மகாபாரதம் பகுதி ஒன்று
கதைக்குள் செல்லும் முன்...
மகாபாரதம் என்னும் தீஞ்சுவை இதிகாசத்தை இயற்றியவர் வியாசர். ஒரு கதாசிரியர், தன்னையும் ஒரு பாத்திரமாக இந்த காவியத்தில் இணைத்துக் கொண்ட பெருமை பெற்றது. ஆம்... மகாபாரதத்தின் முக்கியஸ்தர்களான பாண்டுவும், திருதராஷ்டிரனும், விதுரனும் இவருக்குப் பிறந்தவர்களே. தேவமொழி என வர்ணிக்கப்படும் சமஸ்கிருதத்தில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஸ்லோகங்களை கொண்ட இக்காப்பியத்தை, தமிழில் மொழி பெயர்த்தவர்களில் முக்கியமானவர் வில்லிப்புத்தூரார். பெயர் தான் வில்லிப்புத்தூராரே தவிர, இவரது ஊர் விழுப்புரம் மாவட்டம் திரு முனைப்பாடி அருகிலுள்ள சனியூர் ஆகும். இவரது தந்தை பழுத்த வைணவர். அவர் பெரியாழ்வார் மீது கொண்ட பற்றினால், ஸ்ரீவில்லிப்புத்தூரில் வசித்த அவரது பெயரை தன் மகனுக்கு சூட்டினார். வில்லிப்புத்தூராரோ சிவனையும் ஆராதித்து வந்தார். வியாசர் எழுதிய 18 பருவங்களை 10 பருவங்களாகச் சுருக்கி 4351 பாடல்களுடன் மகாபாரதத்தை எழுதி முடித்தார். மகாபாரதத்தில் பகவான் கிருஷ்ணன் கீதையைப் போதித்து, வாழ்க்கையின் யதார்த்த நிலையைச் சுட்டிக்காட்டியுள்ளதால், இதை ஐந்தாவது வேதம் என்றும் சொல்லுவர். ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களை படித்தவர்கள் கூட புரிந்து கொள்ளுவது கடினம். ஆனால், மகாபாரதம் பாமரனும் படித்து புரிந்து கொள்ளக்கூடியது. சூதாட்டத்தின் கொடுமையை விளக்கக்கூடியது. இந்த வேதத்தைப் படித்தவர்கள் பிறப்பற்ற நிலையை அடைவர் என்பது உறுதி.
ராமபிரான் சூரியவம்சத்தில் அவதரித்தது போல, பஞ்ச பாண்டவர்கள் சந்திர குலத்தில் பிறந்தவர்கள். பாற்கடலை தேவாசுரர்கள் கடைந்த போது, தோன்றியவன் சந்திரன். 14 கலைகளைக் கொண்ட இவன், தினமும் ஒன்றாக சூரியனுக்கு கொடுப்பான். திரும்பவும் அதை வாங்கிக் கொள்வான். சுட்டெரிக்கும் சூரியன், இவனிடம் பெறும் கலையால் குளிர்ந்து தான் உலகத்தை எரிக்காமல் வைத்திருக்கிறான். இவன் தாரை என்பவளைத் திருமணம் செய்து பெற்ற மகனே புதன். ஒரு முறை மநு என்ற அரசனின் மகனான இளை என்பவன் காட்டுக்கு வேட்டையாட வந்தான். இந்தக் காட்டின் ஒரு பகுதியிலுள்ள குளத்தில், ஒருசமயம் சிவபெருமானின் மனைவியான பார்வதி நீராடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த ஆடவர் சிலர், அவள் குளிக்கும் அழகை ரசித்தனர். கோபமடைந்த பார்வதி அவர்களைப் பெண்ணாகும்படியும், இனி அந்த ஏரிப்பகுதிக்குள் யார் நுழைகிறார்களோ, அவர்கள் பெண்ணாக மாறுவர் என்றும் சபித்துவிட்டாள். அவள் பூவுலகை விட்டு, சிவலோகம் சென்ற பிறகும் கூட அந்த சாபம் மாறவில்லை. இதையறியாத இளன் அந்த ஏரிப்பகுதிக்குள் நுழைந்தானோ இல்லையோ, பெண்ணாக மாறி விட்டான்.
அவள் வருத்தத்துடன் இருந்த வேளையில், அழகுப் பதுமையாக இருந்த அவளை அங்கு வந்த புதன் பார்த்தான். அவளது கதையைக் கேட்ட புதன், அவளுக்கு ஆறுதல் சொல்லி அவளைத் திருமணம் செய்து கொண்டான். அவளுக்கு இளை என்ற பெயர் ஏற்பட்டது. புதனுக்கும், இளைக்கும் புரூரவஸ் என்ற மகன் பிறந்தான். புரூரவஸ் வாலிபன் ஆனான். அழகில் அவனுக்கு இணை யாருமில்லை. ஒருமுறை வான்வெளியில் ஒரு பெண்ணை சில அசுரர்கள் கடத்திச் செல்வதைப் பார்த்தான். அவள் தன் மானத்தைக் காத்துக் கொள்ள கதறினாள். பறக்கும் தேர் வைத்திருந்த புரூரவஸ், அவளைக் காப்பாற்றுவதற்காக மின்னல் வேகத்தில் விண்வெளியில் பறந்து சென்றான். அசுரர்களை எதிர்த்து உக்கிரத்துடன் போரிட்டான். அசுரர்கள் அவனது தாக்குதலை தாங்க முடியாமல், ஓடிவிட்டனர். அப்பெண்ணை பார்த்தான். அப்படி ஒரு அழகு... கண்ணே! நீ தேவலோகத்து ஊர்வசியோ? என்றான். அவள் வெட்கத்துடன் தலை குனிந்து, நான் நிஜமாகவே ஊர்வசி தான். என் மானம் காத்த நீங்களே எனக்கு இனி என்றும் பாதுகாவலாக இருக்க வேண்டும், என்றான். ஊர்வசியே தனக்கு மனைவியாகப் போகிறாள் என்று மகிழ்ந்த புரூரவஸ், அவளைத் திருமணம் செய்து கொண்டான். அவர்களது இனிய இல்லறத்தில் அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான்.
ஆயு என்று அவனுக்குப் பெயரிட்டனர். இப்படியாக சந்திர வம்சம் பூமியில் பெருகியபடி இருந்தது. ஆயுவிற்கு நஹுஷன் என்ற மகன் பிறந்தான். இவன் நூறு அசுவமேத யாகங்களைச் செய்து தேவலோகத்தையே பிடித்துக் கொண்டவன். தேவலோக மன்னனான இந்திரனை விரட்டிவிட்டு, அரசனாகி விட்டான். அதிகார மமதையுடன், காம போதையும் சேர, இந்திரலோகத்தை ஜெயித்ததால், இந்திரனின் மனைவியான இந்திராணியும் தனக்கே சொந்தம் என அவளை ஒரு அறையில் அடைத்து விட்டான். இந்திராணியோ அவனது ஆசைக்கு இணங்க மறுத்து விட்டாள். ஒருநாள் போதை உச்சிக்கேற, அவளை வலுக்கட்டாயமாக அடைவதற்காக தன் பல்லக்கில் ஏறி புறப்பட்டான் நஹுஷன். பல்லக்கை சுமக்கும்படி முனிவர்களை மிரட்டினான். முனிவர்களும் தூக்கிச் சென்றனர். அந்த முனிவர்களில் ஒருவர் அகத்தியர். அவர் குள்ளமாக இருந்ததால், மற்றவர்களைப் போல் வேகமாகச் செல்ல முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நஹுஷன், ஓய்! மற்றவர்கள் வேகமாகச் செல்லும் போது, உமக்கு மட்டும் என்னவாம்! என்று, முதுகில் ஓங்கி மிதித்தான். அகத்தியர் மகாதபஸ்வியல்லவா! அவருக்கு கோபம் வந்து விட்டது. சிறுவனே! அதிகார மமதை, காமபோதைக்கு ஆட்பட்டு, தபஸ்விகளை துன்புறுத்தினாய். மேலும், வயதில் பெரியவர்களை மதியாமல், காலால் மிதித்தாய். எனவே நீ பாம்பாகப் போ, என சாபமிட்டார். அவன் பாம்பாக மாறி, தேவலோகத்தில் இருந்து பூமியில் விழுந்தான்.
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
வியாழன், 26 நவம்பர், 2020
மகாபாரதம் பகுதி ஒன்று
ராமானுஜர் பகுதி ஒன்று
ராமானுஜர் பகுதி-1
சற்றேறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீ பெரும்புதூர் கிராமமே மகிழ்ச்சியில் மூழ்கிக்கிடந்தது. அவ்வூரில் ஒரு பெரிய பெருமாள் கோவில்... சுவாமியின் திருநாமம் ஆதிகேசவப் பெருமாள்... அந்த ஊரில் வசித்தவர் ஆசூரிகேசவாசாரியார். இவர் வேள்விகள் செய்வதில் வல்லவர். அதாவது எந்த வேள்வியாக இருந்தாலும் அதைச் சிறப்பாகச் செய்வார். அதனால், இவருக்கு ஸர்வக்ரது என்ற பட்டத்தை வேதபண்டிதர்கள் வழங்கினர். இந்த சொல்லுக்கு எல்லா வேள்விகளையும் செய்பவர் என்று பொருள். இக்காரணத்தால், இவரை ஸ்ரீமத் ஆசூரி ஸர்வக்ரது கேசவ தீட்சிதர் என்று மக்கள் அழைத்தனர். இந்த சமயத்தில் மணக்கால் நம்பியின் சீடரான ஆளவந்தார் (யமுனைத்துறைவர்)என்பவர், தான் ஆட்சிசெய்த ராஜ்ய பரிபாலனத்தை விட்டுவிட்டு, ஸ்ரீரங்கத்தில் தங்கி துறவியாக மாறிவிட்டார். அவரது சீடர் பெரியநம்பி. பெருமாள் மீது ஆளவந்தார் இயற்றிய துதிகள் அருமையானவை. நாத்திகர்கள் கூட அவரது பாடலைப் படித்தால் பரவசத்தின் உச்சிக்கு சென்று விடுவார்கள் என்றால், அதன் இனிமையைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பெரியதிருமலை நம்பி என்பவரும் ஆளவந்தாரின் சீடராக இருந்தார். இவர் ஆளவந்தாரை விட வயதில் மூத்தவர் என்றாலும், அவரைக் குருவாக ஏற்றுக் கொண்டார். பெரியதிருமலை நம்பிக்கு காந்திமதி, தீப்திமதி என்று இரண்டு தங்கைகள் இருந்தனர். அவர்களில் பெரிய தங்கை காந்திமதியை, ஆசூரி கேசவாசாரியார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். தீப்திமதியை, அகரம் என்ற கிராமத்தில் வசித்த கமலநயனப்பட்டர் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணத்தை நடத்திய பிறகு, நிம்மதியடைந்த பெரியதிருமலை நம்பி, எந்நேரமும் பெருமாளின் திருவடிகளையே எண்ணி தியானத்தில் ஆழ்ந்து கிடந்தார். ஆசூர் கேசவாசாரியாரும் காந்திமதியும் இல்லற வாழ்வை நீண்டகாலம் மகிழ்ச்சியாகக் கழித்துக் கொண்டிருந்தனர். ஆனால், இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. தம்பதிகளுக்கு இது பெரும் மனக்குறையாக இருந்தது. தெய்வத்திவம் முறையிட்டால் குறைகள் தீரும். அதிலும் வேள்விகள் இயற்றுவதில் சிறந்த கேசவாசாரியாருக்கு எந்த தெய்வத்திடம் குறையைச் சொல்லலாம் என யோசித்த போது, விருந்தாரண்யம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட பெருமாள் ஸ்தலம் நினைவில் வந்தது. திருவல்லிக்கேணி என்ற குளத்தின் கரையில் அது அமைந்திருந்தது. அந்த குளத்தின் பெயர் தான் இன்றைக்கு அவ்வூருக்கு அமைந்து விட்டது. ஆம்...அது தான் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில். அங்கு சென்று அவர்கள் மகப்பேறு குறித்த வேள்விகளைச் செய்தனர். இதன் பிறகு, கேசவாசாரியார் ஓய்வெடுக்க ஓரிடத்தில் அமர்ந்தார். கண்களைச் சுழற்றவே தூங்கி விட்டார். அப்போது, பார்த்தசாரதி பெருமாள் கனவில் வந்தார். கேசவா! நீர் ஒழுக்கசீலர், வேள்விகள் இயற்றி எம்மைத் திருப்தி செய்பவர், உமது பக்தி ஆழமானது. குழந்தை இல்லா கவலை இனி உமக்கு தேவையில்லை. நானே உமக்கு குழந்தையாகப் பிறப்பேன். இவ்வுலக மக்கள் பூர்வாச்சாரியார்கள் அருளிய உபதேசங்களின் மகிமை புரியாமல், தங்களையே உயர்வாக எண்ணிக்கொண்டு வாழ்கின்றனர். அகந்தை கொண்டு தீமை பல புரிகின்றனர். எனவே, அவர்களைக் கடைத்தேற்ற நான் அவதாரம் எடுப்பேன். இனி நீர் ஊர் திரும்பலாம். உம் விருப்பம் விரைவில் நிறைவேறும், என்றார்.
