வியாழன், 1 ஆகஸ்ட், 2019

ஐம்பெரும் காப்பியம் அறிமுகம்

பழந்தமிழ் இலக்கியங்களில், காப்பியங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. காப்பியம் என்பது தெய்வத்தையோ, உயர்ந்த மக்களையோ, கதைத் தலைவர்களாகக் கொண்ட நீண்ட செய்யுள் ஆகும். ஐம்பெருங்காப்பியங்கள் என்ற தொடரை முதலில் குறிப்பிட்டவர் மயிலை நாதர்.  அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்கள் அடங்கியவை காப்பியம் எனப்பட்டன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய ஐம்பெருங் காப்பியங்கள் தோன்றின. இந்த ஐந்தனுள் சிறப்புத் தகுதி வாய்ந்தவை சிலப்பதிகாரமும், மணிமேகலையும் ஆகும்.  இவ்விரண்டையும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைப்பர்.

இவ்விரண்டும் கதையில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது மட்டுமன்றி, சமகாலத்தில் தோன்றியவையாகும். பிற மூன்று காப்பியங்களும் சோழர் காலத்தில் தோன்றியவையாகும்.

காப்பியம் தமிழில் முக்கியபங்கு வகிக்கின்றன என்ற அடிப்படையில் ஒவ்வொரு காப்பியமும் ஒவ்வொரு சிறப்பினை பெற்று திகழ்கிறது. அதில் சிலப்பதிகாரம் தமிழில் தோன்றிய முதல் காப்பியமாகும். அடுத்ததான மணிமேகலை தமிழின் முதல் சமயக் காப்பியம் ஆகும். மூன்றாவதான சீவகசிந்தாமணி விருத்தப்பா என்ற யாப்பு வகையில் தமிழில் எழுந்த முதல் காப்பியம் என்பதுடன் காலத்தால் முதன்மை என்ற பெருமையும் பெற்றது. நான்காவதாக உள்ள வளையாபதியில் விருத்தப்பாவின் முன்னைய வளர்ச்சி நிலைகளை காணலாம் கடைசியாக உள்ள குண்டலகேசியோ  சமயப்பூசல் அடிப்படையில் தோன்றிய காப்பியம் ஆகும்.  ஐம்பெரும் காப்பியம் பற்றி தண்டி அலங்காரம் கூறும் இலக்கணம்

பெருங்காப்பிய நிலைபேசும் காலை
வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றின் ஒன்று ஏற்புடைத் தாகி முன்வர இயன்று நாற் பொருள் பயக்கும் நடைநெறித் தாகி கற்றோர் புனையும் பெற்றிய தென்ப.
96 வகை சிவலிங்கங்கள்!

ஓம் நம சிவாய! என்று நாம் நெக்குருகி பிரார்த்திக்கும்போது நம் கண் முன்னால் நிற்பது ஈசனின் லிங்க ரூபம்தான். ஏன் இப்படி சிவன் சிலா ரூபமாக இல்லாமல் லிங்க ரூபமாக வழிபடப்படுகிறார்? என்பதற்கு, லிங்க புராணம் ஒரு கதை சொல்கிறது. ஒருமுறை பிரம்மாவுக்கும் மகாவிஷ்ணுவுக்கும் இடையே தங்களில் யார் பெரியவர்? என்ற வாக்குவாதம் ஏற்பட்டபோது மிகப் பெரிய அக்னிகோளமாக அவர்கள் நடுவே தோன்றினார் சிவபெருமான். அதுவே முதன் முதலாக இறைவன் எடுத்த லிங்க வடிவம். அன்று முதல் லிங்கோத்பவம் உதயமாயிற்று. லிங்கோத்பவம் என்றால் லிங்கம் தோன்றுதல் என்று பொருள். அன்று முதல் இன்று வரை சிவபெருமான் லிங்க உருவத்திலேயேதான் வழிபடப்பட்டு வருகிறார். அவ்வாறு வழிபாட்டுக்குரிய லிங்கங்கள் பலவகையாகப் பகுக்கப்பட்டுள்ளன. அவை:

சுயம்பு லிங்கம் - தானாகவே இறைவனின் இச்சைப்படி தோன்றிய லிங்கம்.

தெய்வீக லிங்கம் - தேவர்களால் பூஜிக்கப்பட்டு ரிஷிகள் மூலமாக பூமிக்கு வந்த லிங்கம்.

அர்ஷ லிங்கம் - ரிஷிகளும் முனிவர்களும் தங்கள் வழிபாட்டுக்கென உருவாக்கிய லிங்கம்.

மனுஷ்ய லிங்கம் - சாதாரண மனிதர்களால் உருவாக்கப்பட்ட லிங்கம். இந்த லிங்கம் மேலும் பல வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. குறைந்தது 96 வகை மனுஷ்ய லிங்கங்கள் இருக்கலாம் என்று மகுடாகமம் என்னும் ஆகம நூல் கூறுகிறது.

இந்த 96 வகை லிங்கங்கள் அவற்றின் அமைப்பு அதாவது பீடத்தின் அளவு பாணத்தின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து மேலும் பிரிக்கப்படுகிறது. கீழே இருக்கும் சதுரப் பகுதி பிரம்ம பாகம் எனவும், நடுப்பகுதி விஷ்ணு பாகம் எனவும் மேற்பகுதி ருத்ர பாகம் எனவும் வழங்கப்படுகின்றன.

க்ஷணிக லிங்கம் : தற்காலிக வழிபாட்டுக்குப் பயன்படுவது. அந்தக் காலத்தில் நீண்ட தூரம் பயணம் செல்பவர்கள் தங்களுடன் லிங்கத்தை எடுத்துச் செல்லாமல் ஆங்காங்கே கிடைக்கும் தெய்வீகப் பொருட்களைக் கொண்டு அன்றைய பூஜைக்காக உருவாக்கும் லிங்கமே க்ஷணிக லிங்கம் எனப்படுகிறது. இத்தகைய லிங்கங்கள், மலர், அன்னம், சந்தனம், விபூதி ஆகிய பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படலாம். அவை உருவாக்கப்படும் பொருட்களுக்கேற்றவாறு பெயர் பெறுகின்றன. உதாரணம், பூக்களால் உருவாக்கப்பட்ட லிங்கம் க்ஷணிக புஷ்ப லிங்கம் எனப்படுகிறது.

வர்த்தமானக லிங்கம் : வழிபாட்டுப் பெருமைக்குரியது. பிரம்ம பாகமும், விஷ்ணு பாகமும் ஒரே அளவு இருந்து ருத்ர பாகம் மட்டும் அதைப்போல இரு மடங்கு இருப்பதே வர்த்தமானக லிங்கம் எனப்படும். இத்தகைய லிங்கம் வழிபடுவோருக்கு முக்தி அளிக்கவல்லது.

ஆத்ய லிங்கம் : இதில் மூன்று பாகங்களும் சமமான அளவு இருக்கும். இவை தவிர புண்டரீகம், விசாலா, வத்சா மற்றும் சத்ரு மர்த்தனா என்று நான்கு வகையாகப் பிரிக்கப்படுகிறது. புண்டரீக வகை லிங்கத்தை வழிபட்டால் பெரும் புகழும், விசாலா வகை லிங்கம் பெரும் பொருளும், வத்சா லிங்கம் எல்லா வளங்களும், சத்ரு மர்த்தனா எல்லாவற்றிலும் வெற்றியையும் தருவன என்கிறது ஆகம சாஸ்திரம். ஏக முக லிங்கம், சதுர் முக லிங்கம், பஞ்ச முக லிங்கம் என முகங்களின் அடிப்படையிலும் லிங்கங்கள் பகுக்கப்படுகின்றன. இதில் பஞ்ச முக லிங்கம் என்பது சிவனுடைய தத் புருஷ, அகோர, சத்யோஜாத, வாமதேவ, ஈசான முகங்களைக் குறிக்கும். சதுர்முக லிங்கம் என்பது ஈசான முகம் தவிர மற்ற நான்கும் கொண்டது. பஞ்சபூத லிங்கங்கள் என்றும் ஒரு வகை இருக்கிறது. அவை ப்ரித்வி லிங்கம் (பூமி), வாயு லிங்கம், ஜலலிங்கம், ஆகாச லிங்கம், தேஜோ லிங்கம் (அக்னி). இவை எல்லாமே மனுஷ்ய லிங்க வகைகள்தான்.

