சரப சாஸ்திரிகள்
புல்லாங்குழல், ஒரு காலத்தில் கச்சேரிகளில் பக்க வாத்தியமாக மட்டுமே வாசிக்கப்பட்டு வந்தது. அத்தகைய வாத்தியத்துக்கு ஒரு முக்கியத்துவம் கொடுத்து. அதை எல்லோராலும் கவனிக்க வைத்த பெருமைக்குரியவர் - ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் அவதாரம் என்று போற்றப்பட்ட வேணுகானம்சரப சாஸ்திரிகள் ஆவார். தஞ்சை ஜில்லாவில் கும்பகோணம் சோலையப்பன் தெருவில் விஸ்வநாத சாஸ்திரிகளுக்கும் தர்மாம்பாளுக்கும் 1872-ல் இரண்டாவது திருக்குமரனாக அவதரித்தவர் ஸ்ரீசரப சாஸ்திரிகள் (இந்தத் தம்பதியரது முதல் திருக்குமாரன் ஸ்ரீசிவக்குமார் சாஸ்திரிகள் கும்பகோணம் கல்லூரியில் நல்ல உத்தியோகத்தில் இருந்தவர்). சரப சாஸ்திரிகளின் இயற்பெயர் ராமச்சந்திரன். வேத சாஸ்திரங்களில் பெரிய பண்டிதராகவும், ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் வித்வானாகவும் விளங்கியவர் விஸ்வநாத சாஸ்திரிகள்.
குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட ஒரு வியாதியால் தனது இரண்டாம் வயதிலேயே இரு கண் பார்வையையும் இழந்தார் சரப சாஸ்திரிகள். புத்திரனுக்கு ஏற்பட்ட இத்தகைய ஒரு சோகத்தைப் பெற்ற மனம் தாங்குமா? ஓடியாடி விளையாட வேண்டிய வயதில் குழந்தை தட்டுத் தடுமாறி நடந்தால் எப்படி இருக்கும்? விஸ்வநாத சாஸ்திரிகளும் தர்மாம்பாளும் துடித்துப் போனார்கள். போதிய சிகிச்சைகள் செய்தும் அது பலன் தரவில்லை. கல்வி மற்றும் கேள்வி ஞானங்களில் எதிர்காலத்தில் தன்னைப் போல் பெரும் பண்டிதராக விளங்குவான் என்று எதிர்பார்த்த தந்தைக்கு ஏமாற்றம். இவன் வயதை ஒத்த வயதுடைய சிறுவர்கள் பள்ளிக்கூடத்துக்குச் செல்வதை மிகவும் ஏக்கத்துடன் பார்த்து வந்தனர். விஸ்வநாத சாஸ்திரிகளும் தர்மாம்பாளும். என்றாலும், வேறு வழி தெரியாததால், மனதைத் தேற்றிக் கொண்டனர்.
மகனுக்கு எதில் நாட்டம் இருக்கிறது என்பது தந்தையாருக்குப் புரியவில்லை. ஒரு நாள் மகனிடமே கேட்டார் - எதிர்காலத்தில் நீ என்ன செய்யப் போவதாக உத்தேசம்?0 புல்லாங்குழல் கொடுத்தால், என்னால் வாசிக்க முடியும் அப்பா என்று சரப சாஸ்திரிகள் இரண்டு வயதில் சொன்னது பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் திருவாக்கோ என்னவோ! அதிலேயே அவர் பெரும் புகழும் பெற்றார். மகனது பதிலில் நெகிழ்ந்து போனார். தந்தை பார்வையே தெரியாமல் இருக்கும்போது எப்படித் துளைகளை அடையாளம் கண்டு கொண்டு இவனால் புல்லாங்குழல் வாசிக்க முடியும் என்று விஸ்வநாத சாஸ்திரிகள் யோசிக்கவில்லை. இசைதான் இவனுடைய எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சக்தி போலிருக்கிறது என்று தெளிந்தார். ஒரு நாள் யதேச்சையாகத் தன் வீட்டுத் தோட்டத்தில் இருந்து பக்குவப்பட்ட ஒரு மூங்கிலை எடுத்து அதில் துளைகள் போட்டு. புல்லாங்குழலாக உருவாக்கி மகன் சரப சாஸ்திரிகளிடம் கொடுத்தார் விஸ்வநாத சாஸ்திரிகள்.
தந்தையார் தன் ஆசிகளோடு வழங்கிய அந்தக் கருவியைக் கையில் வாங்கிய சரப சாஸ்திரிகள், அதைத் தன் வாயில் வைத்து காற்றைச் செலுத்தி, இசைக்கத் துவங்கியதும், எங்கே இருந்து இந்த வேணு கானம் கேட்கிறது? என்று தந்தையாரான விஸ்வநாத சாஸ்திரிகள் சுற்றும்முற்றும் பார்த்தார். பிறகுதான் விஷயம் அறிந்து தெளிந்தார் - தன் மகன் இசைக்கும் இந்தப் பச்சை மூங்கிலில் இருந்துதான் மயக்குகின்ற இந்த இசை வருகிறது என்று. தெய்வீகத் தன்மையுடன் கேட்ட இந்த தேவ கானத்தில் தன்னையே இழந்த விஸ்வநாத சாஸ்திரிகள் அன்றைய தினம் முதல் மகனுக்கு முறைப்படி சங்கீதம் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார். சுயமாகவே புல்லாங்குழலை வாசிக்கும் திறன் படைத்த சரப சாஸ்திரிகளின் அருட்திறன் அப்போது அந்தத் தெருவில் இருந்த எல்லோராலும் சிலாகித்துப் பேசப்பட்டது.
காலப்போக்கில் விஸ்வநாத சாஸ்திரிகள் இறைவன் திருவடியைச் சேர்ந்தார். இதற்குப் பின் கும்பகோணத்தில் வசிக்கப் பிடிக்காமல் தன் இரு திருக்குமாரர்களையும் அழைத்துக் கொண்டு திருவையாறு வந்தார் தர்மாம்பாள். அங்கே சத்குரு தியாகராஜ ஸ்வாமிகளின் இல்லத்துக்கு அடுத்தாற்போல் வசித்து வந்த தன் சகோதரர் வீட்டில் தங்கினார் தர்மாம்பாள். இளைய மகன் சரப சாஸ்திரிகளை இசைத் துறையில் சிறந்த மேதை ஆக்க வேண்டும் என்பதற்காக தன் இன்னொரு சகோதரரும் தியாகராஜ ஸ்வாமிகளின் அன்புக்குப் பாத்திரமானவருமான குப்புஸ்வாமி ஐயரிடம் சங்கீதம் கற்க அனுப்பினார் தர்மாம்பாள்.
இதன் பின் தியாகராஜ ஸ்வாமிகளின் நெருங்கிய உறவினாரும், அவரது முக்கிய சீடர்களில் ஒருவருமான மானம்புச்சாவடி வெங்கட சுப்பய்யரிடம் இசை பயில அனுப்பினார் (திருவையாறு ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகள் ஸித்தி ஆனது 1847-ஆம் வருடம். இதற்குப் பிறகுதான் சரப சாஸ்திரிகள் அவதரித்தார். ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகளின் முக்கிய சிஷ்யர்கள் - தில்லை ஸ்தானம் ராமய்யங்கார், வாலாஜாபேட்டை வெங்கட்ரமண பாகவதர், மானம்புச்சாவடி வெங்கட சுப்பய்யர், திருவெற்றியூர் வீணை குப்பய்யர், ஐயா பாகவதர், லால்குடி ராமய்யர், உமையாள்புரம் கிருஷ்ண பாகவதர், அமிர்தலிங்கம் பிள்ளை, சுந்தர பாகவதர் போன்றோர். கர்னாடக சங்கீதம் நாடு முழுதும் பரவ வேண்டும் என்பதற்காக ஜாதி வித்தியாசம் பாராமல் ஆர்வம் உள்ள பலரையும் தன் சிஷ்யர்களாகச் சேர்த்து கொண்ட மாபெரும் மகான் தியாகராஜ ஸ்வாமிகள்).
