ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

மாளயபக்ஷம் ஆரம்பம் முதல் மஹாளய பக்ஷம் முடியும் வரை
நாம் எப்படி இருக்க வேண்டும் ஒரு சிறப்பு பார்வை...

மஹாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்று பொருள்பட்சம் என்றால் பதினைந்து நாட்கள் கொண்டது ஒரு பட்சம் ஆகும் மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக பதினைந்து நாட்கள் மேலுலகில் இருந்து பூமிக்கு வந்து பதினைந்து நாட்கள் (சில சமயம் பதினாறு ஆக மாறுபடும்) நம்மோடு தங்கிச் செல்லும் காலமே மஹாளயபட்சம் ஆகும். இது புரட்டாசி மாதத்து பௌர்ணமி திதிக்கு மறுநாள் பிரதமை திதியில் துவங்கி அமாவாசை  வரை நீடிக்கும் . புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மஹாளய அமாவாசை எனப்படும்.தை அமாவாசை ஆடி அமாவாசை இவைகளை விட உயர்ந்தது மஹாளய அமாவாசை. மறந்து போனவனுக்கு மஹாளயபட்சம் என்று பெரியவர்கள் சொல்வார்கள் அதாவது முன்னோர்களுக்கு ஒரு வருடமாக ஸ்ரார்த்தம் ( திதி ) கொடுக்காமல் மறந்து இருந்தால் கொடுக்க மறந்தவர்கள் மஹாளய அமாவாசையன்று கொடுத்தால் அந்த ஒரு வருட ஸ்ரார்த்தம் ( திதி ) கொடுத்த பலன் வந்து சேரும். மஹாளயபட்ச காலத்தில் என்னென்ன செய்ய வேண்டும் :
மற்ற மாதங்களில் அமாவாசையன்று தர்ப்பணம் செய்ய வேண்டும். நம் முன்னோர்கள் மறைந்த திதியன்று ஸ்ரார்த்தம் ( திவசம் ) செய்வோம் ஆனால் மஹாளயபட்சகாலத்தில் பிரதமை திதி துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும் ஒட்டு மொத்த முன்னோர்களையும் அப்போது நினைவு கூற வேண்டும் புண்ணிய தீர்த்தங்களுக்கு சென்று புனித நீராடி நம் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக ப்ரார்த்தனை செய்து வர வேண்டும். அந்தணர்களுக்கு வஸ்திரதானம் ஏழைகளுக்கு அன்னதானம் படிக்க சிரமப்படும் (பொருளாதார நிலையில்) மாணவர்களுக்கு வித்யாதானம் இவைகளை அவரவர் சக்திக்கு தகுந்தவாறு அளிக்க வேண்டும் நமது தேசத்தின் பல நூற்றாண்டுகளுக்கும் முந்தைய வரலாறை கூட தெரிந்து வைத்திருக்கும் பலர் தங்களின் மூதாதையர்கள் முன்னோர்கள் மூன்று தலை முறைகளுக்கு முன்பு உள்ளவர்கள் ( பித்ருக்கள் ) பெயரை நினைவில் வைத்திருப்பதில்லை. அந்த பயிற்சியை இந்த காலத்தில் நமது குழந்தைகளுக்கு நாம் சொல்லி கொடுக்க வேண்டும். தற்போது நினைவில் உள்ள தலைமுறையினர்களின் பெயரை டைரியில் குறிக்கச் சொல்ல வேண்டும். அப்படி செய்தால் தான் எதிர்காலத்தில் வரும் சந்ததியினருக்கு தர்ப்பணம் ஸ்ரார்த்தம் குறித்த அறிவு நம்மிடையே நீடித்து நிலைத்திருக்கும் தலைமுறைக்கே லாபம்.

மஹாளயபட்ச விதிமுறைகள்  lமஹாளயபட்ச (பதினைந்து தினங்கள்) காலத்தில்  கண்டிப்பாக வெங்காயம் சேர்க்க கூடாது, எண்ணெய் ஸ்நானம் செய்யக்கூடாது, முகச்சவரம் செய்யக்கூடாது, தாம்பத்யம் ( உடலுறவு ) கூடாது, புலனடக்கம் மிக மிக அவசியம் மஹாளயபட்சத்து பதினைந்து நாட்களில் தினங்களில் கண்டிப்பாக வெளியே சாப்பிடக் கூடாது.

தர்ப்பணம் செய்யும் முன்பாக 33 விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்.

 1. தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடைபெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக்கூடாது.

2. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்குதர்ப்பணம் செய்து மூடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளைச் செய்ய வேண்டும்.

3. சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசை அன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.

4.அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு கோபத்தோடு  செல்கிறார்கள் என்றும், ஒரு சில பித்ருக்கள் சாபம் கூட தந்து விட்டுச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

5. ஒரு வருடத்தில் பித்ருக்களுக்குதர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள்.இவைகளில் பதிநான்கு மன்வாதி நாட்கள், யுகாதி நாட்கள் நான்கு, மாதப்பிறப்பு நாட்கள் பன்னிரெண்டு ,  அமாவாசை பன்னிரெண்டு, மஹாளய பட்சம் பதினாறு, வ்யதீபாதம் பன்னிரெண்டு, வைத்ருதி பன்னிரெண்டு, அஷ்டகா நான்கு, அன்வஷ்டகா நான்கு, பூர்வேத்யு நான்கு நாட்கள். இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

6. ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல் எனக்குச்செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை என விஷ்ணுவும் சிவனும் கூறியுள்ளனர்.

7. நமது பித்ருக்களிடத்தில் சிரார்த்தத்தை சிரத்தையுடன் செய்வதாகவும், நல்ல உயர்ந்த ஆடை, தீர்த்த பாத்திரம் சிரார்த்தத்தில் வாங்கித் தருவதாகவும், பிரார்த்தனை செய்து கொண்டு அவ்வாறே சிரார்த்தத்தை நடத்தினால் நிச்சயம் உங்கள் விருப்பம் நிறைவேறும். விரும்பிய பலன் கைகூடும்.

8. ஒரேநாளில் ஏராளமான  பித்ருக்களுக்கு தனித்தனியாக பல பேர் சிராத்தம் செய்யும் போது சிரார்த்த உணவு அவரவர்களின் பித்ருக்களுக்கு எவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதை கருத்தில் கொண்டுதான் மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும் போது சொல்கிறார்கள். இதனால் ஒருவர் கொடுக்கும் தர்ப்பணம் அவரவர்களுக்கு சரியாக சென்றடையும்.

9. மஹாளயபட்சம் 15 நாட்களும் பித்ருகளுக்கு தாகமும், பசியும் மிக அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் அருளைப் பெற வேண்டும். அந்த 15 நாட்களில் உறவினர்கள் இறந்து விட்டால் நாம் சிரார்த்தம் செய்ய வேண்டாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் பிறகு கட்டாயமாகச் செய்ய வேண்டும்.

10. பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம் பித்ரு காருணீக வர்க்கம் என்று பித்ருக்கள் மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அதாவது அப்பா வகையை சார்ந்த பித்ருக்கள்பித்ருவர்க்கம் எனப்படுவார்கள் அம்மா வகையை சார்ந்த பித்ருக்கள் மாத்ருவர்க்கம் எனப்படுவார்கள். சித்தப்பா, மாமா, குரு, நண்பர்கள்காருணீகவர்க்கம் எனப்படுவார்கள். இவர்களை நினைவு கூறி தர்ப்பணங்களை செய்ய வேண்டும்.

11. நமக்காக எத்தனையோ கஷ்டங்களை தாங்கிய நம்பித்ருக்களுக்கு மஹாளபட்சம் அமாவாசை போன்ற நாட்களில் வெங்காயம் பூண்டு, வாசனை திரவியங்கள் போன்றவை வேண்டாம்.

12. சாஸ்திரப்படி, சிரார்த்த காரியங்கள் செய்பவர் திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் மற்றவர் வீடுகளில் உணவு  உண்ணக்கூடாது.

13. துவாதசி பன்னிரெண்டாம் நாளன்று பித்ரு பூஜை செய்பவன் சொர்ண லாபம் பெறுவான்.

14. தாய், தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினைவு கொண்டு தர்ப்பண காரியங்கள் செய்தால் போதும் எனும் பழக்கம் இன்று பலரிடத்தில் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும். அதுதான் சிறப்பானது. முழு பலன்களையும் தரவல்லது.

15. குடும்பத்தில் சன்னியாசம் வாங்கிச் சென்றவர்களுக்கு துவாதசி அன்று மகாளய சிரார்த்தம் செய்வது மிக முக்கியம்.

16. கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு.

17. திருவாலங்காடு, திருவள்ளூர், ராமேஸ்வரம், திருமயம் அடுத்து வரும் அரண்மனைப்பட்டி, திருவண்ணாமலை, திருவிடைமருதூர், காசி, திருநள்ளாறு ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்வது மிக சிறந்தது.