களிமண், உலோகம் அல்லது கற்களாலும் லிங்கங்கள் செய்து வழிபடலாம் என்று காமிக ஆகய நூல் கூறுகிறது. களி மண்ணிலேயே இரண்டு வகை லிங்கங்கள் செய்யப்படுகின்றன. சுட்ட களிமண் லிங்கம், சுடாத பச்சைக் களிமண் லிங்கம், சுட்ட களி மண் லிங்கம் பொதுவாக தாந்திரீகர்களாலும், அபிசார (பில்லி சூனிய) தோஷம் உடையவர்களாலும் வணங்கப்படுகிறது. இவை தவிர நவரத்தினங்களால் ஆன லிங்கங்களும் உண்டு. அவை பன லிங்கங்கள் எனப்படுகின்றன. சில முக்கியமான வகை லிங்கங்களையும் அவை தரும் பலன்களையும் பார்ப்போம்.

1. கந்த லிங்கம் : சந்தனம், குங்குமம், மற்றும் கஸ்தூரி ஆகியன கலந்து உருவாக்கப்படுவது. இது க்ஷணிக லிங்க வகையைச் சார்ந்தது. நம் தேவைக்கேற்ற அளவில் இதை உருவாக்கிக் கொள்ளலாம். வழிபடுவதால் சிவசாயுஜ்ய மோட்சம் எனப்படும் பிறப்பில்லாத நிலை சித்திக்கும்.

2. புஷ்ப லிங்கம் : பலவகையான வாசனையுள்ள மலர்களாலும், பல நிறம் கொண்ட அழகிய மலர்களாலும்,உருவாக்கப்படுவது. வழிபடுவதால் நில சம்பந்தமான பிரச்னைகள் தீரும், நல்ல சொத்தும் சேரும்.

3. கோசாக்ரு லிங்கம் : பழுப்பு நிறத்தில் உள்ள பசுவின் சாணத்திலிருந்து உருவாக்கப்படும் லிங்கம் இது. இதை வணங்கினால் வளம் பெருகும். இதுவும் க்ஷணிக லிங்க வகையே ஆகும்.

4. வாலுக லிங்கம் : சுத்தமான மணல் கொண்டு உருவாக்கப்படும் இதை வணங்கினால் கல்வியும் ஞானமும் உண்டாகும்.

5. யவாகோதுமாசாலிஜ்ஜ லிங்கம் : இந்த லிங்கம் யவை, சோளம், கோதுமை போன்ற தானியங்களின் மாவினால் உருவாக்கப்படுகிறது. இது குழந்தை பாக்கியத்தை அருளும்.

6. சீதாகண்ட லிங்கம் : இனிப்புகளால் உருவாக்கப்படும் இது, நல்ல உடல் ஆரோக்கியத்தை அளிக்க வல்லது.

7. லவண லிங்கம் : உப்போடு மஞ்சள் மற்றும் திரிகடுகம் எனப்படும் சித்த மருந்து கலந்து செய்யப்படுகிறது. இது மற்றவர்களை வசீகரிக்கும் சக்தியை அருள்கிறது.

8. திலாப்சிஷ்த லிங்கம் : எள்ளை அரைத்து செய்யப்படும் இது, எல்லா ஆசைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்யும்.

9. பாம்ச லிங்கம் : சாம்பல் கொண்டு செய்யப்படும் இது, எல்லா நற்குணங்களையும் வளர்க்கும்.

10. கூட லிங்கம் அல்லது சீதா லிங்கம் : வெல்லத்தால் செய்யப்படும் இது, மன நிம்மதியை அருளும்.

11. வன்சங்குர லிங்கம் : மென்மையான மூங்கில் இலைகளால் ஆனது இந்த வகை லிங்கம். வழிபடுவோருக்கு நோய் நொடியற்ற நீண்ட ஆயுளைத் தரும்.

12. பிஷ்டா லிங்கம் : அரிசிமாவினால் செய்யப்படும் இந்த லிங்கம், நல்ல கல்வியறிவைத் தரும்.

13. ததிதுக்த லிங்கம் : பாலிலிருந்தும் தயிரிலிருந்தும் முழுவதுமாக தண்ணீரை நீக்கிய பிறகு இந்த லிங்கம் உருவாக்கப்படுகிறது. வணங்கியோருக்கு மன மகிழ்ச்சியையும் வளங்களையும் அருளும் தன்மையது.

14. தான்ய லிங்கம் : நவ தானியங்களால் உருவாக்கப்படும் இந்த லிங்கம், விவசாயிகளுக்கு நல்ல விளைச்சலைத் தரும்.

15. பழ லிங்கம் : பல்வகையான பழங்களால் உருவான இது, பழத்தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு நல்ல பலனைத் தரும்.

16. தாத்ரி லிங்கம் : நெல்லிக்காயைக் கொண்டு உருவாக்கப்படும் இது, மிகவும் கஷ்டப்படுபவர்களுக்கு அந்த வாழ்விலிருந்து விடுதலையைத் தரும்.

17. நவநீத லிங்கம் : வெண்ணெயால் உருவான இது, பணமும் புகழும் தரும்.

18. கரிக லிங்கம் : விசேஷ வகைப் புல்லால் உருவாக்கப்படும் இது, துர்மரணத்தைத் தடுக்கும்.

19. கற்பூர லிங்கம் : கற்பூரத்தினால் இது உருவாக்கப்படுகிறது. சிறந்த ஞானத்தைத் தந்து மாயையை அழிக்கும்.

20. ஆயஸ்காந்த லிங்கம் : காந்தத்தால் உருவான இது, சித்தர்கள் வணங்கும் லிங்கம். அஷ்டமா சித்திகளையும் எளிதாக அளிக்க வல்லது.

21. மவுகித்க லிங்கம் : முத்துகளை எரித்த சாம்பலிலிருந்து உருவாக்கப்படும் லிங்கம். மங்களமும், செல்வ வளமும் அருளும் தன்மையது.

22. ஸ்வர்ண லிங்கம் : தங்கத்தால் உருவானது. முக்தி அளித்து பிறவா நிலைக்கு உயர்த்தும்.

23. ரஜத லிங்கம் : வெள்ளி லிங்கம். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

24. பித்தாலா லிங்கம் : பித்தளையால் உருவாக்கப்படும் இது, பழுத்த இலை மரத்திலிருந்து உதிர்வது போன்ற பயமில்லாத மரணத்தைத் தரும்.

25. திராபு லிங்கம் : தகரத்தால் செய்யப்படும் இந்த லிங்கம், வணங்குபவருக்கு எதிரிகளே இல்லாமல் செய்து விடும் தன்மை உடையது.

26. ஆயச லிங்கம் : கந்தக அமிலத்தால் செய்யப்படும் இந்த லிங்கம் எதிரிகளின் தொந்தரவை அழிக்கும்.

27. சீசா லிங்கம் : வெள்ளீயத்தால் செய்யப்படுகிறது இந்த லிங்கம். இதை வணங்குபவர்களை எதிரிகளால் நெருங்கவே முடியாதவாறு செய்யும் தன்மையது.

28. அஷ்டதாது லிங்கம் : எட்டு வகையான தாதுக்களால் உருவாக்கப்படும் இது, சித்தி அளிக்கவல்லது.

29. அஷ்ட லோக லிங்கம் : எட்டு வகையான உலோகங்களால் செய்யப்படும் இதை வணங்கினால் தொழுநோய் குணமாகும்.

30. வைடூர்ய லிங்கம் : நவ ரத்தினங்களுள் ஒன்றான வைடூரியத்தால் உருவான இது, எதிரிகளின் எதிர்பாராத தாக்குதலிலிருந்து காப்பாற்றும்.

31. ஸ்படிக லிங்கம் : ஸ்படிகத்தால் ஆன இது, எல்லா ஆசைகளையும் நிறைவேற்றும்.

32. பாதரச லிங்கம் : பாதரசத்தால் ஆனது இந்த லிங்கம். அளவிட முடியாத செல்வத்தைக் கொடுக்கும்.

மேற்கூறிய 32 வகைகளில் முதல் 19 க்ஷணிக லிங்க வகையைச் சேர்ந்தவை. மற்றவை மனுஷ்ய லிங்க வகையைச் சேர்ந்தவை. இந்திரன் மணி மாய லிங்கத்தையும், சூரியன் தாமரமய லிங்கத்தையும், சந்திரன் முக்தி லிங்கம் எனப்படும் முத்துகளால் ஆன லிங்கத்தையும், குபேரன் ஹேம லிங்கம் எனப்படும் தங்கத்தால் ஆன லிங்கத்தையும் அணிந்திருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. நாமும் ஆகம சாஸ்திரங்கள் கூறும் பலவிதமான லிங்கங்களையும் வழிபட்டு எல்லா வளங்களும் பெற்று இந்த உலகில் வாழ்வாங்கு வாழ்வோம்!
 இப்படி ஒரு ஊரா?

வரராசைபுரம்.. இந்த ஊர் தமிழகத்தின் தென்பகுதியில் இருக்கிறது. இப்படி ஒரு ஊரா... கேள்விப்பட்ட மாதிரியே இல்லை என்பவர்கள், இந்தப் பட்டியலைப் படித்தால், உடனே இந்த ஊருக்குப் புறப்பட்டு விடுவீர்கள்.

இங்கு ஒருநாள் தங்கினால் முற்பிறவியில் செய்த பாவமும், இரண்டு நாள் தங்கினால் இப்பிறப்பில் செய்த பாவமும், மூன்று நாள் தங்கினால் மறுபிறவியில் பாவமே செய்ய இயலாமனநிலையும் ஏற்படும். ஞாயிறன்று இங்கு சூரியனை மனதில் நினைத்து விரதமிருப்பவர் கண் வியாதியின்றி இருப்பர். திங்களன்று சந்திரனை நினைத்து விரதமிருப்பவர் வாழ்வுக்குப் பின் சிவலோகம் அடைவர். செவ்வாயன்று விரமிருப்பவர் நோய் மற்றும் சனிதோஷத்தில் இருந்து நிவர்த்தி பெறுவர். புதனன்று விரதமிருப்பவர்கள் கல்வியில் சிறப்பாகத் திகழ்வர். வியாழன்று விரதமிருந்தால், ஆசிரியர் பதவி பெறலாம். (டி.இ.டி. தேர்வு எழுதுவோர் சென்று வரலாம்) வெள்ளியன்று விரதமிருப்போர் இந்திரனைப் போல் செல்வவளத்துடன் வாழ்வர். சனிக்கிழமை விரதமிருப்பவர் பொறாமை முதலிய துர்க்குணங்கள் நீங்கப்பெறுவர். ஒரு வருடம் பழமும், ஒரு வருடம் சருகும், ஒரு வருடம் தண்ணீரும், ஒரு வருடம் அதுவும் கூட இல்லாமல் விரதமிருந்தார்கள் அந்தகால ரிஷிகள். இது எதுவுமே இங்கு தேவையில்லை.. ஒரே ஒரு வேளை பட்டினி இருந்து இத்தலத்து இறைவனை வணங்கினாலே போதும்... பல நூறு யாகங்கள் செய்பலன் கிடைத்து விடும்.

அப்பாவை கோபத்தில் அடித்திருந்தால்... ஆசிரியரை நிந்தனை செய்திருந்தால்...நம்மை நம்பி பிறர் கொடுத்பொருளை திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றியிருந்தால்... பிறரை ஏமாற்றி இருந்தால்.. ஏழைகளுக்கு தானம் செய்யாமல் பாவம் செய்திருந்தால்...இந்த வரராசைக்கு வந்தால் போதும். கொடிய பாவங்கள் நீங்கிவிடும். இக்கோயிலில் புற்றுமண்ணே பிரசாதம். இøஅத்தலத்து இறைவனே தருகிறார். அதனால், இøவிட உயர்ந்தலம் வேறில்லை. சிவகணங்களில் நந்ததீஸ்வரர், நவரத்தினங்களில் வைரமும், ராசிகளில் சிம்மமும், தேவர்களில் இந்திரனும், மிருகங்களில் கஸ்தூரி பூனையும், இலைகளில் வில்வமும், பாணங்களில் பாசுபதாஸ்திரமும், சக்திகளில் உமாதேவியும், பூக்களில் தாமரையும், குருக்களில் வியாழ பகவானும், முனிவர்களில் அகத்தியரும், பிள்ளைகளில் பகீரதனும் எப்படி உயர்ந்ததோ...அதுபோல், தலங்களிலேயே வராரசை தான் உயர்ந்தது. இதற்கு புன்னைவனம், சீரரசை என்றும் பெயருண்டு. இங்கே ஒரு சிவனடியாருக்கு தானம் செய்தால் மற்ற தலங்களில் லட்சம் சிவனடியார்களுக்கு சேவை செய்தபலன் கிடைக்கும்.



ஒரு பசுவை பிராமணருக்கு தானம் செய்தால், தேவலோகத்து காமதேனுவே அவர்களுக்கு பணிவிடை செய்ய வரும். இங்குள்ள குளத்தில் நீராடினால் குழந்øபாக்கியம் உண்டு. இங்கே தன் ஒரு மகளுக்கு திருமணம் முடித்தால் கூட, ஆயிரம் கன்னிகாதானம் செய்த பாக்கியம் கிடைக்கும். இவற்றை வேதவாக்கியமென நம்புவோர் மோட்சம் அடைவர் என்கிறார் புராணக்கதைகளை உலகுக்கு அளித்த சூதமுனிவர். இந்தத்தலம் எதுவென இன்னும் புரியவில்லையா? சங்கரனாகிய சிவனும், நாராயணனாகிய திருமாலும் இணைந்திருக்கும் சங்கரநாராயணர் கோயில்.... கோமதி அம்பாள் சமேசங்கரலிங்க சுவாமி கோயில்...ஊர் பெயர் சங்கரன்கோவில். இங்கே வரும் 22ல் ஆடித்தபசு விழா நடக்கிறது. வாழ்வில் ஒருமுறையாவது இங்கே சென்று வந்து விடுவீர்கள் தானே!

இருப்பிடம் : மதுரையில் இருந்து 120 கி.மீ., போன்: 04636 222 265.

ுர்க்கையின் பொருள்!

ஆடிப்பூரத்தன்று சிவாலய பிரகாரங்களில் வடக்கு நோக்கியுள்ள துர்க்கையை வழிபடுவது மிகவும் விசேஷம். துர்காவிற்கு என்ன அர்த்தம் தெரியுமா?‘ துர்க்கம்’ என்றால் ‘மலை’, அரண், மலைக்கோட்டை, அகழி என பல பொருள்கள் உண்டு. எதிரிகள் ஒரு நாட்டிற்குள் புகாதபடி தடுப்பவை இவை. அதுபோல நமக்கு வரும் அகப்பகை, புறப்பகைகளை தடுத்துநிறுத்தும் வழிபாடு துர்க்கை வழிபாடாகும். வீரம் என்பதன் குறியீடாகத் திகழும் துர்க்கையின் திருவடிகளைப் பணிந்தோருக்குத் துன்பம் இல்லை.  மனிதர்களின் பயத்தினைப் போக்கி, வெற்றியைத் தருபவள் இவளே. பலவீனமான எண்ணங்களை அடியோடு போக்குவதில் நிகரற்றவள். நல்லவர்களுக்கு நன்மைகளை அருள்வதோடு, அவர்களை தீயோரிடமிருந்து காப்பவளும் இவளே. ‘ஜெய் ஸ்ரீ துர்கா’ என்று ஜபிப்பவரை அவள் காத்து அருள்புரிவாள். இத்தேவி வனதுர்கா, சூலினி துர்கா, ஜாதவேதோ துர்கா, சாந்தி துர்கா, சபரி துர்கா, ஜ்வாலதுர்கா, தீபதுர்கா, லவண துர்கா, ஆசூரி துர்கா  என   ‘நவதுர்கா’ எனப்படுகிறாள்.




ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா!

