வெள்ளி, 20 நவம்பர், 2020

உரோமரிஷி


உரோமரிஷி

அஷ்டமா சித்தி பெற்ற 18 சித்தர்களில் இவரும் ஒருவர். இவர் புசுண்ட மாமுனிவரின் சீடராவார்.இவரின் உடல் முழுவதும் உரோமம் முளைத்திருந்தபடியால் உரோமமுனி என்று காரணப் பெயர் பெற்றார்.ஒரு பிரம்மா இறந்தால் இவருடைய மயிர் ஒன்று உதிரும் இவ்வாறு மூன்றரைக்கோடி பிரம்மா இறந்தால் மட்டுமே இவருடைய வாழ்நாள் முடியும் ஒரு உரோமமுனி இறந்தால் அஷ்டகோண (8 கோண) முனிவருக்கு ஒரு கோணல் நிமிரும் என்று கூறுவர்.இவர் கும்பகோணத்தை அடுத்த கூந்தலூரில் தங்கி தவம் செய்து வரும்போது தாடி வழியே பொன் வரவழைத்து அனைவருக்கும் கொடுத்து வந்தார்.

ஒரு சமயம் தாடி வழியே பொன் வருவது நின்றுவிடவே அந்த தாடியை உடனே நீக்கிவிட்டு இறைவனை வழிபட நீராடாமல் திருக்கோயிலை அடைந்தார். நீராடாமல் இறைவனை தரிசிக்க வந்த ரோமமுனியை விநாயகரும் முருகனும் தடுத்தனர். இதை கண்ட சித்தர் வருந்தி கோபுர வாயிலிலேயே நின்றார். புறத்தூய்மையை விட அகத்தூய்மையே சிறந்தது என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் இச்சித்தருக்கு கோயிலுக்கு வெளியிலேயே இறைவன் தம் தரிசனத்தை அளித்ததாக கூறுவர். உரோமரிஷி அற்புதமான பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடல்களில் உவமை நயங்களும் சிலேடைகளும் அதிகம்.

உரோமரிஷி இயற்றிய நூல்கள்
உரோமரிஷி வைத்தியம்  1000
உரோமரிஷி சூத்திரம்  1000
உரோமரிஷி ஞானம்  50
உரோமரிஷி பெருநூல்  500
உரோமரிஷி குறுநூல்  50
உரோமரிஷி காவியம்  500
உரோமரிஷி முப்பு சூத்திரம்  30
உரோமரிஷி இரண்டடி  500
உரோமரிஷி ஜோதிட விளக்கம்

நாகாரூடம், பகார சூத்தரம்,சிங்கி வைப்பு, உரோமரிஷி வைத்தி சூத்திரம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

தியானச் செய்யுள் கனிந்த இதயம், மெலிந்த உருவம் சொரிந்த கருணை, சொல்லில் அடங்குமோ? அலையும் மனதை அடக்கி, அருள் அள்ளியே தருவாய் தாடியில் தங்கம் தந்த தெய்வமே தங்கள் திருவடி சரணம்

ரோமசித்தரின் பூஜைமுறைகள்:தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு,அதன் மேல் ரோமரிஷி ஸ்ரீ கயிலாய கம்பளிச் சட்டைமுனி சித்தரின் படத்தை வைத்து அதற்கு முன் மஞ்சள்,குங்குமம் இட்டு முதலில் இந்த சித்தருக்காகக் குறிப்பிடப்பட்டிருக்கும் தியானச் செய்யுளை கண்மூடி மனமுருகக் கூறி ஜாதி கொண்டு பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.

பதினாறு போற்றிகள்:
1. கயிலாயத்தில் வசிப்பவரே போற்றி!
2. ஜடாமுடிப் பிரியரே போற்றி!
3. சந்திரனை தரிசிப்பவரே போற்றி!
4. சிவசக்தியாகத் தோன்றுபவரே போற்றி!
5. நந்தி தேவரால் காப்பாற்றப்படுபவரே போற்றி!
6. சிவதாண்டவத்தை தரிசிப்பவரே போற்றி!
7. சங்கீதப் பிரியரே போற்றி!
8. தடைகளை நீக்குபவரே போற்றி!
9. காகபுஜண்டரால் பூஜிக்கப்படுபவரே போற்றி!
10. மகாலக்ஷ்மியின் அருள் பெற்றவரே போற்றி!
11. முருகப்பெருமானை வணங்குபவரே போற்றி!
12. உலகத்தைக் காப்பாற்றுபவரே போற்றி!
13. சூரியன் போன்று காட்சி அளிப்பவரே போற்றி!
14. காலத்தைக் கடந்தவரே போற்றி!
15. தெய்வீகச் சித்தரே போற்றி!
16. கைலாயத்தில் வாசம் செய்யும் ஸ்ரீ உரோமரிஷி முனியே போற்றி! போற்றி!

இவ்வாறு பதினாறு போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பிறகு மூல மந்திரமான ஓம் ஸ்ரீ உரோமரிஷி முனி சித்தர் ஸ்வாமியே போற்றி என்று 108 முறை ஜெபிக்க வேண்டும். பூஜைக்கு நிவேதனமாக இஞ்சி இல்லாமல் மிளகு,சீரகம் கலந்து குழைவாக செய்த வெண் பொங்கல்,பழங்கள் தண்ணீர் வைக்க வேண்டும்.பின்பு உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூற வேண்டும். நிறைவாக தீப ஆராதனை செய்யவும்.

உரோமரிஷி சித்தரின் பூஜை பலன்கள்: இவர் சந்திர கிரகத்தைப் பிரதிபலிப்பவர் ஜாதகத்தில் உள்ள சந்திர கிரக தோஷங்களை நீக்குபவர், மனம் தெளிவாக இருந்து, மனோலயம் ஏற்பட வேண்டும். என்றால் மனோன்மணி சதக்தி பெருக வேண்டுமென்றால் சந்திரனின் அருள் நமக்குக் கிடைக்க வேண்டும். இவரை முறைப்படி வழிபட்டால்...

1. மன வியாதி,மன அழுத்தம்,மனப்புழுக்கம்,மன சஞ்சலங்கள் அகன்று மன நிம்மதி கிடைக்கும்.


2. எதிலும் முடிவெடுக்க முடியாமல் தவறான முடிவுகள் எடுப்பது,நீங்கி தெளிவாக முடிவெடுக்க முடியும்.
3. சஞ்சல புத்தி நீங்கும்.


4. படிப்பிலும்,தொழிலிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கும் நிலை நீங்கி மகிழ்ச்சி பொங்கும்.


5. தாயார் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தாய், மகன், மகள் பிரச்சினைகள் அகன்று குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.இவருக்கு வெள்ளை வஸ்திரம் அணிவித்து பூஜித்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.இவரை திங்கள் கிழமை வழிபட்டால் விசேட பலன்கள் கிடைக்கும்.

ஸ்ரீராமா

ஸ்ரீராமா



ஒரு சமயம் துளசிதாசர் காசியில், கங்கையில் நீராடி விட்டு விஸ்வநாதரை தரிசித்தார். விஸ்வநாதர் கருணை காட்டுவார் என்று காத்திருந்தார். ஓயாமல் ராமநாம ஜெபம் செய்தார். இரவில் அசுவமேத கட்டத்தின் படிக் கட்டில் உட்கார்ந்து ராமாயணம் கதாகா லட்சேபம் சொல்வார்.

ஒவ்வொரு நாளும் அவர் படகில் ஏறி அக்கரைக்கு சென்று கங்கையில் நீர் எடுத்துக் கொண்டு வெகுதூரம் சென்று ஒரு காட்டில் காலைக் கடன்களை கழிப்பார். பின் உடம்பை சுத்தம் செய்து கொண்டு மீதியுள்ள தண்ணீரை ஒரு ஆலமரத்தில் கொட்டி விடுவார்.
அந்த ஆலமரத்தில் துர்மரணம் அடைந்த ஆவி ஒன்று வசித்து வந்தது. அது அந்த நீரை குடித்ததும் தாகம் அடங்கி ஒருவாறு அமைதி கிடைத்தது. இதன் பயனாக விவேகம் வந்தது. இவர் ஒரு பெரிய மகான் என்று தெரிந்து கொண்டது.
அந்த ஆவி ஒரு நாள் துளசிதாசர் திரும்பிப் போகும் வழியில் மறைத்து நின்றது. துளசிதாசரின் நடை தடைப் பட்டது. உரக்க ராமா, ராமா என்று சத்தமிட்டு கூவினார்.
அப்போது அந்த ஆவி கூறியது, பெரியவரே, பயப்பட வேண்டாம். நான் ஒரு பாவியின் ஆவி. நீங்கள் வார்த்த நீரைக் குடித்து புனிதமானேன். உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய விரும்புகிறேன். சொல்லுங்கள் என கேட்டது.
துளசிதாசருக்கு மனதில் ஒரே எண்ணம் தானே. ராம தரிசனம் தான் அது. அதற்கு இந்த ஆவியா உதவப் போகிறது என்றெல்லாம் யோசிக்காமல் கேட்டு விட்டார்.
எனக்கு ராம தரிசனம் கிடைக்க வேண்டும் என்று. அதற்கு ஆவி பதில் கூறியது. ‘இது உங்களுக்கு வெகு சுலபமாயிற்றே’ என்றது. எப்படி? என கேட்டார் துளசிதாசர். உங்களிடம் தான் ராமாயணம் கேட்க தினமும் அனுமன் வருகிறாரே என்றது. எனக்கு தெரியாதே என்றார் தாசர்.
ஆம். ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நேரே உட்கார்ந்திருக்கும் ஜனங்களுக்கு அப்பால் ஒருவர் உட்கார்ந்திருப்பார். நீங்கள் வருவதற்கு முன்பே வந்து விடுவார். பிரசங்கம் முடிந்து ஜனங்கள் திரும்பும்போது ஒவ்வொரு வரையும் விழுந்து வணங்கி விட்டு கடைசியில் தான் போவார்.
அவர் எப்படி இருப்பார்? என்று துளசிதாசர் கேட்டார். உடம்பெல்லாம் வெண் குஷ்டம். அசிங்கமாக இருப்பார். யாரும் தன்னை தொந்தரவு செய்யக் கூடாது. ஒதுக்க வேண்டும் என்பதற் காகவே அப்படி வருவார். அவர் கால் களை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.
ராமன் எப்போ வருவாரோ?
அன்று இரவு சொற்பொழிவின் ஆரம்பத்திலேயே தாசர் கவனித்து விட்டார். தன் கண்ணெதிரே ஆனால் சற்று தள்ளி தலையில் முக்காடிட்டுக் கொண்டிருப்பவரை பார்த்து விட்டார். அன்று பிரசங்கத்தில் சபரியின் கதை. சபரி, ராமன் எப்போது வருவாரோ? என்று வழிமேல் வழி வைத்து காத்திருக்கிறார். வழியிலே போவோர் வருவோரை எல்லாம் வினவுகிறாள். புலம்புகிறாள். ஏமாற்றி விடாதே ராமா!
ராமா! என்னை ஏமாற்றி விடாதே. எனக்கு நீ தான் கதி. எனக்கு வேறு எதிலும் நாட்டமில்லை. எங்கே சுற்றுகிறாயோ? உனக்கு யாராவது வழிகாட்ட மாட்டார்களா? நீ இங்கு வரமாட்டாயா?
உன்னைத் தேடி நான் அலைய வேண்டும். ஆனால் என்னைத் தேடி நீ வர வேண்டும் என நினைக்கிறேனே? என்ன அபச்சாரம். நான் உன்னை தேடி வர முடியாதே! யாராவது அழைத்து வர மாட்டார்களா? ராமனை நான் தரிசனம் செய்வேனா? எனக்கு அந்த பாக்கியம் உண்டா? என்று சபரியின் கதையை கூறி விட்டு மயக்கம் அடைந்து விட்டார் தாசர். சபை முழுவதும் கண்ணீர் விட்டு கதறியது. எங்கும் ராம நாம கோஷம்.
பின் வெகு நேரம் ஆயிற்று. துளசி தாசருக்கு மயக்கம் தெளியவில்லை. சிலர் நெருங்கி வந்து மயக்கம் தெளிய உதவி செய்தனர். அத்துடன் சபை கலைந்து விட்டது. பின் வெகுநேரம் கழித்து கண் திறந்து பார்த்தார் துளசி தாசர்.
எதிரே குஷ்டரோகி வடிவில் அனுமர் நின்று கொண்டிருந்தார். பிரபோ! அஞ்சன புத்ரா! என்று கதறி அழுது அவருடைய கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். அனுமன் கால்களை விடுவித்துக் கொண்டார். பின் தாசரை தோளில் சுமந்து கொண்டு விடுவிடுவென்று நடந்தார். பொழுது விடிந்து விட்டது. தாசரை கீழே கிடத்தினார் அனுமன். துளசி தாசரும் ‘கண் விழித்து நான் எங்கிருக்கிறேன்’ என்று வினவினார்.
இதுதான் சித்ர கூடம் இந்த இடத்திற்கு ராமகிரி என்று பெயர். ராமன் முதன் முதலில் வனவாசம் செய்த இடம். அங்கே பாரும் மந்தாகினி. இங்கே உட்கார்ந்து ராமஜெபம் செய்யும். ராம தரிசனம் கிட்டும் என்று கூறினார் அனுமன். அதற்கு துளசி தாசர் நீங்கள் கூட இருக்க வேண்டும் என்றார். நீர் ராம நாமம் சொன்னால் உமது கூடவே நான் இருப்பேன். எனக்கு என்ன வேறு வேலை என்று கூறினார் அனுமன். பின் மறைந்து விட்டார். தாசரும் ராமஜபம் செய்தார்.
எப்படி இருப்பார் ராமர்?
ராமன் வருவாரா? எப்படி வருவார்? லட்சுமணன் கண்டிப்பாக வருவாரா? எப்படி இருப்பார்? தலையில் ஜடா முடியுடன் வருவாரா? அல்லது வைரக் கிரீடம் அணிந்து வருவாரா? மரவுரி தரித்து வருவாரா? பட்டு பீதாம்பரம் அணிந்து வருவாரா? ரதத்தில் வருவாரா? நடந்து வருவாரா? என்றவாரு இடுப்பில் இருந்த துணியை வரிந்து கட்டிக் கொண்டார். கண் கொட்டாமல் இங்கும் அங்கும் பார்த்துக் கொண்டிருந்தார்.
மலைப்பாதை. ஒற்றையடிப் பாதை. இருபுறமும் புதர். அப்பால் ஒரு பாறாங்கல். அதன்மேல் நின்ற கொண்டு ராம ராம என்று நர்த்தனமாடினார். மலை உச்சியிலிருந்து வேகமாக இரண்டு குதிரைகள் ஓடி வந்தன. அவற்றின் மீது இரண்டு ராஜாக்கள். தாசர் எத்தனையோ ராஜாக்களை பார்த்திருக்கிறார். தலையில் தலைப்பாகை. அதைச் சுற்றி முத்துச் சரங்கள். கொண்டை மீது வெண் புறா இறகுகள். வேகமாக குதிரை மீது வந்தவர்கள் தாசரைப் பார்த்து சிரித்துக் கொண்டே போய் விட்டனர்.
ராமனுக்கு ஈடாவாரா?
ஆமாம். பெரிய வீரர்கள் இவர்கள்! என் ராம, லட்சுமணனுக்கு ஈடாவார் களா? தலையில் ரத்ன கிரீடமும், மார்பில் தங்க கவசமும், தங்க ஹாரமும் கையில் வில்லும் இடுப்பில் அம்புராத் தூளியும் கையில் ஒரு அம்பைச் சுற்றிக் கொண்டே என்ன அழகாக இருப்பார் கள் என்று ராமனை தியானித்தவாறே ராம நாமம் சொன்னார்.
சிறிது நேரம் கழித்து அனுமன் வந்தார். தாசரைப் பார்த்து ‘ராம லட்சுமணர்களை பார்த்தீர்களா? என்று கேட்டார். இல்லையே என்றார் தாசர். என்ன இது உமது பக்கமாகத்தானே குதிரையில் சவாரி செய்து கொண்டு வந்தார்கள் என்றார்.
ஐய்யோ! ராம, லட்சுமணர்களா? ஏமாந்து போனேனே என்று அலறினார் துளசி தாசர். அதற்கு அனுமன் ‘ராமன் உமது இஷ்டப்படி தான் வர வேண்டுமா? அவர் இஷ்டப்படி வர கூடாதா? என்று கேட்டார். உடனே தாசர், சுவாமி மன்னிக்க வேண்டும். ஒன்றும் அறியாத பேதை நான். ஏதோ கற்பனை செய்து கொண்டு வந்தவர்களை அலட்சியம் செய்து விட்டேன். வாயு குமாரா? இன்னும் ஒருமுறை தயவு செய்யும். அவர்கள் எந்த வடிவில் வந்தாலும் பார்த்து விடுகிறேன்.
எல்லாம் சரி. நீர் போய் மந்தா கினியில் இறங்கி நீராடி ஜபம் செய்யும். ராமாயண பாராயணம் செய்யும் ராமன் வருவாரா? பார்க்கலாம் என்றார். துளசிதாசரும் மந்தாகினிக்கு ஓடினார். நீராடினார். ஜபம் செய்தார். வால்மீகியின் ராமாயணத்தை ஒப்புவித்தார்.
இதனிடையே இரண்டு நாட்கள் ஆகி விட்டது. ராமாயணத்தில் பரதன் சித்ர கூடத்திற்கு வரும் முன்னால் ராம லட்சுமணர்கள் சித்ர கூடத்தில் வசித்துக் கொண்டு காலையில் மந்தாகினியில் நீராடுகிறார்கள் என்கிற கட்டத்தை படித்துக் கொண்டிருந்தார்.
எதிரே மந்தாகினியில் குளித்து விட்டு இரண்டு இளைஞர்கள் கரை ஏறி தாசரிடம் வந்தனர். ஒருவன் நல்ல கருப்பு நிறம். மற்றவன் தங்க நிறம். முகத்தில் பத்து பதினைந்து நாள் வளர்ந்த தாடி. சுவாமி கோபி சந்தனம் உள்ளதா? என்று அவர்கள் கேட்டனர். இருக்கிறது. தருகிறேன் என்றார் அவர்.
சுவாமி, எங்களிடம் கண்ணாடி இல்லை. நீங்களே எங்கள் நெற்றியில் இட்டு விடுங்கள். (வடதேசத்தில் கங்கை முதலிய நதி தீர்த்தக் கரையில் பண்டாக்கள் (சாதுக்கள்) உட்கார்ந்து கொண்டு நதியில் நீராடி வருபவர் களுக்கு நெற்றியில் திலகம் இட்டு தட்சணை வாங்கிக் கொள்ளும் பழக்கம் இன்றும் உள்ளது). அதற்கென்ன! நாமம் போட்டு விடுகிறேனே என்றார் தாசர். இடது கையில் நீர் விட்டுக் கொண்டே கோபி சந்தனத்தை குழைக்கிறார். அந்த கருப்புப் பையன் எதிரே உட்கார்ந்து முகத்தை நீட்டுகிறான். இவர் அவன் மோவாயைப் பிடித்துக் கொண்டு முகத்தைப் பார்க்கிறார். அவனது கண்கள் குருகுருவென்று இவரைப் பார்க்கின்றன. பார்த்தவுடன் மெய் மறந்து விட்டார்.
அந்தப் பையன் இவருடைய கையில் இருந்த கோபி சந்தனத்தை தன் கட்டை விரலில் எடுத்து தன் நெற்றியில் தீட்டிக் கொண்டு அவருடைய நெற்றியிலும் தீட்டினான். தன்னுடன் வந்த வனுக்கும் தீட்டினான். அவர்கள் உட்கார்ந் திருந்திருந்த படித் துறைக்கு அருகே ஒரு மாமரம். அதன் மீது ஒரு கிளி. அது கூவியது.
‘சித்ர கூடகே காடபரே பகி ஸந்தந கீ பீர
துளசிதாஸகே சந்தந கிஸே திலக தேத ரகுபீர”
பொருள்: (சித்ரக் கூடத்துக் கரையில் சாதுக்கள் கூட்டம். துளசிதாசர் சந்தனம் குழைக்கிறார். ராமன் திலகமிடுகிறார்.)
இதைக் கேட்டு துளசிதாசர் திடுக்கிட்டு சுயநினைவுக்கு வந்தார். சாது அவர்களே! என் நெற்றியில் நாமம் சரியாக இருக்கிறதா? என்று கேட்டான் அந்த கருப்பு இளைஞன். ராமா உனக்கு இதை விட பொருத்தமான நாமம் ஏது என்று கதறிக் கொண்டே அந்த இரண்டு இளைஞர்களையும் கட்டி அணைத்துக் கொண்டார் துளசி தாசர்.

வியாழன், 19 நவம்பர், 2020

ஹரிவராசனம் விஸ்வமோகனம்

ஹரிவராசனம் விஸ்வமோகனம் - முழு பொருளுடன்

பாடல் பற்றிய விவரங்கள்

இசைஅமைப்பாளர் : ஜி. தேவராஜன்

பாடியவர்கள் : கே.ஜே. யேசுதாஸ்

பாடலாசிரியர் : கம்பன்குடி குளத்தூர் ஸ்ரீனிவாச ஐயர்
 
ஹரிவராசனம் விஸ்வமோகனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்
அரிவிமர்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் ஐய்யப்பா சுவாமி சரணம் ஐய்யப்பா
சரணம் ஐய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

சரணகீர்த்தனம் சக்தமானசம்
பரணலோலுபம் நர்த்தனாலஸம்
அருணபாஸுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் ஐய்யப்பா சுவாமி சரணம் ஐய்யப்பா
சரணம் ஐய்யப்பா சுவாமி சரணம் ஐய்யப்பா

ப்ரணயஸத்யகம் ப்ராணநாயகம்
ப்ரணதகல்பகம் ஸுப்ரபாஞ்சிதம்
ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் ஐய்யப்பா சுவாமி சரணம் ஐய்யப்பா
சரணம் ஐய்யப்பா சுவாமி சரணம் ஐய்யப்பா

துரகவாகனம் ஸுந்தரானனம்
வரகதாயுதம் வேதவ-வர்ணிதம்
குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் ஐய்யப்பா சுவாமி சரணம் ஐய்யப்பா
சரணம் ஐய்யப்பா சுவாமி சரணம் ஐய்யப்பா

த்ரிபுவனார்சிதம் தேவதாத்மகம்
த்ரனயனப்ரபும் திவ்யதேசிகம்
த்ரிதசபூஜிதம் சிந்திதப்ப்ரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் ஐய்யப்பா சுவாமி சரணம் ஐய்யப்பா
சரணம் ஐய்யப்பா சுவாமி சரணம் ஐய்யப்பா

பவபயாவஹம் பாவகாவுகம்
புவனமோகனம் பூதிபூஷணம்
தவளவாஹனம் திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் ஐய்யப்பா சுவாமி சரணம் ஐய்யப்பா
சரணம் ஐய்யப்பா சுவாமி சரணம் ஐய்யப்பா

களம்ருதஸ்மிதம் ஸுந்தரனானம்
களபகோமளம் காத்ரமோஹனம்
களபகேசரி வாஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் ஐய்யப்பா சுவாமி சரணம் ஐய்யப்பா
சரணம் ஐய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

