வெள்ளி, 13 டிசம்பர், 2019

மேல்படப்பை

 *மூலவர்*ஸ்ரீதழுவக்கொழுந்தீஸ்வரர்
 *தாயார்* காமாட்சி
 *உற்சவர்* சோமாஸ்கந்தர்
 *தலவிருட்சம்* மாமரம்

 *ஸ்தலவரலாறு*

ஒரு முறை பார்வதிதேவி, விளையாட்டாக சிவனின்  கண்களைப் பொத்தினார்.  சர்வ லோகத்தையும் கட்டிக் காத்தருளும் ஈசனின் கண்கள் மறைக்கப்பட்டதால், உலகில் இருள் சூழ்ந்தது; இயக்கம் நின்றது; எல்லாமே அற்றுப் போயின. சர்வலோகத்துக்கு அதிபதியான ஈஸ்வரன், உமை யைப் பார்த்துக் கடுகடுத்த குரலில் சொன்னார்: ‘‘உமையே... விளையாட்டின் உச்சத்துக்குப் போவதாக எண்ணி, வினையை உன்னிடம் வரவழைத்துக் கொண்டு விட்டாய். ஒரு நொடிப் பொழுது என் கண்கள் மூடப்பட்டால், என்னென்னவெல்லாம் ஆகும் என்பதை இப்போதாவது உணர்ந்து கொண்டாயா? நம்மை நம்பி இருக்கும் உயிர்களுக்கு நாமே அம்மை- அப்பன் என்பதை ஏன் மறந்தாய்? அவர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் காப்பதே நமது பொறுப்பு. இதை அறியாதவளா நீ? போ, பூலோகம்! உன்னைச் சூழ்ந்த வினையை வேரறுத்து விட்டு என்னிடம் வா. இதுதான் உனக்கு சாபம்!’’ என்று இறுக்கமுடன் சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தார் ஈசன். கலகலப்பாக ஆரம்பித்த சூழல், கவலையைத் தனக்கு ஏற்படுத்திக் கொடுத்து விட்டதே என்று வருந்திய தேவி, பூலோகம் வந்தாள். தன்னைச் சூழ்ந்த சாபத்தை விரட்ட அந்த சர்வேஸ்வரனையே துதித்து, அவன் தரிசனம் பெற்று பாவம் போக்க எண்ணினாள். மந்திர மலையில் இருந்து புறப்பட்ட அவள் அப்படி வந்து சேர்ந்த இடம்தான் காஞ்சி மாநகரம். தனது தவத்துக்கு இந்த நகரையே தேர்ந்தெடுத்தாள்.
தெள்ளிய நீர் பொங்கிப் பெருகும் கம்பா நதிக் கரையில் லிங்கத்தை ஸ்தாபித்து, தூய அன்புடன் நறுமலர்கள் கொண்டு பூஜை மற்றும் வழிபாடுகளைச் சிறப்பாகவே செய்து வந்தாள். உமையம்மையின் தொடர் வழிபாட்டில் மகிழ்ந்த ஈஸ்வரன், ஒரு நாள் தேவியைச் சோதிக்க நினைத்தார். எனவே, கம்பா நதியில் திடீர் வெள்ளத்தை வரவழைத்தார். திடீரென பெருக்கெடுத்து வரும் வெள்ளம் கண்டு திகைத்தாள் தேவி. தனது, ‘பூஜையில் என்ன குறை வந்ததோ?’ என்று கலங்கினாள்.க ஈஸ்வரனை நினைந்து பிரார்த்தித்தாள். எனினும், வெள்ளத்தின் வேகம் அடங்கவில்லை. கம்பா நதிக் கரையில், தான் ஸ்தாபனம் செய்து வழிபட்டு வரும் லிங்கத் திருமேனியை இந்த வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுமோ என்று பயந்தாள். தவித்தாள். ஒரு கட்டத்தில் ஓடிப் போய் தன் நாயகனாம் சிவலிங்கத் திருமேனியை, மெல்லிய தன் இரு கரங்களால் அணைத்து மார்போடு இறுக்கிக் கொண்டாள். பார்வதிதேவியின் தழுவலுக்குக் குழைந்ததால்  இறைவன் பின்னாளில் ‘தழுவக் கொழுந்தீஸ்வரர்’ ஆனார்.

 *ஆலய அமைப்பு*

கிழக்குத் திசை பார்த்த ஆலயம். மூன்று நிலை ராஜ கோபுரம். ஐந்து கலசங்கள். உள்ளே நுழைந்தவுடன் தழுவக்கொழுந்தீஸ்வரரைப் பார்த்த வண்ணம் சூரியன் மற்றும் சந்திரனின் விக்கிரகங்கள், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியன உள்ளது.வலப் பக்கம் அன்னை ஸ்ரீகாமாட்சி சந்நிதி. இதை அடுத்து, சிவகாம சுந்தரி சமேத ஆனந்த நடராஜர், மாணிக்கவாசகர் ஆகியோரின் பஞ்சலோக விக்கிரகங்கள் அமைந்துள்ள தனி மண்டபம். சுதையால் ஆன துவாரபாலகர்களைதாண்டி உள்ளே நுழைந்தால், தழுவக்கொழுந்தீஸ்வரர் கருவறை. ஈஸ்வரனை வணங்குவதற்கு முன் பிராகார வலம் வருவோம். பிராகார வலத்தின்போது முதலில்  நால்வர் தனி மண்டபத்தில் தரிசனம் தருகின்றனர். வீரபத்திரர், சரபேஸ்வரர், வெற்றி விநாயகர், காசி விஸ்வநாதர், நந்தி தேவர்- பலிபீடத்துடன் கூடிய திருவாலீஸ்வரர்- திருநல்லழகி அம்பாள், வள்ளி- தெய்வானை சமேத சுப்ரமண்யர், சண்டிகேஸ்வரர், சனீஸ்வர பகவான், நவக்கிரகம் முதலான சந்நிதிகள் அழகாகக் காட்சி அளிக்கின்றன. தவிர, கோஷ்ட தெய்வங்களான நர்த் தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்கை ஆகியோர் தங்களுக்கு உரிய இடத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கின்றனர். மகா மண்டபம், அர்த்த மண்டபம் தாண்டி விசாலமான கருவறை. உள்ளே- தழுவக்கொழுந்தீஸ்வரர், லிங்கத் திருமேனியாகக் காட்சி தருகிறார். சுவாமி சந்நிதிக்கு இடப் பக்கம், காமாட்சி அம்பாள் சந்நிதி. தெற்கு நோக்கியது. பிராகார வலத்தின்போது கோஷ்ட தெய்வங்கள் வைஷ்ணவி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரது சன்னதிகள் உள்ளன.

 *அமைவிடம்*

சென்னை- தாம்பரம்- காஞ்சிபுரம் பாதையில் தாம்பரத்தில் இருந்து சுமார் 13 கி.மீ தொலைவில் உள்ள படப்பையில் உள்ளது இவ்வாலயம்.
பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் ஐந்து நிமிட நடை தூரத்தில் கோயில் இருக்கிறது.

