சனி, 11 ஜூலை, 2020

பெரிய்ந்வா சரணம்.

அழகான தரிசனம் கண்டதும், மனதிற்குள்ளே “நான் இருக்கேன்”னு அவர் சொல்வது போலத் தோன்றுகிறதல்லவோ! 

கும்பகோணம் ஸ்ரீசந்த்ரசேகர பவனத்திலே வீற்றிருந்து நம்மை ரக்ஷிக்கும் அம்மையப்பனை ஜகன்மாதாவாகவும் ஜகத்பிதாவாகவும், ஜகத்குருவாகளும் விளங்கும் என் தெய்வத்தின் தரிசனம் கண்டீரோ!

இந்தத் தரிசனம் கண்டதுமே மனம் வெகுவான பாசுரம் ஒன்றை வழிய விட்டதென்றால், அது சாக்ஷாத் ப்ரத்யக்ஷ பரமேஸ்வர சங்கரனான மஹாபிரபுவின் அருளால் தாமே!  மனம் வெகுவாய் ஆனந்திக்கும் போதும், ஆராதிக்கும் போதும், ஏன்… அழுது புலம்பும்போதும் கூட அடியேன் அறிந்த தமிழிலே புலம்பிக் கரைக்க எத்தணிக்கின்றேன். 

இவ்வெழுத்துக்களிலே அறியாமல் அடியேன் செய்த பிழையேதுமிருக்குமானால், எம் ஆசார்யர் அனுக்ரஹத்தில் அனைவரும் அடியேனை மன்னித்தருள வேண்டுகிறேன்.  அடியார்க்கும் அடியாராய் இருப்பதிலே உள்ள ஆனந்தத்தின் சுகமே வேறு தான்.  உங்கள் அனைவரின் உள்ளத்திலேயும் நிறைவாய் நிறைந்திருக்கும் ஸ்ரீமஹாஸ்வாமிகளை அனுதினமும் துயிலெழுப்பித் தொழும் பாக்கியம் கிடைக்கின்றதே! இப்பிறப்பு மட்டுமின்றி எப்பிறப்பிலும் இதனை ஏத்திவாழ மனதார பிரார்த்திக்கின்றேன்.

************************************************

#ஸ்ரீகுருதுதி

நின்றுயெங்கும் பரவியே நிருத்தமாகித் தோன்றியே
ஒன்றியிங்கும் உடலிலே ஒத்தமானுடப் பொருள்
மூன்றுசோதி மூன்றுமாய்த் துளக்கமில் விளக்கமாய்
கன்றுகாக்குங் கூலமொத்த உன்னையேத்த வல்லனே!

************************************************

பேரிறைவன் படைத்த இப்பரவெளியிலே ஆடியாடி ஒன்றியதோர் உத்தமனமாய் ஸ்தூல சரீரம் கொண்டு இவ்வுலகைக் காக்கவந்த பரம்பொருளே!

மூப்பெருந்தேவரும், முப்பெருஞ்சக்தியும் கூடி ஓருருவிலே உதித்தாற் போல வந்து, எம்முள்ளே இருக்கின்ற கலக்கங்களைத் தீர்க்கவல்லதொரு ரக்ஷகனே! 

கன்றினைப் பேணிக்காக்கும் தாய்பசுவைப் போலே உள்ள உம்மைச் சரண்புக யாம் மஹா பாக்கியம் செய்திருக்கின்றோமல்லவோ! 

இதனையே இந்த துதியிலே நினைந்துத் தொழ விழைந்துள்ளேன். 

ஓசைக்கு உயிருண்டு; அரும்பெரும் பலனுமுண்டு என்பர்.  தேவபாஷையான சமஸ்கிருதத்திலேயும் சரி; தெய்வீக பாஷையான தமிழிலேயும் சரி; நல்ல ஓசைகட்டு நற்பலனைத் தரும் சக்தியுண்டு. அவ்வகையிலான ஓசைகளுடனானதோர் பாசுரத்தினை யெழுப்பி அதன் மூலம் நலனடைய அடியேனின் சிறிய முயற்சியே, அனுதினமும் ஆச்சார்ய பாதந்தொழும் பாமாலைகளும், விருத்தங்களும், கானங்களும், கவிதைகளும் எழுப்பிட முயற்சிக்கின்றேன் அவர் அருளால்!

ஆம்! அனுதினமும் இவ்வகையிலாக ஆச்சார்யன் திருப்பாதம் தொழுவோம்! அவனியிலே வாழுங்காலத்தே அவர் அனுக்ரஹத்துடன் கூடி இன்புற்று வாழ்வோம்!

குருவுண்டு – பயமில்லை;  குறையேதும் இனியில்லை.

பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம்.

நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.
*தேன்கூடு தினம் ஒரு கதை..

_*நம்பிக்'கை' வை*_
ஓர் அரசன் மிகவும் முன் கோபக்காரன்.. தன் கெட்ட குணம் தெரிந்தும் அவனால் அதை மாற்றிக் கொள்ள முடிய வில்லை..

ஒரு நாள் அறிஞர் ஒருவர் அந்த நாட்டுக்கு வந்து இருந்தார்.. அவரை சந்தித்து தன் குறையை சொன்னான் அந்த மன்னன்..
அவர் மன்னனிடம்..
*என்னிடம் அதிசயமான பொன்னால் செய்த ஒரு குவலை ஒன்று இருக்கிறது.. அதில் தண்ணீரை நிரப்பி குடித்து வந்தால் நாளடைவில் உன் சினம் இல்லாமல் போய்விடும்* என்று சொல்லி அந்த குவளையை அவனிடம் கொடுத்தார்..

*உனக்குச் சினம் எப்போது எல்லாம் வருகிறதோ, அப்போது இதில் மூன்று முறை தண்ணீர் நிரப்பிக் குடி.. பிறகு சினமே வராது..* என்று கூறிவிட்டு சென்றார்..

அன்றில் இருந்து அரசன் அப்படிச் செய்யத் தொடங்கினான்.. சில நாட்களில் அவன் சினம் அவனை விட்டு விலகியது..

பல வருடங்கள் சென்றன.. அந்த குவளையை கொடுத்த அந்த அறிஞர் மீண்டும் அந்த நாட்டுக்கு வந்தார்..

அரசன் அந்த அறிஞரை சந்தித்து குவலை கொடுத்ததற்காக பலமுறை நன்றி கூறித் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தான் மன்னன்..

*மன்னனே.. உன்னை ஏமாற்ற நான் விரும்ப வில்லை.. அது அதிசயமான குவளை அல்ல.. சாதாரணமான குவளைதான்..*

_*சினம்*_ *வரும்போது சிந்திக்க நேரம் இருக்காது.. சிந்தனை வந்தால் சினம்தானே குறையும்..*

*தண்ணீரை மூன்று முறை ஊற்றிக் குடிக்கும் போது நேரம் கிடைக்கிறது.. அப்போது சிந்திக்க முடிவதால் புலன்கள் அமைதி பெறுகின்றன..*

*ஆத்திரம் நியாயத்திற்குத் தன் இடத்தைக் கொடுக்கிறது..* என்று கூறினார்..
🐝
_மற்றவர்கள் நம்மிடத்தில் கோபப்பட்டாலும்,  அதை சகித்துக் கொண்டு பேசாமல் அமைதியாக உட்கார வேண்டும். இதனால் நமக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.._

_நாம் கோபப்படும் போது மற்றவர்கள் நம்மீது கோபப்படும் போதும், நாம் அமைதியாகவும், பக்குவமாகவும் இருப்பது நல்லது.._

_எல்லா நேரங்களிலும் நாம் நிதானத்தோடு இருந்தால் நிம்மதியாக வாழலாம்.._
🙏
ஸ்ரீ ரமண மஹரிஷி வாழ்வில்….
காஞ்சி மஹா  பெரியவரும் , ரமணரும்….

ஒருமுறை, மஹா பெரியவா திருவண்ணாமலை போயிருந்தப்போ, கிரிப் பிரதட்சிணம் பண்ணினார். அவரோடு இன்னும் நாலஞ்சு பேர் போனா. கொஞ்ச நேரத்துல, பகவான் ரமணரோட சீடர்கள் சில பேர், கையில் பிட்சைப் பாத்திரத்தோடு எதிரே வந்துண்டிருந்தா.

மஹா  பெரியவாளைப் பார்த்ததும் நமஸ்காரம் பண்ணிட்டு, ‘நாங்க பகவான் ரமணரோட சீடர்கள். பகவான் அங்கே ஆஸ்ரமத்துல இருக்கார்’னு சொன்னா. உடனே மஹா  பெரியவா, ‘அப்படியா’ங்கிறாப்பல தலை அசைச்சுக் கேட்டுண்டுட்டு, புன்னகையோடு அவங்களை ஆசீர்வாதம் பண்ணிட்டு, மேலே நடக்க ஆரம்பிச்சார்.

ரமண பக்தர்கள் கொஞ்சம் தயங்கி நின்னுட்டுக் கிளம்பிப் போனாங்க. அவாளுக்கு வருத்தம்…
ரமணரைப் பத்தி, அவரோட சௌக்கியம் பத்தி, மகா பெரியவா ஒண்ணுமே விசாரிக்கலையே; தெரிஞ்ச மாதிரியே காட்டிக்கலையேன்னு!

அந்த பக்தர்கள் மலையேறிப் போய், ஸ்ரீரமண பகவான்கிட்ட பிட்சையைக் கொடுத்துட்டு, வழியில காஞ்சி மஹா  பெரியவாளைத் தரிசித்ததைச் சொல்லி, தங்களது வருத்தத்தையும் தெரிவிச்சாங்க. அதைக் கேட்டதும் வாய் விட்டுச் சிரிச்சாராம், ரமண பகவான்!
‘அட அசடுகளா?! நாங்க ரெண்டு பேரும் பேசிண்டாச்சு; இப்பவும் பேசிண்டிருக்கோமேடா; இதுக்கா வருத்தமா இருக்கேள்?!’ன்னாராம். திகைச்சுப் போய் நின்னாளாம், பக்தர்கள்!

காஞ்சி மஹா  பெரியவரும் ஸ்ரீரமணரும் மஹா  ஞானிகள்; மஹா தபஸ்விகள்.
அவங்களுக்குள்ளே எப்பவும் சம்பாஷணை நடந்துண்டிருக்குன்னு தெரிஞ்சபோது ஏற்பட்ட நெகிழ்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை!

பால் பிரண்ட்டன் என்பவர் ஆன்மிக விஷயமா பேசறதுக்கு மஹா  பெரியவா கிட்ட வந்தார். அப்ப மஹா  பெரியவா,
‘அவர் ஞான மார்க்கத்துல போயிண்டிருக்கார். நான் கர்ம மார்க்கத்துலே போயிண்டிருக்கேன். உன்னோட கேள்விகளுக்கெல்லாம் பதில் தரக்கூடியவர், திருவண்ணாமலையில இருக்கார். உன்சந்தேகங்களை எல்லாம் அவராலதான் தீர்த்துவைக்க முடியும்’னு சொல்லி, பால் பிரன்ட்டனை ரமணர்கிட்டே அனுப்பி வைச்சார்.

பால் பிரண்ட்டனும் அதன்படியே ரமணரை வந்து சந்திச்சு, தன்னோட சந்தேகங்கள் எல்லாம் விலகி, அவரோட பக்தர் ஆகி, புஸ்தகமே எழுதினாரே!
மஹா  பெரியவாளுக்கும் பகவான் ரமணருக்கும் பரஸ்பரம் அன்பு இல்லேன்னா இது நடந்திருக்குமா?

மொத்தத்துல, காஞ்சி மஹானும் ஸ்ரீரமண பகவானும் நம் தேசத்துக்குக் கிடைச்சது மாபெரும் பாக்கியம்!
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!! 
ஓம் நமோ பகவதே ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் சந்த்ர சேக ரேந்த்ராய!!!

புதன், 1 ஜூலை, 2020

சியாமா சாஸ்திரி!

சியாமா சாஸ்திரி!

அம்பிகையை கோலாகலமாகக் கொண்டாடி மகிழும் அற்புதமான விழா நவராத்திரி.சிவன் விஷ்ணு கோயில்களில் ஹோமங்கள் லட்சார்ச்சனை போன்றவை சிறப்பாக நடத்துவர்.கன்னிப் பெண்களுக்கும் சுமங்கலிகளுக்கும் இது ஆனந்த நாட்கள்.மந்திர தீட்சை பெற்ற ஸ்ரீவித்யா உபாசகர்கள் லலிதா சகஸ்ரநாமம் திரிசதி அஷ்டோத்ரம் கட்கமாலா கமலாம்பா நவாவரண கீர்த்தனைகள் பாடி நெகிழும் நாட்கள் நவராத்திரி.

{நவராத்திரிக்குரிய அம்பாளின் பக்தர் தான்  சியாமா சாஸ்திரிகள்}

சங்கீத மும்மணிகளான தியாகையர் முத்து சுவாமி தீட்சிதர் சியாமா சாஸ்திரிகள் ஆகிய மூவருமே அம்பிகையைப் பாடியுள்ளனர்.தியாகையர் ராமபக்தர்.முத்துசுவாமி தீட்சிதர் எல்லா தெய்வங்களையும் பாடியுள்ளார்.இவரது 481 பாடல்களில் சிவனைப் பற்றி 132 பாடல்கள் பாடியுள்ளார்.அதைவிட அதிகமாக அம்பாள்மீது 197 பாடல்கள் பாடியுள்ளார்.எனவே அவர் தேவி உபாசகர்(ஸ்ரீவித்யா தீட்சை உபதேசம் பெற்றவர்)என்பது ஊர்ஜிதமாகிறது.சங்கீத மும்மணிகளும் பிறந்தாலே முக்தி தரும் திருவாரூரில் பிறந்தவர்கள்.அவர்கள் தேகத்தை நீத்த இடங்கள் வெவ்வேறு.தியாகையர் திருவையாறு தீட்சிதர் எட்டயபுரம் சாஸ்திரிகள் தஞ்சாவூர். மேற்கண்ட மூவருமே சமகாலத்தவர்.இவர்களில் முதலில் தோன்றியவர் சியாமா சாஸ்திரிகள்.அவர் தீவிர தேவி உபாசகர்.தஞ்சை பங்காரு காமாட்சியைப் பூஜித்துப் பாடியவர்.பிரம்மாவால் உருவாக்கப்பட்ட பங்காரு (தங்க) காமாட்சி முதலில் காஞ்சியில் இருந்தாள்.அங்கிருந்து தஞ்சைக்கு எப்படி வந்தாள்? கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப்பின் அந்நியர்கள் படையெடுப்பால் கோயில்களை இடித்தல் விக்ரகங்களைக் களவாடுதல் போன்ற கொடூர சம்பவங்கள் நடைபெற்றன.எனவே காமாட்சியின் தங்க விக்ரகத்துக்கு புனுகு பூசி வெளிக்கொணர்ந்தனர்.

15 ஆண்டுகள் செஞ்சியிலும் 1624-லிருந்து திருச்சி உடையார் ஜமீன்தார் பராமரிப்பில் 60 வருடங்களும் பின்னர் ஆனைக்குடியில் 15 வருடங்களும் அடுத்து நாகூர் சிக்கல் விஜயபுரத்திலும் திருவாரூர் கமலாம்பாளுடன் 70 வருடங்களும் காமாட்சி விக்ரகம் இருந்தது.1780-ல் தஞ்சை சரபோஜி மன்னர் தஞ்சையில் கோயில்கட்டி பங்காரு காமாட்சியைப் பிரதிஷ்டை செய்தார்.

