செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

108 திவ்ய தேசங்கள் - 42

அருள்மிகு அண்ணன் பெருமாள் திருக்கோயில்
 
மூலவர்    :     அண்ணன் பெருமாள், கண்ணன் நாராயணன்
உற்சவர்    :     சீனிவாசன், பூவார் திருமகள், பத்மாவதி
தாயார்    :     அலர்மேல் மங்கை
தல விருட்சம்    :     வில்வம், பரசு
தீர்த்தம்    :     வெள்ளக்குள தீர்த்தம்
பழமை    :     3000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்    :     திருவெள்ளக்குளம்
ஊர்    :     திருவெள்ளக்குளம்
மாவட்டம்    :     நாகப்பட்டினம்
மாநிலம்    :     தமிழ்நாடு
பாடியவர்கள் : திருமங்கையாழ்வார்

கண்ணார் கடல்போல் திருமேனி கரியாய் நண்ணார்முனை வென்றி கொள்வார் மன்னுநாங்கூர் திண்ணார் மதிள்சூழ் திருவெள்ளக்குளத்துள் அண்ணா! அடியேன் இடரைக் களையாயே.

விழா : திருப்பதியைப் போல் இத்தலத்திலும் புரட்டாசியில் பிரமோற்ஸவம். வைகாசி முதல் ஐந்து தேதிகளில் வசந்த உற்சவம். ஆடிமாதம் கடைசி வெள்ளி திருக்கல்யாணம்.      
           
திறக்கும் நேரம் :    காலை ஏழு மணி முதல் இரவு எட்டு மணி வரை நடை திறந்திருக்கும்.    அருள் மிகு சீனிவாசப்பெருமாள் (அண்ணன் பெருமாள்) திருக்கோயில், திருவெள்ளக்குளம் (திருநாங்கூர்)- 609 106 நாகப்பட்டினம் மாவட்டம், போன் :   
 +91- 4364 - 266 534.     
          
தகவல் :     பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. இத்தல இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் தத்வத் யோதக விமானம் எனப்படும். ருத்ரர், ஸ்வேதராஜன் ஆகியோர் இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளனர்.      
 
பெருமை :    மணவாள மாமுனிகளுக்கு பெருமாள் காட்சி கொடுத்த தலம். 12 ஆழ்வார்களில் திருமங்கை ஆழ்வார் இரண்டு கோயில்களில் உள்ள பெருமாளைத்தான் "அண்ணா' என அழைத்து பாடியுள்ளார். ஒன்று திருப்பதியில் உள்ள பெருமாள். மற்றொன்று இத்தல பெருமாள். இதில் திருப்பதிக்கு முன்பே இத்தலத்து பெருமாளை "அண்ணா' என பாடியதால் இங்குள்ள பெருமாள் திருப்பதி ஏழுமலையானுக்கு "அண்ணன்' ஆகிவிடுகிறார். எனவே தான் இங்குள்ள சீனிவாசப்பெருமாளின் திருநாமம் "அண்ணன் பெருமாள்' என்றும் இத்தலம் "அண்ணன் கோயில்' என்றும் வழங்கப்படுகிறது. திருப்பதியைப் போன்றே இத்தலத்திலும் பெருமாளின் திருநாமம் "சீனிவாசன்', தாயாரின் திரு நாமம் "அலர்மேல்மங்கை'. திரு மங்கையாழ்வார் இத்தலத்தை பூலோக வைகுண்டம் என்று பாடியுள்ளார். ஆழ்வாராக மாற்றிய அம்மன்: இங்குள்ள குளத்தில் குமுத மலர்களை பறிக்க தேவ மாதர்கள் வருவது வழக்கம். அப்படி வந்த போது ஒரு மனிதனின் பார்வை பட்டு இவர்களில் குமுதவல்லி தேவ லோகம் செல்லும் சக்தியை இழக்கிறாள். இதனை கேள்விப்பட்ட நீலன் என்ற பெயரில் படைத்தளபதியாக விளங்கிய திருமங்கை இவளை திருமணம் செய்ய விரும்புகிறார். குமுதவல்லி தன்னை திருமணம் செய்ய பல நிபந்தனைகள் விதிக்கிறாள். இவரும் நிபந்தனைகளை எல்லாம் நிறைவேற்றினார். கடைசியில் வைணவ அடியார்களுக்கு அன்னம் பாலிக்கும் நற்செயலில் ஈடுபடச்செய்தார். இதனையறிந்த பெருமாள் மன்னனுக்கு காட்சி கொடுத்து "திரு' மந்திரத்தை உபதேசித்து ஆழ்வாராக மாற்றினார். ஒரு மங்கையினால் ஆழ்வாராக மாறியதால் "திருமங்கை ஆழ்வார்' என அழைக்கப்பட்டார். குமுதவல்லி நாச்சியார் தனி சன்னதியில் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்.

ஸ்தல வரலாறு :    துந்துமாரன் என்ற அரசனுக்கு சுவேதன் என்ற மகன் இருந்தான். அவனுக்கு ஒன்பது வயதில் அகால மரணம் ஏற்படும் என வசிஷ்ட முனிவர் கூறினார். அரசன் தன் மகனை காப்பாற்ற முனிவரிடம் கேட்டார். அவர் திருநாங்கூரில் உள்ள பொய்கையில் நீராடி அங்குள் பெருமாளை வேண்டி தவம் இருந்தால் பலன் கிடைக்கும் என்றார். முனிவர் கூறியபடி சுவேதன் குளத்தில் நீராடி வசிஷ்டர் கூறிய நரசிம்ம மிருத்யஞ்சய மந்திரத்தை சீனிவாச பெருமாளின் முன்பாக ஒரு மாத காலம் கூறிவந்தான். மனமிறங்கிய பெருமாள் சுவேதா! நரசிம்ம மந்திரத்தை தொடர்ந்து கூறியதால் நீ சிரஞ்சீவி ஆனாய். அத்துடன் எவனொருவன் இத்தலத்தில் எட்டாயிரம் தடவை இம் மந்திரத்தை கூறுகிறானோ அவனுக்கு எம பயம் கிடையது'' என்று கூறினார். வைணவத்தலங்களில் எம பயம் நீக்கும் தலம் இது.
-----------------------
108 திவ்ய தேசங்கள் - 41

அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்
 
மூலவர்    :     வரதராஜப்பெருமாள் ( கஜேந்திரவரதன், மணிக்கூட நாயகன்)
தாயார்    :     திருமாமகள் நாச்சியார்,(ஸ்ரீதேவி)
தீர்த்தம்    :     சந்திர புஷ்கரிணி
பழமை    :     2000 வருடங்களுக்கு முன்
ஊர்    :     திருமணிக்கூடம்
மாவட்டம்    :     நாகப்பட்டினம்
மாநிலம்    :     தமிழ்நாடு
பாடியவர்கள் : திருமங்கையாழ்வார்

கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் மரியும் மாவும் அண்டமும் சுடரும் அல்லா ஆற்றதுமாய எந்தை ஒண்டிறல் தென்ன னோட வடவர சோட்டங்கண்ட திண்டிற லாளர் நாங்கூர்த் திருமணிக் கூடத்தானே.
     
விழா : வைகுண்ட ஏகாதசி      
           
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.    அருள் மிகு வரதராஜப்பெருமாள் கோயில், திருமணிக்கூடம் - 609 106, திருநாங்கூர், நாகப்பட்டினம் மாவட்டம்.

தகவல் :     இத்தல இறைவன் கிழக்கு பார்த்து நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் கனக விமானம் எனப்படுகிறது. இத்தல இறைவனை கருடாழ்வார், சந்திரன் ஆகியோர் தரிசித்துள்ளனர்.      
             
பெருமை :    பெருமாளின் 108 திருப்பதிகளில் இது 37வது தலம். தீராத நோய்கள் எல்லாம் திரு மணிக்கூடம் சென்றால் தீர்ந்து விடும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. உள்ளே நுழைந்ததும் பலிபீடமும், கருடாழ்வார் சன்னதியும் உள்ளது. மகா மண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்பகிரகம் மூலஸ்தானத்தில் வரதராஜர் கிழக்கு பார்த்து தாமரை பீடத்தின் மீது நின்ற கோலத்தில், பின் கைகளில் சங்கு, சக்கரமும் முன் கைகளில் அபய ஊரு முத்திரை காட்டியபடி சேவை சாதிக்கிறார். பெருமாளின் வலது புறத்தில் சதுர வடிவமான தாமரை பீடத்தின் மீது நின்ற படி இடது கரத்தில் தாமரை மலரும், வலது கரத்தினை தொங்க விட்ட படியும் ஸ்ரீ தேவி காட்சியளிக்கிறாள். இடது புறத்தில் பூமா தேவி வலது கரத்தில் தாமரை மொட்டும், இடது கரத்தை தொங்க விட்டபடியும் அருள் பாலிக்கிறாள். அருகி லேயே உற்சவமூர்த்திகள் உள்ளது. அர்த்த மண்டபத்தின் வட புறத்தில் நம்மாழ்வார் அமர்ந்த கோலத்தில் உள்ளார்.

ஸ்தல வரலாறு :    தக்கனுக்கு 27 மகள்கள். இவர்கள் அனைவரும் சந்திரனை திருமணம் செய்து கொண்டார்கள். 27 பெண்களிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்துவதாக தக்கனிடம் சந்திரன் வாக்கு கொடுத்தான். ஆனால் ரோகிணியிடம் மட்டுமே மிகுந்த காதலுடன் இருந்தான். இதனால் மற்ற மனைவிகள் தங்களது தந்தையிடம் முறையிட்டனர். கோபம் கொண்ட தக்கன் உன் அழகும் ஒளியும் தினம் தினம் குறையட்டும் என சாபமிட்டான். சாபம் பலித்ததால், முழு சந்திரன் தேய தொடங்கினான். சாபம் தீர ஸ்ரீரங்கம், திரு இந்தளூர், தலைச்சங்காடு என ஒவ்வொரு கோயிலாக சென்று கடைசியில் திருமணிக்கூடத்திற்கு வந்தான். அங்கே அவனுக்கு பெருமாள் வரம் தந்து வரதராஜனாக காட்சி தந்தார். அவனது நோய் விலகியது. சாபவிமோசனம் கிடைத்தது.
-----------------------
சிதம்பர ரகசியம் பகுதி : 10

சிதம்பரம் கோவில் எப்போது கட்டப்பட்டது என்று அறுதியிட்டுக் கூற முடியாதெனினும் காலப் போக்கில் பல மன்னர்கள் இந்தக் கோயிலுக்குக் கட்டுமானப் பணிகளுக்கு மானியங்கள் விடுத்திருக்கிறார்கள். இந்தக் கோயில் இருந்த சமயம் தெரியாவிட்டாலும் முதலில் மூலநாதர் என்ற சிவலிங்கம் வழிபாட்டில் இருந்ததாய்த் தெரிய வருகிறது. சிவலிங்க வழிபாடு தான் சிவனை வழிபடுவோரின் முக்கிய வழிபாட்டுத் தெய்வமாகவும் இருந்து வந்தது. இந்த லிங்கத்தைத் தான் முதலில் வியாக்ரபாதர், பதஞ்சலி, உபமன்யு போன்றோரும் பின்னர் இந்தக் கோயிலுக்கு முதன் முதல் விஜயம் செய்த சூரிய வம்சத்தைச் சேர்ந்த வங்க நாட்டு கெளட அரசன் ஹிரண்யவர்மனும் வழி பட்டு வந்திருக்கிறார்கள். இந்த மன்னனின் திருப்பணிகள் பற்றிச் சிதம்பர மஹாத்மியம் புத்தகத்தில் காண முடிகிறது. இந்த மூலநாதர் கோயில் தற்போதைய சிதம்பரம் கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ளது. கிழக்கே பார்த்து இருக்கும் மூலநாதரின் திருமேனி சுயம்புத் திருமேனி என்று சொல்லப் படுகிறது. பக்கத்திலேயே உமை அன்னையின் கோயிலும் தெற்குப் பார்த்து அமைந்துள்ளது. சிதம்பரத்தில் உள்ள மற்றக் கோயில்களில் உள்ள லிங்கத் திருமேனிகளை விட இந்த லிங்கத் திருமேனி மிகப் பழமை வாய்ந்ததாய்ச் சொல்லப் படுகிறது. இவ்வளவு பழமை வாய்ந்த மூலநாதரையும் உமை அன்னையையும் தரிசித்த பின் நாம் எங்கே செல்கிறோம் தெரியுமா? நேரே சித்சபைக்குத் தான். இங்கே கொஞ்சம் அதிக நேரம் செலவிடுவோம். தயாராய் இருக்கணும். இந்திரன் கேட்டுக் கொண்டதின் பேரில் விஸ்வகர்மா என்ற தேவசிற்பியால் எல்லாம் வல்ல அந்தப் பரம்பொருளின் ஆனந்தத் தாண்டவம் ஆட கட்டப்பட்டது இந்த சித்சபை என்னும் மூலஸ்தானம். சிதம்பரம் கோயிலின் நடுவில் உள்ளது இந்தச் சித்சபை. இதை ஹேம சபை, தாப்ர சபை என்ற பெயரிலும் அழைக்கிறார்கள். பக்தி இலக்கியத்தை வளர்த்த நம் நாயன்மார்களால் பொன்னம்பலம் என்று உருகி உருகிப் பாடப்பட்டது இது. முதலாம் பராந்தக சோழனால் பொற்கூரை வேயப்பட்டது. இந்தச் சித்சபை வேத காலத்தில் இருந்தே இருந்து வந்ததாய்க் கையால் எழுதப் பட்ட சில குறிப்புக்களில் இருந்து தெரிய வருகிறது. தெற்கே பார்த்து இருக்கும் இந்தச் சித்சபையில் தான் நடராஜர், சிவகாம சுந்தரியுடன் கோயில் கொண்டிருக்கிறார். "சித்" என்றால் "ஞானம்" என்றும் "அம்பரம்" என்றால் "ஆகாசம்" என்றும் பொருள். அந்தச் சிதம்பரத்தின் "சித்சபை" பற்றிய வர்ணனையைச் சற்றுப் பார்ப்போமா?

