இதை படிச்சாலே மோட்சம் தான்!
ஏகாதசி விரதமிருந்தால் மோட்சம் கிடைக்கும். வைகுண்ட ஏகாதசியன்று, மரணம் அடைபவர்கள் எவ்வளவு பாவம் செய்தவராக இருந்தாலும், வைகுண்டத்துக்கு சென்று விடுவார்களாமே... எனக்கு அந்த விரதம் பற்றி எதுவுமே தெரியாதே! சாப்பிடக்கூடாது, தூங்கக்கூடாது என்கின்றனர். இப்படி, கடுமையாக உடலை வருத்திக் கொண்டால் மட்டும் மோட்சம் கிடைத்து விடுமா என்ன... என்று, பலர் புலம்புவதை கேட்டிருக்கிறோம். ஆனால், இதெல்லாம் இல்லாமலே, பரந்தாமனை அடைந்து விட்டது ஒரு தயிர்ப்பானை. கிருஷ்ணன், ஒரு வீட்டில் வெண்ணெய் திருடிக் கொண்டிருந்தான். அவ்வீட்டுப் பெண், கிருஷ்ணனை விரட்டி வந்தாள். அவன் அருகில் இருந்த ஒரு வீட்டுக்குள் புகுந்து, அங்கிருந்த தன் நண்பன், ததிபாண்டனிடம், கெஞ்சிக்கூத்தாடி, ஒரு பானைக்குள் ஒளிந்து கொண்டான். நண்பனும் கிருஷ்ணனை மறைத்துக் கொள்ளும் விதமாக, பானை மீது ஏறி அமர்ந்து கொண்டான். அந்தப்பெண், அங்கு வந்து, கிருஷ்ணனைத் தேடிய போது, இங்கு வரவில்லையே... என்று சொல்லி விட்டான் நண்பன். அவள் போனதும், நண்பா... பானையை விட்டு இறங்கு. நான் வெளியே வர வேண்டும்... என்றான் கிருஷ்ணன்.
முடியாது. எனக்கு மோட்சம் அளிப்பதாக வாக்கு கொடு. அப்போது தான் இறங்குவேன்... என்று நிர்ப்பந்தித்தான் ததிபாண்டன். வேறு வழியில்லாமல், கிருஷ்ணனும், உனக்கு மட்டுமல்ல. இந்த பானைக்கும் சேர்த்தே மோட்சம் தருகிறேன். முதலில் பானையை விட்டு இறங்கு... என்று வாக்குறுதி அளித்தான். ஆபத்து காலத்தில், உதவி செய்த காரணத்தால், இப்படி, ஒரு ஜடப்பொருள் கூட மோட்சத்தை அடைந்திருக்கிறது. இந்தக் கதையை தெரிந்து வைத்திருந்தார், ஸ்ரீரங்கம் கோவிலில் அர்ச்சகராக இருந்த பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்.
அவர், ஒருமுறை, ரங்கநாதரிடம், ரங்கா... எனக்கு மோட்சம் தா... என்றார். திடீரென ஏன் இப்படி கேட்கிறீர்? என்று ஆச்சரியத்துடன் கேட்டார் ரங்கன். அதென்னவோ தெரியவில்லை. எனக்கு இன்றே மோட்சம் வேண்டும்.... மோட்சம் போவதென்றால் சாதாரண விஷயமா... இந்த உலகம் பொய்யானது என்ற ஞானம் உமக்கு வந்து விட்டதா... ஞானயோகம், கர்மயோகம், பக்தியோகம் பற்றியெல்லாம் தெரியுமா? என்று கேட்டார்.
தெரியாது... போகட்டும். யாருக்காவது அன்னதானம் செய்திருக்கிறீரா அல்லது என் பக்தன் தங்க இடவசதியாவது செய்து கொடுத்தீரா?
இல்லை... ரங்கநாதனுக்கு கோபம் வந்து, பாம்பு படுக்கையை விட்டு, எழுந்து விட்டார். ரங்கநாதனை அமர்ந்த கோலத்தில், அநேகமாக பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் மட்டும் தான் தரிசித்திருப்பார். ஏனய்யா பிள்ளை பெருமாள் ஒன்றுமே செய்யாமல், மோட்சம் கேட்கிறீரே... அதெப்படி தர முடியும்? என்று கேட்டார் ரங்கன். ஐயங்காரும் சளைக்காமல், ஏ பெருமாளே... என்னை இத்தனை கேள்விகள் கேட்கிறாயே... ஒரு பானைக்கு, எதை வைத்து மோட்சம் கொடுத்தாய்... அதற்கென்ன பக்தியோகம், கர்மயோகம் எல்லாம் தெரியுமா... ஒரு ஜடப் பொருளுக்கே மோட்சம் தந்த நீ, எனக்கு தர மறுப்பதேன்? என்றார் விடாக்கண்டனாய். ரங்கநாதனுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. திரும்பவும் படுத்து விட்டார். இந்தச் சம்பவம் மூலம் நாம் அறிவது, ஆன்மிக விஷயங்களை, தெய்வங்களின் வரலாறை நாம் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம், இவன், உலகியல் வாழ்வில் என்ன தான் நாட்டம் கொண்டவனாக இருந்தாலும், பக்தி சமாசாரங்களையும் காது கொடுத்து கேட்டிருக்கிறான். இவனை மோட்சத்துக்கு அனுப்பலாம் என்று, பரந்தாமன் முடிவு செய்வான். எனவே, ஆன்மிக நூல்களை நிறைய படியுங்கள். உடலை வருத்தி பட்டினி கிடப்பது என்பதெல்லாம், இரண்டாம் பட்சம் தான்!
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
ஞாயிறு, 10 ஜனவரி, 2021
இதை படிச்சாலே மோட்சம் தான்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக