செவ்வாய், 24 செப்டம்பர், 2024

அதிசய வழிகள் நான்கு...

அதிசய வழிகள் நான்கு: இதற்கான அதிசய வழிகள் நான்கு உள்ளன. சந்தோஷ சாதுசங்கஸ்ச விசாரோத்ய சமஸ்ததா ஏத ஏவபவாப்யோத்யாவுபாயாஸ்தரணே ந்ருகாம  (21618) சந்தோஷம் (எப்போதும் திருப்தி), நல்லோர் இணக்கம் (சாதுக்களுடன் சேர்தல்) விசாரம், அமைதி, இவையே மனிதருக்கு உலகம் என்னும் சாகரத்தைக் கடக்கும் வழிகளாகும். இதை எளிதாக நான்கு ஸ காரங்களாக ஸந்தோஷம், ஸத்சங்கம், ஸத்விசாரம், ஸமஸ்தம் என்று நினைவில் கொள்ளலாம்.
சந்தோஷம் : விஷயங்களில் ஆசையில்லாது, சந்தோஷமாக (திருப்தியுடன்) இருக்கும் ஒருவனுக்குப் பெரும் சக்திகள் (வளங்களும் கூட) ஒரு அரசனிடம் இருக்கும் ஏவலாள்கள் போலக் காத்துக் கிடக்கும் என்பதை உறுதியாக யோக வாசிஷ்டம் தெரிவிக்கிறது. எவ்வளவு அரிய செய்தி இது!

நல்லோர் இணக்கம் : மனதில் இருக்கும் இருளை சாதுக்கள் அகற்றுவர். சூரியஒளி போன்ற ஞானத்தைத் தருவர். தர்மங்கள் செய்வதாலும், புனிதத்தல யாத்திரை மேற்கொள்வதாலும் விரதங்களாலும் மதச் சடங்குகள் மற்றும் யாகங்களாலும் என்ன பயன், ஒருவன் சாதுக்களுடன் சேர்ந்து இருக்கும்போது!

விசாரம் : நான் யார்? உலகில் பிறப்பு என்ற தோஷம் எப்படி வந்து சேர்ந்தது? இப்படி தர்க்கரீதியாக ஆய்வு செய்வதே விசாரம்!

சமஸ்தம் : அனைத்து உயிர்களிடமும் நட்பாக இருந்தால் உயரிய ஆன்மா தன்னைத் தானே சுத்தப்படுத்துகிறது. ஆக இந்த நான்கு வழிகளில் எந்த ஒரு வழியை மேற்கொண்டாலும் இறை சக்தி அருளைப் பாலித்து பெரும் வளங்களைத் தந்து முக்தியை நல்கும் என யோக வாசிஷ்டம் அறுதியிட்டு உறுதி கூறுகிறது. அதி சுலப வழி விசாரமே..: மேலே கூறிய நான்கு வழிகளில் மிகச் சுலபமான வழியாக ரமண மஹரிஷி கூறுவது நான் யார் என்று இடைவிடாது உன்னைக் கேள்வி கேள்! அனைத்து மர்மங்களும் தானே பிடிபடும் என்பதே! எப்போதும் திருப்தி, நிஜமான உயரிய பண்புகள் உள்ள சாதுக்களை நாடுதல், அனைத்து உயிர்களிடமும் சமத்துவம் என்பதெல்லாம் பலருக்கும் கடைப்பிடிக்க சற்று சிரமமான வழிகள். ஆனால் எங்கிருந்தாலும் எந்த நேரத்திலும் சற்றும் செலவின்றி ஆண் பெண் யாரானாலும் அந்தஸ்து பேதமின்றி நாடு, இனம், மொழி தாண்டி சுலபமாக செய்யக்கூடியது விசாரமே! அதனால்தான் அவர், ஆன்ம வித்தை உரை என்ற அற்புதமான பாடலில் பல்லவி அனுபல்லவி ஐந்தே ஐந்து சரணங்களில்.

ஐயே! அதி சுலபம் ஆன்மவித்த ஐயே! அதி சுலபம் என்று கூறி விளக்குகிறார்.

பொருள் பொதிந்த அடுக்குமொழித் தமிழ்க் கவிதை வரிகளை இந்தப் பாடலில் படித்தால் மஹரிஷி ஒரு மஹாகவியும் கூட என்பதை உணர்ந்து விடலாம்! சரணங்களின் கடைசி வரிகளைப் பார்ப்போம்! பொய் உருவாக்கிய அகங்காரத்தை நான் யார் என்ற இடைவிடாத கேள்வி மூலம் ஒழித்து விட்டால். சுயமான்மா விளக்குமே இருள் அடங்குமே, இடர் ஒடுங்குமே, இன்பம் பொங்குமே என்றும். மாம்சமான சரீரத்தை நான் என்று எண்ணாமல் நான் யார்? இடம் எது என்று விசாரிப்பதால். இதய குகையுள் தானாய்த் திகழும் ஆன்ம ஞானமே! இதுவே மோனமே. ஏக வானமே என்றும் உண்மை சொரூபத்தை உணர்ந்து விட்டால் பின் அறிவதற்கு என்ன இருக்கிறது? தன்னைத் தன்னில் உணர்ந்து விட்டால். தன்னுள் மின்னும் ஆன்ம பிரகாசமே அருள் விலாசமே அக விநாசமே இன்ப விகாசமே என்றும் கர்மங்களின் கட்டு அவிழ, இம்மார்க்கம் மிக்கு எளிது! சும்மா அமர்ந்திருக்க அம்மா! அகத்தில் ஆன்ம ஜோதியே; நிதானுபூதியே இராது பீதியே; இன்ப அம்போதியே (இன்ப அம்போதி ஆனந்தக் கடல்) என்றும். அண்ணாமலையானைக் காண அவன் அனுக்ரஹம் வேண்டும். உள் நாடு உளத்து ஒளிரும் அண்ணாமலை என் ஆன்மா காணுமே அருளும் வேணுமே அன்பு பூணுமே இன்பு தோணுமே என்றும் அற்புதமான சிறிய ஐந்து வரிப் பாடல்கள் ஐந்தின் மூலம் விளக்குகிறார். யோக வசிஷ்டம் கூறும் அதிசய வழிகள் நான்கில் அதிசுலபமான நான் யார் என்ற விசார வழியை அனுபூதியாக உணர்ந்தவர் மஹரிஷி ரமண மகான்! அனைவரையும் உய்விக்க எண்ணும் அருளுடன் ஐயே! அதி சுலபம் ஆன்ம வித்தை என்று அவர் கூறும் போது யோக வாசிஷ்டத்தின் உண்மைக் கூற்றையும் அதை மெய்ப்பிக்கும் மஹரிஷியின் மாண்பையும் எண்ணி எண்ணிநம் மெய் சிலிர்க்கும்! அவருடன் இணைந்து அதி சுலபம் ஆன்ம வித்தை என்று பாடியவாறே நான் யார் என்ற விசார மார்க்கத்தை மேற்கொண்டு சம்சார சாகரத்தைக் கடந்து விடலாம்! அப்போது..... சுயமான்மா விளங்குமே; இருள் அடங்குமே. இடர் ஒடுங்குமே இன்பம் பொங்குமே.

இன்னும் சுமந்து கொண்டு நாளை வருகிறேன் 👣

நவராத்திரி ஆரம்பம்....

நவராத்திரி ஆரம்பம்.


முதல் நாள் : மஹா கணபதி பூஜையுடன் தொடங்கி கலச பூஜை செய்து துர்கையை தியானம் செய்து கலசத்தில் ஆவாஹனம் செய்து துர்கா அஷ்டோத்திரம் படித்து பூஜை செய்யலாம். மஹிஷாஸுரமர்த்தினி ம‌ந்‌திர‌ம் பாராயணம் செய்யலாம்.

இரண்டாம் நாள் : இக்சா சக்தியான துர்கையை துர்கா அஷ்டோத்திரம் படித்து பூஜை செய்து ஸ்ரீ லலிதா திரிசதி, ஸ்ரீ காமாட்சி ம‌ந்‌திர‌ம் பாராயணம் செய்யலாம்.

மூன்றாம் நாள் : துர்கா அஷ்டோத்திர பூஜை. ஸ்ரீ லலிதா சஹ‌ஸ்ரநாமம் மற்றும் ஸ்ரீ லலிதா நவரத்ன மாலா பாராயணம் செய்யலாம்.

நான்காம் நாள் : ஸ்ரீமகாலக்ஷ்மியை தியானம் செய்து லக்ஷ்மி அஷ்டோத்திர பூஜை செய்தல் நல்லது. ஸ்ரீ கனக தாரா ‌ம‌ந்‌திர‌ம், ஸ்ரீ அன்ன பூர்ணாஷ்டகம், அஷ்டலக்ஷ்மி ம‌ந்‌திர‌ம் பாராயணம் செய்யலாம்.

ஐந்தாம் நாள் : லக்ஷ்மி அஷ்டோத்திர பூஜை செய்து ஸ்ரீ கனகதாரா ம‌ந்‌திர‌ம், ஸ்ரீ லலிதா சஹ‌ஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். ஸ்ரீ மகாலக்ஷ்மி அஷ்டகமும் பாராயணம் செய்வது நன்மை தரும்.

ஆறாம் நாள் : லக்ஷ்மி அஷ்டோத்திரம் அல்லது மகாலக்ஷ்மி ஸஹ‌ஸ்ரநாம பூஜை செய்தல் சிறப்பானது.

ஏழாம் நாள் : ஸ்ரீ சர‌ஸ்வதி அஷ்டோத்திர பூஜை செய்து ஸ்ரீ சாரதா புஜங்க ம‌ந்‌திர‌ம் மற்றும் ஸ்ரீ தேவி கட்கமாலா முதலியவை பாராயணம் செய்யலாம்.

எட்டாம் நாள் : சர‌ஸ்வதி அஷ்டோத்திர பூஜை செய்து ஸ்ரீ தேவி நவரத்னமாலா மற்றும் ஸ்ரீ பவானி புஜங்கம் பாராயணம் செய்யலாம்.

ஓன்பதாம் நாள் : சர‌ஸ்வதி அஷ்டோத்திரம், லக்ஷ்மி அஷ்டோத்திரம் மற்றும் ஸ்ரீ லலிதா சஹ‌ஸ்ரநாமம் பாராயணம் சிறந்த பலன் தரும்.

கன்னிகா பூஜை : நவராத்திரியின் ஒவ்வொரு நாளிலும் அன்னை பராசக்தியை ஒவ்வொரு ரூபத்தில் ஆராதனை செய்கிறோம். ஏழு அல்லது பத்து வயதுக்குட்பட்ட சிறு பெண் குழந்தைகளை நம் இல்லத்திற்கு அழைத்து அவர்களை அன்னை பாலா திரிபுரசுந்திரியாக பாவித்து நல்விருந்தளித்து, புத்தாடை, அணிகலன்களான வளையல், சீப்பு, கண்ணாடி முதலியவற்றை தேங்காய், பழம், வெற்றிலை பாக்குடன் அளிப்பது அம்பிகை பக்தர்களின் வழக்கம். முதல் நாளில் ஒரு குழந்தையில் தொடங்கி விஜயதசமி அன்று நவகன்னிகைகளுக்கு மேற்கூறியவாறு உபசாரங்கள் செய்யலாம். அல்லது இப்படி செய்ய இயலாதவர்கள் கடைசி நாளில் ஒன்பது கன்னிகைகளுக்கும் ஒரு சேர விருந்தளித்து ஆடை, அணிகலன்கள் அளிக்கலாம். இந்த உபசாரங்களை தேவி பராசக்தி அன்புடன் ஏற்றுக் கொண்டு நமக்கு நல்வாழ்வு தருவாள்.

எல்லா நாட்களிலுமே பூஜையின் முடிவில் ஸ்ரீ துர்கா லக்ஷ்மி ஸர‌ஸ்வதீப்யோ நம: என்று கூறி மலர்களுடன், குங்குமம், அட்சதை ஆகியவற்றை அம்மாளிடம் சமர்ப்பிக்கவும்.

அன்னை மாயம்மா...


அன்னை மாயம்மா!

ஒழுங்காக வாரப்படாததால் பறக்கும் கேசம் கந்தலை விட மோசமாகத் தென்படும் உடை தோற்றத்தில் வினோதமாக அமைந்த சுருக்கங்கள்... இப்படித்தான் தோற்றமளித்தார் மாயம்மா. தபோ வனத்தில் தம்முடைய அதிஷ்டானத்தை அமைத்துக் கொண்ட சத்குரு ஞானானந்தகிரி ஸ்வாமிகள் ஒரு முறை தன் பக்தர்கள் கேட்ட போது சொன்னார். கன்யாகுமரி கோவிலில் பகவதியாக இருப்பவள் தான் கடற்கரையில் மாயம்மாவாக உலவி வருகிறாள் என்று. மஹான்களைப் பற்றி மஹான்களே அறிவார்கள் போலும். இறையருள் பெற்று பகவதியம்மன் பார்வையிலேயே இருந்த மாயம்மாவை பலரும் கண்டுகொள்ளவில்லை. தன்னை எவரும் வந்து வணங்கவில்லையே என்று மாயம்மா வருந்தியதும் இல்லை. எனது பிள்ளைகளைப் பாதுகாத்திடவே நான் இங்கு வந்தேன் என்பதே மாயம்மாவின் கூற்று. ஒருநாள் மாயம்மா பகவதியம்மன் கோயிலின் உணவு விடுதியில் மதிய உணவை உட்கொண்ட சமயத்தில் அங்கு வந்த ஒரு தொழிலாளி வயிற்று வலியால் துடித்தபடி உருண்டு புரண்டான். எல்லோரும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்களே தவிர ஒருவரும் உதவி செய்யவில்லை. மாயம்மா அவனிடம் எழுந்திரு மகனே இந்த உணவை உட்கொள்! என்று தனது கைப்பிடி சோறை அந்தத் தொழிலாளிக்கு வழங்கினார். அதனை வாங்கி உண்ட அந்தத் தொழிலாளியின் வயிற்றுவலி சட்டென்று நீங்கியது. இந்நிகழ்வே மாயம்மாவின் கருணை உலகமெங்கும் பரவ காரணமாக அமைந்தது.

ஒருசமயம் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த பஸ் ஒன்று சாலையில் படுத்திருந்த நாயின் மீது ஏறி இறங்கியது. பஸ் ஏறியதால் குடல் வெளியே வந்து உயிருக்குப் போராடிய நாயை அங்கு இருந்தவர்கள் வேடிக்கை பார்த்தனர். மாயம்மா அடிபட்டுக் கிடந்த நாயைத் தூக்கி தனது மடியில் கிடத்தி நாயின் குடலை வயிற்றுக்குள் தள்ளி தான் வைத்திருந்த வைக்கோலால் நாயின் கிழிந்த வயிற்றைத் தைத்து தனது கையில் இருந்த கிழிந்த துணிகளைக் கொண்டு காயம்பட்ட பகுதிகளைச் சுற்றிக் கட்டினார். பின்னர் நாயின் உடலை நீவி விட்டார். அவ்வளவு தான்! மடியில் கிடந்த நாய் துள்ளிக்குதித்து எழுந்து ஓடியது. இந்நிகழ்வுக்குப் பின்னர் மாயம்மாவைச் சுற்றி நாய்கள் கூட்டமும் மிகுந்த அன்புடன் சுற்றிவர ஆரம்பித்தது. இப்படி பல சம்பவங்களைச் சொல்லலாம். இதன்பின்னர் பக்தர்களின் கூட்டம் அவரை நாடி வந்தது. தன்னை நாடிவந்த அடியவர்களை மாயம்மா நல்வழிப்படுத்தியதுடன் தடுமாறுபவர்களை தனது அருளால் திருத்தவும் செய்தார். இந்நிலையில் அவரது பக்தரான ராஜமாணிக்கம் கோயில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று மாயம்மா தங்குவதற்கு கடற்கரையில் குடில் அமைத்துக் கொடுத்தார். அதன் பின்னர் அன்னை மாயம்மாவின் நினைவாக அவர் வாழ்ந்த கன்னியாகுமரியில் தனிக் கோயில் எழுப்பப்பட்டு இன்றும் வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறுகிறது. அன்பின் உருவமான அன்னை மாயம்மாவை வணங்கினால் வேண்டும் வரம் கிட்டும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை. திருமணம், புத்திர பாக்கியம், தொழில் அபிவிருத்தி என பல்வேறு கோரிக்கைகளுடன் வந்து பக்தர்கள் அன்னையை வணங்கிச் செல்கின்றனர்.

வலங்கைமான் கோவிந்த செட்டியார்...

வலங்கைமான் கோவிந்த செட்டியார்!

செட்டியார்வாள், காணாமால் போன என் பரம்பரை நகைகளைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று மயிலம் ஜமீன்தார் அழாக் குறையாகக் கூறினார். கோவிந்த செட்டியார் என்ற சோதிடர் கண் மூடினார். ஜமீன்தாரின் படபடப்பு தணிந்தது. சோதிடர் என்ன கூறுவாரோ என்ற எதிர்பார்ப்பில், ஜமீன்தார் நிலைகொள்ளாதிருந்தார். சோதிடர்கண் திறந்து, ஜமீன்தார்வாள், உமது மாளிகையில் உள்ள கிணற்றில் அந்த நகை முழுவதும் பத்திரமாக இருக்கு என்றார். ஜமீன்தார் வாயெல்லாம் வெற்றிலைப் பல்லாக, போன உயிர் வந்ததுபோல் ஓடினார். உடன் வந்த கணக்குப் பிள்ளையைச் சோதிடர் தனியாக அழைத்தார். அவரை உற்றுப் பார்த்து, ஏன் ஓய், உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்றீர்? ஜமீன்தாருடனே இருந்து கொண்டு, அவரது சொத்தையே திருடிவிட்டீர் இல்லையா? என்று சற்று கடுமையாகக் கேட்டார் செட்டியார். கணக்குப் பிள்ளை செட்டியாரின் காலில் வீழ்ந்தார். சரி சரி இனிமேலாவது தர்ம வழியில் வாழ முயற்சி செய்யும் என அவரை மன்னித்து அனுப்பினார். கோவிந்த செட்டியாரின் சித்திகளும் அதன் சக்திகளும் பிரசித்தி பெற்றவை. அதைவிட முக்கியம் தான் சம்பாதித்ததை ஏழைகளுக்காகச் செலவழிப்பார். ஏழைகளின் ஆடுகள், கோழிகள் காணாமல் போய்விட்டால், அந்த ஜனங்கள் அவரது ஓட்டு வீட்டின் முன் நிற்பார்கள். சோதிடர் அவர்களைப் பார்த்ததும், காணாமல் போனதைப் பற்றி உடனே கூறிவிடுவார்.

இப்படியாக அவரது புகழ் தனது சொந்த ஊரான வலங்கைமானிலிருந்து மைசூர் வரை சென்றது. வந்து விட்ட சங்கடங்களையும் வரப் போகும் அச்சுறுத்தல்களையும் தீர்த்துக் கொள்ள பெரும் செல்வந்தர்களும் ஆங்கிலேய கனவான்களும் வந்தனர். சோதிடர் இப்படி வாழ்ந்து வந்தபோது அவரைக் காண, ஜீவர்களைக் கடைத்தேற்றும் சிந்தாமணி சுவாமி விவேகானந்தர் வந்தார். சுவாமிஜி அமெரிக்கா செல்வதற்கு முந்தைய காலம். 1893-ஆம் ஆண்டு பரிவ்ராஜகராக சுவாமிஜி தமிழ்நாட்டில் சஞ்சரித்து வந்தார். சென்னையில் சுவாமிஜி இருந்த நேரம் ஒரு நாள் கனவு ஒன்று கண்டார். திடுக்கிட்டு எழுந்து தவித்த தம் குருவிடம் அளசிங்கப் பெருமாள், சுவாமிஜி, ஏதாவது சொப்பனமா? என விசாரித்தார்.  ஆம் அளசிங்கா. என் தாய் தவறி விட்டதாக ஒரு கனவு. அவரைப் போய் பார்த்து வர மனம் விழைகிறது. ஆனால் முடியாதே... என்று விவேகானந்தர் ஒரு தலைமகனாகத் தனியே தவித்தார். இது வெறும் கனவுதான் சுவாமிஜி, விடுங்கள் என்று மன்மத் பட்டாச்சார்யர் என்ற அன்பர் ஆறுதலளித்தார். சுவாமிஜி அமைதியாகவில்லை. அதைக் கவனித்த அளசிங்கர் வலங்கைமான் சோதிடரிடம் சென்று குறி கேட்டால், தெளிவு பிறக்கும் என்றார். புறப்பட்டார் சுவாமிஜி இந்த இருவருடன்.முதலில் ரயிலில், பின் நடந்து வலங்கைமானை அடைந்தார்கள். சோதிடரின் வீட்டைத் தேடிப் பிடித்தனர். அளசிங்கா, இவரைப் பற்றி நீ பெருமையாகச் சொல்கிறாய். எனக்கு இவரிடம் மூன்று கேள்விகள் உள்ளன. அவற்றைக் கேட்டு இவரின் சித்திகளைச் சோதித்துப் பார்க்கலாம் என்றார் சுவாமிஜி. சோதிடரின் கூரை வீட்டுக்குள், தாழ்வாரத்தில் மன்மத், அளசிங்கர் மற்றும் சுவாமிஜியும் கோவிந்தசெட்டிக்காகக் காத்திருந்தனர். கோவிந்த செட்டி வந்தார். அவரது முகம் காய்ச்சல் வந்ததுபோல் கருமையாக, இறுக்கமாக இருந்தது. வந்துள்ளவர்களைப் பார்த்தும் பார்க்காதவர் போல் இருந்தார். போய் விடலாமா என்று சுவாமிஜி சீடரைக் கேட்டார். அதற்குள் செட்டியாரே அவர்களிடம் அமைதி காக்க சைகை செய்தார். பிறகு எழுந்து வந்து, என் உடம்பு சரியில்லை. இன்று சோதிடம் சொல்ல முடியாது. சொல்லித்தான் ஆகணும்னா பத்து ரூபா எடுத்து வையும் என்றார். சீடர்கள் பணத்தைத் தரத் தயாராய் இருந்தனர். பிறகு செட்டியார் தனது அறைக்குச் சென்றார். முகம் கழுவினார். வெளியே வந்தார். சுவாமிஜியை உற்றுப் பார்த்தார். அந்தத் திருமுகத்தில் செட்டியார் என்ன கண்டாரோ? சுவாமிஜியைக் கனிவுடன் பார்த்தார். உடனே வீட்டினுள்ளே சென்றார்.விபூதிப் பையை எடுத்து வந்து சுவாமிஜியிடம் நீட்டி, சாமி, எனக்கு இந்த விபூதியைப் பூசினால் என் காய்ச்சல் குணமடையும், பிறகு நான் உங்களுக்குக் குறி சொல்வேன் என்று தமிழில் கூறினார். அளசிங்கர் ஆங்கிலத்தில் சுவாமிஜியிடம் கூறினார். சுவாமிஜி வினயத்துடன், ஐயா என்னிடம் அது போன்ற சித்திகள் ஏதுமில்லை என்றார். ஆனாலும் செட்டியார்  சுவாமிஜி விபூதி தர வேண்டும் என்று வலியுறுத்தினார். சுவாமிஜி விபூதி வழங்கினார். உடனே செட்டியார் ஒரு காகிதத்தில் ஏதோ எழுதி, அதை சுவாமிஜியிடம் கொடுத்துக் கையொப்பமிடும்படிக் கூறினார். பிறகு அந்தத் தாளை மன்மத்தின் சட்டைப் பையில் வைத்தார். சுவாமிஜிக்கு இது வியப்பை ஏற்படுத்தியது. செட்டியார் சுவாமிஜியை ஒரு நோட்டமிட்டபடி, சாமி, துறவியான நீங்கள் ஏன் உங்கள் அம்மாவைப் பற்றிக் கவலைப்படுகிறீர்கள்? என யாரும் எதுவும் சொல்வதற்கு முன்பே கேட்டார். தமது மனதில் உள்ளதைத் தெளிவாகச் சொல்பவரைப் பார்த்து வியந்த சுவாமிஜி அவரது கேள்விக்கு விடையாக, ஐயா, ஆதிசங்கரர்கூட தமது தாயைப் பற்றிக் கவலைப்பட்டாரே...! என்றார். அந்தப் பதிலால் மகிழ்ந்த செட்டியார், உங்கள் தாய் நலமாகவே இருக்கிறார் என்றார்.

செட்டியார் மிக அமைதியாக மன்மத் சட்டைப் பையிலிருந்து காகிதத்தை எடுக்கச் சொன்னார். அதில் சுவாமிஜியின் தாயாரின் சொந்தப் பெயரும் அவரைப் பற்றிய பல தகவல்கள் எழுதப்பட்டிருந்ததையும் தெளிவாகக் கூறினார். தமது குருவின் திருநாமத்தைச் சொல்லும்படி கேட்டுக் கொண்டார். சோதிடர் சரியாகக் கூறினார். சாமி, அதுவும், அதோடு நீங்கள் என்னிடம் கேட்க நினைத்த திபெத்திய மந்திரத்தையும் நான் ஏற்கனவே காகிதத்தில் எழுதிவிட்டேன் என்றார். சுவாமிஜி அளசிங்கரைப் பார்த்தார். அளசிங்கர் வாசித்தார். உங்களது குரு ராமகிருஷ்ண பரமஹம்சர் மறைந்துவிட்டார். ஆனாலும் அவர் சூட்சும சரீரத்தில் இருந்தபடி உங்களைக் காத்து வருகிறார் என்று இருந்தது. தாய் நலமென அறிந்ததுடன் தாயும் தந்தையுமாகிவிட்ட குருதேவர் தம்மைக் காத்து வருகிறார் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமானதால் சுவாமிஜியின் கண்களில் கண்ணீர் பெருகிற்று. பிறகு செட்டியார், சுவாமி, நீங்கள் விரைவில் தூர தேசங்களுக்குச் சென்று நமது மதத்தைப் பிரச்சாரம் செய்வீர்கள் என்றார். அளசிங்கர் உடனே பெருமிதமாய் சுவாமிஜியை நோக்கினார். சுவாமிஜி சோதிடரின் நடவடிக்கைகளைப் பார்த்தார். சுவாமிஜியிடமிருந்து அவர் பணம் பெற மறுத்துவிட்டார். தமது குடும்பத்தினரை அழைத்து சோதிடர், வாங்க எல்லோரும். இவர் ஒரு பெரிய பரமஹம்சரோட சீடர். காலில் விழுந்து நமஸ்காரம் செய்யுங்க. சாமி கையிலிருந்து விபூதி வாங்கிக்குங்க என்றார். அதன்படியே நடந்தது. சுவாமிஜிக்காகச் சோதிடர் நீண்ட நேரம் செலவழித்ததால், வெளியில் தங்கள் பிரச்சனைகளின் தீர்வுக்காக காத்திருக்கும் கிராம மக்களின் கூட்டம் அதிகரித்தது.சுவாமிஜியிடம் சோதிடர் கூறிவிட்டு, வெளியே சென்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அவர்களுக்குக் குறி சொன்னார். சிறிது நேரத்தில் மீண்டும் வீட்டினுள் நுழைந்தார். கூடத்தில் இருந்த சுவாமிஜியிடம், சுவாமி, நீங்கள் அடியேனின் சேவையை ஏற்றுக் கொண்டு என்னை ஆசீர்வதியுங்கள் என்றார். சோதிடரின் வற்புறுத்தலுக்காக சுவாமிஜி அவர் தந்த பாலை அருந்தினார். பிறகு சுவாமிஜி, ஐயா, இந்த அனுமாஷ்யமான ஆற்றலை எப்படி பெற்றீர்கள்? என்று கேட்டார். முதலில் சோதிடர் பதில் கூறவில்லை. பிறகு அவர் சுவாமிஜியிடம் மெல்ல, சாமி தேவியின் சகாயத்தால் பெறப்பட்ட சித்தி மந்திரங்களால் இவை நடைபெறுகின்றன என்றார். ஓ அப்படியா! என்று சுவாமிஜி செட்டியாரிடம் ஏதோ கூற நினைத்தும், அந்தக் கிராம மக்களைப் பார்த்து ஏதும் கூறாது கிளம்பினார். கோவிந்த செட்டியார் குறி சொன்னவாறே, சுவாமிஜி தமது குருதேவரின் அருளால் மேலைநாடுகளில் இந்து மதத்தைப் பரப்பினார். 1897-ல் தாயகம் திரும்பினார் வேதாந்த வெற்றி வீரராக. இலங்கை முதல் ஒவ்வோர் ஊராகச் சமய முழக்கமிட்டபடி வந்தார். பிப்ரவரி 3-ஆம் தேதி கும்பகோணத்தில் வேதாந்தத்தின் செய்தி என்ற அற்புத உரையை நிகழ்த்தினார் சுவாமிஜி. ஆயிரக்கணக்கான மக்கள் அலைமோதிய அந்தக் கூட்டத்தில் கோவிந்த செட்டியும் இருந்தார். சுவாமிஜியைப் பார்த்ததும், அடடா, இவர் முன்பு வலங்கைமான் வந்த வங்கத் துறவி யல்லவா என்று நினைவுகூர்ந்தார். அன்று பிரபலமாகாதவர், இன்று பிரபஞ்ச நாயகனாக வந்துள்ளாரே என ஒதுங்கியே நின்றார்.