சிதம்பரத்திலேயே நடராஜர் தரிசனம் தான் முக்கியமானது. அந்த நடராஜர சிவகாம சுந்தரியுடன்  கோயில் கொண்டிருக்கும் சித்சபையை என்னால் முடிந்த வரை சொல்கிறேன். இந்தச் சபைக்குச் செல்ல ஐந்து வெள்ளியில் ஆன படிகள் இருக்கின்றன. இவை "நம சிவாய" என்னும் பஞ்சாட்சரத்தைக் குறிக்கும். சிவனின் ஐந்து விதத் தோற்றங்களைக் குறிக்கும் என்றும் சொல்கின்றனர். சிவனின் ஐந்து விதத் தோற்றங்கள். பிரம்ம பீடம், வி்ஷ்ணு பீடம், ருத்ர பீடம், மஹேஸ்வர பீடம், சதாசிவ பீடம். இந்த ஐந்து பீடங்களும் உள்ள இடங்கள் இனி வரிசையாய் வரும். படிக்கிற வசதிக்கும் புரிந்து கொள்ள வசதிக்கும் ஏற்றவாறு எழுதி வருகிறேன். புரியாத இடத்தில் சந்தேகத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவும். இப்போ முதலில் பிரம்ம பீடம் என்று சொல்லப் படும் பகுதிக்குப் போகலாம்.

பிரம்ம பீடம் : இங்கே 28 மரத் தூண்கள் இருக்கின்றன. இவை 28 விதமான ஆகமங்களைக் குறிக்கிறது.

விஷ்ணு பீடம் : இங்கே உள்ள ஐந்து தூண்களும் ஆகாயம், பூமி, நீர், நெருப்பு, காற்று என்னும் பஞ்ச பூதங்களைக் குறிக்கும்.

ருத்ரபீடம் : இங்கே உள்ள 6 தூண்களும் ஆறுவிதமான சாஸ்திரங்களைக் குறிக்கும். தர்க்கம், வ்யாகரணம், வேதாந்தம், மீமாம்சம், ஜோதிடம், வைத்தியம் போன்றவை அவை.

மஹேஸ்வர பீடம் : கிழக்கே உள்ள இந்தப் பீடத்தில் சந்தங்கள், கல்பங்கள், ஜோதிஷம், நிருத்தம், வ்யாகர்ணம், சிக்ஷை, போன்ற ஆறும் ஸ்தம்பங்களாயும், வைசேசிகா, பூர்வ மீமாம்சை, உத்தர மீமாம்சை, சாங்கியம், கெளடம் போன்ற தத்துவங்கள் தூண்களாயும் இருக்கின்றன. இதற்கு மேல் உள்ள பிரணவ பீடத்தில்தான் நடராஜர், சிவகாமியுடன் ஆடிக் கொண்டிருக்கிறார்.

சதாசிவ பீடம் : 4 வேதங்களும் 4 பொன்னாலாகிய தூண்களாய் உள்ளன இங்கு. இங்கே தான் "சிதம்பர ரகசியம்" தரிசனம் கிடைக்கும்.

மேலே உள்ளவை எல்லாம் தத்துவங்கள். சில பாடங்கள் பெயர் நாம் கேட்டிருப்போம். மற்றவை எல்லாம் தத்துவம் படிப்பவர்களுக்குப் புரியும். ஆகமங்கள் 28ம் பெயர் வேணாம்னு தான் எழுதலை. இம்மாதிரியான மொத்தம் 96 தத்துவங்களை உள்ளடக்கியது சித்சபை.

சித்சபையின் மேற்கூரையைப் பார்ப்போமா? சற்றே வெளியே வந்து சித்சபையின் மேல் கோபுரத்தைப் பார்த்தால் அங்கே ஒன்பது கலசங்கள் பார்க்கலாம். நவசக்தியும் ஒன்பது கலசங்களாய்ப் பிரதி்ஷ்டை செய்யப் பட்டிருக்கிறது. அவை வாம சக்தி, ஜ்யேஷ்ட சக்தி, ரெளத்ரி சக்தி, காளி, காலிவிகாரினி, பலி, பாலவிகரணி, பலப்ரமதனி, மனோன்மணி.

64 விதமான மரத்தாலான வேலைப்பாடுகளைப் பார்க்கலாம். ஆங்கிலத்தில் "beam" என்று சொல்லப்படும் இவை 64 கலைகளைக் குறிக்கும்.

21,600 தங்க ஓடுகள் ஒரு மனிதன் ஒரு நாளில் விடும் 21,600 மூச்சுக் காற்றைக் குறிக்கும்.

72,000 ஆணிகள் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது. நம் உடலில் உள்ள நாடி, நரம்புகளையும் நாடித்துடிப்பையும் குறிக்கும் அவை.

நாளை நடராஜர் ஆடும்போது பார்க்கலாமா?
திவ்ய தேசங்கள் அருள் மிகு சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில்

மூலவர் : நீலமேகப்பெருமாள்
உற்சவர் : சவுரிராஜப்பெருமாள்
தாயார் : கண்ணபுரநாயகி
தீர்த்தம் : நித்யபுஷ்கரிணி
ஆகமம்  : வைகானஸம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : கிருஷ்ணபுரம்
ஊர் : திருக்கண்ணபுரம்
மாவட்டம் : நாகப்பட்டினம்
பாடியவர்கள் : நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், குலசேகராழ்வார்          

இல்லையலல் எனக்கேல் இனியென்குறை அல்லி மாத ரமரும் திரு மார்பினன் கல்லிலேயந்த மதில்சூழ் திருக்கண்ணபுரம் சொல்ல நாளும் துயர் பாடு சாரவே.நம்மாழ்வார்
 
விழா : வைகாசியில் 15 நாள், மாசியில் 15 நாள் பிரம்மோற்ஸவம்.  
      
சிறப்பு : இத்தலத்தில் உள்ள உற்சவர் "சவுரிராஜப் பெருமாள்' என்ற பெயருடன், தலையில் முடியுடன் இருக்கிறார். அமாவாசையன்று உலா செல்லும் போது மட்டுமே திரு முடி தரிசனம் காண முடியும். "சவுரி' என்ற சொல்லுக்கு "முடி' என்றும்"அழகு' என்றும் பொருள்கள் உண்டு.  
      
கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.  முகவரி : அருள்மிகு சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம் - 609 704. நாகப்பட்டினம் மாவட்டம்.  போன்: +91- 4366 - 270 557, 270 718, 99426 - 56580.
     
பெருமை : சவுரிராஜப் பெருமாள் ஒருசமயம் இக்கோயில் அர்ச்சகர் ஒருவர் சுவாமிக்கு சாத்திய மாலையை தன் காதலிக்கு சூடிவிட்டார். அந்த நேரத்தில் மன்னர் கோயிலுக்கு வந்து விடவே அவருக்கு மரியாதை செய்ய அர்ச்சகரிடம் மாலை இல்லை. எனவே தன் காதலிக்கு சூட்டிய மாலையையே மன்னருக்கு போட்டு விட்டார். அதில் பெண்ணின் கூந்தல் முடி இருந்ததைக்கண்ட மன்னர் மாலையில் முடி எப்படி வந்தது? என கேட்டார். அர்ச்சகர் பெருமாளின் தலையில் இருந்த முடிதான் அது என பொய் சொல்லிவிட்டார். மன்னனுக்கு சந்தேகம் வரவே, தான் பெருமாளின் திருமுடியை பார்க்க வேண்டும் என்றார். மறுநாள் கோயிலுக்கு வந்தால் முடியைக் காட்டுவதாக அர்ச்சகர் கூறினார். சுவாமிக்கு திருமுடி இல்லாத பட்சத்தில் தண்டனைக்கு ஆளாக வேண்டும் என எச்சரித்துவிட்டுச் சென்றார் மன்னர். கலங்கிய அர்ச்சகர் அன்றிரவில் சுவாமியை வணங்கி தன்னை காக்கும்படி வேண்டினார்.மறுநாள் மன்னர் கோயிலுக்கு வந்தார். அர்ச்சகர் பயந்து கொண்டே சுவாமியின் தலையை மன்னருக்கு காட்ட, திருமுடியுடனே காட்சி தந்தார் பெருமாள். எனவே "சவுரிராஜப் பெருமாள்' என்ற பெயரும் பெற்றார். இவர் இத்தலத்தில் உற்சவராக தலையில் முடியுடன் இருக்கிறார். அமாவாசையன்று உலா செல்லும்போது மட்டுமே திருமுடி தரிசனம் காண முடியும். "சவுரி' என்ற சொல்லுக்கு "முடி' என்றும், "அழகு' என்றும் பொருள்கள் உண்டு.