மிகுந்த மகிழ்ச்சியுடன் கேசவாசாரியார் ஊர் திரும்பினார். ஓராண்டு கடந்தது. காந்திமதி அம்மையார் கர்ப்பவதியானார். கலியுகம் 4118, ஆங்கில ஆண்டு 1017, சித்திரை 12, வியாழன், திருவாதிரை, வளர்பிறை பஞ்சமியன்று அவதரித்தது அந்தத் தெய்வக்குழந்தை. இதனிடையே, காந்திமதி அம்மையாரின் தங்கையான தீப்திமதிக்கும் ஆண்குழந்தை பிறந்தது. அக்காவின் குழந்தையைப் பார்க்க தங்கை தீப்திமதி ஸ்ரீபெரும்புதூருக்கு வந்தார். தங்கள் இருவருக்கும் ஆண்குழந்தை பிறந்ததில் அவர்களுக்கு பரம சந்தோஷம். தங்கைகளுக்கு குழந்தை பிறந்த செய்தியறிந்த பெரிய திருமலை நம்பி ஸ்ரீபெரும்புதூர் வந்தார். காந்திமதியின் குழந்தை லட்சுமணனின் அவதாரம் என்பது புரிந்தது. எனவே, குழந்தைக்கு ராமானுஜன் என்று பெயர் வைத்தார். ராமனுக்கு இளையவன் என்பது இதன் பொருள். தீப்திமதியின் குழந்தைக்கு கோவிந்தன் என பெயரிட்டார். இன்னும் சிலகாலம் கழித்து, தீப்திமதி பெற்ற மற்றொரு ஆண் குழந்தைக்கு சிறிய கோவிந்தப் பெருமாள் என்று பெயர் சூட்டினர். அக்காலத்தில், குழந்தைகள் பிறந்து நான்கு மாதம் கழிந்ததும், சூரியனைப் பார்த்தல் என்னும் சடங்கைச் செய்தனர். ராமானுஜனுக்கும், கோவிந்தனுக்கும் இந்த சடங்கு நடந்தது. பிறகு முதல் சோறு ஊட்டுதல், காது குத்துதல், மொட்டையடித்தல், கல்வி துவக்கம், உபநயனம் என வரிசையாக சடங்குகள் நடத்தப்பட்டன.
அருள் மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில்
அருள் மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில்
மூலவர் : மகாலிங்கேஸ்வரர்
அம்மன் : மரகதவல்லி, மாணிக்கவல்லி
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
ஊர் : விராலிப்பட்டி, தவசி மேடை
மாவட்டம் : திண்டுக்கல்
மாநிலம் : தமிழ்நாடு
திருவிழா:இத்தலத்தில் மாசி மக திருவிழா விசேஷமாக நடக்கும்.
தல சிறப்பு:சிவராத்திரியை ஒட்டி 30 நாட்களும் சூரியஒளி மூலவர் மீது படும். காலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவன் மீதும், மாலையில் பைரவர் மீதும் விழுவது சிறப்பு. மகம் நட்சத்திரத்திற்குரிய சிறப்பான ஆலயம் இது. மக நட்சத்திரம் தவிர மற்ற 26 நட்சத்திரக்காரர்களும் வணங்கி வழிபட்டு சகல சவுபாக்கியங்களையும் பெறக்கூடிய சிறப்பு பெற்றது. பொதுவாக, ஒரு சன்னதிக்குள் ஒரு அம்பிகைதான் இருப்பாள். ஆனால், இங்கு ஒரே சன்னதிக்குள் மாணிக்கவள்ளி, மரகதவள்ளி என்ற இரண்டு அம்பிகைகள் இச்சா சக்தியாகவும், கிரியா சக்தியாகவும் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள சிவலிங்கம் வசிஷ்ட மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பரத்வாஜ மகரிஷியால் பூஜிக்கப்பட்டது. பரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தவர்கள் அவசியம் வழிபட வேண்டிய தலம் இது. அகத்தியர் முதல் பல ஆயிரம் சித்தர்கள், மகரிஷிகள், மற்றும் முனிவர்களும் தவமியற்றி வழிபட்ட லிங்கம். ராமர் தன் பரிவாரங்களுடன் பரத்வாஜ மகரிஷியை தரிசித்து விருந்துண்ட தலம். இங்குள்ள பைரவர் ஈசனுக்கு நேர் எதிரே ஆதிபைரவராக அருள்பாலிக்கும் சிறப்புப் பெற்ற ஒரே ஸ்தலம்.
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் விராலிப்பட்டி, ஒடுக்கம் தவசி மேடை- 624 304 சாணார்பட்டி வழி, நத்தம் வழி, திண்டுக்கல் மாவட்டம்.போன்:+91 95782 11659
பொது தகவல்:மகம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: ஆராய்ச்சி மனப்பான்மை கொண்ட இவர்கள், கல்வி பயில்வதில் ஆர்வம் கொண்டிருப்பர். தருமம் செய்வதில் வல்லவர்கள். மனத்தூய்மை, நேர்மை மிக்கவர்கள். பிறரை கவுரவமாக நடத்துவர். மதுரமான மொழி பேசுவதோடு பேச்சு சாதுர்யமும் பெற்றிருப்பர். பெரும்பாலும் தலைமைப்பதவியில் தான் இருப்பர்.
கோயில் முகப்பில் இரண்டு பீடங்கள் உள்ளன. சிவனை தரிசிக்க வரும் அடியார்களின் பாதம், தன் மீது படவேண்டும் என்பதற்காக பரத்வாஜர் இந்த நிலையில் இங்கு இருப்பதாகச் சொல்கிறார்கள்.
பிரார்த்தனை:மகம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். மாசி மகத்தன்று சிவன், அம்பாளுக்கு விசேஷ பூஜை நடக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இந்நாளில் வேண்டிக் கொள்வது விசேஷம். நோய் நிவர்த்தி பெற, சிவன் சன்னதியில் நெய்தீபம் ஏற்றி வைத்து வழிபடுகிறார்கள். வீடுகளில் வாஸ்து குறைபாடு உள்ளவர்கள் அந்தக் குறை நீங்கவும் சிறப்பு பூஜை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தலபெருமை:மகம் நட்சத்திர கோயில்: பரத்வாஜர் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதால், மாதம்தோறும் மகம் நட்சத்திரத்தில் இங்கு சிறப்பு பூஜை நடக்கிறது.
இரண்டு அம்பிகையர்: அளவில் சிறிய இக்கோயிலில், மகாலிங்கேஸ்வரர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இவருக்கு வலது பக்கத்தில் உள்ள சன்னதியில் மரகதவல்லி, மாணிக்கவல்லி என்ற இரண்டு அம்பிகையர் காட்சி தருகின்றனர். மதுரையில் அருளும் மீனாட்சியம்மனின் பெயரால் இவர்களுக்கு இப்பெயர் சூட்டப்பட்டது. கிழக்கு நோக்கிய இந்த சன்னதிக்குள், அம்பாள்கள் இருவரும் தெற்கு நோக்கி மதில் ஓரத்தில் உள்ளனர். சன்னதிக்குள் எட்டிப்பார்த்துதான் இவர்களைத் தரிசிக்க முடியும். இத்தகைய அமைப்பிலான சன்னதியைக் காண்பது அரிது. இச்சா சக்தி, கிரியா சக்தியாக அருள்பாலிக்கும் இந்த அம்பிகையரை வழிபட்டால், ஞான சக்தியான இறைவனை எளிதாக அடையலாம் என்பதை உணர்த்தும் வகையில் இவ்வாறு அமைத்துள்ளனர். பரத்வாஜர் ஒரு தவமேடையில், யோகத்தில் மனதை ஒடுக்கி சிவனை வழிபட்டார். இதனால் இத்தலத்திற்கு, ஒடுக்கம் தவசி மேடை என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் எப்போதும் யோகிகளும், தபஸ்விகளும் சிவனை அரூபமாக பூஜை செய்து வருகின்றனர். பெண்களால் இவர்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதால் தான், அம்மன் வெளியே தெரியாமல் சுவரை ஒட்டி அருள்பாலிப்பதாக தல வரலாறு கூறுகிறது.
ஆதி பைரவர்: சிவாலயங்களில் ஈசான்ய (வடகிழக்கு) திசையில் காட்சி தரும் பைரவர், இங்கு சிவனுக்கு எதிரில் காட்சியளிக்கிறார். இங்கு அருளும் மகாலிங்கேஸ்வரர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்பதால், இவரது உக்ரம் பக்தர்களைத் தாக்காமல் இருக்க எதிரில் பைரவரை பிரதிஷ்டை செய்துள்ளனர். இவரை ஆதி பைரவர் என்கின்றனர். பைரவருக்குப் பின்புறம் தலைக்கு மேலே சிறிய துளை ஒன்றுள்ளது. இங்கு வரும் பக்தர்கள் முதலில் இந்த துளை வழியாக, சிவனை தரிசித்து விட்டு, பின்பு பைரவரை வணங்கி, அதன்பின்பு கோயிலுக்குள் செல்கிறார்கள். சிவராத்திரியை ஒட்டி 30 நாட்களும் சூரியஒளி மூலவர் மீது படும். காலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவன் மீதும், மாலையில் பைரவர் மீதும் விழுவது சிறப்பு.
தல வரலாறு:சீதையை மீட்டு அயோத்தி திரும்பிய ராமர், பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தில் தங்கி அவரது உபசரிப்பை ஏற்றார். அவர்களுடன் ஆஞ்சநேயரும் வந்திருந்தார். தனக்கு உதவியஆஞ்சநேயரை கவுரவிக்கும் விதமாக, தனக்கு உணவு பரிமாறிய இலையின் நடுவில் ஒரு கோடு போட்டார். ஒரு பக்கத்திலிருந்த உணவை அவரை உண்ணும்படி கூறினார். (இந்நிகழ்விற்குப் பிறகுதான் வாழை இலையின் நடுவில் கோடு வந்ததாக கர்ண பரம்பரைக் கதை ஒன்று கூறுகிறது) இத்தகு சிறப்பு மிக்க பரத்வாஜர், இத்தலத்து மகாலிங்கேஸ்வரரை வழிபட்டதாக தல புராணம் கூறுகிறது. மதுரை மீனாட்சியை பிரதிஷ்டை செய்த ஐந்து முனிவர்களில் இவரும் ஒருவர்.
