வியாழன், 22 ஆகஸ்ட், 2019

சிதம்பர ரகசியம் பகுதி : 13

பிரபஞ்சமாகிய இந்த ஆடலரங்கத்தில் இடை விடாது ஆடும் இந்த ஆடலரசன் ஆடவில்லை எனில் நாம் வாழ்வது எங்கே? இந்த ஆடலின் மகத்துவத்தைச் சொல்லி முடியாது. அவன் ஆடுவது ஆனந்த தாண்டவம். இந்தத் தாண்டவம் பலவகைப் படுகிறது. அது பற்றிப் பின்னால் பார்ப்போம். இப்போது சிதம்பரம் கோவில் மூலஸ்தானத்தில் உள்ள நடராஜர் சிலை வலது பக்கம் சிற்பத்தின் வலது பக்கமாய் பார்த்தோமானால் ஒரு திரை தொங்க விடப் பட்டிருக்கும். அந்தத் திரையை எல்லா நேரமும் திறந்து வைத்துத் தரிசனம் செய்து வைக்க மாட்டார்கள். ஏனெனில் அதற்குள்ளே தான் "சிதம்பர ரகசியம்" உள்ளது. இது தான் இந்தக் கோயிலின் முக்கியத்துவமும் புனிதமும் கூட. இறைவனின் உருவ தத்துவமான சிவலிங்க தத்துவத்தை மட்டுமல்லாது உருவமற்ற அந்தப் பரம்பொருளின் அரூப தத்துவத்தையும் உணர்த்துவது. எல்லையற்றப் பரம்பொருள் எங்கும் விரிந்து பரந்து இருப்பதைக் குறிக்கும். ஆகாயம் எவ்வாறு உருவமில்லாமல் உருவம் இருப்பதைப் போல் இருக்கிறதோ அது போல் இந்தப் பரம்பொருளும் உருவமற்றது. உருவம் இருப்பது போல் உள்ளது. எல்லையற்று விரிந்து பரந்து காணப்படுவது. ஆதியில் இறைவனை உருவ வழிபாடு செய்து வழிபட்டதில்லை. ஆனால் சாதாரண மனிதனுக்கு இறைவன் என்ற ஒரு உருவம் தேவைப் பட அவனுடைய செளகரியத்துக்காக ஏற்பட்டது தான் உருவ வழிபாடு. காலப் போக்கில் வழிபாட்டில் இரு முறைகள் ஏற்பட்டன. ஒன்று உருவ வழிபாடு. மற்றது அருவ வழிபாடு. அருவ வழிபாடு நிர்குண உபாசனை எனப்படும். இது எல்லாராலும் முடியாதது. சாதாரண மனிதனால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்று. கடவுளைத் தன் மனத்தினுள்ளே நிறுத்தி அவனின் பரிபூரணப் பேரானந்தத்தைப் பெற எல்லாராலும் முடியாது. யோகிகளும், ஞானிகளும் அதற்கெனப் பயிற்சிகள் பல செய்து தங்கள் தவத்தாலும் தியான வழிபாடுகளாலும் அடைந்த ஒன்றைச் சாதாரண மனிதன் அடைய முடியுமா? வழிப்பாடுகளிலேயே மிகச் சிறந்த ஒன்றான இறைவனைத் தன்னுள்ளே காணுதல் எல்லாராலும் முடியாத ஒன்று அல்லவா?

ஆனால் நம்மால் புரிந்து கொள்ள முடியாத ஒன்றைப் புரிந்து கொள்ளும் ஒரு வழிமுறை தான் இந்தச் சிதம்பர ரகசியத்தில் உள்ளது. அதை நமக்குக் காட்டி சொல்லாமல் சொல்வது தான் சிதம்பர ரகசியம். யோகிகளும் ஞானிகளும் தங்கள் மனதையே இந்த ஆகாயமாக நினைத்துக் கொண்டு அங்கே உள்ள தாமரைப் பூவில் இறைவனை ஆவிர்ப்பவித்து வழிபட்டு தன்னுள்ளே உள்ள பரிபூர்ண இறை சக்தியைக் கொண்டு பேரானந்த நிலை எட்டுவது தான். இதற்கு மிகுந்த பயிற்சி வேண்டும். இது யோக சாஸ்திரமும் சம்மந்தப் பட்டது. நம்முடைய உடலின் மூலநாடிகளைக் கிளப்பி மனமாகிய தாமரைப் பூவில் அமர்ந்திருக்கும் இறை சக்தியைத் தலை உச்சிக்குக் கொண்டு போய்ப் பேரானந்த நிலையை எட்டுவதே ஆகும்.

 மிண்டும் நாளை சந்திக்கலாம்.

புதன், 21 ஆகஸ்ட், 2019

சிதம்பர ரகசியம் பகுதி : 12

படைத்துக் ,காத்து, அழித்து, மறைத்து, அருளும் நடராஜரின் திரு உருவில் உள்ள அர்த்தங்கள் தான் எத்தனை? இப்போது இந்தக் கட்டுரைய எழுதும்படி என்னைத் தூண்டியதும் அவர்தான் அதைப் படிக்கும் படியான உணர்வை உங்களுக்குத் தூண்டுவதும் அவர்தான். இப்படி எல்லாமாக நிறைந்திருக்கும் நடராஜரின் உருவமே "ஓம்" என்னும் எழுத்தைப் போல் இருக்கிறது என்று ஏற்கெனவே சொன்னேன். உலக மக்களைத் துன்பத்தில் இருந்து விடுவித்து முக்தி கொடுக்கவும் தான் அவர் ஆடுகிறார். அவர் கையில் இருக்கும் "டமரூ"வின் சப்ததில் மக்களை அழைக்கிறார் எனக் கொள்ளலாம். இதைத் தவிர டமரூவின் சப்தத்தில் தான் சிருஷ்டியே நடக்கிறது. தன் கைகளால் பாதுகாப்பும் அளிக்கிறார் உலக மக்களுக்கு அபய ஹஸ்தத்தின் மூலம். இந்த அபய ஹஸ்தம் தான் ஸ்திதியையும் காட்டுகிறது. நெருப்பை ஏந்தி இருக்கும் கையானது அவர் நமக்கு அளிக்கும் சத்தியப் பிரமாணத்தைக் காட்டுகிறது. என் காலடியில் நீ வந்தாய் உனக்கு என்னுடைய பாதுகாப்பு உண்டு என்று காட்டுகிறார். அதைத் தான் தன்னுடைய நடனமாடும் இடது காலை இடக்கையால் சுட்டியும் காட்டுகிறார். முயலகனை அழுத்தும் வலக்கால் நாம் இவ்வாறு நம் மனத்தைக் கட்டுப் படுத்த வேண்டும் எனக் காட்டுகிறது. தூக்கி நிற்கும் இடக்காலோ சொல்லாத வி்ஷயங்களே இல்லை. அதைத் தான் "குஞ்சிதபாதம்" எனச் சொல்கிறார்கள். இந்தக் குஞ்சித பாதத்தைப் பணிந்தால் நமக்கு இவ்வுலக பந்தங்களில் இருந்து விடுபட்டுப் பேரானந்த நிலையை அடையலாம் என்று சொல்கிறார். இது மட்டுமா?

மருவுந்துடியுடன் மன்னிய வீச்சு
மருவிய அப்பும் அனலுடன் கையும்
கருவின் மிதித்த கமலப் பதமும்
உருவில் "சிவாய நம" என ஓதே. (விளக்கம்-மாணிக்க வாசகர்)

"நமசிவாயா" என்னும் ஐந்தெழுத்துப் பஞ்சாட்சரம் தான் அவரின் உடலின் அங்கங்களும் கூட. அக்னியை ஏந்தும் கையானது "ந" என்னும் எழுத்தையும், கால்கள் "ம" என்னும் எழுத்தையும், கீழே தொங்கிக் கொண்டிருக்கும் கை "சி" என்னும் எழுத்தையும், டமரூ வைத்திருக்கும் கை "வ" என்னும் எழுத்தையும், அபய ஹஸ்தம் "யா" என்னும் எழுத்தையும் குறிக்கிறது.

மாயை தனை உதறி வல்வினையைச் சுட்டு மலம்
சாயவமுக்கு அருள் தானெடுத்து - நேயத்தால்
ஆனந்த வாரிதியிலான் மாயைத் தானழுத்தால்
தானெந்தையார் பாதம் தான் (மாணிக்க வாசகர்)

அரன் துடி தோற்றம் அமைத்தல் திதியாம்
அரன் அங்கி தன்னில் அறையில் சங்காரம்
அரனுற்றணைப்பில் அமருந்திரோதயா
அரனடி யென்னும் அனுக்கிரகம் என்னே (திருமந்திரம், திருமூலர்)

டமரூவின் ஓங்கார நாதத்தில் இருந்து தான் மொழி பிறந்தது என்று சொல்கிறார்கள். சிருஷ்டி ஆரம்பித்தது இந்த ஓங்கார நாதத்தில் இருந்து தான். அபய ஹஸ்த முத்திரை காத்தல் தொழிலைச் செய்கிறது. நெருப்பு ஏந்தி இருக்கும் கை அழித்தலைக் குறிக்கிறது. முயலகனை அழுத்தும் வலக்கால் மாயையை அழுத்துவதையும் மறைத்தல் தொழிலையும், தூக்கிநிற்கும் இடக்கால் அருளுவதையும் அந்த இடக்காலைச் சுட்டும் கை என்னிடம் வந்து சேர் என்றும் தெரிவிக்கிறது. இதில் இருந்து இந்த ஐந்தொழில்களைச் செய்பவர்கள் ஆன பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மஹேஸ்வரன், சதாசிவன் ஆகிய ஐந்து பேரும் நடராஜருக்குள் அடங்குபவர்கள் என்றும் இவ்வுலகு அவரில்லாமல் இல்லை எனவும் தெரிய வருகிறது. தத்துவங்களும், உரைகளும், பாக்களும் அவனருளன்றி இல்லை என்பதோடு அல்லாமல் அவன் கோவில்களில் மட்டும் அடியார்கள் காணவேண்டி ஆடவில்லை. இந்த ஆட்டத்தால் தான் அவன் இவ்வுலகை மட்டுமல்லாது ஈரேழு பதினாலு உலகங்களையும் ஆட்டுவிக்கிறான் என்று சொல்கிறது. எல்லைகளைக் கடந்த இந்த நாட்டியம் ஆனது முடிவற்றது. இடைவிடாது ஆடப்படுவது. இந்த ஓங்கார ஸ்வரூபம் இல்லையென்றால் எதுவும் இல்லை. இதற்குக் காலமோ, நேரமோ, இடமோ குறிப்பிட்டுச் சொல்ல முடியாதபடிக்குக் கால, தேச, வர்த்தமானங்களைக் கடந்தது. இந்தப் பிரபஞ்சமே அவன் ஆடலரங்கம். அவன் ஆடலரசன். ஆடுவதும் அவனே! ஆட்டுவிப்பதும் அவனே!

