புதன், 18 டிசம்பர், 2013

வேதாத்திரி மகரிஷி

கடவுள் யார்.... வாழ்க்கை என்றால் என்ன உலகில் ஏன் வறுமை உள்ளது என்ற கேள்விகளை தனக்குள் கேட்டு, அதற்கான பதிலை சமுதாயத்திற்குத் தந்தவர் தான் வேதாத்திரி மகரிஷி. 1911 - ஆகஸ்ட் 14ல் சென்னை அருகே உள்ள கூடுவாஞ்சேரியில் நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர். பல ஆண்டுகளாக தொடர்ந்து அவர் மேற்கொண்ட தவம் மற்றும் ஆராய்ச்சியால் 35-வது வயதில் ஞானம் பெற்றார். தமிழகத்தில் வாழ்ந்த திருமூலர், திருவள்ளுவர், தாயுமானவர், வள்ளலார் போன்ற சித்தர்களின் தத்துவங்களில் ஈடுபாடு கொண்டவர். மக்கள் அனைவரும் இன்பமாக வாழவே விருப்பப்படுகின்றனர். இயற்கையில் எல்லாம் இன்பமயமாகவே உள்ளன. ஆனாலும் மனிதன் தொடர்ந்து துன்பங்களையே அனுபவித்து வருவதாக உணர்கிறான். இத்துன்பங்களை போக்க மன நிறைவு பெற 4 விதமான பயிற்சியை மகரிஷி உருவாக்கியுள்ளார். எளியமுறை உடற்பயிற்சி, தியானப்பயிற்சி காயகல்பப்பயிற்சி, அகத்தாய்வுப்பயிற்சிகள் இவைகளை கற்றுத்தர 1958ல் உலக சமுதாய சேவா சங்கத்தை உருவாக்கினார். தனிமனித அமைதி, ஆகிய நோக்கங்களை கொண்டது தான் இம்மையம். 6 வயது முதல் 60 வயதுவரையுள்ள ஆண், பெண் அனைவருக்கும் கற்றுத்தரும் எளிய பயிற்சிகள் இவை. மகிரிஷி சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான ஆன்மிக, தத்துவப்பாடல்களை தமிழ், ஆங்கிலத்தில் இயற்றியுள்ளார். 1984-ல் பொள்ளாச்சி, அருகே ஆழியாற்றில், வேதாத்திரி மகரிஷி குண்டலினி யோகா மற்றும் காயகல்ப ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவி அங்கு ஓம் என்ற வடிவில் அறிவுத்திருக்கோயில் நிறுவப்பட்டுள்ளது. அங்கிருந்து தற்போது தனது சேவையை செய்து வருகிறார் மகரிஷி. இச்சங்கத்தின் கிளைகள் உலகம் முழுவதும் 225 ஊர்களில் செயல்படுகிறது.
சத்குரு சாய் மகராஜ்

மகாராஷ்டிரா மாநிலத்தில் பத்ரி எனும் கிராமத்தில் கங்கா கவாடியா - தேவகிரி என்ற இந்து தம்பதியினருக்கு மகனாக அவதரித்தார் பாபா. பாபா பிறந்த போது அவரது தந்தை இறைவனின் தரிசனத்திற்காக காட்டில் தவம் செய்ய புறப்பட்டார். இவர் சென்றதும் தேவகிரி பிறந்த குழந்தையை நடுக்காட்டில் விட்டு விட்டு கணவன் பின் சென்று விட்டார். அப்போது காட்டு வழியே வந்த பாட்டீல் என்ற முஸ்லிம் தம்பதியினர் குழந்தையின் அழுகுரலை கேட்டு அந்த குழந்தையை எடுத்து வளர்த்தனர். சிறுவயாதான அந்த பாபாவின் செயல் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. தர்காவிற்கு செல்லும் அவன் சிவலிங்கத்தை வைத்து கீதை, வேதம், உபநிஷதங்கள் சொல்வான். சில சமயம் இந்து கோயிலுக்கு சென்று குரான் ஓதுவான். இதனால் இந்துக்களும், முஸ்லிம்களும் பாபாவை வெறுக்க தொடங்கினர்.ஒரு முறை பாபா தன் பக்கத்து வீட்டு மாமி பையனுடன் விளையாடிக் கொண்டிருந்தான். தன் வீட்டு பூஜையறையில் வைத்திருந்த சாளக்கிராம உருண்டையை பந்தயப் பொருளாக வைத்து விளையாடி பாபாவிடம் தோற்றான். இதையறிந்த மாமி பாபாவை அரட்ட, பாபா சாளக்கிராமத்தை தன் வாயில் போட்டு விட்டான். வாயை திறந்தான். அப்போது கண்ணனின் வாயில் யசோதை கண்ட காட்சியை பாபாவின் வாயில் மாமி பார்த்தாள். மயங்கி விழுந்தாள். சில நாட்களில் பாட்டீல் இறந்து போனார். அதன்பின் அவ்வூர் வெங்கடாசலபதி பக்தரான கோப்லராவ் அவனை வளர்த்தார். பத்தாண்டுகள் வரை அவரிடம் வளர்ந்த பாபா பள்ளிக்கு செல்வில்லை.

கோபால் ராவிடமே பலவிஷயங்களை கற்று கொண்டார். இஸ்லாமிய, இந்து மத பிரார்த்தனைகளை மேற்கொண்டார். கோபால்ராவின் கடைசி காலம் நெருங்கி விட்டது. எனவே தனது தெய்வீக சக்திகளை பாபாவிடம் தாரை வார்த்து கொடுத்துவிட்டு உயிர் துறந்தார். ஏழு ஆண்டுகள் கழிந்தன. புனேயிலிருந்து 75 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள ஷிர்டி என்னும் கிராமத்தில் ஒரு வேப்ப மரத்தின் அடியில் இளைஞனாகத் தோன்றினார் பாபா. இவரது சக்தி குறித்து அக்கிராம மக்கள் நெரிந்து கொண்டனர். ஒரு முறை சாந்த்படேல் என்பவர் தன் அண்ணன் மகன் திருமணத்திற்கு பாபாவை அழைத்து சென்றார். அங்குள்ள கந்தோபா சிவன் கோயில் பூஜாரி தன்னை மறந்து ஆவோ சாயி (சாயியே வருக) என அழைத்தார். திருமணம் முடிந்ததும் அனைவரும் ஊர் திரும்பி விட்டனர். ஆனால் பாபா அங்கேயே தங்கி விட்டார். அதுவரை பக்ரி என அழைக்கப்பட்ட அவர் பாபா என்றும் சாய் என்றும் அழைக்கப்பட்டார். அவ்வூரில் இருந்த மசூதியில் தான் பாபா தங்கினார். மூன்று ஆண்டுகளில் ஒரு தோட்டத்தை உருவாக்கினார் (இந்த இடத்தில் தான் பாபாவின் புனித சமாதி உள்ளது). ஒரு முறை மசூதியில் விளக்கேற்ற வழக்கமாக எண்ணெய் தரும் வியாபாரி எண்ணெய் தர மறுத்துவிட்டதால் தண்ணீரிலேயே விளக்கெரிய வைத்தார். அன்று முதல் அவரது புகழ் மேலும் பரவியது. ராமநவமி, சந்தனக்கூடு ஆகிய இந்து முஸ்லிம் விழாக்களை இவ்வூரில் நடத்தி வந்தார். இந்து சடங்குகள் அந்த மசூதியில் செய்யப்பட்டு வந்தது. அவரை இந்துவா, முஸ்லிமா என் யாரும் உணர்ந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில் மசூதியை பாபா துவாரகா மயி என அழைப்பார். துனி எனும் அணையாத அக்னியை வளர்த்து அதிலிருந்து கிடைக்கும் உதி என்ற சாம்பலை நோய் கண்டவர்களுக்கு கொடுத்து குணமாக்குவார். ஒரு காலத்தில் பூனா மற்றும் அகமத் நகர் மட்டுமே அறிந்திருந்த பாபாவை இன்று உலகமே அறிந்திருக்கிறது. நான் எல்லா உயிர்களிடமும் வாழ்கிறேன் கடவுளை அடைய சம்சாரத்தில் இருந்து விடுபட வேண்டும். உலக விஷயங்களில் விரக்தி தோன்ற வேண்டும். மனிதன் தன்னைத்தானே உணர்ந்து கொள்ள வேண்டும் என போதித்தார். சத்குரு சாய் மகராஜ் எனப்பட்ட பாபா 1918 விஜயதசமி தினத்தன்று முக்தியடைந்தார்.
20ம் நூற்றாண்டின் இணையற்ற சித்தர்

ஞானானந்தகிரி. இவர் சென்ற நூற்றாண்டின் இணையற்ற சித்தர். 100 வயதுக்கு மேல் வாழ்ந்த இவர் மக்களிடையே தியானம், கூட்டு வழிபாடு, நாம பஜனை மூலம் பக்தியை பரப்பியவர் திருவண்ணாமலை மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஞானானந்த தபோவனம் அமைத்து குருகுல முறைப்படி கல்வி கற்க ஏற்பாடு செய்தவர். இன்றும் இந்த தபோவனத்தில் இவர் கூறியபடி ஆராதனை நடந்து வருகிறது. கர்நாடக மாநிலம் மங்களபுரியில் வெங்கோபகணபதி, சக்குபாய் தம்பதியினர் வசித்தனர். இவர்களின் செல்வப் புதல்வராக தை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் இவர் அவதரித்தவர். இவரது இயற்பெயர் சுப்பிரமணியம். ஞானக்கல்வியை மக்களிடையே போதிக்க பிறந்தவராதலால், சிறுவயதில் ஏட்டுக் கல்வியில் நாட்டம் கொள்ளவில்லை. தன் 12ம் வயதில் குருநாதரை தேடி வீட்டை விட்டு வெளியேறி நடந்தே பண்டரிபுரம் வந்து, சந்திரபாகா நதிக்கரை மணலில் அமர்ந்து உறங்கிவிட்டார். இறைவன் ஒரு முதியவர் வடிவில் வந்து இவரை எழுப்பி, பண்டரிபுரத்தில் ஆதி சங்கரர் நிறுவிய ஜியோதிர் மடத்தின் தலைவர் சுவாமி சிவரத்னகிரியை குருவாக ஏற்கும்படி கூறி மறைந்தார். சிவரத்னகிரியிடம் சீடராக சேர்ந்த சுப்ரமணியம், தன் பணிவிடையாலும், குருபக்தியாலும் அவரது பாராட்டை பெற்றார். அந்த ஆசான் இவருக்கு ஞான ஒளி வீசும் விளக்காக திகழ்ந்து. அஷ்டாங்க யோகம், சாஸ்திரங்கள் உபநிஷத் உண்மைகளை கற்பித்தார். அஷ்டாங்க யோகத்தில் தனித்திறமை பெற்று ஞான உணர்வை நாடி அடிக்கடி உணவும், உறக்கமும் மறந்து தியானத்தில் அமர்ந்து விடுவார். சிவரத்னகிரி சுவாமிகள் இவருக்கு தீட்சை அளித்து ஞானானந்தகிரி என்ற நாமம் சூட்டி, தனக்கு பின் பீடாதிபதியாகும் பொறுப்பையும் தந்து முக்தியடைந்தார்.

பீடாதிபதி ஆன பிறகும். அதில் சுவாமி மகிழ்ச்சி கொள்ளவில்லை. மக்களிடையே பக்தியை பரப்ப விரும்பி, ஆனந்தகிரி என்பரிடம் மடத்தின் பொறுப்பை ஒப்படைத்து விட்டு புனித யாத்திரை கிளம்பினார். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் சென்றார். தன் புனித யாத்திரையின் போது ராமகிருஷ்ண பரமஹம்சர், சீரடி சாய்பாபா, ராமலிங்க அடிகள், அரவிந்தர், ரமணர் போன்ற மகான்களை சந்தித்தார். காடுகளிலும் மலைகளிலும், கங்கை நதிக்கரையிலும் தவம் செய்து இறைவன் அருள்பெற்று மாபெரும் சித்தராக விளங்கினார். இவர் பல மொழிகளில் புலமை பெற்றிருந்ததால் நாடெங்குமிருந்து பல பக்தர்கள் இவரை நாடி வந்தனர். இவர் தமிழகம் திரும்பி வந்த போது வயது 100. சேலத்தில் 30 ஆண்டுகளுக்கு மேல் தங்கி, அங்குள்ள ஏழை நெசவாளிகளுக்கு வேதாந்த வகுப்புகள் நடத்தி அவர்கள் வாழ்க்கை மேன்மை அடைய செய்தார். பின் 1954 முதன் திருக்கோவிலூர் அருகே பெண்ணாற்றங்கரையில் ஒரு ஆஸ்ரமம் அமைத்து நிலையாக தங்கி விட்டார். இதுவே பிற்காலத்தில் ஞானானந்த தபோவனம் என அழைக்கப்பட்டது. தபோவனத்தில் சுவாமி அதிகாலையில் எழுந்து நீராடி, தியானம், கூட்டு வழிபாடு, நாம சங்கீர்த்தனம் போன்ற நெறி முறைகளை ஏற்படுத்தி, அங்கு வந்து தங்குபவர்களுக்கு எளிமையான உபதேசங்களை கூறி, அவர்களுக்கு அமைதியும், ஆனந்தமும் நிம்மதியும் கிடைக்கும்படி செய்தார்.

முதிர்ந்த வயதிலும் சிரித்த முகத்துடன், சுறுசுறுப்புடன் ஆசிரமத்தின் அனைத்து பொறுப்புக்களையும் கவனித்து கொண்டார். சுவாமியின் தவ வலிமையாலும், அயராத உழைப்பாலும் தபோவனத்தின் புகழ் எங்கும் பரவி பக்தர்களின் கூட்டம் பெருகியது. இரவு வேளைகளில் சுவாமி தனது தவ வலிமையால் ஆசிரமத்திலிருந்து மறைந்து, தான் விரும்பிய திருத்தலங்களுக்கு சென்று இறைவனை தரிசித்து திரும்புவார். ஆசிரமத்து குழந்தைகளுக்கு தன் அனுபவத்தை கதையாக கூறுவார். ஆசிரமத்தில் ஞானகணேசர், ஞானஸ்கந்தர், ஞானபுரீஸ்வரர், ஞானாம்பிகை என பல தெய்வங்களின் சன்னதிகளை ஏற்படுத்தினார். தனது உலக வாழ்க்கை முடிவுக்கு வருவதை அறிந்த சுவாமி, 1973 முதல் கூட்டத்திலிருந்து ஒதுங்கி தியானத்தில் அதிக நேரம் செலவழித்தார். 1974 ஜனவரி 6ல் சுவாமிகளின் உடல்நலம் குன்றியது. அன்று விடியற்காலை சித்தாசனத்தில் அமர்ந்த பிறகு எழுந்திருக்கவில்லை. ஜனவரி 10ல் சுவாமி பரம்பொருளுடன் கலந்து விட்டார். அந்த மகான் சமாதி நிலையில் இருந்து, மறையாத கருணையுடன் அனைவரையும் காத்து வருகிறார். ஹரி தாஸ் சுவாமிகள், சுவாமி நாமாநந்தகிரி ஆகியோர் இவரது சீடர்களாவர். திருக்கோவிலூரிலிருந்து 6 கி.மீ. தூரத்தில் உள்ள இந்த தபோவனத்திற்கு அடிக்கடி பஸ் வசதி உண்டு.
மழை பொழிய பாடிய மகான்

ஸ்ரீரங்கப் பெருமாளிடம் மழை வேண்டிப் பிரார்த்தித்து மனமுருகி பாடி மழை பெய்வித்தவர் ஸ்ரீ சுகந்த தூப தீர்த்தார்ய சுவாமிகள். இவரது இயற்பெயர் தத்தாத்ரேயா. இவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சன்னதியில் தூபக்கால் ஏந்தி பெருமாளுக்கு ....... தூப நித்ய கைங்கர்யம் செய்து வந்ததால் இவரது இயற்பெயர் மறைந்து இந்த பட்டபெயர் திலைத்தது. தீர்த்தார்யா என்றால் சாஸ்திஞானி என்று அர்த்தம். 15ம் நூற்றாண்டில் தஞ்சையில் நாயக்க வம்சத்தினரின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அரசர் அச்சுதப்ப நாயக்கர், முக்கிய அமைச்சர் கோவிந்த தீட்சிதர். இவர் கும்பகோணம் மகாமக குளத்தை சுற்றியுள்ள 16 மண்டபங்களையும் கட்டியவர். இவரை மக்கள் ஐயன் என்று மரியாதையுடன் அழைப்பார்கள். இவரைப்போற்றி ஐயன் பேட்டை (அய்யம்பேட்டை) என ஒரு ஊருக்கே பெயரிட்டு அழைத்தனர். இவ்வூரில் (1551-1661) பங்குனி திருவோண நட்சத்திரம் அவதரித்த தீர்த்தார்யா சுவாமிடகள் பெருமாளின் சேவைக்காக தன்னையே அர்ப்பணித்த பிரம்மச்சாரி. ஒருமுறை மழையின்றி வறட்சி ஏற்பட்டது. மக்கள் இத்துன்பத்திலருந்து மீள தீர்த்தாய சுவாமியை மக்கள் அணுகி, மழை வேண்டி பெருமாளிடம் பிரார்த்திக்குமாறு வேண்டினர். பக்தர்களின் வேண்டுகோளை ஏற்ற சுவாமிகள், சவுராஷ்டிர மொழியில், ஸ்ரீரங்கநாதா ! இத்தருணமே மழை பெய்வித்து ஏரி, கிணறு, நதிகள் நிறையும் படி செய்வாயாக ! அரிசி முதலிய உணவுபொருட்களை மலிவாக கிடைக்க செய்.

உன்னையே கதியென்று சரணடைந்த திரவுபதிக்கு ஆபத்பாந்தவனா ரட்சித்தாய். எங்களையும் வறட்சி எனும் ஆபத்திலிருந்து காத்தருள்வாய் ரங்கா ! முன்பெல்லாம் மக்கள் போதிய வசதியுடன் வாழ்ந்தனர். இன்றோ பஞ்சக்கொடுமையினை அனுபவிக்கின்றனர். உனது திக்கரத்தில் உள்ள சக்கரத்தினை ஏவி அந்த கொடுமைகளை அழித்து விடு ரங்கா ! பஞ்சத்தால் மக்கள் செய்வதறியாது கிடக்கின்றனர். இந்நிலை நீங்க மழை பொழிவிப்பாய் ரங்கா ! பஞ்சம், பசிக்கொடுமையால் மக்கள் கண்டதை உண்ணும் அவல நிலை ஏற்பட்டு அலைகின்றனர். மக்களை இப்படி அலைய விடாமல் போதிய மழையினை பொழியச்செய் ரங்கா ! மழையின்றி மக்கள் பரிதவிக்கும் போது நீ ஆனந்தமாக அறிதுயில் கொள்ளலாமோ ? உன் பக்த ஜனங்கள் நலம் பெற மழை பொழிவிப்பாய் ரங்கா ! ரங்கா ! ரங்கா ! என கீர்த்தனை ஒன்றை முகாரி ராகத்தில் மனமுருகி பாடினார். மழையும் பொழிந்தது. நாமும் நீரின்றி வறட்சியால் வாடும் இந்நேரத்தில், சுவாமிகளின் கீர்த்தனைகளை பாடி, மழை பொழிய, பெருமாளை வேண்டுவோம். அதுமட்டுமல்ல, சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளிலிருந்தும் பாதுகாப்பை வேண்டிக் கேட்போம்.
கந்த சஷ்டி தந்த தேவராயர்

