ஆதி சங்கர பகவத்பாதாள் அருளிய மந்த்ர மாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம் ...
இந்த ஸ்தவத்தின் ஒவ்வொரு பாவின் முதல் வரியின் முதல் எழுத்தும் காதி வித்யையான பஞ்சதஸி மந்திரமான “க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம்” என்பதிலிருந்தே ஆரம்பிக்கிறது. இப்பா, இறைவியை மானஸ பூஜை முறையில், ஆராதிக்க உபயோகிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.
சங்கரர் புஷ்ப மாலையாக அன்றோ அருளினார். அதன் பின் அதற்க்கும் மேல் ஒருபடி சென்று, த்ரிபுரசுந்தரி சன்னதி ஸ்தவத்தில், மனித குலம் உய்ய, அம்பிகையின் சான்னித்யத்தில் என்றும் குளிர்ந்திருக்க “ஷோடஸி வித்யா”யையுமன்றோ அருளினார்.
‘மந்த்ர மாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம்’ ..... मन्त्र मातृका पुष्पमालास्तवः
‘ஸ்ரீ வித்யா’ எனப்படும் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பிகையின் ஆராதனையில் மந்திரம், முத்திரை, அனுஷ்டானம் போன்ற எல்லாமே மிகவுமே விஷேஷமானது, கடினமானது. இந்த முறையில் சித்தி பெற்ற ஒருவரே, இன்னொருவருக்கு தீக்ஷை அளிக்கமுடியும். உதாரணத்திற்கு, அம்பிகையின் கட்கமாலா சித்தி அருளப்பட்டாலே, ஸ்ரீ வித்யாவின் ‘பாலா மந்திரம்’ எனும் த்ரியக்ஷரி உபதேசம் நடக்கும். த்ரியக்ஷரி சித்தியானாலே ‘பாலா திரிபுரசுந்தரி ஷடாக்ஷரி’ கிட்டும், பாலா திரிபுரசுந்தரி ஷடாக்ஷரி பாராயணம் செய்பவரே பாலாம்பிகா த்ரியக்ஷரி உபதேசம் செய்ய முடியும். பாலா திரிபுரசுந்தரி ஷடாக்ஷரி சித்தியானால் மட்டுமே அம்பிகையின் ‘சம்புடீக்ருத’ நவாக்ஷரி கிட்டும். இவற்றின் பின்னரே குருவானவர் பன்சதஸியை உபதேசிப்பதை ஆலோசிப்பர். ஸாதகர் நன்கு தேர்ச்சி பெற்றார் என குருவானவர் பல பரீக்ஷைகள் மூலம் அறிந்துகொண்ட பின்னரே, அம்பிகையின் ஷோடஸாக்ஷரி உபதேஸம் நடக்கும்.
இதில் விஷேஷம் என்னவெனில், அம்பிகையின் ஷோடஸாக்ஷரி சித்தியாயின், அந்த ஸாதகர் ஒருவிதத்தில் அம்பிகையின் மறு உருவே ஆகியிருப்பர். வரும் காலங்களில் இப்படிப்பட்ட ஸாதகர் கிடைப்பதரிது என்று, தீர்கதரிஸி ஆதி சங்கரர் நன்றாக தெரிந்துவைத்திருந்தார் என்றே சொல்லவேண்டும். இல்லையெனில், 51 அக்ஷரங்கள் கோர்த்து அமைக்க வேண்டிய அக்ஷர புஷ்பமாலாவை, (அம்பிகையின் கழுத்தை அலங்கரிக்கும் முத்துமாலை 51 முத்துக்களால் – அக்ஷரங்களாலேயே ஆனது) வெரும் 17 பத்திகளில் அடைத்து, அத்துடன் பன்சதஸியையும், ஷோடஸியையும் அதில் மறைத்து அந்த ஸ்தொத்திரத்தை, ஸ்தவமாக அதாவது அம்பிகையின் மானஸீக பூஜையாக அமைத்தது அம்பிகையின் பேரருளால் அன்றோ! அம்பிகைக்கு உகந்த 64 உபசாரங்களையும் இந்த ஸ்தவத்தினூடே இணைத்து ஒரு பரிபூரண மானஸ பூஜா முறையையன்றோ ஆதிசங்கரர் இந்த ஸ்தவத்தில் அமைத்துக்கொடுத்துள்ளார்,
அதன் சக்தியை அவர் இப்படி உரைக்கிறார். “எவரொருவர் இந்த ஸ்தவத்தை நித்யமும் முவ்வேளை பக்தியுடனும், ஸ்ரத்தையுடனும் பாராயணம் செய்கிறார்களோ அவர்கள் சிந்தையில் அம்பிகையும், நாவில் ஸ்வாதத்தின் சாரமான சரஸ்வதியும், இல்லத்தில் ஸ்ரீ எனும் பதத்திற்கே உரியவளான ஸ்ரீ லக்ஷ்மி தேவியும் நடனமாடுவார்” என்று கீலகமாய் ஆசீர்வதித்திருக்கிறார்.
சிந்தையில் சிவமும், முகத்தில் ப்ரம்ம தேஜஸும வாக் சித்தியும், இல்லத்தில் அளவிடதற்கரிய செல்வமும்..
1 : कल्लोलोल्लसिततामृताब्धिलहरीमध्ये विराजन्मणिद्वीपे
कल्पकवाटिकापरिवृते कादम्बवाट्युज्ज्वले।
रत्नस्तंभसहस्रनिर्मितसभामध्ये विमानोतमे
िन्तारत्नविनिर्मितं जननि ते सिंहासनं भावये॥
கல்லோலோல்லஸிதாம்ருதாப்திலஹரீமத்யேவிராஜன்மணி
த்வீபேகல்பகவாடிகாபரிவ்ருதேகாதம்பவாட்யுஜ்வலேமி |
ரத்னஸ்தம்பஸஹஸ்ரநிர்மிதஸபாமத்யேவிமாநோத்தமே
சிந்தாரத்னவிநிர்மிதம்ஜநதிதேஸிம்ஹாஸநம்பாவயேமிமி ||
இந்த முதல் நான்கு வரிகளிலேயே ஸ்ரீ ஆதிசங்கரர், ஒரு தீவிரமான ஸாதகனை உருவாக்குவதற்கென்றே படைத்தாரோ! ஸாதகன் அம்பிகையிடம் கூறுவதாவது “தாயே சிந்தா ரத்தினத்தினால் வடிவமைக்கப்பட்ட ஸிம்ஹாஸனத்தை உனக்கு (அ) உனக்காக சமைத்துள்ளேன்”. இங்கு அம்பிகையை “ஜனனீ – ஈன்ற தாயே” என்றழைக்கும்போது, நம்மையும் அறியாமல் அம்பாளிடத்தில் ஒரு தனி ஈடுபாடு உண்டாகிறதே! லலிதா ரஹஸ்ய சஹஸ்ரத்திலும் இத்தகைய பதம் முதலிலேயே உள்ளது – “ஸ்ரீ மாதா” என்று.
சிந்தாரத்னம் என்பது ஒரு விலை மதிப்பிட முடியாத, நாம் எதை நினைத்தாலும் உடனே கொடுக்கும் குணமுள்ள ஒரு ரத்தினக்கல் ஆகும். அப்படிப்பட்ட பல ரத்தினங்களைக் கொண்டு இழைக்கப்பட்ட விஷேஷ சிம்ஹாசனம், விமானத்தின் (கோபுரத்தின்) நடுவே இருத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த விமானமோ உத்தமமானது, ஏனெனில், உத்தமமான கோபுரம் என்று கூறப்படுவது ஏழு நிலைகள் கொண்ட ஒரு கோபுரமாகும். அவையும் விலை மதிப்பில்லா ரத்தினங்களை தங்கத்தினூடே இணைத்து செய்யப்பட்டது. இந்த விமானம் இருக்கும் இடமோ, ஓராயிரம் மறுபடியும் விலைமதிப்பிட இயலா நவரத்தின கற்களால் செய்யப்பட்ட தூண்களுள்ள மண்டபத்தில் இருத்தப்பட்டிருக்கிறது. இந்த மண்டபமோ, மஞ்சள் நிறத்திலான மூலிகைகள் வனமும், தென்றல் தவழும் கதம்ப வனத்தின் நடுவே. இது மணித்வீபமெனும் ரத்தின தீவின் நடுவே உள்ளது. இந்த தீவானது, பேரலை புரளும் அமிர்தக்கடலின் நடுவே உள்ளது.
இப்படியாக இந்த முதல் நான்கு வரியிலேயே ஸ்ரீ ஆதி சங்கரர், அலைபொங்கும் அமிர்தக்கடல், மணித்தீவு, அடர்ந்த கதம்ப வனம், தங்க வண்ண மூலிகைகள் நிறைந்த சமவெளி, ஸஹஸ்ர ஸ்தம்ப மண்டபம் கொண்ட பவனம், கோபுரம் மற்றும் விஷேஷ சிம்ஹாஸனம் கல்பித்து அம்பிகையை ஆவாஹிக்கவன்றோ தயாராகிவிட்டார்!
