புதன், 18 டிசம்பர், 2013

பெற்றோர் மற்றும் பிள்ளைகள் ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது என்ன?

*பெற்றோர் பிள்ளைகளிடம் எதிர்பார்ப்பது: மகனே, மகளே! உங்களை உலகிற்குத் தந்த எங்களின் பெருமையை, மதிப்பை எப்போதும் மதித்து நடந்து கொள்ளுங்கள். பெரியவர்கள் அனுபவசாலிகள். ஆகவே உங்களது நன்மைக்காகச் சில அறிவுரைகளைச் சொல்வார்கள் என்பதை நம்புங்கள்.

* ஆடி ஓடி விளையாடுங்கள். ஆனால் உங்களுக்கு அதிலேயே பொழுது கழிந்துவிடக் கூடாது என்பதால் நாங்கள் அவ்வப்போது குறுக்கிடுவோம். பொறுத்துக் கொள்ளுங்கள்!

* செய், சரி, நல்லது என்பதைச் சொல்ல நாங்கள் தயார். இடையிலேயே சில வேண்டாம், கூடாது என்று வருவதெல்லாம் இயல்புதான். பெரிதுபடுத்தாதீர்கள்.

* எல்லா இடத்திற்கும் உங்களை அழைத்துச் செல்ல இயலாமல் போகலாம். அதற்காக வருத்தப்பட வேண்டாமே!

*நீங்கள் தனிமையை விரும்பலாம். ஆனால் உங்கள் தனிமை உங்களுக்கு நன்மை தராவிட்டால் என்ன செய்வது? அதனால்தான் நாங்கள் பக்கத்தில் துணைக்கு நிற்கிறோம். எங்கள் கவலை எங்களுக்கு.

*நீங்கள் சொல்லும் பதிலை நாங்கள் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். நம்புங்கள். வேறு எங்கு பார்த்தாலும் கவனம் எங்கள் பிள்ளைகளான உங்கள் மீதுதான்.

*மொபைலில் நீங்கள் நீண்ட நேரம் பேசுவது தவறல்லதான். ஆனால் காலத்தின், பணத்தின் அருமையை யோசியுங்கள்.

*நல்ல பொருளைத் தொலைத்து விட்டு வந்தால் கொஞ்சவா முடியும்? திட்டுவோம். அடுத்து அது மாதிரி நிகழாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றுதான். பாசமில்லாத கொடியவர்கள் அல்லவே நாங்கள்?

* உங்களுக்குப் பிடித்தமான உடைகளை வாங்கித் தருகிறோம். ஆனால் அது நம் குடும்ப கவுரவத்திற்கு ஏற்றதாக இருக்குமா என்று யோசியுங்கள்.

* உங்களை அரவணைப்பதைவிட, உங்கள் இனிய பேச்சைக் கேட்பதை விடவா உலகில் எங்களுக்குப் பேரின்பம் உள்ளது? அந்த வாய்ப்பை அவ்வப்போது தாருங்கள்.

*நீங்கள் சினிமாவில் வரும் ஆரவார இசையை ரசிக்கலாம். அதே நேரம் பெரியவர்களான நாங்கள் ரசிக்கும் பக்திப் பாடல்களையும் கேட்க மறுக்காதீர்கள். கேலி செய்யாதீர்கள்.

*உங்களுக்கு உயர்ந்த லட்சியம் காட்டவும் நற்பண்புகளை உணர்த்தவும் நாங்கள் முன்மாதிரியாக இருக்கிறோம் என்பதை மறவாதீர்கள்.

* கண்மணிகளே! டி.வி. பாருங்கள். தடுக்கவில்லை. மனதைக் கெடுத்துவிடும் சிலவற்றை நீங்கள் பார்த்துவிடக் கூடாதே என்ற பயம் எங்களுக்கு உள்ளது. அதனால்தான் சதா டி.வி பார்க்காதே என எச்சரிக்கிறோம், நச்சரிக்கவில்லை.

*உங்கள் நன்மைக்காக உங்களிடம் சுறுசுறுப்பு, வேலையில் திறமை, சுகாதாரமான பழக்கங்கள் இவற்றை நாங்கள் எதிர்பார்ப்பது தவறா?

* நாங்கள் வேலையாக இருக்கும்போது நீங்கள் அருகில் வந்து இதை அடுக்கவா, இதை வெட்டித்தரவா, அதைக் கொண்டு போய் அங்கு வைக்கவா என்று கேட்டு சிறு உதவி செய்து உங்கள் அன்பை இப்படியும் வெளிப்படுத்தலாமே!

* உங்கள் ஆற்றலைப் புரிந்து கொள்ளுமாறு உங்களுக்கு எந்தத் துறையில் ஆர்வம் உள்ளது என எங்களிடம் கூறுங்கள்.

* வாய்ப்புகளையும் வசதிகளையும் நாங்கள் செய்து தருகிறோம். சாதனைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்!

* படிப்பின் சுமை, வீட்டுச்சுமை அதிகம் உள்ளதால் உங்களை நாங்கள் வீட்டு வேலை செய்ய அதிகம் ஏவுவதில்லை. உங்களைப் புறக்கணிக்கிறோம் என்று நினைக்காதீர்கள்.

* நீங்கள் பெரியவர்களான எங்களைக் கேலி செய்வதாகவோ, அவமானப்படுத்துவதாகவோ தோன்றும்படிகூட நடந்து விடாதீர்கள். எங்களால் அவற்றைக் தாங்கிக் கொள்ள முடியாது.

*எங்கள் கவலைகளை எல்லாம் நாங்கள் உங்களிடம் சொல்வதில்லை. பிஞ்சுகளான உங்களிடம் பிரச்னை, கவலை என்று திணித்து வருத்தப்பட வைக்க நாங்கள் விரும்பவில்லை. இது பெருந்தன்மை என்று புரிந்து கொள்ளுங்கள்.

! பிள்ளைகள் பெற்றோரிடம் எதிர்பார்ப்பது :

* அம்மா அப்பாக்களே, உங்கள் பிள்ளையாகிய நான் சொல்லும் சில நல்ல விஷயங்களைக் காதுகொடுத்துக் கேளுங்கள். நான் ஏதாவது நல்ல வேலையைச் செய்தால் என்னைத் தவறாமல் பாராட்டுங்கள்; மனம் திறந்து ஊக்குவியுங்கள்.

* உங்களுக்குச் சிலவற்றைக் கற்றுத் தர என்னையும் அனுமதியுங்கள். நீங்களே என்றும் கற்றுத் தருபவராக இருக்காதீர்கள்.

