ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

எண்ணத்தில் நலமிருந்தால் இன்பமே எல்லோர்க்கும்...!

மனதில் எழும் எண்ணங்களை வடிகட்டி நல்லதை திரும்பத் திரும்ப எண்ணுவதும் தேவையற்ற தீய எண்ணத்தை விட்டுவிடவும் தீர்மானிப்பதே எண்ணம் ஆராய்தலாகும்.மனிதன் உணர்ச்சி வசப்பட்டவனாக இருப்பது கூடாது. அந்நிலையில் நம் தவறை திருத்திக் கொள்ள முடியாது. அறிவு நிலையில் மனதை வைத்துக் கொள்ள பழக வேண்டும்.வாழ்வில் திடீரென எந்த புதிய மாற்றத்தையோ சாதனையோ செய்து விட முடியாது. படிப்படியாகத் திட்டமிட்டால் நல்ல மாற்றங்களை வரவழைத்துக் கொள்ள முடியும்.நற்பண்பு என்பது நல்ல சிந்தனையோடு ஒன்றிய செயல் நற்செயலோடு ஒன்றிய சிந்தனையாக வாழ்வதே.மனத்தூய்மை ஒழுங்கான உணவு அளவான உழைப்பு முறையான ஓய்வு இவற்றுடன் கூடிய வாழ்க்கை நோயற்ற வாழ்விற்கு துணை புரியும் காரணிகள்.வாழ்வின் நோக்கம் அதற்குரிய வாழ்க்கை முறை இரண்டையும் அறிந்தவனே இன்பமாக வாழ முடியும்.தெளிந்த திறனும் ஆற்றலும் படைத்த நல்ல எண்ணத்திற்கு இயற்கையே கட்டுப்பட்டு ஒத்துழைக்கிறது. மனதை அடக்க நினைத்தால் அலையத் தொடங்கும். அறிய நினைத்தால் அடங்கி விடும். தன்னைத் தானே தாழ்த்திக் கொள்வதும் உயர்த்திக் கொள்வதும் மனதில் தான் இருக்கிறது. மனதை உயர்த்திக் கொண்டால் மாண்பு மிக்க இன்ப வாழ்வு பெற்று மகிழலாம்.நல்ல எண்ணத்தை விருப்பத்துடன் மனதில் இயங்க விடுவதோடு கவனத்துடன் தவறான எண்ணங்களை தவிர்ப்பதும் மிகவும் அவசியமானது.உலகிலுள்ள அனைவருக்கும் நன்மை தருவனவற்றை மட்டுமே மனதால் எண்ணவும் வாயால் சொல்லவும், செயலால் செய்யவும் வேண்டும். எண்ணத்தில் உறுதி, ஒழுங்கு, நலம் அமைந்து விட்டால் எல்லாருக்கும் அனைத்தும் எண்ணிய வகையில் ஈடேறும். உண்மையில் மனிதனுக்கு எதிரி ஒருவன் இருக்கிறான் என்றால் அது உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணமே.உண்ணும் உணவு உடம்பெங்கும் பரவி ஆற்றலை உண்டாக்குகிறது. ஆனால், எண்ணும் எண்ணமோ உலகெங்கும் பாயும் சக்தி படைத்தது. திறமையையும் வல்லமையையும் பெருக்கிக் கொள்ள இடைவிடாமல் முயற்சிக்க வேண்டும்.எந்த ஒரு சூழ்நிலையிலும் கோபம் மனதில் வராவிட்டால் அந்த மனிதன் ஞானம் அடைந்து விட்டதாகவே பொருள்.கடவுளாக நான் இருக்கிறேன் என்ற உயர்ந்த நிலையை ஒருவன் உணர்ந்து விட்டால் அவனிடத்தில் சிறிய நான் என்னும் அகந்தை அற்று விட்டதாக அர்த்தம்.வாழ்வில் சிறக்க வேண்டும் என்றால் எப்போதும் எல்லோரையும் வாழ்க வளமுடன் என்று வாழ்த்தக் கற்றுக் கொள்ளுங்கள்.பிறரை வாழ்த்தும் போது மனம் ஒரு நுண்ணிய அமைதி நிலைக்கு ஆட்படுகிறது. அதனால் மனதில் வலிமையும் தெளிவும் உண்டாகிறது.ஒரு சிறு செடியைப் பார்த்துக் கூட வாழ்க வளமுடன் என்று வாழ்த்தினால் அதன் பலவீனம் நீங்கி நன்றாக வளரத் தொடங்கும்.

கருத்துகள் இல்லை: