புதன், 11 செப்டம்பர், 2019

புதுக்கோட்டையை சேர்ந்த ஒரு பெண் பெரியவாளிடம் அப்படியொரு பக்தி கொண்டிருந்தாள். நல்ல வஸதியான குடும்பத்தை சேர்ந்தவள். பார்க்க மிகவும் குட்டையாக இருப்பாள். பெரியவாளை தர்ஶனம் செய்ய வரும் போதெல்லாம் ஏலக்காய் மாலை க்ரீடம் என்று பார்த்து பார்த்து ஆசையாசையாய் பண்ணிக் கொண்டு வருவாள். பாவம் அந்தப் பெண்ணுக்கு தகுந்த வரன் மட்டும் கிடைக்கவில்லை. அடிக்கடி வருவதால் பாரிஷதர்கள் எல்லாருக்குமே அவளைத் தெரியும். ஒவ்வொரு முறையும் சில ஸிஷ்யர்கள் அவளுக்காக பெரியவாளிடம் பரிந்தனர். பாவம் அந்தப் பொண்ணு பெரியவா அனுக்ரஹம் பண்ணணும். நல்ல எடத்ல கல்யாணம் ஆகணும் பெரியவா புன்னகைத்தார். பிறகு அந்தப் பெண்ணிடம் "ஒனக்கு எப்டியாப்பட்ட ஆம்படையான் வேணும்?" எனக்கு பெரியவாகிட்ட பக்தியா இருக்கறவரா இருக்கணும். ஏழையா இருந்தாலும் சரிதான் குடுமி வெச்சிண்டிருந்தாலும் சரிதான். அழகா இருக்கணும்னு கூட அவஸ்யமில்லே பெரியவா"

கொஞ்ச நாள் கழித்து காமாக்ஷி கோவிலில் எல்லாருக்கும் தர்பனம் குடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் பெண் அங்கு வந்தாள். வழக்கம் போல் அந்தப் பாரிஷதரும் தன் ஸிபாரிசு ப்ரார்த்தனையை செய்தார். பெரியவா சிரித்துக் கொண்டே அவரிடம் சரி. நா அனுக்ரஹம் பண்றேன். நீ இப்போவே எதாவுது ஒரு பையனை அழைச்சிண்டு வா. கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றேன்..."பாரிஷதர் பெரியவாளை பெரியவாளின் அளப்பறிய மஹா பக்தியை அறிந்தவர். எனவே கொஞ்சங்கூட தயங்கவில்லை எப்படி இப்போவே அழைச்சிண்டு வரமுடியும்? என்று திகைக்கவில்லை. கீழே இறங்கி அங்கே இங்கே தேடிக்கொண்டிருந்தார்.

யாரை? அந்த பெண்ணுக்கான வரனை.

மஹா ஆச்சர்யம் பெரியவாளை தரிசனம் பண்ண கும்பகோணத்தை சேர்ந்த ஒரு ஆடிட்டர் பையன் நின்று கொண்டிருந்தான். பாரிஷதர் அவனிடம் சென்று" கொஞ்சம் எங்கூட வாங்கோ. பெரியவாகிட்ட கூட்டிண்டு போறேன்" என்றதும் அவனும் வந்தான். "பெரியவா... இதோ ஒரு பையன் வந்திருக்கான் "பெரியவா சிரித்துக் கொண்டே அந்தப் பையனிடம் அந்தப் பெண்ணைக் காட்டி" இந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ" என்றார்.

அந்தப் பையனும் பெரியவாளிடம் கொண்ட பக்தியில் சளைத்தவனில்லை என்பதால் பெரியவா உத்தரவுப்படி இந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கறேன்... ஆனா கும்பகோணத்ல எங்கம்மா அப்பாகிட்ட சொல்லிட்டு அவாளோட ஸம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கறேன்" என்றான்.

"பேஷ் அம்மா, அப்பா ஆஸிர்வாதம் ரொம்ப முக்யம். நீ ஊருக்குப் போயி அவாட்ட நான் சொன்னேன்னு சொல்லு. இவளோட அம்மா அப்பாவை விட்டு மிச்ச விஷயங்களை ஏற்பாடு பண்ணச் சொல்றேன்" பாரிஷதர் மனம் குளிர்ந்தார். பையனும் பொண்ணும் ஸந்தோஷமாக நமஸ்காரம் பண்ணினார்கள் தனித்தனியாக.

"க்ஷேமமா இருங்கோ"

அடுத்த சில வாரங்களிலேயே தம்பதியாய் சேர்ந்து பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்யும்படியாக அந்தப் பெண்ணுக்கும் ஆடிட்டர் பையனுக்கும் புதுக்கோட்டையில் ஜாம்ஜாமென்று பெரியவா அனுக்ரஹத்தோடு கல்யாணம் நடந்தது.
குலதெய்வத்தின் சிறப்பை பெரியவர் உணரச்செய்த சம்பவம் ஒன்று உண்டு.
கட்டுரை இந்திரா சௌந்தரராஜன் (தகவல் உதவி தீபம் இதழ் பால ஹனுமான்)

பெரியவர் ஊர் ஊராகச் சென்று சாதுர்மாஸ்ய விரதம் இருந்து வந்தார் ஒரு நாள்   ஒரு கிராமத்தில் அவர் தங்கியிருந்த போது ஒரு விவசாயி பெரியவரை மிகவும் பிரயாசைப்பட்டு வந்து சந்தித்தார். அவரிடம் துளியும் உற்சாகமில்லை. முகமும் இருளடைந்து போயிருந்தது. வாயைத் திறந்து தன் துன்பங்களைக் கூற அவசியமே இல்லாதபடி பார்த்த மாத்திரத்தில் அவரின் துன்பம் பெரியவருக்கு விளங்கி விட்டது. இருந்தும் அந்த விவசாயி சாமி… ஏண்டா உயிரோட இருக்கோம்னு இருக்கு. பேசாம குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலா மான்னு கூட தோணுது. ஒரு மனுஷனுக்கு வாழ்க்கைல போராட்டம் இருக்கும். ஆனா என் வாழ்க்கையில் போராட்டமே வாழ்க்கையா இருக்கு என்று துயரத்தைச் சொல்லி அழுதார்.

பெரியவர் அவரிடம் குலதெய்வத்துக்கு ஒழுங்கா பூஜை செய்யறியா? என்று கேட்டார். குலதெய்வமா… அப்படின்னா? திருப்பிக் கேட்டார் அவர். சரிதான்… உங்க குலதெய்வம் எதுன்னே தெரியாதா? ஆமாம் சாமி… வியாபார விஷயமா எங்க முன்னோர்கள் பர்மா போயிட்டாங்க. பல காலம் அங்க இருந்துட்டு திரும்பி வந்த குடும்பம் எங்க குடும்பம். என் பாட்டன்ல ஒருத்தருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால அவர் பிள்ளைகளும் அவரைப் பார்த்து அப்படியே வந்துட்டாங்க. நாங்கள்ளாம் அந்த வழில வந்தவங்கதான் என்றார்.

உன் முன்னோர்கள் யாராவது இப்ப உயிரோட இருக்காங்களா?

ஒருத்தர் கிராமத்துல இருக்கார். என் அப்பா வழி பாட்டனார் அவர்.

அவர்கிட்ட போய் உங்க குலதெய்வத்தைப் பத்தி கொஞ்சம் கேட்டுண்டு வா.

ஏன் சாமி… அந்த சாமி எதுன்னு தெரிஞ்சு கும்பிட்டா தான் என் பிரச்னை தீருமா?

அப்படித்தான் வெச்சுக்கோயேன்…

என்ன சாமி நீங்க… ஊர்ல எவ்வளவோ கோயில் இருக்கு. அங்க எல்லாமும் சாமிங்க தான் இருக்கு. அப்ப அதுக்கெல்லாம் சக்தி இல்லையா?

நான் அப்படிச் சொல்லவே இல்லையே!

அப்ப இந்த சாமில ஒண்ண கும்பிடச் சொல்லாம குலதெய்வத்த தெரிஞ்சுக்கிட்டு வரச் சொல்றீங்களே!

காரணமாத்தான் சொல்றேன் ஓட்டைப் பாத்திரத்துல எவ்வளவு தண்ணி பிடிச்சாலும் நிக்காது. நீ என்ன மாதிரி எதுவும் வேண்டாம்கற சன்னியாசி இல்லை. வாழ்வாங்கு வாழ விரும்பற குடும்பம் தான். எனக்கு பாத்திரமே கூட தேவையில்லை. ஆனா உனக்கு பாத்திரம் தான் பிரதான தேவை. பாத்திரம் இருந்தாத் தானே எதையும் அதுல போட்டு வெக்க முடியும்? அப்படிப்பட்ட பாத்திரம் ஓட்டையா இருந்தா அதுல எதைப் போட்டாலும் அந்த ஓட்டை வழியா வெளிய போகுமா போகாதா?”

அப்ப குலதெய்வம் தான் பாத்திரமா… அது தெரியாததால ஓட்டைப் பாத்திரமாயிடிச்சுங்கறீங்களா?

நீ கேள்வி கேட்காம உன் குலதெய்வம் எதுங்கறத தெரிஞ்சு அந்தக் குலதெய்வத்தைத் தேடிப்போய் சாஷ்டாங்கமா உடம்பு தரைலபட நமஸ்காரம் பண்ணிட்டு வா. உனக்கு அப்புறமா விளக்கமா சொல்றேன் என்று அவரை அனுப்பி வைத்தார்.

அவரும் ஒரு பத்து நாள் கழித்து சாமி! நீங்க சொன்னதைச் செய்துட்டேன். எங்க குலதெய்வம் பேச்சாயிங்கற ஒரு அம்மன். அதோட கோயில் ஒரு மலை அடிவாரத்துல இடிஞ்சு போய் கிடந்துச்சு. யாருமே போகாம விட்டதால கோயிலை புதர் மூடிடுச்சு. நானும் என் மக்களும் போய் புதரை எல்லாம் வெட்டி எறிஞ்சோம். அங்க ஒரு நடு கல்தான் பேச்சாயி! ஏதோ எங்களால முடிஞ்ச அளவுக்கு அது மேல பால ஊத்தி அபிஷேகம் செஞ்சு கற்பூரம் காட்டி கும்பிட்டுட்டு வந்தேன் என்றார்.

நல்லது… அந்தக் கோயிலை நல்ல படியா எடுத்துக்கட்டு தினசரி அங்க விளக்கு எரியும் படியா பார்த்துக்கோ! உன் கஷ்டங்கள் தானா நீங்கிவிடும். பேச்சாயி பூவும் பொட்டுமா ஜொலிச்சா உன் குடும்பமும் ஜொலிக்கும் என்றார் பெரியவா!

சாமி! நிறைய விளக்கமெல்லாம் சொல்றதா சொன்னீங்களே… எதுவுமே சொல்லலியே?”

அடுத்த வருஷம் இதே தேதிக்கு வா! அப்ப சொல்றேன். நான் சொன்னதை மறந்துடாதே… பேச்சாயியை விட்டுடாதே!”

அவரும் அவ்வாறே செய்தார். ஒரு வருடமும் ஓடியது. அவரும் பெரியவரைக் காண திரும்ப வந்தார். இந்த முறை அவரிடம் ஒரு செல்வச் செழிப்பு தெரிந்தது. பெரியவரை ஒன்றும் சும்மா பார்க்க வரவில்லை. தட்டு நிறைய பூ, பழம் இவற்றோடு கொஞ்சம் பணம் என்று தான் முன்னால் வந்து நின்றார். பெரியவரும் ஏறிட்டார்.

சாமி… நான் இப்ப நல்லா இருக்கேன். பேச்சாயி புண்ணியத்துல பிள்ளைகளும் நல்லா இருக்காங்க. இதுக்கு வழிகாட்டின பெரியசாமி நீங்கதான்! ஆனா எனக்கு விளக்கத்த மட்டும் இன்னும் தராமலே இருக்கீங்க… இந்த அதிசயம் எப்படி நடந்தது? என்று திரும்ப அவர் கேட்டார். பெரியவரும் திருவாய் மலரத் தொடங்கினார்.

அது…?

ஒரு வருடம் கழித்து திரும்ப வந்த பர்மாக்காரரிடம் ‘குலதெய்வம்’ என்பது குறித்து பெரியவா சொன்னது மிகவும் கவனமாய் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம் தான் குலதெய்வமாகும். முன்னோர்கள் என்றால் நமக்கு முன் பிறந்த எல்லோருமே முன்னோர்கள் தான். ஆனால் இங்கே முன்னோர்கள் என்றால் நாம் நம் தந்தை வழி பாட்டன் பாட்டிமார்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தந்தை வழி பாட்டன்மார் வரிசையில் மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். அதுதான் ‘கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.

பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழிப் பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கைத் துணையாகக் கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால் ரிஷி பரம்பரையானது சங்கிலிக் கண்ணி போல அறுபடாமல் ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.

அடுத்து இவர்கள் அவ்வளவு பேருக்குமே நட்சத்திரம் வேறாக உடலமைப்பு வேறாக குணப்பாடுகள் வேறாகவும் இருக்கும். அது தான் இயற்கையும்கூட! ஆனால் கோத்திர வழி மாறாத படி இவர்கள் நம் குலதெய்வம் என்னும் தெய்வ சான்னித்தியத்தில் கைகூப்பி நின்றிருப்பார்கள். தலைமுடி கொடுத்திருப்பார்கள். காது குத்துவது போன்ற வழிவழிச் செயல்பாடுகளும் நடந்துமிருக்கும்.

இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன. அந்தக் கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம், போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதமில்லை. ஆனால் குலதெய்வக் கோயிலுக்கு நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு வணங்க வைக்கவும் படுகிறோம். இதன் படி பார்த்தால் குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம். இந்த வரிசைத் தொடர்பை வேறு எங்காவது எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?”