சிறப்பு : இங்கு சுவாமி எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாக கையில் முழுவதும் திரும்பிய பிரயோகச் சக்கரத்துடன் அருளுகிறார். அருகிலேயே கருடன் வணங்கிய கோலத்தில் இருக்கிறார். வைகாசி பிரம்மோற்ஸவத்தின் போது சுவாமி அதிகாலையில் சிவன், மாலையில் பிரம்மா, இரவில் விஷ்ணு என மும்மூர்த்திகளாக காட்சி தருகிறார். விஷ்ணுவின் இந்த மும்மூர்த்தி தரிசனம் விசேஷ பலன்களைத் தரக்கூடியது. விபீஷ்ணனை தம்பியாக ஏற்றுக்கொண்ட ராமபிரான், அவனுக்கு இத்தலத்தில் பெருமாளாக நடந்து காட்சி தந்தார்.அமாவாசைதோறும் உச்சிகால பூஜையில் பெருமாள் விபீஷணனுக்கு நடந்து காட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. இத்தலத்தை நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், குலசேகராழ்வார் ஆகியோர் மங்களாசாஸனம் செய்துள்ளனர் கர்வம் அழிந்த கருடன் : தன் தாயை விடுவிப்பதற்காக பாற்கடலில் அமிர்தம் பெற்று திரும்பிக் கொண்டிருந்தார் கருடன். வழியில் யாருக்கும் கிடைக்காத அமிர்தத்தை தான் கொண்டு வருவதை எண்ணி அவர் மனம் கர்வம் கொண்டது. கர்வத்துடன் அவர் இத்தலத்திற்கு மேலே சென்றதால் தன் சக்தி இழந்து கடலில் வீழ்ந்தார். தவறை உணர்ந்த கருடன் மன்னிப்பு வேண்டி கடலினுள் இருந்த ஒரு மலையின் மீது சுவாமியை வேண்டி தவம் செய்தார். விஷ்ணு அவரை மன்னித்து வாகனமாகவும் ஏற்றுக்கொண்டார். மாசி பவுர்ணமியில் கடற்கரையில் கருடனுக்கு காட்சி தரும் விழா நடக்கிறது. இவ்விழாவின்போது பக்தர்கள் சுவாமியை "மாப்பிள்ளை!' என்று கோஷமிட்டு வித்தியாசமாக வரவேற்கின்றனர்.முனையதரையன் பொங்கல் : முன்னொரு காலத்தில் இப்பகுதியை முனையதரையன் என்றொரு குறுநில மன்னர் ஆட்சி செய்து வந்தார். தினசரி பெருமாளை வணங்கிவிட்டு உணவு உண்பதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். பெருமாள் சேவைக்காக பணத்தை எல்லாம் செலவழித்ததால் வறுமையில் வாடிய அவர் மன்னனுக்கும் வரி கட்டவில்லை. எனவே, மன்னன் அவரை சிறைப்பிடித்துச் சென்றார். அன்று மன்னரின் கனவில் தோன்றிய விஷ்ணு, அவரை விடுவிக்கும்படி சொல்லவே முனையதரையன் விடுவிக்கப்பட்டார். இரவில் வீடு திரும்பிய முனையதரையனுக்கு அரிசி, பருப்பு, உப்பு மட்டும் கலந்த பொங்கல் செய்து கொடுத்தாள் மனைவி. அவர் பெருமாளுக்கு மானசீகமாக (மனதில் நினைத்து) நைவேத்யம் படைத்து சாப்பிட்டார். மறுநாள் அர்ச்சகர் கோயிலுக்கு வந்தபோது கருவறையில் சுவாமியின் வாயில் பொங்கல் ஒட்டியிருந்ததைக் கண்டார். இத்தகவல் மன்னரிடம் தெரிவிக்கப்படவே அவர்கள் முனையதரையன் படைத்த பொங்கலை சுவாமி உண்டதை அறிந்து கொண்டனர். அன்றிலிருந்து இக்கோயிலில் இரவு பூஜையின்போது பொங்கல் படைக்கும் பழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இதனை "முனையதரையன் பொங்கல்' என்றே சொல்கின்றனர். இங்குள்ள தீர்த்தம் மிகவும் விசேஷமானது. உத்ராயணத்தின் போது மூன்று நாட்கள் இத்தீர்த்தத்தில் அனைத்து நதிகளும் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக் கொள்வதாக ஐதீகம். இதில் அமாவாசை தினத்தில் பித்ரு பூஜைகள் செய்கிறார்கள். தோஷத்தால் பாதிக்கப்பட்ட இந்திரன் இங்கு வந்து நவக்கிரக பிரதிஷ்டை செய்து சுவாமியை வணங்கி தோஷம் நீங்கப்பெற்றான். இந்திரன் பிரதிஷ்டை செய்த நவக்கிரகம் கோபுரத்திற்கு அடியில் மதிற்சுவரில் மேற்கு பார்த்தபடி இருக்கிறது. இந்த நவக்கிரகம் சுற்றிலும் 12 ராசிகளுடன் இருப்பது வித்தியாசமான அமைப்பாகும். இத்தலம் பூலோக வைகுண்டம் என கருதப்படுவதால் இங்கு சொர்க்கவாசல் இல்லை. திவ்யதேசங்களில் கீழை வீடாக இருக்கும் இத்தலம் பஞ்ச கிருஷ்ண தலங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. கருவறைக்கு மேல் உள்ள உத்பலாவதக விமானத்தில் விஷ்ணுவை வணங்கி முனிவர்கள் தவம் இருப்பதாக ஐதீகம். எனவே, இங்கு விமானத்தை தரிசனம் செய்ய முடியாதபடி சுற்றி மதில் எழுப்பப்பட்டுள்ளது.

திருநெற்றியில் தழும்பு : உற்சவ மூர்த்தியின் திருமேனியில் வலப்புருவத்திற்கு மேல் சிறு தழும்பும் இன்றும் காணலாம். முன் காலத்தில் அந்நியர் திருமதில்களை இடித்து வந்தபோது திருக்கண்ணபுரத்து அரையர், மனம் புழுங்கி, "பெருமானே பொருவரை முன்போர் தொலைத்த பொன்னழி மற்றொரு கை என்றது பொய்த்ததோ' என்று கையிலிருந்த தாளத்தை வீசி எறிந்தார். அது பெருமானது புருவத்தில் பட்டது. "தழும்பிருந்த பூங்கோரையாள் வெருவப் பொன்பெயரோன் மார்பிடந்த வீங்கோத வண்ணர் விரல்' என்ற பாசுரத்தில் போல இத்தழும்பை இன்றும் காட்டித் தமக்கு அடியாரிடம் கொண்ட பரிவைப் பெருமான் விளங்குகின்றார். (சந்தேகம்) "ஓம் நமோ நாராயணா' என்ற மந்திரத்தின் முடிவு நிகழ்ந்த இடம் இது. அஷ்டாச்சர சொரூபி மந்திர உபதேசம் பெற்ற தலம். இந்த ஊரில் கால் பட்டாலே வைகுந்தம் கிடைக்கும் என்பதால் இந்த பெருமாள் தலத்தில் சொர்க்க வாசல் கிடையாது. மற்ற தலங்களில் அபய காட்சியோடு பெருமாள் இருப்பார்.இங்குள்ள பெருமாள் தானம் வாங்கிக் கொள்தல் போல காட்சியில் இருப்பார். இதன் பொருள் நம் கஷ்டங்களை பெருமாள் வாங்கிக் கொள்ளுதல் போல ஐதீகம். இத்தலத்தில் பெருமாள் சக்கரம் பிரயோகச் சக்கரம் வதம் பண்ணுவதாய் உள்ளது. உற்சவ பெருமாளுக்கு சவுரி முடி வளர்ந்ததால் சவுரி ராஜ பெருமாள் என்று பெயர். சவுரிராஜப் பெருமாளிடம் திருமங்கை ஆழ்வார் மந்திர உபதேசம் பெற்ற தலம் இது. திருமங்கை ஆழ்வார் 100 பாசுரம் இத்தலம் குறித்து பாடியுள்ளார். குலசேகர ஆழ்வார் சவுரிராஜப் பெருமாளை இராமனாக நினைத்துக் கொண்டு தாலேலோ (ராத்திரி தூங்க வைக்கப் பாடும் பாசுரம்)பாடிய திவ்ய தேசம் திருக்கண்ணபுரம் மட்டுமே. நம்மாழ்வார் 11 பாசுரம் பாடியுள்ளார்.

கருட தண்டக மகரிஷிக்கு பெருமாள் காட்சி தந்த தலம்.

கிருஷ்ணாரண்ய ஷேத்திரம் என்று திருக்கண்ணபுரம் , திருக்கண்ணமங்கை, திருக்கண்ணங்குடி, கபிஸ்தலம், திருக்கோயிலூர் என்று இந்த ஐந்தும் கிருஷ்ணன் வாழ்ந்து உறைந்த இடம்.

திருப்புற்குழியில் வறுத்த பயிறு, திருப்பதியில் லட்டு, ஸ்ரீரங்கத்தில் அரவணை (பாயாசம்) கும்பகோணத்தில் தோசை (பால் பாயாசம்) அதுபோல் இங்கு முனியோதரன் பொங்கல் பிரசித்தம். 108 திவ்ய தேசங்களுள் சிறப்புடையதாக மேலை வீடு திருவரங்கம்,வடக்கு வீடு திருவேங்கடம் எனவும் தெற்கு வீடு திருமாலிருஞ் சோலை (அழகர் கோயில்) எனவும் அமைந்த வரிசையுள் கீழை வீடாக திருக்கண்ணபுரம் ஆகும்.
 
ஸ்தல வரலாறு : முன்னொரு காலத்தில் சில முனிவர்கள் இத்தலத்தில் பெருமாளை வேண்டி தவம் செய்து கொண்டிருந்தனர். சாப்பாடு, தூக்கம் என எதனையும் பொருட்படுத்தாமல் பெருமாளை மட்டும் எப்போதும் தியானித்து வணங்கி வந்ததால் அவர்கள் நெற்கதிர்கள் போன்று மிகவும் மெலிந்த தேகம் உடையவர்களாக இருந்தனர். மகாவிஷ்ணுவிடம் "அஷ்டாட்சர மந்திரம்' கற்றிருந்த உபரிசிரவசு எனும் மன்னன் ஒருசமயம் தன் படையுடன் இவ்வழியாக திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது வீரர்களுக்கு பசியெடுத்தது. எனவே இங்கு தவம் செய்து கொண்டிருந்த முனிவர்களை நெற்கதிர்கள் என நினைத்த வீரர்கள் அவர்களை வாளால் வெட்டினர். முனிவர்களின் நிலையைக் கண்ட விஷ்ணு, சிறுவன் வடிவில் வந்து உபரிசிரவசுவுடன் போர் புரிந்தார். மன்னனின் படையால் சிறுவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே, இறுதியாக மன்னன் தான் கற்றிருந்த அஷ்டாட்சர மந்திரத்தை சிறுவன் மீது ஏவினான். அம்மந்திரம் சிறுவனின் பாதத்தில் சரணடைந்தது. இதைக்கண்ட மன்னன் தன்னை எதிர்த்து நிற்பது மகாவிஷ்ணு எனத் தெரிந்து மன்னிப்பு கேட்டான். விஷ்ணு அவனை மன்னித்து நீலமேகப்பெருமாளாக காட்சி தந்தார். அவனது வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார். பின் மன்னன் விஸ்வகர்மாவைக் கொண்டு இங்கு கோயில் எழுப்பினான்.


ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

வேதங்கள் பற்றியும் மந்திரங்கள் பற்றியும் நமக்குத் தெரிந்தவை மிகக் குறைவு. அதன் மூலம் அவற்றால் ஒரு பயனும் இல்லை என்று முடிவு கட்டுகிறோம். ஆனால் அது அப்படி இல்லை. வேதங்களில் சொல்லாத விஷயமே இல்லை. அரசன், செய்ய வேண்டிய கடமையைப் பற்றிக் கூறும் அர்த்த சாஸ்திரம், உத்தமமான மருத்துவ முறையைப் பற்றிக் கூறும் ஆயுர்வேத சாஸ்திரம், சிற்பங்கள் வடிக்கும் முறை பற்றியும் கோவில் களின் விதி முறைகளையும் பற்றிக் கூறும் சிற்ப சாஸ்திரம், ஆகம சாஸ்திரம் இவற்றை எல்லாம் நாம் படிக்காமல் விட்டு விட்டோம்.தப்புத் தப்பாக அர்த்தம் செய்து கொள்கிறோம். ஆயுர்வேத மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்து மேன்மேலும் முன்னேற்றி இருக்க வேண்டிய ஒர் வைத்தியம் ஆயுர்வேத மருத்துவம். ஆனால் நாம் இதில் பின் தங்கி விட்டோம். அந்தக் காலத்தில் ரண சிகிச்சை முறை ஆயுர்வேதத்தில் இருந்திருக்கிறது. ஸுஸ்ருதர் என்பவர் இதைப் பற்றி எழுதி இருக்கிறார். வெளி நாட்டில் இருந்து வந்தவர்கள் நம் சாஸ்திரங்களில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக் கொண்டு மேலும் மேலும் ஆராய்ச்சி செய்து விஞ்ஞானத்தில் முன்னேறி விட்டார்கள்.

சீனாவிலிருந்து வந்தது என்று ஒரு கணக்கு முறையைப் பற்றிப் பைத்தியமாக அலைகிறோம். குங்ஃபூ, கராத்தே போன்றவை ஜப்பானில் இருந்து வந்தது என்று கற்றுக் கொள்கிறோம். ஆனால் நம்முடைய செல்வங்களான கலரி, சிலம்பம், வர்மம் போன்றவை பற்றி யாருக்குத் தெரியும்? சிலம்பம் என்றால் சினிமாவில் வருவது தான் என்று நினைப்பார்களே தவிர, நிஜ வாழ்வில் இப்படி ஒரு விளையாட்டு இருந்ததே இன்றைய தலைமுறைக்குத் தெரியாது. நம்மைப் பற்றி நாமே குறைவாக நினைக்காமல் நம்முடைய முன்னோர்கள் சொல்லிச் செய்த ஒவ்வொரு காரியமும் அர்த்தமுள்ளது என்று நினக்க வேண்டும்.இப்போது திருமணங்களில் வரும் ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். திருமணம் நடக்கும் போது மணமகனிடம் சொல்வது போல் அமைந்த ஒரு மந்திரம்:

"ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர:த்ரூதீயோ அக்னிஷ்டேபதி:துரீயஸ்தே மனுஷ்யஜா: என்று ஒரு மந்திரம்.