வல்லூரில் வீராசாமி என்பவருக்கு பிள்ளையில்லாத குறையை நீக்க பிறந்தவர் தேவராசர். இவர் பெங்களூரில் வசிக்கும் போது, தீராத கொடிய வயிற்று வலியால் அவதிப்பட்டார். அப்போது அவர் முருகனின் அருளைநாடி திருச்செந்தூர் அடைந்தார். அன்று கந்தசஷ்டித் திருவிழாவில் முதல்நாள். முருகனின் முன்வந்தவுடன் வலி குறையத் துவங்கியது. அதனால் தேவராசர், முருகன் மீது கவசம் பாடலானார். 6 நாட்களும் முருகனைத் துதித்துப் பாடியதே கந்த சஷ்டி. (ஆறு) கவசம், சஷ்டி விழாவில் பாடியதாலும் சஷ்டி கவசம். கவசம் ஆறாயினும் ஒவ்வொன்றும் தனிப்படை வீட்டுக்கு உரியதல்ல. ஒவ்வொன்றிலுமே மற்ற படை வீடுகள் சிறப்பு தெரிகிறது. அதுமட்டுமின்றி, படைவீடு அல்லாத தலங்கள் பலவும் வர்ணிக்கப்படுகின்றன. கந்த சஷ்டி கவசங்களை முருகனின் எண்ணில்லா தன்னிகரிலா உலகத்திலுள்ள அனைத்துத் தலங்களுக்கும் உரியனவாகக் கருதுவதே முறை எனத் தோன்றுகிறது. எல்லா கவசமும் ஒரே ராகத்தில் பாடலாம். தினமும் படிக்கலாம். இயலாதவர்கள் செவ்வாய். கார்த்திகை, சஷ்டி தினங்களில் மட்டுமாவது படிப்பது மிகவும் நல்லது. இதில் குன்று தோறாடல் என்பது திருத்தணிக்கு மட்டுமின்றி எல்லா குன்று மீது உள்ள முருகனுக்கும் உகந்தது.
பானுதாசர்

பயிர் பச்சைகள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த நகரம் பைடனிபுரம். இந்நகரத்து மக்கள் தெய்வ பக்தியில் சிறந்தவர்கள். இங்கு சூரிய நாராயணர் என்ற பெரியவர் வசித்தார். இவர் தினமும் ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்தபின்னரே தமது வேலைகளைச் செய்வார். இவருக்கு சூரிய பகவானின் அருளால் ஒரு மகன் கிடைத்ததால், பானு என பெயரிட்டார். பானுவுக்கு ஏழு வயது ஆனதும், உபநயனம் செய்வித்து வேத அத்யனத்தை கற்பித்தார். ஆனால், தந்தையின் அடிக்குப் பயந்து ஒப்புக்குப் படிப்பான் பானு. இதனால் பெற்றோர் மிக வருந்தினர். ஒருநாள் தந்தைக்கு கோபம் உச்சிக்கு ஏற, மகனை நன்றாக அடித்துவிட்டார். இனி இங்கு இருந்தால் தந்தையார் நம்மை அடித்தே கொன்றுவிடுவார் என்று எண்ணிய பானு வீட்டைவிட்டு நகரை அடுத்துள்ள காட்டிற்கு சென்று விட்டான். பசி, தாகம் கண்ணை இருட்டிக்கொண்டு ஒரு மண்டபத்திற்குள் நுழைந்தான். அது சூரியதேவன் கோயில். சூரியதேவனைப் பார்த்ததும் துதிக்க வேண்டும் என்று மனதில் தோன்ற, இரு கரம் தூக்கி, பகவானே ! வீட்டில் பெற்றோர் அடிக்கும் அடிக்குப் பயந்து உன்னைச் சரணடைந்தேன். என்னைக் காப்பாற்றும், என்று மனமுருக வேண்டி நின்றான். கதிரவன் ஓர் அந்தணர் வேடம் புனைந்து அவன் முன் காட்சிதந்தார். ஒளிவீசும் அவரின் முகமலரைக் கண்டு வியந்த சிறுவன் அவர் பாதங்களில் பணிந்து, ஐயனே ! எனக்கு வேதங்கள் வரவில்லை. தாங்கள்தான் காக்க வேண்டும் என்றான்.

கதிரவன் அவனை அணைத்து, குழந்தாய் ! இனி உன்னை யாரும் அடிக்கமாட்டார்கள். இன்றுமுதல் உனக்கு எல்லாவிதக் கலைகளும், வித்தைகளும் வரும். ஸ்ரீ பாண்டுரங்கனின் புகழ்பாடி அவரை பக்திசெய், என்று கூறி மகாமந்திரத்தை உபதேசித்தார். அறிவு ஒளி வீச பானு வீடு திரும்பினான். பானுவின் கண்களில் வீசி அறிவு ஒளிரக்கண்டு பெற்றோர் வியந்தனர். அவர்களிடம் காட்டில் நடந்தவற்றைக் கூறினான். காலம் உருண்டோடியது, பானு இளைஞன் ஆனான். அவனின் பக்தியையும் அறிவையும் கண்டு மக்கள் அவனை பானுதாசர் என அழைக்கலாயினர். தக்க வயதில் பானுதாசருக்கு மணம் முடித்தனர் பெற்றோர், அவருக்கு ஆண்குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்குத் தன் தந்தையின் பெயரான சூரியநாராயணன் என்ற பெயரை வைத்தார். பானுதாசரின் மனம் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடவில்லை. இறைவனைப் போற்றிப்பாடுவதே தன் கடமை என்று நினைத்தார். இதனால் வீட்டில் வறுமை தாண்டவமாடியது. உறவின வியாபாரிகள் சிலர் பானுதாசரின் குடும்பம் கஷ்டப்படுவதைக்கண்டு அவருக்கு, சிறிய ஜவுளிக்கடை வைத்துக் கொடுத்தனர். அத்துடன் வியாபார நுணுக்கங்களான உண்மையைச் சொல்லி விற்றால் லாபம் கிடைக்காது. பொய் சொல்லிவிற்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தனர். பானுதாசர் ஜவுளிக்கடையை ஏற்றுக்கொண்டார். வியாபார நுணுக்கங்களை காற்றில் பறக்க விட்டார். பதிலாக கடைக்கு வருபவர்களிடம் நல்ல கருத்துக்களை கூறுவார். இதனால் இவர் பெருமை எங்கும் பரவியது. மக்களும் இவர் கடையில் குவிந்தனர். விற்பனையும் பெருகிற்று. மற்ற கடைகளின் வியாபாரம் மந்தம் அடையத் தொடங்கியது. இதனால் எல்லோரும் யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொண்டது போல் நாமே நம்மைக் கெடுத்துக்கொண்டோமே என்று பொறாமையும், கலக்கமும் கொண்டனர். இதற்கு ஒரு முடிவு கட்ட ஏற்பாடு செய்தனர்.

