திங்கள், 28 ஏப்ரல், 2014

ஆதிசங்கரர் அருளிய ஞானோபதேசம்!

காஷ்மீர் முதல் குமரி வரை பல முறை யாத்திரை செய்து, ஞான நூல்கள் பலவற்றை இயற்றியுள்ளார் ஸ்ரீஆதிசங்கரர். தன் அவதாரம் பூர்த்தியாகும் காலத்தில், தன்னைப் பிரிய வேண்டியிருப்பது குறித்து வருந்திய சீடர்களுக்கு, சில உபதேசங்களைச் செய்து உள்ளார். அவை:

நித்யம் வேதம் ஓது; அதன் விதிப்படி தர்மத்தை செய். கர்மானுஷ்டானத்தைக் கொண்டே ஈசனுக்குப் பூஜை செய்; காம்ய பலன்களில் புத்தியைச் செலுத்தாதே; உலகப் பற்றை ஊட்டும் இன்பங்களெல் லாம், முடிவில் துன்பங்களா கவே மாறும் என்பதை மறவாதே; உன்னை நீ அறிவதில் ஆவல் கொள்; தன்னலப் பற்றிலிருந்து உன்னை மீட்டுக் கொள்; நல்லவர்களிடத்தில் உறவு கொள். பகவானிடத்தில் மாறாத அன்பு வை; புலன்களை அடக்குதல் போன்ற உத்தம குணங்களை பழகிக் கொள்; இல்லறத்துக்குரிய கர்மங்களை விடுத்து, துறவறத்தை மேற்கொண்டு, ஆத்ம ஞானியை குருவாக நாடி, அவரது திருவடித் தொண்டை மேற்கொள்; அவரிடம் பிரண உபதேசத்தை வேண்டிக் கொள்; வேதங்களின் முடிவான பொருளை உரைக்கும் வாக்கியங் களைக் கேட்டு தெரிந்து கொள்; வீண், தர்க்க வாதங்களில் ஈடு படாதே.

வேதத்தின் முடிவான பொருளை அடைவதற்கு துணை செய்யும் நியாயமான காரணங்களை மட்டும் நன்கு ஆலோசித்து கொள்; எங்கும் நிறைந்த பரம்பொருளே இந்த உடலில், நான் என்னும் அறிவுப் பொருளாக நிற் கிறது என்ற உண்மையை, நினைவில் வைத்துக் கொள்; நான் ஞானவான் என்னும் கர்வத்தை அறவே ஒழித்து விடு; படித்த மேதாவிகளுடன் வாதம் செய்ய வேண்டாம்; பசிப் பிணிக்கு அன்னத்தை மருந்தாக உட்கொள்; ருசியுள்ள உணவைத் தேடியலையாதே; தெய்வாதீனமாக தானாகக் கிடைத்ததைக் கொண்டு மகிழ வேண்டும்.

குளிர், உஷ்ணம் போன்ற உபாதைகளைப் பொருட்படுத் தாமலிரு; பயனில்லாத வார்த்தைகளை சொல்லாதே; பேசும் போது ஜாக்கிரதையாகப் பேசு; எதிலும் பற்றற்ற நிலையில் இரு; உலகத்தாரின் போற்றுதல், தூற்றுதல் இவைகளை மனதில் வாங்கிக் கொள்ளாதே; ஏகாந்தத்தை நாடு.

