செவ்வாய், 26 நவம்பர், 2019

அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்

மூலவர் :  மகாலிங்கேஸ்வரர்
அம்மன் :  மரகதவல்லி, மாணிக்கவல்லி
பழமை :  2000 வருடங்களுக்கு முன்
ஊர் :  விராலிப்பட்டி, தவசி மேடை
மாவட்டம் :  திண்டுக்கல்
மாநிலம் :  தமிழ்நாடு

திருவிழா:இத்தலத்தில் மாசி மக திருவிழா விசேஷமாக நடக்கும்.  

சிறப்பு:சிவராத்திரியை ஒட்டி 30 நாட்களும் சூரியஒளி மூலவர் மீது படும். காலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவன் மீதும், மாலையில் பைரவர் மீதும் விழுவது சிறப்பு. மகம் நட்சத்திரத்திற்குரிய சிறப்பான ஆலயம் இது. மக நட்சத்திரம் தவிர மற்ற 26 நட்சத்திரக்காரர்களும் வணங்கி வழிபட்டு சகல சவுபாக்கியங்களையும் பெறக்கூடிய சிறப்பு பெற்றது. பொதுவாக, ஒரு சன்னதிக்குள் ஒரு அம்பிகைதான் இருப்பாள். ஆனால், இங்கு ஒரே சன்னதிக்குள் மாணிக்கவள்ளி, மரகதவள்ளி என்ற இரண்டு அம்பிகைகள் இச்சா சக்தியாகவும், கிரியா சக்தியாகவும் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள சிவலிங்கம் வசிஷ்ட மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பரத்வாஜ மகரிஷியால் பூஜிக்கப்பட்டது. பரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தவர்கள் அவசியம் வழிபட வேண்டிய தலம் இது. அகத்தியர் முதல் பல ஆயிரம் சித்தர்கள், மகரிஷிகள், மற்றும் முனிவர்களும் தவமியற்றி வழிபட்ட லிங்கம். ராமர் தன் பரிவாரங்களுடன் பரத்வாஜ மகரிஷியை தரிசித்து விருந்துண்ட தலம். இங்குள்ள பைரவர் ஈசனுக்கு நேர் எதிரே ஆதிபைரவராக அருள்பாலிக்கும் சிறப்புப் பெற்ற ஒரே ஸ்தலம்.  
      
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். 
    
முகவரி:அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் விராலிப்பட்டி, ஒடுக்கம் தவசி மேடை- 624 304 சாணார்பட்டி வழி, நத்தம் வழி, திண்டுக்கல் மாவட்டம்.போன்:+91 95782 11659 
     
தகவல்:மகம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: ஆராய்ச்சி மனப்பான்மை கொண்ட இவர்கள், கல்வி பயில்வதில் ஆர்வம் கொண்டிருப்பர். தருமம் செய்வதில் வல்லவர்கள். மனத்தூய்மை, நேர்மை மிக்கவர்கள். பிறரை கவுரவமாக நடத்துவர். மதுரமான மொழி பேசுவதோடு பேச்சு சாதுர்யமும் பெற்றிருப்பர். பெரும்பாலும் தலைமைப்பதவியில் தான் இருப்பர்.

கோயில் முகப்பில் இரண்டு பீடங்கள் உள்ளன. சிவனை தரிசிக்க வரும் அடியார்களின் பாதம், தன் மீது படவேண்டும் என்பதற்காக பரத்வாஜர் இந்த நிலையில் இங்கு இருப்பதாகச் சொல்கிறார்கள்.  
      
பிரார்த்தனை:மகம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். மாசி மகத்தன்று சிவன், அம்பாளுக்கு விசேஷ பூஜை நடக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இந்நாளில் வேண்டிக் கொள்வது விசேஷம். நோய் நிவர்த்தி பெற, சிவன் சன்னதியில் நெய்தீபம் ஏற்றி வைத்து வழிபடுகிறார்கள். வீடுகளில் வாஸ்து குறைபாடு உள்ளவர்கள் அந்தக் குறை நீங்கவும் சிறப்பு பூஜை செய்கிறார்கள்.

பெருமை:மகம் நட்சத்திர கோயில்: பரத்வாஜர் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதால், மாதம்தோறும் மகம் நட்சத்திரத்தில் இங்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

இரண்டு அம்பிகையர்: அளவில் சிறிய இக்கோயிலில், மகாலிங்கேஸ்வரர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இவருக்கு வலது பக்கத்தில் உள்ள சன்னதியில் மரகதவல்லி, மாணிக்கவல்லி என்ற இரண்டு அம்பிகையர் காட்சி தருகின்றனர். மதுரையில் அருளும் மீனாட்சியம்மனின் பெயரால் இவர்களுக்கு இப்பெயர் சூட்டப்பட்டது. கிழக்கு நோக்கிய இந்த சன்னதிக்குள், அம்பாள்கள் இருவரும் தெற்கு நோக்கி மதில் ஓரத்தில் உள்ளனர். சன்னதிக்குள் எட்டிப்பார்த்துதான் இவர்களைத் தரிசிக்க முடியும். இத்தகைய அமைப்பிலான சன்னதியைக் காண்பது அரிது. இச்சா சக்தி, கிரியா சக்தியாக அருள்பாலிக்கும் இந்த அம்பிகையரை வழிபட்டால், ஞான சக்தியான இறைவனை எளிதாக அடையலாம் என்பதை உணர்த்தும் வகையில் இவ்வாறு அமைத்துள்ளனர். பரத்வாஜர் ஒரு தவமேடையில், யோகத்தில் மனதை ஒடுக்கி சிவனை வழிபட்டார். இதனால் இத்தலத்திற்கு, ஒடுக்கம் தவசி மேடை என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் எப்போதும் யோகிகளும், தபஸ்விகளும் சிவனை அரூபமாக பூஜை செய்து வருகின்றனர். பெண்களால் இவர்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதால் தான், அம்மன் வெளியே தெரியாமல் சுவரை ஒட்டி அருள்பாலிப்பதாக தல வரலாறு கூறுகிறது.

ஆதி பைரவர்: சிவாலயங்களில் ஈசான்ய (வடகிழக்கு) திசையில் காட்சி தரும் பைரவர், இங்கு சிவனுக்கு எதிரில் காட்சியளிக்கிறார். இங்கு அருளும் மகாலிங்கேஸ்வரர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்பதால், இவரது உக்ரம் பக்தர்களைத் தாக்காமல் இருக்க எதிரில் பைரவரை பிரதிஷ்டை செய்துள்ளனர். இவரை ஆதி பைரவர் என்கின்றனர். பைரவருக்குப் பின்புறம் தலைக்கு மேலே சிறிய துளை ஒன்றுள்ளது. இங்கு வரும் பக்தர்கள் முதலில் இந்த துளை வழியாக, சிவனை தரிசித்து விட்டு, பின்பு பைரவரை வணங்கி, அதன்பின்பு கோயிலுக்குள் செல்கிறார்கள். சிவராத்திரியை ஒட்டி 30 நாட்களும் சூரியஒளி மூலவர் மீது படும். காலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவன் மீதும், மாலையில் பைரவர் மீதும் விழுவது சிறப்பு.  
      
ஸ்தல வரலாறு:சீதையை மீட்டு அயோத்தி திரும்பிய ராமர், பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தில் தங்கி அவரது உபசரிப்பை ஏற்றார். அவர்களுடன் ஆஞ்சநேயரும் வந்திருந்தார். தனக்கு உதவியஆஞ்சநேயரை கவுரவிக்கும் விதமாக, தனக்கு உணவு பரிமாறிய இலையின் நடுவில் ஒரு கோடு போட்டார். ஒரு பக்கத்திலிருந்த உணவை அவரை உண்ணும்படி கூறினார். (இந்நிகழ்விற்குப் பிறகுதான் வாழை இலையின் நடுவில் கோடு வந்ததாக கர்ண பரம்பரைக் கதை ஒன்று கூறுகிறது) இத்தகு சிறப்பு மிக்க பரத்வாஜர், இத்தலத்து மகாலிங்கேஸ்வரரை வழிபட்டதாக தல புராணம் கூறுகிறது. மதுரை மீனாட்சியை பிரதிஷ்டை செய்த ஐந்து முனிவர்களில் இவரும் ஒருவர்.

சிறப்பம்சம்: பரத்வாஜர் இந்தக்கோயிலுக்கு வந்து, ஒரு தவமேடை அமைத்தார். அதில் அமர்ந்து யோகத்தில் மனதை ஒடுக்கி சிவனை வழிபட்டார். இதனால் இத்தலத்திற்கு, ஒடுக்கம் தவசி மேடை என்ற பெயர் ஏற்பட்டது. கோயில் முகப்பில் இரண்டு பீடங்கள் உள்ளன. சிவனை தரிசிக்க வரும் அடியார்களின் பாதம் தன் மீது படவேண்டும் என்பதற்காக பரத்வாஜர் இந்த பீடங்களின் வடிவில் இருப்பதாகச் சொல்கிறார்கள். பரத்வாஜர் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதால், மாதம்தோறும் மகம் நட்சத்திரத்தில் சிறப்பு பூஜை நடக்கிறது. இந்த பூஜையில் பல ரிஷிகளும், மகான்களும் அரூப வடிவில் கலந்து கொள்வதாக ஐதீகம். மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம் என்பது பழமொழி. மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரதாவாஜரை குருவாகக் கொண்டு மகம், பஞ்சமி, சஷ்டி, ஏகாதசி, துவாதசி, பிரதோஷம், மாத சிவராத்திரி நாட்களில் இத்தல இறைவனுக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டால் வாழ்வில் நல்ல நிலையை அடைவார்கள் என்பது நம்பிக்கை.  
பூணுல் ஏன் இடது தோளில் அணிகிறோம். ? பூணுல் ஏன் மூன்று பிரியாக இருக்கிறது ?

இடது தோளில பூணுல்அணியவேண்டும் என்பது வேதத்தின் கட்டளை. எப்பொதும் பூணுல் இடது தோளின் இருக்க வேண்டும். இடது தோளின் பூணுல் இருக்கும்போது அதற்கு உபவீதி என்று சிறப்புப் பெயர்.

உபவீதியாக எப்பொதும் இருக்க வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் (ஸதோப வீதினா பாவ்யம்) சொல்கிறது. தேவர்களுக்கு பணிவிடை செய்யும் வேளையில் பூணுல் இடதுதோளில் இருக்க வேண்டும். அதாவது உபவீதியாக இருக்க வேண்டும.

நம் முன்னோர்களை ஆராதிக்கும்போது பூணுல் வலது தோளில் இருக்க வேண்டும். ரிஷிகளை வழிபடும் வேளையில் இரு தோளிலுமாக தொங்க வேண்டும். அதாவது மாலை போல அணிய வேண்டும். முத்தொழிலின் வெளிப்பாடு முப்பிரி.

