சனி, 15 ஆகஸ்ட், 2020

நோய் விலக இந்த ஸ்லோகம்

நோய்கள் விலகவும் - நோயற்ற வாழ்வு வாழவும் தன்வந்திரி மந்திரம்
தன்வந்திரி விஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படுகிறார். திருப்பாற்கடலைக் கடையும்பொழுது அமிர்த கலசத்துடன் வந்தவர். கீழ்க்குறிப்பிட்ட அவருடைய மந்திரத்தை தினமும் காலை, மாலை வேளைகளில் பக்தியுடன் கூறிவந்தால் கொடிய நோய்கள் விலகும். நோயற்ற வாழ்வு கிட்டும். மேலும் மருத்துவமனைகளில் தன்வந்திரி படத்தை வைத்து இந்த மந்திரத்தையும் அதன்கீழ் எழுதி வழிபட்டால் அந்த மருத்துவமனை பிரபல்யமடையவும். தன்வந்திரியின் அருள் கிட்டும்.

ஓம் நமோ பகவதே மஹா சுதர்சன வாசுதேவாய
தந்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
சர்வபய விநாசாய சர்வரோக நிவாரணாய
த்ரைலோக்ய பதயே த்ரைலோக்ய நிதயே
ஸ்ரீமஹாவிஷ்ணு ஸ்வரூப ஸ்ரீதந்வந்த்ரி ஸ்வரூப
ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஒளஷத சக்ர நாராயண ஸ்வாஹா

தன்வந்திரி ஸ்லோகம்

சதுர்புஜம் பீத வஸ்திரம்
ஸர்வாலங்கார சோபிதம்
த்யோயேத் தன்வந்த்ரிம்
தேவம் ஸுராஸுர நமஸ்க்ருதம்.

மாலையில் ஜபிக்க வேண்டிய மங்கள ஸ்லோகங்கள்....

மாலையில் ஜபிக்க வேண்டிய மங்கள ஸ்லோகங்கள்....

1. பாலாம்பிகேச வைத்யேச பவரோக ஹரேதி ச
ஜபேந் நாமத்ரயம்நித்யம் மஹாரோக நிவாரணம்

2. நித்யான்னதான நிரதம் ஸச்சிதானந்த விக்ரஹம்
ஸர்வரோக ஹரம் தேவம் ஸுப்ரம்மண்ய முபாஸ்மஹே

3. பஞ்சாபகேச ஜப்யேச ப்ரணதார்த்தி ஹரேதி ச
ஜபேந் நாமத்ரயம் நித்யம் புனர் ஜன்ம ந வித்யதே

4. ரட்ச பஞ்ச நதீநாத தயாஸிந்தோ மஹேச்வர
அநாதநாத பக்தானாம் அபயம் குரு சங்கர

5. ஸுமீனாக்ஷ? ஸுந்தரேசௌ பக்த கல்பமஹீருதௌ
தயோரநுக்ர ஹோ யத்ர தத்ர சோகோ ந வித்யதே

6. ஸ்ரீ கண்ட பார்வதீ நாத தேஜிநீபுர நாயக
ஆயுர்பலம் ச்ரியம் தேஹி ஹர மே பாதகம் ஹர

7. கௌரீவல்லப காமாரே காலகூட விஷாசன
மாமுத்ரா பதம் போதே: த்ரிபுரக்நாந்தகாந்தக

8. கௌரீபதே நமஸ்துப்யம் கங்காசந்த்ர கலாதர
அசேஷ க்லேச துரிதம் ஹராசு மம சங்கர

9. மஹாதேவம் மஹேசானம் மஹேச்வரம் உமாபதிம்
மஹா ஸேன குரும் வந்தே மஹாபய நிவாரணம்

10. ம்ருத்யுஞ் ஜயாய ருத்ராய நீலகண்டாய சம்பவே
அம்ருதேசாய சர்வாய மஹாதேவாய தே நம:

11. ச்ரிய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்

12. மங்களம் கோசலேந்த்ராய மஹநீய குணாத்மனே
சக்ரவர்த்தி தநூஜாய ஸார்வ பௌமாய மங்களம்

13. க்ருஷ்ண: கரோது கல்யாணம் கம்ஸ குஞ்சரீ கேஸரீ
காளிந்தீ ஜல கல்லோல கோலாஹலகுதூஹலீ

14. ஸ்ரீ ராம சந்திர: ச்ரிதபாரிஜாத: ஸமஸ்த கல்யாண குணாபிராம:
ஸீதாமுகாம் போருஹ சஞ்சரீக: நிரந்தரம் மங்கள மாத நோது

15. காஞ்சநாத்ரி நிபாங்காய வாஞ்சிதார்த்த ப்ரதாயிநே
அஞ்சநா பாக்ய ரூபாய ஆஞ்சநேயாய மங்களம்

16. பீதாம்பரம் கரவிராஜித சங்க சக்ர கௌ மோதகீ ஸரஸிஜம் கருணாஸமுத்ரம்
ராதாஸஹாயமதி ஸுந்தர மந்தஹாஸம் வாதாலயேச மநிசம் ஹருதி பாவயாமி

17. குண ரோகாதி தாரித்ரிய பாபக்ஷúபதப ம்ருத்யவம்
பயக்ரோத மந: க்லேசா: நச்யந்து மம ஸர்வதா !

ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸ்தோத்ரம்

ஜய ப்ரத ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸ்தோத்ரம்
ஜயத்தை அளிக்கும், ஐஸ்வர்யம், கல்வி, ஞாபசக்தி அதிகரிக்கும். கடன் தொல்லை, வியாதி நீங்கும்.

ஜய தேவேந்த்ரஜா காந்த ஜய ம்ருத்யுஞ் ஜயாத்மஜ
ஜய சைலேந்த்ரஜா ஸூநோ ஜய சம்புகணாவ்ருத
ஜய தாரக தர்பக்ன ஜய விக்னேச்வராநுஜ
ஜய தேவேந்த்ர ஜாமாத: ஜய பங்கஜ லோசன
ஜய சங்கரஸம்பூத ஜய பத்மாஸநார்ச்சித
ஜய தாக்ஷயணீஸூநோ ஜயகாசவநோத்பவ
ஜய பாகீரதி ஸூநோ ஜய பாவக ஸம்பவ
ஜய பத்மஜகர்வக்ந ஜய வைகுண்ட பூஜித
ஜய பக்தேஷ்ட வரத ஜய பக்தார்த்தி பஞ்சன
ஜய பக்த பராதீன ஜய பக்த ப்ரபூஜித
ஜய தர்மவதாம் ச்ரேஷ்ட ஜய தாரித்ரிய நாசன
ஜய புத்திமதாம் ச்ரேஷ்ட ஜய நாரத ஸந்நுத
ஜய போகீச்வராதீச ஜயதும்புருஸேவித
ஜய ஷடதாரகாராத்ய ஜய வல்லீ மனோஹர
ஜய யோக ஸமாராத்ய ஜய ஸூந்தர விக்ரஹ
ஜய ஸெளந்தர்ய கூபார ஜய வாஸவ வந்தித
ஜய ஷட்பாவ ரஹித ஜய வேதவிதாம் பர
ஜய ஷண்முக தேவேச ஜய போ விஜயீபவ