தியாகராஜ ஸ்வாமிகளின் சிஷ்யராக விளங்கிய மானம்புச்சாவடி வெங்கட சுப்பய்யரிடம் பல மாணவர்கள் சங்கீதம் கற்றுக் கொண்டனர். எப்படி தியாகராஜ ஸ்வாமிகள் பல சிஷ்யர்களை உலகுக்கு அளித்தாரோ, அதுபோல் மானம்புச்சாவடி வெங்கட சுப்பய்யரும் ஒளி வீசும் ஐந்து ரத்தினங்களாக ஐந்து சிஷ்யர்களை உருவாக்கினார். அவர்களும் சரப சாஸ்திரிகளும் ஒருவர். ஏனைய நால்வர் - மகா வைத்தியநாதசிவன், பட்டணம் சுப்ரமணிய ஐயா, தியாகராஜ ஸ்வாமிகளின் பெண் வயிற்றுப் பேரனான தியாகராஜா மற்றும் பிடில் வெங்கோபராவ். புல்லாங்குழல் வாத்தியத்தில் நெளிவு சுளிவுகளை சரப சாஸ்திரிகளுக்கு விளக்கி, அவருக்குப் பல யுக்திகளைச் சொன்னவர்- கோவிந்த நாயணக்காரர் எனும் நாகஸ்வர வித்வான். மேலும், பல்லவி நாராயண சுவாமி ஐயர், நாடியம் ராமு ஐயர் போன்ற பெரிய வித்வான்களும் இவருடைய கலை ஞானத்தைப் புரிந்து கொண்டு இந்த வாத்தியத்தின் சூட்சுமங்களைச் சொல்லிக் கொடுத்து வழிகாட்டியாக இருந்தனர். தியாகராஜ ஸ்வாமிகளின் அநேக க்ருதிகளை பயின்றார் சரப சாஸ்திரிகள். பின்னாளில் சுந்தர பாகவதர் நடத்தும் ஸ்ரீதியாகராஜ ஆராதனையின் போது சரப சாஸ்திரிகளின் கச்சேரியுடன்தான் ஆராதனையே துவங்கிற்று என்றால், சாஸ்திரிகளின் இசைத் திறனுக்கு சுந்தர பாகவதர் கொடுத்த முக்கியத்துவம் நன்றாகவே விளங்கும்.
சரப சாஸ்திரிகளுக்கு இனிமையான சாரீரம் அமைந்ததோடு வயலின், மிருதங்கம் வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். தமிழ் தவிர சமஸ்க்ருதம், தெலுங்கு, மராத்தி போன்ற மொழிகளிலும் பாண்டித்யம் கொண்டிருந்தார். வட மொழியில் எண்ணற்ற சாகித்யங்களை இவர் சுயமாக இயற்றியது இவரது பன்மொழிப் புலமையை உணர்த்தும். புல்லாங்குழல் வாசிப்பில் பெரும் புகழ் பெற்று விளங்கிய சரப சாஸ்திரிகளை பல வித்வான்கள் அணுகி, அவரது இசைப் பயணத்தில் தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு வேண்டினர். இப்படி தன்னிடம் வந்த பல திறமையாளர்களை ஊக்குவித்து. அவர்களையும் புகழ் பெற வைத்தார் சரப சாஸ்திரிகள். கடம் பழநி கிருஷ்ணய்யர் ஒரு முறை சரப சாஸ்திரிகளை சந்தித்து, அவரிடம் கடம் வாசித்துக் காண்பித்து பாராட்டுகளைப் பெற்றார். இதன் பின் சரப சாஸ்திரிகளின் கச்சேரியில் அடிக்கடி வாசிக்க ஆரம்பித்தார். சரப சாஸ்திரிகளின் சம காலத்திய வித்வான்களுள் குறிப்பிடத்தகுந்த சிலர் - புதுக்கோட்டை மான் பூண்டியாபிள்ளை, தட்சிணாமூர்த்தி பிள்ளை. திருவையாறு சுப்ரமண்ய ஐயர். திருக்கோடிக்காவல் கிருஷ்ணய்யர், திருமருகல் நடேச நாயணக்காரர், எட்டாயபுரம் ராமச்சந்திர பாகவதர்.
உரிய காலத்தில் அம்பு அம்மாள் எனும் யுவதியை மணந்தார் சரப சாஸ்திரிகள். நாயன்மார்களின் சரித்திரத்தைத் தமிழிலும் மராத்தியிலும் சுமார் 500 சாஹித்யங்களாக (கதைப் பாடல்களாக) புனைந்து இசையமைத்தார். சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் தன்னுடைய கதாகாலட்சேபத்தில் நாயன்மார்களின் இந்தப் பாடல்களைப் பாடுவது வழக்கம். நகுமோமு கனலேனி என்ற ஆபேரி கீர்த்தனையில் அற்புதங்கள் பலவற்றை அமைத்துத் தந்துள்ள சரப சாஸ்திரிகள். தானம் வாசிப்பதில் தேர்ந்தவர். இரு கண்களில் பார்வையை இழந்திருந்தாலும், எதையும் ஒரு முறை கேட்ட மாத்திரத்திலேயே கிரஹித்துக் கொள்ளக் கூடிய அபார ஆற்றல் பெற்றவராக விளங்கினார் சரப சாஸ்திரிகள். இதனால் இவர் ஏக சந்த்ர கிரஹி என எல்லோராலும் அழைக்கப்பட்டார்.புல்லாங்குழல் வாசிப்பில் எதையும் கொண்டு வர முடியும் என்பதை நிரூபித்துப் பல புதுமைகளைப் புகுத்தியவர் சரப சாஸ்திரிகள். எப்படிப்பட்ட ஒரு துல்லியமான சத்தத்தையும் புல்லாங்குழலில் கொண்டு வருவது இவருக்குக் கைவந்த கலை. இவரது நேரடி சீடர்தான் பல்லடம் சஞ்சீவ ராவ்.
கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை செல்லும் வழியில் மூப்பக்கோயில் என்ற இடத்தில் வலப் பக்கமாக ஒரு சாலை பிரியும். அங்கிருந்து சுமார் இரண்டு கி.மீ. தொலைவு சென்றால் ஏராகரம் என்கிற கிராமம் வரும். இங்கு மிகவும் புராதனமான முருகப் பெருமான் கோயில் கொண்டுள்ளார். ஒரு முறை சில பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டி. இந்த முருகப் பெருமானை வந்து வணங்கி, மன அமைதி பெற்றுள்ளார் சரப சாஸ்திரிகள். அதோடு, அங்குள்ள மக்களிடம் அந்த முருகப் பெருமானின் சிறப்பு பற்றிச் சொல்லி இருக்கிறார். முருகப் பெருமான் என்றாலே காவடிதானே விசேஷம்! எனவே, சர்ப்ப காவடி மச்ச காவடி போன்றவற்றைத் தூய பக்தியுடன் சுமந்து, இந்த முருகனை மனம் குளிரச் செய்யுங்கள்... உங்களையும் ஊரையும் காப்பாற்றுவார் என்று கிராமத்தவர்களிடம் சொல்லி, ஏராகரத்தின் பெருமையை உலகறியச் செய்தார்.
சரப சாஸ்திரிகளின் புல்லாங்குழல் வாசிப்பைக் கேட்டு மகிழ வேண்டும் என்று ஆசைப்பட்டார் மைசூர் மகாராஜா. இதற்கான 1904-ஆம் ஆண்டு தன் அரசாங்கப் பிரதிநிதி ஒருவரை கும்பகோணத்துக்கு அனுப்பி, சாஸ்திரிகளின் வசதியைக் கேட்டறிந்து வருமாறு அனுப்பினார் மகாராஜா. ஆனால், தன்னிடம் வந்த அரசுப் பிரதிநிதியிடம், என்னைப் போன்ற பார்வையற்ற ஒருவரை அதிகாரத்தில் உள்ள மகாராஜா சந்திப்பது முறையல்ல. மகாராஜாவின் முன் வாசிக்க நான் தகுதி அற்றவன். விஷயத்தைப் பக்குவமாக மகாராஜாவுக்குச் சொல்லுங்கள் என்று அன்புடன் அனுப்பி வைத்தார்.
தன் பிரதிநிதி சொன்னதைக் கேட்ட மகாராஜாவுக்கு சரப சாஸ்திரிகளின் மீதுள்ள மரியாதை இன்னும் கூடியது. எப்படியேனும் அவரது இசையை நான் கேட்டே ஆக வேண்டும். என்று ஆவல் மிகுதியில் மீண்டும் ஆள் அனுப்பினார். மகாராஜாவின் இசை ஆர்வத்தைக் கண்டு நெகிழ்ந்த சரப சாஸ்திரிகள் ஒரு நாள் மைசூருக்குப் பயணப்பட்டார். தான் வாசிக்கும் மேடையின் முன் ஒரு திரையைத் தொங்க விட்டு, அந்த மறைவில் இருந்தபடி வாசித்தார் சரப சாஸ்திரிகள். அதாவது மகாராஜாவுக்கு சாஸ்திரிகள் இசைக்கும் வாத்தியத்தின் ஒலி மட்டுமே கேட்கும். ஆனால், இவரை நேரில் பார்க்க முடியாது. அது போன்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தி இருந்தார். சரப சாஸ்திரிகள் அன்றைய தினம் பல க்ருதிகளை அற்புதமாக வாசித்து மகாராஜாவை மகிழ்வித்தார் சாஸ்திரிகள்.