ஒருநாள் எல்லா வியாரிகளும் குதிரைகளின் மேல் சரக்குகள் ஏற்றி வெளியூர் சென்றனர். பானுதாசரும் தம் சரக்குகளுடன் புறப்பட்டார். வியாபாரம் முடிந்து ஊர் திரும்பும்போது இருட்டத் தொடங்கவே நடுவில் உள்ள ஒரு சிற்றூரில் உள்ள கோயில் மண்டபத்தில் மீதி சரக்குகளுடனும், விற்ற பணத்துடனும் தங்கினர். கோயிலுக்குள் ஹரிதாசர் என்னும் உபன்யாசர், பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். இதை அறிந்த பானுதாசர் மற்றவர்களிடம் தம் பொருள்களைப் பார்த்துக் கொள்ளும்படியும், பிரசங்கம் கேட்டுவிட்டு வருவதாகவும் கூறி கோயிலுக்குள் சென்றுவிட்டனர். மற்ற வியாபாரிகள், கடவுளே நமக்கு நல்ல வாய்ப்பு அளித்துள்ளார் என்று நினைத்தனர். பானுதாசரின் பொருள்கள் அனைத்தையும் ஒரு பாழும் கிணற்றில் போட்டனர். குதிரையை அவிழ்த்து விரட்டி விட்டனர். பானுதாசரிடம், பொருள்கள் களவு போய்விட்டது என்று சொல்லிவிடலாம் என்று முடிவெடுத்தனர். நள்ளிரவில் கொள்ளையர் கூட்டம் மண்டபத்தைச் சூழ்ந்தது. அவ்வளவுதான் என்ன நடந்திருக்கும் என்று யூகித்துக் கொள்ளலாம். அப்போதுதான் தாங்கள் செய்த தவறை உணர்ந்தனர். பானுதாசரின் பொருள்களை அபகரிக்க நினைத்தோம். நமது பொருள்கள் பறிபோயின. உயிர்பிழைத்ததே கடவுள் புண்ணியம். பானுதாசர் தெய்வ பக்தி மிக்கவர். அவர் பொருள்கள் பத்திரமாக கிணற்றில் இருக்கின்றன. நமது பொருள்கள்தான் போய்விட்டன என்று மனம் வருந்தினர். பானுதாசர் ஹரிதாசரின் பிரசங்கத்தைப் பற்றி அசைபோட்டபடி மண்டபத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு வழிப்போக்கன், ஐயா ! இந்தாருங்கள் உங்கள் குதிரை, என்று அவரிடம் கடிவாளத்தைக் கையில் கொடுத்துச் சென்றான்.கட்டி வைத்த குதிரை எப்படி இங்கே வந்தது ? கொடுத்துச் சென்ற மனிதர் யார் ? என்ற சிந்தனையுடன் அந்த மனிதனிடம் கேட்பதற்குள், வந்தவரைக் காணவில்லை. குழப்பத்துடன் அவர் மண்டபத்திற்கு வந்தார். அங்கே எல்லோரும் அழுதுகொண்டும் புலம்பிக் கொண்டும் இருந்தனர். எல்லோரும் நடந்ததைக்கூறி வருந்தினர். அவர்களிடம், ஐயா ? நீங்கள் தான் எனக்கு வியாபாரம் செய்ய வழி செய்தீர்கள். இவை உங்களின் உடைமை. கிணற்றில் கிடப்பவற்றை நீங்களே பகிர்ந்து கொள்ளுங்கள், என்றார். இதன்பின் பானுதாசர் தெய்வ பக்தியில் மனம் செலுத்தினார். இறைவனைப் பற்றிப் பாடுவதையே தன் கடமையாகக் கொண்டார். யாராவது நண்பர்களோ, உறவினர்களோ ஏதாவது கொடுத்தால்தான் சாப்பாடு. சில சமயங்களில் கையில் கிடைத்ததையும் தானம் செய்து விடுவார். பஜனை, தியானம், நாம சங்கீர்த்தனம். இதுவே பானுதாசரின் உயிர் மூச்சாக இருந்தது. தக்க தருணத்தில் இறைவன் அவரை ஆட்கொண்டார்.
சிவ பக்திக்கு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு?
ஸ்ரீஹர தத்தர் என்பவர், வைஷ்ணவ குடும்பத்தில் பிறந்து, சிறந்த சிவபக்தராக விளங்கியவர். ஒருநாள், காவிரி கரையில் அமர்ந்து, தியானம் செய்து கொண்டிருந்தார் ஹரதத்தர். அந்த சமயம், ஒரு வேடனும், அவனது மனைவியும் பேசிக் கொண்டது, இவர் காதில் விழுந்தது. அவ்விருவரும் காவிரியை கடந்து, அக்கரைக்கு செல்ல வேண்டியவர்கள். ஆற்றில் தண்ணீர் குறைவாகவே இருந்ததால், ஆற்றில் இறங்கி நடந்தே, அக்கரை சேர்ந்து விடலாம் என்றாள் மனைவி. அதற்கு அவள் கணவன், அப்படி செய்யக் கூடாது. கங்கையை காட்டிலும், காவிரி புனிதமானது. அதனடியில் உள்ள ஒவ்வொரு மணலும், ஒவ்வொரு சிவலிங்கம் என்று பெரியோர் சொல்வர். நாம், கர்ம வசத்தால் இந்த குலத்தில் பிறந்துள்ளோம். கரையிலிருந்த படியே, ஒரு பாத்திரத்தில் ஜலத்தை எடுத்து, காவிரி ஸ்நானம் செய்து விடலாம். இந்த கர்ம சரீரத்துடன், காவிரியில் இறங்கி, சிவலிங்கங்களை மிதிக்க வேண்டாம். கொஞ்ச தூரம் சென்றால், மூங்கில் பாலம் வரும். அதன் வழியாக அக்கரை சேரலாம்... என்றான்.

அவனது பக்தியும், ஞானமும் ஹரதத்தரை கவர்ந்ததால், அவன் அருகில் சென்று, அவனை வணங்கி நின்றார். உடன் அவன் பதறிப் போய், சுவாமிகளே... நீங்கள், என்னை வணங்கலாமா, என்னை தொடலாமா, இதனால், எனக்கல்லவோ பாவம் வந்து சேரும்... என்றான். அதற்கு ஹரதத்தர், அய்யனே... உன்னை போல சிவபக்தியும், ஞானமும் கொண்ட எவரையும், நான் பார்த்ததில்லை. காவிரியின் மகிமையையும், அதிலுள்ள மணல் ஒவ்வொன்றையும் சிவலிங்கமாக கருதும் எண்ணம் கொண்டவர்கள், உன்னைத் தவிர வேறு யாரையும் நான் கண்டதில்லை. வேத சாஸ்திரங்களில் கரை கண்டவர்கள் என்று சொல்லிக் கொள்வோரிடம் கூட, உன்னுடைய இந்த மனோபாவம் இருந்ததில்லை. நீயல்லவோ உண்மையில் சிவ தத்துவமறிந்தவன்... என்று புகழ்ந்து பாராட்டினர். இது, சிவலிங்கம்; இது கல்; இது மண்; என்ற பேதமின்றி, சர்வத்தையும் சிவமாக பாவிக்கும் எண்ணமே, சிறந்த சிவபக்திக்கு அடையாளம். இப்படிப்பட்ட எண்ணம் எல்லாருக்கும் வந்து விடுமா? இதற்கு, மனம் பக்குவப்பட வேண்டும். பக்குவமில்லாத மனதில் பக்தி ஏற்படாது. எதிலும், பகவானை காணும் மனோபாவம் இருந்தால், நாளடைவில், மனம் பக்குவப்படும்.
சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம்: உற்சவ மூர்த்திகள் வீதியுலா!