2 : एणाङ्कानलभानुमण्डललसच्छ्रीचक्रमध्ये सिथतां
बालार्कद्युतिभासुरां करतलैः पशांकुशौ बिभ्रतीम्।
चापं बाणमपि प्रसन्नवदनां कौसुम्भवस्त्रान्वितां
तां त्वां चन्द्रकलावतंसमकुटां चारुस्मितां भावये॥
ஏணாங்காநலபர்னுமண்டலலஸத்ஸ்ரீசக்ரமத்யேஸ்திதாம்
பாலோர்கத்யுதிபாஸுராமகரதலை:பாசாங்குசௌபிப்ரதீம் |
சாபம்பாணுமபிப்ரஸந்நவதநாம்கௌஸும்பவஸ்த்ரான்விதாம்
தாம்த்வாம்சந்த்ரகலாவதம்ஸமகுடாம்சாருஸ்மிதாம்பாவயே ||
அம்பிகையின் எந்த ஸ்தூல வடிவை ஸாதகன் த்யானம் செய்யவேண்டும் என்பதை இங்கு குறிப்பிடுகின்றார் சங்கரர். அம்பிகையானவள், அக்னி, சூர்யன் மற்றும் சந்திரன் முதலானவர்களுடைய ப்ரகாசத்திற்கும் அதிகமான ப்ரகாசத்துடன் ஸ்ரீ-சக்ர மத்தியில் கேந்த்ர பிந்துவில் ப்ரசன்ன முகத்துடனும், தனது நான்கு கைகளிலும் பாசம் அங்குஷம், சாபம் மற்றும் பாணம் போன்ற திவ்ய அஸ்த்திரங்களுடனும், சிவப்பு பட்டு உடை உடுத்தியும், செவ்வானக்கதிரோன் பொன்ற ஒளியுடன் கூடியும், ப்ரகாசமானவளாயும், மகுடத்தில் சந்திரக்கீற்று எனும் பிறையுடனும் அமர்ந்திருப்பதாக த்யானிக்க கூறுகிறார். இந்த வடிவு சௌந்தர்யலஹரியின் 7-பாடலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்த வடிவில் அம்பிகை காமராஜ பீஜமான “க்லீம்”கார ரூபிணியாக, காமகோடியான காமாட்சியாக சித்தரிக்கப்பட்டுள்ளாள். இவ்வடிவையே ஸர்வாபீஷ்ட ப்ரதாயினி ரூபம் என்றும் சர்வாஷா பரிபூரண சக்ரஸ்வாமினி என்றும் அழைப்பார்கள்
3 : ईशानादिपदं शिवैकफलकं रत्नासनं ते शुबं
पाद्यं कुङ्कुमचन्दनादिभरितैरर्घ्यं सरत्नाक्षतैः।
शुद्धैराचमनियकं तव जलैर्भक्त्या मया कल्पितं
कारुण्यामृतवारिधे तदखिलं संतुष्टये कल्पताम्॥
ஈசாநாதிபதம்சிவைகபலகம்ரத்னாஸனம்தேசுபம்
பாத்யம்குங்குமசந்தனாதிபரிதைரர்க்யம்ஸரத்னாக்ஷதை: |
சுத்தைராசமநீயகம்தவஜலைர்பக்த்யாமயாகல்பிதம்
காருண்யாம்ருதவாரிதேததகிலம்ஸந்துஷ்டயேகல்பதாம் ||
ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் வாக்பவகூடத்தின் மூன்றாம் எழுத்து – ஈ
அம்பிகையின் ஆராதனை க்ரமங்களில், ஷோடசோபசார பூஜை எனும் க்ரமத்தில் முதல் நான்கு உபசாரங்கள் இங்கு விளக்கப்பட்டுள்ளது. ஆதிபரையாம் அம்பிகையின் இருப்பிடமும், அம்பாளின் திரு உருவ ஸ்மரணையும், மனதில் நிலை நிருத்தலும் முதல் இரு பாக்களில் இருந்தவையாகும். ஸாதகன், கேந்த்ர பிந்துவில் அம்பிகையை ஆசனத்தில் அமர்த்தியபின், அம்பிகையை மேலும் மனதில் ஆராதிக்கிறான்.
சங்கரர் அம்பிகையை “காருண்யாம்ருதவரிதே” காருண்யக்கடலே என பொருள் கொள்ளலாமோ! இதை இருவிதமாக அணுகலாம். ஒன்று பகுதி 1ல் கண்டது போல், அமிர்தக்கடல், மற்றொன்று, “அ-ம்ருத” என்றால் அழிவில்லாத, அல்லது இறப்பற்ற, பேரழகுடைய, மற்றும், ஸாஸ்வத:, இந்த இரு வகை பொருளும், அம்பிகைக்கு பொருத்தமானதே. வரிதே எனில், கடலே. பக்தர்பால், அம்பிகையின் அளவற்ற காருண்யத்தை இது காட்டுகிறது. தவறல்லவே, அம்பிகையே “ஸ்ரீ மாதா” வாயிற்றே!.
“ஈஸானாதிபதம் சிவைகபலகம்” என்று அம்பிகையின் இருக்கையை வர்ணிக்கிறார் சங்கரர். அம்பாளுடைய ஆஸனத்தின் கால்களாக பிரமன், விஷ்ணு, ருத்திரன் மற்றும் மஹாதேவனிருக்க, இருக்கைப் பலகையாக சதாசிவனுமிருப்பர். இதை விரிவாக லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ரம் நாமம் 249-ல் “பஞ்சப்ரேதாஸனாஸீனா” ல் தெரிவிக்கிறது. ஐந்து ப்ரேதங்களாவன, முறையே பிரமன், விஷ்ணு, ருத்திரன், மஹாதேவன் மற்றும் சதாசிவன். பிரமன் உருவாக்குகிறான், விஷ்ணு காக்கிறான், ருத்ரன் அழிக்கிறான், மஹாதேவன் அழிந்ததை மறைக்கிறான் (திரோதானம்) சதாசிவனோ மறுபடியும் உயிர்ப்பிக்கிறான் (அனுக்ரஹம்). இவ்வைவரும், தத்தமது ஸக்திகளாலேயே, தத்தம் பணிகளை குறைவின்றி பணிக்கின்றனர். அவர் தம் ஸக்தியை (அ) லலிதாம்பிகையின் பலவேறு பரிணாமங்களை இழந்தாரெனில், சர-த்தன்மையிலிருந்து ஸ்திர-த்தன்மைக்கு உட்பட்டாரெனில், அவர்கள் சவ்மேயன்றோ! வாக்தேவிகள், வேறு எந்த பொருள் படவும் இயற்றவில்லை என்று எண்ணுகிறேன். “சௌந்தர்யலஹரி”யும் இதைக் குறிப்பிடுகிறது. “ஸ்லொகம் ஒன்றில்” சக்தியுடனிருக்கும் சிவனாலேயே சராசரங்களை படைக்க இயலுகிறது, சக்தியிழந்த சிவன் சவமே, ஏனெனில் அவனது அசைவுகள் அனைத்தும் நீயே, நின்னை ஸ்மரிக்கும் புண்யத்தை மறந்தால், சக்தியை இழந்து சவமாகிறான் என்கிறது, மற்றும், பிரமன், விஷ்ணு, சிவன் மற்றும் மற்றெல்லா தேவர்களாலும் நீயே போற்றப்படுபவளாகிராய், என்கிறது.
இப்படியாக அம்பிகைக்கு “சுபம்” எனும் ரத்தினங்களால் ஆக்கப்பட்ட ஆஸனம் அளிக்கப்படுகிறது. ஆஸனம் மட்டுமா “சுபம்”, அம்பிகையின் அடுத்துள்ள அத்தனையுமே சுபமேயன்றோ!
இப்படியாக ஸாதகன் அம்பிகைக்கு அளிக்கப்பட்ட ஆஸனத்தில், அம்பிகை எழில் கொஞ்ச, கம்பீரமாக வீற்றிருக்க, அம்பிகைக்கு இரண்டாவது உபசாரமாக அம்பிகையின் திருக்கமலங்களுக்கு “பாத்யம்” சமர்ப்பிக்கப்படுகிறது, பாத்யம் என்பது கால் அலம்புவதற்கன்று, ஸாதகன் மரியாதை நிமித்தமாக ரத்தினங்கள், சுப லக்ஷணமாக அக்ஷதை கலந்த நீரை அம்பிகையின் பாத அரவிந்தத்திற்கு அர்ப்பணிக்கிறான். அடுத்தது “அர்க்யம்” அம்பிகையின் திருக்கரங்களுக்கு, மஞ்சள், சந்தனத்துடன் நறுமணம் கமிழும் நீர் அளிக்கிறான். பின்னர், அம்பிகைக்கு சுத்த நீர் அருந்த கொடுக்கிறான். இவை அனைத்தும் பரம பக்தியுடனும் ஸ்ரத்தையுடனும், பணிவுடனும், பரிவுடனும், பாசத்துடனும், அம்பிகை திருப்திப்படுகிற வகையில் (ஸம்ஸ்துத) அமைகிறது. இக்காரியங்களை செய்வதினால், ஸாதகன் தன் சித்தத்தை தூயதாக்கிக்கொள்கிறான். முழு ஈடுபாடுடன் எண்ணத்தில் செயல் படுகிறவனுக்கு, இந்த வரிகளில் குறிப்பிட்ட சுவாசனைகளை வரிகளை உச்சரிக்கும்போதே அனுபவிக்க வைக்கும்.
4 : लक्ष्ये योगिजनस्यरक्षितजगज्जाले विशालेक्षणे
प्रालेयाम्बुपटीर कुङ्कुमलसत्कर्पूरमिश्रोदकैः।
गोक्षीरैरपि नारिकेलसलिलैः शुद्धोदकैर्मन्त्रितैः
स्नानं देवि धिया मयैतदखिलं कल्पताम्॥
லக்ஷ்யேயோகிஜநஸ்யரக்ஷிதஜகத்ஜாலேவிசாலேக்ஷணே
ப்ராலேயாம்புபடீரகுங்குமலஸத்கர்பூரமிச்ரோதகை: |
கோக்ஷீரைரபிநாலிகேரஸலிலை:சுத்தோதகைர்மந்த்ரிதை:
ஸ்நானம்தேவிதியாமயை ததகிலம்ஸந்துஷ்டயேகல்பதாம் ||
ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் வாக்பவகூடத்தின் நான்காம் எழுத்து – ல
அம்பிகையே, அகில லோக ரக்ஷாகரீ, யோகிகள் அடைய விழயும் பரமானந்தியே, ஜெகஜ்ஜாலே, இந்த எழியோன், உனது ஸ்னானத்திற்காக மனதால் அர்ப்பணிக்கும் சுகந்த் பன்னீர், சந்தணம், மஞ்சள், சுத்தமான கற்பூரம் கலந்த நீர், மற்றும் கோவின் அமிர்தமாம் சுத்தமான பால், இளநீர் மற்றும் வேதமந்திரங்களால் புனிதப்படுத்தப்பட்ட சுத்த ஜலம் ஆகியவற்றை அங்கீகரித்து ஏற்றருள்வாயாக! இவைகளினால் உனது மனம் குளிரட்டும்.