பெரியவா சொல்லச் சொல்ல பர்மாக்காரரிடம் பரவசம்!

அது மட்டுமல்ல ஒரு மனிதனின் பிறப்புக்குப் பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்கக்கூட தெரியாமல் அதிகபட்சம் இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம் வாழ்க்கைப் போக்கு உள்ளது?

ஒரு குடும்பத்தைப் பொருத்தவரையில் அந்த இறைசக்தி குலதெய்வமாக அவர்களுக்கான ஒரு பெயரில் வெளிப்படுகிறது. இப்படிச் சொல்வது கூட தவறு. வெளிப்பட வழிவகை செய்யப்பட்டது! அதுவும் யாரால்? நம் முன்னோர்களால்! அவர்கள் யார்? நம்முடைய தொடக்கங்கள்… நாம் யார்? அந்தத் தொடக்கத்தின் தொடர்ச்சி! மொத்தத்தில் நாம் வேறு அவர்கள் வேறு இல்லை.

இந்த வழிவழிப் போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாகப் புண்ணியத்தைக் கட்டியிருக்கலாம். இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த இறைசக்தியைத் தொழும் போது அவர்களும் பித்ருக்களாக விண்ணில் இருந்து பார்க்கிறார்கள். நாமும் ஆசீர்வதிக்கப்படுகிறோம். இது எத்தனை தூரப் பார்வையோடு வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்?

பெரியவா விளக்கி முடிக்க வந்திருந்த கூட்டம் சிலிர்த்துப் போனது. இந்தக் குலதெய்வ வழிபாட்டில் மிகப்பெரிய நல்ல சமாச்சாரம் ஒன்றும் அடங்கியுள்ளது. சந்தர்ப்ப சூழல்களால் அல்லது பூர்வ கர்மத்தால் அதுவுமல்லாது பல்வேறு காரணங்களால் ஒருவருக்கு பக்தி உணர்வு இல்லாமல் போகிறது என்று வையுங்கள். அதாவது கண்ணுக்குப் புலப்படாத இந்தக் கடவுளை நாம் நம்பத் தயாரில்லை.

நான் ஒன்றும் முட்டாளில்லை என்று அவர் வீராப்பா பேசி நாத்திகத்தில் நம்பிக்கை ஏற்பட்டு அதிலேயே அவர் போகும் நிலை வந்தாலும் பெரிதாய் தோஷமில்லை. ஏனென்றால் அவர் இவ்வாறு ஒரு நாத்திக நிலைப்பாடு கொள்ளும் முன்பே இந்தப் பரம்பரை வரிசையில் பெற்றோர்களால் வணங்க வைக்கப்பட்டு ஆசீர்வதிக்கவும் பட்டிருப்பதால் அவர் ஒரு நாள் நிச்சயம் மனம் மாறி அருள் தொடர்புக்கு ஆட்படுவார் என்பது தான் இதிலுள்ள மிகச்சிறந்த ஒரு விஷயமாகும்.

இப்படி நம்பிக்கையற்றுப் போனவர் தன் பிள்ளைகளை அழைத்துவர மாட்டாரே! அவர்கள் இதனால் இந்தப் பரம்பரை தொடர்புக்கு ஆட்படாமல் போய் விடுவார்களே என்று ஒரு கேள்வி எழலாம். பெரும்பாலும் ஒரு வழியில் ஒரே கோத்திரத்தில் திருமணங்கள் புரிந்து கொள்ளாமல் முன்னோர் காட்டிய வழியில் போகும் பட்சத்தில் வாழ்வில் நமக்கு பெரிய கஷ்டங்கள் வருவது இல்லை என்பது தான் இம்மட்டில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். உடம்புக்கு உணவுப் பொருளால் சக்தி ஏற்படுவது போல் மனதுக்கு இறை அருளால் சக்தி ஏற்படுகிறது.

ஒரு குலதெய்வத்தின் பின்னால் இப்படியான பிரத்யேக சிறப்புகள் நிறையவே உள்ளது. குல தெய்வத்தைப் பக்தியோடு கொண்டாடும் போது பெரிய தோஷங்களுக்கு இடமில்லாமல் போய் நம் வாழ்வும் சிறப்பாகிறது. பர்மாக்காரர் வரையிலும் அதுதான் நிகழ்ந்தது.

எனக்கும் இந்தக் குலதெய்வ விஷயம் மனசுக்குள் பெரும் உற்சாகத்தைத் தந்தது. நான் எங்கள் குலதெய்வக் கோயிலுக்குப் போன போது என் பார்வையே மாறிப்போனது. அந்தக் கோயிலில் உள்ள ஒவ்வொரு தூண்களையும் தொடும் போது என் தாத்தன் தொட்ட தூண்.. என் தாத்தன் நின்று மூச்சுவிட்ட இடம்.. என் முப்பாட்டன் அதற்கும் முற்பட்ட பாட்டன் நடந்து திரிந்த தரைப் பரப்பு.. அவர்களைப் பார்த்த பெருமாள் என்னையும் பார்க்கிறார் என்பதா? இல்லை அவர்கள் பார்த்த பெருமாளை நான் பார்க்கிறேன் என்பதா?

ஒன்று உறுதி அந்தப் பெருமாளை வணங்கிய வம்சம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதுவே எத்தனை பெரிய அனுக்ரகம்! இந்தக் குலதெய்வ விளக்கமும் இதன் பின்புலமும் எனக்குள் நம் முன்னோர்கள் மேல் பெரும் மரியாதையை ஏற்படுத்திற்று.
பொங்கல் பண்டிகையும் சூரிய வழிபாடும்!

சூரிய வழிபாட்டிற்குரிய பொங்கல்

பொங்கல் விழாவே ஒரு சூரிய வழிபாட்டு விழாவாகும். ஆகாயத்தில் காற்றும், காற்றில் தீயும் உருவாகின்றன. தீயினால் புதுப்பானையில் (நிலம்) உள்ள அரிசி (நிலத்தின் பயன்) நீரில் வெந்து பொங்கலாகிறது. பொங்கலைப் படைத்து சூரியனை வழிபடுகின்றவர்கள், ஐம்பெரும் பூதங்களையே வழிபடுகின்றனர் என்பது ஐதீகம்.பாரதத்தில் சூரிய வழிபாடு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. ரிக்வேத காலத்துக்கும் முன்பிருந்தே இந்த வழிபாடு இருந்து வருகிறது. அசையும் பொருள்கள் அனைத்திற்கும் சூரியனே உயிர் தருகிறான் என்கின்றன, வேதங்கள் !இந்த வழிபாடு எப்படி ஏற்பட்டது என்பது பற்றி நிச்சயமாக ஒன்றும் கூறமுடியவில்லை கிமு 2000 - க்கு முன்பே சூரியன், அக்னி, வருணன் ஆகியோரை இந்தியர்கள் வழிபட்டு வந்துள்ளனர்.நம்நாடு சூரிய வெப்பம் மிகுந்த நாடு. ஆகவே, அவன் அருளைப் பெற அவனை மக்கள் வழிபட முற்பட்டதில் வியப்பில்லை. பல நோய்களை சூரிய கிரணங்கள் குணப்படுத்துவதாக அதர்வண வேதம் குறிப்பிடுகிறது. உபநிஷத்துக்களும் புராண இதிகாசங்களும் சூரியனின் புகழைப் பேசுகின்றன. பிற தெய்வங்களைப் போல் அல்லாமல் சூரியன் கண்ணெதிரே தோன்றும் தெய்வமாக விளங்குகிறான்.

சூரிய வழிபாட்டினால் தோல் நோய், கண் நோய்கள் குணமாகிவிடும் என்று மக்கள் நம்பினார்கள். சூரியனுக்காகக் கட்டிய புராதனக் கோயிலில் ஒன்று ஒரிஸ்ஸாவிலுள்ள கொனார்க் கோயில். கலிங்கத்தை ஆண்ட நரசிங்கதேவன் (கி.பி 1238--64) இதைக் கட்டினான்.இந்த ஆலயத்தில் உள்ள சிற்பங்கள் உலகில் வேறு எங்கும் காண கிடைக்காத வேலைப்பாடு மிக்கவை.தமிழ்நாட்டில் கும்பகோணத்தை அடுத்துள்ள சூரியனார் கோயில் என்ற இடத்தில் சூரியனுக்கென்று தனி ஆலயமே இருக்கிறது. சூரியனைப் பரம்பொருளாக ஆதித்திய ஹிருதயம் கூறுகிறது. மார்க்கண்டேய புராணம், பவிஷ்ய புராணம் முதலியவை சூரிய வழிபாட்டை விவரிக்கின்றன. மந்திரங்களில் மிக சக்தி வாய்ந்ததாகக் கருதப்படும் காயத்ரி சூரியனுக்கு உகந்த மந்திரம். சூரிய நமஸ்காரம் என்பது உடற்பயிற்சி, யோகப் பயிற்சியுடன் கூடிய வழிபாடு. இன்று இது மேனாட்டிலும் பரவியுள்ளது. சூரிய வழிபாடு சௌரமதம் என்ற பெயரில் ஷண்மதங்களுள் ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. சௌரமதம் ஒரு காலத்தில் உலகளாவிய மதமாகவும் பரவியிருக்கிறது.  தை மாதம் முதல் நாள் - சூரியன் மகர ராசிக்குள் (உத்தராயணம்) பிரவேசிக்கும் நாள் பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்பட்டு சூரிய வழிபாடு நடத்துகிறார்கள். கீதையில் கண்ணபிரான் ஜ்யோதிஷம் ரவிர் சும் சுமான் என்று கூறி ஜ்யோதிகளில் தாம் சூரியனாக இருப்பதாகத் தெரிவிக்கிறார்.அந்தக் காலத்தில் ரிஷிகள் சூரியனின் கனிந்த ஒளியிலே நாள் தவறாமல் திளைத்து வந்தார்கள். சூரிய கிரணங்களை ஜீவத்திறல் என்றும் ஆயுளை வளர்க்கும் அன்னம் என்றும் போற்றினார்கள். அவர்கள் உடல், உள்ளம், உயிரில் தேவசக்தியும் தெய்வ ஒளியும் துள்ளின. சுற்றும் உலகுக்கே சூத்திரமாக விளங்கும் சூரியனின் பெருமை இன்று சுருங்கிப்போய்விட்டது. என்றாலும், பொங்கல் திருநாளில் மட்டும் ஆதித்தனைப் போற்றும் பழக்கம் இன்றும் தொடர்கிறது.

*பொங்கல் தத்துவம்

பொங்கல் திருவிழா ஏன் கொண்டாடப்படுகிறது என்றால், பொங்கலுக்கு முதல் நாளான போகிப்பண்டிகையின் போது நம்மிடமுள்ள கெட்ட குணங்கம் போகின்றன.பொங்கல்  பண்டிகையன்று நம்மிடம் நல்ல குணங்கள் பொங்கிப் பெருக ஆரம்பிக்கின்றன. மறுநாள் காணும் பொங்கல் எதிர்வரும் (காணும்) காலங்களில் நல்ல எண்ணங்கள் எங்கும் எதிலும் நீடித்து நிற்க இறைவன் அருள்புரிய கொண்டாடப்படுகிறது.

ஆரோக்கியம் தரும் ஆதித்தன்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. உலகில் எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்தாலும் உடல் ஆரோக்கியம் இல்லாவிட்டால் செல்வத்தால் பயனில்லை. சுவரை வைத்துத் தானே சித்திரம் என்றும்கூட சொல்வதுண்டு. அதனால் மனிதவாழ்விற்கு மன, உடல் ஆரோக்கியம் மிகவும் அவசியம். இதற்குரிய தெய்வமாக சூரியன் இருக்கிறார். இவருக்குரிய ஞாயிற்றுக்கிழமையில் செந்தாமரை மலரிட்டு வணங்கினால் ஆரோக்கியம் உண்டாகும். கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்யாதே என்பது சூரியனின் பெருமையை எதிர்மறையாகக் கூறுவதாகும். இப்பழமொழி கண் பெற்ற பயனே சூரியனைக் கண்டு மகிழ்வதற்கு என்று குறிப்பிடுகிறது.

அழகெல்லாம் முருகனே!

தமிழ்க்கடவுள் என்று முருகப்பெருமானைப் போற்றுகிறோம். முருகன் என்ற சொல்லுக்கு நேரான பொருள்அழகு என்பதாகும். நீலக்கடல் பரப்பில் இளஞ்சூரியன் தோன்றுவதை வழிபட்டு பரவசம் கண்டவர்கள் நம் முன்னோர். இளஞ்சூரியனைப் பார்க்க செக்கச்செவேல் என்றிருக்கும். கடல் நீரோ நீலவண்ணம் கொண்டிருக்கும். இந்த அழகுக்காட்சியைக் கண்டமக்கள், முருகு என்று சொல்லி மகிழ்ந்தனர். முருகப்பெருமானின் வாகனம் மயில். மயில் நீலநிறத்துடன் இருக்கும். முருகனையும் சிவந்தவன் என்னும் பொருளில் சேயோன், செவ்வேல் என்றெல்லாம் குறிப்பிடுவர். காலப்போக்கில் சூரியன் மட்டுமில்லாமல் மலை, காடு, அருவி என்று இயற்கை அழகுக் காட்சிகளையெல்லாம் முருகனாகவே போற்றி வழிபட்டனர். அதைத்தான் அழகெல்லாம் முருகனே என்று குறிப்பிடுகிறோம்.

கண்கண்ட தெய்வம்

விநாயகரை முழுமுதலாகக் கொண்டு வழிபடும் மதம் காணாபத்யம். முருகனை வழிபடுவது கவுமாரம். சக்திவழிபாட்டினை சாக்தம் என்பர். சைவசமயத்தில் சிவபெருமானே முதற்பொருள். திருமாலை வழிபடுவதற்கு வைணவம் என்று பெயர்.சூரியனையே பரம்பொருளாக வழிபடும் முறை சவுரம் ஆகும். இந்த ஆறுவித வழிபாடுகளில் சூரியனைத் தவிர, மற்ற தெய்வத்தை கண்களால் காணும் வாய்ப்பு கிடையாது. கண்கண்ட தெய்வமான சூரியன் கிழக்கில் உதயமாகி அருள்புரிகிறார். இவருடைய வழிபாடு பழங்காலத்தில் மக்கள் மத்தியில் சிறப்பாக இருந்தது. ஆனால், இப்போது கோயில்களில் பரிவார தெய்வங்களில் ஒருவராகத் திகழ்கிறார்.

உலகின் முதல் வழிபாடு

காலையில் எழுந்தவுடன் நீராடிவிட்டு கீழ்வானில் உதயமாகும் இளஞ்சூரியனை வழிபாடு செய்வது நம் பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் ஒன்று. இதனை சூரிய நமஸ்காரம் என்று சிறப்பாக குறிப்பிடுவர். இயற்கை வழிபாட்டில் சூரியவழிபாடே முதல் வழிபாடாகும். காட்டில் அலைந்து திரிந்த மனிதன் இருளைக் கண்டு பயந்தான். இரவில் ஒவ்வொரு கணப்பொழுதும் யுகமாய் கழிந்தது. பொழுது புலர்ந்த வேளையில் செங்கதிரோன் வானில் உதயமாகி ஜொலித்தது. ஒளியைக் கண்ட மனிதன் மகிழ்ச்சிப்பெருக்கில் வணங்கி நின்றான். இதுவே சூரியவழிபாட்டின் தொடக்கமாகும்.

முதல்நாள் ஞாயிறு ஆனது ஏன்?

உலகத்தின் இயக்கமே சூரியனின் இயக்கத்தைக் கொண்டு தான் நடக்கிறது. சூரியோதயத்திற்கு முன் காலையில் விழித்து அன்றாடக் கடமைகளைச் செய்யவேண்டும். மனிதர் மட்டுமில்லாமல் எல்லா உயிர்களும் சூரியோதயத்தின் போது கண்விழிக்கின்றன. தாவரங்கள் சூரியஒளியின் துணையோடு ஒளிச்சேர்க்கையை நிகழ்த்துகிறது. பறவைகள் இரை தேடச் செல்கின்றன. மனிதர்கள் தங்கள் கடமையைச் செய்கின்றனர். ஓரறிவு முதல் ஆறறிவு வரை எல்லா உயிர்களுக்கும் ஜீவாதாரமாக சூரியன் திகழ்கிறது. அதனால், வாரத்தின் முதல்நாளில் சூரியனுக்குரிய நாளாக ஏற்படுத்தினர். தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் முதல் நூலான சிலப்பதிகாரத்தில் கடவுள் வாழ்த்தின் தொடக்கமே ஞாயிறு போற்றுதும் என்றே தொடங்குகிறது. மற்ற இயற்கை வழிபாடுகளான நிலா, மழை போன்ற தெய் வங்கள் சூரியனுக்கு பின்னரே குறிக்கப்படுகின்றன.

சூரியனின் வடதிசைப்பயணம்

12 மாதங்களில் தை முதல் ஆனி வரையிலும் வடதிசையிலும், ஆடி முதல் மார்கழி வரையிலும் தென்திசையிலும் சூரியன் பயணிக்கிறார். இதை உத்தராயணம், தட்சிணாயனம் என்று கூறுவர். பூலோகத்தைப் போல, தேவலோகத்திலும் பகல், இரவு உண்டு. இதில் உத்தராயணகாலம் தேவர்களுக்கு பகல்பொழுதாகவும், தட்சிணாயணம் இரவாகவும் இருக்கும். ஆறுமாதமாக தென்திசையில் பயணித்த சூரியன் வடதிசைக்கு திரும்பும் நாளே தைமுதல் நாள். இந்த நாளையே மகரசங்கராந்தி என்பர். இந்நாளில் சூரியனை வழிபாடு செய்வதால் வாழ்வு செழிக்கும் என்று கூறுவர்.

சூரியவம்சத்து சுடர்மணிகள்

அயோத்தியை ஆண்ட வம்சம் சூரியவம்சம். நீதி நேர்மை தவறாமல் ஆட்சிபுரியும் நல்லமன்னர்கள் பிறந்த குலம் இது. எவ்வளவு துன்பம் நேர்ந்தபோதும், உண்மையிலிருந்து விலகாமல் சத்தியம் பேசிய அரிச்சந்திரன், சனிதோஷம் போக்கும் நளச்சக்கரவர்த்தி, பசுக்களுக்கு வாழ்வு தந்த திலீபச்சக்கரவர்த்தி, தசாவதாரங்களில் ஒருவராக வணங்கப்படும் ராமபிரான் ஆகியோர் சூரியகுலத்தில் தோன்றியவர்கள். கொடை வள்ளல் கர்ணனும் சூரியனின் பிள்ளையே. சூரியனை வழிபட்டவர்கள் சூரியகுலத் தோன்றல் களான இந்த மன்னர்களின் நல்லாசியையும் பெறுவர் என்பது உறுதி.

அனுமனுக்கு உபதேசித்த மந்திரம்

சொல்லின் செல்வன் என்று அனுமனுக்கு சிறப்பு பெயர் உண்டு. ஆனால், அந்த அனுமனுக்கு பாடம் நடத்திய பெருமை சூரியனைச் சேரும். ஒருமுறை அனுமன் சூரியனைப் பழம் என்று நினைத்து வானமண்டலத்திற்கு தாவினார். சூரியனின் இயக்கம் தடைபட்டு நின்றது. இதனால் உலகமே ஒருகணம் அசையாமல் நின்று போனது. விஷயத்தை அறிந்த இந்திரன், ஓடோடிவந்து அனுமனின் முகத்தில் தன் வஜ்ராயுதத்தால் ஓங்கியடித்தான். மயங்கிய குழந்தை அனுமனைத் தாங்கிப்பிடித்தார் வாயுபகவான். (வாயுவின் மகனே அனுமன்). கோபமான வாயுவை இந்திரனும், சூரியனும் சமாதானப்படுத்தினர். தன் தவறுக்கு பரிகாரமாக சூரியன்அனுமனுக்கு காயத்ரி மந்திரத்தை உபதேசித்ததுடன், இலக்கணங்களையும் கற்றுத் தந்தார். அன்று முதல் அனுமன் சர்வவியாகரண பண்டிதன் என்னும் சிறப்புப் பெயர் பெற்றார். வியாகரணம் என்றால் இலக்கணம்.

தை பிறந்தால் வழி பிறக்கும்

சிறப்பான தை முகூர்த்தம் சுபநிகழ்ச்சி நடத்துவதற்குரிய மாதங்களில் முகூர்த்தங்கள் அதிகமுள்ள மாதமாக தை அமைந்துள்ளது. பெண்ணுக்கு திருமணம் பேசும் பெற்றோர், வரும் தையில் கல்யாணத்தை வைச்சுக்கலாம் என்று சொல்வது வழக்கம். அக்காலத்தில் மார்கழியில் பெரும்பாலும் அறுவடை முடிந்துவிடும். அதனால், உழவர்கள் கையில் தை மாதம் பணப்புழக்கம் அதிகரிக்கும். இதைப் பயன்படுத்தி கல்யாணச் செலவு செய்யலாம் என்பதால் தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழி உண்டானது. இப்பழமொழிக்கு வேறொரு பொருளும் சொல்வதுண்டு. வயலில் அறுவடை முடிந்து விட்டதால், பயிர்பச்சை இல்லாமல் வரப்பு நடப்பதற்கு ஏதுவாக காலியாக இருக்கும். அதனையும் தைபிறந்தால் வழிபிறக்கும் என்பர்.

மகரசங்கராந்தி

சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் சஞ்சாரம் செய்வார். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிகளில் மூன்று ராசிகள் குறிப்பிடத்தக்கவை. சித்திரை மாதத்தில் மேஷராசியில் சூரியன் உச்ச பலத்தையும், ஐப்பசி மாதத்தில் சூரியன் பலவீனத்தையும்(நீச்சத்தன்மை)பெறுகிறார். மகரராசியில் பிரவேசிக்கும் நாளை மகரசங்கராந்தி என்று பெயர். இம்மாதத்தில் சூரியனுக்கு பகன் என்று பெயர். தை மாதம் சூரியனை வழிபட்டவர்களுக்கு எல்லா வளங்களும், பால்பாக்கியமும் (பசுக்களால் யோகம்) உண்டாகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

சூரியனுக்கு 12 பெயர்

ஆதித்தன், பாஸ்கரன், ரவி, ஞாயிறு என்று சூரியனுக்கு பலபெயர்கள் உண்டு. ரஸ்மி புராணத்தில் சூரியனுக்கு பன்னிரண்டு பெயர்கள் சொல்லப்பட்டுள்ளது. மித்திரன், ரவி, சூரியன், பானு, ககான், பூஷ்ணன், ஹிரண்யகர்பன், மரீசி, ஆதித்யன், சவித்ரு, அர்க்கன், பாஸ்கரன் என்பவையே அவை.

விழா நிறைந்த தைமாதம்

தைமாதம் முதல் நாளிலிருந்து முப்பது நாளுமே பக்திமயமாகவும், விழாமயமாகவும் இருக்கும். முதல் நாள் தைப்பொங்கல். சூரியனை பொங்கலிட்டு நன்றியுணர்வோடு வழிபாடு செய்கிறோம். இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல். மாடுகளுக்கு பொங்கல் வைத்து வணக்கம் செலுத்துகிறோம். மூன்றாம் நாள் சிலபகுதிகளில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு என்னும் வீரவிளையாட்டு நடைபெறும். சில பகுதிகளில், உறவினர்களோடு கூடி மகிழும் காணும் பொங்கலாகவும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஆறு, கடல் பகுதிகளில் உறவினர்கள், நண்பர்கள் கூடி மகிழ்வர். மகரஜோதியாக சபரிமலை ஐயப்பன் தைமாதத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். தையில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையையும் தைவெள்ளி என்று சிறப்பாக குறிப்பிடுவர். இந்நாளில் அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்வர். தை அமாவாசை நாளில் தீர்த்தக்கரைகளில் முன்னோர் வழிபாடு செய்வது சிறப்பு. தை பவுர்ணமிநாளில் பூசநட்சத்திரமும் சேரும் வேளையில் தைப்பூசவிழா நடைபெறும். இவ்விழா முருகன் கோயில்களில் சிறப்பாக நடைபெறும். குறிப்பாக பழநிக்கோயில் தேர்பவனியில் முருகப்பெருமான் வீதியுலா வருவார். முருகபக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்துவருவர். மதுரையில் ராஜாங்க விழாவாக, மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரரோடு தெப்பம் சுற்றிவருவாள்.

நன்றி காட்டும் நல்லநாள்

உழவர்கள் நெல் அறுவடை செய்து மகிழ்ந்திருக்கும் வேளையில், விவசாயத்திற்கு துணைபுரிந்த சூரியன், பணியாட்கள் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் அமைந்த விழா பொங்கல் விழா. சூரியன் தன் செங்கதிர்களால் உலகிற்கு ஒளியூட்டுகிறார். கடல்நீரை ஆவியாக்கி மழை பொழியச் செய்கிறார். கிருமிகளை அழித்து ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிகாட்டுகிறார். மண்ணில் உயிர்கள் வாழ்வதற்கு வேண்டிய உதவிகளைச் செய்கிறார். அவருக்குரியதாக இந்த நாள் அமைந்துள்ளது. சூரியனுக்குரிய நாளாக தைப்பொங்கலும், கால்நடைகளுக்குரிய நாளாக மாட்டுப்பொங்கலும், உறவினர்,நண்பர்கள், வேலையாட்களைப் பாராட்டும்விதத்தில் காணும்பொங்கலும் அமைந்துள்ளன.

