18ம் நூற்றாணடின் துவக்கத்தில், அந்தணக் குடும்பத்தில் அவதரித்தவர் சதாசிவ பிரம்மேந்திரர். சோமநாதர்-பார்வதி அம்மையார் தம்பதிக்கு அருந்தவப் புதல்வனாக அவதரித்தார் சிவராமகிருஷ்ணன். ஆம்! சதாசிவ பிரம்மேந்திரருக்குப் பெற்றோர் வைத்த பெயர் அதுதான். கல்வி-கேள்வி, சாஸ்திரம், வேதம், சங்கீதம் முதலானவற்றை முறையாகக் கற்றார். திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள், கோவிந்தபுரம் போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், அப்பைய தீட்சிதர், சிவயோகி தாயுமான ஸ்வாமி, தியாகராஜர் முதலானோரெல்லாம் சதாசிவ பிரம்மேந்திரரின் சமகாலத்தவர்கள் என்று கூறப்படுகிறது.
துறவு என்றால் காவிதானா? அவதூத நிலையும் (நிர்வாணம்) ஒரு துறவுதான். சதாசிவ பிரம்மேந்திரர் இதைத்தான் கடைப்பிடித்து வாழ்ந்தார். வாழ்க்கையின் பிற்பகுதி முழுவதும் மவுன நிலை. எவரிடமும் எந்த ஒரு பேச்சும் இல்லை. காரணம்? ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இவரது குரு சும்மா இருக்க மாட்டியா! உன் வாயைக் கொஞ்ச நேரம் மூடு என்று அதிகாரமாகச் சொன்னதை. ஆண்டவன் தனக்கு இட்ட கட்டளையாகக் கருதி, அந்தக் கணம் முதல், பேச்சை நிறுத்தினார்.
மவுனமே நிரந்தரமான பரிவர்த்தனை ஆனது. அவசரமான சந்தர்ப்பங்களில் மட்டும் மணலில் எழுதிக் காண்பித்துக் குறிப்பு சொல்வார். தேசத்தின் பல பாகங்களுக்கும் சதாசிவ பிரம்மேந்திரர் சென்று வந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. துருக்கி நாட்டுக்குக்கூட இவர் சென்று வந்ததாக செவி வழிச் செய்தி உண்டு. ஒரு முறை இவர் திகம்பரராக சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, சிற்றரசன் ஒருவனது அந்தப்புரத்தைக் கடக்க நேர்ந்தது. ஆடை இல்லாதவர் அந்தப்புரத்தின் வழியாக நடந்து செல்கிறார் என்ற தகவல். அந்த சிற்றரசனைக் கடுங்கோபத்துக்கு உள்ளாக்கியது.
ஆத்திரத்துடன் அரசவையில் இருந்து வெளிவந்த சிற்றரசன் சாலையில் சென்று கொண்டிருந்த சதாசிவரைத் தன் வாளால் சரேலென வெட்டினான். அந்த மகானின் கை வெட்டுப்பட்டு தனித் துண்டாக நிலத்தில் விழுந்தது. கை வெட்டுப்பட்டதையும் அந்த இடத்தில் ரத்தம் ஆறுபோல் வழிந்துகொண்டு இருப்பதையும் பற்றி சற்றும் உணராத சதாசிவர், எதுவுமே நடக்காதது போல், சென்று கொண்டிருந்தார்.
இந்தக் காட்சியைப் பார்த்த சிற்றரசன் விதிர்விதிர்த்துப் போனான். கை வெட்டுப்பட்டும் சலனம் இல்லாமல் ஒருவர் நடந்து செல்கிறார் என்றால், இவர் யாராக இருக்கும் என்று குழும்பிப் போய் பயம் மேலிட, அவர் பின்னே தொடர்ந்தான்.
மகானின் நிலை, தொடர்ந்து அவனை பீதிக்குள்ளாக்க, ஓடிப்போய் அவருடைய பாதம் பணிந்து தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்டான். அப்போது சதாசிவரிடம் எந்த மாற்றம் இல்லை. எதுவுமே நிகழாததுபோல் வெட்டுப்பட்ட இடத்தை மெல்லத் தடவிவிட்டார். அடுத்து நடந்ததை அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும். ரத்தம் வழிவது சட்டென நின்று, வெட்டுப்பட்டுத் தரையில் கிடந்த அவரது திருக்கரம் தானாகவே வந்து ஒட்டிக்கொண்டது!
அதன்பின் சதாசிவரின் அருளுக்கும் ஆசிக்கும் அந்த சிற்றரசன் பாத்திரமாகிவிட்டான். இதுபோல் சதாசிவரின் வாழ்க்கையில் ஏராளமான அதிசயங்கள் நடந்துள்ளன.
சிறு வயதிலேயே பரப்பிரம்ம நிலையை எய்தியவர் சதாசிவர். அதாவது, கல், கட்டை, மனிதர், புல், பூண்டு அனைத்தையும் ஒன்றாகப் பார்க்கும் நிலைதான் பரப்பிரம்ம நிலை. எதற்கும் பேதம் பார்ப்பதில்லை. தனது வாழ்க்கையின் பெரும்பாலான பொழுதுகளைக் காவிரிக் கரை ஓரத்திலேயே கழித்தவர் சதாசிவர். அதனால்தானோ என்னவோ , எங்கெங்கோ சுற்றி இருந்தாலும் இறுதிக் காலத்தில் அருகில் உள்ள நெரூருக்கு வந்து, தான் சமாதி ஆகப்போகும் இடத்தை அவரே தேர்ந்தெடுத்தார்.
ஜீவசமாதி ஆவதற்குச் சில நாட்கள் முன்பிருந்தே சமாதி நிலையில் இருந்தார் சதாசிவர். உணவு, உறக்கம் போன்ற இயல்பான செயல்கள் எதுவும் இல்லாமல். கட்டை போல் இருக்கும் நிலை. அப்போது மட்டுமில்லை. அடிக்கடி சமாதி நிலையில் இருக்கும் சுபாவம் கொண்டவர் சதாசிவர். இப்படித்தான் ஒரு முறை கொடுமுடிக்கு அருகில் ஆற்றங்கரையில் சமாதி நிலையில் உட்கார்ந்தார் சதாசிவர். ஓரிரு நாட்கள் கழித்து காவிரி ஆற்றில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. அப்போது கரையில், சமாதி நிலையில் இருந்த சதாசிவரையும் வெள்ளம் மூழ்கடித்துவிட்டது. கரையில் இருந்தவர்கள் பதறினார்கள். கரையில் உட்கார்ந்து தியானம் செய்த சாமியக் காணோம் என்று ஒருவர் அலற.... அடுத்தவர் சோகத்துடன் ஆத்து வெள்ளம் பாய்ஞ்ச வேகத்தைப் பாத்தீல்ல. அது அவரையும் அடிச்சிட்டுப் போயிருக்கும். வெள்ளத்துக்கு நல்லவாங்க கெட்டவங்க வித்தியாசம் தெரியவா போகுது. பாவம்! அவரோட ஆயுளு இப்படி அற்பமா முடிஞ்சு போச்சே என்று அங்கலாய்த்தார்.
இதன் பிறகு சதாசிவரைப் பற்றிக் கொடுமுடிவாசிகள் மறந்தே போய்விட்டார்கள். ஒரு கோடை காலத்தில் தண்ணீர் வற்றிய நேரத்தில், காவிரியில் வாய்க்கால் வெட்டுவதற்காக ஒரு மணல்கோட்டை மண்வெட்டி மூலம் வெட்ட ஆரம்பித்தார்கள் பணியாளர்கள். ஓர் ஆசாமி மண்வெட்டியால் வெட்டியபோது பதறிப்போனார். உள்ளே விசித்திரமான ஏதோ ஒன்றின் மேல் மண்வெட்டி பட்டதாகத் தெரிகிறது என்று அலறி, மண்வெட்டியை அப்படியே போட்டுவிட்டு ஓடிப்போய் விட்டார்!
திகிலான மற்ற பணியாளர்கள் விரைந்து வந்து. அந்த மண்வெட்டியை எடுத்துப் பார்க்க.... அதன் முனையில் ரத்தம்! இதைப் பார்த்தவர்கள் மிரண்டு போனார்கள். பிறகு, அவர்களே சமாதானம் அடைந்து, அந்தக் குறிப்பிட்ட இடத்தைச் சுற்றிலும் இருந்த மண்ணை மெதுவாக விலக்கினார்கள். உள்ளே பள்ளத்தில் உடலெங்கும் மணல் அப்பிய கோலத்தில் சமாதி நிலையில் காட்சி தந்தார் சதாசிவ பிரம்மேந்திரர். காற்றுகூட புக முடியாத அந்த மண் மூடிய இடத்தில் எத்தனை காலமாகத்தான் சமாதி நிலையில் இருந்தாரோ அந்த மகான்? இறைவனுக்குத்தான் தெரியும்.
தன் சமாதி நிலை கலைந்ததால், பள்ளத்தில் இருந்து எழுந்தார் சதாசிவ. அவர் உடலில் இருந்து மண் துகள்கள் உதிர்ந்தன. அவர் உடலில் மண்வெட்டி பட்ட இடத்தில் இருந்து ரத்தம் கசிந்து வழிந்து கொண்டிருந்தது. ஆனால் எதையுமே கண்டுகொள்ளாமல் விறுவிறு வென்று நடந்து சென்றார். பணியாட்கள் இதைக்கண்டு திகைத்துப் போனார்கள். பரப்பிரம்மத்துக்கு ஏது வலி? ரத்தத்தைக் கண்டு ஏது பயம்.?
இதுபோல், தான் சமாதி ஆவதற்குச் சில நாட்கள் முன்பும் சமாதி நிலையில் நெரூரில் இருந்தவர் சதாசிவர். பல நாட்கள் இப்படி ஓடின. திடீரென ஒரு நாள் கண்விழித்தார் பிரம்மேந்திரர் . ஏதோ சொல்லப் போகிறார் என்று அவரைச் சுற்றி இருந்தவர்கள் அனைவரும் அவரை நெருங்கினார்கள். ஊரில் இருந்த முக்கிய பிரமுகர்களை உடனே அங்கே வரச் சொல்லுமாறு கேட்டுக்கொண்டார். அந்தணர்கள் உட்பட அனைவரும் கூடினர்.
ஆனி மாதம் வளர்பிறை தசமி அன்று. பூத உடலை, தான் துறக்க இருப்பதாக அவர்களுக்கு உணர்த்தினர். தான் சமாதி ஆன பின், காசியில் இருந்து அந்தணர் ஒரு பாண லிங்கம் ஒன்றைக் கொண்டு வருவார் என்றும் அதைத் தன் சமாதிக்கு அருகில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று உணர்த்தினார். ஜீவ சமாதியாகும் நாள் நெருங்கியது காவிரி ஆற்றங்கரை ஓரம் சதாசிவர். தான் சமாதி ஆவதற்காகத் தேர்வு செய்ய இடத்தில் இருந்த புல், பூண்டுகளை அகற்றும் பணியில் ஊர்க்காரர்கள் இறங்கினர். நெரூர் பூமி, புண்ணியம் செய்த பூமி, இல்லையென்றால் இத்தனை பெரிய மகான் நம்மூருக்கு வந்து சமாதி ஆவாரா? என்று ஊர்க்காரர்கள் நெகிழ்ந்தனர். சாஸ்திரப்படி குழி வெட்டினார்கள். இன்னும் சற்று நேரத்தில் பரப்பிரம்மம். ஜீவசமாதி ஆவதைக் காண அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்தும் ஜனங்கள் திரண்டிருந்தனர். அனைவரின் முகமும் சோகம் கப்பியதாக இருந்தது.
