செவ்வாய், 29 அக்டோபர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 81 ॐ

திருவாதிரைச் சிறப்பு பகுதி : 3

ராம பாண்டியனின் ஆளுகைக்கு உட்பட்ட சிற்றரசன் ஆன வீரபாண்டியன் செப்பறையில் புதியதோர் விக்கிரஹம் பிரதிஷ்டை செய்யப் பட்டிருப்பதை அறிகின்றான். தரிசனத்துக்கு வந்த அவன் கண்களிலே நடராஜர் சிலையின் அழகு கவர்கின்றது. மீண்டும், மீண்டும் எத்தனை முறை பார்த்தாலும் தெவிட்டாத தித்திக்கும் பேரழகுச் சிற்பம். ஆஹா இதை வடிவமைத்தவர் யாரோ? கேட்ட வீரபாண்டியனுக்குச் சிற்பியின் அறிமுகம் கிடைத்தது. தன்னுடைய சிற்றரசுக்கு உட்பட்ட கட்டாரி மங்கலம்" என்னும் ஊரிலும், "கரிசூழ்ந்த மங்கலம்" ஊரிலும் உள்ள கோயிலில் இது போன்ற அதி அற்புத ஆடும் கூத்தனைப் பிரதிஷ்டை செய்ய எண்ணினான் வீரபாண்டியன். சிற்பியை அவ்வாறே இரு சிலைகள் செய்யுமாறு ஆணை இட்டான் வீரபாண்டியன். சிற்பியும் அதே போல் இரு அழகிய நடராஜர் சிலைகளை வடிவமைத்தார். அவற்றின் அழகில் மெய்ம்மறந்த வீரபாண்டியன் இனி மற்ற எந்தக் கோயில்களிலும் இது போன்ற சிலைகள் பிரதிஷ்டை செய்யக் கூடாது என எண்ணினான். இந்தச் சிற்பி செதுக்கினால் தானே சிலை? சிற்பியின் கைகளைத் துண்டிக்க ஆணை இட்டான் வீரபாண்டியன். பின்னர் சிற்பியையே கொன்றுவிடும்படியும் ஆணை இட்டான். ஆனால் காவலர்களோ இரக்கம் மீதூறச் சிற்பியின் ஒரு கையை மட்டுமே துண்டித்துவிட்டு உயிரோடு விட்டு விட்டார்கள். ராமபாண்டியனுக்கு விஷயம் தெரியவர வீரபாண்டியன் மேல் கோபம் கொண்ட அவன் வீரபாண்டியனின் இரு கைகளையும் வெட்டி விடுகின்றான். பின்னர் அந்த இரு சிலைகளையும் முறையே கட்டாரிமங்கலத்திலேயும் கரிசூழ்ந்த மங்கலத்திலேயும் பிரதிஷ்டை செய்கின்றான். சிற்பிக்கு மரக்கையையும் பொருத்தித் தர ஆணை இடுகின்றான். மரக்கை பொருத்தப்பட்ட சிற்பி அந்தக் கைகளோடேயே முன்பை விட அழகான நடராஜர் சிலை ஒன்றைச் செய்கின்றார். இந்த அதி அற்புதச் சிலையின் அழகில் தன்னையே மறந்த அவர் அது சிலை என்பதையும் மறந்து சிலையின் கன்னத்தைச் செல்லமாய்க் கிள்ள என்ன ஆச்சரியம்?? அவர் கிள்ளிய வடு கன்னத்தில் பதிந்தே விட்டது. கிள்ளிய அந்த வடுவுடனேயே அந்தச் சிலை தூத்துக்குடி அருகே உள்ள கருவேலங்குளம் என்னும் ஊரில் பிரதிஷ்டை செய்யப் பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இந்த செப்பறை, கட்டாரி மங்கலம், கரிசூழ்ந்த மங்கலம், கருவேலங்குளம் ஆகிய நான்கு ஊர்களிலுமே திரு ஆதிரைத் திருநாள் மிக சிறப்பாய்க் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்தக் கோயில்கள் அனைத்துமே சிவாகம முறைப்படி அனைத்து அம்சங்களும் பொருந்தியவையும் கூட. திருவாதிரைத் திருநாள் அன்று இந்த நான்கு கோயில்களும் விடிய விடியத் திறந்தே இருக்கும். அன்று நான்கு நடராஜர்களையும் சேர்த்து வழிபடுவதை மிகச் சிறப்பாகவும் நினக்கின்றனர். முதலில் செப்பறை அங்கிருந்து கரிசூழ்ந்த மங்கலம் அங்கிருந்து கருவேலங்குளம் கடைசியாகக் கட்டாரிமங்கலம் என்ற முறையில் தரிசித்தால் பயண நேரமும் சரியாக இருக்கும் என்றும் சொல்கின்றனர்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
10. குலசேகர ஆழ்வார்

பிறந்த இடம் : திருவஞ்சைக்களம் (கோழிக்கோடு அருகில்)
பிறந்த நாள் : எட்டாம் நூற்றாண்டு, பராபவ ஆண்டு மாசி மாதம்
நட்சத்திரம் : மாசி புனர்பூசம், (வளர்பிறை துவாதசி திதி)
கிழமை : வெள்ளி
தந்தை : திட விரதன்
எழுதிய நூல் : பெருமாள் திருமொழி
பாடிய பாடல் : 105
சிறப்பு : மன்னனின் மகனாய் பிறந்து பக்தி மார்க்கத்தில் திளைத்தவர். (கவுஸ்துபாம்சம்)
பிற பெயர்கள் : கொல்லிகாவலன், கூடல்நாயகன், கோழிக்கோன், சேரலர்கோன், வில்லவர்கோன்

திருமாலின் திருவருளால் சேர மன்னன் திடவிரதன் என்பவனுக்கு  கவுஸ்து அம்சமாக குலசேகராழ்வார் அவதரித்தார்.

தனது தந்தைக்குப்பின் சேரநாட்டை மிகவும் சிறப்பான ஆட்சி செய்தார். இவரது சிறப்பான ஆட்சி கண்டு பொறாமைப்பட்டு இவருடன் போருக்கு வந்த சோழ, பாண்டிய மன்னர்களை வென்று, தமிழகத்தை ஒரே ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். இவரது வீரத்தை கண்ட பாண்டியமன்னன் தன் மகளை இவருக்கு திருமணம் செய்து வைத்தார்.


வீரம், போர், நான், எனது என்ற அகங்காரத்துடன் இருந்த குலசேகராழ்வாரின் மனதில் திருமால் புகுந்து, மாயையை விலக்கி தன் மீது மட்டும் நேசம் உடையடவராக மாற்றினாõர். இதனால் மனம் மாறிய குலசேகராழ்வார் இது நாள் வரை தான் செய்து வந்த அற்பத்தனமான செயல்களை நினைத்து வருந்தினார். அத்துடன் நாளுக்கு நாள் நாராயணன் மீது அளவுகடந்த அன்பும் பக்தியும் மிகுதியானது. இந்த அன்பையும் பக்தியையும்,

செந்தழலே வந்து அழலைச்
செய்திடினும் செங்கமலம்
அந்தரம் சேர் வெம்கதிரோறரு
அல்லால் அலராவால்;

வெம்துயம் வீட்டாவிடினும் விற்
றுவக் கோட்டு அம்மானே ! உன்
அந்தம் இல்சீர்க்கு அல்லால்
சுகம் குழைய மாட்டேனே

என்று பாடி அதன் படி வாழ்ந்தும் வந்தார். அத்துடன் நாள்தோறும் வைணவப் பெரியவர் மூலம் ராமாயணக் கதைகளை கேட்டும் வந்தார். ராமாயணக்கதை கேட்ட போது ராமர் சீதையைக் மீட்க அரக்கர்களுடன் போர் புரிந்தார் என்பதை கேட்ட போது உணர்ச்சிவசப்பட்டு அந்த அரக்கர்களுடன் சண்டை போ தன் படையை தயார் செய்தவர். இப்படி பெருமாள் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்த மன்னர், ஒருநாள் திடீரென தன் நாட்டை ஆளும் பொறுப்பை தன் மகனிடம் ஒப்படைத்து விட்டு பெருமானை தரிசிப்பதற்காக ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சிபுரம் போன்ற திருத்தலங்களுக்கு யாத்திரை சென்றார்.

இவர் பெருமாள் மேல் பாடிய பாசுரங்களுக்கு பெருமாள் திருமொழி என்று பெயர், இவர் தன் வாழ்நாள் முழுவதும் பெருமாளை பூமாலையாலும் பாமாலையாலும் பூஜை செய்தார். இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மன்னார்கோயில் சென்று பெருமாளை தரிசித்து நிற்கும் போது இறைவன் பேரருளால் இவ்வுலகை விட்டு வைகுண்டம் சேர்ந்தார். பெருமாளின் 108 திருப்பதிகளில் குலசேகர ஆழ்வார் தனியாக சென்று 1 கோயிலையும், பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 7 கோயில்களையும் என மொத்தம் 8 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.
-------------------------
11. நம்மாழ்வார்

பிறந்த இடம் : ஆழ்வார் திருநகரி(தூத்துக்குடி மாவட்டம்)
தந்தை : காரி
தாய் : உடையநங்கை
பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி, வைகாசி 12
நட்சத்திரம் : வைகாசி விசாகம் (பவுர்ணமி திதி)
கிழமை : வெள்ளி
எழுதிய நூல் : பெரிய திருவந்தாதி, திருவிருத்தம், திருவாசிரியம்,திருவாய்மொழி
பாடல்கள் : 1296
சிறப்பு : திருமாலின் படைத்தலைவரான விஷ்வக்சேனரின்  அம்சம்
பிற பெயர்கள் : மாறன், ஸடகோபன், குருகையர்கோன், வகுளாபரணன், பராங்குஸன்

வைணவத்தில் ஆழ்வார் என்றாலே அது நம்மாழ்வரைத் தான் குறிக்கும்.

வடமொழியின் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களுக்கு ஒப்பான திருவாய் மொழி உள்ளிட்ட நான்கு தமிழ் பிரபந்தங்களை அருளியவர் நம்மாழ்வார்.

ஆழ்வார் அவதரிக்கும் போது ஆத்ம ஞானத்தை மறைக்கிறசடம் என்னும் காற்று தம்மை நெருங்க அதனைக் கோபித்துக் கொண்டார். அதனாலேயே இவருக்கு சடகோபன் என்கிற பெயர் உண்டாயிற்று. மேலும் இவருக்கு பராங்குரர், வகுளாபரணர் என்ற பெயர்களும் உண்டு ஆழ்வார் பிறந்த போதிலிருந்தே பால் உண்ணாமலும், அழாமலும், சிரிக்காமலும், வளர்ந்து வந்தார். இதனால் பெற்றோர் மிகவும் வருந்தினர். திருவநந்தாழ்வான் திருப்புளிமரமாக வளர்ந்திருக்க அந்த மரத்தடியில் தொட்டில் கட்டி மாறன் என்ற பெயரிட்டு அங்கேயே விட்டுப்போனார்கள். ஆழ்வாரும் திருப்புளி மரத்தில் குகை போன்ற பொந்தில் பதினாறு வருஷங்களை கழித்தார்.

திருமாலுக்குரிய திவ்விய தேசங்களில் 37 திவ்விய தேசங்களுக்கு மங்களாசாசனம் செய்துள்ளார். அயோத்தியில் இருந்த மதுரகவி ஆழ்வார் தெற்கே வந்து நம்மாழ்வாரை வணங்கி அவருக்கு சேவை செய்து வந்தார். நம்மாழ்வார் பெருமானின் குணங்களை சொல்ல சொல்ல மதுர கவியாழ்வார் எழுதுவார். நம்மாழ்வார் அனுபவித்து சொல்லும் பொழுது மயக்கம் அடைந்து விடுவார். அப்பொழுதெல்லாம் மதுரகவியாழ்வார் தான் இவரை மயக்கம் தெளிவிப்பார்.





நம்மாழ்வார் மக்களுக்கு தொண்டு செய்வதற்காகவே இவ்வுலக வாழ்க்கையை வேண்டினார். இப்பொழுதும் ஆழ்வார் திருநகரியில் இவர் தவம் செய்த புனித புளியமரம் உள்ளது.

பெருமாளின் 108 திருப்பதிகளில் நம்மாழ்வார் தனியாக சென்று 16 கோயில்களையும், பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து 19 கோயில்களையும் என மொத்தம் 35 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.
-------------------------
12. மதுரகவி ஆழ்வார்

பிறந்த இடம் : திருக்கோளூர் (தூத்துக்குடி மாவட்டம்)
பிறந்த நாள் : 9ம் நூற்றாண்டின் முற்பகுதி, சித்திரை மாதம்
நட்சத்திரம் : சித்திரை சித்திரை, (வளர்பிறை சதுர்த்தசி திதி)
கிழமை : வெள்ளி
எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி
பாடல்கள் : 96
சிறப்பு : ஆழ்வாராயிருந்து இன்னொரு ஆழ்வாரைப் பாடிய பேறு பெற்றவர், நம்மாழ்வாரைப் புகழ்ந்தவர். (வைநதேயாம்சம்)
பிற பெயர்கள் : இன்கவியார், ஆழ்வார்க்கடியான்

கருடாழ்வாரின் அம்சமாக திருக்கோளூர் என்ற திவ்யதேசத்தில் அவதரித்தவர் மதுரகவி ஆழ்வார். செவிக்கு இனிமையாக செஞ்சொற்களால் கவிதை பாடும் வல்லவர் ஆதலால் இவர் மதுரகவி ஆழ்வார் என புகழப்பட்டார். ஒருமுறை இவர் அயோத்தியில் உள்ள ராமபிரானை வணங்கிவிட்டு அங்கேயே சிலகாலம் தங்கினார். ஒருநாள் தான் பிறந்த திருக்கோளூர் பெருமானை தென்திசை நோக்கி வணங்கும்போது வானத்தில் ஒரு ஜோதி தெரிவதைக் கண்டார். தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களும் அந்தத் தென்திசை நோக்கிப் புறப்பட்டார். ஆழ்வார் திருநகரி வந்தவுடன் அந்த ஜோதியைக் காணாத ஆழ்வார், அந்த ஊர் மக்களிடம் இந்த ஊரின் சிறப்பு என்ன எனக் கேட்டார். ஊர் மக்களும், அந்த ஊர் புளிய மரத்தினுள் பத்மாசனத்தில் சின் முத்திரையோடு அமர்ந்திருக்கும் நம்மாழ்வாரைப் பற்றி கூறினார்கள்.

நம்மாழ்வாரின் முன் சென்ற மதுரகவி ஆழ்வார், நம்மாழ்வாருக்கு காது கேட்குமா என அறிய ஒரு குண்டுக்கல்லை தூக்கிப்போட்டார். அந்த சத்தத்தால்  நம்மாழ்வார் கண் விழித்தார். இவர் நம்மிடம் பேசுவாரா என்பதை அறிய செத்த பின் வயிற்றிலே சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடைக்கும் ? (உயிரில்லாததான உடம்பில் ஆத்மா வந்து புகுந்து எதனைஅனுபவித்து எங்கே இருக்கும் ?) எனக் கேட்டார். அதற்கு, பிறந்தது முதல் பெற்றவர்களிடம்கூட பேசாத நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வாரிடம் அத்தைத் தின்று அங்கேயே கிடக்கும் (அந்த உடலின் தொடர்பால் ஏற்படும் இன்ப துன்பங்களை அனுபவித்தபடி அங்கேயே இருக்கும்) என்று பதில் உரைத்தார். மதுரகவி ஆழ்வார், தன்னை ஆட்கொள்ளுமாறு நம்மாழ்வாரிடம் வேண்ட அவரும் நம் பிரபந்தங்களை ஓலைப்படுத்தும்படி ஆணையிட்டார். நம்மாழ்வார் காலத்துக்குப் பின் அவரது விக்ரகத்தை ஆழ்வார் திருநகரியில் எழுந்தருளச் செய்தார்.

மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் புலவர்கள் நம்மாழ்வாரை வாதத்திற்கு அழைத்தனர். அவர் இல்லாததால்  மதுரகவி ஆழ்வார், முன்னூறு சங்கப்புலவர்கள் ஏறிய சங்கப்பலகையில் நம்மாழ்வார், பாடிய ஓலையை வைத்தவுடன் பலகை கவிழ்ந்தது. அனைத்துப்புலவர்களும் பொற்றாமரைக்குளத்துக்குள் விழுந்துவிட்டனர். நம்மாழ்வார் பகவானின் அம்சம் என்பதை சங்கப்புலவர்கள் உணர்ந்தனர். மதுரகவி, ஆழ்வார் தம் குருவான நம்மாழ்வாரின் பெருமைகளையும் பிரபந்தங்களையும் உலகெங்கும் பரப்பி உயர்வுற்றார்.



பெருமாளின் 108 திருப்பதிகளில் மதுரகவி ஆழ்வார் தனியாக மங்களாசாசனம் செய்யாமல் , பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து ஒரு கோயிலை மட்டும் மங்களாசாசனம் செய்துள்ளார். அந்தக்கோயிலிலும் பெருமானைக் கூடபாடாத மதுரகவி ஆழ்வார் தன் குருவான நம்மாழ்வாரைப் போற்றி கண்ணிநுன் சிறுத்தாம்பு என்ற திவ்ய பிரபந்தத்தை பாடினார்.
-------------------------
பெரியாழ்வார் அருளிச்செய்தது

பொது தனியன்கள்

வடகலை ஸம்ப்ரதாயம்

ஸ்ரீ வேதாந்த தேசிகன் தனியன்

ராமாநுஜ தயாபாத்ரம் ஜ்ஞாநவைராக்ய பூஷணம்
ஸ்ரீ மத்வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்ததேஸிகம்.

குருபரம்பரை தனியன்

லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் நாத யாமுந மத்யமாம்
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்.

எம்பெருமானார் தனியன்

யோ நித்யமச்யுதபதாம்புஜயுக்மருக்ம
வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே
அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸந்தோ:
ராமா நுஜஸ்ய சரணௌ ஸரணம் ப்ரபத்யே.

நம்மாழ்வார் தனியன்

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ்-
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம்
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா.

ஆழ்வார்கள் உடையவர் தனியன்

பூதம் ஸரஸ்ச மஹதாஹ்வய-பட்டநாத-
ஸ்ரீபக்திஸார-குலஸேகர-யோகிவாஹாந்
பக்தாங்க்ரிரேணு-பரகால-யதீந்த்ர மிஸ்ராந்
ஸ்ரீமத் பராங்குஸ முநிம் ப்ரணதோஸ்மி நித்யம்.

தென்கலை ஸம்ப்ரதாயம்

ஸ்ரீ மணவாள மாமுனிகள் தனியன்

ஸ்ரீஸைலேஸ தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ரப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முநிம்.

குருபரம்பரை தனியன்

லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் நாத யாமுந மத்யமாம்
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்.

எம்பெருமானார் தனியன்

யோ நித்யமச்யுதபதாம்புஜயுக்மருக்ம
வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே
அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸந்தோ:
ராமா நுஜஸ்ய சரணௌ ஸரணம் ப்ரபத்யே.

நம்மாழ்வார் தனியன்

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ்-
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம்
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா.

ஆழ்வார்கள் உடையவர் தனியன்

பூதம் ஸரஸ்ச மஹதாஹ்வய-பட்டநாத-
ஸ்ரீபக்திஸார-குலஸேகர-யோகிவாஹாந்
பக்தாங்க்ரிரேணு-பரகால-யதீந்த்ர மிஸ்ராந்
ஸ்ரீமத் பராங்குஸ முநிம் ப்ரணதோஸ்மி நித்யம்.

மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கள் அருளிச்செய்த
நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

முதலாயிரம்

பெரியாழ்வார் திருமொழித் தனியன்கள்
ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிச்செய்தது

குருமுக மநதீத்ய ப்ராஹ வேதா நஸேஷாந்
நரபதி - பரிக்லுப்தம் ஸுல்க மாதாதுகாம:
ஸ்வஸுர மமரவந்த்யம் ரங்கநா தஸ்ய ஸாக்ஷõத்
த்விஜகுல திலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி.

பாண்டிய பட்டர் அருளிச் செய்தவை

இரு விகற்ப நேரிசை வெண்பா

மின்னார் தடமதிள்சூழ் வில்லிபுத்தூ ரென்று, ஒருகால்
சொன்னார் கழற்கமலம் சூடினோம் - முன்னாள்
கிழியறுத்தா னென்றுரைத்தோம் கீழ்மையினில் சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே! வந்து

பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தானென்று,
ஈண்டிய சங்க மெடுத்தூத - வேண்டிய
வேதங்க ளோதி விரைந்து கிழியறுத்தான்
பாதங்கள் யாமுடைய பற்று

பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

பெரியாழ்வார் திருமொழி (பெரியாழ்வார் அருளிச்செய்தது)

முதற்பத்து

முதல் திருமொழி

1. திருப்பல்லாண்டு

மக்கள் தன்னலத்தையே விரும்புகிறார்களே! பிறர் நலத்தையும் எண்ண வேண்டாவோ! தம்முடைய நன்மையை விரும்பியே பகவானிடம் செல்லுகிறார்கள்; வேண்டியவற்றைக் கேட்டுப் பெறுகிறார்கள்; பகவானுக்கு ஒரு முறைகூடப் பல்லாண்டு பாடுவதில்லை! உலகின் தன்மையை அறிந்து பெரியாழ்வாரின் திருவுள்ளம் குமுறுகிறது. பல்லாண்டு பாடலாம் வாருங்கோள் என்று எல்லோரையும் அழைக்கிறார். பல்லாண்டு பாடுவதே (மங்களாசாஸனம் செய்வதே) அடியார்களின் கடமை! அவர் காட்டிய வழியைத்தான் பின்பற்றுவோமே!

காப்பு- பல்லாண்டு வாழ்க

குறள் வெண்செந்துறை

1. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

2. அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறை யும்சுட ராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே

இராமனைப் பாடு

3. வாழாட் பட்டுநின் றீருள்ளீ ரேல்வந்து மண்ணும் மணமும்கொண்மின்
கூழாட் பட்டுநின் றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ்இலங்கை
பாழா ளாகப் படைபொரு தானுக்குப் பல்லாண்டு கூறுதமே

நமோ நாராயணாய

4.ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம்வந்து எங்கள் குழாம்புகுந்து
கூடு மனமுடை யீர்கள் வரம்பொழி வந்துஒல்லைக் கூடுமினோ
நாடும் நகரமும் நன்கறி யநமோ நாராய ணாயவென்று
பாடு மனமுடைப் பத்தருள் ளீர்வந்து பல்லாண்டு கூறுமினே

இருடீகேசனைப் பாடு

5.அண்டக் குலத்துக் கதிபதி யாகி அசுர ரிராக்கதரை
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகே சன்தனக்கு
தொண்டக் குலத்திலுள் ளீர்வந் தடிதொழுது ஆயிர நாமம்சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்ந்துபல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்மினே

நரசிம்மனைப் பாடு

6. எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு வோணத் திருவிழவில்
அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதமே

ஆழிவல்லானைப் பாடு

7. தீயிற் பொலிகின்ற செஞ்சுட ராழி திகழ்திருச் சக்கரத்தின்
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்
மாயப் பொருபடை வாணனை ஆயிரந் தோளும் பொழிகுருதி
பாயச் சுழற்றிய ஆழிவல் லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே

கருடக் கொடியானைப் பாடு

8. நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்துஎன்னை வெள்ளுயி ராக்கவல்ல
பையுடை நாகப் பகைக்கொடி யானுக்குப் பல்லாண்டு கூறுவனே

நாகணையானைப் பாடு

9. உடுத்துக் களைந்தநின் பீதக வாடை யுடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்த துழாய்மலர் சூடிக் களைந்தன சூடும்இத் தொண்டர்களோம்
விடுத்த திசைக்கரு மம்திருத் தித்திரு வோணத் திருவிழவில்
படுத்தபைந் நாகணைப் பள்ளிகொண் டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே

மதுரைப்பிரானைப் பாடு

10. எந்நாள் எம்பெரு மான்உன் தனக்கடி யோமென் றெழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்று உய்ந்தது காண்
செந்நாள் தோற்றித் திருமது ரையுள் சிலை குனித்து ஐந்தலைய
பைந்நா கத்தலை பாய்ந்தவ னே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே

பவித்திரனைப் பாடு

11. அல்வழக் கொன்றுமில் லாஅணி கோட்டியர் கோன்அபி மானதுங்கன்
செல்வனைப் போலத் திருமா லேநானும் உனக்குப் பழவடியேன்
நல்வகை யால்நமோ நாரா யணாவென்று நாமம் பலபரவி
பல்வகையாலும் பவித்திர னேஉன்னைப் பல்லாண்டு கூறுவனே

சார்ங்கபாணியைப் பாடு

12. பல்லாண் டென்று பவித்திர னைப்பர மேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண் டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டு சித்தன் விரும்பியசொல்
நல்லாண் டென்று நவின்றுரைப் பார்நமோ நாராய ணாயவென்று
பல்லாண் டும்பர மாத்மனைச் சூழ்ந்திருந் தேத்துவர் பல்லாண்டே

(இந்த 12 பாசுரங்களையும் உருக்கமாகப் பாராயணம் செய்பவர்கள் பக்தி சிரத்தையுடன் பல்லாண்டு வாழ்வர்)

பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

அடிவரவு: பல் அடி வாழ் ஏடு அண்டம் எந்தை தீ நெய் உடுத்து எந்நாள் அல்வழக்கு பல்லாண்டு- வண்ணம்.

(ஆதி கூறுதும், அநந்தரம் கூறுமின், அண்டம் என்மின், எந்தை பாடுதும், தீ உடுத்தெந்நாள் கூறுதும், நெய்யுமல்லும் கூறுவனே)

இரண்டாம் திருமொழி

2. வண்ண மாடங்கள்

பிறந்த நாளை எப்படி வேண்டுமானாலும் கொண்டாடலாம், கண்ணன் பிறந்த நாள் எப்படிக் கொண்டாடப்படுகிறது! பக்தியின் எல்லையைக் கடந்தவர்களின் செயல் இப்படித்தான் இருக்கும்! குழந்தை கண்ணன் யார்? ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையாகக் கூறிப் புகழ்கிறார்கள். ஆனால் ஒன்று மட்டும் உறுதி! பலரும் பல வகையாகப் புகழ்வதற்கு ஏற்ற தகுதியுடையவன் அவன் ஒருவனே!

கண்ணன் திருவவதாரச் சிறப்பு
கலி விருத்தம்

திருக்கோட்டியூர்க் கேசவனே கண்ணன்

13.வண்ண மாடங்கள் சூழ்திருக் கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்
கண்ணன் முற்றம் கலந்துஅள ராயிற்றே.

ஆயர்களின் மெய்ப்பாடு

14. ஓடு வார்விழு வார்உகந் தாலிப்பார்
நாடு வார்நம்பி ரான்எங்குற் றானென்பார்
பாடு வார்களும் பல்பறை கொட்டநின்று
ஆடு வார்களும் ஆயிற்றுஆய்ப் பாடியே.

திருவோணத்தான் உலகாளும்

15. பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில்
காணத் தாம்புகு வார்புக்குப் போதுவார்
ஆணொப் பார்இவன் நேரில்லை காண்திரு
வோணத் தானுல காளுமென் பார்களே.

ஆயர்களின் மெய்ம்மறந்த செயல்

16. உறியை முற்றத்து உருட்டிநின் றாடுவார்
நறுநெய் பால்தயிர் நன்றாகத் தூவுவார்
செறிமென் கூந்தல் அவிழத் திளைத்துஎங்கும்
அறிவ ழிந்தனர் ஆய்ப்பாடி யாயரே.

அரும்பன்ன பல்லினர்

17. கொண்ட தாளுறி கோலக் கொடுமழு
தண்டி னர்பறி யோலைச் சயனத்தர்
விண்ட முல்லை யரும்பன்ன பல்லினர்
அண்டர் மிண்டிப் புகுந்துநெய் யாடினார்.

பிள்ளை வாயுள் வையம் கண்ட அசோதை

18. கையும் காலும் நிமிர்த்துக் கடாரநீர்
பைய வாட்டிப் பசுஞ்சிறு மஞ்சளால்
ஐய நாவழித் தாளுக்குஅங் காந்திட
வைய மெழும்கண் டாள்பிள்ளை வாயுளே.

அருந்தெய்வம்

19. வாயுள் வையகம் கண்ட மடநல்லார்
ஆயர் புத்திர னல்லன் அருந்தெய்வம்
பாய சீருடைப் பண்புடைப் பாலகன்
மாய னென்று மகிழ்ந்தனர் மாதரே.

உத்தான விழா

20. பத்து நாளும் கடந்த இரண்டாநாள்
எத்தி சையும் சயமரம் கோடித்து
மத்த மாமலை தாங்கிய மைந்தனை
உத்தா னம்செய்து உகந்தனர் ஆயரே.

குழந்தையின் செயல்

21. கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை யிறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கி லாமையால் நான்மெலிந் தேன்நங்காய்.

பாவம் பறந்துவிடும்

22. செந்நெ லார்வயல் சூழ்திருக் கோட்டியூர்
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை
மின்னு நூல்விட்டு சித்தன் விரித்தஇப்
பன்னு பாடல்வல் லார்க்குஇல்லை பாவமே

அடிவரவு: வண்ணம் ஓடு பேணி உறி கொண்ட கை வாயுள் பத்து கிடக்கில் செந்நெல்.

மூன்றாந் திருமொழி

3. சீதக்கடல்

கண்ணனை மகனாகப் பெற்ற பாக்கியத்தைப் பெறாப் பெரும் பேறாக நினைக்கிறாள் யசோதை! ஆயர்பாடியிலுள்ள பெண்களை அழைத்துக் கண்ணனின் திருமேனி அழகைக் காட்டுகிறாள். தான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற வேண்டும் என்பதே யசோதையின் நோக்கமாகும். திருவடிமுதல் திருமுடி வரை இத்திருமொழியில் புகழப்படுகிறது!

திருப்பாதாதிகேச வண்ணம்

(கண்ணனின் திருமேனியழகை திருவடி முதல் திருமுடி வரை அனுபவித்தல்)
கலித்தாழிசை

பாதக் கமலங்கள்

23. சீதக் கடல்உள் ளமுதன்ன தேவகி
கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த
பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே பவளவாயீர்வந்து காணீரே.

ஒளி விரல்கள்

24. முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும்
தத்திப் பதித்துத் தலைப்பெய்தாற் போல்எங்கும்
பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்
ஒத்திட் டிருந்தவா காணீரே ஒண்ணுத லீர்வந்து காணீரே.

வெள்ளித் தளை இலங்கும் கணைக்கால்

25. பணைத்தோ ளிளவாய்ச்சி பால் பாய்ந்த கொங்கை
அணைத்தார உண்டு கிடந்தஇப் பிள்ளை
இணைக்காலில் வெள்ளித் தளை நின் றிலங்கும்
கணைக்கால் இருந்தவா காணீரே காரிகை யீர்வந்து காணீரே.
-------------------------
நாலாயிர திவ்விய பிரபந்தம்

நூல் சிறப்பு!

நாலாயிர திவ்விய பிரபந்தம் என்பது பெருமாளை குறித்து 1. பொய்கையாழ்வார்,  2. பூதத்தாழ்வார், 3. பேயாழ்வார், 4. திருமழிசையாழ்வார், 5. நம்மாழ்வார், 6. மதுரகவியாழ்வார், 7. குலசேகர ஆழ்வார், 8. பெரியாழ்வார், 9. ஆண்டாள், 10. தொண்டரடிப்பொடியாழ்வார், 11. திருப்பாணாழ்வார், 12. திருமங்கையாழ்வார் என்ற 12 ஆழ்வார்களால் இயற்றப்பட்ட பக்தி பாடல்களின் தொகுப்பாகும். இது இந்து மதத்தில் வைணவ சமயத்தில் ஒரு முக்கிய இடத்தைக் கொண்டுள்ளது.

கி.பி. 6 ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டுக்குள் வைணவ சமயத்தில் 12 ஆழ்வார்களால் பாடப்பட்ட இந்த 4000 பாடல்களை, 10 ஆம் நூற்றாண்டில் நாதமுனிகள் நாலாயிரத்திவ்விய பிரபந்தம் எனத் தொகுத்தார். இதில் திருவரங்கமுதனார் செய்த இராமானுச நூற்றந்தாதியும் சேர்க்கப்பட்டுள்ளது.

திவ்விய எனும் சொல் திருமாலையும் பிரபந்தம் எனும் சொல் பாடலையும் குறிக்கும். இந்த நூல் ஆன்ற தமிழ் மறை, ஐந்தாவது வேதம், திராவிட வேதம், திராவிட பிரபந்தம் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டுள்ளது. திவ்விய பிரபந்தங்கள் 24 வகைப்படும், அவை

1. திருப்பல்லாண்டு, 2. பெரியாழ்வார் திருமொழி, 3. திருப்பாவை, 4. நாச்சியார் திருமொழி, 5. பெருமாள் திருமொழி, 6. திருச்சந்தவிருத்தம், 7. திருமாலை, 8. திருப்பள்ளி எழுச்சி, 9. அமலனாதிபிரான், 10. கண்ணிநுண்சிறுத்தாம்பு, 11. பெரிய திருமொழி, 12. திருக்குறுந்தாண்டகம், 13. திருநெடுந்தாண்டகம், 14. முதல் திருவந்தாதி, 15. இரண்டாம் திருவந்தாதி, 16. மூன்றாம் திருவந்தாதி, 17. நான்முகன் திருவந்தாதி, 18. திருவிருத்தம், 19. திருவாசிரியம், 20. பெரிய திருவந்தாதி, 21. திருஎழுகூற்றிருக்கை, 22. சிறிய திருமடல், 23. பெரிய திருமடல், 24. இராமானுச நூற்றந்தாதி.

இதில்
முதலாயிரம்  -947 பாடல்கள்
பெரிய திருமொழி -1134 பாடல்கள்
திருவாய்மொழி  -1102 பாடல்கள்
இயற்பா  -817 பாடல்கள்

என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடல்கள் அனைத்தும் பெருமாளையும் , அவரது பல்வேறு அவதாரங்களையும் குறித்து அமைந்துள்ளன. பெரும்பாலான பாடல்கள் 108 திவ்ய தேசங்களில் பாடப்பட்டுள்ளன. இந்த தொகுப்பில், சுமார் 1100 பாடல்கள் நம்மாழ்வாரால் இயற்றப்பட்டதாகும். இப்பாசுரங்களின் மொத்த எண்ணிக்கை 3892 ஆகும். இராமானுசர் காலத்தில் வாழ்ந்த திருவரங்கத்து அமுதனார் இயற்றிய இராமானுசர் நூற்றந்தாதியையும் (108 பாசுரங்கள் கொண்டது) சேர்த்து நாலாயிரம் என்பர். இவற்றுள் பெரும்பாலானவை பண்ணுடன் பாடக்கூடிய இசைப்பாடல்களாகும்.

முதலாயிரம்

பெரியாழ்வார் (திருப்பல்லாண்டு 12, திருமொழி 461),
ஆண்டாள் (திருப்பாவை 30, நாச்சியார் திருமொழி 143),
குலசேகராழ்வார் (பெருமாள் திருமொழி 105),
திருமழிசையாழ்வார் (திருச்சந்தவிருத்தம் 120),
தொண்டரடிப்பொடியாழ்வார் (திருமாலை 45, திருப்பள்ளி எழுச்சி 10),
திருப்பாணாழ்வார் (அமலனாதிபிரான் 10),
மதுரகவியாழ்வார் (கண்ணிநுண்சிறுத்தாம்பு 11)

இரண்டாவதாயிரம்

திருமங்கையாழ்வார் (பெரிய திருமொழி 1084, திருக்குறுந்தாண்டகம் 20, திருநெடுந்தாண்டகம் 30)

மூன்றாவதாயிரம்

பொய்கை ஆழ்வார் (முதல் திருவந்தாதி 100),
பூதத்தாழ்வார் (இரண்டாம் திருவந்தாதி 100),
பேயாழ்வார் (மூன்றாம் திருவந்தாதி 100),
திருமழிசை ஆழ்வார் ( நான்முகன் திருவந்தாதி 96),
நம்மாழ்வார் (திருவிருத்தம் 100, திருவாசிரியம் 7, பெரிய திருவந்தாதி 87),
திருமங்கை ஆழ்வார் (திருஎழுகூற்றிருக்கை 1, சிறிய திருமடல் 40, பெரிய திருமடல் 78,
திருவரங்கத்தமுதனார் (இராமானுச நூற்றந்தாதி 108)

நான்காவதாயிரம்

நம்மாழ்வார் (திருவாய்மொழி 1102) ஆகிய பாடல்களைக் கொண்டது.
-------------------------
2.உரோமரிஷி

அஷ்டமா சித்தி பெற்ற 18 சித்தர்களில் இவரும் ஒருவர். இவர் புசுண்ட மாமுனிவரின் சீடராவார். இவரின் உடல் முழுவதும் உரோமம் முளைத்திருந்தபடியால் உரோமமுனி என்று காரணப் பெயர் பெற்றார். ஒரு பிரம்மா இறந்தால் இவருடைய மயிர் ஒன்று உதிரும் இவ்வாறு மூன்றரைக்கோடி பிரம்மா இறந்தால் மட்டுமே இவருடைய வாழ்நாள் முடியும் ஒரு உரோமமுனி இறந்தால் அஷ்டகோண (8 கோண) முனிவருக்கு ஒரு கோணல் நிமிரும் என்று கூறுவர். இவர் கும்பகோணத்தை அடுத்த கூந்தலூரில் தங்கி தவம் செய்து வரும்போது தாடி வழியே பொன் வரவழைத்து அனைவருக்கும் கொடுத்து வந்தார்.

ஒரு சமயம் தாடி வழியே பொன் வருவது நின்றுவிடவே அந்த தாடியை உடனே நீக்கிவிட்டு இறைவனை வழிபட நீராடாமல் திருக்கோயிலை அடைந்தார். நீராடாமல் இறைவனை தரிசிக்க வந்த ரோமமுனியை விநாயகரும் முருகனும் தடுத்தனர். இதை கண்ட சித்தர் வருந்தி கோபுர வாயிலிலேயே நின்றார்.  புறத்தூய்மையை விட அகத்தூய்மையே சிறந்தது என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் இச்சித்தருக்கு கோயிலுக்கு வெளியிலேயே இறைவன் தம் தரிசனத்தை அளித்ததாக கூறுவர். உரோமரிஷி அற்புதமான பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடல்களில் உவமை நயங்களும் சிலேடைகளும் அதிகம்.

உரோமரிஷி இயற்றிய நூல்கள்
உரோமரிஷி வைத்தியம்  1000
உரோமரிஷி சூத்திரம்  1000
உரோமரிஷி ஞானம்  50
உரோமரிஷி பெருநூல்  500
உரோமரிஷி குறுநூல்  50
உரோமரிஷி காவியம்  500
உரோமரிஷி முப்பு சூத்திரம்  30
உரோமரிஷி இரண்டடி  500
உரோமரிஷி ஜோதிட விளக்கம்

நாகாரூடம், பகார சூத்தரம், சிங்கி வைப்பு, உரோமரிஷி வைத்தி சூத்திரம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

தியானச் செய்யுள்
கனிந்த இதயம், மெலிந்த உருவம்
சொரிந்த கருணை, சொல்லில் அடங்குமோ?
அலையும் மனதை அடக்கி,
அருள் அள்ளியே தருவாய்
தாடியில் தங்கம் தந்த தெய்வமே
தங்கள் திருவடி சரணம்

ரோமசித்தரின் பூஜைமுறைகள்: தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அதன் மேல் ரோமரிஷி ஸ்ரீ கயிலாய கம்பளிச் சட்டைமுனி சித்தரின் படத்தை வைத்து அதற்கு முன் மஞ்சள், குங்குமம் இட்டு முதலில் இந்த சித்தருக்காகக் குறிப்பிடப்பட்டிருக்கும் தியானச் செய்யுளை கண்மூடி மனமுருகக் கூறி ஜாதி கொண்டு பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.

பதினாறு போற்றிகள்:
1. கயிலாயத்தில் வசிப்பவரே போற்றி!
2. ஜடாமுடிப் பிரியரே போற்றி!
3. சந்திரனை தரிசிப்பவரே போற்றி!
4. சிவசக்தியாகத் தோன்றுபவரே போற்றி!
5. நந்தி தேவரால் காப்பாற்றப்படுபவரே போற்றி!
6. சிவதாண்டவத்தை தரிசிப்பவரே போற்றி!
7. சங்கீதப் பிரியரே போற்றி!
8. தடைகளை நீக்குபவரே போற்றி!
9. காகபுஜண்டரால் பூஜிக்கப்படுபவரே போற்றி!
10. மகாலக்ஷ்மியின் அருள் பெற்றவரே போற்றி!
11. முருகப்பெருமானை வணங்குபவரே போற்றி!
12. உலகத்தைக் காப்பாற்றுபவரே போற்றி!
13. சூரியன் போன்று காட்சி அளிப்பவரே போற்றி!
14. காலத்தைக் கடந்தவரே போற்றி!
15. தெய்வீகச் சித்தரே போற்றி!
16. கைலாயத்தில் வாசம் செய்யும் ஸ்ரீ உரோமரிஷி முனியே போற்றி! போற்றி!

இவ்வாறு பதினாறு போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பிறகு மூல மந்திரமான ஓம் ஸ்ரீ உரோமரிஷி முனி சித்தர் ஸ்வாமியே போற்றி என்று 108 முறை ஜெபிக்க வேண்டும். பூஜைக்கு நிவேதனமாக இஞ்சி இல்லாமல் மிளகு, சீரகம் கலந்து குழைவாக செய்த வெண் பொங்கல், பழங்கள் தண்ணீர் வைக்க வேண்டும். பின்பு உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூற வேண்டும். நிறைவாக தீப ஆராதனை செய்யவும்.

உரோமரிஷி சித்தரின் பூஜை பலன்கள்:

இவர் சந்திர கிரகத்தைப் பிரதிபலிப்பவர் ஜாதகத்தில் உள்ள சந்திர கிரக தோஷங்களை நீக்குபவர், மனம் தெளிவாக இருந்து, மனோலயம் ஏற்பட வேண்டும். என்றால் மனோன்மணி சதக்தி பெருக வேண்டுமென்றால் சந்திரனின் அருள் நமக்குக் கிடைக்க வேண்டும். இவரை முறைப்படி வழிபட்டால்...

1. மன வியாதி, மன அழுத்தம், மனப்புழுக்கம், மன சஞ்சலங்கள் அகன்று மன நிம்மதி கிடைக்கும்,
2. எதிலும் முடிவெடுக்க முடியாமல் தவறான முடிவுகள் எடுப்பது, நீங்கி தெளிவாக முடிவெடுக்க முடியும்.
3. சஞ்சல புத்தி நீங்கும்
4. படிப்பிலும், தொழிலிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கும் நிலை நீங்கி மகிழ்ச்சி பொங்கும்.
5. தாயார் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தாய், மகன், மகள் பிரச்சினைகள் அகன்று குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

இவருக்கு வெள்ளை வஸ்திரம் அணிவித்து பூஜித்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.

இவரை திங்கள் கிழமை வழிபட்டால் விசேட பலன்கள் கிடைக்கும்.
-------------------------
பதஞ்சலி முனிவர்

இவர் பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றியவரும் சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாகப் பிரகாசிப்பவருமான அத்திரிமகரிஷிக்கும், மும்மூர்த்திகளை குழந்தைகளாக்கிய அனுசுயாதேவிக்கும் மகனாகப் பிறந்தவர். ஆதிஷேடனின் அவதாரமாகத் தோன்றியவர். ஆதலினால் பதஞ்சலி முனிவரின் கடும் விஷமூச்சுக்காற்று பட்ட அனைத்தும் சாம்பலாகிவிடும். எனவே இவர் தம் சீடர்களுக்கு அசரீரியாகவே உபதேசம் செய்வார். தில்லையம்பல பஞ்சசபைகளில் ஒன்றாகிய ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து தாம் இயற்றிய வியாகரண சூத்திரம் என்னும் நூலை தம்முடைய சீடர்களுக்கு தாமே நேருக்குநேராய் உபதேசிக்க வேண்டும் என்ற ஆவல் திடீரென்று உண்டாயிற்று. கவுட பாதர் என்னும் சீடர் மட்டும், பதஞ்சலி முனிவர் ஏவிய பணி நிமித்தமாக வெளியே சென்றிருந்தார்.

இத்தனைகாலமாக அரூவமாக உபதேசித்து வந்த பதஞ்சலி நேருக்கு நேராக உபதேசிக்க உபதேசித்து ஒரு முடிவுக்கு வந்தார். தமக்கும் சீடர்களுக்குமிடையே ஒரு கனமான திரையை போட்டுக் கொண்டார், திரையின் பின் அமர்ந்து ஆதிஷேட உருவில் கடும் விஷ மூச்சுக்காற்று கிளம்ப பதஞ்சலி முனிவர் வியாகரண சூத்திரத்தை உபதேசித்தார். சீடர்களுக்கு பரமானந்தம் இத்தனை நாள் அசரீரியாக ஒலித்த குருவின் குரலை பக்கத்திலேயே கேட்டு மகிழ்ந்தனர். உவகை பொங்க பலரும் தங்களுக்குண்டான சந்தேகங்களைக் கேட்டனர்.

வெண்கல மணியோசை முனிவரின் குரல் பதிலாக வந்தது. குரு நாதரே தவத்தைப் பற்றிச் சொல்லுங்கள் என்றான் ஒரு சீடன்.  உடல் ஐம்புலன்கள் மூலம் வெளியில் பாய்வதைக் கட்டுப்படுத்துவதே தவம் மேலும் சுகம், துக்கம் இரண்டையும் கடக்க(வசப்படுத்த) செய்யப்படும் சடங்கே தவம் என்றார் முனிவர். இந்த உலகில் பரகாயப் பிரவேசம் சாத்தியமா குருதேவா என்று கேட்டான் ஆவலோடு சீடன் ஒருவன். பஞ்சபூத ஜெயத்தால், அணிமா, மஹிமா, கரிமா, இலகிமா, பிராப்தி, வசித்துவம், பிரகாமியம், ஈசத்துவம் ஆகிய அஷ்டமா சித்திகளை அடையாளம் சித்தர்களுக்கு இது சாத்தியமே என்று பதஞ்சலி கூறினார்.

பதஞ்சலி முனிவரிடமிருந்து தடையின்றி வந்த கருத்து மழையில் திக்கு முக்காடிய சீடர்களுக்கு இந்த கம்பீரமான குரலுக்குரிய குருநாதரின் திருமுகத்தை ஒரு கணம் திரைநீக்கிப் பார்த்து விடவேண்டுமென்ற ஆவலால் திரையைப் பிடித்திழுக்க திரை விலகியது. அடுத்த கணம் ஆதிஷேடனின் கடும் விஷக்காற்று தீண்டி அங்கிருந்த அத்தனை சீடர்களும் எரிந்து சாம்பலாயினர். முனிவர் எதை நினைத்து இத்தனை நாளும் பயந்தாரோ அது நடந்து விட்டது. அது சமயம் வெளியில் சென்றிருந்த முனிவர் அவர்மீது மூச்சுக்காற்று படாமல் இருக்க உடனே மானுட உருவத்திற்கு மாறினார். நடந்ததை யூகித்திறந்த கவுடபாதர் என் நண்பர்கள் அனைவரும் இப்படி சாம்பாலகி விட்டார்களே என்று கதறிக் கண்ணீர் விட்டார். குருவின் ரகசியத்தை அறிய திரையை விலக்கியதால் வந்த விபரீதம் இது. இத்தனைநாள்  பொறுமை காத்தவர்கள் இன்று அவரசப்பட்டு விட்டார்கள். கவுடபாதரே, நீர் மட்டும் எனக்கு சீடனாக மிஞ்ச வேண்டும் என்பது விதி எனவே மனதைத் தேற்றிக் கொள் என்று ஆறுதல் கூறினார் பதஞ்சலி. உனக்கு நான் சகல கலைகளையும் கற்றுத்தருகிறேன் உன்னுடைய இப்போதைய மனநிலைக்கு தேவை தியானம். தியானம் கைகூடியதும் சமாதிநிலை உண்டாகும் என்றார்.

படிப்படியாக கவுடபாதருக்கு அனைத்து வித்தைகளையும் கற்றுக் கொடுத்தார் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரத்தில் உள் ஆழ்ந்து மூலாதாரத்தில் கனலை எழுப்பி யோக சாதனை புரிந்த போது, குருநாதர்  பதஞ்சலி ஆதிஷேட அவதாரத்தின் ஆனந்த தரிசனம் கண்டு மெய் சிலிர்த்தார். பதஞ்சலி முனிவர் சிதம்பரத்தில் சமாதியடைந்ததாக கூறப்படுகிறது.

பதஞ்சலி முனிவர் தியானச்செய்யுள்

ஆயசித்தி அனைத்தும் பெற் சத்திய சித்தரே
சப்தரிஷி மண்டலத்தில் பிரகாசிப்பவரே
பக்தியுடன் வணங்கும் எமக்கு
நல்லாசி தரவேண்டும் பதஞ்சலியாரே

பதஞ்சலி சித்தரின் பூஜை முறைகள்: தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளினால் மெழுகி அரிசிமாவினால் கோலமிட்டு அப்பலகையின் மேல்  பதஞ்சலி முனிவரின் திருவுருவப்படத்தினை வைக்க வேண்டும். படத்தின் முன்பாக அலங்கரிக்கப்பட்ட திருவிளக்கினை வைத்து, நல்லெண்ணை ஊற்றி பஞ்சு திரி போட்டு இரண்டுமுக தீபமேற்ற வேண்டும், பொன்றி வஸ்திரம் அணிவித்து பொன்னிற மலர்களையும் பிச்சிப்பூ, முல்லைப்பூ போன்ற மலர்களாலும் பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.
-------------------------
அகப்பேய் சித்தர்

திருவள்ளுவர் பரம்பரையில் தோன்றிய இந்த சித்தரின் இயற்பெயர் நாயனார். இந்த மகான் நெசவுத் தொழில் நடத்தி வாழ்ந்து வந்தார். தொழிலில் நல்ல வருமானம் கிடைத்தது. எனினும் சித்தர் பெருமானின் மனம் பொருளாசையை விடுத்து அருளைத் தேடி அலைந்தது.

மக்களை மாயையிலிருந்து மீட்பதற்காக, முதலில் தனக்கு ஒரு குருவைத் தேடி காடுகளில் எல்லாம் தரிந்தார். அப்பொழுது ஜோதி மரம் ஒன்று இவர் கண்களுக்கு தெரிந்தது. உடனே அந்த மரப்பொந்துக்குள் புகுந்து கொண்டு வியாசர் பெருமானை தன் மனக் கோவிலில் குருவாக தியானித்து தவம் இருக்கத் துவங்கினார். இவரின் கடுந்தவத்தினை மெச்சிய வியாசர் நேரில் தோன்றினார். மிகப்பெரும் தவப்பேற்றை அகப்பேய் சித்தருக்கு கொடுத்து அரியபல மந்த்ர உபதேசங்களையும் செய்தார். அகப்பேய் சித்திரைவாழ்த்தி விட்டு வியாசர் மறைந்தார், மனிதர்கள் ஒருவரை ஒருவர் ஏமாற்றி வாழும் தீய செயல்களையும் தீய எண்ணங்களையும் நீக்குவதற்காக இவர் அகப்பேய் சித்தர் பாடல்கள் 90 என்ற நூலை எழுதினார்.

அங்கும் இங்கும் ஓடும் மன அலையை மட்டுப்படுத்தினால், நங்சுண்ணவும் வேண்டாம் நாதியற்று திரியவும் வேண்டாம். அந்த இறை நாதன் உன்முன் தோன்றுவான் என்பது இவரின் வாக்கு.

இவர் இயற்றிய நூல்களில் குறிப்பிடத்தக்கவை

அகப்பேய் சித்தர் பாடல் 90
அகப்பேய் பூரண ஞானம்
சித்தி அடைந்த திருத்தலம்- திருவையாறு
இலை உடையுடன் கலை உருவாய்
காட்சி தரும் காரியசித்தி ஸ்வாமியே
மாறாத சித்தியை மரப்பொந்தினில்
பெற்ற மங்காச் செல்வரே
அசைகின்ற புத்தியை
இசைகின்ற சித்தியால்
இனிது காப்பாய் அகப்பேய் சித்தரே

அகப்பேய் சித்தர் பூஜை முறைகள்: தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் அகப்பேய் சித்தர் ஸ்வாமியின் படத்தை வைத்து, அப்படத்திற்கு முன்பு மஞ்சள், குங்குமம் இட்டு, அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். முதலில் இந்த சித்தருக்காகக் குறிப்பிட்டிருக்கும் தியானச் செய்யுளை மனமுருகக்கூற வேண்டும். பின்பு பின்வரும் பதினாறு போற்றிகளை வில்வம் அல்லது பச்சிலைகள் அல்லது துளசி அல்லது கதிர்பச்சை அல்லது விபூதி பச்சை கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.

பதினாறு போற்றிகள்:

1. வனத்தில் சஞ்சாரம் செய்பவரே போற்றி!
2. பேய் பிசாசுகளை விரட்டுபவரே போற்றி!
3. பித்ருப்ரியரே போற்றி!
4. உயிர்களை காப்பாற்றுபவரே போற்றி!
5. சாந்தமாக இருப்பவரே போற்றி!
6. சந்தான தோஷத்தை போக்குபவரே போற்றி!
7. சங்கீதப்பிரியரே போற்றி!
8. சூரியன், சந்திரன் போன்று பிரகாசம் உடையவரே போற்றி!
9. ரத்தினங்களை அணிபவரே போற்றி!
10. ஹஸ்த தரிசனம் செய்பவரே போற்றி!
11. கஜபூஜை செய்பவரே போற்றி!
12. முனிவர்களுக்குக் காட்சி அளிப்பவரே போற்றி!
13. உலகரட்சகரே போற்றி!
14. சிறுவர்களால் வணங்கப்படுபவரே போற்றி!
15. முக்தி அளிப்பவரே போற்றி!
16. ஸ்ரீ சக்ர ஸ்வாமியாகிய அகப்பேய் சித்தர் ஸ்வாமியே போற்றி! போற்றி!

இவ்வாறு பதினாறு போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பிறகு மூல மந்திரமான, ஓம் அகப்பேய் சித்தரே போற்றி என்று 108 முறை ஜபிக்க வேண்டும்.

பின்பு நிவேதனமாக இளநீர்(வடிகட்டி வைக்க வேண்டும்) அல்லது பால் பழம் வைத்து படைத்து உங்கள் பிரார்த்தனையை மனமுருகக்கூறி வேண்ட வேண்டும். நிறைவாக தீபாராதனை செய்யவும்.

