வெள்ளி, 1 நவம்பர், 2019

திருக்களிற்றுப்படியார் பகுதி - 1

மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கனுள் திருவுந்தியாரை அடுத்துத் திருக்களிற்றுப்படியார் இடம் பெறுகிறது. இவ்விரண்டு நூல்களும் மெய்கண்ட தேவ நாயனாரின் காலத்துக்கு முற்பட்டவை என்பதை ஆராய்ச்சி அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளுகிறார்கள்.

திருவுந்தியாரின் ஆசிரியராகிய திருவியலூர் உய்யவந்ததேவ நாயனார் ஆளவந்த தேவ நாயனார் என்ற பெரியாரைத் தமது மாணவராக ஏற்றுக் கொண்டார் என்பர். ஆளவந்ததேவ  நாயனார் இயற்றியதாக நமக்கு எந்த நூலும் கிடைக்கவில்லை. இவருடை மாணவரே திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார். தம் ஆசிரியரிடத்திலே திருவுந்தியாரை முறைப்படி பாடம் கேட்ட திருக்கடவூர் உய்யவந்ததேவ நாயனார் திருஉந்தியாரில் கூறப்பட்ட செய்திகளை விளக்கியும் சில புதிய செய்திகளை இணைத்தும் இயற்றியருளினார்.

தில்லையிலே அம்பலவாணப் பெருமான் ஆனந்தக் கூத்து ஆடு கின்ற பொன்னரங்கினை ஏறிச் சென்று அடைவதற்கு ஐந்து படிகள் உள்ளன. இவை பஞ்சாக்கரப் படிகள் எனப்படும். அப்படிகளின் இருபக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாகக் கல்லால் வடிக்கப்பட்ட இரு களிறுகள் துதிக்கையை நீட்டிஇருப்பது போல அமைக்கப்பட்டுள்ளன. ஆதலால் அப்படிகள்  திருக்களிற்றுப்படி என்றும் வழங்கும் சுந்தரமூர்த்தி நாயனார் தில்லைப் பெருமானை வழிபட அங்குச் சென்று நின்ற நிகழ்ச்சியைச் சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்ற பொழுது

செய்தவப் பெரியோன் சென்று தாழ்ந்து எழுந்தான்
திருக்களிற்றுப்படி மருங்கு (தடுத்தாட். 105)
என்று கூறுவது நினையத்தகும்.

திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார் தில்லையில் சென்று தில்லைக் கூத்தப் பெருமானை வணங்கி இந்நூலைத் திருக்களிற்றுப் படியில் வைக்க அதனைக் கல்லால் இயன்ற களிறு தன் துதிக்கையால் எடுத்துக் கூத்தப் பெருமானின் திருவடி மலர்களில் வைத்தது எனவும், அதிலிருந்து இந்நூல் திருக்களிற்றுப்படியார் என்னும் பெயரினைப் பெற்றது எனவும் கூறுவர்.

கடவுள் வாழ்த்து

1 அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்று அறிக
அம்மையப்பர் அப்பரிசே வந்து அளிப்பர்  அம்மையப்பர்
எல்லா உலகுக்கும் அப்புறத்தார் இப்புறத்தும்
அல்லார்போல் நிற்பர் அவர்.

உமையொரு பாகராகிய சிவபெருமானே இவ் உலகிற்குத் தாயும் தந்தையும் என்று அறிக. உயிர்களுக்கு அருள் பாலிக்கும் பொருட்டு அம்மையப்பராக விளங்குகின்ற சிவபெருமான் திருவருளாகிய சத்தியுடன் தோன்றிப் பாச வீடும் சிவப்பேறும் அளித்தருளுவார். தன்னை விட்டு ஒரு போதும் நீங்காத அம்மையுடன் சிவபெருமான் எல்லா உலகங்களுக்கும் அப்பாற்பட்டவராய்த் திகழ்வார் எனினும் இந்த உலகத்திலும், உயிர்களின் உள்ளும் நீக்கமற நிறைந்து நிற்பார் அவர்.

உலகத்திலுள்ள சமயங்களில் எல்லாம் கடவுள் வழிபாடு என்பது அவனை ஆணாகக் கொண்டு அல்லது பெண்ணாகக் கொண்டு வழிபடுவதாகவே அமைவதைக் காண்கிறோம். சைவசமயத்தில் மட்டிலுமே வலப்பாகம் பெருமானும் இடப்பாகம் பிராட்டியுமாய் விளங்குகின்ற தொன்மைக் கோலத்தை வழிபடுகின்ற முறைமை பல நூற்றாண்டுகளாக இருந்து வருகின்றது. உமையொரு பாகன் தாயும் ஆனவன், அர்த்தநாரீசுவரன் என்றெல்லாம் வழங்குகிற பெயர்களை விடுத்து ஆசிரியர் அம்மையப்பர் என்ற திருப்பெயரைக் கூறி இறைவனை வழிபடுகிறார். எளிமையும் அழகும் நிறைந்த திருப்பெயர்  இப்பாடலில் நான்கு முறை பயன்படுத்தப் பட்டுள்ளமை ஒரு நயம்

சங்க நூல்களிலும், திருமுறைகளிலும் பல இடங்களில் இறைவனின் பெண் உரு ஒரு திறன் ஆகிய இவ்வருள் வடிவம் பலமுறை போற்றி அருளாளர்களால் வணங்கப்பட்டுள்ளது. உலக மாந்தர்க்கு அறைகூவி அறிவுறுத்துவதைப் போல இப்பாடலின் முதல் அடி அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்று அறிக என்று அமைந்துள்ளது. சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் வேறில்லை என்பதையும், அவன் தன் அருட்சத்தியை விட்டுப் பிரிவிலாக் கோமான் என்பதையும் தென்னாடுடைய சிவன் எந்நாட்டவருக்கும் இறைவன் என்பதையும் ஒரு வெண்பாவில் முதல் நான்கு சீர்களில் தெளிவுறுத்திக் கூறிய திறம் வியந்து போற்றுதற் குரியது.

தன் கருணைத் திறத்தினால் உயிர்களுக்கு அருள் பாலிக்கும் பொருட்டு இறைவன் எழுந்தருளுகிற போது தன் அருட் சத்தியோடு கூடவே தோற்றமளிப்பான் என்பது அதனை அடுத்த அடியில் எடுத்துரைக்கப்பட்டது. உயிர்களின் பக்குவத்துக்கு ஏற்றவாறும் வரிசையறிந்தும் அருள் வழங்குவான் என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது.

அம்மையப்பராகிய இறைவன் யாவற்றையும் கடந்து நிற்பவன் யாவற்றையும் கடந்து எங்கோ தொலைதூரத்தில் உள்ளனன் என்று கருதல் வேண்டா. உலகிலும் உயிர்களிலும் உள்நிறைந்து. உயிர்க்கு உயிராகி அவற்றின் தன்மை தனக்கு எய்தலின்றி விளங்குகிறான் இறைவன் என்பதனை இப்புறத்தும் அல்லார் போல் நிற்பர் என்று குறித்தார். கடந்த நிலையும் ஒவ்வொரு பொருளின் உள்ளே நிறைந்த நிலையும் உடையவன் இறைவன். எனவே அவன் கடவுள் நிறைந்த நிலையும் உடையவன் இறைவன். எனவே அவன் கடவுள் எனப்பட்டான் . எவ்வௌர் தன்மையும் தன்வயிற்படுத்துத் தானே ஆகிய தயாபரன் எம் இறை என்ற மாணிக்கவாசகப் பெருமான் திருவாக்கும் நினைதற்குரியது. அண்டங்கடந்தும் அணுவுக்குள் அணுவாகியும் இறைவன் நிற்பான் என்பது இப்பாடலால் உணர்த்தப்பட்டது. அம்மையோடு அப்பனாகிச் செறிவு ஒழியாது நின்ற சிவனடி சென்னி வைப்பாம் என்ற அருள்நந்தி சிவனாரின் திருவாக்கும் காண்க.

2 தம்மில் தலைப்பட்டார் பாலே தலைப்பட்டுத்
தம்மில் தலைப்படுதல் தாம் உணரின் தம்மில்
நிலைப்படுவர் ஓரிருவர் நீக்கி நிலை ஆக்கித்
தலைப்படுவர் தாம் அத்தலை.

உயிரின் பக்குவம் அறிந்து திருமேனி தாங்கி, அதற்கு அருள் பாலிக்கும் பொருட்டு வந்த ஞான ஆசிரியனின் திருவடிகளை வணங்கி உயிர் இறைவனோடு பொருந்தும் முறைமையினை அவரிடத்திலே உபதேச வழியால் பெற்று அவ்வழியிலே தவறாது ஒழுகி வந்தால் சத்தியும் சிவமுமாகிய இறைவன் உயிரை ஆட்கொள்ளுவான். அப்போது உயிரைப் பற்றியிருந்த தளைகள் நீங்கித் திருவருள் உயிரின் கண் நிலை பெறும். அதனால் சிவஞானமும் அதன் வழி மெய்ப்பொருளாகிய சிவமும் அப்பொழுதிலேயே அறியப்படும்.

இப்பாடலில் தம் தாம் தலை என்ற மூன்று சொற்களும் சொற்பின் வரும் நிலையாக ஆசிரியரால் அமைக்கப்பட்டன. தம்மில் தலைப் பட்டார் என்ற இடத்து தம் என்ற சொல்லால் குறிக்கப்பட்டது உயிர். உயிர் தன் சிற்றறிவினால் இறைவனை அடைய இயலாது. எனவே இறைவனே உயிரின் பக்குவ நிலை அறிந்து அதற்கு உண்மை ஞானம் உணர்த்துவதற்காக ஆசிரியத் திருமேனி தாங்கி எழுந்தருளுவான். அவருடைய திருவடியை உறுதியாகப் பற்றிக் கொண்டு உயிரும் சிவமும் பொருந்தும் நிலையை ஞான ஆசிரியன் உணர்த்த உயிர் உணருமாகில் அதனிடத்தே சத்தியும் சிவமுமாய ஒன்றே ஆகிய இருவர் நிலைத்து நிற்பர். உலகத்துப் பொருள்கள் மீது எழுகின்ற விருப்பம் தளைகளினால் உண்டாவது. அத்தளைகள் யாவற்றையும் நீக்கி உயிரைத் திருவருளிலே நிலைபெறுமாறு செய்து அந்நிலையிலேயே  உயிர்களுக்குக் காட்சி கொடுத்து அருளுவான். தாம் உணரின் என்ற இடத்து தாம் என்பது உயிரையும், தலைப்படுவர் தாம் அத்தலை என்ற இடத்துத் தாம் என்ற சொல் இறைவனையும் குறிக்கின்றன.

இப்பாடல் ,தலைப்பட்டார் நீர்த் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர்  என்ற திருக்குறளை நினைவூட்டுவதாகும்.

3 என்னறிவு சென்றளவில் யான் நின்று அறிந்தபடி
என்னறிவிலார் அறிக என்றொருவன்  சொன்னபடி
சொல்லக்கேள் என்று ஒருவன் சொன்னான் எனக்கு அதனைச்
சொல்லக்கேள் யான் உனக்கு அச் சொல்.

நான் அறிகிறேன் என்று எண்ணும் தன் முனைப்பு என்னை விட்டு நீங்கிய அளவில் எனக்கு ஒருவன் ஞான ஆசிரியனாக எழுந்தருளி அறிவுறுத்தினான். அந்நிலையில் அதனைப் பின்பற்றி நின்று நான் அறிந்த வற்றை ஆன்ம போதம் கெட்டுத் திருவருள் வழிப்பட்டு நின்றவர்கள் எல்லாம் கேட்டுப் பயன்  படும்படி யான் கேட்டவற்றை உனக்குச் சொல்லுவேன் என்று என் ஆசிரியப் பெருமான் எனக்கு உணர்த்தினான் . அதனை அம் முறைமையிலேயே உனக்கு நான் உணர்த்துவேன். அதனைக் கேட்டு நீ பயன் பெறுவாயாக.

திருக்களிற்றுப்படியாராகிய இந்நூல் எழுந்த வரலாற்றைக் கூறுவது இப்பாடல் தன்முனைப்பற்றவராகிய திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார் இறைவன் திருவருள் வழிநின்று பக்குவம் பெற்றவராகிய ஆளவந்த தேவ நாயனாருக்குத் திருவுந்தியார் என்ற ஞான நூலை வழங்கி அறிவுறுத்தினார். ஆளவந்த தேவ நாயனார் திருவுந்தியார்ப் பொருளை தம் மாணவராகிய திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனாருக்கு உபதேசித்தார். அம்முறையிலே பிறழாது அவர் தமது மாணவர்க்குத் திருக்களிற்றுப் படியாராகிய இந்நூலை அருளிச் செய்தார் என்பது இப்பாடலின் திரண்ட பொருள்.

என் அறிவு சென்ற அளவில் யான் நின்று அறிந்தபடி சொன்ன ஒருவர் திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார். சொன்னபடி சொல்லக் கேள் என்ற ஒருவன் ஆளுடைய தேவ நாயனார். யான் உனக்கு அச் சொல் சொல்லக் கேள் என்று அருளியவர் இந்நூல் ஆசிரியர்.

இதுவரை வந்த மூன்று பாடல்களும் கடவுள் வாழ்த்தாகவும். நூற் பயனாகவும், நூல் வரலாறு ஆகவும் அமைந்துள்ளன. இதன் பின்னர் வரும் பாடல்கள் திருவுந்தியாகப் பாடல்களை அடியொற்றி அவற்றின் தெளிபொருள் விளக்கமாக அமைகின்றன.

4 அகளமய மாய்நின்ற அம்பலத்து எம் கூத்தன்
சகளமயம் போல் உலகில் தங்கி  நிகளமாம்
ஆணவ மூல மலம் அகல ஆண்டான் காண்
மாணவக என்னுடனாய் வந்து.

வடிவம் குறியும் அற்ற பரம்பொருளாகிய அழகிய சிற்றம்பல முடைய கூத்தப் பெருமான் தனது பேரருளால் திருமேனி தாங்கி ஞான ஆசிரியனாக என்முன் தோன்றி என்னைப் பிணித்திருந்த மூலமலமாகிய ஆணவ மலம் என்னை விட்டு நீங்குமாறு என்னைத் தளையிலிருந்து விடுவித்து மாணவனே, என்னுடனே நின்று என்னை ஆண்டு கொண்டான்.

இப்பாடல் ஆசிரியராகிய திருகடவூர் உய்யவந்த தேவநாயனார் தம் மாணவனை முன்னிலைப்படுத்தி விளித்து எல்லையற்ற பரம் பொருள் தன் பெருங்கருணையால் திரு உருத் தாங்கி ஞான ஆசிரியனாய் எழுந்தருளி வந்து ஆணவமாகிய மூலமலத்தினை அகற்றிப் பாச விலங்கொடித்துத் தன்னை ஆட்கொண்ட கருணைத் திறத்தைப் போற்றுகிறார்.

அகளம், உருவற்று எல்லையற்று விளங்கும் தன்மை. சகளம், உருவம் கொண்டதனால் எல்லைக்கு உட்பட்ட திருமேனி சகளமயம் என்பது நம் போலும் மாயையின் காரியங்களால் ஆன உடம்பு அன்று என்று உணர்த்துவதற்குச் சகள மயம் போல உலகில் தங்கி என்றார். எனவே தோற்றத்தில் சகளமும் உண்மையால் அகளமும் என்று தெளிவுறுத்தினார். நிகளம் சங்கிலி, விலங்கு. ஆணவமாகிய மூலமலம் உயிரைப் பிணிந்து உள்ளதனால் நிகளமாம் ஆணவ மூலமலம் என்று குறிப்பிட்டார். ஒரு நாளும் அழியாத் தன்மையுடையதாகிய ஆணவ மலத்தை அதன் வலிகெடச் செய்து உயிருக்கு உண்மை ஞானத்தை அருளுவதை இப்பாடலில் போற்றினார்.

5 ஆகமங்கள் எங்கே அறுசமயம் தான் எங்கே
யோகங்கள் எங்கே உணர்வு எங்கே  பாகத்து
அருள் வடிவம் தானுமாய் ஆண்டிலனேல் அந்தப்
பெருவடிவை யார் அறிவார் பேசு

அம்மையப்பராகிய இறைவன் தன்னை விட்டுப் பிரியாத திருவருளும் தானுமாக எளிவந்து பக்குவம் பெற்ற உயிர்களை ஆண்டிலனேல் அண்டங்கடந்து நிற்கும் அவனுடைய பெருவடிவை யாரால் அறிய இயலும்? அவ்வாறே இறைவன் அருளே திருமேனியாகக் கொண்டு ஆக மங்களை அருளிச்  செய்யாவிடிலோ, அகச் சமயங்கள் ஆறினையும் உணர்த்தாவிடிலோ, யோகியாய் இருந்து உயிர்களுக்கு யோகத்தை உணர்த்தாவிடிலோ இப்பெருமை மிக்க அருள் நூலும் அருள் வழியும் உலகில் எவ்வாறு நிலைபெறும்?  சைவ ஆகமங்கள் இருபத்து எட்டும் சிவபெருமான் திருமுகங்கள் ஐந்திலிருந்தும் தோன்றின என்பர் பெரியோர். ஆறு சமயத்து அவரவரைத் தேற்றியவனும் சிவபெருமானே என்பது அப்பர் பெருமான் அருள்வாக்கு சிவபெருமான் யோகியாய் இருந்து உயிர்களுக்கு யோகத்தை உணர்த்தியும், போகிறாய் இருந்து உயிர்களுக்கு போகத்தை வழங்கியும் அருள் பாலிக்கிறான் என்பது அருளாளர்கள் கூறும் உண்மை. உயிர் உணர்ந்த உணரும் இயல்பினை உடையது. எனவே கட்டு நிலையில் உயிர்கள் அறியாவண்ணம் உள்நின்று உணர்த்தியும், வீட்டு நிலையில் உயிர்களின் பக்குவத்திற்கு ஏற்பத் தன்மை முன்னிலை படர்க்கை ஆகிய மூவிடங்களில் நின்று உணர்த்தியும் அருள்பவன் சிவபெருமானே ஆதலால் உணர்வு எங்கே என்றும் வினவினார்.

தானே வந்து இரங்கித் தலையளித்து ஆட்கொண்டு அருளும் சத்தி சிவத்தின் கருணையினால் உலகில் ஆகமங்களும் அறுவகைச் சமயங்களும் யோக நெறியும் பயிற்சியும் இறை உணர்வும் திகழ்கின்றன. என்பது இப்பாடலில் விளக்கப்பட்டுள்ளது.

6 சாத்திரத்தை ஓதினார்க்குச் சற்குருவின் தன்வசன
மாத்திரத்தே வாய்க்கும்நலம் வந்துஉறுமே  ஆர்த்தகடல்
தண்ணீர் குடித்தவர்க்குத தாகம் தணிந்திடுமோ
தெள்நீர்மையாய் இதனைச் செப்பு.

ஞானாசிரியரின் துணையின்றி ஞான நூல்களைக் கற்கப் புகுவார் அந்நூற்களின் மெய்ப்பொருளை உணர இயலாது. அவ்வாறின்றி நல்ல ஞானாசிரியனை அடுத்து உபதேசம் பெறுவார் அவ்வுபதேசத்தைக் கேட்ட மாத்திரத்திலேயே நன்னலம் பெற நிறைந்த ஞானத்தைப் பெறுவார்கள். அலைகள் ஆரவாரிக்கின்ற பெருங்கடல் ஆயினும் அதில் உள்ள நீரைக் குடித்தவர்க்கு நீர்வேட்கை தணிந்திடாது. தெளிந்த அறிவினை உடைய மாணவனே இதனை அறிவாயாக.

ஆரணமும் அருள் நூல்களும் கடல் போல் விரிந்துள்ளன. தக்க ஆசிரியரின் துணையின்றி அந்நூல்களைக் கற்க முற்படுகிறவர்களுக்கு அவற்றின் தெளித்த பொருள் விளங்குவதில்லை. ஆனால் ஞானாசிரியர் ஒருவர் உணர்த்துகிற மொழியைக் கேட்ட அளவிலேயே பிறவி வெப்பத்தினால் தோன்றிய மயக்கங்கள் எல்லாம் அற்றுத் தெளிவு பிறக்கும்.

சாத்திரக் கடலுக்கு ஒப்பாக ஆர்க்கின்ற அலைகடல் உவமை கூறப் பட்டது. எல்லையற்ற பெருங்கடல் போன்றன எல்லையற்ற ஞான நூல்கள். கடல் நீரை அள்ளிப்பருகினால் அதன் உவர்ப்புத் தன்மையினால் நீர் வேட்கை தணியாது. ஆனால் அருகிலுள்ள சிறிய ஊற்றின் தண்ணீர் விடாய் தீர்ப்பது போன்று ஞான ஆசிரியரின் அருள் மொழி ஞான வேட்கையைத் தணிக்கும்.

கடல் பெரிது. தண்ணீரும் ஆகாது. அதன் அருகே சிறு ஊறல்  உண்ணீரும் ஆகிவிடும் என்ற அறநூல் கருத்தும்,உண்ணீர் மருங்கின் அதர் பலவாகும் என்ற புறநானூற்றுப் பாடல் வரியும் இங்கு நினைதற்குரியன.

இப்பாடலால் வெறும் நூலறிவு பயன் தராது என்பதும் ஞானாசிரியன் வழிகாட்ட, அவனது உபதேச மொழிகளைக் கேட்ட அளவிலே பயன் விளையும் என்பதும் உணர்த்தப்பட்டன. தெண்ணீர்மையாய் என்று மாணவனை விளித்தார். அவன் தெளிந்த  அறிவினை உடையவன் என்பதை உணர்த்துவதற்காக.

7 இன்று பசுவின் மலம் அன்றே இவ்வுலகில்
நின்ற மலமனைத்தும் நீக்குவதிங்கு  என்றால்
உருவுடையான் அன்றே உருவழியப் பாயும்
உருவருள வல்லான் உரை.

நம் போலவே மாயையின் காரியங்களாகிய உடல் கருவி முதலியவற்றில் கட்டுண்டு காட்சி தரும் குரு நம்மில் ஒருவராதல் அன்றி நம்மைக் கட்டியிருக்கும் மலங்களை விடுவிக்க வல்லவரோ என்ற ஐயத்தைத் தீர்ப்பது இந்தப் பாடல்.

இவ்வுலகில் பசுவின் சாணம் இடங்களைத் தூய்மைப்படுத்துவதற்கும். அனைந்து ஆட்டுதற்கும், திருநீற்றினை விளைவிப்பதற்கும் பயன் படுத்தப்படுகிறது. பசுவின் சாணம் அழுக்கு எனக் கூறப்படுமாயினும் புற அழுக்கையும் அக அழுக்கையும் போக்குவதற்குப் பயன்படுத்துவது போல ஞானாசிரியன் மேற்கொண்ட உருவம் மாணவரது பாசங்கள் அனைத்தையும் அகற்றும். ஞானமே வடிவாக உடைய உருவினை வழங்க வல்லது ஆகும்.

கோமயம் என்று உயர்த்து வழங்கப்படுகிற ஆன் சாணம் இறைவனுக்கு உகந்தது என்பது திருநாவுக்கரசு நாயனார் ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சு ஆடுதல் என்று அருளியமையால் விளங்கும். ஆன்சாணமே பராவணமாகிய திருநீற்றை விளைவிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. திருநீற்றின் பெருமையைத் திருஞானசம்பந்த நாயனார் ஒரு பதிகம் முழுவதும் எடுத்துக் கூறிப் பாராட்டுகிறார். திருநீறு புறத்தூய்மை மட்டுமின்றி அகத்தூய்மையையும் தரும். பூசும் நீறுபோல் உள்ளும் புனிதர்கள் என்பது சேக்கிழார் திருவாக்கு. அழுக்கைக் கொண்டு அழுக்கைப் போக்குவது போல உயிர்களின் அழுக்கைப் போக்குவதற்காக அவற்றைப் போலவே உடல் தாங்கி ஞான ஆசிரியனாகி இறைவன் எழுந்தருளுவான். இதில் மாறுபாடு உண்டா கூறுவாயாக என்று கேட்கும் முறையில் இப்பாடல் அமைந்துள்ளது. இப்பாடலில் உரு என்ற சொல் மூன்று இடங்களில் வந்தது. முதலில் வருகிற உரு ஆசிரியன் திருமேனி தாங்கி வருவதையும் இரண்டாவது உரு மாயைத் தொடக்கால் ஆன உயிர்களது உடலையும், மூன்றாவது உரு ஞானமே வடிவான நிலையினையும் குறிக்கின்றன.

8 கண்டத்தைக் கொண்டு கருமம் முடித்தவரே
அண்டத்தின் அப்புறத்தது என்னாதே  அண்டத்தின்
அப்புறமும் இப்புறமும் ஆரறிவுஞ் சென்றறியும்
எப்புறமும் கண்டவர்கள் இன்று.

காணப்பட்ட திருமேனியுடைய ஞான ஆசிரியனின் உபதேச மொழிகளைக் கடைப்பிடித்து, தன் முனைப்பற்றுத் திருவருளில் ஒடுங்கி நின்றார்களே தமது வினைத் தொடக்கை அறுத்தவர்கள் ஆவார்கள். அத்தகையவர்களே பரம்பொருளை உலகின் உள்நின்றது என்றும், உலகைக் கடந்து நின்றது என்றும் பலவாறு ஊசலிடாமல் அப்பரம்பொருள் அண்டத்தின் உள்ளும் இருக்கும் புறம்பும் இருக்கும் எப்புறத்தும் இருக்கும். அறிவுக்கு அறிவாகவும் அறிவைக் கடந்ததாகவும் இருக்கும் என்று அறிந்தவர்கள் ஆவார்கள்.

முன்னே வந்து எதிர் தோன்றும் ஞான ஆசிரியன் வழங்கியருளுகின்ற மெய்ஞ்ஞானப் பொருள் மொழிகளை அவன் வழங்கியவாறே கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து நிட்டை கூடி அருளில் தலைப்பட்டுத் தமதுவினைத் தொடர்பை அறுத்துக் கொண்டவர்கள் பரம்பொருளின் உண்மை நிலையை ஐயம் திரிபற உணர்ந்தவர்கள் ஆவார்கள். ஞானாசிரியன் வழங்கும் முறை உயிரின் பக்குவத்திற்கேற்பப் பல்வகைப்படும். திரு நோக்கால் , தொட்டருள்வதால், திருவாக்கால், மானதத்தால் இன்னபிற வகைகளால் உணர்த்தும் முறைமைகளை எல்லாம் இதனுள் அடக்கிப் பொருள் கொள்க.

கருமம் முடித்தது என்பது வினைத் தொடர்பை அறுத்ததோடு பாச நீக்கம் முழுவதையும் உணர்த்திற்று. பரம்பொருள் அண்டத்தின் இப்புறமும் அறிவில் கலந்து உயிருக்கு உயிராகியும் சொல்லும் மனமும் கடந்தது என்றும் திருவருள் பெற்ற பேரறிவாளர்கள் தெளிய உணர்வார்கள் என்பதை இப்பாடல் உணர்த்திற்று .

9 அன்று முதல் ஆரேனும் ஆளாய் உடனாகிச்
சென்றவர்க்கும் இன்னது எனச் சென்றதில்லை  இன்று இதனை
எவ்வாறு இருந்த தென்று எவ்வண்ணஞ் சொல்லுகேன்
அவ்வாறு இருந்தது அது.

பரம்பொருளாகிய சிவபெருமானுடைய திருவடிக்கு ஆளாகி அவன் ஆணைக்கு ஆட்பட்ட பெரியவர்கள் யாராயினும் அவர்கள் அனைவரும் இறைவனின் பேரின்பம் இத்தன்மையது என்று முற்ற அறிந்த தில்லை அவ்வாறு இருக்க அப்பரம் பொருள் வழங்குகின்ற திருவடி இன்பம் எவ்வாறு இருக்கும் என்று நான் எப்படிக் கூறுதல் கூடும்? அப்பேரின்பம் தனக்கு ஒப்பும் உவமையும் இல்லாமல் அத்தன்மையதாகவே இருந்தது என்பதன்றி வேறு என்ன சொல்ல முடியும்?

உலகில் தோன்றிய உயிர்கள் எண்ணிறந்தன. அவ்வாறே இறை வனின் திருவடிப்பேறு பெற்ற உயிர்களும் கணக்கற்றன.  பிறந்தநாள் மேலும் பிறக்கும் நாள் போலும் துறந்தோர் துறப்போர் தொகை  என்று திருவருட் பயன் (பாடல் 11) உணர்த்துகிறது. அவ்வாறு திருவடிப்பேறு அடைந்தோர் யாரே ஆயினும் அவர்கள் இறைவனுக்கு ஆட்பட்டு உடனாகி எல்லையில்லாப் பேரின்பம் துய்த்தனரேயன்றி, அதனை அளவிட்டு அறிந்தார்கள் அல்லர். பேசுவதற்கரிய பேரின்ப வெள்ளத்தை எவ்வாறு இருந்தது என்று எப்படிச் சொல்லுவேன் அது அப்படித்தான் இருந்தது என்பது அன்றி ஒப்பிடுவதற்கோ உவமை சொல்லுவதற்கோ இயலாது.

சிவானந்தப் பெருவெள்ளம் அகத்தில் கண்கொண்டு அனுபவிக்கப்படுகிற ஆனந்தமேயன்றி விண்டுரைக்க முடியாத தன்மை உடையது என்பதைத் திருமந்திரத்தில் திருமூல தேவநாயனார் மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய சுகத்தைச் சொல் எனில் சொல்லுமாறு எங்ஙனம் என்று கூறியருளுகிறார். சிவானுபவம் சொற்பதம் கடந்தது என்பதை இந்த அரிய பாடலால் உணர்த்தினார் ஆசிரியர்.

ஆரேனும் ஆளாய் உடனாகி என்பதற்குத் திருமாலும் நான்முகனுமாகிய தேவர்களும் கூட இறைவனுக்கு ஆட்பட்டு அவன் ஏவல் வழி ஒழுகினார்களேயன்றி அவன் இன்ன தன்மையன் என்று அறிந்தாரில்லை என்று பொருள் கொள்வர் சில உரையாசிரியர்கள்.

10 ஒன்றுங் குறியே குறியாத லால் அதனுக்கு
ஒன்றுங்குறி யொன்று இலாமையினால்   ஒன்றோடு
 உவமிக்க லாவதுவும் தானில்லை ஓவாத்
தவமிக்கா ரே இதற்குச் சான்று.

சிவபெருமானுக்கு அவனுடன் நீக்கமின்றி நிற்கும் அவனது திருவருளே வடிவமாகும். அத்திருவருளைத் தவிரப் பரம்பொருளோடு பொருத்திக் கூறக் கூடிய அடையாளம் வேறு ஒன்றும் இல்லை. பெருமானுக்கு உவமை காட்டிச் சொல்லத் தக்க பொருளும் உலகத்தில் வேறு எதுவுமில்லை. எனின் அத்தகையதொரு செம்பொருள் உண்டு என்பதற்குச் சான்று எதுவெனின் அவனோடு ஒற்றித்திருந்து இடைவிடாத தவத்தினை உடைய திருவருட் செல்வர்களேயாவர்.

ஒன்றுதல்  பொருந்துதல். குறிகளும் அடையாளமும் குறித்துக் சொல்லுவதற்கரிய பரம்பொருளுக்கு அவனது திருவருளையன்றித் திரு மேனி என்ற வேறு ஒன்று இல்லை. இதனையே சிவஞான சித்தியாரில்

உருஅருள் குணங்களோடும் உணர்வு அருள் உருவில் தோன்றும்
கருமமும் அருள் அரன்தன் கரசரணாதி சாங்கம்
தரும் அருள் உபாங்கம் எல்லாம் தான் அருள் தனக்கு ஒன்று (இன்று)
அருள்உரு உயிருக்கு என்றே ஆக்கினன் அசிந்தன் அன்றே (பாடல்67)

என்னும் திருப்பாடலில் ஆசிரியர் அருள்நந்தி சிவம் எடுத்துரைத்தார். எனவே சிவபெருமானோடு பொருந்திய அருளே அவனுக்கு அடையாளமாகி வேறு ஒன்றும் அடையாளமாகப் பொருந்துவதில்லை என்றார். அடையாளம் இல்லையேனும் உவமை கூறத்தகுமோ எனின் அதுவும் இல்லை என்பதை அறுதியிட்டுக் கூறினார். தனக்கு உவமை இல்லாதான் என்று திருவள்ளுவரும், ஒப்புடையன் அல்லன்... ஓர் உவமன் இல்லி என்று திருநாவுக்கரசு நாயனாரும், ஒப்பு இன்மையான் (திருவருட்பயன்3) என்று உமாபதி சிவனாரும் அருளியவற்றை இங்கு நினைவு கூர்க.

ஒப்பற்ற பரம்பொருளை உணர்வதுதான் எப்படி? அதற்குச் சான்று ஏது? என்று கேட்பாருக்கு ஓயாத பெருந்தவத்தில் உள்ளம் திளைத்து அவனோடு ஒன்றியிருக்கும் சிந்தையுடைய அவனது மெய்யடியார்களே இதற்குச் சான்று என்று கூறினார்.

11 ஆற்றால் அலைகடற்கே பாய்ந்த நீர் அந்நீர்மை
மாற்றி அவ் வாற்றான் மறித்தாற்போல்  தோற்றிப்
புலன்களெனப் போதம் புறம்பொழியும் நந்தம்
மலங்களற மாற்றுவிக்கும் வந்து.

ஆற்றின் வழியே சென்று அலைகடலில் பாய்ந்த நீர் தன் இயல்பான தன்மை கெட்டுக் கடல் நீரின் தன்மையை ஏற்கும். ஏதேனும் ஒரு காரணத்தால் அந்நீர் மீண்டும் ஆற்றின் உள்ளே மறித்துப் பாய நேரிட்டாலும் அது மீண்டும் ஆற்று நீரின் தன்மையைப் பெறாது கடல் நீரின் தன்மையையே கொண்டு இருக்கும். அதுபோலத் தன் முனைப்பற்றுச் சிவபரம் பொருளோடு ஒன்றி அவன் திருவடிகளையே சிந்தித்திருப்பார்க்கு அவர்களது அறிவு புலன்வழிச் செல்லாமலும் பசுகரணங்களாக அல்லாமலும் சிவகரணங்களாகவே விளங்கும். அன்றியும் அது நமது மலங்களையெல்லாம் அறவே மாற்றியருளும்.

இப்பாடல் அணைந்தோர் தன்மை என்ற சீவன் முத்தரது நிலையை எடுத்து விளக்குகிறது. முந்தியபாடலில் மெய்யடியார்களே இறைவனுடைய திருவருட் பெருக்கை நமக்கு உணர்த்தும் சான்றுகளாவர் எனக் கூறிய ஆசிரியர் இப்பாடலில் அதன் தொடர்ச்சியாக மேலும் சிலவற்றைக் கூறலுற்றார். சீவன் முத்தர்கள் சில நேரங்களில் புலன் வழிச் செல்லும் உணர்வோடுகூடக் காட்சியளிக்கிறார்களே என்ற வினாவிற்கு , சீவன் முத்தர்கள் புறத்தே செல்லும் புலன் உணர்வு கொண்டவர்கள் போல் தோன்றினும் அவர்களின் பசுகரணங்கள் யாவும் சிவ கரணம் ஆனதால் உலகில் தோய்வற நிற்பர் என்றார்.

ஆற்றலிருந்து கடலில் பாய்ந்த நீர் , உவா நாட்களிலும், கடல் பொங்கும் காலத்தும் மீண்டும் ஆற்றுக்குள்ளேயே புகும். அவ்வாறு நிகழும் போதும் அப்படிப் புகுந்த நீர் கடல் நீரின் தன்மையையே கொண்டிருக்குமே அல்லாமல் ஆற்று நீராக இருக்காது என்ற உவமையை எடுத்துக் காட்டுகிறார். இங்கே கடல் நீர் இறைவனது திருவருட் பெருக்கையும் ஆற்று நீர் அவனது திருவடியை அடைந்த மெய்யடியார்களையும் குறித்தன.

புலன்வழிப்படர்வது போன்ற மெய்யடியார்களின் உணர்வும் நம் போல் வாரது மலப்பிணிப்பை அறவே மாற்றுவிப்பதற்குப் பயன்படுமே யன்றி வேறன்று என்றும் உறுதிபடக் கூறினார்.

12 பாலை நெய்தல் பாடியதும் பாம் பொழியப் பாடியதும்
காலனை அன்று ஏவிக்கராம் கொண்ட பாலன்
மரணந் தவிர்த்ததுவும் மற்றவர்க்கு நந்தம்
கரணம்போல் அல்லாமை காண்.

சிவபெருமான் திருவருளால் அவனுடைய அடியார்களாகிய மூவர் முதலிகளும் பாலை நிலத்தை நெய்தல் நிலமாகும்படி திருப்பதிகம் பாடியதும், பாம்பு கடித்து இறந்த சிறுவனை மீளவும் உயிர்ப்பித்ததும், பல் லாண்டுகளுக்கு முன்பு முதலையால் விழுங்கப்பெற்ற பாலனைத் திருப்பதிகம் பாடி உயரோடு மீட்டுக் கொடுத்தும் ஆகிய இத்தகைய பல அற்புதச் செயல்களைச் செய்தனர். இது எவ்வாறு நிகழ்ந்தது எனில் அந்த அருளாளர்களின் கரணங்கள் யாவும் நம் போல்வார் கரணங்களைப் போலப் பசு கரணமாய் நில்லாமல்  சிவகரணங்களாய்த் திகழ்ந்தமையினாலேதான் இவ்வற்புதச் செயல்கள் நிகழ்ந்தன என்பதை அறிவாயாக.

திருஞான சம்பந்த நாயனார் மூவாண்டில் ஞானப்பால் அருந்தித் திருப்பெருகு சிவஞானம் கைவரப்பெற்றார் . அவர்தம் தாயார் தோன்றிய பதியாகிய திருநனி பள்ளிக்குச் செல்லும்போது அப்பதி பாலை நிலமாக இருப்பதைக் கண்டார். காரைகள் கூகை முல்லை  என்று தொடங்கும் திருப்பதிகத்தை அவர் அருளிச் செய்யப் பாலை நிலம் நெய்தல் நிலமாக மாறியது.

திருநாவுக்கரசு நாயனார் திங்களூரில் அப்பூதியடிகளின் மூத்த திருமகன் பாம்பு தீண்டி இறந்த போது ஒன்றுகொலாம் என்று தொடங்கும் திருப்பதிகம் பாடி அவன் மீண்டும் உயிருடன் எழுமாறு இறைவன் திருவருளால் வியத்தகு செயலைச் செய்தார்.

சுந்தரமூர்த்தி நாயனார் திருப்புக்கொளியூர் அவிநாசியிலே பல்லாண்டுகளுக்கு முன் முதலையால் விழுங்கப் பெற்ற சிறுவன் ஒருவனை  எற்றான் மறக்கேன் என்று தொடங்கும் பதிகத்தைப் பாடி அப்பதிகத்தின் நான்காவது பாடலில் கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே  என்று வேண்டவே ,மாண்ட சிறுவன் இறைவன் திருவருளால் மீண்டும் எழுந்த அற்புத நிகழ்ச்சி நிகழ்ந்தது.

இம்மூன்றும் அற்புதங்களும் திகழ்ந்தமைக்குக் காரணம் நாயன்மார் மூவரின் கரணங்கள் யாவும் சிவகரணங்களாகத் திகழ்ந்தமையே என்று விளக்குகிறார் ஆசிரியர். அருளாளர்கள் மூவரும் தற்போதம் நீங்கித் தம் முனைப்பற்று இறைவன் திருவருள் வழியிலே ஒழுகியவர் ஆதலால் வியத்தகு செயல்களை ஆற்றினார்கள்,

சங்கரர் திக்கு விசயம் பற்றிக் கூறும் நூலில் ஆதிசங்கரர் இறந்து போன ஒரு சிறுவனைத் தாம் மீட்டுத் தருவதாக மும்முறைமந்திரம் செபித்து நீர் தெளித்தும் அவன் உயிர் பெற்று  ஏழவில்லை என்பதும், வானிலிருந்து எழுந்த அசரீரி வாக்கு அவரை அம்முயற்சியில் ஈடுபடலாகாது என்று தடுத்தமையும் இங்கு நினைவு கூரற்பாலன. நான்செய்கிறேன் என்னும் தன் முனைப்புப் பசுகரணமாய் நிற்பதையும் இறைவன் திருவருள் வழி நடந்தேறட்டும் என்ற நினைப்பு பசு கரணங் கெட்டுச் சில கரணமாய் நிற்றலையும் இப்பாடலில் உணர்த்தினார்.

13 தூங்கினரைத் தூய சயனத்தே விட்டதற்பின்
தாங்களே சட்ட உறங்குவர்கள்  ஆங்கது போல்
ஐயன் அருட்கடைக்கண் ஆண்டதன் பின் அப்பொருளாய்ப்
பைய விளையுமெனப் பார்.

உறக்கம் வந்தவர்களைத் தூய்மையான படுக்கையிலே விட்டதன் பின் அவர்கள் தூங்குகிறோம் என்ற உணர்வின்றி எவ்வித முயற்சியுமின்றித் தாமாகவே ஆழ்துயில் கொள்ளுவார்கள். அதுபோலவே சரியை, கிரியை, யோகம் என்ற மூவகைத் தொண்டாற்றிப் பக்குவப் பட்ட உயிர்கள் ஞான ஆசிரியரது திருக்கடைக்கண் நோக்கம் வாய்க்கப் பெற்ற அளவிலே இறைவனுக்கு மீளா அடிமைத்திறம் பூண்டு, அவன் திருவருள் வழி எந்த முயற்சியும் இன்றி நிற்பார்கள். அதன் பின்னர் அவர்களிடத்துச் சிவபெருமானின் திருவருள் ஞான விளக்கமும் மெல்ல மெல்ல விளையும். இதனை முன் பாடலில் கூறிய அருளாளர்களின் வாழ்வில் பார்த்துத் தெளிந்து கொள்க.

தூங்குதல் என்பது இங்கே உயிர் தன் செயலற்றுத் தான் அற்று, உணர்வு புறத்தே செல்லாது சிவபெருமானின் திருவருளிலே ஒடுங்கி இருப்பதை உணர்த்துகிறது.  தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம் என்ற தாயுமானவர் வாக்கும் இந்த நிலையையே உணர்த்திற்று.

திருவருட் பயனில் ஆசிரியர் உமாபதி சிவம் அணைந்தோர் தன்மை கூறுமிடத்து, ஓங்கு உணர்வின் உள் அடங்கி உள்ளத்துள் இன்பு னையே ஒடுங்கத் தூங்குவர் மற்று ஏது உண்டு சொல்  என்று இக்கருத்தினையே விளக்குகின்றார்.

சட்ட உறங்குவார்கள் என்பது செம்மையாகத் தூங்குவார்கள் என்ற பொருளை உணர்த்திற்று. பிறர்தலையீடும், தமது முயற்சியுமற்றுத் தாமே துயில் கொள்ளுவர் என்பதாம்.

அவ்வாறே தலைவனாகிய ஞான ஆசிரியன் திருக்கடைக்கண் சாத்தி ஆண்டு கொண்டதன் பின் தன் முனைப்பற்றுத் திருவருளிலே உறைத்து நின்று ஒழுகுவார்க்கு  அப்பொருளாய் என்று குறிக்கப்பட்ட சிவபரம் பொருளின் திருவடி ஞானம் மெல்ல விளையும். இதற்கு எடுத்துக் காட்டு முன் கூறப்பட்ட பாடலில் குறிப்பிடப்பட்ட அடியார்களின் வரலாறே.

14 உள்ள முதலனைத்தும் ஒன்றாய் உருகவரின்
உள்ளம் உருகவந்து உன்னுடனாம் தெள்ளி
உணருபவர் தாங்கள் உளராக என்றும்
புணரவர நில்லாப் பொருள்.

தத்துவங்கள் யாவும் உயிரை விட்டு நீங்கிய நிலையிலே திருவருள் சத்தி உயிர் மீது பதியும் அந்த நிலையில் சிவபரம் பொருள் உயிரின் உள்ளம் உருக அதனுடன் வந்து பொருந்தும் அதுவல்லாமல் பரம் பொருளை இத்தன்மையது என்று நான்தெளிந்து உணர்வேன் என்று முயலுகின்ற உயிருக்குச் சிவபரம் பொருள் எட்டாமல் நிற்கும்.

முதல் என்ற சொல் இங்குத் தத்துவங்களைக் குறித்தது. இத்தத்து வங்கள் யாவும் மாயையிலிருந்து விரிந்து காரியப்பட்டு உயிருக்குத் துணை செய்வன. இவை காரண நிலையிலிருந்து வெளிப்பட்டுத் தோன்றி, ஒடுக்க நிலையில் மறைந்து போகும் இயல்புடையன. ஆயினும் அவை இல்லாமல் போகாமல் மாயையின் உள்ளே காரண வடிவாய் நிற்றலின் உள்ள முதல் என்று கூறினார். மாயையை உள்பொருள் என்றே சைவசித்தாந்தம் கொள்ளுகிறது.

இத்தத்துவங்களில் இருந்து முற்றிலும் நீங்குவது அனைத்தும் ஒன்றாய் உருகுதல் என்று குறிப்பிடப்பட்டது. அவ்வாறு நீங்கிய நிலையில் ஆன்மா இறைவனின் பெருங்கருணையை நினைத்து நெகிழ்ந்து உருகும். அந்த நெகிழ்ச்சி உயிருக்குத்திருவருள் வந்து பொருந்தியதனால் தோன்றியதாகும். அந்நிலையில் இறைவன் ஆன்மாவும் தானும் வேறில்லை என்னும் வண்ணம் உடனாய் நிற்பான். இவ்வாறு இல்லாமல் இறைவனை நானே தெளிந்து அறிவேன் என்று முற்படுகிற ஆன்மா தன் முனைப்போடு செயல்படுவதனால் மெய் பொருளாகிய இறைவன் அதற்கு அகப்படாமல் விலகியே நிற்பான்.

யான் எனது என்று கருதும் நிலை அற்றுப் போனாலன்றி இறைவனை உணர்தல் உயிரால் ஆகாது என்பதை இப்பாடலில் வலியுறுத்தினார்.

15 நல்லசிவ தன்மத்தால் நல்லசிவ யோகத்தால்
நல்லசிவ ஞானத்தால் நான் அழிய  வல்லதனால்
ஆரேனும் அன்புசெயின் அங்கே தலைப்படும் காண்
ஆரேனும் காணா அரன்.

முறையே நன்மையைத் தரும் சிவதருமத்தினாலும், சிவ யோகத்தினாலும் சிவ ஞானத்தினாலும் உயிர் படிப்படியே முன்னேறிப் பக்குவப்பட்ட காலத்து நான் என்னும் உணர்வு அழியும். அத்தகைய வன்மை கிட்டுவதனால் யார் ஒருவர் சிவபெருமானிடத்து அன்பு செய்வாரோ அவருக்கு யாராலும் காண்பதற்கரிய சிவபெருமான் எளிவந்து வெளிபட்டுத் தோன்றுவான்.

தவம் மேற்கொண்டு ஒழுகுவார்க்கு இறைவனின் திருவருள் கிடைக்கும் என்பது எல்லாச் சமயத்தாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து. ஆயினும் தவத்தின் இலக்கணம் ஒவ்வொரு சமய நெறியிலும் வேறுபடும். பட்டினிகிடத்தல் , உடம்பை ஒறுத்தல் , வெயில் காலத்தில் சுடுபாறையில் கிடத்தல் , கடும் குளிரில் தண்ணீரினுள் நின்று நோற்றல் என்று தவமுயற்சி சமயங்களால் வேறு வேறாகக் கொள்ளப்பட்டன.

சரியை என்பது மெய்த் திருத்தொண்டு. திருக்கோயில் அலகிடுதல், பூத்தொடுத்தல் முதலிய தொண்டுகளாகும். கிரியை என்பது சிவபெருமானுடைய அருஉருவத் திருமேனியைத் திருமஞ்சனம் ஆட்டுதல் , திருப்பள்ளித் தாமம் சாத்தி உள்ளம் உருகி வழிபடுதல். யோகம் என்பது உயிர்ப்பை அடக்கி உள்ளக்கிழியில் உரு எழுதிச் சிவபெருமானைச் சிந்தையில் கொண்டு வழிபடுவது. ஞானம் என்பது கேட்கும் சிந்தித்தும் தெளிந்தும் நிட்டை கூடியும் சிவபரம் பொருளை வழிபடுவது.

இந்தப் பாடலில் சரியை நிலையும் கிரியை நிலையும் நல்ல சிவதன்மம் என்று ஒன்றாகக் குறிப்பிடப்பட்டன. அதனை அடுத்த யோகம் என்ற நெறி நல்ல சிவ யோகத்தால் எனப்பட்டது . அட்டாங்க யோகம் சிவ பெருமானை நோக்கியே இயற்றப்படுதல் வேண்டும் என்பதைத் திருமூல தேவநாயனார் அருளிச் செய்த திருமந்திரத்தில் தெளிவாக எடுத்துரைத்தார். இந்த மூன்று படிநிலைகளையும் முறையே கடந்து வந்த உயிர்களுக்குச் சிவஞானம் தைவாப்பெறும் திருவடி ஞானமே சிவஞானம் என்பதை உணர்தல் வேண்டும்.

யார் ஒருவர் இந்தப் படிமுறையை மேற்கொண்டு ஒழுகினாலும் அவர்களுக்குச் சிவபெருமானிடத்து அன்பு தோன்றி மேன்மேல் வளர்ந்து வரும். அத்தகையோருக்குச் சிவபெருமான் தன் பெருங்கருணையால் எழுந்தருளி வந்து அவரோடு ஒன்றாய் நிற்பான் என்பதனை இப்பாடலில் ஆசிரியர் உணர்த்துகிறார்.

யாவர்க்கும் காண்பரிய ஈசன் அன்பு செய்வாரிடத்து எளிதில் வெளிப்பட்டுத் தோன்றுவான் என்பதனை அங்கே தலைப்படுங்காண் யாரேனும் காணா அரன் என்ற சொற்களால் விளக்கினார்.

யார் ஒருவர் உள்குவார் உள்ளத்துள்ளே அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும் என்று திருப்பூவணத் திருத்தாண்டகத்திலும் , எவரேனும் தாமாக கவராதே தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே, என்று திருக்கன்றாப்பூர்த் திருத்தாண்டகத்திலும் அப்பர் அடிகள் அருளிச் செய்த திருவாக்குகள் இங்கு நினையத் தக்கன.

16 மெல்வினையே என்ன வியனுலகில் ஆற்றரிய
வல்வினையே என்ன வரும் இரண்டும் சொல்லில்
சிவதன்மம் ஆம் அவற்றிற் சென்றதிலே செல்வாய்
பவகன்மம் நீங்கும்படி.

முந்திய பாடலில் கூறப்பட்ட சிவதருமம் மெல்வினை என்றும், பரந்த உலகில் செய்வதற்கரிய வல்வினை என்றும்  இரண்டு வகைப்படும். இவ்விரண்டினுள் உன்னால் இயற்றக்கூடிய சிவதருமத்தைக் கடைப்பிடித்து நின்று உறைத்த அன்போடு இருந்தால் உனது பிறப்புக்குக் காரணமாகிய வினைப்பயன்கள் யாவும் சிவபெருமான் திருவருளாலே உன்னை விட்டு நீங்கும் . எனவே ஏதாவது ஒரு நெறியிலே நிலைத்து நின்று தொண்டு செய்வாயாக.

சிவதருமம் என்று கூறப்பட்டதனை ஆசிரியர் மெல்வினை என்றும் வல்வினை என்றும் இரண்டு பிரிவுகளாக அமைத்துக் காட்டுகிறார். ஆயினும் இரண்டு நெறிகளும் அன்பு நெறிகளே என்பது இதற்கு முந்திய பாடலில் யாரேனும் அன்பு செய்யின் அங்கே தலைப்படுங்காண் யாரேனும் காணா அரன் என்று கூறுவதனாலே விளக்கப்பட்டது. மெல்வினை என்பது யாது? வல்வினை என்பது யாது? என்பவற்றைப் பற்றிய விளக்கம் இதனைத் தொடர்ந்து வரும் பாடல்களில் ஆசிரியரால் விளக்கப்படுகின்றன.

இரண்டில் ஒன்றைப் பற்றி அதிலே நிலைத்து நிற்கின்ற உயிர்களுக்குப் பிறப்புக் காரணமாகிய வினைத் தொடர்பு நீங்கும் என்பது இப்பாடலில் கூறப்பட்டது.

17 ஆதியை அர்ச்சித்தற்கு அங்கமும் அங்கங்கே
தீதில் திறம்பலவும் செய்வனவும்  வேதியனே
நல்வினையாம் என்றே நமக்கும் எளி தானவற்றை
மெல்வினையே என்றது நாம் வேறு.

வேதங்களில் வல்லமாணவனே, இறைவனை அர்ச்சித்து வழிபடுவதற்கு உரியன என்று ஆகமங்கள் முதலியவற்றுள் விதிக்கப்பட்டுள்ள உறுப்புக்களும் அதனை இயற்றும் வகையால் தீமையை அகற்றுவதற்கு உரிய திறங்களும் நல்வினையே ஆதலினால் அவை நம் போன்றார்க்கும் எளிதானவையே. அத்தகைய வழிபாட்டு முறைமைகளையே இங்கு நாம் மெல்வினை என்று வகைப்படுத்திக் கூறியனவாம்.

இறைவழிபாட்டில் கைக்கொள்ளுவதற்கு உரியன என்று ஆகமங்களில் விதிக்கப்பட்டுள்ளவை அங்கங்கள் எனப்பட்டன. வழிபாட்டிற்கான மலரும் நீரும் திரு அமுதும் போன்றவை . இவை தவிரப் பூசையின் போது இயற்றப்படும் பஞ்சசுத்தி முதலியனவும் வழிபாட்டின் அங்கங்களே ஆம். எனவே இவை யாவும் சேர்ந்து ஆதியை அர்ச்சித்தற்கு அங்கமும், தீதில் திறம்பலவும் செய்வனவும் எனப்பட்டன.

யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை என்பது போல இவ்வழி முறை எளியது. ஆயினும் தீமையை விலக்குவதும் நன்மையை விளைவிப்பதுவும் இதன் பயன்கள். ஆதலால் இவ்வாறு செய்யும் வழிபாட்டை மெல்வினை என்ற வகையுள் அடக்கிக் கூறினார்.

வல்வினை பற்றிய ஆசிரியர் கருத்து இதன் பின்னர் வரும் பாடல்களில் விளக்கப்பட்டுள்ளன.

18 வரங்கள் தரும் செய்ய வயிரவர்க்குத் தங்கள்
கரங்களினால் அன்றுகறி யாக்க  இரங்காதே
கொல்வினையே செய்யும் கொடுவினையே ஆனவற்றை
வல்வினையே என்றது நாம் மற்று.

வரங்களை அருள வல்லவராய் சிவந்த திருமேனியோடு காட்சி அளித்த வயிரவ வேடம் தாங்கிய சிவபெருமானுக்காகக் கறிய முது ஆக்கும் பொருட்டுத் தங்களுடைய கைகளினாலே தாம் பெற்ற மகனை அரிய முன் வந்த சிறுத் தொண்ட நாயனாரைப் போன்று இறைவன் பொருட்டுக் கொடுந் தொழிலும் இயற்ற முற்படுகின்றவர்களையே நாம் வல்வினை செய்ய வல்ல அடியார்கள் என்று இதற்கு முன் வந்த பாடலில் குறிப்பிட்டோம்.

சிறுத்தொண்ட நாயனார் சிவனடியார் ஒருவருக்கு நாள்தோறும் தவறாமல் திருஅமுது ஊட்டி அதன் பின்னரே தாம் உணவு உண்பதை நோன்பாகக் கடைப்பிடித்து வந்தார். நாயனாருடைய மெய்த்தன்மை நிறைந்த அன்பினை நேரில் நுகர்ந்து அருளுவதற்காகச் சிவ பெருமான் வயிரவ அடியார் திருவேடம் தாங்கி நாயனார் வாழ்ந்த திருச்செங்காட்டங்குடிக்கு எழுந்தருளினார். அன்றைக்கு அமுதூட்ட சிவனடியார் யாரையும் காணாது சிறுத்தொண்ட நாயனார் மனம் நொந்து இருந்தார். வயிரவ வேடம் தாங்கிய சிவபெருமான் அவரிடத்து  ஆறு மாதத்திற்கு ஒரு முறை உணவு உண்ணும் பழக்கம் உடையேன் யான். அப்போது நாம் உண்பது நரப்பசு. ஒரு குடிக்கு நல்ல ஒரு மகனைத் தந்தை அரியத் தாய் பிடிக்க இருவரும் மனமுவந்து சமைத்த கறியினையே யாம் உண்பது என்று உரைத்தார்.