காஞ்சியில் பங்காரு காமாட்சி இருந்தபோது அவளுக்குப் பூஜை செய்ய வேதாகமத்தில் தேர்ச்சி பெற்ற ஒருவரை ஆதிசங்கரர் நியமித்தார்.அந்த பரம்பரையே இன்றும் ஆராதனை செய்துவருகிறது.அம்பாள் திருவாரூரில் இருந்த காலத்தில் அவளுக்குப் பூஜை செய்தவர் வேங்கடாத்ரி அய்யர்.அவர் புதல்வரான விஸ்வநாதய்யர் வேதாகம ஜோதிட நிபுணர்.காமாட்சி பக்தியில் தோய்ந்தவர்.அவர் மனைவியும் தேவி பக்தை.நெடுநாள் அவர்களுக்குப் பிள்ளைப் பேறில்லை.ஒருநாள் விஸ்வநாதய்யர் அருகிலுள்ள வீட்டில் நிகழ்ந்த வேங்கடாசல சமாராதனைக்குச் சென்றிருந்தார்.(சமாராதனை அந்தணருக்கு உணவளித்தல்). அப்போது ஒரு பெரியவருக்கு ஆவேசம் வந்து அடுத்த சித்திரை கிருத்திகையில் தேவிபக்த சங்கீதமணியாக ஒரு புதல்வனைப் பெறுவாய் என்று கூறினார்.அதன்படியே சித்ரபானு ஆண்டு(1763) சித்திரை மாத கிருத்திகை நட்சத்திரத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

விஸ்வநாதய்யர் தங்கள் குலதெய்வம் வேங்கடேசன் என்பதாலும் வேங்கடேச சமாராதனையின்போது அருளுரைக்கப்பட்டதாலும் தனது தந்தையின் பெயர் வேங்கடாத்ரி என்பதாலும் முருகனுக்குகந்த கிருத்திகையில் பிறந்தாலும் குழந்தைக்கு வேங்கட சுப்பிரமணியன் என்று பெயரிட்டார்.செல்லமாக சியாமா என்றழைத்தார்கள்.அவருக்கு அடுத்து பிறந்தவள் மீனாட்சி.அவர்கள் வீட்டில் கிருஷ்ண விக்ரகம் உண்டு.இருவருக்குமே அந்த கிருஷ்ணரிடம் பிரியம்.எனவே அவர் சியாமா கிருஷ்ணன் என்றும் அழைக்கப்பட்டார்.சாஸ்திரம் அறிந்து உகந்து செய்ததால் சியாமா சாஸ்திரி என்ற பெயர் நிலைத்தது.சியாமாவுக்கு இளம்வயதிலேயே சங்கீதத்தில் ஈடுபாடு.ஆனால் அவரது தந்தைக்கு அதில் சம்மதமில்லை.எனினும் தாயின் ஆதரவிலும் தேவியின் அருளாலும் அவரது சங்கீதம் வளர்ந்தது. தந்தையிடம் சமஸ்கிருதமும் தெலுங்கும் கற்றார்.மாமாவிடம் சங்கீதம் பயின்றார்.

திருவாரூரிலிருந்த காமாட்சி விக்ரகத்தை தஞ்சைக்குக் கொண்டுசென்று 1780-ல் பிரதிஷ்டை செய்த சரபோஜி மன்னர் விஸ்வநாதய்யரை தஞ்சைக்கு அழைக்க 1781-ல் சியாமா சாஸ்திரியின் குடும்பம் தஞ்சை வந்தது.ஒருமுறை சியாமா லலிதா சகஸ்ரநாமத்தை நன்றாக அனுபவித்து ராகமாலிகையாகப் பாடி தேவியைப் பூஜித்தார்.அப்போது அங்கு வந்திருந்த மிராசுதார் ஒருவர் அதைக் கேட்டு நெகிழ்ந்து சால்வை ஒன்றை சியாமாவுக்குப் பரிசளித்தார்.அந்த சால்வையை ஆர்வத்துடன் எடுத்துச் சென்று தன் மாமாவிடம் காண்பித்து விவரம் கூற அவர் பொறாமையுடன் உனக்கா சால்வை?போடா என்று கூறி அவருக்கு சங்கீதம் கற்றுத் தருவதை நிறுத்திக் கொண்டார்.ஆனால் அம்பாளோ அதை வளர்ப்பதிலேயே விருப்பம் கொண்டாள்.

அந்த சமயத்தில் காசியிலிருந்து ராமேஸ்வரத்துக்குச் சென்றுகொண்டிருந்த சங்கீத சாமி என்ற துறவி இடையில் சாதுர்மாஸ்ய விரதத்திற்காக தஞ்சை காமாட்சி கோயிலில் தங்கினார்.சங்கீதம் பாடி நடனமும் செய்பவர் அவர்.அவருக்கு விஸ்வநாதய்யரும் சியாமாவும் பணிவிடைகள் செய்தனர். சியாமாவின் தந்தைக்கும் மாமாவுக்கும் அவரின் சங்கீத ஈடுபாடு பிடிக்காததால் தன் தாயின் ஆலோசனைப்படி கோயில் நடைசாற்றியபிறகு காமாட்சியை குருவாக எண்ணி சங்கீதம் பாடினார் சியாமா.அதைக் கேட்ட சங்கீத சாமி மகிழ்ந்து விஸ்வநாதய்யரிடம் சியாமா மிகச்சிறந்த தேவி பக்தனாகவும் சங்கீதத்தில் சூடாமணி ரத்னமாகவும் திகழ்வான் என்று கூறி ஆதியப்பையாவிடம் சங்கீத நுணுக்கங்களை அறியட்டும் என்றும் சொன்னார்.அதன்பிறகு விஸ்வநாதய்யர் சியாமாவை கண்டிக்கவில்லை ஆதியப்பையா அரச சமஸ்தானத்தில் ஆஸ்தான வித்வான்.அவன் சியாமாவின் சங்கீதப் புலமையைப் பாராட்டி மேலும் செம்மையுறக் கற்றுக்கொடுத்தார்.

சாஸ்திரியார் ஆஜானுபாகுவாக காதில் கடுக்கன் அணிந்து ஜரிகை பஞ்சகச்சம் அங்க வஸ்திரத்துடன் விபூதி சந்தனம் குங்குமம் அணிந்து அம்பாளுக்கு நிவேதனம் செய்த வெற்றிலைப் பாக்கை வாயிலிட்டுக்கொண்டு வீதியில் நடந்தால் மக்கள் வெகு மரியாதையுடன் இதோ காமாட்சிதாசர் சங்கீத சாகித்ய கலாநிதி போகிறார் என்று ஒதுங்கிக்கொள்வார்கள்.சாஸ்திரியாரின் முதல் பாடல் சாவேரி ராகத்தில் மூன்று சரணங்களுடன் அமைந்த ஜனனி நத ஜன பாலினி பாஹிமாம் பவானி என்னும் உருக்கமான சமஸ்கிருதப் பாடல்.சாஸ்திரியார் தியாகராஜ பாகவதருடன் கலந்து, இருவரும் தமது பாடல்களைப் பாடி ரசிப்பார்கள்.சாஸ்திரியின் இரண்டாவது மகன் சுப்பராய சாஸ்திரி முத்துசாமி தீட்சிதரிடம் வயலின் கற்றுக்கொண்டார் ஆக மும்மணிகளும் சங்கீதத்தை பரஸ்பரம் வளர்த்தனர் போற்றினர்.சியாமா சாஸ்திரிகள் ஆனந்த பைரவியிலும் சாவேரி ராகத்திலும் 300-க்கும் மேற்பட்ட பாடல்களைச் செய்துள்ளார்.அவற்றில் ஒருசில தவிர மற்றவை யாவும் அம்பாள்மீது பாடப்பட்டதே.அவர் பாடல்கள் நிறைய சரணங்கள் கொண்டவை.சங்கீதக் கச்சேரிகளில் அவர் பாடல்களைப் பாடுவது மிகக் குறைவே. எல்லா சரணங்களையும் பாடுவதென்பது அரிது.

சங்கீத சாமி சொல்லி ஆதியப்பையாவிடம் சியாமா வந்தபோது அவர் பாடியதைக் கேட்ட ஆதியப்பையா சியாமா உன் வாக்கில் காமாட்சி தாண்டவமாடுகிறாளப்பா!என்றார்.அப்போது ஆதியப்பையாவின் வயது 50 சியாமாவின் வயது 18.ஒருமுறை சியாமா பதறி அபச்சாரம் மன்னிக்கவேண்டும் என்று சொல்லி நீர்கொண்டு வந்து துடைக்க எழுந்தபோது ஆஹா!இது அம்பாள் பிரசாதமல்லவா!என்று கண்களில் ஒத்திக்கொண்டார் ஆதியப்பையா.பொப்பிலி கேசவய்யா என்ற சங்கீத வித்வான் இருந்தார்.திறமைசாலியான அவர் ஆணவம் மிக்கவராகவும் இருந்தார்.மற்ற வித்வான்களைப் போட்டிக்கழைத்து அவர்களை வென்று தன் அடிமைகளாக்குவதில் ஆனந்தம் கண்டுவந்தார்.இப்படி எங்கெங்கும் வெற்றிகொண்ட அவர் ஆணவம் தலைக்கேறி தஞ்சைக்கு வந்து சரபோஜி மன்னரிடம் சவால்விட்டார்.அரண்மனை ஆஸ்தான வித்வான்கள் அஞ்சினர்:சியாமாவை பாடச் சொல்லலாம் என்றார். சியாமாவுக்கு போட்டியிட விருப்பமில்லை.என்றாலும் சங்கீதமென்பது இறைவனுக்கு ஆராதனையாகப் பாடப்பட வேண்டியது.அதில் அகங்காரம் கூடாதே என்றெண்ணி போட்டிக்கு இசைந்தார்.காமாட்சியை நன்கு உபசரித்து சிந்தாமணி என்னும் அபூர்வ ராகத்தில் ப்ரோவ ஸமயமிதே (காப்பாற்ற இதுவே தருணம்)என்ற பாடலைப் பாடி அம்பாள் குங்குமத்தை அணிந்துகொண்டு அரண்மனை சென்றார்.இந்த சிறுவனா என்னுடன் போட்டியிடுவது!என்று ஏளனம் செய்தார் கேசவய்யா.போட்டி தொடங்கியது. ஒருவருக்கொருவர் மாறி மாறிப் பாடினர்.இறுதியில் கேசவய்யா நான் தோற்றேன் காமாட்சியின் அருள் பெற்ற சியாமாவே வென்றார் என்று கூறி தலைகவிழ்ந்தார்.மகிழ்ந்த மன்னர் சியாமாவுக்கு பரிசுகள் வழங்கினார்.

அதேபோல நாகப்பட்டினம் அப்புக்குட்டி பாகவதரும் அகங்காரம் கொண்டவர்.பலரையும் போட்டிக்கழைத்து அவமானப்படுத்திவந்த அவர் சியாமாவிடம் போட்டியிட்டுத் தோற்றார்.அதன்பின் மைசூர் அரண்மனை சென்ற அப்புக்குட்டி பாகவதர் சியாமாவின் பாடலை அங்கு பாடி சியாமாவின் பெருமையையும் மைசூர் மன்னரிடம் கூறினார்.அதைக்கேட்ட மன்னர் மகிழ்ந்து சியாமாவை மைசூர் வருமாறும் அவருக்கு கனகாபிஷேகம் செய்வதாகவும் சொல்லியனுப்பினார்.ஆனால் சியாமாவோ எனக்கு அரச கனகாபிஷேகம் வேண்டாம் கனக காமாட்சிக்கு சங்கீத அபிஷேகம் செய்யவே விரும்புகிறேன் என்று சொல்லி மறுத்துவிட்டார்.

தியாகையரும் சியாமா சாஸ்திரிகளும் அதிக தலங்களுக்குச் சொல்லவில்லை.சாஸ்திரிகள் பங்காரு காமாட்சி தவிர மீனாட்சி புதுக்கோட்டை பிரஹன்நாயகி திருவாடி தர்மசவர்த்தனி நாகை நீலாயதாட்சி, திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி ஆகியோரைப் பற்றிதான் பாடியுள்ளார்.ஒருசமயம் புதுக்கோட்டை பிரஹன் நாயகிமீது பாடியபோது பெரியவர் ஒருவர் மதுரை மீனாட்சியைப் பாடி அருள்பெறுவாய் என்று ஆசீர்வதித்தார்.மீனாட்சி பற்றி ஏழு பாடல்கள் இயற்றிய நிலையில் இன்னும் இரண்டு பாடல்கள் செய்துகொண்டு மதுரைபோய் நவரத்ன மாலையாகப் பாடுவோம் என்று எண்ணியிருந்தார் சாஸ்திரியார்.அப்போது அந்தப் பெரியவர் சாஸ்திரியின் கனவில் வந்து இன்னுமா மதுரை செல்லவில்லை?என்று கேட்டார்.வியந்த சாஸ்திரிகள் மறுநாளே மீதமிருந்த இரண்டு பாடல்களை இயற்றி மதுரை சென்று அம்பிகைமுன் நவரத்னமாலையாகப் பாடினார்.மகிழ்ந்த அர்ச்சகர் பரிவட்டம் கட்டி சாஸ்திரியை உபசரித்தார்.செல்வந்தரான ரசிகர் ஒருவர் யாளிமுக தம்புராவைப் பரிசளித்தார்.

சாஸ்திரியாரின் மனைவி மகாஉத்தமி.காமாட்சியிடம் வேண்டிக்கொண்டு மஞ்சள் குங்குமத்துடன் சுமங்கலியாய் இவ்வுலக வாழ்வை நீத்தார்.துக்கம் விசாரிக்க வந்த ஒருவரிடம் சாஸ்திரியார் சிலேடையாக அவ சாக அஞ்சி நாள் செத்து ஆறு நாள் என்றார்.வந்தவருக்கு அவர் சொன்னது புரியவில்லை.மனைவி இறந்த ஆறாம் நாள் தன் மகனின் மடிமீது தலைவைத்துப் படுத்தபடி சிவேபாஹி காமாக்ஷி பரதேவதே என்றுகூறி தை மாதம் சுக்ல தசமியன்று(1827)அம்பிகையின் தாள்சேர்ந்தார். கிரகஸ்தர் என்பதால் சமாதி கிடையாது.காமாட்சி அருளாளர் சியாமா சாஸ்திரிகளின் உருக்கமான பாடல்களைப் பணிந்து பாடி தேவியருள் பெறுவோம்.சங்கீதம் தெரியாதவர்கள் அவர் பாடலை துதிபோல சொல்லி நெகிழலாம்.

செவ்வாய், 30 ஜூன், 2020

சித்தர் வரலாறு

வரலாறு சுருக்கம் : நாஸ்ட்ரடாமஸ் என்ற பெயர் ஆரூட உலகில் புகழ்பெற்ற ஒன்று. தான் வாழ்ந்த காலத்திலேயே, எதிர்காலத்தில் உலகில் என்னென்ன சம்பவங்கள் எந்தெந்த ஆண்டுகளில் நடக்குமென்று ஆரூடம் கணித்து எழுதி வைத்துவிட்டுப் போனார் அவர்.

அவர் எழுதிவைத்த சம்பவங்கள் பலவும், அப்படியே அவர் சொன்ன விதமே நடப்பதைப் பார்த்து இன்று உலகம் திகைக்கிறது. அவரது புத்தகங்களில் அடுத்தடுத்து என்னென்ன எழுதப்பட்டுள்ளன என்பதை அறிய ஒரு தனி ஆராய்ச்சியே நடக்கிறது.

சித்தர் உலகிலும் ஒரு நாஸ்ட்ரடாமஸ் உண்டு. ஆந்திர நாட்டைச் சேர்ந்த வீர பிரம்மேந்திரர் என்ற சித்த புருஷர் கி.பி. 1604-ல் பிறந்தவர். மண வாழ்வு மேற்கொண்டு மனைவியுடனும் குழந்தைகளுடனும் வாழ்ந்தவர். “காலக் ஞானம்’ என்ற அரிய நூலை எழுதியவர். அந்த நூலிலில் எதிர்காலத்தில் உலகில் என்னென்னவெல்லாம் நடக்குமென்று தெளிவாக எழுதப் பட்டுள்ளது தான் ஆச்சரியம்.

விஸ்வகர்மா பொற்கொல்லர் மரபில் வந்த பரிபூரண ஆசாரி, பிரகதாம்பாள் என்ற தம்பதிகளுக்கு மகனாய்ப் பிறந்தார் வீர பிரம்மேந்திரர். அவர் பிறந்த அன்றே அவர் தந்தை இறந்து விட்டார். அதனால் மிகுந்த கலக்கமெய்தினாள் பிரகதாம்பாள். ஒரு முனிவரிடம் குழந்தையை ஒப்படைத்த அவள், தான் வாழ விரும்பாமல் தன் உயிரை மாய்த்துக் கொண்டாள்.

முனிவர் அந்த அழகிய குழந்தையைக் கனிவோடு பார்த்தார். எவ்விதம் அந்த தெய்வீகக் குழந்தையை வளர்ப்பது என சிந்தனையில் ஆழ்ந்தார். இறைவன் கட்டளையேபோல, அவரைத் தேடிவந்தார்கள் இருவர். வீர போஜர், வீர பாப்பம்மா என்ற அவ்விருவரும் அந்தக் குழந்தையைத் தாங்கள் வளர்ப்பதாக உறுதி கூறி வாங்கிச் சென்றார்கள்.

