புதன், 19 ஜூன், 2019

அருணந்தி சிவாச்சாரியார்

இவர் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளைப் பரப்பிய பெரியார்களுள் ஒருவர். இவர் சைவ சமயத்தை சேர்ந்தவர்களால், சந்தான குரவர்களுள் ஒருவராக, மெய்கண்ட தேவருக்கு அடுத்த நிலையில் வைத்து மதிக்கப்படுகிறார். இவர் சிவஞான சித்தியார் எனும் புகழ் பெற்ற சைவ சித்தாந்த நூலை இயற்றியவர். சைவ சித்தாந்த நூல்களுள் தலையாயதாகக் கருதப்படும் சிவஞான போதத்தை இயற்றியவரான மெய்கண்ட தேவரை இவர் ஆசிரியராகக் கொண்டார்.

இவர் தமிழ் நாட்டில் திருத்துறையூர் என்னும் ஊரில் ஆதிசைவர் குடும்பத்தில் பிறந்தவர். இவர் இளம் வயதிலே இலக்கண, இலக்கிய நூல்கள் பலவற்றையும் கற்றுத் தேர்ந்ததுடன், சைவ சித்தாந்தக் கோட்பாடுகளில் சிறந்த அறிவு கொண்டவராகவும் தான் அறிந்ததை மற்றவர்களுக்கு உணர்த்தும் திறமை பெற்றவராகவும் இருந்தார்.

மெய்கண்டாரைக் குருவாகக் கொள்ளல்: பல மாணவர்களுக்குக் கல்வி கற்பித்து வந்த இவர் தன்னுடைய மாணவர்களிற் பலர் திருவெண்ணெய் நல்லூரைச் சேர்ந்த மெய்கண்ட தேவர் என்பவரிடம் பாடங் கேட்கச் சென்று விட்டதை அறிந்தார். தனது அறிவில் இறுமாப்புக் கொண்டிருந்த அருணந்தியார், மெய்கண்ட தேவரின் சிறப்புத் தான் என்ன என்பதை அறிய விரும்பித் தனது மாணாக்கர்களையும் அழைத்து கொண்டு திருவெண்ணெய் நல்லுருக்குச் சென்றார். மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாச்சாரியாரிலும் வயதில் இளையவர். எனினும் அருணந்தியார் வந்ததைக் கண்டும் காணாதவர்போல இருந்து, மாணவர்களுக்கு ஆணவ மலத்தைப்பற்றிப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். சினம் கொண்டு அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்த அருணந்தியார் இடையே குறுக்கிட்டு ஆணவம் என்றால் என்ன என்று கேட்டார். அருணந்தியாரின் மனநிலையை உணர்ந்து கொண்ட மெய்கண்டார். அவரை நோக்கி "நீர் நிற்கும் நிலை தான் அது" எனக் கூற அருணந்தியார் தனது தவறை உணர்ந்து மெய்கண்ட தேவரைத் தனது குருவாக ஏற்றுக்கொண்டார்.

நூல்கள்: மெய்கண்டாரின் தலைமை மாணவனாகத் திகழ்ந்த இவர் அவரால் இயற்றப்பட்ட தலை சிறந்த சைவ சித்தாந்த நூலான சிவஞான போதத்தைத் தழுவி, சிவஞான சித்தியார் என்னும் நூலை இயற்றினார். இந் நூலின் சிறப்புக்கு நிலத்திற்கு மேல் தெய்வமில்லை சிவஞான சித்திக்கு மேல் சாத்திரம் இல்லை என்று வழங்கும் பழமொழியே சான்றாகும். சிவஞான சித்தியார் தவிர மெய்கண்ட சாத்திரங்களுள் அடங்கும் இன்னொரு நூலான இருபா இருபஃது என்னும் நூலும் இவர் இயற்றியதே. சந்தான குரவர்களில் மூன்றாமவரான மறை ஞான சம்பந்தர் இவர் மாணாக்கர் ஆவார்.

காலம்: இவர் வாழ்ந்த காலம் பற்றித் தெளிவு இல்லை. து. அ. கோபிநாதராயர் என்பவர் கல்வெட்டு ஒன்றை ஆதாரமாகக் கொண்டு இவருடைய குருவான மெய்கண்ட தேவர் கி.பி. 1232 ஆம் ஆண்டின் வாழ்ந்து கொண்டிருந்தவர் என்ற கருத்தை முன்வைத்தார். எனினும் குறித்த கல்வெட்டிலே கூறப்பட்டுள்ளவர் சந்தான குரவரான மெய்கண்ட தேவர் தானா என்பதில் ஐயப்பாடு உள்ளது.
காஞ்சி மஹா பெரியவா ...

தர்மபுரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரிக்கு அடுத்த ஊர் காவேரிப்பட்டணம். 1944-ம் ஆண்டு மஹா பெரியவா அங்கே முகாமிட்டிருந்தார. ஒரு மாத காலமாக மகான் அங்கே தங்கியிருந்தபோது நித்திய நிகழ்ச்சிகளில் தினந்தோறும், ஊர் பொதுமக்கள், பக்தர்கள், பிரபலங்கள், அரசாங்க அலுவலர்கள் போன்றோர் தவறாமல் பங்கேற்பது உண்டு.

இந்தக் கும்பலில் அஞ்சல் துறை அதிகாரி கோபால கிருஷ்ணனும் ஒருவர். மெத்தப் படித்தவர். காஞ்சி மகான் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். அதனால் காவேரிப்பட்டணத்திஅதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டு இருந்த போது ஓயுவு நேரத்தில் மடத்துக் காரியங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதனால் மகானின் நேர் பார்வையிலும் பலமுறை தென்படக் கூடிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அதுவே பெரிய பாக்கியமல்லவா? தான் அல்லும் பகலும் போற்றும் தெய்வம் தன்னைப் பார்க்கிரார் என்பதே அருள் பெற்றது போலத்தானே?

சில தினங்களில் மகான் வேறு ஊருக்கு தனது முகாமை மாற்றிக் கொண்டார். இது நடந்து பல வருடங்களுக்குப் பின் மகான் வேறு ஓர் இடத்தில் முகாமிட்டிருந்தார. நிறைய பக்தர்கள் வரிசையாக ஆசி பெற்றுச் சென்ற வண்ணம் இருந்தனர். அந்த வரிசையில் நின்றவர்களில் அஞ்சல் அதிகாரி கோபால கிருஷ்ணனும் ஒருவர். ஓவ்வொருவராக நகர்ந்த பின் இவர் முறையும் வந்தது. நமஸ்காரம் செய்த பின் தீர்த்ததுக்காக தன் கையை நீட்டினார்.

தீர்த்தம் கொடுக்கும் முன் மகான் திடீரென நிமிர்ந்து பார்த்தார். ஏதோ கேள்வி கேட்கும் பாவனையில் கண்களைச் சுரிக்கி இவரைப் பார்த்தார். எதையோ ஞாபகத்துக்குக் கொண்டு வருகிறார் என்று நினைத்த அதிகார் “காவேரிப்பட்டணம் போஸ்ட் மாஸ்டர்.." என்று அடி எடுத்துக் கொடுக்க மகான் புன் முறுவலுடன் அவரை கைகளினால் ஆசீர்வதித்து “பரத்வாஜ கோத்திரம்!” என்றார்.

இரண்டே வினாடிகளில் இந்த சந்திப்பு நிகழ்ந்து விட்டது. என்றாலும் அதிகாரிக்கு ஆனந்தம் தாங்கவில்லை.
அவ்வளவு கும்பலிலும் தன்னைக் கை தூக்கி ஆசீர்வதித்து தனது கோத்திரத்தை மறக்காமல் சொன்னார் என்றால் ஒவ்வொரு பக்தனின் சரித்திரத்தையும் அவர் ஞாபகம் வைத்துக் கொண்டு இருக்கிறார் என்றுதானே அர்த்தம்?
பதினைந்து நாட்கள் பூலோகத்தில் தங்கும் முன்னோர்கள்!