வெற்றி நாயகனுக்கு நமஸ்காரம்

* அதிதியின் புத்திரனே! நீயே இந்த உலகத்தை படைத்திருக்கிறாய். உலக ஜீவன்கள், தங்கள் செயல்களை செய்யும்படியான பலத்தை கொடுக்கிறாய். எவ்வித எதிர்பார்ப்புமின்றி உலகிற்கு ஒளி கொடுப்பதற்காக ஆகாயத்தில் சஞ்சரிக்கிறாய். ஒளிமிக்க கதிர்களை கொண்டிருக்கிறாய்.
* தங்க நிறமானவனே நீ! அபரிமிதமான பலன்களை கொடுக்கிறாய். சுவர்ணமயமான இந்த பிரபஞ்சத்திற்கு நீயே அதிபதி. நீயே பகலைப் படைக்கிறாய்.
* கருத்த குதிரைகளால் இழுக்கப்படுபவனே! ஆயிரம் கதிர்களைக் கொண்டவனே! சப்த என்ற பெயரை உடைய குதிரை பூட்டிய தேரை உடையவனே! விசேஷ பிரகாசம் உள்ளவனே! இருட்டை நாசம் செய்கிறவனே! உன்னிடமிருந்தே சகல சுகமும் எங்களுக்கு கிடைக்கிறது. இவ்வுலகத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் நீயே அழிக்கிறாய். அழித்த பிறகு மீண்டும் அவற்றை படைப்பதற்காக பிரகாசம் மாறாமல் அப்படியே இருக்கிறாய்.
* கதிரவனே! நீ எல்லோராலும் கொண்டாடப்படுகிறாய். அக்னியை உனக்குள் அடக்கிக் கொண்டிருக்கிறாய். மாலை வேளையில் மறைந்து போகிறாய். பனியை அழிக்கிறாய். ஆகாயத்திற்கு நீயே நாதன், ராகு என்னும் இருளைப்பிளந்து கொண்டு வெளியில் வரும் படியான சக்தியைக் கொண்டிருக்கிறாய்.
* ரிக், யஜூர், ஸாமம் என்ற வேதங்களின் முடிவைக் கண்டவனே! உன்னிடத்திலிருந்தே மழை உண்டாகிறது. நீ கடலரசனின் நண்பன், தட்சிணாயன காலத்தில் விந்தியபர்வதம் என்ற மலையின் வழியாக செல்கிறாய். ஆகாயத்தில் தெப்பமாய் மிதக்கிறாய். உன்னிடமிருந்தே வெயில் பிறக்கிறது.
* வட்ட வடிவம் உடையவனே! விரோதிகளை நாசம் செய்கிறவனே! உதயகாலத்தில் மஞ்சள் நிறம் கொண்டவனே! மதிய வேளையில் எல்லா வஸ்துகளையும் தகிக்கச் செய்கிறவனே! சாஸ்திரங்களை உபதேசிக்கிறவனே! உலகிற்கு வழிகாட்டுபவனே! மகத்தான ஒளியை உடையவனே! எல்லா பிராணிகளிடமும் அன்பு கொண்டவனே! அந்தப் பிராணிகளை அழிக்கவும் செய்பவனே! உனக்கு நமஸ்காரம்.
* நட்சத்திரங்களுக்கும் கிரகங்களுக்கும் அதிபதியே! பிரபஞ்சத்தை நிலைபெறச் செய்கிறவனே! எல்லா தேவதைகளைக் காட்டிலும் அதிகமான சக்தியை உடையவனே! இந்திரன், வருணன், தாரா, பகன், பூஷா, அர்யமா, அர்சிஸ், விவஸ்வான், த்வஷ்டா, ஸவிதா, விஷ்ணு என்ற மூர்த்திகளை உள்ளடக் கியவனே! உனக்கு நமஸ்காரம்.
* கண் கண்ட தெய் வமே! உத்ய பர்வதமலையில் உதிக்கும் உனக்கு நமஸ்காரம். மேற்கு மலையில் அஸ்தமிக்கும் உனக்கு நமஸ்காரம். நட்சத்திர மண்டலங்களுக்கும், கிழமைகளுக்கும் அதிபதியாய் இருக்கும் உனக்கு நமஸ்காரம்.
* வணங்குவோருக்கு வெற்றியையும், ÷க்ஷமத்தையும் கொடுப்பவனே! குதிரைகளால் இழுக்கப்படும் தேரை உடையவனே! இருட்டை நாசம் செய்பவனே! வணங்குவோரின் எதிரிகளை அழிப்பவனே! பரந்த உலகத்தின் நாயகனே! நன்றியற்றவர்களை கொல்பவனே! உனக்கு நமஸ்காரம்.
* உருகியோடும் தங்க ஆறு போன்ற ஒளியைக் கொண்டவனே! அக்னியின் வடிவே! சகல உலகமும் தோன்றக் காரணமானவனே! அஞ்ஞானம் என்ற இருளை போக்குகிறவனே! கருணாமூர்த்தியே! உலகிலுள்ள சகல ஜீவன்களின் புண்ணிய பாவங்களுக்கு சாட்சியாய் இருப்பவனே! உனக்கு நமஸ்காரம்.
8:நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி  தெரிந்துகொள்வோம்!!

             8:ஸ்ரீ கைவல்யாநந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்

                                        (கி.பி.55-கி.பி.28)

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள இரண்டு ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள்  இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

ஸ்ரீ கைவல்யாநந்தேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஆந்திர தேசத்து அந்தணகுலத்தவர்.திருப்பதியில்வாழ்ந்த"த்ரைலிங்கசிவய்யா"என்பவரின்புதல்வர்.பெற்றோர்இவருக்குஇட்டநாமதேயம்'மக்கண்ணா'இவரை'சச்சிதானந்தர்'எனவும்'கைவல்யயோகி'எனவும் கூறுவார்கள்.இவர் தம் வாரிசாக ஸ்ரீ க்ருபா சங்கரரை நியமித்தார்.இவர் கி.பி.28-ல் சர்வதாரி ஆண்டு தைமாதப் பிறப்பன்று காஞ்சி 'மண்டன மிச்ரர்'அக்ரஹாரத்திலுள்ள 'புண்யரஸா' என்னும் பகுதியில் சித்தியடைந்தார்.
வினை நீக்கும் மந்திரம்!

ஓங்காரமே உலகின் பிரதான ஒலி. அதனை ப்ரணவ மந்திரம் என்பர். ப்ரணவம் என்பதில் ப்ர என்பதற்கு விசேஷ என்பது பொருள், நவம் என்பதற்கு புதுமை என்று பொருள். புதுப்புது விசேஷங்களை உள்ளடக்கிய மந்திரமே ப்ரணவ மந்திரம் ஓம் என்பதைப் போன்றே பிள்ளையார் சுழியும் விசேஷமானது. பிள்ளையார் சுழியில் அகரம், உகரம், மகாரம் மூன்றும் அடங்கியுள்ளன. ஒலி வடிவமும் வரி வடிவமும் சேர்ந்துதான் எழுத்தாகிறது. ஒலி வடிவம் நாதம்; வரி வடிவம் பிந்து. உயிரும் உலகமும் உண்டாக இவையிரண்டும் வேண்டும். நாத பிந்து சேர்க்கையின் குறியீடாகத் திகழும் பிள்ளையார் சுழியை நாம் எழுதத் தொடங்கும்முன் பயன்படுத்தினால், அந்தப் பணி இடையூறின்றி முடியும். அதே போல் எந்த ஒரு செயல் ஆரம்பிக்கும் போதும் விநாயகர் மந்திரமான ஸ்ரீ கணாதிபதயே நம: என்று சொல்லிக்கொண்டு ஆரம்பித்தால் விநாயகர் அருளால் எந்த வினைகளும் தடைகளும் வராமல் நாம் தொடங்கும் செயல் வெற்றிகரமாக அமையும் என்பது நம்பிக்கை.

பழங்காலத்தில் சுவடிகள் எழுதத் துவங்கும் போது பிள்ளையார்சுழிக்குப் பதிலாக விநாயகர் மந்திரமான ஸ்ரீ கணாதிபதயே நம: என்று எழுதினர். இவ்வாறு சொல்லியோ அல்லது எழுதியோ தொடங்கும் பணிகள்  தடங்கலின்றி விரைவில் நிறைவேறும் என்பர்.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் காலத்தால் பழமையான ஒரு குடைவரை கோயிலாகும். 1600 ஆண்டுகள் பழமையான இக்கோயில் மகேந்திர பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டது. தற்போது நகரத்தார்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவில் அர்ஜுன வன திருத்தலங்கள் நான்கு உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் திருப்புடைமருதூர் தஞ்சை மாவட்டத்தில் திருவுடைமருதூர், ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீசைலம் சிவகங்கை மாவட்டத்தில் பிள்ளையார்பட்டி ஆகியவையாகும். விநாயகருக்குரிய மிகப்பெரிய குடைவறைக்கோயில். இங்கு விநாயகர் சதுர்த்தியன்று 18படி அளவில் செய்யப்பட்ட ராட்சத கொழுக்கட்டை நைவேத்தியம் செய்யப்படுகிறது. முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் உள்ள கற்பக விநாயகர் சன்னதி விநாயகரின் ஐந்தாவது படை வீடாகும். நகரத்தார் திருப்பணி செய்த கோயில்களில் இதுவும் ஒன்று.

இருப்பிடம்: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் தாலுகாவில், திருப்புத்தூர் காரைக்குடி மெயின் ரோட்டில் உள்ளது பிள்ளையார்பட்டி. திருப்புத்தூரிலிருந்து சுமார் 9 கி.மீ., தூரத்திலும், காரைக்குடியிலிருந்து மதுரை வரும் ரோட்டில் சுமார் 18 கி.மீ., தூரத்திலும் உள்ளது.

செவ்வாய், 10 செப்டம்பர், 2019

ராகு கிரகத்தை வணங்குவதால் என்ன நன்மை?

சுவர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளும் தடைப்படுமோ என்று பயந்தனர் தேவர்கள். அசுரனிடமிருந்து சூரியனை விடுவிக்க, பரிகாரத்தில் ஈடுபட்டனர். இதில் இருள் விலகி, இளஞ்சிவப்பாகக் காட்சி தந்தான் சூரியன். கடைசியில், அவனது இயல்பான நிறமான வெண்மை பளிச்சிட்டது என்கிற தகவல் வேதத்தில் உண்டு (சுவர்பானு ராஸுர: ஸுர்யம் தமஸாவித்யத்...).
கிரகணம் பிடித்த நிலையில், கருவட்டமாகக் காட்சி தருவான் சூரியன். கிரகணம் விடத் துவங்கியதும், சிவந்த கலந்த வெண்மையில் ஒளிர்வான். முழுவதும் விட்டதும், வெண்மை நிறத்தினனாகக் காட்சி தருவான். வேதத்தில், அந்த கிரகணத்தின் நிகழ்வு உள்ளது. ராகுவைப் பற்றிய தகவல் அதர்வண வேதத்தில் உண்டு (சன்னோ கிரஹா: சாந்திரமஸா: சமாதித்ய: சராகுணா...). வேத காலத்தில் இருந்து, தினமும் 3 வேளை, ராகுவுக்கு நீரை அள்ளி வழங்கி வழிபடுவர், வேதம் ஓதுவோர். பிறகு வந்த சம்ஸ்கிருத இலக்கியங்களில், ராகுவை சுவர்பானு எனக் குறிப்பிட்டனர். ராகுவுக்கு சுவர்பானு எனும் பெயர் உண்டு என்கிறது அமரகோசம். கிரகண காலப் பெருமையை விளக்கும் வேளையில், ராகுவைக் குறிப்பிடுகிறது தர்மசாஸ்திரம் (ராஹுக்ரஸ்தேதிவாகரே). மாயையின் தரம் மற்றும் அதன் இயல்பை விளக்க வந்த மகான் ஆதிசங்கரர், தட்சிணா மூர்த்தி ஸ்தோத்திரத்தில் ராகுவைச் சுட்டிக்காட்டுகிறார்.
கிரக வரிசையில், ராகுவைக் குறிப்பிடவில்லை; கிழமைகளில் இடம் தரவில்லை. ராசிச் சக்கரத்தில் 12 வீடுகள் இருந்தும், ராகுவுக்கு வீட்டு உரிமை இல்லை; ராசிகளின் உட்பிரிவுகளிலும் ராகு இல்லை. ராகுவை சாயாகிரகம் என்கிறது ஜோதிடம். ராகு, தென்படும் ராசிக்கு உரியவன். அவனுடன் இணைந்தவன்; அவனைப் பார்ப்பவன். ஆகவே விகிதாசாரப்படி, ராகுவுக்குப் பலன் சொல்ல வேண்டும் என்கிறது ஜோதிடம். கேந்திர த்ரிகோணாதிபதிக்கு யோககாரகன் எனும் பெருமை உண்டு. அவனுடன் இணைந்த ராகு, நல்ல பலனை அளிப்பான் என்கிறது ஜாதக சந்திரிகை (யோககாரக ஸம்பந்தாத்...). தாம்பூலப் பிரஸ்னத்தில், லக்ன நிர்ணயம் செய்ய ராகு கேதுவைத் தவிர்த்து, ஏழு கிரகங்களை மட்டும் ஏற்பார்கள். ராகுவும் கேதுவும் இணையாத ஏழு கிரகங்களை வைத்து, ஸப்த க்ரஹ சித்தாந்தம் ஆரம்ப காலத்தில் இருந்தது. வராஹமிஹிரர் அந்த சிந்தாந்தத்தை ஆராதித்தவர் என்கிறது ஜைமினீய பத்யாமிருதம். கேமத்ரும யோகத்தில், ராசிக்கு 2-லும் 12-லும் ராகு இருந்தாலும், கிரகம் இல்லாததாகவே கருதப்படும்; வெற்றிடமாகவே ஏற்பர்; நிழல் கிரகம் என ஒதுக்குவர். ஒரு ராசிக்கு முன்னும் பின்னுமான ராசிகளில் (ராசிக்கு 2 மற்றும் 12-ல்) பாபக் கிரகம் இருந்தால், அதற்கு உபயபாபித்வம் என்று பெயர். இந்த இரண்டுகள் ஒன்றில் ராகு தென்பட்டால், உபயபாபித்வம் உருவாகாது. பாப கிரகம் எனும் அந்தஸ்தை இழந்துவிடுகிறான். முகூர்த்த சாஸ்திரம், லக்ன சுத்திக்கு, எட்டில் கிரகம் இருக்கக் கூடாது என்கிறது. அங்கு ராகு இருந்தால், கிரகம் இல்லாததாகக் கருதப்படும் என்கிறது முகூர்த்த சாஸ்திரம். தசா புக்தி அந்தரங்கள், கிரகணம், ராகு காலம் ஆகியவற்றில் ராகு தென்படுவான். அடுத்து வந்த சிந்தனையாளர்கள் உச்சம், நீசம், ஸ்வ ÷க்ஷத்திரம் எனக் கொண்டு, மற்ற கிரகங்களின் அந்தஸ்தை ராகுவுக்கு ஏற்படுத்தினர். எல்லாக் கிரகங்களும் வலமாக வந்தால், இவன் இடமாக வருகிறான்.
ராகுவுக்கு சர்ப்பி எனும் பெயர் உண்டு. சர்ப்பி என்றால் ஊர்ந்து செல்லுதல், பரவுதல், நகருதல் என்று அர்த்தம். பாம்பு ஊர்ந்து செல்லும். ஆகவே, பாம்பின் வடிவமென ராகுவைச் சொல்வார்கள் (உரகாகார:) சர்ப்பம் என்றும் பாம்பைச் சொல்வர். சந்திரனின் பாதம் அது என்கிறது கணிதம். ராகு, பூமியுடன் இணைந்து சந்திரனை மறைக்கிறான். சந்திரனுடன் இணைந்து, சூரியனை மறைக்கிறான். அதுவே கிரகணத்தின் நிகழ்வு என்கிறது ஜோதிடம். பிரம்மாவிடம் வரம்பெற்று, கிரகண வேளையில் சூரிய சந்திரர்களைத் துன்புறுத்துகிறான் ராகு என்கிறது புராணம். ராகுவை சனிக்கிரகம் போல் பாவித்துப் பலன் சொல்லலாம் என்கிறது ஜோதிடம் (சனிவத்ராஹு:) ஆக்னேய கிரகம் 7-ல் இருந்தால், கணவன் இழப்பை அளிக்கும். சூரியன், செவ்வாய், சனி ஆகியவை ஆக்னேயத்தில் சேரும்; ராகு இதில் சேரவில்லை. குரூரக் கிரகம் 7-ல் இருந்தால், கெடுதல் விளையும், செவ்வாயை, குரூரக் கிரகம் என்கிறது ஜோதிடம் (க்ரூரத்ருத்..) அதிலும் ராகுவுக்கு இடமில்லை. இப்படியிருக்க... ராகுவுக்கு தற்போது முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது. ராகு 5-ல் இருந்தால், குழந்தை பாக்கியம் இல்லை; 7-ல் இருந்தால் கணவன் இழப்பு என்று பரிகாரங்களுக்கு காளஹஸ்தி தலத்தைச் சொல்வர். நாக தோஷத்துக்கு நாகப்பிரதிஷ்டை பரிகாரம்; ராமேஸ்வரத்தில் சேது ஸ்நானம் ஆகியவை பரிந்துரைக்கப்படும். ராகு தோஷ பரிகாரமாக, அம்பாள் வழிபாட்டை வலியுறுத்துவர். ஆக, பரிகாரத்தால் மறைகிற தோஷமாக, ராகு தோஷத்தைச் சொல்வர். 12 ராசிகளில் ராகு எங்கு இருந்தாலும் அது தோஷம் எனக் கருதி, பரிகாரத்தில் ஈடுபடுகிற நிலை வந்துவிட்டது. காலத்துக்குத் தக்கபடி, புதுப்புது பரிகாரங்களும் தற்போது வந்து விட்டன. 5 மற்றும் 7-ல் ராகு இருக்கிற ஜாதகங்கள், தீண்டத்தகாத ஜாதகங்களாக மாறிவிடுகின்றன. ஜோதிட நம்பிக்கை கொண்டவர்கள் பாடு சொல்லில் அடங்காதது.
கிரக வரிசையில் இடம்பிடித்த ராகு, நன்மையைவிட தீமையையே அதிகம் சுட்டிக்காட்டுவதாக சித்திரிப்பதால் ஏற்பட்ட பயம், மக்களின் சிந்தனையை முடக்கிவிடுகிறது. சம்பிரதாயம், நம்பிக்கை ஆகியவற்றுக்கு முதலிடம் கொடுக்கிற மனம், சாஸ்திரத்தை மறந்துவிடுகிறது; ஆசையை அடையும் வழி தெரியாமல், முட்டுச் சந்து போல் முடங்கிவிடுகிறது. ஜோதிடத்தை மனம் சரணடைந்தால், சிந்தனையானது படுத்துவிடும். ஜோதிடத் தகவல் சிந்தனைக்கு இலக்காகியிருக்க, தகவலின் தரம் ஒருவனது முன்னேற்றத்தை வரையறுக்கும். ராகுவின் தரம், ஜோதிடத்தில் அவன் பங்கு ஆகியவற்றை உள்ளது உள்ளபடி அறிய வேண்டிய கட்டாயம் உண்டு. ஜாதகத்தில் உள்ள ராகு, கெடுக்கிற ராகு அல்ல; கொடுக்கிற ராகு எனும் விளக்கமும் இருக்கிறது. காலைச் சுற்றிய பாம்பு, (திருவாதிரை காலில் இருக்கும் ராகு) கடிக்காமல் விடாது (வேதனை அளிக்காமல் இருக்காது) என்று சிலேடையான விளக்கங்களை அளித்து ராகுவின் தரத்தைச் சொல்பவர்களும் உள்ளனர். தனி வீடு இல்லாததால், எல்லா வீடுகளிலும் தனி வீட்டுக்குச் சமமாக ராகு செயல்படும் வாய்ப்பு கிடைத்து விட்டது. நல்லவனுடன் இணைந்தால், நல்ல பலனை முடக்கி விடுவான்; எவரோடும் சேராமல், எவராலும் பார்க்கப்படாமல், தனியே ஒரு வீட்டில் தென்பட்டால், வீட்டுக்கு உரியவனின் இயல்புக்கு இணங்க, தனது இயல்பையும் கலந்து மாறுபட்ட பலனை அளிப்பான். கெட்டவனுடன் சேர்ந்தால், செயலின் தன்மையைக் கொடுமையாக்குவான். சூரியனுடன் இணைந்தால், ஜாதகரின் செல்வாக்கை இழக்கச் செய்வான். செயலை மங்கச் செய்வான். பெருந்தன்மையும் பேராதரவும் அங்கீகாரம் பெறாது. உச்சன் அல்லது வேறு வகையில் பலம் பொருந்திய சூரியனுடன் இணைந்தால், எல்லா எதிர்ப்புகளையும் சமாளித்து, தனித்தன்மையுடன் திகழ்வான். எதிரியிடம் இருந்து வெகுமதிகள் வந்தடையும்; எதிர்பார்ப்புகள் சாதகமாகும் ! சந்திரனுடன் இணைந்தால் சிந்தனை சுணங்கும்; செயல் வலுவிழக்கும். பலம் பெற்ற சந்திரனுடன் இணைந்தால், சங்கடம் நேராமல் தடுத்துவிடுவான் ராகு. செவ்வாயுடன் இணையும்போது, தேவையற்றதில் செயல்படத் தூண்டிவிட்டு, ஆயாசத்தை உண்டாக்குவான். வலுப்பெற்ற செவ்வாயுடன் இணைந்தால், எதிர்ப்பைச் சமாளித்து, எளிதில் முன்னேறலாம். புதனுடன் சேர்ந்தால், தவறான நட்பால் நொந்து போகும் நிலை ஏற்படும். வலுவுள்ள புதனுடன் இணைந்தால், பக்குவ அணுகு முறையால் காரியங்களைச் சாதிக்கச் செய்வான் !

சுக்கிரனுடன் இணைந்தால், தாம்பத்திய வாழ்வில் சங்கடம் நேரும். தவறான வழியில் செல்வம் பெருகும். பலம் பெற்ற சுக்கிரனுடன் இணைய, எதிர்பார்த்த உலகவியல் சுகங்களை அனுபவிக்கலாம். பெரிய மனிதர்களது தொடர்பால், பொருந்தாத பெருமைகளும் வந்தடையும். சனியின் சேர்க்கையால், நண்பர்கள் எதிரிகளாவர். பலம் பொருந்திய சனியுடன் இணைந்தால், தரம் தாழ்ந்த வழியில் முன்னேறும் நிலை உண்டாகும். இக்கட்டான சூழலில், அவனுக்குப் பெருமைகள் தேடி வரும். குருவுடன் இணைந்தால், சௌக்கியங்களை இழக்க நேரிடும்; எத்தனை முயன்றாலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டாலும் தோல்வியைத் தழுவ நேரும். மனச்சோர்வு அதிகரிக்க, கடமைகளை மறக்கும் நிலை உருவாகும். வலுப்பெற்ற குருவுடன் இணைந்தால், சங்கடம் தீர்ந்தாலும், சந்தோஷம் இருக்காது; காரியங்கள் காலம் கடந்து நிறைவேறும். குருவின் சேர்க்கையால், மற்ற கிரகங்களின் தோஷங்கள் முழுவதும் முடங்கிவிடும். ராகுவின் சேர்க்கையில் குரு செயலிழந்துவிடுவான். அதனை, குரு சண்டாள யோகம் என்கிறது ஜோதிடம். நல்லவனின் சேர்க்கை, கெட்டவனை நல்லவனாக்கும். ஆனால் ராகுவின் சேர்க்கை, குருவைக் கெட்டவனாக்கிவிடும் என்கிறது, அது ! அதேநேரம், யோக காரக கிரகங்களின் சேர்க்கையில், நல்லவனாக மாறுவதுடன் நிற்காமல், இணைந்த கிரகத்தின் நல்லபலன்களை இரட்டிப்பாக்கி, மகிழ்ச்சியை நிலைக்கச் செய்வான் ராகு. அசுர வேகத்தில் முன்னேற்றம் நிகழும். இதில் தடம்புரளாமல் இருக்க, ராகுவின் இடையூறு சாதகமாக மாறுவது உண்டு. இனிப்பின் அதீத தித்திப்பை, காரமானது குறைக்கும். ஐந்து கிரகங்கள் உச்சமாக இருந்தாலும், ராகுவின் சேர்க்கையில் துன்பத்துக்கு இடமளித்து, இன்ப சேர்க்கையில் துன்பங்களின் கலப்படமே வாழ்க்கை எனும் நியதியை நிறைவுசெய்ய... ராகுவின் பங்கு சில தருணங்களில் பயன்படும்.

ராகுவை வைத்து, காலசர்ப்ப யோகம் உருவானது. அதுவே, விபரீத கால சர்ப்ப யோகம் எனும் பெயரில் விரிவாக்கம் பெற்றது. சஞ்சாரத்தில் 180 டிகிரி விலகி நிற்பதால், ராகுவுக்கும் கேதுவுக்கும் சேர்க்கை நிகழாது. சமீப காலமாக, குருப்பெயர்ச்சியும் சனிப்பெயர்ச்சியும் விழாக்கோலம் கொண்டுவிட்ட நிலையில், ராகுப் பெயர்ச்சியும் அதில் இடம் பிடித்துவிட்டது. தினமும் ராகுகாலத்தைச் சந்திக்கிறோம். ராகு வழிபாடு என்பது, வேத காலத்தில் இருந்தே தொடர்கிறது. உலகம் தோன்றும் வேளையில், வானசாஸ்திரத்தில், ராகு இடம் பிடித்துவிட்டான். வராஹமிஹிரர், பிருஹத்சம்ஹிதையில் ராகுசாரத்தை விளக்கியுள்ளார். ஆகவே, போற்றுதலுக்கு உரிய கிரகங்களில் ராகுவையும் சேர்க்கலாம். ராகுவை அழைக்க, கயான: சித்ர: என்கிற மந்திரத்தை ஓதச் சொல்கிறது வேதம். ராம் ராஹவே நம: எனும் பீஜாக்ஷர மந்திரத்தைச் சொல்லலாம்; 16 உபசாரங்களை இந்த மந்திரம் சொல்லி நிறைவேற்றலாம். சதுர் பாஹும் கட்க வரசூலசர்மகரம்ததா காலாதி தைவம் ஸுர்யாஸ்யம் ஸர்பப்ரத்யதி தைவதம் என்ற ஸ்லோகம் சொல்லி, ராகுவுக்கு மலர் சொரிந்து, வணங்கலாம். வாழ்க்கைப் பயணத்தை எளிதாக்குவான் ராகு. கைகளுக்கு வலுவூட்டுபவன் ராகு என்கிறது புராணம் (ராஹோர்பாஹுபலம்...) செயல்படுவதற்குக் கைகள் தேவை. பிறர் உதவியின்றி வாழச் செய்வான் ராகு ! இன்றைய சூழலில், ராகுவின் அருள் அவசியம். ராகு பகவானை வணங்கினால், ஒளிமயமான வாழ்க்கை நிச்சயம் !
-------------------------------------------------------------------------------------------------------------------------
சிவன் அருள்பாலிக்கும் தலங்களும் அவற்றின் சிறப்பும்!

பிருங்கி முனிவர் வண்டு வடிவெடுத்து சிவபெருமானை வழிபட்டதால் சிவலிங்கத்தில் வண்டு துளைத்த அடையாளம் ஏற்பட்டது. இந்த அரிய வடிவினை நாம் திருநல்லூரில் காணலாம். இங்கு இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

*நீடூரில் ஒரு நண்டு சிவபெருமானை வணங்கியதால் சிவலிங்கத்தின் உச்சியில் நண்டு வளை உள்ளது. இங்கு சுவாமியின் பெயர் அருட்சோமநாதர்

*ரத்தினம் வேண்டிய ஒரு அரசனை இறைவன் சோதித்தபோது அவனுடைய வாளால் வெட்டப்பட்ட லிங்கத் திருமேனியை ரத்தினகிரியில் காணலாம். இங்கு சிவபெருமான் ரத்தினகிரீஸ்வரர் என்ற பெயருடன் காட்சி தருகிறார்.

*தலைச்சங்காட்டில் திருமால், சிவபெருமானை வழிபட்டு, பாஞ்சஜன்ய சங்கைப் பெற்றதால் அங்கு சங்கு வடிவில் மூலவராகக் காட்சியளிக்கிறார் ஈசன், இறைவனுடைய பெயர் சங்காரண்யேஸ்வரர்.

*கேரள மாநிலம் திருச்சூரில் வடக்குநாதர் சுவாமி கோயிலில் சிவன் நெய் மலையாக காட்சி தருகிறார். ஆதிசங்கரர் காட்சி தருகிறார், ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த லிங்கம் இது.

*அமர்நாத்தில் உள்ள பனி லிங்கம் சந்திரனைபோலவே 15 நாளில் வளர்ந்து பவுர்ணமியில் முழு லிங்கமாகவும் அடுத்த 15 நாளில் தேய்ந்து அமாவாசையில் மறைவதும் சிறப்பம்சம்.

*கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் சிவலிங்கம் வடதுபுறம் சாய்ந்திருப்பதைக் காணலாம்.

*அர்ஜுனனின் அம்புபட்ட லிங்கத்தை திருவிஜயமங்கையில் தரிசிக்கலாம். இங்கு இறைவன் விஜயநாதேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

*செம்பனார்கோயிலில் உள்ள சிவபெருமான் சொர்ணபுரீஸ்வரர் என்ற பெயருடன் 32 இதழ்களை உடைய தாமரை வடிவ ஆவுடையாரில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருக்கிறார்.

*காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் ஆலயத்தில் சிவன் எட்டுக்கைகளுடன் சிற்பமாகக் காட்சியளிக்கிறார்

*மகாராஷ்டிரா மாநிலம் எல்லோரோ குகைகளுக்கு அடுத்து உள்ள குஸ்மேசம் என்னும் ஊரில் உள்ள சிவலிங்கம் குங்குமத்தால் ஆனது.

*பொதுவாக பெருமாள் கோயிலில்தான் சடாரி வைப்பார்கள். ஆனால் மூன்று சிவன் கோயில்களில் மட்டும் சடாரி வைக்கப்டுகிறது. அவை காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில், காளஹஸ்தி கோயில் மற்றும் சுருட்டப்பள்ளி சிவன் கோயில் ஆகும்.

*திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவபெருமானது பெயர் சந்திரமவுலீஸ்வரர். அவர் மும்முக லிங்கமாக தரிசனம் அளிக்கிறார். அதில் கிழக்கு முகம் தத்புருஷ லிங்கம் என்றும், வடக்கு முகம் வாமதேவ முகமாகவும் தெற்கு முகம் அகோர மூர்த்தியாகவும் வணங்கப்படுகின்றனர்.

*ஆலகால நஞ்சை உண்ட சிவபெருமான் அம்பிகையின் மடியில் சயனித்திருக்கும் அரிய காட்சியை காசியில் உள்ள அனுமன் காட்டில் காமகோடீஸ்வரர் கோயிலில் காணலாம். ஆந்திர மாநிலம் சுருட்டப் பள்ளியிலும் பள்ளிகொண்டீஸ்வரர் தரிசனம் கிடைக்கிறது.

*பெங்களூருக்கு அருகே சிவகெங்கா என்ற இடத்தில் சிவலிங்கத்தின் மேல் நெய்யை வைத்தால் வெண்ணெயாக மாறுகிறது. இந்த வெண்ணெயை வீட்டுக்குக் கொண்டு வரலாம். எத்தனை நாள் ஆனாலும் வெண்ணெய் உருகுவதில்லை.

*தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயிலில் உள்ள ராஜகம்பீர மண்டபத்தில் மூன்று தலையுடன் கூடிய அர்த்தநாரீஸ்வரர் இருக்கிறார்.

*ஐந்துமுகம் கொண்ட சிவபெருமான் ஏழு தலங்களில் அருள்புரிகிறார். 1 காசி, 2. நேபாளம், 3. காளஹஸ்தி, 4. திருவானைக்காவல், 5. சித்தேஸ்வரர் மகாதேவ், 6. ராசிபுரம், 7. காஞ்சி கைலாசநாதர் கோயில்.

*தஞ்சை மாவட்டம் குடவாசல் அருகே உள்ளது நல்லூர் திருமயானம். இங்கு உள்ள சுயம்பு லிங்கத்தின் மேற்பகுதி பலாப்பழம் போன்று முள்ளுமுள்ளாக உள்ளது. சுவாமியின் பெயர் பிலாச வனேஸ்வரர்.

*காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குத் தெற்கே சிறிது தூரத்தில் ஜ்வரஹரேஸ்வரர் என்ற பெயருடன் ஈசன் எழுந்தருளியுள்ளார். வேலூர் கோட்டை கோயிலிலும் மூன்று கால்களுடன் ஜ்வரஹரேஸ்வரர் காட்சியளிக்கிறார்.

*மயிலாடுதுறை அருகே திருவிற்குடியில் உற்சவமூர்த்தியான சிவபெருமான் திருக்கரத்தில் சக்கரம் ஏந்தி நிற்கும் காட்சியைக் காணலாம். வலது மேல் கரத்தில் மழுவும், இடது மேல் கரத்தில் மானும் வைத்திருக்கின்றார். இங்கு சிவனுக்கு துளசியால் அர்ச்சனை செய்கின்றனர்.

விஷ்ணு சிறப்புச் செய்திகள்

*திருப்பதி ஏழுமலைக்கு மேல் உள்ள நாராயணகிரியில் ஏழுமலையானின் பாதச்சுவடுகள் பதிந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஸ்ரீவாரிபாதம் எனப்படும் அந்த இடத்தில் திருமலைவாசனின் பாதச்சுவடுகளே வழிபடப்படுகின்றன.

*திருமலையில் உள்ள பெருமாளுக்கு மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்று இலையால் அர்ச்சனை செய்யப்படுகிறது.

*நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் போகிற வழியில் உள்ள திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் அல்லாவுக்கு பூஜை நடக்கிறது.

*திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் உள்ள பெருமாளின் உற்சவத் திருமேனியில் மார்பில் சிவலிங்க அடையாளம் உள்ளது.

*உடுப்பி கிருஷ்ணருக்கு நவராத்திரி ஒன்பது நாட்களும் புடவை உடுத்துகிறார்கள்.

*ஆந்திராவில் பத்ராசலத்தில் ராமர் சங்கு சக்ரத்துடன் காட்சியளிக்கிறார்.

*திருநெல்வேலிக்கு அருகில் உள்ள நாங்குநேரியில் பெருமாளுக்கு தினமும் மூன்று லிட்டர் எண்ணெய் சாத்தப்படுகிறது. பின்பு இது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது

*சிவனைப்போல் முக்கண் உடைய பெருமாளைக் காண சிங்கப்பெருமாள் கோயில் செல்ல வேண்டும் இங்குள்ள மூலவர் நரசிம்மமூர்த்திக்கு மூன்று கண்கள் உள்ளன.

*திருக்கண்ணபுரத்தில் கண்ணபுரத்தான் பத்மாசனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, பத்மினி ஆண்டாள் என நான்கு தேவியருடன் சங்கு சக்கரம் தாங்கிக் காட்சியளிக்கிறார்.

*ஆசியாவிலேயே மிகப்பெரிய பள்ளி கொண்ட பெருமாள் உள்ள தலம் திருமயம். ஒரே மலையைக் குடைந்தமைந்த சிவன்-திருமால் கோயில் இது மட்டுதான்.

*திருச்சி முசிறி சாலையில் உள்ள வேதநாராயணன் கோயிலில் பெருமாள் அனைத்து வேதங்களையும் தலையணையாக வைத்துப் படுத்திருக்கிறார். இதனால் அவருக்கு வேதநாராயணன் என்று பெயர்.

*காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் அத்திவரதர். அனந்தசரஸ் என்ற திருக்குளத்தில் நீருக்கு அடியில் நிரந்தரமாக எழுந்தருளியுள்ளார். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே வந்து மக்களுக்கு காட்சி தரும் இவரது தரிசனம் 2019-ம் ஆண்டு கிடைக்கும்.

*திருக்கோவிலூரில் உள்ள மூலவர் இலுப்பை மரத்தால் ஆனவர். இவரது பெயர் திருவிக்ரசுவாமி.

*கர்நாடகத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள ரங்கநாதர் எழுந்தருளியுள்ள ஆதிசேஷனுக்கு ஏழு தலைகள் இருப்பது வித்தியாசமானது.

*திருமலை, தான்தோன்றிமலை, உப்பிலியப்பன் கோயில், குணசீலம் ஆகிய நான்கு பெருமாள் கோயில்களிலும் தாயாருக்கு சன்னதி இல்லை.

*பொதுவாக பெருமாள் ஆதிசேஷன் மேல சயனித்தபடி இருப்பார். ஆனால் ஸ்ரீ வைகுண்டத்தில் நத்தத்தில் ஆதிசேஷன் குடைபிடிக்க, பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

*காஞ்சிபுரத்தில் உள்ள விளக்கொளிப் பெருமாள் கோயிலில் பெருமாள் ஜோதி வடிவில் இருப்பதாக ஐதிகம். இங்கு பெரிய கார்த்திகை அன்று பெருமாளுக்கு விளக்கேற்றி வழிப்படுகிறார்கள்.

*கருங்குளத்தில் பெருமாளை மூன்று அடி உயரமுள்ள சந்தனக்கட்டை வடிவில் வைத்து அபிஷேக ஆராதனை செய்து பூஜித்து வருகிறார்கள். இதற்கு இரண்டு பக்கமும் சங்கு, சக்கரம் இருக்கிறது.

*மாமல்லபுரம் ஸ்தலசயனப்பெருமாள் கோயிலில் பெருமாள் ஒரு கரத்தை தலைக்கு வைத்துக்கொண்டு தரையில் சாய்வாகக் கால் நீட்டி சயனம் கொண்டிருக்கிறார். சங்கு சக்கரம் இல்லை.

*காஞ்சி உலகளந்த பெருமாள் திருக்கோயிலில் திருமழிசையாழ்வாராலும், திருமங்கை மன்னராலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட நான்கு திவ்ய தேசங்கள் உள்ளன, பேரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகியவையே அவை.
-------------------------------------------------------------------------------------------------------------------------
விளங்காத மர்மத்தை விளக்கும் யோக வசிஷ்டம்!

ஆன்மீக நாட்டம் உடைய ஒவ்வொரு மனிதனின் மனத்திலும் தோன்றும் விடை காண முடியாத கேள்விகள் ஏராளம். இந்தப் பிறவியின் மகத்துவம் என்ன, ஏன் இப்படி ஒரு வாழ்க்கை தனக்கு அமைந்தது. விதியா, முயற்சியா எது மேலோங்கும், இறப்புக்குப் பின்னர் எங்கே போகப் போகிறோம். மறு ஜென்மம் உண்டா, புண்யம் எது, பாவம் எது, எப்படி வாழ்ந்தால் ஆன்ம ஞானம் கிடைக்கும்.... இத்யாதி கேள்விகள் ஏராளம். விடைதாள் தெரியவில்லை. இந்தக் குறையை நீக்க வல்ல ஒரு அற்புதமான நூல் யோக வாசிஷ்டம். ஒவ்வொரு மர்மமான கேள்விக்கும் ஆணித்தரமாக நேரடியாக பதிலைத் தருவதில் இதற்கு நிகரான இன்னொரு நூல் இல்லை என்றே சொல்லலாம். அதனால்தானோ என்னவோ உயரிய ஞானம் உடைய அறிஞர்கள் பலரும் இதில் உள்ள கருத்துக்களைப் பிரதிபலித்துத் தங்கள் நூல்களில் கருத்துக்களை எழுதியுள்ளனர். ஜேம்ஸ் ஆலன், அன்னி பெஸன்ட், பால் ப்ரண்டன், அலெக்ஸாண்டர் கானான், சர் ஜேம்ஸ் ஜீன்ஸ், உள்ளிட்ட நூற்றுக்கணக்கான அறிஞர்கள் யோக வாசிஷ்ட கருத்துக்களை வார்த்தைக்கு வார்த்தை நேரடியாக அப்படியே தெரிவித்துள்ளனர்.

யோக வசிஷ்டம் எப்படி வந்தது?

ராமர் வசிஷ்டரிடம் கேள்விகள் கேட்க பிரம்ம ரிஷி வசிஷ்டர் பதில்களைத் தீர்க்கமாக அளிக்கிறார். அதுவே ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்ட யோக வாசிஷ்ட நூலாக அமைகிறது. இன்று நமக்குக் கிடைத்திருக்கும் ஸ்லோகங்கள் 32,000 தான்! இந்த உபதேசங்களைப் பெற்ற இராமர், தான் எப்போதும் பிரம்ம ஞானத்திலேயே இருக்க விரும்புவதாகக் கூறுகிறார். குரு வசிஷ்டர் இராமருக்கு அவரை உணர்த்தி, அவரின் அவதார நோக்கத்தைத் தெளிவுப்படுத்திய பிறகே தன்னை அறிந்து கொள்கிறார். ஸ்ரீராமசந்திர பிரபு.

விதி என்பது இல்லவே இல்லை என்கிறது!

தைவம் நாம ந கிஞ்சன் (விதி என்று ஒன்றும் இல்லை 2518)
தைவம் ந வித்யதே(விதி என்பது இல்லவே இல்லை 2813)
மூடை: ப்ரகல்பிதம் தைவம்(மூடர்களால் உருவாக்கப்பட்டதே விதி-2816)
என்று இப்படி அடித்துச் சொல்லும் யோக வாசிஷ்டம் மனிதனின் செயல்களே அவனுக்குப் பின் விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதுவே விதி என்று சொல்லப்படுகிறது என்று விளக்குகிறது.

நீடித்திருக்கும் வியாதிக்கு இப்போது மருந்து சாப்பிட்டால் எப்படி அது தீருமோ அதே போல முந்தைய கருமங்களின் தீய விளைவுகளை இப்போதைய நல்ல கர்மங்களால் மாற்ற முடியும் என்று விளக்கி மனித குலத்திற்கே பெரும் ஆறுதல் செய்தியை அது தருகிறது! மனமே எல்லாம் என்று கூறி அதைச் செம்மைப்படுத்தி நல்ல எண்ணங்கள் மூலம் உயரிய நிலையை அடைய முடியும் என்பது யோக வாசிஷ்டம் தரும் அற்புத செய்தி! பிறப்பு, இறப்பு, கர்ம பலன்கள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களை விளக்கும் இந்த நூல் எப்படிப்பட்ட வழிகளின் மூலம் அருமையான ஆன்ம ஞானத்தை அடைந்து உலகியல் துன்பங்களிலிருந்து விடுதலை பெறலாம் என்ற ரகசியத்தையும் சுலபமாக விளக்குகிறது.