உயர்வினும் உயர்வான பரம்பொருளிடம் சித்தத்தை லயிக்கச் செய்; எல்லாமாய் நின்ற ஒரே பொருளான ஆத்மாவை அந்த பரிபூர்ண நிலையில் பார்; ஆத்மா ஒன்றே உண்மையில் எல்லாமுமாய் நிற்பதால், இந்த பிரபஞ்சம் எனப்படும் எல்லாப் பொருட்களும் வெறும் தோற்றமே எனும் தெளிவைப் பெறு; இவ்விதத் தெளிவினால், முன் செய்த வினைகளை யெல்லாம் அழித்து விடு; இவ்விதத்தெளிவின் பலத்தினால், வருங்காலத்தில் ஏற்படும் கர்மங்களிடம் ஒட்டாமல் இரு; இந்தப் பிறவியின் இன்ப, துன்பங்களை மகிழ்வுடன் ஏற்று அனுபவித்து விடு; இவ்வளவு வினைகளையும் கடந்த நீயே பரம்பொருள். — இப்படியெல்லாம் உபதேசங்களைச் செய்து உள்ளார். அவரது ஞானோபதேங்களைப் பலரோ, சிலரோ பின்பற்றுவதால் தான், இன்னமும் மனித வர்க்கம் நல்லபடியாக இருக்கிறது என்பது பெரியோர்களின் கருத்து. இந்த உபதேசங்கள், சோபான பஞ்சகம் என்ற ஐந்து சுலோகங்களாக அமைந்துள்ளது. இந்த உபதேசம், சீடர்களாகிய நம் எல்லாருக்கும் சொல்லப்பட்டது தான் என்பதை யும் மறந்து விடக்கூடாது. முடிந்த வரையில் அனுசரித்து நடப்பது நல்லது. சொல்வதும், எழுது வதும் சுலபம் தான். அனுசரிக்க முடியுமா சார்? என்று கேட்டால், அனுசரிக்க வேண்டும் என்பதற்காகத் தான் சொன்னார். முயன்று பார்க் கலாம். முடியாவிட்டால், மனசே ராஜா, புத்தியே மந்திரி. நம் இஷ்டம்!



அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோயில்

மூலவர்:ஆயிரத்தெண் விநாயகர்
பழமை:3000 வருடங்களுக்கு முன்
ஊர்    :ஆறுமுகமங்கலம்
மாவட்டம்:தூத்துக்குடி
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்:ஆதிசங்கரர்    
           
திருவிழா:சித்திரை மாதத்தில் பத்துநாள் பிரம்மோற்சவ திருவிழா கொண்டாடப்படுகிறது. ஏழாம் நாளன்று பஞ்சமுகத்துடன் கூடிய ஹேரம்ப கணபதி நடராஜருடன் திருவீதி உலா வந்து அருள்பாலிக்கிறார்.    
           
தல சிறப்பு:"விநாயகருக்கென தமிழகத்தில் எழுப்பப்பட்ட முக்கியமான கோயில்களில் இதுவும் ஒன்று. அவற்றுள் தேர், கொடிமரம் அமைத்து திருவிழா காணும் கோயில்களில் இதுவும் அடங்கும்.    
           
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.   
         
முகவரி:அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோயில், ஆறுமுகமங்கலம் - 628 802, தூத்துக்குடி மாவட்டம்.     போன்:+91- 461 232 1486   
          
பொது தகவல்:ஆரம்ப காலத்தில் இந்த ஊர் குளத்தின் தென்கரையில் அந்தணர்கள் ஆயிரத்தெண் விநாயகரை ஸ்தாபித்து வழிபட்டனர். முதலில் கர்ப்பகிரகமும் அர்த்த மண்டபமும் அமைக்கப்பட்டது. பிற்காலங்களில் காளஹஸ்தீஸ்வரர், கல்யாணி அம்மன் சன்னதிகளுடன் மகாமண்டபம் அமைக்கப்பட்டது. பிறகு கோயில் விரிவடைந்தது. திருவாவடுதுறை ஆதீனத்தால் கொடிமரம், தேர் மற்றும் உற்சவ மூர்த்திகள் தரப்பட்டன. சமீப காலத்தில் சுற்று மண்டபமும், மேற்கூரை தளமும் அமைக்கப்பட்டன.
   
பிரார்த்தனை:அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும், திருமணத்தில் தடை  இருந்தாலும், படிப்பில் குறைபாடு இருந்தாலும், வழக்குகளில் இழுபறி இருந்தாலும் மோட்டார் வாகனங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டாலும், பணப்பிரச்னை தீரவும் இங்கு வந்து விநாயகரை வழிபட்டால் வேண்டிய காரியங்கள் சிறப்பாக முடியும் என்பது நம்பிக்கை. வீடு கட்ட, திருமண வேலைகள் ஆரம்பிக்க, குழந்தைகளை பள்ளியில் சேர்க்க, வியாபாரம் ஆரம்பிக்க  என நாம் எந்த காரியம் தொடங்கினாலும் முதற்கடவுளின் முதல் கோயிலுக்கு வந்து வழிபட்டு சென்றால் போதும் அதில் எவ்வித தடைகளும் வராமல் இவர் பார்த்துக்கொள்வார்.   
          
நேர்த்திக்கடன்:வேண்டியது நிறைவேறியதும் 108, 1008 தேங்காய் சார்த்தி விநாயகரை வழிபடுகிறார்கள். அத்துடன் 108 தீப வழிபாடும் நடக்கிறது.   
          
தலபெருமை:ஆதிசங்கரர் தன் உடல் உபாதை நீங்க திருச்செந்தூர் செல்லும் வழியில் இத்தலத்தில் "கணேச பஞ்சரத்தினம்' பாடி, பின் திருச்செந்தூர் சென்று "சுப்ரமண்ய புஜங்க ஸ்தோத்திரம்' பாடி வியாதி நீங்கப் பெற்றார்.

தல வரலாறு:தஞ்சாவூர் அருகிலுள்ள திருச்செங்காட்டங்குடி வாதாபி விநாயகர் கூட ஏழாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டதாக கூறப்படும் நிலையில், இத்தல விநாயகர் 2300 ஆண்டுகளுக்கு முன் பிரதிஷ்டை செய்யப்பட்டார் என்ற  தகவல் புதுமையானதாகவே உள்ளது.மற்ற கடவுள்களை தேடி நாம் போக வேண்டும். ஆனால் விநாயகரோ நம்மை தேடி வருவார். எதுவுமே, இல்லாத இடத்தில் கூட கொஞ்சம் மஞ்சள், ஏன் மணலை பிடித்து வைத்தால் கூட பிள்ளையார் ரெடி. அப்படி வந்தவர் தான் இந்த ஆயிரத்தெண் விநாயகர்.கி.மு. 4ம் நூற்றாண்டில் சோமார வல்லபன் என்ற மன்னன் நர்மதை நதிக்கரையிலிருந்து 1008 அந்தணர்களை வரவழைத்து இங்கு பெரிய யாகம் நடத்த முடிவெடுத்தான். ஆனால் ஒருவர் மட்டும் குறைந்துள்ளார். பிரார்த்தனையின் பேரில் விநாயகர் அந்தணர் வடிவில் ஆயிரத்தெட்டாவது நபராக வந்து யாகத்தை பூர்த்தி செய்து தந்தார். இதன் காரணமாக இங்குள்ள விநாயகர் ஆயிரத்தெண் விநாயகர் எனப்படுகிறார்.யாகத்தின் முடிவில் தனக்கு கொடுக்கப்பட்ட ஆறுமுகமங்கலம் கிராமத்திலேயே விநாயகர் தங்கி விட்டதாக வரலாறு கூறுகிறது.    
           
சிறப்பம்சம்:விநாயகருக்கென தமிழகத்தில் எழுப்பப்பட்ட முக்கியமான கோயில்களில் இதுவும் ஒன்று. அவற்றுள் தேர், கொடிமரம் அமைத்து திருவிழா காணும் கோயில்களில் இதுவும் அடங்கும்.



[Image1]
அருள்மிகு மூகாம்பிகை திருக்கோயில்

மூலவர் :  மூகாம்பிகை
தீர்த்தம் :  அக்னி, காசி, சுக்ள, மது, கோவிந்த, அகஸ்தியர், அர்ச்சனை குண்டு
பழமை :2000 வருடங்களுக்கு முன்
ஊர் :கொல்லூர்
மாவட்டம் :உடுப்பி
மாநிலம் :கர்நாடகா
பாடியவர்கள்:ஆதி சங்கரர்.  
      
திருவிழா:பங்குனி உத்திரத்தில் கொடியேற்றி மூலநட்சத்திரத்தில் தேர்த்திருவிழா. இந்த திருவிழாவின் போது மூகாசுரனுக்கும் விழா எடுக்கப்படுகிறது. நவராத்திரி, தீபாவளி. கொல்லூர் அன்னை மூகாம்பிகைக்கு வருடத்தில் நான்கு திருவிழாக்கள் மிகவும் சிறப்பாகவும் விமரிசையாகவும் நடத்தப்படுகின்றன. அவை ஆனி மாதத்தில் வரும் அன்னையின் ஜெயந்தி விழா, ஆடி மாதத்தில் வரும் அன்னை மகாலட்சுமியின் ஆராதனை விழா, புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி விழா, மாசி மாதத்தில் வரும் மகா தேர்த்திருவிழா ஆகியன. சரஸ்வதி பூஜையன்று மூகாம்பிகை சன்னதியில் உள்ள சரஸ்வதி தேவி பக்தர்களின் தரிசனத்திற்காக வெளியே பவனி வருகிறாள்.  
      