குறித்தநேரம் வந்ததும். ஜனத்திரளில் நீந்தி. தனக்காகத் தோண்டப்பட்ட குழியை அடைந்தார் சதாசிவர். வேத மந்திர கோஷங்களின் ஒலி. அந்தப் பிராந்தியத்தையே நிறைத்தது. இரு புறமும் கூடி இருந்த மக்களின் வழிபாடுகளை எல்லாம் ஏற்றுக்கொண்டு, தனக்கான குழியில் இறங்கினார். ஜனங்கள் அனைவரையும் ஒரு முறை சந்தோஷமாகப் பார்த்தார். பிறகு குழியின் நடுவில் சமாதி நிலையில் உட்கார்ந்தார். மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்று அங்கு கூடி இருந்தவர்களுக்கு சமிக்ஞையாகச் சொன்னார். சமாதி மூடப்பட்டு சடங்குகள் நடந்தன. வந்திருந்தோர் அனைவரும் கண்ணீருடன் வழிபட்டுத் திரும்பினர். அந்த பரப்பிரம்மம். இந்த உலகத்துடனான தன் சரீரத் தொடர்பை விலக்கிக்கொண்டது சதாசிவ பிரம்மேந்திரர் சொன்னபடியே, அவர் சமாதியான பின், காசியில் இருந்து அந்தணர் ஒருவர் பாண லிங்கத்தைக் கொண்டு வந்தார். பிரம்மேந்திரருடைய விருப்பப்படி அவரது சமாதி அருகில் அந்த பாண லிங்கம் காசி விஸ்வநாதர் என்கிற திருநாமத்துடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பிரம்மேந்திரரின் அருளுக்குப் பாத்திரமானவரும் புதுக்கோட்டை சமஸ்தான மன்னருமான விஜயரகுநாதராய தொண்டைமான் தகவல் கேள்விபட்டு நெரூர் வந்தார். காசி விஸ்வநாதருக்கு ஒரு கோயில் கட்டினார். முறைப்படி நடக்க வேண்டிய கோயில் பூஜைகளுக்கும் சமாதி வழிபாடுகளுக்கும் ஏற்பாடுகளைச் செய்தார். காசி விஸ்வநாதர் கோயிலுக்கு ஆகம பூஜை. ஜீவ சமாதிக்கு வைதீக பூஜை. கோயில் மற்றும் அதிஷ்டானம் ஆகிய இரண்டும் இணைந்த திருக்கோயிலாக இது காட்சி அளிக்கிறது.
இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கண்காணிப்பில் கோயில் இன்று இருந்து வருகிறது. காசி விஸ்வநாதர் (சதாசிவ பிரம்மேந்திரர் சொன்னபடி காசியில் இருந்து வந்த பாண லிங்கம் இதுதான்) மற்றும் விசாலாட்சி ஆகிய தெய்வங்கள் கோயிலுக்குள் அருள் புரிகின்றனர். காசி விஸ்வநாதர் சன்னதிக்குப் பின்பக்கம் பிரம்மேந்திரரின் ஜீவசமாதி அமைந்துள்ளது. சமாதிக்குக் குடை பிடித்தபடி ஒரு பிரமாண்ட வில்வ மரம் காணப்படுகிறது.
சதாசிவர், ஜீவ சமாதி ஆன பத்தாம் நாளில் இந்த வில்வ மரம் தானாக வந்தது. இப்படி ஒரு வில்வ மரம் முளைக்கும் என்கிற செய்தி புதுக்கோட்டை மகாராஜாவின் கனவில் வந்து சொல்லப்பட்டது என்பது ஆச்சரியமான விஷயம். தினமும் காலையில் ஒன்பது மணிக்கு சமாதிக்கு அபிஷேகம் நடக்கும். அப்போது ருத்ரம், சமகம், புருஷசூக்தம் முதலிய பாராயணம் நடக்கும்.
ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் காலை பத்து மணிக்கு விசேஷ அபிஷேகம் அலங்காரம் உண்டு. அன்று சகஸ்ரநாம அர்ச்சனை, புஷ்ப அலங்காரம், அன்னதானம் ஆகியவை சிறப்பாக நடைபெறும். தவிர, ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது என்றார் நாராயண உபாத்யாயா. இவர்தான், ஜீவ சமாதியின் வழிபாடுகளை தற்போது கவனித்து வருகிறார்.