 *ஆலய முகவரி*

அருள்மிகு தழுவக்கொழுந்தீஸ்வரர் ஆலயம்,
மேல்படப்பை கிராமம்
ஸ்ரீபெரும்புதூர் வட்டம்,
காஞ்சிபுரம் மாவட்டம் 601 301

இவ்வாலயம் காலை 6 மணி முதல் 10.30 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
தென்பொன்பரப்பி

 *மூலவர்* சொர்ணபுரீஸ்வரர்
 *தாயார்* உமையாள், சொர்ணாம்பிகை
 *தல விருட்சம் :* அரசமரம்

 *ஸ்தலவரலாறு*

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு காகபுஜண்ட சித்தர் சிவ தரிசனம் வேண்டி 16 ஆண்டுகள் கடுமையாக தவம் மேற்கொண்டிருந்தார். அவரது தவத்தை மெச்சிய சிவபெருமான் பிரதோஷ நேரத்தில் 16 முகங்களைக் கொண்ட ஷோடசலிங்கமாக அவருக்கு இங்கே காட்சி தந்தாராம். அதனாலேயே காக புஜண்டர் இங்கே சிவலிங்கத்தை இங்கே பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும், தற்போது ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள பகுதியிலேயே ஈசானத்தில் அவர் ஜீவசமாதி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

 *ஆலய அமைப்பு*

இந்த சிவாலயம் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு மகத ஆட்சிக்கு உட்பட்டிருந்த சிற்றரசனான வானகோவராயன் என்ற குறுநில மன்னனால் கட்டப்பட்டது. புகழ்பெற்ற கட்டடக்கலை வல்லுநர்களைக் கொண்டும், நுணுக்கமான வேலைப் பாடுகளுடனும் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.
இங்கு அருளாட்சி செய்யும் சொர்ணபுரீஸ்வரர் 16 முகங் களைக் கொண்ட ஷோடசலிங்கமாக அருள்பாலிக்கிறார்.நவபாஷாணத்துக்கு நிகரான, காந்தத் தன்மையும் கொண்ட ஒரே கல்லால் செய்யப்பட்ட இந்த லிங்கத் திருமேனி சுமார் ஐந்தரை அடி உயரத்துடன் விஷ்ணு மற்றும் பிரம்ம பீடங்களின் மீது கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது.ஷோடசலிங்கம் பல சிவாலயங்களில் இருந்தாலும், இங்கு லிங்கம் மட்டுமின்றி, விஷ்ணு பிரம்ம பீடங்களும் 16 முகங்கள் கொண்டதாகவும் வடிவமைக்கப்ட்டுள்ளதால், உலகையே கட்டியாளும் மும்மூர்த்திகளும் ஒரே வடிவமைப்பில் இணைந்திருப்பது தனிச்சிறப்பாகும்.பெரும்பாலான சிவாலயங்களில் உள்ள நந்தி வயது முதிர்ந்தது போலவும், அவரின் திருமுகம் ஏதேனும் ஒரு பக்கத்தில் சாய்ந்திருப்பது போலவும் காணப்படுவது இயல்பு. ஆனால் இக்கோயிலின் நந்தியானது இளங்கன்றாகவும், சொர்ணபுரீஸ்வரருக்கு நேர்கோட்டில் இருக்கு மாறும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தலத்து அம்பாள் மகாலட்சுமி அம்சத்துடன் சுவர்ணாம்பிகை என்ற பெயருடன் நின்ற கோலத்தில் அருளுகிறாள். இவள் கிழக்கு பார்த்து நின்றிருந்தாலும், இவளது முகம் சிவன் இருக்கும் திசை நோக்கி சற்று திரும்பியுள்ளது. காகபுஜண்டர், மனைவி பகுளாதேவி ஆகியோரின் ஜீவசமாதி இவளது பார்வையில் படும்படி உள்ளது.

 *அமைவிடம்*

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் - ஆத்தூர் சாலையில் சுமார் 5 கி.மீ. தொலை வில், இயற்கை எழில் கொஞ்சும் பொன்பரப்பி எனும் கிராமத்தில் அமைந்திருக்கிறது.

 *ஆலய முகவரி:*

அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், தென்பொன்பரப்பி, விழுப்புரம் மாவட்டம்.
606 201

இவ்வாலயம் காலை 5.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்.
சிவன்மலை

 மூலவர்:* சுப்பிரமணியர்
 *தாயார்:* வள்ளி
 *தீர்த்தம்:* காசித் தீர்த்தம்
 *தல விருட்சம் :* தொரட்டி மரம்

 *ஸ்தலவரலாறு*

மலைச்சாரலில் தினைப்புனம் காத்துக்கொண்டிருந்த வள்ளியம்மையை, காதல் மணம் புரிந்து, இங்கு முருகன் குடியேறியதாகவும், சிவன் திரிபுரத்தை அழிக்க மேருமலையை வில்லாகப் பயன்படுத்தியபோது அதிலிருந்து சிதறிய ஒரு சிறுபகுதியே சிவன்மலை எனப்படுகிறது.
பார்வதி மற்றும் அகத்தியர் சிவனை நோக்கித் தவம் செய்த தலம் என்றும், வள்ளிமலைக்குச் சென்று வள்ளியை மணம்முடித்த முருகன் வள்ளியுடன் இங்கு திரும்பி வந்து குடிகொண்டதாகவும் தல வரலாறு கூறுகிறது.அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற பெருமை கொண்டது இந்த முருகன் கோயில் ஆகும்.

 *ஆலய அமைப்பு*

சிவன்மலை மீதுள்ள கோயிலை நடைப்பயணமாக அடைய 496 படிகள் கொண்ட மலைப்பாதை உள்ளது. சிவன்மலை கோயிலுக்கு வெளியே தீபத்தூண் உள்ளது. அத் தூணின் அடிப்புறத்தில், விநாயகர் (கிழக்கே), சூலம் (தெற்கே), மயில் ((வடக்கே) மற்றும் தண்டபாணி (மேற்கே) வடிக்கப்பட்டுள்ளது. கோயிலின் உள்ளே தெற்குப் பிரகாரத்தில், கைலாசநாதர், ஞானாம்பிகை சன்னிதிகள் கிழக்குமுகமாக உள்ளன. மேற்குப் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் கன்னிமூலை விநாயகரும், வடமேற்கில் தண்டபாணியும், கருவறையின் வெளிச்சுவற்றில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை, துர்க்கைக்கு எதிரில் சண்டிகேஸ்வரர் உள்ளனர். சனிபகவானுக்குத் தனி சன்னிதியும் அதுதவிர நவக்கிரக சன்னிதியும் அடுத்து பைரவர் சன்னிதியும் அமைந்துள்ளன.
நவக்கிரகங்கள் அனைத்தும் சூரியபகவானைப் பார்த்து நிற்கின்றன.
பிரகாரம் சுற்றிவந்து, கொடிமரம், மயில்வாகனக் குறடு, பலிபீடம் கடந்தால், சுமுகர், சதேகர் துவாரபாலகர்கள். அடுத்து உள்ளே கருவறையில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி சமேதராக இருக்கிறார்.
இத்தல முருகரின் பக்தையான ஒரு பெண் காசி சென்று நீராட விரும்பியும் காசி செல்ல வசதியில்லாததால் மனம் வருந்த, தம் பக்தைக்காக முருகப்பெருமான் காசித் தீர்த்தத்தை இத்தலத்திற்கே வரவழைத்தார்.

 *ஆண்டவன் உத்தரவு பெட்டி*

சுப்பிரமணிய ஸ்வாமி சன்னதியின் முன் மண்டபத்தில், "ஆண்டவன் உத்தரவு பெட்டி ஒன்று உள்ளது.பக்தர்கள் கனவில் முருகப்பெருமான் ஏதேனும் ஒரு பொருளைக் கூறி, அதை ஆண்டவர் பெட்டியில் வைக்குமாறு கூறுகிறார்.அந்தப் பொருளை, சம்பந்தப்பட்ட பக்தர் கோவிலுக்கு கொண்டு வருவார். அவர் கூறுவது உண்மைதானா என்பதை அறிய, மூலவர் சன்னதியில் பூ போட்டு உத்தரவு கேட்கப்படும். ஸ்வாமி உத்தரவு கிடைத்தால், அந்தப் பொருள், "ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும். அடுத்த பொருள் வரும் வரை, இந்தப் பொருளுக்கு தினசரி பூஜை நடக்கும். இக்கோவிலில், பல நூறு ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது..

 *அமைவிடம்*

காங்கேயத்திலிருந்து திருப்பூர் செல்லும் வழியில் 7 வது கி.மீட்டரில் அமைந்த அழகிய குன்று சிவன் மலையாகும் . திருக்கோவில் குன்றின் மேலே செல்ல படிகட்டு வழி மற்றும் எல்லா வகையான வாகனங்களில் செல்லும் விதமாக தார் சாலை  அமைத்துள்ளார்கள் .மலைப்பாதை வழியில் சுமார் 2 கி.மீட்டர் பயணித்தால் திருக்கோவில் முகப்பை அடையலாம்.

 *ஆலய முகவரி*

அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில், சிவன்மலை, காங்கயம் வழி, திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு -638701.

இவ்வாலயம் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

 *குறிப்பு*

பொதுவாக அனைத்துக் கோயில்களிலும் முதல் பூசை விநாயகருக்கே நடக்கும். சிவன்மலையில் முதல் பூசை முருகனுக்கே நடக்கிறது. விநாயகரே முருகனை வழிபடுவதாக ஐதீகம்.

வியாழன், 12 டிசம்பர், 2019

முதல் தமிழ் வருடம்!

முதல் தமிழ் வருடம் பிரபவ எனப்படும். வியாழன் (குரு) ஒரு முறை வான வட்டத்தை சுற்றுவதற்கு 12 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும். சனி ஒருமுறை சுற்ற 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும். இவை இரண்டும் அசுவினி (அசுவதி) நட்சத்திரத்தில் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடும். அசுவினி நட்சத்திரங்களில் முதன்மையானது. இவ்வாறு கூடும் நாளே தமிழ் முதல் ஆண்டின் துவக்கநாள் ஆகிறது. பிரபவ முதல் அட்சய வரை 60 ஆண்டுகள் உள்ளன.
அம்மனுக்கு உப்பு, மிளகு காணிக்கை ஏன்?

பெரும்பாலான அம்மன் கோயில்களில் அம்பாளுக்கு உப்பும், மிளகும் காணிக்கையாக படைக்கின்றனர். நமது உடலை உப்புக்கும், உடலில் உள்ள அகங்காரத்தை மிளகிற்கும் ஒப்பிடுகிறோம். அகங்காரத்தை அகற்றி நல் உடம்பைத் தரவேண்டும் என அம்பிகையிடம் வேண்டிக்கொள்வதற்காகவே இந்த வழக்கம் ஏற்பட்டது.
பெரியபுராணம் தந்த சேக்கிழார்

பெரியபுராணம் தந்த சேக்கிழார் அரசபதவியை விட்டெறிந்து தெய்வத் திருப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். திருத்தொண்டர்புராணம் எனப்படும் பெரியபுராணம் இன்றளவும் நிலைபெற்று விளங்குவதற்கு இவரது அயராத உழைப்பே காரணம். தொண்டை நாடு புலியூரில் குன்றத்தூர் கிராமத்தில் அவதரித்தவர் சேக்கிழார். அவர் பிறந்ததும் அருண்மொழி ராம தேவர் என்ற பெயர் இடப்பட்டது. இவரது சகோதரர் பாலறாவாயர். சேக்கிழாரின் தந்தை இரண்டாம் குலோத்துங்கன் எனப்பட்ட அநபாய சோழனிடம் அமைச்சராகப் பணியாற்றினார். 1133ம் ஆண்டு முதல் 1150ம் ஆண்டு வரை இவனது ஆட்சிக்காலம் இருந்தது. சேக்கிழாரின் தந்தை அரசவைக்கு வரும் போதெல்லாம் சேக்கிழாரையும் உடன் அழைத்து வருவார். இதனால் சேக்கிழாருக்கு அரசியல் நடவடிக்கைகள் அத்துப்படி ஆயின. தந்தையைத் தொடர்ந்து சேக்கிழாருக்கு அந்தப்பதவி கிடைத்தது. அநபாயச்சோழன் சேக்கிழாரை தனது முதல் அமைச்சராகவே நியமித்தான். சேக்கிழார் தனது பொறுப்பை நல்லமுறையில் கவனித்து நாட்டை நல்வழியில் நடத்திச் சென்றார். ஒருமுறை திருநாகேஸ்வரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை தரிசிக்க சேக்கிழார் சென்றார். இறைவனைக் கண்டதும் அவரது கண்கள் பனித்தன. அவர் உடலே இறைசக்தியால் ஆட்டுவிக்கப்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. அரசபதவியை விட்டுவிட்டு தெய்வப் பணிக்கு சென்று விடலாமா என எண்ணினார். இந்த நேரத்தில் மன்னனின் போக்கு திடீரென மாறியது. மன்னன் அநபாயச்சோழன் சீவகசிந்தாமனி என்னும் காப்பியத்தை படித்துவிட்டு சிற்றின்பத்தில் மூழ்கி காலத்தை கழித்தான். எனவே சிவ நூல்களை படித்து நல்லவழியில் செல்ல மன்னனை சேக்கிழார் கேட்டுக்கொண்டார்.