வளர் பிறையான சுக்ல பட்சம் தேவதைகள் வழிபாட்டிற்கும் தேய் பிறையான அமரபட்சம் (கிருஷ்ணபட்சம்) முன்னோர்களான பிதுர் வழிபாட்டிற்கும் உகந்தது ஆகும். வருடத்தில் பன்னிரெண்டு கிருஷ்ண பட்சங்கள் வந்தாலும் அதில் பாத்ரபதமாதம் என்னும் புரட்டாசியில் வரும் மகாளயபட்சம் மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. ஒரே குடும்பத்தில் பிறந்து பணியின் காரணமாக பல ஊர்களில் வாழ்ந்தாலும் திருமணம் குலதெய்வ வழிபாடு போன்றவற்றில் எல்லோரும் ஒரே இடத்தில் கூடி நின்று கொண்டாடுவது போல ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முன்னோர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து வந்து தன் வாரிசுகளை நேரில் கண்டு வாழ்த்தும் காலமே மகாளயம் என கருதப்படுகிறது. பிதுர்லோகத்தின் தலைவரான எமதர்மனின் அனுமதியோடு முன்னோர்கள் பூலோகம் வந்து பதினைந்து நாட்கள் தங்குகிறார்கள். இந்த காலகட்டத்தில் மற்ற வழிபாடுகளை குறைத்துக் கொண்டு பிதுர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது.
பூணுல் ஏன் இடது தோளில் அணிகிறோம்? பூணுல் ஏன் மூன்று பிரியாக இருக்கிறது?

இடது தோளில் பூணுல் அணிய வேண்டும் என்பது வேதத்தின் கட்டளை. எப்பொதும் பூணுல் இடது தோளின் இருக்க வேண்டும். இடது தோளின் பூணுல் இருக்கும் போது அதற்கு உபவீதி என்று சிறப்புப் பெயர்.

உபவீதியாக எப்பொதும் இருக்க வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் (ஸதோப வீதினா பாவ்யம்) சொல்கிறது. தேவர்களுக்கு பணி விடை செய்யும் வேளையில் பூணுல் இடதுதோளில் இருக்க வேண்டும். அதாவது உபவீதியாக இருக்க வேண்டும்.

நம் முன்னோர்களை ஆராதிக்கும் போது பூணுல் வலது தோளில் இருக்க வேண்டும். (பிராச்ஸினாவீதி) ரிஷிகளை வழிபடும் வேளையில் இரு தோளிலுமாக தொங்க வேண்டும். அதாவது மாலை போல அணிய வேண்டும். முத்தொழிலின் வெளிப்பாடு முப்பிரி.

மூன்று ஆச்ரமங்களுக்கும் அது தேவை. காலம் மூன்று. மூர்த்திகள் மூன்று. வேதம் மூன்று. பூணுலின் பிரிவுகளும் மூன்று. மூன்று எண்ணிக்கை முற்று பெற்றதாக கூறும். ஏலத்தில் மூன்று முறை அழைப்பார்கள். நீதி மன்றத்திலும் மூன்று முறை அழைப்பார்கள். அது முற்று பெற்றதாக கருதுகிறோம்.

பூணுல் பரமாத்மா வடிவம் (யஞஜாக்ய பரமாத்மாய). பரமாத்மா மூன்று கால்களோடு எழும்பினார் (த்ரீபாத் ஊர்தவ) மூன்று அடி அளந்தவர். அப்போது முற்றுப் பெற்றது. தேவர்கள், ரிஷிகள், முன்னோர்கள் இம்மூவருக்கும் தினமும் பணிவிடை செய்ய வேண்டும். அதற்கு ஆதாரமான பூணுலும் மூன்று பிரியாக இருப்பது பொருந்தும்.

அவன் ஆராதிக்கும் காயத்ரீ மூன்றடிகளோடு விளங்குபவள். அவளை மூன்று வேளையும் வழிபட வேண்டும். அதற்கு காரணமாக பூணுலும் மூன்று பிரியாக வந்தது சிறப்பு.


சனி, 1 ஜூன், 2019

இரண்டாம் நூற்றாண்டு சிவலிங்கம்!

கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான சிவலிங்கத்தை ஆந்திரா மாநிலத்திலுள்ள ரேணிகுண்டாவிற்கு அருகிலுள்ள குடிமல்லம் தலத்தில் தரிசிக்கலாம். 5 அடி உயரம் கொண்ட இச் சிவலிங்கத்திற்கு ஆவுடையார் கிடையாது. பாணத்திலேயே சிவபெருமானின் உருவம் உள்ளது. அதில் கைகளும், காலடியில் ஒரு அரக்கன் மிதிபட்டுக் கிடக்கும் காட்சியையும் காணலாம்.2ம் நூற்றாண்டு சிவலிங்கம்! கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான சிவலிங்கத்தை ஆந்திரா மாநிலத்திலுள்ள ரேணிகுண்டாவிற்கு அருகிலுள்ள குடிமல்லம் தலத்தில் தரிசிக்கலாம். 5 அடி உயரம் கொண்ட இச் சிவலிங்கத்திற்கு ஆவுடையார் கிடையாது. பாணத்திலேயே சிவபெருமானின் உருவம் உள்ளது. அதில் கைகளும், காலடியில் ஒரு அரக்கன் மிதிபட்டுக் கிடக்கும் காட்சியையும் காணலாம்.நூற்றாண்டு சிவலிங்கம்!


புதன், 1 மே, 2019

வரும் 17.07.2019 அன்று  தண்ணிருக்கு அடியில் இருக்கும் அத்தி வரதர் சேவை சாதிக்க உள்ளார்.
 தண்ணிருக்கு அடியில் இருக்கும் அத்தி வரதர்   வரலாறு இதற்கு முன்னர் 1939 ஆண்டு சேவை சாதித்தார், 1979 ஆண்டு சேவை சாதித்தார். அடுத்த வரும் 17.07.2019 அன்று அத்தி வரதர் சேவை சாதிக்க உள்ளார்.
ஓம் நமோ நாராயணாய

கோவிலின் நூற்றுக்கால் மண்டபத்தின் வடக்கே உள்ள இரண்டு குளங்களில் தென்திசையில் உள்ள நீராழி மண்டபத்தின்  கீழே நீருக்கு அடியில் உள்ள ஒரு மண்டபத்தில் தன்னை மறைத்துக்கொண்டு இருக்கிறார் அத்தி வரத பெருமாள்.

இந்த குளத்தின் நீர் என்றும் வற்றுவ தில்லை அதனால் பெருமாள் யார் கண்ணுக்கும் புலப்பட மாட்டார்.  அத்தி வரத பெருமாளின் தாருமயமான திருமேனி  மரத்தினால்  செய்யப்பட்டது. மிகப்பெரிய அத்தி மரத்தால் வடித்து , பிரம்ம தேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.


பிரம்மனின் யாகத் தீயினின்று தோன்றியதால் சிறிது பின்னப்பட்டுவிட்டார். எனவே அசரீரி மூலம் தன்னை ஆனந்தத் தீர்த்தத்தில் விட்டுவிட்டு பழைய சீவரத்திலிருந்து சிலையை காஞ்சியில் பிரதிஷ்டை செய்யுமாறு கூறினார். பெருமாள் பெரும் உஷ்ணத்தைத் தணிக்கவே தெப்பக் குளத்தில் வாசம் செய்கிறாராம்.

அத்தி வரதரை வெள்ளித் தகடு பதித்த பெட்டியில் சயனக் கோலத்தில் வைத்து ஆனந்த புஷ்கரணி மண்டபத்தின் நடுவே நீரில் வைத்து விட்டனர். பழைய சீவர பெருமாளை தேவராஜப் பெருமாள் என பிரதிஷ்டை செய்து விட்டனர்.

ஆனந்த தீர்த்தம் என்றும் வற்றாது. எனவே நீரை இறைத்து விட்டு ஆதி அத்தி வரதரை வெளியே கொண்டு வருவார்கள். வெள்ளி தகடுகள் பதித்த பெட்டியில் சயன கோலமாக, அமிர்தசரஸ் என்னும் அந்த குளத்தில் மூழ்கியிருக்கும் பெருமாள், 40 வருடங்களுக்கு ஒரு முறை, மேலே வந்து, சயன மற்றும் நின்ற கோலமாக எழுந்தருளி இருப்பார்.

