JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
ஞாயிறு, 3 ஜனவரி, 2021
அருள் மிகு பெரியநாயகி உடனாய பாடலீசுவரர் திருக்கோவில் திருப்பாதிரிப்புலியூர் {பகுதி – 2}
அருள் மிகு பெரியநாயகி உடனாய பாடலீசுவரர் திருக்கோவில் திருப்பாதிரிப்புலியூர் {பகுதி – 2}
அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஓம் தமிழ் நாள்காட்டி அன்பர்களே தன்நிகரற்ற தனிச்சிறப்பு வாய்ந்த திருப்பாதிரிப்புலியூர் திருத்தலத்தின் தெய்வங்களான அருள்மிகு பெரியநாயகி உடனாய பாடலீசுவரர் சுவாமி தோன்றிய வரலாறையும் அத்தலத்தின் சிறப்புகள் சிலவற்றையும் அறிந்து அனுபவித்தோம்.ஆண்டவர் அடியவர்களுக்கு செய்த அற்புத வரலாற்றையும் மகிமைகளையும் இனி காண்போம்.
ஞானசம்பந்தர் வழிபாடு:சமயக் குரவர்களில் முதன்மையானவராக போற்றப்படும் திருஞானசம்பந்தர் இத்தல இறைவன் மீது தேவாரப் பதிகம் பாடியுள்ளார்.திருஞானசம்பந்தர் இரண்டாம் திருமுறை பகுதியில் பாடல் – 1311ல் பாடியுள்ளார்.
முன்னநின்ற முடக்கான் முயற்கருள் செய்துநீள்
புன்னைநின்று கமழ்பா திரிப்புலி யூருளான்
தன்னைநின்று வணங்குந் தனைத்தவ மில்லிகள்
பின்னைநின்ற பிணியாக் கையைப்பெறு வார்களே
(திருஞானசம்பந்தர்)
மாணிக்கவாசகர் வழிபாடு:மாணிக்கவாசகப் பெருமான் இத்தலத்துப் பெருமானை வழிபட தில்லையிலிருந்து வந்தபோது திருப்பாதிரிப்புலியூருக்கு தென்பால் ஓடிக்கொண்டிருந்த கெடிலம் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் மாணிக்கவாசகப் பெருமான் துயருற்றதை அறிந்த பெருமானார் நதியை நகருக்கு வடதிசையாகச் செல்லுமாறு திருப்பி விட்டு, தனது பக்தரான மாணிக்கவாசகர் தன்னை வழிபட அருள்பாலித்தாக தல வரலாறு கூறுகிறது.
அப்பர் வழிபாடு:திருவதிகை வீரட்டானேசுவரர் இறைவனுக்கு திருத்தொண்டாற்றி வந்தவர் அப்பர் பெருமானின்
(திருநாவுக்கரசர்)தமைக்கையார் திலகவதியார் ஆவார்.அப்பர் பெருமான் சமண சமயத்தைத் தழுவி தருமசேனர் என்ற பெயருடன் அச்சமயத்திற்கு தொண்டாற்றி வந்தார். தனது சகோதரன் பிற சமயம் தழுவியமைக்காக திலகவதியார் மிகவும் வருத்தமுற்றிருந்தார்.தனது சகோதரன் சைவ சமயம் திரும்ப இறைவன் அருள்புரிய வேண்டுமென்று வேண்டிக்கொண்டிருந்தார்.அதற்கு மனமிறங்கிய வீரட்டானத்து இறைவன் சூலை நோயை(வாயிற்று வழியை) உண்டாக்கினார்.இந்நிலையில் அப்பர் பெருமான் சூலை நோயால் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் சமண சமயக் குருமார்களால் அவரைக் குணப்படுத்த முடியவில்லை என்றும் அறிந்த திலகவதியார் மேலும் வருத்தமுற்று தனது சகோதரைனைக் காத்தருறுமாறு திரிபுர சம்கார மூர்த்தியான வீரட்டானத்து இறைவனை வேண்டினார்.பெருமானும் அவரது வேண்டுதலை ஏற்று அப்பர் பெருமான் சூலை நோயைத் தீர்த்தருளினார்.
அதனால் அகமகிழ்ந்த அப்பர் பெருமான் கூற்றாயினவாறு விலக்கலீர்(திருமுறை-4,பாடல்-1) என்னும் தனது முதல் தேவாரப் பாடலை திருத்தலத்தில் பாடினார்.அதனால் அகமகிழ்ந்த இறைவன் அவருக்கு திருநாவுக்கரசர் என்ற திருப்பெயரிட்டார் என்பது வரலாறு. பின்னிட்டு திருநாவுக்கரசர் சைவ சமயத்திற்கே திரும்பி திருத்தாண்டாற்றினார்.
அப்பர் பெருமான் சைவ சமயத்தைத் தழுவினார் என்பதையறிந்து சினமுற்ற சமணர்கள் இப்பகுதியை ஆட்சி செய்து வந்த சமண சமயத்தைச் சார்ந்திருந்த மகேந்திரவர்ம பல்லவன் மூலம் பல்வேறு இன்னல்களை திருநாவுக்கரசருக்கு ஏற்படுத்தினர். புத்த மதத்தைத் தழுவியிருந்த மகேந்திரவர்ம பல்லவன் இப்பகுதியில் கி.பி.600-630 களில் ஆட்சி செய்து வந்தான்.அப்போது புத்தமதத்திலிருந்து தனது தாய் மதமாகிய சைவ மதத்தைத் தழுவியதற்காக திருநாவுக்கரசரை கருங்கல்லில் கட்டி கடலில் தூக்கி வீசியபோது திருப்பாதிரிப்புலியூர் இறைவனான அருள்மிகு பாடலீசுவரரை எண்ணி பதிகம் பாடினார்.
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமசிவாயவே.
(திருநாவுக்கரசர்)
அருள்மிரு பெரியநாயகி உடனாய பாடலீசுவரர் அருளாசியால் அக்கருங்கள்ளே தெப்பமாய் மிதந்தது. அப்பர் பெருமான் அக்கருங்கல்லையே தெப்பமாகக் கொண்டு கரையேறிய அற்புதம் நிகழ்ந்த திருத்தலம் திருப்பாதிரிப்புலியூர் ஆகும். திருநாவுக்கரசர் கரையேறிய அவ்விடம் கரையேறவிட்டகுப்பம் என்ற பெயரில் அந்த ஊர் இன்றும் உள்ளது.பெரிய புராணம் இயற்றிய சேக்கிழார் இச்சம்பவத்தை மிக அழகாக பாடியுள்ளார்.திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் பகுதியில் பாடல்-1397ல் குறிப்பிட்டுள்ளார்.
வாய்ந்த சீர் வருணனே வாக்கின் மன்னரைச்
சேர்ந்தடை கருங்கலே சிவிகை ஆயிட
ஏந்தியே கொண்டு எழுந்து அருள் வித்தனன்
பூந்திருப் பாதிரிப் புலியுர்ப் பாங்கரில்
(சேக்கிழார்)
முடிவில் திருநாவுக்கரசர் அவற்றிலிருந்து மீண்டதோடு மகேந்திரவர்ம பல்லவனையும் சைவ சமயம் தழுவச் செய்தார் என்பதும் பின்னிட்டு சமண சமய வழிபாட்டுத் தலங்களையும் மடங்களையும் சைவசமயத் திருக்கோயில்களாகவும் மடங்களாகவும் மககேந்திரவர்ம பல்லவன் மாற்றினான் என்பதும் இறுதியில் சமணசமயமே அழிந்து போனது என்பதும் தனி வரலாறு. இன்றளவும் இத்திருக்கோயிலில் பழமையான புத்தரின் சிலை ஒன்று இன்றும் உள்ளது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.மற்ற சிவத் தலங்கள் அனைத்திலும் நாயன்மார்கரள நின்ற திருக்கோலத்திலேயே நமக்கு அருளாசி வழங்குவர்.இத்திருக்கோயிலில் மட்டும் அப்பர் பெருமான் தனிச் சன்னதியில் அமர்ந்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
அடியவர்கள் வழிபாடு:அருணகிரிநாதர் இத்தலத்து முருகப் பெருமானைப் போற்றி ரிணமொடு குருதி நரம்பு மாறிய என்ற திருப்புகழ் பாடலைப் பாடி இத்தலத்து முருகப் பெருமானை வணங்கியுள்ளார்.வள்ளலார் இராமலிங்க அடிகளாரும் இத்தலத்து இறைவனை தரிசித்துள்ளார் என்கிறது தல புராணம்.