18. திலதர்ப்பணபுரி எனும் ஊரில் (திருவாரூர் பூந்தோட்டம் இடையில் உள்ளது) தர்ப்பணம் செய்வது மிக மிக விசேஷமாக கருதப்படுகிறது. இங்கு ஸ்ரீராமரும் லட்சுமணரும் தம் தந்தையான தசரத மகாராஜாவிற்கு தர்ப்பணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

19. மஹாளய அமாவாசையில் பித்ருக்களை வழிபடா விட்டால் திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை, நோய் வறுமை போன்றவை ஏற்படக்கூடும் என்று கருடபுராணம் கூறியுள்ளது.

20. பூசணிக்காய்க்குள் அசுரன் இருப்பதாக ஐதீகம் உள்ளது. எனவே பித்ருபூஜை செய்யும் போது பூசணிக்காயை தானமாகக் கொடுத்தால், அசுரன் நம்மை விட்டு போய் விடுவான் என்று கருதப்படுகிறது.

21. தற்கொலை செய்பவர்களின் ஆத்மாக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கலாம். அவர்களுக்குரிய தர்ப்பணம் செய்யும் போது அந்த ஆத்மாக்கள் விஷ்ணுவின் ஆசியை பெற வழிவகை ஏற்படும்.

22. மஹாளய அமாவாசை தினத்தன்று மறைந்த முன்னோர்களின் படங்களுக்கு துளசி மாலை அணிவிப்பது நல்லது.

23. மஹாளய அமாவாசை தினத்தன்று பசுவுக்கு கீரை கொடுத்தால், அது மறைந்த உங்கள் தாத்தாவுக்கு தாத்தாவுக்கும் (அவர்கள் மறுபிறவி எடுத்திருந்தாலும்) போய் உரிய பலன்களை கொடுக்கும்.

24. மஹாளய அமாவாசை நாட்களில் எக்காரணம் கொண்டும் மறைந்த முன்னோர்களை திட்டவோ, விமர்சனம் செய்யவோ கூடாது.

25. மகாளய அமாவாசை நாட்களில் மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டால் பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

26. ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டியதிருந்தால் எள்ளுடன் அட்சதையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

27. தர்ப்பணத்தை எப்போதும் தெற்கு முகமாக பார்த்த படி மண்டி இட்டு தான் கொடுக்க வேண்டும். ஆனால் தற்போது இந்த நிலை மாறி உள்ளது.

28. மஹாளய பட்சத்தின் பதினைந்து நாட்களும் அன்னதானம் புதிய உடை தானம் செய்வது மிக மிக நல்லது.

29. தர்ப்பணத்தில் பயன்படுத்தும் தர்பணப்புல் கேது கிரகத்துக்கு உரியதாகும். தர்ப்பைக்கு நாம் எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு அது கேதுபகவான் மூலம் பலன்களை பெற்றுத்தரும். குறிப்பாக பெரியவர்களின் தொடர்பு கிடைக்கும்.

30. பசுமாடுகள் கட்டப்பட்ட தொழுவத்தில் இருந்த படி சிரார்த்தம் செய்வது அளவற்ற பலன்களைத் தரும்.

31. தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் நடைபெறும் நாட்களில் அவை முடியும் வரையில் அதைச் செய்பவர் பால், காபி முதலிய எதையும் சாப்பிடக் கூடாது.

32. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த நீரை மற்றவர் கால்களில் மிதிக்கும் படி கொட்டக்கூடாது.

33. மஹாளய அமாவாசை தினத்தன்று புனித நதிகளில் நீராடுவது நல்லது. அப்போது இரு கைகளாலும் நதி நீரை எடுத்து விடுவது (அர்க்கியம் செய்வது) மிகுந்த நன்மையைத் தரும். சூரியனை பார்த்தபடி மூன்று தடவை நீர் விடுதல் வேண்டும்.

சனி, 14 செப்டம்பர், 2019

(தெய்வத் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் 'ஆலயம் ஏன்?' என்ற நூலில் இருந்து)

1. கருவறையில் உறையும் இறைவனின் சிலையை 'வெறும் கல்' என்று எழும் விமரிசனம் பற்றி?

நேர்க்கோடு ஒன்றும் குறுக்குக் கொடு ஒன்றும் போட்டால் படிக்காத சிறுவன் அதைக் கோடு என்பான். படிக்கத் தெரிந்த சிறுவன் அதை 'ட' என்பான். கோடு என்பதும் அது தான். 'ட' என்பதும் அது தான். படிக்காதவனுக்கு கோடாகத் தெரிகிறது. படித்தவனுக்கு 'ட' ஆகத் தெரிகிறது. அது போல கடவுளைக் கல்லாகக் காண்பார்கள் அஞ்ஞானிகள். சிலைக்குள் இறைவனைக் காண்பார்கள் ஞானிகள்.

2. கும்பாபிஷேகம் என்பது என்ன?

இறைவன் ஜோதி வடிவானவன். "ஜோதியே, சுடரே, சூழொளி விளக்கே" என்பார் மணிவாசகர். அப்படி, ஜோதி வடிவான இறைவனைக் கல்லிலே அமைப்பர். பிரதிஷ்டை செய்யுமுன் மூர்த்தியை தானியத்திலும் (தான்யவாசம்), நீரிலும் (ஜலவாசம்) வாசம் செய்ய வைத்து, மந்திர யந்திரத்தை எழுதி, ஆகம முறைப் படி, மூர்த்தியின் அடியிலே வைப்பர்.

பின்னர், யாகங்களால் ஜோதியை வளர்த்து, அந்த இறை ஜோதியை கும்பத்திற்குக் கொண்டு போய், கும்பத்தில் இருந்து பிம்பத்துக்குக் கொண்டு போவது தான் கும்பாபிஷேகம். கும்பாபிஷேகத்துக்கு முன் அது கல். கும்பாபிஷேகத்திற்குப் பிறகு கடவுள். எப்படி காகிதம் கரன்சி நோட்டாக மாறுகிறதோ அது போல என்று உணர்க.

காகிதம் பற்பொடி மடிக்க உதவும். ஆனால், கரன்சி நோட்டினால் இரயில்வேயில் டிக்கெட் வாங்கலாம். அது போல, இறைவன் கல் வடிவில் கருவறையில் இருந்து நமக்குக் காட்சி அளித்து ஆட்கொள்கிறான்.

3. கடவுளுக்குக் கற்பூரத்தை ஏற்றுவது ஏன் ?

கோயிலுக்குப் போன பொருள் எல்லாம் திரும்பி விடும். கற்பூரம் ஒன்று தான் திரும்பி வராது. கற்பூரம் நெருப்பில் எரிந்து கரியோ சாம்பலோ இல்லாமல் மறைந்து விடுகிறது. அதுபோல், ஆன்மாவானது இறைவனுடைய அருட் ஜோதியில் கரைந்து ஒன்று பட வேண்டும் என்ற முக்கியக் குறிப்பைக் கற்பூரம் உணர்த்துகிறது.

"தீதணையா கற்பூர தீபமென நான்கண்ட
ஜோதியுடன் ஒன்றித் துரிசறுப்பது எந்நாளோ?"
என்பார் தாயுமானார்.

Courtesy: Devarajan Natarajan
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இரவில் வந்து உணவு உண்ணும் அதிசய கோவில்...!!

அதிசயங்கள் நிறைந்த உலகம் இது. இன்னும் பல அமானுஷ்ய, ஆச்சரிய நிகழ்வுகள் நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. அதற்கான விடையும் தேடப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

🌞 அப்படியொரு அதிசயங்கள் நிறைந்த, நம்மை வியக்க வைக்கும் வரிசையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் ஸ்ரீமதி ராதாராணியும் (ராதையும்) தினமும் இரவில் வந்து ஆடி பாடி உணவு உண்ணும் அதிசய கோவிலை பற்றி பார்க்கலாம்.

🌞 உத்திரபிரதேச மாநிலத்தில் மதுரா மாவட்டத்தில் பிருந்தாவனம் என்ற ஊர் உள்ளது. இதை ஹிந்தியில் விருந்தாவன் என்றும் அழைக்கின்றனர்.




🌞 இந்த இடம் மகாபாரதத்தில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனது குழந்தை பருவத்தில் ஆடி பாடி விளையாடிய இடமாகும் . மேலும் இந்த இடத்தில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான ராதாகிருஷ்ணர் கோவில்கள் நிறைந்துள்ளன.

🌞 அதில் மிக முக்கியமானது, இங்குள்ள நிதிவனம் என்ற காட்டிற்குள் அமைந்துள்ள ரங் மகால் எனும் கோவில். இந்த கோவிலிலும், இந்த கோவிலிருக்கும் இடமான நிதிவனமும் பல அற்புதங்களையும், அமானுஷ்யங்களையும் தன்னுள் மறைத்து வைத்திருக்கும் இடமாகும்.

🌞 இந்த நிதிவன காட்டுப்பகுதி மிகவும் வறட்சியான பகுதியாகும். இந்த வனத்தில் நீரை பார்ப்பதே மிகவும் அரிதாகும். ஆனாலும் இங்குள்ள மரங்கள் அனைத்தும் எப்பொழுதும் செழிப்பாக காணப்படுவது மிகவும் ஆச்சரியமான விஷயமாகும்.