அதிசய வழிகள் நான்கு: இதற்கான அதிசய வழிகள் நான்கு உள்ளன.
சந்தோஷ சாதுசங்கஸ்ச விசாரோத்ய சமஸ்ததா
ஏத ஏவபவாப்யோத்யாவுபாயாஸ்தரணே ந்ருகாம  (21618)

சந்தோஷம்(எப்போதும் திருப்தி), நல்லோர் இணக்கம் (சாதுக்களுடன் சேர்தல்) விசாரம், அமைதி, இவையே மனிதருக்கு உலகம் என்னும் சாகரத்தைக் கடக்கும் வழிகளாகும். இதை எளிதாக நான்கு ஸ காரங்களாக ஸந்தோஷம், ஸத்சங்கம், ஸத்விசாரம், ஸமஸ்தம் என்று நினைவில் கொள்ளலாம்.

சந்தோஷம்: விஷயங்களில் ஆசையில்லாது, சந்தோஷமாக (திருப்தியுடன்) இருக்கும் ஒருவனுக்குப் பெரும் சக்திகள் (வளங்களும் கூட) ஒரு அரசனிடம் இருக்கும் ஏவலாள்கள் போலக் காத்துக் கிடக்கும் என்பதை உறுதியாக யோக வாசிஷ்டம் தெரிவிக்கிறது. எவ்வளவு அரிய செய்தி இது!

நல்லோர் இணக்கம்: மனதில் இருக்கும் இருளை சாதுக்கள் அகற்றுவர். சூரியஒளி போன்ற ஞானத்தைத் தருவர். தர்மங்கள் செய்வதாலும், புனிதத்தல யாத்திரை மேற்கொள்வதாலும் விரதங்களாலும் மதச் சடங்குகள் மற்றும் யாகங்களாலும் என்ன பயன், ஒருவன் சாதுக்களுடன் சேர்ந்து இருக்கும்போது!

விசாரம்: நான் யார்? உலகில் பிறப்பு என்ற தோஷம் எப்படி வந்து சேர்ந்தது? இப்படி தர்க்கரீதியாக ஆய்வு செய்வதே விசாரம்!

சமஸ்தம்: அனைத்து உயிர்களிடமும் நட்பாக இருந்தால் உயரிய ஆன்மா தன்னைத் தானே சுத்தப்படுத்துகிறது. ஆக இந்த நான்கு வழிகளில் எந்த ஒரு வழியை மேற்கொண்டாலும் இறை சக்தி அருளைப் பாலித்து பெரும் வளங்களைத் தந்து முக்தியை நல்கும் என யோக வாசிஷ்டம் அறுதியிட்டு உறுதி கூறுகிறது.

அதி சுலப வழி விசாரமே..: மேலே கூறிய நான்கு வழிகளில் மிகச் சுலபமான வழியாக ரமண மஹரிஷி கூறுவது நான் யார் என்று இடைவிடாது உன்னைக் கேள்வி கேள்! அனைத்து மர்மங்களும் தானே பிடிபடும் என்பதே! எப்போதும் திருப்தி, நிஜமான உயரிய பண்புகள் உள்ள சாதுக்களை நாடுதல், அனைத்து உயிர்களிடமும் சமத்துவம் என்பதெல்லாம் பலருக்கும் கடைப்பிடிக்க சற்று சிரமமான வழிகள். ஆனால் எங்கிருந்தாலும் எந்த நேரத்திலும் சற்றும் செலவின்றி ஆண் பெண் யாரானாலும் அந்தஸ்து பேதமின்றி நாடு, இனம், மொழி தாண்டி சுலபமாக செய்யக்கூடியது விசாரமே! அதனால்தான் அவர், ஆன்ம வித்தை உரை என்ற அற்புதமான பாடலில் பல்லவி அனுபல்லவி ஐந்தே ஐந்து சரணங்களில்.

ஐயே! அதி சுலபம் ஆன்மவித்த ஐயே! அதி சுலபம் என்று கூறி விளக்குகிறார்.

பொருள் பொதிந்த அடுக்குமொழித் தமிழ்க் கவிதை வரிகளை இந்தப் பாடலில் படித்தால் மஹரிஷி ஒரு மஹாகவியும் கூட என்பதை உணர்ந்து விடலாம்! சரணங்களின் கடைசி வரிகளைப் பார்ப்போம்! பொய் உருவாக்கிய அகங்காரத்தை நான் யார் என்ற இடைவிடாத கேள்வி மூலம் ஒழித்து விட்டால். சுயமான்மா விளக்குமே இருள் அடங்குமே, இடர் ஒடுங்குமே, இன்பம் பொங்குமே என்றும். மாம்சமான சரீரத்தை நான் என்று எண்ணாமல் நான் யார்? இடம் எது என்று விசாரிப்பதால். இதய குகையுள் தானாய்த் திகழும் ஆன்ம ஞானமே! இதுவே மோனமே. ஏக வானமே என்றும் உண்மை சொரூபத்தை உணர்ந்து விட்டால் பின் அறிவதற்கு என்ன இருக்கிறது? தன்னைத் தன்னில் உணர்ந்து விட்டால். தன்னுள் மின்னும் ஆன்ம பிரகாசமே அருள் விலாசமே அக விநாசமே இன்ப விகாசமே என்றும் கர்மங்களின் கட்டு அவிழ, இம்மார்க்கம் மிக்கு எளிது! சும்மா அமர்ந்திருக்க அம்மா! அகத்தில் ஆன்ம ஜோதியே; நிதானுபூதியே இராது பீதியே; இன்ப அம்போதியே (இன்ப அம்போதி ஆனந்தக் கடல்) என்றும். அண்ணாமலையானைக் காண அவன் அனுக்ரஹம் வேண்டும். உள் நாடு உளத்து ஒளிரும் அண்ணாமலை என் ஆன்மா காணுமே அருளும் வேணுமே அன்பு பூணுமே இன்பு தோணுமே என்றும் அற்புதமான சிறிய ஐந்து வரிப் பாடல்கள் ஐந்தின் மூலம் விளக்குகிறார். யோக வசிஷ்டம் கூறும் அதிசய வழிகள் நான்கில் அதிசுலபமான நான் யார் என்ற விசார வழியை அனுபூதியாக உணர்ந்தவர் மஹரிஷி ரமண மகான்! அனைவரையும் உய்விக்க எண்ணும் அருளுடன் ஐயே! அதி சுலபம் ஆன்ம வித்தை என்று அவர் கூறும் போது யோக வாசிஷ்டத்தின் உண்மைக் கூற்றையும் அதை மெய்ப்பிக்கும் மஹரிஷியின் மாண்பையும் எண்ணி எண்ணிநம் மெய் சிலிர்க்கும்! அவருடன் இணைந்து அதி சுலபம் ஆன்ம வித்தை என்று பாடியவாறே நான் யார் என்ற விசார மார்க்கத்தை மேற்கொண்டு சம்சார சாகரத்தைக் கடந்து விடலாம்! அப்போது..... சுயமான்மா விளங்குமே; இருள் அடங்குமே. இடர் ஒடுங்குமே இன்பம் பொங்குமே.
-------------------------------------------------------------------------------------------------------------------------
குளிகன் சேர்க்கையால் ஏற்படும் நன்மை தீமைகள்!

மந்தன் என்பவன் சனி, அவனுடைய புதல்வன் மாந்தி, சனிக் கிரகத்தில் இருந்து வெளிவந்தவன் என்று அர்த்தம். அவனுக்குக் குளிகன் என்றும் பெயர் உண்டு ! ஜாதக பலன் சொல்லும்போது, மாந்தியையும் அதாவது குளிகனையும் சேர்த்துச் சொல்ல வேண்டும் என ஜாதகாதேசம், ஜாதக பாரிஜாதம் முதலான ஜோதிட நூல்கள் பரிந்துரைக்கின்றன.

சூரியன், சனி, செவ்வாய் ஆகியோரைப் போல், பாப கிரகங்களில் அடங்குபவன்; ஆகவே, குளிகன் இருக்கும் ராசிநாதன், அவன் சுபனாக இருந்தாலும், குளிகைச் சேர்க்கையால் பாபியாக மாறுவான் என்கிறது ஜோதிடம். உதாரணமாக, குளிகன் இருக்கும் ராசிக்கு உடையவன், ஆண் ஜாதகத்தில் 7ல் இருந்தால் மனைவியை இழப்பான் என்றும், பெண் ஜாதகத்தில் 7ல் இருந்தால் கணவனை இழப்பாள் என்றும் சொல்வர் (மாந்திராசீச்வரோவா). திருமணப் பொருத்த விஷயத்தில், கேரள அறிஞர்கள் இன்றைக்கும் குளிகனையும் சேர்த்துப் பலன் சொல்கின்றனர். அனுதினமும் குளிகன் உதிக்கும் வேளையை நாம் தவிர்ப்போம். ராகுகால அட்டவணை போல், குளிகை கால அட்டவணையையும் குறிப்பிடுகிறது பஞ்சாங்கம். நல்ல காரியங்களுக்கு ராகுவைத் தவிர்ப்பது போல், குளிகனையும் தவிர்ப்பது உண்டு. முகூர்த்த சாஸ்திரம், குளிகை காலத்தைத் தவிர்க்கச் சொல்கிறது. முற்பிறவியின் கர்மவினைப் பலனை, காலம் அதாவது வேளை நம்முடன் இணைக்கும். காலத்துடன் இணைந்த மாந்தி எனப்படும் குளிகனுக்கும் கர்மவினையை வெளிப்படுத்துவதில் பங்கு இருப்பதால், பலன் சொல்லும் விஷயத்தில் அவனையும் கவனிப்பது பொருந்தும். சனியின் புதல்வன் குரூரன், துஷ்டன்; எதையும் அழிக்கும் இயல்பு கொண்டவன்; பாம்பு வடிவில் தோன்றுபவன்; கண்ணுக்கு இடுகிற மை நிறத்தில், கருநீல நிறத்திலானவன். வட்ட முகமும், சிவந்த கண்களும், நீண்ட பற்களும் (த்ம்ஷ்ட்ரம்) கொண்டு, பயமுறுத்தும் தோற்றத்தைக் கொண்டவன் என்கிறது ஹோரா சாஸ்திரம். அவனால் ஏற்படும் இன்னல்களை அகற்ற குளிக சாந்தியைப் பரிந்துரைக்கின்றன பரிகார நூல்கள். அவனுடைய காயத்ரியைச் சொல்லி (குளிக காயத்ரி) வழிபட்டால் நன்மை என்கிறது சாந்திமயூகம்.

பிரஸ்னம் எனும் ஜோதிடப் பிரிவு, குளிகஸ்புடத்தைச் சேர்த்துப் பலன் சொல்கிறது. மரணத்தை வரையறுக்க, மரண குளிகனைக் கவனித்து முடிவு எடுப்பார்கள். த்ரிஸ்புடம் எனும் பிரிவில் குளிகஸ்புடத்துக்கும் பங்கு உண்டு. ஞாயிற்றுக்கிழமை, சூரியோதயத்தில் இருந்து 26 நாழிகையில் தோன்றுவான் குளிகன். நான்கு நாழிகை குறைந்து, அடுத்தடுத்து வரும் கிழமைகளில் (26ல் இருந்து 22, அடுத்து 18,14,10,6,2) என சனிக்கிழமை வரை உதயமாகும் வேளையை அறிந்து, ஜாதகத்தில் இருக்கும் ராசியில் இடம் பிடித்துவிடுவான். அவன், லக்னத்தில் இருந்தால் சிந்தனை வளம் குறையும்; பாப கிரகத்துடன் இணைந்தால், ஏமாற்றுபவனாக மாறுவான்; அதிக ஆசையால் சிக்கித் தவிப்பான். இரண்டில் இருந்தால், புலன்களின் வேட்கையைத் தணிப்பதில் முனைப்புக் காட்டுவான். அங்கே, பாப கிரகத்துடன் இணைந்தால், ஏழ்மையில் தவிக்கச் செய்வான். 3ல் இருந்தால், அந்த ஜாதகதாரர் மிதப்புடன் தென்படுவார்; உடன்பிறந்தாரை இழப்பார்; பணம் ஈட்டுவதில் கவனம் செலுத்துவார். தேக ஆரோக்கியமின்றி இருப்பார். 4வது வீட்டில் தென்பட்டால், கல்வி, மகிழ்ச்சி, வீடு, நிலபுலன்கள் ஆகியவற்றை இழக்கச் செய்வான். 5ல் இருந்தால், மனதின் பலத்தை இழக்க நேரிடும்; தவறான செயல்களில் ஈடுபடுவர்; பிள்ளைச் செல்வத்தைக் குறைத்து விடுவான் குளிகன். 6ல் இருந்தால், எதிரிகளை அழிப்பான்; செப்படி வித்தை, மாயாஜாலம் ஆகியவற்றைக் கையாள்வான். 7ல் இருந்தால், சண்டைச் சச்சரவை ஏற்படுத்துவான். தரம் தாழ்ந்த மனைவியைப் பெற நேரிடும்; செய்நன்றியை மறக்கச் செய்வான். 8ல் இருந்தால், கண்கள் மற்றும் முகத்தின் அழகை இழக்க வாய்ப்பு உண்டு. 9ல் இருந்தால், தந்தை மற்றும் பெரியோரை வெறுக்க நேரிடும். 10ல் இருந்தால், சூடுசொரணை இல்லாதவராக மாற்றுவான்; தரத்துக்குச் சம்பந்தமில்லாத வேலையில் காலம் கடத்துவான். 11ல் இருந்தால், செல்வம், புகழ், வெகுமதி, வாழ்வில் உயர்வு, பெருந்தன்மை, சமூக அங்கீகாரம் ஆகியவற்றை அளிப்பான். 12ல் இருந்தால், ஆண்டியின் நிலையை ஏற்படுத்துவான்; அடுத்தவரிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளுவான். குளிகன், 11ல் மட்டும் நல்லவன்; மற்ற வீடுகளில் அவன் கெடுதலையே வழங்குவான் எனச் சுருக்கமாகச் சொல்வர். 11ல் அவன் ஆகலாம்; மற்ற பதினொன்றில் அவன் ஆகா என்கிற சொல்வழக்கு உண்டு. ஆனால் ஒன்று... அவனுடன் இணைந்த கிரகங்களின் சேர்க்கையில், குளிகை பலம் மாறுபடும் என்பதை மறக்கக்கூடாது.