வெளிப்படையாகப் பார்த்தால் பெண் முதலில் சோமன் என்னும் சந்திரனிடமும், பின் கந்தர்வர்களிடமும், பின் அக்னியிடமும் இருக்கிறாள், அக்னியிடம் இருந்து இந்தப் பெண்ணை உனக்குத் தருகிறேன்" என்று அர்த்தம் வரும். ஆனால் இதன் உண்மையான அர்த்தம் எல்லாருக்கும் புரிவது இல்லை. நான் புத்தகங்களில் இருந்தும், எங்கள் வீட்டுக் கல்யாணங்களில் இருந்தும் கேட்டுத் தெரிந்து கொண்டது என்ன என்றால்: பெண் குழந்தை பிறந்ததில் இருந்து திருமணம் வரை இருக்கும் காலத்தை மூன்றாகப் பிரித்துச் சொல்கிறார்கள். முதல் பாகத்தைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்பவர் ஸோமன். இது சந்திரனைக் குறிக்கும். சந்திரன் குளிர்ச்சியும் மகிஷ்ச்சியும் அளிப்பவன். தேவர்கள் பலசாலியாக இருப்பதற்கு எப்படிச் சந்திரனின் அருள் தேவையோ அது போல பூமி வளம் பெறுவதற்கும் சந்திரனின் அருள் தேவை. அவன் அருளால் உலக ஆரோக்கியத்திற்கு உகந்த வகையில் பருவங்கள் உருவாகிறது. பூமி, வலுவும் வளமும் பெறுகிறது. அவன் அருளால் பெண்ணின் குழந்தைப் பருவம் ஆரோக்கியமானதாகவும், வளம் பொருந்தியதாகவும் இருக்கும். இதற்குச் சந்திரனின் அருள் தேவை. மேலும் ஆயுர்வேத முறைப்படியும், சோமம் என்றால் "கபம்" என்றும் ஒரு பொருள் உண்டு. பிறந்த குழந்தைக்கு இருக்கும் அதிகக் கபத்தினால் தொல்லைகள் கொடுக்காமல் காப்பாற்றும் பொறுப்பை ஏற்பவன் ஸோமன். மேலும் குழந்தை பிறந்து சிலவருடங்கள் வரை தாயின் கண்காணிப்பில் இருக்கும். தாயின் மென்மையான அணுகுமுறையைக் கூட ஸோமனின் உதாரணத்துக்குச் சொல்லலாம்.

வளர்கையில் பெண்ணின் குணமும், குரலும், மாறி அழகு அதிகரிக்கிறது. பெண் கனவு காண ஆரம்பிக்கிறாள். இதில் இருந்து அவளைக் காத்து நல்வழிக்குத் திருப்பும் பொறுப்பு கந்தர்வர்களுடையது. அதாவது தாய், தந்தை இருவரும் சேர்ந்து பெண்ணைக் கண்காணிக்கிறார்கள். அவளுடைய அழகுக்குக் காரணனான கபத்தை மட்டுப் படுத்தி அவளைத் தன்னிலை பெறச் செய்வது கந்தர்வர்கள் பொறுப்பு. அழகும், பருவமும் சேர்ந்து விட்டால் பின்னால் ஏற்படும் உணர்வுகளுக்கும் அவளுடைய துணை தேடும் நினைவுகளுக்கும் காரணம் அக்னி. இந்தச் சமயத்தில் தான் பெண் அந்த அக்னியைப் போல இருக்க வேண்டும். அவள் நினைவுகளும், கனவுகளும் அவளைச் சுட்டுப் பொசுக்காமல் அவளைப் பாதுகாப்பவன் அக்னி. அந்தப் பாதுகாப்பு உணர்வு அவளுக்குத் தோன்றக் காரணமாக இருப்பவன் அக்னி. ஏனென்றால் சிருஷ்டியின் மூலமே பெண்ணால்தான். தன்னிச்சையாகச் செயல் படும் தகுதி அவளுக்கு இருந்தாலும் அவள் ஜாக்கிரதையாகத் தன் குடும்பம், சமூகம் என்ற உணர்வுகளோடு ஆரோக்கியமான சிந்தனைகளோடு செயல் படுவதற்குக் காரணம் அக்னி. பெண்ணினம் காப்பாற்றப் பட்டால் அத்தனை தர்மங்களும் காப்பாற்றப் படும். ஆகவே திருமணம் ஆகும் வரை அவளைக் காக்கும் பொறுப்பை அக்னி ஏற்றுக் கொண்டு மணமகனிடம் மணப் பெண்ணை ஒப்படைக்கிறார். ஆகவே தான் திருமணங்கள் அக்னி சாட்சியாகவும் நடைபெறுகிறது. மணமகன், மணமகள் இருவரும் சேர்ந்து ஸோமன், கந்தர்வன், அக்னி இவர்கள் மூவருக்கும் முறைப்படி அவர்களுக்குப் பூஜை செய்து வணங்கி வழி அனுப்புவார்கள். முறையே சந்திரனுக்குப் பிடித்த பழத்தை ஒரு குழந்தைக்கும், கந்தர்வனுக்கு வேண்டிய ஆடை, அலங்கரம், வாசனைத் திரவியம் போன்றவைகளுக்கு மணமகன், மணமகள் ஆடைகளில் இருந்து நூல் எடுத்தும், அக்னிக்குப் பிரியமான நெய்யும் கொடுத்து வழி அனுப்புவார்கள். இதில் அவர்கள் இதுவரை செய்த தவறுகளை மன்னிக்கவும், மேலும் இனித் தவறு செய்யாமல் இருக்கவும் இருவரும் வேண்டும் வேண்டுதலும் இருக்கும். அக்னி பரிசுத்தமானது. அவன் பாதுகாப்பில் இருந்த பெண்ணும் சுத்தமானவள். அப்பழுக்கற்றவள்.

ஆகையால் நாம் சந்தேகமே இல்லாமல் வேதங்களும் மந்திரங்களும் கூறும் உண்மையைப் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.
சிதம்பர ரகசியம் பகுதி : 8

ஆட்டம் ஆரம்பிச்சாச்சு. ஆடப் போவது யாரு? இந்த அகில உலகங்களையும் படைக்கும், காக்கும், அழித்துத் திரும்பப் படைக்கும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனும், நாயகியும். இவங்க ஆடினதைப் பார்க்கப் போவது நாம் எல்லாருமே! ரெண்டு பேருக்கும் போட்டி வேறே யார் பெரியவங்க யார் சின்னவங்கன்னு! ஒண்ணிலே ஒண்ணாக இருக்கும் இவங்களிலே யாரைப் பெரியவங்க யாரைச் சின்னவங்கனு சொல்றது? அதுவும் புரியலை. நடுவர்களோ என்றால் சிவனை மட்டுமல்லாது அன்னையையும் போற்றித் துதிக்கும் ரிஷி முனிவர்கள். சிவனின் தாண்டவத்தைக் காண ஆவலுடன் காத்திருப்பவர்கள். ம்ம்ம்ம் செருமிக் கொண்டு வருகிறாள் காளி அன்னை. இவள் எப்படிப் பட்டவள்? இதோ பாரதி சொல்கிறார்: காலமாம் வனத்திலண்டக் கோல மாமரத்தின் மீது காளி சக்தி என்ற பெயர் கொண்டு-ரீங் காரமிட்டு உலவு மொரு வண்டு - தழல் காலும் வழி நீலவன்ன மூல அத்து வாக்கனெனனும் கால்களாறுடையதெனக் கண்டு மறை காணு முனிவோருரைத்தார் பண்டு. ஆட்டம் ஆரமபி்க்கிறது. திக்குகள் எட்டும் அதிருகின்றது. தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தித்தோம்! இறைவன் பதில் கொடுக்கிறார். தாம் தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தித்தோம்! அகில உலகும் குலுங்குகிறது. அண்டமே குலுங்க ஆடிய இந்த ஆட்டத்தில் யார் ஜெயிக்கப் போகிறார். காளியவளோ கலங்காமல் ஆடுகிறாள். இறைவனின் ஒவ்வொரு அபிநயத்துக்கும் பாவங்களுக்கும் சரியான பதில் கொடுக்கிறாள். ஆட்டத்துக்கு ஒரு முடிவே இல்லையோ என அனைவரும் எண்ணும் வேளையில் இறைவன் செய்த ஒரு காரியத்தில் காளி அன்னை வெட்கித் தலை குனிகிறாள். அவளால் அவ்வாறு செய்ய முடியவில்லை. அப்படி என்ன செய்தார் ஈசன் சர்வேசன்? ஆட்ட வேகத்தில் அவர் காதுக் குழை கழன்று கீழே விழ அதை அந்த ஆடும் வேகத்திலும் கவனித்த இறைவன் தன் இடது காலால் அந்த வலதுக் குழையை எடுத்துக் கொண்டு அந்தக் காலை அப்படியே மேலே தூக்கிக் காது வரை கொண்டு போய்க் குழையை மாட்டிக் கொள்கிறார் வலது காதில். ஆட்டத்தில் தேர்ச்சி இருந்தாலும் பெண்ணால் இவ்வாறு செய்ய முடியாது அல்லவா? பெண்கள் போன போகும் போகப் போகிற தூரம் இவ்வளவு என்று வரையறுக்கப் பட்டிருக்கிறதல்லவா? அனைவரையும் படைத்த அன்னையானாலும் அவளும் ஒரு பெண்ணல்லவா? அவள் பெண்மை அவளைத் தடுத்தது. இந்தக் காட்சியைக் கண்ட முனிவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இறைவனைப் பார்க்கிறார்கள். அப்போது இறைவன் அவர்களைத் திருவள்ளுவரிடம் போய்க் கேட்கச் சொன்னதாயும் அவர்கள் வள்ளுவரிடம் போய் இறைவன் ஏன் அவ்வாறு பாதி நாட்டியத்தில் செய்தார் எனக் கேட்க அவர் உடனேயே காதுக் குழையைப் போட்டுக் கொண்டாரே அதையா கேட்கிறீர்கள்? எனக் கேட்டதாயும் வள்ளுவரின் பக்தியையும் அவர் இருந்த இடத்திலேயே இறை தரிசனம் கிடைக்கப் பெற்றதில் இருந்து அவருடைய தனித் தன்மை வெளிப்பட்டதாயும் அவர் ஒரு சித்தர் என்றும் செவி வழிச் செய்திகள்.

காளி தோற்றுப் போனாள். தன்னுடைய இடத்தை கொடுத்து விட்டுப் போகிறாள். உடலில் ஒரு பாகம் ஆனவள் இந்த இடத்துக்குச் சண்டை போடுவாளா? எல்லாம் ஒரு நாடகம். நமக்காக. நாம் நம் எல்லையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக. ஆனால் இறைவன் அவ்வாறு விட்டு விடுவாரா? நீ இந்த ஊர் எல்லையில் காவல் காத்து வா என்று ஆணை இடுகிறார். அவ்வாறே காளி ஊர் எல்லைக்குச் செல்கிறாள். நடராஜர் ஆனந்தத் தாண்டவம் ஆடுகிறார். பதஞ்சலியும், வியாக்ரபாதரும் ஆவலுடன் பார்த்து ரசிக்கிறார்கள். இறைவனை அங்கேயே கோயில் கொள்ள வேண்டுகின்றனர். இறைவனும் இசைகிறான். அவனுக்குத் தெரியாதா? ஆதியாஞ்சிவனுமவன் சோதியான சக்தியுந்தான் அங்குமிங்கு மெங்கு முளவாகும் ஒன்றே யாகினாலுகனைத்தும் சாகும்வையன்றியோர் பொருளுமில்லை அன்றியொன்றுமில்லை ஆய்ந்திடில் துயரமெல்லாம் போகும் இந்த அறிவு தான் பரமஞானமாகும். இவ்வாறு இறைவனுக்குத் தன்னுடைய இடத்தை விட்டுக் கொடுத்து விட்டுக் காளி போனதும் இறைவன் அங்கே குடி கொள்கிறான். தேவ சிற்பியான விஸ்வக்ரமா வந்து நடன அரங்கம் எழுப்பித் தருகிறார் இறைவன் ஆட. அதற்கு முதலில் இந்த ஆட்டத்தின் ரகசியம் புரியவேண்டும் அல்லவா? அதன் படி தானே நடன அரங்கம் எழும்ப முடியும்? முனிவர்கள் விஸ்வகர்மாவுக்குப் போதிக்க அதைக் கருத்தில் கொண்டு எழுப்புகிறார் "சித் சபை". ஆனால் நாம் முதலில் பார்க்கப் போவது "மூலநாதரை"த் தான். ஆதியில் குடி கொண்ட அவரை விட்டு விட்டு முன்னே போகக் கூடாது அல்லவா?