சிறப்பம்சம்: பரத்வாஜர் இந்தக்கோயிலுக்கு வந்து, ஒரு தவமேடை அமைத்தார். அதில் அமர்ந்து யோகத்தில் மனதை ஒடுக்கி சிவனை வழிபட்டார். இதனால் இத்தலத்திற்கு, ஒடுக்கம் தவசி மேடை என்ற பெயர் ஏற்பட்டது. கோயில் முகப்பில் இரண்டு பீடங்கள் உள்ளன. சிவனை தரிசிக்க வரும் அடியார்களின் பாதம் தன் மீது படவேண்டும் என்பதற்காக பரத்வாஜர் இந்த பீடங்களின் வடிவில் இருப்பதாகச் சொல்கிறார்கள். பரத்வாஜர் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதால், மாதம்தோறும் மகம் நட்சத்திரத்தில் சிறப்பு பூஜை நடக்கிறது. இந்த பூஜையில் பல ரிஷிகளும், மகான்களும் அரூப வடிவில் கலந்து கொள்வதாக ஐதீகம். மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம் என்பது பழமொழி. மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரதாவாஜரை குருவாகக் கொண்டு மகம், பஞ்சமி, சஷ்டி, ஏகாதசி, துவாதசி, பிரதோஷம், மாத சிவராத்திரி நாட்களில் இத்தல இறைவனுக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டால் வாழ்வில் நல்ல நிலையை அடைவார்கள் என்பது நம்பிக்கை.
சிறப்பம்சமவிஞ்ஞானம் அடிப்படையில்: சிவராத்திரியை ஒட்டி 30 நாட்களும் சூரியஒளி மூலவர் மீது படும். காலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவன் மீதும், மாலையில் பைரவர் மீதும் விழுவது சிறப்பு. பொதுவாக, ஒரு சன்னதிக்குள் ஒரு அம்பிகைதான் இருப்பாள். ஆனால், திண்டுக்கல் அருகிலுள்ள ஒடுக்கம் தவசிமேடை மகாலிங்கேஸ்வரர் கோயிலில், ஒரே சன்னதிக்குள் இரண்டு அம்பிகையரை தரிசிக்கலாம்.
தேவியின் ஐம்பத்தொரு சக்தி பீடங்கள்:
தேவியின் ஐம்பத்தொரு சக்தி பீடங்கள்:
1 - காஞ்சிபுரம் - இது ஸ்ரீ சக்கரபீடம். தேவியின் நாபி இங்கு விழுந்ததாகக் கூறுவர்.
2 - மதுரை - இது மந்த்ரிணி பீடம்.
3 - திருஆனைக்கா - இது வராகி பீடம்.
4 - திருக்குற்றாலம் - இது பராசக்தி பீடம்.
5 - திருவாரூர் - இது கமலை பீடம், காமகலா பீடம் என்றும் கூறுவர்.
6 - கன்னியாகுமரி - இது தேவியின் பிருஷ்டபாகம் விழுந்த இடம்.
7 - அம்பத்தூர் - சென்னைக்கு அருகிலுள்ள வைணவி ஆலயம், சக்திபீட வரிசையில் ஐம்பத்தோரூர் என்பதே அம்பத்தூர் என மருவியதாகக் கூறுவர்.
8 - கோகர்ணம் - வலது காது விழுந்த இடம். பரசுராம ஷேத்திரம். தேவியின் திருநாமம் பத்ரகர்ணிகை.
9 - ஸ்ரீ சைலம் - இடது காது விழுந்த இடம். சிறந்த சிவத்தலம். அம்பிகையின் திருநாமம் பிரமராம்பாள். மாதவி பீடம்.
10 - பூரி - நாபி விழுந்த இடம். உத்கலம் எனப்படும் ஒரிசா மாநிலத்தில் உள்ளது. பைரவ பீடம். தேவியின் திருநாமம் விமலை.
11 - சிருங்கேரி - மைசூர் மாநிலத்தில் உள்ளது. தேவி சாரதையாகத் திகழ்கின்றாள்.
12 - கோலாப்பூர் - கண்கள் விழுந்த இடம். அன்னை மகா இலக்குமியாக விளங்குகின்றாள்.
13 - அரசூர் - தனம் விழுந்த இடம். ஆபூமலைக்கு அருகில் உள்ளது. இங்கு சிலா வடிவில் இல்லாமல் அம்பிகை யந்திர வடிவில் அம்பிகா என்ற திருநாமத்துடன் விளங்குகின்றாள்.
14 - ஜலந்தரா - தனம் விழுந்த இடம். தேவியின் திருநாமம் திரிபுரமாலினி.
15 - துவாராவாட் - குஜராத் மாநிலத்தில் உள்ளது.
16 - பிரபாசா - திருவயிறு விழுந்த இடம். இதனை சோமநாதத் தலம் என்றும் கூறுவர்.
17 - பராகத் - இக்குன்றின் அமைப்பே காளிகா யந்திர உருவில் உள்ளது.
18 - சிம்லா - தேவியின் திருநாமம் சியாமளா. இதுவே திரிந்து சிம்லா ஆயிற்று.
19 - மானசரோவர் - இது ஒரு தடாகம். தலை விழுந்த இடம். இமயத்தில் உள்ளது. அம்பிகை தாட்சாயணி. குமுதா பீடம்.
20 - காஷ்மீரம் - கழுத்து விழுந்த இடம். அம்பிகையின் திருநாமம் மகாமாயை.
21 - நேபாளம் - முழங்கால் விழுந்த இடம். இங்குள்ள அஷ்ட மாத்ருகைகளின் ஆலயம் புகழ்மிக்கது.
22 - ஜுவாலாமுகி - நாக்கு விழுந்த இடம்.
23 - சுகந்தா - மூக்கு விழுந்த இடம். இமயமலைச் சரிவில் உள்ள தலம்.
24 - வாரணாடி ( காசி ) - காதுக் குண்டலம் விழுந்த இடம். இது மணிகர்ணிகை பீடம். தேவியின் திருநாமம் விசாலாஷி.
25 - நைமிசாரண்யம் - அம்பிகை இலிங்க தாரிணியாகத் திகழ்கின்றாள்.
26 - குருஷேத்திரம் - முழங்கை விழுந்த இடம்.
27 - பிரயாகை - கைவிரல்கள் விழுந்த இடம்.
28 - உஜ்ஜயினி - இங்கு தேவி மங்கள சண்டிகையாக விளங்குகின்றாள். மகாகவி காளிதாசனுக்கு அருள் நல்கியவள்.
29 - பிருந்தாவனம் - கூந்தல் விழுந்த இடம். இராதா பீடம்.
30 - அத்தினாபுரம் - இங்கு அம்பிகையின் திருநாமம் ஜெயந்தி. ஜயந்தி பீடம்.
31 - கன்னியாகுப்ஜம் - கௌரி பீடம். அம்பிகையின் திருநாமம் கௌரி.
32 - புஷ்கரம் - அன்னையின் திருநாமம் புருஹுதை. புருஹுதா பீடம்.
33 - கேதாரம் - சன்மார்க்க தாயினி பீடம்.
34 - பத்ரை - பத்ரேஸ்வரி பீடம்.
35 - உருத்திர கோடி - உருத்ராணி பீடம்.
36 - சாளக்ராமம் - மஹாதேவி பீடம்.
37 - மலயாசலம் - தேவியின் திருநாமம் கல்யாணி. ரம்பா பீடம்.
38 - தேவிகா தடம் - நந்தினி பீடம்.
39 - சஹஸ்திராஷம் - உத்பலாஷி பீடம்.
40 - வராக சைலம் - ஜயா பீடம்.
41 - இரண்யாஷம் - மகோத்பலா பீடம்.
42 - திரிகூடபர்வதம் - உருத்திர சுந்தரீ பீடம்.
43 - சஃயபர்வதம் - ஏகவீரா பீடம்.
44 - வைத்தியநாதம் - ஆரோக்யா பீடம்.
45 - மகாகாளம் - மஹேஸ்வரி பீடம்.
46 - விந்தியபர்வதம் - நிதம்பை பீடம்.
47 - வேதமுகம் - காயத்ரீ பீடம்.
48 - ஹேமகூடம் - மன்மதா பீடம்.
49 - அமர கண்டம் - சண்டிகா பீடம்.
50 - கல்கத்தா - கால் விரல்கள் விழுந்த இடம். அன்னை காளிகா தேவியாக அருள் பாலிக்கின்றாள்.
51 - காமரூபம் - உபஸ்தம் விழுந்த இடம். இத்தலம் அஸ்ஸாமில் உள்ளது. காமாக்யா என்பது அம்பிகையின் திருநாமம்
புதன், 25 நவம்பர், 2020
அருள் மிகு அபய வரதீஸ்வரர் திருக்கோவில்
அருள் மிகு அபய வரதீஸ்வரர் திருக்கோவில்
மூலவர் :அபய வரதீஸ்வரர்
அம்மன் :சுந்தர நாயகி
தல விருட்சம் :வில்வம்,வன்னி
பழமை :1000 வருடங்களுக்கு முன்
ஊர் :அதிராம்பட்டினம்
மாவட்டம் :தஞ்சாவூர்
மாநிலம் :தமிழ்நாடு
திருவிழா:பங்குனி உத்திரம் இத்தலத்தின் முக்கிய திருவிழா. தவிர திருக்கார்த்திகை, ஐப்பசி அன்னாபிஷேகம், மகா சிவராத்திரி, ஆருத்திரா அபிஷேகம்.
தல சிறப்பு:இத்தல அம்மன் தெற்கே கடலை பார்த்து அருள்பாலிப்பதால் கடல் பார்த்த நாயகி என்ற பெயரும் உண்டு. சம்பந்தர் பாடலில் இத்தலம் வைப்புத்தலமாக போற்றப்படுகிறது. ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திரத்தன்றும் சித்தர்கள் இங்கு அரூப வடிவில் வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது.
திறக்கும் நேரம்:காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:திரு.உத்திராபதி அவர்கள் அருள்மிகு அபயவரதீஸ்வரர் திருக்கோயில் அதிராம்பட்டினம்-614 701 பட்டுக்கோட்டை தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம்.போன்:+91 99440 82313,94435 86451
பொது தகவல்:திருவாதிரை நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: மற்றவர்களிடம் எளிதில் பழகி தங்களின் நண்பராக்கும் திறமை உடையவர்கள். சாமர்த்தியமாக சம்பாதிக்கும் குணம் கொண்ட இவர்கள், அதை திட்டமிட்டு முறையாகச் செலவழிக்கவும் செய்வர். வாதம் செய்வதில் வல்லவர்களாக இருப்பர். கலைகளில் மிகுந்த ஈடுபாடு காட்டுவர். சுபவிஷயங்களை முன்னின்று நடத்துவர்.
பிரார்த்தனை:திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். தீராத நோயால் அவதிப்படுபவர்கள், எம பயம் உள்ளவர்கள், ஆயுள் விருத்தி வேண்டுபவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள். ஆயுஷ் ஹோமமும், மிருத்தஞ்சய ஹோமமும் இங்கு அதிக அளவில் செய்யப்படுகிறது. எந்த தோஷத்தினாலும் திருமணத்தில் தடை இருந்தாலும் இங்கு வழிபாடு செய்தால் பலன் நிச்சயம்.
நேர்த்திக்கடன்:சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், ராகு-கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்களும் வாழ்நாளில் அடிக்கடி வழிபட வேண்டிய சிறந்த தலம் இது. திரிநேத்ர சக்தி கொண்ட தலம். தன்னை நம்பியவருக்கு அபயம் தரும் அபய வரதீஸ்வரராக இத்தல இறைவன் விளங்குகிறார். இத்தல அம்மன் தெற்கே கடலை பார்த்து அருள்பாலிப்பதால் கடல் பார்த்த நாயகி என்ற பெயரும் உண்டு. சம்பந்தர் பாடலில் இத்தலம் வைப்புத்தலமாக போற்றப்படுகிறது. ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திரத்தன்றும் சித்தர்கள் இங்கு அரூப வடிவில் வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது. திருக்கடையூருக்கு அடுத்தபடியாக எமபயம் போக்கும் தலமாக இத்தலம் விளங்குகிறது. சமயக்குரவர் மூவரில் சுந்தரரும், சம்பந்தரும் இத்தலத்தை தங்களது தேவார வைப்புத்தலமாக பாடியுள்ளனர்.
