புதன், 30 செப்டம்பர், 2020

காமாக்ஷி அம்மன் கோவில்.

காமாக்ஷி அம்மன், காஞ்சிபுரம்

அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காமகோடி சக்தி பீடம் ஆகும். இத்தல காமாட்சி அம்மனை வேத வியாசர் பிரதிஷ்டை செய்துள்ளார். தங்க விமானத்தின் கீழ் அம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அம்மனுக்கு முன்னால் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது. இத்தலத்தில் தான் ஆதிசங்கரர் ஆனந்தலஹரி பாடினார்.


தெரிந்து கொள்வோம்

 தெரிந்து கொள்வோம்  !!

1. பீம சாந்தி = 55ஆவது வயது ஆரம்பம். 


2. உக்ரரத சாந்தி = 60ஆவது வயது ஆரம்பம்.


3. ஷஷ்டிமாப்த பூர்த்தி சாந்தி = 61ஆவது வயது ஆரம்பம்.


4. பீமரத சாந்தி = 70ஆவது வயது ஆரம்பம்.

 
5. ரத சாந்தி = 72ஆவது வயது ஆரம்பம். 


6. விஜய சாந்தி = 78ஆவது வயது ஆரம்பம். 


7. சதாபிஷேகம் = 80 வருஷம் 8 மாதம் முடிந்து உத்தராயண சுக்லபக்ஷம் நல்லநாளில்.


8. ப்ரபௌத்ர ஜனன சாந்தி (கனகாபிஷேகம்) = பௌத்ர

னுக்கு புத்ரன் பிறந்தால்.
9. ம்ருத்யுஞ்ஜய சாந்தி = 85ஆவது முதல் 90க்குள்.

 
10. பூர்ணாபிஷேகம் = 100 ஆவது வயதில் சுபதினத்தில்.

ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

ஸ்ரீ உஜ்வல சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள். {கி. பி. 329 - கி. பி. 367 வரை}


காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள் இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.16:ஸ்ரீ உஜ்வல சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள். {கி. பி. 329 - கி. பி. 367 வரை}

ஸ்ரீ உஜ்வல சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மஹாராஷ்டிர அந்தணர். இவரது தந்தை பெயர் கேசவ சங்கரர். பெற்றோர் இவருக்கு இட்ட நாமதேயம் "அச்சுத கேசவர்" இவர் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை இவர் பல முறை விஜய யாத்திரைகளை மேற்க்கொண்டவர். அப்போது ச்யாநந்தூர நாட்டு மன்னரான குலசேகரனை தன் அருள் நோக்கால் கவிஞ்சராக்கியவர். ஜைனராக மாரிய அந்தணர்களுக்கு "ஜராத்ருஷ்டி" எனப் பெயரிட்டு அவர்களை சிந்து நதிக்கு அப்பால் செல்லும் படி கட்டளை பிறப்பித்தார். பிற மதங்கள் இப்படி ஆக்கிரமிக்காமலிருக்க அரும்பாடுபட்டவர். இவர் கி. பி. 367ஆம் ஆண்டு அக்ஷய வருடம் சுக்ல பக்ஷம் அஷ்டமியன்று காஷ்மீரத்திலுள்ள 'கலாபூரி' என்னுமிடத்தில் சித்தி அடைந்தார். அந்த ஸ்தலம் அது முதல் இன்று வரை 'உஜ்வல மஹாயதி பரம்' என்றழைக்கப்பட்டுகிறது.

வியாழன், 24 செப்டம்பர், 2020

நமஸ்காரம்

ஓம் சிவாய நம: (நமஸ்காரம் பதிவு)
========================================
" நம: என்றால் நமஸ்காரம், என்று பொருள் நமஸ்காரம் என்பவை எல்லாம் பணிவைக் குறிக்கும் வார்த்தைகள்.

 இவற்றில் "நமஸ்காரம்' என்ற சொல்லுக்கு " வணங்குதல் என்று பொருள். "

குரு நமஸ்காரம்
============
நமாமி சத்குரும் சாந்தம் ப்ரத்யக்ஷம் சிவரூபினம் சிரஸா யோகபீடஸ்த்தம்  முக்தி காமார்த்த ஸித்திதம் = குரு கீதை சாந்தமானவரும் ப்ரத்யக்ஷ சிவரூபியும், யோகபீடத்தி லிருப்பவரும், முக்தி காமமாகிய செல்வத்தைத் சித்திக்க செய்பவரும் ஆகிய ஸத்குருவைத் தலையால் வணங்குகிறேன்.

சிலர்  ஸ்ரீருத்ரத்தை பற்றி சந்தேகத்திலிருந்து தெளிவு பெற ஸ்ரீ பரத முனிவரிடம் சென்றனர்.
அதற்கு ஸ்ரீ ருத்ரம் சாக்ஷாத் பரமேஸ்வரனுடையது. ஏனென்றால்
இதில் நம: என்ற பதம் அதிகம் வந்திருப்பதால் ஸ்ரீ பரமேஸ்வரனுடையது, என்றார். அதற்கு விளக்கம் அளிக்கையில்
தைத்திரியம்  “பரப்ரம்மத்தை  நமஸ்காரம் பண்ணத்தகுந்தவர்   “என்று உபாஸிக்க வேண்டும்,
அவ்வாறு செய்தால் நமது விருப்பங்கள் நம்மை நமஸ்கரித்து தானாகவே வந்தடையும் என்கிறது
நமஸ்காரம் நைவேதிகும்.
 

சமயதி" = ஸ்ருதி தெய்வம், ரொம்ப  உயர்ந்தவர், பெரியவர்களை கண்டால் உடனே நமஸ்காரம் பண்ணவேண்டும். அதனால் சுலபமாக அவர்களது அன்பும் அருளும் கிட்டும் எந்த ஒரு இடத்தில் இருக்கும் போதும் ஒருவன் எல்லா நேரங்களிலும், எப்பொழுதுமே
“ருத்ரருக்கு நமஸ்காரம்” என்று ஜபித்துக் கொண்டே இருக்கட்டும். ஏனெனில் “ஸர்வமும் ருத்ரனே” என்று முழங்குகிறது ஸ்ருதி
யஜுர்வேதத்தின் தைத்திரீய சம்ஹிதை, “ஏகம்” - இரண்டற்ற ஒரே பரம் பொருள் ருத்ரனே என்றுரைக்கிறது :
“ஏக ஏவ ருத்ரோ நத்விதீயாய தஷ்டே”“ந  தத் ஸமச்சாப்யதிகச்ச த்ருஸ்யதே" = ஸ்வேதாஸ்வரோபனிஷத்”
அவருக்கு சமமானவரோ மேலானவரோ காணப்படவில்லை

ஸ்ரீருத்ரத்தில் ஏகதோ, உபயதோ நமஸ்காரங்கள் சொல்லப்பட்டிருக்கிறது
ஸ்ரீ ருத்ரத்தில் மந்த்ரங்களுக்கு ஆதியிலும் ,அந்தத்திலும் நம:
சொல்லை உடைய மந்திரங்கள்  உபயதோ நமஸ்கார மந்திரங்கள் எனப்படும். அதாவது ஒரு வாக்யத்தில் முன்னும் பின்னும் நமஸ்கார பதங்கள் உள்ளன. மற்றும் ஒரு வாக்யத்தின் கடைசியில் நமஸ்கா பதம் சொல்லபடுகின்றது.  “நமோ ஹிரண்ய பாகவே ஸே நான்யே திஸாஞ்ச பதயே நம “ என்று இரண்டு நமஸ்கார பதங்கள் – “ நமோ பாவயச ருத்ராயச “  வாக்யத்தின் கடைசியில் ஒரு நமஸ்கார பதம் உள்ளது.

பரத சாஸ்திரத்தில் ஒவ்வொரு தெய்வத்திற்கு ஒவ்வொரு முத்திரை உள்ளது. அதில் நமஸ்கார முத்திரை ஸ்ரீ பரமேஸ்வரனுக்கு மட்டும் கூறப்பட்டுள்ளது. அதனால் பரமேஸ்வரனுடையது ஸ்ரீ ருத்ரம் எனத்தெளிவுபடுத்தினார்.

=ஸ்ரீ பட்டபாஸ்கர் ஸ்ரீருத்ர பாஷ்யத்திலிருந்து நாம் ஸ்ரீ பரமேஸ்வரனுக்கு அடிமை, பக்தன், குழந்தைகள் அதனால் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து சரணாகதி அடைதலை குறிப்பது ஆகும். ப்ரதக்ஷிண நமஸ்காரங்கள் நம் நித்யம் செய்யும் பூஜையின் அங்கமாக உள்ளது வீட்டிலும், ஆலயங்களிலும், பூஜையின் முடிவு தரிசனம் செய்த பின் நமஸ்காரம் அவசியம் செய்ய வேண்டும்.

ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரம் ( சாஷ்டாங்க நமஸ்காரமும்),
பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்தல் வேண்டும். ஆலயத்தில் வாஹனமாகிய நந்தி, பலி பீடத்திற்கு பின் அல்லது கொடிமரம் இருந்தால்  அதனடியிலேயே  நமஸ்காரம் செய்ய வேண்டும்.

தெற்கு நோக்கியும், நமது கால்களை மற்ற தெயவங்களுக்கு நேரே தெரியாமல் நமஸ்கரிக்க வேண்டும்.
ஆலயத்தில் இறைவனைத்தவிர யாருக்கும் நமஸ்காரம் பண்ணக்கூடாது.

நாம் பூமியில் விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யும் போது நம் உடம்பில் உள்ள ஸ்டாடிக் எனர்ஜி வெளியேறி கைடனிக் எனர்ஜி ஏற்படுகிறது விஞ்ஞானம்.

சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை.
     

சிவபெருமானைப் போன்ற தெய்வம் இல்லை! சிவபெருமானோடு ஒப்பாகவுள்ள கடவுள் புறத்தே உலகில் எங்குத் தேடினும் இல்லை.
 

திருமந்திரம் அப்பேற்பட்ட ஆதி அந்தமில்லாத ஸ்ரீபரமேஸ்வரனை தினமும் நமஸ்கரிக்கிற பாக்யம்  கிட்டுமேயாகில் நாம் மட்டுமின்றி நம் பரம்பரையே புண்யசாலிகள். அதில் சந்தேகம் வேண்டாம்.
 


மூதேவி என்பதின் முழு பெயர் மூத்த தேவி என்று பெயர்

மூதேவி என வழங்கும் மூத்த தேவி
மூத்ததேவி அதாவது ஜேஷ்டா தேவியின் கொடி காக்கை, வாகனம் கழுதை. மூதேவியை வெயிலுடனும், சீதேவியை மழையுடனும் தொடர்பு படுத்துகிறார்கள். மூதேவிக்கு மற்றொரு பெயர் ஜேஷ்டாதேவி.
இவளின் கைக்கருவி விளக்கமாறு.
மூதேவி தெய்வத்தின் மகன் பெயர் குளிகன் மகள் பெயர் மாந்தி. நாகை மாவட்டம் மயிலாடுதுறை வழூவூரிலுள்ள வீரட்டேஸ்வரர் கோயிலில் மேற்கு திருச்சுற்றிலுள்ள மேடையில் மூத்த தேவி உருவம் வைக்கப்பட்டுள்ளது. மூத்த தேவியானவள் தனது வலது பக்கத்தில் மகன் மாந்தனுடனும், இடது பக்கத்தில் மகள் மாந்தியுடனும் அமர்ந்த கோலத்தில் ஒரே பீடத்தில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. தேவியை குழந்தைப் பேறு வேண்டி மக்கள் வழிபாடு செய்கிறார்கள்.        
சமணர்கள் மூதேவியை வழிபட்டுள்ளனர். நந்திவர்ம பல்லவனுக்கு இவளே குலதெய்வம்.
பிற்காலத்தில் மூதேவி  (மூத்ததேவி) சிவாலயங்களில் இருந்து எடுக்க பட்டதாக தெரிகிறது. இந்த அம்பாளை ஜேஷ்டாதேவி தூம்ரவாராஹி தூமாவதி மகாநித்ரா மகாமாயா மகாராத்திரி மோஹராத்திரி காளராத்திரி என்றும் அழைப்பர். தேவிமகாத்மியத்திலும் இவள் வருகிறாள். இவள் இயற்க்கையான உறக்கமும் மன அமதியையும் தருபவள் நரம்பு தளர்ச்சி நோய்கள் சித்த பிரமையை தீர்ப்பவள். செங்கற்பட்டு ஆத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமத் தர்ம சம்வர்தினி சமேத முக்தீஸ்வரர் ஆலயத்தில் ஜேஷ்டாதேவி தனி சன்னதி கொண்டு அமர்ந்திருக்கிறார். பிரதி சனிக்கிழமை தோறும் ராகு காலத்தில் விசேஷ பூஜை வழிபாடுகள் நடைபெறுகிறது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெறுகிறது.



குருவாயூர்

பூந்தானம் நம்பூதிரி என்பவர் சிறந்த பக்தர். அவர் தினமும் தனது ஊரிலிருந்து காட்டு வழியே தொலைதூரம் நடந்து குருவாயூருக்குச் சென்று அப்பனைத் தரிசனம் செய்வார்.

அவ்வாறு செல்கையில் ஒரு நாள் வழியில் சில கொள்ளைக்காரர்கள் அவரைத் தடுத்துத் தாக்கினர். அவரிடம் என்ன பொருள் இருக்கிறது என்று ஆராயத் தொடங்கினார்கள். அவர் மனமோ, தன் விரல்களில் உள்ள மோதிரத்தை அவர்கள் பார்த்துவிடக் கூடாது என்று பயந்தது. ஆபத்தினை உணர்ந்த அவர், கண்களை மூடி “குருவாயூரப்பா குருவாயூரப்பா,” என்று உரத்துக் கூறினார்.

சிறிது நேரத்தில் புதியதான மலரின் மணம் காற்றில் வீசியது. கண் திறந்து பார்த்தபொழுது மாங்காட்டச்சன் என்ற திவான் குதிரைமேல் வேகமாக வாளைச் சுழற்றிக் கொண்டு வந்தார்.

அவரைக் கண்டதும் கொள்ளையர்கள் வேகமாக அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார்கள். மனம் நெகிழ்ந்த பூந்தானம் உமக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன் என்று வினவ, அவரும் உன்னுடைய கையில் இருக்கும் மோதிரத்தை எனக்குக் கொடு என்று கூறினார். மோதிரம் களவு போய்விடக் கூடாது என்று பயந்த பூந்தானம் இப்போது தயங்கி, திகைத்து, செய்வதறியாது அந்த மோதிரத்தை திவானுக்குப் பரிசாக அளித்தார். திவான் அவரைத் தன் குதிரையில் ஏற்றிக் கொண்டு குருவாயூர் எல்லையில் விட்டுவிட்டுச் சென்றார்.

அதே நேரம் கோவில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய அப்பன், “அர்ச்சகரே! என் கையில் ஒரு மோதிரம் இருக்கும், அதைப் பூந்தானத்திடம் கொடுத்துவிடுங்கள், கொள்ளையர்களிடம் இருந்து அவரைக் காப்பாற்ற மாங்காட்டச்சன் உருவில் சென்று அவரிடம் இருந்து விளையாட்டாக மோதிரத்தைப் பெற்றேன்” என்று கூறினார்.

பூந்தானம் குருவாயூர்க் கோயிலை நெருங்கும்போது, அர்ச்சகர் ஓடி வந்து பூந்தானத்தின் காலில் விழுந்தார். தன் கனவில் அப்பன் சொன்னதைக் கூறி மோதிரத்தை அவரிடம் கொடுத்தார். மோதிரத்தைப் பார்த்த பூந்தானத்திற்குப் புல்லரித்தது. முந்தைய இரவு மாங்காட்டச்சனிடம் கொடுத்த அதே மோதிரம்தான் அது!! தன்னைக் காப்பாற்ற குருவாயூரப்பனே மாங்காட்டச்சனாக வந்ததை எண்ணி ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார்.


நவராத்திரி மூன்றாம் நாள்

நவராத்திரி மூன்றாம் நாள்: எவ்வாறு வழிபட வேண்டும்?

நவராத்திரி மூன்றாம் நாளில் அம்பிகையை வராஹியாக அலங்கரிக்க வேண்டும். பன்றிமுகத்துடன் கூடியவளாக விளங்கும் இவளை வழிபட்டால் பகைவர் பயம் நீங்கும். மதுரை மீனாட்சியம்மன் நாளை தட்சிணாமூர்த்தி கோலத்தில் காட்சியளிக்கிறாள். தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி சிவன் கோயில்களில், கல்லால மரத்தின் கீழ் இருப்பார். இவர் முன்னால் சனகர்,சனந்தனர், சனதானர், சனத்குமாரர் என்னும் நான்கு சீடர்கள் இருப்பர். அவர்களுக்கு உபதேசம் செய்கிறார் தட்சிணாமூர்த்தி.

இவருடைய வலக்கை சின்முத்திரை காட்டியபடி இருக்கும். வலக்கைப் பெருவிரல் பரமாத்மாவாகிய கடவுளையும், ஆள்காட்டிவிரல் ஜீவாத்மாவாகிய உயிரையும் குறிக்கும். மற்ற விரல்களான நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் ஆகியவை ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றைக் குறிக்கும். ஆணவம் என்பது அகங்காரம். கன்மம் என்பது உயிர்கள் செய்யும் நல்வினை, தீவினைப்பயன்கள். மாயை என்பது இவ்வுலக வாழ்வு உண்மை என எண்ணும் நிலை. இம்மூன்றையும் விட்டு, ஒருவன் நீங்கினால் மட்டுமே கடவுளோடு ஐக்கியமாக முடியும் என்பதே சின்முத்திரை தத்துவம். அம்பாளைத் தட்சிணாமூர்த்தியாக உபதேசிக்கும் கோலத்தை காண்பவர்களுக்கு அஞ்ஞானம் அகலும். கடவுளின் திருவடியே நிலையானது என்ற மெய்ஞானம் உண்டாகும்.
 


நைவேத்யம்: எலுமிச்சை சாதம்
தூவவேண்டிய மலர்கள்: மல்லிகை, செவ்வந்தி.

பாட வேண்டிய பாடல்:

என்குறை தீர நின்று ஏத்துகின்றேன், இனியான் பிறக்கின்
நின்குறை யேயன்றி யார்குறை காண்! இருநீள் விசும்பின்
மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியளாய்
தன்குறை தீரஎங் கோன்சடை மேல் வைத்த தாமரையே.

நவராத்திரி இரண்டாம் நாள்

நவராத்திரி இரண்டாம் நாள்: வழிபடும் முறை!

அம்பிகையை நாளை மயில் வாகனம், சேவல் கொடியுடன் அலங்கரிக்க வேண்டும். இவளை "கவுமாரி என்றும், "குமார கண நாதம்பா என்றும் அழைப்பர். பக்தர்களின் பாவங்களைப் போக்கி, தைரியத்தை அருள்பவள் இவள். நாளை மதுரை மீனாட்சி முருகனுக்கு வேல் வழங்குதல் கோலத்தில் காட்சி தருகிறாள். சூரபத்மன் தேவர்களுக்கு பல கொடுமைகளைச் செய்தான். அவர்கள், சிவபெருமானின் உதவியை நாடினர். அவருடைய நெற்றிக்கண்களில் ஆறுதீப் பொறிகள் தோன்றின. அவை சரவணப்பொய்கையில் ஆறுதாமரைப் பூக்களில், ஆறு குழந்தைகளாக மாறியது. கார்த்திகைப் பெண்கள் அவர்களை வளர்த்தனர். பார்வதி அறுவரையும் ஒருவராக்கி "கந்தன் என்று பெயரிட்டாள். ஜகன்மாதாவான பராசக்தி தன் சக்தி அனைத்தையும் ஒன்று திரட்டி வேல் ஆக்கினாள். "வேல் என்றால் "வெற்றி. அந்த சக்தி வேலாயுதத்தை முருகனுக்கு வழங்கினாள். முருகனுக்குரிய அடையாளமாகத் திகழும் வெற்றிவேலை, அன்னை மீனாட்சி வழங்குவதைக் கண்டால் வாழ்வில் வெற்றி வந்து சேரும்.
 


நைவேத்யம்: தயிர்சாதம்
தூவவேண்டிய மலர்: முல்லை

பாட வேண்டிய பாடல்:

இல்லாமை சொல்லி ஒருவர் தம் பால்சென்று இழிவுபட்டு நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம் கல்லாமை கற்ற கயவர் தம் பால் ஒரு காலத்திலும் செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.

15:ஸ்ரீ கீஷ்பதி கங்காதரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - 1 {கி. பி. 317 -கி.பி . 329 வரை}

நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி தெரிந்து கொள்வோம்!!

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள் இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

15:ஸ்ரீ கீஷ்பதி கங்காதரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - 1
{கி. பி. 317  -கி.பி . 329 வரை}




ஸ்ரீ கீஷ்பதி கங்காதரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - 1
ஸ்வாமிகள் ஆந்திராவைச் சேர்ந்தவர். இவரது தந்தையின் பெயர் "ஸ்ரீகாஞ்சிபத்ரகிரி". இவருக்கு பெற்றோர் இட்ட நாமதேயம் சுபத்ரர். இவர் ஸ்ரீ அகஸ்திய முனிவரை தரிசித்து அவரிடமே" பஞ்சதசாக்ஷரி" என்ற மந்திர உபதேசத்தை வாங்கிக் கொண்டார். இவர் காமகோடி பீடாதிபதியாகும் போது இவரது வயது பன்னிரண்டு. அப்போதே பெரும் புலமையும், ஞானமும் பெற்றிருந்தார். இவர் கி. பி. 329 ஆம் ஆண்டு சர்வதாரி வருடம், சித்திரை மாதம், சுக்லப்பிரதமையன்று அகஸ்தியமலை அருகில் சித்தியடைந்தார்.

பராசரர்

பராசரர்!