* பொது இடங்களில் என் மீது உங்களின் அதிகப் பாசத்தைக் கொட்டி வெளிப்படுத்தாதீர்கள். அப்போது நான் நெளிவேன்.

* உங்கள் இளம்வயதில் நீங்கள் செய்ததைப் போன்றே என்னையும் சில சோதனைகளை மேற்கொள்ளவிடுங்கள்.

* நான் அதிகம் விரும்பும் விளையாட்டுக்கள், கொஞ்சம் ஊர் சுற்றுவது போன்றவற்றை இழக்கச் செய்யாதீர்கள்.

* என் தனிமைக்கும் சிறிது மதிப்பளியுங்கள்.

* நான் ஏதாவது கேட்டுவிட்டால் உடனே, இல்லை அல்லது உனக்கு அது வேண்டாம் என்பதைவிட, சரி, செய், நான் பார்த்துக் கொள்கிறேன் போன்ற வார்த்தைகளை அதிகம் கூறுங்கள்.

* சிறிய காரியங்களுக்காக நீங்கள் செல்லும் போது, என்னையும் உடன் அழைத்துச் செல்லுங்கள். எனக்கும் அவற்றைக் கற்றுக் கொடுங்கள்.

* நான் பார்க்க வேண்டிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நிர்ணயத்துச் சொல்லுங்கள். ஒரேடியாக டி.வி.யைப் பார்க்காதே என்று சொல்லிவிடாதீர்கள்.

* வாழ்நாள் முழுவதற்கும் நிலைக்கும் திறனை அல்லது சிறப்பு ஆற்றலை நான் பெற உதவுங்கள்.

* அம்மாவே, என்னிடம் உங்களுக்குள்ள எதிர்பார்ப்புகளுக்கு என்னிடம் காரணம் கூறி, என் வளர்ச்சியில் உங்களோடு என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

* குடும்ப வேலைகள் முன்னிட்டு நான் எல்லோரிடமும் நெருக்கமான உணர்வை ஏற்படுத்திக் கொள்ள உதவுங்கள்.

* நல்ல விஷயங்களை எனக்கு விளக்கிக் கூற நேரம் ஒதுக்குங்கள். விளக்கினால் மட்டும் போதாது, நான் அதைப் புரிந்து கொண்டேனா என என்னை விசாரியுங்கள்.

* சிறிது வளர்ந்ததும் சில சமயம் நான் விசித்திரமாக உணர்கிறேன். எனவே நான் விசித்திரமாக நடந்து கொள்வதை மனதில் கொள்ளாதீர்கள்.

* சில நேரங்களில் என்னை விட்டு விலகியிருங்கள். எப்போதும் என்னைப் பொத்திப் பொத்தி வைக்காதீர்கள்.

* சில சமயங்களில் நான் நடந்து கொள்வது உங்களைக் கேலி செய்வது போல் இருக்கலாம். என்னை அறியாமலே நடந்துவிடுகிறது. இதை ஒரு பொருட்டாக எண்ணாதீர்கள்.

* குடும்பப் பிரச்னைகள் அல்லது மற்ற பிரச்னைகள் பற்றியும், பணப் பிரச்னை, வீட்டுப் பிரச்னை போன்றவற்றைப் பற்றியும் என்னிடம் சொல்லுங்கள். இவற்றை என்னிடம் கூறாமல் தவிர்த்தால் பிறகு தானாகத் தெரியவரும்போது என் மனம் மிகவும் புண்படும்.

* பல விளையாட்டுகளைக் குடும்பத்துடன் விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கும். அதற்கு நேரம் ஒதுக்குங்கள்.

* நீங்கள் என்னிடம் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுங்கள்.

* நான் தவறு செய்யும்போது, தவறைப் புரிய வைத்து மன்னிப்பு கேட்கப் பழக்குங்கள்.

* உணவு விஷயத்தில் நான் கேட்டுக் கொண்டிருப்பதைத் தொடர்ந்து கொடுக்காதீர்கள்.

* நீங்கள் கேள்வி கேட்கும்பொழுது, நான் சொல்லும் பதிலை உன்னிப்பாகக் கேளுங்கள்.

* என்னிடம் நீங்கள் காட்டும் அன்பை வெளிப்படுத்தும் சிறந்த வழி நீங்கள் என்னைக் கவனித்துக் கேட்பதுதான்.

* எனக்காகக் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருங்கள். அது எனக்குப் பாதுகாப்பு உணர்வைத் தரும்.
இந்த மாதிரி ஒரு மோட்சம் நமக்கு கிடைக்க நிச்சயம் வாய்ப்பில்லை. இருந்தாலும் இந்த மாதிரி மோட்சம் கிடைப்பதற்கு நாம் பிரார்த்தனை செய்வோம்.

நினைவு கூர்ந்தவர்: ஸ்ரீமடம் பாலுமூலம் : மஹாபெரியவாள் தரிசன அனுபவங்கள் - ஐந்தாம் பகுதிமுதுமை, உடல் தளர்ச்சி, துணை இல்லாமல் வெளியே போக முடியாது. ஆட்டோ, டாக்ஸியில் போகலாமே என்றால், அதற்கெல்லாம் வசதியில்லை.நெஞ்சு மட்டும் படபடவென்று அடித்துக் கொள்கிறது .அவன் வர்றதுக்குள்ளே, இவாளைப் பார்த்துடணும்.ஒரே ஒரு தடவைவெறும் பகற்கனவு என்பது அவருக்கே புரிகிறது. ஆனால், நாள் ஆக, ஆக, தவிப்பும் வளர்ந்துகொண்டே போயிற்று.வாசற்படியில், காலடிச் சத்தம் கேட்டாலே, அவன் தானோ? என்ற திகில் போகவேண்டியிருக்கி றதே?என்ற அச்சம் இல்லை; தரிசிக்காமல் போகிறோமே! என்ற ஏக்கம்.ஒருநாள் வாயிற்புறத்தில் காலடிச் சத்தம்.ஆமாம், காலடிச் சத்தம்.உங்களை அழைச்சிண்டு காஞ்சிபுரம் வரும்படி பெரியவா உத்தரவு.. என்றார் வந்தவர்.வயோதிகரின் ஆத்மா சிலிர்த்தது. நான் எனக்குள் தானே பேசிக் கொண்டேன்? அதெப்படி பெரியவாளுக்குக் கேட்டிருக்கும்?நான் என்ன பண்டிதனா? அக்னிஹோத்ரியா? இல்லை, அமைச்சரா? அரசியல் தலைவரா? எப்போதோ ஒரு தேங்காயைச் சமர்ப்பித்து, நமஸ்காரம் செய்த நினைவு. நெஞ்சில் பதிந்த திருவுருவம், காலத்தால் மறைந்துவிடவில்லை.மடத்துப் பணியாளர், என் தோளைப் புடிச்சிண்டு நடந்து வந்து கார்லே ஏறிக்கிறேளா?என்றார்.கார்! விமானத்தையல்லவா எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்!இவர்கள் இருவரும் காஞ்சிபுரத்தைச் சென்றடைந்த சமயத்தில், பெரியவாள் அன்னை காமாக்ஷி கோயிலில் இருந்தார்கள்.அம்பாளைத் தரிசனம் பண்ணிட்டுப் போகலாமா? என்றார் சிப்பந்தி.முதல்லே, பெரியவா தரிசனம் அப்புறமா.......பெரியவாள் திருமுன்னிலையில் போய் நின்றார். பேச்சு வரவில்லை. கண்கள் பேசிக் கொண்டன. ஒரு வழியாகச் சமாளித்துக் கொண்டு, பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தார்.ஐந்து நிமிஷமாயிற்று. எழுந்திருக்கவேயில்லை.பெரியவா தன்னுடைய ஒரு காஷாய வஸ்திரத்தைக் கொடுத்து, அந்தச் சரீரத்தின் மேல் போர்த்தச் சொன்னார்கள். மடத்துப் பணியாளர்களே இறுதிச் சடங்குகளைச் செய்யும்படி உத்தரவாயிற்று.முதல்லே பெரியவா தரிசனம்; அப்புறமாஅப்புறமா அம்பாளைத் தரிசித்துக் கொள்ளலாம் என்று சொல்லத்தானே விரும்பினார். அவர் விருப்பம் நிறைவேறிவிட்டது.அரைமணி கழித்து, அவர் விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தார் அம்பாளை தரிசிக்க. இனி, எந்த ஒரு தாயின் கர்ப்பமும் அவருக்குக் கிருஹம் ஆகமுடியாது!யத்ர கத்வா, ந நிவர்த்தந்தே. அவருக்கு இனி மண்வாசனை பிராப்தமில்லை.ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!
ஜகத் குரு -மஹா பெரியவா
நிறைய மந்திரத்துக்கு பொருளும் , மகத்துவம்
சொல்லி இருக்கார் !
ஸ்ரீ கஞ்சி மஹா பெரியவா புற்று நோய்க்கு மந்த்ரம் சொர்ப்பொழிவுல
சொல்லி இருக்கார்!!

45 நாள் -108 முறை விடாம சொல்லிண்டு வந்தா புற்றுநோய்க்கு
சிரம்மானவா ச்வச்தமாகும் நு பெரியவர் வாக்கு !

நாராயணீயம் : சர்கம் 8 : ஸ்லோகம் 23 !!

நம்பிகையோட பாராயணம் செய்து பயன் பெறவும் !

---"அஸ்மின் பரமாத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோனிஹி
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருத்தி வாதாலய வாஸ விஷ்ணோ !!
முதல் தமிழ் வருடம்!

முதல் தமிழ் வருடம் பிரபவ எனப்படும். வியாழன் (குரு) ஒரு முறை வான வட்டத்தை சுற்றுவதற்கு 12 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும். சனி ஒருமுறை சுற்ற 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும். இவை இரண்டும் அசுவினி (அசுவதி) நட்சத்திரத்தில் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடும். அசுவினி நட்சத்திரங்களில் முதன்மையானது. இவ்வாறு கூடும் நாளே தமிழ் முதல் ஆண்டின் துவக்கநாள் ஆகிறது. பிரபவ முதல் அட்சய வரை 60 ஆண்டுகள் உள்ளன.
அம்மனுக்கு உப்பு, மிளகு காணிக்கை ஏன்?

பெரும்பாலான அம்மன் கோயில்களில் அம்பாளுக்கு உப்பும், மிளகும் காணிக்கையாக படைக்கின்றனர். நமது உடலை உப்புக்கும், உடலில் உள்ள அகங்காரத்தை மிளகிற்கும் ஒப்பிடுகிறோம். அகங்காரத்தை அகற்றி நல் உடம்பைத் தரவேண்டும் என அம்பிகையிடம் வேண்டிக்கொள்வதற்காகவே இந்த வழக்கம் ஏற்பட்டது.
பெரியபுராணம் தந்த சேக்கிழார்

பெரியபுராணம் தந்த சேக்கிழார் அரசபதவியை விட்டெறிந்து தெய்வத் திருப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். திருத்தொண்டர்புராணம் எனப்படும் பெரியபுராணம் இன்றளவும் நிலைபெற்று விளங்குவதற்கு இவரது அயராத உழைப்பே காரணம். தொண்டை நாடு புலியூரில் குன்றத்தூர் கிராமத்தில் அவதரித்தவர் சேக்கிழார். அவர் பிறந்ததும் அருண்மொழி ராம தேவர் என்ற பெயர் இடப்பட்டது. இவரது சகோதரர் பாலறாவாயர். சேக்கிழாரின் தந்தை இரண்டாம் குலோத்துங்கன் எனப்பட்ட அநபாய சோழனிடம் அமைச்சராகப் பணியாற்றினார். 1133ம் ஆண்டு முதல் 1150ம் ஆண்டு வரை இவனது ஆட்சிக்காலம் இருந்தது. சேக்கிழாரின் தந்தை அரசவைக்கு வரும் போதெல்லாம் சேக்கிழாரையும் உடன் அழைத்து வருவார். இதனால் சேக்கிழாருக்கு அரசியல் நடவடிக்கைகள் அத்துப்படி ஆயின. தந்தையைத் தொடர்ந்து சேக்கிழாருக்கு அந்தப்பதவி கிடைத்தது. அநபாயச்சோழன் சேக்கிழாரை தனது முதல் அமைச்சராகவே நியமித்தான். சேக்கிழார் தனது பொறுப்பை நல்லமுறையில் கவனித்து நாட்டை நல்வழியில் நடத்திச் சென்றார். ஒருமுறை திருநாகேஸ்வரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை தரிசிக்க சேக்கிழார் சென்றார். இறைவனைக் கண்டதும் அவரது கண்கள் பனித்தன. அவர் உடலே இறைசக்தியால் ஆட்டுவிக்கப்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. அரசபதவியை விட்டுவிட்டு தெய்வப் பணிக்கு சென்று விடலாமா என எண்ணினார். இந்த நேரத்தில் மன்னனின் போக்கு திடீரென மாறியது. மன்னன் அநபாயச்சோழன் சீவகசிந்தாமனி என்னும் காப்பியத்தை படித்துவிட்டு சிற்றின்பத்தில் மூழ்கி காலத்தை கழித்தான். எனவே சிவ நூல்களை படித்து நல்லவழியில் செல்ல மன்னனை சேக்கிழார் கேட்டுக்கொண்டார்.