வீரபிரம்மத்தைப் பதினான்கு வருடம் மிகப் பாசத்துடன் வளர்த்தார்கள் அவர்கள். அப்போது தான் அந்த சங்கடமான சம்பவம் நிகழ்ந்தது. வீரபிரம்மத்தின் வளர்ப்புத் தந்தை காலமாகிவிட்டார்.

பிறந்த போதே தந்தையையும் பின் தாயையும் இழந்தது, இப்போது வளர்ப்புத் தந்தையையும் இழந்தது வீரபிரம்மேந்திரரை சிந்தனையில் ஆழ்த்தின. தத்துவ ஞானத்தில் தோய்ந்தது அவர் மனம். தம் வளர்ப்புத் தாயிடம், தமக்கு வற்றாத ஆன்மிகத் தேடல் இருப்பதால் அந்த வழியில் வாழ்க்கை நடத்தப்போவதாகக் கூறி, பிரியாவிடை பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.

கால்போன போக்கில் நடந்தார். எங்கெல்லாம் கோவில்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் அமைதியாக நெடுநேரம் தியானம் செய்தார். இந்த வாழ்வின் பொருள் என்ன என்றறியும் தீராத ஆவல் அவருக்கிருந்தது. அவர் போகாத கோவில் இல்லை.

ஒருநாள் இரவு… நடந்து நடந்து கால்கள் வலிலித்தன. வீரபிரம்மேந்திரர் பனகானபள்ளி என்ற அழகிய சிறு கிராமத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கே அச்சம்மா என்பவளின் வீட்டுத் திண்ணை காலியாக இருந்தது. அதில் படுத்து ஆனந்தமாக உறங்கினார்

காலை கதவைத் திறந்து வெளியே வந்து திண்ணையைப் பார்த்தாள் அச்சம்மா. யாரோ ஒரு பையன் உறங்குகிறானே? உறங்கும்போதும் அவன் முகத்தில் தென்பட்ட ஒளி அச்சம்மாவை வசீகரித்தது. அந்தப் பையன் மேல் அவளுக்குத் தாயன்பு பெருகியது.

அவன் எழுந்ததும் “யாரப்பா நீ’ என்று விசாரித்தாள் அவள். அவன் தான் ஓர் அநாதை என்றும், ஊர் ஊராகச் சுற்றி வருவதாகவும் தெரிவித்தான். “எனக்கு நான் வளர்க்கும் மாடுகளை மேய்க்க ஒருவன் தேவை. கண்ட இடங்களில் சுற்றுவானேன்?

இனி இங்கேயே இரு!’ என்று கண்டிப்பு கலந்த பிரியத்தோடு சொல்லி அவனுக்கு உணவளித்தாள் அச்சம்மா. இப்படியாக வீரபிரம்மேந்திரர் அச்சம்மாவின் மாடுகளை மேய்க்கும் தொழிலிலில் ஈடுபடுத்தப்பட்டார்.

வீரபிரம்மேந்திரர் மாடுகளைச் சுற்றி ஒரு மிகப்பெரிய வட்டக் கோடு வரைந்து விடுவார். மாடுகள் அந்தக் கோட்டுக்குள்ளிருந்து புல் மேய்ந்து கொண்டிருக்கும். அதைக் கடந்து செல்லாது. மாடுகள் அவரைப் பெரிதும் நேசித்தன. மாடுகள் புல்மேயும் தருணத்தில் வீரபிரம்மேந்திரர் காலக் ஞானம் என்ற எதிர்காலத்தைப் பற்றிச் சொல்லும் நூலை எழுதலானார். பனையோலையில் முட்களால் எழுதப்பட்டதே அந்த நூல். ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக அந்த நூலை எழுதிவந்தார் அவர்.

இப்படியாகக் காலம் போய்க்கொண்டிருந்தபோது, ஒருநாள் மாடுகளை அடித்துச் சாப்பிடும் எண்ணத்தில் காட்டிலிலிருந்து ஒரு புலி அங்கு வந்தது. ஆனால் வீரபிரம்மம் கிழித்த கோட்டினுள்ளே செல்ல இயலாமல் புலி தத்தளித்துத் திரும்பிச் சென்றது.

இதைப் பார்த்தார்கள் சில இடையர்கள். அவர்கள் அச்சம்மாவிடம் சென்று இந்தத் தகவலைச் சொன்னார்கள். அச்சம்மா வியப்படைந்தாள். ஏற்கெனவே வீரபிரம்மேந்திரரின் முகத்தில் தென்பட்ட தெய்வீக ஒளி அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தது. தவிர அவர் ஏதோ தொடர்ந்து எழுதி வருவதையும் அவள் அறிவாள்.

அன்று வீரபிரம்மேந்திரர் வீடு திரும்பியதும், அச்சம்மா அவரிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள். அவர் பெரிய மகான் என்பதைத் தாம் இப்போதுதான் அறிந்ததாகவும், அவரை மாடு மேய்க்கும் தொழிலிலில் ஈடுபடுத்தியது பெரும் தவறு என்றும் அவள் கண்ணீர் உகுத்தாள்.

“ஏதோ ஒரு தொழில் செய்து எல்லாரும் வாழவேண்டியதுதான். கண்ணனே மாடு மேய்த்தவன் தான். அது ஒன்றும் இழிவான தொழில் அல்ல!’ என்று கூறி அவளை சமாதானப் படுத்தினார் வீரபிரம்மேந்திரர்.

அச்சம்மா அவர் எழுதிவரும் நூல் என்னவென்று விசாரித்தாள். எதிர்காலத்தில் நடக்கப்போவதைத் தான் கணித்து எழுதி வருவதாக அவர் தெரிவித்தார். “எதிர்காலத்தில் என்னென்ன நடக்குமென்று எனக்கு ஓரளவாவது சொல்ல இயலுமா’ என்று அச்சம்மா கேட்டாள். வீரபிரம்மம் நகைத்துக்கொண்டே சில விஷயங்களைச் சொன்னார். அவற்றில் சில:

“புண்ணிய நதிகள் வற்றிவிடும். கடல் பொங்கி நகருக்குள் நுழையும். அதனால் அதிகம் பேர் உயிரிழப்பார்கள். கணவனை மட்டுமே மணந்து வாழும் பத்தினிப் பெண்களின் எண்ணிக்கை குறையத்தொடங்கும். ஆண்கள்- பெண்கள் இரு தரப்பாரிடமும் ஒழுக்கம் கெடும். இந்தியா இரண்டாகவும் பின்னர் மூன்றாகவும் பிரியும். இந்தியாவில் ஜனத்தொகைப் பெருக்கம் அதிகமாவதால் குழந்தை பிறப்பதை செயற்கை முறையில் தடுக்கப் பார்ப்பார்கள். பெரியோருக்கு அடங்கி சிறியோர் நடந்ததுபோக, சிறியோருக்கு அடங்கி பெரியோர் நடக்க நேரிடும். புண்ணியத் தலங்களில் வாழ்பவர்கள் ஆண்டவனுக்கு அஞ்சி வாழாமல், ஆண்டவன் பெயரால் மோசடி செய்து வஞ்சித்து வாழ்வார்கள்.’

இதையெல்லாம் கேட்ட அச்சம்மா மிகுந்த வியப்படைந்தாள். அவரையே தன் குருவாக ஏற்றாள் அச்சம்மா. தனக்கு உபதேசம் வழங்குமாறு வேண்டினாள்.

வீரபிரம்மேந்திரர் அவளுக்குச் சிவ மந்திரத்தை உபதேசித்து, அதை ஓயாமல் ஜெபித்து வருமாறு பணித்தார். பொருள் மேல் உள்ள ஆசையை விட்டு விட்டு ஆன்மிகப் பணிகளில் நாட்டம் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

அச்சம்மாவின் மனம் வீரபிரம்மேந்திரரின் உபதேசங்களால் ஞானம் அடைந்தது. மெல்ல மெல்லப் பற்றுகள் அவளை விட்டு விலகத் தொடங்கின. இல்லறத்தைத் துறந்து துறவியானாள் அவள். தன் சொத்தையெல்லாம் செலவிட்டு ஏகாந்த மடம் என்றொரு மடம் நிறுவினாள். அதில் வாழ்ந்தபடி வீரபிரம்மேந்திரரின் கொள்கைகளை மக்களிடையே பரப்பிவரலானாள்.

அச்சம்மாவின் வாழ்க்கை இனி அவ்விதமே தொடரும் என அறிவித்த வீரபிரம்மேந்திரர், அவளிடம் விடைபெற்று மீண்டும் பல்வேறு தலங்களுக்கு யாத்திரை செல்லலானார்.

போலேரம்மா என்ற புகழ்பெற்ற அம்மன் கோவில் ஆந்திரத்தில் உண்டு. அந்தக் கோவிலுக்குச் சென்றார் அவர். அங்கு சிலர் போலேரம்மா தொடர்பான புனித யாத்திரைக்கு அவரிடம் நன்கொடை கேட்டனர். நன்கொடை தருவது கட்டாயமென்று அவரை அச்சுறுத்தினர். இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சுபவரா பிரம்மேந்திரர்? அவர் நகைத்துக் கொண்டார். “இப்போது என்னிடம் பணம் எதுவுமில்லையே, பிறகு கிடைத்தால் தருகிறேன்’ என்றார்.

பின் தன் சுருட்டுக்கு நெருப்புக் கேட்டார் அவர்களிடம். அவர்கள் நன்கொடை தராத அவருக்கு நெருப்புத் தர மறுத்தனர். அவர் போலேரம்மா கோவிலுக்கு வெளியே வந்துநின்றார். உள்ளே சந்நிதியை உற்றுப் பார்த்தார். “போலேரம்மா, என் சுருட்டுக்குக் கொஞ்சம் நெருப்பு கொடு’ என்று கேட்டார். மறு நிமிடம் போலேரம்மா சந்நிதியிலிருந்து ஒரு தணல் காற்று வெளியில் புறப்பட்டு வந்தது! அவரது சுருட்டைக் கொளுத்தியது! “சரி சரி நெருப்பு போதும்’ என்று அவர் சொன்னதும் மீண்டும் கருவறைக்கே சென்று மறைந்தது அந்தத் தணல்!

இந்த அதிசயத்தைப் பார்த்தவர்கள் வியப்பின் உச்சிக்கே சென்றார்கள். அவரது காலில் விழுந்து மன்னிப்பு வேண்டினார்கள்.

அவர்கள் அனைவருமே அவரின் அடிய வர்களானார்கள். இப்படி மெல்ல மெல்ல வீரபிரம்மேந்திரரின் அடியவர் எண்ணிக்கை நாள் தோறும் பெருகத் தொடங்கியது.

காலப்போக்கில் அவர் தமது பொற்கொல்லர் மரபில் தோன்றிய கோவிந்தம்மா என்ற பெண்ணை மணந்தார். இல்லறம், துறவறம் இரண்டும் சம மதிப்புடையவை தான் என்று அவர் அடிக்கடிச் சொல்வது வழக்கம். தம் இல்லற வாழ்வில் ஐந்து மகன்களையும் ஒரு மகளையும் பெற்றார். தம் குடும்ப உறுப்பினர் அனைவரையும் ஆன்மிகவாதிகளாக மாற்றினார். அனைவருடனும் இணைந்து ஆன்மிகப் பணியாற்றி வந்தார்.

தாம் ஜீவசமாதி அடைய எண்ணி குடும்பத்தாரிடம் அறிவித்தார் வீரபிரம்மேந்திரர். குடும்பத்தார் கண்கலங்கினர். “யாக்கை நிலையற்றது; இதன் மேல் பற்று வைக்காதீர்கள்’ என்று போதித்தார். பின் சமாதிக்குழியில் இறங்கி நிஷ்டையில் அமர்ந்தார். “எனக்கு இறப்பில்லை என்பதால், என் மனைவி தன் சுமங்கலிலிக் கோலத்தை மாற்றத் தேவையில்லை’ என்று அறிவித்தார். சமாதியின் மேலே பலகை போட்டு சமாதி மூடப்பட்டது.

பத்து மாதங்கள் சுழன்றோடின. “இன்னுமா அவர் உயிரோடிருப்பார்? அவர் மனைவிக்கேன் சுமங்கலிலிக் கோலம்?’ என்று சிலர் விமர்சித்தனர். இத்தகைய விமர்சனங்கள் அந்தக் காலத்தில் எழுவது சகஜம்தானே?

மூத்த பிள்ளை மனம் நொந்து தாயிடம் விளக்கம் கேட்டார். “மக்களுக்கு அறிவில்லை. அவர்களின் அழிவுக்காலம் நெருங்கிவிட்டதால் இப்படியெல்லாம் பேசுகிறார்கள். என் கணவர் எனக்கிட்ட கட்டளைப்படியே நான் சுமங்கலிலிக் கோலத்தில் இருந்து வருகிறேன்’ என்றார் தாயார்.

மகனுக்குச் சமாதானம் ஏற்படவில்லை

அவன் ஆக்ரோஷத்தோடு ஒரு கடப்பாரையை எடுத்துவந்து சமாதியை இடித்துத்திறந்துபார்த்தான். என்ன ஆச்சரியம்! அங்கே சலனமே இல்லாமல் யோக நிஷ்டையில் கம்பீரமாக வீற்றிருந்தார் வீரபிரம்மேந்திரர். சமாதியை இடித்த மூத்த மகனின் கைகள் நடுக்கத்தில் வெலவெலத்தன.

அவனை கண்திறந்து பார்த்த வீரபிரம்மேந்திரர், சமாதியைத் திறந்த தோஷம் விலகப் பரிகாரம் செய்யச் சொல்லிலி, மீண்டும் சமாதியை மூடச் சொன்னார்.

இந்த அதிசயத்தைப் பார்த்த ஊர்க்காரர்கள் வீர பிரம்மேந்திரரின் மனைவியிடம் மன்னிப்புக் கேட்டனர். மனைவியையும் பக்தியோடு கும்பிடத்தொடங்கினார்கள்.

ஆந்திராவில் கடப்பை ரயில் நிலையத்திலிருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில், கந்தி மல்லையபள்ளி என்ற இடத்தில் இருக்கிறது சித்த புருஷரான வீரபிரம்மேந்திரரின் ஜீவசமாதி. இன்றும் தன்னை நாடிவரும் அடியவர்களுக்கு அவர் சூட்சும உருவில் அருள்புரிந்து வருகிறார். நாள்தோறும் அந்த இடத்திற்குச் செல்வோர் எண்ணிக்கை பெருகிவருகிறது