கோயில் அமைப்பு:கோயில் இராச கோபுரத்திற்கு முன்பாக 24 கற்றூண்களைக் கொண்டு ஊஞ்சல் மண்டபம் கட்டப்பட்டுள்ளது.ஊஞ்சல் மண்டபத்தின் மேல்பகுதியில் வடக்கிலும்,தெற்கிலும்,புராண சைவ சமய வரலாற்றை மையப்படுத்திய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
இராஜ கோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது.ஊஞ்சல் மண்டபம் இராச கோபுரத்திற்கு முன்பாக உள்ளதால் கோபுரத்தின் முழு அமைப்பைக் காண முடியாது.இராச கோபுரத்தைக் கடந்தவுடன் குதிரை மண்டபம் மடப்பள்ளி மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன.அவற்றைக் கடந்ததும் அருள்மிகு பாடலீசுவரர் மற்றும் அருள்மிகு பெரியநாயகி அம்பிகை ஆகியோர் தனித்தனியாக அமைக்கப்பட்ட மிகப்பெரிய சன்னதிகளில் காட்சி தந்து அருள்கின்றனர்.மேலும்,அருள்மிகு நடராசப் பெருமான்,வலம்புரி விநாயகர்,சொன்னவாற்றி விநாயகர்,யுக முனிவர்,கஜலட்சுமி, பராசக்தி அம்மன்,வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர்,பிச்சாடனர், காலபைரவர்,அருந்தவநாயகி, சாமுண்டி ஆகிய தெய்வங்கள் தனித்தனி சன்னதிகளில் அருள்கின்றனர்.
சிவகார தீர்த்தம்:சிவகர தீர்த்தம் என்பது சிவனும் சக்தியும் ஆகும். கங்கையானவள் மாசி மகத்தன்று சிவகர தீர்த்தத்தில் நீராடி தனது பாவங்கைளைப் போகிக்கி கொண்ட தீர்த்தக் குளம் இங்கு உள்ளது. அப்போதெல்லாம் கங்கை தனது புண்ணியத்தில் ஒரு பகுதியை இங்கேயே விட்டுச் செல்வாளாம். ஆகவே இத்திருக்குளத்தில் நீராடுவதன் மூலம் கங்கையில் நீராடியதன் பலனைப் பெறலாம் என்பர்.
திருவிழாக்கள்:சித்திரை வசந்தவிழா வைகாசிப் பெருவிழா தேர் பவனி ஆனி மாணிக்கவாசகர் விழா ஆடிப்பூரம் விழா புரட்டாசி நவராத்திரி விழா ஐப்பசி அன்னாபிஷேகம் கார்த்திகை சோமவார விழாக்கள் மார்கழி திருவாதிரை விழா தை சமுத்திர தீர்த்தவாரி ஆகியவை பிரசித்தம்.
இதுவரை நாம் திருப்பாதிரிப்புலியூர் திருத்தலத்தில் அருளாட்சி செய்து வரும் இறைவனின் மகத்துவங்களை எல்லாம் நிறைவாக அறிந்து தரிசித்தோம்.அப்பர் பெருமானுக்கு அருள் செய்ததைப் போல அவனியில் வாழும் அணைத்து உயிர்கட்கும் அருள் செய்ய வேண்டுமென்று வேண்டி வணங்கி திருப்பாதிரிப்புலியூர் வரலாற்றை நிறைவு செய்கிறோம்.
அருள்மிகு பெரியநாயகி
திருவடி மலரடி போற்றி! போற்றி!
அருள்மிகு பாடலீசுவரர்
திருவடி மலரடி போற்றி! போற்றி!
போக்குவரத்து வசதி
சென்னையிலிருந்து நேரடியாகக் கடலூருக்குப் பேருந்து வசதி உள்ளது. எழும்பூரிலிருந்தும் தாம்பரத்திலிருந்தும் தொடர் வண்டி வசதிகள் உள்ளன.புதுவைக்கு தெற்கே கிழக்கு கடற்கரை சாலையில் 20 கி.மீ. தொலைவில் திருப்பாதிரிப்புலியூர் அமைந்துள்ளது.புதுவையிலிருந்து ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் கடலூருக்கு பேருந்து வசதி உள்ளது.
சன்னதித் தெருவிலும் அதனையொட்டிய பகுதிகளிலும் தங்குமிடங்கள் உள்ளன.பேருந்து நிலையம் மற்றும் தொடர்வண்டி நிலையத்திற்கு அருகிலும் தங்குமிடங்கள் ஏராளமாக உள்ளன.
தரிசனம் நேரம்:காலை 06.00 மணி முதல் பகல் 11.00 மணி வரை.மாலை 04.00 மணி முதல் இரவு 08.30 வரை.
திருக்கோயில் நிர்வாகம்:தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத் துறையின் நிர்வாகத்தில் இத்திருக்கோயில் உள்ளது.
திருக்கோயில் முகவரி:நிர்வாக அதிகாரி,அருள்மிகு பிரகன்நாயகி உடனாய பாடலீசுவரர் திருக்கோயில்,
திருப்பாதிரிப்புலியூர்,கடலூர்-2
பூஜைக்கு உரிய மலர்கள்
பூஜைக்கு உரிய மலர்கள்
எவை?
விஷ்ணு சம்பந்தப்பட்ட தெய்வங்களுக்கு மட்டும் துளசி தளத்தால் பூஜை செய்யலாம். சிவன் சம்பந்தப்பட்ட ஈஸ்வரர்களுக்கு வில்வார்ச்சனை விசேஷம். தும்பை, வெள்ளெருக்கு, கொன்றை, ஊமத்தை கொண்டு அர்ச்சிக்கலாம். விநாயகர் சதுர்த்தி தவிர மற்ற நாட்களில் பிள்ளையாருக்கு துளசி கூடாது.
சிவனுக்குத் தாழம்பூ கூடாது.
விஷ்ணுவுக்கு அட்சதையால் அர்ச்சனை கூடாது.
லட்சுமிக்குத் தும்பை கூடாது.
சரஸ்வதிக்கு பவளமல்லி கூடாது.
துளுக்க சாமந்திப்பூ அர்ச்சனைக்கு ஏற்றதல்ல.
மலரை இதழ் இதழாக அர்ச்சனை செய்யக்கூடாது.
வாடிப்போன, அழுகிப்போன, பூச்சி கடித்த, முடி, புழு கொண்ட, காய்ந்த, நுகர்ந்த, தரையில் விழுந்த மலர்களை அர்ச்சனைக்கு உபயோகிக்கக் கூடாது. ஒருமுறை சமர்ப்பிக்கப்பட்ட மலர்களை எடுத்து மீண்டும் அர்ச்சனை செய்யக்கூடாது. ஆனால் துளசி, வில்வம் ஆகியவற்றை மீண்டும் உபயோகிக்கலாம். அன்று மலர்ந்த பூக்களை அன்றே உபயோகிக்க வேண்டும். விதிவிலக்கு தாமரை போன்ற நீரில் தோன்றும் மலர்கள். செண்பக மொட்டு தவிர, மற்ற மலர்களின் மொட்டுக்கள் பூஜைக்கு உகந்தவை அல்ல.
துளசி, மகிழம், செண்பகம், தாமரை, வில்வம், மருக்கொழுந்து, மருதாணி, அருகு, நாயுருவி, விஷ்ணுக்ராந்தி, நெல்லி ஆகியவற்றின் இலைகள் பூஜைக்கு உரியவை.
கங்கா ஸ்நான மகிமை!
கங்கா ஸ்நான மகிமை!
நம்நாட்டில் ஷேத்திரத்தின் தல புராணங்களில், "கங்கை காசிக்கு சமமானது அல்லது காசியை விட உகந்தது" என்றே இருக்கும். இப்படி ஒரு ஷேத்திரத்தை மற்ற எந்த ஷேத்திரத்தோடும் ஒப்பிடாமல் காசியுடன் ஒப்பிட்டிருப்பதால், காசிதான், "ஷேத்திர ராஜா" என்று தெரிகிறது.
இதேபோல் எங்கே ஸ்நானம் செய்தாலும், "இது கங்கையைப் போல் புனிதமானது அல்லது கங்கையை விட விஷேசமானது" என்று சொல்வர். இதிலிருந்து, கங்கா ஸ்நானம்தான் ஸ்நானங்களிலேயே தலை சிறந்தது என்பது விளங்கும்.
