திங்கள், 23 நவம்பர், 2020

ராமாயணம் பகுதி மூன்று

ராமாயணம் பகுதி மூன்று

தசரத சக்கரவர்த்தி மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிப் போனார். தாயார்கள் தங்கள் செல்லக் குழந்தைகளை பார்த்து பார்த்து புளகாகிதமடைந்தார்கள். சகோதரர்கள் நால்வரும் கணமும் பிரிவதில்லை. ராமனும் சுமித்திரை மகன் லட்சுமணனும் இணை பிரிவதே கிடையாது. பரதனும் சத்ருக்கனனும் ஒன்றாகத் திரிவார்கள். இந்த சகோதர ஒற்றுமை உலக சகோதரர்கள் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். ஒருவருக்கு தலைவலித்தால், நான்கு பேருக்கும் வந்தது போல துடித்துப் போவார்கள். அப்படி ஒரு ஒற்றுமை.மனைவியை விட நல்ல குழந்தைகள் அமைவது ஒருவனுக்கு கிடைத்தற்கரிய ஒன்று. தசரத சக்கரவர்த்தி குழந்தைகள் விஷயத்தில் ரொம்ப கொடுத்து வைத்தவர். இன்றும் ராம லட்சுமணர்கள், பரத சத்ருக்கனர்கள் என்று தானே நாம் கூறிக் கொண்டிருக்கிறோம். ஆனால், மனிதன் இன்பத்தை மட்டுமே அனுபவிக்க பிறந்தவன் அல்லவே. அவன் துன்பக்கடலையும் கடந்தாக வேண்டுமே. ராமனின் பதினாறாவது வயதிலேயே சோதனையும் வந்தது விஸ்வாமித்திர முனிவரின் ரூபத்திலே. அவர் அன்று அரசவைக்கு வருகை தந்தார். இக்ஷ்வாகு குல மன்னர்கள் முனிவர்களின் பேச்சுக்கு மிகுந்த மதிப்பளிப்பவர்கள். அவர்களைத் தெய்வமாய் போற்றுபவர்கள். விசுவாமித்திரரைப் பற்றி அனைவரும் அறிவர். கோபக்காரர். கோபமுள்ள இடத்தில் குணமும் இருக்கும், திறமையும் இருக்கும் போலும்! தசரதர் விஸ்வாமித்திர மகரிஷியை வரவேற்றார்.

வர வேண்டும் மாமுனியே! தாங்கள் ராஜகுமாரராக அவதரித்தீர்கள். நாடாண்ட நீங்கள் இப்போது ராஜரிஷியாகி விட்டீர்கள். ராஜவம்சத்தவர், ஆன்மிகத்தில் முழுமையாக ஈடுபடுவதென்பது அசாத்தியமான ஒன்று. ஆனால், தாங்கள் அதை சாத்தியப்படுத்தி விட்டீர்கள். தாங்கள் அரண்மøனியில் தங்கிச் செல்வதன் மூலம், பெரும் பேறு அடைந்தவன் ஆவேன், என்று உபசரித்தார். இந்த உபசாரம் என்பது வெறும் புகழ்ச்சிக்காக அல்ல. உள்ளதை உள்ளபடி எடுத்துரைத்ததுடன், உண்மையான உபசாரமாக இது அமைந்தது. விருந்தினர்களை உள்ளன்போடு உபசரிக்க வேண்டும் என்பதைக் கூட ராமாயணம் நமக்கு கற்றுத் தருகிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும், மனிதன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லும் இனிய இதிகாசமல்லவா இது! விஸ்வாமித்திரர் மகிழ்ந்தார். தசரதரை ஆசிர்வதித்தார். சக்கரவர்த்தி! நான் தங்கிச் செல்லும் நிலையில் இல்லை. உன்னிடம் ஒரு உதவி நாடி வந்திருக்கிறேன், செய்வாயா?. தசரதர் பதறியும், நெகிழ்ந்தும் போனார். தங்களுக்கு உதவி செய்யும் பாக்கியம் எனக்கு கிடைப்பதற்கே நான் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே! என்னிடம் அனுமதி கேட்கவே தேவையில்லை. செய் என்றால் தலை வணங்கி செய்து விட்டு போகிறேன், என்று வாக்கு கொடுத்து விட்டார் நடக்கப்போகும் விபரீதத்தை அறியாமலே. ராஜாவின் சொற்கள் விஸ்வாமித்திரரின் முகத்தில் மகிழ்ச்சி ரேகைகளை படரவிட்டன.

தசரதா! நான் உலக நன்மைக்காக கானகத்தில் ஒரு யாகம் நடத்திக் கொண்டிருக்கிறேன். அந்த யாகத்தை தாடகை என்ற அரக்கியின் புதல்வர்களான மாரீசன், சுபாகு என்பவர்கள் அழிக்க நினைக்கிறார்கள். வேள்வி குண்டத்தில் மாமிச துண்டங்களை வீசியெறிந்து வேள்வியின் நோக்கத்தையே சிதைக்க திட்டமிட்டுள்ளார்கள். என்னாலும் அவர்களை அழிக்க இயலும். ஆனால், யாகம் நடத்துவதில் நான் மிக கவனமாக இருக்க வேண்டியுள்ளது. மந்திரங்கள் சொல்வது இடையில் நின்று போகக்கூடாது. எனவே வலுவான காவலன் ஒருவன் எனக்கு வேண்டும். அவன் உன்னிடம் தான் இருக்கிறான், விஸ்வாமித்திரர் சற்றே நிறுத்தினார். யாரது! சொல்லுங்கள் மகரிஷஇ. நான் உடனே அவனை அனுப்புகிறேன். இது சத்தியம்,. தசரதர் விஸ்வாமித்திரருக்கு உதவுவதில் இன்னும் ஆர்வம் காட்டினார். ராஜா! அவன் வேறு யாருமல்ல. இந்த ராஜா பெற்ற மற்றொரு ராஜா, உன் பெரிய மகன் ராமன்,. ஆ.... தசரதர் அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டார். முனிநாதா! யாரைக் கேட்டீர்கள். என் சின்னஞ்சிறு பாலகன் ராமனையா. பதினாறே வயது நிரம்பிய அந்த சிசுவையா? அவனால், எப்படி அப்பேர்ப்பட்ட அசுரர்களை எதிர்க்க முடியும்? எனக்கு இது அதிர்ச்சியாக உள்ளது,. விஸ்வாமித்திரர் கொதித்து போய் விட்டார். தசரதா! என்னிடமே வார்த்தை மாய்மாலம் செய்கிறாயா? நான் சொல்வதை செய்வதாக வாக்களித்து விட்டு உடனே தடம் புரண்டு விட்டாயே,. அவரது கனல் வார்த்தைகள் கேட்டு அனலில் விழுந்த புழுவாய் துடித்தார் தசரதர்.

 முனிவரே! வார்த்தைகளால் என்னைக் கொல்லாதீர்கள். ராமனுக்கு பதிலாக நானே படைகளுடன் வருகிறேன். வேள்விக்கு எந்த பங்கமும் ஏற்படாமல் பாதுகாக்கிறேன். சிறுவனை அனுப்புவதில் உள்ள சிரமத்தைத் தான் சொன்னேன். நான் வாக்கு தவறுபவன் அல்ல,. தசரதர் கதறாத குறையாகச் சொன்னார்.விஸ்வாமித்திரருக்கு இன்னும் கோபம்.நான் உன் மகன் ராமனைத்தான் என்னோடு அனுப்பச் சொன்னேன். உன்னை வரச் சொல்வதாக இருந்தால் முதலிலேயே உன்னிடம் சொல்லியிருப்பேனே. ராமனை அனுப்புகிறாயா, இல்லையா? விசுவாமித்திரர் மிரட்டினார். தசரதர் செய்வதறியாது திகைத்து நிற்கையில், அரசகுரு வசிஷ்டர் இடையில் புகுந்து நிலைமையை சாந்தமாக்கினார். விசுவாமித்திரரைப் பற்றி அவர் அறியாத விஷயங்களா என்ன? தசரதரை அழைத்தார். தசரதா! ஏனிந்த தயக்கம். நம் கண்மணி ராமன், அரக்கர்களை அழிக்க தகுதி வாய்ந்தவனே! பதினாறு வயதிலேயே அவன் பெரும் சாதனை நிகழ்த்தப் போகிறான். அதற்குரிய சந்தர்ப்பம் அவனைத் தேடி வந்துள்ளது. இந்த சாதனையைச் செய்து, இக்ஷ்வாகு வம்சத்தின் பெருமையை மேலும் உயர்த்துவான். அவனை முனிவருடன் அனுப்பி வை,.அரசகுருவே சொன்ன பிறகு தசரதரால் என்ன செய்ய முடியும்? ஒருவாறாக மனதைத் தேற்றிக் கொண்டு, ராமபிரானை அனுப்ப சம்மதித்தார். அப்போது இளைஞன் ஒருவன் மன்னர் முன் துள்ளிக் குதித்து வந்து நின்றான். அவன் சொன்ன வார்த்தைகள் தசரதரின் தலையை இன்னும் சுழல வைத்தது.


கருத்துகள் இல்லை: