*தேவி மாஹாத்ம்யம் ரஹஸ்யம்*
1) *ப்ராதானிக ரஹஸ்யம்*
அரசன் சொன்னான்-
பகவன்- பெரியவரே – இது வரை சண்டிகையின் அவதார விஷயங்களை விவரமாக தாங்கள் சொல்லி தெரிந்து கொண்டோம். நாங்கள் ஆராதிக்க தகுந்த வகையில் தெளிவாக உள்ளது எது – அவதார வரிசைகளில் தேவியின் எந்த ரூபத்தை நாங்கள் பூஜிக்க வேண்டும் என்பதை தாங்கள் உறுதியாக சொல்ல வேண்டும். அதன் விதி முறைகளையும் தெரிந்து கொள்ள ஆவலுடன் வணக்கத்துடன் கேட்கிறேன்
ரிஷி பதிலளித்தார். இது பரம ரஹஸ்யம்- வெளியாருக்கு சொல்லக்கூடாது – என்பது எங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டளை. ஆயினும் நீ என் பக்தன். பக்தியுடன் ஆவலுடன் கேட்பதாலும் சொல்கிறேன். உனக்கு சொல்லத் தடையில்லை.
பரமேஸ்வரியான மஹாலக்ஷ்மியே அனைவருக்கும் ஆத்யா- அதாவது முதல் தெய்வம். மூன்று குணங்களையுடையவள். உலகை வியாபித்து – உலகெங்கும் நிறைந்திருப்பவள். புலன் அறிவுக்கு எட்டியும் எட்டாமலும் இருப்பவள். ஜீவ ராசிகள் அனைத்துக்கும் தாயாக இருப்பவள். கைகளில் கதை, கேடம், பானபாத்ரம் இவைகளை வைத்திருப்பவள். தலையில் லிங்கம், நாகம், இவைகளும் இருக்கும். புடமிட்ட தங்கம் போன்ற உடல் நிறமும், அதே போன்று புடமிட்ட தங்க ஆபரணங்களுடனும் பிரகாசமுடன் காட்சி தருவாள். அது வரை சூன்யமாக இருந்த உலகை தன் ஒளியால் நிரம்பச் செய்து விட்டாள். சூன்யமாக கிடந்த உலகை உயிர்ப்பிக்க தானும் தாமஸமான உருவையே எடுத்துக் கொண்டாள். கருமையான உடல் நிறமும், கோரைப் பற்களும், பெரிய கண்களும், சிற்றிடையுமாக தோன்றினாள். நான்கு கைகள். அவைகளில் கட்கம், பாத்திரம், கேட்டை – என்பவைகள் அலங்கரித்தன. மிகச்சிறந்த பெண்மணியாக, மஹாலக்ஷ்மியிடம் சென்று வணங்கி – எனக்கு ஒரு பெயரும், செயலும் தரவேண்டும் என வினவினாள். மஹாலக்ஷ்மியும், அவ்வாறே தருவதாகச்சொல்லி அனுக்ரஹித்தாள்.
உனக்கு பெயரும், நீ செய்ய வேண்டிய செயல்களையும் சொல்கிறேன் என சொல்லி வரிசையாகச் சொன்னாள்.
மஹா மாயா, மஹா காளி, மஹாமாரீ, க்ஷுதா, த்ரூஷா, நித்ரா, த்ருஷ்ணா, ஏகவீரா, காலராத்ரி, துரத்யயா – இவைகளே உன் பெயர்கள். உன் செயல்களையும் விவரிக்கின்றன. இவை உன் செயல்கள் என்று அறிந்து கொண்டு உன்னை வழிபடுபவன் நல்ல கதியை அடைவான் என்பதில் சந்தேகமே இல்லை. இவ்வாறு அவளிடம் சொல்லிவிட்டு, மஹாலக்ஷ்மி மற்றொரு உருவம் எடுத்துக் கொண்டாள். சத்வமாக, அதி சுத்தமான வெண்மை நிறமும் சந்திரனைப் போன்ற ஒளி சிந்தும் தண்மையான
உருவம். கைகளில் அக்ஷ மாலை, அங்குசம், வீணை, புஸ்தகம் இவைகளுடன், ஒப்பில்லாத அழகிய பெண்ணாகத் தோன்றினாள். அவளுக்கும், தேவி, பெயர்களையும், செய்ய வேண்டிய செயல்களையும் விவரித்தாள்.
