அருள் மிகு வண்டி மலைச்சி அம்மன் திருக்கோவில் {வடசேரி}
தமிழ்நாட்டில் தூத்துக்குடி திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய பல மாவட்டங்களில் வண்டி மலைச்சி அம்மன் கோயில் வழிபாடு வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு வரலாறு கூறப்படுகிறது.அதில் நாகர்கோயில், வடசேரியில் அமைந்திருக்கும் அருள்மிகு வண்டிமலையான் உடனுறை வண்டி மலைச்சி அம்மன் மிகப்பெரிய திருமேனியாக சயன நிலையில் அதாவது கிடந்த நிலையில் காட்சி தந்து அருள்புரியும் அற்புத திருத்தலத்தை பற்றி இப்பகுதியில் காண்போம்.
தல வரலாறு:சலவைத் தொழிலாளி ஒருவரின் கனவில் தோன்றிய பாதாள பைரவி அந்த ஊரின் குளக்கரையில் தன்னுடைய சிலை அமைத்து வழிபட்டு வந்தால் ஊர் மக்களின் வாழ்வைச் செழிப்புடையதாக மாற்றுவதாக கூறியிருக்கிறார்.இதையடுத்து அவர் குளக்கரையில் பாதாள பைரவிக்கு சிலை ஒன்றை வைத்து, தினமும் வழிபட்டு வந்தார்.ஒரு வருட காலத்திற்குள் அவருக்கு அதிகமான செல்வம் சேர்ந்து அவருடைய வாழ்க்கையும் வளமாகிப் போனது.இதனால் மகிழ்ச்சியடைந்த அவர் தான் வணங்கி வந்த பாதாள பைரவிக்கு சிறப்பு வழிபாடுகளைச் செய்யவும் ஊர் மக்கள் அனைவருக்கும் சிறந்த உணவுகளை வழங்கவும் முடிவு செய்தார்.விழா ஏற்பாடுகளைச் செய்த அவர் அந்த ஊர் மக்களின் வீடுகளுக்குச் சென்று கோவில் விழாவில் கலந்து கொண்டு உணவருந்திச் செல்ல வேண்டுமென்று அழைப்பு விடுத்தார்.
விழாவில் பங்கேற்க ஊர் மக்கள் அனைவரும் வருவார்கள் என்கிற நம்பிக்கையில் அதிக அளவில் உணவுகளைத் தயாரித்து வைத்திருந்தார்.ஆனால் அந்த ஊர்ப்பெரியவர்கள் அந்தக் கோவில் விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.ஊர்ப்பெரியவர்கள் யாரும் கலந்து கொள்ளாததால் ஊரிலிருந்த பொதுமக்களும் அவர்களுக்கு அச்சப்பட்டு விழாவில் பங்கேற்கவில்லை.இதனால் அந்தக் கோவில் விழாவிற்காகத் தயார் செய்யப்பட்ட உணவுகள் அனைத்தும் மீதமாகிப்போனது.இதனால் வருத்தமடைந்த சலவைத் தொழிலாளி தானும் அந்த உணவை உண்ணாமல் கோவிலுக்கு அருகிலேயே மீதமாகிப்போன உணவுகளைப் போட்டுவிட்டு வீடு திரும்பினார்.பின்னர் தனக்கு வாழ்வளித்த பாதாள பைரவிக்கு சிறப்புற விழா நிகழ்த்த முடியவில்லையே என மிகுதியாய் மனம் வருந்தினார்.
அடுத்த நாள் ஊர்ப் பெரியவர்கள் சிலர் ஒரு வண்டியில் வெளியூர் சென்று விட்டு ஊருக்குள் திரும்பிக் கொண்டிருந்தனர்.அவர்கள் வந்த வண்டி கோவில் அருகே வந்தபோது அங்கிருந்த கல்லில் வண்டிச் சக்கரம் மோதி வண்டி கவிழ்ந்தது.அப்போது ஓர் ஆச்சரியம் காத்திருந்தது.சாலையின் குறுக்காக பெரிய உருவத்திலான பெண் ஒருத்தி படுத்திருப்பது போன்றும் தெரிந்தது.இதைக் கண்டு வண்டியை ஓட்டி வந்தவரும் ஊர்ப் பெரியவர்களும் அச்சமடைந்தனர்.
அப்போது என் பக்தன் நடத்திய கோவில் விழாவில் நீங்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததால் அவன் மிகுந்த வருத்தமடைந்து இருக்கிறான். அவனுடைய விருப்பத்திற்காக ஊர் மக்கள் அனைவரும் இந்த உணவை உண்ணவேண்டும் என்று அசரீரி குரல் ஒன்று ஒலித்தது.உடனடியாக அனைவரும் சென்று பார்த்த போது உணவுகள் அணைத்தும் கெட்டுப் போகாமல் அதே சூட்டுடன் இருந்தது.
இதைக்கண்ட ஊர்ப் பெரியவர்கள் அம்மனிடம் தங்களை மன்னித்தருளும்படி வேண்டினர்.அதன் பிறகு அவர்கள் அந்த சலவைத் தொழிலாளரிடம் சென்று அம்மன் தங்கள் முன்பாகத் தோன்றியதைத் தெரிவித்துத் தங்களை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டனர்.பின்பு அம்மன் காட்சி தந்த அதே இடத்தில்(சயன கோலத்தில்)கிடந்த கோலத்தில் சிலை நிறுவி கோவில் ஒன்றையும் ஊர் மக்கள் அமைத்தனர்.பின்னர் வண்டி மறிச்ச அம்மன் என்ற பெயர் மருவி “வண்டி மலைச்சி அம்மன்”என்று மாறியதாக சிலர் கூறுகின்றனர்.
வழிபாடு:பெரும்பாலான வண்டி மலைச்சி அம்மன் கோவில்களில் வண்டி மலையான் சுவாமியும் சேர்ந்து இருப்பது போன்ற சிலைகள் மிகப் பெரியதாகக் கிடந்த நிலையில் (சயன நிலையில்)அமைக்கப்பட்டிருக்கின்றன. இப்படி அமைக்கப்பட்ட பல்வேறு கோவில்களில் நாகர்கோவில் வடசேரியில் அமைந்திருக்கும் வண்டி மலைச்சியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கொடை விழா எனும் பெயரில் அம்மனுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அருள்மிகு வண்டிமலையான் சுவாமி
திருவடி மலரடி போற்றி! போற்றி!
அருள்மிகு வண்டி மலைச்சி அம்மன்
திருவடி மலரடி போற்றி! போற்றி!
போக்குவரத்து வசதி:நாகர்கோயில் பேருந்து நிலையத்திலிருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் 06 கி.மீ.தொலைவில் வடசேரி உள்ளது.
கோயில் முகவரி:அருள்மிகு வண்டி மலைச்சி அம்மன் திருக்கோவில்
69, ரவிவர்மன் புதிய தெரு
வடசேரி,நாகர்கோயில்.