காஞ்சிபுரம்: ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் உற்சவ மூர்த்திகளின் வீதியுலா நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், திருவாதுரை நட்சத்திரம் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, ஏகாம்பரநாதர், கச்சபேஸ்வரர், வழக்கத்தீஸ்வரர் மற்றும் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அனைத்து சிவலாயங்களில், அதிகாலை முதலே மூலவர் சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மேலும், உற்சவ மூர்த்திகள் தம்பதி சமேதராய் சிறப்பு மலர் அலங்கார பல்லக்கில், முக்கிய வீதிகளில் வீதியுலா வந்தனர். கச்சபேஸ்வரர் கோவிலில், திருமணம் ஆகாத பெண்கள் தலையில் மண் சட்டியினால் ஆனா தீபம் ஏந்தி, சுவாமியை வநம் வந்து, சிறப்பு அர்ச்சனைகள் செய்து வழிப்பட்டனர். இதனால், கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதேபோல், நாகலத்து மேடு பகுதியில் உள்ள சிவகாமி அம்பாள் உடனுறை நடராஜர் பெருமான் கோவிலில், உற்சவர் மீனாட்சி சுந்தரரேஸ்வரர் அலங்காரத்தில் அருள் பாலித்தார். மேலும், பல்வேறு பகுதியில் உள்ள கோவில்களிலும் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. பல இடங்களில், அன்னதானம் வழங்கப்பட்டன.
தர்மத்தின் சட்டம்

மாதவ முனிவரான மாண்டவ்யர் இமயமலையில் அடர்ந்த காட்டில் தவம் செய்து கொண்டிருந்தார். அவரது தவம் ஈடு இணையற்றது. சிவனை வணங்கி அவரது உயரிய அருளைப்பெற்றிருந்தார். உலகிலுள்ள அனைத்து முனிவர்களும் மாண்டவ்யரின் தவத்திற்கு முன்னால், தங்களது தவம் மிகவும் சாதாரணமானது என்பதை உணர்ந்திருந்தனர். எனவே அவர்கள் மாண்டவ்யருக்கு மிகவும் மரியாதை கொடுத்து வந்தனர். அந்த மாமுனிவருக்கும் ஒரு சோதனை வந்தது. ஒரு முறை சாலவ தேசத்தில் கள்வர்களின் அட்டகாசம் அதிகமாக இருந்தது. அவர்கள் பொதுமக்களை கொன்று பொருள்களை திருடிச் சென்றனர். காவலர்களால் இவர்களை பிடிக்கவே முடியவில்லை. கொள்ளளையர்களின் தலைவன் ஒரு திட்டமிட்டான். தன் கூட்டாளிகளை அழைத்து, இப்படி சிறிய திருட்டை செய்வதை விட்டு விட்டு, அரண்மனை கஜானாவை கொள்ளையடித்து விட்டால் சொகுசான வாழ்க்கையை நிரந்தரமாக அமைத்துக் கொள்ளலாம் என்று ஆசை வார்த்தை கூறினான். தலைவனின் திட்டப்படி கொள்ளையர்கள் அரண்மனைக்குள் புகுந்து காவல் காத்த அத்தனை வீரர்களையும் கொன்று கஜானாவை கொள்ளையடித்து குதிரைகளில் தப்பியோடினார். இவைகளை கவனித்த காவலர்கள் அவர்களை விரட்டினர். களைந்து போன திருடர்கள் கொள்ளையடித்த பொருட்களை தவம் செய்து கொண்டிருந்த மாண்டவ்யரின் ஆசிரமத்திற்குள் போட்டு விட்டனர். அங்கே வந்த காவலர்கள் ஒளிந்திருந்த திருடர்களை பிடித்தனர்.

தவத்தில் இருந்த மாண்டவ்யரை எழுப்பிய போது அவர் அசையவே இல்லை. எனவே அப்படியே மன்னனிடம் தூக்கி சென்றனர். மன்னன் எப்படி கேட்டும் மாண்டவ்யர் அசையவே இல்லை. இதனால் கோபம் கொண்ட மன்னன் முனிவரை கழுவில் ஏற்றும் படியும், மற்ற திருடர்களை கொன்றுவிடும் படியும் உத்தரவிட்டான். முனிவர் கழுவில் தொங்கிவிடப்பட்டார். அவரது உடல் முழுவதும் ஊசி குத்தப்பட்டிருந்தது. நெஞ்சில் ஆணி அடிக்கப்பட்டிருந்தது. அப்போது வானத்தில் சென்று வசிஷ்டர் முதலான முனிவர்கள் இந்த செயலை பார்த்து வந்து முனிவரை வணங்கி மாண்டவ்யர் என்ற பட்டத்தை வழங்கினார். அப்போது தான் மாண்டவ்யர் கண்விழித்தார். இதைப்பார்த்த காவலர்கள் மன்னனிடம் தெரிவித்தனர். மன்னன் வந்து, அறியாமல் தான் செய்த தவறிற்கு முனிவரிடம் மன்னிப்பு கேட்டான். பின் எமலோகம் சென்ற முனிவர் எமதர்மராஜனிடம், இந்த பிறவியில் தான் செய்யாத பாவத்திற்கு ஏன் தண்டனை கொடுத்தாய் என கேட்டார். நீ சென்ற பிறவியில் சிறு வயதில் ஒரு தட்டான் பூச்சியை பிடித்து அதன் நெஞ்சில் ஒரு முள்ளை செருகி விளையாடினாய் அந்த வினைப்பயன் தான் இது என்றார் எமன். அதற்கு முனிவர், எமதர்மராஜனே ! நான் சிறுவயதில் அறியாமல் செய்த தவற்றுக்கு, என்னை நல்வழிப்படுத்தாத பெற்றோர்கள் காரணம். எனவே அறியாமல் சிறுவயதில் செய்யும் தவறுக்கு தண்டனையை பெற்றோர்களுக்கும் பிரித்து தர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கேட்டு கொண்டார். எமனும் சம்மதித்தார். உடனே முனிவர், தர்மராஜா, நீ எப்படியேனும் எனக்கு தண்டனை கொடுத்து விட்டாய். எனவே மகாபாரதத்தில் திருதராஷ்டிரன், பாண்டு ஆகியோரின் சகோதரன் விதுரனாக பிறந்து துரியோதனன் அவையில் வேலைக்காரி மகன் என அவமானப்படுத்தப்படுவாய் என கூறினார்.எனவே, குழந்தைகளை எதற்கும் தீங்கு செய்ய விடாமல் அன்பின் வழி நடத்தி செல்ல வேண்டும்.
ஹரி அனந்தர்