தமிழகத்திலுள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர் வரத்து அதிகமாகி பெருக்கெடுத்து ஓடும். நதிகளும் நீர் நிரம்பி காணப்படும். பயிர்  செழிக்க வளம் அருளும் அன்னை காவிரிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆடி 18-ல் பதினெட்டாம் பெருக்கு விழா, நதிக்கரைகளிலும்  ஆற்றங்கரைகளிலும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள காவிரி, பெண்ணை, பொருணை ஆகிய மூன்று நதிகளிலும் ஆடிப்  பதினெட்டு கொண்டாடுவதை, மூவாறு பதினெட்டு எனக் குறிப்பிடுவார்கள்.வீட்டிலேயே செய்யலாம் ஆடிப்பெருக்கு பூஜை: காவிரிக்கரையோரம் உள்ளவர்கள் மட்டுமே ஆடிப்பெருக்கைக் கொண்டாட வேண்டும்  என்பதில்லை. ஆடிப்பெருக்கு பூஜையை நம் வீட்டிலும் எளிய முறையில் செய்யலாம். ஒரு செம்பில் அரைத்த மஞ்சளை சிறிதளவு  போடவேண்டும். நிறைகுடத்திலிருந்து அந்த செம்பில் நீர் எடுத்ததும், மஞ்சள் கரைந்துவிடும். திருவிளக்கேற்றி அந்த நீரை விளக்கின்  முன் வைக்க வேண்டும். தண்ணீரில் உதிரிப் பூக்களைப் போட வேண்டும். கற்பூர ஆரத்தி அல்லது நெய்தீபம் காட்டி கங்கை, யமுனை,  நர்மதை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களை மனதில் நினைத்து, முன்னொரு காலத்தில் எங்களை மூதாதையர்  உங்களை புனிதமாகக் கருதி வழிபட்டதுபோல் எங்களுக்கும் அத்தகைய மனநிலையைத் தாருங்கள் என்று வேண்டுங்கள். காவிரியையும்  தாமிரபரணியையும் நமக்களித்த அகத்திய முனிவரை மனதார வணங்குங்கள். பூஜை முடிந்ததும் செம்பிலுள்ள நீரை செடி, கொடிகளில்  ஊற்றி விட வேண்டும். அன்று சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் செல்வம் கொழிக்கும் என்பது  நம்பிக்கை.காவேரிக்கு பெருமாள் தரும் சீர்வரிசை: ஸ்ரீரங்கத்தில் அருள்பாலிக்கும் பெருமாள், ஆடிப்பதினெட்டு அன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில்  உள்ள படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு அபிஷேக ஆராதனைகள் முடிந்ததும், அன்று மாலை புடவை, திருமாங்கல்யம்,  வெற்றிலைபாக்கு, பழங்கள் முதலிய சீர் வரிசைகளை யானையின் மேல் ஏற்றி ஸ்ரீரங்கம் கோயிலிருந்து அம்மா மண்டபம்  படித்துறைக்குக் கொண்டு வருவார்கள். பெருமாள் முன் அந்தச் சீர்வரிசைகளை வைத்து ஆராதனைகள் செய்த பின் அவற்றை  காவிரிக்கு சமர்ப்பிப்பார்கள். காவிரிக்கு பெருமாள் சீர்வரிசை அளிக்கும் இக்காட்சியைக் கண்டால் கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது  ஐதீகம்.காவிரியில் ராமன்: ராமபிரான் அசுரர்களை வதம் செய்த பாவம் நீங்க, வசிஷ்ட முனிவரிடம் வழி கேட்டார். வசிஷ்டர், அறுபத்தாறு கோடி  தீர்த்தங்களைத் தன்னிடம் கொண்ட காவிரிக்கு, தட்சிண கங்கை என்று பெயர். அந்நதியில் நீராடினால் உன் பாவ உணர்வுகள் நீங்கும்  என்று கூறினார். அதன்படி ராமச் சந்திரன் காவிரியில் நீராடிய நாள் ஆடிப்பெருக்கு என்று ஒரு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.மங்களச் சரடு: தென்னிந்தியாவில் திரிவேணி எனப்படும் பவானி கூடுதுறையில் சங்கமேஸ்வரர் கோயிலின் நடை ஆடிப்பதினெட்டு  அன்று அதிகாலையில் திறக்கப்படும். மக்கள் கூடுதுறையில் நீராடிவிட்டு இறைவனை வழிபடுவார்கள். அம்மனுக்கு தேங்காய், பழம், பூ,  காதோலை கருகமணி படைத்து ஆராதனை செய்வார்கள். பூஜையில் வைத்த மஞ்சள் சரடினை பெண்கள் கழுத்திலும் ஆண்கள்  வலதுகை மணிக்கட்டிலும் அணிந்து கொள்வர். இதனால் வீட்டில் மங்கள காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை.ஆடிப்பெருக்கு வந்தாச்சு: தட்சிணாயன புண்ணிய காலம் என்று சூரியனின் தென்திசைப் பயணத்தைக் குறிப்பிடுவர். இதில் முதல்  மாதமாக ஆடியில் விவசாயிகள் உழவுப்பணிகளைத் துவங்குவர். ஆடிப்பட்டம் தேடிவிதை என்று சொல்வதுண்டு. நாடு செழிக்கத்  தேவையான நீரைப் போற்றிப் பாதுகாக்கவேண்டும் என்ற நோக்கத்தில் நதியைத் தெய்வமாகப் போற்றி வழிபட்டவர்கள் நம் முன்னோர்.  அதற்குரிய வழிபாட்டு நாளாக ஆடி பதினெட்டாம் நாளைத் தேர்ந்தெடுத்தனர். அன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடினர். இந்த விழா  இப்போதும் காவிரிக்கரை மாவட்டங்களில் சிறப்பாக நடக்கிறது. இந்நாளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறைவேறும் என்பது  ஐதீகம். ஆடி18ல் காவிரியில் நீராடி, காவிரி அன்னையை வழிபட்டு மஞ்சள், குங்குமம், மலர், வஸ்திரம் சமர்ப்பிப்பர். புதுமணத்தம்பதிகள்  புதுமஞ்சள் கயிறு மாற்றிக் கொள்வர். ஆடிப்பெருக்கன்று, வீட்டில் கொடிவகைகளான அவரை, பீர்க்கு, புடலை போன்ற பயிர்க்குழி  போடுவதும் உண்டு. நகை, பொருட்கள் வாங்கவும் நல்லநாள்.நகை வாங்க நல்ல நாள்: அட்சய திரிதியையை விட, ஆடிப்பெருக்கு நன்னாள் நகை வாங்க உயர்ந்த நன்னாளாகக் கருதப்படுகிறது.  இந்நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம். நாம் செய்கின்ற நற்செயல்களால், புண்ணியம் எப்படி பெருகுகிறதோ,  அதுபோல் இந்நாளில் துவங்கும் சேமிப்பும் பல மடங்காய் பெருகும் என்பர். ஆடிமாதத்தில் பொதுவாக புதுத்தொழில் துவங்குவதில்லை  என்பர். ஆனால், ஆடிப்பெருக்கு மட்டும் விதிவிலக்காகும்.


 காமாட்க்ஷி அம்மன்

காஞ்சீபுரத்தில் காமாட்க்ஷி அம்மன் தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் இல்லாத விசேஷமாக லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகியோரின் ஒரே உருவமாக இருக்கிறாள். பார்வதியின் (காமாட்க்ஷி) இரு கண்களாக லட்சுமியும் சரஸ்வதியும் உள்ளார்கள். எனவே பவுர்ணமி நவராத்திரி போன்ற முக்கிய தினங்களில் இத்தலத்துக்கு வந்து அம்மனை தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாகும். சாந்த சொரூபமாக காட்சியளிக்கும் காமாட்சி அன்னை இத்தலத்தில் மூன்று ஸ்வரூபமாக அதாவது காரணம் (பிலாஹாசம்) பிம்பம் (காமாட்க்ஷி) சூட்சமம் (ஸ்ரீசக்கரம்) ஆக வீற்றிருக்கிறாள்.

அவள் வீற்றிருக்கும் இடம் காயத்ரி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. அந்த மண்டபத்தில் பல ரிஷிகள் தவம் இருந்து காமாட்க்ஷியின் அருள் பெற்றுள்ளனர். இந்த மண்டப பகுதியில் இருந்து பார்த்தால் அன்னை முன்பு ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதை பார்க்க முடியும். காமாட்க்ஷிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் போது இந்த ஸ்ரீசக்கரத்துக்குதான் குங்கும அர்ச்சனை நடத்தப்படும். இந்த சக்கரத்தை சிலாரூபமாக இங்கு ஸ்ரீஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். இதனால் இத்தலத்தில் ஸ்ரீவித்யா உபாசன வழிபாடு நடத்தப்படுகிறது. இது ஸ்ரீசக்கரத்தை அடிப்படையாகக் கொண்டது. அதிசக்தி வாய்ந்த இந்த ஸ்ரீசக்கரத்தை சுற்றி அறுபத்தி நான்கு கோடி தேவதைகள் வீற்றிருக்கிறார்கள். இந்த ஸ்ரீசக்கரம் ஒன்பது ஆவரணங்களைக் கொண்டது. ஆவரணம் என்றால் பிரகாரம் அல்லது சுற்று என்று பெயர். ஸ்ரீசக்கரத்தின் ஒவ்வொரு சுற்றிலும் அதாவது ஒவ்வொரு ஆவரணத்துக்குள்ளும் ஒரு முத்ரா தேவதை, ஆவரண தேவதைகள், யோகினி தேவதைகள், பரிவாரம் தரும் சக்தி தேவதைகள், மற்றும் சித்தியை தரும் அணிமா, லகிமா, மகிமா, ஈப்சித்வ், வசித்வ, பிரகாம்ய, புத்தி, கிச்சா, பிராப்தி ஆகிய ஒன்பது சித்தி தேவதைகள் உள்ளனர்.



பவுர்ணமி தினத்தன்று இந்த ஒன்பது நவாவரண சுற்றுக்கும் ஒவ்வொரு சுற்று வீதமாக சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். ஒன்பது சுற்றுக்களுக்கும் பூஜை நடக்கும் போது சங்கு தீர்த்தமும் இடம் பெற்றிருக்கும். ஒன்பது ஆவரணத்துக்கும் பூஜைகள் முடிந்த பிறகு பிந்து ஸ்தானத்தில் வீற்றிருக்கும் காமாட்சி அம்பிக்கைக்கு ஆராதனைகள் நடைபெறும். இது தான் நவாவரண பூஜை ஆகும். இந்தப் பூஜை மிகச் சிறப்பானது. விசேஷமான பலன்களைத் தரவல்லது. நன்கு உபதேசம் பெற்றவர்கள் தான் இந்த பூஜையை செய்ய முடியும். நவாவரண பூஜையின் அளவிடற்கரிய பலன்களை ஏழை எளியவர்களும், சாதாரண மக்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் காமாட்க்ஷி அன்னை முன்பு ஸ்ரீசக்கரத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார்.

அந்த ஸ்ரீசக்கரத்தை சாதாரணமாக தரிசனம் செய்தாலே பலன்கள் வந்து சேரும். அப்படி இருக்கும் போது புனிதமான பவுர்ணமி தினத்தில் ஸ்ரீசக்கரத்தின் ஒன்பது சுற்றுக்களிலும் உள்ள தேவதைகளுக்கு பூஜைகள் நடப்பதை கண்டு தரிசனம் செய்தால் கோடான கோடி பலன்கள் நம்மை நாடி வரும் என்பதை புரிந்து கொள்ளலாம். அது மட்டுமல்ல…. ஸ்ரீசக்கரத்தை சுற்றியுள்ள கவசங்களில் அஷ்ட லட்சுமிகள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். எனவே ஸ்ரீசக்கரத்தில் இருந்து பெறப்படும் குங்குமத்துக்கு எல்லையற்ற சக்தி உண்டு. இந்த குங்குமத்தை பெற்ற பிறகு நவாவரண பூஜையில் படைக்கப்பட்ட சங்கு தீர்த்த பிரசாதத்தையும் நீங்கள் பெற்று விட்டால் பாக்கிய சாலிதான்.
அறுபடைவீடு-6

அருள் மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

மூலவர் : தம்பதியருடன் முருகன்
உற்சவர் : வள்ளி தெய்வயானையுடன் முருகன்
அம்மன் : வள்ளி தெய்வயானை
தல விருட்சம் : நாவல்
தீர்த்தம் : நூபுர கங்கை
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
ஊர் : சோலைமலை
மாவட்டம் : மதுரை
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : அருணகிரிநாதர்

திருப்புகழ் : அகரமு மாகிஅதிபனு மாகிஅதிகமு மாகி அகமாகி -
அயனென வாகிஅரியென வாகிஅரனென வாகி அவர்மேலாய்;
இகரமு மாகி யைவைகளு மாகியினிமையுமாகி வருவோனே - இருநில மீதி லெளியனும் வாழ எனதுமுனோடி வரவேணும்
மகபதி யாகிமருவும்வ லாரி மகிழ்களி கூரும்வடிவோனே வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம முடையோனே
செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு மயிலோனே -
திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு பெருமாளே.
-அருணகிரிநாதர்  
      
விழா : தமிழ்வருடப்பிறப்பு, வைகாசி விசாகம், ஆடி கார்த்திகை, ஆவணி பூரத்தில் வருஷாபிஷேகம், கந்தசஷ்டி, கார்த்திகை சோமவாரம்,திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம்.  
      
சிறப்பு : முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இது ஆறாவது படைவீடாகும். சாதரணமாக நாவல் மரத்தில் பழங்கள் ஆடி, ஆவணி மாதத்தில் தான் பழுக்கும். ஆனால், இத்தலத்து நாவல் மரத்தில் மட்டும் பழங்கள் முருகனின் திருவருளால் சஷ்டி மாதமாகிய ஐப்பசியில் பழுக்கும் அதிசயத்தை காணலாம்.  
      
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். 
    
அருள் மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சோலைமலை(பழமுதிர்ச்சோலை), அழகர்கோவில்- 625301. மதுரை மாவட்டம்.போன்:+91- 452-247 0228 


     
தகவல் : முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூலஸ்தானத்தில் தம்பதியருடன் காட்சி தரும் கோயில் சோலைமலை மட்டுமே. கந்தசஷ்டி விழாவின் தொடர்ச்சியாக இங்கு திருக்கல்யாணம் நடத்தப்படும். முருகன் அவ்வையாரிடம் "சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?' என்ற திருவிளையாடலை நிகழ்த்தியது இங்கு தான்.

ஸ்தல பெருமை : ஆரம்ப காலத்தில் இங்கு வேல் மட்டுமே இருந்தது. பிற்காலத்தில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் ஞான தியான ஆதி வேலுடன் ஒரே பீடத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் சிலை அமைக்கப்பட்டது.முருகனுக்கு வலப்புறம் வித்தக விநாயகர் வீற்றிருக்கிறார். ஆறுபடை வீடுகளில் இங்கு மட்டும் தான் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். இங்குள்ள நூபுர கங்கை தீர்த்தத்தில் நீராடி காவல் தெய்வமான ராக்காயி அம்மனை தரிசிக்கலாம். இத்தீர்த்தம் சுவையானது. சாதரணமாக நாவல் மரத்தில் பழங்கள் ஆடி, ஆவணி மாதத்தில் தான் பழுக்கும். ஆனால், இத்தலத்து நாவல் மரத்தில் மட்டும் பழங்கள் முருகனின் திருவருளால் சஷ்டி மாதமாகிய ஐப்பசியில் பழுக்கும் அதிசயத்தை காணலாம். மலையடிவாரத்தில் கள்ளழகர் திருக்கோயிலும், மலைமீது சோலைமலை முருகன் கோயிலும் அமைந்துள்ளன.

ஸ்தல வரலாறு : தமிழ்பாட்டி அவ்வையார் முருகனிடம் மிகவும் அன்பு கொண்டவர். முருகன் அவ்வைக்கு அருள் புரிந்து, இந்தஉலகிற்கு பல நீதிகளை உணர்த்த நினைத்தார்.ஒரு முறை அவ்வை கடும் வெயிலில் மிகவும் களைப்புடன் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவரது நிலையறிந்த முருகன் மாட்டுக்கார சிறுவனாக வேடமணிந்து, அவ்வை செல்லும் வழியிலிருந்த நாவல் மரக்கிளையில் அமர்ந்து கொண்டார். களைப்புடன் வந்த பாட்டி இந்த மரத்தின் கீழ் அமர்ந்து சற்று இளைப்பாறினார். இதனை மரத்தின் மீது அமர்ந்திருந்த சிறுவன் பார்த்து, ""என்ன பாட்டி! மிகவும் களைப்புடன் இருக்கிறீர்களே? தங்களது களைப்பை போக்க நாவல் பழங்கள் வேண்டுமா?'' என்றான். சந்ததோஷப்பட்ட பாட்டி ""வேண்டும்''என்றார்.உடனே முருகன்,""பாட்டி! தங்களுக்கு சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?''என்றான். இதனைக்கேட்டு திகைப்படைந்த பாட்டி ஏதும் புரியாமல்,""சுட்ட பழத்தையே கொடேன்''என்றார்.சிறுவன் கிளையை உலுக்கினான். நாவல் பழங்கள் உதிர்ந்தன. கீழே விழுந்ததால் மணல் அதில் ஒட்டிக்கொண்டது. அவ்வை அதை எடுத்து மணலை அகற்றுவதற்காக வாயால் ஊதினார். இதை வேடிக்கை பார்த்துகொண்டிருந்த சிறுவன்,""பாட்டி! பழம் மிகவும் சுடுகின்றதோ?, ஆறியவுடன் சாப்பிடுங்கள்''என்று கூறி சிரித்தான்.சிறுவனின் மதிநுட்பத்தை அறிந்த பாட்டி, மரத்தில் இருப்பவன் மானிடச் சிறுவனல்ல என்பதைப் புரிந்து கொண்டார். பின்னர் முருகன் தன் சுயவடிவில் அவருக்கு அருள்பாலித்து முக்தி தந்தார். முருகன் இந்த திருவிளையாடலால் உலகிற்கு ஒரு தத்துவத்தை உணர்த்தினார். அதாவது, "உயிர்களின் மீது "உலகப்பற்று' என்னும் மணல் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதைப் போக்க வெறும் கல்வியறிவு மட்டும் போதாது. இறைவனை அறியும் மெய்யறிவும் தேவை. பற்றை அகற்றினால் இறைவனை உணரலாம்' என்பதே அது.
108 திவ்ய தேசங்கள் : அருள் மிகு அனந்த பத்மநாபன் திருக்கோயில்

மூலவர் : அனந்த பத்மநாபன்
தாயார் : ஸ்ரீ ஹரிலஷ்மி
தீர்த்தம் : மத்ஸ்ய, பத்ம, வராஹ தீர்த்தங்கள்
பழமை : 3000 வருடங்களுக்கு முன்
ஊர் : திருவனந்தபுரம்
மாவட்டம் : திருவனந்தபுரம்
மாநிலம் : கேரளா
பாடியவர்கள் : நம்மாழ்வார்
      
கெடும் இடராயவெல்லாம் கேசவா வென்னும்-நாளும்
கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்
விடமுடையரவின் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடைவயல் அனந்தபுர நகர் புகுதும் இன்றே. நம்மாழ்வார்  
      
விழா : பங்குனி, ஐப்பசியில் பிரம்மோற்ஸவம் நடக்கும். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நாற்பத்தி ஒர் நாட்கள் நடக்கும் முறை ஜபத்தின் போது லட்சதீபம் நடக்கும்.  
      
சிறப்பு : பெருமாளின் திருப்பதிகளுள் இதுவும் ஒன்று இத்தல பெருமாள் பன்னிரெண்டு ஆயிரம் சாளக்கிராம கற்களால் ஆனதாகும். பெருமாளின் திருமேனி பதினெட்டு அடி நீளம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.  
      
திறக்கும் நேரம் : காலை 04:15 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 05:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு அனந்த பத்மநாபன் திருக்கோயில், திருவனந்தபுரம் - 695001 கேரளா மாநிலம். போன் : +91 - 471 - 245 0233 


     
தகவல் : மூலவர் ஹேம கூடவிமானத்தின் கீழ் வீற்றிருக்கிறார். கோயிலின் தென்புறம் பிரகாரத்தில் யோக நரஸிம்ஹனும், சன்னதிக்கு முன்னால் ஹனுமானும் ஸந்நிதிக்குப் பின்னால் கிருஷ்ணனும் காட்சி தருகின்றனர். ஹனுமான் மீது சாத்தப்படும் வெண்ணெய் எவ்வளவு நாளானாலும் எந்த வெயில் காலத்திலும் உருகுவதுமில்லை, கெட்டுப் போவதுமில்லை. லக்ஷ்மி வராஹர் கோயிலும், ஸ்ரீநிவாஸர் கோயிலும் தெற்குப் பக்கத்தில் உள்ளன.  
     
ஸ்தல பெருமை : ஆரம்பத்தில் இலுப்பை மரத்தில் செய்யப்பட்ட மூல விக்ரகம் 1686 - ல் தீப்பிடித்தது. அதன் பின்னர் கடுசர்க்கரை யோகம் என்னும் கலவையால், 12 ஆயிரம் சாளக்கிராம கற்களை (நாராயணனின் வடிவமான கல் வகை) இணைத்து புதிய சிலை உருவாக்கப்பட்டது. இது ஒரு அபூர்வ சிலையாகும். அதையே இப்போது தரிசனம் செய்கிறோம். அனந்தன் மீது பள்ளி கொண்ட அனந்த பத்மநாப சுவாமி விக்ரகம் பதினெட்டு அடி நீளம் உடையது. உடல் முழுவதும் தங்கத்தகட்டால் பொதியப்பட்டிருக்கிறது.  
      
ஸ்தல வரலாறு : வில்வமங்கலத்து சாமியார் என்பவர் நாராயணனுக்கு தினமும் பூஜை செய்து வந்தார். பூஜை நடக்கும் நேரங்களில் பகவான் ஒரு சிறுவனின் வடிவில் வந்து சாமியாருக்கு தொந்தரவு கொடுப்பார். சாமியாரின் மீது ஏறி விளையாடுவதும் பூஜைக்குரிய பூக்களை நாசம் செய்வதும் பூஜை பாத்திரங்களில் சிறுநீர் கழிப்பதும் மாயக்கண்ணனின் லீலைகளாக இருந்தன. சாமியாரின் சகிப்புத் தன்மையை பரிசோதிக்க இப்படி நடந்ததாக வரலாறு கூறுகிறது. ஒரு நாள் கண்ணனின் தொந்தரவை சகிக்க முடியாத சாமியார் கோபத்தில் உண்ணீ! (சின்ன கண்ணா) தொந்தரவு செய்யாமல் இரு எனக் கூறி அவனைப் பிடித்து தள்ளினார். கோபம் அடைந்த கண்ணன் அவர் முன் தோன்றி பக்திக்கும் துறவுக்கும் பொறுமை மிகவும் தேவை. உம்மிடம் அது இருக்கிறதா என சோதிக்கவே இவ்வாறு நடந்தேன். இனி நீர் என்னைக் காண வேண்டுமானால் அனந்தன் காட்டிற்குத் தான் வரவேண்டும் எனக் கூறி மறைந்து விட்டார். தன் தவறை உணர்ந்த சாமியார் அனந்தன் காடு என்றால் எங்கிருக்கிறது என்றே தெரியாதே என்ற கவலையில் புறப்பட்டார். பல நாள் திரிந்தும் காட்டைக் கண்டு பிடிக்க முடியவில்லை. பலரிடம் கேட்டும் அனந்தன் காடு எங்கிருக்கிறது என அறியமுடியவில்லை. ஒரு நாள் வெயிலில் நடந்து தளர்ந்து ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்தார். பக்கத்தில் இருந்த குடிசை வீட்டில் கணவன் மனைவிக்கிடையே சண்டை நடந்து கொண்டிருந்தது. அப்போது கணவன் மனைவி யிடம் இனியும் நீ என்னிடம் சண்டைக்கு வந்தால் உன்னை அடித்து கொன்று அனந்தன் காட்டில் கொண்டு எறிந்து விடுவேன் என மிரட்டினான். சாமியார் மகிழ்ச்சியுடன் அந்த வீட்டுக்கு சென்றார். அவர்களைச் சமாதானம் செய்து வைத்த சாமியார் அனந்தன் காட்டை பற்றி கேட்டார். அந்த வாலிபனும் காட்டை காட்டினான். அங்கு கல்லும் முள்ளும் ஏராளமாக இருந்தது. என்றாலும் பகவானை காணும் ஆவலில் அவற்றை கடந்து முன்னேறினார். இறுதியில் பகவானை கண்டார். அப்போது அவர் உண்ணிக் கண்ணனாக இருக்க வில்லை. ஒரு இலுப்பை மரத்தின் அடியில் பூமாதேவி மற்றும் லட்சுமியுடன் அனந்தன் என்ற பாம்பு மீது பரந்தாமன் பள்ளி கொண்டிருப்பதை கண்ட சாமியார் மகிழ்ச்சியுடன் அவர்களை வணங்கினார். மீண்டும் சாமியாரை பகவான் சீண்டினார். தனக்கு பசி எடுப்பதாக கூறிய பகவானுக்கு காட்டில் கிடைத்த மாங்காயில் உப்பு சேர்த்து ஒரு தேங்காய் சிரட்டையில் வைத்து கொடுத்தார். பின்னர் திருவிதாங்கூர் மன்னருக்கு தகவல் தெரிவித்தார். மன்னர் எட்டு மடங்களில் உள்ள பிராமண பூஜாரிகளை அழைத்துக் கொண்டு அனந்தன் காட்டுக்கு புறப்பட்டார். ஆனால் அங்கே சுவாமி இல்லை. என்றாலும் மன்னர் அந்த இடத்தில் அனந்த பத்மநாபனுக்கு கோயில் கட்ட ஏற்பாடு செய்தார். அங்கு அனந்தன் பாம்பு மீது பள்ளி கொண்ட பரந்தாமனின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதற்கு பத்மநாப சுவாமி என்ற திருநாமம் சூட்டப்பட்டது.  
108 திவ்ய தேசங்கள் : அருள் மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில்

மூலவர் : ஆதிகேசவ பெருமாள்
தாயார் : மரகதவல்லி நாச்சியார்.
தீர்த்தம் : கடல் வாய் தீர்த்தம், வாட்டாறு, ராம தீர்த்தம்
பழமை : 3000 வருடங்களுக்கு முன்
ஊர் : திருவட்டாறு
மாவட்டம் : கன்னியாகுமரி
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:நம்மாழ்வார்
      
வாட்டாற்றானடி வணங்கி மாஞலப் பிறப்பறுப்பான் கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானை பாட்டாய பலபாடி பழவினைகள் பற்றறுத்து நாட்டாரோடு இயல்வொழிந்து நாரணனை நண்ணினமே. நம்மாழ்வார்.

விழா : ஓணம், ஐப்பசி பிரமோற்ஸவம், புரட்டாசி சனி, வைகுண்ட ஏகாதசி.  
      