அவன் சேக்கிழாரிடம், சமயநூல்களை உருவாக்கியவர்கள் யார் என கேள்வி கேட்டான். மன்னன் இப்படி கேட்டதே சேக்கிழாருக்கு பெருமையாக இருந்தது. சேக்கிழார் அதற்குரிய விளக்கங்களை மன்னனிடம் எடுத்துக்கூறினார். நம்பியாண்டார் நம்பி எழுதிய திருவந்தாதியை செப்பேடு செய்து ராஜராஜசோழன் சைவ சமயத்தின் உண்மை நெறியை மக்களுக்கு எடுத்துக்காட்டினான். அப்படிப்பட்ட மன்னனின் வழியில் வந்த தாங்களும் சைவ சமயத்தை காக்க ஏற்பாடுசெய்ய வேண்டும் என சேக்கிழார் எடுத்துக்கூறினார். இதையடுத்து மன்னன் திருந்தினான். சிவபெருமானின் தொண்டர்களின் வரலாற்றை காவியமாக்கி தரவேண்டும் என சேக்கிழாரை கேட்டுக்கொண்டான். அதற்காக பொன்னும் பொருளும் கொடுத்து வேண்டிய ஏற்பாடுகளை செய்தான். சேக்கிழார் சிதம்பரம் நகருக்கு சென்றார். அங்கு நடராஜ பெருமானை வணங்கி, சிவனின் திருத்தொண்டர்களின் வரலாற்றை எழுத அடியெடுத்துக் கொடுக்க வேண்டும் என வேண்டினார். தில்லையம்பல நடராஜர் உலகெலாம் என அடியெடுத்துக் கொடுத்தார். அதை முதற்சொல்லாக வைத்து சேக்கிழார் பெரியபுராணத்தை எழுதத் தொடங்கினார். அதில் 4253 பாடல்கள் இருந்தன. எழுத்துப்பணி முடிந்து காவியத்தை நடராஜரின் பாதத்தில் சேக்கிழார் சமர்ப்பித்தார். இதைக் கேள்விப்பட்ட மன்னன் தனது பரிவாரங்களுடன் சிதம்பரத்திற்கு புறப்பட்டு வந்தான். மன்னன் வருவதை அறிந்த சேக்கிழார் சிதம்பரத்தில் உள்ள மூவாயிரம் அந்தணர்களுடனும் திருமட தலைவர்களுடன் சென்று மன்னனை வரவேற்றார். அவர் ருத்திராட்சமும் திருநீறும் அணிந்து சிவனடியார் போல நின்று கொண்டிருந்தார். அந்த உருவத்தை பார்த்த உடனேயே மன்னன் அவரை வணங்கினான். அப்போது விண்ணில் அசரீரி வாக்கு எழுந்தது. சேக்கிழார் முடித்த பெரியபுராணத்தை அரங்கேற்றம் நிகழ்ச்சியை மிகப்பெருமளவில் நடத்த அசரீரி வாக்கு கூறியது.

இதையடுத்து மன்னன் விழா ஏற்பாடுகளை ஆரம்பித்தான். தில்லை நடராஜருக்கு உகந்த நல்லநாளும், திருஞான சம்பந்தர் அவதரித்த பொன்னாளுமான சித்திரை திருவாதிரை தினத்தில் அரங்கேற்ற நிகழ்ச்சியை தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது . மிகப்பெரிய விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடக்கும் திருவிழாவிற்கு வரும் கூட்டம் போல பக்கத்து நாடுகளிலிருந்து, புலவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் சிதம்பரத்தில் கூடினர். ஊரெங்கும் பூரணகும்பம் வைத்து திருவிளக்கு ஏற்றினர். ஒருபக்கம் சிலம்பாட்டம், மற்றொரு பக்கம் நடனம் என கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சிதம்பரம் நடராஜர் கோயில சிற்பங்கள் வர்ணம் பூசப்பட்டன. வீதியெங்கும் வாழை, கமுகு தோரணங்கள் அலங்கரித்தன. இப்படிப்பட்ட குதுகலமான சூழ்நிலையில் நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் பெரியபுராணத்தின் அரங்கேற்றம் துவங்கியது. அரங்கேற்றம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்து. கதை முடிந்தபாடில்லை. ஒரு வருடம் பெரியபுராணத்தை சேக்கிழார் பாடினார். அடுத்த ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை தினத்தன்று தனது இனிய கவிதைகளை பாடிமுடித்தார். சேக்கிழார் தந்த பெரியபுராணத்தில் 63 நாயன்மார்களின் வரலாறு இடம்பெற்றுள்ளது. விழா முடிந்ததும் மன்னன் மீண்டும் தன் நாடு அடைந்தான். சேக்கிழாரின் சகோதரரான பாலறவாயரை அமைச்சராக்கி அவருக்கு தொண்டைமான் என்னும் பட்டத்தை வழங்கினான். அவனது காலத்தில் நாடு மிகச் செழிப்பாக விளங்கியது. அதன்பிறகும் சேக்கிழார் தில்லையரசரின் புகழ்பாடி அவரது திருவடியைச் சேர்ந்தார்.
ஓம் நமோ பகவதே தத்தாத்ரேயாய:

அத்திரி மகரிஷி- அனுசூயா தம்பதிகள் காட்டில் குடில் அமைத்து வசித்தனர். அவர்களுக்கு மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் குழந்தைகளாகப் பிறக்க வேண்டும் என்பது ஆசை. இதற்காக கடுமையாகப் பிரார்த்தித்து வந்தனர். கடவுளே குழந்தையாகப் பிறப்பதென்றால் சாமான்யமா? அதிலும் மும்மூர்த்திகளும் ஒன்றுசேர்ந்து வந்தாக வேண்டுமே! மூவரும், அவர்களது பக்தியைச் சோதிக்க முடிவெடுத்தனர். துறவிகள் போல் வடிவெடுத்து, அத்திரியின் குடில் முன் வந்தனர். அத்திரி அப்போது வீட்டில் இல்லை. அவர் மனைவி அனுசூயா தர்மபத்தினி. கணவருக்கு தினமும் பாதபூஜை செய்து, அந்த தீர்த்தத்தை தலையில் தெளித்த பின்பே பணிகளைத் துவங்குவாள். அந்த தீர்த்தம் எப்போதும் வீட்டில் இருக்கும்.

அனுசூயா வந்தவர்களை வரவேற்றாள்.துறவிகள் தங்களுக்கு பசிப்பதாகக் கூறினர். உள்ளே உணவெடுக்கச் சென்ற அனுசூயாவிடம், தாயே... எங்களிடம் ஒரு பழக்கம் உள்ளது. எங்களுக்கு யார் உணவிட்டாலும், திகம்பர (நிர்வாணம்) நிலையிலேயே வாங்குவது வழக்கம். அப்படி செய்தால் மட்டுமே உணவு பெறுவோம்... என்றனர். அனுசூயா நல்லறிவு மிக்கவள். சாதாரண மனிதர்கள் இப்படி கேட்க மாட்டார்கள். இது ஏதோ தெய்வ சங்கல்பம் என நினைத்தவள், சற்றும் பதட்டமின்றி, அதற்கென்ன... அவ்வாறே உங்கள் பசியை தீர்த்து விடுகிறேன்... என்றவள் வீட்டுக்குள் சென்றாள். கணவரின் பாத தீர்த்தத்தை எடுத்து வந்து,இறைவா... நான் என் கணவர் மீதும், உன் மீதும் கொண்ட பக்தி உண்மையென்றால், இந்த துறவிகளை குழந்தைகளாக மாற்று... என்று கூறி அவர்கள் மேல் தெளித்தாள்.

அந்த பத்தினி தெய்வத்தின் பக்தியால், மூவரும் குழந்தைகளாகி விட்டனர். அவர்கள் விரும்பியபடியே அவர்களுக்கு பாலூட்டி, பசி தீர்த்தாள். அத்திரி முனிவரும் வந்தார். நடந்ததைக் கேட்டார். தன் ஞான திருஷ்டியால், வந்திருப்பவர்கள் மும்மூர்த்திகள் என்பதைப் புரிந்து கொண்டார். அவர்களை அன்புடன் அணைத்தார். அந்த குழந்தைகள் மூன்று தலையும், ஆறு கைகள் மற்றும் ஓருடலும் கொண்டதாக மாறின. இந்த தகவல் நாரதர் மூலம், மூன்று தேவியருக்கும் தெரிய வரவே, அவர்கள் அனுசூயையிடம் வந்து, தங்கள் கணவன்மாரை திருப்பித்தர வேண்டினர்.தேவியரே... இந்தக் குழந்தை எங்களிடமே வளர வேண்டும் என்பது எங்கள் விருப்பம். அதை நிறைவேற்றி வைத்தால் உங்கள் கணவன்மாரைத் திருப்பித் தருவேன்... என்றாள். மூன்று தேவியரும் அதற்கு ஒத்துக் கொள்ளவே, அனுசூயை மும்மூர்த்திகளை மானசீகமாக வேண்டினாள். அப்போது மூன்று தெய்வங்களும் காட்சியளித்து, தங்கள் சக்தியாகிய அக்குழந்தை ஒரு முனிவராக விளங்குவான்... என்று கூறி ஆசியளித்து, குழந்தைக்கு, தத்தாத்ரேயன் என்று பெயர் சூட்டினர். தத்தாத்ரேயன் என்றால், மும்மூர்த்திகளுக்கு சமமானவர் என்று பொருள்.

நாமும் தத்தாத்ரேயரை வழிபட்டு மும்மூர்த்திகளை வழிபட்ட பலனை பெறுவோம்
ஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகள் மதுரை மீனாட்சியின் அருந்தவப்புதல்வர். 1627ல் மதுரையை அடுத்த சமயநல்லூரில் அண்ணாஸ்வாமி சர்மா, திரிபுரசுந்தரி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தைச் செல்வம் இல்லை. இருவரும் மதுரை மீனாட்சி கோயிலுக்கு வந்தனர். திரிபுர சுந்தரி மனமுருகி பிரார்த்தித்தார். அம்மா, மீனாட்சி ! கிளி ஏந்திய காரிகையே ! எங்களுக்கு குழந்தை பிறந்தால், அதை நாங்கள் கூட வளர்க்க பிரியப்படவில்லையம்மா ! நீயே வைத்துக் கொள். குழந்தை பிறந்ததும், உன் பாதத்தில் விட்டு விடுகிறோம். நீயே அந்தக் குழந்தைக்கு தாயாக இரு, என கண்ணீர் விட்டு மனமுருகி வேண்டினார். ஒன்றுக்கு இரண்டாக இரட்டை குழந்தைகளைக் கொடுத்தாள். பாதங்களில் சங்கு சக்கரங்களுடன் பிறந்த மூத்த குழந்தையை தாங்கள் வேண்டியபடி அன்னை மீனாட்சியிடம் ஒப்படைத்தனர் அந்த தம்பதியர். ஒரு குழந்தையை தாங்கள் வளர்த்தனர். கோவிலுக்குள் வந்த குழந்ததைக்கு பாலுட்டி சீராட்டி, உயரிய மந்திரத்தை உபதேசித்து, தாயாக, தந்தையாக, குருவாக இருந்து வளர்த்தாள் மீனாட்சி. கோயிலில் வளர்ந்த குழந்தையை குழந்தைசாமி என பக்தர்கள் அழைத்தனர்.