அம்பிகையின் இருப்பிடமான மணித்வீபத்தையும், ஆஸனத்தின் இருப்பிடமாக கூறப்பட்டுள்ள ஏழு நிலை கோபுர முள்ள ஆயிரங்கால் பவனமும், (இந்த ஏழு நிலை என்பதை மூலாதார சக்ரம் முதல் ஸஹஸ்ரார சக்ரம் வரையில் என்றும் பொருள் கொள்ளலாம்). சிம்ஹ ஆஸனமும், பாத்யம் முதல் ஆசமனம் வரை அளித்த பின் இப்பொழுது அம்பிகைக்கு, ஸ்னானம் அர்ப்பணிக்கப்படுகிறது. சங்கரர், ஆதிபரையான அம்பிகையே, யோகிகள் அடையத்துடிக்கும் பதகமலம் என்கிறார் ஏனென்றால், அம்பிகையால் மட்டுமே ஸாதகனை சிவனிடம் சேர்க்கமுடியும், லலிதா ரஹஸ்ய சஸஹஸ்ரத்தில் 727-வது நாமம் “சிவ ஞானப்ரதாயினி” என்பதாகும். ஆகையால் அம்பிகையால் மட்டுமே சிவ ஞானத்தை அருளமுடியும். அம்பிகையின் பரிபூரண அருட்கடாட்சம் கிட்டிய பின்னரே, சிவனின் கடாட்சம் பெறமுடியும். சிவனால் மட்டுமே ஜீவனை ஜீவன் முக்தனாக்கமுடியும், அல்லாது சிவனுடன் இணைய முடியும். ஆகையாலே சங்கரர், அம்பாளை “யோகிஜன லக்ஷ்யே” என்கிறார்
இந்த சுவாசனை திரவியங்களானது மனதால் கல்பிக்கப்படுவதால், அவை மிகுந்த, உயர்ந்த, தரத்தோடு கூடியவைகளாகின்றன. பாலும், இளநீரும், குளிர்ச்சி உண்டு செய்பவை, சந்தணமும், பன்னீரும் கூட. இதன் காரணம் யாதெனில், சிவெயெனப்படும் சிவ பத்னியானவள், எப்பொழுதும் பல கோடி சூரியனுக்கு இணையான ப்ரகாசத்தோடு சிவனோடு இணைந்திருக்கிறாள், (காலாக்னி ருத்ராய எனும் ஸ்ரீ ருத்ரத்தை கவனிக்க) அப்பிரகாசத்திற்கு உண்டான சூடும் இருக்குமல்லவா!, ஸாதகனால் அவ்வளவு வெப்பமான அம்பிகையை நெருங்க முடியுமா? ஆகையினாலேயே அம்பிகையை குளிர்விக்கிறான். முடிவாக அம்பிகைக்கு வேத மந்திரங்களால் புனிதப்படுத்தப்பட்ட சுத்த ஜலத்தால் அபிஷேகிக்கிறான். வேத மந்திரங்களால் ஏன் நீர் புனிதப்படுத்தல் வேண்டும்? வேதமே அம்பிகையிடமிருந்தே வந்தவை தானே! (லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ரம் 338) என்றால், இங்கு அளிக்கப்படும் உபசாரங்கள், ஆலயங்களில், கோவில்களில் நடப்பதைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது, அதுபோலவே ஸாதகனும் அம்பிகையை ஆராதிக்க விழைகிறான். இது ஸாதகனின் மன மாற்றத்தையே குறிக்கிறது. ஸாதகன், சிந்தையில் அம்பிகையை இருத்தி சிந்தையாலே வழிபடத் துவங்கிவிட்டான் அன்றோ! முக்திக்கு மார்கம் கண்டு கொண்டான் அன்றோ!
5 : ह्रींकाराङ्कितमन्त्रलक्षिततनो हेमाचलात्संचितैः
रत्नौरुज्ज्वलमुत्तरीयसहितं कौसुम्भवर्णांशुकम्।
मुक्तासंततियज्ञसूत्रममलं सौवर्णतन्तूद्भवं
दत्तं देवि धिया मयैतदखिलं संतुष्टये कल्पताम्॥
ஹ்ரீங்காராங்கிதமந்த்ரலக்ஷிததநோஹேமாசலாத்ஸஞ்சிதை:
ரத்னைருஜ்வலமுத்தரீயஸஹிதம்கௌஸும்பவர்ணாம்சுகம் |
முக்தாஸந்ததியஜ்ஞஸ¨த்ரமமலம்ஸெளவர்ணதந்தூத்பவம்
தத்தம்தேவிதியாமயைத்தகிலம்ஸந்துஷ்டயேகல்பதாம் ||
ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் வாக்பவகூடத்தின் ஐந்தாம் எழுத்து – ஹ்ரீம்
ஹ்ரீங்கார மந்திரத்தையே உடலாகக் கொண்டவளே! பார்வதியே! மணிக்கற்களால் பிரகாசிக்கும் உத்தரீயத்துடன் செந்நிற ஆடையும் பொற்தந்தியில் கோக்கப்பட்ட முத்துக்களால் ஆகிய பூணூலையும் உனக்கு சமர்ப்பிப்பதாகக் கல்பிக்கிறேன்.
ஸாதகன், தனக்காக இங்கு எதையும் யாசிப்பதில்லை, முக்தியைக்கூட, எல்லாவற்றையும் அம்பிகையை சந்தோஷப்படுத்தவே அர்ப்பணிக்கிறான். அம்பிகையின் மேல் அளவில்லா பற்றினாலே இந்த உபசாரங்களை செய்கிறான். அதுவும் அந்த ஸாதகன் இருந்த இடத்திலேயே, மானசீகமாக மேரு பர்வதம் சென்று, விலைமதிப்பற்ற முத்து ரத்தினங்களையும், வேறு வேறு இடங்களில் சென்று பல பூஜைப்பொருட்களை சேகரிக்காமல், மனதிலேயே அவற்றையெல்லாம் உருவாக்கி அம்பிகைக்கு அர்ப்பணிக்கிறான். இதனால் அந்த ஸாதகனுக்கு, அம்பிகையிடத்தில் மனம் ஒன்றிட / சிலவிட அதிக நேரம் கிடைக்கிறது அல்லவா?
ஒருவழியாக அம்பிகைக்கு ரத்தினங்களால் இழையப்பட்ட உத்தமமான செம்பட்டு ஆடையை ஸ்ரீ ஆதிசங்கரிரின் துணையோடு உடுத்திவிட்டோம்.
சுத்தமான மனதும், உண்மையான பக்தியும் மனதிலிருந்தால், அன்னை அங்கிருப்பாள் அன்றோ!
6 : हम्सैरप्यतिलोभनीयगमने हारावलीमुज्ज्वलां
हिन्दोलद्युतिहीरपुरिततरे हेमाङ्गदे कङ्कणे।
मञ्चीरौ मणिकुण्डले मकुटमप्यर्धेन्दुचूडामणिं
नासामोक्तिकमङ्गुलीयकटकौ काञ्चीमपि स्वीकुरु॥
ஹம்ஸைரப்யதிலோபநீயகமநேஹாராவலீமுஜ்வலாம்
ஹிந்தோலத்யுதிஹீரபூரிததரேஹேமாங்கதேகங்கணே ||
மஞ்ஜீரௌமணிகுண்டலேமகுடமப்யர்தேந்துசூடாமணிம்
நாஸாமெனக்திகம்அங்குலீயகடகௌகாஞ்சீமபிஸ்வீகுரு ||
ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் மத்யகூடத்தின் முதல் எழுத்து – ஹ
இந்தப் பாடலில் வெவ்வேறு விதமான ஆபரணங்களை அம்பிகைக்கு அணிவித்தலைக் குறிப்பிடுகின்றது. கடகம், வாகுவளையம், கங்கணம், பாதகிங்கிணி, மணிகுண்டலம், மகுடம், முத்து மூக்குத்தி – பில்லாக்கு, பொன் மோதிரம், சூடாமணி, இடையணி முதலியவற்றை நான் உனக்கு (மானசீகமாக) அணிவிப்பதை நீ ஏற்றுக்கொள்வாயாக.
இந்த பாடலில் ஸாதகன், அழகு மிளிரப் பட்டுடுத்தி அன்னம் நாண நடைபயின்று ஆஸனத்தில் அமர்ந்த அன்னைக்கு, ஆபரணங்கள் சேர்த்து அழகு பார்க்கிறான். பலவிதமான ஹாரங்கள், முத்து, ஸ்வர்ணம், ரத்தினம் சேர்த்திழைத்து தயாரித்ததை அம்பிகைக்கு அணிவித்து அழகு பார்க்கிறான். இது ஸாதகனுக்கு மகிழ்வை தரவில்லை, ஆகையால் அம்பிகையின் கைகளுக்கு கங்கணம் அணிவித்து மகிழ்கிறான். நவ ரத்தினங்களாலும், தங்கத்தாலும் செய்த வளையல்களை அம்பிகைக்கு அணிவித்து அழகு பார்க்கிறான். காதிற்க்கு மணிகுண்டலங்களும், சிரசில் கிரீடமும், சினந்தாமணி ரத்தினத்தினாலும், அட்டமி யன்று தோன்றும் பிறை போன்ற நெற்றிச்சூடியையும் அணிவிக்கிறான். சம்பக புஷ்பத்தைப்போன்று பேரழகுடைய பெருமாட்டிக்கு, மூக்குத்தியும் பில்லாக்கும் எழில் கொஞ்சும் ரத்தினத்தில் செய்திட்டு சூடி மகிழ்கிறான்.
இந்த உபசாரங்களை அம்பிகைக்கு மனதளவில் ஈடுபாடோடு, பக்தியோடு செய்யும் ஸாதகன், அம்பிகையை நேரில் கண்ட அனுபவத்துடன் ஆனந்த கண்ணீர் மல்க அம்பிகையை துதிப்பதை யாம் உணர முடிகிறது.
7 : सर्वाङ्गे घनसारकुङ्कुमघनश्रीगन्धपङ्काङ्कितं
कस्तूर्रितिलकं च फालफलके गोरोचनापत्रकम्।
गण्डादर्शनमण्डले नयनयोः दिव्याञ्चनं तेऽञ्चितं
कण्ठाब्जे मृगनाभिपङ्कममलं त्वत्प्रीतये कल्पताम्॥
ஸர்வாங்கேகனஸாரகுங்குமகனஸ்ரீகந்தபங்காங்கதிதம்
கஸ்தூரீதிலகம்சபாலபலகேகோரோசநாபத்ரகம்மி |
கண்டாகர்சனமண்டலேநயநயோர்த்வ்யாஞ்ஜநம்தேsரஞ்சிதம்
கண்டாப்ஜேம்ருகநாபிபங்கம்அமலம்த்வத்ப்ரீதயேகல்பதாம் ||
ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் காமராஜ கூடம் (எ) மத்யகூடத்தின் இரண்டாம் எழுத்து – ஸ
அம்பிகே! குங்குமப்பூ, நல்வாசனைப் பொருள்கள் சந்தனம் முதலியவற்றுடன் உன் உடலுக்குப் பூச்சாக அணிவிக்கிறேன். கஸ்தூரி, கோரோசனை ஆகியவற்றால் உனது நெற்றியில் திலகம் இடுகிறேன். முகம் பார்க்கும் கண்ணாடியுடன் உனது கண்களில் திவ்வியமான அஞ்சன மையிடுகிறேன். உனது கழுத்துக்குக் கஸ்தூரி அணிவிப்பதாகக் கல்பிக்கிறேன்.
அம்பிகையின் ஸ்னான உபசாரமும், உடையுடுத்தும் வைபவமும், நகை பூணும் வைபவமுமானபின், அம்பிகையை மேலும் அழகு செய்ய, குங்குமப்பூ கலந்த சுத்த சந்தணத்தால் தயாரிக்கப்பட்ட லேபம், உடல் பூச்சாக அணிவிக்கிறேன் அம்மா!, கஸ்தூரி, கோரோஜனம் இழைத்து தாயே உனது அகலமான நெற்றியில் திலகமிடுகிறேன், உன் கண்களுக்கு திவ்யமான அஞ்சன மை தீட்டி மகிழ்கிறேன் தாயே. உனது முளரிபோன்ற திருக்கழுத்திற்கு, கஸ்தூரி லேபமிட்டு அழகுக்கு அழகு சேர்க்கிறேன் அம்மா!
இதில் ஒரு விஷேஷம் என்னவெனில், இவ்வகை அலங்காரங்களை செய்யும்பொழுது, இறைவியும், சாதகனும் மட்டுமே தனித்துள்ளனர், சாதகன் தன் மனதிற்கு பிடித்தவாரு இறைவியை அழகூட்டி ஆராதிக்கிறான். இங்கு சங்கரர் அம்பிகையின் நெற்றியை ஒரு பலகைபோல என்றே குறிப்பிடுவதாக உள்ளது, ஆயின் சங்கரரின் சௌந்தர்யலஹரி(46)யில், அட்டமி சந்திர வடிவிலுள்ளது என்றும், அதேபோல் ரஹஸ்ய ஸஹஸ்ரம்(15)லும் குறிப்பிட்டிருப்பதை கவனித்தால், சந்தத்திற்காக சிறு பிழை சேர்த்தாரோ அல்லது குறிப்பு எடுத்தவர் பிழை சேர்த்தாரோ என என்ற கேள்வி எழுகிறது.
இதனோடு இன்னொரு விஷயமும் கூட, ஏதோ, பக்தனாகிய நாம், அம்பிகையை இப்படி ஒவ்வொரு விதமாக அழகு பார்த்து மகிழ, இறைவி அம்பிகையின் இறைவனான காமேஷ்வரன், தானும் குறுஞ்சிரிப்புடன் இதையெல்லாம் அம்பிகையுடன் சேர்ந்தே அனுபவிக்கிறான் அன்றோ! ஏனெனில், அம்பிகையின் வல பாதி காமேஸ்வரன் அன்றோ! இப்படியாக காமேஷ்வரியை அழகு பார்த்து, ஆராதித்து, அறியாமலே காமேஷ்வரனையும் ஒருசேர ஆராதிக்கிறோம்! இதை விட, பெரும் பாக்கியம் மற்றொன்று ஒன்று உண்டோ? இப்படியாக நம் எல்லோருக்கும் அய்யனையும், அம்பிகையும் ஒரே சமயத்தில் ஆராதிக்க ஆதி சங்கரர் வழி வகுத்திட்டாரே, அவருடன் இணைந்து அம்பிகையை ஆராதிப்பதின் மூலம், சங்கரருக்கு நன்றி சொல்வோமா?
8 : कल्हारोत्पलमल्लिकामरुवकैः सौवर्णपङ्केरुहैः
जातीचम्पकमालतीवकुलकैर्मन्दारकुन्दादिभिः।
केतक्या करवीरकैर्बहुविधैः कऌप्ताः स्रजो मालिकाः
संकल्पेन समर्पयामि वरदे संतुष्टये गृह्यताम्॥
கல்ஹாரோத்பலமல்லிகாமருவகை:ஸெளவர்ணபங்கேருனஹ:
ஜாதீசம்பகமாலதீவகுலகைர்மந்தாரகுந்தாதிபி: |
கேதக்யாதரவீரகை:பகுவிதா:க்லுப்தா:ஸ்ரஜேமாலிகா:
ஸங்கல்பேநஸமர்பயாமிவரதேஸந்துஷ்டயேக்ருஹ்யதாம்மிமி ||
ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் காமராஜ கூடம் (எ) மத்யகூடத்தின் மூன்றாம் எழுத்து – க
பலவிதமான மலர்களை சூட்டி அம்பிகையை மகிழ்விப்பதை இப்பாடல் குறிப்பிடுகிறது. செங்கழுநீர், நீலம், மல்லிகை, மருக்கொழுந்து, பொற்றாமரை, ஜாதி மல்லிகை, முல்லை, மகிழம்பூ, மந்தாரை போன்ற மலர்களை சங்கல்பித்து அம்பிகே, உனக்கு மாலைகளாகவும், சரமாகவும், உதிரியாகவும் சமர்ப்பிக்கிறேன். மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வாயாக.
ஸாதகர், அம்பிகைக்கு, மாலைகள் மட்டும் அர்ப்பணிக்கவில்லை, அதோடு கூட சரமாக கோர்த்து முடியில் சூடவும் அளிக்கிறார். முடியில் சூடும் புஷ்பமானது, சிரசின் பின்புறமும், முதுகுத்தண்டின் மேலுமாக அமைந்துள்ள சக்கரத்தை பாதுகாக்கிறது. இந்த சக்கரம் அமைந்துள்ள இடத்தை ஆங்கிலத்தில் MEDULLA OBLANGETA என அழைக்கின்றனர். இதோடு அம்பிகையின் அலங்காரம் முடிகிறது.
பூவுலக மலர்களல்லாது, தேவலோகத்திற்கே உரிய தெய்வீக மலர்களால் அம்மையை, ஆதி பரையை அலங்கரிக்கும் சாதகன், பொருள்களால் ஆன மாயையை விட்டு, அருள்களால் ஆன அம்பிகையின் சாக்ஷாத்காரத்திற்கு தன்னை தயார் செய்து கொள்கிறான். அது காண், அம்பிகையின் தர்ஸன பாக்யமும், மோக்ஷமும் அடைய விழைகிறான்.
9 : हन्तारं मदनस्य नन्दयसि यैरङ्गैरनङ्गोज्ज्वलैः
यैर्भृङ्गावलिनीलकुन्तलभरैर्बध्नासि तस्यशयम्।
तानीमानि तवाम्ब कोमलतराण्यामोदलीलागृहाण्यामोदाय
दशाङ्गगुग्गुलुघृतैर्धूपैरहं धूपये॥
ஹந்தாரம்மதநஸ்யநந்தயஸியைரங்கைரநங்கோஜ்வலை:
பைர்ப்ருங்காவலிநீலகுந்தலபரை:பத்நாஸிதஸ்யாசம் |
தாநீமாநிதவாம்பகோமலதராண்யாமோதலீலாக்ருஹா-
ண்யாமோதாயதசாங்ககுக்குலுக்ருதைர்துபைரஹம்தூபயேமிமி ||
ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் காமராஜ கூடம் (எ) மத்யகூடத்தின் மூன்றாம் எழுத்து – ஹ
“அம்பிகே! பலவகையான வாசனைப்பொருள்கள், மருத்துவ மூலிகைப் பொருள்கள், தசாங்கம், குங்கிலியம் போன்றவற்றைக் கலந்து, மன்மதனை எரித்த சிவனும் மோகிக்கும் உன் அங்கங்களுக்கும் அவனைக் கவரும் கூந்தலுக்கும் தூபம் காட்டுகிறேன்.”
ஒரு சமயம், காமதேவன் எனப்படும் மன்மதன், பரசிவனார், பார்வதியை மோஹிக்க சிவன்மேல் மலர்க்கணை தொடுக்க, சிவன் சினக்க, பஸ்மமான காமதேவனை, உயிர்ப்பிக்க காமதேவனின் மனைவி ரதிதேவி அம்பிகையை சரணடைய, அம்பிகையின் அருளால் உயிர்ப்பெற, தேகமில்லாமல், காமன் உருப்பெற, காரணமாயிருந்ததாலோ என்னமோ, காமதேவன் அம்பிகைக்கு யாரும் அளவிடமுடியாத அழகை வாரி வழங்கினான் என்றால் மிகையாகாது, இயற்கையிலேயே அம்பாளுக்கு, ப்ரக்ருதி (இயற்கை) என்ற நாமமும் உண்டல்லவா!, இயற்கையோடு அழகு சேரும்பொழுது, அழகு பேரழகாகவன்றோ பரிமணிக்கிறது!.
ஸாதகன் சிவனையும், சிவனோடிணைந்த பார்வதியையும் சிந்தையில் நிருத்துகின்றான். இப்பொழுது அந்த ஸாதகனுக்கு, ‘அம்பிகையும், ஐய்யனும் ஒன்றே’ என்று புரிய ஆரம்பிக்கிறது. ‘ஒன்றை விட்டு இன்னொன்று தனியாக இயங்குவதில்லை’ என்பதும் நன்கு விளங்குகிறது. இந்த உயரிய நிலையில், அதாவது ஸஹஸ்ரார சக்கிர பிந்துவில் சிவ-சங்கரி மைதுனம் நடக்கிறது. ‘படைக்கும் தொழில்’ துவங்குகிறது.
அம்பிகையின் ஆராதனையில் தூபமிடல் ஒரு முக்கியமான சடங்காகும். தஸாங்கம் என்பது பத்து விதமான இயற்கை பொருள்கள் கொண்டு தயாரிக்கப்படும் சுவாஸனை திரவ்யமாகும். இந்த பத்து விதமான மூலிகை மற்றும் மரப்பட்டைகள் நன்கு பொடிக்கப்பட்டு, தணலிலிடும்போது, நறுமணமுள்ள புகை வெளிப்படும். இந்த நறுமணப்புகையால், சுற்றுப்புறம் சுத்தியாகும், அதோடு நமது சிந்தையில் உள்ள கெட்ட சிந்தனைகள் நெருப்பு தணலில் எரிந்துபோய் நற்ச்சிந்தனையே மிஞ்சும். பகவத்கீதையில் கிருஷ்ணர் சொன்னதாக ஒரு ஸ்லோகம் (|||.37), ‘ரஜோகுணம் எனும், வேட்கை மற்றும், கோபம் இதனுடயே எரிந்து சாம்பலாகட்டும்’ என்று.
ஸாதகன் இப்படியாக தனது மனதையும் தூய்மைப்படுத்திக்கொள்கிறான். தூய்மையுள்ள மனதில் அம்பிகை எப்பொழுதும் இருப்பாளன்றோ!
அற்புதமான, அழகுடன், ஆதிசங்கரர், அம்பிகையின் உடலுக்கும், நீளமான, பரசிவன் மோஹிக்கும் கூந்தலுக்கும் தூபமிட்டதை அவருடனிருந்து கண்டு களிப்புற்றோம்.
10 : लक्ष्मीमुज्ज्वलयामि रत्ननिवहोद्भास्वत्तरे मन्दिरे
मालरूपविलम्बितैर्मणिमयस्तम्भेषु संभावितैः।
चित्रैर्हाटकपुत्रिकाकरधृतैर्गव्यैर्घृतैर्वधितै-
-र्दिव्यैर्दीपगणैर्धिया गिरिसुते संतुष्टये कल्पताम्॥
லக்ஷ்மீமுஜ்வலயாமிரத்னநிவஹோத்பாஸ்வந்தரேமந்திரே
மாலாரூபவிலம்பிதைர்மணிமயஸ்தம்பேஷ§ ஸம்பாவிதை: |
சித்ரைர்ஹாடகபுத்ரிகாகரத்ருதைர்கவ்யைர்க்ருதை: மிவர்திதை:
திவ்யைர்தீபகணைர்தியாகிரிஸுதேஸந்துஷ்டயேகல்பதாம் ||
ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் காமராஜ கூடம் (எ) மத்யகூடத்தின் ஐந்தாம் எழுத்து – ல
அம்பிகையே! நானாவித ரத்தினங்களால் ஆக்கப்பட்ட திவ்ய பவனத்தில், நானாவித ரத்தினங்களால் இழைக்கப்பட்ட தூண்களில் மாலைகளைப்போல், தீபங்கள் எரிந்துகொண்டிருக்கின்றன. தங்கத்தினாலான பெண் பதுமைகள், தீபத்தை இரு கைகளாலும் ஏந்தி உன் பவனத்தை ப்ரகாசிக்க செய்துகொண்டிருக்கின்றனர். இந்த தீபங்களனைத்தையும் பசு நெய் ஊற்றி, தீபமேற்றுகிறேன் தாயே பர்வத புத்ரீ. இவையெல்லாம் உனக்கு சந்துஷ்டியை நல்குவதாக, ஏற்றுக்கொள் அம்பிகையே.
ஸாதகன், தனது மல்ங்களான கேட்கை (LUST), கோபம் போன்ற “ரஜோகுணத்தை” நெருப்பிலிட்டு பொசுக்கி, சுத்தமான, நறுமணமுள்ள ஆத்மனை அம்பிகைக்கு தூட்பமாக அர்ப்பித்ததை அனுபவித்தோமல்லவா! இங்கு ஸாதகன், அம்பிகைக்கு, பசுவின் நெய்யால் ஆன தீபங்களை அற்ப்பிக்கிறான். பசுவின் (கோ) கிடைக்கும் எல்லாப்பொருளுமே பவித்ரமாக கருதப்படுகிறது, மந்திர உச்சாடனத்தோடு, பசுவின் பால், தயிர், நெய், சாணம், மூத்திரம் கலந்தது பன்சகவ்யமாகும். இது, சேவித்தவிரின் பாவத்தையெல்லாம் பருகியவுடன் நிவர்த்திக்கிறது என்கின்றன வேதங்கள்.
அம்பிகை ஸ்ரீ மஹா திரிபுரசுந்தரியின் இருப்பிடத்தைப் பற்றி “பாகம் 1”ல் கண்டிருந்தோம். அந்த மஹா மண்டபத்தில் எவ்வளவு தீபமேற்றினாலும் ஒரு குறிப்பிட்ட தூர அளவே வெளிச்சம் இருக்கும், ஆயின், அம்பிகையின் பவனமோ ரத்தினங்களால் ஆனதன்றோ!, ஆகையால், ஒளிரும் விளக்குகளின் ஒளியை ரத்தினங்களும் பிரதிபலிக்கின்றன. ஆதலால், மண்டபமே ஒளிமயமாக இருக்கிறது.
முன்னமே பார்த்தபடி மண்டபம், தீப தோரணங்களாலும், தீபமேந்திய தங்க பதுமைகளாலும் ஒளியூட்டப்படுகிறது. அவ்வொளியாலும், அவ்வொளியின் பிரதிபலிப்பாலும் அம்பிகையையும், அம்பிகையின் மண்டபத்தையும் ஒளி வெள்ளத்தில் ஆழ்த்துகிறது. ஆயினும், ஸாதகன், ஒன்றை தெரிந்துகொள்கிறான். அது என்னவென்றால், ஒளியேயான அம்பிகை இல்லேல் ஒளியேது? என்று. இதையே நாம், “ப்ரகாஸ விமர்ஷ மஹாமாயா ஸ்வரூபிணி” என்கிறோம்.
இது கதா உபனிஷத்தில் விரிவாக உறைக்கப்பட்டுள்ளது. இதில் (II.ii.15) ப்ரம்மத்தின் முன் சூரிய, சந்திர, நக்ஷத்திர, மின்னல் உள்பட எவரும் ஜ்வலிப்பதில்லை, ப்ரகாசிப்பதில்லை, எல்லாம் ப்ரம்மத்தின், ப்ரம்ம தேஜஸான ஒளியின் பிரதிபலிப்பே என்று.
இந்த வெளிச்சமாவது, ஸாதகனின், அகக்கண்ணை திறக்கிறது. இங்கு, ஸாதகனுக்கு, அம்பிகையை, அம்பிகையின் ரூபத்தை, மனதில் ஸ்மரித்தாலே போதுமானது, அம்பிகையை தவமிருந்து அடைய வேண்டியதில்லை என்று. ஆம், ஸ்மரணையிலே சித்திக்கும் தாயிடம் தவமிருத்தல் வேண்டுமோ! இத்தருணம், அம்பிகை, ஸாதகனின் உள்ளத்தில் ஒளிர்ந்து, ஸாதகனை அளவிலா பேரின்பத்தில் ஆழ்த்துகிறாள்.
11 : ह्रींकारेश्वरि तप्तहाटककृतैः स्थालीसहस्रैर्भृतं
दिव्यान्नं घृतसूपशाकभरितं चित्रान्नभेदं तथा।
दुग्धान्नं मधुशर्करादधियुतं माणिक्यपात्रे स्थितं
माषापूपसहस्रं अम्ब सफलं नैवेध्यमावेदये॥
ஹ்ரீங்காரேச்வரிதப்தஹாடகக்ருதை:ஸ்தாலீஸஹஸ்ரைர்ப்ருதம்,
திவ்யான்னம்க்ருதஸ¨பசாகபரிதம்சித்ரான்னபேதம்ததா |
துக்தான்னம்மதுசர்கராததியுதம்மாணிக்யயாத்ரேஸ்திதம்
மாஷாபூபஸஹஸ்ரமம்பஸகலம்நைவேத்யமாவேதயே ||
ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் காமராஜ கூடம் (எ) மத்யகூடத்தின் கடைசி எழுத்து – ஹ்ரீம்
ஹ்ரீங்காரேஸ்வரியே, தாயே பல பொற்பாத்திரங்களில் பசுவின் நெய், பருப்பு, கறிவகைகள் கலந்த திவ்யான்னம், சித்ரான்னங்கள், தேன், பாற்சோறு, பலவிதமான பழங்கள், வடைகள் முதலியவற்றை மாணிக்கப்பாத்திரங்களில் நைவேத்தியமாக சமர்ப்பிக்கின்றேன்.
‘ஓம்’ என்ற ப்ரணவம் எப்படி சக்திவாய்ந்ததோ, அதேபோல் சக்தி ப்ரணவம் எனும் ‘ஹ்ரீம்’ அற்புத சக்திவாய்ந்த பீஜ மந்திரமாகும். இதை புவனேஸ்வரி பீஜம் என்றும், மாயா பீஜம் என்றும் குறிப்பிடப்படுகிறது.
லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ரத்தில் 301வது நாமம் ஹ்ரீங்காரீ என்பதாகும். ஆகையினாலேயே, பன்சதஸியின் ஒவ்வொரு கூடத்தின் முடிவிலும் ‘ஹ்ரீம்’ என்ற சக்தி ப்ரணவம் உள்ளது. ஹ்ரீம் என்பது ஹ + ர + ஈ + ம மற்றும் பிந்து எனப்படும் புள்ளியால் ஆனது ஆகும். மந்திரங்களில் பிந்து எனும் புள்ளியானது மிகவும் சக்திவாய்ந்தது ஆகும். உதாரணத்திற்கு, ‘ஹ’ (ह) என்பது எழுத்தாகவும், ‘ஹம்’ (हं) என்பது மந்திரமாகிறது. இந்த ‘ஹம்’ என்பது ஹ் என்பது ஷ்ருஷ்டியையும் அ என்பது ஸ்திதியாகவும், ம் என்பது லயத்தை குறிப்பதாகவும் அமைகிறது. இந்த மந்திரம் பற்றி விரிவாக இன்னொரு பதிவில் பார்ப்போமாக. சில ஏடுகளில் இதையே சிவ-சக்தி பீஜம் என்றும் குறிப்பிடப்படுகிறது.
ஸாதகன், பொற்கிண்ணங்களில் நிவேதன பொருட்கள் அர்ப்பணிக்கப்படுகிறது. ஏன் என்றால் அவளே பொன்னிர மேனியள் அன்றோ, (ரஹஸ்ய ஸஹஸ்ர நாம த்யான ஸ்லோகம் அம்பிகையை ‘ஹேமாபாம்’ எனில் பொன்னிறமேனியள் என்றே குறிக்கிறது) பொதுவாகவே இறைவன் – இறைவியருக்கு அர்ப்பணிக்கப்படும் பொருள்கள் அனைத்துமே பொன்னால் ஆன பாத்திரங்களிலேயே அர்ப்பணிக்கப்படுகின்றன. இதன் காரணம் இரண்டு எனலாம், ஒன்று தங்கமானது மிக சுத்தமானது, எந்த பொருளும் சுலபமாக பொன்னோடு ரஸாயனக்கூட்டு ஏற்ப்படுத்திக்கொள்வதில்லை, ஆதலின், களிப்படிக்காது. இரண்டாவது அது ஒரு உயர் ரக தாதுவாகும்.
அம்பிகை, பாயஸ அன்னத்தை விரும்புபவள், அதுகாண், அரிசி, பால், சர்க்கரை கலந்து, குங்கமப்பூ, ஏலம், கற்பூரம் சேர்த்து பாயஸம் செய்து அம்பிகைக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இதை அர்ப்பணிக்கும்போது சங்கரர், மாணிக்கத்திலான பாத்திரத்தில் அர்ப்பணிப்பாதக கூறுகிறார். (ரஹஸ்ய ஸஹஸ்ர நாம த்யான ஸ்லோகம் அம்பிகையை ‘மாணிக்ய மௌளி ஸ்புரத்’ எனில் மாணிக்கத்திலான மகுடம் சூடியவள் என்றே குறிக்கிறது)
12 : सच्छायैः वरकेतकीदलरुचाताम्बूलवल्लीदलैः
पूगैः भूरिगुणैः सुगन्धिमधुरैः कर्पूरखण्डोज्ज्वलैः।
मुक्ताचूर्न्णविराजितैः बहुविधैर्वक्त्रांबुजामोदनैः
पूर्णा रत्नकलाचिका तव मुदे न्यस्ता पुरस्तादुमे॥
ஸச்சாயைர்வரகேதகீதலருசாதாம்பூலவல்லீதலை:
பூகைர்பூரிகுணை:ஸுகந்திமதுரை:கர்பூரகண்டோஜ்வலை: |
முக்தாசூர்ணவிராஜிதைர்பகுவிதைர்வக்த்ராம்புஜாமோதனை:
பூரணாரத்னகலாசிகாதவமுதேந்யஸ்தாபுரஸ்தாதுமே ||
ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் சக்தி கூடம் (எ) கடைசி வரியின் முதல் எழுத்து – ஸ
அம்பிகே! வெற்றிலை, வாசனைப் பாக்குத்தூள், பச்சைக்கற்பூரம், முத்திலிருந்து தயாரிக்கப்பட்ட சுண்ணம் முதலியவை கொண்ட ரத்தினத்தால் ஆன வெற்றிலைப் பெட்டியை நின் மனம் மகிழச் சமர்ப்பிக்கின்றேன்.
“பந்தன் இலை” அல்லது “கேதகீ” ஒரு சிரிய வகை இலையாகும், அது அன்னாசிப்பழச் செடி அளவே உயரம் வளரும். தாழம்பூ போல் உள்ளே இலைகளும், வெளியிலுள்ள இலையானது கடும் பச்சை நிறத்திலுமிருக்கும். நறுமணம் கோண்ட இச்செடியின் நறுமணம் அம்பிகைக்கு மிக பிரியமானதாகும். இந்த செடியின் நறுமணத்தால் சிவ பூஷணமாம் நாகங்கள் (ரஜ நாகம் கூட) கவர்ந்திழுக்கப்பட்டு இச்செடியின் அடியில் தங்கும். அதனாலோ என்னவோ அம்பிகைக்கும் இந்த நறுமணம் மிகவும் பிரியமானதாகும். உமையும், உடயானுக்கு ஆபூஷணமன்றோ, இடபாகத்தை அலங்கரிப்பவள் ஆயிற்றே! இந்த இலையின் வர்ணத்திலுள்ள வெற்றிலையும், கர்பூரவீடிகா எனும் சுவாசனை சூரணம் (பொடி) சேர்த்த, தாம்பூலத்தை அம்பிகைக்கு சங்கரர் அளிக்கிறார். கர்பூரவீடிகா சூரணமானது குங்குமப்பூ, ஏலம், லவங்கம், பச்சைகற்பூரம், கஸ்தூரி, ஜாதிக்காய், ஜாதிபத்திரி முதலியவைகளை பொடித்து சர்க்கரை சேர்த்து செய்யப்படும் ஒரு நறுமணப்பொடியாகும். அம்பிகை இதை மெல்லும்போது, அதன் நறுமணம் அகிலமெல்லாம் பரவும். இந்த வர்ணனை லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ரத்தின் 26-வது நாமம் எடுத்துறைக்கிறது. அம்பிகையின் வாய் லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ரத்தின் நாமம் 559-ல் ‘தாம்பூல-பூரித-முஃகி’ என்கிறது.
லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ரத்தின் 24-வது நாமம் அம்பிகையின் உதடுகள் கோவைப்பழம் போல் சிவந்து அழகாக காணப்படுகின்றன என்று. இயற்கையிலேயே அம்பிகைக்கு அழகு மிகுந்த செவ்விதழ்கள், அதோடு சங்கரர் அளித்த தாம்பூலமான வெற்றிலையுடன், கர்பூரவீடிகா சூரணத்தோடு, முத்துச்சுண்ணமும் கலந்து மெல்வதாலேயோ என்னமோ அம்பிகையின் மந்தஹாசமான புன்முறுவல், பரசிவனையே வளைத்து விட்டது. நமது ஆச்சார்யரும் அம்பிகையின் உதடுகளின் அழகில் அடிமையாகி, பல இடங்களில் இதை குறிப்பிடுகிறார் (உ) பவானி புஜங்கம் 7-ல் ‘பிம்பாதரஸ்மேர’ என்கிறார். பிம்ப என்றால் கோவைப்பழம் என்று அர்த்தம்
அம்பிகைக்கு, அழகும், பூரிப்பும் சேர்க்க, விஷேஷ நிவேதனத்தின் பின் தாம்பூலமும், ஆதிசங்கரரின் பேரருளால் அர்ப்பணிக்கும் பாக்யம் கிட்டியதன்றோ!
13 : कन्याभिः कमनीयकान्तिभिरलङ्गारामलारार्तिका
पात्रे मौक्तिकचित्रपङ्क्तिविलसत्कर्पूरदीपालिभिः।
तत्तत्तालमृदङ्गगीतसहितं नृत्यत्पदाम्भोरुहं
मन्त्राराधनपूर्वकं सुविहितं नीराजनं गृह्यताम्॥
கன்யாபி:கமநீயகாந்திபிரலங்காராமலாரார்திகா
பாத்ரேமௌக்திகசித்ரபங்க்திவிலஸத்கர்பூரதீபாலிபி: |
தத்தத்தாலம்ருதங்ககீதஸஹிதம்ந்ருத்யத்பதாம்போருஹம்
மந்த்ராராதனபூர்வகம்ஸுவிஹிதம்நீராஜநம்க்ருஹ்யதாம்மிமி ||
ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் சக்தி கூடம் (எ) கடைசி வரியின் இரண்டாம் எழுத்து – க
அழகு மிகு கன்னியர்களால் பல விதமாக முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட தட்டில் கற்பூரம் ஏற்றி அம்பிகே, பாட்டும், நாட்டிய நடனமும், மேளதாளமும் முழங்க, வேதகோஷத்துடன் கூடிய மந்திரங்களுடனும் தாயே உன் திருப்பாதங்களுக்கு கற்பூர நீராஜனம் காட்டுகிறேன் அம்மா! ஏற்றுக்கொள்வீராக
இந்த நீராஜனம் எனும் பதத்தை அழகு குறையாமல் இன்னொரு பாஷையில் எடுத்துச்சொல்ல மிக கடினமாக உள்ளது. ஆரத்தி என்றால் அது சுமாரான அர்த்தத்தையே கொடுக்கும், ஆயினும் அதையே உபயோகிக்கிறேன்.
நீராஜனம் / ஆரத்தி செய்யும்போது, சங்கு, மேளதாளம், வேதகோஷம், ந்ருத்யம், மணியடித்தல் முதலானவையோடு செய்வதே முறை. இது மனதை இறைவியிடத்தில் அல்லது இறைவனிடத்தில் நிலைக்கச்செய்யும், அல்லாமல் மனதில் ஒருவகை கிளர்ச்சியை உண்டாக்கும், சில நேரம் உடம்பு புல்லரிக்க கூடும். அம்பிகைக்கு நீராஜனம் / ஆரத்தி செய்யும்போது, நாம் நீராஜன / ஆரத்தி ஒளியில் அம்பிகையின் சுய ஒளியைக்காணலாம்.