மூன்று ஆச்ரமங்களுக்கும் அது தேவை. காலம் மூன்று. முர்த்திகள் மூன்று. வேதம் மூன்று. பூணுலின் பிரிவுகளும் மூன்று. மூன்று எண்ணிக்கை முற்று பெற்றதாக கூறும். ஏலத்தில் மூன்று முறை அழைப்பார்கள். நீதி மன்றத்திலும் மூன்று முறை அழைப்பார்கள். அது முற்று பெற்றதாக கருதுகிறோம்.

பூணுல் பரமாத்மா வடிவம் (யஞஜாக்ய பரமாத்மாய). பரமாத்மா மூன்று கால்களோடு எழும்பினார் (த்ரீபாத் ஊர்தவ) மூன்று அடி அளந்தவர். அப்போது முற்றுப் பெற்றது. தேவர்கள், ரிஷிகள், முன்னோர்கள் இம்மூவருக்கும் தினமும் பணிவிடை செய்ய வேண்டும். அதற்கு ஆதாரமான பூணுலும் மூன்று பிரியாக இருப்பது பொருந்தும்.

அவன் ஆராதிக்கும் காயத்ரீ மூன்றடிகளோடு விளங்குபவள். அவளை மூன்று வேளையும் வழிபட வேண்டும். அதற்கு காரணமாக பூணுலும் மூன்று பிரியாக வந்தது சிறப்பு.சைவநீதி விளங்குக உலகமெல்லாம்
அயோத்தி அரசன் ராமபிரான், மக்களின் மனநிலையை அறிய எண்ணினார். சாதாரண மனிதனின் கோலத்தில் தம்பி லட்சுமணனுடன் சென்றார். ஆற்றங்கரையில் அதுவரை பார்த்திராத துறவி ஒருவரைப் பார்த்தார். ஆச்சார சீலராகக் காட்சி தந்தார் அவர்.ஆற்றில் மூழ்கி தனது அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, பிறகு ஜபம் செய்யத் தொடங்கினார் துறவி. சிறிது நேரத்தில், ஹோமம் செய்வதற்கான சமித்துகளை எடுத்துக் கொண்டு அமர்ந்தார். சரி இவர் வேள்விதான் செய்யப் போகிறார் என்று எண்ணி, ஓர் ஓரத்தில் அமர்ந்து அவர் செய்வதை கவனித்தார் ராமபிரான்.

தண்டனை எதற்குதுறவியோ, கையில் வைத்திருந்த துணி மூட்டையில் இருந்து, மாவு எடுத்து பாத்திரத்தில் இட்டுப் பிசைந்து, சமித்துகளில் தீ மூட்டி, ஆறு ரொட்டிகளைச் சுட்டார். இரண்டில் தேனும், இரண்டில் நெய்யும், மீதி இரண்டில் ஊறுகாயும் தடவி வைத்தார். பிறகு மீண்டும் ஜபம் செய்தார். சிறிது நேரம் சென்றது. கண்திறந்த துறவி, ரொட்டிகளை எடுத்து வைத்து, சாப்பிட அமர்ந்தார்.

அந்த நேரம், பசியால் வாடிய பெரியவர் ஒருவர் அவ்வழியே வந்தார். பார்க்க பரிதாபமாக இருக்கவே, துறவி அவரை அழைத்து, ஊறுகாய் தடவிய ரொட்டிகளைக் கொடுத்து உண்ணச் சொன்னார். மீண்டும் கண் மூடி தியானத்தில் ஆழ்ந்தார்.
திரும்பவும் கண்விழித்து எழுந்து, தேன் தடவிய இரண்டு ரொட்டிகளை எடுத்துக் கொண்டு சாப்பிட அமர்ந்தார். அந்த நேரம் வாடிய நிலையில் ஒரு சிறுமி அவ்வழியே வந்தாள். அவளைப் பார்த்து இரக்கப்பட்ட துறவி, அந்த ரொட்டியை அவளுக்குக் கொடுத்து சாப்பிடச் சொன்னார். பிறகு மீதி இருந்த நெய் தடவிய ரொட்டியை எடுத்துக் கொண்டு ஆற்றங்கரைக்குச் சென்றார். ரொட்டிகளை சிறிதுசிறிதாகப் பிய்த்து, மீன்களுக்குப் போட்டார். பிறகு திரும்பி வந்து, சமித்துகள் எரிந்த சாம்பலை எடுத்து பாத்திரத்தில் வைத்து, ஆற்று நீரை அதில் சேர்த்து, சாம்பலைக் கரைத்து குடித்துவிட்டு அமர்ந்தார்.
துறவியின் இந்த செய்கை, ராமபிரானுக்கு ஆச்சரியத்தை அளித்தது. நேரே துறவியிடம் சென்று அவர் செய்கைக்கான காரணத்தைக் கேட்டார்.

துறவி சொன்னார்: ”ஸ்நானம் செய்து முடித்து ஜபத்தில் அமர்ந்தேன். அப்போது, பையில் இருந்த மாவுதான் நினைவுக்கு வந்தது. அந்த மாவினை ரொட்டி சுட்டு, தேனும் நெய்யும் கலந்து சாப்பிட வேண்டும் என்று மனது ஆசைப்பட்டது. அந்த மனதை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக ரொட்டி சுட்டேன்…”

”ரொட்டி சுட்டீர்கள் சரி… ஆனால் நீங்கள் ஏன் அவற்றை உண்ணவில்லை ஸ்வாமி?” – கேட்டார் ராமபிரான்.”துறவி என்பவன் புலன்களை அடக்க வேண்டும். எவ்வளவோ முயற்சி செய்து அடக்கினேன். ஆனால், மனது மட்டும் அவ்வப்போது அடம் பிடிக்கிறது. அதன் போக்கில் விட்டு, பிறகுதான் அதற்கு தண்டனை தரவேண்டும். சாம்பலாகப் போகும் இந்த உடலுக்குள் இருந்து கொண்டு, என்னமாய்ப் படுத்துகிறது இந்த மனது?! அதனால், இந்தச் சாம்பல்தான் இன்று ஆகாரம் என்று மனதுக்குக் கட்டளையிட்டு அதையே சாப்பிட்டேன். இதுதான் அடங்க மறுக்கும் மனத்துக்கு அடியேன் அளிக்கும் தண்டனை!” என்றார் மெதுவாக!
தேவியின் ஐம்பத்தொரு (51) சக்தி பீடங்கள்:

1 - காஞ்சிபுரம் - இது ஸ்ரீ சக்கரபீடம். தேவியின் நாபி இங்கு விழுந்ததாகக் கூறுவர்.

2 - மதுரை - இது மந்த்ரிணி பீடம்.

3 - திருஆனைக்கா - இது வராகி பீடம்.

4 - திருக்குற்றாலம் - இது பராசக்தி பீடம்.

5 - திருவாரூர் - இது கமலை பீடம், காமகலா பீடம் என்றும் கூறுவர்.

6 - கன்னியாகுமரி - இது தேவியின் பிருஷ்டபாகம் விழுந்த இடம்.

7 - அம்பத்தூர் - சென்னைக்கு அருகிலுள்ள வைணவி ஆலயம், சக்திபீட வரிசையில் ஐம்பத்தோரூர் என்பதே அம்பத்தூர் என மருவியதாகக் கூறுவர்.

8 - கோகர்ணம் - வலது காது விழுந்த இடம். பரசுராம ஷேத்திரம். தேவியின் திருநாமம் பத்ரகர்ணிகை.

9 - ஸ்ரீ சைலம் - இடது காது விழுந்த இடம். சிறந்த சிவத்தலம். அம்பிகையின் திருநாமம் பிரமராம்பாள். மாதவி பீடம்.

10 - பூரி - நாபி விழுந்த இடம். உத்கலம் எனப்படும் ஒரிசா மாநிலத்தில் உள்ளது. பைரவ பீடம். தேவியின் திருநாமம் விமலை.

11 - சிருங்கேரி - மைசூர் மாநிலத்தில் உள்ளது. தேவி சாரதையாகத் திகழ்கின்றாள்.

12 - கோலாப்பூர் - கண்கள் விழுந்த இடம். அன்னை மகா இலக்குமியாக விளங்குகின்றாள்.

13 - அரசூர் - தனம் விழுந்த இடம். ஆபூமலைக்கு அருகில் உள்ளது. இங்கு சிலா வடிவில் இல்லாமல் அம்பிகை யந்திர வடிவில் அம்பிகா என்ற திருநாமத்துடன் விளங்குகின்றாள்.

14 - ஜலந்தரா - தனம் விழுந்த இடம். தேவியின் திருநாமம் திரிபுரமாலினி.

15 - துவாராவாட் - குஜராத் மாநிலத்தில் உள்ளது.

16 - பிரபாசா - திருவயிறு விழுந்த இடம். இதனை சோமநாதத் தலம் என்றும் கூறுவர்.

17 - பராகத் - இக்குன்றின் அமைப்பே காளிகா யந்திர உருவில் உள்ளது.

18 - சிம்லா - தேவியின் திருநாமம் சியாமளா. இதுவே திரிந்து சிம்லா ஆயிற்று.

19 - மானசரோவர் - இது ஒரு தடாகம். தலை விழுந்த இடம். இமயத்தில் உள்ளது. அம்பிகை தாட்சாயணி. குமுதா பீடம்.

20 - காஷ்மீரம் - கழுத்து விழுந்த இடம். அம்பிகையின் திருநாமம் மகாமாயை.

21 - நேபாளம் - முழங்கால் விழுந்த இடம். இங்குள்ள அஷ்ட மாத்ருகைகளின் ஆலயம் புகழ்மிக்கது.

22 - ஜுவாலாமுகி - நாக்கு விழுந்த இடம்.

23 - சுகந்தா - மூக்கு விழுந்த இடம். இமயமலைச் சரிவில் உள்ள தலம்.

24 - வாரணாடி ( காசி ) - காதுக் குண்டலம் விழுந்த இடம். இது மணிகர்ணிகை பீடம். தேவியின் திருநாமம் விசாலாஷி.

25 - நைமிசாரண்யம் - அம்பிகை இலிங்க தாரிணியாகத் திகழ்கின்றாள்.

26 - குருஷேத்திரம் - முழங்கை விழுந்த இடம்.

27 - பிரயாகை - கைவிரல்கள் விழுந்த இடம்.

28 - உஜ்ஜயினி - இங்கு தேவி மங்கள சண்டிகையாக விளங்குகின்றாள். மகாகவி காளிதாசனுக்கு அருள் நல்கியவள்.

29 - பிருந்தாவனம் - கூந்தல் விழுந்த இடம். இராதா பீடம்.

30 - அத்தினாபுரம் - இங்கு அம்பிகையின் திருநாமம் ஜெயந்தி. ஜயந்தி பீடம்.

31 - கன்னியாகுப்ஜம் - கௌரி பீடம். அம்பிகையின் திருநாமம் கௌரி.

32 - புஷ்கரம் - அன்னையின் திருநாமம் புருஹுதை. புருஹுதா பீடம்.

33 - கேதாரம் - சன்மார்க்க தாயினி பீடம்.

34 - பத்ரை - பத்ரேஸ்வரி பீடம்.

35 - உருத்திர கோடி - உருத்ராணி பீடம்.

36 - சாளக்ராமம் - மஹாதேவி பீடம்.