குழந்தைசாமியின் 16ம் வயதில் அவரது தந்தையும் தாயும் அம்பாளின் திருவடியை அடைந்தார்கள். இதன்பின் வட திசை நோக்கி பயணமானார் குழந்தை சுவாமி. காசி சென்று அங்கே திரைலிங்க ஸ்வாமிகள் என்ற பெயருடன் கடுமையாக தவம் செய்து நிர்விகல்ப சமாதியில் 150 ஆண்டு காலம் காசிநிவாசியாக அருள் பாலித்தார். பின் கங்கை கரையில் சமுத்திரகூடம் என்னுமிடத்தில் உள்ள குகையில் நீண்ட காலம் தவமிருந்தார். (இந்த குகையைத்தான் பின்னாளில் சுவாமி விவேகானந்தர் கண்டு பிடித்து இந்த இடத்தில் தவம் இருந்து விஜய யாத்திரையை ஆரம்பித்தார்.) பிறகு கைலாய மலையிலும், மகாமேரு சிகரத்திலும் அமர்ந்து அருள்பாலித்தார். மானஸரோவர், கங்கோத்ரி, அமர்நாத், கேதார்நாத் ஸ்தலங்களில் நிர்விகல்ப சமாதியில் நீண்ட நாட்கள் இருந்திருக்கிறார். கஜானந்தேந்திர சரஸ்வதி என்ற திருநாமத்துடன் இமாலயத்திலுள்ள ஆதிசங்கர பீடத்தை அலங்கரித்தார். நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தென் தேசத்திற்கு விஜயம் செய்து மக்களுக்கு அருள்பாலித்துள்ளார். மதுரையை அடுத்த சித்தாலங்குடி என்ற கிராமத்தில் குழந்தை சித்தராய் தங்கி, பல சித்துகள் செய்து சமாதி அடைந்து மீண்டும் வெளியே வந்து வேறொரு இடத்தில் தோன்றியருளினார். சித்தாலங்குடியில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் 4,5,6 தேதிகளில் குருபூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி கன்னிமாரம்மன் கோவில் தெருவில், கதிர்வேலப்பர் என்ற திருநாமத்துடன் சமாதியடைந்து அருள்பாலித்து வருகிறார். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆவணி ஆயில்ய நட்சத்திரத்தில் குருபூஜை கொண்டாடப்படுகிறது. இதன்பிறகு காசியில் அவதரித்த ஸ்வாமிகளை ராமகிருஷ்ண பரமஹம்சர் நேரில் தரிசித்து, இவர் தான் உண்மையான பரமஹம்சம் என போற்றி புகழ்ந்தார். குழந்தையானந்தர் காசியில் தங்கியிருந்த காலத்தில் விஸ்வநாதர் கோயிலையும், காலபைரவர் கோயிலையும் சிறப்பாக பராமரித்தார். 1887ல் காசியில் தன்னை ஒரு பெட்டியில் வைத்து கங்கையில் விடுமாறு தன் சீடர்களுக்கு கட்டளையிட்டு, அப்பெட்டியுடன் தென்னகத்தில் திருவண்ணாமலை, சுருளி ஆகிய இடங்களில் தோன்றி பக்தர்களுக்கு நீண்ட காலம் அருள்பாலித்தார். 1919ம் ஆண்டு மதுரையிலிருந்து வத்தலக்குண்டு சென்றார். அங்கு தனக்கு தன் சீடர் மூலம் ஒரு கோயிலை நிர்மாணித்தார். அதேபோல் மதுரை காளவாசல் அருகே உள்ள கோயிலில் சமாதி அடைந்தார். தான் சமாதி ஆகும் போது வழக்கமாக செய்யகூடிய சடங்குகள் ஏதும் செய்ய வேண்டாம் என்று கூறிய சுவாமிகள், அங்கிருந்து வத்தலக்குண்டில் தனக்காக எழுப்பப்பட்ட கோயிலில் எழுந்தருளினார். இப்படி ஒவ்வொரு கால கட்டத்திலும் அவதார புருஷராக அவதாரம் எடுத்து சமாதி நிலை அடைந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் குழந்தையானந்த சுவாமிகள்.
சேஷாத்திரி சுவாமிகள்

ஆதிகுருவாகிய சங்கரர், காஞ்சிபுரத்தில் காமகோடி பீடத்தை அமைத்து, காமாட்சிதேவியை அமைத்து, காமாட்சி தேவியை ஸ்ரீவித்யா முறைப்படி வழிபாடு செய்ய முப்பது தேவி பக்தர்களை ஏற்பாடு செய்தார். வேத சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்ற இவர்கள் காமகோடி வம்சம் என அழைக்கப்பட்டனர். இந்த வம்சத்தை சேர்ந்த வரதராஜன் - மரகதம்பாள் தம்பதிகளுக்கு 1870, ஜனவரி 22ம் நாள் சனிக்கிழமை அஸ்த நட்சத்திரத்தில், உத்திரமேரூர் அருகே வாவூர் கிராமத்தில் மகான் அவதாரம் நடந்தது. பிறந்த சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாதலால் சேஷாத்ரி என பெயர் சூட்டப்பட்டார். ஒருநாள் சேஷாத்ரி தாயாருடன் கோயிலுக்கு செல்லும்போது, ஒரு வியாபாரி வைத்திருந்த நவநீதகிருஷ்ணர் பொம்மைகளில் ஒன்றை கேட்டார். வியாபாரியும் சேஷாத்ரியை தூக்கிக் கொஞ்சி, இந்த குழந்தைகயின் கை தங்கக்கை நேற்று ஆயிரம் சிலைகளும் விற்றுவிட்டது என்று கொண்டாடினான். அதுமுதல் இவர் கை பட்ட காரியம் வளர்ச்சி அடைந்ததால் நான்கு வயதிலேயே தங்கக்கை சேஷாத்ரி என்று அழைக்கப்பட்டார். சேஷாத்ரி சிறு வயதிலேயே வேதங்கள் கற்று பற்பல சாஸ்திரங்களில் வல்லவராக விளங்கினார். சேஷாத்ரியின் 14ம் வயதில் தகப்பனார் இறந்தார். ஒரு சமயம் வந்தவாசியில் உபன்யாசம் செய்பவர் உடல்நலக் குறைவால் வராததால் சேஷாத்ரி அங்கு சென்று ஓராண்டு ராமாயண பாகவதம் சொற்பொழிவாற்றினார். சேஷாத்ரிக்கு 17 வயதில் தாயார் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார். சேஷாத்ரியின் ஜாதகத்தை பார்த்த ஜோதிடர்கள் இவருக்கு சன்னியாசி யோகம் தான் உள்ளது. சன்னியாசி ஆகி பிறகு யோகியாக ஆவார் என கூறிவிட்டார்கள்.