நீரஜன சமயத்தில் ‘கதோபனிஷத்’தின் ||.ii.15 –ல் காணப்படும் ஸ்லோகம் இசைக்கப்படும், அதன் அர்த்தம். ப்ரம்மம் ஒன்றே தன்னொளி கொண்டது, மற்ற சூரியன், சந்திரன், நக்ஷத்திரங்கள், அக்னி யாவும் ப்ரம்மத்தின் ஒளியையே ப்ரதிபலிக்கின்றன என்று. இங்கு ப்ரம்மமாக கூறுவதை அம்பிகை என்று கொள்க.
ஸ்ரீ லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ரம் நாமம் 806-ல் அம்பிகையை ‘பரஞ்ஜோதி’ என்றே குறிப்பிடுகிறது.
14 : लक्ष्मीः मौक्तिकलक्षकल्पितसितच्छत्रं तु धत्ते रसात्
इन्द्राणी च रतिश्च चामरवेर धत्ते स्वयं भारती।
वीणामेणविलोचनाः सुमनस्सां नृत्यन्ति तद्रागवद्भावैः
आङ्गिकसात्विकैः स्फुटरसं मातस्तदाकण्यर्ताम्॥
லக்ஷ்மீர்மௌக்திகலக்ஷகல்பிதஸிதச்சத்ரம்துதத்தேரஸாத்
இந்த்ராணீசரதிஸ்சசாமரவரேதத்தேஸ்வயம்பாரதீ |
வீணாம், ஏணவிலோசநா:ஸுமநஸாம்ந்ருத்யந்திதத்ராகவத்
பாவை:ஆங்கிகஸாத்விகை:ஸ்புடதரம்மாதஸ்தாகர்ண்யதாம்மிமி ||
ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் சக்தி கூடம் (எ) கடைசி வரியின் மூன்றாம் எழுத்து – ல
எண்ணிலடங்கா லக்ஷோபலக்ஷ நன்முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட வெண்குடையை நின் அருகிலிருந்து ஸ்ரீலக்ஷ்மி அழகுடனும், கர்வத்துடனும் பிடிக்க, இந்திராணியும் ரதியும் நின் இருபுரமும் நின்று சுவாஸனையுடய மூலிகைகளால் செய்யப்பட்ட சாமரம்வீச, சரஸ்வதி தேவி நின் எதிரில் அமர்ந்து ‘கச்சபி’ எனும் தேவ வீணை வாசிக்க, அந்த தேவ வீணையின் இசைக்கு ஏற்ப தேவமகளிர் நாட்டியம் ஆட, இசையுடன் கூடியபாட்டும், நடனமும் உன்னால் ஏற்க்கப்படட்டும் அம்பிகே.
அம்பிகை, பாகம்-1ல் அளிக்கப்பட்ட ரத்தின ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்திருக்க, ஸ்ரீ லக்ஷ்மி அன்னை, அம்பிகைக்கு வெகு அருகில் நின்று பல, பல லக்ஷோபலக்ஷ வெண் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட குடையை அன்னைக்கு வெகு அருகில் தாம் இருக்கிறோம் என்ற பூரிப்பிலும், கர்வத்திலும், தனக்கே உரிய நளினத்துடனும் குடை பிடிக்க, தேவகுல அரசனான இந்திரனின் ஸஹதர்மணியான இந்த்ராணி, தேவர் தேவிகள் எல்லோருடைய ப்ரதினிதி யாக ஒருபுரம் வெண் சாமரம் வீச, மறுபுரம் காமதேவனின் பத்தினியான ரதி தேவி இன்னொரு வெண் சாமரம் வீச, ரதிதேவிக்கு ஏன் இந்த சிறப்பு என்றால், அம்பிகைக்கு, மன்மதன் எனும் காமதேவன் ப்ரியமானவன். அம்பிகைக்கு காமதேவனுடைய செயல்களும், காமதேவனும் மிக விருப்பமானவைகள். இறைவியை இறைவனிடம் சேர்க்க தன்னையே விலையாக கொடுத்தவனன்றோ. அதுவுமல்லாமல், அம்பிகையை ஆராதிப்பவனும் கூட, லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ரத்தில் நாமம் 375 “காமபூஜிதா” என்றும் நாமம் 586 ல் “காமஸேவிதா” என்கிறது. அதுவுமல்லாமல், அம்பிகையே காருண்யமூர்த்தியன்றோ! நாமம் 376-ல் ஸ்ருங்கார ரஸ ஸம்பூர்ணா என்றும், நாமம் 863 “காமகேளீதரங்கிதா” என்றல்லவா பகர்கிறது.
ஸ்ரீ சரஸ்வதி, தேவ வீணையாம் கச்சபியை இசைத்து, தன் வீணையை விட மதுரமான த்வனியால் கீர்த்தனமிசைக்க (நாமம் – 27), இதையே தான் ஸ்லோகம் 66 சௌந்தர்யலஹரியும் எடுத்துறைக்கிறது.
இவையெல்லாம் அம்பிகைக்கு மிகவும் பிரியமான 64 உபசாரங்களில் ஒன்றாகும். இதைப்பற்றி மேல் விபர்ங்கள் மிக விரிவாக தந்த்ர ஸாஸ்திரங்களில் விவரிக்கப்படுகிறது. லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ரமும் நாமம் 235 இந்த 64 வித உபசாரங்களையே எடுத்துறைக்கிறது.
15 : ह्रींकारात्रयसंपुटेन मनुनोपास्ये त्रयीमौलिभिः
वाक्यैर्लक्ष्यतनो तव स्तुतिविधौ को वा क्षमेताम्बिके।
सल्लापाः स्तुतयः प्रदक्षिणशतं संचार एवास्तु ते
संवेशो नमसः सहस्रमखिलं त्वत्प्रीतये कल्पताम्॥
ஹ்ரீங்காரத்ரயஸம்புடேநமனுநோபாஸ்யேத்ரியீமௌலிபி:
வாக்யைர்லக்ஷ்யதநோதவஸ்துதிவிதௌகோவாக்ஷமேதாம்பிகே |
ஸல்லாபா:ஸ்துதய:ப்ரக்ஷிணசதம்ஸஞ்சாரஏவாஸ்துதே
ஸம்வேசோநமஸ:ஸஹஸ்ரமகிலம்த்வத்ப்ரீதயேகல்பதாம் ||
ஸ்ரீ திரிபுராம்பிகையின் அதிரஹஸ்யமான பஞ்சதஸியின் சக்தி கூடம் (எ) கடைசி வரியின் நான்காம் எழுத்து – ஹ்ரீம்
மூன்று ஹ்ரீங்காரங்கள் கூடிய மந்திரத்தால் உபாசிக்கப் படுபவளே! வேதாந்த வாக்கியங்களின் லட்சியமானவளே! என்னுடைய பேச்செல்லாம் உனக்கு தோத்திரங்களாகவும், என் சஞ்சாரங்களெல்லாம் உனக்குப் பிரதட்சிணமாகவும், நான் படுப்பதெல்லாம் உனக்கு நமஸ்காரங்களாகவும் இருக்கட்டும்.
உபனிஷத்களின் சூக்ஷம திருவே, உமையே, ஹ்ரீங்காரங்கள் மூன்றுடைய மந்திரத்தால் வழிபடப்படுபவளே, உன்னைப்போற்றி பாட்டெழுத யாரால் இயலும்? தாயே, என்னால் பேசப்படுபவை யாவும் நின் புகழே ஆகட்டும். எனது அங்க அசைவுகள் எல்லாம், நின் ப்ரதக்ஷிணங்களாகட்டும். கிடந்துறங்குவது, தாயே நின் பதகமலங்களுக்கு, என் ஸஹஸ்ர ஷாஷ்டாங்க நமஸ்காரங்களாக உன் அருளால் ஏற்றுக்கொள்ளப்படட்டும், என்று சங்கரர் இந்த 15வது ஸ்லொகம் செய்கிறார் என்றால், அவர் அம்பிகையின் ப்ராபவத்தை நன்கு புரிந்துகொண்டுள்ளார்.
எவராலும் விவரிக்க முடியாத ஒரு ஒளி ப்ரவாளத்தை எதோடு ஒப்பிட்டு வர்ணிப்பது? பரிணாமமே இல்லாத பொருளை எந்த பரிமாணத்தோடு ஒப்பிட்டு வர்ணிப்பது? அளவற்ற அழகை எந்த அளவை வைத்து எடை போடுவது? எல்லையில்லா கருணையுடையவளை கருணைக்கடலே என்று வர்ணிப்பது தகுமோ? கடலுக்குத்தான் எல்லையுண்டே!
இங்கு அம்பிகைக்கு நாம் சமர்ப்பித்ததெல்லாம் நாம் அவளிடமிருந்து பெற்றவைகளே. இடம், நிழல், நீர், உடை, உணவு, உணவளிக்கும் பாத்திரங்கள் என எல்லாமே அவளிடமிருந்தே வந்தவை அன்றோ?
எல்லவற்றையும் அவளாலேயே அருளப்பட்டபின், யாம் அவளுக்கு அளிப்பதுதான் ஏது? என்றம் எண்ணம் தோன்றும்போது, யாம் செய்யும் தவறுகள் நமக்கு புரிய ஆரம்பிக்கிறது. பீடங்கள் எதற்கு? அம்மை அமர்வதற்கா? அவள் அமர்ந்த பின்னேயல்லவோ அது நமக்கு மரமாக கண்டது. ரத்தினங்களே அவளேயன்றோ, பின்னர் எப்படி அவற்றை அவளுக்கு அளிப்பது? நமது, நாம் அளிக்கின்றோம் என்று. அம்பிகையை சகுண ப்ரம்மமாக வணங்கப் போய், நிர்குண ப்ரம்மமாக அல்லவோ அவளை காணவேண்டியதாயிற்று! இங்கு த்வைதம் மறைந்து அத்வைதம் உதிக்கிறது!