"எவன் கொஞ்சமாவது கீதா பாராயணம் செய்து, துளியாவது கங்கா தீர்த்தத்தை குடித்து, ஒரு தடவையாவது கிருஷ்ணருக்கு அர்ச்சனை பண்ணுகிறானோ, அவனுக்கு எமனிடம் விவகாரம் ஒன்றும் இல்லை..."என்று பஜகோவிந்தத்தில் சொல்கிறார் ஆதிசங்கரர். இந்த பஜகோவிந்த ஸ்லோகத்தின்படி கீதை, கங்கை, கிருஷணர் எமன் ஆகிய நாலுக்குமே தீபாவளி சம்பந்தம் இருக்கிறது. இதன் காரணமாகத்தான் வடமாநிலங்களில் தீபாவளிக்கு முதல் நாள், "எம தீபம்" ஏற்றுகின்றனர்; தீபாவளியன்று எமனுக்கு தர்ப்பணமும் செய்ய வேண்டும்.
குபேர பூஜையின் சிறப்பு!
குபேர பூஜையின் சிறப்பு!
தீபாவளி அன்றோ, அதற்கு மறுநாளோ, குபேர பூஜை நடத்த ஏற்ற நாட்கள். இந்த இனிய நாளில் குபேரனை வணங்கினால், செல்வ சிறப்பு தங்கியிருக்கும் என்பது ஐதீகம். உழைப்பவனை நோக்கியே குபேரன் அடியெடுத்து வைக்கிறான்.
குபேரனின் இரண்டு பக்கங்களிலும் சங்கநிதி, பதுமநிதி என்ற தெய்வங்கள் இருக்கின்றனர். இவர்கள் மகாலட்சுமியின் அஷ்ட சக்திகளில் இருவர். இவர்கள் இருவரிடமும் ஏராளமான பொருட் செல்வம் இருக்கிறது. தன் பொருட்களை இவர்களிடம் ஒப்படைத்து வைத்திருக்கிறார் குபேரன். குபேரனை வணங்கும்போது இந்த சக்திகளையும் வணங்க வேண்டும்.
ராவணனின் சகோதரர் குபேரன். மிகச் சிறந்த சிவபக்தர். இதன் காரணமாகவே, குபேரனை வடக்கு திசைக்கு அதிபதியாக நியமித்து, குபேர பட்டணம் என்ற நகரையும் அமைத்துக் கொடுத்தார் சிவபெருமான். இந்த நகரில் உள்ள அழகாபுரம் என்ற அரண்மனை மண்டபத்தில் தாமரைப்பூ, பஞ்சு மெத்தை ஆகியவற்றின் மீது மீனாசனத்தில் அமர்ந்தார் குபேரன். ஒரு கை அபய முத்திரை காட்டி இருக்கும். கஷ்டப்படும் காலத்தில் கொடுத்து உதவுவதே அபய முத்திரையின் தத்துவம்.
குபேரனின் தலையில் தங்கக் கிரீடம் சூட்டப்பட்டிருக்கும். முத்துக்குடையின் கீழ் இவர் அமர்ந்திருப்பார். சங்க நிதியின் கையில் வலம்புரி சங்கு இருக்கும். வலம்புரி சங்கு செல்வத்தின் அடையாளம், பதும நிதியின் கையில் தாமரை மலர் இருக்கும். இவர் பரந்து விரிந்த கல்வி அறிவை தருபவர். கல்வியும், செல்வமும் இணைந்து இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதே குபேர பூஜையின் முக்கிய சிறப்பு...
கண் திறந்து கவலை போக்கும் கரிவரதன்
கண் திறந்து கவலை போக்கும் கரிவரதன்
கரிவரதராஜப் பெருமாள் ஆலயம் மிகப் பழமையானதும் பக்தர்களுக்கு எல்லாம் நன்மைகளையும் வாரி வழங்கும் அற்புதமான திருக்கோயில் ஆகும். இத்தலம் சென்னை-கோயம்பேடு அருகிலுள்ள நெற்குன்றத்தில் அமைந்துள்ளது. இப்பெருமாளுக்கு கலியுக வரதன், கண்திறக்கும் பெருமாள், பக்தவத்சலன், பாகவதப் பிரியன் என்று பல திருநாமங்கள் உண்டு. ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். உற்சவர், தனது இடது கையில் கதையுடன் சத்யநாராயணனாக காட்சி தருகிறார். இத்தல பெருமாள் யானைக்கு அருளியவர் ஆவார். ‘‘ஆதிமூலமே’’ என்றழைத்த கரி எனும் யானையை முதலையிடமிருந்து காப்பாற்றியதால் கரிவரதராஜப் பெருமாள் எனும் திருநாமம் ஏற்பட்டது.
முதலைக்கும் யானைக்கும் சாப விமோசனம் அளித்து மோட்சத்தையும் அளித்தார். நெல்வயல் நிறைந்திருந்த நெற்குன்றத்தில் எழுந்தருளியவர் இந்த நெற்குன்றம் வரதர். நெல் அதிகமாக குன்றுபோல் விளைந்து காணப்பட்டதால் இந்த ஊர் நெற்குன்றம் என்றாகியது. மூலவர் சந்நதிக்குமுன் துவாரக பாலகர்கள் ஜய-விஜயர்கள் கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார்கள். கரிவரதராஜப் பெருமாளின் இருபுறமும் ஸ்ரீதேவி-பூதேவி தாயார்கள் உபய நாச்சியாருடன் காட்சி தருகின்றனர். கோயில் பிராகாரத்தில் விஷ்வக்சேனர், விஷ்ணு துர்க்கை சந்நதிகள் உள்ளன. பெருமாளுக்கு எதிரே தனி சந்நதி கொண்டிருக்கும் கருடாழ்வார், நாகதோஷம் போக்குபவர்.
பெருமாளின் இடதுபுறத்தில் வெளிமண்டலத்தில் நம்மாழ்வார் அமர்ந்த நிலையில் சேவை சாதிக்கிறார். அனுமன் வரத ஆஞ்சநேயராக, வடக்கு நோக்கி வராஹமுகமாக கைகூப்பி நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். இந்த ஆஞ்சநேயருக்கு வடைமாலையும் வெண்ணெயும் சாற்றி வழிபடுகின்றனர்.
இக்கோயிலின் சிறப்பே நேத்ர தரிசனம்தான். பெருமாள் நம்மை, தன் வெண் விழிக்கு நடுவே கருவிழி மூலம் நோக்குவது அற்புத காட்சியாகும். பெருமாளின் திருப்பார்வை நம்மைத் தீண்டும் அதிசயம்! சாதாரணமாக, கரிவரதராஜப் பெருமாளின் முன்பு நின்று பார்க்கும்போது பெருமாளின் கண்கள் மூடியிருப்பது போல் தோன்றுகிறது.
கருவறையிலுள்ள மின்சார விளக்குகளை நிறுத்தி விட்டு இருளில் நெய்விளக்கேற்றி ஆரத்தி காட்டும்போது மட்டும் கண் இமைகள் மெல்லத் திறந்து நம்மைப் பார்க்கும் அற்புதத்தை அங்குபோய் அனுபவித்தால்தான் உணரமுடியும். நேத்ர சேவை முடிந்ததும் மின் விளக்குகளை ஏற்றும்போது அவர் விழிகள் மூடிக்கொள்கின்றன! ஐந்தரை அடி உயரத்தில் காணப்படும் கரிவரதராஜப் பெருமாளின் இரு மேற்திருக்கரங்களில் சங்கு-சக்கரம், வலது கீழ் திருக்கரம் அபய ஹஸ்தமாகவும் இடது கீழ் திருக்கரம் கடிகஹஸ்தமாக உள்ளன. அழகான இந்தப் பெருமாளின் கண், மூக்கு, அதரம், நெற்றி, திருவடி என அனைத்து பாகங்களும் வெகு நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன.
திருக்கையில் நாககங்கணம், தொப்புளின் கீழே சிம்மமுகம் உள்ளதும் மார்பின்மேல் தோள்பட்டை அருகில் ஸ்ரீவத்ஸம் உள்ளதும் விசேஷமாகும். இவரது திருமேனியைச் சுற்றி அழகாக பத்தாறு வஸ்திரம் அணிவிக்கப்பட்டுள்ளது. இவரின் மார்பில் இரு தாயார் உள்ளனர் என்பது கூடுதல் அதிசயம். கழுத்தில் சாளக்ராம மாலையும் மார்பில் பூணூலும் அணிந்து மிக அழகாக காட்சியளிக்கிறார். பெருமாள் சந்நதியில் கையில் வெண்ணெயுடன் காட்சிதரும் சந்தான கிருஷ்ணனை திருமஞ்சனம் செய்து வழிபட்டு பிரார்த்தனை செய்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும். உற்சவர் சத்யநாராயணனாகத் திகழ்வதால், இங்கே பௌர்ணமிதோறும் சத்யநாராயண பூஜை சிறப்பாக நடைபெறுகிறது.
மரத்தை தெய்வமாகப் போற்றி வழிபடுவது ஏன்?
மரத்தை தெய்வமாகப் போற்றி வழிபடுவது ஏன்?