வேதங்களாட மிகு ஆகமமாடக்
கீதங்களாடக் கிளர் அண்டம் ஏழாடப்
பூதங்கள் ஆலப் புவனம் முழுதாட
நாதங்கள் கொண்டாடினான் ஞானானந்தக் கூத்தே! திருமந்திரம்-திருமூலர்

மிண்டும் நாளை சந்திக்கலாம்

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

சிதம்பர ரகசியம் பகுதி : 11

நடராஜர் உருவத்தைச் சிலையாகவோ படமாகவோ நாம் அனைவருமே பார்த்திருக்கோம். ஆனால் சிதம்பரம் நடராஜர் மட்டும் தனிச் சிறப்பு வாய்ந்தவர். அவரை நடராஜராஜர், சபாபதி, சபாநாயகர் என்றெல்லாம் அழைப்பது உண்டு. ஏனெனில் எல்லாக் கோயில் நடராஜர்களை விடச் சிதம்பரம் நடராஜர் தனிச்சிறப்பு வாய்ந்தவர். ஆட வல்லான் தனக்கெனக் கோயில் கட்டிக் கொண்டு வசிக்க ஆரம்பித்தது நம்மை எல்லாம் ஆட்கொள்ளத் தானே! இப்போது நடராஜரின் உருவ அமைப்பைப் பார்ப்போம். ஆடும் கோலத்தில் இடது பதத்தை மேலே தூக்கிக் கொண்டு ஆடும் இந்த நடராஜரை வர்ணிக்க வார்த்தைகள் ஏது? இருந்தாலும் முடிந்த வரை சொல்கிறேன். நாட்டியத்தின் ஆதி குருவான சிவன் ஆடும் இந்த ஆனந்தத் தாண்டவம் விவரிக்க முடியாத அழகுடனும் அதே சமயம் ஒரு விதமான திகிலுடனும் கூடியதாய்த் தோன்றுகிறதா? எனக்கும் அப்படித்தான். இறைவனின் இந்தப் புனிதமான அசைவுகளில் நம் உள் மனதின் பாவங்கள் பொசுங்கிப் போகும். அவன் அபிநயத்திலோ எத்தனை எத்தனை அர்த்தங்கள் பொதிந்ததாய் உள்ளது? ஆறு பாவங்களைக் காட்டுகிறது இந்த நாட்டியக் கோலம். அவை சிருஷ்டி, ஸம்ஹாரம், வித்யா, அவித்யா, கதி, அகதி போன்றவையாகும். அவன் ஆடவில்லையென்றால் நாம் இயங்குவது எப்படி? உலக நன்மைக்காகவே இடைவிடாது ஆடிக் கொண்டிருக்கும் அவன் ஆடுவது எந்தப் பாடலுக்கு? ஆகாத பூம் என்ற தொனிக்கு இடைவிடாது ஆடுகிறான். இப்போ அவன் கோலத்தைப் பார்ப்போம். வலது மேல் கையில் டமரூ என்று சொல்லப் படும் ஓசை எழுப்பும் கருவி வலது கீழ்க்கையோ அபயம் காட்டுகிறது. இடது மேல் கையில் நெருப்பும், இடது கீழ்க்கை அவருடைய திருப்பாதத்தைச் சுட்டிக் காட்டுகிறது. அவருடைய வலது கால் பாதம் முயலகனை அழுத்திக் கொண்டிருக்க இடது காலைத் தூக்கி ஆனந்தத் தாண்டவம் ஆடுகிறார். நாகங்களை ஆபரணமாக அணிந்து கொண்டு மண்டை ஓட்டு மாலை தரித்திருக்கிறார். நடராஜ ஸ்வரூபங்கள் அநேகம் இருந்தாலும் இந்த ஆனந்தத் தாண்டவ ஸ்வரூபத்தின் விசேஷம் தனி. இது நமக்கு சிருஷ்டியின் தத்துவத்தை உணர்த்துகிறது. சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோபாவம், அனுக்ரஹம் போன்ற ஐந்து தொழில்களையும் குறிக்கும். நடராஜர் தெற்கே பார்த்துக் கொண்டும் இருப்பார். இவரின் வடிவே "ஓம்" என்னும் ஓங்கார வடிவானது. ஓங்கார வடிவினுள் உள்ள பஞ்சாட்சர மூர்த்தியான இவரின் இந்தத் தரிசனம் நமக்கு என்ன உணர்த்துகிறது என்றால் முயலகன் போன்ற அசுர மனம் நமக்கு. அது பாம்புகள் போல் சீறிக் கொண்டு மேலெழும்பும். அந்த மனத்தை அடக்க வேண்டும். தியானம் என்ற நெருப்பில் சுட்டுப் பொசுக்கிக் கடைசியில் இறைவனை அடைய வேண்டும். இவருடைய நாட்டியம் இவ்வுலகையே ஆட்டுவிக்கிறது. எப்படி என்றால் நம்முடைய மனம் எவ்வளவு வேகமாய்ச் சிந்திக்கிறது? வாயுவேக மனோவேகம் எல்லாம் போதாஅது அல்லவா மனோவேகத்துக்கு. அந்த மனோவேகத்திலும், உடல் உணர்வுகளிலும், சிரிப்புலும், அழுகையிலும், பசியிலும், உணவு உண்ட திருப்தியிலும், ஆடலிலும், பாடலிலும், மகிழ்ச்சியிலும், துக்கத்திலும் நடராஜர் இருக்கின்றார். இன்னும் கடல் அலைகள் சீறுவதிலும், சூரிய சந்திரர்கள் தோன்றுவதிலும், கிரஹங்களின் சுழற்சியிலும், பூமியின் இடைவிடாத சுற்றுக்களிலும், மஹா ப்ரளயத்திலும், கொடிய தொற்று நோய்கள் தோன்றும்போதும், பூகம்பத்திலும், எரிமலைகளிலும், சுனாமி போன்ற ஆழிப்பேரலைகளிலும், புயல் காற்றிலும், அண்ட பகிரண்டமெல்லாம் நடுங்கும்படி இடிக்கும் இடிகளிலும், கண்ணைப் பறிக்கும் மின்னல் ஒளியிலும், பெருமழையிலும், சூறைக் காற்றிலும், பட்சிகளின் கிளுகிளுப்பிலும், விலங்குகளின் சப்தங்களிலும், பூக்கள் பூப்பதிலும், காய், கனிகளிலும், இன்னும் நம் அன்றாட வாழ்வுக்குத் தேவையான அனைத்திலும் நிறைந்திருப்பது அவரே!

மிண்டும் நாளை சந்திக்கலாம்
பண்டரீபுரம் ராமதாஸர்

ராமதாஸர் ஒரு சிறந்த ராமபக்தர். இவர் அனுமாரின் அம்சமாகவே இந்த உலகத்தில் அவதரித்தார். அவர் பிறக்கும்போது சிறியதாக ஒரு வால்கூட இருந்தது. நாள் ஆக ஆக அது தானே மறைந்துவிட்டதாம். எப்போதும் ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம் என்றே ஜபம் செய்து கொண்டிருப்பார். இந்த மந்திரத்தில் பதின்மூன்று எழுத்துக்கள் இருப்பதால் பதிமூன்று கோடி கணக்கு வைத்து ஜபம் செய்வார். இவர் ஒரு முறை ஜபம் செய்து விட்டால் ராமருடைய வில்லில் உள்ள மணி ஒரு தரம் அடிக்குமாம். இப்படி பலமுறை பதின்மூன்று கோடிகள் ஜபம் செய்தவர். இடையில் ஒரு கௌபீனம், கையில் ஜபமாலை, நீண்ட முடி, தாடி, கால்களில் பாதுகை இதுதான் அவருடைய உருவம். கண்கள் எப்போதும் சூரியன் போல் பிரகாசித்துக் கொண்டே இருக்கும். சத்ரபதி சிவாஜியின் குரு இவர். ராமதாஸர் கோதாவரி நதிக்கரையில் உள்ள கஞ்சன்காட் என்ற இடத்தில் ஒரு குகையில் தங்கி ஜபத்தில் ஈடுபட்டவராக இருப்பார். பண்டரீபுரம் அருகிலுள்ள மகாக்ஷேத்திரம். ஒரு தாயாருக்கு நிறைய குழந்தைகள் இருக்கும். எல்லாக் குழந்தைகளும் அம்மா அம்மா என்று தாயாரைச் சுற்றி சுற்றி வந்து கொண்டே இருக்கும். தன்னைச் சுற்றி வரும் குழந்தையைக் காட்டிலும் தன்னை விட்டு விலகியிருக்கும் குழந்தையையே தாய் உள்ளம் அதிகமாக நினைக்கும். அதுபோல் தான் பகவானும். பாண்டுரங்கனை தரிசிப்பதற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கொண்டிருந்தாலும் பாண்டுரங்கனோ ராமதாஸர் வருகின்றாரா? எப்போது என்னைப் பார்க்க வருவார்? இவ்வளவு பக்கத்தில் இருந்துகொண்டு என்னைப் பார்க்க ஏன் வரவில்லை என்று கவலைப்பட்டுக்கொண்டே இருக்கின்றார். ராமதாஸர் ஏன் பாண்டுரங்கனை பார்க்க வரவில்லை? அதற்கு ஒரு காரணம் உண்டு. சிவ பக்தர்கள் பாண்டுரங்கனை சிவனே என்கிறார்கள். பண்டரீபுரத்தில் சிவராத்திரி விமரிசையாக இருக்கும். திகம்பரராக இருப்பதால் ஜைனர்கள் எல்லாம் மஹாவீரர் என்கிறார்கள். வைஷ்ணவர்கள் எல்லாம் கையில் சங்குடன் ருக்மணியுடன் இருப்பதால் இவன் கிருஷ்ணனே என்கிறார்கள். ராமதாஸருக்கு ஒரு பிடிவாதம். ராமரைத் தவிர வேறு தெய்வத்தை சேவிப்பதில்லை. ராம நாமத்தைத் தவிர வேறு நாமத்தை ஜபம் செய்வதில்லை. ராமாயணத்தைத் தவிர வேறு எதையும் பாராயணம் செய்வதில்லை. இப்படியிருக்க எந்த மூர்த்தி என்றே நிர்ணயம் ஆகாத பாண்டுரங்களை எப்படித் தரிசனம் செய்வது? அதனால் தான் போகவில்லை. ஒரு நாள் சிவாஜி, ராமதாஸரை வணங்கி விட்டு அவர்முன் கைகூப்பி பணிவுடன் நின்றார். ராமதாஸரும் வந்த விஷயத்தைக் கேட்டார். நாளை ஏகாதசி பாண்டுரங்கனுக்கு ஒரு பெரிய திருமஞ்சனம் பூஜை எல்லாம் ஏற்பாடு செய்துள்ளேன் தாங்கள் தான் அதை முன்னின்று நடத்திக் கொடுக்க வேண்டும் என சிவாஜி வேண்டினார். நீ பூஜையை நல்ல முறையில் நடத்து ஆனால் என்னால் வரஇயலாது என்று ராமதாஸர் கூறினார். அதற்கு சிவாஜி தங்களால் நாளை வரமுடியாது என்றால் வேறு ஒருநாளில் பூஜை நடத்த ஏற்பாடு செய்கிறேன் என்றார். ராமதாஸரோ நீ எப்போது ஏற்பாடு செய்தாலும் நான் வருவதற்கில்லை திட்டமிட்டபடி நாளையே நடக்கட்டும் என்று கூறினார். சிவாஜியோ தாங்கள் ஏன் வருவதற்கில்லை என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா? என்று வினவினார். வேறு ஒன்றும் இல்லை. நான் ராமபிரானைத் தவிர வேறு தெய்வத்தை சேவிப்பதில்லை என்ற நியமத்தில் இருப்பவன். அதனால் தான் நான் வருவதிற்கில்லை என்று கூறினேன். குருவானவர் சீடர்கள் செய்யும் நல்ல காரியங்களைத் தடுக்காமல் ஊக்குவிக்க வேண்டும். அதனால் தான் பூஜையை உன்னை நடத்தச் சொன்னேன் என்றார். சிவாஜியோ நீங்கள் வரவில்லையென்றால் அனைத்து ஏற்பாடுகளையும் நிறுத்தி விடுவேன் என்று பிடிவாதமாக இருந்தான். சரி! உன் ஆசைக்காக காலையில் வந்து ஐந்து நிமிடங்கள் இருந்துவிட்டு வந்துவிடுவேன் என்று கூறி சிவாஜியை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். மறுநாள் காலையில் ஸ்நானம் எல்லாம் முடித்துவிட்டு ஜபமாலையை கையில் உருட்டிக்கொண்டு ஜபம் செய்து கொண்டே பண்டரீ வந்துவிட்டார். பண்டரீ வந்தால் அங்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. சிவாஜி வருவதாகவோ திருமஞ்சனம் ஏற்பாடாகி இருப்பதாகவோ ஒரு தகவலும் இல்லை. ஜபம் செய்து கொண்டு வந்தவர் தன்னை அறியாமல் கோயிலுக்குள் வந்து விட்டார். கோயிலுக்குள் வந்து தெய்வத்தை வணங்காமல் அலட்சியம் செய்யக்கூடாது என்பதால் உள்ளே சென்று தரிசனம் செய்தார். பாண்டுரங்கனே தன்னை தரிசிக்க இப்படி ஒரு லீலை புரிந்துள்ளார் என அப்போது தான் ராமதாஸரின் மனதில் தோன்றியது. உடனே ராமதாஸர் ஹே பாண்டுரங்கா! நீ ராமனா அல்லது பாண்டுரங்கனா! ராமனாக இருந்தால் சரயு நதிக்கரையை விட்டு ஏன் இங்கு வந்தாய்? சீதாவை விட்டு விட்டு ருக்மணி தேவியுடன் இங்கு காட்சி தருகிறாய்? என புலம்பினார். அடுத்த விநாடி அங்கு பாண்டு ரங்கனைக்காணவில்லை. அந்த இடத்தில் சீதை லட்சுமணர், ஆஞ்சநேயர் சகிதமான ராமச்சந்திர மூர்த்தி தனது விஸ்வரூபதரிசனம் காட்டி ராமனும் நானே பாண்டு ரங்கனும் நானே என்பதை உணர்த்தினார்.


மழை பொழிய பாடிய மகான்

ஸ்ரீ ரங்கப் பெருமாளிடம் மழை வேண்டிப் பிரார்த்தித்து மன முருகி பாடி மழை பெய்வித்தவர் ஸ்ரீ சுகந்த தூப தீர்த்தார்ய சுவாமிகள். இவரது இயற் பெயர் தத்தாத்ரேயா. இவர் ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயில் சன்னதியில் தூபக்கால் ஏந்தி பெருமாளுக்கு தூப நித்ய கைங்கர்யம் செய்து வந்ததால் இவரது இயற்பெயர் மறைந்து இந்த பட்ட பெயர் திலைத்தது. தீர்த்தார்யா என்றால் சாஸ்திஞானி என்று அர்த்தம். 15ம் நூற்றாண்டில் தஞ்சையில் நாயக்க வம்சத்தினரின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அரசர் அச்சுதப்ப நாயக்கர் முக்கிய அமைச்சர் கோவிந்த தீட்சிதர். இவர் கும்பகோணம் மகாமக குளத்தை சுற்றியுள்ள 16 மண்டபங்களையும் கட்டியவர். இவரை மக்கள் ஐயன் என்று மரியாதையுடன் அழைப்பார்கள். இவரைப்போற்றி ஐயன் பேட்டை (அய்யம்பேட்டை)என ஒரு ஊருக்கே பெயரிட்டு அழைத்தனர். இவ்வூரில் (1551-1661)பங்குனி திருவோண நட்சத்திரம் அவதரித்த தீர்த்தார்யா சுவாமிடகள் பெருமாளின் சேவைக்காக தன்னையே அர்ப்பணித்த பிரம்மச்சாரி. ஒருமுறை மழையின்றி வறட்சி ஏற்பட்டது. மக்கள் இத்துன்பத்திலருந்து மீள தீர்த்தாய சுவாமியை மக்கள் அணுகி மழை வேண்டி பெருமாளிடம் பிரார்த்திக்குமாறு வேண்டினர். பக்தர்களின் வேண்டுகோளை ஏற்ற சுவாமிகள் சவுராஷ்டிர மொழியில் ஸ்ரீரங்கநாதா ! இத்தருணமே மழை பெய்வித்து ஏரி, கிணறு, நதிகள் நிறையும் படி செய்வாயாக ! அரிசி முதலிய உணவுபொருட்களை மலிவாக கிடைக்க செய். உன்னையே கதியென்று சரணடைந்த திரவுபதிக்கு ஆபத்பாந்தவனா ரட்சித்தாய். எங்களையும் வறட்சி எனும் ஆபத்திலிருந்து காத்தருள்வாய் ரங்கா ! முன்பெல்லாம் மக்கள் போதிய வசதியுடன் வாழ்ந்தனர். இன்றோ பஞ்சக்கொடுமையினை அனுபவிக்கின்றனர். உனது திக்கரத்தில் உள்ள சக்கரத்தினை ஏவி அந்த கொடுமைகளை அழித்து விடு ரங்கா ! பஞ்சத்தால் மக்கள் செய்வதறியாது கிடக்கின்றனர். இந்நிலை நீங்க மழை பொழிவிப்பாய் ரங்கா ! பஞ்சம் பசிக்கொடுமையால் மக்கள் கண்டதை உண்ணும் அவல நிலை ஏற்பட்டு அலைகின்றனர். மக்களை இப்படி அலைய விடாமல் போதிய மழையினை பொழியச்செய் ரங்கா ! மழையின்றி மக்கள் பரிதவிக்கும் போது நீ ஆனந்தமாக அறிதுயில் கொள்ளலாமோ ? உன் பக்த ஜனங்கள் நலம் பெற மழை பொழிவிப்பாய் ரங்கா ! ரங்கா ! ரங்கா ! என கீர்த்தனை ஒன்றை முகாரி ராகத்தில் மனமுருகி பாடினார். மழையும் பொழிந்தது. நாமும் நீரின்றி வறட்சியால் வாடும் இந்நேரத்தில் சுவாமிகளின் கீர்த்தனைகளை பாடி மழை பொழிய பெருமாளை வேண்டுவோம். அதுமட்டுமல்ல சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளிலிருந்தும் பாதுகாப்பை வேண்டிக் கேட்போம்.
திருமுருக கிருபானந்த வாரியார் வாழ்க்கை வரலாறு.

பிறப்பும் கல்வியும்

தமிழ் இலக்கியம் மற்றும் இந்து சமய ஆன்மிகச் சொற்பொழிவில் தனக்கென தனிப் பெயரை ஏற்படுத்திக் கொண்ட மிகச் சிறந்த சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியார். இவர் சொற்பொழிவைக் கேட்க எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். எந்தச் சொற்பொழிவாக இருந்தாலும் அதில் நகைச்சுவை கலந்து மகிழ்ச்சியைச் சேர்த்து வழங்கும் தனித்திறன் அவருக்குண்டு. சின்னக் குழந்தைகளைக் கூட தன் பேச்சால் கவர்ந்து வயப்படுத்தி வைத்திருந்த மகான் இவர். இந்தியா மட்டுமில்லாது, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் சிறப்பான சொற்பொழிவுகளை நிகழ்த்தி உலகத் தமிழர்கள் அனைவரது மனத்திலும் தனக்கென நீங்கா இடம் பெற்றிருந்தார் என்றால் அது மிகையில்லை.

பிறப்பும் கல்வியும் : வேலூர் மாவட்டம் காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்த காங்கேயநல்லூர் எனும் கிராமத்தில் செங்குந்த வீர சைவ மரபில் வந்த மல்லையதாசர் கனகவல்லி தம்பதியருக்கு மொத்தம் பதினோரு குழந்தைகள் பிறந்தன. இவற்றுள் 1906 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதியில் நான்காவது குழந்தையாகப் பிறந்தவர் கிருபானந்த வாரியார். இவருக்கு, இசையாலும் புராணச் சொற்பொழிவாலும் இறைவன் புகழ்பாடி வந்த மல்லையதாசர் முருகப்பெருமானின் பல நாமங்களில் ஒன்றான கிருபானந்த வாரி எனும் பெயரைச் சூட்டினார். கிருபை என்றால் கருணை என்றும் ஆனந்தம் என்றால் இன்பம் என்றும் வாரி என்றால் பெருங்கடல் என்றும் பொருள். இவர் பெயருக்கேற்ப கருணையே உருவாக பிறரை தன் சொற்பொழிவால் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் பெருங்கடலாகத் திகழ்ந்தார். தமிழ் இலக்கியத்திலும் ஆன்மிகத்திலும் தனித் திறன் பெற்றிருந்த இவருக்கு இவர் தந்தைதான் ஆசான். இவருடைய தந்தையார் இவருக்கு மூன்றாம் வயதிலிருந்து தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார். எட்டு வயதிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்ற இவர் தேவாரம், திருப்புகழ், திருவருட்பா, கந்தபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலான நூல்களில் பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் அவர் மனப்பாடம் செய்து விட்டார். கற்றறிந்த புலவருக்கே கடினமாக இருக்கும் அஷ்டநாக பந்தம், மயில், வேல், சிவலிங்கம், ரதம் முதலான பந்தங்கள், சித்திரக் கவிகள் முதலியவைகளை இயற்றினார்.
ஸ்ரீ வரலக்ஷ்மி விருத பூஜை

சங்கல்பம்: சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்பூஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வவிக்ன உபாசாந்தையே

ஓம் பூ: - ஸூவரோம் மமோபாக்தஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வரா (ஸ்ரீ மந் நாராயண பரீத் யர்த்தம்) கரிஷ்ய மாணஸ்ய கர்மண, அவிக்னேன பரிஸ மாப்த்யர்த்தம் ஆதௌ மஹா கணபதி பூஜாம் கரிஷ்யே என ஸங்கல்பம் செய்து மஞ்சள் பொடியினால் பிம்பம் செய்து விக்னேஸ்வரரை பிரதிஷ்டை செய்து வேதம் அறிந்தவர் கணானாம் த்வா என்று மந்திரம் சொல்லி ஆவாஹனம் செய்ய வேண்டும்.

அஸ்மின் ஹரித்ராபிம்பே ஸூமுகம் விக்னேஸ்வரம் த்யாயாமி. ஆவாஹயாமி! ஆஸனம் ஸம்ர்ப்பயாமி.

அக்ஷதை போடவும்

பாதையோ பாத்யம் ஸமர்ப்பயாமி
அர்க்கியம் ஸமர்ப்பயாமி
ஆசமனீயம்  ஸமர்ப்பயாமி
(தனிப்பாத்திரத்தில் ஒவ்வொரு தடவையும் உத்தரணி தீர்த்தம் விடவும்)

ஸ்நாபயாமி (புஷ்பத்தை தீர்த்ததில் தோய்ந்து ப்ரோக்ஷிக்கவும்)
ஸ்நானாநந்தரம் ஆசமணீயம்  ஸமர்ப்பயாமி தீர்த்தம் போடவும்
வஸ்திரார்தம் அக்ஷதான்  சமர்ப்பயாமி உபவீதார்த்தம் அக்ஷதான்  ஸமர்ப்பயாமி
கந்தான் தாரயாமி (சந்தனம் இடவும்)
கந்தஸ்யோபரி அக்ஷதான்  ஸமர்ப்பயாமி( அக்ஷதை)
புஷ்பை: பூஜயாமி (புஷ்பார்ச்சனை)

1. ஸூமுகாய நம:
2. ஏகதந்தாய நம:
3. கபிலாய நம:
4. கஜகர்ணிகாய நம:
5. லம்போதராய நம:
6. விகடாய நம:
7. விக்னராஜாய நம:
8. விநாயகாய நம:
9. தூமகேதவே நம:
10. கணாத்யக்ஷõய நம:
11. பாலசந்த்ராய நம:
12. கஜானனானய நம:
13. வக்ரதுண்டாய நம:
14. சூர்ப்பகர்ணாய நம:
15. ஹேரம்பாய நம:
16. ஸ்கந்தபூர்வஜாய நம:

நாநாவித பத்ர புஷ்பம்  ஸமர்ப்பயாமி
தூபார்த்தம் தீபார்த்தம் அக்ஷதான்  ஸமர்ப்பயாமி
கற்கண்டு வாழைப்பழம்
ஓம் பூர்புவஸ்வ: தியோயோநப்
(நிவேதன வஸ்துவைத்து ப்ரோஷித்து)

ப்ராணாயஸ்வாஹா அபாநாய ஸ்வாஹா
வ்யாநாய ஸ்வஹா, உதாநாய ஸ்வாஹா
ஸமாநாய ஸ்வாஹா ப்ரஹ்மணே ஸ்வாஹா
விக்னேஸ்வராய நம; ரஸகண்டம்
கதலீ பலம் நிவேதயாமி, நைவேத்யாநந்தரம்
ஆசமனியம் ஸமர்ப்பயாமி, பூகிபல ஸமாயுக்தம்
நாகவல்லீ தளைர்யுதம் கற்பூர சூர்ண ஸம்யுக்தம்
தாம்பூலம் ப்ரதிகிருஹ்யதாம் கற்பூர தாம்பூலம்
ஸம்ர்ப்பயாமி சூடம் ஏற்றி தீபாராதனை (கற்பூர)
நீராஜனம் ஸமர்ப்பயாமி மந்திர புஷ்பம் சமர்ப்பயாமி
ஸூவர்ண புஷ்பம் ஸமர்ப்பயாமி
ப்ரதக்ஷிண நமஸ்காரம் ஸமர்ப்பயாமி

(பிரார்த்தனை)

வக்ரதுண்ட மஹகாய
ஸூர்யகோடி ஸமப்ரப
அவிக்னம் குருமேதேவ
ஸர்வ கார்யேஷூ ஸர்வதா

ஸ்ரீ வரலட்சுமி பூஜா சங்கல்பம்

(அக்ஷதையை கையில் எடுத்துக்கொண்டு)

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரஸந்ந வதனம் த்யாயேத் ஸர்வவிக்ன உபசாந்தயே
ஓம்பூ ஸூவரோம் மமோபாக்த ஸமஸ்த துரிதக்ஷயத்
வாராஸ்ரீ பரமேஸ்வர (ஸ்ரீமந்நாராயண ப்ரித்யர்த்தம்
சுபேசோபனே முஹூர்த்தே ஆத்யபரும்மண: த்விதீய
பரார்த்தே ஸ்வேதவராஹகல்பே வைவஸ்வ தமன்வந்
தரே அஷ்டாவிம் சகிதமே கலியுகேபிரதமேபாதே
ஜம்பூத்வீபே பாரதவர்ஷே பரதக் கண்டே மேரோ, தக்ஷிணே
பார்ச்வே சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவ காரிகே
ப்ரபவா தீ ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே - நாம
ஸம்வத்ஸ்ரே தக்ஷிணாயனே வர்ஷருதௌச்ராவண மாஸே
சுக்லப÷க்ஷ சதுர்தச்யாம் சுபதிதௌப்ருகுவாஸர யுக்தாயாம்
நக்ஷத்ரயுக்தாயாம் ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம்
அஸ்யாம் சதுர்தச்யாம் சுபதிதௌ அஸ்மாகம் ஸஹகுடும்பானாம்
÷க்ஷமஸ் தைர்யவீர்ய விஜய ஆயுராரோக்கிஐச்வர்ய
அபிவிருத்யர் த்தம் தர்மார்த்த காமமோக்ஷசதுர்விதபல
புருஷார்த்த சித்யர்த்தம் இஷ்ட காம்யார்த்த ஸித்யர்த்தம்
சந்தான ஸெளபாக்யசுபபல அவாப்த்யர்த்தம் தீர்க்கஸெள
மங்கல்யமவாப்த்யர்த்தம் வரலக்ஷ்மி ப்ரசாத சித்யர்த்தம்
கல்யோக்த ப்ர*ரேண த்யான ஆவாஹனாதி

ஷாடசோப சாரை: வரலெக்ஷ்மி பூஜாம் கரிஷ்யே
(வடக்கு திக்கில் அக்ஷதையை போட்டு கையலம்பி)

(விநாயகரை யதாஸ்தானம் செய்து)
(மணி) ஆகமார்த்தம்னு தேவானாம்கமனார்த்தம் துரக்ஷ ஸாம்
குருகண்டாரவம் தத்ரதேவதாஹ்வான லாஞ்சனம்

கலசபூஜை: (தீர்த்த பாத்திரத்தின் நாலு புறமும் சந்தனம் இட்டு ஒரு புஷ்பத்தைப் போட்டு கையால் மூடிக்கொண்டு ஜபிக்க வேண்டும்.)

கலசஸ்யமுகே விஷ்ணு: கண்டேருத்ர: ஸமாச்ரித:
முலேதத்ரஸ்திதோப்ருஹ்மாமத்யேமா த்ருகணாஸ்திதா
குöக்ஷளது ஸாகராஸவர்வே ஸப்தத்வீபாவஸூந்தரா
ரிக்வேத: அப்யஸூர்வேத: ஸாமவேதாப்யதர்வண,
அங்கைச்ச ஸஹிதாஸ் ஸர்வே கலசாம்பு ஸமாச்ரிதா:
கங்கேச யமுனேசைவ கோதாவரிஸரஸ்வதி நர்மதே
ஸிந்து காவேரி ஜலேஸ் மின் ஸன்னிதிம் குரு
(என்று தீர்த்தத்தை ப்ரோக்ஷிக்கவும்)

பூஜாத்ரவ்யங்களுக்கும் பூஜை செய்கின்றவரும் ப்ரோக்ஷித்துக் கொள்ளவும்.

வரலக்ஷ்மி மஹாதேவீ ஸர்வாபரண பூஷிதா
கலசேஸ்மித் வஸேதஸ்மிந் கேஹே ஸெளபாக்ய காரணீ (தியானம்)

1. வந்தே பத்மகராம் ப்ரஸந்நவதநாம்
ஸெளபாக்யதாம் பாக்யதாம் ஹஸ்தாப்யாம்
அபயப்ரதாம் மணிகணைர் நாநாவிதைர் பூஷிதாம்
பக்தாபீஷ்ட பலப்ரதாம ஹரிஹர ப்ருஹ்மாதிபிஸ்
ஸேவிதாம் பார்ச்வே பங்கஜ சங்க பத்ம நிதிபிர்
யுக்தாம் ஸதாசக்திபி: ஸரஸிஜநயநே ஸரோஜ ஹஸ்தே
தவலதமாம்சுகந்த மால்ய சோபே பகவதி
ஹரிவல்லபே மனோக்ஞேத்ரிபுவன பூதிகரிப்ரஸூத மஹ்யம்

2. பத்மாஸனே பத்மசுரே ஸர்வ லோகைக பூஜிதே
நாராயணப்ரியே தேவி ஸூப்ரீதா பவஸர்வதா
க்ஷீரோதார்ணவ ஸம் பூதே கமலே கமலாலயே
ஸஸ்திதாபவகேஹே ஸராஸூர நமஸ்க்ருதே
(அஸ்மின் கலசே பிம்பே - வர லெக்ஷ்மீம் தியாயாமி)

பாலபானுப்ரதீகாசே பூர்ண சந்தர நிபானனே
ஸூத்ரே அஸ்மின் ஸூஸ்திதா பூத்வா ப்ரயச்ச
பஹூலான்வரான் (என்று சொல்லி நோம்பு சரட்டை வைக்கவும்.)

ஸர்வமங்கள மாங்கள்யே விஷ்ணுவக்ஷஸ்தாலாலயே
ஆவாஹ்யாமி தேவித்வாம் அபீஷ்ட பலதாபவ
(அஸ்மின் கும்பேவரலக்ஷ்மீம் ஆவாஹயாமி அக்ஷதை போடவும்
அநேகரத் நகசிதம் முக்தாஹாரைர் விபூஷிதம்
ஸூவர்ண ஸிம்மாஸனம் சாரு ப்ரீத்யர்த்தம் ப்ரதிக்ருஹ்யதாம் ஆஸனம் ஸமர்ப்பயாமி

கங்காதிஸரிதுத்பூதம் கந்தபுஷ்ப ஸமந்விதம்
பாத்யம் ததாம்யஹம் தேவீ ப்ரஸீத பரமேஸ்வரி
பாத்யம் ஸமர்ப்பயாமி.... தீர்த்தம் விடவும்

கங்காதி ஸமாநீதம் ஸூவர்ண கலசே ஸ்திதம்
க்ரஹாணார்க்யம்மயாதத்தம் புத்ரபெள்த்ரபலப்ரதே

அர்க்யம் ஸமர்ப்பயாமி - உத்தரணி தீர்த்தம் விடவும்
வைஷ்ணவீ விஷ்ணு ஸம்யுக்தா அஸங்க்யாயுததாரணீ
ஆசமயதாம் தேவபூஜ்யே வரதே அஸூரமர்த்தினி

ஆசமனீயம் ஸமர்ப்பயாமி தீர்த்தம் விடவும்

ததிக்ஷீர ஸமாயுக்தம் மத்வாஜ்யேன ஸமன்விதம்
மதுபாக்கம் மாயாதத்தம் ஸ்வீ குருஷ்வ மஹேஸ்வரி

மதுவர்க்கம் ஸமர்ப்பயாமி - தேன் பால்

பயக்ஷீர க்ருதைர்மிச்ரம் சர்கராமது ஸம்யுக்தம்
பஞ்சாமிர்த ஸ்னானமிதம் க்ருஹாண பரமேஸ்வரி

பஞ்சாமிர்த ஸ்னானம் ஸமர்ப்பயாமி

ரத்ன கும்பஸமாதீதம் ஸர்வதீர்த்தாஸ்ருதம் ஜலம்
ஸ்னானார்த்தம் ப்ரயச்சாமி ஸ்ருஹாண ஹரிவல்லபே

சுத்தோதக ஸ்னானம் ஸமர்ப்பயாமி

மாங்கல்ய மணி ஸம்யுக்தம் முக்தாஜால சமன்விதம்
தத்தம் மங்கள ஸூத்ரந்தே கிருஹாண ஹரிவல்லவே

கண்ட ஸூத்ரம் ஸமர்ப்பயாமி

ரத்ன தாடங்க கேயூர ஹாரகங்கண மண்டிதே
பூஷணம்க்ருஹ்யதாம்தேவிநம ஸ்தேவிஷ்ணுவல்லபே

ஆபரணானி ஸமர்ப்பயாமி

சந்தனா கரு கஸ்தூரி கோரோசனாதி ஸூமிச்ரிதம்
லேபனார்த்தம் மஹாதேவி தாஸ்யாமி ஹரிவல்லபே

கந்தம் ஸமர்ப்பயாமி - சந்தனம் இடவும்

ஹரித்ரா குங்குமஞ்சைவ ஸிந்தூரம் கஜ்வலான்விதம்
ஸெளபாக்ய த்ரவ்யஸம்யுக்தம்க்ருஹாண பரமேஸ்வரி

ஸெளபாக்ய திரவியம் ஸமர்ப்பயாமி

சாலீயான் சந்திரவர்ணாம்ச ஸ்னிக்த மௌக்திக ஸன்னிபான்
அக்ஷதான் பிரதிகிருண்ணீஷ்வ பக்தானாம் இஷ்டதாயினி

அக்ஷதான் ஸமர்ப்பயாமி

மந்தார பாரிஜாதாப்ஜ கேதக்யுத்பட பாடலை,
மருமல்லிக ஜாத்யா திபுஷ்பைத்வாம் பூஜயா ம்யஹம்
வரலக்ஷ்மியை நம: புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி

அங்க பூஜை

1. வரலக்ஷ்மியை நம: (பாதௌ) பூஜயாமி
2. மஹாலக்ஷ்மியை நம: (குல்பௌ) பூஜயாமி
3. இந்திராயை நம: ஜங்கே பூஜயாமி
4. சண்டிகாயை நம: ஜானுனீ பூஜயாமி
5. க்ஷீராப்தி தனயாயை நம: (ஊரும்) பூஜயாமி
6. பீதாம்பரதாரிண்யை நம: (கடிதம்) பூஜயாமி
7. ஸோமஸோதர்யை நம: (குஹ்யம்) பூஜயாமி
8. லோகமாத்ரே நம: (ஜகனம்) பூஜயாமி
9. விஷ்ணுப்ரியாயை நம: (நாபிம்ஃ) பூஜயாமி
10. ஜகத்குக்ஷ்யை நம: (உதரம்) பூஜயாமி
11. விஸ்வரூபிண்யை நம: வக்ஷஸ்தலம் பூஜயாமி
12. ஜகத்தாத்ர்யை நம: (ஹ்ருதயம்) பூஜயாமி
13. ஸூஸ்தந்யை நம: (ஸ்தநௌ) பூஜயாமி
14. கஜகாமின்யை நம: (பார்ச்வெள) பூஜயாமி
15. கம்பு கண்ட்யை நம: (கண்டம்) பூஜயாமி
16. லோகஸூந்தர்யை நம: (ஸ்கந்தௌ) பூஜயாமி
17. பத்மஹஸ்தாயை நம: (ஹஸ்தான்)  பூஜயாமி
18. பத்மநாப ப்ரியை நம: (பாஹூன்) பூஜயாமி
19. சந்திரவதனாயை நம: (முகம்) பூஜயாமி
20. உத்பலாக்ஷ்யை நம: (நேத்ரே) பூஜயாமி
21. சம்பக நாஸிகாயை நம: (நாஸிகாம்) பூஜயாமி
22. ஹரிப்ரியாயை நம: (ச்ரோத்ரே) பூஜயாமி
23. பிம்போக்ஷ்ட்யை நம: (ஒஷ்டௌ) பூஜயாமி
24. ச்ரியை நம: (அதரம்) பூஜயாமி
25. சஞ்சலாயை நம: (ஜீஹவாம்) பூஜயாமி
26. ஸூகபோலாயை நம: (கண்டஸ்தலம்) பூஜயாமி
27. அக்ஷ்டமீசந்திர பாலையை நம: (பாலம்) பூஜயாமி
28. மந்தஸ்மிதாயை நம: (சுமுகம்) பூஜயாமி
29. நீலகுந்தளாயை நம: (அளகான்) பூஜயாமி
30. கமலவாஸின்யை நம: (பிடரம்) பூஜயாமி
31. பத்மாஸனாயை நம: சிரம் பூஜயாமி
32. ஸர்வைச்வர்யை நம: (சர்வாண்யங்கானி) பூஜயாமி.



விஸ்வாமித்திரருக்கு ப்ராம்மணத்தன்மை கிடைத்த வரலாறு...

பீஷ்மருக்கும் யுதிஷ்டிரருக்கும் நடந்த சம்பாஷனை. அப்பா குந்தி புத்திரனே! முன்னாள் விஸ்வாமித்ரருக்கு ப்ராமணரானதும் ப்ரம்ம ரிஷியானதும் எப்படி என்பதை சொல்கிறேன் கேள்.

பரதனுடைய வம்சத்தில் தர்மத்தில் சிறந்தவனான மிதிலன் என்ற அரசனுக்கு ஜன்னு என்ற புத்திரன் இருந்தான். அந்த ஜன்னுவுக்கு கங்காதேவி பெண்ணானாள். அவனுக்கு ஸிந்துத்வீபன் என்ற புத்திரன் உண்டானான். மஹா பலசாலியான பலாகாஸ்வன் ஸிந்துத்வீபனுடைய புத்திரன். இவனுடைய மைந்தன் தர்மஸ்வரூபமான வல்லபன். வல்லபனுடைய புதல்வன் இந்திரனு கொப்பான குசிகன். அந்த குசிகனுக்கு சிறப்புற்ற காதியெனும் புதல்வன்.
காதி தனக்கு ஸந்ததி வேண்டி வனத்தில் இருக்கையில் அவனுக்கு ஸத்யவதி என்று ஒரு கன்னிகை பிறந்தாள். ப்ருகு வம்சத்தில் உதித்த ச்யவனருடைய புதல்வர் ரிசீகரென்பவர் அந்த கன்னிகையை மணம் முடிக்க கேட்க... அந்த காதி இவரை தரித்திரனென்று நினைத்து ஒதுக்க எண்ணினான். அதனால் அவரை நோக்கி ஒற்றை காது கறுத்தவையும் சந்திரகிரகணம் போல வெண்மையாக பிரகாசிப்பவையும் வாயு வேகமுள்ள ஆயிரம் குதிரைகளை கேட்டார். (கிட்டதட்ட வரதட்சணை) அந்த மஹாத்மாவானவர் வருண பகவானை யாசிக்க அவரும் வரமாக குதிரைகளை தந்தார். அந்த குதிரைகள் கங்கா தீர்த்தில் உருவாயின..(கன்னியா குப்ஜ தேசத்தில் அந்த குதிரைகள் உருவான இடம் அஸ்வ தீர்த்தம் என்று கூறப்படுகின்றன). இதனால் பயந்த காதியானவன் உடனே தன் மகளை ரிஷீக்ருக்கு மணம் முடித்து வைத்தார். அவள் திருமணத்திற்க்கு பிறகு ஒவ்வொரு நாளும் தான் ரிஷீகரிடம் இருந்து கேட்டவைகளை தன் தாய்க்கு சொல்லிக்கொண்டு இருந்தாள். ஒரு நாள் சந்ததி விருத்திக்கான விஷயத்தை ரிஷீகர் கூற அதை தன் தாய்க்கு சொன்னாள். அதனால் அவள் தாயும் சந்ததி விருத்தியை நினைக்க அது ரிஷீக்ருக்கு தெரிந்தது. உடனே அவர் தன் மனைவியை நோக்கி நீயும் உன் தாயும் ஒரு குழந்தைகளை பெறுவீர் என்று கூறி சந்ததி விருத்திக்காக இரண்டு ஹவிஸுகளை கொடுத்து தாயை அரச மரத்தையும் மனைவியை அத்திமரத்தையும் தழுவ சொல்லி சென்றார். ஆனால் தாயானவள் விபரீத புத்தியால் தன் மகளிடம் அவள் வைத்திருகும் ஹவிஸை வாங்கி அரச மரத்துக்கு பதிலாக அத்தி மரத்தை தழுவிணாள். பின்னர் இருவரும் கர்பந்தரித்தனர்.

ஆனால் ரிஷீகர் நடந்ததை கண்டு கொண்டு... மனைவியை நோக்கி சொன்னார். ப்ரியமானவளே! இந்த விபரீத மாறுதலால் நீ சத்திரிய குழந்தையையும் உன் தாய் பிராம்மண புதல்வனையும் பெறுவார்கள். உனக்கு கொடிய செயல் உடைய சத்திரியன் பிறப்பான் என்று கூறினார். இது கண்டு அதிர்ச்சி அடைந்த அவள் மூர்ச்சையடைந்தாள். பின்பு மூர்ச்சை தெளிந்து ரிசீகரை பிராத்தித்தாள். ரிசீகரே! தயவு செய்து எனக்கு கொடிய செய்கை உடைய சத்திரியனை மகனாக பிறக்க செய்யாதீர் என்று கூற அவரும் அப்படியே ஆகட்டும் என்று சொன்னர். இதன் பலனாக ரிஷீகரின் மனைவி சத்தியவதி ஜமதக்னி என்னும் பிள்ளையை பெற்றாள். ஸத்தியவதியின் தாயும் காதியின் மனைவி விஸ்வாத்திரரை பெற்றாள். அதனாலே விஸ்வாமித்ரர் சத்திரியராய் இருந்து பிராமண்ணத்துவத்தை அடைந்து ப்ராமண சந்ததியை உண்டு பண்ணினார் (அவர் சத்திரிய அழுக்கை நீக்க 2000 வருடம் தவம் செய்து"ராஜரிஷி" பட்டம் பெற்று பின் 'ரிஷி' பட்டம் பெற்றார். பின்பு ஆயிரம் வருஷம் உண்ணாமல் தவம் செய்து பிரம்ம தேவரை மகிழ்வித்து ' பிரம்ம ரிஷி' பட்டம் பெற்றார். ஆக 3000 வருட தவத்தால் பிராம்மணத்துவத்தை பூரணமாக அடைந்தார். ஆதாரம் வால்மீகி ராமாயணம்) அவர்களுடைய புதல்வர்கள் பலர் ப்ரம்ம ஞானிகளும் பல கோத்திரங்களுக்கு முதல் புருஷர்களாக இருந்தனர். பகவானான மதுச்சந்தன், தேவராதன், அக்‌ஷீணன், சகுந்தன், பப்ரூ, காலபதன், யாஜ்ஞவல்க்யன், ஸ்தூணன், உலூகன், யமதூதன், ஸைந்தவாயயென், பர்ணஜங்கன், காலவ மஹரிஷி, வஜ்ர ரிஷி, ஸாலங்காயன், லீலாட்யன், நாரதன், கூர்ச்சாமுகன், வாதூலி, முஸலன், வக்‌ஷேக்ரீவன், ஆங்க்ரி, நைகத்ருக், சிலாயூபன், ஸிதன், சுகி, சக்ரகன், மாருதந்தவ்யன், வாதாக்னன், ஆஸ்வலாய்ன், ஸ்யாமயனன், கார்க்யன், ஜாபாலி, ஸுஸ்ருதன், காரீஷி, ஸ்ம்ஸ்ருத்யன், பரன், பௌரவன், தந்து, கபில் மஹரிஷி, தாடகாயன மஹரிஷி, உபகஹனன், ஆஸுராயண ரிஷி, மார்த்தமரிஷி, ஹிரண்யாக்‌ஷன், ஜாங்காரி, பாப்ரவாயணி, பூதி, விபூதி, ஸூதன், ஸூரக்ருத், அராலி, நாசிகன், சாம்பேயன், உஜ்ஜயனன், நவதந்து, பக நகன், ஸேயனந், யதி, அம்போருதன், சாருமத்ஸ்யன், சிரீஷி, கார்த்தபி, ஊர்ஜயோனி, உதாபேஷி, நாரதி மஹரிஷி  ஆகிய விஸ்வாமித்ரர் மைந்தர்கள் அனைவரும் வேதங்களை வெளியிட்ட மஹரிஷிகள் ஆவார்கள். யுதிஷ்டிரரா! ரிஷீக மஹரிஷியால் வெளியிடப்பட்ட அந்த மந்திரம் பெரிது. பாரத சிரேஷ்டனே சந்திரன் சூர்ய அக்னிக்கொப்பான் விஸ்வாமித்ரர் ஜனனம் முழுவதும் என்னால் உனக்கு சொல்லப்பட்டது என பீஷ்மர் யுதிஷ்டிருக்கு உரைத்தார்.

#யுதிஷ்டிரர்
#விஸ்வாமித்ரர்
#விஸ்வாமித்ரசரிதம்
#பீஷ்மர்
#மஹாபாரதம்
#விஸ்வாமித்ரர்_சரிதம்

(இதே இன்னைக்கா இருந்தா நம்மாளுக பூணூல போட்டு நீயும் பிராமணன் தான் அதற்கு சட்டம் போட்டாச்சி ... அப்படின்னு சொல்லிருப்பானுக... இந்த மனுசன் படாத பாடு பட்டிருக்கார்... இதுக்கு தனி கோர்ஸ் டிகிரி கூட ஆரம்பிச்சிருப்பானுக...)

ராம் ராம்
அருள்மிகு கஜேந்திர வரதன் திருக்கோயில்
 
மூலவர்    :     கஜேந்திர வரதர் (ஆதிமூலப்பெருமாள், கண்ணன்)
உற்சவர்    :     செண்பகவல்லி
தாயார்    :     ரமாமணி வல்லி, பொற்றாமரையாள்
ஸ்தல விருட்சம்    :     மகிழம்பூ
தீர்த்தம்    :     கஜேந்திர புஷ்கரிணி, கபில தீர்த்தம்
ஆகமம் பூஜை     :     வைகானச ஆகமம்
பழமை    :     2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்    :     திருக்கவித்தலம்
ஊர்    :     கபிஸ்தலம்
மாவட்டம்    :     தஞ்சாவூர்
மாநிலம்    :     தமிழ்நாடு
பாடியவர்கள் :     திருமழிசையாழ்வார்
             
கூற்றமும் சாரா கொடுவினையும் சாரா தீ மாற்றமும் சாரா வைகயறிந்தேன் - ஆற்றங் கரை கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன் உரைக் கிடக்கும் உள்ளத் தெனக்கு

திறக்கும் நேரம் :     காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.    அருள் மிகு கஜேந்திர வரதன் திருக்கோயில், கபிஸ்தலம்- 614203 தஞ்சாவூர் மாவட்டம். போன் :     +91- 4374 - 223 434   

விழா :     ஆடி பவுர்ணமி கஜேந்திர மோட்சலீலை. வைகாசி விசாகம் தேர், பிரமோற்சவம். பெருமாளுக்குரிய அனைத்து திருவிழாக்களும் சிறப்பாக நடக்கிறது.      
             
தகவல் :     இத்தல இறைவன் புஜங்க சயனத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் ககனாக்ருத விமானம் எனப்படும். கஜேந்திரன் என்ற இந்திராஜும்னன், முதலை யாயிருந்த கூஹு, பராசரர், ஆஞ்சனேயர் ஆகியோர் இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளனர்.
            
ஸ்தல பெருமை : இத்ஸ்தல பெருமாளை ஆழ்வார், "ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன்,' என பாடினார். அன்றிலிருந்து கண்ணன் என்ற பெயரே பெருமாளுக்கு வழங்கி வருகிறது. திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம், கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக் கண்ணங்குடி ஆகிய பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் இதுவும் ஒன்று. 108 திருப்பதிகளில் இத்தலத்தில் மட்டும் தான் பெருமாள் இரண்டு விலங்கினங்களுக்கு காட்சி கொடுத்துள்ளார். ஆதிமூலமே! என்று அழைத்தால் போதும். உடனே வந்து காத்திடுவார் இத்தல பெருமாள்.      
             