வடநாட்டில் உள்ள ஒரு சிற்றூரில் ஹரி அனந்தர் என்பவர் வாழ்ந்து வந்தார். வேத சாஸ்திரங்களில் கரைகண்டவர். இவரிடம் பல மாணவர்கள் படித்தாலும் ஒரு மாணவன் அளவில்லாத அன்பு வைத்திருந்தான். குருகுல முறைப்படி, நாள்தோறும் பிச்சைக்குச் சென்று ஒரு படி ரொட்டிமாவு கொண்டு வருவான். அதை குருவின் திருவடிகளில் சமர்ப்பித்து பின்பு ரொட்டி செய்வான். அந்த ரொட்டிகளில் தாம் சாப்பிட்டது போக மீதியை மற்றவர்களுக்கு கொடுப்பான். ஒரு சமயம் கபீர்தாசின் குருவான சாது ராமானந்தர் அவ்வூரிலுள்ள ஒரு மடத்தில் தங்கியிருந்தார். பிச்சைக்குச் சென்ற மாணவன் அவரை வணங்கினான். அகத்தின் அழகு முகத்திலே தெரியும் என்பது போல, இவ்வளவு அன்பும், பரிவும், நல்ல குணங்களும் கொண்ட இந்த சிறுவன் நாளை காலையோடு ஆயுள் முடிந்து இறந்து போகப்போகிறானே என வருத்தப்பட்டு அந்தோ ! அடடா ! என்றார் ராமானந்தர். இப்படி ஒரு வார்த்தை அவரது வாயிலிருந்த வருமானால் அது ஆபத்துக்கு அறிகுறி என பொருள். இதைக்கேட்டு மாணவனுக்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. குருவே ! நான் நீங்கள் சொன்னதைக் கேட்டு எவ்வித அச்சமும் கொள்ளவில்லை. மரணத்தைக் கண்டு நான் பயப்படவில்லø. எனது மரணத்திற்கு முந்தைய தினமான இன்று உங்கள் தரிசனம் கிடைத்தது நான் செய்த பாக்கியத்தையே குறிக்கிறது என்று சொல்லி மீண்டும் ஒரு முறை வணங்கினான்.

அங்கிருந்து புறப்பட்டு குருவிடம் சென்றான். தனது ஆயுள் முடியப்போகும் விஷயத்தை குருவிடம் விளக்கினான். ஹரி அனந்தர் மாணவனை அருகில் அழைத்து, இன்றைய வேலைகளை வழக்கம் போல செய்துவிட்டு, தியானம் முடித்து தூங்கு. நாளை காலையில் அருணோதயத்திற்கு முன்னதாக என்னை எழுப்பு, என்றார். மறுநாள் சூரிய உதயத்திற்கு முன்னதாக குருவை எழுப்பினான் மாணவன். இருவரும் நீராடி தியானம் செய்யும் சமயத்தில் மாணவனை அருகில் அழைத்த ஹரி அனந்தர், பத்மாசனத்தில் அமர்ந்தார். தனது புலன்களை ஒவ்வொன்றாய் ஒடுக்கி, சமாதி நிலைக்கு சென்றார். மாணவனும் அதே முறையில் தியானத்தில் ஆழ்ந்தான். இப்படி இருவரும் ஒரே விதமாக தங்கள் இதயத்தில் வாழும் இறைவனை தியானிக்கலாயினர். இறைவன் இவர்களது ஒப்பற்ற தியானத்திற்கு கட்டுப்பட்டவராய், சங்கு, சக்கரங்களுடன் அங்கே எழுந்தருளினார். சக்கரத்தாழ்வாரை குரு, சிஷ்யன் ஆகியோரின் தலைக்கு மேலே சுழன்று கொண்டிருக்கும்படி பணித்து, தானும் அங்கேயே அமர்ந்து விட்டார்.

உரிய நேரம் வந்தது. நீலவண்ணத்தில் உலகம் இருளில் மூழ்க, எருமையின் மீதேறி வந்து நின்றான் எமன். இறைவன் புன்முறுவலுடன் வீற்றிருக்க, எதிரில் குருவும், மாணவனும் மெய்மறந்து தியான நிலையில் அமர்ந்திருப்பதையும், தலைக்கு மேல் வெண்கொற்றக்குடை போல சக்கரம் கம்பீரமாக சுழல்வதையும் கண்டு நடுநடுங்கிப் போனான். இறைவனே இங்கு வந்து அமர்ந்திருப்பதால் நம்மால் எதுவும் செய்ய முடியாது என கருதிய அவன், வந்த வழியே திரும்பிப்போனான். எமன் சென்றதும் குருவும் மாணவனும் கண்விழித்தனர். இருவரையும் நெஞ்சாரத்தழுவி ஆசி கூறி மறைந்தார் கிருஷ்ண பரமாத்மா. அடுத்தநாள் வழக்கம்போல் பிச்சைக்கு, சென்றான் மாணவன். ராமானந்தரின் பாதத்தைத் தொட்டு வணங்கினான். அடடா ! பிழைத்து விட்டாயே ! என்று ஆச்சரியப்பட்டவர். நடந்தவற்றை தனது ஞானதிருஷ்டியால் உணர்ந்தார். உன்னைக் காப்பாற்றிய சக்திமிக்க குருவை நான் காணவேண்டும் என்றார். இருவரும் ஹரி அனந்தரின் இருப்பிடத்திற்கு வந்தனர். எமனையே வென்ற உமது பக்தி அற்புதம் ! அற்புதம் ! என பாராட்டிய ராமானந்தர் ஹரியை கண்ணால் கண்ட ஹரி அனந்தரின் பாதங்களில் விழுந்து கண்ணீர் பெருக போற்றினார்.
அவுர்வர்