அத்தி வரதர் வசந்த மண்டபத்தில் 48 நாட்கள் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்…
நின்ற கோலத்திலும், கோலத்திலும் தரிசனம் தந்தபின் மீண்டும் அனந்தத் தீர்த்தத்தில் சயனித்து விடுவார். பக்தர்கள் மிகவும் தொன்மையான இந்த அத்தி வரதரை, உற்சவ விழா வழிபாட்டோடு தரிசிக்கலாம். மீண்டும் வெள்ளி தகடுகள் பதித்த பெட்டியில் வைத்து குளத்தில் மூழ்கடிக்கப் பட்டுவிடுவார்.

இதற்கு முன்னர் 1939 ஆண்டு சேவை சாதித்தார், 1979 ஆண்டு சேவை சாதித்தார். அடுத்த வரும் 17.07.2019 அன்று அத்தி வரதர் சேவை சாதிக்க உள்ளார்.

ஓம் நமோ நாராயணாய🙏🙏
பெரியவா துறவறம் பூண்டு பீடாதிபதியான சம்பவம்



சொப்பனத்துல ஒரு யானை வந்து எனக்கு மாலை போட்டதை சொன்னேன். பெரிய சக்ரவர்த்திகளுக்குத்தானே யானை மாலை போடும்’னு பெருமையா சொன்னே. என்னைச் சுவாமி அறைல நிக்கவைச்சு சுற்றிப்போட்டே. நான் பெரிய சக்கரவர்த்தியா ஆகப் போறேன்னு சொல்லித் திருஷ்டிக் கழிச்சே மறந்துட்டியாம்மா? (பூர்வாசிரம பெரியவா) ஸ்வாமிநாதன்.

மஹா பெரியவா சுவாமிநாதனாகப் பிறந்து பாலகனாக வளர்ந்து துறவறம் பூண்டு பீடாதிபதியாக வேண்டும் என்ற நிகழ்வு. இறைவன் ஏட்டில் எழுதி வைத்தது வரி மாறாமல் நிகழ்ந்திருக்கிறது!

1907-ம் வருடம் பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் 66வது பீடாதிபதி வைசூரிகண்டு ஸித்தியடைந்ததும் அதற்கு முன்னால் லட்சுமி காந்தனை 67-வது மடாதிபதியாகப் பீடத்தில் அமர்த்தியதும், பீடம் ஏறிய இளைய சுவாமிகளும் எட்டாம் நாளே தன் பூத உடலைத் துறந்து விட்டதும் விதிக்கப்பட்ட வகையில் நடந்தேறியவை என்றே கருத வேண்டும். அந்த எட்டு பத்து நாள்களும் கலவையில் மடத்தின் சிப்பந்திகளும் பக்தர்களும் சந்தித்திருக்கக்கூடிய உணர்ச்சிமயமான அனுபவங்களையும் நிகழ்வுகளையும் கற்பனை செய்து பார்க்கும்போது நெஞ்சம் கனக்கிறது. இளைய சுவாமிகளின் விருப்பத்தின் படி சுவாமிநாதன் பீடாதிபதி ஆன போது அன்னை மஹாலட்சுமியின் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்தும் பார்க்க இயலவில்லை.

சுவாமிநாதனைப் பத்து மாதம் சுமந்து பொன்மேனியனாக வளர்த்து உலகுக்காகத் தாரைவார்த்துக் கொடுத்து விட்டு சற்றுத் தொலைவில் நின்றபடி அவரைப் பார்த்துக்கொண்டிருந்து விட்டு பிறகு விடைபெற்ற கணத்தில் அவளின் கண்கள் கலங்கியிருக்கும். தனியாக பஸ் ஏறி தனது ஊர் நோக்கிப் பயணித்த போது அவளது இதயம் படபடத்திருக்கும்.

முதலில் சுவாமிநாதனால் அம்மாவைச் சமாதானப்படுத்த முடியவில்லை.

“அம்மா… ஏன் கண் கலங்கறே?”

“உன்னைப் பிரிஞ்சு நான் எப்படிடா இருப்பேன்? சதா என் காலைச் சுத்திச் சுத்தி வருவியே… நீ எதுவும் கேட்கமாட்டே... ஆனால் உன் வாய் ருசிக்கு ஏத்த மாதிரி சமைச்சுப் போடுவேனே… இனிமே அதெல்லாம் முடியாதே சுவாமிநாதா...”

“அம்மா… நீ மறந்துட்டியா?”

“எதை?”

“கொஞ்ச நாள் முன்னாடி எனக்கு ஒரு சொப்பனம் வந்ததை உன்கிட்டே சொன்னேனே… அந்தச் சொப்பனத்துல ஒரு யானை வந்து எனக்கு மாலை போட்டதையும் சொன்னேன். ‘பெரிய சக்ரவர்த்திகளுக்குத்தானே யானை மாலை போடும்’னு நீ பெருமையா சொன்னே. என்னைச் சுவாமி அறைல நிக்கவைச்சு சுற்றிப்போட்டே. நான் பெரிய சக்கரவர்த்தியா ஆகப் போறேன்னு சொல்லித் திருஷ்டிக் கழிச்சே… மறந்துட்டியாம்மா?” மகனைப் பார்த்தபடியே மெளனமாக நின்றாள் தாய்.

“இப்போ மடத்துக்கு நான் பொறுப்பேற்கறது தான் அந்த ராஜ யோகம்னு நினைச்சுக்கோயேன்…” என்று மகன் சமாதானம் சொன்னவிதமும் மஹா லட்சுமிக்கு ரசிக்கும் படியாகவே இருந்தது! ஆனால் வீடு திரும்பிய பிறகும் மகனை நினைத்துப் புலம்பிய படியே இருந்தாள் மஹா லட்சுமி. எந்த வேலையும் அவளுக்கு ஓடவில்லை. வீட்டில் சுவாமிநாதன் குறுக்கும்நெடுக்குமாக ஓடிக்கொண்டிருப்பது மாதிரியான பிரமை அவளுக்கு. இரவு நித்திரையின்றி தவித்தாள். மஹா லட்சுமியை அமைதிப்படுத்தும் விதமாக ஆதிசங்கரரின் பால்ய நாள்களை நினைவூட்டினார் கணவர் சுப்ரமணிய சாஸ்திரிகள்.

சங்கரருக்கு அப்போது எட்டு வயது. ஒரு முறை யோகிகள் சிலர் அவருடைய வீட்டுக்கு வந்தனர். வந்தவர்கள் தாய் ஆர்யாம்பாவிடம் சங்கரர் அவதரித்துள்ள சூழ்நிலையையும் காலநிலையையும் விளக்கிச் சொன்னார்கள். அம்மா! உண்மையான தெய்வ சங்கல்பத்துக்கேற்ப இந்தக் குழந்தை எட்டு ஆண்டுகள் தான் இந்த மண்ணுலகில் வாழ வேண்டும். இருப்பினும் அந்த வயது இரு மடங்காகப் பெருகும்’ என்று ஆசி கூறிச் சென்றனர். என்ன தான் இறை விருப்பம் என்றாலும் தன் மகனுக்குக் குறுகிய ஆயுள் தான் என்பதை அறிந்த ஆர்யாம்பா மிகவும் துயருற்றாள். அவளுக்குச் சமாதானம் சொன்னார் மகன்.

அம்மா! அறியாமையுடன் கூடிய இந்த வாழ்க்கை வெறும் தோற்றம் தானே தவிர நிஜமானது அல்ல. தாய், தந்தை, மகன், அண்ணன், தம்பி போன்ற பலவகையான உறவுகளுடன் ஆத்மாக்கள் ஒன்று சேர்வது பயணம் செய்கிறவர்கள் உறவு கொள்வதைப் போன்றது தான்… என்று அன்னைக்கு எடுத்துரைத்தார். மகனிடத்தில் ஒரு துறவிக்கான இயல்புகள் தென்படுவதைக் கண்டறிந்தாள் ஆர்யாம்பா. சங்கரரைத் துறவியாகத் திரியவிட அவளுக்கு விருப்பமில்லை. சராசரி தாயாரைப் போல் மகனுக்கு விரைவில் திருமணம் செய்துவைக்கும் ஏற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கினாள்.