ச்ரிதஜனப்ரியம் சிந்திதப்ரதம்
ச்ருதிவிபூஷணம் ஸாதுஜீவனம்
ச்ருதிமனோகரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் ஐய்யப்பா சுவாமி சரணம் ஐய்யப்பா
சரணம் ஐய்யப்பா சுவாமி சரணம் ஐய்யப்பா

பொருள்

ஹரிவராசனம் விஸ்வமோகனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்
அரிவிமர்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

மிகச் சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவரும், பிரபஞ்சத்தையே தன் முறுவலால் மோகிக்கச் செய்பவரும், ஹரிதம் என்னும் குதிரையில் (ஹரித: என்றால் சூரியன், அவனது தேரில் உள்ள ஏழு குதிரைகளின் பெயர் ஹரிதம்)
பவனி வரும் சூரியனால் ஆராதிக்கப்படும் பாதங்களை உடையவரும், சத்ருக்களை அழிப்பவரும், நித்ய நர்த்தனம் புரிபவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சரணகீர்த்தனம் சக்தமானசம்
பரணலோலுபம் நர்த்தனாலஸம்
அருணபாஸுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணகோஷத்தால் மகிழ்பவரும், பிரபஞ்சத்தின் இயக்கத்திற்காக நடனமாடுபவரும், உதிக்கும் சூரியனொத்த ஒளிமயமானவரும், பூத நாயகனுமாகிய ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ப்ரணயஸத்யகம் ப்ராணநாயகம்
ப்ரணதகல்பகம் ஸுப்ரபாஞ்சிதம்
ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

உலகின் உண்மைப் பொருளாகவும், உலக உயிர்களுக்கு நாயகனாகவும்
தன்னை சரணடைந்தவர்க்கு எல்லாவளமும் அளிப்பவரும், ஓங்கார மந்த்ரமாய் இருப்பவரும், இசையில் ப்ரியம்/நாட்டம் உடையவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
துரகவாகனம் ஸுந்தரானனம்
வரகதாயுதம் வேதவ-வர்ணிதம்
குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

குதிரை வானரும், அழகிய முகமுடையவரும், கதாயுதம் ஏந்தியவரும்,
தேவர்களால் வர்ணிக்கப்படுபவரும், குருவைப் போல ப்ரியம் உள்ளவரும், கீர்த்தனங்களில் ப்ரியமுடையவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
த்ரிபுவனார்சிதம் தேவதாத்மகம்
த்ரனயனப்ரபும் திவ்யதேசிகம்
த்ரிதசபூஜிதம் சிந்திதப்ப்ரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

மூன்றுலகிலும் அர்ச்சிக்கப்படுபவரும், எல்லா தெய்வங்களின் அம்சமாக விளங்குபவரும், மூன்று கண்களை உடையவரும், சிறந்த குருவாக விளங்குபவரும், வேண்டுவதை அளிப்பவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பவபயாவஹம் பாவகாவுகம்
புவனமோகனம் பூதிபூஷணம்
தவளவாஹனம் திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சம்சார பயத்தை போக்குபவரும், பக்தருக்கருள்வதில் தந்தை போலும், உலகத்தை தன் மாயையால் மயக்குபவரும், விபூதி தரித்தவரும், வெள்ளை யானையை வாகனமாக கொண்டவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
களம்ருதஸ்மிதம் ஸுந்தரனானம்
களபகோமளம் காத்ரமோஹனம்
களபகேசரி வாஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

மதுரமான, மிருதுவான புன்முறுவல் உடையவரும், சுந்தர முகமுடையவரும், இளமையும், மென்மையும் உடையவரும், மயங்க வைக்கும் உடலமைப்புக் கொண்டவரும், யானை, சிங்கம், குதிரை போன்ற்வற்றை வாகனமாக கொண்ட
ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ச்ரிதஜனப்ரியம் சிந்திதப்ரதம்
ச்ருதிவிபூஷணம் ஸாதுஜீவனம்
ச்ருதிமனோகரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணடைந்தவர்களிடத்து அன்புடையவரும், நினைத்ததை உடனே அளிப்பவரும், வேதங்களை ஆபரணமாக அணிந்தவரும், ஸாதுக்களிடத்து
வசிப்பவரும், வேதகோஷங்களில் மகிழ்பவரும், கீதங்களில் லயிப்பவருமான
ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

 சுவாமியே சரணம் ஐயப்பா


அருள் மிகு ரங்கநாத பெருமாள் கோவில்

அருள் மிகு ரங்கநாத பெருமாள் கோவில்
 
மூலவர் : ரங்கநாதர்
உற்சவர் : நம்பெருமாள்


தாயார் : ரங்கநாயகி
தல விருட்சம் : புன்னை
தீர்த்தம் : சந்திர தீர்த்தம் மற்றும் 8 தீர்த்தங்கள்
ஆகமம் பூஜை  : பாஞ்சராத்திரம்
பழமை : 4000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருவரங்கம்
ஊர் : ஸ்ரீரங்கம்
மாவட்டம் : திருச்சி
மாநிலம் : தமிழ்நாடு
 
பாடியவர்கள்:பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடி பொடியாழ்வார்

பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச்செங்கண் அச்சுதா! அமரேறே! ஆயர் தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே-தொண்டரடிப்பொடியாழ்வார்      
திருவிழா:வைகுண்ட ஏகாதசி இந்த மாதத்தின் இறுதியில் ஒரு தென்னை மரத்தின் அடித்தண்டினை அவ்விழாவுக்குரிய பந்தலின் முதற்கம்பாக நடுவதிலிருந்து தொடங்கும். பகல்பத்து, ராப்பத்து என்னும் இத்திருவிழா நாட்கள் முழுவதிலும் சுவாமியின் திருமுன்னிலையில் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்கள் முழுவதும் ஓதவும், பாடவும் பெறும். பிரம்மாண்டமான இந்த திருவிழாவில் 5 லட்சம் பக்தர்கள் திரண்டு பெருமாளை வணங்குவர். அதோடு இத்தலத்தில் நடக்கும் 3 பிரம்மோற்சவ விழாக்களிலும் (10 நாட்கள்) லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வர். மாசி மாத தெப்பத்திருவிழா 10 நாள் விழாவிலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு கோயில் விழாக்கோலம் பூண்டிருக்கும். தவிரமாதந்தோறும் இக்கோயிலில் திருவிழாக்கள் நடந்தவண்ணம் இருக்கும். தமிழ் ஆங்கில வருடப் பிறப்பின்போதும் வாரத்தின் சனிக்கிழமைகளிலும் கோயிலில் பெருமளவு பக்தர்கள் வருகை இருக்கும்.      
             
தல சிறப்பு:நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மிக அழகிய மண்டபங்களும் திருக்குளங்களும் தனி சன்னதிகளும் 21 கோபுரங்களும் 7 சுற்று பிரகாரங்களும் உடைய கோயில். இதில் 4ம் பிரகாரம் மிகவும் அதிசயத்தக்க அளவில் உள்ளது. இத்தலத்து ராஜகோபுரம் இந்தியாவின் மிகப்பெரிய ராஜகோபுரம் என்பது குறிப்பிடத்தக்கது. தை, மாசி, சித்திரை ஆகிய மாதங்களில் பிரம்மோற்ஸவம் (3 முறை) நடைபெறும் தலம். புராணப்படி இக்கோயிலானது திருப்பாற்கடலினின்று தோன்றியதாகக் கூறப்படுகிறது. சுயம்பு க்ஷேத்ரங்களில் ஒன்று. சயன கோலத்தில் மூலவ பெருமாள் தெற்கு நோக்கியபடி உள்ளார். மூலவரின் விமானம் தங்கத்தால் வேயப்பெற்றது. மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம் ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. ராமாவதாரம் முடிந்தபின்பு தோன்றிய பழமையான கோயில். பெருமாளின் 108 திருப்பதிகளில் தெற்கு நோக்கி அமைந்த தலங்கள் இரண்டே இரண்டு தான். முதல் தலமான ஸ்ரீரங்கமும், 11வது தலமான திருச்சிறுபுலியூருமே அவை. இத்தலத்து விமானம் பிரணாவாக்ருதி எனப்படுகிறது. வட இந்தியாவிலிருந்து பெருமளவில் பக்தர்கள் வருகை தரும் சிறப்பு வாய்ந்த வைணவ தலம். இந்தியாவில் உள்ள சில பிரம்மாண்டமான கோயில்களில் இதுவும் ஒன்று.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.      
             
திறக்கும் நேரம்:காலை 6.15 மணி முதல் 1 மணி வரை, பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.     
           
முகவரி:அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில், ஸ்ரீரங்கம்-620 006, திருச்சி மாவட்டம்,போன்:+91 - 431- 223 0257, 243 2246.     

பொது தகவல்:ஆனி கேட்டையில் சுவாமிக்கு ஜேஷ்டாபிஷேகம் நடந்த நாளில் இருந்து 48வது நாளில் "ஆடிப் பெருக்கு' உற்சவம் கொண்டாடப் படுகிறது. சில ஆண்டுகளில் ஆடி 18ம் தேதியும், சில ஆண்டுகளில் ஆடி 28ம் தேதியும் இந்த விழா கொண்டாடப்படும்.ஆடிப்பெருக்கு விழா ஸ்ரீரங்கத்தில்கொண்டாடப்படுகிறது. அன்று சுவாமி அம்மா மண்டபத்திற்கு எழுந்தரு ளுகிறார். அங்கு  காவிரித்தாய்க்கு அவர்  சார்பில் பட்டுப்புடவை, வளையல், குங்குமம், வெற்றிலை ஆகிய பொருட்கள் சீதனமாக தரப்படும். இந்த பொருட்களை ஒரு யானையின் மீது வைத்து, ஆற்றிற்குள் சென்று மிதக்க விடுவார்கள்.
    
பிரார்த்தனை:மோட்சம் தரும் தலம் இது என்பதால் இத்தலத்து பெருமாளை வணங்குவது பிறவிப் பயனாகும். திருமண வரம், குழந்தை பாக்கியம், கல்வி, ஞானம், வியாபார  விருத்தி, குடும்ப ஐஸ்வர்யம் கிடைக்க, விவசாயம் செழிக்க இத்தலத்து பெருமாளிடம் பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர்.
    
நேர்த்திக்கடன்:சுவாமிக்கு வெண்ணெய் பூசுதல், குங்குமப்பொடி சாத்துதல், சுவாமிக்கு மார்பிலும் பாதங்களிலும் சந்தன குழம்பு அணிவிக்கலாம். சுவாமிக்கு தூய உலர்ந்த ஆடை சாத்தலாம். ஊதுபத்தி, வெண்ணெய், சிறுவிளக்குகள், துளசி தளங்கள், பூக்கள், பூமாலைகள் முதலியன படைக்கலாம். பிரசாதம் செய்து இறைவனுக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம். இது தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.     
            
தலபெருமை:ரங்கநாதர், பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தருகிறார். நாபியில் பிரம்மா இல்லை. ஆனால், சூரிய உதயத்திற்கு சற்று முன்பு ரங்கநாதரை, அவர் பூஜிப்பதாக ஐதீகம். கோயிலுக்குள் பாவம் தீர்க்கும் சந்திர தீர்த்தம் உள்ளது. வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்த 6 நாட்களும் சுவாமி, முத்தங்கி சேவை சாதிக்கிறார். இந்த வைபவம் இங்கு பிரசித்தி பெற்றது.
திருப்பாணாழ்வார் மீது அர்ச்சகர் ஒருவர் கல் எறிந்தபோது, சுவாமி தன் நெற்றியில் ரத்தம் வழிய நின்று, ஆழ்வாருக்கு மோட்சம் கொடுத்த தலம் இது.