தரிசனம் தொடரும். நாளை சந்திக்கலாம்
திவ்ய தேசங்கள் - 44

அருள்மிகு கோவிந்தராஜப்பெருமாள் திருக்கோயில்
 
மூலவர்    :     கோவிந்தராஜர் (பார்த்தசாரதி, சக்கரவர்த்தி திருமகன்)
உற்சவர்    :     தேவாதிதேவன்
தாயார்    :     புண்டரீகவல்லி
தீர்த்தம்    :     12 தீர்த்தங்கள்
ஆகமம் பூஜை     :     வைகானஸம்
பழமை    :     2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்    :     தில்லைவனம், திருச்சித்திரக்கூடம்
ஊர்    :     சிதம்பரம்
மாவட்டம்    :     கடலூர்
மாநிலம்    :     தமிழ்நாடு
பாடியவர்கள் : குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார்

காயோடு நீடு கனியுண்டு வீசு கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம், ஐந்து தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா திருமார்பனைச் சிந்தையுள் வைத்து மென்பீர் வாயோது வேதம் மல்கின்ற தொல்சீர் மறையாளர் நாளும் முறையால் வளர்த்த தீயோங்க வோங்கப் புகழோங்கு தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.

விழா : சித்திரையில் 10 நாட்கள் வசந்த உற்சவம் மற்றும் கஜேந்திர மோட்ச விழா.      
             
சிறப்பு : பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று மகா விஷ்ணுவின் நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மா நான்கு முகங்களுடன் அமர்ந்த கோலத்தில் தான் இருப்பார். ஆனால் இங்கு வித்தியாசமாக நின்ற கோலத்தில் இருக்கிறார். பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமான இங்கு மகா விஷ்ணு ஆகாயத்தை பார்த்தபடி இருப்பது சிறப்பு.      
             
திறக்கும் நேரம்:காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 10.30 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு கோவிந்தராஜப்பெருமாள் திருக்கோயில், திருச்சித்ரக்கூடம் -608 001, சிதம்பரம் (சிதம்பரம் நடராஜர் கோயிலின் உள்ளே) கடலூர் மாவட்டம். போன் : +91- 4144 - 222 552, 98940 69422.     
            
தகவல் : இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் சாத்வீக விமானம் எனப்படும். உற்சவர் தேவாதிதேவன் தாயார்களுடன் அமர்ந்த கோலத்திலும், மற்றோர் உற்சவர் சித்திரக்கூடத்துள்ளான் சுவாமியின் பாதத்திற்கு அருகில் நின்ற கோலத்திலும் இருக்கின்றனர். சித்ரசபை எனப்படும் இக்கோயிலில் நடராஜர் சன்னதிக்கு அருகிலே கோவிந்தராஜப் பெருமாள் கொடி மரத்துடன் தனிக்கோயில் மூலவராக இருக்கிறார். பெருமாள் சன்னதிக்கு முன் மண்டபத்தில் நின்று பார்த்தால் நடராஜர், கோவிந்தராஜர் மற்றும் அவரது நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மா ஆகிய மூவரையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்யலாம். இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது.
            
பெருமை : மோட்ச தலம் கவேரன் எனும் கலிங்க நாட்டு அரசனுக்கு லோபமுத்திரை எனும் மகள் இருந்தாள். லோபமுத்திரையை திருமணம் செய்து கொண்ட அகத்தியர் அவளை காவிரி நதியாக மாற்றினார். அந்நதியில் தினமும் நீராடிய கவேரனும் அவன் மனைவியும் தங்கள் மகளிடம், முக்தியடைய வழி கேட்டனர். அவர்கள் முன் தோன்றிய காவிரி தில்லை நகர் சென்று பெருமாளை குறித்து தவம் செய்து வந்தால் அவர் தரிசனத்தால் முக்தி கிடைக்கும் என்றாள். அதன் படி கவேரனும் அவன் மனைவியும் இத்தலத்திற்கு வந்து தவம் இருந்தனர். அவர்களுக்கு மகாவிஷ்ணு ஸ்ரீதேவி, பூதேவியுடன் பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தந்து மோட்சம் கொடுத்தார்.

சிறப்பு : மகா விஷ்ணுவின் நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மா நான்கு முகங்களுடன் அமர்ந்த கோலத்தில்தான் இருப்பார். ஆனால் இங்கு வித்தியாசமாக நின்ற கோலத்தில் இருக்கிறார். தன்னைப் படைத்த மகாவிஷ்ணு நடனப்போட்டிக்கு தீர்ப்புச் சொல்வதற்காக சபையில் இருந்த போது அவருக்கு மரியாதை கொடுப்பதற்காக பிரம்மா நின்றபடியே இருந்தாராம். இதனை உணர்த்தும் விதமாக இங்கு பிரம்மா நின்ற கோலத்தில் இருக்கிறார் என்கின்றனர். பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமான இங்கு மகா விஷ்ணு ஆகாயத்தை பார்த்தபடி இருப்பது சிறப்பு.

பதஞ்சலி சன்னதி : பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாளை மெத்தையாக (அரவணை) இருந்து தாங்குபவர் ஆதிசேஷன். ஒரு சமயம் அவர் சிவனது திருவிளையாடல்களையும், அவரது தாண்டவங்களையும் கேட்டு தாண்டவ தரிசனம் செய்ய ஆர்வம் கொண்டார். எனவே மகா விஷ்ணு அவரை சிவனின் திரு நடனம் காண அனுப்பி வைத்தார். பூலோகத்தில் வியாக்ரபாத மகரிஷியுடன் நட்பு கொண்ட அவர் இத்தலத்தில் நடராஜரின் திரு நடனக்கோலத்தை தரிசித்தார். பின் கோவிந்தராஜரை வணங்கி மோட்சம் பெற்று மீண்டும் பாற்கடல் திரும்பினாராம். இவர் பிரகாரத்தில் சுவாமியின் பாதத்திற்கு நேரே அவரை வணங்கிய கோலத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரிடம் வேண்டிக்கொண்டால் சிவன், விஷ்ணு இருவரது அருள் கிடைக்கவும் உதவி செய்வார் என்பது நம்பிக்கை.

சிறப்பு: அசுரகுலத்தைச் சேர்ந்த தில்லி என்பவள் பெருமாளிடம் தான் மரங்கள் நிறைந்த வனமாக இருக்க விரும்புவதாகவும் அவ்விடத்தில் சுவாமி எழுந்தருள வேண்டும் என்றும் வேண்டினாள். விஷ்ணுவும் அருள் புரிய அவளே சிதம்பரத்தில் தில்லை மரங்களாக வளர்ந்து நிற்க விஷ்ணு இத்தலத்தில் பள்ளி கொண்டார். தலமும் "தில்லை நகர்' எனப்பட்டது. தாயார் புண்டரீகவல்லி தனிச்சன்னதியில் இருக்கிறாள். பிரகாரத்தில் சுவாமியின் பாதத்திற்கு நேரே அவரது திருவடிகள் இருக்கிறது. இதனை வணங்குபவர்களுக்கு மோட்சம் கிடைக்கும். கஜேந்திரவரதரை தூக்கிய கோலத்தில் கருடாழ்வார், நரசிம்மர், வேணுகோபாலர், பதஞ்சலி மகரிஷி, ஆண்டாள், ஆஞ்சநேயர் ஆகியோரும் இருக்கின்றனர்.

ஸ்தல வரலாறு : கைலாயத்தில் ஒரு சமயம் சிவனும், பார்வதியும் மகிழ்ச்சியாக இருந்த நேரத்தில் ஆனந்தமாக நடனமாடினர். நடனம் முடிந்த போது தங்களில் யார் நன்றாக ஆடியது என அவர்களுக்குள் சந்தேகம் எழுந்தது. பிரம்மாவிடம் தங்களின் சந்தேகத்தைக் கேட்டனர். அவரால் சரியாக தீர்ப்பு சொல்ல முடிய வில்லை. எனவே இருவரும் தங்களுக்கு தீர்ப்பு சொல்லும் படி மகா விஷ்ணுவிடம் கேட்டுக்கொண்டனர். அவர் தேவ சிற்பியான விஸ்வகர்மாவைக் கொண்டு இங்கு ஒரு சித்திரை சபையை அமைத்து அதில் நடன போட்டியை வைத்துக் கொள்ளும் படி கூறினார். சிவனுக்கும், பார்வதிக்கும் நடனப்போட்டி ஆரம்பமானது. சிவன் தன் தாண்டவங்கள் அனைத்தையும் ஆடிக்காட்டினார். பார்வதிதேவியும் சலிக்காமல் அவருக்கு ஈடு கொடுத்து ஆடினார். ஒருவரை ஒருவர் மிஞ்சும் படி இருவரும் ஆடிக்கொண்டிருக்கும் போது சிவனின் காதில் உள்ள குன்டலம் கீழே விழுந்தது அதை தன் வலக்காலால் தூக்கி காதில் அணிந்து கொண்டார் சிவன். பார்வதியால் காலைத் தூக்கி ஆட முடியவில்லை. எனவே சிவனே வெற்றி பெற்றதாக அறிவித்தார் மகா விஷ்ணு. பின் சிவன் இங்கு நடராஜராகவே எழுந்தருளி மகா விஷ்ணுவையும் இங்கேயே தங்கும் படி கூறினார். விஷ்ணுவும் பள்ளி கொண்ட கோலத்தில் தங்கினார்.     
அருள் மிகு தேவநாத பெருமாள் திருக்கோயில்
 
மூலவர்    :     தேவநாதர்
உற்சவர்    :     அச்சுதன்
தாயார்    :     செங்கமலம்
ஸ்தல விருட்சம்    :     வில்வம்
தீர்த்தம்    :     கருடதீர்த்தம்
பழமை    : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்    :     திருவயீந்திரபுரம்
ஊர்    :     திருவகிந்திபுரம்
மாவட்டம்    :     கடலூர்
மாநிலம்    :     தமிழ்நாடு
பாடியவர்கள் :     திருமங்கையாழ்வார்

மூவராகிய ஒருவனை மூவுல குண்டு உமிழ்ந் தளந்தானை தேவர் தானவர் சென்று சென்றிறைஞ்சத் தண் திருவயிந்திர புரத்து மேவு சோதியை வேல் வலவன் கலிகன்றி விரித்துரைத்த பாவு தண் டமிழ்ப் பத்திவை பாடிட பாவங்கள் பயிலாவே.      
             
விழா : சித்திரை மாதம்  தேவ நாத பெருமாள் பிரம்மோற்சவம் 10 நாட்கள் திருவிழா 5 ம் நாள் இரவு கருடசேவை 9ம் நாள் தேர் தீர்த்தவாரி விடையாற்றி அன்று மட்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவார்கள். வைகாசி விசாகம் வைகாசி விசாகம் நம்மாழ்வார் சாத்து முறை 10 நாள் (உற்சவம்) பெருமாள் வசந்த உற்சவம் 10 நாள் (பௌர்ணமி சாத்து முறை) நரசிம்ம ஜெயந்தி ஆடி அமாவாசை, ஆடிபூர உற்சவம், ஆவணி பவித்ர உற்சவம், கிருஷ்ண ஜெயந்தி உற்சவம், புரட்டாசி மகா தேசிகன் பிரம்மோற்சவம், ஐப்பசி தீபாவளிப் பண்டிகை முதலாழ்வார்கள் உற்சவம், திருக்கார்த்திகை உற்சவம், மார்கழி அனுமத் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, போகி, ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம், தைமாதம் மகரசங்கராந்தி, பங்குனி ஸ்ரீ ராம நவமி உற்சவம் ஆகியவை முக்கியமான விழா நாட்கள் ஆகும்.      
சிறப்பு :     இவ்வூர் ஆதிசேஷனால் நிர்மாணிக்கப்பட்ட ஸ்தலம். அருகில் உள்ள மலை பிரம்மா தவம் செய்த இடம். அதனால் பிரம்மாச்சலம் என்றும் பெயர் பெற்றது. கருடன் கொண்டு வந்த நதி கருடநதி என்றழைக்கப்பட்டு அருகில் ஓடுகிறது.தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பாய்வதால் இந்த நதியில் குளித்தால் கங்கை நதியில் குளித்த புண்ணியம் உண்டாகும். ரிஷியினுடைய சாபத்தால் இன்றும் இந்த நதியின் தீர்த்தம் மழைக்காலத்தில் ரத்தம் போல் சிவப்பாக ஓடுகிறது. பொதுவாக பெருமாள் கோயில்களில் லட்சுமி நரசிம்மர் சன்னதியில் நரசிம்மர் லட்சுமியை இடதுமடியில் அமரவைத்திருப்பார். ஆனால் இத்தலத்தில் நரசிம்மர் தனது வலது தொடையின்மீது அமரவைத்து அருள் பாலிப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். இலங்கைக்கு சஞ்சீவி பர்வதத்தை எடுத்துச் சென்றபோது அனுமானின் கையில் இருந்த சஞ்சீவி மலையிலிருந்து சிறிதளவு சரிந்து இந்த மலையில் விழுந்ததனால் இது ஒளஷாதாசலம் என்ற பெயரை உறுதிப்படுத்திக் கொண்டதாம். உடற்பிணிகளை போக்கும் ஒளஷதிகள் இங்கே காணப்படுகின்றன. அந்த மலையில் லட்சுமி ஹயக்ரீவர் எழுந்தருளியுள்ளார்.வேதாந்த தேசிகன் இங்குள்ள ஒளஷதாசலத்தில் தவம் புரிந்து ஹயக்ரீவனையும் கருடனையும் கண்டு வரம் பெற்றார்.ஹயக்ரீவனுக்கு உலகிலேயே இவ்வூரில்தான் முதன்முதலில் கோயில் ஏற்பட்டது.      
திறக்கும் நேரம் :     காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.    அருள் மிகு தேவநாத பெருமாள் திருக்கோயில், திருவகிந்தபுரம்-607 401, கடலூர் மாவட்டம்.