லக்ஷ்மி கடாக்ஷம்

நான் இருக்கும் இடத்தில் லக்ஷ்மி

கடாட்சம் உண்டு ஸ்ரீ சக்கரம்

ஓம் நமோ பகவதி சர்வ மங்களதாயினி
சர்வயந்த்ர ஸ்வரூபிணி சர்வமந்திர ஸ்வரூபிணி
சர்வலோக ஜனனீ சர்வாபீஷ்ட ப்ரதாயினி
மஹா த்ரிபுரசுந்தரி மஹாதேவி
சர்வாபீஷ்ட சாதய சாதய ஆபதோ நாசய நாசய
சம்பதோப்ராபய ப்ராபய சஹகுடும்பம் வர்தய வர்தய
அஷ்ட ஐஸ்வர்ய சித்திம் குருகுரு
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ

ஒரே சுலோகத்தில் நவக்ரஹ தியானம்

ஒரே சுலோகத்தில் நவக்ரஹ தியானம்

ஆரோக்யம் ப்ரதாது நோ தினகர
சந்த்ரோ யசோ நிர்மலம்
பூதிம் பூமி ஸுதாம் சு தனய:
ப்ரக்ஜாம் குருர் கௌரவம்
கான்ய: கோமள வாக் விலாஸ மதுலம்
மந்தோமுத முததம் ஸர்வத:
ராஹுர் பாஹுபலம் விரோத சமனம்
கேது: குலஸ்யோன்னதிம் ஓம்

சூர்ய நமஸ்கார மந்திரம்

சூர்ய நமஸ்கார மந்திரங்கள்

ஓம் மித்ராய நம:
ஓம் ரவயே நம:
ஓம் சூர்யாய நம:
ஓம் பானவே நம:
ஓம் ககாய நம:
ஓம் பூஷ்ணே நம:
ஓம் ஹிரண்ய கர்ப்பாய நம:
ஓம் மரீசய நம:
ஓம் ஆதித்யாய நம:
ஓம் ஸவித்ரே நம:
ஓம் அர்க்காய நம:
ஓம் பாஸ்கராய நம:

சூரிய நமஸ்காரம் முடிந்ததம் சூரியனையும் மற்ற நவகிரகங்களையும் நமஸ்கரிக்கும் மந்திரம்

நம ஸூர்யாய ஸோமாய அங்காரகாய புதாயச
குரு சுக்ர சனிப்யஸ்ச ராகவே கேதவே நமஹ.

சூரிய (பூஜை) நமஸ்காரம் என்பது மற்ற தெய்வங்களை பூஜை அறையில் வழிபடுவது போல சூரியனையும் வழிபடுவதையேக் குறிக்கும். இது யார் வேண்டுமானாலும் எளிய முறையில் செய்யலாம். அதிகாலையில், அதாவது ஆறு மணிக்குள் எழுந்து குளித்து சுத்தமான ஆடை அணிந்து சமயச் சின்னங்களை (விபூதி, குங்குமம், திருமண் போன்றவை) அணிந்து கிழக்கு திசை நோக்கி நின்று சூரியனை தரிசனம் செய்வது சூரிய நமஸ்காரத்தின் முதல்படி.

பாஸ்கராய வித்மஹே
மஹத் யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்ய ப்ரசோதயாத்

என்பது சூரிய காயத்ரி. இதனை மூன்று முறை ஜெபித்து விட்டு அடியிற்கண்ட எளிய மந்திரத்தைச் சொல்லி சூரியனை நமஸ்காரம் செய்யலாம்.

ஓம் தினகராய பாஸ்கராய
ஜ்யோதிஸ்வ ரூபாய
சூர்ய நாராயணாய தேவாய
நமோ நமஹ
இது சூரிய நமஸ்காரத்திற்கு எளிய மந்திரம். ராமாயணத்தில் ஸ்ரீராமனுக்கு அகஸ்தியர் உபதேசித்த ஆதித்ய ஹ்ருதயத்தையும் பாராயணம் செய்யலாம்.

காலையில் எழுந்ததும் சொல்ல வேண்டியவை

காலையில் எழுந்ததும் சொல்ல வேண்டியவை

1. கராக்ரே வஸதே லக்ஷ?மீ: கரமத்யே ஸரஸ்வதீ
கரமூலே து கௌரி ஸ்யாத் ப்ரபாதே கரதர்சனம்
2. ஸமுத்ரவஸனே தேவி பர்வதஸ்தன மண்டிதே
விஷ்ணுபத்னி நமஸ்துப்யம் பாதஸ்பர்சம் க்ஷமஸ்வமே
3. அஹல்யா திரௌபதீ ஸீதா தாரா மந்தோதரீ ததா
பஞ்ச கன்யா: ஸ்மரேந்நித்யம் மஹாபாதகநாசனம்
4. புண்யச்லோகோ நலோ ராஜா புண்யச்லோகோ யுதிஷ்டிர:
புண்யச்லோகா ச வைதேஹீ புண்யச்லோகோ ஜனார்தன:
5. கார்கோடகஸ்ய நாகஸ்ய தமயந்த்யா: நளஸ்ய ச
ருதுபர்ணஸ்ய ராஜர்ஷே: கீர்த்தனம் கலி நாசனம்
6. அச்வத்தாமா பலிர்வ்யாஸ : ஹனுமான் ச விபீசண:
க்ருப: பரசுராமஸ்ச்ச ஸப்தைதே சிரஜீவின:
7. ப்ரம்மா முராரி : ஸ்திரிபுராந்தகச்ச
பானுச்சசீ பூமிஸுதோ புதச்ச
குருச்ச சுக்ரச்சனிராஹுகேதவ:
குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்
8. ப்ருகுர்வஸிஷ்ட : க்ரதுரங்கிராச்ச
மனு: புலஸ்த்ய : புலஹச்ச கௌதம:
ரைப்யோ மரீசி : ச்யவனோத தக்ஷ:
குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்
9. ஸனத்குமாரச்ச ஸனந்தனச்ச
ஸனாதனோப்யாஸுரிஸிம்ஹலௌச
ஸப்தஸ்வராஸ்ஸப்த ரஸாதலானி
குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்
10. ஸப்தார்ணவா : ஸப்தகுலாசலாச்ச
ஸப்தர்ஷயோ த்வீபவனானி ஸப்த
பூராதிலோகா : புவனானி ஸப்த
குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்
11. ப்ருத்வீ ஸகந்தா ஸரஸாஸ்ததா ஸஸப:
ஸ்பர்சச்ச வாயூர்ஜ்வலிதம்ச தேஜ:
நபஸ்ஸசப்தம் மஹாதாஸஹைவ
குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம்
12. குருர்ப்ரஹ்மா குருர்விஷ்ணு குருர்தேவோ மஹேச்வர:
குரு: ஸாக்ஷ?த் பரம் ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம:

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

அப்பா சொல்லை தட்ட முடியவில்லை

அப்பா சொல்லைத் தட்டமுடியாமல் ஓரிக்கைக்கு வந்தார் கணபதி. அங்கே பெரியவா இருந்த சின்ன அறையில் வெளிச்சம் கூட இல்லை. அவரும் ஏதோ காஷாயம் சுற்றிக்கொண்டு உட்கார்ந்திருந்தார். கணபதிக்கு அங்கே எந்த ஈர்ப்பும் ஏற்படவில்லை. என்ன இவர்... கோயில் வாசலில் இருக்கும் ஆண்டியைவிட சாதாரணமா இருக்காரே என்ற எண்ணம்!

அறைக்குள் நுழைந்தது முதல், வைத்த கண் எடுக் காமல் கணபதியைப் பார்த்துக் கொண்டிருந்த மஹா பெரியவா சிறிது நேரம் கழித்துப் 'போகலாம்’ என்று உத்தரவு கொடுத் ததும்தான் 'அப்பாடா’ என்றிருந்தது கணபதிக்கு.

இருந்தாலும் வீடு திரும்பிய பின்னரும் கணபதியின் மனசு பூராவும் பெரியவா நினைப்பே சுழன்று சுழன்று வந்தது. எங்கே திரும்பினாலும் பெரியவா இருக்கிற மாதிரி ஒரு பிரமை! 'பெரியவா என்னைத் தடுத்தாட்கொண்டு இருக்கார்னு புரிஞ்சுது. அதன் பிறகு என் வாழ்க்கையே திசை திரும்பிடுச்சு!’ என்று கூறியிருக்கிறார் கணபதி. அதன் பிறகு, 'கல்கி’ பத்திரிகையுடன் தொடர்பு ஏற்பட்டு, சதாசிவம், எம்.எஸ் தம்பதியின் கருணை வட்டத்தில் வந்து விட்டார். சில காலம் கழித்து, மடத்துக்கு மீண்டும் அறிமுகமாகி, பெரியவா சொல்வதைக் குறிப்பு எடுக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

பெரியவா ஓரிடத்தில் சொன்ன சமாசாரத்தை இன்னோர் இடத்தில் தொடர்வார். பெரியவா பேச்சில் சயின்ஸ் இருக்கும்; வேதம் இருக்கும். கணபதி எல்லாவற்றையும் ஒன்று விடாமல் குறித்துக்கொள்வார். வேத வியாசருக்கு விநாயகர் அமைந்த மாதிரி, மஹா பெரியவாளுக்கு ரா.கணபதி கிடைத்தார் னுதான் சொல்லணும். ஆசார நியம நிஷ்டை, தபஸ் எல்லாமே கணபதிக்குப் பழகிப் போச்சு. நைஷ்டிக பிரம்மசாரி. ராமகிருஷ்ண மடத்து 'அண்ணா’தான் அவருக்கு மந்திர குரு; உபதேசம் செய்து வைத்தவர்.

கணபதி அம்பத்தூரில் தங்கியிருந்த காலத்தில் அவர் அம்பாள் பூஜை செய்வதை பார்க்கணுமே... அவ்வளவு சிலிர்ப்பா இருக்கும். கேரள நம்பூதிரி ஒருவர் இந்த அம்பாள் விக்கிரகத்தைத் தலையிலேயே சுமந்துகொண்டு வந்து, சிதம்பரத்தில் இருந்த இவரது வீட்டில் சேர்ப்பித்தாராம். கேட்டதற்கு, 'இங்கேதான் கொடுக்கணும்னு அம்பாள் சொல்லிட்டா’ என்றாராம்.

கொஞ்ச காலம் புட்டபர்த்தியில் தங்கலாம் என்று அங்கே போனார் கணபதி. ஆனால், ஸ்ரீசாயிபாபா இவரைக் கூப்பிட்டு, 'தெய்வத்தின் குரலை’ எழுதுவதே உங்களின் பிறவிப் பணி. நீங்கள் தொகுக்கும் 'தெய்வத்தின் குரல்’ இந்து மதத்துக்கும் சனாதன தர்மத்துக்கும் பலமாக - உபநிஷத்துக்குச் சமானமாக இருக்கப் போகிறது’ என்று அருளினாராம்.
மஹா பெரியவாளை ஸ்ரீராமர் என்றுதான் கணபதி சொல்வார். பெரியவாளுடைய நூற்றாண்டு விழாவின் போது, கணபதியை கௌரவம் பண்ணி சன்மானம் கொடுக்க... அதை அப்படியே ஓரிக்கை கோயிலுக்குக் கொடுத்துவிட்டார் கணபதி.

ஒரு சந்தர்ப்பத்தில், பெரியவா சரிதத்தைக் 'கல்கி’யில் எழுதத் தொடங்கினார். இரண்டு வாரம்தான் வந்திருக்கும். பெரியவா கணபதியைக் கூப்பிட்டனுப்பி, 'போறும் நிறுத்திடு’ன்னு சொல்லிட்டார். 'அதுக்குப் பதிலா, மடத்திலே எனக்காக எத்தனையோ பேர் இரவும் பகலும் உழைக்கறவா இருக்கா. அவாளைப் பத்தி எழுது!’ன்னார். 'அவர்களைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாதே’ என கணபதி தயங்கவும், 'தெரிஞ்சதை எழுது; தெரியாததை நான் சொல்றேன். 1907-ல் பைங்காநாடு கணபதி சாஸ்திரி எனக்கு வித்யா குருவா இருந்திருக்கார். அவரைப் பற்றி எழுது. பெரிய புராணம் மாதிரி, இதைத் திருத்தொண்டர் புராணம்னு எழுது’ என்று சொன்னாராம் பெரியவா. ஆனால், கடைசியில், மடத்தைச் சேர்ந்த ஏ.குப்புசாமி ஐயர் என்பவர்தான் அதை எழுதினார்.
'தெய்வத்தின் குரலை’ நான் உபன்யாசம் செய்வது இருக்கட்டும்... அதைப் படித்தவர்கள் யாரேனும் வாழ்க்கையில் சிறிதேனும் தங்களை மாற்றிக்கொண்டு இருக்கிறார்களா என்பதை அறிய, நானும் நண்பர் சிவராமனும் போகிற இடங்களில் எல்லாம் கவனித்துப் பதிவு செய்வது வழக்கம். அப்படியான சம்பவங்கள் நிறைய! 'தெய்வத்தின் குரல்’ ஏழு பாகங்கள் வெளியாகி இருக்கு. ஏழாவது வால்யூமை பெரியவா பார்க்கலை. கணபதி, இன்னும் இரண்டு வால்யூம்களுக்கு விஷயம் வைத்திருந்தார். 'அதையெல்லாம் எப்போது எழுதப் போகிறீர்கள்?’ என்று கேட்டபோது, கணபதி என்ன சொன்னார் தெரியுமா? 'என் புத்தியில் இருந்து எழுத வெச்ச பேய் மலை ஏறிடுத்து. இனிமே என்னால எழுத முடியாது!’ என்றார் தமாஷாக. மகா பெரியவா மாதிரியே கணபதிக்கும் அசாத்திய ஞாபக சக்தி. பத்து வருஷத்துக்கு முந்தி சந்தித்தவரைக்கூட, நினைவில் வைத்து விசாரிப்பார்.

ரா.கணபதி போதேந்திராள் சரிதத்தையும் 'காம கோடி ராம கோடி’ எனும் தலைப்பில் எழுதி வெளியிட்டிருக்கார். போதேந்திராள் 59-வது ஆசார்ய பீடம்; அவர் கோபி சந்தனம் இட்டுக் கொண்டிப்பார் எனப் புத்தகத்தில் எழுதியிருந்தார் கணபதி. 'அது தப்பு; திருத்தணும்!’ என்றாராம் பெரியவா. அத்துடன், 'விபூதி, ருத்ராட்சம் தவிர வேறெதுவும் அணிவதில்லை என்ற மடத்து சம்பிரதாயத்தை அவர்கள் (போதேந்திராள்) ரட்சித்துக் கொடுத்தார்கள். அதை ஜனங்க தெரிஞ்சுக் கணும்’ என்றும் அறிவுறுத்தினாராம்.

ஆதிசங்கரர் குறித்த 'ஜெயஜெய சங்கர’, ஸ்ரீரமணரைப் பற்றிய 'ரமணாயனம்’, மீராபாயின் வரலாற்றைச் சொல்லும் 'காற்றினிலே வரும் கீதம்’, பாபாவின் சரிதம் சொல்லும் 'ஸ்வாமி’, ராமகிருஷ்ண பரமஹம்சர்- விவேகானந்தர்- சாரதாமணி அம்மையார் பற்றி 'அறிவுக்கனலே, அருட் புனலே’ ஆகிய அற்புதமான நூல்களும் ரா.கணபதியின் படைப்புகளே! எனினும், 'தெய்வத்தின் குரல்’ ஒன்றுக்காகவே தமிழுலகமும் ஆத்திக உலகும் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது'' - நெகிழ்ச்சியுடன் சொல்லி முடித்தார் கணேச சர்மா.
'ஒருமுறை நானும் பால்யூவும் ரா.கணபதி சாரும் பாபாவை தரிசிச்சுட்டு, புட்டபர்த்தியில் இருந்து ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தோம். மாலை நேரம் ஆனதும் தியானத்தில் ஆழ்ந்துவிட்டார் கணபதி சார். நெற்றி நிறைய விபூதியுடன் அவரைப் பார்த்தபோது ஆதிசங்கரர் மாதிரி இருந்தது.

வழியில் ஓரிடத்தில் பயங்கரச் சத்தம். அசம்பாவிதம் எதுவும் இல்லை என்றாலும், எல்லோரும் பயந்துபோனோம். ஆனால், கணபதி சார் கொஞ்சம்கூட அசையவில்லையே! அப்படியரு யோக நிஷ்டையில் இருந்தார். இப்போது நினைத்தாலும் சிலிர்க்க வைக்கும் ஆச்சரியம் அது!'' என்று நெகிழ்கிறார் ஓவியர் மணியம் செல்வன். அறிஞர் அண்ணாவின் அன்னையார் மறைந்த தருணம்... மிகுந்த வருத்தத்தில் ஆழ்ந்திருந்தாராம் பேரறிஞர். அந்த வாரம் கல்கி இதழில் 'ஜய ஜய சங்கர’ தொடரில்... ஆதிசங்கரரின் தாயார் ஆர்யாம்பாள் மரணம் அடைவது பற்றி உருகி எழுதியிருந்தார் கணபதி. 'அதில் தாயை இழந்த சோகத்தை சங்கரர் அனுபவித்த விதம் குறித்து கணபதி எழுதியிருந்த விதத்தைப் படித்து நானும் நெகிழ்ந்துவிட்டேன்’ என அறிஞர் அண்ணா, பாரதி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் 'தன் வரலாறு’ நூலில் பதிவு செய்திருக்கிறார். ஆம்... அனைத்துத் தரப்பினரையும் அசைத்துப் பார்க்கும் எழுத்து நடைக்குச் சொந்தக்காரர் ரா.கணபதி.

வேண்டாம் இந்த சூதாட்டம்

வேண்டாம் இந்தச் சூதாட்டம் என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் அப்படிச்செய்யவில்லை பகவானே? என்று கேட்கப்பெற்ற போது கிடைத்த பதில். அதிரவைக்கும் பதில்

உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: "கண்ணா! முதலில் எனக்கு ஒரு விளக்கம் வேண்டும்.கிருஷ்ணா!

நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக பரிபூரணமாக நம்பினார்கள். நடப்பதை மட்டுமல்ல நடக்கப் போவதையும் நன்கறிந்த ஞானியான நீ உற்ற நண்பன் யார் என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின் படி முன்னதாகவே சென்று தருமா! வேண்டாம் இந்தச் சூதாட்டம் என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை? போகட்டும். விளையாட ஆரம்பித்ததும் தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும் படி செய்து வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. தருமன் செல்வத்தை இழந்தான் நாட்டை இழந்தான் தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக அதோடு அவனை விட்டிருக்கலாம். தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம்வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன் என்று சவால் விட்டான் துரியோதனன். அப்போதாவது உனது தெய்வீக சக்தியால் அந்த பொய்யான பகடைக்காய்கள் தருமனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. மாறாக திரௌபதியின் துகிலை உரித்து அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போது தான் சென்று துகில்தந்தேன் திரௌபதி மானம் காத்தேன் என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான் ஒருவன் குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து சூதர்சபையில் பலர் முன்னிலையில் அவள் ஆடையில் கை வைத்த பிறகு எஞ்சிய மானம் என்ன இருக்கிறது? எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய்? ஆபத்தில் உதவுபவன் தானே ஆபத்பாந்தவன்? இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா?' என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.

இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று; மகாபாரதம் படித்து விட்டு நாம் அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை. நமக்காக இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்.

பகவான் சிரித்தார். உத்தவரே! விவேகம் உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது உலக தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால் தான் தருமன் தோற்றான் என்றான் கண்ணன். உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க கண்ணன் தொடர்ந்தான். துரியோதனனுக்கு சூதாடத்தெரியாது. ஆனால் பணயம் வைக்க அவனிடம் பணமும் ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி பகடையை உருட்டிச் சூதாடுவார் என்றான் துரியோதனன். அது விவேகம். தருமனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு நானும் பணயம் வைக்கிறேன். ஆனால் என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான்' என்று சொல்லியிருக்கலாமே? சகுனியும் நானும் சூதாடியிருந்தால் யார் ஜெயித்திருப்பார்கள்? நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது,அவன் கேட்கும் எண்ணிக்கைளை என்னால்தான் போடமுடியாதா? போகட்டும். தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்து விட்டான் என்பதையாவது மன்னித்து விடலாம். ஆனால் அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவறையும் செய்தான். ஐயோ! விதி வசத்தால் சூதாட ஒப்புக் கொண்டேனே! ஆனால் இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்னுக்கு மட்டும் தெரியவே கூடாது. கடவுளே! அவன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு அவனே கட்டிப் போட்டு விட்டான். நான் அங்கு வரக் கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான். யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் கூப்பிடமாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக் கொண்டு நின்றேன். பீமனையும் அர்ஜுனனையும் நகுல சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும் தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர என்னைக் கூப்பிட மறந்து விட்டார்களே! அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்று திரௌபதியின் சிகையைப் பிடித்த போது அவளாவது என்னைக் கூப்பிட்டாளா? இல்லை. அவளும் தனது பலத்தையே நம்பி சபையில் வந்து வாதங்கள் செய்து கொண்டிருந்தாளே ஒழிய என்னைக் கூப்பிடவில்லை! நல்லவேளை.. துச்சாதனன் துகிலுரித்த போதும் தனது பலத்தால் போராடாமல் ஹரி... ஹரி... அபயம் கிருஷ்ணா! அபயம் எனக் குரல் கொடுத்தாள் பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போது தான் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன தவறு? என்று பதிலளித்தான் கண்ணன்.

அருமையான விளக்கம் கண்ணா! அசந்துவிட்டேன். ஆனால் ஏமாறவில்லை. உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?" என்றார் உத்தவர்.

"கேள்" என்றான் கண்ணன்.

அப்படியானால் கூப்பிட்டால் தான் நீ வருவாயா? நீயாக நீதியை நிலை நாட்ட ஆபத்துகளில் உன் அடியவர்களுக்கு உதவ வரமாட்டாயா? புன்னகைத்தான் கண்ணன்.

உத்தவா மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை; அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் 'சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே! அதுதான் தெய்வ தர்மம்" என்றார்.

நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால் நீ அருகில் நின்று நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே?" என்றார் உத்தவர். உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் போது உங்களால் தவறுகளையோ தீவினைகளையோ நிச்சயமாகச் செய்ய முடியாது. அதை நீங்கள் மறந்து விடும் போது தான் எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்து விடலாம் என்று எண்ணுகிறீர்கள். பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நிகழ்வதும் அப்போது தான். எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே அது தான் அவனது அஞ்ஞானம். நான் சாட்சி பூதமாக எப்போதும் எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால் இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் அல்லவா? என்றான் ஸ்ரீகிருஷ்ணன். உத்தவர் வாயடைத்து பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். ஆகா! எத்தனை ஆழமான தத்துவம்! எத்தனை உயர்ந்த சத்யம்! பகவானைப் பூஜிப்பதும் பிரார்த்தனை செய்வதும் அவனை உதவிக்கு அழைக்கும் ஓர் உணர்வுதானே! அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்ற நம்பிக்கை வரும் போது அவன் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்? அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற முடியும்?

இந்த தத்துவத்தைதான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்தான்.
அர்ஜுனனுக்காகத் தேரைச் செலுத்தி வழி நடத்தினானே தவிர அர்ஜுனன் இடத்தில் தானே நின்று அவனுக்காகப் போராடவில்லை அது தான் பகவானின் மேன்மை!

வியாழன், 13 ஆகஸ்ட், 2020

வால்மீகி ராமாயணம்

வால்மீகி வரலாறு தேவலோகத்தில் வருண பகவான் தன்னுடைய குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது நாராயண நாமத்தை சொல்லிக்கொண்டு நாரதர் அங்கு வந்தார். வருண பகவானோ நாரதர் வருவதைக் கவனிக்காமல் குழந்தையுடனே விளையாடிக் கொண்டிருந்தார். நாராயண நாமத்தை கவனிக்காத வருணன் மேல் கோவம் கொண்ட நாரதர் நீ உன் குழந்தையை பிரிவாயாக என்று சாபமிட்டார். நாரதரிடம் தன்னை மன்னிக்கும் படியும் சாப விமோசனம் கொடுக்கும் படியும் கேட்டுக்கொண்டான் வருணன். அதற்கு நாரதர் இந்தச் சாபம் ஒரு வரம் இக்குழந்தை பூலோகத்தில் பிறந்து பிற்காலத்தில் விஷ்ணுவின் அவதாரப் புராணத்தை ஒரு இதிகாசமாகப் படைக்கும் என்று வாழ்த்திவிட்டு சென்றார். அக்குழந்தையே பிற்காலத்தில் வால்மீகி என்ற பெயர் பெற்று ராமாயணத்தை படைத்தார். மகரிஷி கஷ்யப அதிதி தம்பதியருக்கு ஒன்பதாவது குழந்தையாக வருண் பிரசேதாஸ் என்பவர் பிறந்தார். அந்த வருண் பிரசேதாஸிற்கு ரிக்சன் என்கிற ரத்னாகர் பத்தாவது குழந்தையாகப் பிறந்தார். ரத்னாகர் தனது மிகவும் ஏழ்மையான குடும்பத்தைக் காப்பாற்ற வழி தெரியாமல் திருட ஆரம்பித்தான். காட்டு வழியில் வருபவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளை அடித்துக் கொண்டு தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தான். அவனுடைய ஜென்ம காரணத்தினால் நாரதர் ரத்னாகர் இருந்த காட்டு வழியே வந்தார். அவர் வருவதைப் பார்த்துவிட்டு கத்தியை எடுத்துக் கொண்டு அவர் அருகில் சென்றான். அவரை அருகில் சென்று பார்ததுமே அவன் மனதில் சிறிது சாந்தம் ஏற்பட்டது. அவரிடம் யார் நீங்கள்? எங்கு வந்தீர்கள்? இருப்பதையெல்லாம் கீழே வைத்துவிட்டு பேசாமல் ஓடிப்போங்கள் என்றான். அதற்கு அவர் என்னிடம் ஒன்றுமே இல்லை நான் நாராயண மந்திரத்தைச் சொல்லிக் கொண்டு பகவானை வணங்கிக் கொண்டு இருக்கின்றேன். எனக்கு எதுவும் தேவை இல்லை. சதா பகவத் தியானத்திலேயே ஆனந்தமாக இருக்கின்றேன் என்றார். அதற்கு ரத்னாகர் பார்த்தாலே தெரிகிறது நீங்கள் சாந்தமாக ஆனந்தமாக இருக்கின்றீர்கள். ஆனால் உங்களிடம் ஒன்றும் இல்லை என்கின்றீர்கள். நான் நிறைய கொள்ளையடித்து சேர்த்து வைத்திருக்கிறேன் என்றான். நீ இப்படி சேர்த்து வைத்த பணமெல்லாம் பண மூட்டை இல்லையப்பா இதெல்லாம் பாவ மூட்டை. இதற்காக நரகத்தில் கஷ்டப்படுவாய். இந்த உலக வாழ்க்கைக்குப் பிறகு சொர்க்கம் நரகம் என்று உள்ளது. இங்கே நல்ல வாழ்க்கை வாழ்ந்து புண்ணிய காரியங்கள் செய்தால் சொர்க்கம் செல்வார்கள். பாவச் செயல்கள் செய்தால் நரகத்திற்கு செல்வார்கள். நரகத்தில் பலவிதமான தண்டனைகளைப் பெற்று அவதிப் படவேண்டியிருக்கும் என்றார் நாரதர். நான் செய்யும் செயல்கள் அனைத்தும் என் மனைவி குழந்தைகளுக்காகத் தானே செய்கிறேன். அவர்கள் எல்லோரும் என்னுடைய பாவத்தைப் பகிர்ந்து கொள்வார்கள் என்றான் ரத்னாகர். அப்படியானால் நீ அவர்களைப் போய் கேட்டுக் கொண்டு வா என்றார் நாரதர். முனிவரே தப்பித்துப் போக முயல்கிறீரா இதெல்லாம் என்னிடம் முடியாது என்றான். இல்லையப்பா நீ வேண்டுமானால் என்னைக் கயிற்றால் கட்டிப் போட்டுவிட்டுச் செல். அவர்களிடம் கேள். அவர்கள் உன் பாவத்தில் பங்கு கொள்வதாய்க் கூறிவிட்டால் என்னிடம் உள்ளதை எல்லாம் எடுத்துக்கொள். அவர்கள் இல்லையென்று சொல்லிவிட்டால் நான் சொல்வதை நீ செய்ய வேண்டும் என்றார் நாரதர். ரத்னாகர் யோசித்துப் பார்த்தான். இந்த முனிவர் சொல்வதும் சரியாகத் தான் இருக்கிறது. நாம் கேட்டுத்தான் பார்ப்போமே என்று நினைத்து நாரத முனிவரை அங்கிருந்த ஒரு மரத்தில் கட்டிப் போட்டு விட்டு சென்றான். 

ரத்னாகர் அவனின் வீட்டுக்கு வந்து தன் அப்பா அம்மா மனைவி மற்றும் குழந்தைகளிடம் நான் நிறைய பாவம் செய்துவிட்டதாக ஒரு முனிவர் சொல்கிறார். அந்த பாவங்களை எல்லாம் நீங்கள் என்னோடு பகிர்ந்து கொள்கிறீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள் நாங்கள் எதற்காக உன் பாவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்? நீ நல்ல வழியில் சம்பாதிக்க வேண்டியதுதானே? நீ ஏன் பாவ வழியில் சம்பாதிக்கின்றாய்? குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டியது உன்னுடைய கடமை. அதற்கு நல்ல வழியில் சம்பாதிக்க வேண்டியது உன்னுடைய தர்மம். அதை விட்டு விட்டு தவறான வழியில் சம்பாதிப்பது உன் தவறு. அதனால் உன்னுடைய பாவத்தை நாங்கள் வாங்கிக் கொள்ள மாட்டோம் என்று கூறிவிட்டனர்.

இதைக் கேட்டவுடன் ரத்னாகருக்கு அகக்கண் திறந்துவிட்டது. திரும்பி வரும்போது முற்றிலும் மாறியிருந்தான் ரத்னாகர். ஓடி வந்து நாரதரின் காலில் விழுந்து சுவாமி நீங்கள் சொன்னது சரிதான் என்று கண் கலங்கியபடியே நாரதரின் கட்டுகளை அவிழ்த்து விட்டான். சுவாமி நீங்கள் சொன்னபடி என் மனைவி குழந்தைகள் பெற்றோர் என எல்லோரிடமும் என் பாவத்தில் பங்கு கொள்வீர்களா என்று கேட்டேன். எல்லோரும் ஒரே விதமாய் எங்களைக் காப்பாற்ற வேண்டியது உன் கடமை. நீ எப்படிப் பொருள் கொண்டு வருகிறாய் என்பது பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. நீ பாவ வழிகளில் சம்பாதித்தால் அந்த பாவங்களை நீதான் அனுபவிக்க வேண்டும். அதில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை என்று கூறிவிட்டார்கள் என்றான். அதற்கு நாரதர் அவர்கள் சொன்னதில் தவறில்லையே? மனைவி மக்களைக் காப்பாற்றுவது உன் கடமை. அதை நல்வழியில் செய்கிறாயா இல்லையா என்பதைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை என்றார் நாரதர். ஆமாம் சுவாமி அதை நான் இப்போது உணர்கிறேன். நீங்கள் தான் நான் எல்லா பாவங்களில் இருந்தும் விடுபட ஒரு நல்ல வழி காண்பிக்க வேண்டும் என்றான். நீ செய்த பாவங்களுக்கு எல்லாம் தகுந்த பிராயச்சித்தம் இராம நாமத்தைச் சொல்லிக் கொண்டு இருப்பதே. இராம நாமத்தை ஜபம் செய்வது எல்லாப் பாவத்தையும் போக்கும் என்றார் நாரதர்.

ரத்னாகருக்கு ராம என்ற சொல் வாயில் நுழையவில்லை. இதனை பார்த்த நாரதர் அங்கிருக்கும் மரத்தை காட்டி இது என்ன மரம் என்று கேட்டார். இது மரா மரம் என்றான். நீ இந்த மரத்தின் பெயரான மரா என்பதைச் சொல்லிக் கொண்டிரு அது போதும் என்றார். நீங்கள் சொன்னபடியே இந்த மரா மரத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று வணங்கி நின்றான். நாரதரும் அவனை ஆசீர்வசித்து விட்டுத் தன் வழியே சென்றார். அவர் போனபின் ரத்னாகர் அங்கேயே அமர்ந்து தன்னை மறந்து மரா மரா மரா என்று ஜபிக்க ஆரம்பித்தான். நாளடைவில் அது ராம ராம ராம என்று மறுவி ஒலித்தது. ரத்னாகர் இரவு பகலாய் பசி தாகத்தை மறந்து ராம ராம ராம என்று ஜபம் செய்து கொண்டே சமாதி எனும் நிஷ்டையில் இருந்தான். அசையாமல் அவன் இருந்ததால் நாளடைவில் அவன் மேல் புற்று வளர்ந்தது. ராம நாம ஜபத்தால் அவன் பாவமெல்லாம் அழிந்து ஞானம் பெற்றான்.

சில காலம் கழித்து சப்தரிஷிகள் அந்தப் பக்கம் வந்தார்கள். அங்கே ராம நாம ஜபம் ஒரு புற்றுக்குள்ளிருந்து ஒலித்துக் கொண்டிருப்பதைக் கேட்டு அதற்குள் இருப்பவரை தங்களின் ஞானக்கண்ணால் பார்த்து வால்மீகி என்று அழைத்தனர். சமஸ்கிருதத்தில் வால்மீகி என்றால் புற்றுக்குள்ளிருப்பவன் என்று பெயர். அவர்களின் அழைப்பினால் தவம் கலைந்து புற்றிலிருந்து ரத்னாகர் வால்மீகியாக வெளியே வந்தார். இடைவிடாத ராம நாம ஜெபத்தின் பயனால் நீங்கள் ஒரு மகரிஷியாகிவிட்டீர்கள். இன்றிலிருந்து உமக்கு வால்மீகி என்று பெயரே நிலைக்கும். ராம நாமத்தின் மகிமையை உங்கள் மூலமாக இந்த உலகம் தெரிந்துக் கொள்ளும் என்று கூறி ஆசீர்வதித்தனர். அவரும் ரிஷிகளை நமஸ்கரித்து விட்டு பின் ராம நாமத்தையே ஜபித்துக் கொண்டு ஒரு ஆசிரமத்தை தமஸா நதிக் கரையில் கட்டிக் கொண்டார். அவரிடம் சிஷ்யர்கள் எல்லாம் வந்து சேர்கிறார்கள். வால்மீகி தன்னுடைய தவத்தினால் ராமனின் வரலாற்றை தனது ஞானதிருஷ்டியில் கண்டார். இப்படிப்பட்ட குணாதிசயங்களோடு ஒரு மனிதன் இந்த உலகத்தில் இருப்பானா என்று அவருக்கு சந்தேகம் வந்தது.

ஒரு நாள் நாரதர் அவரது ஆசிரமத்திற்கு வருகிறார். அவரை வரவேற்ற வால்மீகி தன்னுடைய ஞான திருஷ்டியில் கண்ட மனிதனை பற்றி நாரதரிடம் கேட்கின்றார். இந்த உலகில் சத்யம், தர்மம், அழகு, படிப்பு, வீரம், ஒழுக்கம் என்று எல்லா நல்ல குணங்கள் கொண்ட மனிதன் யாரேனும் உண்டா என்று நாரதரிடம் கேட்டார். அதற்கு நாரதர் உண்டு அவர் தான் இக்ஷ்வாகு வம்சத்தில் வந்த தசரத மன்னனின் குமாரர் ஸ்ரீராமர் என்று கூறி வால்மீகி முனிவருக்கு ராம சரித்திரத்தை சுருக்கமாக நூறு சுலோகங்களில் உபதேசித்தார். இது ஸங்க்ஷேப இராமாயணம் எனப்படும். இதுவே வால்மீகி ராமாயணத்தின் முதல் சர்கம் ஆகும்.

ஒரு நாள் வால்மீகி முனிவர் தமஸா நதியில் குளிக்க செல்கிறார். அப்போது அங்கு இரண்டு அன்றில் பறவைகள் மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டு இருக்கின்றன. அப்போது வேடன் ஒருவன் அம்பால் ஒரு அன்றில் பறவையை அடித்துவிடுகிறான். ஒரு பறவை இறந்தவுடன் இன்னொரு பறவை தன்னுடைய ஜோடி பறவை இறந்த துக்கத்தில் ஓலமிட்டது. பறவையின் துக்கத்தை கண்ட வால்மீகி தன் ஞான திருஷ்டியில் கண்ட ராமனும் இப்படி தானே சீதையை பிரிந்து துக்கப்பட்டிருப்பான் என்று எண்ணி திரேதாயுக விஷ்ணுவின் அவதாரமான ராமாயண இதிகாசத்தை 24000 சுலோகங்கள் கொண்டதாக முழுமையாக இயற்றினார். யோக வாசிஷ்டம், அத்புத ராமாயணம், கங்காஷ்டகம் ஆகிய நூல்களும் இவரால் இயற்றப்பட்டவையே.

வால்மீகி இயற்றிய ராமாயணம் இந்தியாவின் அனைத்து மக்களிடமும் பரவி உலகில் பல்வேறு மொழிகளிலும் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இவர் இயற்றிய ராமாயணமும் அதன் பாத்திரங்களும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ராமாயணம் நூல் இதிகாசமே என்றாலும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் புவியியல் அமைவுகள் விவரிக்கப் பட்டிருக்கும் ஆட்சி முறைமைகள் அரசுகள் போன்றவற்றை ஆய்வு நோக்கில் பார்க்கும் போது வெறுமனே கற்பனையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இவ்வாறான ஒரு இதிகாசத்தைப் படைக்க முடியாது என்று தெரிந்து கொள்ளலாம். நான்கு வரிகள் கொண்ட சுலோகங்களால் எழுதப்பட்டுள்ள வால்மீகியின் ராமாயணத்திலிருந்து ஒரு வரியைக் கூட மாற்ற முடியாது அல்லது புதிதாக இடைச் செருகல் என்று சேர்க்க முடியாது என்பது மகாகவி பாரதியாரின் வாக்கு.

பல முனிவர்கள் வால்மீகி என்கிற இதே பெயரில் இருந்து சித்தி அடைந்திருக்கிறார்கள். எட்டுகுடியில் ஒரு வால்மீகியின் சமாதி இருக்கிறது. அவர் எழுதிய பாடல்கள் மூலம் அவர் பிற்காலத்தவர் என்று தெரிந்து கொள்ளலாம். திருவாரூர், சங்கரன்கோவில், குடவாசல், திருவெற்றியூர், காஞ்சீபுரம் இப்படிப் பல கோவில்களில் வால்மீகநாதர் சந்நிதியும் வேறுபாடான திரு உருவங்களும் உண்டு. இவை எல்லாம் வால்மீகி என்ற பெயரில் பல முனிவர்கள் இருந்திருக்கின்றார்கள் என்பதற்குச் சான்றாகும்.

கர்மாவின் கதை

கர்மாவின் கதை:-

ஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார்.! யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் என்றார்.! பின் சித்திரக்குப்தனை யமன் ரிஷியுடன் செல்ல பணிந்தார்.! சித்திரக்குப்தன் யமன் ஆணைக்கு இணங்க ரிஷியுடன் சென்றார்.

யமலோகம் விசித்திர லோகம். அங்கே நடக்கும் ஒவ்வொரு காரியத்துக்கும் உண்டான காரணம், பாகுபாடற்ற-பாரபட்சமற்ற நீதி, நிலை நிறுத்தப்படும் தர்மம் அத்தனையையும் பார்க்கப் பார்க்க, அந்த ரிஷியே ஆடிப்போனார். தண்டனைகளுக்கான காரணங்களில் அத்தனை துல்லியம். ‘இப்படி நரகம் என்று ஒன்று இருப்பது தெரிந்தும், தண்டனை கிடைக்கும் என்பதை அறிந்தும் ஏன் இந்த மனிதர்கள் பாவங்களைச் செய்கிறார்கள்?’ நினைக்க நினைக்க அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது.  

மனிதர்கள் தங்கள் பாவங்களுக்காக அனுபவிக்கும் கொடூர தண்டனைகள் அவரை சஞ்சலம்கொள்ள வைக்கவில்லை. பந்த பாசங்களுக்கு அப்பாற்பட்ட, அனைத்தையும் கடந்த, சித்தி பல பெற்ற முனிவர் அல்லவா?! சந்தேகம் எழும் இடங்களில் எல்லாம் சித்ரகுப்தனைத் திரும்பிப் பார்ப்பார். அவரின் குறிப்பை உணர்ந்தவனாக, சித்ரகுப்தனே அவருக்கு அனைத்தையும் விளக்குவார்.

இருவரும் நடந்துவரும் வழியில், ஓர் இடத்தில் ஐந்தடி உயரத்துக்கு கற்பாறை ஒன்றைக் கண்டார் முனிவர்.

“இது என்ன... கற்பாறை?”

“ஒன்றுமில்லை மகாமுனி! ஒரு சிறுவனின் பாவம்... இப்படி வளர்ந்து நிற்கிறது!’’

“சிறுவன் செய்த பாவமா? அது என்ன பாவம்?’’

''பூலோகத்தில் ஒரு முனிவரின் ஆசிரமத்துக்கு தினமும் பல அதிதிகள் வருவது வழக்கம். முனிவரும் வருபவர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்று உபசரித்து உணவு அளிப்பார். அந்த முனிவருக்கு ஒரு பிள்ளை. அந்தப் பிள்ளை மிகவும் சேட்டைக்காரன். எப்போதும் ஏதாவது குறும்புகள் செய்துகொண்டே இருப்பான். அதிதியாக வருபவர்களுக்கு முனிவர் பரிமாறும் உணவில் சிறு சிறு கற்களைப் போட்டு, அவர்கள் சாப்பிடும்போது படும் கஷ்டத்தை ரசித்துப் பார்ப்பான். அப்படி அவன் அதிதிகளுக்கு செய்த பாவமான அந்தக் கற்கள்தான் சிறுவன் வளர வளர சிறு பாறையாக இப்படி வளர்ந்து நிற்கிறது. விதி முடியும் நேரத்தில் அவன் யமலோகத்துக்கு வரும்போது இந்தப் பாறையை அவன் உண்ண வேண்டும். இதுதான் அவனுக்கான தண்டனை'' என்றான் சித்ரகுப்தன்.

அசந்துபோனார் முனிவர். இருவரும் நடந்தார்கள். முனிவருக்கு அந்தச் சிறுவன் யார் என அறிந்துகொள்ள ஆர்வம். இது எங்கோ நடந்ததை தான் அறிந்ததாக அவருக்குள் ஒரு நினைவு நிழலாட்டம். ஆனால், சித்ரகுப்தனிடம் கேட்கத் தயக்கம். அவன் வேறுபுறம் சென்றதும், ரிஷி தன் ஞான திருஷ்டியில் அந்தச் சிறுவன் யார் எனப் பார்த்தார். அது வேறு யாரும் அல்ல... சாட்சாத் அவரேதான்.  

தன் தவறை உணர்ந்தார், யமதர்மனிடம் போனார். நடந்ததைச் சொன்னார்.

யமதர்மா... நான் முக்தி பெற்று இறைவனடி சேர விரும்புகிறேன். அதற்குத் தடையாக நிச்சயம் இந்தக் கல் இருக்கும். எனவே, இந்த ஜன்மத்திலேயே அந்தப் பாவத்தைப் போக்க விரும்புகிறேன். நானே கொஞ்சம் கொஞ்சமாக இந்தக் கல்லை தின்று செரித்துவிடுகிறேனே...’’

முனிவரின் கோரிக்கையை யமதர்மன் ஏற்றான். கல்லைச் சிறிது சிறிதாக அரைத்து உண்டார் முனிவர். `சிலா’ என்றால் கல் என்று பொருள். கல்லை உண்டவர் என்பதால் அந்த முனிவர், `சிலாதர்’ ஆனார்.

எத்தனை சக்தி பெற்றவராக இருப்பினும், எண்ணற்ற தவம், ஞானம் பெற்றவராக இருந்தாலும், ஒருவர் பிறருக்கு செய்யும் தீமை அவரைச் சும்மா விடாது. பெரும் கர்ம வினையாக வளர்ந்துகொண்டே போகும். ஒருநாள் மொத்தமாகத் திரும்பக் கிடைக்கும். அப்போது நாம் அந்த கர்ம வினையை அனுபவித்தே தீர்க்க வேண்டும்.! இதை உணர்ந்தவர்கள் எறும்புக்குக்கூட இன்னல் விளைவிக்க நினைக்க மாட்டார்கள். சிலாதரின் கதை எத்தனை யாகம் ஹோமம் தவம் பரிகாரம் இறைவழிபாடு செய்தாலும் நம் கர்மவினை நம்மை விட்டு அகலாது அதை கல் போல் மனம் இல்லாமல் உண்டு அனுபவித்து கழிக்க வேண்டும் இந்த நீதியைத்தான் அழுத்தமாக உணர்த்துகிறது.