எம பயம் போக்கும் தலம்: தீராத நோயால் அவதிப் படுபவர்கள், எமபயம் உள்ளவர்கள், ஆயுள் விருத்தி வேண்டுபவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள். ஆயுஷ் ஹோமமும், மிருத்யுஞ்ஜய ஹோமமும் திருக்கடையூருக்கு அடுத்தபடியாக இங்கு அதிக அளவில் செய்யப்படுகிறது. இந்த நட்சத்திர பெண்களுக்கு எந்த தோஷத்தினால் திருமணத்தில் தடை இருந்தாலும் இங்கு வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த மன்னர் அதிவீரராமபாண்டியன் இத்தல இறைவனை வழிபட்டு பல அரிய திருப்பணிகள் செய்துள்ளார். ஆரம்ப காலத்தில் இத்தலம் திருஆதிரைப்பட்டினமாக இருந்து,அதிவீரராமன் பட்டினமாகி, தற்போது அதிராம்பட்டினமாக மாறிவிட்டது.
தல வரலாறு:முன்னொரு காலத்தில், அசுரர்களால் துரத்தியடிக்கப்பட்ட தேவர்களும், முனிவர்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ள திருவாதிரை நட்சத்திர மண்டலத்தில் தஞ்சம் புகுந்தனர். பிரதோஷ காலத்திலும், திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளிலும், சிவபெருமான் உலாவரும் லோகங்களில் திருவாதிரை நட்சத்திர மண்டலமும் ஒன்று. இந்த மண்டலத்தில் நுழையவே அசுரர்கள் பயப்படுவர். அதே நேரம் அங்கு சென்று சரணடைந்தவர்களை அவர் அபயம் தந்து காப்பாற்றுவார்.
இதனால் சிவனுக்கு அபயவரதீஸ்வரர் என்று பெயர். எனவே திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், திருவாதிரை நாளில் இங்கு வழிபாடு செய்வது சிறந்த பலன் தரும். பைரவ மகரிஷி, ரைவத மகரிஷி ஆகியோர் இத்தலத்தில் அருவமாக அபயவரதீஸ்வரரை வழிபாடு செய்வதாகக் கூறப்படுகிறது. ரைவதம் என்பது சிவனது முக்கண்ணிலும் ஒளிரும் ஒளியாகும். இந்த சக்தியின் வடிவமாக ரைவத மகரிஷி திருவாதிரை ஆருத்ரா தரிசன நாளில் அவதரித்தார். இந்த முனிகள் இருவரும் திருவாதிரை நாளில் இங்கு வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது. ஆதிரை லிங்கமாய் ஆமறை ஜோதியன் ஆதிரை தானதில் அபயமென்றருளுவன் ஆதிரை வதனழல் ஆகிடும் ஆதியில் ஆதிரு ஆதிரை ஆலமர் ஆரணா! என்ற திருவாதிரை கோயில் பற்றிய பாடலை, திருவாதிரை நட்சத்திரக்காரர்கள், அபயவரதீஸ்வரர் முன் நின்று பாடி வணங்கினால் சிவனின் திருவருளையும், ரைவத மகரிஷியின் அருளையும் பெறலாம்.
அருள் மிகு அதிதீஸ்வரர் திருக் கோவில்
அருள் மிகு அதிதீஸ்வரர் திருக் கோவில்
மூலவர் :அதிதீஸ்வரர்
அம்மன் :பெரியநாயகி, பிரகன் நாயகி
தல விருட்சம் :அகண்ட வில்வமரம்
தீர்த்தம் :சிவதீர்த்தம்
பழமை :1500வருடங்களுக்கு முன்
புராண பெயர் :வாணியம்மைபாடி
ஊர் :வாணியம்பாடி
மாவட்டம் :வேலூர்
மாநிலம் :தமிழ்நாடு
திருவிழா:சித்திரை பிரமோற்சவம், மகா சிவராத்திரி, திருவாதிரை.
தல சிறப்பு:இங்குள்ள தட்சிணாமூர்த்தி மான், மழு ஏந்தி, யோக பட்டை, சின் முத்திரையுடன் நந்தி மீது அமர்ந்துள்ளார்.
திறக்கும் நேரம்:காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில், வாணியம்பாடி, (பழைய வாணியம்பாடி) வேலூர் மாவட்டம்.
போன்:+91 4174 226 652,99941 07395, 93600 55022
பொது தகவல்:புனர்பூசம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: கல்வியில் ஊக்கம் கொண்ட இவர்கள், பேச்சுத் திறமை கொண்டவர்களாக இருப்பர். ஊர் சுற்றும் சுபாவமும் இயல்பும், ஆடம்பர குணமும் கொண்டிருப்பர். மனதில் உள்ளதை வெளிப்படையாகச் சொல்ல விரும்ப மாட்டார்கள். பிறரை நன்கு அறிந்து கொள்ளும் ஆற்றல் இவர்களுக்கு இருக்கும். நன்றியுணர்வுடன் உதவி செய்தவர்களைப் போற்றும் குணம் இருக்கும். இக்கோயில் பல்லவப்பேரரசர்களால் கட்டப்பட்டது. மூன்று நிலை மேற்கு ராஜகோபுரமும், ஐந்து நிலை கிழக்கு ராஜகோபுரமும் உள்ளது. சிவன் மேற்கு நோக்கியும், சரஸ்வதி கிழக்கு நோக்கியும் உள்ளது சிறப்பு.
பிரார்த்தனை:புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும், திக்குவாய், ஊமைத்தன்மை நீங்கவும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.
நேர்த்திக்கடன்:பால், தேன், நதிநீர், அன்னம் ஆகியவற்றால் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
தலபெருமை:மேற்கு நோக்கிய இந்தக் கோயிலை வழிபட்டால் ஆயிரம் கிழக்கு பார்த்த கோயிலை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அம்மன் பெரியநாயகி தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறாள். ராமபிரான் பிறந்த நட்சத்திரம் புனர்பூசம் என்பதும் குறிப்பிடத்தக்கது.காச்ய முனிவரின் தர்ம பத்தினி அதிதி. இவள் புனர்பூசம் நட்சத்திரம் தோறும் இத்தலத்தில் விரதமிருந்து தேவர்களை பெற்றாள் என புராணங்கள் கூறுகிறது. எனவே புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் அடிக்கடியோ, தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ சென்று வழிபட வேண்டிய தலம் வாணியம்பாடி. மாதம் தோறும் புனர்பூசம் நட்சத்திரத்தில் மளிகைசாமான்கள் வாங்கினால் தானிய விருத்தி அதிகரிக்கும்.புதுவீடு, வாடகை வீடு பால் காய்ச்சுதல் போன்ற விருத்தியாககூடிய செயல்களை இந்த நட்சத்திரத்தில் செய்வது சிறப்பு வாணி வழிபட்டு அருள் பெற்ற தலமாதலால், குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பும், பள்ளிமாணவர்கள் தேர்வு எழுதும் முன்பு இங்கு வந்து வாணியை வழிபாடு செய்தால் அதிக மதிப்பெண் பெறலாம் என்பது நம்பிக்கை. ஆசிரியர்கள் தங்கள் தொழிலை துவங்கும் முன்பும் இங்குள்ள வாணியை வழிபடுவது சிறப்பு. ஹோட்டல் தொழில் செய்பவர்கள் அடிக்கடி இங்கு வந்து அதிதீஸ்வரரை வழிபட்டு ஏழைகளுக்கு அன்னதானம் செய்கிறார்கள். இதனால் தங்களது தொழிலில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் நீங்கும் என்பது நம்பிக்கை.
தல வரலாறு:பிரம்மா சரஸ்வதியிடம், உலக உயிர்களை படைக்கும் நான் தான் பெரியவன். எனவே தான் பிரம்மா, விஷ்ணு, சிவன் என எனது பெயரை முதலில் கூறுகிறார்கள், எனக் கூறினார். இதைக்கேட்டு கலைமகளுக்கு சிரிப்பு வந்தது. கோபமடைந்த பிரம்மா, வாணியை பேசும் சக்தியற்றவளாக மாறும்படி சபித்தார். வருந்திய வாணி பூலோகம் வந்து சிருங்கேரி என்னும் தலத்தில் தவம் இருந்தாள். வாணியை பிரிந்த பிரம்மா, தேவர்களைத் திருப்திப் படுத்தி யாகம் செய்து, அவர்கள் மூலம் மனைவியைக் கண்டுபிடிக்க முற்பட்டார். ஆனால், மனைவி இல்லாமல் செய்யும் யாகத்தின் பலனைத் தங்களால் பெற முடியாது என தேவர்கள் சொல்லி விட்டனர். எனவே பலதிசைகளிலும் தேடி, சிருங்கேரியில் அவளைக் கண்டுபிடித்தார். அவளை சமரசம் செய்து அழைத்துச் சென்றார். செல்லும் வழியில், பாலாற்றின் வடகரையில் அமைந்துள்ள சிவாலயத்தில் தங்கினார். இதனால் மகிழ்ந்த சிவனும்,பார்வதியும் வாணிக்கு அருள்செய்து அவளைப்பாடும்படி கூறினர். வாணியும் பேசும் சக்தி பெற்று இனிய குரலில் பாடினாள். (கலை)வாணி பாடிய தலம் என்பதால், இவ்வூர் வாணியம்பாடி ஆனது.
சுருளிமலை
சுருளிமலை அதிசயம்!
உலக அதிசய பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலையை யுனெஸ்கோ [unesco] நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் பருவ கால நிலைகளில் மாற்றம் செய்து மழையை பொழியச் செய்வதில் இதன் பங்கு அளப்பரியது.
மேற்கு தொடர்ச்சி மலை என்பது வட இந்தியாவிலிருந்து தொடங்கி பல்லாயிரம் மைல் அளவில் பரந்து நமது தமிழ்நாட்டின் வழியாக கேரளா வரை அமைந்துள்ளது.
பதினெட்டுச் சித்தர் பெருமக்களும் சங்கம் அமைத்து வாழ்ந்த மலை எனவும் தென் இந்தியாவின் "கைலாய மலை" எனப் போற்றப்படும் "சதுரகிரி மலை" இதில் தான் அமைந்துள்ளது.இதனுடன் இணைந்து கேரளா எல்லை வரை பரவி தெய்வீக ஆற்றலுடன் விளங்கும் ஒரு மலைதான் "சுருளி மலை" ஆகும். இம் மலை தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
சுருளி மலை பற்றிய அதிசய செய்தி ஒன்று சுமார் 25 வருடங்களுக்கு முன்பு ஒரு வார இதழில் வெளிவந்தது. அதில் உள்ள விபரம் :-
அந்தக் கால அதிசயம் - மர்மக்குகையில் தேவ கன்னிகைகளா ? என்ற
தலைப்பில் வெளியான கட்டுரை விபரம்.
மதுரையில் இருந்து தேனி வழியாக 70 -கிலோ மீட்டர் தொலைவில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதில் அமைந்துள்ளது சுருளிமலை.
ஆண்டு முழுதும் தண்ணீர் வற்றாமல் எப்போதும் கொட்டிக் கொண்டி ருக்கும் சுருளி அருவி மிகப் பிரசித்தி பெற்றது. இவ்வளவு நீர் எங்கி ருந்து உற்பத்தியாகிறது என்பது இன்று வரை யாருக்கும் புரியாத புதிர்.
ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு மேல் காட்டுக்குள் மனிதர்கள் செல்வ தில்லை கதம்ப வண்டுகள் ஐந்து கொட்டினாலே ஆள் காலி என்கின்ற னர்.
அருவிக் கரையில் இருந்து மூன்று பர்லாங் தொலைவில் “கைலாச நாதர் குகை” உள்ளது. கம்பம் பள்ளத்தாக்கில் வசிக்கும் பெரும்பான்மை இனமான கன்னடம் பேசும் கவுடர்களில் "மார்கழியார்" என்ற பிரிவினர் சில ஆண்டுகளுக்கு முன்னர் தங்களுக்குள் பூசாரி ஒருவரை தேர்ந்தெடுக்கவும சுருளி மலையில் மறைந்துள்ள "கிருஷ்ண பகவானின்" புல்லாங் குழலைக் கண்டு பிடிக்கவும் இங்கு யாகம் வளர்த்து அன்ன தானம் செய்தனர். அப்போது பத்து வயது சிறுவனுக்கு சாமி [அருள்] வந்து கைலாசநாதர் குகைக்குள் நுழைந்தாக வேண்டும் என்றான்.
அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். குகைக்குள் நுழைவது அத்தனை சுலபமல்ல. கும்மிருட்டு விஷ ஜந்துக்கள் இருக்கலாம் மேலும் நிமிர்ந்த நிலையில் உள்ளே புக முடியாது.! படுத்த நிலையில் தவழ்ந்து தான் போக வேண்டும். எனவே சிறுவன் கையில் ஒரு அகல் விளக்கை கையில் பிடித்தபடி தவழ்ந்து சென்றான். சுமார் ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்து அவன் சொன்ன செய்திகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின.
உள்ளே மிகப்பெரிய அரங்கம். ஒளி உமிழும் உருண்டைகள் ஆங்காங்கே கல் தூண்களின் நுனியில் பொருத்தப் பட்டிருந்தனவாம். திரு நீற்றில் புரண்டு எழுந்தார் போல் வெண்மையான உடலும் நீண்ட தாடியும் கொண்ட முனிவர்கள் கல் ஆசனங்களில் அமர்ந்து தேவ கன்னிகளின் நடனத்திற்காக காத்திருந்தார்களாம்.
மற்றொரு அதிசயச் செய்தி இருப்பதாகவும் அது "தேவ ரகசியம்" என்றும் அந்த சிறுவன் கூறினான்.
சுருளி மலையில் உள்ள அருவியிலிருந்து மேற்கே சுமார் ஐந்தாறு மைல்களுக்கு அப்பால் தான் கேரளா தமிழ் மாநிலங்களுக்கு தீராத பிரச்சினையாக இருந்து வரும் “கண்ணகி கோயில்” [மங்கள தேவி கோட்டம்] உள்ளது.
மதுரையை எரித்த கையோடு தலைவிரி கோலமாக நடந்து வந்த கண்ணகி இந்த அருவியில் நீராடி புஷ்பக விமானம் ஏறிச் சென்றதாக கூறுகிறார்கள். மேலும் இங்கு தோண்டி எடுக்கப்பட்ட கண்ணகி சிலை மற்றும் கல்வெட்டுக்கள் மூலமாக இன்னும் பல ஆதாரபூர்வமாக வியத்தகு செய்திகளை ஆராய்ச்சியாளர்கள் விரைவில் தருவார்கள் என எதிர்பார்க்கலாம்.
ராமாயணம் பகுதி நான்கு
ராமாயணம் பகுதி நான்கு
தசரதரின் முன் வந்து நின்ற அந்த இளைஞன் வேறு யாருமல்ல... லட்சுமணன் தான்... தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்ற பழமொழிக்குச் சொந்தக்காரன்.தந்தையே! என் சகோதரன் எங்கிருக்கிறாரோ அங்கிருப்பதே எனக்கு பெருமை, வேலை, கடமை எனக்கருதுபவன் நான். அவர் கானகம் சென்றால் நானும் அவருடன் செல்வேன். அவரின்றி நான் இல்லை; அண்ணனுடன் செல்வதென முடிவெடுத்து விட்டேன், என்ற லட்சுமணனின் சொல் கேட்டு தசரதருக்கு இன்னும் இக்கட்டான நிலைமை ஆயிற்று. ஒரே நேரத்தில் இரண்டு மைந்தர்களை இழந்து விடுவோமோ என பயந்தார்.ஆனாலும், லட்சுமணனை தடுக்கும் சக்தி அவருக்கில்லை. இருவரும் கானகம் செல்ல தசரதர் அனுமதி அளித்தார். விஸ்வாமித்திரர் அந்த வீர சகோதரர்களுடன் காட்டுக்கு புறப்பட்டார். காட்டிற்குள் மனித ஜீவன்கள் யாருமே வருவதில்லை. தடாகை விழுங்கி விடுவாள் என்ற பயம். அங்கு வந்த பின், தாடகையை கொல்வதற்கு ராமன் யோசித்தார். ஏனெனில், அவள் ஒரு பெண். அரக்கியாக இருந்தாலும் பெண் என்பதால் அவளை கொல்வதற்கு ராமனிடம் தயக்கம் இருந்தது. விஸ்வாமித்திரர் ராமனின் எண்ணத்தை புரிந்து கொண்டார். ராமா, அவளுக்கு பெண்மைக்குரிய எந்த இலக்கணமும் கிடையாது. மனித மாமிசம் உண்ணும் பெண்மணியை கொல்வதில் எந்த தவறும் இல்லை. அவளை உடனே அழித்துவிடு, என்றார். ராமனும் விஸ்வாமித்திரரின் சொல்லில் இருந்த நியாயத்தை உணர்ந்து வில்லை எடுத்து ஒலி எழுப்பினார். அவரது நாண் அசைவில் அந்த கானகமே நடுங்கியது. விலங்குகள் ஓடி மறைந்தன. நாண் ஒலி கேட்டு கலங்கிப் போன தாடகை வெளியே வந்தாள். யாரடா அவன்! எனது கானகத்திற்குள் புகுந்து தைரியமாக வில்லை எடுத்தவன்! உன்னை ஒழிக்காமல் விடமாட்டேன், என கர்ஜித்தவளாக வெளியே வந்தாள்.
ராமன் வில்லெடுத்து தாடகையின் மீது அம்புமழை பொழிந்தார். தாடகை அலறிக் கொண்டே சாய்ந்தாள். உயிர் பிரிந்தது. அவளது மறைவு செய்தி அறிந்த மகன்கள் மாரீசனும், சுபாகுவும் ராமனை தாக்க பாய்ந்தோடி வந்தனர். சுபாகுவை அக்னி அஸ்திரத்தால் ராமன் சுட்டெரித்தார். மாரீசன் மீது மானவம் என்ற அஸ்திரத்தை எய்தார் ராமன். அது மயக்கும் சக்தி வாய்ந்தது. மயங்கி போன மாரீசன், எங்கோ ஓடிப் போய்விட்டான். ராமாயணத்தில் ராமனின் முதல் போர் இதுதான். போரில் வெற்றி பெற்ற ராமனை விஸ்வாமித்திரர் பாராட்டினார். ராமனுக்கும், லட்சுமணனுக்கும் பலம், அதிபலம் என்ற இரண்டு மந்திரங்களை கற்றுக் கொடுத்தார். மிக மிக களைப்பாக இருக்கும்போதோ, உடல் நலமற்ற வேளையிலோ, கவனக்குறைவாக இருக்கும்போதோ உயிருக்கு ஆபத்து உருவாகலாம். அந்த சமயத்தில் இந்த மந்திரத்தை பக்தியுடன் சொன்னால் எந்த அதர்மமும் அவர்களை அணுகாது. எனவே இந்த மந்திரங்களை ராம லட்சுமணர் மிகவும் கவனத்துடன் படித்தனர். படித்ததற்குரிய சக்தியும் அவர்களுக்கு கிடைத்தது. அரக்கர்களின் அழிவுக்கு பிறகு விஸ்வாமித்திரரின் யாகம் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. யாகம் முடிந்த பின், விஸ்வாமித்திரர் ராம, லட்சுமணர்களை மிதிலாபுரி நகருக்கு அழைத்தார். அந்நகரில், மிகச் சிறப்பு வாய்ந்த சிறப்பான வேள்வி நடத்தப்பட இருந்தது. அதைப் பார்த்த பிறகு ஊர் திரும்பலாம் என்பது விஸ்வாமித்திரரின் திட்டம். செல்லும் வழியில் கவுதம முனிவரின் ஆஸ்ரமத்தில் அவர்கள் தங்கினர். அங்கே சில சீடர்களைத் தவிர வேறு யாருமே இல்லை. கவுதமர் எங்கே என ராமன் விசாரித்தார். அவர் இமயமலைக்கு தவம் செய்ய சென்றுவிட்ட விபரம் தெரிந்தது. முனிவரின் மனைவி அகலிகை. அழகில் சிறந்தவள். அவளது அழகைக் கண்டு தேவேந்திரனே சபலப்பட்டான். ஒருமுறை கவுதமரைப் போலவே மாற்று உருவம் எடுத்துவந்து அவளை அடைந்தான். கோபம் அடைந்த கவுதமர் இந்திரனின் உடலழகு அழியும்படி சாபமிட்டார்.
அகலிகையை யார் கண்ணுக்கும் தெரியாமல் அதே ஆஸ்ரமத்தில் வசிக்கும்படி சொல்லிவிட்டு, களங்கமடைந்த அவள் புனிதமாவது எப்போது என்பது பற்றியும் சொல்லியிருந்தார். விஷ்ணு மானிடப் பிறப்பெடுத்து எப்போது பூமிக்கு வருகிறாரோ அவரது பாதம் படும் இடத்தில் நீ இருந்தால் மீண்டும் கற்புத்தன்மை பெறுவாய், என சொல்லியிருந்தார். இப்போது ராமபிரான் முனிவர் தங்கியிருந்த ஆஸ்ரமத்திற்கு வந்துவிட்டதால் அகலிகை சாபம் நீங்கி அனைவர் முன்னிலையிலும் தென்பட்டாள். அவள் கல்லாகக் கிடந்ததாகவும் கூறப்படுவதுண்டு. அந்தக் கல்லின்மீது ராமனின் பாதம் பட்டதும் அவள் மீண்டும் உருபெற்றாள் என்பார்கள். இந்த நேரத்தில் கவுதமரும் வந்து சேர்ந்தார். தம்பதியர் இணைந்தனர். அவர்கள் விஸ்வாமித்திரரையும், ராம லட்சுமணர்களையும் கனிவுடன் உபசரித்தனர். அகலிகை சாப விமோசனத்திற்கு பிறகு, அவர்கள் மிதிலாபுரி நகர் சென்றடைந்தனர். செல்வச்செழிப்பும், அறிவுடைய மக்களும் இணைந்த பூமி அது. காரணம் அந்நகரில் லட்சுமி நிஜமாகவே வாசம் செய்தாள். அந்நாட்டை ஜனக மகாராஜா ஆண்டு வந்தார். அவரிடம் விசித்திரமான ஒரு வில் இருந்தது. அதன் எடை மிக மிக அதிகமானது. அதை அசைக்கக்கூட யாராலும் இயலவில்லை. மன்னர் ஜனகரின் அவையில் குரு சதானந்தர் இருந்தார். அவர் கவுதம முனிவருக்கும், அகலியைக்கும் அவதரித்த திருமகன். மிதிலைக்கு வந்த ராம லட்சுமணர்களை அவர் அன்புடன் வரவேற்றார். தன் தாய்க்கு சாபவிமோசனம் அளித்த அந்த மகானை அவர் மிகவும் நேசித்தார். விஸ்வாமித்திரரிடம், முனிவரே! ஜனக மகாராஜா மிகப் பெரிய வேள்வியை நடத்த இருக்கிறார். வேள்வி முடிந்தபிறகு அவரது திருமகள் சீதைக்கு சுயம்வரம் நடத்தப்போகிறார். சுயம்வரத்திற்கு வரும் மன்னர்களுக்கு ஒரு போட்டி நடத்தப்படுகிறது. அரண்மனையில் இருக்கும் வில்லை நாணேற்றி யார் அம்பு எய்கிறார்களோ, அவருக்கே தன் மகள் சீதையை திருமணம் செய்து கொடுப்பதாக சக்கரவர்த்தி முடிவு செய்துள்ளார். ராமன் இந்த போட்டியில் நிச்சயமாக வெல்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே அவரை போட்டியில் கலந்து கொள்ள செய்யுங்கள், என்றார். விஸ்வாமித்திரரும் சம்மதித்தார். இதன் பிறகு தாங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு மூவரும் புறப்பட்டனர். நீலவண்ணமேனியன் ஒருவன் கருணை பொங்கும் கண்களுடனும், அழகு பொங்கும் வதனத்துடனும் வருவதைக் கவனித்தன இரு அழகு விழிகள்.