37 - மலயாசலம் - தேவியின் திருநாமம் கல்யாணி. ரம்பா பீடம்.

38 - தேவிகா தடம் - நந்தினி பீடம்.

39 - சஹஸ்திராஷம் - உத்பலாஷி பீடம்.

40 - வராக சைலம் - ஜயா பீடம்.

41 - இரண்யாஷம் - மகோத்பலா பீடம்.

42 - திரிகூடபர்வதம் - உருத்திர சுந்தரீ பீடம்.

43 - சஃயபர்வதம் - ஏகவீரா பீடம்.

44 - வைத்தியநாதம் - ஆரோக்யா பீடம்.

45 - மகாகாளம் - மஹேஸ்வரி பீடம்.

46 - விந்தியபர்வதம் - நிதம்பை பீடம்.

47 - வேதமுகம் - காயத்ரீ பீடம்.

48 - ஹேமகூடம் - மன்மதா பீடம்.

49 - அமர கண்டம் - சண்டிகா பீடம்.

50 - கல்கத்தா - கால் விரல்கள் விழுந்த இடம். அன்னை காளிகா தேவியாக அருள் பாலிக்கின்றாள்.

51 - காமரூபம் - உபஸ்தம் விழுந்த இடம். இத்தலம் அஸ்ஸாமில் உள்ளது. காமாக்யா என்பது அம்பிகையின் திருநாமம்
சண்டிகேஸ்வரர் சன்னதியில் கை தட்டி வணங்குவது ஏன்?

பெரும்பாலான சிவன் கோயில்களில் சிவனை வணங்கி விட்டு பிரகாரம் சுற்றி வரும் போது துர்க்கை சன்னதிக்கு அருகில் சண்டிகேஸ்வரர் சன்னதி இருக்கும். இவரை வணங்கும் பக்தர்கள் சொடக்கு போட்டோ அல்லது பலமாக கைதட்டியோ வணங்குவார்கள். ஆனால் அப்படி வணங்க கூடாது. சண்டிகேஸ்வரர் எப்போதும் தியானத்தில் இருப்பவர். சிவனிடமே ஈஸ்வர பட்டம் பெற்றவர். இவர்  கோயிலுக்கு வரும் பக்தர்கள் என்னென்ன கோரிக்கை வைத்தார்கள் என சிவனிடம் கூறுவதாக ஐதீகம். எனவே சிவனை வணங்கிவிட்டு இவரை வணங்கும் போது மிக மெதுவாக மூன்று முறை கை காண்பித்தால் போதும் வந்தேன்...வந்தேன்...வந்தேன்... சிவனின் தரிசனம் கண்டேன்... கண்டேன்.. கண்டேன்...என கூற வேண்டும். அப்படி வணங்கினால் சண்டிகேஸ்வரர் நாம் வந்திருப்பதை அறிந்து நமக்காக சிவனிடம் சிபாரிசு செய்வார். உடனே நமது கோரிக்கை நிறைவேறும் என்பது நம்பிக்கை. மேலும் சிவன் சொத்து குல நாசம் என்று சொல்வதுண்டு. சிவன் கோவிலுக்கு வந்த நாம் எதையும் எடுத்து செல்லவில்லை என்று இவரிடம் நம் இரு கைகளையும் கான்பித்தால் போதும். சண்டிகேஸ்வரர் எப்போதும் தபகோலத்திலே இருப்பார் ஆகையால் அவரிடம் போய் கை தட்டினால் அவரின் தபஸ் கலைவதற்கு நாம் காரணமாக இருக்ககூடாது.

கோயில்களில் கொடி மரம் அமைப்பது ஏன்?

தீய சக்திகளை அகற்றுவதன் பொருட்டும் இறை ஆற்றலை அதிகரித்தல் பொருட்டும் கோயிலையும் பக்தர்களையும் பாதுகாத்தற் பொருட்டும் கோயில்களையும் பாதுகாத்தற் பொருட்டும் ஆலயங்களுக்கு முன்பாகக் கொடிமரம் நிறுவப்படுகிறது. கொடி மரத்தின் தண்டு நல்ல வைரம் பாய்ந்ததாக இருக்க வேண்டும். சந்தனம், தேவதாரு, செண்பகம், வில்வம், மகிழம் முதலிய மரங்களில் கொடிமரம் செய்வது உத்தமம் ஆகும். பலா, மா ஆகிய மரங்களில் கொடி மரம் அமைப்பது குறைந்த நன்மையைத் தருவதால் மத்திமம் ஆகும். கடுகு, பனை, தெங்கு முதலிய மரங்களில் கொடி மரம் அமைப்பது மிக மிகக் குறைந்த நன்மை அளிக்குமாதலால் இவை அதமம் ஆகும். கொடி மரம் முப்பத்து மூன்று கணுக்கள் உள்ளதான அமைப்பு மிகவும் சிறப்பாகும். கொடிக் கம்பத்தின் ஐந்தில் ஒரு பாகம் பூமியில் இருக்கும்படி நடுவர். இதன் அடியிலிருந்து உச்சி வரை ஏழு பாகமாக்கி சதுர கோண விருத்த வடிவங்களில் அமைப்பர். கொடிமரத்தின் அடிப்பாகம் சதுரமாக இருக்கும். இது இறைவனின் படைப்புத் தொழிலை உணர்த்துகிறது. இது பிரம்ம பாகமாகும். அதன் மேலுள்ள பாகம் எண் கோணமாயிருக்கும். இது இறைவனின் காத்தல் தொழிலைக் குறிக்கும். இது விஷ்ணு பாகமாகும். அதற்கு மேல் உருண்ட நீண்ட பாகம் உருத்திரனைக் குறிக்கும். இது இறைவனின் சம்ஹாரத் தொழிலைக் குறிக்கும். ஆகவே கொடி மரம் என்பது மும்மூர்த்திகளின் முத்தொழில்களையும் உணர்த்துவதாக அமைக்கப்பெற்ற அமைக்கப்பெற்றது. ஆலயங்களில் கொடியேற்றுவது என்பது ஆகம விதிப்படி நடைபெறுவதாகும். கொடி மரம் சிவ பெருமான் கொடிக்கயிறு திருவருட்சக்தி கொடித் துணி ஆன்மா தர்ப்பைக் கயிறு பாசம் எனப்படும். கொடியேற்றும் நிகழ்ச்சியானது மும்மல வயப்படும். ஆன்மசம் அற்று சிவஞான வடிவமாகிய பதியின் திருவடியை அடைதல் என்னும் தத்துவத்தை உணர்த்துவதாகும். கொடி மரத்தின் பீடம் பத்ரபீடம் எனப்படும். அறுமாறு மனத்தை பலியிட வேண்டும் என்பதற்காக ஆன்மாவைப் பாசக்கயிறு சுற்றியுள்ளதை ஆன்மாவைப் பாசக்கயிறு சுற்றியுள்ளதை நினைவூட்டும் வகையில் கொடி மரத்தில் கயிறு சுற்றியிருக்கும். திருவிழாவில் முதல் நாள் கொடியேற்றுவதன் நோக்கமாவது திருவிழாவிற்கு வரும் பக்தர்களை உயர் பதமடையச் செய்வதற்காக இறைவன் இவ்விழா நாட்களில் எழுந்தருளி அருள் பாலிக்கப்போகிறார் என்பதே. இறைவனை அடைந்தவர் அழிவற்ற ஆனந்த வெள்ளத்தில் நிலைத்திருப்பர் என நினைத்து கொடி மரத்தை சூக்ஷம லிங்கமாக எண்ணி வணங்க வேண்டும். சிவன் கோயிலில் கருடனையும் அம்பாள் கோயிலில் சிங்கத்தையும், முருகன் கோயிலில் மயிலையும், விநாயகர் கோயிலில் மூஞ்சுறுவையும், சாஸ்தா கோயிலில் குதிரையையும் கொடி மரத்தின் மேல் பகுதியில் அமைத்திருப்பார்கள். துவஜஸ்தம்பம் எனப்படும் கொடி மரத்தில் திருவிழாவின் முதல் நாள் கொடியேற்றுவது துவஜாரோகணம் என்றும் விழா முடிந்து கடைசி நாள் கொடியிறக்குவது துவஜாவரோகணம் என்றும் அழைக்கப்படுகிறது. கொடி மரத்தின் முன் ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்தல் வேண்டும். கொடி மரத்தைக் காக்கும் பொருட்டு பித்தளை செம்பு இவற்றாலான தகடுகள் பொருத்தப்பட்டு இயற்கை மாற்றங்களிலிருந்து கொடி மரம் காக்கப்படுகிறது
ஸ்வாமியே சரணம் ஐயப்பா

ஐயப்பனின் வரலாறு

மகிஷாசுரனின் தங்கையான அரக்கி மகிஷி. தேவலோகத்தையும் பூலோகத்தையும் ஆட்டி படைத்து கொண்டிருந்தாள் அத்துடன் தன் சகோதரன் மகிஷாசுரனின் அழிவுக்கு தேவர்களே காரணம் என கருதி அவர்களை பழிவாங்கவும் மகிஷி முடிவு செய்தாள். அதற்கான சக்தியை பெற மகிஷி பிரம்மாவை நோக்கி தவம் புரிந்தாள். பிரம்மா இவள் முன் தோன்றி வேண்டும் வரம் கேள் என்றார். சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் பிறந்த புத்திரனால் அல்லாது வேறு யாராலும் எனக்கு மரணம் நேரிடக்கூடாது என மகிஷி வரம் கேட்டாள். கேட்ட வரம் கிடைத்தது. வரம் பெற்ற மகிஷி தேவலோகத்தில் தேவர்களையும், பூலோகத்தில் மக்களையும் கடும் கொடுமைப்படுத்தி வந்தாள். தேவர்கள் துயரம் தாங்காமல் பரமசிவனிடத்தில் முறை இட்டனர். விஷ்ணுவின் அம்சமான மோகினி மூலம் சைவ வைஷ்ணவ ஜோதியாக ஐயப்பன் பூலோகத்தில் அவதரித்தார். பம்பாதீரத்தில் ஒரு குழந்தையாய் ஐயன் அழும் சமயத்தில் பாண்டிய மன்னனும், பந்தளத்து அரசனுமான ராஜசேகரன் குழந்தை இல்லாத தனக்கு பகவானே அளித்ததாக எண்ணி அந்தக் குழந்தையை பந்தளம் கொண்டு வந்து ராணியிடம் கொடுத்து மகிழ்வித்தார். கழுத்தில் மணி இருந்தால் மணிகண்டன் என்றும் ஐயப்பன் என்றும் பெயர் சூட்டினார். பகவான் வருகையால் ராணியும் கருவுற்றாள்.

எல்லா லட்சணங்களுடனும் கூடிய பாலகனும் பிறந்தான். அவனுக்கு ராஜராஜன் என்று பெயர் சூட்டினர். மணிகண்டனின் வருகையால் தான் தனக்கு எல்லா நலன்களும் ஏற்படுகிறது என்பதை புரிந்து கொண்ட ராஜசேகரன் மணிகண்டனுக்கு பட்டாபிஷேகம் செய்வதற்கு ஏற்பாடு செய்தார். இதை உணர்ந்த மந்திரி மணிகண்டன் ராஜாவானால் தனக்குள்ள செல்வாக்கும் வசதிகளும் போய் விடும் என்று எண்ணி மணிகண்டனையே ஒழிக்கப்பார்க்கிறான். ஆனால் ஒன்றும் பலிக்கவில்லை. பின் தனது சூழ்ச்சியால் புலிப்பால் கொண்டு வந்தால் தான் மகாராணிக்கு வந்துள்ள நோய் குணமாகும் என்று அரண்மனை வைத்தியர்களைக் கொண்டுச் சொல்லச் செய்கிறான். இது சூழ்ச்சி என்று தெரிந்த போதிலும் மணிகண்டன் புலிப்பால் கொண்டு வர காட்டுக்குச் செல்கிறார். ஐயனின் வரவிற்காகக் காத்திருந்த தேவர்கள் பகவானை பொன்னம்பல மேட்டில் பூஜை செய்து மகிஷியினால் படும் துயரத்தைக் கூறினர். மணிகண்டன் தேவலோகம் சென்று மகிஷியை வென்று பூமிக்குத் தள்ள மகிஷி அழுதா நதிக்கரையில் விழுந்தாள்.

ஐயன் அவள் மேல் நர்த்தனமாடி மகிஷியை உயிரிழக்க செய்தார். மகிஷி மீண்டும் சாப விமோசனம் பெற்று ஐயனை அடையும் ஆவலைத் தெரிவித்தாள். ஆனால் தான் பிரம்மச்சர்ய நிஷ்டையுள்ளவனானதால் அது சாத்தியமாகாது என்றும் தான் இருக்கும் இடத்தின் இடப்பக்கத்தில் மாளிகைப்புரத்தம்மா என்ற பெயருடன் அவர் விளங்கி வர ஐயன் அருள் செய்தார். மகிஷியின் கொடுமை நீங்கியதால் சந்தோஷமடைந்த தேவர்கள் மணிகண்டனை பலவிதமாக துதித்து பூஜித்தனர். பின் யாவரும் புலியாக மாறி ஐயனின் பணிகளை நிறைவேற்றுவதற்காகப் பந்தளம் சென்றனர். புலிக்கூட்டம் வருவதை கண்டு மக்கள் பீதியடைந்தனர். ஐயப்பனின் சக்தியும் பெருமையும் உணர்ந்து மந்திரியும், ராணியும் மணிகண்டனிடம் மன்னிப்பு கேட்டனர். மணிகண்டனும் மன்னிப்பதற்கு எதுவுமில்லை. எல்லாம் லீலைகள் படி நடந்துள்ளன. நான் பூமியில எதற்காக பிறந்தேனோ அந்த வேலை முடிந்து விட்டது. இனி நான் தேவலோகம் செல்கிறேன் என்றான். மன்னன் பகவானே தாங்கள் எங்களுடன் இருந்ததன் அடையாளமாக உங்களுக்கு ஒரு கோயில் கட்ட நினைக்கிறோம். அதை எங்கு கட்ட வேண்டும் என்று சொல்லுங்கள் என்றான். மணிகண்டன் ஒரு அம்பை எடுத்து எய்து இந்த அம்பு எங்கு போய் விழுகிறதோ அங்கு கோயில் எழுப்புங்கள் என்றான். அந்த அம்பு சபரிமலையில் விழுந்தது. அங்கு 18 படிகளுடன் கிழக்கே நோக்கி தனக்கும் பக்கத்தில் மாளிகைப்புறத்தம்மனுக்கும் கோயில் கட்டும்படி கூறிவிட்டு மணிகண்டனாகிய ஐயப்பன் தேவலோகம் சென்றார்.

மணிகண்டன் கட்டளைப்படி அகத்திய முனிவரின் ஆலோசனையுடன் மன்னர் ஊண், உறக்கமின்றி தானே மேற் பார்வை செய்து சபரிமலையில் பதினெட்டு படியோடு கூடிய அழகிய கோயிலை கட்டினார். ஆண்டு தோறும் லட்சோப லட்சம் மக்கள் ஜாதி, மத பேதமின்றி மாலை அணிந்து 48 நாட்கள் கடும் விரதம் அனுசரித்து சபரிமலை வந்து புனித பதினெட்டுப்படி ஏறி ஐயப்பன் அருள் பெற்று வருகின்றனர். ஆண்டு தோறும் மகர சங்கராந்தி தினத்தன்று ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சியளித்து அருள்பாலிக்கிறார்.
________________________________________________________________________________
ராமானுஜர் பகுதி-1

சற்றேறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீபெரும்புதூர் கிராமமே மகிழ்ச்சியில் மூழ்கிக்கிடந்தது. அவ்வூரில் ஒரு பெரிய பெருமாள் கோயில்...சுவாமியின் திருநாமம் ஆதிகேசவப்பெருமாள்...அந்த ஊரில் வசித்தவர் ஆசூரிகேசவாசாரியார். இவர் வேள்விகள் செய்வதில் வல்லவர். அதாவது எந்த வேள்வியாக இருந்தாலும் அதைச் சிறப்பாகச் செய்வார். அதனால், இவருக்கு ஸர்வக்ரது என்ற பட்டத்தை வேதபண்டிதர்கள் வழங்கினர். இந்த சொல்லுக்கு எல்லா வேள்விகளையும் செய்பவர் என்று பொருள். இக்காரணத்தால், இவரை ஸ்ரீமத் ஆசூரி ஸர்வக்ரது கேசவ தீட்சிதர் என்று மக்கள் அழைத்தனர்.  இந்த சமயத்தில் மணக்கால் நம்பியின் சீடரான ஆளவந்தார் (யமுனைத்துறைவர்)என்பவர், தான் ஆட்சிசெய்த ராஜ்ய பரிபாலனத்தை விட்டுவிட்டு, ஸ்ரீரங்கத்தில் தங்கி துறவியாக மாறிவிட்டார். அவரது சீடர் பெரியநம்பி. பெருமாள் மீது ஆளவந்தார் இயற்றிய துதிகள் அருமையானவை. நாத்திகர்கள் கூட அவரது பாடலைப் படித்தால் பரவசத்தின் உச்சிக்கு சென்று விடுவார்கள் என்றால், அதன் இனிமையைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பெரியதிருமலை நம்பி என்பவரும் ஆளவந்தாரின் சீடராக இருந்தார். இவர் ஆளவந்தாரை விட வயதில் மூத்தவர் என்றாலும், அவரைக் குருவாக ஏற்றுக் கொண்டார். பெரியதிருமலை நம்பிக்கு காந்திமதி, தீப்திமதி என்று இரண்டு தங்கைகள் இருந்தனர். அவர்களில் பெரிய தங்கை காந்திமதியை, ஆசூரி கேசவாசாரியார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். தீப்திமதியை, அகரம் என்ற கிராமத்தில் வசித்த கமலநயனப்பட்டர் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணத்தை நடத்திய பிறகு, நிம்மதியடைந்த பெரியதிருமலை நம்பி, எந்நேரமும் பெருமாளின் திருவடிகளையே எண்ணி தியானத்தில் ஆழ்ந்து கிடந்தார். ஆசூர் கேசவாசாரியாரும் காந்திமதியும் இல்லற வாழ்வை நீண்டகாலம் மகிழ்ச்சியாகக் கழித்துக் கொண்டிருந்தனர். ஆனால், இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. தம்பதிகளுக்கு இது பெரும் மனக்குறையாக இருந்தது. தெய்வத்திவம் முறையிட்டால் குறைகள் தீரும். அதிலும் வேள்விகள் இயற்றுவதில் சிறந்த கேசவாசாரியாருக்கு எந்த தெய்வத்திடம் குறையைச் சொல்லலாம் என யோசித்த போது, விருந்தாரண்யம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட பெருமாள் ஸ்தலம் நினைவில் வந்தது. திருவல்லிக்கேணி என்ற குளத்தின் கரையில் அது அமைந்திருந்தது. அந்த குளத்தின் பெயர் தான் இன்றைக்கு அவ்வூருக்கு அமைந்து விட்டது. ஆம்...அது தான் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில். அங்கு சென்று அவர்கள் மகப்பேறு குறித்த வேள்விகளைச் செய்தனர். இதன் பிறகு, கேசவாசாரியார் ஓய்வெடுக்க ஓரிடத்தில் அமர்ந்தார். கண்களைச் சுழற்றவே தூங்கி விட்டார். அப்போது, பார்த்தசாரதி பெருமாள் கனவில் வந்தார். கேசவா! நீர் ஒழுக்கசீலர், வேள்விகள் இயற்றி எம்மைத் திருப்தி செய்பவர், உமது பக்தி ஆழமானது. குழந்தை இல்லா கவலை இனி உமக்கு தேவையில்லை. நானே உமக்கு குழந்தையாகப் பிறப்பேன். இவ்வுலக மக்கள் பூர்வாச்சாரியார்கள் அருளிய உபதேசங்களின் மகிமை புரியாமல், தங்களையே உயர்வாக எண்ணிக்கொண்டு வாழ்கின்றனர். அகந்தை கொண்டு தீமை பல புரிகின்றனர். எனவே, அவர்களைக் கடைத்தேற்ற நான் அவதாரம் எடுப்பேன். இனி நீர் ஊர் திரும்பலாம். உம் விருப்பம் விரைவில் நிறைவேறும், என்றார்.

மிகுந்த மகிழ்ச்சியுடன் கேசவாசாரியார் ஊர் திரும்பினார். ஓராண்டு கடந்தது. காந்திமதி அம்மையார் கர்ப்பவதியானார். கலியுகம் 4118, ஆங்கில ஆண்டு 1017, சித்திரை 12, வியாழன், திருவாதிரை, வளர்பிறை பஞ்சமியன்று அவதரித்தது அந்தத் தெய்வக்குழந்தை. இதனிடையே, காந்திமதி அம்மையாரின் தங்கையான தீப்திமதிக்கும் ஆண்குழந்தை பிறந்தது. அக்காவின் குழந்தையைப் பார்க்க தங்கை தீப்திமதி ஸ்ரீபெரும்புதூருக்கு வந்தார். தங்கள் இருவருக்கும் ஆண்குழந்தை பிறந்ததில் அவர்களுக்கு பரம சந்தோஷம். தங்கைகளுக்கு குழந்தை பிறந்த செய்தியறிந்த பெரிய திருமலை நம்பி ஸ்ரீபெரும்புதூர் வந்தார். காந்திமதியின் குழந்தை லட்சுமணனின் அவதாரம் என்பது புரிந்தது. எனவே, குழந்தைக்கு ராமானுஜன் என்று பெயர் வைத்தார். ராமனுக்கு இளையவன் என்பது இதன் பொருள். தீப்திமதியின் குழந்தைக்கு கோவிந்தன் என பெயரிட்டார். இன்னும் சிலகாலம் கழித்து, தீப்திமதி பெற்ற மற்றொரு ஆண் குழந்தைக்கு சிறிய கோவிந்தப் பெருமாள் என்று பெயர் சூட்டினர். அக்காலத்தில், குழந்தைகள் பிறந்து நான்கு மாதம் கழிந்ததும், சூரியனைப் பார்த்தல் என்னும் சடங்கைச் செய்தனர். ராமானுஜனுக்கும், கோவிந்தனுக்கும் இந்த சடங்கு நடந்தது. பிறகு முதல் சோறு ஊட்டுதல், காது குத்துதல், மொட்டையடித்தல், கல்வி துவக்கம், உபநயனம் என வரிசையாக சடங்குகள் நடத்தப்பட்டன.