தல சிறப்பு:ஆதிசங்கரர் முதன் முதலில் இங்கு வந்தபோது கோல மகரிஷி என்பவர் வழிபட்ட சுயம்பு லிங்கம் மட்டுமே இத்தலத்தில் இருந்தது. இந்த லிங்கத்தில் அம்பாள் அரூபமாக அருள்பாலிப்பதை உணர்ந்த அவர், அங்கிருந்த மேடையில் அமர்ந்து தியானம் செய்வார். அம்பாள் மூகாம்பிகை வடிவில் ஆதிசங்கரருக்கு காட்சி கொடுத்துள்ளார். அந்த உருவத்தை அடிப்படையாக கொண்டு மூகாம்பிகை சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. அலங்காரம், புஷ்பாஞ்சலி, ஆராதனை மட்டுமே நடக்கும். லிங்கத்திற்கு மட்டுமே அபிஷேகம் நடக்கும். இந்த லிங்கத்தின் நடுவில் ஒரு தங்க கோடு இருக்கிறது. இந்த தங்க கோட்டை அபிஷேகத்தின் போது தரிசிக்கலாம். இதில் இடது புறம் பிரம்மா, விஷ்ணு, சிவனும், வலது புறம் சரஸ்வதி, லட்சுமி, பார்வதியும் அருள்பாலிப்பதாக ஐதீகம். இந்த லிங்கத்தை வணங்கினால் முப்பத்து முக்கோடி தேவர்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும். இங்கு ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த கரம் இருக்கிறது. கோல மகரிஷி வழிபட்டதால் இத்தலம் கொல்லூர் ஆனது. பொதுவாக கிரகண நேரத்தில் கோயில்கள் நடை சாத்தப்படும். ஆனால் இங்கு கிரகண நேரத்திலும் தொடர்ந்து பூஜை நடக்கும். இங்கு பூஜை செய்வதற்கு பிரம்மச்சாரிகள் அனுமதிக்கப்படுவதில்லை. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது அர்த்தநாரி சக்தி பீடம் ஆகும்.  
      
திறக்கும் நேரம்:காலை 5 மணி முதல் 1.30 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
    
முகவரி:நிர்வாக அதிகாரி அருள்மிகு மூகாம்பிகை திருக்கோயில், கொல்லூர் -576 220, குந்தாப்பூர் தாலுகா, உடுப்பி மாவட்டம். கர்நாடகா மாநிலம்.போன்:+91- 8254 - 258 245, 094481 77892 
     
பொது தகவல்:கோயில் உள்பிரகாரத்தில் பஞ்சமுக கணபதி, சுப்ரமணியர்,பார்த்தேஸ்வரர், பிராணலிங்கேஸ்வரர், சந்திரமவுலீஸ்வரர், நஞ்சுண்டேஸ்வரர், ஆஞ்சனேயர், மகாவிஷ்ணு, துளசி கிருஷ்ணன், வீரபத்திரர் சன்னதிகள் உள்ளன. இவர்களை வழிபாடு செய்த பின் தாய் மூகாம்பிகையை வழிபாடு செய்ய வேண்டும்.
தினமும் இரண்டு முறை இங்கு அன்னதானம் நடைபெறுகிறது.
 
பிரார்த்தனை:மூகாம்பிகை சரஸ்வதி அம்சமாக திகழ்வதால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க பிரார்த்தனை செய்கிறார்கள். 
     
நேர்த்திக்கடன்:அம்மனுக்கு வஸ்திரம் சாற்றி சிறப்பு பூஜை செய்யலாம். 
     