தகவல் :     இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் சுத்த சத்வம் எனப்படுகிறது. வைணவ ஆகமப்படி ஆறு கால பூஜைகள் தினம் நடந்து வருகிறது. திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் இத்தலத்தில் சென்று நேர்த்திகடன் செலுத்தலாம்.      
           
பெருமை :    பெருமாளுக்கு தீர்த்த தாகம் ஏற்பட்டபோது அங்கிருந்த கருடாழ்வாரிடம் தீர்த்தம் கொண்டு வரப் பணித்தார். அவர் எடுத்து வர தாமதம் ஆனதால் ஆதிசேஷனிடம் சொல்லி தன் வாலால் அடித்து பெருமாளுக்கு தீர்த்தம் தந்தார். அதனால் அதற்கு சேஷ தீர்த்தம் என்று பெயர் வந்தது. இது ஒரு பிரார்த்தனை கிணறு ஆகும். இது கோயிலின் உள்ளே தெற்கு பிரகாரத்தில் உள்ளது. இதில் உப்பு மிளகு வெல்லம் போட்டு பிரார்த்தனை செய்தால் வியாதிகள் குணமாகும். கட்டி,பால் உண்ணி ஆகியவை மறையும். சர்ப்ப தோசம் உள்ளவர்கள் இங்குள்ள சர்ப்பத்தை வழிபட்டால் தோசம் நீங்கும். இவ்வூர் ஆதிசேஷனால் நிர்மாணிக்கப்பட்ட தலம். அருகில் உள்ள மலை பிரம்மா தவம் செய்த இடம். அதனால் பிரம்மாச்சலம் என்றும் பெயர் பெற்றது. ஆதிசேஷனால் நிர்மாணிக்கப்பட்ட கிணறு இன்றும் கோயிலில் உள்ளது.
பிரம்மா, சிவன், இந்திரன், பூமாதேவி, பிருகு, மார்க்கண்டேயர் முதலானோர் தவம் செய்த ஸ்தலம். இத்தலம் நடு நாட்டு திவ்ய தேசங்களில் மிகவும் சிறப்பு பெற்றது. கலியனாலும் நிகமாந்த மகா தேசிகனாலும் பாடப்பெற்றுள்ளது.
வேதாந்த தேசிகன் இவ்வூரில் சுமார் 40 ஆண்டுகள் வசித்து வந்தார். அநேக நூல்களை எழுதினார். அவர் எழுந்தருளிய இடம் ஸ்ரீ தேசிகன் திருமாளிகை என்ற பெயரோடு இன்றும் விளங்குகிறது. வேதாந்த தேசிகன் தன் திருக்கரங்களாலேயே கட்டிய கிணற்றையும் இந்த ஊரில் காணலாம். தேசிகன் பெருமாளை நாயகா நாயகி பாவத்தில் (பெருமாள் - நாயகன் தேசிகன் - நாயகி) அனுபவித்து வழிபட்டுள்ளார்.
தன் விக்ரத்தை தானே செய்து கொண்ட தேசிகரது விக்ரகம் இன்னும் இத்தலத்தில் உள்ளது.
யுகம் கண்ட பெருமாள் என்று போற்றப்படுகின்றார்.      
           
வரலாறு :    ஒரு காலத்தில் அகம்பாவம் பிடித்த தேவர்கள் அசுரர்களால் தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்டார்கள். அவர்கள் ஒளஷதாசலத்துக்கு வந்து வணங்க நாரயணன் அவர்களுக்கு உதவுவதாக வாக்களித்தார். அசுரர்கள் பிரம்மனிடம் முறையிட பரமனை துணை கொண்டு யுத்தம் செய்யுங்கள் என்று கூறியனுப்பினார். அசுரர்களுக்கு பக்கபலமாக சிவன் நின்றார். சிவனால் தேவர்கள் தாக்கப்பட்டு அல்லலுறுவதைக் கண்ட நாராயணன் சக்ராயுதத்தை ஏவினார். அசுரர்களை விரட்டிச் சென்று கொன்று குவித்தது. இறுதியில் எல்லோரும் நாராயணனிடம் சரணடைந்தனர். எல்லாரையும் பகவான் அரவணைத்தார். தாமே மும்மூர்த்தியாகக் காட்சியளிப்பதாகக் கூறிய பகவான் தமது திருமேனியில் பிரமனையும் சிவனையும் காட்டி அனைவரையும் மகிழ்வித்தார். தேவர்களுக்கு தலைவனாக இருந்தது கொண்டு தேவநாதன் என்ற திருநாமம் உண்டாயிற்று. அங்கேயே ஸ்ரீமந் நாராயணன் நித்ய வாசம் செய்ய இருப்பதை அறிந்த ஆதிசேசன் அங்கு ஒரு நகரத்தை உண்டு பண்ணினான். அதுதான் திரு அஹீந்த்ர (ஆதிசேஷ) புரம் என பெயர் பெற்று விளங்கியது.     
திவ்ய தேசங்கள் -46

அருள் மிகு திருவிக்கிரமசுவாமி (உலகளந்த பெருமாள்) திருக்கோயில்
 
மூலவர்    :     திருவிக்கிரமர் (உலகளந்த பெருமாள்)
 உற்சவர்    :     ஆயனார், கோவலன்
 தாயார்    :     பூங்கோவல் நாச்சியார்
 ஸ்தல விருட்சம்    :     புன்னைமரம்
தீர்த்தம்    :     பெண்ணையாறு, கிருஷ்ண தீர்த்தம்,ஸ்ரீசக்ரதீர்த்தம்
பழமை    :     2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்    :     திருக்கோவலூர்
ஊர்    :     திருக்கோவிலூர்
மாவட்டம்    :     விழுப்புரம்
மாநிலம்    :     தமிழ்நாடு
பாடியவர்கள் :     பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார்

மஞ்சாடு வரையேழும் கடல்களேழும் வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம் எஞ்சாமல் வயிற்றடக்கி ஆலின்மேல் ஓரிளந்தளிரில் கண்வளர்ந்த ஈசன் தன்னை துஞ்சாநீர்வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால் தூயநான்மறையாளர் சோமுச் செய்ய செஞ்சாலி விளைவயலுள் திகழந்து தோன்றும் திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே..

விழா : பங்குனி மாதம்  பிரம்மோற்ஸவம் 15 நாட்கள் நடைபெறும். பஞ்சபர்வ உற்ஸவமும் ஸ்ரீபுஷ்பவல்லித் தாயார் வெள்ளிக் கிழமை ஊஞ்சல் உற்ஸவமும் நடைபெறும். இத்திருவிழா இத்தலத்தின் மிக சிறப்பான விழா ஆகும். இத்திரு விழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் வந்து பெருமாளை வழிபடுவர். மாசி மாதம் - மாசி மக உற்சவம் - இவ்விழாவின் போது பெருமாள் கடலூருக்கு தோளிலேயே செல்வார் என்பது சிறப்பு. புரட்டாசி - பவித்திர உற்சவம் - நவராத்திரி உற்சவம் சித்திரை - ஸ்ரீ ராமநவமி உற்சவம், ஸ்ரீ ராமனுஜர் ஜெயந்தி , வசந்த உற்சவம் வைகாசி - விசாக கருட சேவை, நம்மாழ்வார் சாற்றுமுறை ஆனி- பெரியாழ்வார் சாற்று முறை ஆடி- திருவாடிப்பூரம், ஆண்டாள் உற்சவம் ஆவணி - ஸ்ரீ ஜெயந்தி, உறியடி உற்சவம் ஐப்பசி - முதலாழ்வார் சாற்றுமுறை , ஸ்ரீ மணவாள மாமுனிகள் 10 நாட்கள் உற்சவம் கார்த்திகை - கைசிக ஏகாதசி உற்சவம், திருக்கார்த்திகை தீப உற்சவம் மார்கழி பகல் பத்து, இராப்பத்து (வைகுண்ட ஏகாதசி) இவை தவிர வருடத்தின் விசேஷ நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின் போது கோயிலில் பெருமாளுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அப்போது பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு பெருமாளை வணங்குவார்கள்.      
             
சிறப்பு : பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று இங்கு விஷ்ணுவும், துர்க்கையும் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் மூலவரின் திருமேனி தாருவால்(மரம்) ஆனது. இவ்வளவு பெரிய பெருமாள் நின்ற கோலத்தில் வேறு எங்கும் கிடையாது. சாளக்கிராமத்தால் ஆன கிருஷ்ணர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.      
             
திறக்கும் நேரம் : காலை 06.30 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 04:00மணி முதல் இரவு 08.30 மணி வரை திறந்திருக்கும்.     
           
முகவரி :    அருள்மிகு திருவிக்கிரமசுவாமி(உலகளந்த பெருமாள்)திருக்கோயில், திருக்கோவிலூர் - 605757, விழுப்புரம் மாவட்டம்.     போன்:+91- 94862 79990     
            
தகவல் : பெருமாள் ஸ்ரீ சக்கரம் விமானத்தின் கீழ் அருள் பாலிக்கிறார்.வேணுகோபாலர் க்ஷேத்திர பாலகராக அருளுகிறார்.கோயில் சுற்றுப்பிரகாரத்தில் வேணுகோபாலன், லட்சுமிநாராயணன், வீர ஆஞ்சநேயர், லட்சுமி ராகவன், லட்சுமி நரசிம்மர், ராமர், ஆண்டாள், அசுரகுல குரு சுக்ராச்சாரியார் ஆகியோர் அருள் செய்கின்றனர்.
தமிழகத்தின் மூன்றாவது பெரிய கோபுரம் 5 ஏக்கர் பரப்பளவுள்ள இக்கோயிலின் ராஜகோபுரம் 192 அடி உயரம் கொண்டது. 11 நிலைகள் கொண்டது. இது தமிழகத்தின் மூன்றாவது பெரிய கோபுரம் ஆகும். (முதல் இடம் ஸ்ரீரங்கம், இரண்டாம் இடம் ஸ்ரீவில்லிபுத்தூர்) கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்ற பின்னரும், மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளைக் காணலாம். இத்தலத்தை நடு நாட்டு திருப்பதி என கூறுகிறார்கள். கேரளா திருக்காக்கரையில் வாமனருக்கென மிகப்பெரிய கோயில் உள்ளது. இத்தலத்தில் மூலவருக்கு பின்னால் வாமனர் அருளுகிறார்.      
             
பிரார்த்தனை : நல்ல பதவிகளை அடைய விரும்புவர்கள், பதவி உயர்வு வேண்டுபவர்களும், பதவி இழந்தவர்களும் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் அவர்களது வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும் என்பதே இக்கோயிலின் தனிச் சிறப்பு. கல்யாண பாக்கியம், குழந்தை வரம் ஆகியவை நிறைவேறுகின்றன. இங்குள்ள சக்கரத்தாழ்வார் விஷ்ணு சொரூபமாக  இருப்பதால்  சத்ருக்கள் (எதிரிகள் ) தொல்லை நீங்கும்.
     