தாயார் இறப்பதற்கு சில தினங்களுக்கு முன் ஒருநாள் சேஷாத்ரிக்கு தன் முதுகில் ஆதிபராசக்தி பாம்பின் வடிவமாக தன்னை ஆட்கொண்டதை உணர்ந்தார். சில நாட்களில், தாயார் சேஷாத்ரியை அழைத்து, பிறக்க முக்தி திருவாரூர், தரிசிக்க முக்தி சிதம்பரம், இறக்க முக்தி காசி, நினைக்க முக்தி திருவண்ணாமலை என்று பொருள் கொண்ட சுலோகத்தை மகனின் மார்பில் 3 முறை அடித்து அடித்து சொல்லிவிட்டு. அருணாசல, அருணாசல, அருணாசல என்று 3 முறை உருக்க கூவிவிட்டு மகளின் மகனின் மடியில் இயற்கை எய்தினார். தாயின் அந்திமச் சொற்களாகிய அண்ணாமலை அடிமனதில் ஆணிவேர் போல் பதிந்துவிட்டுது. திருவண்ணாமலை மனத்தால் கண்டு, ஒரு அட்டையில் அதைப் போல் வரைந்து, பூஜை அறையில் வைத்து காலை முதல் பிற்பகல் வரை அறையை உள்தாளிட்டு பூஜையில் ஈடுபட்டு விடுவார். சரியாக குளிப்பதில்லை. சாப்பிடுவதில்லை. உடம்பைப்பற்றி கவலைப்படுவதில்லை. ஞானப்பைத்தியம் என்று பலரும் பரிகசித்தனர். 19வது வயதிலேயே உபாசனையும், வைராக்கியமும் மிகுந்த நிலையை மேற்கொண்டு எல்லாவற்றையும் துண்டித்து துறவியாகி, காஞ்சிபுரத்தை விட்டு புறப்பட்டு, ஞானவித்தையை உலகெல்லாம் பரப்ப, அந்த ஞான தபோதனார் அண்ணாமலை நோக்கி வந்தார். தை மாதத்து ரத சப்தமி திருநாளில் திருவண்ணாமலையில் திருப்பாதம் பதித்தார். வந்த உடனே கிரிபிதட்சணம் போனார். கோயிலில் பல இடங்களில் தியானம் புரிந்தார். அங்கு அவர் தவம் செய்ய மிகவும் பிடித்த இடம் துர்க்கையம்மன் கோயில். திருவண்ணாமலை வந்தவுடன் தினசரி சித்து விளையாட்டுகள் செய்யலானார்.

பைத்தியம் போல் வேகமாக சிரிப்பார். நடப்பார். ஓடுவார். வசீகர கண்கள். அழுக்கே இவர் உடையின் நிறம். நிலையான இருப்பிடம் கிடையாது. நல்லவர்கள் வணங்கினால் ஆசிர்வதிப்பார். தீயவர்களை வசைமாரி பொழிவார். எந்த பெண்ணைக் கண்டாலும், என் தாய் என்று சொல்லி வணங்குவார். தூக்கமே கிடையாது. இரவில் சுற்றுவார். அல்லது தியானத்தில் இருப்பார். பக்தர்களுக்கு மும்மூர்த்திகளையும் காட்டி தானே பராசக்தி வடிவமாக காட்சிதந்துள்ளார். விஷத்தை அல்வா போல் விழுங்குவார். வியாதியால் பீடிக்கப்பட்ட பக்தர்களுக்கு நிவாரணம் அளிப்பார். இவர் கட்டியணைத்தால் தோஷம் நீங்கும், கன்னத்தில் அறைந்தால் செல்வம் பெருகும். எச்சில் உமிழ்ந்தால் எல்லாம் கைகூடும். தவம் புரிந்த குகை அருகில் சென்று என் குழந்தை கந்தன் உள்ளே தவம் செய்கிறான் என்றார். ரமணரை உலகிற்கு காட்டியவர் சேஷாத்ரி சுவாமிகள், திருப்புகழ்தான் மந்திரம் என்று வன்னிமலை சுவாமிகளுக்கு உபதேசித்து, அவர் மூலம் திருப்புகழ் தமிழெங்கும் பரவச்செய்தார். 1929ம் ஆண்டு ஜனவரி மாதம் தன் வாழ்க்கை பயணத்தை முடித்துக் கொள்ளும் நாட்களில் மகானின் முகத்தில் பிரகாசமான ஒளி, மூன்று நாட்கள் சிவசக்தி நிலையில் தியானம் செய்து முக்தி அடைந்தார். சுவமிகள் பிறக்கும்போது கிரகங்கள் இருந்த நிலையிலேயே முக்திநாளிலும் அமைந்தது. இது மகான்களுக்கே கிடைக்கூடிய மாபெரும் வாய்ப்பு. செங்கம் சாலை மலையடிவாரத்தில் சமாதி வைக்கப்பட்டார். இன்றும் ஜீவசமாதியில் இருந்துக்கொண்டு பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.
வேதாந்த தேசிகர்

ஆன்மாக்களை உய்விக்க பகவான் பல நிலைகளை மேற்கொள்கிறார். குருவாக ஆச்சார்ய நிலையில் தோன்றி, அஞ்ஞானத்தை அழித்து, ஞானத்தை வளர்ப்பதும் அந்நிலைகளில் ஒன்று. அப்படிப்பட்ட ஆசார்ய நிலையில் அவதரித்து அஞ்ஞானத்தை அகற்றி ஞான விளக்கேற்றியவர் வேதாந்த தேசிகர். தமிழகத்தின் புண்ணிய நகரான காஞ்சிபுரத்தில் அனந்த சோமயாஜிகள், தோதாத்திரி அம்மையார் தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களின் மகவாக அவதரித்தவர் வேங்கடநாத சம்மா. இளமையில் தேசிகருக்கு பெற்றோர் இப்பெயரையே சூட்டினர். இவரை திருவேங்கடத்தில் குடிகொண்டுள்ள ஸ்ரீனிவாசனின் திருமணி அம்சம் என்று போற்றுவர். இவர் அவதரித்த தலம் தூப்பல் எனப்படும். தூப்பல் என்றால் தூய்மையான இடம் என பொருள்படும். காஞ்சிமாநகருக்குள் இப்பகுதி இருக்கிறது.தேசிகர் தன் இருபதாவது வயதிலேயே வேதாந்த ரகசியங்களை எல்லாம் முறைப்படி கற்றுத்தேர்ந்தார். தனது மாமனார் கிடாம்பி அப்புள்ளாரிடம் அருளுபதேசம் பெற்று வைந்யேய மந்திரத்தை கற்றுக்கொண்டார். பின்னர் இல்லறவாழ்வை மேற்கொண்டார். தேசிகர் நாவன்மை மிக்கவர். இவரது நாவன்மை இவரை சிறந்த பேச்சாளராக்கியது. பாமரரும் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் ஆன்மிக சொற்பொழிவுகளை நிகழ்த்துவார். ஒருசமயம் தென் திருப்பதிகளை தரிசிக்க புறப்பட்டவர் திருவஹீந்திரம் கோயிலில் வந்து தங்கினார். அங்கு அவர் கருடாழ்வாரின் தரிசனம் கிடைக்கப் பெற்றார்.