இனி நான் என்பது ஏது? எல்லாமே அவளேயன்றோ! என்ற எண்ணம் உதிக்கிறது.
16 : श्रीमन्त्राक्षरमालया गिरिसुतां यः पूजयेच्चेतसा
संध्यासु प्रतिवासरं सुनियतस्तस्यामलं स्यान्मनः।
चित्ताम्भोरुहमण्टपे गिरिसुता नृत्तं विधत्ते रसाद्वाणी
वक्त्रसरोरुहे जलधिजा गेहे जगन्मङ्गला॥
ஸ்ரீமந்த்ராக்ஷரமாலயாகிரிஸுதாம்ய:பூஜயேத்சேதஸா
ஸந்த்யாஸுப்ரதிவாஸரம்ஸுநியதஸ்தஸ்யாமலம்ஸ்யான்மந: |
சித்தாம்போருஹமண்டபேகிரிஸுதாந்ருத்தம்விதத்தேரஸாத்
வாணீவக்த்ரஸரோருஹேஜலதிஜாகேஹேஜகன்மங்களா ||
இந்த மந்திர அட்சர மாலையினால் அம்பிகையை காலை, மதியம் மாலையில் நிஷ்டையுடனும் பக்தியுடனும் யார் துதிக்கிறார்களோ, அவர்கள் சித்த சுத்தி அடைவார்கள்; அவர்கள் மனதில் தேவி நர்த்தனம் புரிவாள்; வாக்கில் சரஸ்வதியும் அவர்களின் இல்லங்களில் லக்ஷ்மியும் வாசம் செய்வார்கள்.
இந்த பகுதி ஸ்ரீம் என்று ஆரம்பிக்கிறது, இதை முன்பு பார்த்த பஞ்சதஸியுடன் சேர்த்தால் அது ஷோடஸாக்ஷரி மஹா மந்திரமாகிரது.
இந்த மந்திரமாத்ருகா ஸ்தவமானது, 15 பீஜங்களால் (க ஏ ஈ ல ஹ்ரீம் – ஹ ஸ க ஹ ல ஹ்ரீம் – ஸ க ல ஹ்ரீம்) ஆரம்ப எழுத்துக்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. மத்ருகா பொதுவாக ஸமஸ்க்ருத உயிர் எழுத்துக்களை குறிக்கும், சில சமயம் எல்லா எழுத்துக்களையும் குறிக்கவும் பயன்படுத்துவது உண்டு. மந்த்ர மாத்ருகா – அம்பிகைக்கே உறிய மந்திர எழுத்துக்களால் கோர்க்கப்பட்ட பூ மாலையாக, அம்பிகை அணியும் பொருட்டு அமைந்துள்ளது. லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ரத்தில் நாமம் 577 ல், “மாத்ருகா வர்ண ரூபிணி” அதாவது 51 எழுத்துக்களால் அலங்கரிக்கப்பட்டவள் என்றும், நாமம் 489 ல் “அக்ஷமாலாதி தரா” என்றும் அம்பிகையை போற்றுகின்றது. ஆதி சங்கரர், தீர்கதரிஸியன்றோ, ஆகையினாலேயே இந்த ஸ்தவத்தை பஞ்சதஸி மஹா மந்திரத்தின் எழுத்துக்களால் துவக்கி எல்லோரும் இன்புற்றிருக்க, அம்பிகையின் பேரருள் கிடைக்க வழி செய்துள்ளார்
இனி ஒரு விஷேஷம் கூட, அம்பிகையின் பூஜா முறைகளையும் இதில் தெளிவாக விளக்கியுள்ளார். ஆசனம், ஆயுதம், கிரீடம், அர்க்யம், பாத்யம், ஆசமனீயம், ஸ்நபநம், வஸ்த்ரம், ஆபரணங்கள், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்யம், பழவகைகள், கற்பூரவீடிகா கலந்த தாம்பூலம், நீராஜனம், மற்றும் உபசாரங்கள் போன்றவற்றை முதல் 14 ஸ்லோகங்களில் முடித்து 15 ஆம் ஸ்லோகத்தில் ஆத்ம நிவேதனத்தையும் செய்து காட்டிவிட்டாரே!
இந்த 16 ஆம் ஸ்லோகத்தில் இப்படி உபாஸிப்பதினால் உண்டாகும் பயனையும் உரைக்கிறார்.
17 :
इति गिरिवरपुत्रीपादराजीवभूषा
भुवनममलयन्ती सूक्तिसौरभ्यसारैः।
शिवपदमकरन्दस्यन्दिनीयं निबद्धा
मदयतु कविभृङ्गान्मातृकापुष्पमाला॥
இதிகிரிவரபுத்ரீபாதராஜீவபூஷா
புவனமமலயந்தீஸ¨க்திஸெளரப்யஸாரை: |
சிவபதமகரந்தஸ்யந்திநீயம்நிபந்தா
மதயதுகவிப்ருங்கான்மாத்ருகாபுஷ்பமாலைமிமி ||
அம்பிகையே, இந்த மாத்ருகா புஷ்பமாலை எனும் காதிவித்யா பஞ்சதஸி அடங்கிய மானஸ பூஜையை நின் திருப்பாதத்தில் ஸமர்ப்பித்து, நின் திருக்கால்களுக்கு கொலுசாக அணிவிக்கிறேன் அம்மா. நின் பாதம் பட்டு, இம்மந்திர மாலை நறுமணம் வீசட்டும், அந்த நறுமணம் உலகெலாம் உன் அருளால் வ்யாபிக்கட்டும். ஏற்றுக்கொள் தாயே.
இந்த மாத்ருகா புஷ்பமாலை மகிழ்ச்சியை தரட்டும். இதெல்லாம் மானசபூஜை. அதுவும் பஞ்சதாசாட்சரி மந்திரம் அடங்கியது.
மந்த்ர மாத்ருகா புஷ்ப மாலா ஸ்தவம் முற்றிற்று.
இப்படியாக சங்கர பகவத்பாதாள் அம்பிகைக்கு அர்ப்பித்த சகல உபசாரங்களையும் அருகிலுருந்து அவருக்கு உதவி நாமும் பங்கு கொண்டோம் அல்லவா! எப்பிறவியில் என்ன புண்யம் செய்திருந்தோமோ, இப்பிறவியில், அம்பிகையை மானஸீகமாக, ஆதி சங்கராச்சாரியாருடன் ஆராதிக்க ஒரு அவகாசம் கிட்டி நம்மை பாவனனாக்கியது!
மேற்கண்ட ஸ்தோத்திர பாராயண பலன் இங்கே, இது இந்த ஸ்லோகத்திலேயே 16-ஆம் பத்தியில் “பல ஸ்ருதியாக” உள்ளது.
“எவரொருவர், தினந்தோரும் காலையிலும் மாலையிலும் மந்த்ரபீஜாக்ஷரம் பொதிந்த இந்த ஸ்தோரத்தை மனம் வைத்து பாராயணம் செய்து தேவியை பூஜிக்கிறாரோ, அவர் மனம் அமைதி கொள்வது மட்டுமின்றி, அவர் ஹ்ருதயதாமரையில் ஸ்ரீ தேவி மகிழ்ச்சியுடன் களிநடனம் புரிவாள், நாவில், பேச்சில் ஸரஸ்வதீ நடனம் புரிவாள், வீட்டில் உலகுக்கெல்லாம் மங்கல நாயகியான லக்ஷ்மீ வாஸம் செய்வாள்.” எந்த பக்தனும், இதைவிட வேறொன்றும் இறைவனிடம் யாசிக்கப் போவதில்லையே!
குண்டலினி யோகத்தில் கிட்டும் அனைத்தும், பக்திமார்கத்தில் கிட்டிடும் போது, அல்லது, சாதாரணமான முறையில், உடலையும், உள்ளத்தையும் வருத்தாமல் எல்லாவற்றையும் அடைய வழிமுறைகள் இருக்கும்போது, ஏன் கடினமான வழிகளை தேர்வு செய்யவேண்டும்?
எளிய பக்தி மார்கம், மந்திர மார்கம், மற்றும் யந்திர தந்திர மார்கத்திற்கே, தேர்ச்சி பெற்ற குருவானவர், மிக மிக அவசியம். ஆரம்பத்தில், சாதாரண நிலையில், அனுஷ்டானங்களில் தேர்ச்சி பெற்றவர் குருவாக இருந்தால் போதும், இரண்டாவது நிலையிலேயே, தேர்ச்சி பெற்ற உபாஸகர், அதுவும் நீங்கள் தேர்வு செய்த தேவதா மூர்த்தியின் உபாஸகர் கண்டிப்பாகத் தேவை. இனி மூன்றாம் நிலையைப் பற்றியும், கடினமான நான்காம் நிலை பற்றியும் விளக்கவேண்டாம் என்று எண்ணுகிறேன்.
இனியும் ஒரு விஷயம். சிரம் தேயும், ராஜ்யம் தேயும், ந தேயா ஷோடஸாக்ஷரி என்று சொல்லப்பட்டிருக்கிறது. யான் அறிந்தவரை அதன் அர்த்தமாவது, ஷொடஸாக்ஷரியை உபாஸனை முறையை உபதேஸிக்க, அம்பிகையை அகல வேரு யாருக்கும் அதிகாரமில்லை. ஆயின், இது தான் ஷோடஸி, அம்பாளின் மிக ரஹஸ்ய மந்திரம், இதன் உபாஸனை முறைகளை அம்பிகையேதான் உபதேஸிப்பாள், அதற்கு தகுதியாக வேண்டுமென்றால், பஞ்சதஸியை உபாஸித்து அதில் சித்திபெற்று, ஷோடஸியை அம்பாளின் அனுக்ரஹத்தால் அடைவாயாக என்றல்லாவா பொருள் கொள்ள வேண்டும் அப்படி பொருள் கொண்டதால் தான், ஆதி சங்கரரிலிருந்து தீக்ஷிதர் வரை அந்த அத்புதமான மந்திரத்தை வெளியிட்டார்கள் –
உபதேசிக்கவில்லையே? முறையாக உபாஸனை செய், உன்னத நிலையடைவாய் என்றனரே தவிர.