திருச்சிற்றம்பலம்

ஞாயிறு, 14 ஜூன், 2020

காலாங்கி நாதர் சித்தர் வரலாறு

காலாங்கி நாதர். இந்தப் பெயருக்குக்கூட, ஒன்றுக்கு மேற்பட்ட விளக்கங்கள் உண்டு. அங்கி என்றால் ஆடை என்றும் அணிவது என்றும் பொருள். காலாங்கி என்றால் காலத்தையே ஆடையாக அணிந்தவர் என்பார்கள். இல்லையில்லை, அவர் காலாங்கி நாதர் இல்லை. காளாங்கி நாதர்... அதாவது காளம் என்றால் கடுமையானது என்று பொருள். அப்படிப்பட்ட கரிய நிறத்தையே ஆடை போல உடம்பு முழுக்க பெற்றவர் என்றும் கூறுவர் சிலர். இதுவும் பிழை... எப்பொழுது ஒருவர் நாதர் என்று தன்னை குறிப்பிடுகிறாரோ, அப்போது அவர் ஒரு குறிப்பிட்ட இறை அம்சத்துக்கோ இல்லை தன்னைக் கவர்ந்த அம்சத்துக்கோ தன்னை இனியவராகவும் அடிமையாகவும் ஆக்கிக் கொண்டவர். அப்படிப் பார்த்தால் காளாங்கி எனப்படும் சிவாம்சத்துக்குத் தன்னை அடிமையாக்கிக் கொண்டு காளாங்கி நாதரானவர் அவர் என்பார்கள். உண்மையில், அவர் பெயர்க்காரணம் துல்லியமாக விளங்கவில்லை. தனது பெயர்க் காரணம் பற்றி எங்கும் அவர் கூறவில்லை. வாழ்க்கை குறிப்பு காளாங்கி நாதர், தனக்கான ஜீவன் விடுதலை குறித்துதான் பெரிதும் சிந்தித்தார். ஊரையும் உலகையும் வழிப்படுத்த வேண்டும். அதற்கே நமக்கு இந்த ஜென்மம் என்றெல்லாம் அவர் எண்ணவே இல்லை. ஒவ்வொரு தனிமனிதனும் தன்னை கடைத்தேற்றிக் கொண்டாலே போதும்; சமுதாயம் தானாக மாறிவிடும் என்பதற்கு ஒரு முன் உதாரணம் போலவும் காலாங்கிநாதர் விளங்குகிறார் எனலாம். இவரது குருநாதர், திருமூலர். சீடனை பல விஷயங்களில் கடைத்தேற்றியவர். காலாங்கிநாதர், பேச்சைவிட கேட்டல் பெரிதென்று எண்ணியிருந்தார். எனவே அவர் பற்பல சித்தர்களது உபதேசங்களைத் தேடி அலைந்தார். பலரது உபதேசங்கள் அவரைத் தேடியே வந்தன. இப்படித்தான் ஒருமுறை, பூமியில் பிரளயம் ஏற்பட்டது. நிலப்பரப்பு முற்றும் நீரால் சூழ்ந்தது. மலைமுகடுகள் மட்டும் தப்பித்தன. மலை முகடுகளில் தான் சித்த புருஷர்களும் வசித்து வந்தனர். அவர்களை சந்திக்கும் பாக்கியம், பிரளயத்தால் காலாங்கிநாதருக்கு கிட்டியது. அதற்கு முன்பே காலாங்கிநாதர் காயகற்பங்கள் தயாரிப்பதில் நிபுணராக விளங்கினார். அதேபோல குளிகைகள் செய்வதிலும் வல்லவராக இருந்தார். உயிருள்ள அனைத்தும் உள்வெளித் தொடர்பு இயக்கத்தால் ஒரு நிலையில் இருக்காது. அதை நடுநிலைப்படுத்திவிட்டால் நீராக இருந்தால் மிதக்கலாம். காற்றாக இருந்தால் பறக்கலாம். உயிருள்ள மனிதன், சுவாசச் செயல்பாடு காரணமாக சதா புறத் தொடர்புடன் இருக்கிறான். இறந்தபின் அந்தத் தொடர்பு அற்று விடுகிறது. இதனால், எத்தனை திடமானதாக அவன் உடல் இருந்தாலும், மிதக்கிறது. அதற்கு முன்வரை திடமற்றதாகவே இருந்தாலும் மூழ்கித்தான் போகிறது. பறவைகள் பறப்பதன் பின்னணியிலும் இப்படி ஒரு நிலைப்பாடு இருந்து, அதுவே பறக்கத் துணை செய்கிறது. நுட்பமான சிந்தனைகளால் இவைகளை அறிந்த காலாங்கி நாதர், குளிகைகளை தயாரித்து அதை வாயில் போட்டுக் கொள்வதன் மூலம் புறத்தில் மூச்சடக்கி, அகத்துக்குள் குளிகை மூலமாகவே பிராண சக்தியைத் தந்து, உடம்பை புறத்தில் இருந்து பிரித்து, மிதத்தல் பறத்தல் போன்ற செயல்பாடுகளை சாதாரணமாக செய்பவராக விளங்கினார். அவரது குளிகைகளும் காற்றுக்குச் சமமான பிராண சக்தியை அளிப்பதாக இருந்தன. இதனால், சித்தர்கள் பலர் காலாங்கிநாதரை ஒரு விஞ்ஞானியாகவே பார்த்து வியந்தனர். பிரளய சமயத்தில், மலை உச்சியில் இருந்த சித்தர்கள், காலாங்கிநாதரின் குளிகை ஞானத்தை அவர் வாயாலேயே கேட்டும் அறிந்தனர். அப்போது, ‘தானறியும் அனைத்தும் பிறர்க்குக் கொடுக்கவே’ என்கிற ஒரு தர்ம உணர்வை அவருக்குள் விதைத்தனர். ‘‘நீ அறிந்ததெல்லாமும் கூட பிறர் கொடுத்த ஞானத்தால்தானே?’’ என்று கேட்டு, அவரைக் கிளறிவிட்டனர். அப்படியே மலைத் தலங்கள் ஏன் சித்தர்கள் வாழக் காரணமாகிறது என்பதையும் விளக்கினார். ‘பூமியில், தட்டையான நிலப்பரப்பில் திக்குகள் தெளிவாகத் தோன்றி ஒன்பது கிரக சக்திகளும் அந்த நிலப்பரப்பில் தங்களுக்குரிய பாகங்களில் நிலைபெற்ற பிறகே, அந்த மண்ணை, பின் அந்த மண்ணுக்குரியவனை ஆட்சி செய்கின்றன. மலையகத்தில் இப்படித் தட்டையான நிலப்பரப்பு இல்லை. மலை என்றாலே கூர்மையானது என்றும் ஒருபொருள் உண்டு. காற்று கூட இங்கே குளிர்ந்து விடுகிறது. இயக்க சக்தியான வெப்பமும் முழுத் திறனோடு இருப்பதில்லை. நீரும் நிலை பெறுவதில்லை... எவ்வளவு மழை பெய்தாலும் கீழே ஓடி விடுகிறது. மொத்தத்தில், பஞ்ச பூதங்கள் இங்கே தங்கள் இயல்புக்கு மாறாகவே விளங்குகின்றன. அடுத்து, கிரகங்கள் காலூன்றி அமர்ந்து சக்தி கொள்ள, சரிவான பரப்பில் இடமில்லை. இதனால், உலகப்பற்றை கைவிட்டு பஞ்ச பூத சக்திகளின் அதிவலுவான பிடியில் இருந்து தப்பித்து, தன் இச்சைப்படி சுதந்திரமாக செயல்பட, மலையகங்கள் துணை செய்வதை, ஓர் உபதேசமாகவே காலாங்கிநாதர் பெற்றார். எனவேதான் சிங்கம், புலி போன்ற வலிய மிருகங்கள் கானகத்தை, குறிப்பாக மலைக் கானகத்தை வலிமையானதாகக் கருதுகின்றன. தங்களுக்கு அங்கே பாதுகாப்பு இருப்பதாகவும் எண்ணுகின்றன. மலைச் சிறப்பை உணர்ந்த காலாங்கிநாதர், அங்கே புலிவடிவில் திரிந்த சித்தர் ஒருவரை இனம் கண்டு கொண்டார். ஒரு தவசி, மான் தோலில் அமர்ந்து தவம் செய்கிறார் என்றால், அவர் புலிபோல ஒரு சக்திக்குள் அடங்கி மோட்சம் பெற எண்ணுகிறார் என்பது நுட்பப் பொருள். அதே சமயம், புலித்தோல்மேல் அமர்ந்து ஒருவர் தவம் செய்தால், மற்ற அனைத்தையும் அடக்கி அவர் மோட்சம் செல்லத் தயாராகிறார் என்பதே நுட்பமான உட்பொருளாகும். பிற காரணங்கள், காலத்தால் பலரது எண்ண நுட்பங்களால் உருவானவைகளாக இருக்கலாம். காலாங்கி நாதரும், அடக்கி ஆளும் புலியானது அடங்கிய நிலையில் சாதுவாக இருப்பதை முதலில் உணர்ந்தார். அந்த மாறுபட்ட இயல்பை வைத்தே, அவர், அந்தப் புலி, தோற்றத்தில் தான் புலி; அதன் உயிர் அம்சம் வேறாக இருக்கலாம் என்பதை அறிந்து, துணிந்து அதன் முன்சென்று நின்றார். அந்தத் துணிவைக் கண்ட புலியும் சித்த புருஷராகத் தோன்றி, காலாங்கிநாதரின் பட்டறிவைப் பாராட்டினார். வாழ்வில் பல உண்மைகள் இப்படித்தான், இயல்புக்கு மாறுபட்ட இடத்தில், சில காரணங்களுக்காக ஒளிந்துள்ளன. அவைகளை கண்டறியத் தெரிந்தவனே ஞானி என்று உபதேசித்தார். அவர் கருத்து, காலாங்கி நாதரை புடம் போட்டது. இந்த உலக வாழ்க்கையை ஒருவார்த்தையில் கூறுவதானால், ‘மாயை’ என்பார்கள். மாயை என்றால், ‘இருந்தும் இல்லாமல் இருப்பது’ என்பதே பொருள். அடுத்து, நிலைப்பாடுகளில் மாறிக் கொண்டே இருக்கும். கடலோரமாய் அலைகள் எழும்புகின்றன. அந்த அலையின் ஒரு பாகம் உயர்ந்திருக்கும். மறுபாகம் தாழ்ந்திருக்கும். அதே மறுபாகம் அடுத்து உயர, உயர்ந்த பாகம் தாழும் இதில் உயர்வு தாழ்வை பார்க்கவே முடியாது. இரண்டும் சேர்ந்ததே அலை! அந்த அலையை உருவாக்கும் நீண்ட கடல் வெளியோ எந்த உயர்வு தாழ்வும் இன்றி சமனமாக நீண்டிருக்கும். எங்கே நிலமானது நீரை விட உயர்ந்து செல்ல எண்ணுகிறதோ, அங்கே அந்த விளிம்பில், ஓர் அலை பாயும் தன்மை ஏற்பட்டு விடுகிறது. ஆன்மாவும் வாழ்வில் மூழ்கிய இடத்தில் இருந்து உயர்ந்து எழுந்து, மூழ்கியதை தவிர்க்க நினைக்கும் போது அங்கே ஒரு பெரும் போராட்டம் எழுகிறது. ஒரு வகையில் அந்தப் போராட்டம்தான், இயக்கம். அங்கே இருக்கும்வரை இயக்கம்தான். அங்கிருந்து நீருக்குள்ளோ, நிலத்துக்குள்ளோ நாம்போய் விட்டால், அங்கே போராட்டம் இல்லை. அலைகடல் நமக்கு மறைமுகமாக போதிக்கும் பாடம் இது. சிந்திக்க சிந்திக்க இதுபோல வாழ்க்கை அம்சங்களில் நுட்பமான உட்பொருள் பொதிந்து கிடப்பதைதான் புலியாய் இருந்த சித்தரும், காலாங்கி நாதருக்கு விளங்க வைத்தார். அது, அவரது அகக் கண்களை நன்றாகவே திறந்துவிட்டது. பேசாமல் இருப்பதையும் கேட்பதையே பெரிதாகவும் கருதியவர், பின்னர், தான் அறிந்ததை பலருக்கும் உபதேசிக்கலானார். இவரால் பலர், நான் யார்? என்கிற கேள்வியில் விழுந்தனர். காலாங்கிநாதரோ நுட்பமான உட்பொருளை விளங்கிக் கொள்வதிலேயே குறியாக இருந்தார். ஒரு மரமானது இரை தேடி எங்கும் செல்வதில்லை. அது இருக்கும் இடத்திலேயே, அதற்கு உணவை பஞ்ச பூதங்கள் மூலம் இறைவன் தந்துவிடுகிறான். அதுவும், நின்ற இடத்திலேயே, காய் கனிகளை பதிலுக்கு வழங்குகிறது. சித்தனும் எங்கும் அலையத் தேவையில்லை. அமர்ந்த இடத்தில் அவன் தனக்கான உணவை, காற்று _ அதில் உள்ள நீர் _ தன் மேல் படும் ஒளி _ அதன் உஷ்ணம் மூலம் பெற முடியும் என்று நுட்பமாய் உணர்ந்தார். இதனால், பல நூறாண்டுகள் அமர்ந்த இடத்தில் தவம் செய்வது என்பது இவரது வாடிக்கையாகி விட்டது. திருமூலரே, இப்படி அமர்வதில் உள்ள சிறப்பு, நடப்பதிலும் உள்ளது என்பதை இவருக்குப் புரியவைத்தவர். அதன்பிறகே இவர் தேச சஞ்சாரியானார். அந்த சஞ்சாரங்களில், ஆமைக்குள் அடங்கிக் கிடந்த சித்தர் முதல், பட்சி ரூபமாய் திரிந்த சித்த புருஷர் வரை பலரை தரிசனம் செய்தார். அவர்கள் எதனால் மானிட உருவம் விட்டு அதுபோன்ற உயிர்களாக வடிவம் கொண்டார்கள் என்பதையும் அறிந்தார். இப்படி அவர் தரிசித்தவர்கள் பலர். அவர்கள், தசாவதார சித்தர்கள் ஆவர். திருமாலின் தசாவதார அம்சங்களிலேயே சித்த மூர்த்திகள், அந்த அவதார நோக்கங்களையே தத்துவமாகக் கொண்டு திகழ்ந்தனர். அவர்களையெல்லாம் தரிசனம் செய்தார். அதேபோல, அஷ்டமாசித்திகளை தங்களுக்குள் அடக்கிக்கொண்ட பல சித்தர்களை தரிசனம் செய்தார். அஷ்டமாசித்து எட்டும், தங்களின் பிரதி பிம்பத்துடன் கூடிப் பெருகியே 8 ஜ் 8=64 என்கிற கலைகள் ஆனது. இந்தக் கலைகளை நோக்கினால், அவைகளில் அஷ்டமாசித்து ஒளிந்திருக்கும். இந்தக் கலைகளும் தங்களின் பிரதி பிம்பங்களால் அணு அணுவாகச் சிதறி அறுபத்து நான்கு கோடியாயிற்று. இது சப்த லோகங்களில் பரவியதால், நானூற்று நாற்பத்தியெட்டுக் கோடியாயிற்று. இதில் ஒன்றைத்தான் கோடானு கோடி மனிதர்களாகிய நாம் நமக்கெனப் பெற்றுள்ளோம். ஒருவருக்கு தமிழாற்றல், ஒருவரிடம் எழுத்தாற்றல், ஒருவரிடம் பேச்சாற்றல் என்று அந்தக் கோடிகளின் தெரிப்புதான் நம் உயிரணுவுக்குள் புதைந்து நமக்கான வலிமையாக வெளிப்பட்டு நம்மை வழிநடத்துகிறது. நமக்குள் இருக்கும் ஓர் அணுவுக்கே நம் வாழ்வை ஒளிப்படுத்தும் ஆற்றல் உண்டென்றால், இவை அனைத்தையும் உள்ளடக்கிய அந்த நானூற்று நாற்பத்தியெட்டுக் கோடியின் மூலமான அஷ்டமா சக்திக்கு எவ்வளவு சக்தி இருக்கும்! கற்பனை செய்யும் சக்தி கூட நமது மூளைக்குக் கிடையாது. ஆனால், காலாங்கிநாதர் இப்படிப் பல நுட்பங்களை விளங்கிக் கொண்டவர். இறுதியாக, நகரங்களுள் சிறந்த காஞ்சியம்பதியில் அடங்கினார் என்பர். திருமூலர் திகைத்தார். இங்கே இருந்த நம் சீடன் காலாங்கி எங்கே போய் தொலைந்தான்? அதோ, அங்கே ஒரு இளைஞன் நிற்கிறான்! அவனிடம் கேட்டால், விஷயம் தெரியும்! என சிந்தித்தவராய், தம்பி! இங்கே ஒருவர் சமையல் செய்து கொண்டிருந்ததை பார்த்தாயா? என்றார். அந்த இளைஞர் திருமூலரின் பாதங்களில் அப்படியே விழுந்தார். கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது. குருவே! மன்னிக்க வேண்டும். நான் தான் உங்கள் சீடன் காலாங்கி. நடுத்தர வயது தோற்றத்தில் இருந்தவன் தான், இப்போது இப்படி இளைஞனாகி விட்டேன், என்று அரற்றினான்.திருமூலர் ஆச்சரியத்துடன், காலாங்கி!இதென்ன விந்தை! இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது? உன்னை சமைக்கத்தானே சொன்னேன். அதை விட்டுவிட்டு, நீ என்ன செய்தாய்? என்றார். குருவே! தங்கள் உத்தரவுப்படி நான் சமைக்கவே செய்தேன். சோறு பாத்திரத்தின் அடியில் பிடித்து விடக்கூடாதே என்பதற்காக, ஒரு மரத்தின் குச்சியை ஒடித்து கிளறினேன். அவ்வளவு தான்! சோறு கருப்பாகி விட்டது. தாங்கள் வந்தால் அரிசியை பாழாக்கி விட்டாயே மடையா என திட்டுவீர்கள் இல்லையா? அதற்கு பயந்து, சோறை வெளியில் கொட்டவும் தயங்கி, அதை சாப்பிட்டு விட்டேன். அடுத்த கணமே என் முதுமை மறைந்தது. நான் இளம்பிள்ளையாகி விட்டேன், என்றார் காலாங்கி.திருமூலருக்கு ஆச்சரியத்துடன் கோபமும் வந்தது.சோறு என்ன ஆனாலும், என்னிடமல்லவா சொல்லியிருக்க வேண்டும். உண்மையை மறைப்பதற்காக அதை சாப்பிட்டிருக்கிறாய். குருவிடம் சீடன் எதையும் மறைக்க நினைப்பது பாவம். இந்த பாவத்திற்கு பரிகாரத்தை நீயே செய்து கொள், என சொல்லி விட்டு அங்கிருந்து அகல முயன்றார். காலாங்கி, திருமூலரின் காலைப் பிடித்தார். குருவே! இந்த சிறுவனை மன்னியுங்கள். என்னை பிரிந்து சென்றுவிட்டால், நான் உயிர் தரிக்கமாட்டேன். சற்று பொறுங்கள். உங்கள் முன்னாலேயே என் தவறுக்கு பரிகாரம் தேடிக்கொள்கிறேன், என்றவர் தொண்டைக்குள் விரலை விட்டார். சாப்பிட்ட சோறை வாந்தியெடுத்தார். இதைப் பார்த்த திருமூலர், அவர் வாந்தியெடுத்ததை எடுத்து அப்படியே சாப்பிட்டு விட்டார். அடுத்த கணமே அவரும் இளைஞராகி விட்டார். காலாங்கிநாதரும் இளமை மாறாமல் அப்படியே இருந்தார். வயதில் முதியவர்களாக இருந்தாலும், வாலிப முறுக்கைப் பெற்ற இவர்கள் சேலம் அருகிலுள்ள கஞ்சமலையில் தங்கியிருந்தனர். திருமூலரின் காலத்துக்கு பிறகு, அங்கிருந்து புறப்பட்டு, மதுரை அருகில் ஏராளமான சித்தர்கள் வசித்த சதுரகிரி மலைக்குச் சென்றார் காலாங்கி.அந்த மலையில் ஒரு சிவாலயம் கட்டும் பணியில் வணிகர் ஒருவர் ஈடுபட்டிருந்தார். மிக உயரமான, மனிதர்கள் மிக எளிதில் நுழைய முடியாத காட்டுப்பகுதியில் கோயிலைக் கட்டி வந்ததால், அவர் கையில் இருந்த பணமெல்லாம் தீர்ந்து விட்டது. யாரிடமாவது உதவி பெற்று கோயில் பணியை முடிக்க வணிகர் முடிவு செய்திருந்தார். இந்நேரத்தில் காலாங்கிசித்தர் அங்கு வரவே, அவரிடம், சுவாமி! தாங்கள் தான் இந்தக் கோயிலை கட்டி முடிக்க செல்வத்தை தந்தருள வேண்டும், என்றார். காலாங்கியோ துறவி. அவரிடம் ஏது பணம்? அவர் அந்த வணிகரிடம், நான் அருட்செல்வத்தை தேடி அலைபவன். மக்கள் நன்றாக வாழ அவர்களின் கர்மவினைகளை ஏற்று, என்னை வருத்திக் கொள்ளவே இங்கு வந்துள்ளேன், என்றார். வணிகரோ விடவில்லை. அவருடனேயே தங்கி அவருக்கு பல சேவைகள் செய்து வந்தார். அந்த வணிகரின் குரு பக்தியையும், கோயில் கட்ட வேண்டும் என்ற மனஉறுதியையும் மெச்சிய காலாங்கிநாதர், அந்த மலையில் கிடைத்த பலவித மூலிகைகளை பறித்து வந்தார். அவற்றில் இருந்து தைலம் தயாரித்தார். அந்த தைலத்தைக் கொண்டு தங்கம் தயாரித்தார். அதில் கோயில் கட்ட தேவையான அளவு வணிகருக்கு கொடுத்தார். மீதி தங்கம் ஏராளமாக இருந்தது. ஒரு பெரிய பள்ளத்தில் அதைப் போட்டு மூடி, பெரும்பாறை ஒன்றால் மூடிவிட்டார். கெட்டவர்களின் கையில் அது கிடைத்தால், அதை தவறாகப் பயன்படுத்துவார்கள் என்பதால் அப்படி செய்தார். மேலும் அந்தப் பாறையை சுற்றி காளி, கருப்பண்ணன், வராஹி, பேச்சியம்மன் என்ற காவல் தெய்வங்களை பிரதிஷ்டை செய்து அந்தப் பொன்னை பாதுகாக்கச் செய்தார். பழநியில் முருகனுக்கு சிலை செய்த போகர் இவரது சீடர்களில் ஒருவர். சதுரகிரி மலையில் பல சித்தர்களை அவர் கண்டார். இந்த சித்தர் காற்றைப் போன்றவர் என்பதால் பறக்கும் சக்தி பெற்றிருந்தார் என்கிறார்கள். இதைப் பயன்படுத்தி அடிக்கடி சீனா சென்று வந்துள்ளார். இவர் அங்கேயே சமாதி அடைந்ததாக ஒரு தகவல் இருக்கிறது.இன்னும் சிலர், தான் தன் குருவுடன் வசித்த கஞ்சமலையில் இரும்புத்தாதுவாக மாறி அங்கேயே ஜீவசமாதி அடைந்தார் என்கிறார்கள். இப்போதும் கஞ்சமலையில் லிங்கவடிவில் அருள் செய்வதால், இந்த லிங்கத்தை சித்தேஸ்வரர் என்கின்றனர். அமாவாசை அன்று இவரை தரிசிப்பது விசேஷம். கஞ்சமலையை பவுர்ணமியன்று மாலையில் கிரிவலமும் வருகின்றனர். இம்மலையிலுள்ள மூலிகை காற்று பல நோய்களை தீர்ப்பதாக பக்தர்கள் சொல்கிறார்கள். இம்மலையின் சுற்றளவு 18 கி.மீ.,பிரம்மலோகத்திற்கே இவர் சென்று விட்டதாகவும் சொல்கின்றனர். அந்த லோகத்தில், ஒரு வில்வமரத்தூண் இருக்கிறது. இதை காலங்கி நாதர் கால் என்பர். இந்த தூணில் அவர் உறைந்திருப்பதாகவும், பிரம்மனை வழிபடுபவர்களுக்கு காலாங்கிநாத சித்தரின் அருள் கிடைக்குமென்றும், அவர்களின் தலைவிதி மாற்றப்பட்டு ஆயுள் அதிகரிக்கும் என்றும் சொல்கிறார்கள்.இன்னும் சில நூல்களில், இவர் காஞ்சிபுரத்தில் சமாதி அடைந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது.காலாங்கி முனிவர் காலத்தை வென்றவர். ஒருமுறை உலகமே தண்ணீரால் அழிந்த வேளையில், இவர் மேருமலையில் ஏறி அங்கிருந்த சித்தர்களுக்கு காயகல்ப வித்தைகள் பலவற்றை சொல்லிக் கொடுத்திருக்கிறார். இவரை வணங்குபவர்களுக்கு கோபம் கட்டுப்படும். திறமைசாலியாக இருப்பார்கள் என்பது நம்பிக்கை. காலாங்கி நாதர்விஸ்வகர்ம மரபில் பிறந்தவர் காலாங்கி நாதர். கால் + அடங்கி = காற்றினை உடலாகக் கொண்டு வாழ்ந்தவர். ஆகையால் காலாங்கி எனப் பெயர் பெற்றார் எனலாம். காலாங்கி நாதரின் குரு திருமூலர் ஆவார்; சீடர் போகர். ஒரு முறை காலாங்கி நாதர் சதுரகிரியில் தவம் இயற்றிக் கொண்டிருக்கையில், சிவன் கோயில் கட்ட வேண்டும் என்ற தணியாத ஆசை கொண்ட ஒரு வணிகனுக்கு வகார தைலம் மூலம் பொருளுதவி செய்த செய்தி, சதுரகிரித் தலபுராணத்தில் குறிக்கப் பெற்றுள்ளது. சதுரகிரியில் தான் சந்தித்த சித்தர்களைப் பற்றி, காலாங்கி நாதர் தமது ஞான விந்த ரகசியம் 30 என்ற நூலில் குறிக்கிறார். இவர் மருத்துவத்திலும் ஆன்மிகத்திலும் பல நூல்கள் செய்துள்ளார். அவருடைய வகாரத் திரவியம், வைத்திய காவியம், ஞான சாராம்சம் அவற்றுள் குறிப்பிடத்தக்கவை. ஞான பூஜா விதி, இந்திர ஜால ஞானம், ஞான சூத்திரம், உபதேச ஞானம், தண்டகம் போன்ற வேறு பல நூல்களையும் காலாங்கி நாதர் இயற்றியுள்ளார். இவர் சமாதி காஞ்சிபுரத்தில் உள்ளதாகக் கூறுவர். காற்றையே உடலாகக் கொண்டவர் என்றும் காலனைப் போன்ற நெருப்பானவர் என்றும், காலனால் நெருங்க முடியாதவர் என்றும் காலங்கி நாதருக்கு பெயர்க் காரணமுண்டு. காலங்கி நாதர் சித்தர்களில் மிகவும் ஆற்றல் வாய்ந்தவர். திருமூலரின் சீடர்களில் முதன்மையானவர். இவர் மூவாயிரம்வருடங்களுக்கு மேல் வாழ்ந்திருந்தார் என்று யோக முனிவர் இவரைப் பற்றிக் கூறியுள்ளார். யுகங்களைக் கடந்து வாழ்ந்த காலங்கி நாதர் பல ரிஷிகளையும் சந்தித்து ஆசி பெற்ற சம்பவங்கள் பலவுண்டு. திரேதாயுகத்தில் ஒரு சமயம் பூவுலகின் ஒரு பகுதியில் கொடியதொரு பிராளயம் ஏற்பட்டது. மழையும், புயலும் வெள்ளமும் கரை புரள பூவுலகம் மூழ்கிக்கொண்டிருந்தது. அங்கிருந்த மரம்,செடி, கொடிகள், யாவும் மூழ்கிய நிலையில் காலங்கிநாதர் ஒரு பெரிய மலைமேல் ஏறினார்.வெள்ளம்உயர்ந்துகொண்டே இருந்தது. அதற்கேற்பக் காலங்கி நாதரும் மலை உச்சியை நோக்கி ஏறிக்கொண்டேபோனார்.காலங்கி நாதர் இப்படி ஒரு பிரளயத்தை அதுவரை சந்தித்ததே இல்லை. மக்கள் எல்லோரும் வெள்ளத்தில் மூழ்கி இறந்து போன் துயரம் நெஞ்சை வாட்டியது மலையின் உச்சியை நோக்கியே சென்று கொண்டிருந்த காலங்கி பல சித்தர்களும், ரிஷிகளும் ஓரிடத்தில் கூட்டமாகக் கூடி நிற்பதைக் கண்டார். “ரிஷிமார்களே!...எல்லோரும் இவ்விடத்தில் கூடி நிற்கும் காரணத்தை நான் அறியலாமா? என்று கேட்டார்” காலங்கி நாதர். “சித்தரே இதற்கு மேல் எங்களால் உயரே ஏறிச் செல்ல முடியவில்லை.அதனால் இங்கேயே நிற்கிறோம்.வெள்ளம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. நாங்கள் பிழைக்க முடியாது. உம்மால் முடிந்தால் உயரேஏறிச் சென்று உயிர் பிழைத்துக்கொள்ளவும் ” என்று அந்த ரிஷிகள் காலங்கி நாதர்க்கு பதில் கூறினார்கள். அதனைக் கேட்ட பின்பும் காலாங்கி நாதர் மலையுச்சிக்கு ஏறி சென்றார். அங்கு ஒரு பயங்கரமான புலி படுத்துக்கிடப்பதைக் கண்டார். அதனருகில் சென்று கூர்ந்து கவனித்தபோதுதான் தெரிந்தது யாரோ ஒரு சித்தர் புலி உருவத்தில் படுத்து இருக்கிறார் என்பது. மனிதர்களின் தொல்லைகளில் இருந்து விடுபடவே அருவுருவாக அங்கு தங்கி வாழ்ந்து வருவது தெரிந்தது. காலாங்கி நாதர் அந்த சித்தருக்கு வணக்கம் செய்துவிட்டு மேலும் தம் பயணத்தை தொடர்ந்தார். மலை மீது ஓரிடத்தில் ஒரு சுனை இருப்பதைக் கண்டார். காலாங்கி நாதர் அந்தச் சுனை ஓரத்தில் ஓர் அபூர்வக் காட்சியைக் கண்டார்.மீனின் உடலும், மனித முகமுமாய் ஒரு ரிஷி ஆழ்ந்த தவத்தில் இருந்தார்.அவர் மச்ச ரிஷி என அழைக்கப்பட்டவர். மச்ச ரிஷிக்கு வணக்கம் செய்து பயம் தொடர்ந்தபோது மற்றோர் இடத்தில் ஆமை உடலும் மனிதமுகமுமாய் ஒரு ரிஷியை தரிசித்தார். அவர் “ காலங்கி நாத நான் பன்னொடுங்காலமாக இங்குதவமிருக்கிறேன். என்னைப் பார்க்க இதுவரை யாரும் வந்தது இல்லை. இங்கே உனக்கு என்ன வேண்டும்?” என்ற குரல் கேட்டு திரும்பினார் காலங்கி நாதர். அப்படி அழைத்தவர் வராகரிஷி. காலங்கி நாதர் அவரை வணங்கி உபதேசம் பெற்றார். பிரளயம் ஏற்பட்டு மலையுச்சி நோக்கி திரேதாயுகத்தில் பயணம் செய்த காலங்கி நாதர் அதன் பிறகும் பல ரிஷிகளைக் கண்டு உபதேசம் பெற்றார். வாமன, பரசுராமர், பலராமர்,பெளத்த, கல்கி, போன்ற ரிஷிகளும் திரேதாயுகத்திலிருந்து தவம் செய்து வருவதை அறிந்து காலங்கி நாதர் அவர்கள் யாவரிடமும் வணங்கி ஆசி பெற்றார்.சதுரகிரி மலைப்பகுதியில் வேதவியாசர்,மிருகண்டேயர்,பதஞ்சலி நாதரிஷி போன்ற முனிவர்களையும்,குதம்பைச் சித்தர்,பாம்பாட்டி சித்தர், ஞான சித்தர், வேதாந்த சித்தர், தவசித்தர், யோக சித்தர் போன்றவர்களயும் சந்தித்து அவர்களின் பேரருளைப் பெற்றார். அதன் பின்பு காலங்கி நாதர் தவத்தில் ஆழ்ந்திருந்த போது அங்கே வந்த வணிகன் ஒருவன் அவரைப் பற்றி மிகவும் கேள்விப்பட்டு அவரது கால்களில் வீழ்ந்து வணங்கி அழுதான்.