டில்லியை ஆட்சி செய்த மன்னனின் மகள், இத்தலத்து நம்பெருமாள் மீது தீராத அன்பு கொண்டிருந்தாள். இதன் அடிப்படையில் நம்பெருமாளுக்கு ஏகாதசி, அமாவாசை நாட்களில் லுங்கி அணிவித்து, ரொட்டி நைவேத்யம் படைக்கப்படுகிறது.தை, மாசி, சித்திரை ஆகிய மாதங்களில் பிரம்மோற்ஸவம் (3 முறை) நடைபெறும் தலம். புராணப்படி இக்கோயிலானது திருப்பாற்கடலினின்று தோன்றியதாகக் கூறப்படுகிறது.சுயம்பு க்ஷேத்ரங்களில் ஒன்று. சயன கோலத்தில் மூலவ பெருமாள் தெற்கு நோக்கியபடி உள்ளார். மூலவரின் விமானம் தங்கத்தால் வேயப்பெற்றது. மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம் ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.ராமாவதாரம் முடிந்தபின்பு தோன்றிய பழமையான கோயில்.பெருமாளின் 108 திருப்பதிகளில் தெற்கு நோக்கி அமைந்த தலங்கள் இரண்டே இரண்டு தான். முதல் தலமான ஸ்ரீரங்கமும், 11வது தலமான திருச்சிறுபுலியூருமே அவை.

மோட்ச ராமானுஜர் : இத்தலத்தில் தங்கி பலகாலம் ரங்கநாதருக்கு சேவை செய்த ராமானுஜர், இங்கேயே மோட்சம்அடைந்தார். அவரது உடலை, சீடர்கள் பத்மாசனத்தில் அமர வைத்தபடி அடக்கம் செய்தனர். சிலகாலம் கழித்து அவர் அதே கோலத்திலேயே பூமிக்கு  மேலெழுந்தார். இவர் இங்கு தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். இவருக்கு திருமஞ்சனம் கிடையாது. சித்திரை திருவாதிரையன்று குங்குமப்பூ, பச்சைகற்பூரம் சேர்ந்த கலவை சாத்தப்படுகிறது.

பெருமாளுக்கு 365 போர்வை : கார்த்திகை கைசிக ஏகாதசியன்று (வளர்பிறை ஏகாதசி) இரவில் நம்பெருமாளுக்கு 365 போர்வைகளை ஒவ்வொன்றாக போர்த்தும் வைபவம் விடிய விடிய நடக்கிறது. சுவாமிக்கு தினசரி பூஜையில்  அணிவிக்கும் வஸ்திரங்களில் குறைபாடு இருந்தால், அதை நிவர்த்தி செய்யும்விதமாக இந்த பரிகாரம் செய்கின்றனர். கார்த்திகை, மார்கழி குளிர் மாதங்கள் என்பதால், சுவாமியின் மீதான அன்பின் காரணமாகவும், போர்வை அணிவிப்பதாகச் சொல்வர்.

காவிரி நீர் அபிஷேகம்! : ஆனி கேட்டை நட்சத்திரத்தன்று அகில், சந்தனக்கலவையை சாத்தி  ரங்கநாதருக்கு ஜேஷ் டாபிஷேகம் (தைலாபிஷேகம்) செய்கின்றனர். அன்றைய  தினம் உற்சவர் நம்பெருமாளுக்கு (வைகுண்ட ஏகாதசியன்று பவனி வருபவர்) அணியப்பட்டுள்ள தங்கக்கவசம் களையப்பட்டு, 22 குடங்களில் காவிரித்தீர்த்தம் அபிஷேகம் செய்யப் படும். மற்ற நாட்களில் காப்பு அணிந்த நிலையிலேயே அபிஷேகம் நடக்கும். இந்த  அபிஷேகத்தை காவிரியே செய்வதாக ஐதீகம்.

ஆடிப்பெருக்கு  திருவிழா : ஆனி கேட்டையில் சுவாமிக்கு ஜேஷ்டாபிஷேகம் நடந்த நாளில் இருந்து 48வது நாளில் "ஆடிப் பெருக்கு' உற்சவம் கொண்டாடப்படுகிறது. சில ஆண்டுகளில் ஆடி 18ம் தேதியும், சில ஆண்டுகளில் ஆடி 28ம் தேதியும் இந்த விழா கொண்டாடப்படும். இவ்வாண்டு ஆடி 28ல் ஆடிப்பெருக்கு விழா ஸ்ரீரங்கத்தில் கொண்டாடப்படுகிறது. அன்று சுவாமி அம்மா மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு காவிரித்தாய்க்கு அவர் சார்பில் பட்டுப்புடவை, வளையல், குங்குமம், வெற்றிலை ஆகிய பொருட்கள் சீதனமாக தரப்படும். இந்த பொருட்களை ஒரு யானையின் மீது வைத்து, ஆற்றிற்குள் சென்று மிதக்க விடுவார்கள்.

கம்பருக்கு அருளிய  நரசிம்மர் : கம்பராமாயணத்தை கம்பர் இங்கு அரங்கேற்றம் செய்தபோது, அதில் நரசிம்மரை பற்றி குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய அறிஞர்கள், ராமாவதாரத்தில் நரசிம்மர் பற்றி சொல்லக்கூடாது என்றனர். கம்பர், "அதை நரசிம்மரே சொல்லட்டும்!' எனச்சொல்லி நரசிம்மரிடம் வேண்டினார். அப்போது நரசிம்மர்,  கர்ஜனையுடன் தூணிலிருந்து வெளிப்பட்டு, "கம்பரின் கூற்று உண்மை!' என ஆமோதித்து  தலையாட்டினார்.மேட்டழகிய சிங்கர் என்றழைக்கப்படும் இவர், தாயார் சன்னதி அருகில் தனிசன்னதியில்  இருக்கிறார். கையில் சங்கு மட்டும் இருக்கிறது, கரம் கிடையாது. சன்னதி எதிரில், கம்பராமாயண அரங்கேற்ற மண்டபம் உள்ளது.

மூன்று பிரம்மோற்ஸவம் : சித்திரை, தை, பங்குனி ஆகிய மாதங்களில் இங்கு பிரம்மோற்ஸவம் நடக்கிறது.சத்தியலோகத்தில் ரங்கநாதருக்கு பிரம்மா நடத்திய விழா பங்குனியில் கொண்டாடப்படுகிறது. இதை, "ஆதி பிரம்மோற்ஸவம்'  என்கின்றனர். இவ்விழாவின் இடையே வரும் உத்திரம் நட்சத்திரத்தில் சுவாமி,  ரங்கநாயகி தாயாருடன் சேர்த்தியாக காட்சி தருகிறார். ரங்கநாதருக்கு, அயோத்தியில் ராமர் கொண்டாடிய விழா, தை மாதம் நடக்கிறது. பூமாதேவியின் பதி ராமர் நடத்திய விழா என்பதால் இவ்விழா, "பூபதி திருநாள்' என்றே அழைக்கப் படுகிறது. இதை ராமனே நடத்துவதாக ஐதீகம்.அமுத கலச கருடாழ்வார் : கோயில் பிரகாரத்தில் அமுத கலசம் ஏந்திய கருடாழ்வாருக்கு சன்னதி இருக்கிறது. அசுரர்களிடம் இருந்து  வேதங்களை மீட்ட பெருமாள், அதனை கருடாழ் வாரிடம் ஒப்படைத்தார். இதன் அடிப்படையில் இவர் கையில், வேதங்களை வைத்திருக்கிறார். இவரது சிலை சாளக்ராமத்தால் ஆனது. கருடாழ்வாருக்கு பருப்பு, வெல்லம், கொழுக்கட்டை படைத்து, மல்லிகைப்பூ மாலை, மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள். கருட பஞ்சமியன்று இவருக்கு விசேஷ பூஜை நடக்கும்.தானியலட்சுமி, அன்னப்பெருமாள் கோயில் பிரகாரத்தில் தானிய லட்சுமிக்கு சன்னதி இருக்கிறது. இவளுக்கு வலப்புறம் கிருஷ்ணர்,  இடதுபுறம் நரசிம்மர் இருப்பது வித்தியாசமான அமைப்பு. சுக்கிர  கிரகத்தால் பாதிக்கப்படும் ஜாதகதாரர்கள் இவளுக்கு வெண்பட்டு, வெள்ளை மலர் அணிவித்து, வெண்மொச்சை தானியம் படைத்து வழிபடுகிறார்கள்.  பிரம்மோற்ஸவத்தின்போது பெருமாள், இவளது  சன்னதி அருகில் எழுந்தருளி நெல் அளக்கும் வைபவம் காண்கிறார். அன்னத்திற்கு அதிபதியான அன்னப்பெருமாள் இக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் இருக்கிறார். கைகளில் கலசம், தண்டம், மற்றும் அன்ன உருண்டை வைத்திருக்கிறார். இவரிடம் வேண்டிக்கொள்ள உணவிற்கு பஞ்சமில்லாத நிலை ஏற்படும் நம்பிக்கை. பெருமாளே அன்னப் பெருமாளாக அருள்பாலிப்பது சிறப்பு.கருடாழ்வாருக்கு 30 மீட்டர் வேஷ்டி! : ரங்கநாதர் சன்னதி எதிரில், கருடாழ்வார் 25 அடி உயரத்தில் விஸ்வரூப காட்சி தருகிறார். அஷ்ட நாகாபரணம் அணிந்துள்ள இவர், இறகுகளை விரித்து கிளம்பத் தயாரான நிலையில் இருக்கிறார். இவருக்கு, 30  மீட்டர் நீளத்தில் வேட்டி அணிவிக்கின்றனர். அபிஷேகம் கிடையாது. வியாழக்கிழமைகளில் கொழுக்கட்டை பிரதானமாக படைக்கப்படுகிறது. இவரது சன்னதி முன்பு சுக்ரீவன், அங்கதன் இருவரும் துவார பாலகர்களாக இருப்பதும், மார்கழி திருவாதிரையில் இவருக்கு திருநட்சத்திர விழா எடுப்பதும் சிறப்பு.

நோய் நீங்க விளக்கெண்ணெய் தீபம்:  மருத்துவக்கடவுளான தன்வந்திரிக்கு இங்கு சன்னதி இருக்கிறது. மார்பில் மகாலட்சுமி, கைகளில் சங்கு, கரம், அமிர்த கலசம் மற்றும் அட்டைப்பூச்சியுடன் காட்சி தருகிறார் இவர். தீராத வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள், இவருக்கு விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றி, தயிர் சாதம் படைத்து வழிபடுகிறார்கள். வெள்ளிக்கிழமைகளில் ரங்கநாதருக்கு புனுகு சாத்தப்படுகிறது. தினமும்  சுவாமிக்கு நைவேத்யத்துடன் சுக்கு, வெல்லக் கலவையையும் படைக்கின்றனர். சுவாமிக்கு ஜீரணமாவதற்காக, இந்த கலவையை தன்வந்திரியே கொடுப்பதாக ஐதீகம். பிரம்மோற்ஸவத்தின் ஏழாம் நாளில், சுவாமிக்கு சூர்ணத்தால்  (மருந்துக்கலவை) அபிஷேகம் செய்யப்படுகிறது.

ஒரே சன்னதியில் மூன்று தாயார் : ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் பெருமாளுடன் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இங்குள்ள ரங்கநாயகி தாயார் சன்னதியில் தாயார் உற்சவராகவும், அவளுக்கு பின்புறம் ஸ்ரீதேவி, பூமாதேவி என வரிசையாகக் காட்சி தருகின்றனர். இத்தகைய அமைப்பில் தாயார்களை தரிசிப்பது அபூர்வம். தாயார் பூஜையில் தீபாராதனை செய்யும்போது மத்தளம், எக்காளம் என்னும் வாத்தியங்கள்  இயகப்படுகின்றன.
    