சிறப்பு : இங்குள்ள பெருமாளின் திருமேனி கடுசர்க்கரை யோகம் என்னும் கலவையால் 16008 சாளக்கிராம கற்களை (நாராயணனின் வடிவமான கல் வகை) இணைத்து உருவானது. பெருமாளை மூன்று வாசல் வழியாகத்தான் தரிசிக்க முடியும். நடுவாசலில் உள்ள உற்சவர் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருளுகிறார். பெருமாளின் நாபியில் தாமரையோ, பிரம்மனோ கிடையாது. இதனால் இவரை வணங்கினால் மறுபிறப்பு கிடையாது என்பது ஐதீகம். கருவறையில் கருடன், சூரியன், பஞ்சாயுத புருஷர்கள், மதுகைடபர் என்னும் அரக்கர்கள் உள்ளனர். சிரசின் அருகே ஹாதலேய மகரிஷி மண்டியிட்டு அமர்ந்துள்ளார். ஆண்டு தோறும் பங்குனி மூன்று முதல் ஒன்பது வரையிலும், புரட்டாசி மூன்று முதல் ஒன்பது வரையிலும் சூரியனின் அஸ்தமன கதிர்கள் மூலவரின் மீது பட்டு தரிசிப்பதைக் காணலாம்.  
      
திறக்கும் நேரம் : காலை 06:00 மணி முதல் 11:00 மணி வரை, மாலை 05:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில், திருவட்டாறு : 629 177. கன்னியாகுமரி மாவட்டம். போன் : +91- 94425 77047 




     
ஸ்தல பெருமை : பெருமாளின்  திருப்பதிகளில் இத்தல பெருமாள் தான் கிடந்த கோலத்தில் மிகப்பெரிய அளவில் அருள் பாலிக்கிறார். இவர் திருவனந்தபுரம் அனந்த பத்மநாபரை பார்த்த நிலையில் மேற்கு நோக்கி அருளுகிறார். மேற்கு பார்த்த பெருமாளை தரிசிப்பது மிகவும் சிறப்பு. இடது கையை தொங்க விட்டு வலது கையில் முத்திரை காட்டி தெற்கே தலைவைத்தும் வடக்கே திருவடி காண்பித்தும் சயனத்தில் உள்ளார். இத்தகைய கோலத்தை காண்பது மிகவும் அரிது. தாயார் மரகதவல்லி நாச்சியார்.  
      
ஸ்தல வரலாறு : பிரம்மா யாகம் நடத்திய போது ஏற்பட்ட தவறால் யாக குண்டத்தில் இருந்து கேசன் கேசி என்ற அரக்கர்கள் தோன்றினர். இவர்களால் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொந்தரவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட இவர்கள் திருமாலிடம் முறையிட்டனர். திருமால் கேசனை அழித்து கேசியின் மேல் சயனம் கொண்டார். கேசியின் மனைவி பெருமாளை பழிவாங்கும் நோக்கத்துடன் கங்கையையும், தாமிரபரணியையும் துணைக்கு அழைக்க அவர்கள் இருவரும் வேகமாக ஓடி வந்தனர். இதையறிந்த பூமாதேவி திருமால் சயனித்திருக்கும் பகுதியை மேடாக்கினாள். அவர்கள் திருமால் இருந்த இடத்தை சுற்றி வணங்கி இரண்டு மாலைகள் போல் வட்ட வடிவில் ஓட ஆரம்பித்தனர். இதனால் இத்தலம் "வட்டாறு' என அழைக்கப்பட்டது. இரு நதிகளும் பெருமாளுக்கு மாலை சூட்டியது போல் இருப்பதைக்கண்ட நம்மாழ்வார் மாலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான் என பாடுகிறார். கேசனை அழித்ததால் இத்தல பெருமாள் கேசவப் பெருமாள் எனப்படுகிறார். கேசியின் மீது சயனித்த போது அவன் தன் பன்னிரெண்டு கைகளால் தப்புவதற்கு முயற்சி செய்தான். பெருமாள் அவனது பன்னிரெண்டு கைகளிலும் பன்னிரெண்டு ருத்ராட்சங்களை வைத்து தப்பிக்க விடாமல் செய்தார். இவையே திருவட்டாரை சுற்றி சிவாலயங்களாக அமைந்தன. மகா சிவராத்திரியின் போது பக்தர்கள் பன்னிரெண்டு சிவாலயங்களையும் ஓடியவாறு தரிசித்து கடைசியில் ஆதிகேசவப் பெருமாளையும் அவர் பாதத்தின் கீழ் உள்ள சிவனையும் தரிசிப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது. 
108 திவ்ய தேசங்கள் : அருள் மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில்

மூலவர் : திருவாழ்மார்பன்
உற்சவர் : ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசன்
தாயார் : கமல வல்லி நாச்சியார்,சுவாமி மார்பில் மகாலட்சுமி
தீர்த்தம் : லட்சுமி தீர்த்தம் என்ற புஷ்கரிணி
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருவண்பரிசாரம்
ஊர் : திருப்பதிசாரம்
மாவட்டம் : கன்னியாகுமரி
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : நம்மாழ்வார் மங்களாசாசனம்

வருவார் செல்வார் பரிவாரத்திருந்த என் திருவாழ் மார்வற்கு என்திறம் சொல்லார் செய்வதென் உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும் மோடு ஒருபாடுழல்வான் ஒரடியாணுமுள னென்றே.-நம்மாழ்வார்
 
விழா : திருமால் குலசேகர ஆழ்வாரை வைகுண்டத்துக்கு அழைத்துச் சென்ற ஆடி சுவாதி திருநாள், சித்திரை மாதம் பத்து நாட்கள் திருவிழா. புரட்டாசி சனி, ஆவணி திருவோணம். கன்னியாகுமரி மாவட்டத்தில் இவருக்கு மட்டுமே ஊஞ்சல் சேவை நடக்கிறது.  
      
சிறப்பு : மூலவரான திருவாழ்மார்பர் நான்கு கைகளுடன், சங்கு சக்கரமேந்தி அபய ஹஸ்தத்துடன், அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். ஒன்பது அடி உயரமுள்ள இவ்விக்ரகம் கடு சர்க்கரை யோகம் என்ற கூட்டினால் சமைக்கப்பட்டது. கல்லும், சுண்ணாம்பும் சேர்ந்து செய்யப்பட்ட உருவத்தின் மேல் கடுகும் சர்க்கரையும் சேர்ந்த ஒருவித பசையினால் பூசப்படும் முறைக்கு கடுசர்க்கரை யோகம் என்பர். அதனால் மூலவருக்கு அபிஷேகம் கிடையாது. உற்சவருக்கே அபிஷேகம்.  
      
திறக்கும் நேரம் : காலை 06:00 மணி முதல் 11:00 மணி வரை, மாலை 05:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில், திருப்பதி சாரம் : 629 901 நாகர் கோவில் கன்னியாகுமரி மாவட்டம். போன் : +91- 94424 27710 
     
தகவல் : இது நம்மாழ்வார் அவதார தலம். திவ்ய தேசங்களில் ஒன்று. அமர்ந்த கோலம். இங்குள்ள மூலவர் திருவாழ்மார்பர். இங்கு தாயாருக்கு தனி சன்னதி கிடையாது. லட்சுமி தாயார் மூலவரின் நெஞ்சிலே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக ஐதீகம். பெருமாள் லட்சுமியின் உருவம் பொறித்த பதக்கத்துடன் தங்கமாலை ஒன்றை அணிந்துள்ளார். 


     
ஸ்தல பெருமை : நம்மாழ்வாரின் தாயார் பிறந்ததலம். திருமாலின் அம்சமான நம்மாழ்வாரைப் பெற்றெடுத்த தாய் பிறந்த பெருமை இத்திருப்பதிக்கே உரியது. குறுநாட்டுக் காரிமாறன் என்ற சிற்றரசனுக்கும், நாஞ்சில் நாட்டுத் திருவண்பரிசாரத்திலிருந்த (திருப்பதிசாரம்) திருவாழிமார்ப பிள்ளை மகளான உதயநங்கைக்கும் மணமகள் இல்லத்தில் திருமணம் நடந்தது. பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாதது கண்டு வருந்திய தம்பதிகள் மகேந்திரகிரியின் அடிவாரத்திலுள்ள திருக்குறுங்குடி சென்று அதன் வழியே ஓடும் நதியிலே நீராடி அங்கு எழுந்தருளியிருக்கும் நம்பியிடம் குழந்தை வேண்டி நின்றனர். பெருமாளும் அவர்களது வேண்டு கோளுக்கிரங்கி உங்கள் எண்ணம் நிறைவேறும். யாமே உமக்கு மகனாக அவதரித்துப் பதினாறு வயதிலேயே கணக்கிலடங்காக் கீர்த்திகளைப் பெற்று உங்களுக்கு புகழ் தேடித் தருவோம். பிறக்கும் குழந்தையை (ஆழ்வார்) திரு நகரியிலுள்ள புளிய மரத்தடிக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறி மறைந்தார். சில நாட்களில் உதய நங்கை கருவுற்றாள். தமிழர் முறைப்படி மகப்பேறுக்காக தாய் வீடான திருவண்பரிசாரத்துக்கு அனுப்பப்பட்டாள். வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று பவுர்ணமி திதியில் நம்மாழ்வார் இவ்வுலகிலே அவதரித்தார். குறுங்குடிப் பெருமாளின் ஆணைப்படி குழந்தையை ஆழ்வார்திருநகரியிலுள்ள புளிய மரத்துக்குப் பொற்தொட்டிலில் இட்டு எடுத்து வந்தனர். குழந்தை தவழ்ந்து தவழ்ந்து புளியமரப் பொந்தினுள் ஏறித் தெற்கு நோக்கி பத்மாசனத்தில் ஞான முத்திரை ஏந்தியவராய் அங்கு எழுந்தருளி இருக்கும் ஆதிநாதரைத் தியானித்து நின்றது. இந்நிகழ்ச்சியை கண்டவர்கள் வியந்து போற்றினர். பதினாறு ஆண்டுகள் இந்த பாலமுனி இறை தியானத்தில் மூழ்கியிருந்தார். இவ்வாறு திருப்பதிசாரம் நம்மாழ்வாரின் அவதார தலமாகவும் ஆழ்வார் திருநகரி அவர் ஞானம் பெற்ற ஸ்தலமாகவும் சிறப்புடன் விளங்குகின்றன.  
      