சனி, 13 ஜூன், 2020

தச மகா வித்யா என்பது ஆதிசக்தி பார்வதி தேவியின் பத்து உருவங்கள் ஆகும்.

மகாவித்தை என்பது, சங்கதச் சொற்களான "மகா" பெரும்
"வித்யா" பெருந்தோற்றம், பேரறிவு, ஞானம் ஆகியவற்றின் சேர்க்கையால் உருவானதாகும்.

தச மஹாவித்யா என்னும் பத்துவிதமான சக்திகள் இந்த பிரபஞ்சத்தின் அனைத்து விதமான செயலுக்கும் மூலகாரணமாக விளங்குகிறது.

அளவற்ற கருணையும் எல்லையில்லாக் குரூரமும் கொண்டவர்களாக, பெண்மையின் பெருந்தெய்வமாகிய பார்வதியின் அம்சங்களாக இவர்கள் விளங்குகின்றனர்.

இந்தப் பத்து தேவிகளும் பெண்மையின் சக்தியை தாய்மை முதல் கோபம் வரை அனைத்து வடிவிலும் காட்டுபவர்கள்.

ஒருபெரும் உண்மையே, பத்து திருவடிவங்களில் விளங்குகின்றது. பேரன்னை ஒருத்தியே பத்து பேராளுமைகளாக - பதின்பெருவித்தைகளாகப் போற்றப்படுகிறாள்"

1.  மாதங்கி
2.  புவனேஸ்வரி
3.  பகுளாமுகி
4.  திரிபுரசுந்தரி
5.  தாரா
6.  கமலாத்மிகா
7.  காளி
8.  சின்னமஸ்தா
9.  தூமாவதி
10.  திரிபுரபைரவி

1.  மாதங்கி:
என்றும் உயர்நிலையில் இருப்பவள். அனைத்து கேடுகளையும் தனதாக்கி நன்மையை பிறருக்கு அருள்பவள்.

2. புவனேஸ்வரி:
மென்மையான இதழ் உடையவள். பூமியை காப்பாற்றும் நாயகி. மனதில் ஏற்படும் எண்ணங்களுக்கு காரணமானவள். அழகும், சுந்தரவதனமும் நிறைந்தவள்.

