திங்கள், 16 டிசம்பர், 2019

எல்லாம் சிவனுக்காகவே!

சிவனுடைய கருணையை, பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து என்று மாணிக்கவாசகர் போற்றுகிறார். குழந்தைக்குப் பசிக்குமே என வேளையறிந்து, பாலூட்டி பசி தீர்ப்பவள் அம்மா. சிவனோ அந்த தாயினும் மேலான அன்பு கொண்டவன் என்கிறார்.  உலகில் பிறந்த உயிர்கள் எல்லாம் உணவைத் தேடி அலைகின்றன. ஆறறிவு படைத்த மனிதன் வயிறு வளர்ப்பதற்காக மட்டும் வாழக்கூடாது. மேலான இறைவனை உணரவே, இந்தப் பிறவி என்பது பற்றி சிந்திக்க வேண்டும். திருவாசகத்திலுள்ள சுட்டறுத்தல் என்னும் பகுதியில், சிந்தித்தால் சிவனைச் சிந்திக்கிறேன். பார்ப்பதாக இருந்தால் சிவனின் திருப்பாத மலர்களைக் காண்கிறேன். அவன் திருவடிகளையே வணங்குகிறேன். அவனைப் பற்றிய மணியான வார்த்தைகளையே பேசுகிறேன், என்கிறார் மாணிக்கவாசகர்.

பொருள் புரிந்து பாடுவோம்: நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! என்னும் மாணிக்கவாசகரின் சிவபுராணத்தைப் பாராயணம் செய்து விட்டு அன்றாடப்பணிகளைத் தொடங்குவது சிவபக்தர்களின் வழக்கம். அதன் இறுதி அடி, சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப்பணிந்து என்று முடியும். சிவபுராணத்தின் பொருளைத் தெரிந்து பாடுபவர்கள், சிவலோகத்தில் ஈசனோடு வாழும் பாக்கியம் பெறுவர் என்பது இதன் பொருள். சிவபுராணம் மட்டுமில்லாமல் இறைவனுக்குரிய எந்த வழிபாட்டுப் பாடலாக இருந்தாலும் அதன் அர்த்தம் புரிந்து பாடுவதே சிறப்பு.
ஆண்டாள் பாடிய பாசுரங்கள்!

ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பெருமாளை வேண்டி திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய பிரபந்தங்களை இயற்றினாள். இதில் திருப்பாவை 30 பாசுரங்களும், நாச்சியார்திருமொழி 143 பாசுரங்களும் உடையது.

பூமியைக் காட்டிய தாயார்: ஆண்டாளின் இடது கையில் கல்காரபுஷ்பமும், கிளியும் உள்ளன. வலக்கையை தொங்க விட்டு பூமியைக் காட்டியபடி இருக்கிறாள். இதனை, ஆண்டாள் தன்னை வேண்டி வரும் பக்தர்களுக்கு அருள் செய்வது பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் கோலம் என்கிறார்கள்.

ஆண்டாளின் பிறபெயர்கள்: ஆண்டாளின் இயற்பெயர் கோதை. இவளுக்கு சூடிக்கொடுத்த சுடர்க்கொடி, ஆண்டாள், பட்டர்பிரான் புதல்வி, திருப்பாவைபாடிய செல்வி, வேயர்குல விளக்கு என்ற பெயர்கள் உண்டு.

வெள்ளிக்குறடு மண்டபம்: ஆண்டாள் சந்நிதி அர்த்தமண்டபத்தில் வெள்ளிக்குறடு மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் மாலை 6 மணிக்கு ஆண்டாள், ரங்கமன்னாருடன் ஊஞ்சலில் எழுந்தருள்வாள். இந்நேரத்தில் ஆண்டாளை தரிசனம் செய்தால், திருமண பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

ராமன் வணங்கிய பெருமாள்: ராவணனுடன் போரிடச் சென்ற ராமன் வானர சேனையுடன் சேதுக்கரையை அடைந்தார். கடலைக் கடந்து இலங்கை செல்ல வேண்டி கடலரசனை நோக்கி நாணல் புல்லின் மீது படுத்தபடி மூன்று நாட்கள் தியானத்தில் ஆழ்ந்தார். அந்த இடமே திருப்புல்லணை என்றானது. தற்போது திருப்புல்லாணி எனப்படுகிறது. ஆதிஜெகந்நாதப்பெருமாள் என்பது இவரது திருநாமம். ராமன் வாழ்ந்த திரேதாயுகத்திற்கும் முந்தியவர். இவருக்கு பெரியபெருமாள் என்ற பெயர் உண்டு. சங்கு சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் திகழ்கிறார். ராவண சம்ஹாரத்திற்கு முன் ஜெகந்நாதரை வழிபட்ட ராமன், வெற்றி பெற்று அயோத்தி திரும்பும் போது மீண்டும் இங்கு வந்தார். இந்தக் கோயிலை மார்கழி மாதம் வழிபட்டால், இரட் டிப்பு பலன் கிடைக்கும் என்பர்.
கண்ணன் ஏன் பாண்டவர்களை காப்பாற்றவில்லை?
             (கண்ணனின் அற்புத விளக்கம்)
                 ***************************
பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே அவருக்குப் பணிவிடைகள் செய்து தேரோட்டி பல்வேறு சேவைகள் புரிந்தவர் உத்தவர்.இவர் தனது வாழ்நாளில் தனக்கென நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை.துவாபர யுகத்தில் தமது அவதாரப் பணியை முடித்துவிட்ட நிலையில் உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர் ''உத்தவரே இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும் நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால் நீங்கள் எதுவுமே கேட்டதில்லை.ஏதாவது கேளுங்கள் தருகிறேன்.உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்'' என்றார்.தனக்கென எதையும் கேட்காவிட்டாலும் சிறு வயது முதலே கண்ணனின் செயல்களைக் கவனித்து வந்த உத்தவருக்கு... சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின் லீலைகள் புரியாத புதிராக இருந்தன.அவற்றுக்கான காரண காரியங்களைத் தெரிந்துகொள்ள விரும்பினார்.''பெருமானே! நீ வாழச் சொன்ன வழி வேறு; நீ வாழ்ந்து காட்டிய வழி வேறு! நீ நடத்திய மகாபாரத நாடகத்தில்... நீ ஏற்ற பாத்திரத்தில் நீ புரிந்த செயல்களில் எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு.அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக இருக்கிறேன். நிறைவேற்றுவாயா?என்றார் உத்தவர்.''உத்தவரே! அன்று குருக்ஷேத்திரப் போரில் அர்ஜுனனுக்காக நான் சொன்னது, 'பகவத் கீதை’. இன்று உங்களுக்குத் தரும் பதில்கள், 'உத்தவ கீதை’. அதற்காகவே உங்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தைத் தந்தேன். தயங்காமல் கேளுங்கள்'' என்றான் பரந்தாமன்.உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: ''கண்ணா! முதலில் எனக்கு ஒரு விளக்கம் வேண்டும். உண்மையான நண்பன் யார்?''

''நண்பனுக்கு ஏற்படும் துயரத்தைத் தீர்க்க உடனே அழைப்பு இல்லா மலேயே வந்து உதவி செய்பவனே உற்ற நண்பன்'' என்றான் கண்ணன்''கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன்.உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக பரிபூரணமாக நம்பினார்கள்.நடப்பதை மட்டுமல்ல;நடக்கப் போவதையும் நன்கறிந்த ஞானியான நீ... 'உற்ற நண்பன் யார்’ என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின்படி...முன்னதாகவே சென்று, 'தருமா! வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா?ஏன் அப்படிச் செய்யவில்லை? போகட்டும்.
விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம்.அதையும் நீ செய்யவில்லை.தருமன் செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான்.சூதாடியதற்குத் தண்டனையாக அதோடு அவனை விட்டிருக்கலாம்.தம்பி களை அவன் பணயம் வைத்த போதாவது நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம்.அதையும் நீ செய்யவில்லை.திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள்.அவளைப் பணயம் வைத்து ஆடு.இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்’ என்று சவால் விட்டான் துரியோதனன்.அப்போதாவது உனது தெய்வீக சக்தியால், அந்தப் பொய்யான பகடைக் காய்கள் தருமனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை.

மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போதுதான் சென்று துகில் தந்தேன் திரௌபதி மானம் காத்தேன்என்று மார்தட்டிக் கொண்டாய்.மாற்றான் ஒருவன் குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து சூதர் சபையில் பலர் முன்னிலையில் அவள் ஆடையில் கை வைத்த பிறகு எஞ்சிய மானம் என்ன இருக்கிறது?எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய்?ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத் பாந்தவன்?இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்?நீ செய்தது தருமமா?என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று;மகாபாரதம் படித்துவிட்டு நாம் அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை.நமக்காக இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்.பகவான் சிரித்தார்.''உத்தவரே...விவேகம் உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது உலக தர்ம நியதி.துரியோதனனுக்கு இருந்த விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன் தோற்றான்'' என்றான் கண்ணன்.

உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க கண்ணன் தொடர்ந்தான்:
''துரியோ தனனுக்கு சூதாடத் தெரியாது. ஆனால் பணயம் வைக்க அவனிடம் பணமும் ஏராளமான ஆஸ்தியும் இருந்தது.பணயம் நான் வைக்கிறேன்.என் மாமா சகுனி பகடையை உருட்டிச் சூதாடுவார் என்றான் துரியோதனன்.அது விவேகம். தருமனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு நானும் பணயம் வைக்கிறேன்.ஆனால் என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான்''என்று சொல்லியிருக்கலாமே?சகுனியும் நானும் சூதாடியிருந்தால் யார் ஜெயித்திருப்பார்கள்?நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா?அல்லது அவன் கேட்கும் எண்ணிக்கைளை என்னால்தான் போட முடியாதா? போகட்டும்.தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான் என்பதையாவது மன்னித்த விடலாம். ஆனால் அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவற்றையும் செய்தான்.'ஐயோ... விதிவசத் தால் சூதாட ஒப்புக்கொண்டேனே!ஆனால், இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது.கடவுளே!அவன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டான்;என்னை மண்டபத்துக்குள் வர முடியாத வாறு அவனே கட்டிப் போட்டுவிட்டான்.நான் அங்கு வரக்கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான்.
யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் கூப்பிட மாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக்கொண்டு நின்றேன்.பீமனையும், அர்ஜுனனையும், நகுல- சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும் தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர என்னைக் கூப்பிட மறந்துவிட்டார்களே!

அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்று, திரௌபதியின் சிகையைப் பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா?இல்லை.அவளும் தனது பலத்தையே நம்பி சபையில் வந்து வாதங்கள் செய்து கொண்டிருந்தாளே ஒழிய என்னைக் கூப்பிடவில்லை! நல்லவேளை..துச்சாதனன் துகிலுரித்தபோதும் தனது பலத்தால் போராடாமல் ஹரி... ஹரி... அபயம் கிருஷ்ணா... அபயம் எனக் குரல் கொடுத்தாள் பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போதுதான் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது.அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன்.இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன தவறு?என்று பதிலளித்தான் கண்ணன்.

அருமையான விளக்கம்:கண்ணா!அசந்துவிட்டேன்.ஆனால் ஏமாறவில்லை.உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?''என்றார் உத்தவர்.''கேள்'' என்றான் கண்ணன்.''அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா?நீயாக நீதியை நிலை நாட்ட ஆபத்துகளில் உன் அடியவர் களுக்கு உதவ வரமாட்டாயா?''
புன்னகைத்தான் கண்ணன்''உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது.நான் அதை நடத்து வதும் இல்லை; அதில் குறுக்கிடுவதும் இல்லை.நான் வெறும் 'சாட்சி பூதம்’.நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே! அதுதான் தெய்வ தர்மம்'' என்றான்.''நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும்.அப்படித்தானே?'' என்றார் உத்தவர்.
''உத்தவரே!நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள்.நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினை களையோ நிச்சயமாகச் செய்ய முடியாது.அதை நீங்கள் மறந்துவிடும்போதுதான் எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்துவிடலாம் என்று எண்ணுகிறீர்கள்.

பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான்.எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே அதுதான் அவனது அஞ்ஞானம்.நான் சாட்சி பூதமாக எப்போதும் எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால் இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாகமுடிந்திருக்கும் அல்லவா?''என்றான் ஸ்ரீகிருஷ்ணன்.உத்தவர் வாயடைத்து பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார்.ஆகா...எத்தனை ஆழமான தத்துவம்!எத்தனை உயர்ந்த சத்யம்!பகவானைப் பூஜிப்பதும் பிரார்த்தனை செய்வதும் அவனை உதவிக்கு அழைக்கும் ஓர் உணர்வுதானே!அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்ற நம்பிக்கை வரும்போது அவன் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்?அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற முடியும்?இந்த தத்துவத்தைதான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்தான்.அர்ஜுனனுக்காகத் தேரைச் செலுத்தி வழிநடத்தினானே தவிர அர்ஜுனன் இடத்தில் தானே நின்று அவனுக்காகப் போராடவில்லை!

ஹரே கிருஷ்ணா👏

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
சித்தர்கள் பற்றிய சிலத் தகவல்கள்!

பிரம்மமுனி: பிரம்மமுனி 18 சித்தர்களில் ஒருவர்.இவரது பெற்றோர் மீன் வியாபாரம் செய்துவந்தனர். இவருக்கு பிரம்மனைப் போல படைப்புத்தொழிலை நடத்த வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.இதற்காக யாகம் செய்தார்.அந்த யாக குண்டத்திலிருந்து தோன்றிய இரண்டு பெண்கள் தங்களை திருமணம் செய்துகொள்ளும்படி முனிவரை வற்புறுத்தினர்.முனிவர் கோபத்துடன் அவர்களை சபிக்க முயலும்போது யாககுண்டத்திலிருந்த அக்னிதேவனும் வருணனும் தாங்கள் அந்த பெண்களை திருமணம் செய்துகொள்வதாக கூறினர்.இதற்கு சம்மதிக்காத முனிவர் கோபத்துடன் கமண்டல நீரை அந்தப் பெண்கள் மீது தெளித்தார்.அவர்கள் இரண்டு செடிகளாக மாறிவிட்டனர். முனிவரின் நண்பரான கோரக்கர் இதில் ஒரு செடியை எடுத்துக்கொண்டார்.பிரம்மமுனி ஒரு செடியை வைத்துக்கொண்டார். போதையைத் தரும் இந்த செடிகள் கற்ப மூலிகைகள் எனப்பட்டன.

சட்டைமுனி: சித்தர்களில் ஒருவரான சட்டைமுனி சித்தர் பல ஊர்களுக்கும் சென்றுவரும்போது ஸ்ரீரங்கம் கோபுரத்தின் கலசங்கள் கண்ணில் பட்டன.கோயிலை நோக்கி அவர் வேகமாக நடந்துவந்தும் ஜாம பூஜை முடிந்து நடை அடைக்கப்பட்டுவிட்டது. அவர் ஏமாற்றத்துடன் வாசலில் நின்று அரங்கா...அரங்கா...அரங்கா என மூன்று முறை கூறினார்.உடனே கோயில் மணிகள் ஒலித்தது.கதவுகள் தானாக திறந்தன.மக்கள் திரண்டு ஓடிவந்தனர்.சட்டைமுனி அரங்கன் அருகில் அமர்ந்திருந்தார்.ரங்கநாதர் அணிந்திருந்த சங்கு சக்கரங்கள் சட்டைமுனியின் மேல் இருந்தன. அவரை கள்வன் என நினைத்த அர்ச்சகர்கள் ஆபரணங்களை பறித்தனர்.சட்டைமுனியை அரசனிடம் கொண்டு நிறுத்தினர்.மன்னர் வியப்படைந்து மீண்டும் அவரை கோயிலுக்கு அழைத்து செல்லும்படி கூறினார்.அப்போதும் வாசலில் நின்றபடி அரங்கா...அரங்கா என மூன்று முறை கூறினார் சட்டைமுனி. உடனே கோயில் மணிகள் ஒலித்து நடை திறந்தது. ஆபரணங்கள் மீண்டும் சட்டைமுனியின் மீது தானாக வந்து அமர்ந்தன.சட்டைமுனி அங்கேயே தங்கியிருந்து இறைவன் பாதமடைந்தார்.

மச்சமுனி: பிண்ணாக்கீசர் என்பவரின் வளர்ப்புமகன் மச்சமுனி.18 சித்தர்களில் ஒருவர்.கால ஞானம் பற்றி உமாதேவியாருக்கு சதாசிவமான சிவபெருமான் உபதேசித்த காலத்தில், அதன்மீது கவனம் செலுத்தாமல் உமாதேவி உறங்கிவிட்டார்.அப்போது ஒரு மீன் இறைவன் சொன்ன கருத்துகளை கேட்டுக்கொண்டிருந்தது. அந்த மீனை முனிவராக சிவபெருமான் பிறக்கச்செய்தார்.அதுவே மச்ச முனிவர் ஆயிற்று.இவர் பெருநூல் காவியம் என்ற நூலை எழுதியுள்ளார்.

கலைக்கோட்டு முனிவர்: ரிஷ்யசிருங்கரை கலைக்கோட்டு முனிவர் என்பார்கள்.இவரது தலையில் மான்கொம்பு இருக்கும்.காட்டில் மட்டுமே வசிப்பார்.இவரது காலடிபட்டால் மழைபெய்யும். உரோமபாதன் என்ற அரசன் தன் நாட்டிற்கு அவரை வரவழைத்து மழை பெய்யச் செய்தான்.தன் மகளைத் திருமணம் செய்துகொடுத்தான்.புத்திர யோகம் இல்லாத தசரதனுக்கு புத்திரகாமேஷ்டி யாகம் செய்துவைத்து, ராமன் முதலான நான்கு மகன்களை பெற உதவினார் கலைக்கோட்டு முனிவர்.இவர் எழுதிய தாகக்கலைக்கோட்டார் பிரம்மஞானம் 32 என்ற பகுதி யோகஞான சாஸ்திர திரட்டு என்ற புத்தகத்தில் உள்ளது.

பாம்பாட்டி சித்தர்: பாம்புகளை பிடித்து, படமெடுத்து ஆடச்செய்து வேடிக்கை காட்டும் தொழிலை செய்தவர் பாம்பாட்டி சித்தர்.எவ்வளவு பெரிய விஷப்பாம்பையும் பிடித்து விஷத்தை கக்கவைத்து சாதாரண பாம்புபோல ஆக்கிவிடுவார்.விஷத்தை முறிக்கும் மூலிகைகள் பற்றி நன்கு அறிந்தவர். மருதமலையில் இவர் விஷ வைத்திய ஆய்வுக்கூடம் நடத்தியதாக சொல்லப்படுவதுண்டு.ஒருமுறை மிகப்பெரிய நவரத்தின பாம்பு ஒன்றை பிடிக்க மலைக்கு சென்றார்.அங்கு சட்டை முனிவரை கண்டார்.சட்டைமுனி பாம்பாட்டி சித்தருக்கு உபதேசம் செய்தார்.உபதேசம் பெற்ற பாம்பாட்டி, சித்தராகிவிட்டார்.இவர் கார்த்திகை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்.இவர் பாம்பாட்டி சித்தர் பாடல் சித்தராரூடம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

ஞாயிறு, 15 டிசம்பர், 2019

பாசுரம்  1

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம்  2

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம்  3

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம்  4

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம்  5

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.

பாசுரம்  6

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம்  7

கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
சின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.

பாசுரம் 8

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை
கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

பாசுரம்  9

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்
மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?
ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.

பாசுரம்  10

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.

பாசுரம்  11

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.

பாசுரம்  12

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம் 13

புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
பள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம் 14

உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய்.

பாசுரம்  15

எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்
வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்.

பாசுரம்  16

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய்.

பாசுரம்  17

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்!
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர்கோமானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கலோர் எம்பாவாய்.

பாசுரம்  18

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம்  19

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.

பாசுரம் 20

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!
செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!
செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்.

பாசுரம் 21

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம்  22

அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல
செங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம் 23

மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

பாசுரம்  24

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.

பாசுரம்  25

ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம் 26

மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்.

பாசுரம்  27

கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

பாசுரம் 28

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.

பாசுரம்  29

சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

பாசுரம்  30

வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.
 அதிகாலையில் எழுபவரே உயர்ந்தவர்!

நம்மிடையே பல ஜாதிப்பிரிவுகள் உள்ளன. அவரவர் தங்கள் ஜாதியின் சிறப்பை எடுத்துக்கூறி உயர்ந்த ஜாதியாக கொள்கிறார்கள். ஆனால் யாரொருவன் காலையில் சூரியனைப் பார்க்கிறானோ அவனே உயர்ந்த ஜாதிக்காரன் என்கிறார் வேதத்திற்கு பதம் பிரித்த அத்ரி மகரிஷி.உதைநம் கோபா அத்ருஷன் அத்ருஷன் உதஹார்ய:அத்ருஷன் அத்ருஷன் என்கிறார்.இதற்கு சூரியனை முதலில் பார்க்கும் ஜாதி உயர்ந்தது என்று பொருள்.அதாவது காலையில் சூரியன் உதிக்கும் முன்பே எந்த நாடு எழுகிறதோ அந்த நாடே உருப்படும். திருப்பாவையில் ஆண்டாள் இதையே மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளால் என்கிறாள்.மதி என்றால் ஒளி என்றும் பொருளுண்டு.ஆயர்பாடி மக்கள் பசுக்களை மேய்ச்சலுக்காக ஓட்டிக்கொண்டு காலையிலேயே கிளம்புகிறார்கள்.அவர்களே முதலில் சூரியனைப் பார்க்கிறார்கள்.அடுத்து பெண்கள் குடங்களுடன் நீராட கிளம்பி விட்டார்கள்.அவர்கள் அடுத்ததாக சூரியனைப் பார்க்கிறார்கள். அவர்களும் கொடுத்து வைத்தவர்களே! இவர்களுக்கு பிறகு தான் சூரிய வெளிச்சம் தரையில் விழுந்து பூமியே சூரியனைப் பார்க்கிறதாம்.மதியை நிலா என்று எடுத்துக் கொள்ளலாம். பகலில் சூரியனும் இரவில் சந்திரனும் ஒளிரும் நாளே நற்செயல்கள் செய்ய உகந்த நாள்.அப்படிப்பட்ட உயர்ந்த நாளில் மார்கழி நோன்பு துவங்குகிறது, இதனால் தான் ராமபிரான் சூரியகுலத்திலும் கிருஷ்ணர் சந்திர குலத்திலும் அவதரித்தனர். இனிமேலாவது சூரியோதத்துக்கு முன் எழும் பழக்கத்தை மேற்கொண்டு உயர்ஜாதியில் ஒரு உறுப்பினர் ஆவீர்களா!
---------------------------------------------------------------------------------
12 ராசிகளுக்கான மார்கழி மாத பலன்கள்!

மார்க்கசீர்ஷம் என்ற வடமொழிச் சொல்லே தமிழில் மார்கழி ஆனது. மார்க்க என்றால் வழி.சீர்ஷம் என்றால் மேலான.ஆக மார்கழி என்றால் மேலான வழி எனப்பொருள்.பக்தியே மேலான வழி.அதிலும் இறைவனைச் சரணடைந்து விடுதல் மிக மிக உயர்ந்த வழி.இத்தகைய சிறப்பான மார்கழி மாதத்தின் 12 ராசிகளுக்கான பலன்களும் பரிகாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------
என்ன கோலம் போட்டால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

கோலம் போட்டுக் கோலாகலமாக வாழுங்க: கோலம்போடும்போது கோடுகள் கோணல் மாணலாக இருந்தாலும் போட்டு முடித்தபின் எப்படிக் கோலாகலமான அழகுடன் இருக்கிறதோ அப்படியே கோலம் போடும் வீட்டினையும் மகாலட்சுமி தன் அருட்பார்வையால் நிறைப்பாள் என்பது ஐதிகம். கோலங்கள் தெய்வீக யந்திரங்களுக்கு சமமான கோலங்களை பூஜை அறையில் மட்டுமே போட வேண்டும். ஹ்ருதய கமலம், நவகிரக கோலங்கள், ஐஸ்வர்யக் கோலம், ஸ்ரீசக்ரக் கோலம் போன்றவை யந்திரம் போன்றவை. இவற்றை மஞ்சள் பொடியினாலும், அரிசிமாவினாலும் மட்டுமே போடுவது நல்லது. அழகுக்காக வண்ணப் பொடிகளைப் பயன்படுத்தினால் கோலத்திற்கு உரிய தெய்வம் அல்லது கிரகத்திற்கு உரிய வண்ணத்தில் போடலாம்.  இத்தகைய கோலங்களால் தெய்வீக அருள் நிரம்பும் தோஷங்கள் விலகும். சுப காரியங்களுக்காகப் போடப்படும் கோலங்கள் கண்டிப்பாக இரட்டை இழைக்கோலங்களாகத்தான் இருக்க வேண்டும் ஒற்றை இழை ஒருபோதும் கூடாது. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் சமயத்தில் போடும் கோலங்களுக்கு காவியால் அழகூட்டுவது சிறப்பானது. இப்படிப் போடுவதால் மங்கலம் சிறக்கும்; மனை விளங்கும்.  வீட்டு வாசலில் போடும் கோலங்களில் தெய்வீக வடிவங்கள் இடம்பெறக் கூடாது. புனிதமான பொருட்களின் வடிவங்களை வரைவதைத் தவிர்ப்பதும் நல்லது. அவற்றை பூஜை அறையிலோ வீட்டின் உள்ளே போடலாம். படிக்கோலத்தின் நான்கு மூலைகளிலும் போடும் தாமரை, திசை தெய்வங்களின் ஆசியைப் பெற்றுத்தரும். வாசல் படிகளில் குறுக்குக் கோடுகள் போடுவதைத் தவிர்ப்பது நல்லது. கோலத்தின் தொடக்கமும் முடிவும் கோலத்தின் மேற்புறமாக அமையும்படி போடுவது அவசியம். ஏறு முகமான பலனை இது தரும். கோலத்தில் இடப்படும் காவி சிவ சக்தி ஐக்கியத்தை உணர்த்துகிறது. இப்படிக் கோலமிடுவது, சகல நன்மையும் தரும்.
---------------------------------------------------------------------------------
திருவெம்பாவை-பாடல் 1

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியையாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்

பொருள்: வாள் போன்ற நீண்ட கண்களையுடைய தோழியே! முதலும் முடிவும் இல்லாத ஒளிவெள்ளமாய் பிரகாசிக்கும் நம் சிவ பெருமான் குறித்து நாங்கள் பாடுவது உன் காதில் கேட்கவில்லையா? செவிடாகி விட்டாயோ? அந்த மகாதேவனின் சிலம்பணிந்த பாதங்களைச் சரணடைவது குறித்து நாங்கள் பாடியது கேட்டு, வீதியில் சென்ற ஒரு பெண் விம்மி விம்மி அழுதாள். பின்னர் தரையில் விழுந்து புரண்டு மூர்ச்சையானாள். ஆனால், நீ உறங்குகிறாயே! பெண்ணே! நீயும் சிவனைப் பாட எழுந்து வருவாயாக!

விளக்கம்: திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மார்கழி அதிகாலையில் பவனி வருகிறார். அவரைத் தரிசிக்க பெண்கள் காத்து நிற்கிறார்கள். தங்களுக்கு கிடைத்த இந்த நற்பேறு தங்கள் தோழிக்கும் கிடைக்க வேண்டுமென்ற ஆசையில் அவளை எழுப்புகிறார்கள்.
---------------------------------------------------------------------------------
திருப்பதியில் இருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வஸ்திர மரியாதை!

கைசிக ஏகாதசி விழாவையொட்டி, திருப்பதி கோவிலில் இருந்து நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வந்த வேங்கடமுடையான் வஸ்திர மரியாதையுடன், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பாப்பிராஜு, நிர்வாக அதிகாரி கோபால், ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், கோவில் இணை கமிஷனர் கல்யாணி ஆகியோர் வீதியுலா வந்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
---------------------------------------------------------------------------------
மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - சிறப்பு கோலங்கள்!

மார்க்கசீர்ஷம் என்ற வடமொழிச் சொல்லே தமிழில் மார்கழி ஆனது. மார்க்க என்றால் வழி. சீர்ஷம் என்றால் மேலான. ஆக, மார்கழி என்றால் மேலான வழி எனப்பொருள். பக்தியே மேலான வழி. அதிலும், இறைவனைச் சரணடைந்து விடுதல் மிக மிக உயர்ந்த வழி. ஆண்டாள், பெருமாளைச் சரணடைந்து தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினாள். அதற்காக, முப்பது நாள் நோன்பிருந்தாள். தான் மட்டுமின்றி, மற்றவர்களும் இறைவனை அடைய வேண்டும் என்ற மேலான நோக்கில், தோழியரையும் நோன்பிருக்கும்படி வற்புறுத்தினாள். பக்தி மட்டுமின்றி பொதுநலமும் மேலான வழி என்பதை இம்மாதம் நமக்கு எடுத்துரைக்கிறது.
---------------------------------------------------------------------------------
திருப்பாவை-பாடல் 1

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!

சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்

நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

பொருள்: அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.

விளக்கம்: இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் "நாராயணனே பறை தருவான் என்கிறாள். 108 திருப்பதிகளில் 106ஐ பூமியில் காணலாம். 108வது திருப்பதியான வைகுண்டத்தில் தான் நாராயணன் வசிக்கிறார். நாம் செய்யும் புண்ணியத்தைப் பொறுத்தே இந்த திருப்பதியை அடைய முடியும். இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.
---------------------------------------------------------------------------------
கந்த சஷ்டி தந்த தேவராயர்

வல்லூரில் வீராசாமி என்பவருக்கு பிள்ளையில்லாத குறையை நீக்க பிறந்தவர் தேவராசர். இவர் பெங்களூரில் வசிக்கும் போது, தீராத கொடிய வயிற்று வலியால் அவதிப்பட்டார். அப்போது அவர் முருகனின் அருளைநாடி திருச்செந்தூர் அடைந்தார். அன்று கந்தசஷ்டித் திருவிழாவில் முதல்நாள். முருகனின் முன்வந்தவுடன் வலி குறையத் துவங்கியது. அதனால் தேவராசர், முருகன் மீது கவசம் பாடலானார். 6 நாட்களும் முருகனைத் துதித்துப் பாடியதே கந்த சஷ்டி. (ஆறு) கவசம், சஷ்டி விழாவில் பாடியதாலும் சஷ்டி கவசம். கவசம் ஆறாயினும் ஒவ்வொன்றும் தனிப்படை வீட்டுக்கு உரியதல்ல. ஒவ்வொன்றிலுமே மற்ற படை வீடுகள் சிறப்பு தெரிகிறது. அதுமட்டுமின்றி, படைவீடு அல்லாத தலங்கள் பலவும் வர்ணிக்கப்படுகின்றன. கந்த சஷ்டி கவசங்களை முருகனின் எண்ணில்லா தன்னிகரிலா உலகத்திலுள்ள அனைத்துத் தலங்களுக்கும் உரியனவாகக் கருதுவதே முறை எனத் தோன்றுகிறது. எல்லா கவசமும் ஒரே ராகத்தில் பாடலாம். தினமும் படிக்கலாம். இயலாதவர்கள் செவ்வாய். கார்த்திகை, சஷ்டி தினங்களில் மட்டுமாவது படிப்பது மிகவும் நல்லது. இதில் குன்று தோறாடல் என்பது திருத்தணிக்கு மட்டுமின்றி எல்லா குன்று மீது உள்ள முருகனுக்கும் உகந்தது.
பானுதாசர்

பயிர் பச்சைகள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த நகரம் பைடனிபுரம். இந்நகரத்து மக்கள் தெய்வ பக்தியில் சிறந்தவர்கள். இங்கு சூரிய நாராயணர் என்ற பெரியவர் வசித்தார். இவர் தினமும் ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்தபின்னரே தமது வேலைகளைச் செய்வார். இவருக்கு சூரிய பகவானின் அருளால் ஒரு மகன் கிடைத்ததால், பானு என பெயரிட்டார். பானுவுக்கு ஏழு வயது ஆனதும், உபநயனம் செய்வித்து வேத அத்யனத்தை கற்பித்தார். ஆனால், தந்தையின் அடிக்குப் பயந்து ஒப்புக்குப் படிப்பான் பானு. இதனால் பெற்றோர் மிக வருந்தினர். ஒருநாள் தந்தைக்கு கோபம் உச்சிக்கு ஏற, மகனை நன்றாக அடித்துவிட்டார். இனி இங்கு இருந்தால் தந்தையார் நம்மை அடித்தே கொன்றுவிடுவார் என்று எண்ணிய பானு வீட்டைவிட்டு நகரை அடுத்துள்ள காட்டிற்கு சென்று விட்டான். பசி, தாகம் கண்ணை இருட்டிக்கொண்டு ஒரு மண்டபத்திற்குள் நுழைந்தான். அது சூரியதேவன் கோயில். சூரியதேவனைப் பார்த்ததும் துதிக்க வேண்டும் என்று மனதில் தோன்ற, இரு கரம் தூக்கி, பகவானே ! வீட்டில் பெற்றோர் அடிக்கும் அடிக்குப் பயந்து உன்னைச் சரணடைந்தேன். என்னைக் காப்பாற்றும், என்று மனமுருக வேண்டி நின்றான். கதிரவன் ஓர் அந்தணர் வேடம் புனைந்து அவன் முன் காட்சிதந்தார். ஒளிவீசும் அவரின் முகமலரைக் கண்டு வியந்த சிறுவன் அவர் பாதங்களில் பணிந்து, ஐயனே ! எனக்கு வேதங்கள் வரவில்லை. தாங்கள்தான் காக்க வேண்டும் என்றான்.

கதிரவன் அவனை அணைத்து, குழந்தாய் ! இனி உன்னை யாரும் அடிக்கமாட்டார்கள். இன்றுமுதல் உனக்கு எல்லாவிதக் கலைகளும், வித்தைகளும் வரும். ஸ்ரீ பாண்டுரங்கனின் புகழ்பாடி அவரை பக்திசெய், என்று கூறி மகாமந்திரத்தை உபதேசித்தார். அறிவு ஒளி வீச பானு வீடு திரும்பினான். பானுவின் கண்களில் வீசி அறிவு ஒளிரக்கண்டு பெற்றோர் வியந்தனர். அவர்களிடம் காட்டில் நடந்தவற்றைக் கூறினான். காலம் உருண்டோடியது, பானு இளைஞன் ஆனான். அவனின் பக்தியையும் அறிவையும் கண்டு மக்கள் அவனை பானுதாசர் என அழைக்கலாயினர். தக்க வயதில் பானுதாசருக்கு மணம் முடித்தனர் பெற்றோர், அவருக்கு ஆண்குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்குத் தன் தந்தையின் பெயரான சூரியநாராயணன் என்ற பெயரை வைத்தார். பானுதாசரின் மனம் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடவில்லை. இறைவனைப் போற்றிப்பாடுவதே தன் கடமை என்று நினைத்தார். இதனால் வீட்டில் வறுமை தாண்டவமாடியது. உறவின வியாபாரிகள் சிலர் பானுதாசரின் குடும்பம் கஷ்டப்படுவதைக்கண்டு அவருக்கு, சிறிய ஜவுளிக்கடை வைத்துக் கொடுத்தனர். அத்துடன் வியாபார நுணுக்கங்களான உண்மையைச் சொல்லி விற்றால் லாபம் கிடைக்காது. பொய் சொல்லிவிற்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தனர். பானுதாசர் ஜவுளிக்கடையை ஏற்றுக்கொண்டார். வியாபார நுணுக்கங்களை காற்றில் பறக்க விட்டார். பதிலாக கடைக்கு வருபவர்களிடம் நல்ல கருத்துக்களை கூறுவார். இதனால் இவர் பெருமை எங்கும் பரவியது. மக்களும் இவர் கடையில் குவிந்தனர். விற்பனையும் பெருகிற்று. மற்ற கடைகளின் வியாபாரம் மந்தம் அடையத் தொடங்கியது. இதனால் எல்லோரும் யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொண்டது போல் நாமே நம்மைக் கெடுத்துக்கொண்டோமே என்று பொறாமையும், கலக்கமும் கொண்டனர். இதற்கு ஒரு முடிவு கட்ட ஏற்பாடு செய்தனர்.