அவன் சேக்கிழாரிடம், சமயநூல்களை உருவாக்கியவர்கள் யார் என கேள்வி கேட்டான். மன்னன் இப்படி கேட்டதே சேக்கிழாருக்கு பெருமையாக இருந்தது. சேக்கிழார் அதற்குரிய விளக்கங்களை மன்னனிடம் எடுத்துக்கூறினார். நம்பியாண்டார் நம்பி எழுதிய திருவந்தாதியை செப்பேடு செய்து ராஜராஜசோழன் சைவ சமயத்தின் உண்மை நெறியை மக்களுக்கு எடுத்துக்காட்டினான். அப்படிப்பட்ட மன்னனின் வழியில் வந்த தாங்களும் சைவ சமயத்தை காக்க ஏற்பாடுசெய்ய வேண்டும் என சேக்கிழார் எடுத்துக்கூறினார். இதையடுத்து மன்னன் திருந்தினான். சிவபெருமானின் தொண்டர்களின் வரலாற்றை காவியமாக்கி தரவேண்டும் என சேக்கிழாரை கேட்டுக்கொண்டான். அதற்காக பொன்னும் பொருளும் கொடுத்து வேண்டிய ஏற்பாடுகளை செய்தான். சேக்கிழார் சிதம்பரம் நகருக்கு சென்றார். அங்கு நடராஜ பெருமானை வணங்கி, சிவனின் திருத்தொண்டர்களின் வரலாற்றை எழுத அடியெடுத்துக் கொடுக்க வேண்டும் என வேண்டினார். தில்லையம்பல நடராஜர் உலகெலாம் என அடியெடுத்துக் கொடுத்தார். அதை முதற்சொல்லாக வைத்து சேக்கிழார் பெரியபுராணத்தை எழுதத் தொடங்கினார். அதில் 4253 பாடல்கள் இருந்தன. எழுத்துப்பணி முடிந்து காவியத்தை நடராஜரின் பாதத்தில் சேக்கிழார் சமர்ப்பித்தார். இதைக் கேள்விப்பட்ட மன்னன் தனது பரிவாரங்களுடன் சிதம்பரத்திற்கு புறப்பட்டு வந்தான். மன்னன் வருவதை அறிந்த சேக்கிழார் சிதம்பரத்தில் உள்ள மூவாயிரம் அந்தணர்களுடனும் திருமட தலைவர்களுடன் சென்று மன்னனை வரவேற்றார். அவர் ருத்திராட்சமும் திருநீறும் அணிந்து சிவனடியார் போல நின்று கொண்டிருந்தார். அந்த உருவத்தை பார்த்த உடனேயே மன்னன் அவரை வணங்கினான். அப்போது விண்ணில் அசரீரி வாக்கு எழுந்தது. சேக்கிழார் முடித்த பெரியபுராணத்தை அரங்கேற்றம் நிகழ்ச்சியை மிகப்பெருமளவில் நடத்த அசரீரி வாக்கு கூறியது.

இதையடுத்து மன்னன் விழா ஏற்பாடுகளை ஆரம்பித்தான். தில்லை நடராஜருக்கு உகந்த நல்லநாளும், திருஞான சம்பந்தர் அவதரித்த பொன்னாளுமான சித்திரை திருவாதிரை தினத்தில் அரங்கேற்ற நிகழ்ச்சியை தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது . மிகப்பெரிய விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடக்கும் திருவிழாவிற்கு வரும் கூட்டம் போல பக்கத்து நாடுகளிலிருந்து, புலவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் சிதம்பரத்தில் கூடினர். ஊரெங்கும் பூரணகும்பம் வைத்து திருவிளக்கு ஏற்றினர். ஒருபக்கம் சிலம்பாட்டம், மற்றொரு பக்கம் நடனம் என கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சிதம்பரம் நடராஜர் கோயில சிற்பங்கள் வர்ணம் பூசப்பட்டன. வீதியெங்கும் வாழை, கமுகு தோரணங்கள் அலங்கரித்தன. இப்படிப்பட்ட குதுகலமான சூழ்நிலையில் நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் பெரியபுராணத்தின் அரங்கேற்றம் துவங்கியது. அரங்கேற்றம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்து. கதை முடிந்தபாடில்லை. ஒரு வருடம் பெரியபுராணத்தை சேக்கிழார் பாடினார். அடுத்த ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை தினத்தன்று தனது இனிய கவிதைகளை பாடிமுடித்தார். சேக்கிழார் தந்த பெரியபுராணத்தில் 63 நாயன்மார்களின் வரலாறு இடம்பெற்றுள்ளது. விழா முடிந்ததும் மன்னன் மீண்டும் தன் நாடு அடைந்தான். சேக்கிழாரின் சகோதரரான பாலறவாயரை அமைச்சராக்கி அவருக்கு தொண்டைமான் என்னும் பட்டத்தை வழங்கினான். அவனது காலத்தில் நாடு மிகச் செழிப்பாக விளங்கியது. அதன்பிறகும் சேக்கிழார் தில்லையரசரின் புகழ்பாடி அவரது திருவடியைச் சேர்ந்தார்.
ஓம் நமோ பகவதே தத்தாத்ரேயாய:

அத்திரி மகரிஷி- அனுசூயா தம்பதிகள் காட்டில் குடில் அமைத்து வசித்தனர். அவர்களுக்கு மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் குழந்தைகளாகப் பிறக்க வேண்டும் என்பது ஆசை. இதற்காக கடுமையாகப் பிரார்த்தித்து வந்தனர். கடவுளே குழந்தையாகப் பிறப்பதென்றால் சாமான்யமா? அதிலும் மும்மூர்த்திகளும் ஒன்றுசேர்ந்து வந்தாக வேண்டுமே! மூவரும், அவர்களது பக்தியைச் சோதிக்க முடிவெடுத்தனர். துறவிகள் போல் வடிவெடுத்து, அத்திரியின் குடில் முன் வந்தனர். அத்திரி அப்போது வீட்டில் இல்லை. அவர் மனைவி அனுசூயா தர்மபத்தினி. கணவருக்கு தினமும் பாதபூஜை செய்து, அந்த தீர்த்தத்தை தலையில் தெளித்த பின்பே பணிகளைத் துவங்குவாள். அந்த தீர்த்தம் எப்போதும் வீட்டில் இருக்கும்.

அனுசூயா வந்தவர்களை வரவேற்றாள்.துறவிகள் தங்களுக்கு பசிப்பதாகக் கூறினர். உள்ளே உணவெடுக்கச் சென்ற அனுசூயாவிடம், தாயே... எங்களிடம் ஒரு பழக்கம் உள்ளது. எங்களுக்கு யார் உணவிட்டாலும், திகம்பர (நிர்வாணம்) நிலையிலேயே வாங்குவது வழக்கம். அப்படி செய்தால் மட்டுமே உணவு பெறுவோம்... என்றனர். அனுசூயா நல்லறிவு மிக்கவள். சாதாரண மனிதர்கள் இப்படி கேட்க மாட்டார்கள். இது ஏதோ தெய்வ சங்கல்பம் என நினைத்தவள், சற்றும் பதட்டமின்றி, அதற்கென்ன... அவ்வாறே உங்கள் பசியை தீர்த்து விடுகிறேன்... என்றவள் வீட்டுக்குள் சென்றாள். கணவரின் பாத தீர்த்தத்தை எடுத்து வந்து,இறைவா... நான் என் கணவர் மீதும், உன் மீதும் கொண்ட பக்தி உண்மையென்றால், இந்த துறவிகளை குழந்தைகளாக மாற்று... என்று கூறி அவர்கள் மேல் தெளித்தாள்.

அந்த பத்தினி தெய்வத்தின் பக்தியால், மூவரும் குழந்தைகளாகி விட்டனர். அவர்கள் விரும்பியபடியே அவர்களுக்கு பாலூட்டி, பசி தீர்த்தாள். அத்திரி முனிவரும் வந்தார். நடந்ததைக் கேட்டார். தன் ஞான திருஷ்டியால், வந்திருப்பவர்கள் மும்மூர்த்திகள் என்பதைப் புரிந்து கொண்டார். அவர்களை அன்புடன் அணைத்தார். அந்த குழந்தைகள் மூன்று தலையும்,  ஆறு கைகள் மற்றும் ஓருடலும் கொண்டதாக மாறின. இந்த தகவல் நாரதர் மூலம், மூன்று தேவியருக்கும் தெரிய வரவே, அவர்கள் அனுசூயையிடம் வந்து, தங்கள் கணவன்மாரை திருப்பித்தர வேண்டினர்.தேவியரே... இந்தக் குழந்தை எங்களிடமே வளர வேண்டும் என்பது எங்கள் விருப்பம். அதை நிறைவேற்றி வைத்தால் உங்கள் கணவன்மாரைத் திருப்பித் தருவேன்... என்றாள். மூன்று தேவியரும் அதற்கு ஒத்துக் கொள்ளவே, அனுசூயை மும்மூர்த்திகளை மானசீகமாக வேண்டினாள். அப்போது மூன்று தெய்வங்களும் காட்சியளித்து, தங்கள் சக்தியாகிய அக்குழந்தை ஒரு முனிவராக விளங்குவான்... என்று கூறி ஆசியளித்து, குழந்தைக்கு, தத்தாத்ரேயன் என்று பெயர் சூட்டினர். தத்தாத்ரேயன் என்றால், மும்மூர்த்திகளுக்கு சமமானவர் என்று பொருள்.

நாமும் தத்தாத்ரேயரை வழிபட்டு மும்மூர்த்திகளை வழிபட்ட பலனை பெறுவோம்
ஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகள் மதுரை மீனாட்சியின் அருந்தவப்புதல்வர். 1627ல் மதுரையை அடுத்த சமயநல்லூரில் அண்ணாஸ்வாமி சர்மா, திரிபுரசுந்தரி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தைச் செல்வம் இல்லை. இருவரும் மதுரை மீனாட்சி கோயிலுக்கு வந்தனர். திரிபுர சுந்தரி மனமுருகி பிரார்த்தித்தார். அம்மா, மீனாட்சி ! கிளி ஏந்திய காரிகையே ! எங்களுக்கு குழந்தை பிறந்தால், அதை நாங்கள் கூட வளர்க்க பிரியப்படவில்லையம்மா ! நீயே வைத்துக் கொள். குழந்தை பிறந்ததும், உன் பாதத்தில் விட்டு விடுகிறோம். நீயே அந்தக் குழந்தைக்கு தாயாக இரு, என கண்ணீர் விட்டு மனமுருகி வேண்டினார். ஒன்றுக்கு இரண்டாக இரட்டை குழந்தைகளைக் கொடுத்தாள். பாதங்களில் சங்கு சக்கரங்களுடன் பிறந்த மூத்த குழந்தையை தாங்கள் வேண்டியபடி அன்னை மீனாட்சியிடம் ஒப்படைத்தனர் அந்த தம்பதியர். ஒரு குழந்தையை தாங்கள் வளர்த்தனர். கோவிலுக்குள் வந்த குழந்ததைக்கு பாலுட்டி சீராட்டி, உயரிய மந்திரத்தை உபதேசித்து, தாயாக, தந்தையாக, குருவாக இருந்து வளர்த்தாள் மீனாட்சி. கோயிலில் வளர்ந்த குழந்தையை குழந்தைசாமி என பக்தர்கள் அழைத்தனர்.

குழந்தைசாமியின் 16ம் வயதில் அவரது தந்தையும் தாயும் அம்பாளின் திருவடியை அடைந்தார்கள். இதன்பின் வட திசை நோக்கி பயணமானார் குழந்தை சுவாமி. காசி சென்று அங்கே திரைலிங்க ஸ்வாமிகள் என்ற பெயருடன் கடுமையாக தவம் செய்து நிர்விகல்ப சமாதியில் 150 ஆண்டு காலம் காசிநிவாசியாக அருள் பாலித்தார். பின் கங்கை கரையில் சமுத்திரகூடம் என்னுமிடத்தில் உள்ள குகையில் நீண்ட காலம் தவமிருந்தார். (இந்த குகையைத்தான் பின்னாளில் சுவாமி விவேகானந்தர் கண்டு பிடித்து இந்த இடத்தில் தவம் இருந்து விஜய யாத்திரையை ஆரம்பித்தார்.) பிறகு கைலாய மலையிலும், மகாமேரு சிகரத்திலும் அமர்ந்து அருள்பாலித்தார். மானஸரோவர், கங்கோத்ரி, அமர்நாத், கேதார்நாத் ஸ்தலங்களில் நிர்விகல்ப சமாதியில் நீண்ட நாட்கள் இருந்திருக்கிறார். கஜானந்தேந்திர சரஸ்வதி என்ற திருநாமத்துடன் இமாலயத்திலுள்ள ஆதிசங்கர பீடத்தை அலங்கரித்தார். நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தென் தேசத்திற்கு விஜயம் செய்து மக்களுக்கு அருள்பாலித்துள்ளார். மதுரையை அடுத்த சித்தாலங்குடி என்ற கிராமத்தில் குழந்தை சித்தராய் தங்கி, பல சித்துகள் செய்து சமாதி அடைந்து மீண்டும் வெளியே வந்து வேறொரு இடத்தில் தோன்றியருளினார். சித்தாலங்குடியில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் 4,5,6 தேதிகளில் குருபூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி கன்னிமாரம்மன் கோவில் தெருவில், கதிர்வேலப்பர் என்ற திருநாமத்துடன் சமாதியடைந்து அருள்பாலித்து வருகிறார். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆவணி ஆயில்ய நட்சத்திரத்தில் குருபூஜை கொண்டாடப்படுகிறது. இதன்பிறகு காசியில் அவதரித்த ஸ்வாமிகளை ராமகிருஷ்ண பரமஹம்சர் நேரில் தரிசித்து, இவர் தான் உண்மையான பரமஹம்சம் என போற்றி புகழ்ந்தார். குழந்தையானந்தர் காசியில் தங்கியிருந்த காலத்தில் விஸ்வநாதர் கோயிலையும், காலபைரவர் கோயிலையும் சிறப்பாக பராமரித்தார். 1887ல் காசியில் தன்னை ஒரு பெட்டியில் வைத்து கங்கையில் விடுமாறு தன் சீடர்களுக்கு கட்டளையிட்டு, அப்பெட்டியுடன் தென்னகத்தில் திருவண்ணாமலை, சுருளி ஆகிய இடங்களில் தோன்றி பக்தர்களுக்கு நீண்ட காலம் அருள்பாலித்தார். 1919ம் ஆண்டு மதுரையிலிருந்து வத்தலக்குண்டு சென்றார். அங்கு தனக்கு தன் சீடர் மூலம் ஒரு கோயிலை நிர்மாணித்தார். அதேபோல் மதுரை காளவாசல் அருகே உள்ள கோயிலில் சமாதி அடைந்தார். தான் சமாதி ஆகும் போது வழக்கமாக செய்யகூடிய சடங்குகள் ஏதும் செய்ய வேண்டாம் என்று கூறிய சுவாமிகள், அங்கிருந்து வத்தலக்குண்டில் தனக்காக எழுப்பப்பட்ட கோயிலில் எழுந்தருளினார். இப்படி ஒவ்வொரு கால கட்டத்திலும் அவதார புருஷராக அவதாரம் எடுத்து சமாதி நிலை அடைந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் குழந்தையானந்த சுவாமிகள்.
சேஷாத்திரி சுவாமிகள்