இருமாமுனிவர்கள் வசிஷ்டரும், கோசிகரும். இவர்கள் இருவருக்கிடையில் ஒற்றுமை இருந்ததே இல்லை. பகையுணர்வின் காரணமாக கோசிகன், வசிஷ்டரை பழி வாங்க முயன்று தவவலிமை இழந்து மீண்டும் தபோதனராகப் பலமுறை முயன்று தன் தவ வலிமை பெற்று வந்தார். உதிரன் என்ற அரக்கன் மூலம் தனது தவ வலிமைகளைத் தந்து வசிட்டரின் புதல்வர்களை அழிக்க ஏற்பாடு செய்தார் கோசிகன். வசிட்டரும் அருந்ததியும் இல்லாத சமயம் அவர்களது பிள்ளைகளை மாய்த்து விட்டான். வசிட்டரும், அருந்ததியும் மனமுடைந்து இருந்தனர். வசிட்டரின் மகன் சக்தி என்பவனின் மனைவி திரிசந்தி கருவுற்றிருந்த காரணத்தால் அவளது தாய் வீட்டிற்குச் சென்றிருந்தாள். தகவலறிந்து வந்து தானும் உயிர் துறக்க முற்பட்டாள். வசிட்டரும், அருந்ததியும் தங்களது வாரிசு அவளது வயிற்றில் வளர்வதனால் சாந்தப்படுத்தி கண்ணும் கருத்துமாக திரிசந்தியைப் பாதுகாத்தனர். தக்கதோர் நன்னாளில் திரிசந்தி ஆண் மகவொன்று ஈன்றெடுத்தாள்.

பேரனுக்கு பராசரன் என்று பெயரிட்டு கல்வியறிவூட்டினர். நற்குணம் நற்செயல்களோடு வேத நூல்யாவும் அறிந்தான். அவனது மனத்தில் இருந்த குறையை தாயிடம் கேட்டான். பாட்டி சுமங்கலியாக, தாய் அமங்கலியாக இருப்பதன் காரணம் பற்றி கேள்விகளாகக் கேட்டு துளைத்தெடுக்கும் நிலையில் உண்மையில் நடந்தவற்றை திரிசந்தி உரைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தாத்தா, பாட்டி, தாயின் மனமுவந்த ஆசிகள் பெற்று மனத்தை ஒருநிலைப்படுத்தி சிவபெருமானை நோக்கிக் கடுமையாக தவமேற் கொண்டான். நேரில் காட்சி தரும் நிலையும் ஏற்பட்டது. தன் தந்தையைக் காணவும், அரக்கர்களை அழிக்க ஆற்றலும் வேண்டிக் கோரினான். அவனது பக்தியின் வலிமையால் பராசரரின் தந்தையான சக்தி அங்கு தோன்றுமாறு ஈசன் கருணை புரிந்தான். தந்தையைக் கண்டு வணங்கி ஆசிகள் பெற்றான். அரக்கர்களை அழிப்பது எளிதல்ல என்பதால் வேள்வி செய்யுமாறு ஈசன் பணித்தார். ஈசன் உபதேசித்தப்படி சிறந்ததொரு யாகம் மேற்கொண்டான். யாகத்தில் ஏற்படும் புகை முழுவதும் அரக்கர்கள் இருக்குமிடத்தில் பரவி அரக்கர் கூட்டம் அழிந்து விட்டது.

யாரோ செய்த தவறுக்குப் பலர் அழிவதை உணர்ந்த வசிட்டர் தனது பேரன் பராசரரிடம் பலர் அழியக் காரணமாகி பலரைக் கொன்ற பாபம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. நாம் இறைவனை வேண்டி வழிபடுவதே தக்க செயலாகும் என்று கூறி வேள்வியை நிறுத்துமாறு உபதேசித்தார். அச்சமயம் அங்கு வந்த புலஸ்திய முனிவரும் பராசரரிடம் பிற உயிர்கள் அழியாத நிலையில் தவமேற் கொண்டோர் வாழ்வதே சிறப்பு என விளக்கினார். பாட்டனாரும், புலஸ்தியரும் கூறிய வார்த்தைகட்கு இணங்கி பராசரர் இறைவழிபாட்டில் தன் வாழ்க்கைப் பணி ஏற்றார்.  மூத்தோர் சொல் அமுதமாகும் என்பதை உணர்ந்த காரணத்தால் பராசரர் தனது அறிவை ஞானத்தின் பால் மாற்றி மெய் ஞானம் உணர்ந்திட்ட மஹானாக விளங்கினார் என்றும், அழியாப்புகழுடன் சிறந்த நூல்களை எழுதி வரும் சந்ததிகட்கு வழிகாட்டிய மஹானாகத் திகழ்ந்தார்.