ஒருநாள் எல்லா வியாரிகளும் குதிரைகளின் மேல் சரக்குகள் ஏற்றி வெளியூர் சென்றனர். பானுதாசரும் தம் சரக்குகளுடன் புறப்பட்டார். வியாபாரம் முடிந்து ஊர் திரும்பும்போது இருட்டத் தொடங்கவே நடுவில் உள்ள ஒரு சிற்றூரில் உள்ள கோயில் மண்டபத்தில் மீதி சரக்குகளுடனும், விற்ற பணத்துடனும் தங்கினர். கோயிலுக்குள் ஹரிதாசர் என்னும் உபன்யாசர், பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். இதை அறிந்த பானுதாசர் மற்றவர்களிடம் தம் பொருள்களைப் பார்த்துக் கொள்ளும்படியும், பிரசங்கம் கேட்டுவிட்டு வருவதாகவும் கூறி கோயிலுக்குள் சென்றுவிட்டனர். மற்ற வியாபாரிகள், கடவுளே நமக்கு நல்ல வாய்ப்பு அளித்துள்ளார் என்று நினைத்தனர். பானுதாசரின் பொருள்கள் அனைத்தையும் ஒரு பாழும் கிணற்றில் போட்டனர். குதிரையை அவிழ்த்து விரட்டி விட்டனர். பானுதாசரிடம், பொருள்கள் களவு போய்விட்டது என்று சொல்லிவிடலாம் என்று முடிவெடுத்தனர். நள்ளிரவில் கொள்ளையர் கூட்டம் மண்டபத்தைச் சூழ்ந்தது. அவ்வளவுதான்  என்ன நடந்திருக்கும் என்று யூகித்துக் கொள்ளலாம். அப்போதுதான் தாங்கள் செய்த தவறை உணர்ந்தனர். பானுதாசரின் பொருள்களை அபகரிக்க நினைத்தோம். நமது பொருள்கள் பறிபோயின. உயிர்பிழைத்ததே கடவுள் புண்ணியம். பானுதாசர் தெய்வ பக்தி மிக்கவர். அவர் பொருள்கள் பத்திரமாக கிணற்றில் இருக்கின்றன. நமது பொருள்கள்தான் போய்விட்டன என்று மனம் வருந்தினர்.  பானுதாசர் ஹரிதாசரின் பிரசங்கத்தைப் பற்றி அசைபோட்டபடி மண்டபத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு வழிப்போக்கன், ஐயா ! இந்தாருங்கள் உங்கள் குதிரை, என்று அவரிடம் கடிவாளத்தைக் கையில் கொடுத்துச் சென்றான்.கட்டி வைத்த குதிரை எப்படி இங்கே வந்தது ? கொடுத்துச் சென்ற மனிதர் யார் ? என்ற சிந்தனையுடன் அந்த மனிதனிடம் கேட்பதற்குள், வந்தவரைக் காணவில்லை. குழப்பத்துடன் அவர் மண்டபத்திற்கு வந்தார். அங்கே எல்லோரும் அழுதுகொண்டும் புலம்பிக் கொண்டும் இருந்தனர். எல்லோரும் நடந்ததைக்கூறி வருந்தினர். அவர்களிடம், ஐயா ? நீங்கள் தான் எனக்கு வியாபாரம் செய்ய வழி செய்தீர்கள். இவை உங்களின் உடைமை. கிணற்றில் கிடப்பவற்றை நீங்களே பகிர்ந்து கொள்ளுங்கள், என்றார். இதன்பின் பானுதாசர் தெய்வ பக்தியில்  மனம் செலுத்தினார். இறைவனைப் பற்றிப் பாடுவதையே தன் கடமையாகக் கொண்டார். யாராவது நண்பர்களோ, உறவினர்களோ ஏதாவது கொடுத்தால்தான் சாப்பாடு. சில சமயங்களில்  கையில்  கிடைத்ததையும் தானம் செய்து விடுவார். பஜனை, தியானம், நாம சங்கீர்த்தனம். இதுவே பானுதாசரின் உயிர் மூச்சாக இருந்தது. தக்க தருணத்தில் இறைவன் அவரை ஆட்கொண்டார்.
தர்மத்தின் சட்டம்

மாதவ முனிவரான மாண்டவ்யர் இமயமலையில் அடர்ந்த காட்டில் தவம் செய்து கொண்டிருந்தார். அவரது தவம் ஈடு இணையற்றது. சிவனை வணங்கி அவரது உயரிய அருளைப்பெற்றிருந்தார். உலகிலுள்ள அனைத்து முனிவர்களும் மாண்டவ்யரின் தவத்திற்கு முன்னால், தங்களது தவம் மிகவும் சாதாரணமானது என்பதை உணர்ந்திருந்தனர். எனவே அவர்கள் மாண்டவ்யருக்கு மிகவும் மரியாதை கொடுத்து வந்தனர். அந்த மாமுனிவருக்கும் ஒரு சோதனை வந்தது. ஒரு முறை சாலவ தேசத்தில் கள்வர்களின் அட்டகாசம் அதிகமாக இருந்தது. அவர்கள் பொதுமக்களை கொன்று பொருள்களை திருடிச் சென்றனர். காவலர்களால் இவர்களை பிடிக்கவே முடியவில்லை. கொள்ளளையர்களின் தலைவன் ஒரு திட்டமிட்டான். தன் கூட்டாளிகளை அழைத்து, இப்படி சிறிய திருட்டை செய்வதை விட்டு விட்டு, அரண்மனை கஜானாவை கொள்ளையடித்து விட்டால் சொகுசான வாழ்க்கையை நிரந்தரமாக அமைத்துக் கொள்ளலாம் என்று ஆசை வார்த்தை கூறினான். தலைவனின் திட்டப்படி கொள்ளையர்கள் அரண்மனைக்குள் புகுந்து காவல் காத்த அத்தனை வீரர்களையும் கொன்று கஜானாவை கொள்ளையடித்து குதிரைகளில் தப்பியோடினார். இவைகளை கவனித்த காவலர்கள் அவர்களை விரட்டினர். களைந்து போன திருடர்கள் கொள்ளையடித்த பொருட்களை தவம் செய்து கொண்டிருந்த மாண்டவ்யரின் ஆசிரமத்திற்குள் போட்டு விட்டனர். அங்கே வந்த காவலர்கள் ஒளிந்திருந்த திருடர்களை பிடித்தனர்.