3.  பகுளாமுகி:
பயங்கர ஆயுதங்களை தாங்கியவள். முட்கள் நிறைந்த கதாயுதம் இவளின் பிரதான ஆயுதம். எதிர்பாராத நிலையில் அசுரர்களை கதாயுதத்தால் தாக்குபவள். வேகமான பயணத்தால் எதிரிகளின் குழப்பத்திற்கு காரணமானவள்.

4.  திரிபுரசுந்தரி:
பதினாறு வயது கன்னிகையின் உருவைகொண்டவள். புதிய சிந்தனை மற்றும் புதிய கோட்பாடுகளின் மொத்த உருவம், என்றும் பிறருக்கு நுட்பமான ஞானத்தை வழங்குபவள். சிவனின் உடலில் அமர்ந்து தியானிக்கும் உருவம் இவளுடையது.

5.  தாரா:
நட்சத்திரத்தை போல ஒளி வீசுபவள். தனது மஹாசக்தியை உள்ளே வைத்து எளிமையாக காட்சியளிப்பவள்.

6.  கமலாத்மிகா:
தாமரையில் உறைபவள் என பொருள். அனைத்து சக்தியின் கிரியா சக்தியாக திகழ்பவள். அழகும், செல்வமும் நிறைந்தவள். இவளின் வடிவத்தையே லக்ஷ்மியாக வணங்குகிறோம். வெள்ளை யானை சூழ வலம் வரும் நாயகி கமலாத்மிகா.

7.  காளி:
கரிய நீல நிறம் கொண்டவள். வேதத்தில் அதர்வன வேதத்தை குறிப்பவள். மயானத்தில் உறைபவள். வெட்டுண்ட உடல்களை ஆடையாக அணிபவள். அடிமேல் அடி எடுத்து மிக மெதுவாகவும், ஆக்ரோஷமாகவும் நகர்பவள். சிவனை பாதத்திற்கு அடியில் வைத்திருக்கும் குரூரமான அமைப்பு காளியின் உருவம்.

8.  சின்னமஸ்தா:
தலையற்ற உடலுடையவள். தலை கழுத்து பகுதியில் இருந்து வரும் ரத்தத்தை தனது கைகளில் உள்ள பாத்திரத்தில் பிடிக்கும் உருவம் இவளுடையது. ஆண் – பெண் உடலின் மேல் நர்த்தனம் ஆடும் நிலையில் காட்சி அளிப்பவள்.

9.  தூமாவதி:
கைகளில் முறத்துடன் விதவை கோலத்தில் அமர்ந்திருப்பவள். வெள்ளை நிற ஆடையும், நகைகள் இல்லாத விரிந்த தலையும் கொண்டவள். கையில் புகை கக்கும் பாத்திரம் உடையவள். கொடுமையான மற்றும் தொற்றும் நோய்களுக்கு காரணமானவள்.

10.  திரிபுரபைரவி:
பைரவி என எல்லோராலும் அழைக்கப்படுபவள். கழுதையின் மேல் அமர்ந்து குரூரமாக காட்சியளிப்பவள். கருநீல நிறத்தில் உடலும், பெரிய போர்வாள் கைகளிலும் கொண்டவள். முகத்தில் அழகும் உடலில் ஆவேசமும் கொண்ட வித்யாசமான உருவ அமைப்பு கொண்டவள்.

தசமகா வித்யா தேவிகளின் வருகை சாக்த மார்க்கத்தில் பக்தி என்ற வழியை காட்டியது.

சாக்த மார்க்கம் என்பது சக்தி தேவியை மட்டும் வழிபட்ட மக்கள் கொண்ட பிரிவினர்.

உருவாவதும் பெண்ணால், அழிவதும் பெண்ணால் என நம்பும் சாக்தர்கள், இந்த பத்து தேவிகளையும் உளமார வழிபட்டனர்.

தேவி பாகவத புராணத்தின் கடைசி ஒன்பது அதிகாரங்களில் ஏழாவதான "சண்டி" சாக்தர்களின் "தேவி கீதை" ஆனது. இந்த பத்து தேவிகளில் சில தேவியர் தாந்திரிகர்களால் மட்டும் ஆராதனை செய்யப்படுவர்.

ஞாயிறு, 7 ஜூன், 2020

ஆதிசங்கரர் பல முறை லலிதா சஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் பண்ண நினைத்து தமது சிஷ்யரிடம் சஹஸ்ர நாமச் சுவடிகளை எடுத்துவரப் பணித்த போதும், சிஷ்யர் விஷ்ணு சஹஸ்ரநாம சுவடிகளையே தந்தாராம்.

2-3 முறை இவ்வாறு நடக்க, ஏன் இப்படி என்று சிஷ்யரிடம் கேட்கையில், சிஷ்யர் தாம் சுவடிகளை எடுக்கையில் ஒரு சிறு பெண் வந்து சுவடிகளை தந்ததாகவும், அதனைச் சரிபார்க்காது தாம் கொண்டுவந்து தந்ததாகக் கூறுகிறார். இவ்வாறு 2-3 முறை விஷ்ணு சஹஸ்ர நாமச் சுவடிகளை அன்னையே தந்ததாக அறிந்த சங்கரரும், அது அன்னையின் ஆணை என்று உணர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம் மட்டும் செய்தாராம்.

செளந்தர்ய லஹரி, பவானி ஸ்தோத்ரம், என்று பலவிதங்களில் அன்னை பராசக்தி மீது ஸ்லோகங்களை அருளிய ஆதிசங்கரர் லலிதா சஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் பண்ண இயலவில்லை. அதையே பிற்காலத்தில் வந்த ஒருவர் மூலமாக அன்னை செய்து வைத்தாள் என்றால் அது பிற்காலத்தில் வந்தவரது பக்தியை, அனுஷ்ட்டான சாதகத்தை, பாண்டித்யத்தை அன்னையே விரும்பிச் செயல்படுத்தினாள் என்றுதானே பொருள்?. இவ்வாறு லலிதா சஹஸ்ரநாம பாஷ்யம் பண்ணியவர்தான் பாஸ்கர ராயர். தஞ்சாவூர் மயிலாடுதுறை மார்கத்தில் பாஸ்கர ராயபுரம் என்று ஒரு ஊர் இவர் பெயராலேயே இருக்கிறது.

இவர் பிறந்தது மாகாராஷ்டிரத்தில், பாகா என்னும் நகரத்தில். இவரது பிறப்பு கி.பி 1690 என்று தெரிகிறது. தந்தை பெயர் கம்பீர ராயர், தாயார் கோனாம்பா. கம்பீர ராயர் விஜயநகர அரசவையில் பெளராணிகராக இருந்தவர், மகாபாரதப் பிரவசனம் செய்து அதன் மூலமாக பாரதீ என்னும் பட்டப் பெயரை பரம்பரை உரிமையுடன் பெற்றதாகச் சொல்கிறார்கள்.

கம்பீர ராயர் தமது மகனான பாஸ்கர ராயருக்கு காசியில் உபநயனமும், அத்யயனமும் செய்து வைத்திருக்கிறார். அக்காலத்திலேயே வாக்தேவி மந்திர தீக்ஷையும் நடந்து அம்மந்திரத்தை ஜபித்து வந்திருக்கிறார்.

சிறிது காலத்திலேயே வேத அத்யயனம் முடித்து ஊர் திரும்புகையில் குஜராத்தில் ப்ரகாசாநந்த நாதர் என்பவரை கண்டு அவரிடம் ஸ்ரீ வித்யை உபதேசமும், பூர்ணாபிஷேகமும் செய்து கொள்கிறார். பூர்ணாபிஷேக நாமம் ஸ்ரீ சிதானந்த பாதரேணு என்பதாகும். பின்னர் ஸ்ரீ கங்காதர வாஜபேயி என்பவரிடம் தர்க்க சாஸ்த்திரத்தையும் படிக்கிறார். அதர்வண வேதம் அழிந்து வருவதை தடுக்கும் விதமாக தானே அதனை அத்யயனம் செய்து அதனை பலருக்கும் கற்பித்து அவ்வேதத்தை உத்தாரணம் செய்கிறார்

இவரது மனைவி பெயர் ஆனந்தி என்பதாகும். அவருக்கும் மந்திர உபதேசம் செய்வித்து பத்மாவதம்மாள் என்று தீக்ஷா நாமம் வழங்கியிருக்கிறார். பிறகு ஒரு சமயம் வல்லப ஸம்ப்ரதாயத்தைச் சார்ந்த ஒரு வித்வானை வாதில் வென்று அவரது மகளையும் திருமணம் செய்து கொள்கிறார். அந்த மனைவி பெயர் பார்வதி என்பதாம். இரு மனைவிகளுடன் காசியாத்திரை கிளம்பிச் செல்லும் வழியில் ஒர் மாத்வ மஹானையும் வாதில் வென்றதாகச் சொல்லப்படுகிறது.

காசியில் ஸோம யாகம் செய்திருக்கிறார். அக்காலத்தில் காசியில் இருக்கும் வைதீகர்கள் உபாசனா மார்க்கத்தை ஏளனம் செய்வதும், குறை கூறுவதும் வழக்கமாக இருந்திருக்கிறது. பாஸ்கர ராயர் சமயாசாரத்தின் படியாக உபாசனை செய்து வந்தாலும், அவரை வாமாசாரத்தைச் சார்ந்தவர் என்று திரித்துக் கூறி இகழ்ந்து வந்திருக்கின்றனர். இதனை அறிந்த பாஸ்கர ராயர், தாம் வாதம் செய்ய தயார் என்று பிரகடனம் செய்கிறார்.

பாஸ்கர ராயருடன் வாதம் செய்ய அப்போது அங்கிருந்த குங்குமாநந்த நாதர் என்னும் யோகியைத் தயார் செய்து, அவரை முதன்மையாகக் கொண்டு வாதத்தை தொடங்குகின்றனர் வைதீகர்கள். பல கேள்விகளுக்கும் சிறப்பாக, சுலபமாக பதிலளிக்கிறார் பாஸ்கரர். அவரது வாதத் திறமையையும், மந்திர சாஸ்திரத்தில் இருக்கும் திறமையும் எல்லோரும் வியக்கின்றனர்.

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமத்தில் இருக்கும் "சதுஷ்ஷஷ்டி கோடி யோகினீ பரிசேவிதா" (237ஆம் நாமம்) என்பதில் வரும் 64 கோடி யோகினீகள் யார் என்று கேட்கின்றனர். பாஸ்கரரும் அம்பிகையை தியானித்துப் பின்னர், வரிசையாகச் சொல்ல ஆரம்பித்து, அந்தந்த யோகினிகளுக்கான பெயர், மந்திரங்கள், சரித்திரங்களை வரிசையாகச் சொல்லச் சொல்ல பிரமித்துப் போய்விடுகின்றனர். அப்போது தமது தலைவரான குங்குமாநந்த நாதரிடம் எப்படி இது சாத்தியம் என்று வினவ, அவரும் பாஸ்கர ராயர் சாதாரணமானவர் அல்லர். நமது கேள்விகளுக்கு அன்னை பராசக்தியே கிளி உருவில் அவர் தோளில் அமர்ந்து, அவர் சார்பில் பதிலளிக்கிறாள் என்று கூறுகிறார். தமது சிஷ்யர்கள் அந்தக் காக்ஷியைக் காணத்தக்க விசேஷ பார்வையையும் அளிக்கிறார். வைதீகர்களும் அன்னையைக் கிளி ரூபமாக தரிசித்து, பாஸ்கர ராயரிடம் மன்னிப்புக் கேட்டதுடன் நில்லாது பாஸ்கர ராயரை குருவாக ஏற்று அவரிடம் மந்திரோபதேசமும் பெற்றதாகச் சொல்லப்பட்டுகிறது.

கல்வியில் சிறந்து விளங்க
ஸ்ரீ.லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும்

ஆத்ம வித்யா மஹா வித்யா ஸ்ரீவித்யா காமஸேவிதா
ஸ்ரீ.க்ஷோ சாக்ஷரீ - வித்யா த்ரிகூடா காமகோடிகா

தசமுத்ரா - ஸமாராத்யா த்ரிபுரா ஸ்ரீவசங்கரீ
ஜ்ஞானமுத்ரா ஜ்ஞானகம்யா ஜ்ஞானஜ்ஞேய ஸ்வரூபிணி

என்ற ஸ்லோகங்களை விடியற்காலை எழுந்து குளித்துவிட்டு 48 நாட்கள் சொல்லி வர சரஸ்வதியின் அருள்கிட்டும்.
இதுவா ஆலயம் தொழும் வழிமுறை?

இன்றைக்கெல்லாம் செவ்வாய், வியாழன்,
சனிக்கிழமைகளில், சிவாலயங்களில் கூட்டம்
நிரம்பி வழிகிறது. அடடே! இத்தனை கூட்டமா
என்று, நம் மனதுக்குள் உற்சாகம்
தொற்றிக்கொள்ள ஆலயத்துக்குள் நுழைந்தால் ...

என்னடா இது? நமக்கு முன்னே இங்கே
நுழைந்தவர்கள் என்ன ஆனார்கள்? அங்கே
இறைவன் திருமுன்பில் (சந்நிதி) யாரையுமே
காணவில்லையே? வந்த கூட்டம் எங்கே? மாயமாய் மறைந்து போனார்களா? கண்கள் அங்குமிங்கும் சுழலும்போது தான் கூட்டமே தென்படுகிறது. அடடா, என்னே அதிசயம்!

இராகுகால துர்க்கை, தெற்குக் கோட்டத்து
தட்சிணாமூர்த்தி, நவக்கிரகத் திருமுன்பில்
எள்விழ இடமில்லை!

ஆகா…..நவக்கிரக திருமுன்பில் தான் எத்தனை கூட்டம்! கடலை மாலைகளென்ன? நல்லெண்ணெய் தீபமென்ன? ஒன்பது முறை பிரதட்சிணமென்ன? இத்யாதி... இத்யாதி...

நிமிடத்திற்கு ஓர் அலங்காரம், விநாடிக்கு ஓர்
அர்ச்சனை! குரு பகவான், சனி பகவான்கள்
எத்தனை அழகாகக் காட்சி அளிக்கிறார்கள், அவரவர் கிழமைகளில்!

ஆனால், இங்கே, மூலமூர்த்தி திருமுன்போ?
சுத்தம்! ஒரு ஈ, காக்கை கூட இல்லை!

என்ன தானய்யா  நடக்கிறது இங்கெல்லாம்?

நீங்கள் வழிபடும் சிவனை விட  சக்தி
வாய்ந்தவர்களா அந்த நவக்கிரகங்கள்? எதற்காக இப்படி அஞ்சி நடுங்குகிறீர்கள்?

"நாமார்க்கும் குடியல்லோம்" என்று முழங்கிய
நாவுக்கரசர் பரம்பரையில் வந்தவர்கள்;
“ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே” என்று
உரத்துச்சொன்ன சம்பந்தர் மரபில்
வந்தவர்கள் சில்லாண்டிற் சிதையும் சில சிறு தேவர்களை நாடிப்போய் வீழ்ந்து கிடப்பது நியாயந்தானா?

அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை!

நவக்கிரகங்களை ஏதோ அஞ்சத்தக்க
தெய்வங்கள் போல் காட்டி, அச்சுறுத்தி, உங்களுக்கு மிகுந்த சோதனைக்காலம் இது; தக்க தோஷபரிகாரம் செய்தேயாகவேண்டும்,
இல்லையேல், அவ்வளவு தான் என்றுகூறி அவர்களைத் தவறாக வழிநடத்தும் சில பிரபல ஆன்மீக வியாபாரப் பத்திரிகைகள், ஆன்மீக வியாபாரப் பேச்சாளர்களைத்தான் சொல்லவேண்டும்!

சோதிடம் ஒரு அருங்கலை! மறுப்பேயில்லை!

நல்லதோ, கெட்டதோ, நடக்கப்போவதை
அறிந்துகொள்ளும் ஆவலில், சோதிடர்களை
நாடுவதையோ, சுப காரியங்களுக்கு நல்ல
நாள் பார்க்க, அவர்களைத்
துணைக்கழைப்பதையோ, தவறென்று
கூறவில்லை. ஆனால், திருக்கோயில்
வழிபாடுகளிலேயே சோதிட நம்பிக்கை
மூக்கை நுழைப்பதை எந்த வகையிலும்
ஏற்றுக்கொள்ளவே முடியாது!

ஆயிரத்துமுன்னூறு வருடங்களுக்கு முன்பே
சம்பந்தர் பாடிவிட்டார் ஐயா!

இறைநம்பிக்கை கொண்ட அடியாரை, நாளும் கோளும் எதுவுமே செய்யாது என்று; பிறகேன் இத்தனை அச்சம்?