புதன், 20 நவம்பர், 2019

அண்ட பிண்ட ரகசியம் படித்து பாருங்கள் கரைந்து போவிர்கள்...

பகுதி ஒன்று

ரொம்ப பெரிய பதிவு பொறுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்

அண்ட பிண்ட ரகசியத்தை சித்தர்கள் எப்படி கண்டறிந்தனர்? இப்படிப்பட்ட இன்பமும், துன்பமும் ஏற்படுகின்ற இந்த வாழ்க்கைக்கு வழியே இல்லையா? நிரந்தரமான மகிழ்ச்சி கிடைக்காதா? என்ற கேள்வி எழ ஆரம்பித்தது. எனக்குள்ள அந்தக் கேள்விக்கு மனிதன் கண்டெடுத்த முத்துகளாகிய பிரபஞ்ச அண்ட பிண்டத்தத்துவம். இன்னும் ஆழமாகப் புரிய ஆரம்பித்தது. அதன் முடிவு எங்கு தோற்றமோ? அங்கேதான் முடியும்? என்பதை புரிந்து கொண்டேன் ஆராய முற்பட்டேன். அதன் விளைவு வெட்ட வெளியாக தோன்றியது. அதிலிருந்து தோன்றிய ஜோதி என் கண்முன் தோன்றின. அதிலே முளைத்து எழுந்த அணுவே நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகி ஓரறிவு ஐந்தறிவு பிராணி ஆறறிவு மனித ஜீவன் வரையுள்ள பரிணாமத்தைக் கண்டேன் கடைசியாகத் தன்னைத்தானே ஆராய முற்பட்டான். அதன் விளைவு தன்னுடைய இடத்திலே இருக்கும் மூல ஆற்றலை உணர்ந்தேன். எங்கோ தொடங்கிய மூல ஆற்றல் அண்டங்களாக பேரண்டங்களாக வியாபித்துள்ள பூரனமாய் நிறைந்துள்ள அந்த ஆற்றலை கண்டேன். பிரபஞ்சத்தின் சிறிய அணுவான மனிதன் மூல சக்தி என்கிற கயிற்றின் நுனியைப் பிடித்து கொஞ்சம் கொஞ்சமாக பிரபஞ்ச பேராற்றலின் பரமாணுவை அடைந்து அதோடு ஐக்கியமாக முடியும் என்று கண்டு பிடித்தேன். கண்டு பிடித்து அடைந்தவன் சித்தன். வெட்ட வெளியில் ஜோதியாக இருபவனும் சித்தனே. வெட்ட வெளியில் ஜோதியாக இருபவனும் சித்தனே. அதுவே பிரம்மரகசியம் ! அதை அறிந்தவனே பிரம்மரிஷி.

பரமாணுவில் தொடங்கி அணுக்கள் கூட்டம் கூட்டமாக பல்வேறுபட்ட இயக்கங்களை அண்டங்களாக பிண்டங்களாக நடந்து கொண்டு இருக்கின்ற பேரியக்க மண்டலமே (Universe) அதனுடைய முதல் நிலை ஆகாயம் எனப்படும். அதன் அடுத்த நிலையே காற்று எனப்படும். இவை இரண்டும் மோதிக் கொள்வதால் ஏற்படும் போது உண்டான ‘வெப்ப நிகழ்ச்சியே நெருப்பாகும். நீரகவாயு, பிராணவாயு என்ற இருவகையான
வாயுக்கள் குறிப்பிட்ட அளவில் சேருகின்ற போது நீர் ஆகிறது. நீரின் இறுகிய நிலையே மண். இவ்வைந்து நிலைகளும் ஐந்து பௌதிகப் பிரிவுகள் ஆனபடியால் அவற்றை பஞ்ச பூதங்கள் என்கிறோம். மேற்கண்ட பூதங்கள் பேரியக்க மண்டலத்தில் ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், மண் என்று முறையே தோன்றியது. இதே வரிசைக் கிராமமாகத்தான் தாயின் வயிற்றில் பிண்டமான குழந்தையும் வளரும். அண்டம் : -------- பிண்டம் : ------ குழந்தை : -------- # ஆகாயம் ---> தலைபாகம் (ஆகாயம்)---> # ஆக்ஞை # காற்று -----> கழுத்து (காற்று)---> # விசுத்தி # நெருப்பு -------->இருதயம் (நெருப்பு) ---> # அநாதகன் # நீர் --------------> தொப்புள் (நீர்) -----> # மணிபூரகம் # மண் ------------> வயற்றில் (சுக்கில சுரோணித இடம்)---> # சுவாதிஷ்டானம் மேற்கண்ட விளக்கத்தின் மூலம் அண்டத்தின் செயல்பாடு முறைக்கு ஏற்ப பிண்டத்திலும் செயல்படுகிறது என்பதை ஏளிதாக அறியலாம். பரமானுவிலிருந்து தொடங்கி கூட்டம் கூட்டமாக இயங்குகின்ற நிகழ்ச்சிகளின் குணங்களை ஐந்து வகையாகப் பிரிகின்றோம். உணர்வு, ஒலி, ஒளி, சுவை, மணம். இந்த ஐந்து குணங்களும் எப்படித் தோன்றின? என்பதை காணும் போது கவர்ச்சியாக உள்ள அழுத்த இயக்கம் நடைபெறும் இடம் ஆகாயம் என்றும், ஒலி உண்டாகும் இடத்தை காற்று என்றும், ஒளி உண்டாகும் இடத்தை நெருப்பு என்றும், சுவை உண்டாகும் இடத்தை நீர் என்றும், மணம் உண்டாகும் இடத்தை மண் என்றும் அறிந்து கொள்ள வேண்டும். இன்றைய விஞ்ஞானிகள் கூறும் தொண்ணுத்தி இரண்டு வகையான மூலக்கூறு(Elements)களும் இவ்வைந்து
பூதங்களில் அடங்கியுள்ளன. எழுவகை பிறப்பு எப்படி உண்டாயிற்று?
பூமி என்பது ஐந்து பூதங்களின் ஈர்ப்புச் சக்தி கொண்ட கோள். அது ஐந்து விதமான அணுக்கூட்டத்தின் தொகுப்பு. இந்த அணு தொகுப்பு பூமி அதிலுள்ள அணுக்களுக்குத் தானே முளைக்கின்ற செயல்படுகின்ற ஆற்றல் இல்லை. இது செயல்படுவதற்க்கு சூரியனின் ஒளிசக்தி ஆற்றல் தேவைப்படுகிறது. சூரியகதிர்களின் வீச்சில் பூமியில் ஜீவராசிகள் உண்டாயின. எழுவகை பிறப்பு உண்டான விபரமானது. ஜடப்பொருளான பஞ்சபூதம் ஐந்தும் அதோடு சூரியன், சந்திரன் என்கிற இரண்டும் சேர்ந்து ஏழு ஆற்றல்களும் ஏழுவகையான பிறப்பை உண்டாக்கின. இந்த ஏழுவகைப் பிறப்பு ஒரே மாதிரியாகப் பிறக்காமல் ஏன் மனிதன், தேவர், தாவரம், விலங்கு, ஊர்வன, பறப்பன, நீர்வாழ்வன என்ற வேறுபாடோடு தோன்றியது எப்படி? என்று ஆய்வு செய்கின்ற போது சூரியனானது தன்னுடைய சூரியக் குடும்பத்தில் உள்ள ஏழு ஆற்றல்களை
கிரகித்தது பூமிக்கு அனுப்புவதால் அந்த ஒளிக்கதிர்கள் பூமியில் படும் போது பூமியில் உள்ள பஞ்சபூதத் தத்துவ அணுக்களின் ஈர்ப்பு தன்மைகேற்ப ஏழுவகையான பிறப்பாக தோன்றியது. இந்த ஏழுவகை பிறப்பானது பஞ்சபூத ஆற்றலும், சூரியக் குடும்பங்களின் ஆற்றலும் ஒருங்கிணைந்து அந்த அணுக்களின் ஈர்ப்பு தன்மையால் உண்டான தன்மைக்கு ஏற்ப பிறப்பு பேதங்கள் உண்டாயின. பிறப்பு பேதங்கள் எனப்படுவது மனிதன்,தேவர், தாவரம், விலங்கு, ஊர்வன, பறப்பன, நீர்வாழ்வன என்ற பேதம் உண்டாயின.

பிண்டத்தில் உடலின் இயக்கம் எப்படி செயல்படுகிறது?
பூமியில் எப்படி நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து சக்திகள் ஒன்றை ஒன்று ஈர்த்து பூமியாகி செயல்படுகிறதோ அதே போல் இந்த உடலில் கீழ் கண்டவாறு பஞ்சபூத சக்திகள் செயல்படுகின்றன.

1) ஆகாயம் – காமம், குரோதம், மோகம், மதம், மாச்சர்யம்

2) காற்று – இருத்தல், நடத்தல், படுத்தல், எழுதல், ஓடல்

3) நெருப்பு – பயம், சோம்பல் , பசி , உறக்கம், புணர்ச்சி

4) நீர் – உதிரம், மூளை, உமிழ்நீர், கொழுப்பு, சுக்கிலம்

5) மண் – மயிர், தோல், நரம்பு , எலும்பு, தசை

பூமியின் இயக்கத்திற்கு இரவு, பகல் மாறி மாறி சூரிய சந்திரர்கள் செயல்படுவதால் பூமியின் செயலும், ஜீவராசிகளும் வாழ்கின்றன. அதே போல மனித உடலான பிண்டத்திலும் இடகலை என்கிற சூரியகலையும், பிங்கலை என்கிற சந்திர கலையும் மாறி மாறி சுவாசம் நடைபெறுவதால் மனித பிண்டம் இயங்குகிறது. பூமியில் பன்னிரெண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை இரவும், பகலும் மாறி மாறி செயல் படுவது போல் இந்த மனித உடலில் சூரியகலை, சந்திரகலை, சுவாசம், இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை மாறி மாறி செயல்படும். ஆகவே மேற்கண்ட விளக்கத்தின் மூலம் எந்த சூரிய, சந்திரன் ஆற்றல் பூமியை இயக்குகிறதோ அதே ஆற்றல்தான் இந்த மனித உடலையும் இயக்குகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

பிண்டத்தில் (உடலில் ) நவகிரக செயல்பாடு

பூமி என்பது பிண்டம். பூமிக்கு அண்டம் சூரியக் குடும்பம் என்கிற நவகோட்கள். அதே போல் மனித உடலில் தலைக்கு கீழ்ப்பகுதி பிண்டம் தலைப்பகுதி அண்டமாகிறது. அண்டத்தில் எழு கிரகம் செயல்படுகின்றன. அதே போல் பிண்டத்தில் அதாவது தலைப் பகுதியில் ஏழு துவாரமும் செயல்படுகிறது.