ஆதிகுருவாகிய சங்கரர் காஞ்சிபுரத்தில் காமகோடி பீடத்தை அமைத்து காமாட்சிதேவியை அமைத்து காமாட்சி தேவியை ஸ்ரீவித்யா முறைப்படி வழிபாடு செய்ய முப்பது தேவி பக்தர்களை ஏற்பாடு செய்தார்.வேத சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்ற இவர்கள் காமகோடி வம்சம் என அழைக்கப்பட்டனர்.இந்த வம்சத்தை சேர்ந்த வரதராஜன் - மரகதம்பாள் தம்பதிகளுக்கு 1870 ஜனவரி 22ம் நாள் சனிக்கிழமை அஸ்த நட்சத்திரத்தில் உத்திரமேரூர் அருகே வாவூர் கிராமத்தில் மகான் அவதாரம் நடந்தது. பிறந்த சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாதலால் சேஷாத்ரி என பெயர் சூட்டப்பட்டார். ஒருநாள் சேஷாத்ரி தாயாருடன் கோயிலுக்கு செல்லும்போது ஒரு வியாபாரி வைத்திருந்த நவநீதகிருஷ்ணர் பொம்மைகளில் ஒன்றை கேட்டார்.வியாபாரியும் சேஷாத்ரியை தூக்கிக் கொஞ்சி இந்த குழந்தைகயின் கை தங்கக்கை நேற்று ஆயிரம் சிலைகளும் விற்றுவிட்டது என்று கொண்டாடினான்.அதுமுதல் இவர் கை பட்ட காரியம் வளர்ச்சி அடைந்ததால் நான்கு வயதிலேயே தங்கக்கை சேஷாத்ரி என்று அழைக்கப்பட்டார்.சேஷாத்ரி சிறு வயதிலேயே வேதங்கள் கற்று பற்பல சாஸ்திரங்களில் வல்லவராக விளங்கினார்.சேஷாத்ரியின் 14ம் வயதில் தகப்பனார் இறந்தார்.ஒரு சமயம் வந்தவாசியில் உபன்யாசம் செய்பவர் உடல்நலக் குறைவால் வராததால் சேஷாத்ரி அங்கு சென்று ஓராண்டு ராமாயண பாகவதம் சொற்பொழிவாற்றினார்.சேஷாத்ரிக்கு 17 வயதில் தாயார் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார்.சேஷாத்ரியின் ஜாதகத்தை பார்த்த ஜோதிடர்கள் இவருக்கு சன்னியாசி யோகம் தான் உள்ளது. சன்னியாசி ஆகி பிறகு யோகியாக ஆவார் என கூறிவிட்டார்கள்.

தாயார் இறப்பதற்கு சில தினங்களுக்கு முன் ஒருநாள் சேஷாத்ரிக்கு தன் முதுகில் ஆதிபராசக்தி பாம்பின் வடிவமாக தன்னை ஆட்கொண்டதை உணர்ந்தார்.சில நாட்களில் தாயார் சேஷாத்ரியை அழைத்து பிறக்க முக்தி திருவாரூர் தரிசிக்க முக்தி சிதம்பரம் இறக்க முக்தி காசி நினைக்க முக்தி திருவண்ணாமலை என்று பொருள் கொண்ட சுலோகத்தை மகனின் மார்பில் 3 முறை அடித்து அடித்து சொல்லிவிட்டு.அருணாசல அருணாசல அருணாசல என்று 3 முறை உருக்க கூவிவிட்டு மகளின் மகனின் மடியில் இயற்கை எய்தினார்.தாயின் அந்திமச் சொற்களாகிய அண்ணாமலை அடிமனதில் ஆணிவேர் போல் பதிந்துவிட்டுது. திருவண்ணாமலை மனத்தால் கண்டு ஒரு அட்டையில் அதைப் போல் வரைந்து பூஜை அறையில் வைத்து காலை முதல் பிற்பகல் வரை அறையை உள்தாளிட்டு பூஜையில் ஈடுபட்டு விடுவார்.சரியாக குளிப்பதில்லை. சாப்பிடுவதில்லை.உடம்பைப்பற்றி கவலைப்படுவதில்லை. ஞானப்பைத்தியம் என்று பலரும் பரிகசித்தனர்.19வது வயதிலேயே உபாசனையும் வைராக்கியமும் மிகுந்த நிலையை மேற்கொண்டு எல்லாவற்றையும் துண்டித்து துறவியாகி காஞ்சிபுரத்தை விட்டு புறப்பட்டு ஞானவித்தையை உலகெல்லாம் பரப்ப அந்த ஞான தபோதனார் அண்ணாமலை நோக்கி வந்தார்.தை மாதத்து ரத சப்தமி திருநாளில் திருவண்ணாமலையில் திருப்பாதம் பதித்தார்.வந்த உடனே கிரிபிதட்சணம் போனார்.கோயிலில் பல இடங்களில் தியானம் புரிந்தார். அங்கு அவர் தவம் செய்ய மிகவும் பிடித்த இடம் துர்க்கையம்மன் கோயில். திருவண்ணாமலை வந்தவுடன் தினசரி சித்து விளையாட்டுகள் செய்யலானார்.