மரத்தை தெய்வமாகப் போற்றி வழிபடும் வழக்கம் உலகிலேயே இந்து மதத்தினரிடம் மட்டுமே உள்ளது. ஆலயம் தோறும் ஏதேனும் ஒரு மரத்தை தல விருட்சமாக வைத்து வணங்கி அதைப் புனிதமாகக் கொண்டாடுவது இந்துக்கள் மட்டுமே. தல விருட்சம் என்று மட்டுமல்லாமல் துளசி, வில்வம், ருத்ராட்சம், வேம்பு, அரசு ஆகிய மரங்கள் எங்கிருந்தாலும் அதை தெய்வாம்சமாகக் கருதி வணங்குவது நாம் மட்டுமே. மரங்களுள் நான் அரச மரமாக இருக்கிறேன் என்று கண்ணன் கீதையிலே சொல்கிறார்.அரச மரத்தை சிவ சொரூபமாகவும், வேப்பமரத்தை சக்தி சொரூபமாகவும் போற்றுகிறோம். அதனால் தான் அரசும் வேம்பும் ஒரே இடத்தில் ஒன்றோடொன்று இணைந்து வளர்ந்திருக்கும் இடத்தை சிவ சக்தி உறையும் இடமாகக் கருதி வணங்கி வழிபடுகிறோம். மகமாயி மாரியம்மனுக்கு வேப்பிலைக்காரி என்றே பெயர்.
அம்மை நோயைத் தீர்க்கும் தெய்வம் மகமாயி . அவள் பெயரால்தான் அந்த நோயை அம்மை என்று குறிப்பிடுகிறோம். அம்மை நோய்க்கு இன்று வரை ஆங்கில மருத்துவத்தில் கூட மருந்து இல்லை. அம்மை வருமுன்னே தடுக்கக்கூடிய அம்மை நோய்த் தடுப்பு ஊசி (மருந்து) தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நோய் வந்த பின் காப்பது அவள் அருள் ஒன்றே! அதனால் அம்மை நோய் கண்டவரது வீட்டில் வேப்பிலைக் கொத்து சொருகி வைப்பதும், அம்மை நோய் குணமாகி தலைக்கு ஊத்துதல் என்னும் பெயரில் நோயாளியைக் குளிப்பாட்டும்போது, அந்த நீரில் வேப்பிலையை ஊறப் போட்டு அந்த நீரால் குளிப்பாட்டுவதே இன்றும் வழக்கத்திலுள்ளது.
மரம் இல்லாவிட்டால் இன்றைய உலக வரைபடமே உண்டாகி இருக்காது. கொலம்பஸ், கேப்டன் குக், வாஸ்கோடகாமா போன்றவர்கள் மரக்கலம் ஏறி கடலில் பயணித்தே புதுப் புது நாடுகளைக் கண்டறிந்தனர். வாணிகமும் பண்பாடும் நாட்டுக்கு நாடு பரிவர்த்தனை ஆயின. இந்து மதத்திலிருந்து பிரிந்த புத்தர் ஒரு போதி மரத்தின் அடியில் அமர்ந்திருந்த போதுதான் ஞானம் பெற்றார் என்பதால் புத்த மதத்தினர் இன்றும் போதி மரங்களைத் தெய்வமாக வழிபடு கின்றனர். இயற்கை அன்னையை வணங்கியே தங்கள் ஆன்மிக சித்தாந்தத்தைத் தொடங்கிய பண்டைய பாரதமக்கள், இயற்கையின் முதல் அம்சமான மரங்களை வழிபடத் தொடங்கியதில் ஆச்சரியமில்லை. இன்றும் நாம் இறைவனுக்கு நைவேத்தியம் செய்யும் தேங்காய், பழம், வெற்றிலை- பாக்கு மற்றும் இறைவனுக்கு அணிவிக்கும் சந்தனம், ஜவ்வாது உட்பட எல்லாமும் மரங்களின் கொடை.
மனிதன் உயிர் வாழப் பிராண வாயு தேவை. மரங்கள் காற்றிலுள்ள கரியமிலவாயுவை (கார்பன் டை ஆக்ஸைடை) உட்கொண்டு, பிராண வாயுவை (ஆக்ஸிஜனை) வெளியிட்டு, மனிதன் உள்ளிட்ட உயிரினங்களின் உயிர்த் துடிப்பைத் தொடர்ந்து நடத்துகின்றன. இந்தப் பேருண்மையை நம் மக்கள் ஆதிகாலத்திலேயே அறிந்து கொண்டதன் விளைவுதான் இந்த மரவழிபாடு! தல விருட்சத் தத்துவம்! உயிர் வாழ உணவுக்கும், உயிர் ஆபத்தான நோய்களிலிருந்து மனிதனைக் காக்கும் மருந்துக்கும் மரங்களே துணை செய்கின்றன. கைம்மாறு கருதாத சேவை. உப்பு நீரைப் பெற்றுக் கொண்டு இனிமையான இளநீரைத் தரும் மேன்மை; அசுத்தமான எருவை அடி உரமாகப் பெற்றுக் கொண்டு தூய்மையான மலரையும் சுவை மிக்க கனியையும் கொடுக்கும் கனிவு.
மனிதன் நாகரிக வளர்ச்சி பெறத் தொடங்கியதும் தனது வாழ்விடத்தை அமைத்துக் கொள்ள மரங்களை வெட்ட நேர்ந்தது; பின்னர் எரிபொருளுக்கும் அதுவே தேவையாயிற்று. மரங்களை இதற்கென வெட்டும் போது அவன் மனசாட்சி உறுத்தியதோ, என்னவோ? இனி மரங்களை இயன்றவரை பாதுகாக்க வேண்டும் என எண்ணினான். என்ன வழி? எது ஒன்றை மனிதன் மதிப்புள்ளதாகக் கருதுவானோ, அதைத்தான் பாதுகாப்பான். அதனால் மரங்களை மதிப்பிற்குரியன ஆக்க, அதனை தெய்வ நிலையில் வைத்து போற்றலானான். மரங்கள் ஆராதிக்கப்பட்டன; ஆலயங்களிலும் வைத்து வழிபடப்பட்டன. மரம் செடி, கொடிகளை வெட்டுவதால் நமக்கு ருணா என்ற பாவம் வந்து சேர்வதாகவும், அவசியத்தின் பேரில் மரத்தை வெட்டும் முன், அதனிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் சொல்கிறது சாஸ்திரம்.
திருக்கேதீஸ்வரம் - இலங்கை
திருக்கேதீஸ்வரம் - இலங்கை
இதுதான் ஈழத்தின் மன்னாரில் அமைந்துள்ள திருக்கேதீச்சரம். இது திருஞானசம்பந்தரால் திருப்பாடல் பாடப்பெற்ற திருத்தலமாகும். 2400 வருடங்களுக்கு முன் கட்டபட்ட இந்தச் சிவன் கோவில், போர்ச்சூழலில் பல அழிவுகளைச் சந்தித்த பின் திருத்தி அமைக்கப்பட்டதாகும்.
இலங்கை தலை மன்னாரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கேதீஸ்வரம். இதுவும் இலங்கையிலுள்ள புகழ் மிக்க சிவத்தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள இறைவன் கேதீஸ்வரப் பெருமான் என்றும் அம்பாள் கௌரி அம்மை என்றும் வணங்கப்படுகிறார்கள். இங்கு தரப்படும் திருநீறு பிரசாதம் மிகுந்த சக்தி படைத்தது. பேச்சிழந்தவர்களைப் பேச வைத்த அதிசயம் நிகழ்ந்த ஆலயம் என்கிறார்கள். கொழும்பிலிருந்து ரயிலில் செல்லலாம். தமிழ்நாட்டிலிருந்து விமானம் மூலம் கொழும்பு சென்று, அங்கிருந்து காரில் பயணிக்கலாம்.
அருள் மிகு மரகதாசலேஸ்வரர் திருக்கோவில்
அருள் மிகு மரகதாசலேஸ்வரர் திருக்கோவில்
மூலவர்:மரகதாசலேஸ்வரர் (திரணத்ஜோதீஸ்வரர்,ஈங்கோய்நாதர்)
அம்மன்:மரகதாம்பிகை, லலிதா
தல விருட்சம்:புளியமரம்
பழமை:2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:திருவிங்கநாதமலை, அளகரை, திருஈங்கோய்மலை
ஊர்:ஈங்கோய்மலை
மாவட்டம்:திருச்சி
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்
தேவாரப்பதிகம்
வினையாயின தீர்த்(து) அருளே புரியும்விகிர்தன் விரிகொன்றை நனையார் முடிமேல் மல் மதியஞ் சூடுநம்பா நலமல்கு தனையார் கமல மலர் மேல் உறையான் தலையோ(டு) அனல் ஏந்தும் எனை ஆளுடையான் உமையாளோடும் ஈங்கோய் மலையாரே.
-திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரையில் 63வது தலம்.
திருவிழா:பங்குனியில் பிரம்மோற்ஸவம், மாசிமகம், தைப்பூசம், பவுர்ணமி பூஜை.
தல சிறப்பு:இத்தல இறைவன் மரகதத்தால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இதனால் இவருக்கு மரகதாசலேஸ்வரர் என்ற திருநாமமும் உண்டு. மாசி சிவராத்திரியின்போது மூன்றுநாட்கள் சுவாமி மீது சூரியஒளி கதிர்கள் விழுகிறது. இந்நேரத்தில் லிங்கம் நிறம் மாறி காட்சியளிப்பது விசேஷம். சிவனின் பாடல் பெற்ற தலங்களில், மலை மீது இருப்பவை மிகக்குறைவு. அதில் ஒன்று திருச்சி மாவட்டம் ஈங்கோய்மலை.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 63 வது தேவாரத்தலம் ஆகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது சாயா சக்தி பீடம் ஆகும்.
திறக்கும் நேரம்:காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். கோயிலுக்கு செல்பவர்கள் முன்னரே அர்ச்சகரிடம் தொடர்பு கொண்டுவிட்டு செல்வது நல்லது.
முகவரி:அருள்மிகு மரகதாசலேஸ்வரர் திருக்கோயில் , ஈங்கோய்மலை - 621 209. திருச்சி மாவட்டம்.போன்:+91- 4326 - 2627 44, 94439 - 50031
பொது தகவல்:பிரகாரத்தில் வல்லப விநாயகர், மகாவிஷ்ணு ஆகியோரும் உள்ளனர்.
பிரார்த்தனை:திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
நேர்த்திக்கடன்:சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தலபெருமை:சக்திமலை: அம்பாளுக்கு, சிவன் தன் இடப்பாகம் தர உறுதி தந்த மலை என்பதால் இம்மலையை "சக்திமலை' என்கின்றனர். இதனை உணர்த்தும் விதமாக முன்மண்டபத்திலும், மலையிலும் அர்த்தநாரீஸ்வரர் வடிவங்கள் உள்ளன. மரகதாம்பிகை, நின்ற கோலத்தில் இருக்கிறாள். இவளது கருவறை விமானம், கோபுரம் போன்ற அமைப்பில் மூன்று கலசங்களுடன் இருக்கிறது. கருவறை கோஷ்டத்தில் மகிஷாசுரனை வதம் செய்த துர்க்கை காலுக்கு கீழே மகிஷனுடனும், மற்றொரு துர்க்கை சாந்தசொரூபியாகவும் உள்ளனர்.
அடிக்கிற கை தான் அணைக்கும் என்ற பழமொழிக்கேற்ற காட்சி இது. ஒரே இடத்தில் துர்க்கையின் இரண்டு வடிவங்களையும் காண்பது அரிதான ஒன்று.
ஈ வழிபாடு: தென்திசை வந்த அகத்தியர், சிவனை வழிபட இங்கு வந்தார். அப்போது நடை அடைக்கப்பட்டுவிட்டது. தனக்கு காட்சி தரும்படி சிவனை வேண்டினார். மலை அடிவாரத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடிவிட்டு வந்தால் தன்னை வணங்கலாம் என்று அசரீரி சொன்னது. அதன்படி அகத்தியர் தீர்த்தத்தில் நீராடியபோது, ஈ வடிவம் பெற்றார். பின் இம்மலை மீது பறந்து வந்து, சன்னதி கதவின் சாவித்துவாரம் வழியாக உள்ளே புகுந்து சுவாமியை தரிசனம் செய்தார். பின் மீண்டும் தன் பழைய வடிவம் பெற்று திரும்பினார். அகத்தியர் ஈ வடிவில் வழிபட்ட தலம் என்பதால், "திருஈங்கோய்மலை' என்றும், சிவனுக்கு "ஈங்கோய்நாதர்' என்றும் பெயர் உண்டு.
புளியமரத்தில் ஒளிந்த சிவன்: சிவனின் நண்பரான சுந்தரர், தான் விரும்பிய நேரங்களில் சிவனிடம் பொன் கேட்டுப் பெற்றுக் கொள்வார். அவர் இத்தலத்திற்கு வந்து சிவனிடம் பொன் வேண்டும் என கேட்டார். சுந்தரரிடம் விளையாட வேண்டும் என நினைத்த சிவன், இங்கிருந்த ஒரு புளியமரத்திற்குள் ஒளிந்து கொண்டார். சுந்தரர், சிவனை எவ்வளவோ அழைத்தும் அவருக்கு காட்சி தரவில்லை. ஒரு தங்க புளியங்காயை மட்டும் அவருக்கு கிடைக்கும்படி செய்தார். சுந்தரர் அதனை எடுத்தபோது, புளியங்காய் மறைந்து விட்டது. தன்னிடம் சிவன் விளையாடுவதை உணர்ந்து கொண்ட சுந்தரர், கோபத்தில் "எனக்கு கிடைக்காத புளி யாருக்கும் கிடைக்காமல் போகட்டும்,' என சொல்லிவிட்டு திரும்பி விட்டார்.
இத்தலத்தின் விருட்சம் புளியமரம். ஆனால், சுந்தரர் புளி யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று சபித்துவிட்டதால் இங்கு புளியமரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பம்சம்: மாசி சிவராத்திரியின்போது மூன்றுநாட்கள் சுவாமி மீது சூரியஒளி கதிர்கள் விழுகிறது. இந்நேரத்தில் லிங்கம் நிறம் மாறி காட்சியளிப்பது விசேஷம். சுந்தரர் மட்டுமின்றி, நக்கீரர் ஈங்கோய் எழுபது என்ற பாமாலையை அருளியிருக்கிறார். சிவனுக்கு தீபாராதனை காட்டும்போது லிங்கத்தில் ஜோதி ஜொலிப்பதைக் காணலாம். தைப்பூசத்தன்று சுவாமி, அம்பாளுடன் காவிரிக்கரையில் எழுந்தருளுகிறார். ஆடிக்கிருத்திகை மற்றும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்கின்றனர்.
ஐநூறு படிகளுடன் அமைந்த மலைக்கோயில் இது. கோஷ்டத்தில் ஒரு தெட்சிணாமூர்த்தி, விமானத்தில் வீணை தெட்சிணாமூர்த்தி, கால்களை மாற்றி அமர்ந்த தெட்சிணாமூர்த்தி என குரு பகவானின் வித்தியாசமான வடிவங்களை காணலாம்.
தல வரலாறு:பிருகு முனிவர் சிவனை வணங்கும் வழக்கம் உடையவர். ஆனால், அம்பாளைக் கண்டு கொள்ளவே மாட்டார். பக்தர்களின் வழிபாட்டில் அம்பாளுக்கும் முக்கியத்துவம் வேண்டும் எனக்கருதிய சிவன், அவளைக் கோபப்படும்படி செய்தார். இந்த விளையாடலுக்கு கட்டுப்பட்ட அம்பாள், பூலோகம் வந்து இத்தலத்தில் தவம் செய்தாள். அவளுக்கு காட்சி தந்த சிவன், தன் உடலின் இடப்பாகத்தை தருவதாக இத்தலத்தில் உறுதியளித்தார். ஆதிசேஷனுக்கும், வாயுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என போட்டி வந்தது. வாயுபகவான் தன் பலத்தை நிரூபிக்க பலமாக காற்றை வீசச்செய்தார்.
ஆதிசேஷன் மந்திர மலையை இறுக சுற்றிக்கொண்டார். அப்போது அம்மலையின் சிறு, சிறு பாகங்கள் பூமியில் தெறித்து விழுந்தன. அவ்வாறு விழுந்த பாகத்தின் ஒருபகுதி இம்மலை என்கிறார்கள். சிவபெருமான், அவர்களைச் சமாதானம் செய்து, மலையிலேயே மரகதலிங்கமாக எழுந்தருளினார். மரகத அசலத்தில் (மலையில்) எழுந்தருளியவர் என்பதால், "மரகதாசலேஸ்வரர்' என்ற பெயர் பெற்றார். இவருக்கு "திரணத்ஜோதீஸ்வரர்' என்ற பெயரும் உண்டு.
மஹா சுதர்ஸன மஹாமந்திரம்
மஹா சுதர்ஸன மஹாமந்திரம்
ஓம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய ஸ்ரீம் கோபி
ஜனவல்லபாய ஓம்பராய பரமபுருஷாய பரமாத்மனே!
மமபரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத அஸ்த்ர
ஸஸ்த்ர வாதப்ரதிவாதானி ஸம்ஹர ஸம்ஹர
ம்ருத்யோர் மோசய மோசய ஓம் மஹா சுதர்சனயா
தீப்த்ரே ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக்ஷோபனஹராய
ஹும்பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா
ஓம் மஹா சுதர்சன தாராய நம இதம்
காக்கும் கடவுளான கருணை மிக்க மஹாவிஷ்ணு தீமைகளை அழித்து நன்மைகளை வழங்க சங்கு, வாள், வில், கதாயுதம் ஆகியவற்றுடன் சக்கராயுதமும் முக்கிய அம்சமாகத் திகழ்கிறது
ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட பக்தர்கள் ஓரடி எடுத்து வைத்தால், அவர் உடனே இரண்டடி முன்வைத்து பிரச்சினைகளையும், துன்பங் களையும் தீர்த்து சந்தோஷத்தில் ஆழ்த்துவார் என்பது விதியாகும்.
சக்கராயுதம்- சுதர்சனம் என்பது மகா சக்கரம். நடுவில் "ஓம்' என்ற தாரகத்தினையும்; "ஷ்ரௌம்' என்ற நரசிம்ம ஏகாட்சரத்தினையும், ஆறு இதழ்களில் "சகஸ்ரா ஹும்பட்' என்ற சுதர்சன ஆறு அட்சரங் களையும்; எட்டு இதழ்களில் "ஓம் நமோ நாராயணாய' என்ற அஷ்டாட்சரங்களையும்; பன்னிரண்டு இதழ்களில் பிந்துக்களுடன் கூடிய "அம்' தொடங்கி "அ' வரையிலான மாத்ருகா அட்சரங்களையும் கொண்டு, நரசிம்மானுஷ்டுப் மந்திர ராஜத் தின் அட்சரங்களான "உக்ரம், வீரம், மகாவிஷ்ணும், ஜ்வலந்தம், ஸர்வதோமுகம், ந்ருஸிம்மம், பீஷணம், பத்ரம், ம்ருத்யும், ருத்யும் நமாம் யஹம்' என்ற சுலோகத்தை முப்பத்திரண்டு இதழ்களிலும் எழுதப்பட்டது.
பெருமாள் கோவில்களில் சக்கரத்தாழ் வாருக்கென்று தனிச்சந்நிதி உள்ளதைக் காண்கிறோம். காஞ்சிபுரமும், குடந்தையும் திருமாலின் சக்கர அம்சத்துக்குரிய சிறப் பான தலங்கள் என்பர். காஞ்சியில் அஷ்ட புஜ எண்கரங்கள் கொண்ட பெருமாள், திருமாலின் சக்கரசக்தி எனப் போற்றப் படுகிறார்.
குடந்தையில் ஸ்ரீசக்கரபாணி திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள பெருமாள், சுதர்சன வடிவம் எனப்படுகிறார்.
மதுரை மேலூரிலிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருமோகூர் தலத்தில் சுதர்சனர் சிறப்பாக எழுந்தருளியுள்ளார். பின்பக்கத்தில் ஸ்ரீநரசிம்மராகவும், முன்புறம் ஸ்ரீசக்கரத் தாழ்வாராகவும்- நாற்பத்தெட்டு தேவதை கள் சூழ, ஆறுவட்டங்களுள் 154 அட்சரங் கள் பொறிக்கப் பெற்றிருக்க, பதினாறு திருக்கரங்களில் ஆயுதங்கள் தாங்கி எழுந்தருளி யுள்ளார். இந்த சக்கரத்தாழ்வாரை வழிபட, பாவங்கள் நீங்கி புண்ணியம் கிட்டும்
ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட்டால் நவகிரகங் களால் ஏற்படும் இடையூறுகள், துன்பங்கள் எல்லாம் நீங்கும். அவர் சந்நிதியில் நெய்விளக்கு ஏற்றி "ஓம் நமோ பகவதே மகா சுதர்ஸனாய நம' என்று வழிபட்டால் கூடுதல் பலன் கிட்டும் என்பது ஐதீகம்.
திருமால், ராம அவதாரம் எடுத்து வனவாசம் மேற்கொண்டபோது, ராமர் சார்பாக அயோத்தியை ஆட்சி புரிந்த பரதன் ஸ்ரீசுதர்சன ஆழ்வாரின் அம்சம் என்று புராணம் கூறுகிறது.
திருமால் பக்தர்களுக்கு சங்கடங்களும் துன்பங்களும் வந்தால் அவற்றை திருமாலுக்கு வந்த இடையூறாகவே கருதி காப்பாற்றுபவர் சக்கரத்தாழ்வார்
சிசுபாலன் என்ற அசுரனின் தாய்க்கு, அவன் செய்யும் நூறு பிழைகளைப் பொறுத்துக் கொள்வதாக வாக்களித்திருந்தார் கிருஷ்ணர். சிசுபாலன் நூற்றியோரா வது பிழையையும் புரிய, கிருஷ்ணரின் ஆணையின் பேரில் சீறி எழுந்து சிசுபாலனை அழித்தது சுதர்சனச் சக்கரமே!
மகாபாரத யுத்தத்தின்போது, ஜயத்ரதனை வெல்ல யாராலும் முடியாத நிலையில், பகவான் கிருஷ்ணன் கரத்திலிருந்த சக்கராயுதம்தான் சூரியனை மறைத்து, குருஷேத்திரத்தையே இருளச் செய்து, ஜயத்ரதன் மரணத்திற்குக் காரணமாகத் திகழ்ந்தது.
அம்பரீச மன்னனுக்கு சுதர்சனர் அருளிய வரலாறும் உண்டு.
இந்திரத்யும்னன் என்ற மன்னன்அகத்தியரின் சாபத்திற்கு உள்ளாகி கஜேந்திரன் என்னும் யானையாக மாற நேர்ந்த்து.. ஒருநாள் தடாகத்தில் கஜேந்திரன் இறங்கியபோது முதலை ஒன்று யானையின் காலைக் கவ்விப்பிடித்து தண்ணீருக்குள் இழுக்கவே, "ஆதிமூலமே' என்று கஜேந்திரன் குரல் கொடுக்க, மஹா விஷ்ணு உடனே கருட வாகனத்தில் தோன்றினார். அப்போது திருமாலின் கையிலிருந்து புறப்பட்ட ஸ்ரீசுதர்சனச் சக்கரம் முதலையை வதைத்து, கஜேந்திரன் என்னும் யானையைக் காப்பாற்றியது.
பொதுவாக சக்கரம் மஹாவிஷ்ணுவின் வலது கரத்தில் இடம்பெற்றிருக்கும்.
ஒரு சில தலங்களில் இடம் மாறியும் காட்சி தருவதைக் காணலாம். திருக்கோவிலூர் திருத்தலத்தில் மூலவர் வலக்கையில் சங்கமும் இடக்கையில் சக்கரமுமாக, வலக்காலால் வையகத்தை அளந்து நிற்கும் திருக்கோலத்தைத் தரிசிக்கலாம்.
பஞ்ச கிருஷ்ண திருத்தலங்களில் ஒன்றான திருக்கண்ணபுரத்தில் மூலவரின் வலது கரத்தில் பிரயோகிக்கும் நிலையில் சக்கரம் காட்சி தருகிறது
திருவெள்ளறைத் திருத்தலத்தில் மூலவரைத் தரிசித்தபின் வலம் வரும்போது, தென்திசைச் சுவரில் சுதை வடிவிலான திருமாலின் வலது திருக்கரத்தில் உள்ள சக்கரம், உடனே பிரயோகிக்கும் நிலையில் காட்சி தருகிறது.
"ஸ்ரீ ஸுதர்ஸன மகா மந்திரங்களை யார் ஒருவர் மன ஒருமைப் பாட்டுடனும், பக்தியுடனும், அன்புடனும் ஜபம் செய்து வருகிறாரோ அவருக்கு எல்லா விதக் கார்யங்களும் வெற்றியுடன் நடக்கும்" என்று கயிலை நாதரான ஸ்ரீ பரமேஸ்வரர் தமது பத்தினியான உமை அம்மையாருக்கு உபதேசம் செய்ததாக புராணங்கள் கூறுகின்றன. அத்தனை மகிமை உள்ளது சுதர்சன மந்திரம்.
சுதர்சன சக்கரத்தால் சூழ்வினை ஓட்டும் விஷ்ணுவை, வியாழக் கிழமைகளில்,
கோலமிட்டு, ஓம் நமோ நாராயணாய எனும் எட்டெழுத்து மந்திரம் சொல்லி வணங்க மலர்ச்சி தருவார் மஹாவிஷ்ணு.