கிரகம் என்றால் என்ன?

கிரகம் என்றால் கிரக்கின்ற பொருள் என்பதாகும். நமது மனித உடலில்
தலைப்பகுதியில் உள்ள கண் -2, காது -2, மூக்கு துவாரம் -2, வாய் - 1 ஆக இந்த ஏழு துவாரங்களும் கிரகிக்கின்ற தன்மையுள்ளவை. கண் காட்சியை கிரகிக்கிறது. வாய் சுவையை கிரகிக்கிறது. கிரகிக்கின்ற தன்மை அண்டத்தில் உள்ளது போல் பிண்டத்திலும் நடைபெறுவது நமக்குத் தெளிவாகப் புரிகிறது.

அடுத்த நிழல் கிரகம் என்று ஏன்?
ராகு, கேது என்று இரண்டு கிரகத்தை வைத்தார்கள்? ஆய்வு செய்யும் போது பொது நியதிப்படி ஒரு பொருளை கிரகிக்கின்ற போது மற்றொரு புறம் வெளியே தள்ளுகின்ற செயலும் நடைபெற வேண்டும் என்பது விதி. அந்த அடிபடையிலே தலைப்பகுதியில் கிரகித்து அனுபவித்த அத்தனையும், சுக்கிலம், மலம், மூலமாக மனித உடல் வெளியேறுகிறது. எதற்காக ராகு என்றால் விஷம் என்று பாம்பின் தலையும், கேது என்றால் பாம்பின் உடலும் வைத்தார்கள்? என்ற கேள்வி எழுவது இயல்பு. பாம்பின் தலை என்றால் விஷத்தைக் குறிப்பிடுகிறது. மனித உடலில் விஷத்தை என்பது மலத்தை என்பது பொருள். மலத்தை தள்ளும் இடமே விஷமாகும். அதை தான் மனித உடலில் எருவாயை ராகு என்றனர். அதே போல் கேது என்பது பாம்பின் உடலைக் குறிப்பிட்டர்கள். உடல் என்பது படைப்புக்கு உரியது. படைப்புக்கு காரணமாவது சுக்கிலம் என்பதால் சுக்கில துவாரத்தை மனித உடலில் கேது பாகம் என்றனர். தவிர படைப்பதற்க்கு உரியவையாக இருப்பதால் ஞானகாரகன் என்றும் கூறினர். மேற்சொன்ன சூரியக் குடும்பமாகிய ஏழு கிரகங்களும் வானவில் காட்சியில் ஏழு நிறங்களாகக் காட்சி தந்த அந்த ஏழு நிறங்களே நமது மனித உடலில் ஏழு ஆதார பீடத்திலும் காட்சியளிகிறது. அதே போல் ஏழு ஆற்றல்களே ஏழு ஆதாரமாக
செயல்படுகிறது. இந்த ஏழு சக்திகளும் நமது உடலிலே சப்த தாதுக்களாகச்
செயல்படுகின்றன. இப்படி ஒவ்வொரு செயலும் எப்படி நடைபெறுகின்றன? என்பதை துல்லியமாக கனகிட்டோமானால் அண்டத்தில் இல்லாதது பிண்டத்தில் இல்லை. பிண்டத்தில் இல்லாதது அண்டத்தில் இல்லை என்றே தெளிவாக உணரலாம்.

கர்மவினை என்பது உண்மையா?

விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தின் மூலத்தை, மூலசக்தியை ஆராய எத்தனை எத்தனைக் குழப்பங்கள், கணிப்பு, கருவிகள் என்று தேடுகிறான், தேடுகிறான் தேடிக் கொண்டே இருக்கிறான். ஆனால் சித்தன் அதைக் கண்டு பிடித்து சொல்லி உள்ளான். அதை ஏன் ஏற்க யோசிக்கிறார்கள் விஞ்ஞானிகள்? சுப்பிரமணியர் ஞானம் என்ற நூலில் “ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம்” என்று இந்த பிரபஞ்சம் முதன் முதலில் (ஜோதி) கனலில் இருந்து கொப்பளித்து வந்த கனலே. குளிரும் போது அது அணுவாக மாறி இப்பிரபஞ்சம் உண்டாவதற்கு காரணமானது என்று அன்றே கூறியுள்ளார்கள். ஆக முதலிலே பிறந்தது “சத்தம்”. சத்தம் என்றால் ஒலி என்று பொருள். ஒலி உண்டாகும் இடத்திலே ஒளியும் உண்டாகும். இது இயற்கை. இப்பிரபஞ்சத் தொடக்கதிற்கு அடிப்படையான முதல் காரணமாக இருப்பது ஒளியும், ஒலியும் தான். அந்த அடிப்படையில் பஞ்சபூத பூமியின் இயக்கத்திற்கு காரணமாக இருப்பது சந்திரன்,
சூரியன் என்கிற ஒளியும், ஒலியும் தான். மனிதனுக்கும் சூரியகலை, சந்திரகலை இயங்குகிறது. அவ்வளவு ஏன்? இன்றைய விஞ்ஞானத்தால் கண்டு பிடிக்கப்பட்ட இயந்திரங்கள், ஜடப்பொருள்கள் இயங்குவதற்கு ஒலி, ஒளி இல்லை என்றால் நடைபெறுமா? நிச்சயமாக நடைபெறாது. எரிபொருளால் ஒலி, ஒளி உண்டாக்கத்தானே இயந்திரங்கள் இயங்குகின்றன. ஆக ஒலி, ஒளி, அதன் அதிர்வு இம்மூன்றும் சேர்ந்தது தான் மூலசக்தி. அதைத்தான் சித்தர்கள் அ, உ, ம “ஓம்” என்று பெயர் வைத்து எல்லா இயக்கங்களுக்கும் ஓம் என்ற மூல சக்திதான் காரணம் என்றனர். இது விஞ்ஞானமில்லையா? இது என்ன மூடத்தனமான கொள்கையா? சிந்தியுங்கள் அன்பர்களே… சிலை வடிப்பவன் எவனொருவன் சிலை முழுவதும் வடித்து சின்னஞ்சிறு உளிகளால் நெளிவு சுளிவு அனைத்தையும் வைத்து சிலை முடிகின்றானோ, அவனால் தான் அந்த
சிலையின் அத்தனை ஆற்றலையும் உணர முடியும், கூறமுடியும். அதே போல இந்த பிரபஞ்சக் கணக்கீட்டை கண்டு பிடித்து பிரபஞ்சத்திற்கும், மனிதனுக்கும், ஜீவராசிகள், தாவரங்கள் அத்தனைக்கும் உரிய ஒப்பீடு தத்துவங்களை அறிந்து இந்த பிரபஞ்சம் இதனை யுகங்களில் அழியும் என்று எவன் சொல்கிறானோ? அவனே அந்தக் கொள்கையில் முழு உண்மையை அறிந்தவனாவான். ஆகவே பிரபஞ்சத்தை கணக்கிட்டு ஆயுள் நிர்ணயம் செய்து பிரபஞ்சம் அழிவதையும், கணக்கிட்டவன் சித்தன். சித்தர்கள் சொன்ன எந்த உண்மையும் காலத்தால் அழிக்க முடியாதது. சமீபத்தில் கிடைத்த செய்தி. மூளையின் பதிவுகளை கண்டு பிடித்த கருவியானது, மூளையில் இன்னொரு அதிர்வலைகள் இருக்கின்றன என்பதை கருவி காட்டியது, அது என்ன? என்ற கேள்விக்கு, விஞ்ஞானிகள் கூறுவது கர்மவினை அதிர்வு கோடு (Intronce) என்றார்களாம். ஆகவே கர்மவினை என்பதை என்றைக்கு ஒத்துக் கொண்டானோ! அப்போதே சித்தர்கள் சொல்லியதை ஒத்துக் கொண்டாக வேண்டும்! முன் பிறப்பு, அடுத்த பிறப்பு உண்டு என்பதை ஒத்துக் கொண்டாக வேண்டும். கர்மவினை என்பதே முற்பிறப்பின் தொடர் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். “ஓம்” என்ற மூலசக்தியே இந்த பிரபஞ்ச இயக்கப் பேரியக்க மண்டலத்தின் மூலசக்தி
என்பதை கோரக்கர் முதல் கொங்கணர், அகத்தியர் ஏன் அனைத்து சித்தர்களும் ஒத்துக் கொள்கிறார்கள். “ஓம்” தான் மூலசக்தி என்பதில் எந்த சித்தருக்கும், ஞானிகளுக்கும் வேறுபாடு இல்லை. ஏனென்றால் அவர்கள் அத்தனை பேரும் உண்மையை கண்டவர்கள். ஆனால் இன்றைய விஞ்ஞானிகள் மத்தியில் ஏன் இத்தனை கருத்து வேறுபாடு? ஆய்வு, ஆய்வுப் பொருள் எல்லாம் என்ற கேள்விக்கு விஞ்ஞான மனிதனுடைய அறிவுக்கு எட்டியவை, அவ்வளவு தான். எத்தனைத்தான் கருவி கரணாதிகள் வைத்துச் செய்தாலும், இவன் அறிவின் எல்லைக் கோட்டின் அளவின் அடிப்படையிலே தான் அந்த கருவிகள் நிர்மாணிக்கப்படும். மனித அறிவுக்கு உண்டான கருவி அதற்கேற்றாற் போல் அந்த அளவிலேயே நமக்கு பதில் சொல்லும். ஆகவே விஞ்ஞானம் முழுமை நிலை பெறவில்லை என்பதே நமக்கு கிடைக்கும் பதில்

திங்கள், 18 நவம்பர், 2019

அருள் மிகு நரசிம்மர் திருக்கோயில்

மூலவர்  :  நரசிம்மர்
தாயார்  :  அமிர்தவல்லி
பழமை  :  2000 வருடங்களுக்கு முன்
ஊர் :  திருக்குறையலூர், சீர்காழி
மாவட்டம்  :  நாகப்பட்டினம்
மாநிலம் :  தமிழ்நாடு

திருவிழா : நரசிம்மர் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி    
           
சிறப்பு : நரசிம்மரை இத்தலத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக இரண்டு தாயார்களுடன் தரிசிப்பது மிகவும் அரிது. திருமங்கை ஆழ்வார் அவதரித்த தலம் இது.    
           
திறக்கும் நேரம்: காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.  அருள் மிகு நரசிம்மர் திருக்கோயில், திருக்குறையலூர் - 609 106 நாகப்பட்டினம் மாவட்டம்.போன்:+91- 94435 64650, 94430 07412.   
          
தகவல் : சுவாமி மலைக்கும், திருக்கூடலூருக்கும் இடையே காவிரியில் துணை ஆறாக பிரியும் மண்ணியாறு இத்தலத்தின் வழியாக சென்று கடலில் கலக்கிறது.இதன் சிறப்பை வைணவ ஆச்சாரியார்கள் "மண்ணியில் நீர் தேங்கும் குறையலூர், சீர்கலியன் தோன்றிய ஊர்' என்று சிறப்பித்து பாடியுள்ளனர். குலசேகர ஆழ்வார், ராமானுஜர், மணவாள மாமுனிகள் போன்றோர் இங்கு தரிசனம் செய்துள்ளனர்.