கோவிந்த செட்டியாரை சுவாமிஜி பார்த்து விட்டார். உடனே அருகிலிருந்த ஒருவரிடம், அந்தச் சோதிடரிடம் என்னைச் சந்திக்கும்படி கூறுங்கள் என்று சொல்லி அனுப்பினார். விவரமறிந்து செட்டியார் சுவாமிஜியைத் தனியே சந்தித்தார். சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கினார். சுவாமிஜி நலம் விசாரித்தார். ஓரிரு பொதுவான கேள்விகளைக் கேட்டுவிட்டு, சோதிடரே, உங்களுக்கு வாய்த்துள்ள சித்திகள் உங்களுக்குப் பெயரும் புகழும் பணமும் தருகின்றன. தவறில்லைதான். ஆனால் அதுவே உங்கள் வாழ்க்கையைக் கடைத்தேற்றி விடுமா? என்று சுவாமிஜி கேட்டதும், கோவிந்த செட்டியார் மவுனமானார். சுவாமிஜியின் தீர்க்கமான கண்களிலும் அவரது வார்த்தையிலும் உள்ள சத்தியத்தைக் கண்டார் சோதிடர். அன்பரே, சமயச் சடங்கு, சமுதாயக் கடமை போன்ற வாழ்க்கை எல்லாம் சரிதான். ஆனால், ஆன்மிகம் என்று வந்தால் நீங்கள் எங்கு ஆரம்பித்தீர்களோ, அங்குதானே நிற்கிறீர்கள்... இல்லையா? செட்டியாரின் கண்களில் நீர் பெருகியது. அது சுவாமிஜியின் நெஞ்சில் ஊற்றெடுத்த கருணையால் வந்த விளைவு. கைகூப்பி, தன் ஜீவனைக் கடைத்தேற்றுமாறு பணிந்து நின்றார் செட்டியார். சுவாமிஜி ஆனந்த மேலீட்டால் அவரை ஆலிங்கனம் செய்தார். ஸ்ரீராமர் அனுமனுக்குத் தந்த ஆசிர்வாதம் போன்றதல்லவா, அது! சுவாமிஜி புறப்பட்டார். சோதிடரும் தமது நூறு சதவிகித ஆன்மிக வாழ்வை நோக்கிப் புறப்பட்டார். இதன் பின் சோதிடருக்கு எல்லாம் முன்பு போலவே இருந்தது. ஆனால், தெய்வம் அவருக்கு முன்பு எல்லாமாகி நின்றது. சில வருடங்களுக்குப் பிறகு....

ஒவ்வொரு வருடமும் நவமியன்று ஸ்ரீராமரின் ஊர்வலம் சோதிடரின் வீட்டு முன் நிறுத்தப்பட்டு உறியடித்தல் நிகழ்ச்சி நடைபெறும். அந்த ஆண்டு சோதிடர் ஏனோ, உறியடித்தல் நிகழ்ச்சி தமது வீட்டு முன்பு நடக்க வேண்டாம் என்று கூறினார். ஸ்ரீராம ஊர்வலம் புறப்பட்டது. வாசலிலிருந்து சோதிடர் ஸ்ரீராமரைப் பக்தியுடன் வணங்கி நின்றார். உறியடித்தலைத் தன் வீட்டுமுன்பு நடத்த வேண்டாம் என்று சொன்ன சோதிடரின், தொங்கிக் கொண்டிருந்த வாழ்க்கை எனும் உறியடிப் பானையை அன்று ஸ்ரீராமரே அடித்து அனுக்கிரகித்தார் போலும். ஆம், சோதிடர் அன்று பகவானின் தரிசனமே பெற்றார். ஸ்ரீராமதரிசனம் பெற்ற அந்த மேலான நிலையிலேயே ராமருடனேயே ஐக்கியமானார். இது சத்குருவின் ஸ்பரிச தீட்சை தந்த விளைவோ! மான் சஞ்சலமே உருவானது. தனது அன்னை குறித்த சஞ்சலத்திற்காக வலங்கைமானுக்கு வந்த சுவாமிஜி, கோவிந்த செட்டியாருக்குச் சம்சார சஞ்சலத்தை நீக்கி யோக ÷க்ஷமம் வழங்கினார். அது வலக்கையில் மானைக் கொண்ட சிவனின் கருணையைப் போன்றதல்லவா!

மாவளத்தான்...

மாவளத்தான்!

நலங்கிள்ளி என்பவன் சங்கக் காலச் சோழ அரசன். பேராற்றல் கொண்ட அவனுக்கு, தம்பி மாவளத்தான் என்பவன். மிகுந்த ஆற்றல் படைத்தவன் என்பதை அவனது பெயரே சொல்லும். ஒரு நாள் மாவளத்தான் அரச மாளிகையில் அழகான மண்டபத்தில் அமர்ந்திருக்கின்றான். அப்போது தாமப்பல் கண்ணனார் என்ற புலவர் அங்கே வருகிறார். தாமப்பல் என்பது ஓர் ஊர். இவ்வூர் இப்போது காஞ்சிபுரத்திற்கு அண்மையில் தாமல் என்று சிதைந்து அவரது வழங்கி வருகின்றது. கண்ணன் என்பது அவரது இயற்பெயர். உயர்வுச் சிறப்புக் கருதி அவரை கண்ணனார் என அனைவரும் அழைத்தனர். வந்த புலவரை எழுந்து வரவேற்று இருக்கையில் அமரச் செய்கிறான் மாவளத்தான். அவன் முன்பு வட்டாடு அரங்கம் அமைக்கப்பட்டு வட்டாடு கருவியும் உள்ளதை ஆவலோடு  புலவர் பார்க்கிறார். அவரது ஆவலை உணர்ந்து கொண்ட மாவளத்தான் அவரை வட்டாட அன்போடு அழைக்கிறான். வட்டாடுதல் என்பது சங்க கால விளையாட்டு. இருவரும் ஆடத் தொடங்குகின்றனர். சிறு பொழுதுக்குள் ஆட்டம் விறுவிறுப்பு அடைய புலவர் தோல்வியை நோக்கி மெல்ல மெல்லத் தள்ளப்படுகின்றார்.

தோல்வி பெற விரும்பாத புலவர், மாவளத்தான் கண் இமைக்கும் நேரத்தில் வட்டைத் தன் வலக்கையில் மறைத்துக் கொண்டு அது எங்கோ தொலைந்து போய்விட்டது போலத் தேடத் தொடங்கினார். அகத்தின் அழகு முகத்தில் தெரிவதை மாவளத்தான் புரிந்து கொண்டான். அவ்வளவுதான், புலவர் சற்றும் எதிர்பாராதவாறு சட்டென்று அவரது வலக்கையைத் தன் இரு கரங்களாலும் பற்றிக் கொண்டு உள்ளங்கையில் அவர் மறைத்து வைத்திருந்த வட்டை எடுத்தான். மாளவத்தானுக்குப் புலவரது செயல் மிகுந்த கோபத்தைத் தந்ததால் வட்டை அவர் மீதே விட்டெறிந்தான். கோபம் குடியைக் கெடுக்கும் அல்லவா? மாவளத்தான் இவ்வாறு குணம் கெட்டு நடந்து கொண்டபோது புலவரும் தம் நிலை மறந்து கொதித்தெழுந்தார். விளையாட்டு வினையானது! மாவளத்தானைப் பார்த்து சொல்லக் கூடாத சொற்களால் அவனைச் சுட்டார் புலவர். இது கொன்றிடல் போன்ற ஒரு சொற்றொடர். புலவர், மாவளத்தானிடம் சொன்ன கொடுஞ்சொல்: நீ சோழனுக்குப் பிறந்தவன் இல்லை.

அவ்வளவுதான், இந்த வசைமொழிக்குப் பின் அந்த இடத்தில் என்ன நிகழ்ந்திருக்க வேண்டும்? நாம் நினைப்பது போல, புலவரது தலை மாவளத்தானின் வாளால் துண்டாடப்படவில்லை, புயல் வீசவும் இல்லை; எரிமலை வெடிக்கவும் இல்லை. அப்போது அங்கே முழு அமைதி நிலவியது. சோழப் பேரரசின் பேராற்றல் மிக்க இளவரசன் தலைகுனிந்தவாறு மவுனமாக நின்றான். ஆம், புலவர் மேல் வட்டை எறிந்த தன் செயலுக்காக அவன் நாணி வருந்திக் கொண்டிருந்தான். மாவளத்தானின் இந்த நிலையைக் கண்ட தாமப்பல் கண்ணனார் அதிர்ந்து போனார். நாவடக்கம் இன்றி தாம் சொன்ன சொற்களுக்காக அவர் அச்சமும், அளவில்லாத துயரும் கொண்டார். என்ன நிகழுமோ எனச் செயலற்று நின்ற அவர், தாம் மாவளத்தானுக்குப் பெரும் பிழை செய்திருக்க, அவனோ தமக்குப் பெரும் பிழை செய்ததுபோல நாணித் தலை கவிழ்ந்த பெரும்பண்பை நினைத்துக் கலங்கினார். இளவரசே! உன்னை நான் கூறத்தகாத சொல்லால் சுட்டதற்கு கோபப்படாமல் ஏதோ எனக்குக் குற்றம் செய்ததுபோல வெட்கமும், வேதனையும் படுகின்றாய். உனது இந்த அருஞ் செயல், எனக்கு எதனை உணர்த்துகின்றது தெரியுமா? சோழ மரபில் பிறந்தவர்கள் தமக்குப் பிறர் செய்யும் குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளும் பண்புடையவர்கள் என்பதைத் தான். உண்மையில் நான்தான் உனக்குக் குற்றம் செய்தவன் (என்னைப் பொறுத்த ஏந்தலே) காவிரி நீர் கொழித்துக் கரையில் சேர்த்த  ஆற்று மணலினும் பலவாக உன் வாழ்நாள் சிறக்க வேண்டும் எண்ணற்ற ஆண்டுகள் வாழ வேண்டும்.

இதனால் வசையைப் பொறுத்தவன் புகழ் பெறுவான் என்பது புலப்படுகின்றது அல்லவா? மாவளத்தான் புலவரைத் தன் பொறுமையால் வென்று விட்டான் என்பது வரலாறு. இன்று அறியாமையால் அல்லது ஆணவத்தால் நம்மைச் சிலர் வசைபாடலாம்: பழித்துப் பேசலாம். அவற்றை எல்லாம் பொறுமையால் நாம் வென்றுவிட வேண்டும். பொறுத்தவர் பூமி ஆள்வார்

மாதன்னா, அக்கன்னா...

மாதன்னா, அக்கன்னா...