🌞 மேலும் இந்த காட்டில் இருக்கும் எந்த மரங்களும் நேராக வளராமல் கிருஷ்ணருக்கும்ராதைாராணிக்கும் மரியாதை செலுத்தும் விதமாக வளைந்தே காணப்படுகிறது என்பது மற்றொரு ஆச்சரியமான விஷயமாகும்.

🌞 மேலும் இந்த காட்டை சுற்றி துளசி செடிகள் மிகுந்து காணப்படுகிறது. இந்த துளசி செடிகள் அனைத்தும் ஜோடி ஜோடியாகவே வளர்ந்து வருவது மற்றொரு ஆச்சரியமாகும். இந்த துளசி செடிகள் அனைத்தும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடன் சிறுவயதில் வாழ்ந்த கோபியர்கள் என நம்பப்படுகிறது.

🌞 இந்த கோவிலில் சந்தன மரத்தால் செய்யப்பட்ட கட்டில் உள்ளது, கட்டிலுக்கு அருகில் ஒரு கலசத்தில் நீரும், கிருஷ்ணர் பல் துலக்குவதற்காக வேப்பங்குச்சியும், புதிய ஆடைகளும், ஆபரணங்களும் கிருஷ்ணர் போட்டுக்கொள்ள வெற்றிலை பாக்கும் ஒவ்வொரு இரவும் வைக்கப்படுகிறது.

🌞 இரவு 7 மணி பூஜைக்கு பிறகு பக்தர்கள், பூஜை செய்பவர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த காட்டுப்பகுதியை விட்டு வெளியேறி விடுகின்றனர்.

🌞 மேலும் பகலில் இந்த காட்டுப்பகுதியில் காணப்படும் விலங்குகளும், பறவைகளும் கூட இரவு வேளையில் மட்டும் இந்த காட்டுப்பகுதியை விட்டு வெளியேறிவிடுவது ஆச்சரியப்படுத்தும் தகவலாகும்.

🌞 ஒவ்வொரு நாளும் இந்த கோவிலை திறக்கும்போதும் கட்டில் கலைந்து காணப்படுவதும், தண்ணீரும் உணவுகளும் உண்ணப்பட்டு காணப்படுவதும் இன்றுவரை நடந்துவரும் அதிசய நிகழ்வாகும்.

🌞 இரவில் பகவான்ஸ்ரீ கிருஷ்ணரும் ராதாராணியும் இந்த கோவிலுக்கு வருவதாகவும், அப்பொழுது இந்த கோவிலை சுற்றி வளர்ந்திருக்கும் துளசி செடிகள் கோபியர்களாக மாறி பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடன் ஆடி பாடுவதாகவும் நம்பப்படுகிறது.

🌞 பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இந்த ராஜ லீலைகளை பார்க்க இந்த காட்டிற்குள் இரவு நேரங்களில் மக்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.


பிருந்தாவனம் சென்று சங்கரன் வீற்றிருக்கும் தனி அழகை காண கண்கோடி வேண்டும்!

பல அற்புதங்களையும் மகிமைகளையும் தனக்குள்ளே நாளும் புரியும் சத்குருவின் பிருந்தாவனம்!

என்னவெல்லாம் நடக்காதோ நடக்கமுடியாதோ அத்தனையும் நடத்திக்காட்டும் சந்திரசேகரனின் பிருந்தாவனம்!

மலடு என்று சொல்லி பல மருத்துவர்களால் கைவிடப்பட்டவரையும் இரட்டை குழந்தை ஈன்றெடுக்க வைக்கும் கர்ப்பரக்ஷாம்பிகை கொலுவிருக்கும் பிருந்தாவனம்!

இதய கோளாறினால் மரண தருவாயில் உள்ளவரும் தலை எழுது மாறி துள்ளி குதித்து விளையாட்டு வீரனைபோல் ஓடவைக்கும் நான்முகன் குடியிருக்கும் பிருந்தாவனம்!

செவிடரும் கேட்டு ஊமையும் கவி பாடி குருடரும் சங்கரன் அருளை கண்டு களிக்கும்படி செய்யும் கோவிந்தன் ஆதிசேஷனில் துயில் கொள்ளும் பிருந்தாவனம்!

பல நாள் வைத்தியம் பார்த்தும் தீராத பைத்தியத்தையும் ஒரு நொடியில் குணப்படுத்தும் வைதீஸ்வரன் வீற்றிருக்கும் பிருந்தாவனம்!

தீயவரும் மனம் திருந்தி செய்த தவறுக்காக மிக வருந்தி பல நன்மைகளை புரிய வைக்கும் சாந்தரூபனின் பிருந்தாவனம்!!

இன்னும் இன்னும் எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம் எண்ணிக்கையில் அடங்கா பல அரிய நிகழ்சிகளை நித்தியமும் நடத்திகொண்டிருக்கும் சத்தியசந்தனின் பிருந்தாவனம்!

இன்ன வேண்டும் என்றே கேட்கமால் வேண்டியதோடு இன்னும் அதிகமான நலன்களையும் அன்பர்களிக்கும் அஷ்டலக்ஷ்மிகளும் ஒருங்கிணைந்து அருளும் பிருந்தாவனம்!

இன்னும் என்ன தாமதம் உடனே புறப்படுவோம் குறை களைந்து குணம் பெறவைக்கும் பக்தவத்சலன் வசிக்கும் பிருந்தாவனம் நாடி!

பெரியவா சரணம்!!!
அபூர்வ ஆலயங்களும் அவற்றின் சிறப்புகளும்!

கோயில் கோபுரங்களில் பல்வேறு கடவுள் சிற்பங்கள் இருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் மதுரை மேலமாசி வீதி வடக்கு மாசி வீதி சந்திப்பில் உள்ள நவநீத கிருஷ்ணன் ஆலய கோபுரத்தில் மகாத்மா காந்தி, அவர் மனைவி கஸ்தூரிபாய், ஜவஹர்லால் நேரு, நேதாஜி ஆகியோரின் சிலைகள் இடம் பெற்றுள்ளன. ஐயன்பாளையம் முத்தாலம்மன் கோயில் கோபுரத்திலும் காந்தி, நேரு ஆகியோரின் சிலைகளைக் காணலாம். புதுச்சேரி உப்பளத்திலுள்ள நேதாஜிநகர் தேசமுத்து மாரியம்மன் கோயில் முகப்பில் பாரதியாருக்கு சிலை வைத்துள்ளனர். பாரதியார் புதுச்சேரியில் தங்கியிருந்தபோது அடிக்கடி இக்கோயிலுக்கு வந்து செல்வாராம். இக்கோயில் அம்மனைப் போற்றி பல பாடல்களையும் பாரதியார் பாடியுள்ளார். மயிலாப்பூர் ஆலயத்தில் வள்ளுவன் வாசுகி சிலைகள் உள்ளன. ஒவ்வொர் ஆண்டும் இந்திய சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ஆம் தேதி காலையில், சிதம்பரம் நடராசர் கோயிலில் நம் தேசியக் கொடியை ஒரு வெள்ளித் தட்டில் வைத்து, அதை நடராசர்முன் வைத்து பூஜை செய்வார்கள். பின் அக்கொடியை அர்ச்சகர் எடுத்து வர மேளதாளத்துடன் சென்று கோயில் கிழக்கு கோபுரத்தில் ஆலய தீட்சிதர் அக்கொடியை ஏற்றுவார். அப்போது கோயிலுக்கு வருவோர் அனைவரும் தேசியக் கொடிக்கு மரியாதை செய்வார்கள். வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத சிறப்பான நிகழ்ச்சி இது.

மயிலம் முருகன் கோயிலில், முருகன் மணக் கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கிழக்கு ராஜகோபுரம் எப்போதும் மூடிய நிலையில் இருக்கும். ஆண்டுக்கு இருமுறை ஆனித் திருமஞ்சனம், மார்கழி திருவாதிரையின்போது மட்டும் இந்த வாயில் திறக்கப்படும். மற்ற நாட்களில் பக்தர்கள் தெற்கு வாயில் வழியாகத்தான் செல்வார்கள். அனைவருக்கும் மேலான ஈஸ்வரனே கோயில் எழுப்பி சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, தன்னைத் தானே வழிபட்ட தலம் மதுரையிலுள்ள இம்மையில் நன்மை தருவார் கோயிலாகும். சிவனும் பார்வதியும் ஒன்றாக அமர்ந்து சிவபூஜை செய்யும் காட்சி இங்கு மூல விக்ரமாக இருக்கிறது. இக்கோயில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு முற்பட்ட கோயிலாகும். நேபாளத் தலைநகர் காட்மண்டில், பாக்மதி நதிக்கரையில் அமைந்திருக்கும் சிவாலயம் இரண்டு அடுக்குகள் கொண்டது. இந்தக் கோயிலின் கூரை தங்கத்தால் வேயப்பட்டது. கதவுகள் வெள்ளியால் ஆனது. சன்னதிக்கு நேராகக் காட்சி தரும் நந்தி பஞ்சலோகத்தில் ஆனது. இங்கு அருள்பாலிக்கும் சிவனுக்கு ஆறுமுகங்கள் உண்டு. இவர் பெயர் பசுபதிநாதர். ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது கட்டழகப் பெருமாள் கோயில். இங்கு சுந்தரவல்லி, சவுந்தரவல்லி சமேத சுந்தரராசப் பெருமாளைத் தரிசிக்கலாம். மலைமீதுள்ள இக்கோயிலுக்கு 247 படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். தமிழ் எழுத்துகள் 247-ஐ தத்துவார்த்தமாக உணர்த்தும் விதமாக அமைந்துள்ளன இப்படிகள். இம்மலையிலுள்ள சிலம்பு ஊற்று என்ற தீர்த்தம் நாவல் மரப் பொந்திலிருந்து வருகிறது. கோயிலின் பின்புறமுள்ள மலையைப் பார்த்தால் பெருமாளே பள்ளி கொண்டதுபோல் காட்சி தருகிறது.

நாளை தொடரும்
நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி  தெரிந்துகொள்வோம்!!

         11:ஸ்ரீ சிவானந்த சித்கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
                                   (கி.பி.127-172 வரை)
காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள இரண்டு ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள்  இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

ஸ்ரீ சிவானந்த சித்கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் கன்னட அந்தண மரபினர். தந்தையின் பெயர்'உஜ்வலபட்டர்' பெற்றோர் இவருக்கு வைத்த நாமதேயம்'ஈச்வர வடு'.சிவ அத்வைத நெறியில் மிகவும் ஈடுபாடு கொண்ட இவர் கி.பி.172-ல் விரோதி கிருது ஆண்டு,சித்திரை மாதம்,சுக்ல பக்ஷ தசமியில் விருத்தாசலத்தில் சித்தியடைந்தார்.
சிதம்பர ரகசியம் பகுதி : 33

சிவகங்கைக் குளத்துக்கு மேற்கே நாம் காணப் போவது சிவகாம கோட்டம் என்று அழைக்கப்படும் சிவகாம சுந்தரியின் சன்னதி. இறைவனின் சக்தி மூன்று விதப்படுகிறது. இச்சா சக்தி,கிரியா சக்தி ஞான சக்தி என்பவை. சக்தி எல்லாமே ஒன்று என்றாலும் அந்த அந்த நேரத்துக்குத் தகுந்தாற்போல் நடந்து கொள்ளணும் இல்லையா? அதனால் நடராஜரை விட்டுப்பிரியாமல் அவருக்கு அருகேயே இருக்கும் சிவகாமசுந்தரியானவளை "இச்சா சக்தி" எனவும் இங்கே தனிக் கோயில் கொண்டு குடியிருப்பவளை "ஞான சக்தி" எனவும் இவளுக்கு அருகேயே துர்கையாக இருப்பவளை கிரியா சக்தி" எனவும் உள்ளூர் மக்கள் நம்புவதோடு அல்லாமல் சில புராணங்களும் அவ்வாறு சொல்வதாய்க் கூறுகின்றனர். இந்த்க் கோயில் சோழர் கால்த்தில் இரண்டாம் குலோத்துங்கனால் திருப்பணி செய்யப் பட்டுள்ளது. தசமகாவித்யை பற்றிச் சொல்லும் "ஸ்ரீவித்யா உபாசனா" இந்தக் கோயிலை பூதேவியின் இருப்பிடம் எனக் கூறுவதாய்த் தெரிகிறது. சிவகாம சுந்தரியின் அருளாலேயே பதஞ்சலி முனிவர் தன்னுடைய வியாகரணத்துக்கான மகாபாஷ்யத்தை எழுதியாதாய்ச் சொல்கின்றனர். ஹயக்ரீவர், அகஸ்த்யர், லோபாமுத்ரை, துர்வாசர், பரசுராமர், ஆதி சங்கரர் போன்றோர் இங்கே வழிபாடு நடத்தி இருக்கின்றனர். ஒவ்வொரு வருஷமும் ஐப்பசி மாசத்தில் பிரம்மோற்சவத்தின் போது சிவகாமசுந்தரிக்குத் திருமண விழாவும் நடராஜருடன் இங்கே நடை பெறுகிறது. வேறெங்கும் காணாத அதிசயமாய்ச் சித்திரகுப்தனுக்கு இங்கே தனியாய் ஒரு சன்னதி உள்ளே நுழையும்போது இடது பக்கமாய்க் காணலாம். சித்திரகுப்தனுடன் கூடவே பிரம்மாவும் இருக்கிறார். சிவகாமசுந்தரியை அடுத்துச் சிறிய அகிலாண்டேஸ்வரி சன்னதி காணப்படுகிறது. அதற்குப் பின்னர் துர்கை சன்னதி கிட்டத் தட்ட ஒரு தனிக் கோவில் போல் முக்கியத்துவம் பெற்றுக் காணப் படுகிறது. பராசக்தியின் அவதாரங்களில் ஒன்றான "மஹிஷாசுர மர்த்தினி"யாக வடக்கே பார்த்துக் கொண்டு இங்கே காணப்படும் அம்மனின் காலடியில் மஹிஷன் காணப்படுகிறான். இந்தக் கோயில் துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவளாயும் இருக்கிறாள். நவராத்திரிகளில் இவளுக்குத் தனி அலங்காரம் பூஜைகள் முதலியன உண்டு.

பாண்டியநாயகன் கோவில் : இது ஒரு முக்கியமான கோவில். தென்னிந்தியக் கோவில் கட்டிடக் கலைக்கு எடுத்துக் காட்டாய் விளங்கும் இது மாறவர்மன் சுந்தர பாண்டியனால் கட்டப் பட்டிருக்கிறது. ஆறுமுகங்களோடும் அருகில் தன்னிரு மனைவியரான வள்ளி, தேவானையோடும், மயில் வாகனனாய்க் காட்சி தருகிறான் அந்த வேலவன் இங்கே! பாண்டியனின் குலத்தைக் காக்க வந்த கடவுளான கந்தனுக்குப் பாண்டியன் இங்கே தனியே கோயில் எடுத்துச் சிறப்புச் செய்தமையால் இந்தக் கோயில் பாண்டிய நாயகன் கோயில் என அழைக்கப் படுவதாய்ச் சொல்கின்றனர். இந்தக் கோயிலின் முன்பாகத்தில் ஷண்முகன் என்ற பெயருடனும் அருள் பாலிக்கிறான் குமரக் கடவுள்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம்  ॐ
திருமணத்திற்குப் பொருத்தம் நீங்களே பார்க்கலாம்!

திருமணம் செய்ய இருக்கும் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் கீழ்கண்ட பொருத்தங்கள் பார்த்து திருமணம் நடத்தி வைப்பது வழக்கம்.

1. தினப் பொருத்தம்: மணப் பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து துவங்கி, மணமகன் நட்சத்திரம் வரை எண்ணி, அந்தக் கூட்டுத் தொகையை ஒன்பதால் வகுத்தால், ஈவு 2,4,6,8,9 என்று வருமானால் இருவருக்கும் தினப்பொருத்தம் உண்டு என்று கொள்ளலாம். இந்தப் பொருத்தத்தை இன்னொரு வகையிலும் கணக்கிடலாம். அதாவது பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணிக்கொண்டு வரும்போது அந்த எண் தொகை 2,4,6,8,9,11,13,15,17,18,20,22,26,27 என்று வருமானால் இதுவும் தினப் பொருத்தம்தான் என்று சொல்வார்கள். மணமகன், மணமகள் இருவருக்கும் ஒரே நட்சத்திரமானால், அதுவும் தினப் பொருத்தம்தான். ஆனால், பரணி, ஆயில்யம், சுவாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் இருவருக்கும் ஒன்றாக இருக்குமானால், இது பொருந்தாது என்பதும் ஒரு கணிப்பு. மணமகள், மணமகன் இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக  இருக்கும் பட்சத்தில், மணமகனுக்கு அந்த நட்சத்திரத்தில் முதல் பாதமாகவும், மணமகளுக்கு அடுத்த பாதங்களில் ஏதாவதொன்றாகவும் அமையுமானால், அது சுபப் பொருத்தம் என்று கொள்ளப்படுகிறது. உதாரணமாக, இருவருக்கும் கிருத்திகை நட்சத்திரம் என்று இருக்குமானால், மணமகனுக்கு கிருத்திகை முதல் பாதம்; மணமகளுக்கு கிருத்திகை 2,3 அல்லது 4-வது  பாதம் என்று இருந்தால், மணமகனுக்கு மேஷ ராசியாகவும், மணமகளுக்கு ரிஷப ராசியாகவும் இருக்கும். இதில் மேஷ ராசி முதலில் வருகிறது என்பதால், இந்தப் பொருத்தமும் ஏற்புடையதுதான்.