தல வரலாறு:இத்தல ரங்கநாதர் திருப்பாற்கடலினின்று தோன்றியவர். இவரை பிரம்மா  நெடுங்காலமாக பூஜித்து வந்தார். ரங்கநாதருக்கு  நித்திய பூஜை செய்ய சூரியனை நியமித்தார். சூரிய குலத்தின் வழித்தோன்றலான ராமபிரான் அயோத்தியில் இந்த ரங்கநாதரை வழிபாடு செய்து வந்தார். ராவணன் சீதையை கடத்தி சென்ற போது, அவனிடமிருந்து சீதையை மீட்க விபீஷணன் உதவினான். ராமரின் முடிசூட்டு விழாவை காண வந்த விபீஷணனுக்கு, தான் பூஜித்து வந்த ரங்கநாதரை அளித்தார் ராமர். விபீஷணன் அதை இலங்கைக்கு எடுத்து செல்லும் வழியில் காவிரி ஆற்றங்கரையில் வைத்து ஓய்வெடுத்துவிட்டு திரும்ப எடுக்கும்போது தரையை விட்டு வரவில்லை. அதுகண்டு கலங்கிய விபீஷணனுக்கு அப்பகுதி மன்னன் தர்மவர்மன் ஆறுதல் கூறினான். ரங்கநாதரும் காவிரிக்கரையிலேயேதங்கியிருக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றார். விபீஷணனைத் தேற்றும் பொருட்டு அவர், தாம் விபீஷணன் இருக்கும் தென்திசை இலங்கை நோக்கி பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மசோழனும் இவ்விடத்தில் கோயில் கட்டிவழிபட்டான். அக்கோயில் காலப்போக்கில் வெள்ளப்பெருக்கில் மண்ணில் மறைந்துபோக, தர்ம சோழ மரபில் வந்த கிள்ளி வளவன் இக்கோயிலை சிறப்புற அமைத்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.
    
சிறப்பம்சம்: அதிசயத்தின் அடிப்படையில்: நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மிக அழகிய மண்டபங்களும் திருக்குளங்களும் தனி சந்நிதிகளும் 21 கோபுரங்களும் 7 சுற்று பிரகாரங்களும் உடைய கோயில். இதில் 4ம் பிரகாரம் மிகவும் அதிசயத்தக்க அளவில் உள்ளது. இத்தலத்து ராஜகோபுரம் இந்தியாவின் மிகப்பெரிய ராஜகோபுரம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் உள்ள சில பிரம்மாண்டமான கோயில்களில் இதுவும் ஒன்று
விஞ்ஞானம் அடிப்படையில்: இத்தலத்து ராஜகோபுரம் இந்தியாவின் மிகப்பெரிய ராஜகோபுரம் என்பது குறிப்பிடத்தக்கது.

அருள் மிகு வள்ளலார் கோவில்

அருள் மிகு வள்ளலார் கோவில்
 
மூலவர் : வள்ளலார்
தீர்த்தம் : தீஞ்சுவை தீர்த்தம்
பழமை : 500 வருடங்களுக்குள்
ஊர் : வடலூர்
மாவட்டம் : கடலூர்
மாநிலம் : தமிழ்நாடு
 



திருவிழா : 1872ல், தைப்பூசத்தன்று வள்ளலார் இங்கு ஜோதி தரிசனத்தை துவக்கினார். அன்றிலிருந்து தற்போது வரையில் இவ்விழா இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தன்று மட்டுமே ஞான சபையில் ஏழு திரைகள் விலகிய நிலையில், ஜோதி தரிசனம் காண முடியும். அன்று காலை 6.30 மணி, 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மற்றும் 10 மணி, மறுநாள் காலை 5.30 மணி என ஆறு நேரங்களில் ஏழு திரைகளும் நீக்கப்படும். மாத பூசம் நட்சத்திர நாட்களில் இரவு 8 மணிக்கு, ஆறுதிரைகளை மட்டும் விலக்கி, மூன்று முறை ஜோதி தரிசனம் காட்டுவர்.      
             
தல சிறப்பு:வள்ளலார் 1867, மே 23ல் இங்கு தருமச்சாலை அமைத்து அன்னதானத்தை துவக்கினார். இதற்காக அவர் ஏற்றி வைத்த அடுப்பு, தற்போது வரையில் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது.      
             
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.     
           
முகவரி:அருள்மிகு வள்ளலார் திருக்கோயில் , வடலூர் - 607303. கடலூர் மாவட்டம்.போன்:+91- 4142- 259 250, 94865 47041.     
            
பொது தகவல்:சென்னை கந்தகோட்டம், திருத்தணி,திருவொற்றியூர் வடிவுடையம்மன், சிதம்பரம்உள்ளிட்ட கோயில்களை வள்ளலார்தரிசித்துள்ளார்.

பிரார்த்தனை:நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தீஞ்சுவைதீர்த்தத்தை தலையில் தெளித்துக்கொண்டால் நோய் குணமாகும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்;பிரார்த்தனை:நிறைவேறியவர்கள், தாங்கள் விரும்பிய பொருட்களை காணிக்கையாக செலுத்துகிறார்கள்.     
            
தலபெருமை:    142 வருடங்களாகஅணையாத அடுப்பு: வள்ளலார் 1867, மே 23ல் இங்கு தருமச்சாலை அமைத்து அன்னதானத்தை துவக்கினார். இதற்காக அவர் ஏற்றி வைத்த அடுப்பு, தற்போது வரையில் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது. இது 21 அடி நீளம், 2.5 அடி அகலம் மற்றும் ஆழம் கொண்டது.இந்த அடுப்பை அணைக்கவே கூடாது என்பதற்காக, இங்கு தீப்பெட்டியே வாங்குவதில்லை. இரவு வேளையில் சமையல் செய்யாத வேளையிலும் கூட, நெருப்புஅணையாமல் இருக்க, பணியாளர் ஒருவர் விறகுகளை இடுவார்.  அன்னதானம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து, 142 ஆண்டுகளாக தொடர்ச்சியாக பக்தர்களுக்குஅன்னதானம் வழங்கப்படுகிறது. உணவுதயாரிக்க அரிசி, உப்பு பக்தர்கள் மூலமாகவந்துவிடுகிறது. தினமும் காலை 6 மற்றும் 8 மணி, பகல் 12, மாலை 5 மற்றும் இரவு 8 மணி என ஐந்து முறை அன்னதானம் நடக்கிறது. விசேஷ நாட்களில் நாள் முழுவதும் அன்னதானம்நடக்கும்.

திருக்காப்பிட்ட அறை : வள்ளலார் வடலூர் அருகில் மேட்டுக்குப்பத்திலுள்ள சித்தி வளாகத்தில், 1873 அக்டோபரில் சன்மார்க்க கொடியேற்றி, அடியார்களுக்கு பேருபதேசம் செய்தார். சில நாட்களுக்குப்பின் சித்தி வளாகத்தில் ஒரு தீபம் வைத்து, அந்த ஜோதியை இறைவனாக வழிபடும்படி அறிவுறுத்தினார். 1874, தை 19ல், சித்தி வளாகத்திலுள்ள அறைக்குள் சென்றவர், அருட்பெருஞ்ஜோதியுடன் இரண்டறக் கலந்தார். இந்த அறை, "திருக்காப்பிட்ட அறை' எனப்படுகிறது. தைப்பூசம் முடிந்த இரண்டாம் நாளன்று இந்த அறை திறக்கப்படும். அன்று சத்திய ஞானசபையில் இருந்து, வள்ளலார் இயற்றிய திருஅருட்பாவை ஒரு பல்லக்கில் எடுத்துக்கொண்டு, திருக்காப்பிட்ட அறைக்கு கொண்டு செல்வர். மதியம் 12 மணிக்கு அறை திறக்கப்படும். மாலை 6 மணி வரையில் பக்தர்கள் ஜன்னல் வழியாக, வள்ளலார் சித்தியடைந்த அறையைத் தரிசிக்கலாம்.

வள்ளலாரின் கையெழுத்து: சத்திய தருமச்சாலையிலுள்ள வள்ளலார் சன்னதியில், அவரது விக்ரகம் இருக்கிறது. கடுக்காய் மையில் அவர் எழுதிய அருட்பெருஞ்ஜோதி அகவல் புத்தகம், அவர் ஏற்றிய ஜோதி மற்றும் ஞான சிம்மாசனம் ஆகியவை இங்கு உள்ளன.

மீசை வைத்த வள்ளலார் : வள்ளலார், கருங்குழியில் திருவேங்கடம் என்பவரின் வீட்டில் ஒன்பது ஆண்டுகள் தங்கியிருந்தார். இங்குதான் திருஅருட்பாவின் முதல் நான்கு திருமுறைகளை வெளியிட்டார். வள்ளலார், வெளிச்சத்திற்கு ஒரு விளக்கு வைத்துக்கொண்டு, இரவு நெடுநேரம் எழுதுவார். ஒருசமயம் திருவேங்கடத்தின் மனைவி, நீர் ஊற்றிய எண்ணெய் கலயத்தை வள்ளலார் அருகில் வைத்துச் சென்று விட்டார். வள்ளலார் அத்தண்ணீரை விளக்கில் ஊற்ற அது அணையாமல் எரிந்தது. வள்ளலார், கருங்குழியில் வசித்தபோது மீசையுடன் இருந்ததன் அடிப்படையில், இங்கு மீசையுடன் காட்சி தரும் வள்ளலார் படம் வைத்துள்ளனர்.

நித்ய அன்னதானம்: கருங்குழியிலிருந்து மேட்டுக்குப்பம் செல்லும் வழியில் தீஞ்சுவை நீரோடை இருக்கிறது. தண்ணீர் பஞ்சம் இல்லாதிருக்க வள்ளலார் உருவாக்கிய ஓடை இது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தீர்த்தத்தை தலையில் தெளித்துக்கொள்கிறார்கள். இதற்கு அருகில், "வள்ளலார் தீஞ்சுவை நீரோடை தருமச்சாலை' இருக்கிறது. இங்கு எந்த நேரத்திலும், எவ்வளவு நபர்கள் வந்தாலும் தொடர்ச்சியாக அன்னம்பரிமாறப்படுகிறது.

பசியாறும் பறவைகள்: மருதூரில் ராமலிங்க அடிகளார் பிறந்த வீட்டில், அவரது வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை ஓவியங்களாக வைத்துள்ளனர். இம்மண்டபத்தில் நெற்கதிர்கள்,தானியங்களை கட்டி தொங்க விட்டிருக்கின்றனர். இங்கு வரும் பறவைகளும்கூட, பசியாற வேண்டுமென்பதற்காகவே இந்த ஏற்பாடு. சத்திய தருமச்சாலையில் சமைக்கப்படும் உணவு, முதலில் காகங்களுக்குவைக்கப்பட்ட பிறகே பக்தர்களுக்கு பரிமாறப்படும்.

ஆதரவு மையம்:  தருமச்சாலை அருகில், வள்ளலாரின்சீடர் கல்பட்டு ஐயா ஜீவசமாதி இருக்கிறது. அந்திமக்காலத்தை நெருங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு இங்கு ஆதரவு மையம்செயல்படுகிறது. இவர்களை தாய்மைஉள்ளத்துடன் பராமரிக்கிறார்கள். வள்ளலார் கூறிய மந்திரமான, "அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி' எனச்சொல்லி இங்கு வழிபடுவது விசேஷம். வள்ளலாரின் மாணவர் தொழூர் வேலாயுதம்,ஒளியான அருளைத் தரும் வள்ளல் என்ற பொருளில், "திருஅருள்பிரகாச வள்ளலார்' எனக் குறிப்பிட்டார். இதன் பிறகே இவருக்கு, "வள்ளலார்' என்ற பெயர் ஏற்பட்டது. மனிதன் தினமும் 21 ஆயிரத்து 600 முறை சுவாசிப்பதன் அடிப்படையில் சத்திய ஞான சபையைச் சுற்றிலும் இதே எண்ணிக்கையில், கண்ணிகள் தொடுக்கப்பட்ட சங்கிலி கட்டப்பட்டுள்ளது. அனைத்து தீபங்களுக்கும், தேங்காய் எண்ணெய் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. வள்ளலாரின் உண்மையான படம் எடுக்கப்பட்டதில்லை. ஜோதி தேகமான அவர் வெண்மையானவஸ்திரம் அணிந்திருந்ததை கருத்தில் கொண்டு,தற்போதிருக்கும் படம் வெளியிடப்பட்டுள்ளது.