அவுர்வர் என்ற சொல்லுக்கு தொடையிலிருந்து பிறந்தவர் என்று பொருள். இவரைப் பெற்ற தாய் தியாகத்தின் சின்னமாகத் திகழ்ந்தவள். எல்லாரும் வயிற்றில் பத்து மாதம் தான் கருவை சுமப்பார்கள். ஆனால், இந்த தாய் இவரை சில வருடங்கள் சுமந்தார். வயிற்றில் இருந்தால் ஆபத்து என்பதால் தனது தொடையில் வைத்து கருவை காப்பாற்றினார் என புராணங்கள் சொல்கின்றன. அவுர்வரின் தந்தை அப்நவாநர். பிருகு மகரிஷியின் வம்சத்தில் தோன்றியவர். மிகப்பெரிய ரிஷி. அப்நவாநர் பற்றிய தகவல்கள் புராணங்களில் அதிகமாக கிடைக்கவில்லை. பெரும்பாலும் இவர் தனிமையையே விரும்புவார். தவவலிமை அதிகம் உள்ளவர். ஆயினும், மிகுந்த பொறுமை உள்ளவர் என்பதால் தன் தவவலிமையை தவறான வழியில் பயன்படுத்துவதில்லை. யாரையும் சபித்ததும் இல்லை. இவர் மீது எல்லா ரிஷிகளும் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். இந்த சமயத்தில் தங்கள் வளர்ச்சிக்கு தடையாக இருந்த பிருகு வம்சத்தாரை க்ஷத்திரியர்கள் கொன்று குவித்துக் கொண்டிருந்தனர். அப்நவாநரும் பிருகு வம்சத்தை சேர்ந்தவர் என்பதால் அவரைத் தேடி அலைந்தனர். ஆனால், அவர் கிடைக்கவில்லை. பிருகு வம்ச பெண்கள் கருவுற்றிருந்தால் அவர்களை கொல்லவும் க்ஷத்திரியர்கள் தயங்கவில்லை. அவுர்வரின் தாயும் கர்ப்பமானாள். அவளைக்கொல்ல க்ஷத்திரியர் படை அலைந்தது. மறைந்து வாழ்ந்த இந்த பெண்மணி தனது வயிற்றில் இருந்த கருவை தனது சக்தியாலும், பதிபக்தியாலும், குழந்தை பாசத்தாலும் தொடைக்கு கொண்டு வந்துவிட்டாள். க்ஷத்திரிய படையினரும் இவளைக் கண்டுபிடித்துவிட்டனர். ஆனால் வயிற்றில் கர்ப்பம் இருப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. உடையால் தொடையை மறைந்திருந்ததால் அங்கு கர்ப்பம் தங்கியிருப்பதை அவர்களால் அறிந்தகொள்ள முடியவில்லை. அவர்களிடம் தப்பித்த அந்த பெண் அவுர்வரை பெற்றெடுத்தாள்.

அவுர்வர் இளவயது முதலே வேத சாஸ்திரங்களில் சிறந்து விளங்கினார். தனது மூதாதையர் பலர் க்ஷத்திரியர்களால் கொல்லப்பட்டதை அறிந்து ஆவேசம் கொண்டார். அவர்களை பழிவாங்க முடிவெடுத்தார். உலகில் ஒரு மனிதன் கூட உயிர்வாழ முடியாத அளவிற்கு அவர் தவம் செய்தார். அந்த தவத்தின் வலிமையால் பிரபஞ்சமே நடுங்கியது. க்ஷத்திரியர்கள் தங்கள் கண்பார்வையை இழந்துவிட்டனர். இதைப்பார்த்த அவுர்வரின் முன்னோர்கள் மொத்தமாக வந்து சேர்ந்தனர். குழந்தை அவுர்வா ! நீ இந்த உலகத்தின் மீது கோபப்படுவதில் அர்த்தமில்லை. இந்த உலக வாழ்க்கை வேண்டாமென நாங்கள்தான் முடிவெடுத்தோம். எனவே க்ஷத்திரியர்கள் மூலமாக எங்களை நாங்களே அழித்துக் கொண்டோம். அதற்குரிய முன்னேற்பாடுகளை நாங்களே செய்து கொண்டோம். திட்டமிட்டு செய்யப்பட்ட இந்த செயலுக்காக நீ கோபமோ, வருத்தமோ அடையவேண்டாம். இதற்கு க்ஷத்திரியர்களை பொறுப்பாளிகள் ஆக்கமுடியாது. எங்கள் ஆசை எல்லாம் இந்த பூலோகத்தை துறந்து புண்ணிய லோகத்திற்கு செல்ல வேண்டும்என்பதே ஆகும். ஒருவன் தற்கொலை செய்துகொண்டால் அவன் புண்ணியலோகத்தை அடைய முடியாது. எனவே தற்கொலை முடிவுக்கு வராமல் நாங்களே அழிந்துபோகும்படியாக க்ஷத்திரியர்களின் மனதில் எங்களை அழிக்க வேண்டும் என்ற விபரீத எண்ணத்தை உருவாக்கினோம். அதன்படியே இது நடந்தது, என்றனர். இதைக்கேட்ட பிறகுதான் அவுர்வருக்கு ஓரளவு கோபம் தணிந்தது.

அவர் தனது முன்னோர்களிடம், ஒருவனுக்கு கோபம் வந்துவிட்டால் அதை நியாயமான காரணங்களால்கூட அடக்கிவிட முடியாது. தனது கோபத்தை அவன் வெளிப்படுத்தியே தீருவான். க்ஷத்திரியர்கள் மீது தவறு இல்லை என உங்கள் மூலமாக நான் தெரிந்து கொண்டாலும், அவர்கள் மீதான கோபம் முழுமையாக தீரவில்லை. எனவே என் கோபத்தை எந்த இடத்தில் சென்று தணிப்பது ? என்று கேட்டார். அதற்கு முன்னோர்கள், இங்கிருந்து சில மைல் தூரம் செல். பெரிய கடலை பார்ப்பாய். அந்த சமுத்திர வெள்ளத்தில் உனது கோபத்தை விட்டுவிடு. உனக்கு தெளிந்த மனம் கிடைக்கும் என்றனர். அதன்படியே அவுர்வர் சமுத்திரத்திற்கு சென்று தனது கோபக்கனலை அதில் செலுத்தினார். அவரது மனம் தெளிவடைந்தது. இப்போதெல்லாம் அமாவாசை காலங்களில் கடலில்சென்று நீராடுகிறோம். இதற்கு காரணம் நமது பித்ருக்களை மனம் குளிர வைக்கத் தான். அவுர்வரும் தனது பித்ருக்கள் சொன்னபடி கடல் நீராடி மனத்தெளிவு பெற்றார். அவரது கோபம் தணிந்தபிறகு பார்வை இழந்த க்ஷத்திரியர்கள் அனைவரும் அவர் முன்னால் வந்தனர். தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்டனர். அவர்களிடம், அவுர்வர், மனதில் கெட்ட எண்ணங்களே உருவாகக்கூடாது. எதிரியாக இருந்தாலும் அவனை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிடுங்கள். தவறு செய்பவர்களை திருத்துவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால், கொல்வதற்கு தெய்வ சட்டத்தில் இடம் இல்லை என்றார். அவரது அறிவுரையை க்ஷத்திரியர்கள் ஏற்றனர். இந்த அவுர்வர்தான் ரிசீகர் என்று சொல்லப்படுகிறார். இவரது மகன்தான் ஜமதக்னி முனிவர். ஜமதக்னியின் மகன் தான் பரசுராமர். மிகப்பெரிய பாரம்பரியத்தை கொண்டவர் அவுர்வர். அவுர்வரின் வரலாற்றைப் படித்த நாம் எதிரிகளுக்கு கூட துன்பம் செய்யாமல் வாழக் கற்றுக்கொள்வோம்.