நீண்ட நேர இசைக் கச்சேரியைக் கேட்ட மகாராஜா. சரப சாஸ்திரிகளின் திருமுகத்தைப் பார்க்க கூடிய வாய்ப்பு தனக்குக் கிடைக்காததால். அவரை ஒரு புகைப்படம் எடுத்துத் தன்னுடன் வைத்துக் கொள்ள ஆசைப்பட்டார். ஆனால், சரப சாஸ்திரிகள் தன்னைப் புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கவில்லை (சரப சாஸ்திரிகளின் புகைப்படம் வேறெங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.)மைசூரில் இருந்து கும்பகோணத்துக்கு சரப சாஸ்திரிகளை உரிய மரியாதைகளுடன் அனுப்பி வைத்தார் மகாராஜா. ஏராளமான சன்மானங்களையும் அரசாங்கத்தின் சார்பாகக் கொடுத்து அனுப்பினார். ஆனால், சரப சாஸ்திரிகளின் சேவை போதும் என்று இறைவன் முடிவெடுத்து விட்டான் போலும். கும்பகோணத்துக்குத் திரும்பும் வழியிலேயே கடும் ஜுரம் சாஸ்திரிகளைத் தாக்கியது. ஜுரத்துடனே வீட்டுக்கு வந்த சாஸ்திரிகள் போதிய சிகிச்சைகளையும் எடுத்துக் கொண்டார். ஆனால், அது பலன் தரவில்லை. ஒரு சில நாட்களிலேயே அவரது உடலில் இருந்து ஜீவன் பிரிந்தது. ஆதி சங்கரர். மகாராஜா சுவாதித் திருநாள் ஆகியோர் போல் இளம் வயதிலேயே இவ்வுலகை நீத்தார் சரப சாஸ்திரிகள்.
வெறும் 32 வருடங்களே வாழ்ந்த சரப சாஸ்திரிகள். தியாகராஜ ஸ்வாமிகளின் வழியில் ஸ்ரீராம பக்தியை என்றென்றும் அனுஷ்டித்து வந்தார். ஸ்ரீராமர் படங்களை வைத்தும், விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்தும் தினசரி வழிபாட்டை நடத்தி வந்தார். ஸ்ரீராம பஜனை ஸபா என்கிற அமைப்பைத் தொடங்கி, ஒவ்வொரு வருடமும் ஸ்ரீராம நவமி உள்ளிட்ட பல வைபவங்களை நடத்தி வந்தார். எண்ணற்ற கலைஞர்களை அழைத்து, இசைக் கச்சேரிகளையும் நடத்தினார். அவர் நடத்திய அதே வழியிலேயே இந்த பஜனை சபாவின் அமைப்பாளர்கள் இன்றும் தொடர்ந்து வைபவங்களை நடத்தி வருவது பாராட்டத்தக்கது. கும்பகோணம் சோலையப்பன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீராம பஜனை ஸபாவில் ஏகாதசி பஜனை. மார்கழி மாதத்தில் ராதா கல்யாணம் போன்ற வைபவங்கள் சிறப்பாக நடந்து வருகின்றன. இந்த பஜனை ஸபாவில் சரப சாஸ்திரிகள் காலத்து ஸ்ரீராமர் ஓவியங்களும், சரப சாஸ்திரிகள் தன் வாசிப்புக்குப் பயன்படுத்திய - பொக்கிஷம் போன்ற இரண்டு புல்லாங்குழல்களையும் நாம் காணலாம். 1956 - ஆம் ஆண்டு கும்பகோணத்தில் நிகழ்ந்த மகா மக வைபவத்தின்போது காஞ்சி ஸ்ரீமகா ஸ்வாமிகள் புனித நீராட வந்திருந்தார். அப்போது மகா பெரியவர் இந்த பஜனை ஸபாவுக்கு வருகை புரிந்தார். சரப சாஸ்திரிகளின் பெருமைகளைப் பற்றி அப்போது பக்தர்களுக்கு எடுத்துச் சொல்லி இருக்கிறார். சரப சாஸ்திரிகள் துவக்கி வைத்த இந்த பஜனை ஸபா இன்றளவும் தன் புகழைப் பரப்பி வருகிறது. இந்த ஸபாவின் நிகழ்வுகளையும் பராமரிப்பையும் வேணுகானம் ஸ்ரீசரப சாஸ்திரிகள் மெமோரியல் டிரஸ்ட் பொறுப்பேற்று நடத்தி வருகிறது.
தொடர்புக்கு:
செகரெட்டரி, ஸ்ரீராம பஜனை ஸபா,
110, சோலையப்பன் தெரு,
கும்பகோணம் - 612 001.
போன்: 0435 - 2422517,