ஆனால் சங்கரரின் எண்ணமும் விருப்பமும் வேறாக இருந்தன. வாழ்க்கையில் பெரியதாக ஒன்றைச் சாதிக்கும் லட்சியத்துடன் அவதரித்தவர் அவர். தான் பெற்ற பூரணமான அனுபவத்தை உலகம் முழுவதற்கும் வழங்கி ஆனந்தமயமான அருமையான சாந்தி நிறைந்த இன்ப வாழ்வுக்கு மனித குலம் முழுவதையும் அழைத்துச் செல்ல ஆயத்தமானார்.

இளம் பருவத்திலேயே குடும்ப வாழ்க்கையைத் துறக்க விரும்பினார் சங்கரர். தாய்க்கோ மகனை இழக்கச் சம்மதமில்லை. அவளை மனம் மாறவைக்கும் விதமாக ஒரு தெய்விக அற்புதம் நிகழ்ந்தது... கணவர் விவரித்து கொண்டிருப்பது தனக்குத் தெரிந்த வரலாறு தான் என்றாலும் சுப்ரமணிய சாஸ்திரிகள் சொல்வதை உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தாள் மஹா லட்சுமி. நான் ஒரு தாயாருக்கு மட்டும் குழந்தை இல்லை. இந்த ஒட்டு மொத்த உலகுக்கும் குழந்தை. உலகம் பூராவுக்கும் செய்ய வேண்டியதை ஒரு தாயாரை முன்னிட்டு எத்தனை காலம் ஒத்திப் போட்டுக் கொண்டே போவது? கெட்டுப் போய்விட்ட லோகத்தை சீர்படுத்துவதற்கு வந்துவிட்டு அந்தக் காரியத்தில் ஈடுபடாமல் இருந்தால் எப்படி? என்றெல்லாம் சங்கரர் யோசித்திருக்க வேண்டும்... திருக்கதையைச் சற்று நிறுத்திவிட்டு மஹா லட்சுமி என்று அழைத்தார் சுப்ரமணிய சாஸ்திரி.

“சொல்லுங்கோன்னா...”

ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ… ஈஸ்வர லீலை அவதாரம்னு வரும் போது நம்ம மூளைக்கு எட்டாத பல விஷயங்கள் நடக்கறது சகஜம். இப்ப ராமர் கதையையே எடுத்துக்கோயேன்… தசரதரின் புத்ரகாமேஷ்டி யாகத்தின் பலனாக அவருக்கு மகனாகப் பிறந்தவர் ராமன். கொஞ்ச காலம் அப்பாவுக்குப் பிள்ளையா வளர்ந்தார். அப்புறம் அவதார காரியம் அழைப்பு விடுக்க தந்தை அழுது அழுது உயிரை விட்டாலும் வனவாசத்துக்குப் புறப்பட்டு விட்டார். சங்கரர் விஷயத்துல அதுவே வேற மாதிரி நடந்திருக்கு… என்றபடி சுப்ரமணிய சாஸ்திரி சங்கரரின் திருக்கதையைத் தொடர மஹா லட்சுமி ஆர்வமானாள்…

ஒரு பிள்ளை தாயாரின் அனுமதி இல்லாமல் சந்நியாசியாகக் கூடாது. அதன் படியே சங்கரரும் தாயாரின் அனுமதியுடனேயே துறவு மேற்கொள்வது என்று தீர்மானித்தார். தக்க தருணம் வருமென்று காத்திருந்தார். வீட்டுக்கு மிக அருகில் வந்து விட்ட பூர்ணா நதியில் ஒரு நாள் ஸ்நானம் பண்ண இறங்கினார் சங்கரர். அப்போது அவர் காலை ஒரு முதலை பிடித்துக்கொண்டது. பிடித்து ஆழத்துக்கு இழுக்கவும் தொடங்கியது. அம்மா… அம்மா…’ சங்கரரின் குரல் எட்டு திக்குகளிலும் ஒலித்து எதிரொலித்தது. கன்றின் குரல் கேட்டுப் பதறியடித்து ஓடோடி வந்தது தாய்ப்பசு. கணவரோ காலமாகி விட்டார். இப்போது மகனும் மரணத்தின் காலடியில் செய்வதறியாமல் திகைத்தாள் ஆர்யாம்பா.

ஆனால் சங்கரருக்கோ தான் காத்திருந்த நேரம் இப்போது வந்து விட்டது என்று தோன்றியது. அம்மா! முதலையின் வாயிலிருந்து நான் தப்பிப்பது என்பது நடக்காத காரியம். இது சராசரியான இறப்பில்லை. துர்மரணம். உனக்கும் புத்ர கர்மாவினால் ஏற்படும் நற்கதி கிடைக்காமல் போய் விடும். இந்த ஆபத்திலிருந்து மீண்டு வர எனக்கு ஒரே ஒரு வழிதான் தோன்றுகிறது. உனக்குச் சம்மதம் என்றால் சொல். அதன் படியே செய்கிறேன்’ என்றார் சங்கரர்.

என்னப்பா சொல்றே? குரல் நடுங்கக் கேட்டாள் தாய்.

அம்மா… இப்போது நான் சந்நியாஸாச்ரமம் வாங்கிக் கொண்டால் எனக்கு வேறு ஒரு புது ஜன்மம் வந்து விட்டது போலாகி விடும். அதன் மூலம் முன் ஜன்மத்தின் கர்மவினையால் ஏற்பட்ட மரணமும் விலகி விடலாம். காலை இழுக்கும் முதலையும் என்னை விட்டு விடலாம். ஒருவன் சந்நியாசியானால் அவனுக்கு முந்தைய இருபத்தியொரு தலைமுறையினருக்கு நற்கதி கிடைக்கும். அதனால் உனக்கும் அப்படி ஸித்திக்கும்… பேச்சற்று நின்றாள் ஆர்யாம்பா. அவளுக்கு நெஞ்சம் படபடத்தது.

அம்மா… நீரில் நின்று கொண்டு தான் துறவற தீட்சை மேற்கொள்வதற்கான மந்திரத்தைச் சொல்லி மனதினால் எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டும். தற்செயலாக நான் நீரின் நடுவிலேயே இருக்கிறேன்... அதனால் தான் சந்நியாசம் வாங்கிக்கொள்ள இது தான் தக்க தருணமென்று கருதுகிறேன். இருப்பினும் உன் அனுமதியில்லாமல் சந்நியாசம் வாங்கிக்கொள்ள எனக்கு உரிமையில்லை. அதனால் நீதான் இப்போது ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று சங்கரர் தீர்மானமாகச் சொல்லவும் குழம்பினாள் ஆர்யாம்பா.

தன்னுடன் வாசம் செய்யா விட்டாலும் மகன் எங்கேயாவது துறவியாக இருக்கட்டும். ஆயுசோடு இருந்தால் எப்போதாவது அவனைப் பார்க்கலாம். அப்படிப் பார்க்க முடியா விட்டாலும் குழந்தை எங்கேயாவது சௌக்கியமாக இருந்து கொண்டிருந்தால் போதும் என்று நினைத்தாள். இருப்பினும் சந்நியாசம் வாங்கிக்கோ என்று ஒரு தாயாரால் சர்வ சாதாரணமாக சொல்லி விட முடியாதே!

சங்கரா! உனக்கு எப்படி தோன்றுகிறதோ உனக்கு எது சரியென்று படுகிறதோ அப்படியே செய்துகொள்… என்றாள். இப்படி சங்கரர் துறவியான வரலாற்றைக் கணவர் சொல்லி முடிக்க மஹா லட்சுமியின் மனம் லேசானது. முன்ஜன்ம புண்ணியத்தால் தான் ஈன்றெடுத்த மகன் சுவாமிநாதன் ஒரு புனிதப் பணிக்காக அழைக்கப்பட்டிருப்பதை நினைத்துப் பூரித்துப்போனாள்.

சந்திரசேகரா… என்று உணர்ச்சி மிகுதியால் முணு முணுத்தாள் மஹா லட்சுமி.

செவ்வாய், 30 ஏப்ரல், 2019

தெய்வங்களை பீடத்தில் அசையாமல் நிறுத்தும் அஷ்ட பந்தன மருந்தி'ல் என்னென்ன சேர்ப்பார்கள்?




