் எரிந்தது. தேவர்கள் அவனுடைய தவபலத்தினால் தாங்கள் பஸ்பமாகி விடுவோமோ என பயந்தனர். தேவர்கள் உடனே பிரம்மாவிடம் முறையிடச் சென்றனர். பிரம்மாவிடம், தேவ தேவே! உங்கள் பதவிக்கே ஆபத்து தரும் வகையில் இரண்யகசிபு தவம் மேற்கொண்டு இருக்கிறான். அவனது தவத்தால் உண்டாகும் அக்னியை எங்களால் தாங்கமுடியவில்லை. உடனே அவனது தவத்தை நிறுத்த ஏதாவது செய்யுங்கள் என்றனர். தேவர்கள் சொன்னதைக் கேட்ட பிரம்மா மந்திரமலைச் சாரலுக்கு வந்தார். அங்கே இரண்யகசிபு இருந்த இடத்தில் புற்றும், புதர்களும் மூடிக்கிடந்தன. எறும்பு அரித்த தோலும் சதையும் மிஞ்சி எலும்புக் கூடாக இருந்தான். அவனை இந்நிலையில் பார்த்து, இரண்யா! உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்! என்றார். அவன் மீது தன் கமண்டல தீர்த்தத்தை தெளித்தார். கட்டையில் மூண்ட தீயெனக் கசிபு வெளி வந்தான். உருக்கி வார்த்த பொன்மேனியுடன் பிரம்ம தேவனை வணங்கினான். லோக பிதாவே! உங்களுடைய சிருஷ்டி எதனாலும் எனக்கு மரணம் சம்பவிக்கக் கூடாது. அதுமட்டுமல்ல, எனக்கு உள்ளும் புறமும், பகலிலும் இரவிலும், விண்ணிலும் பூமியிலும், மரணம் ஏற்படக்கூடாது. எந்தவித ஆயுதங்களாலும் பிராணிகள், மனிதர், தேவர், அசுரர்களாலும் எனக்கு சாவு வரக்கூடாது. தேவர்களாலும் ஜெயிக்க முடியாதபடி நல்ல வல்லமையை, வீரத்தை எனக்குத் தாங்கள் தந்தருள வேண்டும். எனக்கு நிகர் நானாகத்தான் இருக்க வேண்டும். மூவுலகத்தையும் நானே கட்டி ஆள வேண்டும். லோக பாலகருள் தேவரீராகிய தாங்கள் அனுபவிக்கும் பெருமையை நான் அடைய வேண்டும்.

யோகம், சமாதி, தவம் முதலியவற்றால் ஏற்படும் சக்திகள் அனைத்தும் எனக்கு வரச்செய்ய வேண்டும் என்று வரம் கேட்டான். பிரம்மாவும் வேறு வழியின்றி அவன் கேட்ட வரத்தைக் கொடுத்து விட்டு மறைந்தார். இரண்யகசிபுவுக்கு இப்படி ஒரு வரத்தை பிரம்மா கொடுத்துவிட்டாரே என தேவர்கள் அனைவரும் வருந்தினர். வரத்தைப் பெற்றுத் திரும்பிய இரண்யகசிபு தன் எண்ணத்தை உடனே நிறைவேற்றிக் கொண்டான். தேவலோகம் சென்று தேவேந்திரனை விரட்டினான். சொர்க்க லோகத்தையும் தன் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்தான். தேவேந்திர சிம்மாசனம் ஏறி அமராவதி பட்டினத்து அரண்மனையில் வாசம் செய்தான். வேள்விகள் மூலம் வரும் அவிர்பாகம் முழுவதையும் அவனே கிரகித்துக் கொண்டான்.  மூவுலகையும் பல்லாண்டுகள் கொடுங்கோல் ஆட்சி செய்தான். அவனால் இழைக்கப்பட்ட தீமைகள், கொடுமைகளை பெருமாளிடம் சென்று தேவர்கள் முறையிட்டார்கள். காலம் காலமாக அனுபவித்த தேவர்களுடைய தியானத்தினால் ஸ்ரீமந் நாராயணன், அவர்களுக்கு அனுக்கிரஹம் செய்தார். விரைவிலேயே அவனை வதைப்பதாக அவர்களுக்கு அசரீரி மூலம் அறிவித்தார். இந்த அரக்கர்களின் அரக்கனாகிய இரண்யகசிபுவின் கொடுங்கோலாட்சியை நான் அறிவேன். அதற்கு ஆவன செய்கிறேன். கொஞ்சம் பொறுத்திருங்கள். எவனுக்கு தேவர்கள், பசுக்கள், வேதங்கள், வேதியர் ஆகியோர் மீதும் என்னிடமும் பகைமை தலைதூக்குமோ, அப்போதே அவன் அழிந்து போவான். இந்த அரக்க ராஜன் தன் மகன் பிரகலாதனைத் துன்புறுத்துவான். அப்போது நான் அவனைக் கொல்லச் சித்தமாவேன் என்றார். இரண்யகசிபுவிற்கு கிலாதன், பிரகலாதன், அனுகிலாதன், சமகிலாதன் என நான்கு புதல்வர்கள் பிறந்தனர். அவர்களில் பிரகலாதன் மட்டும் சிறந்த விஷ்ணு பக்தனாக எப்பொழுதும் ஸ்ரீமந் நாராயணனின் பெயரையே உச்சரித்துக் கொண்டிருந்தான்.

அசுரகுரு சுக்ராச்சாரியாருக்கு சண்டன், அமர்க்கன் என இரண்டு பிள்ளைகள். இரண்யகசிபு அவர்களைத் தன் புதல்வர்களுக்கும் மற்றும் அரசியல் அதிகாரிகளுடைய குமாரர்களுக்கும் ஆசிரியராக இருந்து பணியாற்றச் செய்தான். ஒரு நாள் கசிபு தன் செல்வகுமாரனை மடியில் அமர்த்தி கொஞ்சி மகிழ்ந்தான். அது சமயம் குமாரா! நீ இத்தனை நாளும் என்ன கற்றாய்? அவற்றை எனக்குச் சொல் என்றான். அப்பா நான் கற்ற அனைத்தையும் எப்படிக் கூறுவது, ஏதாவது ஒரு கேள்வி கேளுங்கள் நான் பதில் கூறுகிறேன் என்றான். கசிபும் அவ்வாறே மனிதனுக்கு நலம் தருவது எது? என்று வினவினான். எவர் ஆசை, பற்று முதலியவைகளை அறவே விட்டு விட்டு அவைகள் எல்லாம் வெறும் மாயை, மாறாக ஸ்ரீஹரியே மெய்யான பொருள், அவர் திருவடியை சரணடைபவர்கள் பாக்கியம் பெற்றவர்கள் என்றான் பிரகலாதன். பரமவிரோதியான ஸ்ரீஹரியின் பெயரை உச்சரிக்கிறானே என சிறுவனை கடிந்து கொண்டு, அவனுக்கு பாடம் கற்பித்த ஆசிரியரை வரச்சொல்லுங்கள் என்றான். நாங்கள் பலமுறை என்ன சொல்லிக் கொடுத்தாலும் காதில் போட்டுக் கொள்ளாமல், எல்லாம் ஸ்ரீஹரியின் செயல் என்று எங்கள் வார்த்தைகளை உதாசீனம் செய்தான். இதைத் தங்களிடம் எப்படிக் கூறுவது என்றே இத்தனை காலம் நாங்கள் தயங்கினோம் என்றார்கள். ஏதோ அந்தணர்கள் இவனுக்கு தவறாக கற்றுக் கொடுத்து இருக்கிறார்கள். மற்றபடி சின்னஞ்சிறு பிராயத்தினனாகிய இவனுக்கு இது தெரிய நியாயமில்லை. ஆகவே யாரும் அணுகாதபடி, இனித் தனிமையில் அமர்த்தி பாடம் கற்பியுங்கள் என்று அவன் ஆணையிட்டான். பின்பு பிரகலாதனின் அறிவுக்கூர்மையை பார்த்து அவனிடம் ஆசிரியர்கள்,  அப்பனே பிரகலாதா! மற்றவர் யாருக்கும் இல்லாத இந்த மாறான புத்தியை உனக்கு யார் கற்பித்தது? இல்லை உனக்கு தானாக வந்ததா? உண்மையைச் சொல் என்றனர். நான் என்றும், நீ என்றும் பிரித்துப் பார்க்கும் புத்தி வெறும் மாயை. அவன் அருளால் பேதம் என்பது வெறும் பொய், அவனே மெய் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். எனக்குக் கற்பித்தவன், கற்ற பொருள், கற்றதின் பயன் எல்லாம் அந்த ஸ்ரீஹரியே அவரைத் தவிர வேறில்லை! என்றான் பிரகலாதன். பிறகு அறம், பொருள், இன்பம் பற்றிப் பாடம் சொல்லிக் கொடுத்து விட்டு அவனது தந்தையிடம் அழைத்துச் சென்றனர். மீண்டும் கசிபு, பிரகலாதனிடம் பிரகலாதா! நீ படித்ததில் மிகவும் சிறப்பான ஒன்றைச் சொல் கேட்கிறேன்! என்றான். அதற்கு பிரகலாதன் ஹரியின் கதைகளைக் கேட்க வேண்டும், அவன் லீலைகளை வாயாரப் பேச வேண்டும், ஹரி உருவத்தை நினைக்க வேண்டும், ஹரியின் சேவையே உத்தமம்.

ஹரி பூஜையே சிறந்தது. காலம் முழுவதும் ஹரியைப் பின்பற்ற வேண்டும் என்று ஹரியைப் புகழ்ந்து பேசினான். அந்தணர்களே! நீங்களே ஆசிரியர்களாக இருந்து இதைத் தான் கற்றுக் கொடுத்தீர்களா? என்று கடுமையான குரலில் கசிபு கர்ஜித்தான். ஆசிரியர்கள் நடுநடுங்கி, அரசே! நாங்கள் இதைக் கற்றுக் கொடுக்கவில்லை என்றனர். உடனே குருமுகமாக அன்றி இதை எல்லாம் நீ யாரிடம் கற்றாய்? என்றான் கசிபு. அதற்கு பிரகலாதன், தந்தையே உலக இன்பங்களில் ஆசைப்பட்டு உழல்பவர்களுக்கு யார் சொல்லியும் பக்தி வராது. தானாகவும் பக்தி ஏற்படாது. ஆனால் முற்றிலும் துறந்த தொண்டர்களுக்கே இறைவனை அறியும் பாக்கியம் கிடைக்கும் என்றான். இப்படி ஹரியின் நாமத்தையே உச்சரிக்கும் இந்தப் பிள்ளை எனக்குத் தேவையில்லை, இவனைக் கொன்றுவிடுங்கள் என்று ஆணையிட்டான். அவனை எப்படி எல்லாமோ கொல்ல முயன்றும் இரண்யனின் ஆட்களால் பிரகலாதனை ஒன்றும் செய்யமுடியவில்லை. உடனே தன் குலகுரு சுக்ராச்சாரியாரிடம் இதைப் பற்றிக் கேட்டே ஆகவேண்டும் என்ற முடிவோடு சிறுவனை ஆசிரியர்களிடம் ஒப்படைத்து விட்டு சுக்கிராச்சாரியாரிடம் சென்றான் இரண்யன். ஆசிரியர்கள் மிகவும் கண்டிப்புடன் அவனுக்கு அசுர தர்மங்களை உபதேசிக்க முயற்சித்தனர். அவனோ தன் சக மாணவர்களுடன் விளையாடச் சென்றான். பிரகலாதன் தன் சகாக்களுக்கு ஸ்ரீஹரியின் பெருமையையும், புகழையும் எடுத்துரைத்துக் கொண்டிருந்தான்.  அப்போது அந்த மாணவர்கள் பிரகலாதா! குருவிடம் உபதேசம் பெறாமல் இப்படி ஞானம் பேசும் அறிவு உனக்கு எப்படி வந்தது? என்று வினவினர். தோழர்களே! என் தந்தை பிரம்மாவைக் குறித்து அதீத பராக்கிரமும் அழியா வாழ்வும் வளமும் தேடி மகேந்திரகிரிச்சாரலில் உக்ர தவம் இயற்றினார். அது சமயம் அவருக்குப் பயந்து இருந்த தேவர்கள் தைரியத்தோடு தத்தம் இருப்பிடம் வந்து அசுரர்களை தாக்கினர். அசுரத்தலைவராகிய என் தந்தை இல்லாத காரணத்தால் அசுரர்கள் தேவர்களிடம் தோற்று ஓடினார்கள். இந்திரனோ அசுரேந்திர பட்டினத்தை சூறையாடினான். அது சமயம் கர்ப்பவதியாகிய என் தாயாரைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனான். வழியில் நாரத மகரிஷி அவனை சந்திக்க நேர்ந்தது. இந்திரனே! நீ கர்ப்பவதியான பெண்ணை, அதிலும் நிராதரவான ஒரு பெண்ணை இப்படி வருத்துவது தகாது. மேலும் இவர் பிறர் ஒருவனுடைய மனைவி அல்லவா? என்று நாரதர் இந்திரனைக் கேட்டார். நாரதரை இந்திரன் வணங்கி, மகரிஷியே! அசுர மகிஷியான இவளுடைய கர்ப்பத்தில் தேவர்களை வதைக்கும் சிசு உருபெற்று வருகிறது. இவளுக்கு நான் தற்சமயம் எந்தக்கேடும் செய்யப் போவது இல்லை.

அவள் கருத்தரித்த உடன் எனது எதிரியை முளையிலேயே கிள்ளி விட்டு இவளைப் பாதுகாப்புடன் அனுப்பி வைப்பேன் என்றான்.  இந்திரனே! நீ நினைப்பது முற்றிலும் தவறு. இவள் கருவறையில் வளரும் சிசு அசுரகுலப் பிறப்பாக இருந்தாலும் அந்த சிசு சிறந்த பாகவத உத்தமனாக விளங்கப் போகிறான். ஸ்ரீஹரியிடம் அளவற்ற பக்தி கொண்டு அனைவராலும் போற்றப்படுவான். அவனால் உனக்கோ, தேவர்குலத்திற்கோ எந்தவிதத் தீங்கும் ஏற்படாது என்றார் நாரதர். இதைக் கேள்விப்பட்ட இந்திரன் மகிழ்ச்சி அடைந்தான். மேலும் நாரதரே! தங்கள் கருத்துப்படி இவளை பாதுகாப்புடன் அவளது இருப்பிடத்திற்கு அனுப்பி விடுகிறேன் என்று கூறி அவளது காலடியை தொட்டு வணங்கினான். அதன் பிறகு என் தாயாரை நாரதர் தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று ரட்சித்தார். என் தாய் கர்ப்பவதியாக இருந்ததால் அவளுக்கு தர்மங்களை உபதேசம் செய்தார். என் தந்தை தவம் முடிந்து திரும்பியதும் அவளை அனுப்பி வைத்தார். அச்சமயம் கேட்ட உபதேசங்களை என் தாயார், தந்தையின் மீதுள்ள பற்றுதலால் மறந்துவிட்டாள். ஆனால் கருவிலிருந்த நான் அவ்வுபதேசங்களை கேட்டேன். அதை மறக்கவில்லை. எனவே தான் நான் பிறக்கும்போதே ஸ்ரீமந் நாராயணனிடம் அளவற்ற பக்தியுடன் பிறந்தேன். எனவே தோழர்களே பிறப்பு, உருவாதல், வளர்தல், இளைத்தல், நசித்தல், இறப்பு முதலிய ஆறும் இந்த உடம்புக்கு மட்டும் உரியவை. ஆத்மாவிற்கு அல்ல என்பதை நீங்கள் மட்டுமே உணர வேண்டும். நாம் நம் பக்தியினால் மட்டுமே நாராயணனை சந்தோஷம் அடையச் செய்ய முடியும். தீயகுணங்களை விட்டுவிட்டு நாள்தோறும் ஹரிபஜனை செய்ய வேண்டும் என்று கூறினான். இப்படி பாடம் கேட்க வந்த பிள்ளைகளிடம் பிரகலாதன் ஹரி பஜனை செய்வதை அறிந்த ஆசிரியர்கள் இரண்யனிடம் சென்று கூறிவிட்டனர். கடும்கோபமடைந்த இரணியன் பிரகலாதனை இழுத்துக் கொண்டு வரும்படி ஆணையிட்டான். பிரகலாதன் வந்ததும் இடி முழங்குவது போல் கர்ஜித்தான்: மூன்று உலகங்களும் என் பெயர் சொன்னாலே நடுநடுங்குகிறது. சகல லோகங்களும் எனக்குள் அடங்கி கிடக்கின்றன. தேவாதி தேவர்கள் எல்லாம் என்னிடம் மதிப்பு வைத்து என் பேச்சைக் கேட்டு நடக்கிறார்கள். அப்படி இருக்க பரமவிரோதியான ஸ்ரீஹரி என்னை விட எந்த விதத்தில் மேலானவன் ஆகிவிட்டான்? என்றான். அதற்கு பிரகலாதன் தந்தையை தலை தாழ்த்தி வணங்கியவாறு, தந்தையே! நீங்கள் லோகாதிபதி தான்.

தேவர்களும் உங்களுக்குள் அடக்கம்தான். ஆனால் ஸ்ரீஹரி ஒருவரே அனைத்து ஜீவராசிகளிக்கும் ஆதியானவர். அவரே சிருஷ்டி, திதி, சம்ஹாரம் ஆகிய மூன்று தொழிலுக்கும் அதிபதி. அப்படியிருக்க அவரை விட தாங்கள் எந்த விதத்தில் உயர்ந்தவர் என்று சொல்ல முடியும். இதைக் கேட்டு கோபமடைந்த இரண்யன், மடப்பதரே! எங்கும் நிறைந்திருக்கும் உன் ஹரி இப்பொழுது எங்கே இருக்கிறார்? என்று வினவினான். தந்தையே! அவர் சர்வவியாபி. அவர் இல்லாத இடமேயில்லை என்றான் பிரகலாதன். இதைக்கேட்டு கசிபு கடகடவென்று சிரித்தான். டேய் பிரகலாதா! உன்னால் பிரலாபிக்கப்படும் அந்த ஹரி எங்கும் இருக்கிறான் என்றாய் சரி. இப்பொழுது சொல் இதோ என் எதிரே இருக்கும் ஸ்தம்பத்தில் இருக்கிறானா? இல்லையா?  அதைப் பார்ப்போம். இப்போதே நான் உன்னை தலை வேறாகவும், உடல் வேறாகவும் போகும்படி என் உடைவாளால் வெட்டி எறியப் போகிறேன். நீ சரண்புகுந்த அந்த ஹரிநாராயணன் உன்னை வந்து காப்பாற்றட்டும், என்று பிரகலாதனை மிரட்டினான். தனது சிம்மாசனத்திலிருந்து இறங்கி வந்து எதிரே இருந்த அந்த தூணைக் குத்திவிட்டு தன் உடைவாளை ஓங்கியவாறு நின்றான். அப்போது அண்டமே பிளந்து விட்டது போன்ற ஓர் பேரரவம் அந்தத் தூணில் எழுந்தது. அவ்வோசை கேட்டு பிரம்ம தேவாதியர், அண்டங்களே அழிந்தது போல அஞ்சி நடுங்கினர். தன் மகனை வெட்டும் வெறியில் நின்ற அசுரேந்திரனுக்கு அப்பேரொலியின் காரணம் தெரியவில்லை. தன்னிடம் அளவிலா பக்திகொண்ட பாலகன் பிரகலாதனின் சொல்லை மெய்யாக்க பரந்தாமன் அந்தத் தூணைப் பிளந்து வெளிவந்தார். அவரது தோற்றத்தைக் கண்ட இரண்யகசிபு அதிர்ந்தான். இது என்ன தோற்றம்? இது மனித உருவிலுமில்லை, மிருக உருவிலுமில்லை. மனித சிங்கம் போல் தெரிகிறதே என நினைத்து திகைத்தான். நரசிம்ம மூர்த்தியாக அவதாரம் எடுத்த ஸ்ரீமந் நாராயணன் தோற்றத்தைக் கண்ட இரண்யன் அச்சமுற்றான். அந்த நரசிம்ம மூர்த்தியின் தோற்றத்தை உற்று கவனித்தான். விண்ணை தொடுவது போன்ற நீண்டு வளர்ந்த நெடுமேனி, பிடறித் தலை மயிர்களால் தடித்த முகம், வீங்கிய கழுத்து, முகத்தில் உருக்கி வார்த்த பொன் போன்ற கண்கள், பெருமலைக் குலை போல திறந்திருக்கும் வாய், அதில் கோரைப் பற்கள், கூர்ந்த வாள் போல் தொங்கும் நாக்கு, தூக்கி நின்ற காதுகள், விரிந்த மார்பு, குறுகிய இடை, கூரிய ஆயுதம் போன்ற நீண்ட நகங்களுடன் கூடிய கைகள். யாரும் அருகே போகப் பயப்படும்படியான தோற்றம்.

ஸ்ரீஹரியின் தோற்றத்தைக் கண்ட அசுரர்கள் நாலாபுறமும் ஓடினர். இதைக் கண்ட இரண்யன் தன்னைக் கொல்ல ஸ்ரீஹரி எடுத்த அவதாரமே இது என உணர்ந்தான். தன் கதையை கையில் ஏந்தி நரசிம்மரை எதிர்கொண்டு மோதினான். எனினும் கதையால் தன்னைப் புடைக்க வந்த கசிபுவை கைகளால் நரசிம்மர் பற்றினார். அவனைத் தன் தொடை மீது வைத்துக் கொண்டு கூர்ந்த தன் நீண்ட நகங்களால் இரண்யகசிபு உடலைக் கீறிக் கிழித்தார். ரத்தம் பீறிட்டுப் பாய்ந்தது. நரசிம்மருடைய முகம் அக்னி பிளம்பாக காணப்பட்டது. அவர் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தாலும் அவரது உக்கிரமான கோபம் தணியவில்லை. நரசிம்ம மூர்த்தியின் அகோரத் தோற்றம் கண்டு அவரிடம் நெருங்கவே அனைவரும் அஞ்சினர். ஒவ்வொருவரும் அவருக்கு வந்தனம் செய்தனர். ஸ்ரீஹரியின் சீற்றம் குறையாததால் தேவர்கள் ஸ்ரீதேவியை அங்கு வரும்படி கேட்டுக் கொண்டார்கள். அன்னையும் வந்து அடங்காத கோபத்தைக் கண்டு அஞ்சினாள். அந்நேரம் பிரகலாதனிடம் பிரம்மா சொன்னார். அப்பா! பிரகலாதா! ஸ்ரீஹரிக்கு உன் தந்தை மீது கொண்ட கோபம் இன்னும் தணிந்ததாகத் தெரியவில்லை. நீ அவரருகே சென்று சாந்தப்படுத்து! என்றார். அவனும் அவ்வாறே மெல்ல மெல்ல நடந்து நரசிம்ம மூர்த்தியிடம் சென்றான். கை கூப்பினான். அவர் திருவடி தொட்டு தரையில் விழுந்து வணங்கினான். தன் பாதங்களைப் பிடித்த பிரகலாதனை பார்த்து ஸ்ரீஹரி மனம் உருகினார். அவன் தலை மீது தன் தாமரைக்கரம் வைத்து வாழ்த்தினார். பெருமான் திருக்கரம் தீண்டியதும் அவனுக்கு மின்னல் என மெய்யறிவு பிறந்தது. மயிர் கூச்செரியத் தன் மனம் கசிந்து கண்ணீர் மல்கித் துதிபாடினான். அதுபோல பிரகலாதன் தான் அடைய விரும்பும் பதவியை அனைவருக்கும் அனுக்கிரகிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதை அனைவரும் பாராட்டினர். நரசிம்மரின் மனம் மகிழ்ந்தது. துதித்து நின்ற பாலகனிடம் உனக்கு வேண்டும் வரம் கேள் என்றார். அவனோ, என் மனதில் எந்தவித கோரிக்கையும் எழாமல் இருக்கும்படி தாங்கள் திருவருள் புரிய வேண்டும் என வேண்டினான். மனம் மகிழ்ந்து மாதவன், பிரகலாதனை அசுரேந்திரத்திற்கு அரசனாக இருக்கும்படி அனுக்கிரகித்தார். மேலும், நீ பிறந்த புண்ணியம் உன் தகப்பனோடு இருப்பத்தொரு மூதாதையரும் கடைத்தேறினர் என்று அருளிச் செய்தார். பிரகலாதன் தந்தைக்கு செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளைச் செய்தான். பிரம்மாதி தேவர்கள் முன்னிலையில் முனிவர்கள் ஆசியுடன் சுக்கிராச்சாரியார் பிரகலாதனை அசுரேந்திரனாக முடி சூட்டினார்.