அதேபோல மணமகனுக்கும், மணமகளுக்கும் ஒரே ராசியாக இருந்து, அதில் மணமகனுடைய நட்சத்திரம் முதலில் இருக்குமானால், இதுவும் சரியான பொருத்தமாகத்தான் கொள்ளப்படுகிறது. உதாரணமாக மணமகன், மணமகள் இருவருக்கும் மிதுன ராசி என்று வைத்துக்கொள்வோம். இந்த ராசியில் உள்ள நட்சத்திரங்களில் (மிருக சீரிஷம் 2,3-ம் பாதங்கள், திருவாதிரை மற்றும் புனர்பூசம் 1,2,3-ம் பாதங்கள்) மணமகனுக்கு மிருக சீரிஷமாக இருந்து மணமகளுக்கு திருவாதிரை அல்லது புனர்பூசமாக இருக்குமானால் இந்தப் பொருத்தமும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்.

2. கணப் பொருத்தம்: மூன்றுவகை கணங்கள் ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. 1. தேவ கணம், 2. மனித கணம், 3. ராட்சஸ கணம்.

தேவகணத்தில் அசுவினி, மிருக சீரிஷம், புனர்பூசம், பூசம், ஹஸ்தம், ஸ்வாதி, அனுஷம், திருவோணம், ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் அடங்கும். மனித கணத்தில் பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகியவை அடங்கும். ராட்சஸ கணத்தில் கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம் இவை அடங்கும். இவற்றில் மணமகன் மற்றும் மணப்பெண் இருவரும் ஒரே கணத்தைச் சேர்ந்தவர்களானால், இருவருக்கும் மணம் செய்விக்கலாம். இருவருக்கும் முறையே தேவகணம், மனித கணமாக இருந்தால் இதுவும் கணப்பொருத்தம்தான். மணமகன் ராட்சஸ கணத்தைச் சார்ந்தவராக இருந்து மணமகளும், அதே கணத்தவளாக இருந்தால், மணமகளின் நட்சத்திரத்திலிருந்து மணமகனுடைய நட்சத்திரம் பதினான்காவதாக இருக்குமானால், இதுவும் கணப்பொருத்தம் என்றே கொள்ளலாம். மணமகள் ராட்சஸ கணமாகவும், மணமகன் தேவ கணமாவோ, மனித கணமாகவோ இருத்தல் கூடாது. ஆனால், மணமகள் மனித கணமாகவும், மணமகன் ராட்சஸ கணமாகவும் இருந்தால் இந்தப் பொருத்தம் சரியானதே.

3. மகேந்திரப் பொருத்தம்: பெண் நட்சத்திரம் துவங்கி, ஆண் நட்சத்திரம் முடிய வரும் எண்ணிக்கை 4,7,10,13,16,19,22,25 என்று அமையுமானால் இது மகேந்திரப் பொருத்தம் எனப்படும். இந்தப் பொருத்தத்தின் மூலம் மணமக்களின் தாம்பத்திய வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. அதாவது புத்திர பாக்கியம் நிறைவானதாக இருக்கும்.

4. பெண் தீர்க்கப் பொருத்தம்: மணப்பெண் நட்சத்திரம் துவங்கி, மணமகன் நட்சத்திரம் வரையிலான எண்ணிக்கை ஏழுக்கு மேல் இருக்குமானால் பெண் தீர்க்கப் பொருத்தம் உண்டு என்று கொள்ளலாம். இந்த எண்ணிக்கை 13க்கு மேல் இருப்பின், மிக மிகப் பொருத்தம் என்று கூறுவதுண்டு, ஏழு என்ற எண்ணிக்கை பொருத்தமானது என்றும், அதற்கு மேல் அதிகரிக்கக்கூடும் எண்ணிக்கை அதிகப் பொருத்தமானது என்றும் கொள்ளலாம். இந்தப் பொருத்தத்தால் வளமான குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான சகல சம்பத்தும் கிட்டும்.

5. யோனிப் பொருத்தம்: இல்லற சுகத்துக்கு இந்தப் பொருத்தத்தைப் பார்ப்பது மிகவும் அவசியம் என்பார்கள். இன்னின்ன நட்சத்திரத்துக்கு இன்னின்ன மிருக அம்சம் என்று ஜோதிடத்தில் கணித்திருக்கிறார்கள். எந்த மிருக அம்சத்தோடு எது சேருவது பொருத்தமாயிருக்கும் என்று பார்ப்பதுதான் இந்தப் பொருத்தம். அதாவது, அசுவினி, சதயம் - குதிரை; பரணி, ரேவதி - யானை; கார்த்திகை, பூசம் - ஆடு; ரோகிணி, மிருக சீரிஷம் - பாம்பு; திருவாதிரை, மூலம் - நாய்; புனர்பூசம், ஆயில்யம் - பூனை; மகம், பூரம் - எலி; உத்திரம், உத்திரட்டாதி-பசு; ஹஸ்தம், சுவாதி - எருமை; சித்திரை, விசாகம் - புலி; அனுஷம், கேட்டை - மான்; பூராடம், திருவோணம் - குரங்கு; உத்திராடம் -கீரி; அவிட்டம், பூரட்டாதி - சிங்கம்.

இந்த மிருக அம்சங்களில், குதிரை - எருமை, யானை - சிங்கம், ஆடு- குரங்கு, பாம்பு - எலி, பசு - குதிரை, எலி- பூனை, கீரி - பாம்பு, மான்-நாய் ஆகிய இவை ஒன்றுக்கொன்று பகையாகும். இந்த எதிர் அம்சங்கள் இல்லாத வகையில் பிற மிருக அம்சங்கள் ஒன்றுக்கொன்று இணையுமானால், அது யோனிப் பொருத்தம் என்று சொல்லப்படுகிறது. இல்லற இன்பம் எந்நாளும் நிலைத்திருக்க இந்தப் பொருத்தம் அவசியம்.

6. ராசிப் பொருத்தம்: மணப்பெண் ராசியிலிருந்து மணமகனின் ராசி வரையிலான எண்ணிக்கை ஆறுக்கு மேற்பட்டால் அது ராசிப் பொருத்தம் எனப்படுகிறது. ஒன்பதுக்கு மேற்பட்டாலும் அதி பொருத்தம் என்பார்கள். எண்ணிக்கை எட்டாக இருத்தல் கூடாது. மேஷம்,  மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் இவை பெண் ராசியாக அமையுமானால் ஆறாமிட தோஷம் இல்லை என்று கொள்ளலாம். அதேபோல ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் இவை பெண்ணுக்குரிய ராசியானால் இதற்குப் பன்னிரண்டாவது ராசியாக ஆண் ராசி அமைந்தால், பன்னிரண்டாமிட தோஷம் இல்லை என்று கொள்ளலாம். இந்தப் பொருத்தம் ஆண் வாரிசுக்கு வழி வகுக்கும் என்கிறது சாஸ்திரம்.

7. ராசி அதிபதிப் பொருத்தம்: ஒவ்வொரு ஜாதகருக்கும் அவரவருடைய ராசிக்குரிய அதிபதி யார் என்பதைப் பார்த்துக்கொள்ளுங்கள் 114ம் பக்கத்தில். மணமகன், மணப்பெண் இருவருக்கும் ஒரே அதிபதியாக அமைந்துவிட்டால் அது சரியான பொருத்தம். அல்லது இரு அதிபதிகளும் நட்பானவர்களாக இருந்தால் இதுவும் விசேஷம்தான். பகை அதிபதிகளாக இருத்தல்கூடாது. இந்தப் பொருத்தம் மூலமாக இரு தரப்பிலும் சம்பந்திகள் மிகவும் அன்னியோன்யமாக இருப்பார்கள்.

8. வசியப் பொருத்தம்: ராசிகளில் ஒன்றுக்கொன்று எதெல்லாம் உடன்பாடானவை; எதெல்லாம் அல்லாதவை என்பதை அறிவதன் மூலம் இந்தப் பொருத்தத்தைத் தீர்மானம் செய்யலாம். மேஷத்துக்கு - சிம்மம், விருச்சிகம்; ரிஷபத்துக்கு - கடகம், துலாம்; மிதுனத்துக்கு - கன்னி; கடகத்துக்கு - விருச்சிகம், தனுசு; சிம்மத்திற்கு - துலாம்; கன்னிக்கு - மிதுனம், மீனம்; துலாத்துக்கு - கன்னி, மகரம்; விருச்சிகத்திற்கு - கடகம், கன்னி; தனுசுக்கு - மீனம்; மகரத்துக்கு -  மேஷம், கும்பம்; கும்பத்துக்கு - மேஷம், மீனம்; மீனத்துக்கு -மகரம் என்று வசியப் பொருத்தம் சொல்லப்பட்டிருக்கிறது. பெண் ராசிக்கு ஆண் ராசி மேற்கண்ட அமைப்புப்படி பொருந்துமானால், அதுவே சரியான வசியப் பொருத்தமாகும். மற்றவை பொருத்தமற்றவை. இப்பொருத்தம் அமைவதன் மூலம் தம்பதியர் ஒருவருக்கொருவர் வசியமாகி, எந்த சந்தர்ப்பத்திலும் ஒருவரை மற்றவர் விட்டுக் கொடுக்காமல் பூரண அன்புடன் இனிய வாழ்க்கை நடத்துவார்கள்.