மகான்களின், மரணம் என்பது உடல் நீக்கம் மட்டுமே! காலங்களைக் கடந்தும் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அருளாசிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு. அந்த மகானின் சன்னிதியைத் தரிசித்துச் செல்லும் அன்பர்களே சாட்சி.
ஸ்ரீசதாசிவரின் திருப்பாதம் பணிவோம்.
மகானின் திருக்கரம் பட்ட மந்திர மண்!
சமஸ்தானமாக இருந்தபோது புதுக்கோட்டையின் மன்னராக விளங்கிய விஜயரகுநாதராய தொண்டைமான் சதாசிவ பிரம்மேந்திரருக்கு நெருக்கமானவர்.
திருமணம் சம்பந்தமான ஒரு கொண்டாட்டம் சதாசிவ பிரம்மேந்திரரின் வீட்டில் நடந்து கொண்டிருந்தது. அப்போது சதாசிவருக்குப் பசி எடுத்தது. தாயை அணுகி உணவு அளிக்குமாறு கேட்டார். சற்றுப் பொறுத்திருப்பா. உன் திருமணத்துக்காக கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது. நீ இப்போது அவசரப்படலாமா? என்று தாயார் கேட்ட போது துணுக்குற்றார் சதாசிவர்.
திருமணத்துக்கு முன்னரே பசித்த போது வயிற்றுக்குச் சோறு போட முடியவில்லை என்றால், மணமானபின் இல்லற வாழ்க்கையில் என்னவெல்லாம் கஷ்டப்பட வேண்டி இருக்கும்; எப்படியெல்லாம் சிரமங்கள் நம்மை ஆட்கொள்ளும் என்று சிந்தித்தவர், சொல்லாமல் கொள்ளாமல் வீட்டைவிட்டுப் புறப்பட்டுவிட்டார் நடந்தார்.... நடந்தார்......
தஞ்சாவூர் வழியே சென்றால். 1738 வாக்கில் புதுக்கோட்டையை அடுத்த திருவரங்குளக் காடுகளில் (இதை திருவரங்கம் என்பாரும் உண்டு) நடந்து கொண்டிருந்தபோது அந்தப் பகுதியின் மன்னரான விஜயராகுநாத ராய தொண்டைமான். மகானான சதாசிவரை சந்தித்தார். தன்னந்தனியே இருந்த மன்னரைக் கண்ட மாத்திரத்திலேயே மகானின் மனதும் இளகியது. குருவிடம் உபதேசம் கேட்கும் சீடன் கோலத்தில், சதாசிவம் முன் பணிந்தபடி நின்றார் மன்னர். மவுனத்தையே தான் கடைப்பிடித்து வந்ததால், கீழே அமருமாறு சைகை காண்பித்தார். மன்னரும் அமர்ந்தார். அதன்பின் கீழே இருந்த மணலில் சில மந்திரங்களுடன் ஸ்ரீதட்சிணாமூர்த்தி மந்திரத்தையும் எழுதிக் காண்பித்த அவருக்கு உபதேசம் செய்தார்.
அந்த மந்திரம்:
ஓம் நமோ பகவதே தட்சிணாமூர்த்தயே மஹ்யம் மேதாம் ப்ரஃஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா.
மந்திர உபதேசத்தைப் பெற்றுக்கொண்டபின், எந்த மணலில் சதாசிவர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி மந்திரத்தை எழுதினாரோ அந்த மணலைத் தன் இரு கைகளால் பவ்யமாக அள்ளி, தலைப்பாகையில் எடுத்துக்கொண்டு அரண்மனை திரும்பினார் தொண்டைமான். இந்த மந்திர மண்ணை பூஜையறையில் வைத்து தினமும் வழிபட்டார் மன்னர் என்கிறார். சமஸ்தானத்தின் இன்றைய ராணியான ரமாதேவி ராதாகிருஷ்ண தொண்டைமான்.
சதாசிவர் தன் கைவிரல்களால் மந்திர எழுத்துக்களை எழுதிக் காண்பித்த அந்த மணல் இன்று எங்கே இருக்கிறது.