அருள் மிகு அட்சயபுரீஸ்வரர் திருக் கோவில்
அருள் மிகு அட்சயபுரீஸ்வரர் திருக் கோவில்
மூலவர் :அட்சயபுரீஸ்வரர்
அம்மன் :அபிவிருத்தி நாயகி
தல விருட்சம் :வில்வமரம்
பழமை :1000 வருடங்களுக்கு முன்
ஊர் :விளங்குளம்
மாவட்டம் :தஞ்சாவூர்
மாநிலம் :தமிழ்நாடு
திருவிழா:மகா சிவராத்தரி, திருக்கார்த்திகை, திருவாதிரை
தல சிறப்பு:இத்தலத்தில் சனீஸ்வர பகவான் தெற்கு நோக்கி மந்தா, ஜேஷ்டா மனைவியருடன் திருமண கோலத்தில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
திறக்கும் நேரம்:காலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:அருள்மிகு அட்சயபுரீஸ்வரர் திருக்கோயில், விளங்குளம்-614 612, பேராவூரணி தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம்.போன்: +91 97507 84944, 96266 85051.
பொது தகவல்:பூசம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: பெரியவர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்வர். மனதில் தெய்வபக்தி மேலோங்கி இருக்கும். மென்மையுடன் மற்றவர்களிடம் பழகுவர். கவலைகளை மறந்து சிரிக்கும் பண்பைப் பெற்றிருப்பர். எடுத்த செயலை வெற்றியோடு முடிக்கும் வைராக்கியம் இருக் கும். நண்பர்கள் மத்தியில் புகழோடு வாழ்வர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், சண்டிகேஸ்வரர், மனைவியருடன் சனீஸ்வரர், சூரியன், பைரவர், நந்தி, தட்சிணாமூர்த்தி, பிரம்மா, லிங்கோத்பவர், துர்க்கை, கஜலட்சுமி, நாகர், நடராஜர் சன்னதிகள் உள்ளன.
பிரார்த்தனை:பூசம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். உடல் ஊனமுள்ளவர்கள், கால் வலி உள்ளவர்கள், தோஷங்களினால் திருமணத்தில் தடை உள்ளவர்கள் இங்க வழிபாடு செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:பூச நட்சத்திரத்திற்குரியவர்கள் நல்லெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், புனுகு, இளநீர், சந்தனம், பால், தயிர் ஆகிய எட்டு வகை பொருள்களால் சனி பகவானுக்கு அபிஷேகம் செய்து, எட்டு முறை சுற்றி வந்து வழிபட்டால் தீராத பிரச்னைகள் தீரும்.
தலபெருமை: பூச பத நேசம் தரும் என்பது பழமொழி. பதன் என்பது சனீஸ்வரரை குறிக்கும். சனிபகவான் தன் பாத குறைபாடு நீங்க இத்தல் அட்சய புரீஸ்வரரை வேண்டி நிவாரணம் பெற்ற தலமே விளங்குளம். எனவே பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனிக்கிழமைகளிலோ, பூச நட்சத்திர தினத்தன்றோ, அட்சய திரிதியை நாளிலோ இத்தல இறைவனை வழிபட்டால் வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 27 நட்சத்திரத்தில் பூச நட்சத்திரம் 8வது நட்சத்திரமாக அமைந்துள்ளது. இதனால் பூச நட்சத்திரத்திற்குரியவர்கள் இந்த நாட்களில் நல்லெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், புனுகு, இளநீர், சந்தனம், பால், தயிர் ஆகிய எட்டு வகை பொருள்களால் சனி பகவானுக்கு அபிஷேகம் செய்து, எட்டு முறை சுற்றி வந்து வழிபட்டால் தீராத பிரச்னைகள் தீரும் என்பதும், அனைத்து வகையான சனி தோஷத்தினால் பாதிக்கப்ட்டவர்கள் இத்தலத்தில் மனைவியருடன் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கும் சனிபகவனை வழிபட்டால் தோஷங்களின் பாதிப்பு குறையும் என்பதும் ஐதீகம்.அடிக்கடி உடல் நலக்குறைவு, கடன் பிரச்னையால் அவதிப்படுபவர்கள், மன நிம்மதி வேண்டுபவர்கள், ஊனமுற்றவர்கள், கால் சம்பந்தமான நோய் உள்ளவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள் விளங்குளம் சனீஸ்வரரை வழிபட்டு வரலாம். இங்கு சனீஸ்வர பகவான் மந்தா, ஜேஷ்டா என்ற மனைவியருடன் திருமண கோலத்தில் ஆதிபிருஹத் சனீஸ்வரர் என்ற பெயரில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தல அபிவிருத்தி நாயகியை வழிபட்டால் சகல காரியங்களும் அபிவிருத்தியாகும். இத்தலத்தில் நவக்கிரக சன்னதி கிடையாது. அதற்கு பதில் சூரியனும் அவரது புத்திரர் சனிபகவானும் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர். விநாயகர் இத்தலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இதுபோன்ற அமைப்பை காண்பது அரிது. இவரை வழிபட்டால் அனைத்து காரியங்களிலும் விஜயம் கிடைக்கும் என்பதால் இவர் விஜய விநாயகர் என அழைக்கப்படுகிறார்.
தல வரலாறு:பூச பதன் நேசம் தரும் என்பது பழமொழி. பதன் என்பது சனீஸ்வரரைக் குறிக்கும். ஒருமுறை எமதர்மராஜன், தன் தந்தையான சனீஸ்வரனின் காலில் அடிக்க அது ஊனமானது. இதற்கு நிவாரணம் தேடி பல சிவத்தலங்களுக்கு அவர் சென்றார். இத்தலத்துக்கு வந்தபோது, விளாமரவேரில் கால் இடறி அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்தார். அவர் விழுந்தநாள் திருதியையும், பூச நட்சத்திரமும், சனிவாரமும் சேர்ந்த நன்னாளாக இருந்தது. அவர் விழுந்த இடத்தில் இருந்து, பல காலமாக மறைந்திருந்த பூச ஞானவாவி தீர்த்தம் சுரந்து சனீஸ்வரரை மேல் எழுப்பி கரை சேர்த்தது. அப்போது சிவபெருமான் அட்சயபுரீஸ்வரராக சனீஸ்வரருக்கு காட்சிதந்து, திருமண பாக்கியமும் தந்தார். சனீஸ்வரரின் ஊனம் நிவர்த்தி ஆனது. விளாமரம் இருந்ததாலும், தீர்த்தம் சுரந்ததாலும் இவ்வூர் விளங்குளம் ஆனது. பூச நட்சத்திர லோகத்தில் வசித்த பூச மருங்கர் என்ற சித்தர், சனீஸ்வர லோகத்திலிருக்கும் சனிவாரி தீர்த்தத்தை எடுத்து, பூமியில் பல கோயில்களில் உள்ள தீர்த்தங்களில் அதை சேர்ப்பார். அந்த தலங்களில் எல்லாம் சனீஸ்வரருக்கு முக்கியத்துவம் உண்டாயிற்று. இந்த சித்தர் சூரியலோகத்துக்கும், பித்ரு லோகத்துக்கும் கூட தினமும் சென்று வரும் அரிய சக்தியை உடைய பித்ரசாய் என்னும் காக்கைகளுக்கு சற்குருவாக விளங்குகிறார். இவர் தினமும் இத்தலத்தில் வழிபாடு செய்வதாக ஐதீகம்.
பிரதீபன்
பிரதீபன்!
சந்திர வம்சாவளியில் பரதனை தொடர்ந்து வந்தவர்களில், பிரதீபன் என்னும் அரசன் மகாபாரதத்தில் நாம் அறிந்திராத பாத்திரம். பிரதீபன் ஆன்மிக நெறி அறிந்தவன். கங்கை நதிக்கரையில் மனதை அடக்கி தவம் செய்யத் தொடங்கினான். ஒருநாள் அவனைக் கண்ட கங்கைக்கு அவன் மீது காதல் தோன்றியது.அவனது வலது தொடையில் அமர்ந்து தன் காதலைக் கூற முற்பட்டாள். ஆனால்,பிரதீபன் அவளது காதலை மறுத்துவிட்டான்.மனித வாழ்வின் தர்மநெறிபற்றி அவளிடம் கூறத் தொடங்கினான். கங்கா!என்னை நீ விரும்பியதில் பிழையில்லை. ஏனென்றால்,ஒருவரை விரும்புவதன் பின்புலத்தில் சில நுட்பங்களும், விதிக்கூறுகளும் இருக்கும். ஆனால் உன்னைப் பொறுத்த வரையில், அந்த விதிக்கூறு தவறாகி விட்டது. நீ எனது இடது தொடையில் அமர்ந்து என்னை மோகித்திருந்தால், நான் உன்னை ஏற்றிருப்பேன். ஆனால் வலது தொடையில் அமர்ந்து விட்டாய். வலத்தொடை சந்ததிகளும், மருமகளும் அமர வேண்டியது.அவ்வகையில், நீயும் என் மருமகளாகிறாய். அதனால், உன்னை மணக்க ஒரு புத்திரனைத் தருவேன், என்றான். பிரதீபனுடைய பேச்சிலிருந்த தர்ம சிந்தனைக்கு கங்கையும் கட்டுப்பட்டாள்.அரசே! காலக்கணக்கிற்கு அப்பாற்பட்ட நான், காலக்கணக்கிற்கு கட்டுப்பட்ட மானிடர்களோடு சம்பந்தம் கொள்வதன் மூலம் பாவங்களைப் போக்கும் என் குணப்பாடும், உயிர்களைக் காக்கும் என் கருணையும், தாகம் தீர்க்கும் என் தயையும், எனக்குப் பிறக்கின்ற பிள்ளையிடத்திலும் குவிந்திருக்கும். இதன் மூலம் வருங்காலத்தில் பரதவம்சத்தின் போக்கிலும் அது எதிரொலிக்கும்.