9. ரஜ்ஜுப் பொருத்தம்: அசுவினி, மகம், மூலம் - ஆரோகபாத ரஜ்ஜு, ஆயில்யம், கேட்டை, ரேவதி - அவரோகபாத ரஜ்ஜு; பரணி, பூரம், பூராடம் - ஆரோக தொடை ரஜ்ஜு; பூசம், அனுஷம், உத்திரட்டாதி - அவரோக தொடை ரஜ்ஜு; கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - ஆரோக உதர ரஜ்ஜு, புனர் பூசம், விசாகம், பூரட்டாதி - அவரோக உதர ரஜ்ஜு; ரோகிணி, அஸ்தம், திருவோணம் - ஆரோக கண்ட ரஜ்ஜு; திருவாதிரை, சுவாதி, சதயம் - அவரோக கண்ட ரஜ்ஜு; மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம் - சிரோ ரஜ்ஜு.

இந்த ரஜ்ஜு அமைப்பில் மணமகன், மணப்பெண் இருவரது நட்சத்திரமும் ஆரோகத்திலாவது அவரோகத்திலாவது ஒரே வரிசையில் இருக்குமானால், ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்று கொள்ளலாம். ஒன்று ஆரோகத்திலும், ஒன்று அவரோகத்திலும் வெவ்வெறு வரிசையில் இருந்தாலும் சரி; இரண்டு நட்சத்திரங்களுக்கும் ஒரே ரஜ்ஜுவாக இருந்தாலும் சரி, இருவருக்கும் ரஜ்ஜுப் பொருத்தம் உண்டு என்று சொல்லலாம். மாங்கல்ய பலம் பெருக இந்தப் பொருத்தம் அவசியம்.

10. நாடிப் பொருத்தம்: அசுவினி, திருவாதிரை, புனர்பூசம், உத்திரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி ஆகிய இந்த நட்சத்திரங்கள் தட்சிண பார்சுவ நாடியைச் சேர்ந்தவை. பரணி, மிருக சீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி இவை மத்திய நாடி. கார்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், ஸ்வாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி இவை வர்ம பார்சுவ நாடி. மணப்பெண், மணமகன் இருவரும் ஒரே நாடியைச் சேர்ந்தவர்களானால் நாடிப்பொருத்தம் இருக்கிறது என்று அர்த்தம். இந்தப் பொருத்தமும் மாங்கல்ய பலத்தை அதிகரிக்கச் செய்யும்.
9:நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி  தெரிந்துகொள்வோம்!!

              9:ஸ்ரீ க்ருபா சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
                                     (கி.மு.28-69கி.பி.)

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள் இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

ஸ்ரீ க்ருபா சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஆந்திர நாட்டு அந்தணர் ஆத்மன ஸோமயாஜி என்பவரின் திருமகனார். பெற்றோர் இவருக்கு இட்ட நாமதேயம் கங்கையா. கர்க்கா என்பது குலவழிப்பட்டம். இவருடைய பீடாதிபத்தியத்தை ஸ்ரீ காமகோடி பீடத்தின் பொற்காலமென்றே குறிப்பிடலாம். ஸ்ரீ ஆதிசங்கரர் வகைப்படுத்திய ஆறு சமயங்களும் பரவப் பாடுபட்ட இவர் 'தாந்திரீய' வழிபாட்டு முறைகளை வேரறுத்தார். காலத்தால் மாசு சூழ்ந்த சநாதன தர்ம நெறியை இவர் தூய்மைப்படுத்தி பெருமை சேர்த்தார். ஞான மார்க்கத்தை பக்தி நெறியை மக்களுக்கு எடுத்துரைத்தார். பக்தி மார்க்கத்தாலும் இறைவனை அடைய முடியும் என்று காட்டிய நாயன்மார்கள், ஆழ்வார்களுக்கு முன்னோடி எனத்தக்க இவர் காசி, காஞ்சி, திருவொற்றியூர், திருவானைக்காவல் ஆகிய ஸ்தலங்களில் யந்திரப் பிரதிஷ்டை செய்தார். அரும்பணிகளாற்றிய இவர் கி.பி.69-ல் விபவ ஆண்டு கார்த்திகை மாதம் க்ருஷ்ணபக்ஷம் திருதியை திதியில் விந்திய மலைப்பகுதியில் சித்தியடைந்தார்.
நல்லன யாவும் கிட்டும் நந்தி தரிசனம்!

நந்தி என்றால் ஆனந்தத்தைத் தருபவர் என்று பொருள்.நல்லன யாவும் நந்தி தரிசனத்தால் கிட்டும் என்பது நம்பிக்கை.நலமும் வளமும் பெற சிறப்பான  சில நந்திகளை தரிசிப்போம்.

தஞ்சாவூர் நந்தி:நமக்கு மட்டுமல்ல உலக நாடுகள் பலவற்றிலும் இருப்பவர்களுக்கும் கூட நந்தி என்றால் இந்த தஞ்சை நந்தியின் நினைவுதான் வரும்.அளவில் மட்டுமல்ல அருளிலும் பெரியவர் இவர்.

மதுரை நந்தி:மதுரை புதுமண்டபம் முன்பாக கீழ ஆவணி மூல வீதியில் சுதையால் அமைக்கப்பட்டுள்ள இந்த நந்தி கம்பீரம் மற்றும் அழகுமிக்கது.இது போன்ற பிரமாண்ட நந்திகளை ராமேஸ்வரம் திருநெல்வேலி சுசீந்திரம் திருவிடைமருதூர் போன்ற ஆலயங்களில் நாம் காணலாம். இவை மாக்காளைகள் எனப்படுகின்றன.

திருவண்ணாமலை நந்தி:அண்ணாமலையில் அருள் மணக்க வலம் வரும் அலங்கார நந்தி... அதிகார நந்தி !

சாமுண்டிமலை நந்தி:மைசூரையொட்டிய சாமுண்டிமலை மீது ஏறும்போது மலையின் ஒரு பகுதியில் அமைந்துள்ள இந்த பிரமாண்டமான நந்தி கலையழகுடன் கம்பீரமாக காட்சி தருகிறது.

ஹளேபீடு நந்தி(ஹொய்சளேஸ்வரா ஆலயம்):மாக்கல்லில் வடிக்கப்பட்ட நுணுக்க வேலைப்பாடுகள் உள்ள ஆபரணங்களை உடைய இந்த நந்தியின் கழுத்து மடிப்புகளும் முகத்தில் புடைத்துக் காணப்படும் ரத்த நாளங்களும் சிற்பியின் திறமையை பறைசாற்றுவன.

லேபாட்சி நந்தி:ஆந்திர மாநிலம் லேபாட்சியில் உள்ள இந்த நந்தியே இந்தியாவில் கருங்கல்லில் வடிக்கப்பட்ட மிகப்பெரிய நந்தி என்ற பெருமையைப் பெறுகிறது.

காஞ்சி கைலாசநாதர் ஆலய நந்தி:பழமையும் பெருமையும் வாய்ந்த இந்த ஆலய நுழைவாயிலிலிருந்து சுமார் 100 அடி தள்ளி ஒரு பெரிய மேடையின் மீது முன்பக்கம் இந்த நந்தி அமைக்கப்பட்டுள்ளது.மேலே சாந்துக்கலவை பூசீ வர்ணம் தீட்டப்பட்டது போன்று அமைக்கப்பட்ட இந்த நந்தி காலமாற்றத்தில் மழையிலும் வெயிலிலும் காய்ந்து வண்ணங்கள் மறைந்தாலும் வனப்பு மாறாது காட்சியளிக்கிறது.

வைக்கம் நந்தி:கேரள மாநிலம் வைக்கம் மகாதேவ் ஆலய நந்தி.வெளிப்பிராகார நான்கு மூலைகளில் அமைக்கப்பட்டுள்ள நந்திகளுக்கு அழகிய பித்தளைக் கவசம் சாத்தி மெருகிட்டு வைத்துள்ளனர்.

கங்கைகொண்ட சோழபுரம் நந்தி:தஞ்சைப் பெரிய கோயிலின் தம்பிபோல் காட்சி தரும் சோழீச்வரர் கோயிலில் அமைந்திருக்கும் எழில்மிகு இடபம்.

புனே நகரத்து நந்தி:புனேயில் பாண்டேஸ்வரராக காட்சிதரும் இறைவனின் திருக்கோயிலில் புராதனச் சிறப்போடு புனிதம் நிறைந்ததாக அமைந்திருக்கும் கருவறை நந்தி.

காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலய நந்தி:இந்த ஆலயத்தின் முகப்பில் உள்ள நந்தியும் மண்டபமும் ஒரு சேர மிக அழகு.இந்த நந்தியைப் பார்த்தாலே பரவசம் ஏற்படும்.

நஞ்சனகூடு நந்தி:இந்த பிரமாண்டமான நந்தி கலைநயத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு.நஞ்சன்கூடு ஆலயத்தின் உள்ளே நுழையும்போது நம்மை நந்தி பார்ப்பதுபோல் திசை மாறி அமைந்திருப்பது வித்தியாசமானது.