நரசிம்ம ஜெயந்தி அன்று நரசிம்ம மூர்த்தியை வழிபாடு செய்பவர்கள் தம் பகைவர்களை எளிதில் வெல்ல முடியும்.


சனி தோஷம்

சனி தோஷத்தை நிவர்த்தி செய்யும் நவபாஷாண பைரவர் பற்றிய பதிவு...

சிவகங்கை மாவட்டம் பெரிச்சிகோவில் என்ற ஊரில் அமைந்துள்ளது, சுகந்தவனேஸ்வரர் திருக்கோவில். மூலவர் பெயர் சுகந்தவனேஸ்வரர், உற்சவரின் திருநாமம் சோமாஸ்கந்தர் என்பதாகும். அம்பாளின் திருநாமம் சமீபவல்லி.

இந்த ஆலயத்தில் வன்னி மரம் தல விருட்சமாக இருக்கிறது. இங்குள்ள பைரவர் தன்னுடைய எட்டு கரங்களிலும் ஆயுதங்கள் மற்றும் கபால மாலை ஏந்தி காட்சி தருகிறார். அவருக்கு அருகில் மூன்று பேர் வணங்கிய நிலையில் உள்ளனர். அதோடு பைரவரின் நாய் வாகனத்தைப் பிடித்தபடி, பாலதேவர் அருள்கிறார்.

பவுர்ணமி தோறும் மாலை வேளையில் இந்த பைரவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. காசி பைரவர் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். இந்த சிலை நவபாஷாணத்தால் ஆனது என்றும், இதனை போகர் சித்தர் செய்ததாகவும் சொல்கிறார்கள்.

மேலும் பழனியில் உள்ள நவபாஷாண முருகன் சிலையை செய்வதற்கு முன்பாகவே, இந்த பைரவர் சிலையை போகர் செய்ததாகவும் செவிவழிச் செய்தி ஒன்று உள்ளது.‌ இந்த நவபாஷாண பைரவரின் மீது அதிர்வுகள் அதிகம் என்பதால், இவருக்கு அணிவிக்கப்படும் மலர் மாலைகள், படைக்கப்படும் வடைமாலை உள்ளிட்ட நைவேத்தியங்கள் எதுவும் பக்தர்களுக்கு வழங்கப்படுவதில்லை.

சன்னிதியின் கூரை மீது போடப்படும் வடைகளை, பறவைகள் கூட சாப்பிடுவதில்லை. பைரவருக்கு அபிஷேகிக்கப்படும் தீர்த்தம் கூட, பக்தர்கள் தொட முடியாதபடி கோவிலுக்கு வெளியே விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பைரவருக்கு இரண்டு முகங்கள் உண்டு என்கிறார்கள். பின்புற முகத்தை மனிதர்களால் காண முடியாது. அந்த முகத்தால், வன்னி மரத்தின் அடியில் வீற்றிருக்கும் சனீஸ்வரருக்கு மட்டும் காட்சி தருவதாக ஐதீகம்.

இவரை ‘ஆண்டபிள்ளை நாயனார்’ என்றும் அழைக்கிறார்கள். இவரை வழிபாடு செய்தால் சனி தோஷ நிவர்த்தி, பித்ரு சாபம், ஸ்திரீ தோஷம், சகல பாபம், நீண்டகால நோய்கள் நீங்கும். அஷ்டமா சித்திகள் கிடைக்கும்.