அதற்கு உடன்பட்டுச் சிறுதொண்ட நாயனாரும் அவர் மனைவி யாராகிய திருவெண்காடு நங்கையும் தம்முடைய ஒரே மகனான சீராளதேவனைத் தொண்டர்க்கு அமுதூட்டும் நல்வாய்ப்புக் கிடைத்ததே என்னும் ஒரே கருத்துடன் சிந்தனையில் தடுமாற்றம் இன்றி மகிழ்ச்சியுடன் அரிந்து கறியமுது சமைத்து வயிரவக் கோலம் தாங்கி வந்த சிவபெருமானை அமுதுண்ண அழைத்தனர் வயிரவரோ நம்மோடு உடன் உண்பதற்கு உமக்கு ஒரு மைந்தன்  இருந்தால்  அவனையும் அழையும்  எனப்பணித்தார். பெற்ற மகனையே அரிந்து கறி சமைத்த தந்தையார் இப்போது அவன் இங்கு உதவான் எனக் கூற அடியார் அவன் வந்தாலன்றி உண்ணோம் எனவே கட்டளையை மறுப்பதற்கு அஞ்சி, நாயனார் சீராளனைப் பேர் சொல்லி அழைக்க, அவனும் பரமன் அருளால் பள்ளியினின்று ஓடி வருவான் போல உயிர்பெற்று வந்தனன்.

இந்தச் செயற்கரும் செயலை இப்பாடலில் வல்வினை என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். உலக வழக்கத்திற்கு மாறாக இரக்கமின்றிச் செய்யப்பெற்ற வன்கொலை போலவும் ஆகிய இந்த அருஞ்செயல் மனதில் செற்றம் இல்லாமல் அடியாருக்கு உணவு அளிக்க வேண்டும் என்ற அன்பின் உறைப்பாலே செய்யப்பட்டது. ஆதலின் இது பாதகமாகாது பத்திமை ஆயிற்று.

வயிரவர் என்னும் அகச் சமய நெறி நிற்கின்ற அடியவர்கள் உடம்பில் சட்டை அணிந்து கையில் சூலம் ஏந்திக் கடுமையான நோன்புகள் மேற்கொண்டு வாழ்ந்த கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

19 பாதகம் என்றும பழி என்றும் பாராதே
தாதையை வேதியனைத் தாளிரண்டும்  சேதிப்பக்
கண்டுஈசர் தாமாம் பரிசளித்தார் கண்டாயே
தண்டீசர் தஞ்செயலால் தான்.

தன் தந்தையும் தனக்கு மறைபயிற்றுவித்த ஆசிரியனுமாகிய எச்சதத்தனைச் சிவபூசைக்கு இடையூறு விளைவித்தான் என்ற காரணத்தால் பாதகத்தையும் பழியையும் பாராமல் சேய்ஞலூர்ப் பிள்ளையார் அவனது இரண்டு கால்களையும் வெட்டி எறிந்தார். இதனைக் கண்ட இறைவன் அவருக்குச் சண்டீசப்பதம் தந்து ஆட்கொண்டான். இந்நிகழ்ச்சியை நீ அறிந்துள்ளாய் அன்றே.

சேய்ஞலூர்ப் பிள்ளையாராகிய விசாரசருமர் தம் அன்பின் மேலீட்டால் ஊர்ப்பசுக்களை மேய்த்து வந்தார். அப்பசுக்கள் மடிநிறைந்து பால் சுரத்தன. விசாரசருமர்  மணலால் லிங்கத் திருமேனியை அமைத்து வழிபட அப்பசுக்கள் தாமாகவே பால் சுரந்து திருமஞ்சனம் ஆட்டின. ஊரார் சொல்லை நம்பிய எச்சதத்தன் தன் மகனைப் பாலைக் கறந்து மண்ணில் சொரிந்ததாகக் கருதி மணலால் ஆன லிங்கத்தை எற்ற முற்பட்டான்.  வழிபாட்டில் அமைந்திருந்த விசாரசருமர் கண்விழித்துப் பார்த்து சிவ அபராதம் செய்தவரின்  காலை அருகில் கிடந்த கழி ஒன்றை எடுத்து வீசினார். அக்கழியே மழுவாகி எச்சதத்தனின் கால்கள் இரண்டையும் துண்டித்தன. சிவபெருமான் விசாரசருமர் முன்பு திருக்காட்சி நல்கி அவருக்குச் சண்டீசப்பதமும் அருளினார்.

தந்தையும்,தனக்கு வேதம் ஒதுவித்த ஆசிரியனும் ஆகிய உண்மை மறந்து சிவ அபராதம் ஒன்றனையே மனதில் கொண்டு அது செய்தவனைத் தாள் அற எறிந்த செயல் உலகர் முன் பாதகம் என்று கருதப்படும். பாதகத்தால் தீராப் பழி வந்து சேரும். இவற்றை நினையாது சேய்ஞலூர்ப் பிள்ளையார் செய்த வன்செயலை இறைவன் கண்டு உவந்து அருள் புரிந்தது வல்வினையின் பாற்பட்டது என்று ஆசிரியர் கூறுகிறார்.

தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச்
சாதியும் வேதியன் தாதைதனைத் தாளிரண்டும்
சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர் தொழப்
பாதகமே சோறு பற்றியவா தோ ணோக்கம்
என்ற வரும் திருவாசகப் பாடல் இங்கு நினையத்தக்கது.

20.செய்யில் உகுந்த திருப்படி மாற்றதனை
ஐயஇது அமுது செய்க என்று  பைய இருந்து
ஊட்டி அறுத்தவர்க்கே ஊட்டி அறுததவரை
நாட்டியுரை செய்வது என்னோ நாம்.

அரிவாட்டாய நாயனார் இறைவனுக்குப் படைப்பதற்காகச் செந்நெல் அரிசியும் செங்கீரையும் மாவடுவும் தமது தலைமீது சுமந்து சென்றார். பல நாள் பட்டினி இருந்த களைப்பினால் கால் இடறி நன்செய் வயலிலே வீழ்ந்தார். தலையில் சுமந்து சென்ற திரு அமுது படிக்கான பொருள்களும் வெடித்துக் கிடந்த வயலின் கமர்களிலே சிந்திப் போயின. இறைவனுக்கான அமுது படியை நிலத்தில் உகுத்தற்காக வருந்தித் தம் கையிலிருந்த அரிவாளால் தம் கழுத்தை அரியலுற்றார் அரிவாட்டாய நாயனார் அந்நிலையில், சிவபெருமானின் திருக்கரம் வயல் வெடிப்பினின்றும் வெளிப் பட்டு அரிவாளைத் தாங்கிய நாயனாரின் கையப் பிடித்துத் தடுத்தது. அதனோடு நாயனார் வேண்டிக் கொண்ட வண்ணமே சிவபெருமான் திருஅமுது கொண்டு அருளினார் எனபதற்கு அடையாளமாக மாவடுவைக் கடித்ததனால் உண்டாகிய விடேல் விடேல் என்னும் ஓசையும் நாயனார் காதில் ஒலித்தது. இறைவன் அம்மையப்பனாகக் காட்சி தந்து நாயனாரையும் அவரது மனைவியாரையும் ஆட்கொண்டு அருள் பாலித்தான். இத்தகைய தன்மை உடைய நாயனாரின் பெருமையை நாம் எவ்வாறு எடுத்துரைப்பது.

திருப்படி மாற்று என்பது திரு அமுதுபடியைக் குறிக்கும்.ஊட்டி என்ற சொல் முறையே கழுத்தையும்  பெருமானுக்கு அமுதுபடி ஊட்டியதையும் குறிக்கும்.

இதற்கு முன் வந்த மூன்று பாடல்களிலும் வல்வினை செய்த அடியார்களின் பேரின்பத் திறனை ஆசிரியர் எடுத்துரைத்தார் அதற்கு முந்திய பாடலில் மெல்வினை என்பது யாது என்பதை விளக்கினார். சிறுத் தொண்ட நாயனார். சண்டேசுவர நாயனார் போன்ற அடியார்களின் தொண்டு உலகத்தவர் பழிப்புக்கு இடந்தருமேனும் உறைத்த அன்பின் அடியார்கள் வல்வினை செய்யத் தயங்கார் என்பதனை எடுத்துக் காட்டின.

21 செய்யும் செயலே செயலாகச் சென்று தமைப்
பையக் கொடுத்தார் பரங்கெட்டார்  ஐயா
உழவும் தனிசும் ஒரு முகமே யானால்
இழவுண்டே சொல்லாய் இது.

தன்முனைப்பற்ற அடியவர்கள் தாம் செய்யும் செயல் யாவும் இறைவன் செயலே ஆகத் தம்மை இறைவனின் உடைமை ஆக்கித் தமது சுமை கெடுமாறு நிற்பர். உழவுத் தொழிலும் அதனை மேற்கொள்ளுவதற்காகப் பெற்ற கடனும் ஒருவரிடத்திலே அமையுமானால் அதனால் இழப்பு வருமோ? வருவதில்லை. அவ்வாறே தம்மை இழந்த அடியார்கள் வினைச்சுமை தீர்ந்து வீடு பேற்றினை அடைவார்கள்.

செய்யும் செயல் என்பது உயிர்கள் தன் முனைப்புடன் யான் என்றும் எனது என்றும் கருதிச் செய்யும் வினைகளை. அடுத்து வரும் செயலாக என்பதற்கு இறைவனின் செயலாகுமாறு என்று  சொல் வருவித்துப் பொருள் கொள்ளுக. இந்நிலை விரைவில் கை வருவதில்லை படிப்படியே வருவது என்பதனைக் குறிக்கப் பையக் கொடுத்தார் என்று கூறினார். பரம் கெட்டார் என்பது சுமையினின்றும் நீங்கினார் என்ற பொருளைத் தரும்,

உழவுத் தொழிலை மேற்கொண்ட ஒருவன் கடன் பெற்று விதையும் உரமும் வாங்கிப் பயிரை விளைவிக்கும் முயற்சியிலே ஈடுபடுகிறான். அவனே நிலத்திற்கு உடைமையாளன் ஆயின் விளைவின் பயனை அவனே உறுதி யாகப் பெறுவான். ஆதலால் அவனுக்கு இழப்பு நேராது. தனிசு என்ற சொல் கடன் என்ற பொருளைத் தரும்.

22 ஆதார யோகம் நிராதார யோகம் என
மீதானத்து எய்தும் விதியிரண்டே  ஆதாரத்து
ஆக்கும் பொருளாலே ஆக்கும் பொருளாம் ஒன்று
ஆக்காப் பொருளேயொன் றாம்.

யோகப் பயிற்சி என்பது ஆதாரயோகம் என்றும் நிராதாரயோகம் என்றும் இரு வகையாகச் சொல்லப்படும். இருவகை நிலையிலும் நின்றவர்கள் மிக மேலான இறைவன் திருவடியிலே சென்று கூறுவது உறுதி. இவற்றுள் ஆதார யோகம் என்பது ஞான ஆசிரியனால் கற்பிக்கப்பட்ட ஆறு ஆதாரங்களிலும் இறைவனது அந்தந்த இடத்துக்குரிய திருமேனிகளை உள்ளக்கிழியில் உரு எழுதி வழிபட்டுப் பயன் பெறுவதாகும். நிராதார யோகம் என்பது இவை யாவற்றிலும் உயர்ந்ததாய் மனத்தின் அசைவும் அற்றதாய்ப் பற்றுக் கோடும் இல்லாததாய் இறைவனது திருவடியைப் பொருந்துவதாய் அமைவது.

இரண்டு வகையாகப் பயின்றாலும் எய்தும் பொருள் இறைவன் திருவடி ஆகிய ஒன்றே. முதல் நெறியில் உடம்பின் ஆதாரங்களைப் பற்றி அதன் மேலும் சென்று ஆக்கும் பொருள் என்பதும் . இரண்டாம் நெறியில் படிநிலைகள் எதுமில்லாமல்  கைகூடுகிற திருவருள் ஆக்கப் பொருள் என்றும் உணர்த்தினார்.

ஆறு ஆதாரங்கள் என்பன மூலாதாரம். சுவாதிட்டானம், மணி பூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை ஆகியன. இவை ஒவ்வொன்றுக்கும் அதி தெய்வங்கள் முறையே விநாயகர், அயன் , திருமால், உருத்திரன், மகேசன், சதாசிவன் ஆவர். இந்த ஆறு ஆதாரங்களுக்கும் வடிவங்களாக மூலாதாரத்துக்கு நான்கு இதழ்த் தாமரையும் சுவாதிட்டானத்துக்கு ஆறு இதழ்த் தாமரையும், மணிபூரகத்துக்குப் பத்து இதழ்த் தாமரையும், அநாகதத்திற்குப் பன்னிரண்டு இதழ்த் தாமரையும் விசுத்திக்குப் பதினாறு இதழ்த் தாமரையும், ஆஞ்ஞைக்கு இரண்டு இதழ்த் தாமரையும் கூறப்படும்.

ஆஞ்ஞை என்பது புருவ நடுவில் நிலைபெறுவதாகக் கொள்ளுவர். மீதானம் என்ற நிலை நிராதாரம் எனப்படும். இது உச்சிக்கு மேல் பன்னிரண்டு அங்குல உயரத்தில் ஆயிரம் இதழ்த் தாமரை வடிவாக அமைந்தது என்பர். இது பிரமரந்திரம் என்றும் கூறப்படும். இவ்விடத்தில் சிவசத்தியுடன் பிரியாது நின்ற சிவபெருமானை வழிபடுதல் வேண்டும். ஆதார யோகம் பயிற்சி முறை என்றும் நிராதார யோகம் பயிற்சியின் பயன் எனவும் கொள்ளப்படும்.

23 ஆக்கி ஒரு பொருளை ஆதாரத்து அப்பொருளை
நோக்கி அணுவில் அணுநெகிழப் பார்க்கில்
இவனாகை தானொழிந்திட்டு ஏகமாம் ஏகத்து
அவனாகை ஆதார மாம்.

முன் பாடலில் கூறப்பட்ட ஆறு  ஆதாரங்களிலும் ஞானாசிரியன் கற்பித்த நெறியிலே இறைவனை வழிபட்டு அதனதனுக்குரிய திருவடிவத் தை உளத்துள் பதித்து தியானம் செய்து அதிலேயே நெடுநாள் நிலைத்திருந்தால் தன் முனைப்புக் கெட்டுச் சிவபரம் பொருள் ஒன்றே முதிர்ந்து உயிரில் ஒங்கித் தோன்றும். வழிபடுவானும் வழிபடப் பெறும் பொருளும் வழிபடுகிறேன் என்ற உணர்வும் நெகிழ்ந்து போக ஒன்றேயாகிய சிவபரம் பொருள் இவனோடு பிரிப்பின்றி நிற்கும் நிலை ஆதார யோகமாகும்.

ஆதாரத்தினைப் பற்றி ஒரு பொருளை ஆக்கி அதனால் கைவந்த அப்பொருளை நோக்கி அணுவாகிய ஆன்மா தற்போதம் கெடப்பார்க்கின் இவன் என்ற பொருள் ஒழிந்திட்டு ஒப்பற்ற பரம்பொருள் ஆகிய அவனே ஏகமாய்த் தோன்றுவான். அதுவே ஆதார யோகம் ஆகும். தன் முனைப்பற்ற நிலையில் சிவம் விளங்கித் தோன்றும் இந்நிலையே இடைவிடாத ஆதார யோகப் பயிற்சியின் சிறந்த பயனாகும்.

24 கொண்டது ஒரு பொருளை கோடிபடக் கூறுசெயிற்
கொண்டவனும் அப்பரிசே கூறுபடும்  கொண்ட
இரு பொருளும் அன்றியே இன்னது இது என்னாது
ஒரு பொருளேயாய் இருக்கும் உற்று.

தியானிப்பதற்காக மனதுட் கொண்ட பரம் பொருளையும் அதன் இயல்புகளையும் நுணுகி நுணுகி ஆராய்ந்து அதன் எண்ணிறந்த இயல்புகளைப் பல்கோடி முறை சிந்தித்து வழிபட்டால் அந்த வழிபாட்டைச் செய்பவன் தானும் அவ்வாறு நுண்மையுடையவன் ஆவான். அதனோடு தியானிப்பவன் தியானிக்கப்படும் பொருள் என்ற வேறுபாடுகள் மறைந்து இன்னது இது என்று புரிந்து கொள்ளவும் விளக்கிச் சொல்லவும் இயலாத வாக்குமனம் கடந்த இறைவன் வழிபடுவோனாகிய இவனுடன் கூடி ஒரு பொருளாகவே விளங்குவான்.

முந்திய பாடலில் ஆதார யோகத்தைப் பயில்கின்ற முறையை அணுவாகிய ஆன்மா நெகிழ்வுறுமாறு பார்த்தல் என்பதனை விளக்கிய ஆசிரியர் இந்தப் பாடலில் வழிபடப் பெறுகின்ற பரம் பொருளின் இயல்புகளை பல்கோடி விதமாக நீள நினைத்து உருகும் நுட்பத்தை அறிவுறுத்துகிறார். கொண்ட பொருள் பரம் பொருளாகவும் கொண்டவன் வழிபாடு இயற்றுபவனாகவும் பொருள் காணப்படும். இரு பொருளாக இருக்கின்ற நிலை மாறிப் பரம் பொருளோடு ஒன்றி ஒரு பொருளேயாகும் இயல்பு இப் பாடலில் எடுத்துரைக்கப்பட்டது.

25 அஞ்செழுத்துமே அம்மை அப்பர்தமைக் காட்டுதலால்
அஞ்செழுத்தை ஆறாகப் பெற்றறிந்தே  அஞ்செழுத்தை
ஓதப்புக்கு உள்ள மதியுங்கெடில் உமைகோன்
கேதமற வந்தளிக்கும் கேள்.

திருவைந்தெழுத்தே ஓதுவார் தமை அம்மையப்பராக விளங்குகின்ற இறைவனின் திருவடி இன்பத்தை நோக்கி இட்டுச் செல்லும் வல்லமையுடையது. எனவே ஞானாசிரியனும் திருவைந்தெழுத்தை உபதேசிக்க அதனைப் பெற்று முறைப்படி ஓதி வந்தால் தற்போதம் கெடும். கெடவே அம்மையப்பனாகிய இறைவன் உயிரோடு கூடவே நின்று துன்பம் அனைத்தையும் துடைத்து, எல்லையில்லாப் பேரின்பத்தை வழங்கியருளுவான்.

திருவைந்தெழுத்தில் ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு பொருளைக் குறிக்கும். எனவே அதனை அஞ்சுபதம் என்று சுந்தரமூர்த்தி நாயனார் குறிப்படுகிறார். அந்தியும் நண்பகலுங் அஞ்சுபதம் சொல்லி என்பது அவர் திருவாக்கு. சிகரம் சிவத்தையும், வகரம் திருவருளையும், யகரம் உயிரையும் , நகரம் திரோதத்தையும், மகரம் மலத்தையும் குறிப்பனவாகும் . இவ்வைந்து பொருள்களுள் சிவத்தைக் குறிப்பதாகிய சிகரமும் திருவருளைக் குறிப்பதாகிய வகரமும் பெருமை பெற்று விளங்குவன ஆதலால்  அஞ்செழுத்துமே அம்மையப்பர் தமைக் காட்டுதலால் என்றார் ஆசிரியர். நடுவில் நின்ற உயிர் அதனை அடுத்து நின்ற நகர மகரங்களாகிய மலங்களிலிருந்து விடுபட்டுச் சிவமும் சத்தியுமாகிய உமையொரு பாகனது திருவடிப் பேரின்பத்தை எய்துதற்கு உரிய சாதகன். அதனைத் தகுந்த ஞானாசிரியன் வழிப்பெற்று ஓதும் முறைமையிலும் நிற்கும் முறைமையிலும் பிறழாது ஒழுகினால் தன் முனைப்பு அறும். இறைவன் அருள் பாலித்து உயிரை தன்னடிக்கீழ்க் கூட்டுவிப்பான் என்பதனை இப்பாடலில் விளக்கினார்.

26 ஆக்கப்படாத பொருளாய் அனைத்தினிலும்
தாக்கித்தான் ஒன்றொடும் தாக்காதே  நீக்கியுடன்
நிற்கும் பொருளுடனே நிற்கும் பொருளுடனாய்
நிற்கை நிராதார மாம்.

வாக்கும் மனமும் கடந்து நிற்கும் பரம்பொருள் இன்னதன்மையன் என்று அறியொண்ணாதவன் . ஆதலால் ஆன்மாவின் அறிவினால் கற்பித்துக் கொள்ளப்படும் கற்பனைக்கும் அப்பாலானவன். உலகத்துப் பொருள்கள் அனைத்திலும் கலந்து நின்ற போதிலும் எவற்றிலும் தோய் வற்று நிற்கும் தானேயாகிய தயாபரன். ஆதலால் உயிர்களின் துயரங்களைத் தன் பெருங்கருணையால் அறிந்து நீக்கும் பரம் பொருள் அவன். அப்பரம் பொருளோடு பிரிவின்றி நிற்கும் திருவருளில் திளைத்து நிற்றலே நிராதார யோகம் எனப்படும்.

எவ்வௌர் தன்மையும் தன் வயிற்படுத்துத் தானேயாகிய தயாபரன் எம் இறை  என்ற மணிவாசகரின் அருள்மொழிக்கு ஏற்ப இறைவன் உலகத்துப் பொருள்கள் யாவற்றிலும் கலந்து நின்றும், அவற்றில் தோய்வின்றி விளங்குவான். மனம் வாக்குக்கு எட்டாத அவனுக்கு வடிவும் நிறமும் கற்பித்து மனத்து இருத்துதல் ஒருவராலும்  இயலாததாகும். உடன் நிற்கும் பொருளுடனே நிற்கும் பொருள் என்பது இறைவனோடு நீக்கமின்றி நிற்பதாகிய அவனது சத்தியாகிய திருவருளை. அதன் வழி நின்று முழு முதற் பொருளை அடைவதே நிராதார யோகம்.

27 காண்கின்றது ஓர் பொருளைக் காண்கின்ற யோகிகளே
காண்கின்றார் காட்சியறக் கண்ணுதலைக் காண்கின்றார்
காண்பானுங் காணப் படும்பொருளும் அன்றியே
காண்கையினாற் கண்டனரே காண்.

ஆன்மா காணும் இயல்புடையது. எனினும் அது தானே காணும் இயல்புடையது அன்று. இறைவன் காட்டவே ஆன்மாக்கள் காணும்திறன் பெறுகின்றன. மெய்ப்பொருளைக் காண்பதற்கும் சிவபெருமானின் திருவருளே துணையாக வேண்டும். மேலே கூறப்பட்ட ஆதார யோகம், நிராதர யோகம் என்ற இரண்டு நெறிகளிலும் ஒழுகிய சிவயோகியர்களுக்கு இறைவனின் திருவருள் துணை நின்று காண்கிறோம் என்ற சுட்டறிவும் நீங்கச் சிவபெருமானைக் காட்டும். அத்தகையவர்கள் காண்பவர்களாகிய தாமும் காணப்படுவதாகிய சிவமும் வேறு வேறு எனக் காணாமல் தற்போம் இழந்து சிவத்துடன் ஒன்றிவிடுவார்கள். ஆதலால் அம்மெய்ப்பொருளை உள்ளவாறு உணர்ந்து நுகர்பவர்கள் இவர்களே யாவர்.

சத்தினால் சத்தினை அறிந்தும் சத்தின் கண் அழுந்தியும், அசத்தினால் அசத்தினை அறிந்தும் அசத்தின் கண் அழுந்தியும் அனுபவித்து வரும் இயல்புடைய ஆன்மா சதசத்து எனப்படும். அது சார்ந்ததன் வண்ணமாம் தன்மை உடையது. அறிவிக்க அறிவது. யோக நிலையிலும் உயிர்களுக்குத் திருவருள் உடன் நின்று உணர்ந்த வேண்டும். அவ்வாறு உணர்த்தப் பெற்ற யோகியர்களே இறைவனாகிய மெய்ப்பொருளின் தன்மையைத் தெளிய உணரும் பேறு பெற்றவர்களாவார்கள்.

இந்த உணர்வு நிலையில் உயிரினிடத்து நான் காண்கின்றேன் என்னும் தன் முனைப்பு அற்றுப் போகும். அறவே, திருவருளோடு ஒன்றி நின்று அறிவதாகிய மேலான நிலை உயிருக்குவாய்க்கும். இவ்வாறு கண்டவரே மாசு அறு காட்சியவர்.

பேசாமை பெற்று அதனிற் பேசாமை கண்டனரைப்
பேசாமை செய்யும் பெரும் பெருமான்  பேசாதே
எண்ணொன்றும் வண்ணம் இருக்கின்ற யோகிகள் பால்
உள்நின்றும் போகான் உளன்.

உரைக்கு அடங்காத திருவருள் கைவரப்பெற்று, அதன் வழியே ஒழுகி, இன்னதன்மையன் என்று பேசுவதற்கு அரிய பரம் பொருளைக் கண்டவர்களுக்கு வெளியிட்டுச் சொல்ல முடியாத சிவப் பேரின்பத்தை அருளி அவரைப் பேசாத மோன நிலையில் இருந்துவான் சிவபெருமான். நினைவுகள் புறத்தே போகாது எண்ணம் பரம்பொருளையே பற்றி ஒற்றித்து நிற்கும் சிவயோகியர்களிடத்து அவர்களின் நெஞ்சத் திருக்கோயில் என்றும் நீங்காத நிலையில் இறைவன் கோவில் கொண்டிருப்பான்.

பேசாமை என்பது மோன நிலை. யோகப் பயிற்சியில் மோன நிலையின்  இயல்புகளை உணர்த்துவது இத்திருப்பாடல். முதலில் கூறப்படும் பேசாமை திருவருளைக் குறிப்பதாகும் . திருவருள் இத்தன்மையுடையது என்று எடுத்துரைக்க இயலாதது. அதனைப் பெற்றவர்கள் மாற்றம் மனம் கழிய நின்ற சிவபரம் பொருளைக் கண்டவர் ஆவார். அந்நிலையில் அவர்களுக்கு வாய்க்கும் பேரின்பம் இத்தகையது என்று எடுத்துரைக்க இயலாததாகும் . இங்ஙன் இருந்ததென்று எவ்வண்ணம் சொல்லுகேன். அங்ஙன் இருந்தது என்று திருஉந்தியாரில் இத்தன்மை விளக்கப்படுகிறது .வாக்கு இறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய், எல்லாமாய் அல்லவுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டிச் சொல்லாமல் சொன்னவர் என்ற ஆலமர் செல்வனின் வழிபாட்டுப்  பாடல் பகுதி இங்கு நினையத்தக்கது. மோனம் என்பது ஞானவரம்பு என்று நீதி நூலும் கூறும். உரை அவிந்து இருத்தல் என்பது தானாக மேற்கொள்ளாது அதுவாக வந்து வாய்க்கும் என்பது இப்பாடலில் விளக்கப்பட்டது. இத்தன்மை வாய்க்கப்பெற்ற அடியார்கள் நெஞ்சத்தில் சிவ பெருமான் கோவில் கொண்டிருப்பான் . அவரைவிட்டு நீங்கான் என்பதனையும் ஆசிரியர் வலியுறுத்தினார்.