அதிகார நந்தி: எப்போதும் அமர்ந்தவாறே கம்பீரமாகத் தரிசனமளிக்கும் நந்தி திருவாரூர் தியாகேசர் சன்னதியில் சுந்தரருக்காகப் பரவை நாச்சியாரிடம் தூது செல்ல அவசரமாகப் போகும் ஈசனை ஆச்சரியமுடன் பார்த்தவாறு எழுந்து நின்று கிளம்பும் நிலையில் காட்சியளிக்கிறார். ஏறக்குறைய இதே நிலையில் வடமாநிலம் உ.பி.யில் தென்படுகிறார் என்பதும் விசேஷம்.

பன்னிரு ஜோதிர் லிங்கத் தலங்களுள் ஒன்றான உஜ்ஜயினி மகா காலேஷ்வர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது குண்டேஷ்வர் மகாதேவ் ஆலயம்.கருவறைக்கு முன் காணப்படும் நந்தி தேவர் தொலைவிலிருந்து பார்க்கையில் சாதாரணமாகக் கால்களை மடித்து அமர்ந்திருப்பதாகவே தோன்றும்.ஆனால் சற்று அருகில் சென்று உற்று நோக்கினால் உண்மையில் அவர் எழுந்து நிற்கும் நிலையில் தென்படுவதைக் கண்டு ரசிக்கலாம்!இவரையும் லிங்கத் திருமேனியில் விளங்கும் குண்டேஸ்வரரையும் ஒருசேரத் தரிசித்தால் செய்த பாபங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்பது நம்பிக்கை.சுங்க வம்சத்து அரசர்களால் நிர்மாணிக்கப்பட்டதாகும் இக்கோயில்.இதற்கு அருகில்தான் பகவான் ஸ்ரீகிருஷ்ணரும் அவரது தமையன் பலராமனும் குருகுல வாசம் செய்த சாந்தீபனி மகரிஷியின் ஆசிரமம் உள்ளது.
மிகுந்த ஞானம் தோன்றும்

காந்தாரியின் கனவு

“நீ கபட நாடக வேஷதாரி என மீண்டும் ஒருமுறை நிரூபித்தாய் கண்ணா!  நீ

 பரசுராமனாகப் பிறந்து குடித்த க்ஷத்திரிய இரத்தம் போதவில்லையா?

நீயே உலகின் முழு முதல்வன் எனினும் இப்போரைத் தடுக்கவில்லையே? மாறாக அதைத் திறம்பட நடத்தி என் மக்களை மட்டும் அழித்தாயே? உனக்கு இது தகுமா?

 ஒரு பிள்ளையைப் பெற்றவளே அதை இழந்தால் வரும் சோகம் சொல்லில் அடங்காது. உன் அன்னைக்கும் அது நன்றாகவே தெரியுமல்லவா? நீ பிறக்கும் முன்னமேயே ஆறுபேரைக் கொன்றுவிட்டுப் பிறந்தவனாயிற்றே! உனக்கு எங்கே ஒரு அன்னையின் வலி தெரியப் போகிறது.

இப்போது நான் உனக்குச் சாபமிடுகிறேன்! எப்படி என் சந்ததிகள் என் கண் முன்னே அழியும் கொடுமையை நான் கண்டு நொந்தேனோ அதே போல் நீயும் உன் வருஷ்ணி குலமும் சர்வ நாசம் அடையப்போகிறீர்கள்!

உன் கண் முன்னேயே யாதவர் இரத்தம் அருவி போல் வழிந்தோடப் போகிறது!  இன்றிலிருந்து 36ம் வருடம் அது நடக்கும்! இது என் பதிவ்ரதா சக்தியின் மேல் ஆணை!”

என்று மகாசபையில், அவையோர் அனைவரும் கல்லாய்ச் சமைந்து, நா வறண்டு, பேச்சு மூச்சின்றி அதிர்ச்சியில் உறைந்து போகும் வண்ணம் கிருஷ்ணனைச் சபித்த பின்பு காந்தாரி தன் அந்தப்புரத்துக்குத் திரும்புகிறாள்.

லோகநாயகன், ஜகத்ரக்ஷகன், புருஷோத்தமன் என தானே தன் மனக்கோயிலில் அனுதினமும் வழிபட்ட பெரும்தெய்வத்துக்குத் தானே சாபம் கொடுத்தேனே என்று ஒரு பக்கம் வேதனைப்பட்டாள்.

 எனினும், அவள் கோபம்  அவளுக்கு நியாயமாகவே தோன்றிற்று. கொடும் போர் முடிந்து சிறிது அமைதி திரும்பியபின், இப்போதுதான் சில்லென காற்று வரத் தொடங்கியுள்ளது போலும் என நினைத்துக்கொண்டே தூங்கிப்போனாள்.

திடீரென எதோ சப்தம் கேட்க, தெய்வீக நறுமணம் அறையில் பரவ கண் விழித்தாள்.

 கிருஷ்ணன் கையில் குழல், துளசி மாலை மற்றும் பீதக வாடையுடன் முகத்தில் எப்போதும் இருக்கும் மந்தகாசப் புன்னகையோடு அருகில் நின்றிருந்தான்.

ஒரு நொடியில் கௌரவர் நூற்றுவர் முகங்களும் அவள் மனக்கண்ணில் மின்னலென வந்து போயின. கோபம் மீண்டும் கொப்பளிக்க

“எங்கே வந்தாய்? இன்னும் யார் உயிர் வேண்டும் உனக்கு? வாய்க்கு வாய் நான் உன் பக்தை எனச் சொல்வாயே? இது தான் உன் பக்தரக்ஷண லக்ஷணமா?”

“காந்தாரி இன்னும் கோபம் தீரவில்லையோ?”

“என் நூறு புதல்வர்கள், கோடி வீரர்கள், பல கோடி குதிரை, யானை என இவ்வளவு பேரழிவு தேவையா கிருஷ்ணா? நீயே இதைத் தடுத்திருக்கலாமே? உன்னால் முடியாததா என்ன?

“என் முடியாது? தடுத்திருக்க முடியும். அல்லது அனைத்தையும் என் ஸங்கல்பத்தாலேயே நினைத்த மாத்திரத்தில் அழித்திருக்க முடியும்”

“பிறகு ஏன் செய்யவில்லை?

“காந்தாரி! நீ என் பரம பக்தை. அதோடு சிறந்த பதிவ்ரதையும் கூட. அதனால் உனக்கு பதில் சொல்ல நான் விரும்புகிறேன். கேள்!

 இந்த யுகம் பாரதப்போரோடு முடிகிறது. ஸம்பவாமி யுகே யுகே என்பது படி, புது யுகம் பிறக்க, பழையது அழிய வேண்டும். பாசம் எனும் கருமேகம் உன்னை மட்டுமல்ல உன் கணவனின் கண்களையும் மறைத்தது.

அந்த மாயத்திரை இன்னும் விலகவில்லை. அந்தகம் நிறைந்த இந்த மாளிகையில் ஒரே ஒரு அகல் விளக்கு விதுரன் மட்டுமே. அவன் மட்டுமே என்னை பூரணமாக அறிவான்”

“கிருஷ்ணா! உன்னை நான் இன்று அறிந்து கொண்டேன். நீயும், விதுரனும்  பக்ஷபாதம் கொண்டவர்கள்”

“காந்தாரி! என் பக்தனை நிந்தித்தால் வரும் பாவம் என்னை நிந்திப்பதினும் கொடியது. அதனால் தான் இன்று உன் சாபத்தை நான் ஏற்றுக்கொண்டேன். உன்னுடைய இந்த கேள்விக்கு நான் விடைகூறுமுன்  நீ பதில் சொல்.

முதலில் ஏன் நீ உன் கணவனைச் சபிக்கவில்லை? சக்கரவர்த்தி நினைத்திருந்தால், இந்தப் போரே நிகழ்ந்திருக்காது.

 பாண்டவர்கள் நியாயமாகக் கேட்ட ஆட்சியை ஏன் அவர் கொடுக்க விரும்பவில்லை? ஆரம்பத்திலிருந்து துரியோதனை பாபியாக வளரவிட்டதே அவரது கண்மூடித்தனமான பிள்ளைப்பாசம் அல்லவா?

நீ பதிவ்ரதை என்பது உன் கணவனுக்கு! ராஜமாதாவாக இந்த நாட்டு மக்களின் நலனை நீ ஒரு கணம் எண்ணிப்பார்த்திருப்பாயா?

பிறகு, பீஷ்ம, கிருப, துரோணாதிகளை ஏன் நீ சபிக்கவில்லை? தன் சஹோதரர்களின்  தர்ம பத்தினியையே பல்லாயிரம் பேர் முன்னிலையில் துரியோதனனும், துச்சாதனனும் மானபங்கப்படுத்திய பின்பும் மௌனம் சாதித்தனரே?

 மேலும், விபீஷணன் போல விதுரன் மட்டுமல்லவா மனசாட்சிக்குப் பயந்தான்? மற்றோர் எல்லாரும் செஞ்சோற்றுக்கடன் என்ற போர்வையில் துரியனுக்காக போரும் புரிந்தனரே? பெரியவர்களைச் சபிக்க முடியாது என்ற எண்ணமோ?