ஓம் நமோ நாராயணாய.
ஸ்ரீசுதர்சனரின் நாள் வியாழக்கிழமை. இந்நாளில் அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும்
அருள் மிகு கும்பேஸ்வரர் திருக்கோவில்
அருள் மிகு கும்பேஸ்வரர் திருக்கோவில்
மூலவர்:கும்பேசுவரர் (அமுதேசுவரர், குழகர்)
அம்மன்:மங்களாம்பிகை
தல விருட்சம்:வன்னி
தீர்த்தம்:மகாமகம், காவிரி
பழமை:2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:திருக்குடமூக்கு
ஊர்:கும்பகோணம்
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்: சம்பந்தர், அப்பர்
தேவாரப்பதிகம்
நக்கரை யனை நாடொறும் நன்னெஞ்சே வக்கரை உறைவானை வணங்கு நீ அக்கரை யோடு அரவரை யார்த்தவன் கொக்கரை யுடையான் குட மூக்கிலே.-திருநாவுக்கரசர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 26வது தலம்.
திருவிழா:மாசி மகத்தன்று மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். பங்குனி மாதத்தில் மகாமக குளத்தில் தெப்பத்திருவிழாவும், சித்திரையில் சப்தஸ்தானம் என்ற நிகழ்ச்சியும் நடக்கிறது. இவ்விழாவின் போது சுவாமியும் அம்பாளும் 20 கி.மீ, தூரத்தில் உள்ள ஏழு தலங்களுக்கு எழுந்தருளுவார்கள். வைகாசியில் திருக்கல்யாணம், ஆனியில் திருமஞ்சனம், ஆடியில் பதினெட்டாம் பெருக்கு, ஆடிப்பூரம், பங்குனித்திருவிழா ஆகியவை கொண்டாடப்படுகிறது. மாசி மாதம் அசுவதி நட்சத்திரத்தில் கொடி ஏறி, எட்டாம் நாளில் வெண்ணெய்த்தாழி நிகழ்ச்சியும், ஒன்பதாம் நாளில் தேரோட்டமும், பத்தாம் நாளில் மூஷிக, மயில், ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடக்கும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமக திருவிழா ஆதி கும்பேஸ்வரர் கோயிலின் சார்பிலேயே நடத்தப்படும். தமிழகத்தின் மிகப்பெரிய திருவிழா இது.
தல சிறப்பு:இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாதத்தில் குரு சிம்ம ராசியிலும், சூரியன் கும்ப ராசியிலும் பிரவேசிக்கும் பவுர்ணமி நன்னாளில் மகாமக திருவிழா கொண்டாடப்படுகிறது. லிங்கம் கீழே பருத்தும், மேலே செல்ல செல்ல ஊசி வடிவிலும் காணப்படும். இக்கோயிலில் கல் நாதஸ்வரம் இருக்கிறது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 89 வது தேவாரத்தலம் ஆகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது விஷ்ணு சக்தி பீடம், மந்திரிணி சக்தி பீடம் ஆகும்.
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:அருள்மிகு கும்பேசுவரர் திருக்கோயில், கும்பகோணம்- 612 001, தஞ்சாவூர் மாவட்டம்.போன்:+91-435- 242 0276.
பொது தகவல்:மலையாள ஆண்டின் (கொல்லம்) துவக்க மாதமாக சிம்மம் எனப்படும் ஆவணி உள்ளது. இம்மாதத்தில் சூரியனின் நிலையைப் பொறுத்தே ஆண்டு முழுவதும் சீதோஷ்ண நிலை அமையும். எனவே, சூரிய பகவானை மகிழ்ச்சிப்படுத்தும் பொருட்டும், பயிர்களை அழிக்கும் எலிகள் முதலான ஜந்துக்களிடமிருந்து பாதுகாப்பு பெற நாகராஜாவை வேண்டியும் ஆவணி ஞாயிற்றுக் கிழமைகளில் விரதம் இருப்பது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம்.
உலகம் அழிந்த போது, உயிர்களை மீண்டும் இவ்வுலகில் படைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சிவபெருமான், பிரம்மா மூலம் படைப்புக்கலன்களை ஒரு கும்பத்தில் வைத்து காப்பாற்றினார். இதனால் "கும்பேஸ்வரர்' என்று பெயர்பெற்றார். கும்பகோணத்தில் அருள்பாலிக்கும் இவரது தலத்திலும் ஆவணி ஞாயிறன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
ராஜகோபுரம் வழியாக நுழைந்து, நீண்ட மண்டபத்தை கடந்து, பலி பீடத்தையும் கொடி மரத்தையும் வணங்கி, வாசலில் உள்ள நந்தி தேவரிடம் அனுமதி பெற்று கோயிலுக்குள் நுழைய வேண்டும். கும்பேஸ்வரரை வணங்கிய பிறகு, முதல் பிரகாரத்தில் உள்ள 63 நாயன்மார்கள், சப்த மாதர்கள், காமதேனு, பவலிங்கம், சர்வ லிங்கம், ஈசான லிங்கம், பசுபதி லிங்கம், ருத்ர லிங்கம், உக்ர லிங்கம், பீம லிங்கம், மகாலிங்கம், தெட்சிணாமூர்த்தி ஆகியோரை தரிசித்து, சற்று தள்ளியுள்ள வலஞ்சுழி விநாயகரை வணங்க வேண்டும். பின்னர் பிட்சாடனர், முருகன், அட்சயலிங்கம், சகஸ்ரலிங்கம், அன்னபூரணி, கஜலட்சுமி, மகாலட்சுமி, கோஷ்டத்திலுள்ள பிரம்மா, சரஸ்வதி ஆகியோரை வழிபட்டு அம்மன் சன்னதியை வணங்க வேண்டும்.பிறகு கண்ணாடி அறையில் இறைவன் பள்ளி கொண்டுள்ள காட்சியை கண்டு, அஷ்ட புஜ துர்கையை வணங்கி, அருகிலுள்ள நவநீத விநாயகர், கிராத மூர்த்தி, பைரவர், கால பைரவர்,ஜுரகேஸ்வரர், சாஸ்தா, மகான் கோவிந்த தீட்சிதர், நாகாம்பாள் ஆகியோரை தரிசிக்க வேண்டும். இதன்பிறகு, நவக்கிரகமண்டபத்தை சுற்றி கோயிலிலிருந்து வெளியேற வேண்டும். இம்முறைப்படி வணங்கினால், வாழ்வுக்குத் தேவையான பாதுகாப்பு அனைத்தும் கிடைக்கும்.
பிரார்த்தனை:கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள், தொழில் துவங்குபவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், குபேர வாழ்வு விரும்புபவர்கள் மங்கள நாயகிக்கு ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் செம்பருத்தி பூவால் அலங்காரம் செய்து அர்ச்சனை செய்தால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும்,நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தலபெருமை:நாரதர் கொடுத்த ஞானக்கனியைப் பெற உலகத்தைச் சுற்றி வரும் போட்டியை சிவன் அறிவித்தார். விநாயகப்பெருமான் அம்மையப்பரை சுற்றி வந்து அவர்களே உலகம் என்பதை உலகத்தார்க்கு எடுத்துரைத்தார். இதை மெய்ப்பிக்கும் வகையில், இக்கோயிலின் பிரகார அமைப்பு சுவாமியையும் அம்பாளையும் சேர்த்து சுற்றிவரும் வகையில் உள்ளது. பெரும்பாலான கோயில்களில் சுவாமி, அம்பாள் பிரகாரங்களை தனித்தனியே சுற்றிவரும் அமைப்பே இருக்கிறது.
இங்கு மூலவருக்கு அபிஷேகம் கிடையாது. லிங்கம் கீழே பருத்தும், மேலே செல்ல செல்ல ஊசி வடிவிலும் காணப்படும். இக்கோயிலில் கல் நாதஸ்வரம் இருக்கிறது. இது சிறந்த முறையில் பராமரிக்கப்படுகிறது.
நவராத்திரி மண்டபத்தில் ஒரு சிங்க வாகனம் தனது தலையில் நீண்ட படுக்கை கற்களை தாங்கியபடி அமைந்திருப்பது சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாகும். கோயிலின் முன்பு பொற்றாமரைக்குளம் இருக்கிறது. மகாமகத்திற்கு வருபவர்கள் மகாமக குளத்தில் நீராடிய பிறகு பொற்றாமரைக்குளத்திலும் நீராடுவர்.
நவகன்னியரான நதிகள் மகாமக குளத்தில் நீராடிய பிறகு பொற்றாமரை குளத்தில் நீராடினர் என்பது ஐதீகம். வெளிப்பிரகாரத்தில் கும்பமுனிசித்தர் அருள்பாலிக்கிறார். இவரை வணங்கினால் கிரக தோஷங்கள் நீங்கும்.