29 ஓட்டற்று நின்ற உணர்வு பதிமுட்டித்
தேட்டற்று நின்ற இடஞ்சிவமாம்  நாட்டுற்று
நாடும் பொருளனைத்தும் நானா விதமாகத்
தேடுமிடம் அன்று சிவம்

பரபரப்போடு அங்குமிங்கும் அலைகின்ற இயல்புடைய மனம் திருவருள் ஞானம் கைவரப் பெற்ற அளவில் சலனமற்று நிற்கும். அதன் பின் ஒன்றை விட்டு ஒன்றைப் பற்றுதல் என்னும் இயல்புகெட்டுச் சிவப்பேரின்பத்திலே அழுந்தி வேறு தேட்டம் இல்லாதிருக்கும். அதுவே சிவபரம் பொருள் உயிர்களுக்கு வெளிப்பட்டு அருளும் நிலையாகும். உயிர்களால் சுட்டியறிதற்கு உரிய உலகத்துப் பொருள்களைப் பல்வகையாகத் தேடி அலைபாய்கின்ற வரம்புக்குள் நில்லாத தனிப்பொருள் சிவபெருமான் ஆவன்.

உலகத்துப் பொருட்கள் யாவும் உயிர்களால் சுட்டியறியும் எல்லைக்கு உட்பட்டவை. அவை நிறைவைத் தராததால் உயிர்கள் ஒன்றை விட்டு ஒன்றைப் பற்றி நாலா பக்கங்களிலும் தடுமாறி உழல்கின்றன. அதுவுமின்றி அறிவினால் அறிந்த யாவும் அசத்தாதல் அறிதி என்ற சிவப்பிரகாச உண்மைக்கு ஏற்ப உயிரறிவினால் அறியப்பட்ட பொருள்கள் யாவும் நிலையற்று அழிந்து போகும் இயல்பினை உடையன. இந்த எல்லைக்குள் சிவபெருமான் நிற்பவனல்லன்.

மெய்பொருளிய சிவபெருமான் உயிர்களால் அறிதற்கு அரியவன் என்றால் அவன் முயற்கோடு போலவும் ஆகாயத் தாமரை போலவும் இல்பொருள் ஆவானோ எனில், அதுவன்று பாசஞானத்தாலும் பசுஞானத்தாலும் அறியப்படாத சிவன் பதிஞானம் ஒன்றினாலேயே அறியப்படுபவன். அவ்வாறு பதிஉணர்வு நேர்பட்ட போது உயிரறிவு சலனமற்று இருந்து இறைவன் திருவடிகளைப் பற்றிக் கொண்டு பேரின்ப வெள்ளத்தில் திளைத்திருக்கும் என்பதனை இந்தப் பாடலில் எடுத்து விளக்கினார். தேடும் இடம் சிவனன்று என்றும் தேட்டற்று நின்ற இடம் சிவம் என்றும் இருவகையால் ஆசிரியர் வலியுறுத்தினார்.

30 உணராதே யாதும் உறங்காதே உன்னிப் பு
ணராதே நீ பொதுவில் நிற்கில்  உணர்வரிய
காலங்கள் செல்லாத காதலுடன் இருத்தி
காலங்கள் மூன்றினையும் கண்டு.

பரம்பொருளை உன் சிற்றறிவினால் அறிவேன் என்று முயலாமலும் உலக வாழ்க்கையின் நிலையற்ற தன்மைகளில் தன்மைகளில் மயங்காமலும், தன் முனைப்பற்றுக் திருவருளாகிய ஞானத்தில் பொருந்திப் பொதுமையில் நிற்பாயானால் முக்காலங்களையும்  கண்டு அழிவின்றிக் கால தத்துவத்தைக்  கடந்த இறைவனுடன் என்றும் கூடி இருக்கின்ற இன்பத்தைப் பெற்றிருப்பாய்.

உணர்த்தல் எனப்படுவது தன் முனைப்போடு மெய்ப்பொருளைத் தேட முற்படுதல்.  உறங்காதே என்பது உலகியலில் ஈடுபட்டு மயங்கா திருத்தல். உன்னிப் புணராதே என்பது மல வாதனையால் மீண்டும் உலகியலில் பொருந்தாமை. பொதுவே நிற்றல் என்பது தனக்கெனச் செயல் வேறு இன்றி எல்லாம் சிவன் செயல் என்றுதெளிந்து, திருவருள் செலுத்திய வழிச் செல்லுதல்.  இந்த நெறியிலே நிற்பதனால் விளையும் பயன்களைப் பாடலின் பின் இரண்டு அடிகளால் ஆசிரியர் எடுத்துரைக்கிறார். உலகு கால தத்து வத்துக்கு உட்பட்டது. இறைவன் ஒருவனே கால தத்துவத்தைக் கடந்து நிற்பவன். உடலில் நிலை பெற்றாலன்றிச் செயலற்று  இருக்கும் உயிர். மெய்யின் வழியாகத் தோன்றவும் செயல்படவும் வேண்டியிருப்பதால் அதுவும் கால தத்துவத்திற்கு உட்பட்டதாகிறது. இந்நிலையில் உயிருக்கு இறந்த காலம்,நிகழ்காலம், எதிர்காலம் என்ற மூன்றும் உளவாகின்றன. கால அதீதனாகிய இறைவனோடு ஒன்றிவிட்ட நிலையில் முக்காலம் என்னும் பாகுபாடும் கால எல்லைக்கு உட்படுவதும் இன்றி உயிர் அழிவில்லாப் பேரின்பத்தில் திளைத்து இருக்கும்.
சிராத்தம்

சிரார்த்தின் போது மனைவியும் உடன் இருக்க வேண்டும் மனைவி மாதவிலக்கு இருந்தால் கூடாது.

அனுஷம் நட்சத்திரம் அமாவாசையும் சேரும் கார்த்திகை மாதத்தில் பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்தால் பித்ருக்களுக்கு ஒரு வருஷத்திற்கு திருப்தி உண்டாகும் மாதத்தில் விசாகம் அல்லது சுவாதியில் அமாவாசை வரும் அன்றைக்கு சுத்தம் செய்தால் ஒரு வருஷம் திருப்தியடைவார்கள் ஆனி மாதத்தில் திருவாதிரை அல்லது புனர்பூசம் நட்சத்திரத்தில் வரும் அமாவாசையில் செய்கின்ற ரத்தமும் ஆடி மாதத்தில் பூச நட்சத்திரத்தில் வரும் அமாவாசையில் பித்ருக்களுக்கு 12 வருஷம் திருப்தியளிக்கும்.

தை மாதத்தில் அவிட்ட நட்சத்திரம் அமாவாசை வரும் மாசி மாதத்தில் சதய நட்சத்திரம் அல்லது பூரட்டாதியில் அமாவாசை வரும் பங்குனியில் பூரட்டாதியில் அமாவாசை வரும் இந்த மூன்று காலங்களும் தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய காலம் என்று சொல்லப்பட்டுள்ளது .

மாசிமகத்தன்று அமாவாசையானது எப்போதாவது சதய நட்சத்திரம் கூடும் ஆனால் அது மிகவும் புண்ணியகாலம் அற்ப புண்ணியம் உள்ள மனிதர்களுக்கு கிடைக்காது.

அதே நேரத்தில் அவிட்ட நட்சத்திரமும் சேரும் ஆயின் அப்போது பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்பவனுக்கு ஆயிரம் ஆண்டுகள் பித்ருக்களை திருப்தி செய்த பலன் கிடைக்கும் அக்காலத்தில் பூரட்டாதியும் சேரும் ஆனால் அதில் பித்ருக்கள் திருப்தி அடைந்து ஆயிரம் யுகங்கள் சுகமாக தூங்குவார்கள்.

கிருதயுகம் திரேதாயுகம்  துவாரம் யுகம் கலியுகம் ஆரம்பிக்கும் காலங்களிலும் சூரிய சந்திர கிரகண நேரங்களிலும் பித்ருக்களுக்கு ஒருவன் எள்ளும் தண்ணீரும் இறைத்து அவன் ஆயிரம் ஆண்டுகள் சிராத்தம் செய்த பயனை அடைவான்.

வசதியிருந்தால் என்ற அளவு பித்ருக்களுக்கு பிண்டம் போட்டு பிராமணருக்கு தானம் செய்யவேண்டும் வசதி இல்லாவிட்டால் சில எல்லை ஆவது நல்ல பிராமணனுக்கு நுனிகளால் கொடுக்க வேண்டும் அதற்கு வழி இல்லாவிட்டால் ஏழெட்டு எள்ளுடன் ஒரு கையை தண்ணீராவது பெற்றுவிடவேண்டும் எதுவுமே இல்லாத நிலை இருந்தால் காட்டுக்கு சென்று சூரியன் முதலிய வரை உரத்த குரலில் கூவி அழைத்து எனக்கு பித்ரு தர்ப்பணம் செய்வதற்கு பொருள் ஒன்றுமில்லை எனக்கு ஒன்றுமில்லை என்று என இரண்டு கையையும் தூக்கி காட்டுகிறேன் எனது பித்ருக்களுக்கு திருப்திப்படுத்த வேண்டும் என்று கூறினால் பித்ருக்கள் திருப்தி அடைவார்கள் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

சிராத்தம் செய்வதற்கு முன்பு

சுத்தம் செய்பவர் ஒரு மாதம் அல்லது 14 நாட்கள் முன்பு சவரம் எண்ணெய் தேய்த்தால் உடலுறவு இவைகளை செய்யக்கூடாது பிறர் அன்னதானத்தை சாப்பிடக்கூடாது நண்பன் சகோதரர் குரு மாமனார் வீடு தோஷம் கிடையாது.

கண்டிப்பாக முதல்நாள் இவற்றை செய்யவே கூடாது சமஸ்தானம் புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்த பின்பும் பஞ்சகவியம் சிரார்த்தம் செய்ய வேண்டும்.ஒரே பசுவிடம் இருந்து பெறப்பட்ட பால் தயிர் நெய் சாணம் கோமியம் இவற்றை கலந்து தயாரிப்பதுதான் பஞ்ச காவியம் ஆகும் மிகவும் விஷத்தன்மை கொண்டது இறைவனுக்கு அபிஷேகம் செய்வதும் உண்டு.

சிராத்தத்துக்கு முன்பும் அன்று பல் தேய்க்க கூடாது வாய் கொப்பளித்தல் போதுமானதாகும்.
மகான் ராகவேந்திரர் பகுதி - 2

பிரகலாதனின் காலத்தில் மக்கள் நிம்மதியுடன் வாழ்ந்தனர். அவன் அனுஷ்டிகம் சாத்வீகம் என்ற இருவகையான புண்ணியங்களைச் சேர்த்தான். அனுஷ்டிகம் என்பது தர்மம் செய்வதால் வரக்கூடியது. சாத்வீகம் என்பது ஹிம்சை செய்தவரிடமும் அஹிம்சையைக் காட்டுவதால் கிடைக்கக்கூடியது. முந்தைய புண்ணியத்தால் செல்வம் பெருகும். வாழ்நாள் கூடும். பிந்தைய புண்ணியம் பிறப்பற்ற நிலையை ஏற்படுத்தும் இரக்க மனம் கொண்ட பிரகலாதன் இரண்டு விதமான புண்ணியங்களையும் அளவுக்கதிகமாகச் சேர்த்து விட்டான். அவன் பிரம்மனை வணங்கி தெய்வமே! தாங்கள் என்க்கிட்ட சாபம் தீரும் காலம் வந்து விட்டதா? என மனமுருகிக் கேட்டான். பிரம்மன் அவன் முன்பு தோன்றி சங்குகர்ணா! நீ இப்பிறவியில் அளவுக்கதிகமாக புண்ணியத்தை சேர்த்து விட்டாய். இவ்வாறு புண்ணியம் செய்பவர்கள் அந்த புண்ணியத்திற்குரிய பலன்களை பூமியில் இருந்து அனுபவிக்க வேண்டும். உலகின் சுகமான இன்பங்களை அனுபவித்த பிறகே பிரம்மலோகம் வர முடியும் என்றார். சங்குகர்ணன் அவரிடம் சுவாமி! அப்படியானால் எனது புண்ணியங்களைத் தீர்க்கும் வழி யாது?என்றான். நீ அடுத்த பிறவியிலும் மன்னனாகவே பிறப்பாய். இப்பிறவியில் மகாவிஷ்ணுவின் பக்தனாக இருந்த நீ அடுத்த பிறவியில் பாலிகன் என்ற பெயரில் பிறந்து அவருக்கு எதிராக செயல்படும் மக்களுக்கு ஆதரவாக இருப்பாய். எனவே உன் புண்ணியத்தின் பெரும்பகுதி கரையும். அதன் பிறகும் நீ சேர்த்த புண்ணியங்களின் விளைவை கலியுகத்தில் தான் தீர்ப்பாய், என்று அருள்பாலித்து மறைந்தார். பிரகலாதனாய் பிறந்த சங்குகர்ணன் இப்பிறவியில் பாலிகன் என்ற மன்னனாகப் பிறந்தான். கவுரவர்களின் நண்பனாக வேண்டிய சூழல் இவனுக்கு ஏற்பட்டது. குருக்ஷேத்திர யுத்தத்தில் இவன் கவுரவர்களுடன் சேர்ந்து பகவான் கிருஷ்ணரின் நண்பர்களான பாண்டவர்களுக்கு எதிராகப் போரிட்டு அழிந்தான். அடுத்த யுகமான கலியுகத்தில் பாலிகனின் அவதாரம் உலகமே வியக்கக்கூடியதாக இருந்தது. பாலிகனாகப் பிறந்த சங்குகர்ணன் கவுரவர்களுடன் இணைந்திருந்தாலும் கூட அப்போதும் சில புண்ணியங்களைச் சேர்த்துக் கொண்டான். மனிதர்கள் பாவம் செய்தாலும் சரி புண்ணியம் செய்தாலும் சரி!  கர்மம் எனப்படும் இந்த இரு வினைகளால் ஏற்படும் பலன்களை அனுபவிப்பதற்காக பூலோகத்தில் மீண்டும் பிறக்க நேரிடும். அதனால் தான் பாவ புண்ணியம் இரண்டும் கலந்த இந்த பிறவிச்சுழலில் இருந்து காப்பாற்றும் படி  இறைவனிடம் மகான்கள் வேண்டிக் கொள்வார்கள். பாலிகன் செய்த புண்ணியத்தின் விளைவை அனுபவிக்க அவன் பூலோகத்தில் பிறக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பல நூறு ஆண்டுகள் கடந்தன. கலியுகம் பிறந்தும் பல ஆண்டுகள் ஓடிவிட்டன. மைசூரு மாநிலத்தில் (இப்போதைய கர்நாடகம்) அப்பூர்  என்ற கிராமத்தை ஒட்டிய குக்கிராமத்தில் ராமாச்சாரியார் என்பவர் வசித்தார். இவருக்கு குழந்தை இல்லை. ராமாச்சாரியாரும் அவரது மனைவியும் மனம் நொந்து போய் இருந்தனர். ஒரு தம்பதிக்கு குழந்தை இல்லை என்றால் ஊரார் அவர்களைப் பற்றி வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுவார்கள். குறிப்பாக உறவுக்காரர்கள் அந்தப் பெண்ணை மலடி என ஏசுவார்கள். அந்த ஆண்மகனை குடும்ப வாழ்வுக்கு லாயக்கற்றவன் என்பர். ராமாச்சாரியரும் இதற்கு விதிவிலக்கல்ல. கணவனும், மனைவியும் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானார்கள். அந்த தம்பதியர் கண்ணீர்  வடிக்காத நாளில்லை. அவர்கள் தங்கள் பிரச்னைக்கு தீர்வு வேண்டி பிரமான்ய தீர்த்தர் என்ற வைணவத்துறவியை அணுகினர். தீர்த்தர் சுவாமிகளுக்கு எங்கள் நமஸ்காரம். இவள் என் மனைவி நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் அவதிப்படுகிறோம். ஊராரும் உற்றாரும் எங்களைப் பற்றி பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மனம் நொந்து போயிருக்கிறோம். குழந்தை இல்லாதவர்கள் வாழ்வதை விட சாவதே மேல். மேலும் குழந்தை இல்லாதவர்கள் தங்களுக்கு சிரார்த்தம் முதலியன செய்ய ஆள் இல்லாததால் நரகத்திற்கு செல்வார்கள் என்கிறது சாஸ்திரம். நாங்கள் ஏன் வாழ வேண்டுமென நினைக்கிறோம். எங்களுக்கு குழந்தை பிறக்க வழியிருக்கிறதா? நீங்கள் தான் ஒரு யோசனை சொல்ல வேண்டும், என்றார்.

தீர்த்தர் ராமாச்சாரியரிடம் அன்பனே! கவலைப்படாதே. உனக்கு குழந்தை பிறக்கும் காலம் கனிந்து விட்டது. ஒரு ஆண்குழந்தை உனக்குப் பிறக்கும் என்றதும் தம்பதியர் உணர்ச்சிப்பிழம்பாகி விட்டனர். தீர்த்தரை சேவித்த அவர்கள் சுவாமி! இதென்ன அதிசயம்! நிஜமாகவா இது நிகழப்போகிறது! எங்களுக்கு குழந்தையா! அதிலும் ஆண் குழந்தையா! என்னே நாங்கள் செய்த பாக்கியம் என்று புன்னகையும் கண்ணீருமாகக் கேட்டவர்களுக்கு அடுத்து வார்த்தைகள் வர மறுத்தன. நா தழுதழுத்தது. மனிதர்களுக்கு மிதமிஞ்சிய மகிழ்ச்சி ஏற்பட்டாலும் சரி அல்லது சோகம் நிகழ்ந்தாலும் சரி! ஏனோ வார்த்தைகள் வர மறுக்கின்றன. பிரமான்ய தீர்த்தரே அவர்களது இந்த உணர்ச்சிவசப்படும் தன்மையைக் கண்டித்தார். ராமாச்சாரி! நீ ரொம்பவும் சந்தோஷப்படாதே. மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும் போதும் வேண்டாத நிகழ்ச்சிகள் நடக்கும் போதும் மனதை ஒரே நிலையில் வைத்திருப்பவனே சிறந்த மனிதன். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று தெரியாத நிலையற்ற உலகில் நாம் வசிக்கிறோம் என்பதை மறந்துவிடாதே. நல்லது நடக்கப் போகிறது என்பதற்காக மகிழாமலும் துன்பம் வரப்போகிறது என்பதற்காக கலங்காமலும் இருக்க வேண்டும் என சொல்லி விட்டு ராமாச்சாரி! இந்த அறிவுரையை நான் எதற்காக உன்னிடம் சொன்னேன் என்று உனக்குத் தெரியுமா? என்றதும் கேள்விக்குறியோடு தீர்த்தரின் முகத்தை அந்த தம்பதியர் ஒரு வித பயத்தோடு நோக்கினர். அத்துடன் தீர்த்தர் சொன்னதில் இருந்த நியாயத்தை உணர்ந்து தங்கள் மகிழ்ச்சியை ஒரு குட்டையைப் போல் சுருக்கிக்கொண்டு அவர் சொல்வதைக் கேட்க தயாராயினர்.ராமாச்சாரி! உங்களுக்கு குழந்தை பிறக்கும். ஆனால் அந்தக் குழந்தை எனக்குரியது. குழந்தை பிறந்தவுடன் அவனை எனக்கு தத்துக் கொடுத்து விட வேண்டும் என்றார். இந்த நிபந்தனையைக் கேட்டதும் தம்பதிகள் விக்கித்துப் போனார்கள். சற்று முன் அவர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி நதியில் கரைந்த சர்க்கரை போல் ஆயிற்று. குழந்தை பிறந்தவுடன் சீராட்டி, பாலூட்டி வளர்க்க வேண்டும். குருகுலத்துக்கு அனுப்பி அவனுக்கு பெரிய படிப்பெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டும். இளைஞன் ஆனதும் சிறந்த பெண்ணை அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். அந்த திருமணத்தை ஊரே வியக்கும் வகையில் பெரிய அளவில் நடத்த வேண்டும். பேரன், பேத்திகளுடன் மகிழ்ந்து விளையாட வேண்டும் என்றெல்லாம் கற்பனை செய்வது எல்லாப் பெற்றோர்களுக்கும் வாடிக்கை தானே! ஆனால் தீர்த்தர் தங்களுக்கு இப்படி ஒரு நிபந்தனை விதிக்க என்ன காரணம் என்று யோசித்தனர்.சுவாமி! எங்களுக்கு குழந்தை பிறக்குமென தங்கள் திருவாக்கு மலர்ந்ததும் நாங்கள் மகிழ்ந்தோம். இப்போது இப்படி ஒரு நிபந்தனை விதிக்க காரணமென்ன? என அவர்கள் கவலையுடன் கேட்டனர். ராமாச்சாரி! கவலைப்படாதே! உங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தை சாதாரண குழந்தையல்ல. அவன் உலக இச்சைகளில் வாழ்வதற்காகப் பிறக்கவில்லை. மிகப்பெரிய புண்ணிய ஆத்மாவான அந்தக் குழந்தை சன்னியாச நிலை பெற்றுய்வதற்காக பிறக்கிறது. நீங்கள் அந்தக் குழந்தையை என்னிடம் ஒப்படைப்பதாக வாக்குறுதி அளித்தால் மட்டுமே உங்களுக்கு குழந்தை பாக்கியம். இல்லா விட்டால் இதுவும் சிரமமே! என்றார். உலகம் உய்வதற்காக ஒரு மகானைப் பெற்றுத் தரப்போகிறோம். அத்துடன் மலடி என்று ஊரார் சூட்டிய கொடுமையான பட்டத்தில் இருந்து விடுதலையும் கிடைக்கும். துறவியின் நிபந்தனைக்கு சம்மதித்து விட வேண்டியது தான் என முடிவெடுத்த அந்தத்தாய் சுவாமி! எனக்கு குழந்தை பிறந்தால் போதும் பிறந்தவுடன் தங்களிடமே ஒப்படைத்து விடுகிறேன் என்று கண்ணீர் மல்க கூறினார்.

மீண்டும் நாளை சந்திப்போம்
______________________________________________________________________________

வியாழன், 31 அக்டோபர், 2019

மகான் ராகவேந்திரர் பகுதி-2

பிரகலாதனின் காலத்தில் மக்கள் நிம்மதியுடன் வாழ்ந்தனர். அவன் அனுஷ்டிகம் சாத்வீகம் என்ற இருவகையான புண்ணியங்களைச் சேர்த்தான். அனுஷ்டிகம் என்பது தர்மம் செய்வதால் வரக்கூடியது. சாத்வீகம் என்பது ஹிம்சை செய்தவரிடமும் அஹிம்சையைக் காட்டுவதால் கிடைக்கக்கூடியது. முந்தைய புண்ணியத்தால் செல்வம் பெருகும். வாழ்நாள் கூடும். பிந்தைய புண்ணியம் பிறப்பற்ற நிலையை ஏற்படுத்தும் இரக்க மனம் கொண்ட பிரகலாதன் இரண்டு விதமான புண்ணியங்களையும் அளவுக்கதிகமாகச் சேர்த்து விட்டான். அவன் பிரம்மனை வணங்கி தெய்வமே! தாங்கள் என்க்கிட்ட சாபம் தீரும் காலம் வந்து விட்டதா? என மனமுருகிக் கேட்டான். பிரம்மன் அவன் முன்பு தோன்றி சங்குகர்ணா! நீ இப்பிறவியில் அளவுக்கதிகமாக புண்ணியத்தை சேர்த்து விட்டாய். இவ்வாறு புண்ணியம் செய்பவர்கள் அந்த புண்ணியத்திற்குரிய பலன்களை பூமியில் இருந்து அனுபவிக்க வேண்டும். உலகின் சுகமான இன்பங்களை அனுபவித்த பிறகே பிரம்மலோகம் வர முடியும் என்றார். சங்குகர்ணன் அவரிடம் சுவாமி! அப்படியானால் எனது புண்ணியங்களைத் தீர்க்கும் வழி யாது?என்றான். நீ அடுத்த பிறவியிலும் மன்னனாகவே பிறப்பாய். இப்பிறவியில் மகாவிஷ்ணுவின் பக்தனாக இருந்த நீ அடுத்த பிறவியில் பாலிகன் என்ற பெயரில் பிறந்து அவருக்கு எதிராக செயல்படும் மக்களுக்கு ஆதரவாக இருப்பாய். எனவே உன் புண்ணியத்தின் பெரும்பகுதி கரையும். அதன் பிறகும் நீ சேர்த்த புண்ணியங்களின் விளைவை கலியுகத்தில் தான் தீர்ப்பாய், என்று அருள்பாலித்து மறைந்தார். பிரகலாதனாய் பிறந்த சங்குகர்ணன் இப்பிறவியில் பாலிகன் என்ற மன்னனாகப் பிறந்தான். கவுரவர்களின் நண்பனாக வேண்டிய சூழல் இவனுக்கு ஏற்பட்டது. குருக்ஷேத்திர யுத்தத்தில் இவன் கவுரவர்களுடன் சேர்ந்து பகவான் கிருஷ்ணரின் நண்பர்களான பாண்டவர்களுக்கு எதிராகப் போரிட்டு அழிந்தான். அடுத்த யுகமான கலியுகத்தில் பாலிகனின் அவதாரம் உலகமே வியக்கக்கூடியதாக இருந்தது. பாலிகனாகப் பிறந்த சங்குகர்ணன் கவுரவர்களுடன் இணைந்திருந்தாலும் கூட அப்போதும் சில புண்ணியங்களைச் சேர்த்துக் கொண்டான். மனிதர்கள் பாவம் செய்தாலும் சரி புண்ணியம் செய்தாலும் சரி!  கர்மம் எனப்படும் இந்த இரு வினைகளால் ஏற்படும் பலன்களை அனுபவிப்பதற்காக பூலோகத்தில் மீண்டும் பிறக்க நேரிடும். அதனால் தான் பாவ புண்ணியம் இரண்டும் கலந்த இந்த பிறவிச்சுழலில் இருந்து காப்பாற்றும் படி  இறைவனிடம் மகான்கள் வேண்டிக் கொள்வார்கள். பாலிகன் செய்த புண்ணியத்தின் விளைவை அனுபவிக்க அவன் பூலோகத்தில் பிறக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பல நூறு ஆண்டுகள் கடந்தன. கலியுகம் பிறந்தும் பல ஆண்டுகள் ஓடிவிட்டன. மைசூரு மாநிலத்தில் (இப்போதைய கர்நாடகம்) அப்பூர்  என்ற கிராமத்தை ஒட்டிய குக்கிராமத்தில் ராமாச்சாரியார் என்பவர் வசித்தார். இவருக்கு குழந்தை இல்லை. ராமாச்சாரியாரும் அவரது மனைவியும் மனம் நொந்து போய் இருந்தனர். ஒரு தம்பதிக்கு குழந்தை இல்லை என்றால் ஊரார் அவர்களைப் பற்றி வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுவார்கள். குறிப்பாக உறவுக்காரர்கள் அந்தப் பெண்ணை மலடி என ஏசுவார்கள். அந்த ஆண்மகனை குடும்ப வாழ்வுக்கு லாயக்கற்றவன் என்பர். ராமாச்சாரியரும் இதற்கு விதிவிலக்கல்ல. கணவனும், மனைவியும் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானார்கள். அந்த தம்பதியர் கண்ணீர்  வடிக்காத நாளில்லை. அவர்கள் தங்கள் பிரச்னைக்கு தீர்வு வேண்டி பிரமான்ய தீர்த்தர் என்ற வைணவத்துறவியை அணுகினர். தீர்த்தர் சுவாமிகளுக்கு எங்கள் நமஸ்காரம். இவள் என் மனைவி நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் அவதிப்படுகிறோம். ஊராரும் உற்றாரும் எங்களைப் பற்றி பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மனம் நொந்து போயிருக்கிறோம். குழந்தை இல்லாதவர்கள் வாழ்வதை விட சாவதே மேல். மேலும் குழந்தை இல்லாதவர்கள் தங்களுக்கு சிரார்த்தம் முதலியன செய்ய ஆள் இல்லாததால் நரகத்திற்கு செல்வார்கள் என்கிறது சாஸ்திரம். நாங்கள் ஏன் வாழ வேண்டுமென நினைக்கிறோம். எங்களுக்கு குழந்தை பிறக்க வழியிருக்கிறதா? நீங்கள் தான் ஒரு யோசனை சொல்ல வேண்டும், என்றார்.

தீர்த்தர் ராமாச்சாரியரிடம் அன்பனே! கவலைப்படாதே. உனக்கு குழந்தை பிறக்கும் காலம் கனிந்து விட்டது. ஒரு ஆண்குழந்தை உனக்குப் பிறக்கும் என்றதும் தம்பதியர் உணர்ச்சிப்பிழம்பாகி விட்டனர். தீர்த்தரை சேவித்த அவர்கள் சுவாமி! இதென்ன அதிசயம்! நிஜமாகவா இது நிகழப்போகிறது! எங்களுக்கு குழந்தையா! அதிலும் ஆண் குழந்தையா! என்னே நாங்கள் செய்த பாக்கியம் என்று புன்னகையும் கண்ணீருமாகக் கேட்டவர்களுக்கு அடுத்து வார்த்தைகள் வர மறுத்தன. நா தழுதழுத்தது. மனிதர்களுக்கு மிதமிஞ்சிய மகிழ்ச்சி ஏற்பட்டாலும் சரி அல்லது சோகம் நிகழ்ந்தாலும் சரி! ஏனோ வார்த்தைகள் வர மறுக்கின்றன. பிரமான்ய தீர்த்தரே அவர்களது இந்த உணர்ச்சிவசப்படும் தன்மையைக் கண்டித்தார். ராமாச்சாரி! நீ ரொம்பவும் சந்தோஷப்படாதே. மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும் போதும் வேண்டாத நிகழ்ச்சிகள் நடக்கும் போதும் மனதை ஒரே நிலையில் வைத்திருப்பவனே சிறந்த மனிதன். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று தெரியாத நிலையற்ற உலகில் நாம் வசிக்கிறோம் என்பதை மறந்துவிடாதே. நல்லது நடக்கப் போகிறது என்பதற்காக மகிழாமலும் துன்பம் வரப்போகிறது என்பதற்காக கலங்காமலும் இருக்க வேண்டும் என சொல்லி விட்டு ராமாச்சாரி! இந்த அறிவுரையை நான் எதற்காக உன்னிடம் சொன்னேன் என்று உனக்குத் தெரியுமா? என்றதும் கேள்விக்குறியோடு தீர்த்தரின் முகத்தை அந்த தம்பதியர் ஒரு வித பயத்தோடு நோக்கினர். அத்துடன் தீர்த்தர் சொன்னதில் இருந்த நியாயத்தை உணர்ந்து தங்கள் மகிழ்ச்சியை ஒரு குட்டையைப் போல் சுருக்கிக்கொண்டு அவர் சொல்வதைக் கேட்க தயாராயினர்.ராமாச்சாரி! உங்களுக்கு குழந்தை பிறக்கும். ஆனால் அந்தக் குழந்தை எனக்குரியது. குழந்தை பிறந்தவுடன் அவனை எனக்கு தத்துக் கொடுத்து விட வேண்டும் என்றார். இந்த நிபந்தனையைக் கேட்டதும் தம்பதிகள் விக்கித்துப் போனார்கள். சற்று முன் அவர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி நதியில் கரைந்த சர்க்கரை போல் ஆயிற்று. குழந்தை பிறந்தவுடன் சீராட்டி, பாலூட்டி வளர்க்க வேண்டும். குருகுலத்துக்கு அனுப்பி அவனுக்கு பெரிய படிப்பெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டும். இளைஞன் ஆனதும் சிறந்த பெண்ணை அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். அந்த திருமணத்தை ஊரே வியக்கும் வகையில் பெரிய அளவில் நடத்த வேண்டும். பேரன், பேத்திகளுடன் மகிழ்ந்து விளையாட வேண்டும் என்றெல்லாம் கற்பனை செய்வது எல்லாப் பெற்றோர்களுக்கும் வாடிக்கை தானே! ஆனால் தீர்த்தர் தங்களுக்கு இப்படி ஒரு நிபந்தனை விதிக்க என்ன காரணம் என்று யோசித்தனர்.சுவாமி! எங்களுக்கு குழந்தை பிறக்குமென தங்கள் திருவாக்கு மலர்ந்ததும் நாங்கள் மகிழ்ந்தோம். இப்போது இப்படி ஒரு நிபந்தனை விதிக்க காரணமென்ன? என அவர்கள் கவலையுடன் கேட்டனர். ராமாச்சாரி! கவலைப்படாதே! உங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தை சாதாரண குழந்தையல்ல. அவன் உலக இச்சைகளில் வாழ்வதற்காகப் பிறக்கவில்லை. மிகப்பெரிய புண்ணிய ஆத்மாவான அந்தக் குழந்தை சன்னியாச நிலை பெற்றுய்வதற்காக பிறக்கிறது. நீங்கள் அந்தக் குழந்தையை என்னிடம் ஒப்படைப்பதாக வாக்குறுதி அளித்தால் மட்டுமே உங்களுக்கு குழந்தை பாக்கியம். இல்லா விட்டால் இதுவும் சிரமமே! என்றார். உலகம் உய்வதற்காக ஒரு மகானைப் பெற்றுத் தரப்போகிறோம். அத்துடன் மலடி என்று ஊரார் சூட்டிய கொடுமையான பட்டத்தில் இருந்து விடுதலையும் கிடைக்கும். துறவியின் நிபந்தனைக்கு சம்மதித்து விட வேண்டியது தான் என முடிவெடுத்த அந்தத்தாய் சுவாமி! எனக்கு குழந்தை பிறந்தால் போதும் பிறந்தவுடன் தங்களிடமே ஒப்படைத்து விடுகிறேன் என்று கண்ணீர் மல்க கூறினார்.

மீண்டும் நாளை சந்திப்போம்
______________________________________________________________________________
வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் தெரியுமா?

ஒருவர் தான் எப்படி வாழ வேண்டும் என்பதை ஒரு குட்டிக்கதை மூலம் தெரிந்து கொள்வோம். பல வருடங்களாக தச்சர் பணி செய்து வந்த தொழிலாளி ஒருவன் தன் பணியிலிருந்து ஓய்வு பெற விரும்பினான். எஜமானனிடம் தான் தன் குடும்பத்துடன் அமைதியாகக் காலம் கழிக்க விரும்புவதைத் தெரிவித்தார். எஜமானனுக்குத் தன் தொழிலாளியை விட மனமில்லை. இருந்தாலும் கடைசியாக ஒரே ஒரு வீடு கட்டித் தந்து விட்டு ஓய்வு பெறுமாறு கேட்டுக் கொண்டார். தச்சர் சரி என ஒப்புக் கொண்டாலும் அவர் மனம் வேலையில் ஆழ்ந்து ஈடுபடவில்லை. ஏனோ தானோ வென்று மட்டமான பொருள்களைக் கொண்டு வீடு கட்ட ஆரம்பித்தார். தன் கடைசிப் பணியை அப்படி அசிரத்தையுடன் செய்தது துரதிர்ஷ்டம் தான். எப்படியோ ஒரு வழியாக வீடு கட்டி முடிந்ததும் வீட்டை வந்து பார்த்தார் எஜமானன். அமைதியாக வீட்டின் சாவியைத் தச்சரிடம் கொடுத்து இதோ இந்த வீடு உனக்காக நான் அளிக்கும் பரிசு என்றார். அதிர்ச்சி! வெட்கம்! அடடா இது தனக்கான வீடு என்று முன்பே தெரிந்திருந்தால் நன்றாகக் கட்டியிருக்கலாமே? தான் மோசமாகக் கட்டிய வீட்டில் தானே வாழ வேண்டிய நிலைமை அந்தத் தச்சருக்கு. மனிதர்களும் இப்படி தான். தங்கள் வாழ்க்கையை ஏனோ தானோ வென்று வாழ்ந்து கழிக்கிறார்கள். தங்களுடைய திறமையை முழுமையாகப் பயன்படுத்தாமல் சோம்பி வாழ்கிறார்கள். திறமை காட்ட வேண்டிய சந்தர்ப்பங்களைக் கோட்டை விட்டு விடுகிறார்கள். நம் வாழ்க்கையும் அந்த வீடைப் போன்றது தான். ஒவ்வொரு ஆணி அடிக்கும் போதும் மரத்துண்டுகளைச் சேர்க்கும் போதும் புத்திசாலித்தனத்தோடு செயல்படுங்கள். இந்த வாழ்க்கை உனக்காகத் தான் உனக்கு தான் அளிக்கப்பட்டுள்ளது. அதை நீயே உருவாக்குகிறாய். ஒரு நாள் நீ வாழ்ந்தாலும் அமைதியோடும் கவுரவத்தோடும் வாழ வேண்டும். வாழ்க்கை என்பது நமக்கு நாமே கட்டிக் கொள்ளும் வீடு.
_________________________________________________________________________________
2. பூதத்தாழ்வார்

பிறந்த ஊர் : மகாபலிபுரம்
பிறந்த நாள் : 7ம் நூற்றாண்டு
நட்சத்திரம் : ஐப்பசி அவிட்டம் (வளர்பிறை நவமி திதி)
கிழமை : புதன்
எழுதிய நூல் : இரண்டாம் திருவந்தாதி
பாடல்கள் : 100
சிறப்பு : குருக்கத்தி மலரில் பிறந்தவர், திருமாலின் கதாயுத அம்சம்.

மகாபலிபுரத்தில் மல்லிகைப்புதரின் நடுவில் நீலோத்பவ மலரின் பெருமாளின் கவுமாதிதி என்னும் கதையில் அம்சமாக பிறந்தார் பூதத்தாழ்வார். இந்த உலக வாழ்வை சிறிதும் விரும்பாமல் பரமனிடம் ஆழ்ந்த பக்தியோடு திகழ்ந்தார். இவர் 13 திவ்யதேசங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார். முதல் ஆழ்வார் மூவருள் இரண்டாவது ஆழ்வார் இவர். பொய்கையாழ்வார், பேயாழ்வார் இருவரையும் திருக்கோவிலூரில் சந்தித்து மகிழ்கிறார். பொய்கையாழ்வார் வையம் தகளியாய் என ஆரம்பித்து நூறு பாடல்களை பாட பூதத்தாழ்வாரோ அன்பே தகளியாய் என நூறு பாடல்களை பாடினார். மகிழ்வில் உருகிய மனமாகிய திரியை பக்தி என்று எண்ணெயில் இட்டு ஞானச்சுடர் ஏற்றி என பாடி திருமாலை பாடும் பெருமையை தனக்கு கிடைத்ததை நினைத்து அடிக்கடி மகிழ்கிறார். பல திவ்ய தேசங்களுக்கும் சென்று பெருமாளின் புகழைப் பரப்பினார். பெருமாளின் 108 திருப்பதிகளில் பூதத்தாழ்வார் தனியாக மங்களாசாசனம் செய்யாமல் பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து மொத்தம் 14 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.
____________________________________________________________

புதன், 30 அக்டோபர், 2019

இந்திரன் பழிதீர்த்தப் படலம்!

ஒரு செயலைத் தொடங்கும் முன், அந்த செயல் பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டால், மிகவும் சிறப்புடையதாக இருக்கும். முன்பின் தெரியாத ஊருக்குச் செல்லும் போது, அந்த ஊர் பற்றிய விபரங்களை விபரமறிந்தவர்களிடம் கேட்டோ, இணையத் தளங்கள் மூலம் அறிந்தோ செல்வது அங்கு சென்று வர எளிதாக இருக்கும். புராணங்களைப் படிக்கும் முன்பும் அப்படியே. புராணக்கதைகளை மட்டும் படித்தால் போதாது. அதை எழுதியவர் யார், அவரைப் பற்றிய விபரம், எந்தச் சூழ்நிலையில் எழுதினார், அவரை எழுதத் தூண்டியவர்கள் யார் என்பது பற்றியும் தெரிந்து கொண்டால், படிப்பவர்களுக்கு அதுபற்றிய முழுமையான விபரமும் தெரியவரும். கூடல்மாநகராம் மதுரையில் சிவபெருமான் செய்த அற்புதலீலைகளை ஹாலாஸ்ய மகாத்மியம் என்னும் வடமொழி நூலில் சொல்லியுள்ளார்கள். வியாசர் இயற்றிய ஸ்கந்த புராணத்தில் இந்த லீலைகள் சொல்லப்பட்டுள்ளன. நந்திதேவர் சனத்குமார முனிவருக்கு இந்த லீலைகள் பற்றி சொன்னார் என்றும், அதை வியாசருக்கு சனத்குமாரர் சொன்னார் என்றும், வியாசர் அதை ஸ்கந்தபுராணத்தில் எழுதினார் என்றும் ஒரு தகவல் இருக்கிறது. ஹாலாஸ்ய மகாத்மியத்தை தமிழில் மொழி பெயர்த்தவர் பரஞ்சோதி முனிவர். அதை அப்படியே மொழி பெயர்க்காமல், தமிழுக்கே உரித்தான செய்யுள் நடையில் 3363 செய்யுள்களாக வடித்தார். இதில் முதல் 343 செய்யுள்கள் காப்பு, மதுரை நகர சிறப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது. 344 வது செய்யுள் முதல் தான் பெருமானின் திருவிளையாடல் துவங்குகிறது. வேதாரண்யத்தில் வசித்த மீனாட்சி சுந்தர தேசிகரின் மகனே பரஞ்சோதி. தந்தையே குருவாக இருந்து, மகனுக்கு சைவ சித்தாந்த கருத்துக்களைப் போதித்தார். நீறிட்ட உடலுடன் வேதாரண்யத்து பெருமானை துதித்து வந்த பதஞ்சலி முனிவர், தமிழகத்திலுள்ள பிறகோயில்களையும் பார்க்க ஆவல் கொண்டார். மதுரையம்பதிக்கு வந்த அவர், மண்டபம் ஒன்றில் தங்கியிருந்த போது, அவரது கனவில் தோன்றிய அன்னை மீனாட்சி, சிவபெருமான் அந்நகரில் நிகழ்த்திய லீலைகளை அழகு தமிழில் பாடும்படி உத்தரவிட்டாள். அன்னையின் திருக்காட்சி கண்ட பரஞ்சோதி முனிவர் தெள்ளுதமிழில் இனிய பாடல்களை வடித்தார். அதுவே திருவிளையாடல் புராணம். இது 64 படலங்களைக் கொண்டது. முதல் 18 படலங்கள் மதுரை காண்டம் என்றும், 19 முதல் 48 வரையான படலங்கள் கூடற்காண்டம் என்றும், 49 முதல் 64 வரையான படலங்கள் திருவாலவாய் காண்டம் என்றும் பெயர் பெற்றுள்ளன.

பிரம்மா ஒருமுறை ஒரு தராசுத் தட்டில் கைலாயத்தை ஒரு தட்டிலும், மதுரையம்பதியை ஒரு தட்டிலும் வைத்து நிறுத்தார். அப்போது, மதுரை இருந்த தட்டு தாழ்ந்தது. கயிலையை விட மதுரை மிகச்சிறந்த தலம் என்ற முடிவுக்கு வந்தார். அத்தகைய பெருமை பெற்ற மதுரை நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. திருவிளையாடல் புராணத்தை அரங்கேற்ற பரஞ்சோதி முனிவர் தயாராகி விட்டார். மக்கள் அனை வரும் சுந்தரேஸ்வர பெருமானின் திவ்ய லீலைகளைக் கேட்பதற்கு வரவேண்டும் பாண்டிய மன்னரின் சார்பில் பறையறைந்து தெரிவிக்கப் பட்டது. தேரோடும் வீதிகளை மக்கள் கோமயம் தெளித்து சுத்தமாக்கினர். அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டன. வாழை மரத் தோரணங்களை மக்கள் தங்கள் இல்லங்கள் முன்பு கட்டினர். இன்றைய சித்திரை திருவிழாவுக்கு நகரை அலங்கரிப்பது போல், மக்கள் வெகு விமரிசையான ஏற்பாடுகளை அவரவர் செலவில் செய்தனர். இந்த விபரத்தையறிந்து வெளியூர்களில் இருந்தெல்லாம் சிவனடியார்கள் மதுரையை மொய்த்தனர். எங்கும் சிவாய நம என்ற திருமந்திரம் ஒலித்தது. திருவிளையாடல் புராண அரங்கேற்றத்தை நடத்த பெரிய மண்டபம் வேண்டும், என்ன செய்யலாம் என யோசித்தனர் அமைச்சர்கள். கோயிலுக்குள் இருக்கும் ஆயிரங்கால் மண்டபத்தில் ஆயிரக்கணக் கான மக்கள் அமரலாம், மண்டபத்துக்கு வெளியேயும் மக்களை கூடச் செய்யலாம் என்ற அடிப் படையில் மண்டபத்தை சீரமைத்தனர். அலங்கார மேடை ஒன்றில் பட்டுக் கம்பளம் விரிக்கப்பட்டு, பரஞ் சோதியார் எழுதிய திருவிளையாடல் புராண ஓலைச்சுவடிகள் வைக்கப்பட்டிருந்தன. பரஞ்சோதியார் விழா மேடைக்கு வந்தார். அப்போது திருச்சங்குகள் முழங்கின. முரசுகள் ஆர்ப்பரித்தன. மங்கல வாத்தியங்கள் முழங்கின. பாண்டிய மன்னர் பரஞ்சோதியாரை எதிர்கொண்டு வரவேற்று, பொன்னாடை போர்த்தினார். அனைவரும் அன்னை மீனாட்சியின் சன்னதிக்குச் சென்றனர். கற்பூர ஒளியில் மரகதவல்லி மீனாட்சி தகதகவனெ ஜொலித்து ஆசிர்வதித்தாள். அடுத்து சுந்தரேஸ்வரப் பெருமானின் சன்னதிக்குச் சென்று, அரங் கேற்றம் மிகச்சிறப்பாக அமைய வேண்டினார் பரஞ்சோதி முனிவர். பின்னர் மண்டபம் திரும்பி, விநாயகப் பெருமானை மனதில் எண்ணி கணீர் என்ற குரலில் திருவிளையாடல் புராணத்தை சொல்ல ஆரம்பித்தார்.

சக்தியாய் சிவமாகித் தனிப்பர
முத்தி யான முதலைத் துதி செயச்
சுத்தியாகிய சொற்பொரு ணங்குள
சித்தி யானை தன் செய்பொற் பாதமே!
என்று விநாயகரை வணங்கிப் பாடினார்.
தொடர்ந்து மதுரையின் சிறப்பு, புராண வரலாறு ஆகிய முன்னுரைக்குப் பின், மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலுள்ள பொற்றாமரைக் குளத்தின் சிறப்பைச் சொன்னார்.  இந்தக் குளத்தைப் பார்த்தால் தர்மம் செய்த புண்ணியம் சேரும். தீர்த்தத்தைத் தொட்டால் செல்வம் பெருகும். மூழ்கி எழுந்தால் மோட்சம் கிடைக்கும் என்றார்.

இந்திரன் பழிதீர்த்தப் படலம்

ஆசிரியரை மாணவர்கள் மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக சிவபெருமானின் முதல் திருவிளையாடல் அமைந்தது. தேவலோகத்தின் அரசன் யார் என்றால் தேவேந்திரன் என்று பச்சைக்குழந்தை கூட பதில் சொல்லிவிடும். அவன் தேவேந்திரன் என்றாலும், அவனுக்கும் சட்டதிட்டங்கள் உண்டு. குறிப்பாக, தலைமை பொறுப்பில் உள்ளவன், சட்ட திட்டங்களை மதித்து நடக்க வேண்டும். தனது பொறுப்பில் பலர் இருக்கிறார்களே என்ற அக்கறை வேண்டும். இல்லாவிட்டால், பதவி பறிபோய் விடும். தேவேந்திரனுக்கும் ஒருநாள் அப்படியொரு நிலை வந்தது. பூலோகத்தில் புண்ணியம் செய்தவர்களே தேவர் என்ற அந்தஸ்தை அடைகிறார்கள். பூலோகத்தில் அவர்கள் அடைய நினைத்த இன்பமெல்லாம் அங்கே கிடைக்கும். அதற்காக எதற்கும் ஒரு நேரம், காலம் உண்டல்லவா! அங்கும் நல்லநேரம், கெட்ட நேரமெல்லாம் உண்டு. தேவேந்திரனுக்கு ஒருநாள் கெட்ட நேரம் வந்தது பெண்களின் வடிவில்! தேவலோகத்தில் தேவர்கள் கூடிக்களித்திருக்க, நாட்டியத்தை ரசிக்க அப்சரஸ்கள் எனப்படும் தேவகன்னியர் உண்டு. அவர்களில் ரம்பா, ஊர்வசி, திலோத்தமா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்களின் நடனத்தை ரசித்துக் கொண்டிருந்த தேவேந்திரன், பல அப்சரஸ்களின் அழகில் மயங்கி லயித்துக் கிடந்தான். அந்த நேரத்தில் தேவர்களின் குருவான பிரகஸ்பதி அங்கு வந்தார். இவர் யார் தெரியுமா? நவக்கிரக மண்டபத்தில் மஞ்சள் உடை உடுத்தி வடக்கு நோக்கி ஒரு சிற்பம் இருக்குமே! அந்த குரு பகவான் தான்! இவரது பார்வை ஒரு இடத்தில் பட்டாலே நல்லது நடக்கும். அதனால் தான் குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள்.

தேவேந்திரனுக்கு தான் கெட்ட நேரமாயிற்றே! இல்லாவிட்டால், பொறுப்புள்ள பதவியிலுள்ள ஒருவன், பெண்களுடன் பொது இடத்தில் கூடிக் களிப்பானா? மறைவிடத்து விஷயங்கள் பொது இடத்தில் நடந்தால், யாரால் கண் கொண்டு பார்க்க முடியும்! பிரகஸ்பதி, தேவேந்திரன் நிகழ்த்திய கூத்தைப் பார்த்து, அப்படியே கண்ணைப் பொத்திக் கொண்டார். குரு பார்வையை மூடினால், நிலைமை என்னாகும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தேவேந்திரனுக்கு ஆரம்பமானது கெட்ட நேரம்.பிரகஸ்பதி, அப்படியே திரும்பிப் போய் விட்டார். தேவேந்திரன் தன் ஆட்டபாட்டத்தை முடித்துக் கொண்டு, தனது அந்தரங்க அறைக்குள் செல்லும் வேளையில், தேவர்களில் சிலர் அவனைப் பார்த்தனர். தேவேந்திரா! குருநாதர் பிரகஸ்பதி வந்திருந்தார். தாங்கள் அந்நேரத்தில் இருந்த நிலை கண்டு, கண் பொத்தி வெளியேறி விட்டார். உடனடியாக அவரைச் சந்தித்து, மன்னிப்பு கேளுங்கள். குருவின் ஆதரவு இல்லாவிட்டால் தங்களுக்கு மட்டுமல்ல! தங்களை நம்பியிருக்கும் எங்களுக்கும் சிரமம் வந்து சேரும், என்றனர். தேவேந்திரன் கதிகலங்கி விட்டான். குரு நிந்தை செய்தோமே! என்ன நடக்கப் போகிறதோ? உடனே அவரை சென்று பார்த்து வருகிறேன், என்று அவரது இல்லத்துக்கு தனது வெள்ளை யானையான ஐராவதத்தில் ஏறி விரைந்தான்.

குரு அங்கே இருந்தால் தானே! சிலருக்கு திருமணமாகாமலே இருக்கும். அதற்கு காரணம் என்ன தெரியுமா? குடும்பத்தினர் அல்லது முன்னோர் செய்த பாவத்தின் விளைவே அது. இவர்கள் மீது குருவின் பார்வை பட வேண்டுமானால், பெரும் பரிகாரங்களை எல்லாம் செய்தாக வேண்டும்! தேவேந்திரனின் பார்வையில், குரு படவே இல்லை. தனது தலைமை சீடனே இப்படியிருந்தால் மற்றவர்கள் எப்படியிருப்பார்கள்? பெண் பித்தர்களான இவர்களுக்கு போய் பாடம் எடுத்தோமே என்ற வேதனையில் குரு மறைவான இடத்துக்குப் போய் விட்டார். தேவேந்திரன் அவரைத் தேடியும் காணாமல், அவன் பிரம்மாவைப் பார்க்க ஓடினான். குரு அபச்சாரம் செய்து விட்டதை அவரிடம் சொன்னான். பிரம்மா ஒரு யோசனை சொன்னார். தேவேந்திரா! குரு நிந்தனை கொடிய பாவம். இதற்கு தகுந்த பரிகாரம் செய்தால் தான் அவர் உனக்குத் தென்படுவார். அந்த பரிகாரத்தையும் நான் சொல்கிறேன் கேள். துவஷ்டா என்ற அசுரன் ஒரு மகனைப் பெற்றிருக்கிறான். அவனது பெயர் விஸ்வரூபன். அவனுக்கு மூன்று முகம். மிகவும் கொடியவன். ஆனால், ஆச்சார அனுஷ்டானங்களை சரியாகக் கடைபிடிப்பவன். அவனை உன் தற்காலிக குருவாக ஏற்றுக்கொள். வேறு வழியில்லை, என்றார். குரு பார்வை இல்லாவிட்டால் கெட்ட நேரம் விடவே விடாது. இந்திரன் அதற்கு விதிவிலக்கா என்ன! பெரியவர்கள் ஒன்றைச் சொன்னால், அதை நம்பிக்கையுடன் செய்ய வேண்டும்.

தன்னிலும் உயர் பதவியிலுள்ள, வேதநாயகனான நான்முகன் சொன்ன யோசனை இந்திரனுக்குப் பிடிக்கவில்லை. தேவலோகத்துக்கு ஒரு அசுரனை குருவாக நியமிக்கச் சொல்கிறாரே! இவருக்கு என்ன ஆயிற்று? என்று எண்ணியபடியே சென்றான். இருப்பினும், அவரது யோசனையை செயல்படுத்தாவிட்டால் அவரது பகையையும் சம்பாதிக்க நேரிடும். மேலும், தேவலோகத்துக்கு ஒரு குருவும் நிச்சயம் வேண்டுமே என்ற எண்ணத்துடன் விஸ்வரூபனை சந்தித்து அவனை வணங்கினான். என்ன இந்திரா! தேவலோகாதிபதி என்னைத் தேடி வந்திருக்கிறாய்! என்ன விஷயம்? என்றான். தங்களை குருவாக ஏற்க வந்துள்ளேன். தாங்கள் தேவலோக குரு பதவியை ஏற்க வேண்டும், என்றான். விஸ்வரூபனுக்கும் இதில் மனமில்லை. அசுரனான நாம், தேவர்களுக்கு குருவாக இருப்பதாவது! இருப்பினும், தானாக வலையில் வந்து சிக்கிய மானை விட்டு வைக்கலாமா! சிங்கமாக இருந்து இந்த தேவர்களை ஒரு வழி செய்து விட வேண்டும். ஏழு உலகிலும் அசுரக்கொடி பறக்க இதை விட அருமையான சந்தர்ப்பம் ஏது? என்று எண்ணி யவனாய், பதவி ஏற்க சம்மதித்தான். ஆக, மாணவனுக்கும் மனமில்லை, குருவுக்கும் வஞ்சக எண்ணம் என்ற ரீதியில் தேவர்கள் அசுரர்களின் கிடுக்கிப்பிடியில் சிக்கினர்.

ஒரு வழியாக விஸ்வரூபன் தேவர்களுக்கு குருவானான். தேவேந்திரனுக்கு தன் குலகுரு பிரகஸ்பதிக்கு செய்த துரோகம் மனதை அரித்துக் கொண்டே இருந்தது. அவரது அதிருப்தியில் இருந்து விடுபட்டு பாவம் நீங்குவதற்காக யாகம் ஒன்றை நடத்த எண்ணம் கொண்டான். தன்னுடைய விருப்பத்தை விஸ்வரூபனிடம் தெரிவித்தான். புதிய குரு விஸ்வரூபன் யாகம் நடத்த ஒப்புதல் கொடுப்பது போல நடித்து, இதையே சந்தர்ப்பமாக்கி தேவேந்திரனை கொன்று தேவலோகத்தை நிரந்தரமாக கைப்பற்றி விடவேண்டும் என்ற எண்ணம் கொண்டான். ஒருவருக்கு குரு பார்வை இல்லாவிட்டால் துன்பங்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். தேவேந்திரனுக்கு இந்த யாகத்தின் மூலம் பெரும் துன்பம் வந்து சேர இருந்தது. யாகம் துவங்கியது. விஸ்வரூபன் யாகத்திற்கு தலைமை வகித்தான். யாக குண்டத்தில் நெய்யை வார்க்கும்போது, தேவர்குலம் தழைக்க வேண்டும் என்பதற்கு பதிலாக அரக்கர் குலம் தழைக்க வேண்டும் என்று சொல்லி நெய்யை ஊற்றினான். மந்திரங்களை மனதிற்குள் உச்சரித்தான். அவன் என்ன செய்கிறான் என்பதை யாராலும் அறிந்துகொள்ள முடியவில்லை. தேவேந்திரன் சுதாரித்துக் கொண்டான். தன் ஞானதிருஷ்டியால் எதிரே அமர்ந்திருக்கும் விஸ்வரூபன் குரு என்ற போர்வையில் தனக்கு எதிராக மந்திரங்களை உச்சரிக்கிறான் என்பதை தெரிந்துகொண்டான். அவனுக்கு கடும் கோபம் ஏற்பட்டது. தனது வஜ்ராயுதத்தை எடுத்து விஸ்வரூபன் மீது வீசினான். இந்திரனின் வஜ்ராயுதத்துக்கு தப்பியவர்கள் யாருமில்லை. விஸ்வரூபனின் மூன்று தலைகளையும் அது கொய்தது. அந்த தலைகள் மூன்று பறவைகளாக உருமாறி வானில் பறந்தது. எப்படியோ விஸ்வரூபனின் ஆவி பிரிந்துவிட்டது. ஏற்கனவே பிரகஸ்பதியின் சாபத்தை பெற்றுக்கொண்ட இந்திரன், இப்போது புதிய குருவான விஸ்வரூபனையும் கொன்றுவிட்டதால் பிரம்மஹத்தி தோஷம் (கொலை பாவம்) பற்றிக் கொண்டது. ஒருவருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டால் அதற்கு மாபெரும் பரிகாரங்களை செய்தாக வேண்டும். அந்த பரிகாரங்களை எல்லாம் தேவர்கள் செய்தனர். இதன் மூலம் அந்த தோஷம் நீங்கியது. ஆனால் அசுரர்களின் பகையை அவன் அதிகமாக சம்பாதித்துக்கொண்டான். விஸ்வரூபனின் தந்தை துவஷ்டா. இவர் தன் மகனைக்கொன்ற தேவேந்திரனை பழிவாங்க எண்ணம் கொண்டார். இதற்காக யாகம் ஒன்றை துவங்கினார். அந்த யாகத்தீயிலிருந்து பயங்கர ஆயுதங்கள், கோரைப்பற்கள், நாற்பது கைகளுடன் ஒரு அரக்கன் தோன்றினான். அவனது கண்களிலும் வாயிலும் விஷவாயு வெளிப்பட்டது. அவன் துவஷ்டாவை வணங்கிநின்றான்.

தலைவனே! உன் கட்டளைக்கு அடிபணிந்து உன் முன்னால் நிற்கிறேன். உனக்காக நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டான். அதற்கு துவஷ்டா, சீடனே! உனக்கு விருத்திராசுரன் என பெயர் சூட்டுகிறேன். நீ இப்போது இருப்பதைவிட பலமடங்காக உன் உருவத்தை வளர்த்துக்கொள்ளும் வரத்தையும் தருகிறேன். உன் உருவம் வளர வளர கோபமும் அதிகமாகும். அந்த கோபத்தை பயன்படுத்தி நீ தேவர்குலத்தை அழிக்க வேண்டும். குறிப்பாக என் மகன் விஸ்வரூபனை கொன்ற இந்திரனின் உயிர் எனக்கு வேண்டும். உடனே புறப்படு! என ஆணையிட்டார். விருத்திராசுரன் தனது நாற்பது கைகளிலும் பல்வேறு ஆயுதங்களை தாங்கி இந்திரனை தேடி புறப்பட்டான். விருத்திராசுரன் தன்னை நோக்கி வருவதை இந்திரன் அறிந்துகொண்டான். அவன் தனது வாகனமாகிய வெள்ளை ஐராவதத்தில் அமர்ந்து புறப்பட்டான். இருவரும் வானவெளியில் சந்தித்தனர். கடும் போர் ஏற்பட்டது. இந்திரன் தனது வஜ்ராயுதத்தின்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவன். அதை விருத்திராசுரன் மீது அவன் எறிந்தான். ஆனால் அது அவனை எதுவுமே செய்யவில்லை. தன் கையிலிருந்த இரும்பு தடியால் வஜ்ராயுதத்தை தடுத்து நிறுத்திவிட்டான் விருத்திராசுரன். மேலும் அந்த தடியால் இந்திரனையும் தாக்கினான். இந்திரன் மயங்கி விழுந்துவிட்டான். இந்திரன் இறந்துவிட்டான் என நினைத்த விருத்திராசுரன், துவஷ்டாவிடம் திரும்பி சென்றுவிட்டான். ஆனால் சிறிது நேரத்தில் இந்திரனுக்கு மயக்கம் தெளிந்து விட்டது. தான் உயிருடன் இருப்பது தெரிந்தால் விருத்திராசுரனால் ஆபத்து ஏற்படும் என பயந்துபோன இந்திரன் சத்யலோகத்திற்கு வந்துசேர்ந்தான்.அங்கு பிரம்மாவை வணங்கி, விருத்திராசுரனை கொல்வதற்குரிய வழி பற்றி கேட்டான். பிரம்மா அதுபற்றி ஏதும் சொல்லவில்லை. தேவேந்திரனே! விருத்திராசுரனை கொல்லும் வழியை நான் அறியமாட்டேன். அசுரர்களை கொல்லும் சக்தி ஸ்ரீமந் நாராயணனுக்கே இருக்கிறது. நாம் அவரிடம் சென்று யோசனை கேட்டு வரலாம் என சொல்லி வைகுண்டம் சென்றனர். அங்கே திருமால் ஆதிசேஷன் மீது துயில் கொண்டிருந்தார். பரந்தாமனாகிய பெருமாளை இருவரும் பாடித்துதித்தனர். திருமால் அவர்களிடம், என்ன காரணத் திற்காக வந்தீர்கள்? என கேட்டார்.

அவர்கள் வந்த காரணத்தை விளக்கினர். திருமால் இந்திரனிடம், தேவேந்திரா! திருப்பாற்கடலை கடைந்தபோது நீ உனது ஆயுதத்தை ததீசி முனிவரிடம் கொடுத்து வைத்தாய். ஆனால் அதை திரும்ப வாங்க மறந்துவிட்டாய். நீ வருவாய் என காத்திருந்த மகரிஷி வராமல் போனதால் அந்த ஆயுதங்களை விழுங்கிவிட்டார். அவை அனைத்தும் அவரது முதுகுத்தண்டில் சென்று சேர்ந்துவிட்டது. அந்த மகரிஷியிடம் வேண்டி அவரது முதுகுத் தண்டை பெற்று அதை ஆயுதமாக பயன்படுத்தி போரிட்டால் விருத்திராசுரன் மடிவான்.ஆனால் முதுகுத் தண்டை உனக்கு காணிக்கையாக கொடுத்துவிட்டால் மகரிஷி இறந்துவிடுவார். இனி அதை பெறுவது உன்னுடைய வேலை என்று சொல்லி ஆசீர்வதித்து அனுப்பினார்.தேவேந்திரன் ததீசி முனிவர் தவம் செய்துகொண்டிருந்த ஆசிரமத்திற்கு சென்றார். அவன் வந்த காரணத்தை அறியாத முனிவர் அவனை வரவேற்றார். ததீசி முனிவருக்கு இந்திரன் தான் கொண்டு வந்த மங்கலப் பொருட்களை சமர்ப்பித்தான். பெரியவர்களைப் பார்க்க வெறும் கையுடன் செல்லக்கூடாது. பழம், பூமாலை முத லானவற்றை வாங்கிச் செல்வது உத்தமம். தேவேந்திரன் அதையே செய்திருந்தான். அவன் வந்த காரணத்தை ததீசி முனிவர் கேட்டார். தேவேந்திரா! திடீரென என்னைத் தேடி வந்த காரணம் என்ன?என்றார். ஒருவரிடம் எதை வேண்டுமானாலும் கேட்கலாம். ஆனால், முதுகுத்தண்டை கேட்பது என்றால்... முதுகுத்தண்டை சாதாரணமாகவா எடுக்க முடியும்? உயிர் பிரிந்தால் தானே அது சாத்தியம்... இருந்தாலும், நாராயணன் இப்படி சொல்லியிருக்கிறார் எனச்சொல்லி, அவரிடம் விஷயத்தை விளக்கினான் தேவேந்திரன். ததீசி முனிவரின் முகம் பிரகாசமானது. இப்படி ஒரு பாக்கியம் எனக்கா? தாராளமாக என் முதுகெலும்பை எடுத்துக் கொள் தேவேந்திரா. தேவர்களைப் பாதுகாக்க என் முதுகுத்தண்டு உதவுமென்றால் அதை விட வேறு என்ன பேறு எனக்கு வேண்டும்? என்று அகம் மகிழச் சொன்னார். உனக்காக உயிரையும் கொடுப்பேன் கண்ணே! என்று காதலன் காதலியிடமும், கணவன் மனைவியிடமும் வசனம் வேண்டுமானால் பேசலாம். ஆனால், அதற்கு தயாராக இருப்பவர்கள் எத்தனை பேர்? ததீசி மனப்பூர்வமாக சம்மதித்தார். பத்து உயிர் வாழ்வதற்கு ஒரு உயிர் போகிறது என்றால் அதுபற்றி கவலைப்படவே கூடாது. இங்கோ! முப்பத்து மூன்று கோடி தேவர்களின் உயிர், முனிவரின் முதுகுத்தண்டில் இருக்கிறது என்பதால், அவர் உளப்பூர்வமாக சம்மதித்தார். உடனடியாக, அவர் யோகாவில் ஆழ்ந்தார். அவரது பிராணன் பிரிந்தது. பிறருக்காக உயிர் விட்ட அந்த ஆவியை வானத்தில் இருந்து புஷ்பக விமானம் வந்து ஏற்றிக்கொண்டு சிவலோகம் நோக்கிச் சென்றது. இந்திரன், முனிவரின் முதுகுத்தண்டுடன் சென்று, விருத்திராசுரனுடன் போரிட்டான். அவனால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அசுரப்படைகள் முழுமையாக அழிந்து விட்டன. விருத்திரனுக்கு ஆச்சரியம். இப்படியும் ஒரு ஆயுதமா? இனியும் இவன் முன்னால் நின்றால் உயிரிழக்க நேரிடும் என்றெண்ணிய அவன் கடலுக்குள் போய், அங்கே ஏற்கனவே மறைந்திருந்த அசுரர்களுடன் போய் இணைந்து கொண்டான். தேவேந்திரன் பிரம்மாவிடம் ஓடினான். கடலுக்குள் மறைந் தவனை எப்படி பிடிப்பது என்று யோசனை கேட்டான்.

மகரிஷி அகத்தியரால் மட்டுமே அது முடியும். காவிரியையும், தாமிரபரணியையும் தன் கமண்டலத்துக்குள் அடக்கியவர் அவர். அவரைச் சந்தித்தால் இதற்கு விடிவு பிறக்கும், என்றார். இந்திரன் அகத்தியரைத் தேடிச் சென்று நமஸ்கரித்து, வந்த விஷயத்தைச் சொன்னான்.அதுபற்றி கவலை வேண்டாம், என அருள் பாலித்த அகத்தியர், அந்தக் கடலருகே சென்று உளுந்து அளவுக்கு மாற்றி, அதை உள்ளங்கையால் அள்ளி பருகி விட்டார். வற்றிப் போன கடலுக்குள் அசுரர்கள் அங்குமிங்கும் ஓடினர். விருத்திராசுரனை நோக்கி முதுகுத்தண்டை வீசினான் தேவேந்திரன். அது அவனை விரட்டிச் சென்று தலையைக் கொய்தது. குரு நிந்தனை மிகவும் பொல்லாதது. எப்படி தெரியுமா? விருத்திராசுரன் மடிந்த அடுத்தகணமே கொலைப் பாவமான பிரம்மஹத்தி அவனைத் தொற்றிக் கொண்டது. குருவை ஒருமுறை அவமதித்ததால், அவன் தொடர்ந்து அவஸ்தைகளை அடைந்து வந்தான். இன்னும் அது தீர்ந்தபாடில்லை. நாராயணன், பிரம்மா ஆகியோர் இருந்தும், இரண்டு மகரிஷிகளின் உதவி இருந்தும் இப்படி ஒரு நிலை. அதனால் தான் தெய்வத்துக்கு முன்னதாக குருவுக்கு ஸ்தானம் கொடுத்தார்கள் பெரியவர்கள். கொலைப் பாவம் காரணமாக, இந்திரனுக்கு சித்த பிரமை ஆகி விட்டது. அவன் தரையில் உருண்டு புரண்டு அரற்ற ஆரம்பித்தான். பின்னர், ஒரு தாமரைத் தண்டுக்குள் சென்று அதனோடு ஐக்கியமாகி விட்டான். இப்போது தேவலோகத்தில் தலைமைப் பொறுப்பு காலியாகி விட்டது. தேவேந்திரன் போன இடம் தெரியவில்லை. இதனால் நகுஷன் என்ற தேவனை இந்தப் பதவியில் தேவர்கள் அமர்த்தினர். நகுஷன் பதவிக்கு வந்தவுடன் ஆட்டம் போட ஆரம்பித்து விட்டான். இந்திரப்பதவியில் இருக்கும் எனக்கு இந்திராணி சொந்தமாக வேண்டும் என்று வாதம் செய்ய ஆரம்பித்து விட்டான். இந்திராணிக்கு பல வகைகளிலும் தொந்தரவும் கொடுத்தான். இந்திராணி அதற்கு படியவில்லை.

ஒருநாள் இந்திராணியை தன் அந்தப்புரத்துக்கு இழுத்து வாருங்கள் என்று காவலர்களுக்கு உத்தரவு போட்டான். இந்த விஷயம் தேவகுருவிற்கு தெரிந்து விட்டது. ஆஹா... நம்முடைய பிடிவாதத்தால் இந்திராணிக்கு களங்கம் வரலாமா? அவளது கற்புக்கு பங்கம் வந்தால் நான் தானே பொறுப்பு, என்று முடிவெடுத்து, தேவலோகம் சென்றார். இந்திராணி அவரது பாதங்களில் விழுந்து, தன் கணவர் மீது கொண்ட கோபத்தை மறந்து விடும்படியும், தன் கற்பிற்கு பாதுகாப்பு கேட்டும் மன்றாடினாள். அவளது கண்ணீர் பிரகஸ்பதியைக் கரைத்தது. குரு பலம் குறைந்தவர்கள், நவக்கிரக சன்னதியில் உள்ள குருவிடம், கண்ணீர் விட்டு மன்றாடினால், இரக்க குணமுள்ள குரு, சோதனைகளைக் குறைப்பார் என்பது இதில் இருந்து நமக்கு கிடைக்கும் தகவல். குருதேவர், அவளை சமாதானம் செய்து, ராணி! கவலை படாதே. நகுஷன் உயர்பதவியில் இருக்கிறான், அவன் மாபெரும் வீரன் வேறு, அவனை அவ்வளவு எளிதில் யாராலும் அடக்க முடியாது. அந்த பராக்கிரமசாலியை அடக்க ஒரு உபாயம் சொல்கிறேன் கேள். அவனை ஒரு தங்கப்பல்லக்கில் அமர்ந்து, ஏழு ரிஷிகள் அதனை தூக்கி வர வேண்டும் என்றும், அவ்வாறு என்னை (இந்திராணி) காண வந்தால், நான் உமது மனைவியாவேன், என்று சொல்லியனுப்பு, என்றார். குருவின் கட்டளையை ஏற்ற இந்திராணியும் அவ்வாறே செய்தாள். நகுஷன் சப்தரிஷிகளை வரவழைத்தான். ஏ ரிஷிகளே! என்னை இந்திராணியின் இருப்பிடத்துக்கு பல்லக்கில் அமர்த்தி தூக்கிச் செல்லுங்கள், என உத்தரவு போட்டான். பல்லக்கு புறப்பட்டது. அவர்களில், ஒரு ரிஷி மட்டும் சற்று மெதுவாகச் சென்றதால், மற்றவர்களும் மெதுவாக நடக்க வேண்டியதாயிற்று. நகுஷன் பல்லக்கில் இருந்தபடியே, மெதுவாகச் செல்பவன் யார்? என்று ஒருமையில் கத்தினான். அந்த முனிவர் அவனை எட்டிப்பார்த்தார்.

ஓ அகத்தியரா! இந்தக் குள்ளனால் தான் தாமதமா? அகத்தியரே! என் அவசரம் உமக்கென்ன தெரியும்? இந்திராணியை அடைய வேண்டும் என்ற விரகம் தாளாமல் அவதிப்படும் என்னைக் கொஞ்சமாவது புரிந்து கொண்டீரா? பருந்தைக் காணும் பாம்பு எப்படி வேகமாக ஊர்ந்து செல்லுமோ அதைப் போல் பல்லக்கை வேகமாகச் சுமந்து செல்லுங்கள், என உத்தரவிட்டான். அகத்தியர் சாதாரணமானவனரா? தன்னை அவமதித்த அந்த காமாந்தகாரனை விடுவாரா? நகுஷா! நீதிமுறை பிறழ்ந்து நெறிகெட்ட வார்த்தைகளைப் பேசினாய். உன் மோகத்தைத் தீர்க்க சப்தரிஷிகளான எங்களை பாம்பு போல் விரைந்து செல்லச் சொன்னாயே! அடேய், அந்தப் பாம்பாகவே நீ மாறுவாய். இப்போதே இறப்பாய்! என்று சாபமிட்டார். பெரியவர்கள் நம்மைச் சுமப்பவர்கள். குடும்பத்தில் எத்தனையோ கஷ்டங்களை அனுபவித்து, அவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டு, இளையவர்களை வளர்ப்பவர்கள். அவர்களை நாம் மதிப்புடன் நடத்த வேண்டும். இல்லாவிட்டால் நகுஷனைப் போல் கடும் சாபத்துக்கு ஆளாகி, நம்மையே இழந்து விடுவோம். அகத்தியரின் சாபம் பொய்க்குமா? உடனடியாகப் பலித்து விட்டது. நகுஷன் பாம்பாக மாறி பல்லக்கில் இருந்து விழுந்து படமெடுத்து தன்னைச் சுற்றி நின்ற காவலர்களை கடிக்கச் சென்றான். உடனே காவலர்கள் அதைக் அடித்தே கொன்று விட்டனர். பாம்பு இறந்தது. அகத்தியரால் நகுஷன் மாண்ட செய்தி இந்திராணியை எட்டியது. தனது கற்புக்கு களங்கம் வராமல் காப்பாற்றிய அகத்தியரை அவள் மனதார வணங்கினாள். பின்னர் தேவகுரு பிரகஸ்பதி, தாமரை தடாகத்தில் மறைந்திருந்த இந்திரனைத் தேடிச் சென்று அவனை வரவழைத்தார். குரு பார்க்க கோடி நன்மை ஆயிற்றே! இந்திரன் தான் செய்த பாவத்துக்கு மன்னிப்பு கேட்டு அவரது பாதங்களைப் பற்றிக்கொண்டான்.

குருவே! அடியேன் தங்களைக் கண்டு கொள்ளாமல் இருந்ததன் விளைவை அனுபவித்து விட்டேன். தங்களுக்கு அவமானம் விளைவித்தும் அவற்றைப் பொருட்படுத்தாமல் என் மனைவியின் மானத்தைக் காப்பாற்றினீர்கள். தங்கள் கிருபை வேண்டும், என பிரார்த்தித்தான். பின்னர் பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக பூலோகம் சென்று அங்குள்ள புனிததீர்த்தங்களில் நீராடும்படியும், தேவர்கள் எல்லோருமே அங்கு செல்லலாம் என்றும் ஆலோசனை சொன்னார். அதன்படி இந்திரனின் தலைமையில் புஷ்பக விமானத்தில் அனைவரும் பூலோகம் புறப்பட்டனர். பனிபொங்கும் கயிலைமலையில் இறங்கிய அவர்கள் சிவபெருமானையும், உமாதேவியையும் வணங்கி கேதாரம், காசி உள்ளிட்ட தலங்களைத் தரிசித்தனர். கங்கை, யமுனை, சரஸ்வதியில் நீராடினர். நாம் பூலோகத்தில் வாழ்கிறோம் என்றால் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். தேவர்கள் கூட அவர்கள் செய்த பாவம் நீங்க பூலோகத்து புண்ணிய தீர்த்தங்களை நாடித்தான் வர வேண்டியுள்ளது. ஆனால், அதன் அருமை தெரியாமல் நாம் ஆறுகளை பாழ்படுத்திக் கொண்டிருக்கிறோம். இனியேனும், நதிகளின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொண்டு அவற்றுக்குரிய மரியாதையைச் செய்ய வேண்டும். பின்னர் அவர்கள் கடம்பவனத்தை அடைந்தனர். அங்கே ஒரு லிங்கம் தென்பட்டது. அதைக் கண்ட இந்திரன் அவ்விடத்தில் ஒரு தாமரைக் குளம் இருந்ததையும் பார்த்தான். அந்த தீர்த்தத்தில் தங்கத் தாமரைகள் பூத்திருந்தன. அந்த லிங்கத்திற்கு பூஜை செய்த இந்திரன், தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவிடம், உடனடியாக லிங்கம் இருந்த இடத்தில் அழகிய விமானம் அமைக்குமாறு பணித்தான். எட்டு யானைகள் தாங்கும் அழகிய விமானத்தை விஸ்வகர்மா அமைத்தார். பலநாட்களாக அங்கேயே தங்கி இந்திரன் பூஜைகள் செய்தான். அவனது பிரம்மஹத்தி தோஷம் நீங்கி விட்டது. இறைவன் அவன் முன்னால் தோன்றி, இந்திரா! உன் மீதான சாபம் நீங்கியது. நான் இந்த தலத்தில் சொக்கநாதர் என்ற பெயருடன் எழுந்தருள்வேன். சோமசுந்தரர் என்றும் என்னை அழைப்பர். இத்தலத்துக்கு வருபவர்கள் தீராத பாவங்களும் நீங்கப்பெறுவர், என அருள் பாலித்தார். பின்னர் அனைவரும் தேவலோகம் சென்றனர். அங்கு சென்றதும், மற்றொரு புது பிரச்னை தோன்றியது.
மகான் ராகவேந்திரர் பகுதி-1

பிரம்மலோகத்தில் பெரும் பிரளயமே நிகழ்ந்து கொண்டி ருந்ததுஏ சங்குகர்ணா, எனது படைப்புக்கலன்களில் இந்த மண் கலயம் உடைந்து கிடக்கிறதே, ஏன் இதை என்னிடம் சொல்ல வில்லை! நீ வேலை செய்யும் லட்சணம் இதுதானா, பிரம்மன் கத்தினார்.  சங்குகர்ணன் நடுநடுங்கிக் கொண்டிருந்தான்.மன்னிக்கவேண்டும்  பிரபோ! தாங்கள் சத்திய லோகத்தில் அன்னை சரஸ்வதி யுடன் அளவளாவிக் கொண்டி ருந்த வேளையில், தங்கள் படைப்புக்கலன்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தேன். இந்த மண் கலயத்தை மேல் தட்டில் அடுக்கி வைக்க முயன்றபோது கைதவறி விழுந்து உடைந்து விட்டது. தங்களிடம் இதை எப்படி சொல்வதென தெரியாமல் தவித்தேன். இதை உடைத்த தற்காக மன்னிப்பு கேட்கிறேன், என்றவனாய் காலில் விழுந்தான். பிரம்மனின் சீற்றம் தணிய வில்லை. ஏனடா! பணியில் இருப் பவன் எதிலும் கவனமாக இருக்க வேண்டாமா! மண் கலயத்தை தரையில் வைப்பது, மற்ற உலோகக் கலன்களை மேலடுக்கில் வைப்பது என்ற பாலபாடத்தை கூட நீ அறியவில்லையாயின், எனது ஏவலாளாக இருக்கும் தகுதியை இழந்துவிட்டாய். குறிப்பாக,பக்தி மார்க்கத்தில் இருப்பவன், தன் கடமைகளை ஒழுங்காகச் செய்யத் தெரிந்தவனாக இருக்க வேண்டும். சோதனைகளைத் தாண்டும் வல்லமையுள்ளவனாக இருக்க வேண்டும். எனவே, நீ பூலோகத்தில் கடவுள் என்றால் நான் தான் என தன்னைத் தானே பெருமை பாராட்டிக் கொண்டிருக்கும் ஒரு நாத்திகனின் மகனாகப் பிற. அவனோடு சேர்ந்திருந்து பல பாடங்களைக் கற்றுக்கொள், என்று சாபமிட்டார். பிரபோ! எனக்கு தாங்கள் தரும் தண்டனை கொடுமையானது. என்னை இங்கேயே அழித்து விடுங்கள். நான் சாம்பலாகவேனும், இந்த பிரம்மலோகத்தில் கிடக்கிறேன், எனக் கதறினான். அவனது கதறல் கேட்டு பிரம்மன் மனம் இரங்கினார்.

சங்குகர்ணா! காரணகாரியங்கள் இல்லாமல் எதுவும் நிகழ்வதில்லை. உலகவுயிர்களின் தலையெழுத்தை நிர்ணயிப்பவன் நானே! இத்தனை நாளும் எனது வேலையாளாக இருக்க வேண்டும் என்பது உன்விதி. இனி, நீ பூலோகத்தில் இருக்கவேண்டும் என்ற எழுத்தை என்னாலோ மற்ற தேவர்களாலோ மாற்ற இயலாது. தலையெழுத்தை அனுபவித்தே தீரவேண்டும். நான் சொன்னபடி, பூலோக சோதனையில் வெற்றி பெற்ற பின் என்னை மீண்டும் வந்தடைவாய்,என்று ஆசி வழங்கினார். சங்குகர்ணன் அவருக்கு நன்றி தெரிவித்து நமஸ்கரித்தான்.  இந்நிலையில், பூலோகத்தில் இரண்யகசிபு என்ற மன்னன் ஆட்சி செலுத்தி வந்தான். வைகுண்டத்தைக் காவல் காத்த இவன், விஷ்ணுவை வழிபட வந்த முனிவர்களை அவமதித்ததால், அவரது சாபம் பெற்று பூமியில் மன்னனாகப் பிறந்தவன். அவன் செய்த தவறுக்கு நூறுபிறவி நல்லது செய்தோ அல்லது மூன்று பிறவிகள் நாராயணனுக்கு எதிராக தீமை செய்தோ மீண்டும் வைகுண்டத்தை அடையலாம் என்பது சாபம். காலம் குறைவாக இருந்ததால், கெட்டதை தேர்ந்தெடுத்தான் அந்த காவலன். அதன் பலனாக, இரண்யனாக பிறந்து நாராயண னுக்கு எதிரான செயல்களைச் செய்து கொண்டிருந்தான். தானே கடவுள் என்று கூறி, ஓம் இரண்யாய நமஹ என்றே நாட்டு மக்கள் சொல்ல வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தான். அவ்வாறு சொல்லாதவர்களின் சிரம் துண்டிக்கப்படும் என்று கட்டளை போட்டான். இந்த கொடுமைக்கார மன்னனின் மகனாகப் பிறந்தான் சங்குகர்ணன். இப்பிறவியில் சங்குகர்ணனுக்கு பிரகலாதன் என்று பெயர் சூட்டப்பட்டது. பிரகலாதன் பிறவியில் இருந்தே நாராயண பக்தனாகத் திகழ்ந்தான். இது இரணியனுக்குப் பிடிக்க வில்லை. பெற்ற பிள்ளையைத் தன் வழிக்கு கொண்டுவர செய்த முயற்சிகள் வீணாயின. இறுதியில், நாராயணனை நேரில் வரச்செய்ய முடியுமா எனக் கேட்டபோது, நாராயணன் நரசிம்ம அவதாரம் எடுத்து தூணிலிருந்து வெளிப்பட்டார். அவருடன் இரணியன் போரிட்டான். போரின் இறுதியில் அவன் மாய்ந்தான். பின்பு பிரகலாதனை, நாராயண மூர்த்தி அந்நாட்டின் அரசனாக்கினார்.
_________________________________________________________________________________________
12:நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி  தெரிந்துகொள்வோம்!!

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள இரண்டு ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள்  இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

12:ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்-1
                   (கி.பி.172-கி.பி.235)

ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்-1,
பாலாற்றங்கரையிலுள்ள ஒரு சிற்றூரில் பிறந்தவர்.
இவருக்கு வாத்ஸ்யாயன கோத்திரம்.தந்தை பெயர் ஸ்ரீ வத்ஸபட்டர்.பெற்றோர் இவருக்கு வைத்த நாமதேயம் ஹரி.இவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதியிடம் ஸ்ரீ மட நிர்வாகத்தை ஒப்படைத்து 'சார்வ பௌம' என்னும் சிறப்பான யோக நிஷ்டையைக் கடைபிடித்தவர்.கி.பி.235-ஆம் ஆண்டு ஆனந்த வருடம் ஆடி மாதம் சுக்ல பக்ஷ நவமியன்று சேஷாசலத்திலுள்ள ஒரு குகையில் மறைந்தருளி,அழியாப் பேரானந்தம் அடைந்தவர்.
ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 82 ॐ

பதஞ்சலி பாடிய பதம்! கூத்தனின் நடனம்!

அம்பலவாணனின் நாட்டியத்தை முதலில் கண்டு களித்தவர்களில் பதஞ்சலியும், வியாக்ரபாத முனிவரும் என முன்பே பார்த்தோம் அல்லவா? ஆனால் நந்தி தேவருக்கோ தான் தான் முதலில் கண்டு களித்தவர் என்றதொரு பெருமை இருந்ததாம். இடைவிடாமல் தான் அருகே இருந்து பார்ப்பதாயும் நந்தி தேவருக்குப் பெருமை அதிகமாய் இருந்தது. அதன் காரணமாய்க் கொஞ்சம் கர்வமும் உண்டாயிற்றாம் நந்திதேவருக்கு. வியாக்ரபாதருக்கோ தான் பூக்களை பறிக்க என இறைவனைக் கேட்டுப் புலிக் கால் வாங்கியதால் புலித் தோலை அரைக்கசைத்த அந்தப் பொன்னார் மேனியனுக்குத் தாமே அருகில் உள்ளோம் மேலும் நமக்கும் இடுப்புக்குக் கீழே புலித்தோலால் ஆன உடலும் கால்களும் இருப்பதால் ஈசனுக்கு இணையாக நர்த்தனம் ஆடலாம் என்றும் நினைத்தாராம். இருவருக்கும் தங்கள் தங்கள் பலம் அதிகம் என்ற நினைப்போடு பதஞ்சலியிடம் இளக்காரமும் அதிகம் இருந்ததாம். அதிலும் பிரதோஷ வேளையில் நந்தியெம் பெருமானின் இரு கொம்புகளுக்கு இடையே ஈசன் ஆடிய ஆட்டத்தை நினைத்து நினைத்து நந்தி எப்போதும் தன் தலையை ஆட்டிக் கொண்டே வேறே இருந்தாராம். (மாடுங்களெல்லாம் அதான் தலையை ஆட்டுதோ??) இப்படி நந்தி தன் கொம்பை நினைத்துப் பெருமையிலேயும் வியாக்ரபாதர் தன் புலிக் கால்களை நினைத்துப் பெருமையிலேயும் ஆழ்ந்திருந்தனர். ஒருநாள் ஈசன் புதியதொரு நடனமுறையை அறிமுகப்படுத்தப் போவதாய்ச் சொல்லி இருந்தார். அதைக் கண்டு களிக்க தேவாதி தேவர்கள் அனைவரும் கூடி இருந்தனர். கூடவே பதஞ்சலி முனிவர் வியாக்ரபாதருடன் வந்திருந்தார். நந்தியோ தன் மத்தளத்துடன் தயாராக இருந்தார். இவர்களைப் பார்த்தார் நந்தி. இருவருடனும் ஈசன் சிதம்பரத்தில் ஆடிய ஆனந்தத் தாண்டவத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். அப்போது வியாக்ரபாதர் தன்னுடைய புலிக்காலின் மகிமையைப் பற்றிச் சொல்லி ஈசனைப் போல் தானும் தாளம் தப்பாமல் ஆட வசதியாக இந்தப் புலிக்கால்கள் இருக்கும் என்றும் அந்தக் காரணத்தினால் தானே ஈசனின் நடனத்தை முழுமையாய் ரசித்ததாயும் ஈசனும் அதைப் புரிந்து கொண்டே அவ்வளவு ஆனந்த நடனம் ஆடியதாயும் சொல்ல நந்தி சிரிக்கின்றார். "புலி இது என்ன பெரியவிஷயம் ?? பிரதோஷ காலத்தில் என்னோட கொம்புகளுக்கு இடையே ஆடறாரே அதைவிடவா? அவர் ஆடி முடிச்சப்புறம் கூட எனக்குக் கண்ணு முன்னாலே அந்த நடனமே தெரியும். சலங்கை ஒலி கேட்டுட்டே இருக்கும். எனக்காகத் தானே அவர் அப்படி ஆடினார்? அதை நினைவு வச்சுட்டுத் தான் அந்த ஜதிக்கேற்றமாதிரி என் தலையைக் கூட ஆட்டிக்கிறேனாக்கும்?" என்று சொன்னார். இருவரும் பதஞ்சலியைப் பார்த்து"உனக்குக் கொம்பும் இல்லை கால்களும் புலிக் கால்கள் இல்லை ஆகவே ஈசனின் ஆட்டத்தையும் உன்னால் எங்கே ரசிக்க முடியும்?" என்று கேலியாய்ப் பேசினார்கள். பதஞ்சலியின் முகம் வாட்டம் அடைந்தது.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ

செவ்வாய், 29 அக்டோபர், 2019

மகான் ரமண மகரிஷி

அன்று ஆருத்ரா தரிசனம்!அதாவது மார்கழி திருவாதிரை நட்சத்திரம்!திருச்சுழி பூமிநாதசுவாமி திருக்கோயிலில் நடராஜர் புறப்பாடு சிறப்பாக நடந்தது.வீதி உலா இனிதே நிறைவு பெற்று திருக்கோயிலில் சுவாமி பிரவேசிக்கும் நேரம்!பூமிநாதர் திருக்கோயில் மணி ஒலித்தது!அதே நேரத்தில் அருட்குழந்தை ரமணர் பூவுலகில் அவதரித்தார்.ஜோதி தரிசனம்:பூமிநாதர் திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம் நிறைவு பெற்ற நேரத்தில் கண்பார்வை இல்லாத ஒரு பெண்மணிக்கு ஜோதி தரிசனம் கிடைத்தது!ஆம்!ரமணரின் தாய் அழகம்மாவிற்குப் பிரசவம் பார்க்க வந்த பெண்மணி கண்பார்வை இல்லாதவர் ரமணர் பூமியில் அவதரித்த அதே நேரத்தில் அந்தப் பெண்மணிக்கு ஒரு ஜோதி தரிசனம் கிடைத்தது!தலைச்சுழியை மாற்றும் திருச்சுழி:பாண்டிய நாட்டிலுள்ள பதினான்கு பாடல் பெற்ற சிவத்தலங்களில் பத்தாவது திருத்தலம் திருச்சுழியல்.இது மதுரைக்குத் தென்கிழக்கே சுமார் ஐம்பது கி.மீ தொலைவில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது.திருஞானசம்பந்தர் திருவவதாரம் செய்த சீர்காழி பிரளய வெள்ளத்தில் தோணியப்பர் திருவருளால் மிதந்து தப்பித்தது!ரமணர் உதித்த திருச்சுழியல் பிரளய வெள்ளம் பாதாளத்தில் புகுந்ததால் பிழைத்தது!சிவபெருமான் பிரளய வெள்ளத்தை ஓர் அம்பினால் சுழித்து பாதாளத்தில் செலுத்திக் காத்ததால் இத்தலத்தை திருச்சழியல் என அழைத்தனர் தற்காலத்தில் திருச்சுழி என வழங்கி வருகிறது திரிசூலபுரம் முத்திமாநகர் மகா ஆவர்த்தபுரம் ஜோதிவனம் போன்ற வேறு பெயர்களும் உள்ளன.

சிவபக்தர் சுந்தரம் ஐயர்:தேவாரம் போற்றும் திருச்சுழி பூமிநாதப் பெருமானை அன்றாடம் வழிபடும் பக்தரான சுந்தரம் ஐயர் அழகம்மா என்ற பெண்ணை மணந்து இனிதே இல்லறம் நடத்தி வந்தார்.சுந்தரம் ஐயர் உழைப்பால் உயர்ந்து செல்வம் சேர்த்து அறச்செயல்கள் புரிந்தவர்.கணக்கப்பிள்ளை குமாஸ்தாவாக இருந்தவர் மனுக்களும் விண்ணப்பங்களும் எழுதிக் கொடுக்கும் தொழிலை மேற்கொண்டார்.சட்ட நுணுக்கங்களைக் கற்று பட்டம் பெறாத வழக்கறிஞராக உயர்ந்தார்.சட்ட உதவியைத் தொழிலாகக் கருதாமல் தம்மை நாடி வந்தவர்களுக்கு நல்லதே செய்யும் பண்பாளராக விளங்கினார். அதனால் அப்பகுதியில் சுந்தரம் ஐயர் மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார்.ஆங்கிலக் கணக்குப்படி 1879 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முப்பதாம் நாள் சுந்தரம் ஐயர் அழகம்மாள் தம்பதியரின் மகனாக ஸ்ரீரமணர் அவதரித்தார்.சுந்தரம் ஐயர் தம்பதியர் தங்கள் மகனுக்கு வேங்கடராமன் என்று பெயர் சூட்டினர்.குழந்தையின் சுட்டித்தனத்தைக் கண்டு மகிழ்ந்த அனைவரும் ராமன் என்று செல்லமாக அழைத்தனர்.சுந்தரம் ஐயர் தம்முடைய குழந்தைகளுக்கு ஆங்கிலக் கல்வியை அளிக்க விரும்பினார்.பள்ளிமடம் வட்டத்திலிருந்த ஒரு மிஷனரி ஆரம்பப்பள்ளியில் வேங்கடராமனைச் சேர்ந்தார்.வேங்கடராமனின் மனம் பள்ளிப்படிப்பில் ஈடுபட வில்லை.வயிற்றுப் பிழைப்புக்காகப் படிக்கும் கல்வியில் அவருக்கு நாட்டம் இல்லை.

கால்பந்து விளையாடுதல் மல்யுத்தம் பயிறுதல் ஓடுதல் நீந்துதல் கபடி விளையாடுதல் போன்றவை வேங்கடராமனுக்கு விருப்பமான விளையாட்டுக்களாக இருந்தன.அதனால் அவனுக்கு அதிகமான நண்பர்கள் கிடைத்தனர்.அவர்களிடையே வேங்கடராமன் முக்கியத்துவமும் முதன்மையும் பெற்றுத் திகழ்ந்தான் கௌண்டின் யநதி பள்ளிக்கு அருகில் இருந்தது அந்த நதிக்கரையில் வேங்கடராமன் தனது நண்பர்களுடன் விளையாடுவான் காளையார்கோயில் வேங்கடராமன் படித்த பள்ளிக்கு அருகில் இருந்தது.திருச்சுழியிலிருந்து கோயில் பூஜை செய்யும் குருக்கள் பட்டர் வேத விற்பன்னர்கள் ஆகியோர் அன்றாடம் காளையார் கோயிலுக்குச் செல்வார்கள் அவர்களுடன் சிறுவன் வேங்கடராமனும் சென்று அங்கு விளையாடுவான்.ஒரு முறை சுந்தரம் ஐயரின் முன்னோர் ஒருவரின் இல்லம் தேடி வந்த சந்தியாசியை அவர் உரிய முறையில் வரவேற்று உபசரிக்கவில்லை அதனால் சந்நியாசி கோபம் கொண்டு சாபம் கொடுத்துவிட்டார் உங்கள் பரம்பரையில் தலைமுறைக்கு ஒருவர் வீட்டை விட்டு வெளியேறி கையேந்தி பிச்சை வாங்கிச் சாப்பிடும் நிலை ஏற்படும் என்று அந்த சந்தியாசி சபித்தார்.அச்சாபம் குறித்து சுந்தரம் ஐயர் அழகம்மாவிடம் கூறினார்.அச்சாபப்படி நடந்து வருவதாகவும் விளக்கினார்.சுந்தரம் ஐயரின் தகப்பனாரின் சகோதரர் ஒருவர் காவியுடுத்துத் துறவியாகித் திரித்து கொண்டு இருந்தார்.சுந்தரம் ஐயரின் மூத்த சகோதரர் வீட்டை விட்டு வெளியேறிப் பரதேசியாகத் திரிந்தார்.

திண்டுக்கல்லில் வேங்கடராமன் ஐந்தாம் வகுப்பு வரைகற்றான்.திண்டுக்கல் பகுதியில் இருந்த மலைகள் கோயில்கள் ஆகிய அனைத்தும் அவனுக்கு அத்துபடி! நண்பர்களுடன் அங்கெல்லாம் அலைந்து திரிந்து விளையாடி மகிழ்வான்.வேங்கடராமன் திண்டுக்கல்லில் படித்துக் கொண்டிருந்தபொழுது எதிர்பாராத விதமாக சுந்தரம் ஐயர் காலமானார் அழகம்மாவும் குழந்தைகளும் சோகத்தில் ஆழ்ந்தனர்.அந்தச் சோகத்திலும் வேங்கடராமன் சிந்தனையில் மூழ்கினான்.உடல்தான் சுந்தரம் ஐயரா?அவருடைய உயிர் எங்கே போயிற்றது?மரணம் என்பது என்ன? மரணத்தைத் தவிர்க்க இயலாத?உயிரை எடுத்துக் கொண்டு போவது யார்?என்றெல்லாம் பலவாறு வேங்கடராமன் சிந்திக்கலானான்.சுந்தரம் ஐயரின் இறுதிக்கடன்கள் முடிந்தன.கூட்டுக் குடும்பங்கள் நிறைந்திருந்த அக்காலத்தில் சுந்தரம் ஐயரின் சதோதரர்கள் அழகம்மா மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து ஆலோசித்தனர்.குடும்ப நண்பரான பூமிநாதசுவாமிதிருக்கோயில் குருக்களும் உடன் இருந்தார்.சுந்தரம் ஐயரின் தம்பிகளில் ஒருவரான சுப்பையா மதுரையில் வசித்து வந்தார் மற்றொரு தம்பியான நெல்லையப்பர் மானாமதுரையில் இருந்தார்.நாகசாமி மற்றும் வேங்கடராமன் மதுரையிலுள்ள சுப்பையா வீட்டில் தங்கி படிப்பைத் தொடருவது நல்லதென எண்ணினார்.அழகம்மாள் குழந்தைகள் நாகசுந்தரம் அலமேலு ஆகிய மூவரையும் நெல்லையப்பர் தன்னுடன் மானமதுரைக்கு அழைத்துச் செல்லத் தீர்மானித்தார் சுந்தரம் ஐயரின் குடும்பச் சுமையை அவருடைய சகோதரர்கள் அன்புடன் பங்கிட்டுத் தாங்க முற்பட்டனர்.மானாமதுரையில் தங்கியிருந்த அழகம்மா மற்றும் குழந்தைகளை நெல்லையப்பர் பரிவுடன் கவனித்துக் கொண்டார்.அதே நேரத்தில் மதுரைக்குச் சென்ற நாகசாமி கல்லூரியில் சேர்ந்து படித்தான்.தம்பி வேங்கடராமன் வழக்கம் போல் பள்ளிக்கல்வியில் நாட்டம் இல்லாமல் இருந்தான்.

வேங்கடராமன் ஆங்கிலத்தில் மோசமாகவும் தமிழ் தவிர மற்றப் பாடங்களில் சுமாராகவும் மதிப்பெண்கள் வாங்கினான்.தமிழில் ஆர்வம் ஆதிகம் இருந்தது நன்னூல் சூத்திரங்கள் வேங்கடராமனுக்கு மனப்பாடமாக இருந்தன இந்தச் செய்திகளை சுப்பையா கடிதம் மூலம் அழகம்மாவிற்கு தெரியப்படுத்தினார் அழகம்மா மதுரையில் இருந்த இரண்டு மகன்களையும் சென்று பார்க்க விரும்பினார்.மதுரை சென்ற அழகம்மா வேங்கடராமனுக்கு அறிவுரைகளைக் கூறினார்.வேங்கடராமன் அவற்றை அமைதியாகக் கேட்டான்.வேங்கடராமன் விடுமுறை நாள்களில் மலையடிவாரங்ளுக்கும் திருக்கோயில்களுக்கும் செல்வான்.திருச்சுழியைச் சேர்ந்த சொக்குப் பட்டர் என்பவர் தீபத்திருநாளைக் காணத் திருவண்ணாமலைக்குச் சென்று திரும்புகையில் மதுரையில் வேங்கடராமனின் தந்தையின் இளவல் சுப்பையரின் இல்லத்திற்குச் சென்றார்.பெரியவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.அவரிடம் வேங்கடராமன் எங்கிருந்து வருகிறீர்கள்?என்று கேட்டான்.சொக்குப் பட்டர் நான் அருணாசலத்திலிருந்து வருகிறேன் என்றார் வேங்கடராமன் அப்பெயரைக் கேட்டவுடன் அனைத்தையும் மறந்தான்! தன்னை மறத்த நிலையில் வேங்கடராமன் வேகமாக மாடியறைக்குச் சென்றான் சிறிது நேரம் கழித்து மாடியறையில் இருந்த பெரிய புராணப் புத்தகத்தை எடுத்து ஈடுபாட்டுடன் படிக்கலானான்.சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம் திருச்சுழியில் பிறந்த வேங்கடராமன் என்ற சிறுவனின் மனதில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது மகரிஷி ரமணரை மாநிலத்திற்கு அளித்தது! இறைவனுக்காக எதையும் தியாகம் செய்யத்துணிந்த சிவனடியார்களின் தொண்டு வாழ்க்கை சிறுவன் வேங்கடராமனின் மனதில் ஆழப் பதிந்தது பள்ளிக் கல்வியில் நாட்டமில்லாத வேங்கடராமனை ஒரு திருமுறை நூல் கவர்ந்தது விந்தைதான்!

மதுரையில் சுப்பையாவின் இல்லம் மீனாட்சி அம்மன் திருக்கோயிலுக்கு அருகில் இருந்தது. அதனால் வேங்கடராமன் அன்றாடம் கோயிலுக்குச் செல்வான் மீனாட்சியிடம் சுந்தரரேசுவரிடமும் தான் நாயன்மார்களைப் போன்ற பயனுள்ள வாழ்க்கை வாழ வேண்டுமென உள்ளம் உருகி வேண்டிக் கொள்வான் வேங்கடராமனிடம் சிவபக்தியும் ஞானவைராக்கியமும் வளரலாயிற்று.
மாடியறையில் அமர்ந்து மரணம் முதலான விஷயங்கள் குறித்துச் சிந்தித்தான் வேங்கடராமன். ஆழ்ந்த சிந்தனை தியானமாக மாறியது!தியானம் உச்ச நிலையைத் தொட்டது.வேங்கடராமன் சிறிது நேரம் மரணத்தின் விளிம்பிற்கே சென்றுவந்தான்!அது முதல் அவனுக்கு மரணம் குறித்த அச்சம் ஒழிந்தது.கோயிலுக்குச் செல்வதும் தியானம் செய்வதுமே முக்கியப் பணியாகிவிட்ட வேங்கடராமனுக்குப் படிப்பு அறவே வெறுத்துப் போயிற்று.ஆர்வத்துடன் ஈடுபட்ட விளையாட்டுக்களும் மகிழ்ச்சியைத் தர வில்லை.நண்பர்கள் குழாத்தையும் நாடவில்லை.
ஆங்கில இலக்கணப் புத்தகத்தின் சில பகுதிகளை மூன்று முறை எழுதும் தண்டனையைப் பெற்றான் வேங்கடராமன்.அதன்படி இரண்டு முறை எழுதி முடிந்த நிலையில் வேங்கடராமனுக்கு விரக்தியும் வெறுப்பும் மேலிட்டது.இலக்கணப் புத்தகம் பேனா ஆகியவற்றை வேங்கடராமன் வீசி எறிந்தான்.அச்செயலைக் கண்ட அண்ணன் நாகசாமி பெரிதும் கடிந்து கொண்டார்.அதனைப் பொருட்படுத்தாத வேங்கடராமன் அடுத்த நடவடிக்கை குறித்துச் சிந்தித்தான்.அருணாசலம் குறித்த நினைப்பு மேலிட்டது.இனி அருணாசலத்தை நோக்கிப் புறப்பட வேண்டியதுதான்!என்ற திடமான தீர்மானமான முடிவிற்கு வந்தான்.அன்றைய சூழ்நிலை அவனுக்குச் சாதகமாகவே அமைந்தது!

 பள்ளிக்கூடத்தில் இன்று ஸ்பெஷல் கிளாஸ் போய்விட்டு வருகிறேன் என்று வேங்கடராமன் அண்ணனிடம் கூறினான்.அப்படியா?கீழே இருக்கும் என் பெட்டியைத் திறந்து ஐந்து ரூபாய் எடுத்துக்கொள் போகும் வழியில் எங்கள் காலேஜில் கட்டிவிடு என்று அண்ணன் நாகசாமி கூறினார்.அதுவும் அண்ணாமலையார் திருவருளே என்று கருதிய வேங்கடராமன் ஜந்து ரூபாயை எடுத்துக் கொண்டான்.இரயில் மார்க்கங்கள் குறித்த ஒரு வரைபடத்தைப் பார்த்ததில் திருவண்ணாமலை பயணத்திற்கு மூன்று ரூபாய் போதும் என்று தெரிந்தது.நான் என் தகப்பனாரைத் தேடிக் கொண்டு அவருடைய உத்தரவுப்படி இவ்விடத்தை விட்டுக் கிளம்பிவிட்டேன்.நல்ல காரியத்திற்கே புறப்படுவதால் எவரும் விசனப்பட வேண்டாம்.பணமும் செலவு செய்ய வேண்டாம் உன் சம்பளத்தை இன்னும் செலுத்தவில்லை ரூ.2 இதோடு கூட இருக்கிறது என்று அண்ணனுக்கு ஒரு கடிதத்தை எழுதி வைத்தான் வேங்கடராமன்.அவசரமாக மதுரை இரயில் நிலையத்திற்குச் சென்றான்.அன்று தெய்வாதீனமாக இரெயில் சற்றுக் காலதாமதமாக வந்தது!திண்டிவனத்திற்குப் பயணச் சீட்டு வாங்கினான் ஒருவாறு விடுதலை பெற்ற உணர்வோடு வண்டியில் ஏறி அமர்ந்தான்.வண்டியும் புறப்பட்டது.அண்ணாமலை அருணாசலம் அருணகிரி ஆகிய சொற்கள் பக்தர்களைச் சொக்க வைக்கும் மந்திரச் சொற்கள் மகான்களைத் தன்பால் ஈர்த்து இறையருள் இன்பத்தில் திளைக்கச் செய்து புகழும் முக்தியும் அருளும் அற்புதத் திருத்தலம் அண்ணாமலை!மலையும் அண்ணாமலை! மகிமைமிகு தலமும் அண்ணாமலை தலத்தில் உறையும் மகேசன் பெயரும் அண்ணாமலை!

மதுரையிலிருந்து திண்டிவனத்திற்கு ரெயில் கட்டணம் இரண்டு ரூபாய் பதின்மூன்று அணா.அது போக வேங்கடராமனிடம் மூன்று அணாதான் எஞ்சி இருந்தது.திண்டிவனத்திலிருந்து திருவண்ணாமலை மிகவும் அருகில் இருக்குமென்று வேங்கடராமன் கருதினான்.வண்டியேறிய பிறகு வேங்கடராமன் வயதான ஒருவர் புதிய வழித்தடம் குறித்துக் கூறினார்.விழுப்புரத்திலிருந்து காட்பாடி செல்லும் வண்டிகள் திருவண்ணாமலை வழியாகச் செல்கின்றன என்ற விவரத்தைக் கூறினார்.இவனிடம் மீதமிருந்த சில்லரை அறையணி நல்லூர் வரை செல்லுமளவிற்கே இருந்தது.அங்கே இறங்கி நடந்தே திருவண்ணாமலைக்குச் செல்லத் தீர்மானித்தான் மாலை நேரத்தில் அறையணி நல்லூரில் இறங்கி மலைக்கோயில் ஈசனைத் தரிசிக்கச் சென்றான் வேங்கடராமன்.அங்கு ஒரு ஜோதி தோன்றியது சன்னிதியிலிருந்த ஈசன் திருமேனியில் அந்த ஜோதி ஐக்கியமானது!திருக்கோவிலூர் பாகவதரிடம் வேங்கடராமன் தனது கடுக்கனை அடகு வைத்து நான்கு ரூபாய் வாங்கிக் கொண்டான் அடுத்தநாள் காலையில் திருக்கோவிலூரிலிருந்து ரயிலில் திருவண்ணாமலைக்குப் பயணமானான் திருவண்ணாமலையை நெருங்கிய உடனேயே வேங்கடராமன் ஆனந்தக் கண்ணீர் உகுத்தான்.உடல் சிலிர்த்தது!அருணாசலசிவ!அருணாசலசிவ! என்ற மந்திரத்தை உள்ளம் உருகி ஜபித்தபடி 1886 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நாள் வேங்கடராமன் பாலரமணராக அண்ணாமலையில் அடியெடுத்து வைத்தார்.ஈசனும் பாலரமணரைப் பாசத்துடன் வரவேற்றார்!ஆனால் பாலரமணர் பாசங்கள் அனைத்தையும் துறந்தார்.

தன் தலையை மொட்டை அடித்துக் கொண்டார்.வேட்டியைக் கோவணமாகக் கட்டிக் கொண்டார். ஜாதி சின்னமாகிய பூணூலை அறுத்து எறிந்தார்.அனைத்தையும் துறந்த சுத்தபுருஷனாக ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார்.பால் வடியும் முகம் கொண்ட பாலரமணரின் தவத்தைக் கண்டு பலரும் வியந்தனர்.எனினும் விஷமிகள் சிலர் அவர் மீது கற்களை வீசித் தொந்தரவு செய்தனர்.அண்ணாமலையர் கோயிலில் ஓர் இருண்ட குகை இருந்தது.அதனைப் பாதாளலிங்கக் குகை என்று கூறுவார்.அங்குப் பகல் நேரத்திலேயே இருள் நிறைந்திருக்கும்.பாலரமணர் அதுவே தனது தவத்திற்கு ஏற்ற தனிமையான இடம் எனத் தேர்ந்தெடுத்தார்.அங்குச் சென்று தவத்தில் அமர்ந்தார்.ஊண் உறக்கம் இல்லாமல் கடுந்தவம் இயற்றினார்.உடல் மெலிந்தது.குகைக்குள் இருந்த புழுக்களும் பூச்சிகளும் பாலரமணரின் உடலைத் துளைத்தன.பாலயோகியின் தொடைப்பகுதி அரிக்கப்பட்டது ஆனாலும் அவருடைய தவம் கலையவில்லை!அங்கு அவர் எத்தனை காலம் கடுந்தவம் இயற்றினார் என்பது எவருக்கும் தெரியாது.சேஷாத்ரி சுவாமிகள் அக்குகையில் நுழைந்து வெளியே வந்தார்.உள்ளே தவமியற்றிய உத்தமத் துறவியை உலகிற்கு அறிமுகம் செய்தார்.சேஷாத்ரி சுவாமிகள் ரமணர் திருவண்ணாமலைக்கு வருவதற்கு எழு ஆண்டுகள் முன்பு வந்தவர்.வயதிலும் ரமணரைவிட மூத்தவர்.உத்தண்டி நயினார் என்ற சாது பாலரமணரிடம் உபதேசம் பெற வந்தார் அவர் பாலரமணருக்குப் பாதுகாவலாக இருந்தார்.அவர் இல்லாத நேரங்களில் விஷமிகள் ரமணருக்கு இடையூறுகள் செய்தனர்.எனினும் ரமணர் தமது மௌனத் தவத்தைத் தொடர்ந்தார்.