பிரார்த்தனை : மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், கடன் பிரச்னை உள்ளவர்கள், குடும்பத்தில் பிரச்னை உள்ளவர்கள் இந்நாளிலும், அஷ்டமி, சுவாதி நாட்களிலும் நெய்விளக்கு ஏற்றி, பானக நைவேத்தியம் செய்து வழிபடுகிறார்கள்.   
           
ஸ்தல பெருமை : தாயார் அமிர்தவல்லி தனி சன்னதியில் அருளு கிறாள். பிரதோஷ நாட்களில் நரசிம்மருக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது.மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், கடன் பிரச்னை உள்ளவர்கள், குடும்பத்தில் பிரச்னை உள்ளவர்கள் இந்நாளிலும், அஷ்டமி, சுவாதி நாட்களிலும் நெய்விளக்கு ஏற்றி, பானக நைவேத்தியம் செய்து வழிபடுகிறார்கள். அமாவாசை நாட்களில் சக்கரத்தாழ்வார் சன்னதியில் சுதர்சன ஹோமம் நடக்கிறது. நவக்கிரக தோஷம், பித்ரு தோஷம், எதிரிகளின் தொந்தரவுக்கு ஆளானவர்கள் இந்த யாகத்தில் கலந்து கொள்கிறார்கள். கருடன், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், திருமங்கையாழ்வார், வைணவ ஆச்சாரியார்களுக்கும் தனித்தனி சன்னதிகள் உண்டு.
   
ஸ்தல வரலாறு : சிவனை அவமரியாதை செய்யும் வகையில், பார்வதியின் தந்தை தட்சன் ஒரு யாகம் நடத்தினான். இதனால் கோபம் கொண்ட பார்வதி, தந்தைக்கு புத்தி புகட்ட யாகம் நடக்கு மிடத்திற்குச் சென்றாள். அவளையும் தட்சன் அவமரியாதை செய்யவே, யாகத்தீயில் விழுந்து விட்டாள். கோப மடைந்த சிவன், தனது அம்சமாக வீரபத்திரரை உருவாக்கி அனுப்பி யாகத்தை அழித்தார். மேலும், பார்வதியைப் பிரிந்த துயரம் சிவனை வாட்டியது.நரசிம்மர் அவருக்கு இத்தலத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராகக் காட்சி தந்து அமைதிப்படுத்தி யதாக தல புராணம் கூறுகிறது. நரசிம்மரை இவ்வாறு இரண்டு தாயார்களுடன் தரிசிப்பது மிகவும் அரிது.

ஆழ்வார் அவதார தலம் :  திருமங்கை ஆழ்வார் அவதரித்த தலம் இது. இக்கோயிலில் இவருக்கு சன்னதி உள்ளது. துவாபர யுகத்தில் உபரிசிரவஸு என்ற மன்னனாகப் பிறந்த இவர், இங்கு நரசிம்மரை வழிபட்டு, அடுத்த பிறப்பில் நீலன் என்னும் மன்னனாக இங்கு அவதரித்ததாக மங்களபுரி மகாத்மியம்கூறுகிறது.திருமங்கையாழ்வார், 108 திவ்ய தேசங்களில் 86 தலங்களை மங்களாசாசனம் செய்துள்ளார். இதன் அடிப்படையில் அவர் அவதரித்த இத்தலத்து நரசிம்மரை வழிபட்டால் 86 பெருமாளையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்கிறார்கள்.இத்தலத்தில் அவதரித்திருந்தாலும், திருமங்கையாழ்வார் இங்கு சுவாமியை மங்களாசாசனம் செய்ய வில்லை. வேறு தலத்தை மங்களாசாசனம் செய்யும் போது, இத்தல நரசிம்மரைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.

ஆதி அகோபிலம் : தைமாத அமாவாசையை ஒட்டி, இவ்வூர் அருகில் உள்ளதும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றானது மான திருநாங்கூரில் 11 கருட சேவை நடக்கும்.அப்போது, திருநாங்கூரில் இருந்து திருமங்கையாழ்வார் இக்கோயிலுக்கு எழுந்தருள் வார். "திருப்பல்லாண்டு தொடக்கம்' என்னும் தமிழ்மறை பாடி சுவாமியை வழிபடும் வைபவம் நடக்கும். மிகவும் பழமையான இத்தலத்தை "ஆதி நரசிம்மர் தலம்' என்றும், தெற்கில் மிகவும் உயர்ந்த நரசிம்ம ஷேத்திரம் என்பதால் "தட்சிண நரசிம்மர் தலம்' என்றும் சிறப்பு பெயரிட்டு அழைக்கிறார்கள். பத்ம புராணம், நாரத புராணத்தில் இத்தலம் ஸ்ரீபூரணபுரி, பூரண நரசிம்ம ஷேத்திரம் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
எமதருமன்!

உலகில் பிறந்தவர்கள் அனைவரும் இறந்தே தீரவேண்டும் என்பது வாழ்க்கை நியதி. ஆண்டாண்டுதோறும் அழுது புரண்டாலும் மாண்டார் திரும்பி வரமாட்டார் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததுதான். மரணம் எனும் நிகழ்வைக் கட்டுப்படுத்துகிற தேவன் எமன். அவனுக்கு எமதருமன் என்றும் தர்மராஜன் என்றும் பெயருண்டு. காலம்  தவறாமல் உயிர்களைக் கவர்வதால் அவனுக்குக் காலன் என்ற பெயரும் உண்டு. அஷ்டதிக் பாலகர்களில் தென்திசைக் காவலன் எமன். இவன் மகாவிஷ்ணுவின் பாரம்பரியத்தில் தோன்றியவன். மகாவிஷ்ணுவிடமிருந்து தோன்றியவர் பிரம்மதேவன். அவரிடமிருந்து தோன்றியவர்கள் மரிசி, காஸ்யபர், சூரியதேவன் ஆகியோர். சூரியனிடமிருந்து தோன்றியவன் எமதருமன். அவனுக்கு சூரியபுத்திரன் என்ற பெயரும் உண்டு.

விஸ்வகர்மா எனும் தேவலோகச் சிற்பியின் மகள் (சஞ்ஞாதேவி) சம்ப்ஜனா. இவளை சூரியதேவன் மணந்தார். அவர்களுக்கு மனு, எமன் என இரண்டு புத்திரர்களும், எமி என்ற மகளும் தோன்றினர். சூரியனின் கடும் வெப்பத்தைத் தாங்கமுடியாத சம்ப்ஜனா, தனது நிழலான சாயாவை சூரியனிடம் விட்டுவிட்டு, தவம்புரிய வெகுதூரம் சென்றுவிட்டாள். சாயாவையே சம்ப்ஜனா என எண்ணிக் கொண்டிருந்த சூரியதேவனுக்கு அவள் மூலம் மூன்று குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் சனி, மனு, தப்தி ஆகியோர். எமனும் சனியும் சூரிய புத்திரர்கள். எனவே, சகோதரர்கள். எமன் இயற்கையிலேயே நியாயஸ்தன். நீதி, நேர்மை தவறாதவன். சத்தியத்தின் பிரதிநிதி. சம்ப்ஜனாவின் நிழல்தான் சாயா என்ற உருவத்தில் சூரியனின் பத்தினியாக வாழ்ந்துகொண்டிருந்ததை அறிந்த எமன், சாயாவைக் குற்றம் சாட்டினான். அவள் சூரியனை ஏமாற்றுவதாகக் குறை கூறி, கோபத்தில் காலால் உதைத்தான். இதனால் கோபமடைந்த சாயா, எமனுக்குக் கால்களில் ஆறாத புண் ஏற்பட்டுத் துன்பப்படுமாறு சாபம் அளித்துவிடுகிறாள்.

பின்னர் சூரியனின் ஆணைப்படி எமன் சிவனைக் குறித்துக் கடும் தவம் இயற்றினான். சிவபெருமான் தோன்றி, அவனைத் தென் திசைக்குக் காவலனாக்கி, மனித உயிர்களின் ஆயுள் முடியும்போது, அவற்றைக் கவர்ந்து பாவங்களுக்கேற்ப தண்டனை அளிக்கவும், புண்ணிய பலன்கள் அளித்து வாழ வழி செய்வதற்கும் அதிகாரத்தை வழங்கி, அவனை நரகலோகம் எனும் எமலோகத்துக்கு அதிபதியாக்கினார். இரண்டு கூரிய சிகரங்களிடையே அதலபாதாளத்தில் அக்னி ஆறு.  சிகரங்களை இணைத்துக் கட்டப்பட்ட ஒரு தலைமுடியில் ஒரு சிம்மாசனம் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்க, அதில் அமர்ந்துதான் எமதருமன் நீதி வழங்குகிறான். அவனது நீதியின் தன்மை எள்ளளவு மாறினாலும் அந்த சிம்மாசனம் அறுந்து, அதனுடன் எமனும் அக்னி ஆற்றில் விழுந்துவிடுவான். இத்தகைய சூழ்நிலையில்தான் எமன் நியாயம் வழங்கிக் கொண்டிருக்கிறான்.

சிவபெருமான், தனது வாகனத்துக்குச் சமமான ஒரு வாகனத்தை எமனுக்குத் தர விரும்பினார். ரிஷபத்தைப் போலவே தோற்றமுடைய, கரிய எருமைமாடு ஒன்றை உருவாக்கி, எமனுக்கு வாகனமாக அருளினார். விஷ்ணுவின் அம்சமான எமனுக்கு ஜீவன்களின் பாபபுண்ணியங்களை அனுசரித்து நீதி வழங்கும் அதிகாரத்தையும் அளித்தார். இந்தப் பணியைத் தவறின்றிச் செய்ய எமனுக்கு பல தடவை அக்னிப் பரீட்சை நிகழ்ந்தது. அவற்றிலெல்லாம் தவறாமல் தனது கடமையைச் செய்தவன் எமதருமன். ஆனால், ஸ்ரீராம அவதார முடிவில் எமனுக்கு ஒரு பெரும் சோதனை ஏற்பட்டது. ராவண சம்ஹாரத்துக்குப் பிறகு ஸ்ரீராமன் அயோத்தி திரும்பி முடி சூட்டிக்கொண்டான். இருந்தாலும் யாரோ ஒருவன் சொன்ன அபவாதத்துக்காகச் சீதையைக் காட்டுக்கு அனுப்ப நேர்ந்தது. வால்மீகி மகரிஷியின் ஆசிரமத்தில் ராமனின் புதல்வர்கள் லவ- குசர்கள் தோன்றினர். ஸ்ரீராமன் அனுப்பிய அஸ்வமேத யாகக் குதிரையை லவ- குசர்கள் தடுத்து, அதனால் ராமனே தன் புதல்வர்களை எதிர்த்துப் போரிடும் நிலைமை உருவாயிற்று.