ஸ்தல வரலாறு :    இந்திராஜும்னன் எனும் மன்னன் மிகச்சிறந்த விஷ்ணு பக்தனாக இருந்தான். சதா சர்வ காலமும் விஷ்ணு சிந்தனையிலேயே இருப்பான். விஷ்ணுவை கும்பிடாமல் எந்த ஒரு செயலையும் செய்யமாட்டான். ஒரு நாள் அவன் இவ்வுலகத்தையே மறந்த நிலையில் விஷ்ணு பூஜை செய்து கொண்டிருந்தான். இது போன்ற நேரங்களில் யாரும் அவனை காண வருவதுமில்லை. இவனும் யாரையும் காண்பது இல்லை. இப்படி அவன் பூஜை செய்து கொண்டிருந்த வேளையில் கோபக்கார துர்வாச முனிவர் அவனைக்காண வந்தார். இவர் வந்து வெகு நேரம் ஆனது. ஆனாலும் மன்னன் தன் பக்திக்குடிலை விட்டு வெளியே வரவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்த துர்வாசர், மன்னன் இருந்த குடிலுக்குள் சென்று அவன் முன்னால் நின்றார். அப்போதும் கூட மன்னன் வந்திருப்பதை அறியாமல் ஆழ்ந்த பக்தியில்  மூழ்கியிருந்தான். இதனால் முனிவர் கடும் கோபத்துடன் உரத்த குரலில்,""மன்னா! நீ மிகவும் கர்வம் உள்ளவனாகவும், பக்தியில் சிறந்தவன் என்ற மமதை கொண்டவனாகவும் இருப்பதாலும், நீ விலங்குகளில் மதம் பிடித்த யானையாக போவாய்,''என சபித்தார். முனிவர் போட்ட கடும் சத்தத்தினால் கண்விழித்த மன்னன் அதிர்ந்து போனான். அவரிடம் மன்னிப்பும், பாவி விமோசனமும் கேட்டான். இவனது நிலையுணர்ந்த முனிவர் அவன் மீது இரக்கம் கொண்டு, ""நீ யானையாக இருந்தாலும், அப்போதும் திருமால் மீது பக்தி கொண்ட கஜேந்திரனாக திகழ்வாய்'' என்று கூறினார். அத்துடன்,""ஒரு குளத்தில் உள்ள முதலை உனது காலை பிடிக்கும். அப்போது நீ "ஆதிமூலமே!' என மகாவிஷ்ணுவை அழைக்க, அவர் ஓடி வந்து உன்னை காப்பாற்றி, உனக்கு மோட்சமும், சாப விமோசனமும் கிடைக்கும், ''என்றார். ஒரு முறை கூஹு என்னும் அரக்கன் குளத்தில் வாழ்ந்து வந்தான். அவன் தண்ணீரில் இருந்து கொண்டு அங்கு வந்து குளிப்போரின் காலைப்பிடித்து இழுத்து துன்புறுத்துவதையே தொழிலாக கொண்டிருந்தான். ஒரு முறை அகத்திய மாமுனிவர் சிவனின் கட்டளைப்படி தென் திசை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது சிவ பூஜை செய்யும் நேரம் வந்தது. அருகிலிருந்த குளத்தில் நீராடினார். அங்கு இருந்த அரக்கன் அகத்தியரின் காலைப்பிடித்தான். இதனால் அகத்தியர் கடும் கோபம் கொண்டார். அவர்,""நீ வருபவர்களையெல்லாம் காலைப்பிடித்து இழுப்பதால், முதலையாக மாறுவாய்,''என சபித்தார். அவன் அகத்தியரிடம் சாப விமோசனம் கேட்டான். அகத்தியர்""கஜேந்திரன் என்ற யானை இந்த குளத்திற்கு வரும் போது நீ அதன் காலைப்பிடிப்பாய், அப்போது அதைக்காப்பாற்ற திருமால் வருவார். அவரது சக்ராயுதம் பட்டு உனக்கு சாபவிமோசனம் கிடைக்கும் ''என்றார். இந்த கபிஸ்தத்தின் கோயில் முன்பு கிழக்கு திசையில் உள்ள  கபில தீர்த்தத்தில் ஒரு நாள் கஜேந்திரன் நீர் அருந்த இறங்கியது. இதைக்கண்ட முதலை யானையின் காலைக்கவ்வியது."ஆதிமூலமே! காப்பாற்று' என யானை கத்தியவுடன் கருட வாகனத்தில் லட்சுமி சமேதராக விஷ்ணு வந்து, சக்ராயுதத்தால் முதலையை அழித்து கஜேந்திரனுக்கு மோட்சமளித் ததாக வரலாறு.
இருள் நீக்கியிலிருந்து இருள் நீக்க வந்த இறையருளே!

மாகாதேவர் தந்த மஹா தேவரே!
சரஸ்வதி அம்மாள் சுமந்த சரஸ்வதியே!

ஜனிக்கும் போது கூப்பிய கரங்களுடன் பிறந்தீர்!

இன்று ஜகம் அனைத்தும் உம்மை கை கூப்பி வணங்குகிறது!

அவனிக்கு வரும் போது அனைவரும் அழுது கொண்டு தான் வருகிறோம்!

ஆனால் நீர்மட்டம் தொழுது கொண்டு வந்ததால் தான் உம்மையே தெய்வமென தொழுது கொண்டு கொஞ்சம் நிற்கிறது இவ்அவனி!

சுப்பிரமணியனாய் பிறந்து ஜயேந்திர சரஸ்வதியாய் வந்து ஜகம் அனைத்தும் ஆளும் ஜகத் குருவே!

பொன்மாரி பொழிய வைத்த சங்கரின் வழி வந்த பொன்னாக மின்னும் எங்கள் பொக்கிஷமே!
உயர் பொலிவுடன் திகழும் பொன் மயமே!

உயர் சந்திரகேகரேந்திர சரஸ்வதி மகிழ்ந்த சங்கராச்சாரிய குருதேவா!

சரஸ்வதி புகழும் சதுர்மறை கூறும்
அருளே வா!

சங்கரருக்கு பிறகு மஹா கைலாஷ
சிகரத்தில் அவருக்கு சிலை வைத்த சிகரமே!

பல்கலைக்கழகம் கண்ட பல்கலை வித்தகரே!

சமய தொண்டுடன் சமுதாய தொண்டும் ஆற்றிய வித்தகரே ஆன்மீக குருவே!

குருநாதரின் கனவுகளை நினைவாக்கிய குருபக்த சிகாமணியே!

ஆன்மீக சமாஜத்தின் அருள் பாலித்த அருட்கொடை வள்ளலே!

ஊங்களை இரு கரம் கூப்பி வணங்குகிறோம் எங்களை காத்தருள்வாயாக!

ௐ ப்ரத்யக்ஷ ஸ்ரீநிவாஸனே சரணம் சரணம்.

ஜய ஜய சங்கர ஜயேந்திர சங்கர


தரிகொண்ட வெங்கமாம்பா!

ஆந்திரமாநிலம் தரிகொண்டா என்ற சிறிய கிராமத்தில் பிறந்து, சதா சர்வகாலமும் திருவேங்கடவனை நினைத்து உருகி தன்னை அர்ப்பணித்து, திருவேங்கடமுடையானையே தன் கணவனாக பாவித்து, திருமலையில் ஸ்ரீவாரி சேவை செய்து பரந்தாமனை அடைந்தவள் மாத்ருஸ்ரீதரிகொண்ட வெங்கமாம்பா.

ஆந்திர மாநிலத்தில் ஒரு காலத்தில் கடும் வறட்சி ஏற்படவே ராய துர்க்க பகுதியைச் சேர்ந்த மக்கள் அங்கிருந்து வெளியே கிளம்பி பிரத்தமிட்டா என்ற கிராமத்தில் ஒரு நாள் இரவு தங்கினர். காலையில் அங்கு லட்சுமி நரசம்மா என்ற அந்தணப் பெண்மணி தயிர்ப்பானையில் தயிர் கடைந்து கொண்டிருந்தாள். (தயிர்ப்பானைக்கு தெலுங்கில் தரிகொண்ட என்பது பெயர்.) அங்குள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்மரிடம் பஞ்சத்தில் அடிபட்ட மக்களுக்காகப் பிரார்த்தனை செய்தவாறே அந்தப் பெண்மணி தயிர் கடைந்து கொண்டிருக்கையில் திடீரென்று தயிர் மத்து நின்று விட்டது. துணுக்குற்ற அவள் மீண்டும் தயிர் கடைய மீண்டும் மத்து சுழலாது நின்றது. மத்தை ஓடவிடாமல் ஏதாவது தடை செய்கிறதா என்றே கையை உள்ளே விட்டுப் பார்க்க ஏதும் இல்லாததும் கண்டு அவள் திகைத்தாள். மீண்டும் மத்து நின்ற போது, தன் கணவனை அழைத்துப் பார்க்கச் சொல்ல, கணவர் வந்து பார்த்தபோது ஸ்ரீலட்சுமிநரசிம்ம சிலை ஒன்று தயிர்பானையில் இருப்பதை அவர் கண்டார். தனக்கு கோவில் கட்டி வழிபட நல்ல காலம் பிறக்கும் என்ற அசரீரி கேட்க, ஊர் மக்கள் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு கோயில் எழுப்பி பெருமாளுக்கு தரிகொண்ட நரசிம்மர் (தயிர்ப்பானை நரசிம்மர்) என்று திருநாமம் இட்டு வழிபட்டு வந்தனர். கிராமத்தின் பெயரும் தரிகொண்ட என்று ஆயிற்று.