நவராத்திரி வழிபாடு தோன்றிய காரணம்

நவராத்திரி வழிபாடு தோன்றிய காரணம்!

நவராத்திரியின் சிறப்புப் பற்றியும், இதை அனுஷ்டிக்க வேண்டிய முறை கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றியும் தேவி மஹாத்மியத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் சும்பன் நிசும்பன் என இரு அசுரர்கள் இருந்தார்கள். அவர்கள் தெய்வங்களிடம் வரம் பல பெற்று தங்களை அழிக்க யாருமில்லை என்று தலைக்கனம் பிடித்துத் திரிந்தார்கள். அவர்களது ஆட்சிக்காலத்தில் மக்கள் மிகவும் அல்லலுற்றனர். தவசீலர்களால் வேள்விகளைச் செய்ய முடியவில்லை. அனைவரும் இந்த இரு அரக்கர்களையும் கண்டு அஞ்சி நடுங்கினர். இனியும் இப்படியே போனால் மக்கள் தாங்கமாட்டார்கள் என்று எண்ணிய தேவர்கள் மஹா விஷ்ணுவிடமும், சிவனிடமும் முறையிட்டனர். அவர்கள் பிரம்மனையும் சேர்த்துக் கொண்டு என்ன செய்வது என ஆலோசித்தனர். ஆண்கள் யாராலும் அந்த இரு அசுரர்களையும் வெல்ல முடியாது என்பது வரம். அதனால் தேவர்களும் மூவர்களும் அன்னை ஆதி சக்தியை நோக்கிப் பிரார்த்தித்தனர்.

மக்களின் துன்பம் கண்டு சகியாத அவளும் மிக அழகான மங்கையின் வடிவம் கொண்டு பூமிக்கு வந்தாள். அவளுடைய அழகுக்கு யாரும் நிகர் இல்லை என விளங்கினாள். பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் தங்களுடைய சக்திகளை எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அன்னைக்கு அளித்துவிட்டு சிலை என ஆனார்கள். அதே போல இந்திரனும் திக்குப் பாலர்களும் தங்களுடைய ஆயுதங்களை எல்லாம் அளித்துவிட்டு சிலையாக நின்றார்கள். அப்படி அவர்கள் நின்றதால்தான் அதைக் குறிக்கும் வகையில் பொம்மைக் கொலு வைக்கும் பழக்கம் வந்தது. அன்னை அந்த ஆயுதங்களை பத்துக் கரங்களில் தாங்கி போர்க்கோலம் பூண்டு சும்ப நிசும்பர்களையும் அவர்களது படைத்தளபதிகளான மது கைடபன், ரக்தபீஜனையும் அழித்து தர்மத்தை நிலைநாட்டினாள்.

அவள் வெற்றி பெற்ற தினமே விஜயதசமி. ஒன்பது நாட்கள் போர் விடாமல் நடந்தது. அதனாலேயே நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம். ஏன் ராத்திரி? ஒன்பது பகலில் கொண்டாடலாம் என்று கேள்வி எழுவது சகஜம். அந்நாட்களில் போருக்கு என்று சில சட்ட திட்டங்கள் உண்டு. மாலை நேரம் சூரிய அஸ்தமனம் ஆன பிறகு போர் புரிய மாட்டார்கள். படைகள் தங்கள் கூடாரங்களில் ஓய்வெடுத்துக் கொள்ளும். அப்போது அன்னையின் படைக்கு ஊக்கம் கொடுக்கவும் மறுநாளைய போரில் உற்சாகமாகப் போரிடவும் வேண்டி அன்னையைக் குறித்த ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இது ஒன்பது இரவுகள் நடந்தது. அதனாலேயே நாம் நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம்.