அப்படி ஒரு பிள்ளையைப் பெற்றிட உங்களின் தவம் பயன்படட்டும், என்று கூறிச் சென்றாள். அவ்வாறு கங்கைக்காக, உருவான புத்திரனே சந்தனு. சந்தனு முற்பிறப்பில் மகாபிஷக் என்ற தேவனாக இருந்தான். ஒருசமயம் கங்கை பிரம்மலோகம் சென்றபோது, அவளை இச்சையுடன் பார்த்தான். அதனால், மானிடப் பிறப்பெடுக்க வேண்டிய சாபம் ஏற்பட்டது. அவனே, தற்போது சந்தனுவாகப் பிறந்திருக்கிறான். வாலிப பிராயத்தில், அவன் கங்கைக்கரைக்கு வந்தான். அவனுக்காகவே, காத்திருந்த கங்கையைக் கண்டான். ஆனால், அவள் தான் கங்கை என்று அவனுக்குத் தெரியவில்லை. அது தான் விதியின் மாயை. பிரம்மதரிசனத்தின் போது, மகாபிஷக்காக இருந்து அன்று கொண்ட காதல், இப்போதும் அவள் மீது ஏற்பட்டது. கங்கைக்கோ, இரண்டு கடமைகள் இருந்தது. ஒரு புறம் இந்த சந்தனுவைச் சேர வேண்டும் என்பது. இன்னொன்று அஷ்ட வசுக்களுக்கு கொடுத்த வாக்கு. அஷ்ட வசுக்கள் என்பவர்கள் வசிஷ்டரிடம் இருந்த காமதேனு என்னும் பசுவை கவர்ந்து விட்டனர். இதன் காரணமாக, அவர்கள் பூமியில் பிறக்க வசிஷ்டர் சாபமிடுகிறார். அவர்கள் பிரம்மலோகம் வந்த கங்காதேவியைச் சரணடைந்து, அவளுக்கே பிள்ளைகளாகப் பிறந்து உடனடியாக தங்களை கொன்று விடும்படி கேட்டுக் கொண்டனர். அவ்வாறு செய்வதன் மூலம், மானிடப்பிறப்பு உடனடியாக நீங்கும் என அவர்கள் கணக்கிட்டனர். அவர்களின் கோரிக்கையை கங்காதேவியும் ஏற்றுக் கொண்டாள். இதன் காரணமாக, சந்தனுவின் காதலை ஏற்றாள். ஆனால், சில நிபந்தனைகளை சந்தனுவுக்கு விதித்தாள்.
அரசே! நான் உங்கள் மனைவி ஆவதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால், என்னுடைய மூலத்தை நீங்களோ, உங்களைச் சார்ந்தவர்களோ துளியும் அறிந்து கொள்ள முயலக்கூடாது. நான் விரும்பிச் செய்யும் எதையும் தடுக்கக் கூடாது. என்மனம் வருந்தும் விதமாக நடக்கக் கூடாது. இதில் எது நடந்தாலும், நான் அடுத்த நொடியே உங்களை விட்டுப் பிரிந்து விடுவேன், என்றாள். சந்தனு காதல் மோகத்தில் நிபந்தனைகளை ஏற்றான். இருவருக்கும் திருமணம் ஆனது. கங்கை விதித்த நிபந்தனைகளின் படியே அவன் நடந்து கொண்டான். அந்த வேளையில், சாபமுற்றிருந்த அஷ்ட வசுக்கள் தங்களின் சாபவிமோசனத்திற்காக காத்திருந்து, ஒவ்வொருவராக கங்கையின் வயிற்றில் கருவாயினர். முதல் குழந்தை பிறந்தது. அந்த பிஞ்சுக் குழந்தையை புரண்டு வரும் கங்கையில் அவள் தூக்கிவீச, ஜலபிரவாகம் அந்த குழந்தையை ஏற்றுக் கொண்டது. இதேபோல, அடுத்தடுத்து ஏழு குழந்தைகள் பிறந்தன. அத்தனைபேரும், கங்கை நதியில் மூழ்கிப் போயினர். நிபந்தனைப்படி, சந்தனு ஏதும் கேட்க முடியாமல் இருந்தான். எட்டாவது வசு தான், வசிஷ்டரின் ஆஸ்ரமத்திற்குச் சென்று அங்குள்ள காமதேனுவைத் திருடி வந்தான். அவன் இம்முறை கங்கையின் வயிற்றில் கரு கொண்டான். கரு வளர வளர, சந்தனுவிடமும் மனதில் நிறையவே மாற்றங்கள். ஒன்றுக்கு ஏழு பிள்ளைகளை நான் நிபந்தனை என்னும் பெயரால் இழந்துவிட்டேன். இந்த பிள்ளையை அதுபோல இழக்க மாட்டேன். இவன் எனக்கு வேண்டும் என்கிற எண்ணம் மிக தீர்க்கமாகத் தோன்றுகிறது. எனவே, இந்த பிள்ளையைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் எட்டாவது பிள்ளை பிறந்து, கங்கை குழந்தையை ஆற்றில் வீச சென்றபோது, பின் தொடர்ந்த சந்தனு அவளைத் தடுத்து நிறுத்தினான்.
கங்கா! இது நாள் வரையில் உன் நிபந்தனை களுக்குக் கட்டுப்பட்டு வந்தேன். என்னைக் கல்லாக்கிக் கொண்டேன். ஆனால், இம்முறை அவ்வாறு இருக்க இயலவில்லை. இந்த பிள்ளையையும் நீ கொல்வதை அனுமதிக்க முடியாது. அதுமட்டுமின்றி, நீ ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறாய் என்பதை என்னால் கேட்காமலும் இருக்க முடியாது. நீ யார்? எதனால் இப்படி நடந்து கொள்கிறாய். ஒரு தாய் செய்கிற காரியமா இது? என்று வெடித்துக் கதறினான். கங்கையும் பதில் கூறத் தொடங்கினாள். அரசே! இப்படி கோபத்தோடு என்னைக் கேள்வி கேட்கும் நாளுக்காகவே காத்திருந்தேன். ரிஷிகளின் சாபமும், விதியின் பலனும் எப்போதும் வலியவை. என் மூலமாய் அவை உங்களை நிபந்தனை என்னும் பெயரால் கட்டிப்போட்டு விட்டன. முதலில் நான் யார் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். உத்தமரான ஜனக மகரிஷியின் புதல்வி நான். என் பெயர் கங்கை. உங்களை நான் மணந்தது, நமக்கு எட்டுப்பிள்ளைகள் பிறந்தது என்கிற எல்லாமே, விதியின்படி நடந்தது. அதை அறிய நீங்கள் அஷ்ட வசுக்களைப் பற்றியும், அவர்களுக்கு நான் அளித்த வாக்கினையும் தெரிந்து கொள்ள வேண்டும்.... என்று ஆரம்பித்தவள் சகலத்தையும் கூறி முடித்தாள். அனைத்தையும் கேட்ட சந்தனுவிடம் திகைப்பு....பிரமிப்பு.... அந்த பிரமிப்பில் இருந்து விடுபடாதவனாக இருந்த சந்தனுவிடம், முற்பறப்பில் அவன் மகா பிஷக் என்பவனாக இருந்து அப்போதே மோகித்த வரலாறையும் சொன்னாள். தொடர்ந்து, அரசே! எட்டாவதாகப் பிறந்த இவன், அஷ்ட வசுக்களின் பலம் மிகுந்த அம்சத்தை உடையவன். அவர்களின் வரத்தால் நிரம்பியவன். அஷ்ட வசுக்களும் தேவர்கள். எனவே, இவன் ஒரு தேவவரதன். அடுத்து இவன் என் அம்சங்களையும் கொண்டிருப்பவன். எனவே, இவன் கங்காதரன்.
பிறப்பிலேயே சிறப்புடைய இவனுக்கு, அரிய பல வித்தைகளைக் கற்பிக்க விரும்புகிறேன். நிபந்தனைப்படி, நீங்கள் என்னைக் கேள்வி கேட்டதால், உங்களை விட்டும் பிரியும் இவ்வேளையில் இவனையும் என்னோடு அழைத்துச் செல்லப் போகிறேன். இது என்ன நியாயம் என்று கூட நீங்கள் கேட்கலாம். இவ்வேளையில், உங்களுக்கு நான் ஒரு வாக்கினை அளிக்கிறேன். இவனை உங்களின் சந்திர வம்சத்திற்கென்றே பெரும் வீரனாக உருவாக்குவேன். இவன் வாலிப பிராயத்தை எட்டியதும் பெரும் வீரனாக உங்கள் வசம் ஒப்படைப்பேன். இப்போது எனக்கு விடை கொடுங்கள், என்றாள் கங்காதேவி. சந்தனுவால் எதுவும் பேச முடியவில்லை. காலம் வலை போல பின்னிக்கொண்டு, காரண காரியங்களோடு பல செயல்களைச் செய்து கொண்டே போகிறது. மகனைப் பிரிந்து வாழ்வது, ஒருபுறம் வருத்தமாக இருந்தாலும், அஷ்டவசுக்களின் அம்சங்களோடு அவன் உருவானதை நினைக்க மகிழ்வாகவும் இருந்தது. காலம் உருளத் தொடங்கியது. கங்காதேவியும் தான் அளித்த வாக்குப்படி, சகல வித்தைகளையும் மகனுக்குப் பயிற்றுவித்தாள். அதில் தேவலோக வித்தைகளும் அடக்கம். இந்த வித்தைகள் தான், அந்த மகனை மகாபாரதத்திலேயே தனித்துக் காட்டப் போகிறது. மேலும், துளியும் பெண் நினைப்பே இல்லாமல் அவனைக் கங்கை வளர்த்தாள். பெண்ணாசையாலேயே பிழைகள்- அதனாலேயே சாபங்கள்- பின் பலவித பிறப்புகள்..... தன் மகனுக்கு அப்படி ஒரு ஆபத்து நேரக்கூடாது என்னும் வைராக்கியத்தைப் புகட்டினாள். சந்தனு மகாராஜாவிடம் வந்து சேரப்போகும் அந்த இளைஞனே பீஷ்மன்.
கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபம்
கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாதத்தில் வரும் பெளர்ணமி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் கூடிய திருக்கார்த்திகை நாளில் கோயில்களிலும், வீடுகளிலும் இடம்பெறும் சிறப்பான தீபத் திருவிழாவாகும்.
கார்த்திகை மாதம் பெளர்ணமி நாளில் கார்த்திகை நட்சத்திரம் வருவதால், இம்மாதம் கார்த்திகை எனப் பெயர் பெற்றது.
கார்த்திகை நாளில் வரிசையாகத் திருவிளக்கேற்றி எங்கும் கொண்டாடும் வழக்கம் புராதன காலந்தொட்டு இருந்து வருகிறது. இந்த அழல் வழிபாடு தரிசனம் திருவண்ணாமலையில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
‘ஆடிப்பாடி அண்ணாமலை தொழ ஓடிப்போம் நமதுள்ள வினைகளே’ என்கின்றனர் அப்பர் சுவாமிகள். திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படுவதற்கான புராண வரலாறு மிகவும் பிரசித்தமானது.
திருவண்ணாமலை புண்ணிய பூமி, ஆன்மிக பூமி. யோகிகள், ஞானிகள், தபோதனர்கள், சித்தர்கள் வாழ்ந்த வாழ்கின்ற பூமி. தன்னை நாடி வந்தவர்க்கெல்லாம் அருள் வழங்கும் மலை ஜாதி, மதம், இனம், மொழி வேறுபாடின்றி அனைவருக்கும் முக்தி தரும் மலை. உலகப் புகழ் பெற்ற தீப தரிசனம், பெளர்ணமி புகழ் கிரிவலம் வரும் மலை திருவண்ணாமலையாகும்.
அடி முடி காணமுடியாத அனற் பிழம்பாகத் திருவண்ணாமலையில் எம்பெருமான் எழுந்தருளியுள்ள தத்துவத்தை உலகிற்கு உணர்த்தவே திருமாலும் நான்முகனும் எம் பெருமானின் அடிமுடி தேடினர் என்று சொல்லப்படுகிறது.
படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பல வருடங்கள் போரிட்டனர். இவர்களின் கர்வத்தை அடக்க எண்ணிய சிவபெருமான், இவர்கள் முன் சோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும், முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. அவ் ஜோதியின் முடியைக் காண அன்னப் பறவை வடிவங்கொண்டு சதுரமுகப் பிரம்மன் விண்ணுலகம் சுற்றினார். அடியைக் காண திருமால், வராஹ் அவதாரம் எடுத்து பாதாள லோகம் சென்று அடிமலரடியைத் தேடினார்.
அடிமுடி காணமுடியாத பரம்பொருளாக விளங்கினார் எம்பெருமான். அதனால் இருவரும் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று ஜோதிப்பிழம்பாக காட்சியருளினார்.
இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும். யோக நெறியால் அன்றிக் காண முடியாத தெய்வ ஒளியை திருவண்ணாமலையில் ஏறத்தாழ மூவாயிரம் அடி உயரத்தில் உள்ள மலைமேல் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காணலாம்.
காந்த மலையிலே கலியுக தெய்வம் அருள்மிகு ஐயப்பனின் மகர ஜோதி!
திருவண்ணாமலையிலே அவர்தம் ஐயனின் அண்ணாமலை ஜோதி!
மலை மீது காணப்படும் பெரும் செப்புக் கொப்பரையில் இருபத்து நான்கு முழம் துணி திரியாகப் போடப்படும். ஒரு மணங்கு கற்பூரத் தூள் சேர்த்துத் திரி சுற்றப்பட்டிருக்கும். இருபது மணங்கு நெய் ஊற்றி தீபத்தை ஏற்றுவார்கள். அந்த ஜோதியைக் காண்பதற்கு பஞ்ச மூர்த்தியும் எழுந்தருளுவதாக ஐதீகம்.
இச்சோதியானது பல மைல்களுக்கு அப்பால் பல நாட்கள் ஒளி வீசும். இவ்வொளி இம்மலையை அடுத்து யாவும் செந்நிற சிகப்பு நிறம் பொருந்தி வண்ணமாய் ஒளிர்ந்திடும். ஜோதிலிங்கமாகக் காட்சி தரும் திருவாண்ணாமலை ஓர் அக்கினித் தலமாக விளங்குகிறது.
திருவண்ணாமலையில் குன்றின் சிகரத்தில் கார்த்திகை மாதத்தில் ஏற்றப்படும் ஜோதியானது. உலகம் முழுதும் உள்ள அஞ்ஞான இருளை அகற்றி மெய்ஞான ஒளியைப் பரப்பும் சிவஞான ஜோதியாகப் பிரகாசிக்கும் என்பது ஐதீகம். ‘உடம்பெனுமனையகத்து உள்ளமே தகழியாக மடம்படும் உணர்நெய்யட்டி உயிரெனும் திரிமயக்கி இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கிற் கடம்பமர் காளைத்தாதை கழலடி காணலாமே.’
அன்றைய தினம் பக்த கோடிகள் ஜோதியைக் கண்டு சேவிப்பதால் பஞ்ச மூர்த்திகளின் அருட்கடாட்சத்தால் பஞ்சேந்திரியங்களை அடக்கும் ஆற்றல் பெற்று, மெய்ஞான சிந்தையுடையவர்களாக விளங்குவர் என்பது உட்பொருள். இந்த ஜோதியின் காரணமாகத் தான் மற்ற இடங்களில் சொக்கப்பனை கொளுத்தும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
தீபம் ஏற்றி வழிபட முடியாத சிவ, விஷ்ணு ஆலயங்களின் முன்புறத்தே வாழை மரம் நட்டு தென்னோலைகளால் அதனை சுற்றி அடைத்து ‘சொக்கப்பானை’க்கு அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவுகூர்ந்து வழிபடுவர். ஜோதி மயமாய் ஒளி வடிவினனாகிய இறைவனை உணர்த்தும். சொக்கப்பனாகிய சிவனை ஒளி வடிவாகக் காண்பிப்பதால் இது சொக்கப்பனை எனப் பெயர் பெற்றது.
சிவபெருமான் கோயில் கொண்டுள்ள ஆயிரத்தெட்டு முக்கிய ஸ்தலங்களில் காசி, சிதம்பரம், திருவாரூர், திருவண்ணாமலை, காளஹஸ்தி ஆகிய ஐந்து §க்ஷத்திரங்களும் பஞ்சமூர்த்தி ஸ்தலங்களாகக் கொண்டாடப்படுகின்றன.
பிருத்வி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் ஆகியவை பிருத்வி பஞ்சமூர்த்தி ஸ்தலங்களாகும்.
உலகத்திலேயே புண்ணியத் தலங்களுள் காசிக்குப் போவதே தலையாயப் புண்ணியமாக கருதுவர், திருவாரூரில் பிறந்தலே முத்தி கிடைக்கும் என்பர். ஆனால் இருந்த இடத்தில் இருந்தபடி மனதால் நினைத்தாலே புண்ணியம் தரும் ஸ்தலம் ஒன்று உலகில் உள்ளதென்றால் அது அண்ணாமலையாரும் உண்ணாமுலை அம்மனும் குடிகொண்டிருக்கும் திருவண்ணாமலைதான்.
பழந்தமிழ் நூலாகிய தொல்காப்பியத்தில் ‘வேலின் நோக்கிய விளக்க நிலையும்’ என்பதற்குக் கார்த்திகை நாளில் ஏற்றிய விளக்கு என்பது பொருள்.
பண்டைக் காலம் தொட்டே கார்த்திகை விழா ஒரு பெரும் பண்டிகையாக நம்மவர்கள் இன்றும் கொண்டாடி வருகிறார்கள். பழைய காலங்களில் மலைச் சிகரங்களில் விளக்கேற்றி விழா கொண்டாடி விருந்துண்டு களிகொண்டு ஆடி களித்திருப்பதை சங்க நூற்களில் சான்று உண்டு. ஆகவே மேற்கூறியதிலிருந்து கார்த்திகை விழா நமது ஆணவ இருளைப் போக்கி ஞான ஒளியைப் பெருக்குவதற்கு உகந்த விழாவாகும் என்பது விளங்குகின்றது.
அக்கினியின் சக்தியால் அழுக்கு களையப்படுகிறது. அக்கினிப் பிரவேசம் சீதா பிராட்டியை புனிதவதி எனக் காட்டியதாக இராமாயணம் உலகுக்கு உணர்த்தியது. ஹோமத்தில் எழுகின்ற அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கின்றோம். கார்த்திகை மாதம் முதல் திகதி தொட்டு கடைசி நாள் வரை தினமும் மாலையில் வீடுகளிலும் ,ளிகிசீ8ளிலும் விளக்கேற்றி வைத்துக் கொண்டாடுவர்.
தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பெளர்ணமி ஆகிய மூன்று தினங்களிலாவது தவறாது எண்ணெய் விளக்கேற்ற வேண்டும். கார்த்திகை மாதம் 1, 28 ஆகிய இரு திகதிகளில் கார்த்திகை நட்சத்திரம் வருமாயின் 28ம் திகதி வரும் நட்சத்திரத்தில்தான் திருக்கார்த்திகைப் பண்டிகை கொண்டாடப்பட வேண்டும்.
இந்த கார்த்திகைத் திருநாள் கார்த்திகேயனுக்கும் உகந்த நாள். சிவபெருமானின் நெற்றிக் கண்ணினின்றும் தோன்றிய ஆறு அருட்சுடர் சரவணப் பொய்கையில் வந்து தங்கி ஆறு குழந்தைகளாக உருமாறி நிற்க அக்குழந்தைகளைக் கார்த்திகைப் பெண்கள் பாலூட்டிச் சீராட்டித் தாலாட்டினர்.
சிவபெருமான் பிராட்டியாருடன் சரவணப் பொய்கைக்கு எழுந்தருளி உமாதேவியார் அக்குழந்தைகளை வாரி அணைக்க, ஆறு உருவங்களும் ஓருருவாய் ஆறுமுகக் குழந்தையாய் தேவியின் திருக்கரங் களில் பேரொளிப் பிரகாசமாய் எழுந்தருளியது. அவ்வமயம் கார்த்தி கைப் பெண்டிர் சிவபெருமானைப் பணிந்து போற்றி நின்றனர்.
சிவபெருமான் அவர்களை அருள் நோக்கி உங்களுக்கு மங்களம் உண்டாகுக. உங்களால் வளர்க்கப்பட்ட இப்பாலகனுக்கு கார்த்திகேயன் என்ற திருநாமத்தைச் சூட்டுகிறோம்.
உங்களுக்கு உகந்த இக்கார்த்திகை நன்னாளில் கந்தனைப் போற்றி வழிபடுவோருக்கு அனைத்து நலங்களும் கிட்டுவதாகுக! என்று திருவாய் மலர்ந்தருளினார்.
இறைவனை விளக்கேற்றி வழிபடுவது தொன்றுதொட்டு வந்த பழக்கமாயினும், அது என்றென்றும் நலம் தரும் வழிபாடாகவும் கருதப்படுகிறது.
வைஷ்ணவ ஆலயங்களிலும் விளக்கொளிப் பெருமாள் என்று ஒரு பெருமானைக் கொண்டாடுகின்றனர். அகல், எண்ணெய், திரி, சுடரொளி ஆகிய நான்கும் அறம், பொருள், இன்பம், வீடு என்ற தத்துவங்களை உணர்த்துவது போலாகும். பலிமகராஜன் தனது உடம்பிலே தோன்றிய வெப்பத்தைக் கார்த்திகை விரதமிருந்து தீர்த்துக்கொண்டார் என்று புராணம் கூறுகிறது.
எம்பெருமான் தன்மீது திருவடி சாதித்து ஆட்கொண்ட போது தனது மறைவு நாளை தீபங்களை ஏற்றி உலகோர் அனைவரும் கொண்டாட வேண்டும் என்று அனந்தனைப் பணிந்து கேட்டான்.
திருஞானசம்பந்தர், மயிலையில் அங்கம் பூம்பாவைக்கு புத்துயிர் அளிப்பதற்காய்ப் பாடிய திருப்பதிகத்தில் ‘கார்த்திகை விளக்கீடு காணாத போதியோ’ என்று பாடியுள்ளார்.
ஒருமுறை அம்பிகை மகிஷாசுரனுடனும் போர்புரியும் போது தவறுதலாக சிவலிங்கம் ஒன்றை உடைத்துவிட்டார் என்றும், அதனால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்வதற்குக் கார்த்திகை தினத்தன்று தீபம் ஏற்றி விரதம் இருந்து பெருமானின் பேரருளால் தோஷ நிவர்த்தி கிடைத்ததாக தேவி புராணம் கூறுகிறது.
இவ்வாறு பெருமையும் மேன்மையும் கொண்ட கார்த்திகைத் திருநாளை திருச்செங்கோடு, வேதாரண்யம், பழனி, திருச்செந்தூர் முதலிய கோவில்களில் திருவண்ணாமலைக் கோயிலைப் போன்றே கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர். சில ஊர்களில் மந்தாரை இலையில், தீபம் ஏற்றுகிறார்கள். வடநாட்டில் தீபத்தை தீப ஓடங்களில் ஏற்றி நீரில் விடுவது உடன்பிறப்பிற்கு நன்மை பயக்கும் என்று கருதுகிறார்கள்.
கார்த்திகைத் தீபங்கள் ஏற்றும் போது கூறப்படும் மந்திரம்;
கீட: பதங்கா மதகாஸ்ச வ்ருதாஜ்லே ஸ்தயே விசரந்தி ஜீவா
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜந்ம பாகிந:
பவந்தி நித்யம் சவ பசா ஹி விப்ரா.
இந்த மந்திரத்தைச் சொல்லி விளக்கேற்றி வழிபடுவதால், இம்மையில் அனைத்து சுபீட்சங்களுடன் வாழ்ந்து எம்பெருமானின் பேரருளால் பிறவாப் பெருவாழ்வு பெறலாம் என்பது ஐதீகம்.
தீபத்தின் ஒளி காணும் இடத்தில் ஸ்ரீதேவி மங்களம் பொங்க வாசம் புரிவாள்.
இக்கார்த்திகை தினத்தன்று நெற்பொரி வைத்து நிவேதனம் செய்வர்.
கார்த்திகை விரதத்தை பன்னிரண்டு ஆண்டுகள் கடைப்பிடித்து நாரத மகரிஷி சப்தரிஷிகளுக்கும் மேலான பதவியை அடைந்தார்.
திரிசங்கு மன்னன், பகீரதன் திருத்திகை விரதத்தின் பயனால் பேரரசானார்கள். அனைவருக்கும் பேரருள் கிட்டுவதாகுக.