தரிகொண்ட கிராமத்தில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சாந்த சொரூபராக எழுந்தருளியிருக்கிறார். ராஜகோபுரம், பலிபீடம், கொடிமரம், அகலமான பிரகாரம் ஆககியவற்றோடு கூடிய இந்த கோயிலில் பாஞ்சராத்ர ஆகமப்படி  பூஜைகள் நடைபெறுகின்றன. நீதிமன்றம், வழக்கு என்று செல்லாமல் மக்கள் இங்குள்ள பலிபீடத்தை வலம் வந்து ஆரத்தி செய்து சத்ய பிரமாணம் எடுத்துக் கொள்வது வழக்கம். எனவே தரிகொண்ட கிராமம் சத்ய ப்ரமாண க்ஷேத்ரமாகத் திகழ்கிறது. இந்த கோயிலில் செஞ்சு லட்சுமி, ஆதிலட்சுமி சன்னதிகளும், அனுமனுக்குச் சன்னதியும் உள்ளன. மேலும் இங்கு அவதரித்த பக்தை தரிகொண்ட ஸ்ரீவெங்கமாம்பாவுக்கு தனிச் சன்னதி உள்ளது. ஆந்திர மாநிலம் வாயல்பாடு என்ற ஊரிலிருந்து 6 கி.மீ. தொலைவில் தரிகொண்ட கிராமம் அமைந்துள்ளது. லட்சுமி நரசிம்மா வம்சத்தில் வந்தவர்கள் நியோகி அந்தணர்களான கிருஷ்ணய்யா மங்கமாம்பா தம்பதியர் குழந்தைப் பேற்றுக்காக வருந்தி திருப்பதி வெங்கடேசப் பெருமாளை அனவரதமும் அவர்கள் வேண்டி கொண்டிருக்கையில் ஒரு நாள் மங்கமாம்பாவிடம் ஒரு சிறு குழந்தை ஓடி வந்து தயிர் சாதம் கேட்க, அவள் தயிர்சாதம் எடுத்துக் கொண்டு குழந்தைக்கு ஊட்ட முற்பட்டபோது, அக்குழந்தை தயிர்சாதப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு ஓடி மறைந்தது. கிருஷ்ண பரமாத்வே தன்னிடம் வந்து தயிர் சாதம் பெற்றுச் சாப்பிட்டதாக மங்கமாம்பா மெய்சிலிர்த்தாள். ஸ்ரீவேங்கடேசப்பெருமாளையும் மனமுருகி அவர்கள் வேண்டிக்கொண்டனர். திருமலை வேங்கடவன் பெண் அம்சமாக தனக்குக் குழந்தையாகப் பிறக்கபோவதாக மங்கமாம்பா கனவு கண்டாள். அவள் கண்ட கனவு பலித்து, திருவேங்கடவன் அருளால் ஒரு பெண் குழந்தை (1730ம் ஆண்டு) அந்த தம்பதியருக்குப் பிறக்க, வேங்கடேசர், அலமேலுமங்கா ஆகிய பெயர்களை இணைத்து வெங்காம்பா என்று பெயரிட்டு அக்குழந்தையை அவர்கள் போற்றி வளர்த்தனர்.

இயற்கையாகவே சிறுவயதிலேயே இறைப்பற்று கொண்டிருந்த ஸ்ரீவெங்கமாம்பா தரிகொண்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோயிலுக்குச் சென்று கோயில்க் கைங்கர்யங்கள் செய்வதில் ஈடுபட்டாள். சுப்ரமண்ய ஆச்சார்யர் என்பவரிடம் ராமாயணம், பாரதம், பாகவதம் போன்றவற்றைப் பயின்றாள். திருமண வயது வந்தவுடன் பெற்றோர் வெங்கமாம்பாவுக்கு தக்க வரணைத் தேடி திருமணம் செய்து வைத்தனர். ஆனால் வெங்கமாம்பாவோ இல்லறத்தில் ஈடுபாடின்றி, பக்தி மேலீட்டால் திருவேங்கடமுடையானே தன்னுடைய பதி என்று கூறி பரவசப்பட்டு வந்தாள். நோய்வாய்ப்பட்டு அவள் கணவன் இறந்தபோது, தன்னுடைய மணாளன் ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் என்றும், தான் நித்ய சுமங்கலி என்றும் கூறிய வெங்கமாம்பா தன்னிடமிருந்து மங்கலப்பொருட்கள் அகற்றப்படுவதைத் தடுத்தாள். அவளது பக்தியைக் கண்ட கிராம மக்கள் வெங்கமாம்பா அலிமேலுமங்கா (அலர்மேல் மங்கா) அவதாரம் என்று கூறி, அவளை தேவுடம்மா என்று வழிபட்டனர். தரிகொண்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோயிலில் கைங்கர்யங்கள் செய்வதிலும், இறைவன் மீது கீர்த்தனைகள் இயத்துவதிலும், பாடுவதிலும், ஆடுவதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மாத்ருஸ்ரீ வெங்கமாம்பா திருமலையானைத் தரிசக்க பயணம் மேற்கொண்டாள்.

திருவேங்கடவன் மீது 36000 கீர்த்தனைகள் எழுதி இறவாப் புகழ் பெற்ற தாளப்பாக்கம் அன்னமய்யா (1408-1503) அவர்களின் சந்ததியினர் -ஸ்ரீவெங்கமாம்பாவின் மகிமை அறிந்து அவளை வரவேற்றனர். முதலில் ஸ்ரீவெங்கமாம்பவை கோயிலுற்குள் அனுமதிக்க மறுத்த அர்ச்சகர்களும் அவள் மகிமை அறிந்து ஏற்றுக் கொண்டனர். திருவேங்கடவன்  மீது ஆறாத காதல் கொண்ட ஸ்ரீவெங்கமாம்பா ஏராளமான கீர்த்தனைகளை இயற்றினாள். தன்னை மறந்து கோயில்க் கைங்கர்யங்களில் ஈடுபட்டு வந்த அவள், ஸ்ரீவேங்கடாசல மஹாத்மியம், தரிகொண்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சதகம், நரசிம்மர் விலாச கதை, சிவ நாடகம், பாலகிருஷ்ண நாடகம், விஷ்ணு பாரிஜாதம் போன்ற பல முக்கியமான நூல்களை இயற்றியதோடு யோகக் கலையையும் நன்கு பயின்று அஷ்டாங்க யோக சாரம் என்ற நூலையும் இயற்றி பெருமையடைந்தாள். திருமலையையும், திருவேங்கடமுடையானையும் பற்றி ஏராளமான கவிகள் இயற்றி தலைசிறந்த கவியத்ரியாகத் திகழ்ந்த மாத்ருஸ்ரீ வெங்கமாம்பாதான் இயற்றிய கீர்த்தனைகளில் முத்திரையாக கிருஷ்ணமய்யாவின் மகள் வெங்கமாம்பா என்று பதிஷ செய்திருக்கிறாள்.

தன் உடல், ஆவி அனைத்தையும் திருவேங்கடவனுக்கே அர்ப்பணித்த ஸ்ரீவெங்கமாம்பா ஒவ்வொரு நாள் இரவும் ஏகாந்தசேவை ஆரத்தி கைங்கரியத்தின்போது தட்டில் முத்துக்களை வைத்து வேங்கடவனை வணங்கி வந்தாள். தினந்தோறும் காலையில் ஸ்ரீவேல்கடவன் சன்னிதிக் கதவுகள் திறக்கப்படும்போது அங்கு சிதறிக் கிடந்த முத்துக்களைக் கண்டு துணுக்குற்ற அர்ச்சகர்கள், வெங்கமாம்பாவே இதற்குக் காரணம் என்றறிந்து வெங்கமாம்பாவை கோயிலிலிருந்து தொலைவில் உள்ள தும்புரகோணா என்ற குகைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வேங்கடவன் அருளால் அங்கிருந்து ஒரு குகைப் பாதையின் வழியாக தன் ஆரத்தி சேவையை அவள் மீண்டும் தொடர்ந்தாள். பெருமாளும் தன் பக்தை வெங்கமாம்பாவின் ஆரத்தியுடன் தான் தனக்கு இரவு பூஜை முடிய வேண்டும் என்று அர்ச்சகர்களின் கனவில் கட்டளையிட அர்ச்சகர்கள் தங்கள் தவற்றை உணர்ந்து ஏகாந்த சேவையின்போது வெங்கமாம்பாவை அனுமதித்தனர். தன்னுடைய ஆரத்தியில் திருவேங்கடமுடையானையே அவள் கண்டு மெய்மறந்தாள்.

அன்று முதல் தொடர்ந்து, திருமலை திருவேங்கடவன் திருக்கோவிலின் கடைசி சேவையான ஏகாந்த சேவையின் போது மாத்ரு ஸ்ரீ வெங்கமாம்பாவின் சந்ததியினர் இந்த ஆரத்திக் கைங்கர்யத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெங்கமாம்பா முத்துக்களைக் காணிக்கையாக்கியதால் இந்த ஆரத்தி முத்தியா<லு ஆரத்தி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆரத்தியின் போது ஒரு வெள்ளத்தட்டில், வெற்றிலை, பாக்குதூள் ஆகியவற்றோடு மாத்ருஸ்ரீ வெங்கமாம்பாவின் இஷ்ட தெய்வமான முத்துமாலைகளால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சிலை ஆகியவை வைக்கப்படுகின்றன. தினந்தோறும் கடைசி சேவையான ஏகாந்த சேவை அதிகாலை 1.30 மணி அளவில் முடிந்து, திருக்காப்பிடப்பட்டு, மீண்டும் 3.00 மணிக்கு ஸ்ரீவாரி சுப்ரபாத சேவையுடன் அடுத்த நாள் பூஜைகள், வழிபாடுகள் துவங்குகின்றன. 1730ஆம் ஆண்டு வேங்கடவன் அருளால் அவதரித்த ஸ்ரீவெங்கமாம்பா, எண்ணற்ற கீர்த்தனைகளையும், நூல்களையும் இயற்றி, இறுதியில் 1817 ஆம் ஆண்டு தனது 87வது வயதில் தன் பெருமானுக்காக அமைத்த துளசி வனத்தில் ஜீவசமாதி அடைந்தார். ஒரு பள்ளிக் கூட வளாக்ததிற்குள் அமைந்திருக்கும் பக்தை ஸ்ரீவெங்கமாம்பாவின் சமாதி பக்தர்களின் பார்வைக்காகத் தினமும் திறந்து வைக்கப்படுகிறது. மேலும் திருப்பதியில் மாத்ருஸ்ரீ வெங்கமாம்பாவின் சிலை ஒன்றும் இரயில்வே பாலத்தின் கீழ் உள்ள சந்திப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் திருமலையில் கவியத்ரி மாத்ருஸ்ரீ வெங்கமாம்பாவின் 285வது ஜயந்தி நாள் கொண்டாடப்படுகிறது. வெங்கமாம்பாவின் ஜயந்தி மற்றும் நினைவு நாட்களை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தினர் மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். கூர்ம ஜயந்தி இதே நாளில்தான் தாளப்பாக்க அன்னமய்யாவின் ஜயந்தி நாளும் கொண்டாடப்படுகிறது.
-----------------------------------------------