ஸ்தல பெருமை :    மூலவர் சிறப்பு அரசன் ஒருவனின் ஆணவத்தை அடக்க குள்ளமாக வந்து பின் விசுவரூபமெடுத்து வலது காலில் ஆகாயத்தை அளந்த படியும், இடது காலில் பூமியில் நின்ற படியும் அருள் பாலிக்கிறார். வழக்கமாக அனைத்து பெருமாள் கோயிலிலும் விஷ்ணு வலக்கையில் சக்கரமும், இடக்கையில் சங்கும் வைத்திருப்பார். இங்குள்ள பகவான் மகாபலியை தன்னுடன் இணைத்துக் கொண்ட மகிழ்ச்சியில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல், வலக்கையில் சங்கும் இடக்கையில் சக்கரமும் ஏந்தி காட்சி தருகிறார். இப்படி காட்சி தருவது பக்தர்களுக்கு ஞானத்தை வழங்குவதாக ஐதீகம். தனது வலது கையில் ஒன்று, மூன்றாவது அடி எங்கே என கேட்பது போல அமைந்திருக்கும். தூக்கியிருக்கும் விஷ்ணுவின் வலது காலை பிரம்மா ஆராதனை செய்கிறார். மூலவரின் திருமேனி தாருவால்(மரம்) ஆனது.மகாபலி மன்னனை ஆட்கொள்ள குள்ள வடிவமுள்ள வாமனராக வந்த பெருமாள், விஸ்வரூபம் எடுத்தார். இந்த விஸ்வரூப காட்சியைக் காண மிருகண்டு என்னும் முனிவருக்கு விருப்பம் ஏற்பட்டது. அவர் பிரம்மாவிடம் இதுபற்றி ஆலோசனை கேட்டார். பூவுலகில் கிருஷ்ணபத்ரா நதிக்கரையில் உள்ள கிருஷ்ண க்ஷேத்திரத்தில் (தற்போதைய திருக்கோவிலூர்) தவம் செய்தால், அந்த தரிசனம் கிடைக்கும் என்றார் பிரம்மா. அதன்படி முனிவர் தன் மனைவி மித்ராவதியுடன் பல காலம் இத்தலத்தில் கடும் தவம் இருந்தார். அத்தலத்துக்கு வருவோருக்கு அன்னதானத்தையும் அந்த தம்பதியர் அளித்து வந்தனர். ஒருநாள் விஷ்ணு இவரை சோதிக்க வயோதிக அந்தணர் வடிவில் வந்து அன்னம் கேட்டார். அன்று அவர்களிடம் உணவு ஏதும் மிச்சமில்லை. மிருகண்டு முனிவர் தன் மனைவியிடம் வந்தவருக்கு இல்லை என சொல்லாமல் ஏதாவது ஏற்பாடு செய்யும்படி கூறினார். வீட்டிலோ ஒரு பொட்டு நெல்மணி கூட இல்லை. எனவே கணவருக்குத் தவிர வேறு சேவை செய்தே அறியாத கற்பில் சிறந்த அப்பெண்மணி நாராயணனை நினைத்து ஒரு பாத்திரத்தை கையில் எடுத்தாள். ""நான் கற்பில் சிறந்தவள் என்பது உண்மையானால் இந்த பாத்திரம் நிரம்பட்டும்,'' என்றாள். உடனடியாக அதில் அன்னம் நிரம்பியது. அப்போது அந்தணர் வடிவில் வந்த பெருமாள் அவர்களுக்கு விஸ்வரூப தரிசனத்தை காட்டியருளினார். 

முதல் ஆழ்வார்கள் மூவர் : பெருமாளை புகழ்ந்து பாடிய முதலாழ்வார்களான பொய் கையாழ்வார்,பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர் இத்தலத்து பெருமாளைத்தான் முதன் முதலாகப் பாடினர். ஒரு முறை இம்மூவரும் பல தலங்களை தரிசித்து விட்டு திருக்கோவிலூரை அடைந்தனர். இவர்களை ஒன்று சேர்க்க நினைத்த பெருமாள், பெரும் மழையை பெய்விக்கச் செய்தார். முதலில் இத்தலம் வந்த பொய்கையாழ்வார், மிருகண்டு மகரிஷியின் ஆஸ்ரமத்தை அடைந்து, அங்கே தங்குவதற்கு இடமுண்டா என கேட்டார். அதற்கு முனிவர் ஒரு இடத்தை சுட்டிக்காட்டி அவ்விடத்தில் ஒருவர் படுக்கலாம் என கூறி சென்றார். சிறிது நேரத்தில் அங்கு வந்த பூதத்தாழ்வார், தாம் தங்குவதற்கும் இடமுண்டா என வினவினார். அதற்கு பொய்கையாழ்வார் ஒருவர் படுக்கலாம். இருவர் அமரலாம் என்று கூறி அழைத்துக் கொண்டார். இன்னும் சிறிது நேரம் கழித்து பேயாழ்வார் அங்கு வந்தார். தனக்கும் உள்ளே இடம் வேண்டும் என கேட்க, ஒருவர் படுக்கலாம். இருவர் அமரலாம். மூவர் நிற்கலாம் எனக் கூறி அவரையும் உள்ளே இழுத்துக் கொண்டனர். இப்படியாக மூவரும் நின்று கொண்டிருக்கையில், நாலாவதாக ஒருவர் வந்து மூவரையும் நெருக்குவது போன்ற உணர்வு ஏற்பட்டது. "இதென்ன விந்தை!' என அவர்கள் ஆச்சரியப்பட்ட போது, பேரொளியாக தோன்றிய பெருமாள் தன் திருமேனியை மூவருக்கும் காட்டியருளினார். மூன்று ஆழ்வார்களும் இத்தலத்தில் தான் முக்தி பெற்றனர். மூன்றடி மண் கேட்ட பெருமாள் என்பதால் இங்கு உலகளந்த பெருமாள் என்று போற்றப்படுகிறார். இங்கு ஷேத்திராபதி வேணுகோபால் ஆவார். மூலவர் திருமேனி தாருவால்(மரம்)ஆனது. இவ்வளவு பெரிய பெருமாள் நின்ற கோலத்தில் வேறு எங்கும் கிடையாது. வழக்கத்துக்கு மாறாக பெருமாள் வலக்கையில் சங்கும் இடக்கையில் சக்கரமும் ஏந்தி காட்சி தருவது சிறப்பு. 108 வைணவத் தலங்களில் இங்கு மட்டும் தான் சுயம்பு விஷ்ணு துர்க்கை உள்ளது. இது நடுநாட்டுத் திவ்ய தேசங்களில் முக்கியமானது ஆகும். 192 அடியில் அமைந்த தமிழ் நாட்டின் மூன்றாவது கோபுரம் இங்கு அமைந்துள்ளது. அசுர குரு சுக்கிராச்சாரியாருக்கு இங்கு உருவம் இருக்கிறது. நாலாயிர திவ்ய பிரபந்தம் முதன்முதலில் பாடப்பட்டது என்பது மிக குறிப்பிடத்தக்க சிறப்பு.

அண்ணன் அருகில் தங்கை பொதுவாக சிவாலயங்களின் சுற்றுப்பிரகாரத்தில் தான் விஷ்ணு துர்க்கையைக் காண முடியும். ஆனால் 108 திருப்பதிகளில் இங்கு மட்டும் தான் பெருமாள் சன்னதி அருகிலேயே விஷ்ணு துர்க்கை  அருள்பாலிக்கிறாள். இவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் நின்று தரிசனம் செய்யலாம்.பெருமாளை மட்டுமே பாடும்  திருமங்கையாழ்வார், இத்தலத்தில் துர்க்கையையும் (மாயை) சேர்த்து "விந்தம் மேவிய கற்புடை மடக்கன்னி காவல் பூண்டகடி பொழில்' என்று புகழ்ந்து பாடுகிறார். இவளுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் பூஜை செய்தால் நவக்கிரக தோஷம் விலகும் என்பதும், சகோதர சகோதரிகள் உறவு பலப்படும் என்பதும் நம்பிக்கை. பெருமாள் சன்னதிக்கு நேர் எதிரில் கருடன் தூண் ஒன்று உள்ளது. 40 அடி உயரமுள்ள இந்தத் தூண் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. அதன் மேல் பகுதியில் உள்ள சிறிய கோயில் காண்போரை வியப்பில் ஆழ்த்தும். இந்த தூணின் மேல் பகுதியில் கருடன் நின்று பெருமாளை வணங்குவதாக ஐதீகம்.

திருக்கோவிலூர், திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, கபிஸ்தலம் ஆகிய பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் இது முதலாவது தலம். கோயில் நுழைவு வாயிலின் வலதுபக்கம் சாளக்கிராமத்தால் ஆன கிருஷ்ணர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இவரை தரிசித்த பின் தான் மூலவரை தரிசனம் செய்ய வேண்டும்.  மணவாள மாமுனிகளும் இத்தல பெருமாளை பாடியுள்ளார். பரசுராமர் இங்கு தவம் செய்ததாக புராணங்களும், அகத்தியர் தவம் செய்ததாக தமிழ் இலக்கியங்களும் கூறுகின்றன. புராண காலத்து கிருஷ்ணபத்ரா நதியே தற்போது "தென்பெண்ணை' என்ற பெயரில் ஓடுகிறது. "வெண்ணெய் உருகும் முன்பே பெண்ணை உருகும்' என்ற பழமொழி உண்டு.

ஸ்தல வரலாறு :    மகாபலி என்னும் அரசன் தான தர்மத்தில் சிறந்தவனாக இருந்தாலும் தன்னை விடப் புகழ் பெற்றவர்கள் யாரும் இருந்துவிடக் கூடாது என்பதற்காக அசுர குல குருவான சுக்கிராச்சாரியார் தலைமையில் மாபெரும் யாகம் நடத்தினான். அவனது ஆணவத்தை அடக்கும் பொருட்டு விஷ்ணு வாமன(குள்ள) அவதாரம் எடுத்து யாகம் நடக்கும் இடத்திற்கு வந்து மூன்றடி மண் தானமாக கேட்கிறார். வந்திருப்பது பெருமாள் என்பதை உணர்ந்து சுக்கிராச்சாரியார் மூன்றடி மண் தானம் தர விடாது தடுக்கிறார். ஆனாலும் குருவின் பேச்சை மீறி தானம் தர மகாபலி ஒப்புக் கொள்கிறான். அப்போது மகாவிஷ்ணு விசுவரூபம் எடுத்து தன் பாதத்தின் ஒரு அடியை பூமியிலும், ஒரு அடியை ஆகாயத்திலும் வைத்துவிட்டு மூன்றாவது அடியை எங்கு வைப்பது என்று கேட்கிறார். வந்திருப்பது மகாவிஷ்ணு என்றுணர்ந்த மகா பலி தன் தலையை தாழ்த்தி தன் தலையை தவிர வேறு இடம் என்னிடம் இல்லை என்கிறான். விஷ்ணுவும் விடாது மகாபலியின் தலைமீது தன் பாதத்தை அழுத்தி மூன்றாவது அடியை தாரை வார்த்து தா என்று சொல்ல மகாபலி கெண்டியை எடுத்து தானமாக தர முயல சுக்கராச்சாரியார் வண்டு உருவம் எடுத்து கெண்டியை அடைத்து தண்ணீர் வர விடாமல் தடுக்க விஷ்ணு தர்ப்பை புல்லால் குத்திவிடுகிறார். இதனால் குருடாகி சுக்கிராச்சாரியார் வெளியேறிப் போய் விடுகிறார்.மகாபலி கெண்டியை எடுத்து மூன்றாவது அடியை தானம் செய்து மண்ணில் புதையுண்டு போனான். அவனது ஆணவத்தை இவ்வாறு அடக்கிய பின்பு மகாபலியை விஷ்ணு தன்னோடு சேர்த்து கொண்டார் என்று தலவரலாறு கூறுகிறது.
திவ்ய தேசங்கள் -47

அருள் மிகு அஷ்டபுஜப்பெருமாள் திருக்கோயில்
 
மூலவர்    :     ஆதிகேசவப்பெருமாள்
தாயார்    :     அலமேல்மங்கை, பத்மாஸனி
தீர்த்தம்    :     கஜேந்திர புஷ்கரிணி
பழமை    :     2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்    :     அட்டபுயக்கரம், அஷ்டபுஜம்
ஊர்    :     காஞ்சிபுரம்
மாவட்டம்    :     காஞ்சிபுரம்
மாநிலம்    :     தமிழ்நாடு
பாடியவர்கள் :     திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார்

அட்ட புயக்கரம் எங்ஙனும் நாமிவர் வண்ணமெனில் ஏதுமறிகிலம் ஏந்திழையார் சங்கும் மணமும் நிறைவு மெல்லாம் தம்மனவாயப் புகுந்து தாமும் பொங்கு கருங்கடல் பூவை காயா போதவிழ் நீலம் புனைந்த மேகம் அங்ஙனம் போன்றிவர் ஆர் கொல்லென்ன அட்ட புயகரத் தேனென் றாரே.