உன் மகன்?  தன் சகோதர்களையே  அடிமைகளாக்கி, அவமானப்படுத்தி அவர்களின் மனைவியையே “மடியில் வந்து அமர்வாய்” என விளித்து மாபாதகம் செய்தானே?

மேலும்,  “ஜ்யேஷ்ட ப்ராதா பித்ரு சமான:” என்று உனக்குத் தெரியாதா? தன் 99 சகோதரர்களுக்குத் தந்தையாக இருக்க வேண்டியவன் தன் சுயநலத்திற்காக அவர்களைப் பலி கொடுத்தானே? அவனை ஏன் சபிக்கவில்லை?

 பிள்ளைப்பாசம் அறிவுக்கண்ணை மறைத்ததோ? நீ இப்போது கேட்கும் நியாயம் அன்று எங்கே போனது? அவனைக் கேட்டாயா?

ஏன் சகுனியை சபிக்கவில்லை? அவன்தான் உண்மையில் உடன்பிறந்தவள் குடும்பத்தை கூற்றின் மறுஉருவம் போல் சர்வ நாசமாக்கியவன்.

“கிருஷ்ணா! சகுனி என் சகோதரன். மேலும், நீ மேற்கூறிய அனைவரும் என் உற்றார் உறவினர் ஆச்சாரியர்கள் அல்லவா?

“பார்த்தாயா காந்தாரி! அறியாமை உன் புத்தியை மட்டுமல்ல பக்தியையும் மறைக்கிறது. அப்போது நான் யார்? உனக்கு   சொந்தமில்லையா?  பாண்டவர் என்னை சொந்தமெனக் கொண்டனர். அதனால் பிழைத்தனர்.

“கபடனே! குந்தி உன் சொந்த அத்தை. அதனால் தான் ஒருதலை நீதியாக பாண்டவர் பக்கம் நின்று என் குலத்தை வேரோடு சாய்த்துவிட்டாய்”

“பேதையே! அதுவல்ல நிஜம். உலகில் நல்லோரெல்லாம் என் சொந்தம். நான் அவர்களுக்குப் பூரணமாய் சொந்தம். அவர் மனமே நான் நித்யவாசம் செய்யும் வீடு.

“சரி அதைவிடு காந்தாரி! பாண்டவர் அழிந்து துரியோதனன் பட்டம் கொண்டிருந்தால் உனக்கு மகிழ்ச்சி தானே ஏற்பட்டிருக்கும்? அது சுயநலம் அல்லவா? அதற்கு என்ன செய்தால் தகுமோ அதை துரியோதனாதிகளைச் செய்ய விட்டாயே?

“கிருஷ்ணா! ஒரு தாய் தன் மக்கள் நன்றாய் இருக்க வேண்டும் என நினைப்பது தவறா?”

“அப்படியானால் நான் இந்த உலகுக்கெல்லாம் தாயன்றோ! எனக்கும் சுயநலம் இருக்கக் கூடாதா? உலகம் முழுமையும் என் சொத்து. அதை நல்விதம் ஆத்தலும், காத்தலும் என் பொறுப்பு. அதையே செய்தேன்”.

என் அவதார நோக்கை நிறைவேற்ற இந்தப்போர் ஒரு சாக்கே. ஆனால் ஏன் அதை தனி ஒருவனாக நான் செய்யவில்லை? ஏன்  என எண்ணிப்பார்.

“என் 100 பிள்ளைகளையும் கொன்றுவிட்டாயே? இனி நான் எண்ணிப்பார்க்க என்ன இருக்கிறது?

“அப்படியில்லை. நான் கர்மேந்த்ரியங்களுக்கு அப்பாற்பட்டவன் எனினும், சில விதிமுறைகளை நான் பின்பற்றுகிறேன்.

கர்மா – அவரவர் முன்வினைப் பயன்கள்
பகுத்தறிவு – நல்லவை, தீயவைகளை அறிந்து கொள்ளும் திறன்.

இயற்கையின் கட்டுப்பாட்டிலுள்ள  இவ்விரண்டிலும் நான் தலையிடுவதில்லை”

மேலும், இராமனாக ஏன் காடுகளில் திரிந்து வானரர் உதவியோடு இராவணனை அழிக்க நான் சிரமப்பட்டிருக்க வேண்டுமென எண்ணிப்பார். நான் உயர்வற உயர் நலம் உடையவன். அதை யாருக்கும் விளம்பரப்படுத்த அவசியமில்லாதவன். ஆனால் என் பக்தர்கள்? பக்தர்களுக்கு ஏற்றம் அளித்தல் என் கடமை.

போரில்லாவிட்டால் அபிமன்யு எனும் வீரன் சரித்திரத்தில் எவ்வாறு இடம் பெற்றிருப்பான்? கர்ணனின் கொடைத்திறனும், செஞ்சோற்றுக்கடன் தீர்த்த தீரமும் எப்படி விளங்கியிருக்கும்? பீஷ்மனின் வைராக்யம் எப்படி மற்றவர்க்கு ஒரு உதாரணமாக அமைந்திருக்கும்?

மறுபுறம், அஸ்வத்தாமன், ஜயத்ரதன், அவ்வளவு ஏன்? உன் சகோதரன் போன்ற கீழ்மக்களிடம் இருந்து பிறருக்குப் பாடம் புகட்டவேண்டியது என் கடமையல்லவா?

“எனினும், எங்கள் பக்கம் நீ இருக்கவில்லையே கண்ணா?”

“அதற்கும் ஒரு வாய்ப்பு வந்ததே காந்தாரி. உன் மகன் தான் நிராயுதபாணியான நான் வேண்டாம் என்று என் சேனைகளை எடுத்துக்கொண்டான். மேலும் விதுரனின் வடிவில், அவன்  திருவாக்கில் நான் உங்கள் கூடவே இருந்தேனே? நல்லோர் உருவில் என்றும் நான் இருப்பேன். என்னை அறிய நீங்கள் முயலவில்லை. உன் கனவில் இன்று நான் வர வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒரு கணம் நினைப்பவர்க்கே ஓடி வருபவன் நான். நீ என் பக்தை.

“கிருஷ்ணா! உன்னையே சபித்த என்மேல் இவ்வளவு உனக்கு அன்பும் கருணையுமா உள்ளன?”

“காந்தாரி! உன் சாபத்தை நான் ஏற்றுக்கொண்டு உன்னை பெரும் பாவத்திலிருந்து காத்தருளினேன்”

“பெரும் பாவமா? அது என்ன கிருஷ்ணா?”

“ஒருவேளை நீ பாண்டவர் யாரையாவது சபித்திருந்தால், பாகவத அபசாரம் எனும் படுகுழியில் வீழ்ந்திருப்பாய். என்னை நிந்தித்தலிலும் அது மிக மிகக்கொடுமையான பாவம்”.

“கிருஷ்ணா! ஜனார்தனா! என் அறிவுக்கண்களைத் திறந்தாய். ஆனால் என் சக்திக்கு ஏற்ற உன்னைச் சரணடையும் ஒரு உபாயம் சொல்வாயா?”

“கலங்காதே! பதினெட்டு அத்தியாயங்களாய் அர்ச்சுனனுக்கு உரைத்ததை ஈரடியில் உனக்குச் சொல்கிறேன்.

அநந்யாஸ் சிந்தயந்தோ மாம் யே ஜநா: பர்யுபாஸதே |
தேஷாம் நித்யாபியுக்தாநாம் யோக்க்ஷேமம் வஹாம் யஹம் ||

“நீயென்றால் அது நானே. உனக்குள் இருந்து உன்னைப் பேசவைத்தேன். கர்மாவுக்கு பேதம் இல்லை. நான் உட்பட. உன் சாபம் பலிக்கும். என் பழைய பகைவன் வாலியே என்னை அழிக்க வேடனாக வந்து வஞ்சம் தீர்ககப்போகிறான். நான் அழிவற்றவன். அவதாரம் மறையலாம். ஆனால்,

பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம் |
தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே ||

என்ற என் வாக்கிற்கேற்ப நான் என் எண்ணப்படி மீண்டும் மீண்டும் பிறப்பேன்”

“கிருஷ்ணா! அறிவுச்சுடர் ஏற்றியவனே! போதும் இந்த வாழ்வு! இனி நான் என் கணவருடன் அனைத்தையும் துறந்து வடக்கிருந்து உன் நிழல் தேடி வந்து சேர்வேன்”.

இவ்வாறு கூறியதும் சட்டென்று நினைவு வந்தவளாய், எழுந்து அமர்ந்தாள். கனவு என்றாலும், அதன் உட்பொருளை உணர்ந்து அவள் மனம் தெளிந்தது. திருதராஷ்ட்ரனைக் கண்டு உடனே கானகம் ஏக முடிவு செய்து மெல்ல அவன் அறை நோக்கி நடந்தாள்.

கரிய உருவம் ஒன்று பின்னால் சிரித்தபடி நின்றது.