ஆழ்ந்துபார்த்தால் ஒன்று மட்டும்
தெளிவாகிறது. இப்படி தோஷ பரிகாரம்,
கிரகப்பெயர்ச்சி, என்று ஆயுளைக் கழிக்கும்
எல்லோருமே, தன்னம்பிக்கை அற்றவர்கள்!

எடுத்ததற்கெல்லாம் அஞ்சி நடுங்குபவர்கள்!

யாரையும் ஏளனம் செய்வதற்காக இதைக் கூறவில்லை!

தயவு செய்து உண்மையை உணர்ந்து
கொள்ளுங்கள்.

இறைவழிபாட்டைப் பொறுத்தவரை, நம்
சமயத்தில் முழு எழுவரல் (சுதந்திரம்)
இருப்பது உண்மை தான். அதைத் தவறாகப்
புரிந்து கொள்ளாதீர்கள்! தவறாகச் செயல் படுத்தாதீர்கள்! இது தான் இதன் உட்பொருள்.

மிகப்பழைய ஆலயங்களுக்குச்
சென்றீர்களானால், அங்கே நவக்கிரகத்
திருமுன்புகளே இராது! அப்படி இருந்தால் அது பிற்சேர்க்கையாகத்தான் இருக்கும்! 500
வருடங்கட்கு முன்பு எந்தச் சிவாலயத்திலுமே நவக்கிரக சந்நிதிகள் இருந்ததில்லை என விபரம் அறிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

அந்தந்த சிவாலயத்தில் அந்தந்த  மூர்த்தியும் உடனாய அம்பிகையும்  மட்டுமே  பிரதிஷ்டை  செய்யப்படிருந்தன. கோஷ்டங்களில், ஆகம விதிப்படி அமையவேண்டிய தெய்வங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. தேவர்கள் யாராவது அந்த ஆலய இறைவனை வழிபட்டு நன்மை பெற்றதாகத் தலவரலாறு இருந்தால் அந்த மூர்த்திக்குத் தனி சந்நிதி அமைக்கப் ப்படலாம் : திருவாஞ்சியத்தில் யமன்; திட்டை,  குருபகவான்; கஞ்சனூர், சுக்ரன் இத்யாதி. இத்தனித் திருமுன்பு அந்தந்த தெய்வத்திற்கு அளிக்கப்பட்ட கௌரவம் என்று மட்டுமே கருத வேண்டுமேயன்றி, மூலவருக்கு ஈடாக அவரை ஒருபோதும் கருதலாகாது. சப்த விடங்கத் தலங்களில் ஒன்றான திருநள்ளாறு -  இன்று சிவன்கோயில் இல்லை! அது சனிபகவானின் பரிகார ஸ்தலம்! திங்களூர் சந்திரன் கோயில்! வைத்தீசுவரன் கோவில், செவ்வாய் கோயில்! இப்படித்தான் இன்று அவை பிரபலம்பெற்று விளங்குகின்றன.

நவக்கிரகங்கள் இறைவன் ஆணைக்குக்
கட்டுப்பட்டவை! இறைவனின் பரிவாரம் என்ற
வகையில், அவையும் நம் வணக்கத்திற்குரி
யவை! அவை ஒரு மானிடனின் பிறப்பு முதல்
இறப்பு வரை ஆதிக்கம் செலுத்துபவை!

உண்மைதான்!

ஆனால், ஆணை செலுத்துபவனிடமே
அடைக்கலம் புகுந்தால், அவை நம்மை என்ன
தான் செய்யமுடியும்? அதை விடுத்து,
கிரகங்களை மட்டுமே ஆராதிப்பது, நமக்கு அருளக் காத்திருக்கும் இறைவனை அவமதிக்கும் செயல் ஆகும் அல்லவா? இன்று தேனுபுரீஸ்வரம் என்னும் பட்டீஸ்வரத்திற்குச் செல்வோர் பலர் அங்குள்ள துர்க்கையை மட்டுமே வழிபட்டுவிட்டு, பட்டீஸ்வரரைக் கண்டுகொள்ளாமலே வருவது கண்கூடு. இத் தலத்தில்தான் இறைவன் ஞானசம்பந்தருக்கு முத்துச்சிவிகை அளித்தார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

கோளறு பதிகம், திருநீலகண்டப் பதிகம் போன்ற பனுவல்கள்  நமக்குற்ற எத்தகைய ஆபத்துக்களையும் நீக்கக் கூடியவை.  அவற்றைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டால் நாளென் செயும்? கோளென் செயும்? வினை தான் என்செயும்? நல்லதே நடக்கும். நால்வர்
நூல்களை நாளும் ஓதி, மூலவரான
சிவபெருமானை வழிபடுவதை விட நம் இடர்
களைவதற்கான உபாயம் வேறு ஏதுமில்லை
என்பதை நன்றாக நினைவில் வைக்கவும்.
மூலமூர்த்தியை வழிபட்ட பின் தான்
நவகிரகங்களை வழிபட வேண்டும். இதில் மாற்றம் இல்லை. சிவபெருமானை விடுத்துச் செய்யும் நவக்கிரக வழிபாட்டால் யாதொரு பலனும் இல்லை.

தோஷநிவர்த்தி, பரிகாரம், அது, இது என்று
கொட்டும் பணத்தில் ஒரு பங்கையாவது வசதிகுறைந்த சிவாலயங்களின் பராமரிப்பு நிமித்தமும், சிவனடியார் பொருட்டும் செலவழித்தால் சிவபுண்யம் பல்கிப்பெருகி,
இம்மையிலும், மறுமையிலும் நமக்குற்ற நல் இன்பம் தருமல்லவா? வரியோர்க்கு உதவுதல் எத்தனை பெரிய தர்மம்? அன்ன தானம், வஸ்திர தானம் என, அடியார்க்குச் செய்யும் தொண்டுகள் ஆண்டவனையே சென்றடைவதாக அல்லவா திருமூலர் கூறுகிறார்? "நடமாடக்கோயில் நம்பர்க்கு ஒன்றீயின் / படமாடக்கோயில் பகவற்கதாமே"
இறைவன் நம்பக்கம் இருந்தால் நம்மை எந்த சக்தியால் தான் எதிர்க்க இயலும்? சிந்திப்பீர்!

(முகநூல் நண்பர்களுக்காக : ய. விஷ்வநாத் தாஸ்)
இது என்னுடைய பழைய கட்டுரை. மறுபடியும் புதிய நண்பர்களுக்கு வேண்டி மறு பதிவிடுகின்றேன்.

ஸ்ரீ ருத்ரமும் ஸ்ரீ ருத்ரர்களும் :-

ஹிந்து தர்மத்தில் மிக நீண்டகாலமாகப் போற்றப்படும் பழம்பெரும் வழிபாடுகளுள் ஸ்ரீருத்ரவழிபாடும் முதன்மையானது. வேதங்களிலும், மஹாபாரதம், இராமாயணம் முதலாய இதிஹாசங்களிலும் சிவபெருமானே ஸ்ரீருத்திரர் என்று கூறப்படுகிறார். ருத்திரசேனைக்கு அவர் தலைவராக இருப்பதால், மஹாருத்திரர் என்றும் குறிப்பிடப்படுகிறார். பொதுவாகவே, ருத்ரர் என்ற சொல் சிவப்பரம்பொருளையே குறிப்பதாயினும், அது பலருக்கும், பல குழுக்களுக்கும் பெயராக இருந்துள்ளமையையும் அறிந்து கொள்ள முடிகின்றது.

சைவாகமங்களிலும் சைவசித்தாந்தமரபிலும், பரசிவத்திலிருந்து தோன்றியவர்களே பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மஹேஸ்வரன், சதாசிவன் ஆகிய ஐம்பெரும் மூர்த்திகள் இவர்களே முறையே படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய ஐந்தொழில்களையும் ஆற்றுவதாயும் சித்தாந்தவிளக்கம் செய்யப்பட்டிருக்கின்றது.

மேலும், சைவதந்த்ரங்கள் இந்த உலகம் காலாக்னி ருத்ரரினின்று தோன்றியதாயும், இறுதியில் அவரிலேயே ஒடுங்கும் என்றும் குறிப்பிடுவதாயும் தெரிகின்றது.

ஒருவரா..? பதினொருவரா..? பலரா..?

சிவபுராணங்களில், பிரபஞ்சத்தைப் படைப்பதற்கு பிரம்மனுக்கு உதவியாக இருப்பதற்காக சிவபெருமான் பிரம்மாவின் நெற்றியிலிருந்து ருத்திரர்களைப் படைத்ததாக கூறுகின்றன. இவ்வாறு தோன்றியவர்கள் “ஏகாதசருத்ரர்கள்” என்ற
பதினொரு பேராவர். சாக்ததந்திரங்களில் இந்த ருத்ரர்கள் மஹாசக்தியின் காவல் தேவர்களாகக் காட்டப்பட்டுள்ளனர். இந்த வகையில் ஸ்ரீ லலிதா மஹாத்ரிபுர சுந்தரியின் ஸ்ரீசிந்தாமணி கிரகத்தைக் காவல் புரியும் எண்ணில்லாத ருத்ரர்கள் பற்றி வர்ணிக்கப்பட்டுள்ளது.

வேதத்தில் ருத்திரர்களைப் போற்றும் பகுதி ருத்ரீயம் என்று அழைக்கப்படுகின்றது. இது தவிர, மானிடர்களும் தம் தவவலிமையால், உருத்திரகணத்தவராயினர் என்றும் அறிய முடிகின்றது. இவர்களிடையே பலகுழுக்கள் காணப்பட்டதால், அவர்கள் “உருத்திரபல்கணத்தர்” எனப்பட்டனர்.

உருத்திரர் என்பது தமிழா? சம்ஸ்கிருதச்சொல்லா..? என்பதே பேராய்விற்குரிய ஒன்றாகும். தமிழில் ‘உரு’ என்றால் மேலான என்றும், திரம் என்றால் வழி என்றும் பொருள்கொண்டு உருத்திரர் என்றால், மேலானவழிச்செல்ல முயல்பவர்கள் என்று காட்டுகின்றனர்.

இச்சாதனையாளர்களுக்கு மூன்றாவதான ஞானக்கண் திறக்கும் என்று நம்பப்பட்டது. இந்த மூன்றாவது கண்ணை ‘உருத்திரக்கண்’ என்பர். இதனால், இவர்களுக்கும் ‘உருத்திரக்கண்ணர்’ என்ற நாமம் உண்டானது. முன்பு இருந்து மறைந்ததாக கருதப்படும் ‘லெமூரியா’ என்ற கடல் கொண்ட தமிழ்மண்ணில் வாழ்ந்த பலருக்கும் நெற்றிக்கண் இருந்தது என்றும் அவர்களே ‘உருத்திரர்’ எனப்பட்டனர் என்றும் கூட, சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

வடமொழியில் ருத்ரன் என்றால், ‘அழச்செய்பவன்’ என்பது பொருளாகும். யாரை..? என்ற வினா எழும்புகிற போது, தீயவர்களை என்று குறிப்பிடுவர். இதைவிட, ருத்ரன் என்பவன் துன்பத்தை ஓட்டுபவன் என்றும் குறிப்பிடுவர்.

இதனைக் கந்தபுராணம்

இன்னலங்கடலுள் பட்டோர் யாரையும் எடுக்கும் நீரால்
உன்னரும் பரமமூர்த்தி உருத்திரனெனும் பேர் பெற்றான்
என்கிறது.

பதினொரு ருத்ரர்

ஒரு சமயம் பிரமனால், படைப்புத் தொழிலைச் செய்ய இயலாது போயிற்று. அவன் சோர்ந்து விழுந்து இறந்த போது, அவனது உடல், பரசிவனருளால் பதினொரு கூறாகி எழுந்ததென்றும் அப்பதினொரு கூறுமே ஏகாதச ருத்ரர்கள் என்று மத்ஸயபுராணம் குறிப்பிடுகின்றது.

வேறு நூல்களில் இந்த வரலாறு சிறிது வித்தியாசமாக சொல்லப்படுகிறது. பிரமனின் வேண்டுகோளின் படி சிவனால் பிரமனது நெற்றியிலிருந்து பதினொரு ருத்ரர் உருவாக்கப்பட்டனர். அவர்களினைக் கண்ட பிரமன் மயக்கமுற அவர்களே  தாமே படைப்புத்தொழிலைச் செய்யத்தொடங்கினராம். ஓவ்வொரு ருத்திரரும் கோடி ருத்ரரைப் படைக்க, பிரமன் சோர்வு நீங்கி எழுந்த போது, அங்கே பதினொரு கோடி ருத்திரர்கள் காணப்பட்டனராம்.. இதனால், வெகுண்ட பிரமன் சிவனிடம் அழுது விண்ணப்பம் செய்தான்.

எனவே, சிவபெருமான் ருத்ரர்களை அழைத்து படைப்புத்தொழிலைத் தொடர வேண்டாம் என்று கட்டளையிட்டு, அவர்களுக்கென்று, புதிய உலகம் ஒன்றைப்படைத்து அங்கே சென்று வாழக்கட்டளையிட்டருளினார்.. இந்த ருத்ரர்கள் வழிபாடு செய்த லிங்கங்களை “ருத்ரகோடீஸ்வரர் என்று குறிப்பிடுகின்றார்கள்.

இந்த ருத்திரர்கள் தம் உலகிற்கு அப்பாலும் போர்த்தொழில் செய்யும் வீரர்களிடமும் அவர்களின் ஆயுதங்களிலும், அவர்களின் கோபத்திலும் வந்து தங்குவதாயும் குறிப்பிடப்படுகின்றது.

இவர்களுக்கு உருவம் வைத்து வழிபடும் வழக்கம் இல்லை. இவர்களை குறிக்க பதினொரு லிங்கங்களை அமைத்துப் பூஜிக்கும் வழக்கமே காணப்பட்டது. என்றாலும், காஞ்சி கைலாசநாதர் கோவிலில் “ஏகாதசருத்ரரின்” சிற்பங்கள்
காணப்படுகின்றன.

இவர்களின் பெயர்கள் முறையே மஹாதேவன், ஹரன், ருத்ரன், சங்கரன், நீலலோஹிதன், ஈசானன், விஜயன், பீமதேவன், பவோத்பவன், கபாலி, சௌம்யன் என்பனவாகும்.

இவர்கள் வழிபட்ட லிங்கங்களில் முறையே தோமரம், கொடி, வாள், வஜ்ரம், அம்பு, அங்குசம், மணி, தாமரை, தண்டு, வில், மழு ஆகிய ஆயுதங்கள் பொறிக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிகின்றது.

ஸ்ரீமத் பாகவதத்திலும் ருத்ரர்களின் வரலாறு சிறிது வித்தியாசமாகப் பேசப்பட்டிருக்கிறது. அவர்களின் பெயர்கள் அஜர், ஏகபாதர், அக்னிபுத்திரர், விரூபாட்சர், ரைவதர், ஹரர், பகுரூபர், த்ரியம்பகர், அசுரேசர், சாவித்ரர்,சயந்தர் என்பனவாகும்.

திருக்கச்சி ஏகம்பரைப் போற்றிய திருநாவுக்கரசர்

“விரைகொள் மலரவன் வசுக்கள் “ஏகாதசர்கள்” வேறுடைய
இரைக்கும் அமிர்தக்கரிய ஒண்ணா எங்கள் ஏகம்பனே”

என்று பாடுவதால், ஏகம்பரை ஏகாதசருத்திரர்கள் போற்றி வழிபட்டனர் என்றும் சொல்லப்படுகின்றது

சதம் என்றால் நூறு. இந்தவகையில் எண்திசையிலும், ஆகாயத்திலும், பாதாளத்திலுமாக திசைக்குப் பத்துப்பேராக விரிந்து நிற்கும் நூறு ருத்திரர்களை “சதருத்ரர்கள்” என்று குறிப்பிடுகின்றனர். இந்த நூற்றுவரின் பெயர்களும் பல நூல்களில் காணப்படுகின்றன. வேதங்களும் இவர்களைப் போற்றுகின்றன. இவர்கள் கடல் மீதும் ஆகாயத்திலும் பயணம் செய்ய வல்லவர்கள். மான், மழு தரித்தவர்கள், சிவனைப் போன்ற உருவத்தினர் என்று பலவாறாக கருதப்படுகின்றது.