அஷ்டபந்தன கலவை தயாரிப்பதற்குக் கொம்பரக்கு, சுக்கான் தூள், குங்கிலியம், கற்காவி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன்மெழுகு, எருமை வெண்ணெய் ஆகிய எட்டு பொருள்கள் தேவை.

கோயில் எழுப்புவதற்கான இடத்தைத் தேர்வு செய்வதிலிருந்து ஆலயம் எப்படி அமைய வேண்டும் என்பது வரை பல ஆகம விதிமுறைகள் இருக்கின்றன. கோயிலைக் கட்டி முடித்த பிறகு, தெய்வ மூர்த்தங்களைப் பிரதிஷ்டை செய்வார்கள். ஒரு பீடத்தின்மீது தெய்வ மூர்த்தத்தை வைத்து, பீடத்திலிருந்து அகலாமல் இருப்பதற்காக, அஷ்ட பந்தன மருந்து' சாத்துவார்கள். இந்த அஷ்ட பந்தன மருந்து, தெய்வ மூர்த்தத்தைப் பீடத்துடன் அழுந்தப் பிடித்துக்கொள்ளும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தெய்வ மூர்த்தங்களுக்கு அஷ்டபந்தனம் சாத்த வேண்டும் என்பது ஆகம நியதி.

அஷ்டபந்தனம் என்றால் என்ன?’’

''கோயில்களில் அஷ்டபந்தன மருந்தை 12 வருடங்களுக்கு மாற்ற வேண்டும் என்பது ஆகம நியதி. அதன்படி அனைத்து ஆலயங்களிலும் 12 வருடங்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் செய்ய வேண்டும்.

உலக உயிர்களெல்லாம் நலமாக இருக்க வேண்டுமென்றால், மூல தெய்வ மூர்த்தம், தனது ஆதார பீடத்தில் ஆடாமல் அசையாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் உலகத்துக்கும் உலகில் வாழும் மக்களுக்கும் சிறப்பு. மூலவ மூர்த்தி தொடங்கி, எல்லா தெய்வங்களின் திருமேனிகளும் பீடத்திலிருந்து அசையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த அஷ்டபந்தன மூலிகை மருந்தைச் சாத்துகிறார்கள்.

அஷ்டபந்தனம் தயாரிப்பதற்காகவே தமிழில் ஒரு வெண்பா பாடப்பட்டுள்ளது.

'கொம்பரக்குச் சுக்கான்தூள் குங்கிலியம் கற்காவி

செம்பஞ்சு சாதிலிங்கம் தேன்மெழுகு - தம்பழுது

நீக்கி எருமைவெண் ணெய்கட்டி நன்கிடித்து

ஆக்கல் அட்டபந்தனம் ஆம்'

இந்த மூலிகை மருந்து பல நாள்களானாலும் கெடாத வகையில் தயாரிக்கப்படும். அஷ்டபந்தன கலவை தயாரிப்பதற்குக் கொம்பரக்கு, சுக்கான் தூள், குங்கிலியம், கற்காவி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன்மெழுகு, எருமை வெண்ணெய் ஆகிய எட்டு பொருள்கள் தேவை.

இந்த எட்டுப் பொருள்களைச் சேர்த்து, உரலில் இட்டு இடிக்க வேண்டும். கொம்பரக்கு தொடங்கி ஒவ்வொரு பொருளாக உரலில் இட்டு இடிக்க வேண்டும். இடிக்கும்போது எருமை வெண்ணெய்யை சிறிது சிறிதாகச் சேர்த்து இடிக்க வேண்டும். அஷ்டபந்தன மருந்து கெட்டியாக கல்லு போலவும் இருக்கக் கூடாது. குழைவாகவும் இருக்கக் கூடாது. இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு பதமான நிலையில் இருக்க வேண்டும். இப்படி இருந்தால்தான் ஆதாரப்பீடத்தில் இருக்கும் இறைவனின் திருமேனியை நிலைநிறுத்த வசதியாக இருக்கும்.

இந்த மூலிகை மருந்துகளைக் கலந்து இடிப்பதற்கான பாத்திரங்கள், உரல், உலக்கை ஆகியவை மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும். இந்தப் பொருள்களை எந்தெந்த அளவு சேர்க்க வேண்டும், எவ்வளவு நேரம் இடிக்க வேண்டும் என்பதற்குக் கால அளவுகள் உண்டு. அஷ்டபந்தனம் தயாரிப்பவர்களின் வாக்கு, மனம், செயல் இவையாவும் இறைச் சிந்தனையிலேயே நிலைத்திருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.

இந்த மருந்தை 100 ஆண்டுகள் வரை கெடாதவாறு தயாரிக்க முடியும். ஆனாலும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிதாகத் தயாரித்து, தெய்வ மூர்த்தங்களுக்கும் பீடத்துக்கும் இடையில் சாத்தி, கும்பாபிஷேகம் செய்வதென்பது நடைமுறையில் இப்போது வழக்கமாகியுள்ளது.

வெள்ளி, 26 ஏப்ரல், 2019

பிராயச்சித்தம்
______________

அன்று சித்திரா பவுர்ணமி. திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலில் ருத்ரஅபிஷேகம். பதினொரு ரிக்விதுக்களோடு ருத்ராபிஷேகம் ஜபம் காலை 8 முதல் பிற்பகல் 2 வரை பிரமாதமாக ஏற்பாடு செய்தவர் மிராசுதார் நாராயணசுவாமி அய்யர். பெரியவா பக்தர். மறுநாள் ருத்ர பிரசாதத்தோடு காஞ்சியில் பெரியவாளுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணி நின்றார். புருவத்தை உயர்த்தி
பெரியவா "என்ன விஷயம்?"என்றார். மிராசுதார் பவ்யமாக தேங்கா, பழம், வில்வம் இலை, விபுதி குங்குமம், சந்தனம் எல்லாம் தட்டில் வைத்தார்.

"எந்த கோயில் பிரசாதம்?"

"திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில்லே மகாருத்ரம் ஜபம் அபிஷேகம் ஏற்பாடு பண்ணினேன். அந்த பிரசாதம்."

பெரியவா தட்டை பார்த்தா.. "நாராயணசாமி நீ பணக்காரன். தனியாவே பண்ணினியா யாரோடையாவது சேர்ந்தா?"

"இல்லை பெரியவா. நானே தான் பண்ணினேன்!" ("நானே" கொஞ்சம் அழுத்தமாகவே இருந்தது)

"லோக க்ஷேமத்துக்கு தானே?"

"அப்படின்னு இல்லை. ரெண்டு மூணு வர்ஷமாகவே வயல்லே சரியா அறுவடை இல்லே. வெள்ளாமை போரவில்லை. கவலையோட முத்து ஜோசியரை கேட்டதில் சித்ரா பவுர்ணமியிலே ருத்ர அபிஷேகம் பண்ணு என்று சொன்னார். நல்ல விளைச்சல் வரணும் என்று வேண்டிக்கொண்டு செய்தேன். பெரியவாளுக்கு அபிஷேக பிரசாதம்
கொடுத்துட்டு பெரியவா அனுக்ரகதுக்கும் ...." நாராயணசாமி மென்று விழுங்கிக்கொண்டே நிறுத்தினார்.”

" ஒ! அப்படின்னா நீ ஆத்மார்த்தமாகவோ லோகக்ஷேமதுக்காகவோ பண்ணலை. - பெரியவா கண்ணை மூடிக்கொண்டார். கால் மணிநேரம் நழுவியது. பிரசாதம் தொடப்படவில்லை.

"எத்தனை ரித்விக்குகள் வந்ததா சொன்னே? "

"பதினொன்னு பெரியவா"

"யாராரு, எங்கேருந்தேல்லாம் வந்தா?" –

பெரியவாளுக்கும் மிராசுதாருக்கும் நடக்கும் சம்பாஷணையை அருகில் நின்றுகொண்டிருந்த அனைத்து பக்தர்களும் சிலையாக நின்று கவனித்தனர்.

தன்னுடைய பையிலிருந்து ஒரு நோட்டுப்பு புத்தகம் எடுத்து மிராசுதார் படித்தார் "திருவிடைமருதூர் வெங்கிட்டு சாஸ்திரிகள்,  ஸ்ரீனிவாச கனபாடிகள், ராஜகோபால ஸ்ரௌதிகள்......" பெரியவா இடைமறித்து:

"ஒ! எல்லோருமே பெரிய வேத விற்பன்னர்கள ஆச்சே... உன் லிஸ்ட்லே தேப்பெருமாநல்லூர் வெங்கடேச கனபாடிகள் பேர் இருக்கா பாரு?""

மிராச்தார் சந்தோஷத்தோடு " இருக்கு இருக்கு பெரியவா நேத்திக்கு அவரும் வந்தார்.

"பேஷ் பேஷ் வெங்கடேச கனபாடிகள் ரொம்ப படிச்சவா. வேதத்திலே அதாரிட்டி. வயசு அதிகமிருக்குமே இப்போ. கஷ்டப்பட்டுண்டு தான் ருத்ர ஜபம் சொல்லமுடியறதாமே"

துப்பாக்கியில் இருந்து குண்டு புறப்படும் வேகத்தில் மிராசுதார் பதிலளித்தார் :” " ரொம்ப சரியா சொன்னேள் பெரியவா: அவராலே மந்திரமே சொல்ல
முடியலே அவராலே மொத்தத்தில் சொல்லவேண்டிய ருத்ர ஜபம் அளவு கொஞ்சம் குறைஞ்சிருக்கும் என்று எனக்கு வருத்தம். ஏன் அவரை கூப்பிட்டோம் என்று
தோணித்து""

" உன்கிட்ட பணம் இருக்குங்கிறதுக்காக எதை வேணுமானாலும் சொல்லாதே.
தேப்பெருமாநல்லூர் வெங்கடேச கனபாடிகள் பத்தி அவருடைய வேத சாஸ்திர அனுபவம் பத்தி உனக்கு தெரியுமா ? அவர் கால் தூசு சமானம் ஆவியா நீ?? பெரியவா கண்மூடிக்கொண்டது : " நேத்திக்கு என்ன நடந்தது என்று எனக்கு புரியறது. நான் கேக்கறதுக்கு மட்டும் பதில் சொல்லு? கனபாடிகள் கண்ணை மூடிக்கொண்டு மனசாலே ஜபம் பண்ணிண்டிருக்கும்போது " வாங்கின பணத்துக்கு மந்திரம் சொல்லாமே ஏன் வாய் மூடிண்டிருக்கேள் என்று அவரிடம் போய் கேட்டாயா?" அங்கிருந்த
அனைவரும் வெல வெலத்து நடுங்கிக்கொண்டு இதையெல்லாம் கேட்டுகொண்டிருக்க மிராசுதார் தொப்பென்று கீழே விழுந்து கையால் வாய் மூடி, கண்களில்பிரவாகத்தோடு "தப்பு பண்ணிட்டேன் பெரியவா மன்னிச்சுடுங்கோ. நடந்ததை
தத்ரூபமாக சொல்றேள் "

"அது மட்டும் இல்லையே. எல்லா ரித்விக்குகளுக்கும் தட்சணை எவ்வளவு கொடுத்தே?

"எலெக்ட்ரிக் ஷாக் வாங்கியவன் போல தட்டு தடுமாறிக்கொண்டு நாராயணசுவாமி " தலா பத்து ரூபா கொடுத்தேன்"

“தெரியும். எல்லாருக்குமேவா? " மென்று
முழுங்கிக்கொண்டு விதிர் விதிர்த்துப்போய் நடுங்கிகொண்டிருந்த மிராச்தாரிடம் பெரியவா "எங்கிட்ட சொல்ல அவமானமா இருக்கோ. நானே சொல்றேன் எல்லாருக்கும் பத்து பத்து ரூபா கொடுதுண்டேவந்து கனபாடிகள் கிட்ட வந்து சம்பாவனை ஏழு ரூபா மட்டும் தான் கொடுத்தே. குறைச்சு மந்திரம் சொன்னதாக நினைச்சு ஏழு ரூபா கனபாடிகளுக்கு தகுந்த நியாயமான சம்பாவனையா குடுததில் உனக்கு சந்தோஷம். கனபாடிகள் ஒன்னும் சொல்லாமே சந்தோஷத்தோடு அதை
வாங்கிண்டா அப்படி தானே ??" நாராயணசாமி அய்யர் ஈட்டி பாய்ந்ததுபோல்துடித்தார்.

"பெரியவா நான் திருந்திட்டேன். என்னை மன்னிக்கணும்" என்று வாய் புலம்பிக்கொண்டே இருந்தது. மடத்துலே இருந்த எல்லா பக்தர்களுக்கும்
அதிர்ச்சி. பெரியவாளுக்கு இருக்கும் தீர்க்க தரிசனம் பிரமிக்க வைத்தது.

பெரியவா வீசிய மற்றொரு பிரம்மாஸ்திரம் அனைவரையும் தாக்கியது: கட்டி போட்டது.

"அதோடு போச்சுன்னா பரவாயில்லையே. ராமச்சந்திர அய்யர் வீட்டில் அனைவருக்கும் போஜனம் நடந்ததே. நீ தானே சக்கரைபொங்கல் பரிமாறினே. நெய், திராட்சை, முந்திரி எல்லாம் கமகமக்க அம்ருதமாயிருக்குன்னு எல்லாரும்
திருப்தியா சாப்பிடனும்னு பாரபட்சம் இல்லாம போட்டியா."

நாராயணசாமி நடுங்கினார் துடித்தார். பதில் வரவில்லை மஹா பெரியவாளே தொடர்ந்தார்

"நானே சொல்றேன். நன்னா இருக்கும் இன்னும் கொஞ்சம் என்று கேட்டவாளுக்கெல்லாம் மேலே மேலே பரிமாறினே. கனபாடிகள் இன்னும் கொஞ்சம் போடுங்கோ என்று நாலு அஞ்சு தடவை கேட்டும் கூட அவர் இலைக்கு மட்டும் போடலை. காதிலே விழாதது மாதிரி நகந்துட்டே. சரியா? இது பந்தி தர்மமா? அவர் மனசு நோகடிச்சு சந்தோஷபட்டே"". இதை சொல்லும்போது பெரியவாளுக்கு ரொம்ப துக்கம் மேலிட்டது. நா தழுதழுத்தது. நாராயணசாமி கூனி குறுகி தலை குனிந்து கை கட்டி மண்டியிட்டு கண்களில் கங்கை வடித்தார்.

அமைதி பதினைந்து நிமிடம். பெரியவா கண்மூடி மெதுவாக திறந்தார். " தேப்பெருமாநல்லூர் வெங்கடேச கனபாடிகள் பதினாறு வயசிலேருந்து ருத்ர ஜபம் சொல்பவர். இப்போ எண்பதொன்று வயதிலும் அவர் ருத்ர ஜபம் சொல்லாத கோவில் தமிழ்நாட்டில் இல்லை. அவர் நாடி நரம்பு மூச்செல்லாம் பரமேஸ்வரன். ரத்தம் பூரா ருத்ர ஜபம். ஓடறது. அவர் சிவ ஸ்வரூபம். மகா புருஷன். அவருக்கு நீ பண்ணினது மஹா பாவம்." மஹா பெரியவாள் மேலே பேச முடியாமல் நிறுத்தினார்.

“ நீ பண்ணின அவமானத்துக்கு அப்புறம் என்ன பண்ணினார் அவர் என்று உனக்கு தெரியுமா.? வீட்டுக்கே திரும்பலை. நேரா திருவிடைமருதூர் கோவில்லே மூணு பிரதக்ஷணம் பண்ணிட்டு மகாலிங்கம் முன்னாலே போய் நின்றார். கண்லே தாரை தாரையா நீர்வடிய "அப்பா ஜோதி மகாலிங்கம், நான் உன்னுடைய பக்தன். உன் சந்நிதிலே எவ்வளவோ காலமா நான் ருத்ர ஜபம் பண்ணி நீ கேட்டிருக்கே. இப்போ எனக்கு 81 ஆயிடுத்து. மனசிலே தெம்பு இருக்கே தவிர உடம்பிலே இல்லே. குரல் போய்டுத்து. சக்கரை பொங்கல் ரொம்ப நன்னா இருந்ததே என்று வெட்கத்தை விட்டு அடிக்கடி இன்னும் கொஞ்சம் போடுங்கோ என்று மிராச்தார்கிட்ட கேட்டுட்டேன். முதல்லே அவர் காதிலே விழலை என்று நினைச்சேன். அப்பறம் தான் புரிஞ்சுது அவருக்கு அதில் இஷ்டமில்லை என்று. இவ்வளவு வயசாகியும் அல்ப விஷயத்துக்கு அடிமையாகிட்டேன். அதுக்கு தண்டனை தர தான் உன்கிட்ட நிக்கறேன் இப்போ. அவா அவா காசிக்கு போய் பிடிச்சதை விட்டுடுவா . நீ தானே காசிலேயும் லிங்கம். அதனாலே இதையே காசியா நினைச்சுண்டு உன் எதிர்க்க பிரதிஞை பண்றேன். இனிமே
இந்த ஜன்மத்திலே எனக்கு சக்கரை பொங்கல் மட்டு மில்லை. சக்கரை சேர்த்த எந்த பண்டமும் இந்த கை தொடாது.” கண்ணை தொடசுண்டு கனபாடிகள் அப்புறம் வீட்டுக்கு போனார்.

நாராயணசாமி நீ இப்போ சொல்லு மகாலிங்கம் நீ பண்ணினதை ஒத்துகொள்வாரா?"" மௌனம் . அனைவரும் கற்சிலையாயினர்.

மணி மூணு ஆயிடுத்து. அன்றைக்கு பெரியவா பிக்ஷை ஏற்றுக்கொள்ளவில்லை. எல்லார் கண்களிலும் இந்திய நதிகள். பித்து பிடித்ததுபோல் அனைவரிடமும் திரும்பி “” எல்லாரும் என்னை மன்னிச்சுடுங்கோ. பெரியவா தான் என்னை காப்பாத்தனும்” என்று பெரியவா காலடியில் விழுந்தார். அவர் கொண்டு வந்த பிரசாதம் தொடப்படவில்லை. "

பெரியவா “ எல்லாரும் இருங்கோ மகாலிங்க சுவாமியே அனுக்ரகம் பண்ணுவார்" என்றார். எதோ பெரியவா சொல்றதுக்கு காத்திருந்த மாதிரி 65 வயது மதிக்கதக்க ஒரு சிவாச்சாரியார் விபுதி உத்ராக்ஷ மாலைகளோடு ஒரு தட்டுடன் வந்தார். "என் பேரு மகாலிங்கம் திருவிடைமருதூர் கோவில் அர்ச்சகன். நேத்திக்கு கோவில்லே ருத்ராபிஷேகம் நடந்தது. பெரியவாளுக்கு பிரசாதம் சமர்பிச்சு ஆசீர்வாதம் வாங்கிண்டு போக வந்தேன்" என்று சொல்லி கோவில் பிரசாதத்தை பெரியவா முன்னால் வைத்து வணங்கினார்..

அவரை தடுத்து பெரியவா " சிவ தீக்ஷை வாங்கிண்டவா எனக்கு நமஸ்காரம் எல்லாம் பண்ணகூடாது" என்று சொல்லிவிட்டு பிரசாதம் வாங்கிண்டார். அனைவரும் பெற்றனர். மடத்திலிருந்து அர்ச்சகருக்கு பிரசாதம் தரப்பட்டது.

அப்போது தான் அங்கு மிராசுதார்நாராயணசாமி நிற்பதை அர்ச்சகர் பார்த்தார். " பெரியவா இவர் தான் எங்கவூர் மிராசுதார் நாராயணசாமி அய்யர். இவா தான் நேத்திக்கு ருத்ர அபிஷேகம் ஏற்பாடு பண்ணினா"
என்று அவரையும் வணங்கிவிட்டு அர்ச்சகர் நகர்ந்தார். நாராயணசாமி ஐய்யர் வாய் ஓயாமல் பெரியவாளிடம் " என் பாபத்தை எப்படி கரைப்பேன். என்ன பிராயச்சித்தம் சொல்லுங்கோ" என்று கதறினார்.

பெரியவா எழுந்து ஒரு நிமிஷம் கண்மூடினார். "நான் என்ன பிராயச்சித்தம் சொல்ல முடியும். தேப்பெருமாநல்லூர் வெங்கடேச கனபாடிகள் மட்டுமே உனக்கு பிராயச்சித்தம் என்ன என்று சொல்லணும்." " பெரியவா, நான் இப்பவே ஓடறேன். "அவர் என்னை மன்னிச்சேன் என்று சொல்வாரா, என்ன பிராயச்சித்தம் பண்ணனும் என்று சொல்வாரா?" நீங்கதான் அருள் செய்யணும்"

பெரியவா ஒரு பெருமூச்சு விட்டார். " உனக்கு ப்ராப்தம் இருந்தா அது நடக்கும்" என்று கூறிவிட்டு உள்ளே சென்று விட்டார். வெகு நேரமாகியும்
பெரியவா வெளியே வரவில்லை.

மிராசுதார் ஓடினார். அடுத்த பஸ் பிடித்து நேராக தேப்பெருமாநல்லூர் சென்றார். கனபாடிகள் காலில் விழுந்து புரண்டு அழுது மன்னிப்பு கேட்க சென்ற போது கனபாடிகள் வீட்டு வாசலில் ஒரு சின்ன கூட்டம். அன்று காலையில் கனபாடிகள் மகாலிங்கத்தை அடைந்து விட்டார் என்று கூடியிருந்தவர்கள் சொன்னார்கள். மிராசுதார் ஐயோ என்று அலறினார்.
கனபாடிகள் உடல் இன்னும் அகற்றப்படவில்லை. நல்லவேளை கனபாடிகளின் காலை பிடித்து என்னை மன்னிச்சுடுங்கோ நான் மகாபாவி. என்று கதறினார். சுரீர் என்று அப்போது தான் உரைத்தது அதனால் தான் பெரியவா " ப்ராப்தம்" இருந்தால் என்று சொன்னாரா?????????.

***** தன் பாபம் தீர நாராயணசுவாமி எண்ணற்ற மடங்களுக்கும் கோயிலுக்கும் தான தர்மங்கள் எல்லாம் செய்து கடைசியில் காசியில் முக்தியடைந்தார் என்று
கேள்வி.

திங்கள், 22 ஏப்ரல், 2019


#யாக_பூஜையும்_யாக_மண்டபமும்

யாகசாலை அல்லது யாகமண்டபம் என்பது ஒரு திருவோலக்கம் போன்றது. அதாவது, ஒரு பெரும் சக்கரவர்த்தி தனது பரிவாரங்களோடு, அத்தாணி மண்டபத்தில் எழுந்தருளியிருப்பது போல நாமும் நமது இறைவனை ஆவரண தேவ தேவியர்களோடு, சகல பரிவாரங்கள் சகிதம் யாகமண்டபத்தில் வீற்றிருக்கச் செய்கின்றோம்.

இவ்வாறு திருவோலக்கத்தில் எழுந்தருளியிருக்கிற பேரரசனுக்கு சகல வித உபசாரங்கள் வழங்குவது போல, இவ்வாறு மஹா யாக மண்டபத்தில் வீற்றருளும் இறைவனுக்கு, நாம் சகல உபசாரங்கள் வாழ்த்தி வழங்கிப் போற்றுகின்றோம்.

இவ்வாறு இந்த யாக உருவாக்கத்திலும், யாக பூஜையிலும், மந்திர பூர்வமாகவும், பாவனை மூலமும், கைலாசம், வைகுண்டம், ஸ்ரீபுரம் போன்ற தோற்றம் நம் பூமியில் உருவாகின்றது. இந்த வழிபாடுகள் நிறைவு பெற்றதும், தேவ தேவியர்களை அவரவர் இருப்பிடத்திற்கு (யதாஸ்தானம்) அனுப்பி வைப்பார்கள். பிரதான மூர்த்தியும், அஷ்ட வித்யேஸ்வரர், பீடசக்தி என்கின்ற ஸ்நபன திருமஞ்சன கும்பங்கள் அபிஷேகம் மூலம் திருவுருவத்துடன் சேர்க்கப்பெறும்.