பின்னர், லவ-குசர்கள் யாரென்று அறிந்து மனமகிழ்ந்தார் ஸ்ரீராமன். அவர்களுக்கு முறைப்படி பட்டம் சூட்டப்பட்டது. ஸ்ரீராமன், தனது அவதாரத்தின் கடமைகளை முடித்து மீண்டும் வைகுண்டம் செல்ல வேண்டிய தருணமும் வந்தது. இந்தப் பணி நிறைவேற எமனுடைய கடமை முக்கியமாக இருந்தது. மகாவிஷ்ணுவின் சக்தியை ஸ்ரீராமனின் ஸ்தூல சரீரத்தில் இருந்து எடுத்து, மீண்டும் வைகுண்டம் சேர்க்க வேண்டியது எமனின் கடமையானது. அப்போது, எமதருமன் பிரம்ம தேவனை வேண்டினான். பிரம்மன் தோன்றி, இதற்கான வழிமுறையை அவனுக்கு எடுத்துரைத்தார். அதன்படி எமதருமன் அதிபலா மகரிஷியின் சீடன் போல் வடிவெடுத்து, அயோத்திக்கு வந்தான். அங்கே ஸ்ரீராமனைச் சந்தித்தவன், தான் ராமனுடன் தனியாக சில தேவ ரகசியங்கள் பற்றி பேசவிருப்பதால், யாரும் தங்கள் அறைக்குள் வரக்கூடாது என்று நிபந்தனை விதித்தான் அவனது விருப்பப்படியே ஸ்ரீராமனும் தன் சகோதரனான லட்சுமணனை அழைத்து, அறைக்கு வெளியே காவலுக்கு நிறுத்தினார். தாங்கள் பேசி முடிக்கும் வரையிலும் எவராக இருந்தாலும் உள்ளே விடக்கூடாது என உத்தரவிட்டார்.

எமனும் ஸ்ரீராமனும் அறைக்குள் பேசிக்கொண்டிருந்த போது துர்வாச முனிவர் அங்கு வந்து சேர்ந்தார். ஸ்ரீராமனைப் பார்க்க வேண்டும் என வலியுறுத்தினார். லட்சுமணன் அனுமதிக்க வில்லை. ஆனால், துர்வாசர் அவனை அலட்சியம் செய்யாமல், கோபத்துடன் ராமன் இருந்த அறைக்குள் சென்றுவிட்டார். (வேறு விதமாகவும் சொல்வதுண்டு.) இதனால், தன் கடமையைச் சரியாகச் செய்ய முடியவில்லையே என்று கலங்கினான் லட்சுமணன். சரயு நதிக்கரைக்கு ஓடோடிச் சென்று, ஸ்ரீராம் ஸ்ரீராம் என்று ஜபித்தபடியே ஆற்றுக்குள் இறங்கி பிராணத் தியாகம் செய்தான். தகவல் அறிந்த ஸ்ரீராமன், யார் தடுத்தும் கேளாமல் லட்சுமணனைத் தேடி சரயு நதியில் குதித்து, அதன் வெள்ளத்தில் மூழ்கினார். ராமாவதாரம் முடிந்தது. எமதருமன் தனது கடமையை முடித்துக் கொண்டு ராம- லட்சுமணர்களின் ஆத்மாக்கள் வைகுண்டத்தை அடையவழி செய்தான்.

நசிகேதஸ் என்பவன் எமதரும ராஜனை சந்தித்து, அவனோடு பேசி தனது சந்தேகங்களைத் தீர்த்துக்கொண்டதாக உபநிடதம் கூறுகிறது. அதுபோலவே, ஸ்ரீராமனும் எமனுடன் உரையாடி, பிறப்பு- இறப்பு, ஆத்ம விடுதலை பற்றிய பல தத்துவங்களைத் தெரிந்துகொண்டார். அடுத்ததாக விஷ்ணுவின் கிருஷ்ண அவதாரத்தில் வேதங்கள், உபநிடதங்கள், சாஸ்திரங்கள் ஆகிய அனைத்து தத்துவங்களையும் அனைவருக்கும் கண்ணன் உபதேசமாக வழங்குவதற்கு, ராமாவதாரத்தில் எமதரும ராஜனோடு உரையாடிய சம்பவமும் உதவியிருக்கலாம். அவதார புருஷர்களுக்கே உபதேசம் செய்யும் அளவுக்கு ஞானம் பெற்றவன் எமதருமன். இதற்கான வரலாறும் ஒன்று உண்டு. பதினாறு வயது நிரம்பிய மார்க்கண்டேயனின் உயிரைக்கவர எமதருமன் சென்றபோது, மார்க்கண்டேயன் சிவலிங்கத்தைக் கட்டிக் கொள்கிறான். மார்க்கண்டேயன் மீது எமன் வீசிய பாசக்கயிறு சிவபெருமான் மீதும் விழுந்தது. சிவன் கோபத்துடன் எமனைத் தண்டித்து தடுத்தத்துடன், மார்க்கண்டேயனுக்கு என்றும் பதினாறு வயது என்று அருள்புரிந்தார்.

அந்த தருணத்தில் சிவபெருமான் கோபத்தில் காலனை காலால் உதைத்தார் என்ற வரலாறு உண்டு. இதற்கும் ஒரு உட்பொருள் இருந்தது.. நீதியும் நேர்மையும் தவறாமல் சத்தியத்தைக் காக்கும் பொறுப்பேற்ற எமதருமன், அதற்கான மனோபலம் பெறுவதற்காக, ஆதிபராசக்தியைக் குறித்து கடும்தவம் செய்தான். அம்பிகை தோன்றி அருள்புரிந்து அளப்பரிய ஞானத்தை நல்கினாள். ஆதிசக்தியின் திருவடிகள் தன் மார்பின் மீது பட வேண்டும் என்று விரும்பினான் எமன். காலம் வரும்போது அது கைகூடும் எனக்கூறி மறைந்தாள் ஆதிசக்தி. மார்க்கண்டேயனைக் காப்பாற்றியபோது சிவபெருமான், தன் இடது காலால் காலனை உதைத்தார்.  அர்த்தநாரீஸ்வரரான சிவபெருமானின் இடது கால், அன்னை ஆதிபராசக்தியின் காலல்லவா? ஆக, எமன் வேண்டிக்கொண்டபடியே அன்னையின் திருப்பாதங்கள் அவன் மார்பில் பட்டது. ஞானம் வேண்டி எமன் செய்த தவம் பூர்த்தியானது.

பல்வேறு யுகங்களில் எமனும் சில அவதாரங்கள் எடுத்து அருள்புரிந்ததாக புராண வரலாறுகள் உண்டு. மகாபாரத காலத்தில் எமதருமனின் அம்சத்தில் தோன்றியவர்தான் விதுரர். அவர் கூறிய நீதிகளும் வழிகாட்டிய சன்மார்க்க வழிகளும் விதுரநீதி என்ற நூலாக நமக்குக் கிடைத்துள்ளது. பாண்டவர்களில் மூத்தவரான தருமமும் குந்திதேவிக்கு எமதருமனின் அனுக்ரஹத்தால் பிறந்தவர். எந்த நிலையிலும் தருமம் தவறாது அரசு புரிந்த யுதிஷ்டிரர், எமதருமனின் அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது. எமன் என்றதுமே மரணம் என்று பலர் சிந்திக்கின்றனர். பாசக் கயிற்றைப் போட்டு உயிரை எடுத்து நரகத்தில் தள்ளும் கொடிய தேவதையாக நினைத்து பயப்படுகின்றனர். ஆசையிலும் பேராசையிலும் மூழ்கி பொன், பொருள், புகழ் ஆகியவற்றை நம்பியே வாழ்பவர்கள் மரணத்துக்கு பயப்படுவார்கள். மரணமில்லாப் பெருவாழ்வு பெறுவதற்கு தவம் செய்பவர்கள், மரணத்துக்கு பயப்படுவதில்லை. எமன் எனும் தர்மராஜனை அவர்கள் தரிசிக்க விரும்புகிறார்கள். சத்தியத்தைக் கடைப்பிடித்து நீதியும் நேர்மையும் தவறாமல் வாழ்பவர்களுக்கு மரண பயம் இருக்காது
சட்டம்பி

கேரளத்தில் வாழ்ந்த சட்டம்பி சுவாமிகள் பெரும் மகான். இவரது மேன்மைகளைப்பற்றி அறிந்த ஓர் அரசு அதிகாரி அவரைத் தனது இல்லத்திற்கு விருந்துண்ண அழைத்தார். அந்த அதிகாரி லஞ்ச லாவண்யத்துக்குப் பெயர் போனவர். அவரைப் பற்றி சட்டம்பி சுவாமிகள் நன்கு அறிந்திருந்தார். இருந்தாலும் அவரது அழைப்பை ஏற்றுக் கொண்டார். விருந்துக்கு அவரது சீடர்களும் வருவார்கள் என்ற ஒரு நிபந்தனையுடன். அதிகாரி சம்மதித்தார். குறிப்பிட்ட நாளன்று சட்டம்பி சுவாமிகள் தனியாக அந்த அதிகாரியின் வீட்டிற்குச் சென்றார்.

அதிகாரி சுவாமிஜி, சீடர்கள் எங்கே? என விசாரித்தார். அவர்கள் வெளியே உள்ளார்கள், உணவு பரிமாறியதும் வருவார்கள். உணவு பரிமாறப்பட்டதும் சுவாமிகள், அருமைச் சீடர்களே உள்ளே வாருங்கள் என்று உரக்க அழைத்தார். உடனே அந்த அதிகாரிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், பல தெருநாய்கள் வரிசையாக வந்து ஒவ்வோர் இலையிலும் அமர்ந்து பரிமாறப்பட்டிருந்த உணவுகளை உண்டன. அந்த நாய்கள் சத்தம் ஒன்றும் செய்யாமல், உண்டுவிட்டு வந்தது போலவே வரிசையாகத் திரும்பிச் சென்றன. வீட்டிலிருந்த யாவரும் ஆச்சரியப்பட்டுப் போயினர்.

அட, நாய்களுக்கு இவ்வளவு அடக்கமும், அமைதியுமா! சிரித்தவாறே சுவாமிகள் அவர்களிடம், இவை இப்போது சாதாரண நாய்களாக இருக்கலாம்; ஆனால் போன ஜன்மாவில் ஊழல் பேர்வழிகளாக இருந்தவர்கள். செய்த ஊழல்களின் பயனாக இந்த நாய்ப் பிறவியைப் பெற்று அவை செய்த தீயவினைகளை அனுபவிக்கின்றனர். என்றார். இதைக் கேட்டதும் அந்த அதிகாரி கலங்கினார். அவரது அகக்கண் திறந்தது. அன்று முதல் தனது ஊழல் செயல்களை விட்டு நல்ல வாழ்க்கையை மேற்கொண்டார். ஸ்ரீநாராயணகுருவின் குருவான சட்டம்பி சுவாமிகள் சுவாமி விவேகானந்தரின் பாரத யாத்திரையின் கேரள பகுதி பயணத்தில் சுவாமிஜியைச் சந்தித்து உரையாடி உள்ளார்.