தல வரலாறு:தாயின் குணம் : கடலூர் மாவட்டம், மருதூரில் வாழ்ந்த ராமைய்யா, சின்னம்மை தம்பதியின் மகனாக 1823ம் ஆண்டு பிறந்தவர் ராமலிங்கம். தினமும் ஒரு அடியாருக்கு அன்னமிட்ட பிறகு சாப்பிடுவது சின்னம்மையின் வழக்கம். தாயின் இந்த குணம், பிள்ளைக்கும் ஏற்பட்டது. இதுவே பிற்காலத்தில் அவர் ஏழைகளுக்கு அன்னமிடும் சேவை செய்ய தருமச்சாலை அமைப்பதற்கு அடித்தளமாக அமைந்தது.

எண்கோண வடிவ சபை: இறைவன் ஒளி வடிவில் அருளுகிறார் என்பதை உணர்த்த வடலூரில் வள்ளலார் சத்திய ஞான சபையை உருவாக்கி னார். எண்கோண வடிவில் தாமரை மலர் போன்று அமைந்த இச்சபையின் முன்பகுதியில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது. தினமும் காலை 11.30 மணி மற்றும் இரவு 7.30க்கு நடக்கும் பூஜையின் போது இந்த தீபத்துக்கும், இதன் பின்புறமுள்ள திரைகளுக்கும் பூஜை நடக்கும். பின்பு, முன் மண்டபத்திலிருக்கும் சிற்சபை, பொற்சபையில் தீபாராதனை செய்யப்படும். ஞானசபையின் நுழைவு வாயிலில், "புலை கொலை தவிர்த்தோர் மட்டுமே உள்ளே புகுதல் வேண்டும்' (மாமிசம் உண்ணாதவர்கள்) என்று எழுதப் பட்டிருக்கிறது. அசைவத்தை நிறுத்த விரும்புவோர் இதனுள் சென்று வருகின்றனர். இச்சபையில் வள்ளலார் இயற்றிய "அருட்பெருஞ்ஜோதி அகவல்' பொறிக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சம்:    அதிசயத்தின் அடிப்படையில்: வள்ளலார் 1867, மே 23ல் இங்கு தருமச்சாலை அமைத்து அன்னதானத்தை துவக்கினார். இதற்காக அவர் ஏற்றி வைத்த அடுப்பு, தற்போது வரையில் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது.

அருள் மிகு யோகிராம்சுரத்குமார் கோவில்

அருள் மிகு யோகிராம்சுரத்குமார் கோவில்


 
மூலவர்    :யோகி ராம்சுரத்குமார்
பழமை    :100 வருடங்களுக்குள்
ஊர்    :திருவண்ணாமலை
மாவட்டம்    :திருவண்ணாமலை
மாநிலம்    :தமிழ்நாடு
 
திருவிழா:மாசி மாதம் தேய்பிறை துவாதசி      
             
தல சிறப்பு:இங்குள்ள வேதபாடசாலையில் ராம்சுரத்குமாரின் உயிர் பிரியும் நிலையில், இத்தாலியில் செய்யப்பட்ட மார்பிள் சிலையும் உள்ளது.      
             
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.     
           
முகவரி:யோகி ராம்சுரத்குமார் ஆசிரமம் திருவண்ணாமலை கிரிவலப்பாதை திருவண்ணாமலை - 606 601.போன்:+91 4175 237 567, 94875 83557     
            
பொது தகவல்:இவரது ஆசிரமத்திற்கு அருகில், ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள் ஆகியோரது ஆசிரமங்கள் உள்ளது.      
             
பிரார்த்தனை:மன நிம்மதி வேண்டி இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.     
            
நேர்த்திக்கடன்:ஆசிரம வளர்ச்சிப்பணிக்காக நிதியுதவி செய்யலாம்.     
            
தலபெருமை:    தினமும் மூன்று வேளையும் இங்கு அன்னதானம் நடக்கிறது. முகப்பில் பிரமிடு வடிவ வரவேற்பு மண்டம் உள்ளது. ஆசிரமத்தில் யோகிராம்சுரத்குமார் முக்தி பெற்ற இடத்தில் ஒரு லிங்கமும், முன் மண்டபத்தில் உயிரோட்டத்துடன் தத்ரூபமாக வடிக்கப்பட்ட மூன்று சிலைகளும் உள்ளன. இதற்கு பின்புறம் அவர் சித்தியடைந்த இடத்தில், அவர் பயன்படுத்திய பொருட்கள் உள்ளன. இங்குள்ள வேதபாடசாலையில் ராம்சுரத்குமாரின் உயிர் பிரியும் நிலையில், இத்தாலியில் செய்யப்பட்ட மார்பிள் சிலையும் உள்ளது.      
             
தல வரலாறு:சிலர் வெளிமுகமாகவும், இன்னும் சிலர் உள்முகமாகவும் இறையனுபவம் பெறுகின்றனர். அதோ, அந்த தூணுக்கு கீழே நிற்கிறாரே, அவர் உள்முகமாக இறையனுபவம் பெற்றவர். அவர் உண்மையானவர்'' - இப்படி அந்த மகான் தன்னைப் பற்றிக் குறிப்பிடுவார் என்று யோகி ராம்சுரத்குமார் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஒருசமயம் காஞ்சிமகாபெரியவரை சந்திக்கச் சென்று, கூட்டத்தின் கடைசியில் ஒரு ஓரமாக நின்றிருந்தபோதுதான், பெரியவர் இப்படிச் சொல்லி அவரை அழைத்தார். கங்கை கரையில் நர்த்தரா என்ற ஊரில் வசித்த ராம்தத்குன்வர், குஸும்தேவி தம்பதியினருக்கு, 1918 டிசம்பர் 1ல் பிறந்தவர் ராம்சுரத்குன்வர். "ராமன் மீது அன்புள்ள குழந்தை' என்பது இதன் பொருள். இவர் சிறு வயதில் ஒரு குருவி மீது விளையாட்டாக கயிறை வீச, அது கயிறின் பாரம் தாங்காமல் உயிரை விட்டது. இந்த சம்பவம் ராம்சுரத்குன்வரை பெரிதும் பாதித்தது. பிறப்பு, இறப்பு பற்றி சிந்தித்தவர், விடைதேடி காசி சென்றார். பின், குருவின் மூலமாக இறையனுபவம் பெற விரும்பியவர், திருவண்ணாமலையில் ரமணர், புதுச்சேரியில் அரவிந்தரை சந்தித்தார். அதன்பின், கேரளாவில் பப்பாராம்தாஸ் சுவாமியிடம் சென்றார். அவர், ""ஓம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்'' என்ற மந்திரத்தை உபதேசித்தார். அதை இடைவிடாமல் உச்சரித்தவர் புதிதாகப் பிறந்ததைப் போல் உணர்ந்தார். பல தலங்களுக்கும் யாத்திரை சென்றவர், 1959ல் திருவண்ணாமலை வந்தார். யோகிராம்சுரத்குமார் என்று அறியப்பட்டவர், தன்னை பிச்சைக்காரன் என்றே அடையாளப்படுத்திக் கொண்டார். கையில் ஒரு கொட்டாங்குச்சி (தேங்காய் சிரட்டை) மற்றும் விசிறி வைத்துக் கொண்டதால் "விசிறி சாமியார்' என்றே அழைக்கப்பட்டார்.

18 ஆண்டுகள் கிரிவலப் பாதையிலும், ரோட்டோரத்திலும், ரயில்வே ஸ்டேஷனிலுமாக தங்கியவர், பக்தர்களின் விருப்பத்திற்காக இங்கு தாமரை வடிவில் ஆசிரமம் கட்டினார். தினமும் மூன்று வேளையும் இங்கு அன்னதானம் நடக்கிறது. முகப்பில் பிரமிடு வடிவ வரவேற்பு மண்டம் உள்ளது. ஆசிரமத்தில் யோகிராம்சுரத்குமார் முக்தி பெற்ற இடத்தில் ஒரு லிங்கமும், முன் மண்டபத்தில் உயிரோட்டத்துடன் தத்ரூபமாக வடிக்கப்பட்ட மூன்று சிலைகளும் உள்ளன. இதற்கு பின்புறம் அவர் சித்தியடைந்த இடத்தில், அவர் பயன்படுத்திய பொருட்கள் உள்ளன. இங்குள்ள வேதபாடசாலையில் ராம்சுரத்குமாரின் உயிர் பிரியும் நிலையில், இத்தாலியில் செய்யப்பட்ட மார்பிள் சிலையும் உள்ளது. "பெயரைச் சொன்னால் நீங்கள் திரும்புவதைப்போல, இறைவனும் அவர் பெயரைச் சொல்லும்போது திரும்பிப் பார்க்கிறார். ஆகவே, இறைவனாகிய அப்பாவின் பெயரைச் சொல்லி கூப்பிடுங்கள். உங்கள் விருப்பத்தை அவர் நிறைவேற்றி வைப்பார். இதற்காக தனியே பிரார்த்தனை செய்யத் தேவையில்லை' என அருளாசி வழங்கிய யோகி ராம்சுரத்குமார், மாசி மாதம் தேய்பிறை துவாதசி நாளில் முக்தியடைந்தார்.

அருள் மிகு திருக்காமீஸ்வரர் கோவில்

அருள் மிகு திருக்காமீஸ்வரர் திருக்கோவில்
 



மூலவர் : திருக்காமீஸ்வரர் (காமேஸ்வரர், மிரமீஸ்வரர், நரசிங்கநாதர், நடுவழிநாதர், வைத்திய நாதர், வில்வனேசர் )

தாயார் :  கோகிலாம்பிகை (குயிலம்மை, முத்தம்மை)
தல விருட்சம்  :  வில்வம்
தீர்த்தம் :  பிரம்ம தீர்த்தம், ஹிருத்தாப நாசினி.
பழமை : 1000வருடங்களுக்கு முன்
புராண பெயர் : வில்வநல்லூர்
ஊர் :  வில்லியனூர்
மாவட்டம்  :  புதுச்சேரி
மாநிலம் :  புதுச்சேரி
 
திருவிழா:சித்ரா பவுர்ணமி, வைகாசி சுவாதி பிரம்மோற்சவம், தேர்த்திருவிழா. ஆனித் திருமஞ்சனம். ஆடிப்பூரத்தில் அம்மனுக்கு பிரம்மோற்சவம், ஐப்பசி கந்தசஷ்டி, அன்னாபிஷேகம். கார்த்திகை லட்ச தீபம்.      
             
தல சிறப்பு:இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பங்குனி 9,11, 19ல் சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலவர் மீது படுகிறது. திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், சுகப்பிரசவம் வேண்டுபவர்களும் பிரசவ நந்தியிடம் வேண்டிக் கொண்டு அந்த நந்தியை, தங்கள் வீடு இருக்கும் திசை நோக்கி மாற்றி வைக்கின்றனர். தங்களது கோரிக்கை நிறைவேறியதும் பூஜை செய்து நந்தியை மீண்டும் திசை மாற்றி வைக்கின்றனர்.      
             
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.     
           
முகவரி:அருள்மிகு கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் திருக்கோயில், வில்லியனூர் - 605 110 புதுச்சேரி,போன்:+91-413-266 6396.     
            
பொது தகவல்:ஆடிப்பூரத்தில் இத்தல அம்மனுக்கு பிரம்மோற்சவம் நடக்கிறது.