பைத்தியம் போல் வேகமாக சிரிப்பார். நடப்பார்.ஓடுவார்.வசீகர கண்கள். அழுக்கே இவர் உடையின் நிறம். நிலையான இருப்பிடம் கிடையாது. நல்லவர்கள் வணங்கினால் ஆசிர்வதிப்பார்.தீயவர்களை வசைமாரி பொழிவார்.எந்த பெண்ணைக் கண்டாலும் என் தாய் என்று சொல்லி வணங்குவார்.தூக்கமே கிடையாது. இரவில் சுற்றுவார்.அல்லது தியானத்தில் இருப்பார்.பக்தர்களுக்கு மும்மூர்த்திகளையும் காட்டி தானே பராசக்தி வடிவமாக காட்சிதந்துள்ளார். விஷத்தை அல்வா போல் விழுங்குவார். வியாதியால் பீடிக்கப்பட்ட பக்தர்களுக்கு நிவாரணம் அளிப்பார். இவர் கட்டியணைத்தால் தோஷம் நீங்கும் கன்னத்தில் அறைந்தால் செல்வம் பெருகும்.எச்சில் உமிழ்ந்தால் எல்லாம் கைகூடும்.தவம் புரிந்த குகை அருகில் சென்று என் குழந்தை கந்தன் உள்ளே தவம் செய்கிறான் என்றார்.ரமணரை உலகிற்கு காட்டியவர் சேஷாத்ரி சுவாமிகள் திருப்புகழ்தான் மந்திரம் என்று வன்னிமலை சுவாமிகளுக்கு உபதேசித்து அவர் மூலம் திருப்புகழ் தமிழெங்கும் பரவச்செய்தார்.1929ம் ஆண்டு ஜனவரி மாதம் தன் வாழ்க்கை பயணத்தை முடித்துக் கொள்ளும் நாட்களில் மகானின் முகத்தில் பிரகாசமான ஒளி மூன்று நாட்கள் சிவசக்தி நிலையில் தியானம் செய்து முக்தி அடைந்தார்.சுவமிகள் பிறக்கும்போது கிரகங்கள் இருந்த நிலையிலேயே முக்திநாளிலும் அமைந்தது.இது மகான்களுக்கே கிடைக்கூடிய மாபெரும் வாய்ப்பு. செங்கம் சாலை மலையடிவாரத்தில் சமாதி வைக்கப்பட்டார்.இன்றும் ஜீவசமாதியில் இருந்துக்கொண்டு பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.
வாழ்வில் துன்பங்களும் கஷ்டங்களும் ஏற்படுவது ஏன் தெரியுமா?

தங்கத்தை புடம் போடுவதும் வைரத்தை பட்டை தீட்டுவதும் அப்பொருள் மென்மேலும் ஜொலிப்பதற்காகத் தானே தவிர அதை அழிப்பதற்காக  அல்ல.நம் வாழ்வில் நாம் அடையும் துன்பங்களும் கஷ்டங்களும் கூட நம் மனதை பக்குவப்படுத்த கடவுள் எனும் கொல்லனால் பட்டை தீட்டப் படும் செயல் தான் என்பதை உணர்ந்து விட்டால் மனமானது சாந்தம் அடையும்.பாண்டுரங்கனின் மீது மிகுந்த பக்தி கொண்ட அடியவர் ஒருவர்  இருந்தார்.அவர் மனைவியின் பெயர் கமலாபாய்.யாசகம் கேட்டு வந்தவர்களுக்கெல்லாம் தங்கள் செல்வத்தை வாரிக் கொடுத்த அந்தக் குடும்பம் ஒரு காலகட்டத்தில் மிகுந்த வறுமையில் வாடியது.ஒருநாள் தன்னிடமிருந்த ஒரே மாற்றுத் துணியை துவைத்து காய போட்டு விட்டு குளிக்கச்  சென்றிருந்தார் கமலா பாய்.வீட்டிற்குள் பாண்டுரங்க பூஜையில் ஈடுபட்டு தன்னை மறந்து பாடிக் கொண்டிருந்தார் அவரின் கணவர்.அப்போது  வாசலில்,ஐயா... தர்மம் செய்யுங்கள்...என்ற தீனமான குரல் கேட்டு பக்தர் வெளியில் வந்து பார்த்தார்.கந்தலான புடவை அணிந்திருந்த பெண் ஒருவர் ஐயா...இந்த வீட்டில் ஏழைகளுக்குத் துணியும் தானியமும் தருவதாக கேள்விப்பட்டேன் ஏதாவது தர்மம் செய்யுங்கள்...எனக் கேட்டார்.

அந்த பெண்ணுக்கு தர்மம் செய்ய வீட்டில் ஏதாவது பொருள் இருக்கிறதா என்று பார்த்தார் எதுவும் இல்லை.மனைவி கமலாபாயின் மாற்றுப்  புடவை கொடியில் தொங்கிக் கொண்டிருந்தது.உடனே அந்த புடவையை எடுத்து அந்த ஏழைப் பெண்ணுக்கு தர்மம் செய்து விட்டார்.சிறிது நேரத்தில் குளித்து ஈரப் புடவையுடன் வந்த கமலா பாய் நடந்ததை அறிந்து இவ்வளவு நாட்களாக உங்களுக்கு எல்லா விதங்களிலும் அனுசரணை யாக இருந்த எனக்கு ஒரு மாற்றுப்புடவைக்கு கூட வழி இல்லாமல் செய்து விட்டீர்களே...என்று கோபப்பட்டாள்.பக்தரோ கோபப்படாதே  கமலா...பண்டரிநாதன் திருவடிகளை சரண் அடை பகவான் கை விட மாட்டான்...என்று ஆறுதல் கூறினார்.கமலாபாயோ பகவானாம்...  பாதமாம்...அவன் தன் திருவடிகளில் விழுந்த பக்தர்களை மிதிக்கத்தான் செய்கிறானே தவிர காப்பாற்றுவது இல்லை அவன் பாதங்களை நசுக்குகிறேன்.பகவானுக்கு பாதங்களே இருக்கக் கூடாது...என்று கோபத்துடன் ஒரு கல்லைத் தூக்கிக் கொண்டு வெறிபிடித்தவள் போல கோவிலை நோக்கி  ஓடினாள் பக்தரும் பின்னாலேயே ஓடினார்.

பாண்டுரங்கன் சன்னிதி முன் நின்று, பாண்டுரங்கா...உன் பாதங்களில் விழுபவர்களை நீ அளவுக்கு மீறி சோதனை செய்கிறாய் அதனால் உன்  பாதத்தை நசுக்கப் போகிறேன்... என்று உரத்த குரலில் கூறி கல்லை ஓங்கினாள்.அதற்குள் பின்னால் வந்த அவள் கணவர் ஓடிப் போய் பாண்டுரங்கன் திருவடிகளில் விழுந்து மறைத்துக் கொண்டார்.கமலா பாய் எறிந்த கல் குறி தவறி தரையில் விழுந்து உடைந்து சிதறியது.என்ன ஆச்சரியம்!உடைந்த கற்கள் யாவும் நவரத்தினங்களாகவும் வைடூரியங்களாகவும் சிதறின.அப்போது ருக்மணி தேவி காட்சியளித்து கமலா... உங்கள் தர்மக் குணத்தை உலகிற்கு எடுத்துக் காட்டவே ஏழைப் பெண்ணாக வந்து உன்னுடைய மாற்றுப் புடவையை தானமாக பெற்றேன். கோபத்தை தவிர்த்து உத்தமரான உன் கணவரை அனுசரித்து நட உனக்கு எல்லாவிதமான நன்மைகளும் உண்டாகும்...என்று கூறி மறைந்தாள்.தாயே...ருக்குமணி தவி..மனித ஜீவன்களுக்கு மன பக்குவமும் வைராக்கியத்தையும் ஏற்படுத்துவதற்காகத் தான் நீ சோதனை செய்கிறாய் என்பதை உணராமல் போனேனே...என்று அழுதவள் தன் கணவரான துகாராமின் கால்களில் விழுந்து வணங்கினாள்.ஆம்...கமலாபாயின் கணவரான அந்த உத்தம பக்தர் துகாராம் தான்!பாண்டுரங்கன் அடியார்களில் தலை சிறந்தவரானழ வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி இது.சிதறிக் கிடந்த நவரத்தினங்களை  தொடாமல் துகாராமுடன் வெளியேறினாள் கமலாபாய்.கடவுள் கொடுத்த வாழ்க்கையில் அவன் நம்மை ஆட்கொள்ளும் விதமாக கொடுக்கும் சாதனைகளை அவன் பாதங்களை சரணடைவதன் மூலமே வெல்ல முடியும் என்பதை விளக்கும் கதை இது.
வேதாந்த தேசிகர்