விழா : வைகுண்ட ஏகாதசி, ராமநவமி, நவராத்திரி      
             
திறக்கும் நேரம் : காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.    அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள்(அஷ்டபுஜப்பெருமாள்) திருக்கோயில், காஞ்சிபுரம் : 631501 காஞ்சிபுரம் மாவட்டம், போன்:+91-44-2722 5242     

ஸ்தல பெருமை : அஷ்டபுஜ பெருமாள் ஒரு சமயம் பிரம்மா பூமியில் தனக்கு விக்ரக வழிபாடு இல்லை என்பதற்காக சரஸ்வதியை விட்டு விட்டு தனியாக பிரமாண்டமான யாகம் ஒன்றை இப்பகுதியில் நடத்தினார். இதனால் வருந்திய சரஸ்வதி யாகத்தை அழிக்க சரபாஸ்வரன் போன்ற கொடிய அரக்கர்களை அனுப்பி வைத்தாள். தன்னை காக்கும்படி பிரம்மனும் பெருமாளை வேண்ட பெருமாள் 8 திருக்கரங்களுடன் அஷ்டபுஜ பெரு மாளாக தோன்றி அரக்கர்களையும் பின் வந்த காளியையும் அழித்து யாகம் சிறப்பாக நடைபெறச் செய்தார். ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட 108 திருப்பதிகளில் திருமங்கையாழ்வாரும், பேயாழ்வாரும் மங்களாசாஸனம் செய்த 44வது திருப்பதி இந்த அஷ்டபுயகரம். பெருமாள் இங்கு அஷ்டபுஜ பெருமாளாக தோன்றுவதற்கு முன்பே ஆதி கேசவப்பெருமாளாக இத்தலத்தில் அருள் பாலித்து வந்திருக்கிறார் என்றும் மங்களாசாஸனத்திற்கு பின் தான் அஷ்டபுஜ பெருமாள் பிரபலமானார் என்றும் கூறுவார்கள். 108 திருப்பதிகளில் இங்கு மட்டும் தான் பெருமாள் எட்டு திருக்கரங்களுடன் அருள் பாலிக்கிறார். இங்குள்ள தாயாரை தனியாக பாடல் பாடி மங்களாசாஸனம் செய்த சிறப்பு பெற்ற தலம். இந்த பெருமாள் வலது நான்கு திருக்கரங்களில் சக்கரம், கத்தி, புஷ்பம், அம்பு ஆகியவையும் இடது நான்கு திருக்கரங்களில் சங்கு, வில், கேடயம், கதை ஆகியவையும் கொண்டு அருள் பாலிக்கிறார். சாதாரணமாக பெருமாள் கோயில்களில் ராஜகோபுர நுழைவு வாயில் ஒரு திசையிலும் சொர்க்க வாசல் ஒரு திசையிலும் இருக்கும். ஆனால் இங்கு சொர்க்கவாசலும் கோயிலின் நுழைவு வாசலும் வடக்கு நோக்கி இருப்பது கோயிலின் சிறப்பம்சமாகும். பூமாதேவியை அழிக்க வந்த அரக்கனை இத்தல பெருமாள் அழித்து அவளை காப்பாற்றியதால் வீடுகட்ட, நிலம் வாங்க இருப்பவர்கள், விளை நிலங்களை வாங்குபவர்கள், கட்டிய வீடுகளில் பிரச்னை உள்ளவர்கள் இங்கு வழிபட்டு பலனடைகிறார்கள்.      
             
ஸ்தல வரலாறு : முன்னொரு காலத்தில் மகாசந்தன் என்னும் யோகிக்கு இந்த பூவுலக வாழ்க்கையை முடித்து விட்டு இறைவனின் திருவடி சேர விருப்பம் ஏற்பட்டது. இந்திரனுக்கு நிகரான தகுதி பெற்றிருந்த இவர் பெருமாளை நோக்கி நீண்ட காலம் தவமிருந்தார். பயந்து போன இந்திரன் மகாசந்தனின் தவத்தை கலைக்க தேவலோக கன்னிகளை அனுப்பி வைத்தான். இதற்கெல்லாம் யோகி அசையவில்லை. பின் இந்திரன் ஆண்யானை வடிவமெடுத்து முனிவரின் இருப்பிடம் சேர்ந்தான். இதன் அழகில் மயங்கிய முனிவர் தானும் யானை வடிவெடுத்து யானைகளுடன் கூட்டம் கூட்டமாக காடுகளில் திரியும் போது, சாளக்கிராமத்தில் நீராடியது. அப்போது அந்த யானைக்கு தன் யோக வாழ்க்கை ஞாபகத்திற்கு வந்தது. மிகவும் வருந்திய யானை பல திவ்ய தேசங்களுக்கும் சென்று பெருமாளை வழிபட்டு பரிகாரம் தேடியது. மிருகண்டு முனிவர் என்பவர் இதன் நிலை கண்டு வருந்தி காஞ்சிக்கு சென்று வரதராஜப்பெருமாளை வழிபட்டால் உனது பிரார்த்தனை நிறைவேறும் என்றார். அதன்படியே இந்த யானையும் பெருமாளை வழிபட்டு வந்தது. ஒரு முறை கோயிலுக்கு செல்லும் வழியில் அஷ்டபுஜ பெருமாளை தரிசிக்கும் வாய்ப்பு இதற்கு கிடைத்தது. இவரது அழகில் மயங்கிய யானை அருகிலிருந்த குளத்திலிருந்து 14,000 மலர்களை பறித்து கொடுத்து இறைவனுக்கு சேவை செய்து வந்தது. ஒரு நாள் பூ கிடைக்காமல் போகவே பக்கத்திலிருந்த குளத்திற்கு சென்று பூ பறித்தது. அப்போது அதிலிருந்த முதலை யானையின் காலை விடாமல் பிடித்து கொண்டது. பயந்து போன யானை அஷ்டபுஜ பெருமாள் தன்னை காப்பாற்றும் படி "ஆதிமூலமே' என அபயக்குரல் கொடுத்தது. முன்பொரு முறை கஜேந்திரனை காப்பாற்றிய ஆதிமூலம் இந்த முறையும் கருட வாகனத்தில் ஏறி வந்து தனது சக்கரத்தினால் முதலையின் தலையை வெட்டி யானையை காப்பாற்றினார்.
திவ்ய தேசங்கள் -48

அருள்மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோயில்
 
மூலவர்    : விளக்கொளி பெருமாள் (தீபப்பிரகாசர், திவ்யபிரகாசர்)
தாயார்    : மரகதவல்லி
தீர்த்தம்    : சரஸ்வதி தீர்த்தம்
பழமை    : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்    : திருத்தண்கா, தூப்புல்
ஊர்    : தூப்புல்
மாவட்டம்    : காஞ்சிபுரம்
மாநிலம்    :     தமிழ்நாடு
பாடியவர்கள் :    திருமங்கையாழ்வார்
முளைக்கதிரை குறுங்குடியுள் முகிலை மூவா மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற அளப்பரிய ஆரமுதை அரங்கம் மேய அந்தணனை அந்தணர்தம் சிந்தையானை விளக்கொளியை மரகதத்தை திருத்தண்காவில் வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளே.

விழா : வைகாசி மாதம் காஞ்சி வரதராஜப்பெருமாள் இத்தலத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி வேதாந்த தேசிகனுக்கு காட்சி கொடுக்கும் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதத்தில் விளக் கொளி பெருமாள் தேசிகர் சன்னதிக்கு புறப்பட்டு செல்வதும், மார்கழி, சித்ரா பவுர்ணமியில் வரதராஜப்பெருமாள் எழுந்தருளி தேசிகனுக்கு மரியாதை செய்வதையும் காண கண்கோடி வேண்டும்.      
             
திறக்கும் நேரம் : காலை 7.30 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.    அருள் மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோயில், தூப்புல், காஞ்சிபுரம்-631501, போன்:+91- 98944 43108     
            
தகவல் : இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் ஸ்ரீகர விமானம் எனப்படுகிறது. லட்சுமி, ஹயக்கிரீவர், ஆண்டாள், தீபப்பிரகாசர், ஆழ்வார்கள், கருடன், வேதாந்த தேசிகர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அருள் பாலிக்கின்றனர்.     கல்வியில் சிறந்த விளங்கவும், குழந்தை வரம் வேண்டியும் இங்குள்ள இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.     
            
ஸ்தல பெருமை : பெருமாளின் திவ்யதேசங்கள் 108ல் ஒன்று, காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோயில். சரஸ்வதி தேவிக்கு இத்தலத்தில் பெருமாள் காட்சி தந்துள்ளார். தர்ப்பைப்புல் வளர்ந்த பகுதியாக இருந்த காட்டில் திருமால் காட்சி தந்ததால் இப்பகுதி "தூப்புல்' எனவும் "திருத்தண்கா' எனவும் அழைக்கப்படுகிறது. ஆச்சாரியரான "வேதாந்த தேசிகன்' இங்கு அவதாரம் செய்ததால் அவர் "தூப்புல் வேதாந்த தேசிகன்' என அழைக்கப்பட்டார். திருமங்கை யாழ்வாரால் 2 பாசுரங்களில் இத்தலம் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. வேதாந்த தேசிகன் வைணவ ஆச்சாரியரான இவரது தாய் தனக்கு குழந்தை வரம் வேண்டி பெருமாளை வேண்டினார். இவரது வேண்டுதலை ஏற்ற திருப்பதி பெருமாள் தனது கையிலிருக்கும் மணியையே இவருக்கு குழந்தையாக பிறக்கும் படி அருள்பாலித்தார். இதனால் தான் இன்றும் கூட திருப்பதி கோயிலில் பூஜையின் போது மணி அடிப்ப தில்லை என்றும் கூறுவார்கள். 1268ம் ஆண்டு தோன்றிய வேதாந்த தேசிகன் 1369 வரை நூறாண்டுகளுக்கு மேல் வாழ்ந்து கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். பல நூல்களை வட மொழியிலிருந்து மொழி பெயர்த் தார். அத்துடன் காஞ்சி வரதராஜப் பெருமாள் மீது "அடைக்கலப்பத்து' என்ற பாமாலையைப் பாடினார். இவரது புதல்வர் நயின வரதாச்சாரி யார் என்பவர் இந்த பெருமாள் கோயிலை முழுவதுமாக கட்டி முடித்தார் என்றும் கூறுவார்கள். கோயிலுக்குள் தாயார் சன்னதி அருகில் வேதாந்த தேசிகனுக்கு தனி சன்னதி உள்ளது. தேசிகன் வணங்கிய லட்சுமி ஹயக்கிரீவர் விக்ரகம் இன்றும் உள்ளது. சித்திரை ரேவதி நட்சத்திரத்தில் இவருக்கு அவதார உற்சவம் சிறப்பாக நடக்கிறது.

ஸ்தல வரலாறு : படைப்பின் நாயகன் பிரம்மா தனக்கு பூலோகத்தில் கோயில் ஏதும் இல்லை என்ற காரணத்தால் வருத்தப்பட்டு, சிவனை நோக்கி பிரம்மாண்ட யாகம் ஒன்றை நடத்தினார். ஆனால் அந்த யாகத்திற்கு தன் மனைவி சரஸ்வதி தேவியை அழைக்கவில்லை. கோபம் கொண்ட சரஸ்வதி பிரம்மா நடத்தும் யாகம் வெளிச்சம் இல்லாமல் இருண்டு போய் தடைபடலட்டும் என சாபம் இட்டாள். பிரம்மா காக்கும் கடவுள் விஷ்ணுவிடம் தனது யாகம் தடைபடாமல் இருக்க வேண்டினார். விஷ்ணுவும் பிரம்மனின் கோரிக்கையை ஏற்று ஜோதி வடிவில் காட்சி தந்து பிரம்மனின் யாகம் சிறப்பாக நடக்க அருள் புரிந்தார். இதனால் தான் இங்குள்ள பெருமாள் "விளக்கொளி பெருமாள்' என்றும் "தீபப்பிரகாசர்' என்றும் அழைக்கப்படுகிறார். சரஸ்வதியையும் சமாதானம் செய்தார்.