தவத்தில் இருந்த மாண்டவ்யரை எழுப்பிய போது அவர் அசையவே இல்லை. எனவே அப்படியே மன்னனிடம் தூக்கி சென்றனர். மன்னன் எப்படி கேட்டும் மாண்டவ்யர் அசையவே இல்லை. இதனால் கோபம் கொண்ட மன்னன் முனிவரை கழுவில் ஏற்றும் படியும், மற்ற திருடர்களை கொன்றுவிடும் படியும் உத்தரவிட்டான். முனிவர் கழுவில் தொங்கிவிடப்பட்டார். அவரது உடல் முழுவதும் ஊசி குத்தப்பட்டிருந்தது. நெஞ்சில் ஆணி அடிக்கப்பட்டிருந்தது. அப்போது வானத்தில் சென்று வசிஷ்டர் முதலான முனிவர்கள் இந்த செயலை பார்த்து வந்து முனிவரை வணங்கி மாண்டவ்யர் என்ற பட்டத்தை வழங்கினார். அப்போது தான் மாண்டவ்யர் கண்விழித்தார். இதைப்பார்த்த காவலர்கள் மன்னனிடம் தெரிவித்தனர். மன்னன் வந்து, அறியாமல் தான் செய்த தவறிற்கு முனிவரிடம் மன்னிப்பு கேட்டான். பின் எமலோகம் சென்ற முனிவர் எமதர்மராஜனிடம், இந்த பிறவியில் தான் செய்யாத பாவத்திற்கு ஏன் தண்டனை கொடுத்தாய் என கேட்டார். நீ சென்ற பிறவியில் சிறு வயதில் ஒரு தட்டான் பூச்சியை பிடித்து அதன் நெஞ்சில் ஒரு முள்ளை செருகி விளையாடினாய் அந்த வினைப்பயன் தான் இது என்றார் எமன். அதற்கு முனிவர், எமதர்மராஜனே ! நான் சிறுவயதில் அறியாமல் செய்த தவற்றுக்கு, என்னை நல்வழிப்படுத்தாத பெற்றோர்கள் காரணம். எனவே அறியாமல் சிறுவயதில் செய்யும் தவறுக்கு தண்டனையை பெற்றோர்களுக்கும் பிரித்து தர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கேட்டு கொண்டார். எமனும் சம்மதித்தார். உடனே முனிவர், தர்மராஜா, நீ எப்படியேனும் எனக்கு தண்டனை கொடுத்து விட்டாய். எனவே மகாபாரதத்தில் திருதராஷ்டிரன், பாண்டு ஆகியோரின் சகோதரன் விதுரனாக பிறந்து துரியோதனன் அவையில் வேலைக்காரி மகன் என அவமானப்படுத்தப்படுவாய் என கூறினார்.எனவே, குழந்தைகளை எதற்கும் தீங்கு செய்ய விடாமல் அன்பின் வழி நடத்தி செல்ல வேண்டும்.
ஹரி அனந்தர்

வடநாட்டில் உள்ள ஒரு சிற்றூரில் ஹரி அனந்தர் என்பவர் வாழ்ந்து வந்தார். வேத சாஸ்திரங்களில் கரைகண்டவர். இவரிடம் பல மாணவர்கள் படித்தாலும் ஒரு மாணவன் அளவில்லாத அன்பு வைத்திருந்தான். குருகுல முறைப்படி, நாள்தோறும் பிச்சைக்குச் சென்று ஒரு படி ரொட்டிமாவு கொண்டு வருவான். அதை குருவின் திருவடிகளில் சமர்ப்பித்து பின்பு ரொட்டி செய்வான். அந்த ரொட்டிகளில் தாம் சாப்பிட்டது போக மீதியை மற்றவர்களுக்கு கொடுப்பான். ஒரு சமயம் கபீர்தாசின் குருவான சாது ராமானந்தர் அவ்வூரிலுள்ள ஒரு மடத்தில் தங்கியிருந்தார். பிச்சைக்குச் சென்ற மாணவன் அவரை வணங்கினான். அகத்தின் அழகு முகத்திலே தெரியும் என்பது போல, இவ்வளவு அன்பும், பரிவும், நல்ல குணங்களும் கொண்ட இந்த சிறுவன் நாளை காலையோடு ஆயுள் முடிந்து இறந்து போகப்போகிறானே என வருத்தப்பட்டு அந்தோ ! அடடா ! என்றார் ராமானந்தர். இப்படி ஒரு வார்த்தை அவரது வாயிலிருந்த வருமானால் அது ஆபத்துக்கு அறிகுறி என பொருள். இதைக்கேட்டு மாணவனுக்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. குருவே ! நான் நீங்கள் சொன்னதைக் கேட்டு எவ்வித அச்சமும் கொள்ளவில்லை. மரணத்தைக் கண்டு நான் பயப்படவில்லø. எனது மரணத்திற்கு முந்தைய தினமான இன்று உங்கள் தரிசனம் கிடைத்தது நான் செய்த பாக்கியத்தையே குறிக்கிறது என்று சொல்லி மீண்டும் ஒரு முறை வணங்கினான்.

அங்கிருந்து புறப்பட்டு குருவிடம் சென்றான். தனது ஆயுள் முடியப்போகும் விஷயத்தை குருவிடம் விளக்கினான். ஹரி அனந்தர் மாணவனை அருகில் அழைத்து, இன்றைய வேலைகளை வழக்கம் போல செய்துவிட்டு, தியானம் முடித்து தூங்கு. நாளை காலையில் அருணோதயத்திற்கு முன்னதாக என்னை எழுப்பு, என்றார். மறுநாள் சூரிய உதயத்திற்கு முன்னதாக குருவை எழுப்பினான் மாணவன். இருவரும் நீராடி தியானம் செய்யும் சமயத்தில் மாணவனை அருகில் அழைத்த ஹரி அனந்தர், பத்மாசனத்தில் அமர்ந்தார். தனது புலன்களை ஒவ்வொன்றாய் ஒடுக்கி, சமாதி நிலைக்கு சென்றார். மாணவனும் அதே முறையில் தியானத்தில் ஆழ்ந்தான். இப்படி இருவரும் ஒரே விதமாக தங்கள் இதயத்தில் வாழும் இறைவனை தியானிக்கலாயினர். இறைவன் இவர்களது ஒப்பற்ற தியானத்திற்கு கட்டுப்பட்டவராய், சங்கு, சக்கரங்களுடன் அங்கே எழுந்தருளினார். சக்கரத்தாழ்வாரை குரு, சிஷ்யன் ஆகியோரின் தலைக்கு மேலே சுழன்று கொண்டிருக்கும்படி பணித்து, தானும் அங்கேயே அமர்ந்து விட்டார்.