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தின் முதல் குருநாதரான ஸ்ரீமத்தெய்வசிகாமணி பரமாச்சார்ய சுவாமிகளின் சமாதி அமைந்துள்ள திருக்கோயிலை குருமூர்த்தம் என்று அழைத்தனர்.அண்ணாமலைத் தம்பிரான் என்ற சுவாமிகள் பாலரமணரை குருமூர்த்தத்தில் அமர்ந்து தவம் இயற்ற உதவினார் அங்கு பாலரமணர் பதினெட்டு மாதங்கள் கடுந்தவம் இயற்றினார்.அண்ணாமலைத் தம்பிரான் மதுரையில் ஆற்றிய ஒரு சொற்பொழிவில் பாலரமணரின் பெருமைகளை எடுத்துக் கூறினார் அதனைக் கேட்ட சிறுவன் ஒருவன் திருச்சுழி வேங்கடராமன் திருவண்ணாமலையில் இருப்பதாக உறவினர்களிடம் கூறினான்.வேங்கடராமனின் மற்றொரு சிற்றப்பாவான நெல்லையப்பர் திருவண்ணாமலைக்கு வந்தார் மாந்தோப்பில் பரண் அமைத்து அதன் மீதிலிருந்து தவம் இயற்றிக் கொண்டிருந்தார் பாலரமணர் மானாமதுரை நெல்லையப்பர் தரிசனம் செய்ய விரும்புகிறார் என்று எழுதியனுப்பினார் சிற்றப்பா.அவருக்கு அனுமதி கிடைத்தது.பாலரமணரின் கோலத்தைக் கண்டு ஒருபுறம் பெரிதும் வருந்தினார் மறுபுறம் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பாலகன் பரமஞானியாகத் திகழ்வதைக் கண்டு மகிழ்ந்தார்.தன்னுடன் ஊருக்கு வருமாறு அழைத்தார்.பாலரமணர் எவ்விதச் சலனமும் இன்றி மௌனமாக இருந்தார். அவருடைய வைராக்கியத்தைப் புரிந்து கொண்ட நெல்லையப்பர் ஊர் திரும்பினார்.தாய் அழகம்மை தனது மூத்த மகன் நாகசாமியுடன் திருவண்ணாமலைக்கு வந்தார்.அப்போது பாலரமணர் பவளக் குன்று என்ற வேறு இடத்தில் நிஷ்டையில் அமர்ந்திருந்தார்.மகன் வேங்கடராமனை கௌபீன தாரியாகக் கண்ட தாயின் மனம் துடித்தது.தாயும் அண்ணனும் தவசீலரைத் தங்களுடன் அழைத்தனர்.பந்தபாசங்கள் அனைத்தையும் அறுத்துவிட்ட ஞானி பாலரமணர் அவர்களின் சொற்களைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை தாயின் கதறலைக் கண்ட பக்தர்கள் பதிலை எழுதிக் காட்ட பாலரமணரிடம் வேண்டினர்.

அவரவர் பிராப்தப் பிரகாரம் அதற்கானவன்
ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பான்
நடவா தென் முயற்சிக்கினும் நடவாது
நடப்ப தென்றடை செய்யினும் நில்லாது
இதுவே திண்ணம் ஆதலின்
மௌனமாய் இருக்கை நன்று!

என்ற ஞானமொழிகளை பாலரமணர் எழுதினார் தாய் வேறு வழியின்றி நாகசாமியுடன் ஊர் திரும்பினார்.விசாகப்பட்டினம் நரசிம்ம சாஸ்திரிகளின் மகன் கணபதி முனிவர் திருவண்ணாமலை வந்து தியானத்தில் அமர்ந்திருந்தார்.அப்போது பகவான் அழைக்கிறார் என்றல ஒரு ஒலி அவுருக்குக் கேட்டது உடனே மலையேறிச் சென்று விருபாட்ச குகையில் அமர்ந்திருந்த பகவானைக் கண்டு வணங்கினார்.தன்னைச் சீடனாக ஏற்று நல்லுபதேசம் செய்ய வேண்டினார்.பகவான் அவ்வாறே அவரைச் சீடராக ஏற்று பதினைந்து நிமிடத்திற்கு உபதேசம் செய்தருளினார்.பின்னர் கணபதி முனிவர் பாலரமணரை இளமையிலேயே புலன்களை அடக்கி ஆண்டவர் என்ற பொருளில் அவரை ரமணர் என்று அழைத்தார்.அப்பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது!சேஷாத்ரி சுவாமிகள் அடையாளம் காட்டிய பாலரமணரைப் பாமர மக்கள் பிராமண சாமியார் என்றே அழைத்து வந்தனர்.திருவண்ணாமலையில் அடியெடுத்து வைத்தவுடன் வேங்கடராமன் பூணூலை அறுத்தெறிந்தார்.ஜாதிமதங்களைக் கடந்த உத்தமராகி விட்டார் எனினும் அவருக்கும் ஜாதி முத்திரை!

வேங்கடராமன் சிறுவனாக இருந்தபொழுது, அவருடைய உறவினர் லட்சுமண  அய்யர் என்பவர் அவரை ரமணி என்ற செல்லப் பெயரிட்டு அழைத்து வந்தார்.அவரது விருப்பப்படியும் ரமணர் என்ற பெயர் பொருத்தமாக அமைந்துவிட்டது.அடுத்தநாள் ரமணமகரிஷி தமது சீடர்களுக்கு சிறிது நேரம் உபதேசம் செய்தருளினார் காவியகண்ட கணபதி முனிவர் முன்னரே பிரபலமாக இருந்தார்.அவர் ரமண மகரிஷியின் சீடரான பிறகு மக்கள் மத்தியில் ரமணர் பெரும் புகழ் பெற்றார் பகவான் அவ்வப்பொழுது பக்தர்களின் வினாக்களுக்கு அளித்த பதில்களைத் தொகுத்து ரமணகீதை என்ற நூலாக வெளியிட்டவர் கணபதி முனிவரே ஆவார்.முதல் முறை திருவண்ணாமலைக்கு வந்து மகனைக் கண்டு ஏமாற்றத்துடன் மானாமதுரைக்குத் திரும்பினார் அழகம்மை.எனினும் மகனைக் காணஅடிக்கடி வந்து சென்றார் 1914 ஆம் ஆண்டு அண்ணாமலை வந்த அழகம்மைக்கு உடல் நலம் குன்றியது இருபது நாள்களுக்கு மேல் அவர் படுத்த படுக்கையாக இருந்தார்.அப்போது ரமணர் தமது அன்னையை அன்புடன் கவனித்துப் பணிவிடைகள் செய்தார் உடல் நலம் தேறியவுடன் அழகம்மை மானாமதுரைக்குத் திரும்பினார்.அழகம்மைக்குப் பாதுகாப்பாக இருந்து வந்த நெல்லையப்பர் காலமானார்.மகன் நாகசுந்தரத்தின் மனைவியும் மறைந்தார்.சோகங்கள் தொடர்ந்தன.துவண்டு போன அழகம்மை தம்முடைய  ஞானப் புதல்வனே கதியென்று கருதி 1916ஆம் ஆண்டு மீண்டும் திருவண்ணாமலைக்கு வந்தார்.அழகம்மையின் வருகைக்குப் பிறகு பகவான் ஸ்கந்தாஸ்ரமத்தில் வசிக்கலானார்.அழகம்மை சமையல் பணிகளை மேற்கொண்டு பக்தர்களுக்கு அன்னம் அளித்தார்.அழகம்மை உடன் இருப்பதை பகவான் விரும்பமாட்டார் என்றும் அவர் நமது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டுவிடுவார் என்றும் பக்தர்கள் எண்ணினர்.பகவான் அவ்வாறு செய்யவில்லை எனினும் ரமணர் பக்தர்களிடம் பேசிய அளவிற்கு அழகம்மையிடம் பேசியதில்லை.

பகவான் ஆசிரமத்திலுள்ள பல பக்தர்களில் ஒருவராகவே அழகம்மையையும் கருதினார். பகவானின் தாய் என்ற முறையில் அவருக்கென்று எந்த விதமான தனியுரிமையும் அளிக்கவில்லை எனினும் பகவான் அவ்வப்பொழுது அழகம்மையின் ஆச்சார அனுஷ்டானங்கள் குறித்து நகைச்சுவை கலந்த விமர்சனங்கள் செய்வார் அந்த முறையிலேயே தமது தாயை ஞானமார்க்கத்திற்குத் திரும்பினார்.அழகம்மையின் இறுதிக்கால வாழ்க்கையில் ஆறு ஆண்டுகள் ஆச்சிரமத்தில் கழிந்தன.அப்போது அவருக்கு பகவானிடம் பூரண நம்பிக்கை ஏற்பட்டது. அழகம்மையின் இறுதிநாளும் வந்தது.அழகம்மைக்கு மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.பகவான் தமது வலக்கரத்தை அன்னையின் இதயப் பகுதியிலும் இடக்கையை உச்சந்தலையிலும் வைத்தபடி அருகிலேயே உட்கார்ந்திருந்தார். இரவு எட்டு மணிக்கு அழகம்மை முக்தி அடைந்தார்.அழகம்மை சமாதிநிலை அடையும் வரை பகவானும் பக்தர்களும் சாப்பிடாமல் இருந்தனர்.சமாதி எய்திய பிறகு பகவான் இனி நாம் சாப்பிடலாம் தீட்டும் இல்லை ஒன்றும் இல்லை என்று கூறினார்.அடுத்தநாள் காலையில் சமாதிக் கிரியைகள் தொடங்கின.அழகம்மையின் உறவினர்களும் ரமணரின் பக்தர்களும் கூட்டமாக வந்தனர்.மலைக்கு அப்பாலுள்ள பாலிதீர்த்தம் என்ற இடத்தில் முறைப்படி சமாதிக் குழியில் விபூதி கற்பூரம் உப்பு ஆகியவற்றை நிரப்பினர்.அதன் மீது ஒரு சமாதி கட்டினார்.சமாதியின் மீது சிவலிங்கப் பிரதிஷ்டை செய்யப்பட்டது.அந்த சிவலிங்கம் மாத்ருபூதேசுவரர் என்று பெயர் பெற்றது மாத்ருபூதேசுவரருக்கு அன்றாட பூஜைகள் தொடர்ந்து நடக்கின்றன.ஆண்டு தோறும் வைகாசி தேய்பிறை நவமியில் மாத்ருபூதேசுவரர் மகாபூஜை சிறப்பாக நடைபெறுகிறது .கணபதி சாஸ்திரிகளைப் போன்ற கல்வியாளர்கள் பலரும் ரமணரின் சீடர்களானார்கள்.பல துறைகளைச் சேர்ந்த சான்றோர்களும் பாமரரும் பகவானுக்குச் சீடர்கள் ஆகி தங்களால் இயன்ற பணிவிடைகளையும் தொண்டுகளையும் செய்தனர்.

ரமணாஸ்ரமம்:ரமணர் 54 ஆண்டுகள் திருவண்ணாமலையில் வாழ்ந்தார்.அதில் 26 ஆண்டு வாழ்க்கையை பாதாளலிங்கக் குகை குருமூர்த்தம் மாந்தோப்பு, பவழக் குன்று விருபாட்ச குகை ஸ்கந்தாஸ்ரமம் ஆகிய வேறுபட்ட இடங்களில் வாழ்ந்தார் இருபத்தெட்டு ஆண்டுகள் பகவான் ரமணாஸ்ரமத்தில் தொடர்ந்து எழுந்தருளியிருந்தார்.ரமண பக்தர்களில் ஒருவர் கந்தசாமி.இவர் தன்னுடைய சொந்த முயற்சியாலும் உழைப்பாலும் ஸ்கந்தாஸ்மரத்தை உருவாக்கினார்.அவருடைய நினைவைப் போற்றும் வகையில் தான் ரமணர் அந்த இடத்திற்கு ஸ்கந்தாஸ்ரமம் என்று பெயரிட்டார்.மலையிலுள்ள ஸ்கந்தாஸ்ரமத்திலிருந்து ரமணர் அடிக்கடி அன்னையின் சமாதிக்குச் சென்று வருவார்.ஒரு நாள் அன்னையின் சமாதிக்கு வந்த ரமணர் தெய்வீக உந்துதலால் அங்கேயே தங்கிவிட்டார்.அந்த இடம் பக்தர்கள் எளிதில் வந்து போகவும் வசதியாக இருந்தது.ஆகவே அந்த இடத்திலேயே பக்தர்கள் ரமணாஸ்ரமத்தை நிறுவினர்.

ஆஸ்ரம நடைமுறைகள்:ரமணர் விடியற்காலை நான்கு மணிக்கே எழுந்து விடுவார். ஆஸ்ரம அன்பர்கள் காலைக்கடன்களை முடித்துக் கொண்டு, மண்டபத்தில் கூடிவிடுவார்கள்.தியானமும் பக்தியிசையும் நடைபெறும்.ஐந்து மணிக்கு ரமணர் தமது ஆசனத்தில் அமர்வார்.அவர் பதினைந்து மணித்துளிகள் தியானம் செய்வார்.ஆழ்ந்த தியானத்தில் ரமணரை பக்தர்கள் தவயோகியாகக் கண்டு தரிசிப்பார்கள்.ஆஸ்ரம வாழ்க்கையில் எல்லோரும் எல்லாவற்றிலும் சமம் என்ற கோட்பாட்டை பகவான் வலியுறுத்தினார்.பதினோரு மணியளவில் ஆஸ்ரமத்திலுள்ள பசு முதலான வாயில்லா ஜீவன்களுக்கும் வெளியில் காத்திருக்கும் ஏழைகளுக்கும் உணவு வழங்கப்படும்.

புதிய மரபு:ரமணாஸ்ரமத்தில் விலங்கினங்களுக்கும் ஏழைகளுக்கும் முதலில் உணவு வழங்குப்படும் ரமணாஸ்ரமத்தில் பக்தர்களுக்கு உணவு பரிமாறிய பிறகே ரமணருக்குப் பரிமாறுவர்!இது புதிய மரபு!

ரமணரின் எளிமை:பிரமாண்ட பந்தலில் பூஜை அன்னதானம் என அமர்க்களப்படுகிறது.காலை 10 மணி முகூர்த்தத்தில் ரமணரை அழைத்து வந்து பூஜை செய்ய ஏற்பாடு.இதற்கிடையே அன்னதானத்திற்காக நிறைய பரதேசிகள் வி.ஐ.பி பந்தலில் நுழைந்துவிட்டனர்.அப்போது யாரோ ஒருவர் பரதேசிகளுக்கு கிழக்குப் பந்தலில் அன்னதானம் நடக்கும்.அங்கே செல்லுங்கள்.இங்கே வராதீர்கள்!என்று விரட்டியடித்தார்.மணி காலை 9.50 ரமணரை அழைக்கப் போனால் அவரைக் காணோம்!எங்கே தேடியும் கிடைக்காமல் திடுக்கிட்டு திகைத்தனர்.பூஜை நேரமோ நெருங்கிவிட்டது. அப்போது ஒருவர் ஓடோடி வந்து.கிழக்குப் பக்க பந்தலில் ரமணரைப்போல் ஒருவர் உட்கார்ந்திருப்பதாகச் சொன்னார்.அங்கு போய்ப் பார்த்தால் பரதேசிகளுக்கு நடுவே ரமணர் அமர்ந்திருக்கிறார்.இங்கே வந்து ஏன் உட்கார்ந்திருக்கிறீர்கள்!என்று கேட்டபோது ரமணர் சொன்னார்.பரதேசிகள் கிழக்குப் பந்தலுக்குப் போகணும்னு ஒருவர் விரட்டினார்.அதான் இங்கு வந்து விட்டேன்!

என் கடன் பணிசெய்து கிடப்பதே:என்கடன் பணிசெய்து கிடப்பதே என்றார் அப்பர்பெருமான் அதற்கேற்ப பகவான் ரமணர் எப்போதும் ஏதாவது ஒரு பணியில் தன்னை ஈடு படுத்திக் கொள்வார் காலையில் ஒன்பது மணிக்கு செய்தித்தாள்களைப் படிப்பார்.கடிதங்களைப் படிப்பார்.அச்சுப் பிரதிகளைத் திருத்துவார் புத்தக பைண்டிங் செய்வார்.காய்கறிகளை நறுக்குவார்;தோட்ட வேலைகள் செய்வார்;எனினும் அவருடைய உள்ளம் எப்போதும் ஆத்மானுபவத்தில் திளைத்து இருக்கும்!மாலை மூன்று மணி அளவில் ஆஸ்ரம அன்பர்களுக்கு காபி அல்லது தேநீர் வழங்கப்படும்.அதன் பிறகு ரமணர் பக்தர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.ஐயங்களைப் போக்குவார்.சில நாள்களில் ரமணர் மெதுவாக நடந்து சென்று கிரிவலம் வருவார்.ரமணரின் இளவலும் சின்ன சுவாமி என்று அழைக்கப்பட்டவரும் ஆகிய நிரஞ்சனானந்தர்  ஆஸ்ரமம் பொறுப்பாளராக இருந்து அனைத்து வளர்ச்சிப்பணிகளையும் நிறைவேற்றினார்.ஆஸ்ரமத்தில் புத்தக விற்பனை மையம் திறப்பு மாத்ருபூதேஸ்வர் கோயில் குடமுழுக்கு வேத பாடசாலை தொடக்கம் ஆகிய பணிகள் அனைத்தும் நிரஞ்சானந்தரால் செல்வனே நிறைவேற்றப்பட்டன.ஆஸ்ரமத்தில் இரவு ஏழு மணிக்கு மேல் பக்திப் பாடல்களை இசைப்பார்கள் ஒன்பது மணிக்கு இரவு உணவு பரிமாறப்படும்.

ரமண மகரிஷியும் ஸ்ரீநாராயணகுருவும்:அண்மைக்காலத்தில் வாழ்ந்த அருளாளர்களில் முக்கியமானவர் ஸ்ரீநாராயணகுரு.அண்ணாமலையில் ரமண மகரிஷியும் கேரளத்தில் ஸ்ரீநாராயண குருவும் சமகாலத்தில் ஞானச்செங்கோல் ஓச்சி வந்தனர்.அச்சுதானந்தர் கோவிந்தானந்தர் வித்யானந்தர் ஆகிய சீடர்களுடன் நாராயணகுரு அண்ணாமலைக்கு வந்தார்.ரமணமகரிஷி ஸ்கந்தாஸ்ரமத்தில் தாழ்வாரத்தில் அமர்ந்திருந்தார்.சற்று நேரம் அவரை உற்று நோக்கிய ஸ்ரீநாராயணகுரு மரத்தடியில் அமர்ந்து ரமணருடன் அளவளாவினார்.
இன்று எங்களுடன் சாப்பிடலாமே!என்று ரமணர் ஸ்ரீநாராயணகுருவிடம் மலையாளத்தில் கூறினார்.இருவரும் அமர்ந்து உணவருந்தினர்.ஸ்ரீநாராயணகுரு பத்தியச் சாப்பாடு மேற்கொண்டு இருந்ததால் மோர்சாதம் கனிகள் அப்பளம் பாயசம் ஆகியவற்றை ஏற்றுக்கொண்டார்.ரமணர் மதிய உணவிற்குப் பிறகு சற்று நேரம் நேரம் மலைப்பக்கம் சென்று வருவார்.அன்று ரமணர் மலைப்பக்கம் சென்றுவருவதற்குள் ஸ்ரீநாராயணகுரு அவருக்கு கவிதைக் காணிக்கை  ஒன்றை ஆயத்தமாக வைத்திருந்தார்!ஆம் கவிதை எழுதிய சீட்டை நாராயணகுரு ரமணரிடம் கொடுத்தார்.நாராயணகுரு விடைபெற்றுச் சென்ற பிறகு ரமணர் அந்தச் சீட்டைப் பிரித்துப் படித்தார்.நிவ்ருத்தி பஞ்சகம் என்ற தலைப்பில் ஸ்ரீநாராயணகுரு ரமணரைப் போற்றிப் புகழ்ந்து, சம்ஸ்காரத்தில் ஐந்து சுலோகங்கள் எழுதியிருந்தார்.சிலநாட்கள் சென்ற பின் நாராயணகுருவின் வர்க்கலை ஆசிரமத்திலிருந்து ரமணருக்கு ஒரு கடிதம் வந்தது.அதில் நாராயணகுரு பகவானைப் போற்றி முனிசரய பஞ்சகம் என்ற தலைப்பில் மேலும் ஐந்து சுலோகங்கள் இயற்றி அனுப்பியிருந்தார்.ஸ்ரீநாராயணகுரு இயற்றிய பத்துப் பாடல்களையும்(இரண்டு பஞ்சகங்கள் )ரமணர் ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தில் தமது கைப்பட எழுதி வைத்துள்ளார்.நாராயணகுரு பகவானை ராஜ சர்ப்பம் என்று போற்றி உரைத்துள்ளார்.வர்க்கலை ஆசிரமத்திற்கு வரும் பக்தர்களிடம் ஸ்ரீநாராயணகுரு ரமணரைப் பற்றி விசாரிப்பது வழக்கம்.நாராயணகுரு உடல் நலம் குன்றிய செய்தி தந்தி மூலம் ரமணருக்குத் தெரிவிக்கப்பட்டது.பகவான் ரமணர் ஸ்ரீநாராயணகுருவிற்கு உதவுவதற்காகத் தமது சீடர்கள் இருவரை அனுப்பி வைத்தார்.ஸ்ரீநாராயணகுரு சமாதி அடையும் வரை அவர்கள் வர்க்கலையில் தங்கியிருந்து அவருக்கு அணுக்கத் தொண்டுகள் புரிந்தனர்.இவ்வாறு இரு  நட்புக் கொண்டிருந்தனர்.

ரமணாஸ்ரமத்தில் ராஜேந்திர பிரசாத்:அப்போது இந்திய விடுதலை வேள்வி இறுதிக் கட்டத்தில் இருந்தது. மகாத்மா காந்தியின் தூதுவர்களாக மூவர் ரமணாஸ்ரமத்திற்கு வந்து ஒரு வாரம் தங்கினர்.ரமணரைத் தரிசித்து மகிழ்ந்தனர்.பாபு ராஜேந்திர பிரசாத் ஜம்னாலால் பஜாஜ் காமத் ஆகிய மூவருமே ரமணாஸ்ரமம் வந்தார்கள்.அவர்கள் விடைபெற்றுச் செல்வதற்கு முன்னால் ரமணரைத் தரிசித்தனர்.பஜாஜ் அவர்கள் ரமண தரிசனம் தங்களுக்கு புதிய ஆத்ம பலத்தைக் கொடுத்துள்ளதாகக் கூறினார்.ரமணரும் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.சுதந்திரத்திற்குப் பிறகு 1950 இல் ரமணரின் ஆசிகளைப் பெற்ற பாபு ராஜேந்திர பிரசாத் இந்தியாவின் முதல் ஜனாதிபதியாகப் பெறுப்பேற்றார்.

தமிழ்க் கவிஞர் ரமணர்:ஆத்மஞானியாகவும் சித்தபுருஷராகவும் திகழ்ந்த ரமணர் ஒரு சிறந்த தமிழ்க் கவிஞர் ஆவார்.பிக்ஷ ஏற்கச் செல்லும் பக்தர்கள் பாடுவதற்கு ஏற்றதாக ரமணர் இயற்றியது அக்ஷரமணமாலை என்ற தோத்திரம்.அக்ஷரம் என்றால் அழியாதது என்று பொருள்.எழுத்துக்கள் காலத்தால் அழியாமல் நிலைத்து நிற்பதால் அக்ஷரம் என்றனர்.மேலும் எழுத்துக்கள் அகரத்தில் தொடங்கி க்ஷகர த்தில் முடிவடைகின்றன.அழியாமல் இருக்கும் இறைவனுக்கு அழியாமல் இருக்கும் எழுத்துக்களால் தொடுத்ததே அக்ஷரமணமாலை.அக்ஷரமணமாலை என்றும் அக்ஷர மணமாலை என்றும் பொருள் கொள்ளலாம்.இதனை ரமணர் தமிழில் தொடுத்ததால் அவில் தொடங்கி வை என்ற எழுத்தில் நிறைவு செய்கிறார்.மொத்தம் நூற்றெட்டுக் கண்ணிகளைக் கொண்டது அக்ஷரமணமாலை.நூலின் தொடக்கத்தில் கணபதி காப்பும் அருணாசலசிவ!அருணாசலசிவ! என்ற பல்லவியும் உள்ளது.வள்ளுவர் தமது பெற்றோர் பெயர்கள் வரும் வகையில் ஆதிபகவன் என்று தொடங்கினார் ரமணர் அக்ஷரமணமாலையின் இரண்டாம் கண்ணியில் அழகு சுந்தரம் போல் என்று குறிப்பிட்டுள்ளார்.ரமணரின் தாய் அழகம்மா தந்தை சுந்தரம் இருவர் பெயரையும் இணைந்து அழகுசுந்தரம் என்று இரண்டாவது கண்ணியைத் தொடங்குகிறார்.தோத்திரமாகப் பாட ஏற்றது.எனினும் அக்ஷரமண மாலையில் மேலான வேதாந்தக் கருத்துக்கள் பொதிந்துள்ளன.நான் யார் என்ற ஆத்ம விசார நூலை ரமணர் இயற்றியுள்ளார். ரமணர் இயற்றிய உள்ளது நாற்பது, திருமூலரின் திருமந்திரத்தைப் போன்ற நடையில் இயற்றப்பட்டுள்ளது.வடமொழியில் தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளிலும் ரமணர் சில கவிதைகள் இயற்றி உள்ளார்.எனினும் தமிழ்க்  கவிதை எழுதுவதிலேயே ஆதிக ஆர்வம் கொண்டிருந்தார்.ரமணரின் தாயார் உடல் நலம் குன்றியிருந்த பொழுது அவர் இனிய வெண்பாக்களை இயற்றினார்.

அலையாய் வருபிறவி அத்தனையும் மாற்ற
மலையாய் எழுந்த மருந்தே!- தலைவாநின்
தாள்கதியாய் வாழும் என் தாய் தாப மாற்றியே
ஆள்வதும் உன்கடனே ஆம்.

நினைத்த மாத்திரத்தில் வெண்பாக்களை இயற்றும் திறமை பெற்றவர் ரமணர். ரமணரின் நூல்கள் ரமண நூற்றிரட்டு என்ற பெயரில் வெளிவந்துள்ளன.தனி நூல்களும் உள்ளன.ரமணர் திருவண்ணாமலைக்கு வந்த பொன்விழா ஆண்டு 1946 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.1948 ஆம் ஆண்டு பகவானுக்கு இடது முழங்கைக்குக் கீழே ஒரு கட்டி தோன்றியது சர்க்கோமா என்ற புற்றுநோய்க் கட்டி என்று மருத்துவர்கள் கண்டறிந்தனர்.கரத்தை வெட்டி எடுக்க வேண்டுமென்று கூறினார்.மகான் இயற்கை வழி நடக்கட்டும் என்று கூறிவிட்டார்.அறுவைச் சிகிச்சை பயனளிக்கவில்லை.நோயைப் பொருட்படுத்தாமல் மகரிஷி தனது பணிகளைச் செய்து வந்தார்1950ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் பகவான் பரிபூரணம் எய்தினார்.சற்றே கண்களை விரித்து புன்னகை மலர்ந்து விழியோரத்தில் பேரானந்தக் கண்ணீர் மல்கக் காட்சியளித்த நிலையில் சித்தி அடைந்தார்.அதே நேரத்தில் ஓர் எரிநட்சத்திரம் வானவெளியில் மெல்ல நகர்ந்து அண்ணாமலைச் சிகரத்தில் ஐக்கியமானதை நகரவாசிகள் கண்டனர்!அருணாசலசிவ என்று பக்தர்கள் முழங்கினர்.மகரிஷியின் பூதவுடலை பத்மாசனத்தில் இருக்கச் செய்து அபிஷேக ஆராதனைகள் நடத்தினர்.மாத்ரு பூதேஸ்வரர் சன்னதி பழைய தரிசன மண்டபம் இரண்டுக்கும் இடையில் பூதவுடலை சமாதிகொள்ளச் செய்தனர்.அன்றாட வழிபாடுகள் நடைபெறுகின்றன.திருவண்ணாமலை ரமணாசிரமத்தில் ஆண்டு தோறும் ஆராதனை விழா நடைபெறுகிறது.ரமணாசிரமம் சேஷாத்ரி சுவாமிகள் அதிஷ்டானம் உள்ள அதே சாலையில் வலப்புறத்தில் அமைந்துள்ளது.திருவண்ணாமலையில் ரமணாஸ்ரமத்தில் அவருடைய கமண்டலம் பாதணி கைத்தடி ஆகியவை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.இந்த புண்ணிய பூமியில் ரமணர் இன்றும் தங்கியிருந்து தங்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் பக்தர்கள்.