கோபண்ணாவின் அந்த உறவினர் இருவருமே கோபண்ணாவின் தாய்வழி மாமன்மார் ஆவர். அவர்களில் பெரிய மாமன் பெயர் மாதன்னா- இளைய மாமன் பெயர் அக்கன்னாவாகும். இவர்கள்தான் கோபண்ணாவை ஹைதராபாத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது ஹைதராபாத்தை தானீஷா எனும் நிஜாம் ஆட்சி புரிந்து வந்தார். இந்த தானீஷா இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவராக இருந்த போதிலும் ஓர் அரசனுக்குரிய தலைமைப் பண்பு அவ்வளவும் இவரிடம் நிரம்பி இருந்தது. குடிமக்களை பாரபட்சமின்றி வழி நடத்தி ஆட்சி புரிந்து வந்தார். இவரது ஆட்சியில் வரி வசூல் மிகச் சிறப்பான முறையில் இருந்தது. நலத்திட்டங்களும் நன்கு நடைமுறைப்படுத்தப்பட்டன. இந்த தானீஷாவின் அவையில் இந்துக்களும் நல்ல நல்ல பதவிகளில் இருந்தனர். பிற மதத்தவரின் சுதந்திரத்தில் தானீஷாவும் தலையிடாதபடி ஒரு நல்லாட்சி நடைமுறையில் இருந்தது.

தானீஷாவிடம் கோபண்ணாவின் மாமன்மார்கள் இருவருக்கும் நல்ல பெயரும் வரவேற்பும் இருந்தது. அதுவே கோபண்ணாவுக்கும், தானீஷாவுக்கும் நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தித் தந்தது. கோபண்ணாவை விதிதான் வழி நடத்தியபடி இருந்தது. அந்த விதியே கோபண்ணாவுக்கு தானீஷா மூலமாக தாசில்தார் என்னும் வேலையை வாங்கித் தந்தது. ஹைதராபாத் நிஜாமின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக அந்த நாளில் பத்ராசலம் எனும் ஊர் விளங்கிற்று. இங்கே கோதாவரி நதியின் பாய்ச்சல் ஒரு புறம்- மறுபுறம் ஒரு குன்றின் மேல் ராமபிரானது திருக்கோயில்! இந்தத் திருக்கோயிலை ஒரு காலத்தில் தம்மல்லி என்னும் பிராம்மணப் பெண் தன் சுய முயற்சியால் கட்டியிருந்தாள். அவள் இருந்த வரை கோயிலில் ஆறுகால பூஜைகளும் அன்னதானங்களும் தடபுடலாக நடந்தன. அவள் காலத்துக்குப் பிறகு அந்தக் கோயிலையும் கலிமாயை சூழ்ந்து கொண்டது. அந்தக் கோயிலில் ஒரு வேளை பூஜை நடைபெறுவதே பெரும் பாடாக இருந்தது. அப்படி ஒரு கோயில் கொண்ட பத்ராசலத்துக்கு ஒரு தாசில்தார் இருந்து அவர் காலமாகி விடவும் அங்கே ஒரு தேவை இருந்தது.

ஹைதராபாத் தானீஷாவும் மிகச் சரியாக கோபண்ணாவை பத்ராசலத்துக்கு தாசில்தாராக நியமனம் செய்தார். கோபண்ணாவுக்கு மனமெல்லாம் ராமபிரான் மேல்தான் இருந்தது. ஆகையால் ஆன்மீக வழியில் செல்லவே விரும்பியது. ஆனால் வயிற்றுப் பாடும் கொல்லம் கொண்ட பெல்லத்து அனுபவங்களும் வேறு வழியின்றி இந்த தாசில்தார் பொறுப்பை ஏற்க வைத்தன. மாமன்னர்களுக்கு நன்றி கூறி விட்டு பத்ராசலத்துக்கு வந்து பொறுப்பை ஏற்று அதை திறம்படவே செயல்படுத்தினான் கோபண்ணா. ஒரு தாசில்தாரின் கடமைகளை மிக நேர்மையாக நிறைவேற்றினான். குறிப்பாக வரிவசூலில் ஒரு பொன் கூட வீணாகதபடி அதை வசூல் செய்து அவ்வளவு பொன்னையும் யானை மேல் ஏற்றி வீரர்களின் காவலுடன் ஹைதராபாத்துக்குக் கொண்டு சென்று அங்க கஜானாவில் ஒப்படைத்து தானீஷாவின் தனிப்பட்ட பாராட்டையும் பெற்றுக் கொண்டான். வாழ்க்கை இப்படியே போய்விடுமா என்ன? பத்ராசலத்துக்கு வந்த நாள் முதலாக மலை மேல் உள்ள அந்த ராமன் கோயில் கோபண்ணாவின் கவனத்துக்கே வரவில்லை. ஒருநாள் ஒரு கால பூஜைக்காக பட்டாச்சாரி ஒருவர் கோயிலுக்குப் போவதை கோபண்ணா கவனிக்கவும் தான் விதியும் தன் விளையாட்டை கோபண்ணாவிடம் தொடங்கியது.

நெற்றியில் திருமண் காப்போடு கையில் திருத்துழாய் தட்டும் நைவேத்ய பிரசாதமுமாக மலை ஏறப்போன அந்தப் பட்டரை தடுத்து கோபண்ணா விசாரிக்கத் தொடங்கினான். அப்போது தான் மலை மேல் ராமர் கோவில் இருப்பதே தெரிய வந்தது.ஹேராம்!இது என்ன கொடுமை...

பத்ராசலத்தில் ஒரு ராமாகோயில் இருக்க நான் அது தெரியாத ஒரு அதிகாரியாக மட்டும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேனே... என்று கோபண்ணா மனது பதைத்துப் போனது. அவரோடு சேர்ந்து மலைமேல் சென்று பார்க்கவும் கண்களைக் கரித்தது. கோயில் அந்த அளவு பாழ்பட்டு தூர்ந்து போய் கிடந்தது.பட்டரே, என்ன இது அநியாயம்... என் பிரபுவின் கோயில் இப்படியா இடிபாடுகளோடு இருப்பது?

நான் என்ன செய்யட்டும்... தம்மக்கா இருந்தவரை குறையில்லை. அதன்பின் இந்த பத்ராசலத்தில் எவ்வளவோ மாற்றங்கள். பிறமதத்தவர்களும் அதிகரித்து விட்டனர். உத்சவங்கள் கொண்டாடவோ, திருவிழாக்கள் காணவோ யாரும் ஒன்று சேர்வதில்லை. அதோடு பலர் ஊரை விட்டே போய் விட்டனர். நான் இருக்கும் வரை ஏதோ ஒரு கால பூஜை நடக்கும். எனக்குப் பிறகு அதுவும் கேள்விக்குறிதான்...பட்டர் சொன்னது கோபண்ணாவின் கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது.இல்லை பட்டரே! இந்த கோயிலை நான் இனி இப்படியே விடமாட்டேன். என்னை பிரபு எதற்காக இந்தப் பகுதிக்கு தாசில்தார் ஆக்கினார் என்பது தெரிந்து விட்டது. ஒரு அரசாங்க அதிகாரியாக இப்போதே உத்தர விடுகிறேன்.

இனி ஆறுகால பூஜைகள் நடக்கட்டும். இடிபாடுகளை சரிசெய்து இந்தக் கோயிலை நான் புதுப்பித்து விட்டுத்தான் மறுவேலை பார்க்கப் போகிறேன்... என்ற கோபண்ணா சொன்னபடியே செய்தும் முடித்ததுதான் விந்தை.பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்ட வரிப்பணம் அவ்வளவும் கோயிலுக்கே செலவாயிற்று. மலைமேல் உயர்ந்த கோபுரத்தோடு கோயிலும் கம்பீரமாக நிமிர்ந்து எழும்பி நின்றது.உள்ளே சீதா ராம லட்சுமணனோடு அனுமனுக்கும் சேர்த்து சன்னதி. கோவிலின் அழகும் எழிலும் அக்கம் பக்கத்தவர்களை எல்லாம் சுண்டி இழுத்தது. சாரிசாரியாககோயிலுக்குவந்துமனம்குளிரராமபிரானையும்வணங்கினார்கள்.கோபண்ணாவுக்கும் அரிய செயலை செய்துவிட்ட பூரிப்பு. அதேசமயம் தானீஷாவுக்கு வசூலித்த வரிப்பணத்தை சென்று கட்ட வேண்டிய நாளும் வந்தது. ஆனால் அதையெல்லாம்தான் கோயில் கட்ட செலவழித்தாகி விட்டதே...?

இப்போது என்ன செய்வது?

கோபண்ணா மனைவி கலங்கிப்போய் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? என்று கேட்டாள்.என்ன செய்தேனோ அதைச் சொல்வேன்... நான் என்ன நம் குடும்பத்துக்கா செலவு செய்தேன்... அவ்வளவும் கோயிலுக்குத்தானே போனது. ஒரு ஊரில் கோயில் சிறப்பாக இருந்தால் அல்லவா மழை பொழியும். மக்களும் மன அமைதி யோடு வாழ்வார்கள். எனவே நான் மக்களுக்கான நல்லதைத்தான் செய்துள்ளேன். இதை தானீஷா பாராட்டவே செய்வார். சொல்லப்போனால் அவர் செய்யத் தவறியதை நான் செய்துள்ளேன். எனவே எனக்குப் பரிசுகளும் அளிப்பார்... என்றான் கோபண்ணா.

வாழ்வில் நாம் நினைப்பது போலவா எல்லாமே நடக்கிறது?

தானீஷா முன்னால் கோபண்ணா ஒரு குற்றவாளியாக நிறுத்தப்பட்டான். தானீஷா அவன் சொன்ன எதையும் கேட்கவே இல்லை. நீ தன்னிச்சையாக நடந்து கொண்டாய்... அரசாங்கப் பணத்தைக் கொண்டு கோயில் கட்டினாய். இது ராஜ துரோகம் எனவே உன்னைச் சிறையில் இடுகிறேன்- என்று கோபண்ணாவுக்கு சிறைத்தண்டனை விதித்து விட்டார்.சிறையில் அடைக்கும் முன் கோபண்ணாவிடம் இன்னும் கூட வரிப்பணம் இருக்கக்கூடும் என்று கருதி கோபண்ணாவை சவுக்கால் அடித்து சித்ரவதை செய்தும், ஹைதராபாத் நகரமே தெருவில் நின்று பார்த்திட கட்டி இழுத்துச் சென்றும் செய்த கொடுமைகளும் கொஞ்ச நஞ்சமல்ல.ஒரு மனிதன் பக்தியோடு கோயில் கட்டியதற்கா இத்தனை பெரிய தண்டனை? கோயில் கட்டிய விதம் தவறாக இருந்தாலும் அதற்கு இவ்வளவு பெரிய தண்டனை என்பது எந்த வகையில் சரி?
இவ்வளவு தூரம் கொடுமைகள் நடக்கும்போதும் அந்த ராமன் என்ன செய்தான்? ஏன் வேடிக்கை பார்த்தான்? இது என்ன சோதனை...?