பிரார்த்தனை:குஷ்ட நோயால் பாதிக்கப் பட்டவர்கள் இத் தல தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டால் குணமடையும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்     
            
தலபெருமை:பொதுவாக கோயில்களில் தீபாராதனையின் போது "ஓம் ராஜாதி ராஜாயப்ரசஹ்ய ஸாகினே' என்ற மந்திரம் கூறி தீபாராதனை காட்டுவார்கள். இந்த மந்திரத்தில் "காமேஸ்வரோ'  என்ற வார்த்தை வரும். இவரை தரிசிக்க வேண்டுமானால் புதுச்சேரி அருகிலுள்ள வில்லியனூர் கோகிலாம் பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோயிலுக்கு செல்ல வேண்டும். எந்தக்கோயிலில் இறைவனை வழிபட்டாலும் அதில் காமேஸ்வரரின் திருநாமம் உச்சரிக்கப்படும்.

சிறப்பம்சம்: சோழநாட்டில் கமலாபுரி என்ற நகரை தருமபால சோழன் ஆண்டு வந் தான். இவனது முன் ஜென்ம பயனால் வெண் குஷ்டம் ஏற்பட்டது. இந்த நோய் நீங்க இத்தல குளத்தில் நீராடி சிவனை வழிபட்டு குணம் பெற்றான். எனவே வில்வவனமாக இருந்த இங்கு ஒரு நகரை உருவாக்கி, சிவனுக்கு கோயில் கட்டி வில்வநல்லூர் என பெயரிட்டான். இதுவே காலப்போக்கில் வில்லியனூர் ஆனது. தேவாரத்தில் இத்தலம் வைப்புத்தலமாக விளங்குகிறது.

பிரசவ நந்தி: இத்தலத்தின் மற் றொரு சிறப்பம்சம் பிரசவ நந்தி அருள் பாலிப்பது தான். பொதுவாக சிவாலயங்களில் உள்ள அம்மனின் முன்பு அம்மனை நோக்கி நந்தி அமர்ந்திருக்கும். இத்தலத்திலும் அதே போல் இருந்தாலும் அந்த நந்திக்கு முன்பு ஒரு சிறிய நந்தியும் இருக்கிறது. இதுவே பிரசவ நந்தியாகும். இங்குள்ள பைரவர் நாய் வாகனம் இல்லாமல் அருள்பாலிப்பதால் இத்தலம் முக்தி தலமாக விளங்குகிறது. உயரமான தேரும் இங்குள்ளது.

சுயம்பு மூர்த்தியான இத் தல இறைவனை பங்குனி 9, 19,11ல் சூரியபகவான் ஒளிக் கற்றை வீசி வணங்குகிறார். இத்தல இறைவனை பிரம் மன், நரசிம்மன், இந்திரன், சூரியன், ஆதிசேடன், மன்மதன், சந்திரன், தருமபாலன், சகலாங்க சவுந்தரி, கோவிந் தன் ஆகியோர் பூஜித்துள்ளனர். பிரம்மனுக்கும்,  திருமாலுக்கும் சிவபெருமான் ஞாயிறு பவுர்ணமி தினத்தில் காட்சி கொடுத்தார். எனவே தான் இன்றும் கூட ஞாயிற்றுக் கிழமைகளில் வரும் பவுர்ணமியில் இங்கு வந்து பிரார்த் தனை செய்தால் வேண்டியது கிடைக்கும் என்பது ஐதீகம்.
    
தல வரலாறு:முன்னொரு காலத்தில் பிரம்மனுக்கும், விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. இதனால் இருவரும் சிவனிடம் சென்று முறையிட்டனர். சிவன், தனது அடியையும் முடியையும் யார் முதலில் தரிசிக்கிறார்களோ அவரே பெரியவர் என்று கூறினார். இதில் பிரம்மன் செய்த தவறால் அவருக்கு சாபம் ஏற்பட்டது. வருத்தப்பட்ட பிரம்மன் சிவனிடம் தனது பாவத்தை போக்கும்படி வேண்டினார். சிவனும், ""தொண்டை நாட்டில் முத்தாறு நதிக்கரையில் வில்வ வனம் படைத்து சிவ பூஜை செய்தால் சாபம் நீங்கும்'' என கூறி மறைந்தார். பிரம்மனும் சிவன் கூறியபடி பிரம்ம தீர்த்தம் உண்டாக்கி இத்தலத்தில் சிவ பூஜை செய்து சாபத்திலிருந்து விடுபட்டார்.

அருள் மிகு வீரராகவப்பெருமாள் கோவில்

அருள் மிகு வீரராகவப்பெருமாள் திருக்கோயில்
 



மூலவர் :வீரராகவப்பெருமாள்
உற்சவர் :ஸ்ரீதேவி, பூதேவியுடன் வீரராகவப்பெருமாள்

தாயார் :கனவகவல்லி
ஆகமம் பூஜை  :பாஞ்சராத்ரம்
பழமை : 1000 வருடங்களுக்கு முன்
ஊர் :மதுரை
மாவட்டம் :மதுரை
மாநிலம் :தமிழ்நாடு
 
திருவிழா:சித்ராபவுர்ணமி, ஆடிப்பூரம், நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரம்.   
       
தல சிறப்பு:மதுரை வைகை ஆற்றில் சித்ராபவுர்ணமியன்று இறங்கும் கள்ளழகர் தரும் முதல் மரியாதையை பெரும் பெருமாள் இவர். பெருமாள் இத்தலத்தில் நின்ற கோலத்தில் வீரராகவப்பெருமாளாகவும், கிடந்த கோலத்தில் ரங்கநாதராகவும், அமர்ந்த கோலத்தில் யோக நரசிம்மராகவும் மூன்று நிலைகளில் அருளுகிறார்.   
       
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.  
     
முகவரிஅருள்மிகு வீரராகவப்பெருமாள் திருக்கோயில், வீரராகவப்பெருமாள் கோயில் தெரு, எழுத்தாணிக்காரத் தெரு சந்திப்பு, தெற்கு மாசி வீதி, மதுரை-625 001. போன்:+91 452 2338542  
      
பொது தகவல்:சொக்கப்ப நாயக்கர் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்து. தாயார் கனகவல்லி, ஆண்டாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் பள்ளிகொண்ட ரங்கநாதர், சக்கரத்தாழ்வார், கருடன், ஆஞ்சநேயர், மணவாள மாமுனிகள், நவக்கிரகங்களுக்கு சன்னதி உள்ளது. பெருமாளுக்கு உகந்தது சனிக்கிழமை தான் என்றாலும், இத்தலத்தில் வெள்ளிக்கிழமையன்று தான் பக்தர்கள் கூட்டம் அதிகமிருக்கும்.
 
பிரார்த்தனை:புத்திரபாக்கியம், திருமணம், தொழில் விருத்தி, வழக்கில் வெற்றி, சத்ரு பயம் நீங்க, நவக்கிரக தோஷம் விலக, கணவன் மனைவி கருத்து வேறுபாடு நீங்க இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.  
      
பிரார்த்தனை நிறைவேற வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஓரையில் இரவு 8 - 9 மணிக்குள் ரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. பவுர்ணமியன்று வீரராகவப்பெருமாளுக்கும், அமாவாசை தோறும் இக்கோயிலில் உள்ள பள்ளி கொண்ட ரங்கநாதருக்கும் திருமஞ்சனம் நடக்கிறது.  
      
தலபெருமை:வீரராகவப்பெருமாள்: வைகை ஆற்றில் மஞ்சள் நிற தங்கக்குதிரையில் அழகர் இறங்குவார். அதற்கு முன்னதாக, வெள்ளிக் குதிரையில் வரும் வீரராகவப் பெருமாள் ஆற்றில் இறங்கி, வையாழி நடைபயில்வார்.முன்னும் பின்னும் ஆடிக்கொண்டு செல்வதையே இப்படி சொல்வர். "அண்ணா வாரும்' என கள்ளழகரை ஆற்றிற்குள் அழைத்து வருவார்.ஆற்றில் நடுமண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளும்போது, அவரை வீரராகவப்பெருமாள் மூன்று முறை சுற்றி வருவார். அவருக்கு கள்ளழகர் சார்பாக தீர்த்தம், பரிவட்டம், மாலை என முதல் மரியாதை செய்யப்படுகிறது.அதன்பின் வீரராகவப்பெருமாள் ஆற்றில் உள்ள நடு மண்டபத்தில் இருந்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்.

தல வரலாறு:பல்லாண்டுகளுக்கு முன்பு, சோழவந்தான் அருகிலுள்ள தேனூரில் தான் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா நடந்தது. அக்காலகட்டங்களில் பெருமாளுக்குரிய உற்சவ மண்டபங்கள் நெற்கதிர் கால்களைக்கொண்டு அமைக்கப்படும். ஒரு முறை கள்ளழகர் இந்த மண்டபத்தில் எழுந்தருளியபோது திடீரென தீப்பிடித்து விட்டது. அங்கிருந்த அரசர் உள்ளிட்ட அனைவரும் தள்ளி நின்றனர்.ஆனால், அமுதார் என்ற அர்ச்சகர், தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தீயில் சூழ்ந்த கள்ளழகர் சிலையைத் தூக்கி, ஆற்று மணலில் போட்டுவிட்டு மயங்கி விழுந்தார்.இதைக்கண்ட அரசன், ""அமுதாரே! நான் ஆண்டாண்டு காலமாக கள்ளழகரின் தீவிர பக்தனாக உள்ளேன். அத்துடன் இவ்விழாவில் முதல் மரியாதையும் எனக்கு கிடைக்கிறது. அப்படியிருந்தும் கூட அழகரை காப்பாற்றாமல் என் உயிரையே பெரிதெனக் கருதி ஒதுங்கி நின்றேன்.நீங்களோ உயிரையும் பொருட்படுத்தாமல் பெருமாளை காப்பாற்றி விட்டீர்கள். எனவே இவ்வாண்டு முதல் எனக்குத் தரப்பட்ட முதல் மரியாதையை தாங்களே பெற வேண்டும்'' என கேட்டுக்கொண்டார்.அதற்கு அமுதார்,""அரசே! நான் மிகச் சாதாரணமானவன். முதல் மரியாதையைப்பெறும் தகுதி எனக்கு இல்லை. நான் அர்ச்சகராக சேவை செய்யும் வீரராகவப்பெருமாளுக்கு, கள்ளழகரின் முதல் மரியாதை கிடைக்குமாறு செய்யுங்கள்,''என வேண்டினார். அவரது விருப்பப்படியே கள்ளழகர் வைகை ஆற்றில் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளும் போது, மதுரை வீரராகவப்பெருமாளுக்கு முதல் மரியாதை தரப்பட்டது.பின்னர் மதுரை வைகை ஆற்றின் வடகரைக்கு இவ்விழா மாற்றப்பட்ட பிறகும் இந்த மரியாதை தொடர்கிறது.

சிறப்பம்சம்: அதிசயத்தின் அடிப்படையில்: மதுரை வைகை ஆற்றில் சித்ராபவுர்ணமியன்று இறங்கும் கள்ளழகர் தரும் முதல் மரியாதையை பெரும் பெருமாள் இவர். பெருமாள் இத்தலத்தில் நின்ற கோலத்தில் வீரராகவப் பெருமாளாகவும், கிடந்த கோலத்தில் ரங்கநாதராகவும், அமர்ந்த கோலத்தில் யோக நரசிம்மராகவும் மூன்று நிலைகளில் அருளுகிறார்.

அருள் மிகு லக்ஷ்மி நாராயண பெருமாள் கோவில்

அருள்மிகு லட்சுமிநாராயணர் திருக்கோயில்
 



மூலவர்    :     லட்சுமிநாராயணர்
உற்சவர்    :     வெங்கடேசப்பெருமாள்

தாயார்    :     ஸ்ரீதேவி, பூதேவி
பழமை    :     500 வருடங்களுக்குள்
ஊர்    :     வரகூர்
மாவட்டம்    :     தஞ்சாவூர்
மாநிலம்    :     தமிழ்நாடு
 
திருவிழா:கிருஷ்ண ஜெயந்தி      
             
தல சிறப்பு:லட்சுமி நாராயணர், வராகமூர்த்தி, கண்ணன் என மூன்று கோலங்களில் பெருமாள் இத்தலத்தில் அருள்புரிகிறார்.      
             
திறக்கும் நேரம்:காலை 5.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.15 மணி வரை திறந்திருக்கும்.     
முகவரி:அருள்மிகு லட்சுமிநாராயணர் திருக்கோயில், வரகூர்-613 101 தஞ்சாவூர் மாவட்டம்.போன்:+91 4362 280 392, 94879 92680, 94428 52145     
            
பொது தகவல்:இவ்வூரில் வசித்த ஆனைபாகவதர், சுவாமி மீது பல கீர்த்தனங்கள் இயற்றியுள்ளார். நாராயணகவி என்ற பக்தர் இங்கு நடக்கும் உறியடித் திருவிழாவை "கிருஷ்ண சிக்யோத்ஸவம்' என்ற பிரபந்தம் பாடியுள்ளார்.
    
பிரார்த்தனை:குழந்தை பாக்கியம் இல்லாதோர், சுவாமி பாதத்தில் வெள்ளிக்காப்பு வைத்து வேண்டி, அதை அணிந்து கொள்கின்றனர்.     
            
நேர்த்திக்கடன்:சுவாமி பாதத்தில் வைத்து வேண்டிய வெள்ளிக்காப்பை குழந்தை பிறந்ததும் காணிக்கையாக செலுத்தி விடுகின்றனர்.     
            
தலபெருமை:    மூலஸ்தானத்தில் லட்சுமி நாராயணர், பத்ம விமானத்தின் கீழ், இடது மடியில் மகாலட்சுமியை அமர்த்தி அமர்ந்திருக்கிறார். இவருக்கு தினமும் திருமஞ்சனம் உண்டு. ஸ்ரீதேவி, பூதேவியுடன் உள்ள உற்சவர் வெங்கடேசப்பெருமாள் பிரசித்தி பெற்றதால், இவரது பெயரால் கோயில் அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் துளசி, ஏலக்காய், பச்சைக்கற்பூரம், சாதிக்காய், கிராம்பு உள்ளிட்ட மூலிகைகள் சேர்த்து இடித்த பொடியை பிரசாதமாகத் தருகின்றனர்.

கிருஷ்ண ஜெயந்தி விழா: நாராயண தீர்த்தருக்கு சுவாமி, கிருஷ்ணராகக் காட்சி தந்ததால் இங்கு கிருஷ்ண ஜெயந்தி விழா மிக விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால், இங்கு கிருஷ்ணருக்கென சிலை வடிவம் எதுவும் கிடையாது. லட்சுமி நாராயணரையே கிருஷ்ணராக பாவித்து வழிபடுகிறார்கள்.கோகுலாஷ்டமியன்று சுவாமி மடியில் குழந்தை கிருஷ்ணரை வைத்து, பெருமாளையே யசோதையாக அலங்கரிப்பர். பின், கிருஷ்ணர் பிறப்பு பற்றிய சொற்பொழிவு நடக்கும். இவ்வேளையில் சுவாமிக்கு முறுக்கு, சீடை, தட்டை, பழம் மற்றும் இனிப்பு பதார்த்தங்கள் நைவேத்யமாகப் படைப்பர். மறுநாள் காலையில் சுவாமி கடுங்கால் மண்டபத்திற்கு எழுந்தருளுவார். அன்று இரவில் அவர் வெண்ணெய்க் குடத்துடன் தவழும் கண்ணனாக, கோயிலுக்குத் திரும்புவார். இவ்வேளையில், பக்தர்கள் அவரை பின்தொடர்ந்து வீதிகளில் அங்கபிரதட்சணம் வருவர். அப்போது, ஒரு வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்ட சிறுவர்கள் "உறியடியோ கோவிந்தோ' என்று கூச்சலிடுவர். அதாவது, கண்ணனின் அழகைக்காக கொட்டகையில் அடைக்கப்பட்ட பசு, கன்றுகளை நினைவுபடுத்தும் வகையில் இவ்வாறு செய்கின்றனர். இவ்வேளையில் முறுக்கு, தட்டை, சீடைகள் வைத்த மண்பானையுடன் உள்ள மூங்கில் கூடை கட்டப்பட்டிருக்கும் கொடிமரத்தில் உறியடி உற்சவம் நடக்கும். பின், சுவாமி வழுக்கு மரம் உள்ள இடத்திற்குச் செல்வார். வழுக்கு மரம் ஏறும் வைபவம் முடிந்ததும் சுவாமி, கோயிலுக்குத் திரும்புவார். மறுநாள் கிருஷ்ணர் ருக்மிணி திருமணம் நடக்கும்.

விசேஷங்கள்: சுவாமியே இங்கு பிரதானம் என்பதால் பரிவார மூர்த்திகள் கிடையாது. மாட்டுப்பொங்கலன்று இவர் குதிரை வாகனத்தில் புறப்பாடாவார். கூர்ம, வராகம், நரசிம்மம், பலராமர் ஜெயந்தி நாட்களில் சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனத்துடன், புறப்பாடும் உண்டு. ராமநவமி விழா, ராதா கல்யாண விழாவும் இங்கு விசேஷம். குழந்தை பாக்கியம் இல்லாதோர், சுவாமி பாதத்தில் வெள்ளிக்காப்பு வைத்து வேண்டி, அதை அணிந்து கொள்கின்றனர். குழந்தை பிறந்ததும் அதை காணிக்கையாக செலுத்தி விடுகின்றனர்.

தல வரலாறு:மகாவிஷ்ணு, தாமாகத்தோன்றி அருள்புரிந்த தலங்கள் சுயம்வியக்த சேத்ரம் எனப்படும். அவ்வகையில் மகாவிஷ்ணு இங்கு லட்சுமி நாராயணராக எழுந்தருளினார். ஆந்திராவில் வசித்த நாராயண தீர்த்தர் என்ற மகான், தீராத வயிற்று வலியால் பாதிக்கப்பட்டிருந்தார். நோய் தீர பெருமாள் தலங்களுக்கு யாத்திரை வந்தார். இப்பகுதிக்கு வந்தவர் ஓர்நாள் இரவில் நடுக்காவிரி என்ற இடத்திலிருந்த ஒரு விநாயகர் கோயிலில் தங்கினார். அன்றிரவில் அவரது கனவில் தோன்றிய முதியவர் ஒருவர், "நாராயணா! நாளை காலையில் நீ முதலில் காணும் உயிரைப் பின்தொடர்ந்து வா! உன் பிணி தீரும்' என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார். மறுநாள் காலையில் நாராயண தீர்த்தர் எழுந்தபோது, அவர் எதிரே ஒரு வெண் பன்றி வந்தது. அதைக்கண்டவர் தான் கனவில் கண்டபடி, பன்றியை பின்தொடர்ந்தார். அது, இக்கோயிலுக்குள் சென்று மறைந்தது. வராக அவதாரம் எடுத்த பெருமாளே, தனக்கு வராகத்தின் வடிவில் வந்து அருள்புரிந்ததை அறிந்த மகான் சுவாமியை வணங்கினார். மகிழ்ச்சியில் சுவாமியைப் போற்றி கீர்த்தனை பாடினார். அப்போது, இங்கிருந்த லட்சுமி நாராயணர் அவருக்கு ருக்மிணி, பாமாவுடன் கிருஷ்ணராகக் காட்சி கொடுத்தார். பாமா அவரிடம், "பக்தா! உம் பரமாத்மா கோபிகையருடன் புரிந்த லீலைகளைப் பாடு!' என்றாள். மகிழ்ந்த நாராயண தீர்த்தர், அவ்வாறே பாடினார். "கிருஷ்ண லீலா தரங்கிணி' என்ற அற்புத பாசுரம் கிடைத்தது. சுவாமி வராகராக காட்சி தந்ததால் ஊருக்கு "வரகூர்' என்ற பெயர் ஏற்பட்டது.     

வான்மீகர்

வான்மீகர்

வான்மீகர் முனிவர் புரட்டாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 700 ஆண்டுகள் 32 நாள் ஆகும்.


நம்மாழ்வார்

 11. நம்மாழ்வார்

பிறந்த இடம் : ஆழ்வார் திருநகரி(தூத்துக்குடி மாவட்டம்)
தந்தை : காரி
தாய் : உடையநங்கை
பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி, வைகாசி 12
நட்சத்திரம் : வைகாசி விசாகம் (பவுர்ணமி திதி)
கிழமை : வெள்ளி
எழுதிய நூல் : பெரிய திருவந்தாதி, திருவிருத்தம், திருவாசிரியம்,திருவாய்மொழி
பாடல்கள் : 1296
சிறப்பு : திருமாலின் படைத்தலைவரான விஷ்வக்சேனரின்  அம்சம்
பிற பெயர்கள் : மாறன், ஸடகோபன், குருகையர்கோன், வகுளாபரணன், பராங்குஸன்

வைணவத்தில் ஆழ்வார் என்றாலே அது நம்மாழ்வரைத் தான் குறிக்கும். வடமொழியின் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களுக்கு ஒப்பான திருவாய் மொழி உள்ளிட்ட நான்கு தமிழ் பிரபந்தங்களை அருளியவர் நம்மாழ்வார். ஆழ்வார் அவதரிக்கும் போது ஆத்ம ஞானத்தை மறைக்கிறசடம் என்னும் காற்று தம்மை நெருங்க அதனைக் கோபித்துக் கொண்டார். அதனாலேயே இவருக்கு சடகோபன் என்கிற பெயர் உண்டாயிற்று. மேலும் இவருக்கு பராங்குரர், வகுளாபரணர் என்ற பெயர்களும் உண்டு ஆழ்வார் பிறந்த போதிலிருந்தே பால் உண்ணாமலும், அழாமலும், சிரிக்காமலும், வளர்ந்து வந்தார். இதனால் பெற்றோர் மிகவும் வருந்தினர். திருவநந்தாழ்வான் திருப்புளிமரமாக வளர்ந்திருக்க அந்த மரத்தடியில் தொட்டில் கட்டி மாறன் என்ற பெயரிட்டு அங்கேயே விட்டுப்போனார்கள். ஆழ்வாரும் திருப்புளி மரத்தில் குகை போன்ற பொந்தில் பதினாறு வருஷங்களை கழித்தார். திருமாலுக்குரிய திவ்விய தேசங்களில் 37 திவ்விய தேசங்களுக்கு மங்களாசாசனம் செய்துள்ளார். அயோத்தியில் இருந்த மதுரகவி ஆழ்வார் தெற்கே வந்து நம்மாழ்வாரை வணங்கி அவருக்கு சேவை செய்து வந்தார். நம்மாழ்வார் பெருமானின் குணங்களை சொல்ல சொல்ல மதுர கவியாழ்வார் எழுதுவார். நம்மாழ்வார் அனுபவித்து சொல்லும் பொழுது மயக்கம் அடைந்து விடுவார். அப்பொழுதெல்லாம் மதுரகவியாழ்வார் தான் இவரை மயக்கம் தெளிவிப்பார். நம்மாழ்வார் மக்களுக்கு தொண்டு செய்வதற்காகவே இவ்வுலக வாழ்க்கையை வேண்டினார். இப்பொழுதும் ஆழ்வார் திருநகரியில் இவர் தவம் செய்த புனித புளியமரம் உள்ளது. பெருமாளின் 108 திருப்பதிகளில் நம்மாழ்வார் தனியாக சென்று 16 கோயில்களையும், பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 19 கோயில்களையும் என மொத்தம் 35 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.