ஸ்ரீ அகப்பேய் சட்டமுனி ஸ்வாமிகள் பூஜை பலன்கள்:

இவர் நவக்கிரஹத்தில் குரு பகவானால் பிரதிபலிப்பவர். இவரை வழிபட்டால்

1. ஜாதகத்தில் குருபகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் அகலும்
2. பணப்பிரச்சனை, புத்திரபாக்கியம் கோளாறு, அரசாங்கத்தால் பிரச்சனை போன்றவை அகலும்.
3. வியாபாரத்தில் எதிர்பாராத நஷ்டம், சமாளிக்க முடியாத நிலை இவையெல்லாம் அகன்று லட்சுமி கடாட்சம் பெருகும். வயிறு, குடல் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.
4. வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்,
5. கொடுக்கல், வாங்கல் பிரச்சனை வழக்குகள் அகலும்.
6. அரசாங்கத்தால் பிரச்சனை, அரசாங்க அதிகாரிகளுக்குள்ள பிரச்சனை நீங்கும்,
7. வறுமை அகன்று வாழ்க்கை வளம் பெறும்.
8. இவருக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்

இவரை பூஜிக்க சிறந்தநாள் வியாழக்கிழமை ஆகும்.
-------------------------
வல்லபசித்தர்

தாதி பொன்னனையாள் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். அவளது குடிலில் தகரம், செம்பு, பித்தளை பாத்திரங்கள் மட்டுமே இருந்தன. பெண்கள் திறமைசாலிகள். தங்களுக்கு கணவனோ, பிறரோ கொடுக்கும் பணத்திலோ, தாங்கள் உழைத்து சம்பாதித்ததிலோ சிறிதளவாவது மிச்சம் பிடித்து வெள்ளியிலோ, தங்கத்திலோ சிறுநகைஒன்றாவது வாங்கி விடுவார்கள். பொன்னனையாளும் அதற்கு விதிவிலக்கல்ல. சிவபக்தையான அவள், கூடல் மாநகராம் மதுரை அருகிலுள்ள திருப்புவனம் என்ற ஊரில் வசித்தாள். அங்குள்ள பூவன நாதர் அவளது இஷ்ட தெய்வம். அவரது ஆலயத்தில் சேவை செய்தது மட்டுமின்றி, ஆலயத்துக்கு வரும் சிவனடியார்களுக்கு, தான் ஆடிப்பிழைக்கும் பணத்தில் மிச்சம் பிடித்து அவர் களுக்கு உணவளிக்கும் பழக்கத்தை யும் கொண்டிருந்தாள். அவளது கண்ணீருக்கு காரணம் தெரிய வேண்டுமே. அவளுக்கு நீண்ட நாளாக ஒரு ஆசை. திருப்புவனநாதர் லிங்கவடிவில் காட்சியளிக்கிறார். அவருக்கு உற்சவர் சிலை இருந்தால், அதைக்கொண்டு திருவிழா நடத்தலாம். திருவிழா நடந்தால், மக்கள் கூட்டம் கூட்டமாக தங்கள் ஊர் நோக்கி வருவார்கள். கோயிலின் வருமானம் பெருகும். கோயில் விருத்தியாகும். ஆனால், சிலை செய்ய யார் முன்வருவார்கள்? தானே செய்யலாம் என்றால் அதற்கு அந்தளவுக்கு பணமில்லையே! என்ன செய்வது? இதை நினைத்து நினைத்து கண்ணீர் வடித்தபடியே, தன்னையறி யாமல் உறங்கி விடுவாள். நடனமாடும் நேரத்தில் கூட, இந்த சிந்தனை அவளை வாட்டிக் கொண்டிருந்தது.

ஒருநாள், அவளது ஊருக்கு சில சிவனடியார்கள் வந்தனர். அவர்களை தனது இல்லத்துக்கு வரும்படி அழைப்பு விடுத்தாள் பொன்னனையாள். அடியார்களும், அவளது பக்தியைப் பற்றி ஊரார் சொல்லக் கேள்விப் பட்டு, அவளது இல்லத்துக்கு சென்றனர். அங்கு அனைவருக்கும் உணவு படைத்தாள். சம்பாதிக்கும் பணமெல்லாம், அடியவர்களுக்கு உணவளிப்பதிலேயே செலவழித்து விடுவாள். அவர்கள் சாப்பிட்டது போக மீதமிருந்தால், அதை மட்டுமே சாப்பிடுவது பொன்னனை யாளின் வழக்கம்.அன்று வந்திருந்த அடியவர் களில் ஒரு அடியவர் மிகுந்த தேஜஸுடன் இருந்தார். அவரது அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. பொன்னனையாளுக்கு உதவியாக இருந்த மற்ற கணிகைகளும், அவளுடன் இணைந்து அடியவர்களுக்கு உணவு பரிமாறினர். அழகாக இருந்த அடியவர் மட்டும் சாப்பிடாமல் அமர்ந்திருந்தார். அதற்கான காரணம் புரியாத கணிகைகள், பொன்னனையாளிடம் அதுபற்றிக் கூறினர். பொன்னனையாள் அவரருகில் சென்று, சுவாமி! மற்றவர்கள் நான் அளித்த இந்த எளிய உணவை சாப்பிடும்போது, தாங்கள் மட்டும் சாப்பிடாமல் இருக்கிறீர்களே! உணவு சுவையாக இல்லையா? தங்களுக்கு வேறு ஏதாவது கொண்டு வர வேண்டுமா? தாங்கள் கேட்பதை நொடியில் சமைத்து தருகிறேன், என்றதும், அந்த அடியவர் சிரித்தார்.

அவரது சிரிப்பில் சொக்கிப் போனாள் பொன்னனையாள். அவரது சிரிப்பு அந்த இடத்தையே ஆனந்தமயமாக்கியது. அம்மையே! உலகுக்கே படியளக்கும் எனக்கு, நீ இன்று படியளந்திருக்கிறாய். அதை நினைத்தேன், சிரித்தேன், என்ற அடியவரின் பேச்சில் இருந்த சூட்சுமம், பொன்னனையாளுக்கு புரியவில்லை. உடனே அடியவர் அவளிடம், வருந்தாதே, மகளே! நீ தந்த உணவின் மணம் என்னைச் சாப்பிடத் தூண்டுகிறது. ஆனால், உணவளிக்கும் போது, பெண்கள் மகிழ்ச்சியான மனநிலையைக்காட்ட வேண்டும். அது முகத்தில் எதிரொளிக்க வேண்டும். உன் முகத்தில் ஏதோ வாட்டம் தெரிந்தது. ஏதோ, சோகத்தை மனதில் தாங்கிய நீ தரும் உணவை எப்படி என்னால் மகிழ்ச்சியுடன் சாப்பிட முடியும். நான் சொல்வது சரிதானே! உன் மனதை ஏதோ ஒரு கவலை வாட்டுகிறது என்பது உண்மை தானே! என்றதும், அவளது கண்களில் கண்ணீர் வைகை நதியின் கரை புரண்ட வெள்ளம் போல் பெருகியது. ஐயனே! தாங்கள் என் மன நிலையைப் புரிந்து கொண்டீர்கள். ஆனால், இந்த வருத்தம் என் சுயநலம் கருதியது அல்ல. எம்பெருமானுக்கு, ஒரு சிலை வடிக்க வேண்டும். அதைக் கொண்டு உற்சவம் நடத்தி, மக்களை எனது ஊருக்கு ஈர்க்க வேண்டும். இங்கிருக்கும் பூவனநாதர் கோயில் பெரிய அளவுக்கு உயர வேண்டும்.

மன்னாதிமன்னர்களும், பிரபுக்களும் இங்கு வந்தார்கள் என்றால், அவர்கள் தரும் நன்கொடையைக் கொண்டு கோயிலை பெரிதாக்குவேன். உற்சவர் சிலையை வடித்து முடிப்பேன். இதெல்லாம், எப்படி நடக்கப் போகிறதோ என்ற கவலை தான், என் முகவாட்டத்துக்கு காரணம். இருப்பினும், தங்கள் முன்னால் கனிந்த முகம் காட்டாமைக்கு வருந்துகிறேன். அடியவர், இந்தச் சிறியவளின் தவறை புறந்தள்ளி, அமுது செய்ய வேண்டும், என அவரது பாதத்தில் விழுந்து வேண்டினாள். அடியவர் அவளைத் தேற்றினாள்.
-------------------------
நந்தீஸ்வரர்

நந்தீஸ்வரர் முனிவர் வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 700 ஆண்டுகள் 3 நாள் ஆகும்.
---------------------------------------------‐‐-----------------------------------------------------------------------------‐‐--------------------------------
வான்மீகர்

வான்மீகர் முனிவர் புரட்டாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 700 ஆண்டுகள் 32 நாள் ஆகும்.

---------------------------------------------‐‐-----------------------------------------------------------------------------‐‐--------------------------------
மச்சமுனி

மச்சமுனி ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 300 ஆண்டுகள் 42 நாள் ஆகும்.
---------------------------------------------‐‐-----------------------------------------------------------------------------‐‐--------------------------------
தன்வந்திரி

தன்வந்திரி  முனிவர் ஐப்பசி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 800 ஆண்டுகள் 32  நாள் ஆகும்.
 ---------------------------------------------‐‐-----------------------------------------------------------------------------‐‐--------------------------------