ஆலயங்களில் நடக்கிற யாக பூஜையினில், இரண்டு மிகச்சிறப்பானது. ஓன்று வருடம் தோறும் குறிப்பிட்ட காலத்தில் நடக்கிற மஹோத்ஸவ யாகம், மற்றையது மஹா கும்பாபிஷேக யாகம்.

இதனை விட சங்காபிஷேகம், பவித்திரோத்ஸவம், பிராயச்சித்தம், விசேஷ அபிஷேகம், போன்றவற்றிலும் யாகபூஜைகள் நடைபெறுகின்றன.

இவற்றுள் மஹோத்ஸவம் என்கிற வருடாந்த பெருந்திருவிழாவுக்கான யாகசாலை நமது தென்னகத் திருக்கோயில்களில் தனியே ஆகம விதிப்படி அமைக்கப்பெற்றிருக்கக் காணலாம். (அநேகமாக திரு கோயில்களில் ஈசான பாகத்தில் மேற்கு நோக்கியதாக இந்த யாகசாலை அமைந்திருக்கும்) மற்றைய விசேட யாகங்களுக்காக யாகசாலை தற்காலிகமாக, அழகாக அமைக்கப்பெறக் காணலாம்.

மஹோத்ஸவம், கும்பாபிஷேகம் இந்த நிகழ்வுகளில் எல்லாம் தினமும் இரண்டு வேளையாக பூஜை நடக்கக் காணலாம். சாதாரணமாக யாகசாலை நாற்புறமும் வாயில்களை உடையதாகவும், 16 தூண்களுடையதாகவும், நடுவில் சதுர வேதிகை (மேடை) உடையதாகவும், இருக்கும்.
தெரிந்த கதை தான்... தெரியாத சில விஷயங்களும் எழுதப்பட்டு உள்ளது... படிப்போம்.. அறிவோம்..

கண்ணப்பநாயனாரின் பக்தியை போற்றும் ஆதி சங்கரர்"

சிவானந்த லஹரியின் சுலோகத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனாரின் பக்தியைக் கண்டு, 'இதுவல்லவோ பக்தி' என்று புகழ்கிறார் ஆதிசங்கரர்.

கண்ணப்ப நாயனாருக்கு ஆதியில் அமைந்த பெயர் திண்ணன். நாகரீகத்தின் பக்குவமோ, படிப்பின் பாதிப்போ சிறிதும் இல்லாத ஓர் எளிய முரட்டு வேடன்.

திருக்காளத்தியில் காட்டுக்கு நடுவேயுள்ள சிவலிங்கத்தை 'இவர்தான் இறைவன்' என்று எப்படியோ உணர்ந்து கொண்டான்.

அவன் பூஜை முறைகள் எதுவும் தெரியாதவன். ஒரு கையில் கொடிய வில்; மறு கையில் கடித்துத் தின்று ருசி பார்த்து இறைவனுக்குப் படைப்பதற்காக கொண்டு வரப்பட்ட ஒரு துண்டு பன்றி மாமிசம்; வாய் நிறைய ஸ்வர்ணமுகி என்னும் பொன்முகலி ஆற்றின் நீர்; தலையில் பலவிதமான காட்டுப்பூக்கள்; காலில் பழஞ்செருப்பு; தோளில் அம்புறாத்தூணி என இந்தக் கோலத்தில் அங்கு ஒவ்வொரு நாளும் வந்து, அங்கு ஏற்கெனவே சிவகோசாரியர் என்ற முனிவரால் பூஜிக்கப்பட்டிருக்கும் மலர்களை தன் செருப்புக் காலால் ஒதுக்கிவிட்டு, வாயிலிருந்து ஆற்றின் நீரை லிங்கத்தின்மேல் உமிழ்ந்து, பன்றி மாமிசத்தைப் படைத்து காட்டுப்பூக்களை இறைவனுக்குச் சூட்டி, தெரிந்த மட்டும் வாயாற வாழ்த்தி மனதார வணங்கி அகமகிழ்ந்து போகிறான் திண்ணன்.

ஐந்து நாள்களாக தொடர்ந்து பார்த்து அருவறுப்பும் பயமும் கலந்த உணர்வுடன் இறைவனிடம் மனமுறுகி வேண்டுகிறார் சிவாகோசாரியர்.

அவர் கனவில் தோன்றிய இறைவன், "மறைந்திருந்து பார், உன்னதமான அவனது பக்தியை அறிவாய்!'' என்றருளினார்.

மறுநாள் வழக்கம் போல அதே கோலத்தில் வருகிறான் வேடன். இறைவனைக் கண்டதும் அதிர்ந்து போகிறான்.

இறைவனின் வலது கண்ணிலிருந்து ரத்தம் அருவியாய் கொட்டிக்கொண்டிருந்தது. "ஐயோ! நான் என்ன செய்வேன்?'

ஓடோடிச்சென்று சிவலிங்கத் திருமேனியைக் கட்டிக்கொண்டு கதறி அழுகிறான் திண்ணன். பின்னர் பச்சிலைகளைக் கொண்டு வந்து இறைவனுடைய கண்ணில் பிழிகிறான்.

 ஆனால் ரத்தம் நின்றபாடில்லை. "ஊனுக்கு ஊன், கண்ணுக்கு கண்' என்று சொல்கிறது அவன் மனம். உடனே கூரிய அம்பினால் வலது கண்ணில் குத்தி கண்ணைப் பிடுங்கி எடுத்து குருதி வடியும் இறைவனின் கண்ணில் அப்புகிறான்.

என்ன ஆச்சரியம்!

 இறைவனுடைய கண்ணில் ரத்தப்பெருக்கு நிற்கிறது. ஆனந்தக் கூத்தாடுகிறான் திண்ணன்.

சில நொடிப்பொழுதில் அவனது மகிழ்ச்சி மறைந்தது. இப்போது இறைவனின் இடது கண்ணிலிருந்து ரத்தம் கொட்டியது.

திண்ணன் தயங்கவில்லை. "இன்னொரு கண்ணையும் கொடுப்பேன்' என்று தனது இடது கண்ணை எடுத்துவிட எண்ணினான். "அப்படியானால் இறைவனின் இடது கண்ணை எப்படி அடையாளம் காண்பது?' என தனது செருப்புடன் கூடிய காலை இறைவனின் இடது கண்ணில் மேல் வைத்தபடி தனது கண்ணைப் பிடுங்க முனைந்தபோது, "கண்ணப்பா, நில்!'' என்றபடி அவனது கரத்தைப் பிடித்து தடுத்து திருக்காட்சி அளித்து அழைத்துச் செல்கிறார் இறைவன்.

மெய்சிலிர்த்துப் போகிறான் திண்ணன். இறைவனின் அற்புதமான லீலையை மறைந்திருந்து பார்த்த சிவகோசாரியர் கண்ணீர் மல்க இறைவனையும் கண்ணப்பனையும் துதிபாடி மகிழ்கின்றார்.

இந்த கதையை நினைவு கூர்கிறார் ஆதிசங்கரர். கண்ணப்பன் ஒரு கண்ணை இறைவனுக்கும் கொடுத்துவிட்டு மறுகண்ணும் கொடுக்கத் தயாராகும் பொழுது, இறைவனே அவன் செயலைத் தடுத்து, "நில்லு கண்ணப்ப' என்று கூறி அருள்புரிந்தார்.

பக்தியில் கண்ணப்பனுக்கு நிகர் யாரும் இல்லை. அவனே பக்தர்களில் முதன்மையானவன் என்கிறார் சங்கரர்.

 ஆதிசங்கரர், கண்ணப்பனின் இறைபக்தியை தமது சிவானந்த லஹரியில் 63 ஆவது சுலோகமாக பதிவு செய்கிறார். அந்த சுலோகம்:

"மார்க்காவர்த்தித பாதுகா பசுபதே
ரங்கஸ்ய கூர்ச் சாயதே
கண்டூஷாம்பு நிஷேசனம் புர ரிபோர்
திவ்யாபி ஷேகாயதே!
கிஞ்சித்பக்ஷித மாம்ஸ சேஷ கபலம்
நவ் யோபஹா ராயதே
பக்தி: கிந் நகரோத்ய ஹோ
வநசரோ பக்தாவதம் ஸôயதே''