வேதங்களில் இந்திரன் முதலியவர்களைப் பற்றிக்குறிப்பிடும் போது, நம: என்ற சொல் பெயருக்குப் பின்னே குறிப்பிடப்படுகின்றது. ஆனால், அதே வேதங்கள் ருத்ரரைக் குறிப்பிடும் போது முதலில் வணக்கமாகிய “நம:” என்று சொல்லி அதன் பின் நாமத்தைச் சொல்வதையும் அவதானிக்கலாம். ஆனால், இந்த வேதப்பகுதிகள் யாவும் மூலருத்ராகவும் ஸ்ரீருத்ரராகவும் விளங்கும் மஹாருத்ரரான சிவப்பரம்பொருளையே சுட்டும் என்பதே வைதீகசைவர்களின் நம்பிக்கை.

சிவனால், அர்ச்சுனனுக்கு வழங்கப்பட்டது பாசுபதாஸ்திரம், ஆனால், சிவனால் முருகனுக்கு வழங்கப்பெற்றது “ருத்ரபாசுபதாஸ்திரம்” என்ற மஹாஸ்திரம் என்று கந்தபுராணம் சொல்வதும் இங்கு சிந்திக்கத்தக்கது.

ஸ்ரீ ருத்ரமும் ஸ்ரீ ருத்ரஜெபமும்

திரயீவித்யா என்ற ரிக்,யஜூர், சாமம் என்ற மூன்று வேதங்களுக்கும் நடுவில் இருப்பது யஜூர்வேதம். அது சுக்லயஜூர்வேதம், கிருஷ்ணயஜூர்வேதம் என்று இரண்டு பிரிவாகிறது. அதில் கிருஷ்ண யஜூர்வேதத்தின் நடுவில் ஏழு
காண்டங்கள் கொண்ட தைத்திரீய சம்ஹிதையில் நடுவிலுள்ள நான்காவது காண்டத்தில் ஐந்தாவது ப்ரச்சனமாக இருக்கிறது ஸ்ரீருத்ரம்.

இந்த ஸ்ரீருத்திரத்தில் 11 அனுவாகங்கள் உள்ளன. இது ஸ்ரீ ருத்ரம், மஹாருத்ரம், சதருத்ரீயம், நமகம் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது. ஸ்ரீ ருத்ரத்தின் நடுவில் சிவ நாமம் பதிந்திருப்பது அற்புதத்திலும் அற்புதமாகும்.

நீரில் நின்று கொண்டு ஸ்ரீ ருத்ரம் சொன்னால் மழை வர்ஷிக்கும் என்பது நம்பிக்கை. இதனை சிவலிங்க அபிஷேகத்திலும், சிவபூஜையிலும் தவறாமல் பயன்படுத்தி வருவார்கள்.

பலரும் இதனை தமிழில் மொழிபெயர்க்கவும், அதே போல, கவிநடையிலேயே தமிழ் வடிவம் பெறச்செய்யவும் முயன்று வந்திருக்கிறார்கள். சைவர்களின் முக்கியமான ஒரு பிரமாணமாகவே ஸ்ரீ ருத்ரத்தை நாம் தரிசிக்கலாம்.
திருநாவுக்கரசு நாயனார் பாடிய நின்ற திருத்தாண்டகமும் தமிழில் அமைந்த ஸ்ரீ ருத்ரம் என்று போற்றப்பட்டு வருகின்றது.

ருத்ர பாராயண கிரமத்தில், ஸ்ரீ ஏகாதசருத்ரீயம், ருத்ரஏகாதசீ, மஹாருத்ரம், அதிருத்ரம் என்கிற விசேடமான விரிவான பலர் கூடி பாராயணம் செய்யும் மரபுகளும் வைதீக சைவர்களின் வழக்கில் விரவிக்காணப்படுகின்றன.
இப்போதெல்லாம் சிதம்பரம் முதலிய திருக்கோவில்களில் ஏகாதசருத்ரஹோமம் போன்றவை மிகவும் பிரபலமடைந்துள்ளன. இதற்கு காரணமாக உடனடியாக பலனும், சிவனருளும் கிடைப்பதாகச் சொல்லப்படுகின்றது.

பெரிய புராணத்தில் ‘உருத்திரபசுபதி நாயனார்’ என்பவரும் 63ல் ஒருவர். இவர் ருத்ரம் ஓதியே நாயனார்களில் ஒருவரானவர். அதைத் தவிர ஆலய வழிபாடுகளோ, அடியார் வழிபாடுகளோ கூட இவர் செய்ததாகச் சொல்லப்படவில்லை. ஆக, இவர் வரலாறு ருத்ரம் ஓதுதலில் சிறப்பை உணர்த்தவே பெரிய புராணத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ருத்ரவீணை, ருத்ரபிரியாகை, ருத்ரபர்வதம், ருத்ரரிஷி துர்வாஷர், சதுர்த்தசீ ருத்ரவிரதம் , ருத்ரபட்டம், ருத்ராக்னி, ருத்ரதீபம், போன்றவையும் ருத்ரம் சார்ந்து சிந்திக்க வேண்டியனவே.

ருத்ரர் வழிபாடு

ருத்ரமூர்த்திக்கு ஆலயங்கள் , சந்நதிகள் அமைந்திருப்பது மிகவும் குறைவு. என்றாலும் திருமாணிக்குளி பீமருத்ரர் ஆலயம் ருத்ரருக்கான ஆலயங்களில் பிரபலமானது. கடலூர் அருகிலுள்ள திருமாணிக்குழியில் அம்புஜாட்சி உடனாய வாமனபுரீஸ்வரராலயம் அமைந்துள்ளது.

இங்கு கருவறையின் முன்பு திரையிடப்பட்டு நீலவண்ணத்தாலான அத்திரையில் சிவப்பு வண்ண நூலால் ‘பீமசங்கரர்’ என்ற பீமருத்ரரின் திருவடிவம் பொறிக்கப்பட்டிருக்கும். சிறப்பான கலைநுணுக்க வேலைப்பாடுகளுடைய இந்த ருத்ரரின் திருவடிவம் அக்னிஜ்வாலையுடன் எட்டுக்கரங்களுடன் காணப்படுகின்றது. இக்கோவிலில் நடத்தப்படும் நான்கு கால பூஜைகளும் இந்த திரையிலுள்ள பீமருத்ரருக்கே நடத்தப்படுகின்றன. பூஜை முடிந்ததும் உள்ளே உள்ள சிவலிங்கத்திருமேனிக்கு தீபாராதனை மட்டுமே செய்யப்படுகிறது. இத்தகு புதுமையான வழிபாட்டிற்கு பல புராணக்கதைகளை அத்தலபுராணம் பேசுகிறது.

இதே போல, திருக்குடந்தை என்ற கும்பகோணத்தில் நாகநாதசுவாமி கோவிலில் பிரளயகாலருத்ரருக்கு திருவடிவம் அமைத்து வழிபாடு நடந்து வருகிறது. திருவெண்காட்டில் அகோரருத்ரருக்கு அழகான பெரிய வடிவம் உள்ளது. அதே போல, திருவண்ணாமலையில் காலாக்னிருத்ரர் சந்நதி இருக்கிறது. ஆனால், அம்மூர்த்தியை பைரவர் என்றே அழைத்து வழிபாடாற்றுவதாயும் தெரியவருகின்றது.

இதே போல, பவன், சர்வன், ஈசானன், பசுபதி, ருத்ரன், உக்ரன், பீமன், மஹாதேவன் என்ற அஷ்டருத்ரருக்கும் திருக்கடவூரில் திருமாளிகைச்சுற்றில் திருவுருவங்கள் உள்ளதாக ஆய்வாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால், அதைப் புரிந்து கொள்ளாமல் அத்திருவடிவங்களின் மேல் அஷ்டவசுக்களின் பெயர்களை எழுதி வைத்திருப்பதாயும் தெரியவருகிறது. ஆனால், சிலர் அஷ்டபைரவர்களையும் வேறு சிலர் சிவனுடைய ஆஷ்டு வித்யேஸ்வரரையுமே அஷ்ட
ருத்ரராக கருதுகின்றனர். எனவே, இது தொடர்பில் ஆய்வுகள் நடைபெற வேண்டிய தேவையுள்ளது.

மயானத்தில் சிவபெருமான் ருத்ரதாண்டவம் செய்வதாக குறிப்பிடப்படுகிறது. இங்கே காட்டப்படும் மய என்பதற்கு உருவாக்குதல் என்றும், அயனம் என்பதற்கு தொடர்ந்து செல்லுதல் என்றும் பொருள். இதனை ஸ்மசானம் என்ற சொல்லால் குறிப்பது தவறு என்றும் பெரியவர்கள் காட்டுவர். இதனால், உருத்திரசமயிகளும் பாசுபதர்களும் தம் வழிபாட்டிடங்களை மாயானம் என்று சொன்னார்கள் என்றும் தெரிய வருகின்றது. கச்சிமயானம், திருக்கடவூர்மயானம்,
வீழிமயானம், காழிமயானம், நாலூர் மயானம் என்ற ஐந்து மயானங்கள் சிவவழிபாட்டாளர்களுக்கு முக்கியமானவையாக காட்டப்படுகின்றன.

இதே போல, ருத்ரவழிபாடுகள் ஈழத்தில் நடைபெற்றமைக்கான ஆதாரங்கள் இப்போது இல்லாதவிடத்தும், நகுலேஸ்வரம், முன்னேஸ்வரம், திருக்கேதீஸ்வரம் போன்ற ஸ்தலங்களை அடுத்து ருத்ரமயானங்கள் அருகில் காணப்படுவதும், அருகிலேயே ஆலய தீர்த்தம் உள்ளதும், அங்கெல்லாம் ருத்ரவழிபாடு நடந்திருக்கலாம் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கின்றது.

யாழ்ப்பாணத்திலுள்ள ஆவரங்கால் என்ற ஊரில் மயானத்திற்கு மிக அண்மையாக, மயானத்தை நோக்கிய வண்ணம் பெரியதொரு சிவாலயம் இராஜகோபுரத்துடன் காணப்படுவதும், ருத்ரவழிபாட்டுடன் இணைத்து சிந்திக்க வைக்கிறது. இதனை
விட, பிற்காலத்தில் இங்கிருந்த ருத்ரவழிபாடு பைரவ வழிபாட்டுடன் கலந்திருக்கலாம் என்றும் எண்ண முடிகின்றது.

ஆக, ருத்ரர் பற்றிய விளக்கங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. அது பற்றிய பல்வேறு சர்ச்சைகளும் குழப்பங்களும் ருத்ரரை சிவனுடன் இணைத்தும், கலந்தும், பேதப்படுத்தியும் மாறுபட்டும் சிந்திக்கும் நிலைமைகளும் விரவிக்கிடக்கின்றன. எனவே, ருத்ரர் பற்றியும் ஸ்ரீ ருத்ரம் பற்றியும் ஆய்வுகள் மேம்படவேண்டும். இது வரை ஆய்வுகள் நடைபெற்றிருந்தால் அவை பிரபலப்படுத்தப்பட வேண்டும். அதன் வாயிலாக, சைவத்தமிழ்ச்சான்றோர்கள் ருத்ரர் பற்றிய தெளிவு உண்டாக வழி செய்ய வேண்டும்.

தென்னாடு உடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!! ஆரூர் அமர்ந்த அரசே போற்றி சீரார் திருவையார போற்றி போற்றி.
திருச்சிற்றம்பலம்

சனி, 6 ஜூன், 2020

குரு பார்வை கோடி நன்மை !!!

ஒருமுறை ஜோதிடக் கலையின் குருவான பிரஹஸ்பதியிடம், தெய்வீக சாஸ்திரத்தைக் கற்பதற்காக வேண்டி சந்திரன் சென்றான்.

அவர் தனக்கு தெரிந்ததை எல்லாம் அவனுக்கு கற்று கொடுத்தார்.

சந்திரன் அதனைக் கற்றுத் தேர்ந்தவுடன் எல்லாம் அறிந்து கொண்டு விட்டோம் என்ற மமதையில் மூழ்கித் திளைத்தான்.

சந்திரனின் மமதையைக் கொஞ்சம் மட்டம் தட்டி வைக்க விரும்பிய குரு பகவான்,

பூமியில் அப்போது ஜனித்த ஒரு சிசுவின் ஜாதகத்தைக் சரியாக கணிக்குமாறு சந்திரனைப் பணித்தார்.

சந்திரனும் அந்தச் சிசுவின் ஜாதகத்தை கணித்தான்.

அந்தக் குழந்தை ஒரு வயது பூர்த்தியாகும் சமயம் பாம்பு கடித்து மரணம் சம்பவிக்கும் என்றும் சொன்னான்.

ப்ரஹஸ்பதி சந்திரனை சில மாதங்கள் கழித்து வரவழைத்தார்.

அச்சமயம் சந்திரன் ஜாதகம் குறித்த குழந்தைக்கு ஓராண்டு முடிவதற்கு இன்னும் ஒரு சில வினாடிகளே இருந்தன.

சந்திரனும், குருவும் வானவெளியில் சஞ்சரித்தபடியே குழந்தையை பார்த்துக் கொண்டிருந்தனர்.

தொட்டில் சங்கிலி வழியே பாம்பு ஒன்று மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தது.

குழந்தைக்கும் பாம்புக்குமிடையே ஒரு அடி தூரமே இடைவெளி இருந்தது.

தன்னுடைய கணிப்பு சரிதான் இன்னும் கொஞ்ச நேரத்தில் பலிக்கப் போகிறது என எண்ணி மகிழ்ந்த சந்திரன், குருவை இறுமாந்து நோக்க,

குரு தன் புன்னகை மாறாமல் குழந்தையையே பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போதுதான் அந்த எதிர்பாராத அதிசயம் நடந்தது.

திடீரென கண்விழித்த குழந்தை வழவழவென்று மின்னிக் கொண்டு இறங்கி வரும் பாம்பை ஏதோ புதுமாதிரி விளையாட்டுச் சாமான் என்று கருதி,

மகிழ்ச்சியால் கையையும் காலையும் உதைத்துக் கொண்டு துள்ள, தொட்டில் மேலே கீழே பக்கவாட்டில் என்று திசைமாறிக் குலுங்க,

பாம்பின் தலை சங்கிலியின் ஒரு வளையத்திற்குள் எக்கச்சக்கமாகச் சிக்கிக் கொண்டது.

தன் தலையை விடுவித்துக் கொள்ளும் முயற்சியில் பாம்பு தன் உடலால் சங்கிலியைச் சுழற்றிக் கொண்டு நெளிய,

குழந்தை மேலும் துள்ள, இப்போது பாம்பின் வாலும் வேறொரு வளையத்தினிடையே சிக்கிக் கொண்டது.

குழந்தை மேலும் மேலும் துள்ளி விளையாட எவ்வளவு நேரம்தான் பாம்பு தாங்கும் ஓரிரு வினாடிகளில் பாம்பு இறந்து விட்டது.

அடுத்த வினாடி குழந்தை தன்னுடைய இரண்டாவது வயதில் அடி எடுத்து வைத்தும் விட்டது.

சந்திரன் தன் ஓலைச் சுவடிகளில் இருந்த குழந்தையின் ஜாதகக் கணக்கை சரிபார்த்துக் கொண்டிருந்தான்.

தன் கணக்கு சரியாகவே இருந்ததுபோலப் பட்டது. பின்னர் குருவைப் பார்த்துக் கேட்டான்.

ஜாதகத்தில் இப்போது குருபார்வை கூட இல்லையே இது எப்படி நடந்தது?

குழந்தை எப்படிப் பிழைத்தது?

தோற்றுவிட்ட ஆத்திரம் அவன் குரலில் பீறிட்டது.

புன்னகை மாறாத குரு, அப்போதுதான் வாயைத் திறந்தார்

ஜாதகத்தில் குரு பார்க்காவிட்டால் என்ன? அதுதான் இப்போது நேரிலேயே பார்த்துக் கொண்டிருந்தேனே அப்புறம் எப்படி மரணம் சம்பவிக்கும்?

சந்திரன் தன் கர்வம் அழிந்து, குருவை வணங்கி விடைபெற்றான்.

ஜாதகத்தில் கிரக நிலை எப்படி இருந்தபோதும், கிரகங்களின் கோசார நிலைகளையும் ஆராய்ந்த பின்னரே உறுதியாகப் பலன்களை உணர முடியும்.

குரு இருந்து கொடுப்பதைவிட பார்த்துக் கொடுப்பது அதிகம். அதனால்தான் குரு பார்வை கோடி நன்மை என்கிறார்கள்.

சில நேரங்களில் நமது குரு (ஆசாரியன் பார்வை ஆசி பூரணமாக நம்மிடம் இருந்தாலும்) கடாச்சம் கூட கோடி நன்மை தரும். எனவே

எப்பொமுதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் ஆசாரியனை சேவிக்க சென்று வருவோம்- காரணமே இல்லாவிட்டால் கூட.

 *ஆசாரிய தேவோ பவ:*