உரிய நேரம் வந்தது. நீலவண்ணத்தில் உலகம் இருளில் மூழ்க, எருமையின் மீதேறி வந்து நின்றான் எமன். இறைவன் புன்முறுவலுடன் வீற்றிருக்க, எதிரில் குருவும், மாணவனும் மெய்மறந்து தியான நிலையில் அமர்ந்திருப்பதையும், தலைக்கு மேல் வெண்கொற்றக்குடை போல சக்கரம் கம்பீரமாக சுழல்வதையும் கண்டு நடுநடுங்கிப் போனான். இறைவனே இங்கு வந்து அமர்ந்திருப்பதால் நம்மால் எதுவும் செய்ய முடியாது என கருதிய அவன், வந்த வழியே திரும்பிப்போனான். எமன் சென்றதும் குருவும் மாணவனும் கண்விழித்தனர். இருவரையும் நெஞ்சாரத்தழுவி ஆசி கூறி மறைந்தார் கிருஷ்ண பரமாத்மா. அடுத்தநாள் வழக்கம்போல் பிச்சைக்கு, சென்றான் மாணவன். ராமானந்தரின் பாதத்தைத் தொட்டு வணங்கினான். அடடா ! பிழைத்து விட்டாயே ! என்று ஆச்சரியப்பட்டவர். நடந்தவற்றை தனது ஞானதிருஷ்டியால் உணர்ந்தார். உன்னைக் காப்பாற்றிய சக்திமிக்க குருவை நான் காணவேண்டும் என்றார். இருவரும் ஹரி அனந்தரின் இருப்பிடத்திற்கு வந்தனர். எமனையே வென்ற உமது பக்தி அற்புதம் ! அற்புதம் ! என பாராட்டிய ராமானந்தர் ஹரியை கண்ணால் கண்ட ஹரி அனந்தரின் பாதங்களில் விழுந்து கண்ணீர் பெருக போற்றினார்.
பவுரிதாசர்

நின்றால் ஜெகந்நாதன், நடந்தால் ஜெகந்நாதன், அமர்ந்தால் ஜெகந்நாதன்.... ஜெகன்னாதனின் நாமத்தை தவிர அவரது வாய் வேறு சொற்களையே உச்சரிக்காது. கார்மேனி வண்ணனான கண்ணனை பூரி ஜெகந்நாதரை கண்ணாரக் கண்டுகளிக்க வேண்டும் என விரும்பியவர் பவுரிதாசர். இவரது பெற்றோர் நெசவுத்தொழிலை செய்துவந்தன. இந்த தொழில் மூலம் ஏதோ  அவர்களுக்கு வயிற்றுக்குப் போதுமான அளவு வருமானம் கிடைத்தது. இந்த குடும்பத்தினரின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் பூரி ஜெந்நாதர்தான். இவர்கள் குடியிருந்த வீட்டிலிருந்து 3 மைல் தொலைவில் ஜெகந்நாதர் கோயிலுக்கு வந்து ஜெகந்நாதரை  அந்த குடும்பத்தினர் வணங்கி செல்வார்கள். அதன்பிறகே அன்றாட பணிகள் தொடங்கும். ஜெகந்நாதர் கோயிலில் பெருமாளின் மகிமையை விளக்கி ஹரிகதை சொல்லப்படுவதுண்டு. இந்தக் கதையைக் கேட்க பவுரிதாசர் தவறாமல் சென்றுவிடுவார். இந்த வகையில் ஹரி கதையில் சொல்லப்படும் நல்ல கருத்துக்கள் புவுரிதாசரின் மனதில் நின்றன. குறிப்பாக, பெருமாளின் பெருமையை பாகவதர்கள் சொல்லும்போது, அதில் அப்படியே லயித்துவிடுவார் பவுரிதாசர். பெருமாளின் மீதான பக்தியை இந்தக்கதைகள் மென்மேலும் வளர்ந்தது. காலப்போக்கில் பக்தியின் வேகம் அதிகரித்தது. அவர் நிம்மதியாக சாப்பிடுவதில்லை. கண்கள் விழித்தபடியே இருக்கும். வாய் எந்நேரமும் ஜெகந்நாதன் பற்றி மந்திர உச்சாடனம் செய்து கொண்டிருக்கும்.

அந்த பக்தனை மேலும் சோதிக்க விரும்பவில்லை பெருமாள். தனக்காகவே வாழ்நாளை வீணாக்கிக் கொண்டிருக்கும் பவுரிதாசரின் முன்பு தோன்றினார். பவுரிதாசர் ! நீ என்மீது கொண்டிருந்த அன்பின் காரணமாக அனைத்து பெண்களையும் தாயாராகவே கருதினாய். இந்த மனப்பக்குவம் உலகில்யாருக்கும் வருவதில்லை. நீ என்ன கேட்டாலும் கொடுத்து வரவேண்டும் என்பது உன் தாயார் எனக்கு இட்ட கட்டளை. அதன்படி உனக்கு வேண்டும் வரம் தருகிறேன், கேள் என்றார். மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த பவுரிதாசர் என்ன கேட்டிருந்தாலும் இறைவன் கொடுத்திருப்பான். ஆனால், அவர் பொன்னோ, பொருளோ கேட்கவில்லை. இறைவா ! நான் எப்போது அழைத்தாலும் நீ வரவேண்டும். உன் திருக்காட்சியை எனக்கு காட்ட வேண்டும். உனது நினைவாகவே இருக்கும் நான். உன்னைத்தவிர வேறு எதையும் கேட்கமாட்டேன். நீயே என் அருகில் இருக்கும்போது, வேறென்ன எனக்கு வேண்டும் ? மற்றவை தானாகவே வந்து சேரும், என்றார். பவுரிதாசரின் பற்றற்ற நிலையை அறிந்து மகிழ்ந்த பெருமாள், அவர் கேட்ட வரத்தையே அருளினார். அன்றுமுதல் ஜெகந்நாதர் கோயிலுக்கு செல்லும் பக்தர்களிடம் பவுரிதாசர் ஆண்டவனுக்குரிய காணிக்கைகளை கொடுத்து அனுப்பினார். ஒருமுறை இளநீர் ஒன்றை ஒரு பக்தர் மூலம் அனுப்பிவைத்தார். கர்ப்பகிரகத்தில் இருந்து இரு கைகளையும் நீட்டி அந்த இளநீரை பெற்றுக்கொண்டார் பகவான்.

இதைக்கண்ட அங்கிருந்த அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அந்த பக்தர் ஓடோடிச்சென்று பவுரிதாசரிடம் இந்த அதிசயத்தை விவரித்தார். இதுகேட்டு பவுரிதாசர் ஆனந்தக்கூத்தாடினார். ஒரு முறை கூடை நிறைய மாங்கனிகளை கொடுத்து அனுப்பினார். கோயிலுக்குள் சென்றதும், கூடை மாயமாகிவிட்டது. சற்று நேரத்தில் கூடை கர்ப்பக்கிரகத்திற்கு வெளியே வந்து அமர்ந்தது. அனைவரும் ஆச்சரியத்துடன் அதை பார்த்தனர். கூடைக்குள் கொட்டைகள் மட்டுமே எஞ்சியிருந்தன. பக்தன் பக்தியுடன் கொடுத்த உணவை பகவான் ஏற்றுக்கொண்டார். இதைக்கண்டு பரவசமடைந்த கோயில் அர்ச்சகர், பவுரிதாசர் தங்கியிருக்கும் இடத்திற்கு ஓடினார். பகவானுக்கு அணிவித்த மாலையை அவரது கழுத்தில் அணிவிக்க முயன்றார். பவுரிதாசர் அதை ஏற்க மறுத்துவிட்டார். பகவானுக்குரிய பொருட்களை நாம் எடுக்கக்கூடாது. பகவானுக்கு நம்மால் முடிந்த பொருளை கொடுக்க வேண்டும். இதுவே உண்மையான பக்தி என்றார். நீண்ட நெடுங்காலம் பகவானுக்கு உணவளிக்கும் கைங்கர்யத்தை அவர் செய்துவந்தார். பகவான் முன்பு சென்றாலே அதைக்கொடு; இதைக்கொடு என கேட்கும் இக்காலத்தில், பவுரிதாசரின் வாழ்க்கை வரலாறு ஆசையற்ற நிலையை வெளிப்படுத்துகிறது. பவுரிதாசரின் பக்தியை பின்பற்றி அனைவரும் நடப்போம்.