ஸ்ரீஹயக்ரீவர் மந்திர உபதேசம் பெற்றதன் பயனாய் காட்சி தந்து வாக்குவன்மையை வழங்கி அருளினார். அங்கு தங்கியிருந்தபோது தன் நாவாற்றலால் சொற்பொழிவுகளையும், எழுதாற்றலால் பல நூல்களையும் இயற்றியவர். ஒருசமயம் தேசிகர் வறுமைப்பட்ட ஏழை அந்தண பிரம்மச்சாரியிடம் கருணை கொண்டார். ஸ்ரீ ஸ்துதி என்ற நூலை அருளிச்செய்து, காஞ்சிபுரம் தேவப்பெருமாள் கோயிலில் தாயாரின் சன்னதி முன்பாக பொன்மழை பொழிவத்தது கண்டு பக்தர்கள் அதிசயித்தனர். அந்த அந்தண பிரம்மச்சாரி தன் வறுமை நீங்கி வளம் பெற்றார். தேசிகரின் பெருமை நாடெங்கும் பரவியது. அவரிடம் பொறாமை கொண்ட ஒருவன் இவரிடம் வந்து, உமக்கு கிணறு வெட்டத் தெரியுமோ ? என கேட்டான். அமைதியாக புன்முறுவல் கொண்ட தேசிகர், உடன் ஒரு கிணற்றினை உண்டாக்கி, அவனது செருக்கை அடக்கினார். இன்றளவும் அக்கிணறு உள்ளது.சிற்பி ஒருவன் இவரிடம் வந்து, உமக்கு சிற்பம் வருமோ ? என ஆணவத்துடன் கேட்டான். உடன் தேசிகர் தமது உருவத்தையே விக்கிரகமாக அமைத்துக் கொடுத்தார். அந்த விக்ரகம் தேவநாத பெருமாள் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறது. வேறொரு, சிலரால் தூண்டப்பட்ட பாம்பாட்டி யொருவன் இவர் முன்னிலையில் பாம்புகளை எல்லாம் வெளியில் எடுத்து விட்டான். பாம்பைக் கண்டதும் அவரருகே நின்ற பலரும் அலறியடித்துக் கொண்டு ஓடினர். ஆனால், தேசிகர் அமைதியாக கருட தியானம் செய்தார்.

கருடன் தோன்றி பாம்புகளை எல்லாம் பற்றிச் சென்றது. பாம்பாட்டி தேசிகரின் பாதம் பணிந்து மன்னிப்புகேட்டான். இப்படி பல அரிய அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார் தேசிகர். ராமானுஜர் அருளிய ஸ்ரீபாஷ்யத்தை முப்பது முறை பிரவசனம் செய்து திருப்தியுற்றார் தேசிகர். ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரக்கவி என்ற நால்வகைக் கவிதைகளிலும் ஒப்புயர்வு பெற்று விளங்கியவர். வடமொழி பாண்டித்யம் கொண்டவர். இவர் எண்ணற்ற நூல்களை இயற்றி அருளினார். ஹயக்ரீவ ஸ்தோத்திர, கருட பஞ்சாசதத், அச்சுத சதகம், பந்துப்பா, ஊசற்பா, ஏசற்பா, அஷ்டபுஜான்டகம் போன்றவை சிறப்பானவை. களப்பிரர் படையெடுப்பால் தமிழகக் கோயில்கள் சூறையாடப்பட்ட நிலையில், ஸ்ரீரங்கத்தில் அந்தணர்கள் பெருமாளுக்கு பாதுகாப்பு செய்துவிட்டு பல திசைகளுக்கும் சென்றுவிட்டனர். அந்த சமயம் பெருமாளுக்கு எவ்வித சேதமும் வந்துவிடக்கூடாது என்று தேசிகரால் அபிதீஸ்தவம் என்ற நூல் அருளிச் செய்யப்பட்டது. கோடான கோடி விண்மீன்கள் விண்ணில் தோன்றினாலும் பளிச்சென்று கண்ணிற்கு புலப்படுவது ஒரு சிலவே. அதைப்போல் எத்தனையோ மகான்களின் மத்தியில் ஒளிவீசிக் கொண்டிருப்பவர் வேதாந்த தேசிகர் என்றால் அது மிகையாகாது.
வேதாத்திரி மகரிஷி

கடவுள் யார்.... வாழ்க்கை என்றால் என்ன உலகில் ஏன் வறுமை உள்ளது என்ற கேள்விகளை தனக்குள் கேட்டு, அதற்கான பதிலை சமுதாயத்திற்குத் தந்தவர் தான் வேதாத்திரி மகரிஷி. 1911 - ஆகஸ்ட் 14ல் சென்னை அருகே உள்ள கூடுவாஞ்சேரியில் நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர். பல ஆண்டுகளாக தொடர்ந்து அவர் மேற்கொண்ட தவம் மற்றும் ஆராய்ச்சியால் 35-வது வயதில் ஞானம் பெற்றார். தமிழகத்தில் வாழ்ந்த திருமூலர், திருவள்ளுவர், தாயுமானவர், வள்ளலார் போன்ற சித்தர்களின் தத்துவங்களில் ஈடுபாடு கொண்டவர். மக்கள் அனைவரும் இன்பமாக வாழவே விருப்பப்படுகின்றனர். இயற்கையில் எல்லாம் இன்பமயமாகவே உள்ளன. ஆனாலும் மனிதன் தொடர்ந்து துன்பங்களையே அனுபவித்து வருவதாக உணர்கிறான். இத்துன்பங்களை போக்க மன நிறைவு பெற 4 விதமான பயிற்சியை மகரிஷி உருவாக்கியுள்ளார். எளியமுறை உடற்பயிற்சி, தியானப்பயிற்சி காயகல்பப்பயிற்சி, அகத்தாய்வுப்பயிற்சிகள் இவைகளை கற்றுத்தர 1958ல் உலக சமுதாய சேவா சங்கத்தை உருவாக்கினார். தனிமனித அமைதி, ஆகிய நோக்கங்களை கொண்டது தான் இம்மையம். 6 வயது முதல் 60 வயதுவரையுள்ள ஆண், பெண் அனைவருக்கும் கற்றுத்தரும் எளிய பயிற்சிகள் இவை. மகிரிஷி சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான ஆன்மிக, தத்துவப்பாடல்களை தமிழ், ஆங்கிலத்தில் இயற்றியுள்ளார். 1984-ல் பொள்ளாச்சி, அருகே ஆழியாற்றில், வேதாத்திரி மகரிஷி குண்டலினி யோகா மற்றும் காயகல்ப ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவி அங்கு ஓம் என்ற வடிவில் அறிவுத்திருக்கோயில் நிறுவப்பட்டுள்ளது. அங்கிருந்து தற்போது தனது சேவையை செய்து வருகிறார் மகரிஷி. இச்சங்கத்தின் கிளைகள் உலகம் முழுவதும் 225 ஊர்களில் செயல்படுகிறது.