கேள்விகள் எழுகிறதல்லவா?

இந்தக் கேள்விகள் கபீர்தாசரிடமும் எழும்பியது.

பக்தன் பொருட்டு அவரே ராமபிரானிடம். பிரபு இதெல்லாம் எந்த வகையில் சரி? என்று கேட்கவும் செய்தார். ராமபிரானும் அதற்கான பதிலைக் கூறினான்...கபீர்... கலியுகத்தில் எப்போதும் விளைவுகளுக்காகவே செயல்பாடுகள். ஆனால் நாம் உலகமாயை காரணமாக செயலுக்குத்தான் விளைவு என்று கருதுவதும் பேசுவதுமாக இருக்கிறோம்.கோபண்ணா என் பரம பக்தன்தான்! பக்தி கராணமாக அவன் உண்மையாக வாழ்கிறவனும்கூட... ஆனால் இப்போது அவன் அனுபவிக்கும் கொடுமைக்கெல்லாம் காரணம் அவனது பூர்வ கர்மம்தான்!

முன் ஜென்மத்தில் அவன் அனேக கிளிகளை கூண்டில் அடைத்து வளர்த்தான். அப்போது அவைகளின் சிறகுகளை வெட்டியும் அவைகளுக்குச் சரியாக உணவளிக்காமலும் அவைகளை சித்ரவதை செய்தான். அதனால் பல கிளிகள் இறந்து போயின. அந்தப் பாவம்தான் இப்போது அவனுக்கான சிறைவாசமாகவும் பழியாகவும் உருவாகியுள்ளது.எதற்கும் ஒரு அளவு உண்டு. இந்தத் துன்பத்துக்கும் அளவு இருக்கிறது. இவை அவ்வளவும் இன்றிரவோடு தீர்ந்து விடும். நாளை முதல் அவன் கோயில் கட்டிய புண்ணியமும் பக்தியின் பயனும் அவனை இனி வழி நடத்தும். அதுமட்டுமன்றி காலகாலத்துக்கும் அவன் பக்தி இனி வரும் மாந்தர்களால் போற்றும் ஒன்றாகவும் இருக்கும். கூடவே அவர்கள் கோபண்ணாவின் கர்மத்துய்ப்பையும் சேர்த்தே எண்ணுவார்கள்.

நம் வாழ்வில் நம் மனமறிந்து தவறுகள் செய்திடாத நிலையில் ஒரு துன்பம் நேர்கிறதென்றால் அதை பூர்வ கர்மம் என்று கருதி மகிழ்ச்சியோடு ஏற்று அனுபவிக்க வேண்டும். வெற்றிகரமான வாழ்வும் இன்பமான வாழ்வும் எந்த நிலையிலும் ஞானத்தைத் தராது. அது ஆசாபாசங்களை வளர்த்து கலிமாயையில் நம்மை நிரந்தரமாக சிக்க வைத்து விடும். எனவே நிரந்தரமற்ற மாயா இன்பங்களை பற்றற்ற பற்றோடு அனுபவிக்க வேண்டும். துன்பத்தையே உளமாற விரும்ப வேண்டும். அதைக் கண்டு அச்சம் கூடாது. நடுநிலையான ஞானிகள் இவ்வாறுதான் நடந்து கொள்வர். கோபண்ணாவும் எல்லா துன்பங்களையும் பார்த்து விட்டான். பழிச் சொல்லையும் கேட்டு விட்டான். அவன் இனி மாயை வசம் சிக்காமல் பக்குவமாக நடந்து கொள்வான் என்றார். கபீருக்கும் பெரும் ஞானோபதேசம் கிடைத்தது. கபீர் மூலமாக இந்த உலகுக்கும் கிடைத்தது. அன்று இரவு கோபண்ணாவின் பக்திக்குண்டான வரசித்தி செயல்படத் தொடங்கியது. ராமனும் லட்சுமணனுமே தானீஷாவுக்கு கோபண்ணா செலுத்த வேண்டிய பொன் மூட்டையை எடுத்துக் கொண்டு இரண்டு வேடுவர்கள் போல தானீஷா முன் போய் நின்றனர்.

பொற்காசுகளை தானீஷா முன் கொட்டினர். அரசே... இது கோபண்ணா செலுத்த வேண்டிய வரிப்பணம். அவரை சிறையில் இருந்து விடுவியுங்கள் என்றனர். தானீஷாவும் நீங்கள் யார் என்று கேட்காமல் இருப்பாரா? நாங்கள் கோபண்ணாவின் ஏவலர்கள். அவர் தரும் பிரசாதத்துக்காக நாங்கள் எதையும் செய்வோம்... அடேயப்பா... இவ்வளவு நாட்கள் எங்கே போய் விட்டீர்கள்? நாங்கள் யாத்திரை போயிருந்தோம், இங்கு வந்து பார்க்கவும்தான் உண்மை தெரிந்தது. உடனே எங்கள் உழைப்பில் சம்பாதித்த பொன்னோடு புறப்பட்டு வந்துவிட்டோம்.

அது சரி... உங்கள் பெயர்?

என் பெயர் ராம்ஜி... இவன் லஷ்மண்...

நல்லது... இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?

ஊருக்கு வெளியே உள்ள சிறையில் இருக்கும் கோபண்ணாவை விடுவியுங்கள். முன்னதாக வரிப்பணம் பெற்றுக்கொண்ட ரசீதும் அத்துடன் விடுதலைப் பத்திரமும் எழுதி கையெழுத்திட்டு தாருங்கள்...
தானீஷாவும் அப்படியே செய்தார் ராம லட்சுமணர்களும் புறப்பட்டனர்!
ஊருக்கு வெளியில் உள்ள சிறைச் சாலையில் கோபண்ணா மனம் உடைந்து போயிருந்தான். போதும் நான் பட்ட பாடு... என்னைப் பார்ப்பவர்கள் இனி எந்த நல்ல காரியத்தையும் செய்ய முன்வர மாட்டார்கள். நானும் இனி வாழ்வதை விட சாவது மேல்... ராமபிரபுவும் என்மேல் கருணை காட்டப் போவதில்லை. அவர் வரையில் நானொரு பாவி.

இனி இந்த பாவியும் உயிர் வாழக் கூடாது...- என்கிற முடிவுக்கு வந்து விஷத்தைக் குடிக்க முடிவு செய்கிறான் கோபண்ணா. அதன் பொருட்டு சிறைத் தோட்டத்தில் பணியாற்றும்போது விஷச்செடி ஒன்றை அடையாளம் கண்டு கொண்டு அதில் இருந்து பறித்து வந்திருந்த விஷ இலைகள் அரைக்கப்பட்டு விழுதாக அவன் பக்கத்தில் அவன் சாப்பிடத் தயாராயின! முன்னதாக இறுதியாக தியானிக்க எண்ணி தியானத்தில் ஆழ்ந்தான்! இதற்குப் பிறகே அற்புதங்கள் அரங்கேறத் தொடங்கின. ராம லட்சுமணர்கள் சிறைக்கு வந்து அங்குள்ள அதிகாரியிடம் விடுதலைப் பத்திரத்தைக் காட்டி அவரையும் அழைத்துக் கொண்டு கோபண்ணா இருந்த இருண்ட சிறைக்கு வந்தனர்.

சிறையில் கோபண்ணா! சிறை அதிகாரி கதவைத் திறந்து விட்டவனாக விலகிட ராம லட்சுமணர் கோபண்ணா அருகில் சென்றனர். அந்த விஷவிழுது தீயவாடையோடு அவர்கள் நாசியைக் குடைந்தது. ராமன் லட்சுமணனை அர்தபுஷ்டியோடு பார்க்கவும் அந்த விஷ விழுதை லட்சுமணன் எடுத்து விழுங்கினான்.

ஆதிசேஷனின் அம்சம்... விஷமெல்லாம் ஒரு பொருட்டா என்ன...? பதிலுக்கு தானீஷா கொடுத்த ரசீதை விஷம் இருந்த இடத்தில் வைத்தான் ராமன். பின் இருவரும் ஒரு சேர ஆசிர்வதித்தவர்களாக சிறைக்கதவு திறந்திருக்க வந்த சுவடு தெரியாமல் திரும்பத் தொடங்கினர்.கோபண்ணாவிடம் இது எதுவுமே தெரியாதபடி த்யானம்!

தானீஷா ராம லட்சுணர்கள் தந்த பொற்காசுகள் மலைபோல குவிந்திருப்பதைப் பார்த்தபடியே இருந்தார். இவ்வளவு காசுகளை எப்படி இருவரால் சுமந்து வர முடிந்தது என்பது அவருக்குள் கேள்வியாக உறுத்திக் கொண்டிருந்தது. அடுத்து அதன் ஜொலிக்கும் ஒளி... அதில் ஒரு காசை எடுத்து உற்றுப் பார்க்கவும் அதில் ராம் எனும் எழுத்து!
அடுத்த நொடி தானீஷாவுக்கு சுரீர் என்றது! வந்தவர்கள் சாமான்ய மனிதர்கள் அல்ல என்பதும் புரியத் தொடங்கியது.

புதுப்பெரியவாள் 1971-71

புதுப் பெரியவா 1971-71 கேரளத்துக்கு விஜயம் செய்தார்கள். அப்போது எர்ணாகுளத்தில் நகர்வல்த்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ஒரு குட்டி யானை மீது அமர்ந்து முதல் வரிசையில் ஊர்வலம் வந்துக் கொண்டிருந்தார்கள். தீடீரென்று ஏற்பட்ட மின் தடையால் எல்லா விளக்குகளும் அணைந்தன. குட்டி யானை மிரண்டது. நல்ல காலமாக இரண்டு மூன்று நிமிடங்களுக்குள் விளக்குகள் எரியத் தொடங்கியது. இடையில் புதுப் பெரியவாளும் யானையிலிருந்து பத்திரமாக இறங்கி விட்டிருந்தார்கள். வீதிவிளக்குகள் அணைந்ததும், பக்தர் திரு.டி.வி.சுவாமிநாதன் தன் இல்லத்திற்கு விரைந்து விளக்குகள் அணைந்த காரணத்தை கேட்க மின் வாரியத்துடன் தொடர்பு கொண்டார். அதற்குள் எல்லாம் சரியாயிற்று. மீண்டும் அவர் ஊர்வலத்தில் கலந்துக் கொள்ளப் புறப்படும் சமயம் காஞ்சியிலிருந்து டெலிபோன் அழைப்பு. சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஏ.நாகராஜ அய்யர் விசாரித்தார். “ஊர்வலத்தில் ஏதாவது குழப்பம் உண்டாயிற்றா?” திரு.டி.வி.சுவாமிநாதன் நடந்ததை விவரித்து விட்டு, வியப்புடன் வினவினார், “சம்பவம் நடந்து ஐந்து நிமிடம் கூட ஆகவில்லை, அதற்குள் எப்படி உங்களுக்குத் தெரிந்தது?”
 
அதற்கு ஏ.நாகராஜ அய்யர், ”ஸ்ரீ மஹா பெரியவா சிவாஸ்தானத்தில் சொல்லிக் கொண்டிருந்தார்களாம், “நாற்பத்தைந்து வருஷங்களுக்கு
 முன் நான் மலையாள ராஜ்ஜியத்தில் யாத்திரை செய்த போது இருந்ததை விட புது சுவாமிகள் ஊர்வலத்திற்க்கு இன்று தடபுடலான் ஏற்பாடுகள்…” இவ்விதம் சொன்ன பெரியவா, தீடீரென்று, “ஒரே இருட்டாய் போயிடுத்தே, யானை மிரண்டுடுத்தே?”
 
என்று சொன்னாராம், உடனே எர்ணாகுளத்திலிருந்த உங்களை கூப்பிட்டு, “என்ன நடந்தது?”” என்று அறியப் பணித்தார் என்று கூறினார்.
 
அங்கு நடந்தது சிவாஸ்தானத்தில் இருந்த பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது?, பெரியவாளுக்கு,, சிவாஸ்தானம் தான் நேத்ரஸ்தானமா??? 




நான் யார்? ஆதி சங்கரர் அருளிய ஸ்லோகங்கள்!


நான் யார்? ஆதி சங்கரர் அருளிய ஸ்லோகங்கள்!

உலகத்தில் மக்களிடையே பேதங்கள் நிலவிய சூழ்நிலையில் காலடி க்ஷேத்திரத்தில் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர் மகான் ஆதிசங்கரர். தாயின் அனுமதியுடன் சந்நியாசம் பெற்ற ஆதிசங்கரர் அனைத்து ஜீவன்களிலும் இருக்கும் பிரம்மம் ஒன்றே என்னும் அத்வைத சித்தாந்தத்தை போதித்தவர். அவர் போதித்த அத்வைத சித்தாந்தத்துக்கு அவர் பொருத்தமானவரா என்பதை சோதிக்க விரும்புவது போல் ஒரு சம்பவம் காசி க்ஷேத்திரத்தில் நடைபெற்றது. ஒருமுறை ஆதிசங்கரர் கங்கையில் நீராடிவிட்டு சீடர்களுடன் திரும்பும் போது எதிரில் தாழ்த்தப்பட்டவராகக் கருதப்படும் ஒருவர் நான்கு நாய்களுடன் வந்தார். அப்போதுதான் கங்கையில் நீராடிவிட்டு வந்த ஆதிசங்கரர் அவரை வழியை விட்டு விலகிப் போக சொல்கிறார். எதிரில் வந்தவர் 'நீர் விலகிப் போகச் சொல்வது யாரை? இந்த உடலையா அல்லது இந்த உடலுக்குள் இருக்கும் ஆத்மாவையா? எதை விலகிப் போகச் சொல்கிறீகள்? மண் பாத்திரத்தில் இருந்தாலும் தங்கக் குடத்தில் இருந்தாலும் தண்ணீர் தண்ணீர்தானே? அது தன் இயல் பில் இருந்து மாறுவது இல்லையே. அதுபோலவே மனிதர்களோ விலங்குகளோ தாவரங்களோ அனைத்திலும் இருப்பது ஒன்றேயான அந்தப் பிரம்மம் தானே? அப்படி இருக்கும்போது என்னுடைய உடலில் இருக்கும் அதே பிரம்மம் தானே தங்களுடைய உடலிலும் இருக்கிறது. நமக்குள் எந்த வேறுபாடும் இல்லையே. என்னை ஏன் விலகிப் போகச் சொல்கிறீர்கள்? எனக் கேட்டார். ஆதிசங்கரருக்கு அப்போது தான் புரிந்தது தன்னுடைய மனப்பக்குவத்தை சோதிப்பதற்காக இறைவன் நிகழ்த்திய லீலை அது என்பது. உடனே அவரை நமஸ்கரித்து அருமையான ஸ்தோத்திரம் ஒன்றைப்பாடினார். ஐந்து ஸ்லோகங்கள்கொண்ட அது தான் மனீஷா பஞ்சகம். அந்தப் பஞ்சகத்தில் இருந்து சில பகுதிகள் இங்கே...

விழிப்பிலும், கனவிலும், உறக்கத்திலும் எந்தத் தூய உணர்வு தெளிவாக வெளிப்படுகிறதோ எது பிரம்மா முதல் எறும்பு வரை அனைத்து உடல்களிலும் பிரபஞ்சத்தின் சாட்சியாக ஊடுருவியுள்ளதோ அதுதான் நான். நான் காணப்படும் பொருள் அல்ல என்று எவருக்கு உறுதியான ஞானம் இருக்கிறதோ அவர் சமுதாயத்தால் தாழ்த்தப்பட்டவரோ அல்லது உயர்த்தப்பட்டவரோ யாராக இருந்தாலும் அவரே என் குரு என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

“ஜாக்ரத்ஸ்வப்ன ஸுஷுப்திஷு ஸ்புடதரா யா ஸம்விதுஜ்ரும்பதே!
யா ப்ரஹ்மாதிபிபீலிகாந்ததனுஷு ப்ரோதா ஜகத்ஸாக்ஷிணீ !!
ஸைவாஹம் ந ச த்ருஶ்யவஸ்த்விதி த்ருடப்ரக்ஞாபி யஸ்யாஸ்தி சேத்!
சாண்டாலோஸ்து ஸ து த்விஜோஸ்து குருரித்யேஷா மனீஷா மம !!

எவன் ஒருவனுக்கு தானே ஆத்மஸ்வருபம்தான் என்பதில் திட நம்பிக்கை உள்ளதோ விழிப்பு, கனவு, உறக்கம் ஆகிய 3 ஸ்திதிகளிலும் பரமாணுவிலிருந்து பரப்ரம்மம் வரை எல்லாவற்றிலும் எக்காலத்திலும் கண்ணுக்குத் தெரியாத ஸாக்ஷியாக உயிர்ப்பு சக்தியாக செயல்படுவதும் அதே ஆத்மாதான் என்பதையும் அவன் அறிகிறானே அவன் எந்த ஜாதியில் பிறந்திருந்தாலும் அவனே உயர்ந்த ஆசானாகக்கருதப்படுவான்.

பரம்மைவாஹமிதம் ஜகச்ச ஸகலம் சின்மாத்ரவிஸ்தாரிதம்
ஸர்வம் சைததவித்யயா த்ரிகுணயாஶேஷம் மயாகல்பிதம்!
இத்தம் யஸ்ய த்ருடாமதி: ஸுகதரே நித்யே பரே நிர்மலே
சாண்டாலோஸ்து ஸ து த்விஜோஸ்து குருரித்யேஷா மனீஷா மம!!

சங்கரர் மேலும் உணர்கிறார். எனக்குத் தெரியும் யார் உயர்நத குரு என்று ப்ராம்மணனோ, சூத்ரனோ, யார் அந்த சுத்த ஸத்வமான ப்ரம்மத்திலேயே லயித்து தானே அதுவாக உணர்கிறார்களோ அவர்தான் எல்லாம் உணர்ந்த ஆசாரியராக முடியும். ஸத்வ, ரஜஸ், தமஸ், ஆகிற முக்குணங்களின் பாதிப்பினாலும் அறியாமையினாலும் உலகத்திலுள்ள பொருட்கள் எல்லாம் வெவ்வேறாகத் தெரிந்தாலும் ஒரே பரமாத்மா பரப்ரஹ்மத்திலிருந்து உண்டானவையே அனைத்தும் என்பதைப் புரிந்து கொண்டவனே ஸத்குரு என்கிறார் அவர்.

ஶஶ்வன்னஶ்வரமேவ விஶ்வமகிலம் நிஶ்சித்ய வாசா குரோ:
நித்யம் ப்ரஹ்ம நிரந்தரம் விம்ருஶதாம் நிர்வியாஜ ஶாந்தாத்மனாம்!
பூதம் பாவி ச துஷ்க்ருதம் ப்ரதஹதாம் ஸம்வின்மயே பாவகே
ப்ராரப்தாய ஸமர்ப்பிதம் ஸ்வவபுரித்யேஷா மனீஷா மம!!

குருவின் வார்த்தைகளில் எனக்குப் பரிபூரண நம்பிக்கை இருப்பதால் இந்தப்பிரபஞ்சம் முற்றும் நிலையற்ற உருவெளித்தோற்றம் என்பதும் பரமாத்மாவைக் குறித்து ஆழ்ந்த தியானத்தைச் செய்து நிஸ்சலனமான மனதுடன் பாவத்தீயையெல்லாம் அந்த ஸாதனையாகிற தீயில் எரிக்க வேண்டும் என்பதும் தெரிகிறது.

யா திர்யங்நரதேவதாபிரஹமித்யந்த: ஸ்புடா க்ருஹ்யதே
யத்பாஸா ஹ்ருதயாக்ஷதேஹவிஷயா பாந்தி ஸ்வதோ சேதனா:!
தாம் பாஸ்யை: பிஹிதார்க்கமண்டலநிபாம் ஸ்பூர்த்திம் ஸதா பாவயந்
யோகீ நிர்வ்ருதமானஸ: ஸ குருரித்யேஷா மனீஷா மம!!

சங்கரர் மேலும் கூறுவதாவது : என் அபிப்ராயப்படி உயர்ந்த யோகி யார் என்றால் பரமாத்மாவின் உண்மை ஸ்வரூபத்தையும் தன்மைகளையும் உணர்ந்தவர்தான். அதாவது அனைத்துச் செயல்களும் யாரால் நடத்தப்படுகிறது என்பதும் அப்பேர்ப்பட்ட கடவுளின் ஒளி அறியாமையினால் மறைக்கப்பட்டிருக்கிறது (மேகங்கள் எப்படி சூரியனின் ஒளியை மறைக்கிறதோ அப்படி) என்பதும் தான்!

யத்ஸௌக்யாம்புதிலேஶலேஶத இமே ஶக்ராதயோ நிர்வ்ருதா:
யச்சித்தே நிதராம் ப்ரஶாந்தகலனே லப்த்வா முனிர்நிர்வ்ருத:!
யஸ்மிந்நித்ய ஸுகாம்புதௌ கலிதர்தீ ப்ரஹ்மைவ ந ப்ரஹ்மவித்
ய: கஶ்சித் ஸ ஸுரேந்த்ரவந்திதபதோ நூநம் மனீஷா மம!!

இந்திரனாலும் மற்ற தேவர்களாலும் துதிக்கப்படும் அந்தப்பரமாத்மாவிடம் எப்போதும் மனதைச் செலுத்திப் பரிபூரண அமைதியுடன் எவர் இருக்கிறாரோ அவர் அந்த பரப்ரம்ஹ்மத்தை அறிந்து கொண்டவர் மட்டுமல்ல அந்த ப்ரஹ்மமாகிவிடுகிறார் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது.

தாஸஸ்தேஹம் தேஹத்ருஷ்ட்யாஸ்மி சம்போ ஜாதஸ் தேம்சோ ஜீவத்ருஷ்ட்யா த்ரீத்ருஷ்டே!
ஸர்வஸ்யாஸ்மந்நாத்மத்ருஷ்ட்யா த்வமேவேத் யேவம் மே தீர்நிஸ்சிதா ஸர்வ சாஸ்த்ரை:!!

பகவானே! நான் இந்த உடலில் இருக்கும்போது உன் சேவகன் முக்கண்ணனே! இந்த உயிராக இருக்கையில் உன்னில் ஒரு பாகமாகிறேன். ஆத்மாவாக இருந்தால் நீ என்னுள்ளும் இன்னும் மற்றெல்லா ஆத்மாக்களுக்குள்ளேயும் இருக்கிறாய். என் புத்தி பூர்வமாகவும் பல நூல்களைப்படித்தும் நான் வந்த முடிவு இதுதான். 




சதாசிவ பிர்மேந்திராள்


கரூரிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் காவிரி கரையில்  நெரூர் என்கிற அழகிய சிறிய கிராமம். இங்கு ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராளின் அதிஷ்டானம் உள்ளது.

ஒரே சமயத்தில் ஐந்து இடங்களில் தோன்றி ஐந்து இடங்களிலும் சமாதியானவர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் அவர்கள். அவர்களுடைய சக்தி இன்றும் அந்த அதிஷ்டானத்தில் உணரலாம்.

இச்சிறிய கிராமத்தின் அக்கிராஹத்தில் ஏசி வசதியுடன், விசாலமான, சுத்தமான ஒரு தங்குமிடம் மிகவும் நியாயமான வாடகையில் உள்ளது.

இங்கேயே மூன்று வேளைக்கும் சுவையான கிராமிய உணவு, இரண்டு வேளை காபியும் ஒரு பிராமண மாமி சமைத்து தருகிறார்கள்.

மேலும் இங்கு உபநயனம், சீமந்தம் முதலிய சுப காரியங்களுக்கும், ஸ்ரார்தம், மஹாளய பட்ச ஸ்ரார்தம் செய்வதற்கு சமையல், வாத்தியார் ஏற்பாடுகளும், இடமும் நியாயமான செலவில் செய்து தருகிறார்கள்.

காவிரி கரையில் அழகிய கிராமத்தில் சகல வசதியோடு விருப்பம் உள்ள நாட்கள் வரை தங்கி, மனமும் உடலும் புத்துணர்வு பெறலாம்.

மற்ற விபரங்களுக்கு...
பானு மாமி : +91 99445 32919
திரு.ரவி, டிரஸ்டி : +91 99400 45982

திங்கள், 23 செப்டம்பர், 2024

நாச்சிமுத்து....

நாச்சிமுத்து!

திருக்கழுக்குன்றத்தில் நெடுங்காலத்துக்கு முன்னர் நாச்சிமுத்து என்ற பெண்மணி வாழ்ந்து வந்தாள். அவள் உருத்திரக் கணிகையர் வகுப்பைச் சேர்ந்தவள். இறைவன் மீது எல்லையில்லா அன்பு கொண்டவள். திருக்கழுக்குன்றத்துக் கோயிலில் இறைவனின் முன்பு நாட்டியமாடுதல் இவள் பணியாக இருந்தது. இவளிடம் ஒரு வைணவர் பேரன்பு கொண்டவராக விளங்கினார். இவளுடைய அன்பினால் அவருக்கும் சிவபக்தி உண்டாயிற்று. தமிழ் புலவரான இவர் திருக்கழுக்குன்றத்து இறைவன் மீது திருக்கழுக்குன்ற பாமாலை என்னும் நூலைப் பாடினார். அப்பாடல் பொருட்சுவையும் சொற்சுவையும் நிரம்பியது. உருத்திரக் கணிகையான நாச்சிமுத்துவும் அம்மாலையின் பாடல் ஒன்றைத் தினமும் கோயிலில் இறைவன் முன்பு பாடி, அபிநயம் செய்வது வழக்கம்.ஒரு நாள் மாலையில் கடுங்காற்று வீசி, கனமழை பெய்தது. அதனால் அவளால் கோயிலுக்குச் சென்று இறைவன் முன்பு தனது நாட்டியச் சேவையைச் செய்ய முடியவில்லை. இதனால் அவள் மிகவும் வருத்தமடைந்தாள். இந்த வீட்டு முற்றத்தில் இறைவன் எழுந்தருளியிருந்தால் எனது நாட்டியச் சேவையை செய்திருப்பேனே என்று எண்ணினாள். பின்பு, அங்கு சிவபெருமான் எழுந்தருளி இருப்பதாக பாவனை செய்துகொண்டு, அன்று பாட வேண்டிய பாடலைப் பாடி, அபிநயம் செய்யத் தொடங்கினாள். அவள் அன்பில் மகிழ்ந்தார் இறைவன். ஆடல்வல்ல பெருமானான சிவன், அவளுடைய ஆடலையும் பாடலையும் கண்டு குளிர்ந்து போனார். அவளுக்குக் காட்சி அளித்து, முக்தியும் அருளினார்.நாச்சிமுத்து நாச்சியார், பெருமானின் திருவடிகளைப் பற்றிக்கொண்டு கயிலைக்குச் செல்லத் தொடங்கினாள். அவள் இறைவனுடன் செல்வதைக் கண்ட அவளுடைய அன்பான வைணவரும் ஓடி அவளுடைய திருப்பாதங்களைப் பற்றிக் கொண்டே விண்ணுலகம் சென்றார். இச்சம்பவத்தை  க்ஷேத்திரக்கோவை பிள்ளைத் தமிழ், கழுகாசல சதகம் ஆகிய நூல்கள் விரிவாகக் கூறுகின்றன. லிங்கப்பதிகம் என்னும் நூல் இந்த நிகழ்ச்சியை முற்றத்திலே வந்து தாதி தமிழைக் கேட்டு மோட்சம் கொடுத்த லிங்கம் என்று குறிக்கின்றது.

நவராத்திரி மூன்றாம் நாள்: எவ்வாறு வழிபட வேண்டும்?

நவராத்திரி மூன்றாம் நாள்: எவ்வாறு வழிபட வேண்டும்?

நவராத்திரி மூன்றாம் நாளில் அம்பிகையை வராஹியாக அலங்கரிக்க வேண்டும். பன்றிமுகத்துடன் கூடியவளாக விளங்கும் இவளை வழிபட்டால் பகைவர் பயம் நீங்கும். மதுரை மீனாட்சியம்மன் நாளை தட்சிணாமூர்த்தி கோலத்தில் காட்சியளிக்கிறாள். தென்முகக்கடவுளான தட்சிணாமூர்த்தி சிவன்கோயில்களில், கல்லால மரத்தின் கீழ் இருப்பார். இவர் முன்னால் சனகர்,சனந்தனர், சனதானர், சனத்குமாரர் என்னும் நான்கு சீடர்கள் இருப்பர். அவர்களுக்கு உபதேசம் செய்கிறார் தட்சிணாமூர்த்தி.

இவருடைய வலக்கை சின்முத்திரை காட்டியபடி இருக்கும். வலக்கைப் பெருவிரல் பரமாத்மாவாகிய கடவுளையும், ஆள்காட்டிவிரல் ஜீவாத்மாவாகிய உயிரையும் குறிக்கும். மற்ற விரல்களான நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் ஆகியவை ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றைக் குறிக்கும். ஆணவம் என்பது அகங்காரம். கன்மம் என்பது உயிர்கள் செய்யும் நல்வினை, தீவினைப்பயன்கள். மாயை என்பது இவ்வுலக வாழ்வு உண்மை என எண்ணும் நிலை. இம்மூன்றையும் விட்டு, ஒருவன் நீங்கினால் மட்டுமே கடவுளோடு ஐக்கியமாக முடியும் என்பதே சின்முத்திரை தத்துவம். அம்பாளைத் தட்சிணாமூர்த்தியாக உபதேசிக்கும் கோலத்தை காண்பவர்களுக்கு அஞ்ஞானம் அகலும். கடவுளின் திருவடியே நிலையானது என்ற மெய்ஞானம் உண்டாகும்.

நாளைய நைவேத்யம்: எலுமிச்சை சாதம்
தூவவேண்டிய மலர்கள்: மல்லிகை, செவ்வந்தி.

பாட வேண்டிய பாடல்:

என்குறை தீர நின்று ஏத்துகின்றேன், இனியான் பிறக்கின்
நின்குறை யேயன்றி யார்குறை காண்! இருநீள் விசும்பின்
மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியளாய்
தன்குறை தீரஎங் கோன்சடை மேல் வைத்த தாமரையே.