வலுவான கிரகங்களுடன் இணையும்போது, குளிகனின் பலன் மங்கிவிடும். ஷட்பலம், ஷோடசபலம் ஆகியவற்றை ஆராயும்போது, குளிக பலனின் மாற்றத்தை அறியலாம். ஆழமான சிந்தனையின் அடிப்படையில், கிரகங்களின் தராதரத்தைச் சீர்தூக்கிப்பார்த்து, கூட்டுப்பலனை வெளியிடும் தருணத்தில், குளிக பலன் மாறுபாட்டைச் சந்திக்கும். குளிகன், சூரியனுடன் இணைந்தால், தகப்பனை வெறுப்பான்; சந்திரனுடன் இணைந்தால், தாயாருக்குத் துயரத்தைத் தருவான். செவ்வாயுடன் இணைந்தால், சகோதரனை இழப்பான்; அல்லது, வெறுப்பான். புதனுடன் இணைந்தால், மனநலம் குன்றும்; குருவுடன் இணைந்தால், நன்னடத்தை மறையும். சுக்கிரனுடன் இணைந்தால், தரம்தாழ்ந்த மனைவியுடன் வாழ்வான்; தரம் தாழ்ந்த பெண்களின் சேர்க்கையில் தனது உடல்நலனை அழித்துக் கொள்வான். சனியுடன் இணைந்தால், உலகவியல் இன்பத்தை அனுபவிப்பான். ராகுவுடன் இணைந்தால், ஈவு இரக்கம் இல்லாதவனாக மாறி, விஷம் வைத்து பிறரை அழிக்கவும் துணிவான். கேதுவுடன் இணைந்தால், நெருப்பு மூட்டிப் பொருட்களை அழிக்கவும் தயங்கமாட்டான். அவனது முடிவும் சில தருணங்களில் நெருப்பில் சேர்ந்துவிடும்.

குளிகன் இருக்குமிடத்தில் எந்த நட்சத்திரத்தின் தொடர்பு இருக்கிறதோ, அந்த நட்சத்திரத்தில் விஷக் கடிகையும் சேர்ந்திருந்தால், அரசனும் ஆண்டியாவான். குளிகோதய வேளையின் சேர்க்கை, பல கிரகங்களின் பலன்களை மாற்றி அமைக்கக் காரணமாகிறது. கண்ணில் இருக்கும் விழி சற்றே நகர்ந்திருந்தால், முகத்தின் மொத்த அழகையும் பாதிக்கும். திக்குவாய் சொல்லழகை இழக்கச் செய்யும். நீளமான கழுத்து, உடலழகை பாதிக்கும். ஏழ்மை வாட்டி வதைக்கும்போது, புத்திசாலியும் தவறு செய்வான். அதுபோல் குளிகனின் சேர்க்கை, விபரீத பலனையே தரும் என்பது ஜோதிடத்தின் கணிப்பு. குளிகனுடன் இணைந்த புதன், குளிக ராசிக்கு உடையவன் புதன் அல்லது குளிக ராசிக்கு உடையவனுடன் (மற்ற கிரகங்களுடன்) புதனின் சேர்க்கை, பார்வை ஆகியன இருப்பின், மன நலம் அற்றவர்களாக மாற்றிவிடும். அறிவு, சிந்தனை வளம் பெருக, புதனின் பங்கு உண்டு. அங்கு குளிக சேர்க்கை மன வளத்தைச் குன்றச் செய்யும். படிப்பில் ஈடுபாடு இன்மை, பாடங்கள் மனதில் பதியாதது, பதிந்தது நினைவுக்கு வராமல் தடுமாறுவது, அபஸ்மாரம், காக்காவலிப்பு, ஆராயும் திறன் இல்லாத நிலை, பிறருடன் இயைந்து பழக முடியாத குணம், எதிலும் பயம், பதற்றம், நம்பிக்கையின்மை ஆகிய அனைத்தும் குளிகன் சேர்க்கையில் விளையும் என்கிறது ஜோதிடம்.

பல விஷயங்களில் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி வெற்றி காண்பவர் கூட, குறிப்பிட்ட விஷயத்தில் மட்டும் சுணக்கத்துடன் இருப்பார்கள். உலகவியலில் கொடிகட்டிப் பறப்பவன், தாம்பத்தியத்தில் சூன்யமாக இருப்பான். மேதைத்தனம் குன்றி, எதையும் கிரகிக்கும் தகுதியை இழந்து, குழந்தை போல் முதிர்ச்சி அடையாத நிலையில் இருப்பார்கள். இவை எல்லாமே குளிகனின் செயல்கள்தான் ! மனதில் தோன்றும் எண்ணங்களையும், நிகழ்வுகளையும் வெளியே இருப்பதாக நினைத்து மனம் கலங்கும். நிலையும் அவனது சேர்க்கையில் நிகழும். இல்லாத சப்தம் காதில் விழுவதாகச் சொல்லி, அந்த ஒலி தம்மைத் துன்புறுத்துவதாக நினைத்து மனப்பிரமையில் வாடும் நிலைமையும் அவனுடைய அட்டகாசம்தான் ! ஆக, மன வளத்தைப் பல கோணங்களிலும் சிதறடிக்கும் திறன் அவனுக்கு இருப்பதால், மனதை ஆராயும் விஷயத்தில் குளிகனைப் பற்றிய தகவலும் சரியான முடிவுக்கு உதவும். ஆகவே, அவனைச் சேர்த்துப் பலன் சொல்வது பொருந்தும். இதனை பிரச்னை மார்க்கம், பிரச்னானுஷ்டான பத்ததி போன்ற நூல்கள் பரிந்துரைக்கின்றன. காலத்தின் அறிவை ஜோதிடம் புகட்டும். காலத்தில் அடங்கியுள்ள அனைத்தும் அதன் வடிவத்தில் அடங்கும். குளிகனும் அதில் அடங்கியிருப்பதால், அவனையும் கவனித்து முடிவுக்கு வருவதே உத்தமம் என்றனர் முன்னோர்கள். அவனது செயல்பாடுகளையும் விளக்கியுள்ளனர். ராகுகேதுவுக்கு மற்ற கிரகங்களின் தகுதி இல்லையாயினும், காலத்துடன் அவை இணைந்திருப்பதால் சேர்த்துப் பலன் சொன்னார்கள். அதுபோல், குளிகனையும் சேர்த்தால் தெளிவான பலன் கிடைக்கும்; ஏமாற இடமிருக்காது !

ராகு காலத்தையும் குளிகை காலத்தையும் கவனித்துப் பழக்கப்பட்ட நமக்கு, பிறந்த வேளையில் குளிகன் இருப்பதால் விளைகிற நன்மை தீமைகளை அறிந்து செயல்படுவது எளிது. நவக்கிரகங்களைப் போல், குளிகனும் வழிபடுகிற கிரகமாக இருப்பதால், அவனை வழிபடுவது சிறப்பு. கும் குளிகாயநம: எனும் பீஜாட்சர மந்திரத்தைச் சொல்லி, அவனுடைய உருவத்தை 16 உபசாரங்களுடன் வழிபடலாம். அதேபோல், மந்தாத்மஜாய வித்மஹே ரக்த நேத்ராய தீமஹி. தந்நோ குளிக: பிரசோதயாத் எனும் செய்யுளைச் சொல்லி, 16 உபசாரங்களைச் செய்து வழிபடலாம். நீலாஞ்ஜனஸங்காசோ ரக்தா÷ஷாவிஷமபீஷணோதீர்க்க: பஞ்சாஸ்யா: பிருது தம்ஷ்ட்ரோ பயங்கர: ஸர்வதாகுளிக: என்று சொல்லி வணங்கலாம். சனியின் புதல்வன் குளிகன். எனவே, எள்ளுருண்டை நைவேத்தியம் செய்து, குழந்தைகளுக்கு வழங்கலாம். அன்றாடப் பணிகளில் சிக்கித் தவிக்கும் நாம், சனிக்கிழமையில் மட்டுமேனும் சனி பகவானுடன் சேர்த்துக் குளிகனை வழிபடலாம். உற்சாகத்தில் தினமும் வழிபட நினைத்துச் செயல்பட்டால், பிறகு நடுவில் வழிபாடு நின்றுவிடலாம். ஈடுபாடும் குறையும். ஆகவே, வாரத்தில் ஒருநாள், ஒரு வேளை.. சனியை வணங்கும் வேளையில் குளிகனையும் சேர்த்து வணங்கினால், பொறுமையுடன் வழிபடலாம்; இயலாதவர்கள், நீராடிய பிறகு குளிகன் காயத்ரியை 12 முறை ஜபித்தாலே போதுமானது !
-------------------------------------------------------------------------------------------------------------------------
அவதாரங்களும் அவற்றின் ஆதார சக்திகளும்!

அம்பிகை பண்டாசுரனுடன் யுத்தம் செய்தபோது அவன், ஸர்வ அசுராஸ்திரம் எனும் அஸ்திரத்தால், ராவணன், பலி, ஹிரண்யாக்ஷன் முதலிய அசுரர்களை உண்டுபண்ணிப் போருக்கு அனுப்பினான். அவர்களை எதிர்க்க அம்பிகை தன் பத்து விரல்களிலிருந்து விஷ்ணுவின் பத்து அவதாரங்களை ஆவிர்பவிக்கச் செய்தாள்.

கராங்குளி நகோத்பன்ன நாராயண தசாக்ருதி : என்கிறது லலிதா சகஸ்ரநாமம். எந்த அவதாரத்திற்கு ஆதார சக்திகள் யார் யார் என்பதை அம்பாள் அஷ்டகம் விளக்குகிறது.

மத்ஸ்யாவதாரம் - கமலாத்மிகா: இவள் மகாலட்சுமியே. பொருள் மற்றும் அறிவு வறுமைகளையும் நீக்குபவள். அறிவுக் களஞ்சியமான வேதத்தைக் காக்க சக்தி அளிப்பவள்.

கூர்மாவதாரம் - பகளாமுகி: இவளை வழிபட்டால் ஜல ஸ்தம்பனம், அக்னி ஸ்தம்பனம் ஆகியவை செய்து நீரிலும் நெருப்பிலும் நிலை குலையாமல் வாழும் சித்தி கைகூடும். தன் அங்கங்களை உள்ளே சுருக்கி, ஸ்தம்பனம் செய்து கொள்ளும் பிராணி ஆமைதானே. பகளாமுகியே கூர்மாவதாரத்தின் உட்சக்தி.

வராஹ அவதாரம் - புவனேஸ்வரி: இவள் இதயாகாசத்தில் திகழும் ஞான வெளி. அன்பர்களுக்காகச் சிவந்த அன்னையாக வந்தவள். புவனம் முழுவதையும் நாசிமுனையில் தூக்கிய வராஹ அவதாரம் புவனேஸ்வரியின் ஆவிர்பாகம்.

நரசிம்ம அவதாரம் - திரிபுர பைரவி: திரிபுர பைரவி அன்பின் வடிவம். ஆனால் அச்சமூட்டக்கூடியவள். பைரவம் என்றால் அச்சமூட்டுதல். நரசிம்மமும் அப்படியேதான். அச்சமூட்டும் வடிவமானாலும் காருண்யமூர்த்தி.

வாமன அவதாரம் - தூமாவதி: நம் சிந்தனை என்கிற தவிட்டைப் புடைத்து, உண்மையான ஆத்ம அரிசியை நிற்கச் செய்யும் அனுக்கிரகம் செய்பவள் தூமாவதி. இவளைப் புகை சக்தி என்பர். ஒளிமய அக்னி இன்றிப் புகை ஏது? மஹாவிஷ்ணுவின் யோகநித்திரை இவள். இவளே வாமன சக்தி.

பரசுராம அவதாரம் - சின்னமஸ்தா: தன் தலையைத் தானே வெட்டிக் கொண்டு விளங்கும் வித்யுத் (மின்) சக்தியான இவளே பரசுராம சக்தி.

பரசுராமர் தன் அன்னையின் தலையை வெட்ட நேர்ந்ததல்லவா?

ராமாவதாரம் - தாரா: இவளது மந்திரமே ப்ரணவ தாரக மந்திரமான ஓம். தாரக நாமம் ராம நாமமே. அதற்கேற்ப ராமர் தாராவின் சக்தியாகக் கூறப்படுகிறார்.

கிருஷ்ணாவதாரம் - காளி: அழகும் அன்பும் உருவான கண்ணனே இவளது சக்தியைப் பெற்றவர். இவர் விளையாடியே காளியின் தொழிலாகிய சம்ஹாரத்தை மேற்கொண்டவர். காளியும் கருப்பு, இவரும் கருப்பு. காலோஸ்மி என்று கீதையில் கிருஷ்ணன் தன்னைக் குறிப்பிட்டுக் கொள்கிறார்.

பவுத்தாவதாரம் - மாதங்கி: வாக்தேவி மாதங்கியே பவுத்த அவதார உட்சக்தி.

கல்கி அவதாரம் - திரிபுரசுந்தரி: காமமாகிய மன்மதன் எரிந்ததும் அந்தச் சாம்பலிலிருந்து காமத்தின் விளைவே குரோதம் என்று காட்டவே பிறந்தான் பண்டாசுரன். இவனை திரிபுரசுந்தரி சம்ஹரித்தாள். மாதுளை நிறத்தவளான இவள் செவ்வாடையும் செம்மலரும் பூண்டு, இதயச் செம்மையின் உருவாக பிரும்மத்தின் எண்ணமற்ற சாந்தத்தில் தோன்றிய முதல் எண்ணமாகிய தன் உணர்வு என்ற சிவப்பாகத் திகழ்கிறாள்.

கலியுக முடிவில் கருமையான அந்தகாரம் சூழும்போது மனச் செம்மையை மீண்டும் உண்டாக்க அவதரிக்கும் கல்கி, இவள் அருள் விலாசமே ஆவார்.