ஸ்தல வரலாறு : ஒரு காலத்தில் சுசீந்திரம், ஞானாரண்யம் என அழைக்கப்பட்டது. சப்த ரிஷிகள் இங்கு தவமிருந்தனர். இறைவன் சிவவடிவில்அவர்களுக்கு காட்சி தந்தார். முனிவர்கள் இறைவனைத் திருமாலின் உருவிலே காண சோம தீர்த்தக் கட்டம் என்ற இடத்திற்கு சென்று தவம் செய்தனர். அவர்களது தவத்துக்கு இரங்கிய இறைவன், திருமாலின் உருவில் காட்சி தந்தார். அவ்வுருவில் அங்கு தங்கியருள வேண்டும் என்ற முனிவர்களின் வேண்டுகோளை நிறைவேற்ற திருமால் சப்த ரிஷிகள் சூழ பிரசன்ன மூர்த்தியாக சுமர்ந்து அருள் புரிகின்றார் என்பர்.
108 திவ்ய தேசங்கள் : அருள் மிகு தோத்தாத்ரிநாதன் திருக்கோயில்

மூலவர் : தெய்வநாதன், வானமாமலை(தோத்தாத்ரிநாதர்).
தாயார் : வரமங்கை தாயார்.
தல விருட்சம் : மாமரம்,
தீர்த்தம் : சேற்றுததாமரை
பழமை : 1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : வானமாமலை, திருவரமங்கை
ஊர் : நாங்குனேரி
மாவட்டம் : திருநெல்வேலி
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : நம்மாழ்வார், மங்களாசாசனம்
      
ஏனமாய் நிலம் கீண்ட என்னப்பனே கண்ணா என்றும் என்னையாளுடை வான நாயகனே மணி மாணிக்கச் சுடரே தேனமாம் பொழில் தண் சீரிவர மங்கலத்தவர் கைதொழவுறை வான மாமலையே அடியேன் தொழ வந்தருளே. நம்மாழ்வார்  
      
விழா : பங்குனி, சித்திரை மாதங்களில் நடக்கும் பிரம்மோற்ஸவம் இத்தலத்தில் மிக முக்கிய திருவிழாக்கள் ஆகும்.  
      
சிறப்பு : ஒவ்வொரு தலத்திலும் ஒரு சுயம்பு மூர்த்தி தான் இருக்கும். ஆனால் இத்தலத்தில் மூலஸ்தானத்திலுள்ள தோத்தாத்ரிநாதர், ஸ்ரீதேவி, பூதேவி, சூரியன், சந்திரன், பிருகுரிஷி, மார்க்கண்டேயர், ஊர்வசி, திலோத்தமை ஆகிய ஒன்பது பேரும், அர்த்த மண்டபத்திலுள்ள கருடாழ்வாரும், விஷ்வக்சேனரும் ஆக பதினொரு பேர் சுயம்பு மூர்த்திகளாக உள்ளனர். இத்தகைய அமைப்பு இங்கு மட்டுமே உள்ளது. பெருமாள் சுயம்புமூர்த்தியாக அமைந்த எட்டு தலங்களில் வடஇந்தியாவில் உள்ள பத்ரிநாத்தில் ஆறுமாத காலம் கடும் பனியால் கோயில் மூடியிருக்கும். இங்கு ஆண்டு முழுவதும் பெருமாளைத் தரிசிக்கலாம். ஆண்டு முழுவதும் பெருமாளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் நடக்கும்.  
      
திறக்கும் நேரம் : காலை 07:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 05:00 மணி முதல் இரவு 09:00 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு தோத்தாத்ரிநாதன் திருக்கோயில் நாங்குனேரி : 627108 திருநெல்வேலி மாவட்டம்.போன் : +91- 4635 - 250 119

      
தகவல் : மூலவரின் மேல் உள்ள விமானம் நந்தவர்த்தன விமானம் ஆகும். பிரம்மா, இந்திரன், சிந்து நாட்டரசன், கருடன், ஊர்வசி, திலோத்தமை ஆகியோர் இத்தல பெருமாளை தரிசனம் கண்டுள்ளனர்.
     
ஸ்தல பெருமை : இத்தலம் நான்கு ஏரிகளால் சூழப்பட்டதால் நாங்குனேரி ஆனது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ராஜ தர்பார் கோலத்தில் அரசராக அமைந்திருப்பதும் இத்தலத்தில் மட்டுமே. பெருமாள் ஒரு கையை பாதத்தை நோக்கிய படி வைத்து எவன் தன் பாதத்தில் சரணடைகிறானோ அவனுக்கு தன் மடியில் இடம் உண்டு என்பது போல் ஒரு கையை மடியில் வைத்திருக்கிறார். பெருமாளின் கையில் பிரத்யேக சக்கரம் உள்ளது. இதை பார்ப்பவர்களுக்கு எதிரிகளே இருக்கமாட்டார்கள்.

திருப்பதியில் இருந்து வந்த தாயார் :  இங்குள்ள தாயாரின் உற்சவர் சிலை முதலில் திருப்பதியில் தான் இருந்ததாம். அங்குள்ளவர்கள் திருவேங்கடப் பெருமாளுக்கு ஸ்ரீவரமங்காதேவியை கல்யாணம் செய்ய இருந்தனர். அப்போது பெரிய ஜீயரின் கனவில் பெருமாள் தோன்றி இவள் நாங்கு நேரியிலுள்ள வானமாமலைப் பெருமாளுக்காக இருப்பவள் என கூறியதால் இத்தலத்திற்கு வந்து விட்டாள். மணவாள மாமுனிகளால் ஸ்தாபிக்கப்பட்ட அஷ்டதிக் கஜங்களில் ஒருவரான வானமாமலை ஜீயர் அவர்களின் தலைமையிடம் இங்கு உள்ளது. இங்குள்ள சடாரியில் சடகோபனின் திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

ஸ்தல வரலாறு : மது, கைடபன் என்ற இரு அரக்கர்களை மகா விஷ்ணு அழித்த போது அரக்கர்களின் துர்நாற்றம் பூமியெங்கும் வீசியது. பூமாதேவி தன் இயல்பான தூய்மையை இழந்ததால் மிகவும் வருந்தினாள். இத்தலத்தில் தவமிருந்து விஷ்ணுவின் அருள் பெற்றாள். மாசு கழுவப்பெற்றாய் என்று சொல்லி வைகுண்டத்தில் வீற்றிருப்பது போலவே இங்கும் வைகுண்ட விமானத்தில் ஆனந்தமயமாக பூமாதேவிக்கு காட்சி கொடுத்ததாக தல வரலாறு கூறுகிறது.  
      
சிறப்பம்சம் : ஒவ்வொரு தலத்திலும் ஒரு சுயம்பு மூர்த்தி தான் இருக்கும். ஆனால் இத்தலத்தில் மூலஸ்தானத்திலுள்ள தோத்தாத்ரிநாதர், ஸ்ரீதேவி, பூதேவி, சூரியன், சந்திரன், பிருகுரிஷி, மார்க்கண்டேயர், ஊர்வசி, திலோத்தமை ஆகிய ஒன்பது பேரும் அர்த்த மண்டபத்திலுள்ள கருடாழ்வாரும், விஷ்வக்சேனரும் ஆக பதினொரு பேர் சுயம்பு மூர்த்திகளாக உள்ளனர். இத்தகைய அமைப்பு இங்கு மட்டுமே உள்ளது. பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அமைந்த எட்டு தலங்களில் வட இந்தியாவில் உள்ள பத்ரிநாத்தில் ஆறுமாத காலம் கடும் பனியால் கோயில் மூடியிருக்கும். இங்கு ஆண்டு முழுவதும் பெருமாளைத் தரிசிக்கலாம்.