தலபெருமை:அம்பிகை இக்கோயிலில் பத்மாசனத்தில், இரு கைகளில் சங்கு, கரத்துடன், காளி, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரின் வடிவில் அருள்புரிகிறாள். ஐம்பொன்னால் ஆன காளி, சரஸ்வதி சிலைகள் மூகாம் பிகையின் இருபுறமும் உள்ளன. முத்தேவியருக்கும் தினமும் சிறப்பு பூஜை நடக்கிறது. நவராத்திரி இக்கோயிலில் மிக விசேஷமாக கொண்டாடப்படுகிறது. ஆதிசங்கரர் இங்கு மூகாம்பிகையை, சரஸ்வதியாக பாவித்து வணங்கி, "கலா ரோகணம்' பாடி அருள் பெற்றார். சரஸ்வதி பூஜையன்று சரஸ்வதி சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அன்று குழந்தைகள் கல்வியில் சிறப்பிடம் பெறுவதற்காக நடக்கும் வித்யாரம்ப நிகழ்ச்சி சிறப்பாக நடக்கிறது.சகலநோய் நிவாரணி: ஒரு முறை ஆதிசங்கரர் மூகாம்பிகை நினைத்து இங்கு தவம் புரிந்து, எழ முயன்றபோது அவரால் முடியவில்லை. அவருக்காக அம்பாளே கஷாயம் தயாரித்து சங்கரருக்கு கொடுத்ததாகவும், அன்றிலிருந்து இரவு நேர பூஜைக்கு பின் கஷாயம் பிரசாதமாக வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த கஷாயத்தை சாப்பிட்டால் சகல நோய்களும் குணமாகும் என்பது நம்பிக்கை. இத்தலத்திலிருந்து தான் ஆதி சங்கரர் "சவுந்தர்ய லஹரி' எழுதியுள்ளார்.

குடஜாத்ரிமலை: கொல்லூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் குடஜாத்ரி மலை இருக்கிறது. அனுமன் சஞ்சீவி மலையை தூக்கி சென்ற போது அதிலிருந்து விழுந்த துண்டு பகுதி குடஜாத்ரி மலையானது என்பர். இதில் 64 வகை மூலிகைகளும், 64 தீர்த்தங்களும் உள்ளன. இந்த மலையில் கணபதி குகை, சர்வஞபீடம், சித்திரமூலை குகை உள்ளன. இந்த குகையில் ஆதிசங்கரரும், கோலமகரிஷியும் தவம் செய்ததாகவும், இவர்கள் தேவைக்காக அம்பாளே ஒரு நீர் வீழ்ச்சியை இங்கு தோற்றுவித்ததாகவும் கூறுவர்.
மாசி மகா தேர்த்திருவிழா வைபவம் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மாண்டமாகவும், மிகவும் விமரிசையாகவும் நடைபெறும். அன்னையின் புன்னகை பூத்துக்குலுங்கும் எழில் வதனமும், புவனத்தை ஈர்க்கும் வைர மூக்குத்தியும், அனைவரின் கவனத்தைக் கவரும் தங்கக் கிரீடமும், தாமரைத் திருவடிகளும், அருள் சுரக்கும் அழகிய நேத்திரங்களும், சிம்மத்திவ் மீதமர்ந்து கம்பீரமாகக் காட்சியளிக்கும் மூகாம்பிகையின் திருக்கோலத்தை காணக் கண்கோடி வேண்டும். திருத்தேர்விழாவை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து மகிழ்கிறார்கள். இவ்விழாவில் ஆயிரக்கணக்கான ஆதிவாசிகள், மலைவாசிகள் கலந்து கொண்டு அம்பிகையின் அருளைப் பெறுகிறார்கள்.
 
தல வரலாறு:முன்னொரு காலத்தில் இப்பகுதியில் மூகாசுரன் எனும் அசுரன் சிவனை நோக்கி தவமிருந்தான். அவன் தவப்பயனை அடைந்துவிட்டால் உலகிற்கு துன்பம் ஏற்படும் என்பதால், தேவர்கள் அம்பிகையிடம் முறையிட்டனர். அம்பிகை, மூகாசுரனின் தவத்தைக்கலைத்து, அவனுடன் போரிட்டாள். அவன் அம்பிகையிடம் சரணடைந்தான். அவனது வேண்டுகோளுக் கிணங்க இத்தலத்தில் அவனது பெயரையே தாங்கி, "மூகாம்பிகை' என்ற பெயரில் தங்கினாள்.
 
சிறப்பம்சம்: இங்குள்ள சுயம்பு லிங்கத்தின் நடுவில் ஒரு தங்க கோடு இருக்கிறது. இந்த தங்க கோட்டை அபிஷேகத்தின் போது தரிசிக்கலாம்.


[Image1]