ஆன்மாக்களை உய்விக்க பகவான் பல நிலைகளை மேற்கொள்கிறார். குருவாக ஆச்சார்ய நிலையில் தோன்றி அஞ்ஞானத்தை அழித்து ஞானத்தை வளர்ப்பதும் அந்நிலைகளில் ஒன்று.அப்படிப்பட்ட ஆசார்ய நிலையில் அவதரித்து அஞ்ஞானத்தை அகற்றி ஞான விளக்கேற்றியவர் வேதாந்த தேசிகர்.தமிழகத்தின் புண்ணிய நகரான காஞ்சிபுரத்தில் அனந்த சோமயாஜிகள் தோதாத்திரி அம்மையார் தம்பதியர் வசித்து வந்தனர்.இவர்களின் மகவாக அவதரித்தவர் வேங்கடநாத சம்மா. இளமையில் தேசிகருக்கு பெற்றோர் இப்பெயரையே சூட்டினர்.இவரை திருவேங்கடத்தில் குடிகொண்டுள்ள ஸ்ரீனிவாசனின் திருமணி அம்சம் என்று போற்றுவர்.இவர் அவதரித்த தலம் தூப்பல் எனப்படும்.தூப்பல் என்றால் தூய்மையான இடம் என பொருள்படும்.காஞ்சிமாநகருக்குள் இப்பகுதி இருக்கிறது.தேசிகர் தன் இருபதாவது வயதிலேயே வேதாந்த ரகசியங்களை எல்லாம் முறைப்படி கற்றுத்தேர்ந்தார்.தனது மாமனார் கிடாம்பி அப்புள்ளாரிடம் அருளுபதேசம் பெற்று வைந்யேய மந்திரத்தை கற்றுக்கொண்டார்.பின்னர் இல்லறவாழ்வை மேற்கொண்டார். தேசிகர் நாவன்மை மிக்கவர்.இவரது நாவன்மை இவரை சிறந்த பேச்சாளராக்கியது.பாமரரும் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் ஆன்மிக சொற்பொழிவுகளை நிகழ்த்துவார். ஒருசமயம் தென் திருப்பதிகளை தரிசிக்க புறப்பட்டவர் திருவஹீந்திரம் கோயிலில் வந்து தங்கினார்.அங்கு அவர் கருடாழ்வாரின் தரிசனம் கிடைக்கப் பெற்றார்.

ஸ்ரீஹயக்ரீவர் மந்திர உபதேசம் பெற்றதன் பயனாய் காட்சி தந்து வாக்குவன்மையை வழங்கி அருளினார்.அங்கு தங்கியிருந்தபோது தன் நாவாற்றலால் சொற்பொழிவுகளையும் எழுதாற்றலால் பல நூல்களையும் இயற்றியவர்.ஒருசமயம் தேசிகர் வறுமைப்பட்ட ஏழை அந்தண பிரம்மச்சாரியிடம் கருணை கொண்டார்.ஸ்ரீ ஸ்துதி என்ற நூலை அருளிச்செய்து காஞ்சிபுரம் தேவப்பெருமாள் கோயிலில் தாயாரின் சன்னதி முன்பாக பொன்மழை பொழிவத்தது கண்டு பக்தர்கள் அதிசயித்தனர்.அந்த அந்தண பிரம்மச்சாரி தன் வறுமை நீங்கி வளம் பெற்றார்.தேசிகரின் பெருமை நாடெங்கும் பரவியது.அவரிடம் பொறாமை கொண்ட ஒருவன் இவரிடம் வந்து உமக்கு கிணறு வெட்டத் தெரியுமோ?என கேட்டான். அமைதியாக புன்முறுவல் கொண்ட தேசிகர் உடன் ஒரு கிணற்றினை உண்டாக்கி அவனது செருக்கை அடக்கினார்.இன்றளவும் அக்கிணறு உள்ளது.சிற்பி ஒருவன் இவரிடம் வந்து உமக்கு சிற்பம் வருமோ?என ஆணவத்துடன் கேட்டான்.உடன் தேசிகர் தமது உருவத்தையே விக்கிரகமாக அமைத்துக் கொடுத்தார்.அந்த விக்ரகம் தேவநாத பெருமாள் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறது.வேறொரு சிலரால் தூண்டப்பட்ட பாம்பாட்டி யொருவன் இவர் முன்னிலையில் பாம்புகளை எல்லாம் வெளியில் எடுத்து விட்டான்.பாம்பைக் கண்டதும் அவரருகே நின்ற பலரும் அலறியடித்துக் கொண்டு ஓடினர். ஆனால் தேசிகர் அமைதியாக கருட தியானம் செய்தார்.

கருடன் தோன்றி பாம்புகளை எல்லாம் பற்றிச் சென்றது.பாம்பாட்டி தேசிகரின் பாதம் பணிந்து மன்னிப்புகேட்டான். இப்படி பல அரிய அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார் தேசிகர். ராமானுஜர் அருளிய ஸ்ரீபாஷ்யத்தை முப்பது முறை பிரவசனம் செய்து திருப்தியுற்றார் தேசிகர்.ஆசுகவி, மதுரகவி சித்திரகவி வித்தாரக்கவி என்ற நால்வகைக் கவிதைகளிலும் ஒப்புயர்வு பெற்று விளங்கியவர். வடமொழி பாண்டித்யம் கொண்டவர். இவர் எண்ணற்ற நூல்களை இயற்றி அருளினார்.ஹயக்ரீவ ஸ்தோத்திர கருட பஞ்சாசதத் அச்சுத சதகம் பந்துப்பா ஊசற்பா ஏசற்பா அஷ்டபுஜான்டகம் போன்றவை சிறப்பானவை.களப்பிரர் படையெடுப்பால் தமிழகக் கோயில்கள் சூறையாடப்பட்ட நிலையில் ஸ்ரீரங்கத்தில் அந்தணர்கள் பெருமாளுக்கு பாதுகாப்பு செய்துவிட்டு பல திசைகளுக்கும் சென்றுவிட்டனர். அந்த சமயம் பெருமாளுக்கு எவ்வித சேதமும் வந்துவிடக்கூடாது என்று தேசிகரால் அபிதீஸ்தவம் என்ற நூல் அருளிச் செய்யப்பட்டது.கோடான கோடி விண்மீன்கள் விண்ணில் தோன்றினாலும் பளிச்சென்று கண்ணிற்கு புலப்படுவது ஒரு சிலவே. அதைப்போல் எத்தனையோ மகான்களின் மத்தியில் ஒளிவீசிக் கொண்டிருப்பவர் வேதாந்த தேசிகர் என்றால் அது மிகையாகாது