மஹா வித்யா, மஹா வாணீ, பாரதீ, வாக், சரஸ்வதி, ஆர்யா, ப்ரஹ்மி, காமதேனு, வேத கர்பா, அறிவுக்கு அதிபதி. – இவையே.
அதன் பின் மஹா காளியையும், மஹா சரஸ்வதியையும் பார்த்து, மஹா லக்ஷ்மி சொன்னாள்- நீங்கள் இருவருமாக உங்கள் தேவைக்கேற்ப தம்பதிகளாக ஸ்ருஷ்டி செய்து கொள்ளுங்கள் என்றவள், பின் யோசித்து, தானே ஸ்ருஷ்டி செய்யத்துவங்கினாள். இருவரை, அழகானவர்களாக, ஹிர்ண்யகர்ப எனும் பெயருடன், கமலாஸனத்தில், ஆணும் பெண்ணுமாக தோன்றச்செய்தாள். அதில் ஆணாக இருந்தவரை ப்ரும்மன், விதி, விரிஞ்சி, தாதா என்றும், அந்த பெண்ணுக்கு ஸ்ரீ, பத்மா, கமலா, மாதா என்றும் பெயர்கள் சூட்டினாள்.
இதற்கிடையில், மஹா காளி, பாரதி என்ற இருவர். இவர்களுடன் தோன்றிய ஆணுக்கு பெயர்கள் வருமாறு- நீல கண்டன், ரக்தபாஹூ, வெண் நிறத்தான், சந்த்ரசேகரன் என்றும், ருத்ரன், சங்கரன், ஸ்தாணு, கபர்தி, த்ரிலோசனன் என்றும் பெயர்கள். அடுத்து, பாஷா, அக்ஷரா, ஸ்வரா, காமதேனு, என்றழைக்கப் படும் சரஸ்வதி
கௌரி என்ற பெண்ணையும், க்ருஷ்ணம் என்ற ஆணையும் தோற்றுவித்தாள். அவர்களுடைய பெயர்கள், விஷ்ணு, க்ருஷ்ணன், ஹ்ருஷீகேசன், வாசுதேவன், ஜனார்தனன் என்றும், உமா, கௌரி, சதீ, சண்டி, சுந்தரி, சுபக, சிவா, என்ற இப்பெண்களும் உடனேயே சரீரம் உடையவர்களாக ஆனார்கள். ( புரம்-தேஹம், தேஹீ- சரீரம் உடையவன் என்பது போலவே புரம் என்ற உடலையுடையவன் புருஷன்) இவர்களை சாரதாரண மனிதக் கண்களால் காண இயலாது.
மஹாலக்ஷ்மி, இதன் பின் ப்ரும்மாவுக்கு பத்னியாக, த்ரயீ, ருத்ரனுக்கு வரம் தரும் குணமுடையவளாக கௌரீ, வாசுதேவனுக்கு ஸ்ரீ, என்றும் அளித்தாள்.
த்ரயீ (ஸ்வரா என்றும் பெயர்) என்பவளுடன் விரிஞ்சி ஒரு பூ கோளத்தை உண்டாக்கினார். வீர்யவானான ருத்ரன், அதை கௌரியுடன் கூடி பிளந்தார். அந்த அண்டம்- கோளத்தின் மத்தியிலிருந்து தான், அரசனே, பிரதானமான செயல்கள் தோன்றின. மஹாபூதங்கள் – ஆகாசம், வாயு, அக்னி, நீர், மண் – இவை தோன்றின. அசையும், அசையாப் பொருட்கள் மற்றும் ஜீவன்கள் தோன்றின. கேசவன் லக்ஷ்மியுடன் அவைகளை பாதுகாத்து, வளரச் செய்தான். கௌரியுடன் மஹேஸ்வரன் அதை திரும்பவும் மஹா சம்ஹாரம் செய்தான். இவ்வாறாக உயிர்கள் தோன்றவும் மறையவும், பின் தோன்றுவதுமாக சுழன்று வரும் சக்கரத்தை அனைத்தும் தானாகவே இருந்து நடத்தி வருகிறாள் தேவியான மஹாலக்ஷ்மி. மஹாராஜா, அவளுக்கு தனியான ரூபமோ, பெயரோ கிடையாது. வெவ்வேறு பெயர்கள் குறிப்பவை அவளையே தான் என்பதை அறிவாய்.