மங்கள நாயகி: இத்தல அம்மனுக்கு மங்களநாயகி, மந்திரபீட நலத்தாள் ஆகிய திருநாமங்கள் உண்டு. சம்பந்தர் இவளை "வளர்மங்கை' என அழைக்கிறார். சிவபெருமான் தனது திருமேனியில் பாதியை அம்மனுக்கு வழங்கியதைப்போல், தனது மந்திர சக்திகளில் 36 ஆயிரம் கோடியை இத்தல நாயகிக்கு வழங்கியுள்ளார். அம்பாளுக்கென 36ஆயிரம் கோடி மந்திர சக்திகள் உள்ளதால், 72ஆயிரம் கோடி மந்திர சக்திகளுக்கு அதிபதியாக "மந்திரபீடேஸ்வரி' என்ற திருநாமமும் பெறுகிறாள்.அம்மனுக்குரிய 51 சக்தி பீடங்களில் இத்தலம் முதன்மையானதாக கருதப்படுகிறது.
அம்பாள் மஞ்சள் பட்டு உடுத்தி முகத்தில் மஞ்சள் பூசி, குங்கும திலகம் இட்டு அருள்பாலிப்பதை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
மகாமக தீர்த்தம்: ஊரின் நடுவே 3 ஏக்கர் பரப்பளவில் மகாமக குளம் அமைந்துள்ளது. பிரளய காலத்தின் போது அமுத குடத்தில் இருந்து வழிந்தோடிய அமுதத்தை "பூமி குழிந்து தாங்குக' என சிவபெருமான் நினைத்ததால் அமுதம் திரண்டு இந்த குளத்தில் தங்கியது. இங்கு தான் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாதத்தில் குரு சிம்ம ராசியிலும், சூரியன் கும்ப ராசியிலும் பிரவேசிக்கும் பவுர்ணமி நன்னாளில் மகாமக திருவிழா கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவின் போது தான் கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதை, சரஸ்வதி, காவிரி, குமரி, பயோடினி, சரயு ஆகிய 9 நதிகளும் தங்களது பாவங்களை போக்கி கொள்ள நீராடுவதாக ஐதீகம். மகாமக தினத்தன்று இத்தீர்த்தத்தில் நீராடுபவருக்கும், அவரைச்சார்ந்த ஏழு குலத்தாருக்கும் புண்ணியம் உண்டு என புராணங்கள் கூறுகின்றன.
சிவனும் அம்மனும் ஆதியில் இத்தலம் வருவதற்கு முன்பே விநாயகர் இங்கு வந்து காத்திருந்ததால் இத்தல விநாயகர் "ஆதி விநாயகர்' எனப்படுகிறார். முருகப்பெருமான் சூரசம்ஹாரத்திற்கு செல்லும் முன் இங்கு வந்து மந்திர பீடேஸ்வரியிடம் மந்திர உபதேசம் பெற்றுள்ளார். இங்குள்ள கார்த்திகேயர் ஆறுமுகம், ஆறு திருக்கரங்களுடன் உள்ளார். இது போன்ற அமைப்பு வேறு எங்கும் இல்லை என கூறப்படுகிறது. இவரை அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார்.
சிவபெருமான் வேடர் (கிராதர்) வடிவில் வந்து அமிர்தம் நிறைந்த குடத்தை உடைத்தார். அதன் அடிப்படையில் இங்கு கிராதமூர்த்திக்கு சன்னதி உள்ளது. மகம் நட்சத்திர நாளில், இவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தால் விரும்பியது கிடைக்கும் என்பது ஐதீகம்.
தல வரலாறு:முன்னொரு காலத்தில் தண்ணீரால் உலகம் அழிய இருந்த போது, பிரம்மா தனது படைப்புத்தொழிலை எங்கிருந்து ஆரம்பிப்பது என சிவனிடம் கேட்டார். சிவபெருமான் அவரிடம், ""நீ இப்போதே பல புண்ணிய தலங்களிலும் உள்ள மணலை எடுத்து அமுதத்தோடு சேர்த்து பிசைந்து மாயக்கும்பம் ஒன்றை செய்.
அந்தக் கும்பத்தில் அமுதத்தை நிரப்பி, படைப்புக் கலன்களை அதனுள் வைத்து நீரில்மிதக்க விடு,'' எனச்சொல்லி அதை மிதக்கவிடும் முறை பற்றியும் விளக்கமாகத் தெரிவித்தார். இதன்படியே பிரம்மா செய்த கும்பம் வெள்ளத்தில் மிதந்தது. அந்தக் குடம் ஒரு இடத்தில் தங்கியது. சிவன் ஒரு பாணத்தை அதன் மீது எய்தார். இதனால் கும்பத்தின் மூக்கு சிதைந்தது.
கும்பத்திலிருந்த அமுதம் நான்கு புறமும் பரவியது. அந்த அமுதம் வெண்மணலுடன் கலந்து ஒரு லிங்கம் உருவானது. இந்த லிங்கமே "கும்பேஸ்வரர்' எனப் பெயர் பெற்றது.
ஒவ்வொரு நாளும் சொல்ல ஒவ்வொரு துதி!
ஒவ்வொரு நாளும் சொல்ல ஒவ்வொரு துதி!
கிருபானந்த வாரியார் வாரத்தின் ஏழு நாட்களும் இறைவனை வணங்க ஏழு சின்னச்சின்ன துதிகளை இயற்றியுள்ளார். திருப்பரங்குன்றம் முதல் வயலூர் வரையான ஏழு திருத்தலங்களில் உறையும் முருகனைப் போற்றிப் பாடப்பட்ட அந்தத் துதிகள், பலன் அதிகம் தரும் படைவீட்டு வாரப் பாடல்கள் என்றே போற்றப்படுகின்றன. உயர்வான அவை இதோ இங்கே தரப்பட்டுள்ளன. ஞாயிறு தொடங்கி சனிக்கிழமை வரை தினம் தினம் சொல்லலுங்கள். கந்தவேல் கருணையால், எல்லா நாட்களும் ஏற்றமானதாகவே இருக்கும்.
ஞாயிற்றுக்கிழமை
தாயினும் இனிமையாகத் தண்ணருள் செய்வாய் போற்றி
சேயென ஆள்வாய் ஞானத் திருமுருகேச போற்றி
மீயுயர் பரங்குன்றில் மேவிய வேலா போற்றி
ஞாயிறு வாரம் வந்து நலமெலாம் அருள்வாய் போற்றி
திங்கட்கிழமை
துங்கத்தமிழால் உனைத் தொழுவோர்க்கு அருள் வேலவ போற்றி
சிங்க முகனை வதைத்த அருட்செல்வத் திருநாயக போற்றி
சங்கப்புலவோர் தமக்கென்றும் தலைவா சிவதேசிக போற்றி
திங்கட்கிழமை வந்தருள்வாய் செந்தில்பதி நின்பதம் போற்றி
செவ்வாய்க்கிழமை
செவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய்
எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி
தெவ்வாதனை இல்லாத பரையோகியர் சிவதேசிக போற்றி
செவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநிகுக போற்றி
புதன்கிழமை
மதவாரணமுகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப்
பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனே
உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே
புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி
வியாழக்கிழமை
மயானம் உறையும் இறையான மகேசன் பெற்ற குகேசன் எனத்
தியானப் பொருளாம் திருமுருகா தேவே மாவேதிய போற்றி
தயாளசீலா தணிகை முதல் தளர்வாழ் குன்றுதொறும் வாழ்வாய்
வியாழக்கிழமை வந்தருள்வாய் வேலா கோலாகலா போற்றி
வெள்ளிக்கிழமை
அள்ளி வழங்கும் ஆறுமுகத்தரசே விரைசேர் கடம்பணிந்த
வள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே
வெள்ளிமலைநேர் வியன் ஞானம் மேவு பழமார் சோலையனே
வெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி
சனிக்கிழமை
கனிவாய் வள்ளி தெய்வயானைக் கணவா உணர்வோர் கதிர்வேலா
முனிவாய் எனில் நான் எங்கடைவேன் முத்தா அருணை முனிக்கு அரசே
இனிவாதனையால் அடிநாயேன் என்றும் குன்றா வணம் வாழ
சனிவாரமதில் வந்தருள்வாய் தயவார் வயலூர்ப்பதி போற்றி
இவ்வாறு கிருபானந்த வாரியார் இயற்றிய தினம் ஒரு துதியைக் கூறுவதன் மூலம் இறைவனின் பரிபூரண அருளைப் பெறலாம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)