செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

ஜோதிடம் மக்களின் மனத்தில் செய்யும் பல விபரீதங்களை பார்ப்போம். 

திருச்சி ஶ்ரீரங்கம் பகவத் சந்நிதியில் தன் பெண் திருமணத்திற்கு அர்ச்சனை செய்த பின் ஒரு சேவார்த்தி ஏங்க திருப்பட்டூர் எப்படிப் போகணும் என கையில் ஒரு நோட்டை வைத்துக் கொண்டு கேட்டார். அடுத்து அங்கே போகனுமாம். பின் இன்னும் இரண்டு கோவில்கள் வரிசையாக அடுத்த அடுத்த பயணம். இன்னொருவர் ஏங்க சுக்கிர ப்ரீதி பண்ண சொல்லி சொன்னாங்க அதாவது ஶ்ரீரங்க பெருமாளுக்கு பட்டு சாத்தவும் நம்பெருமாளுக்கு பன்னிரெண்டு  அடி மாலை சாத்தவும் சொன்னாங்க என்றார்.

தற்செயலாக வந்த கோயில் அர்ச்சகர் தம்பி ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு மதுரகவி நந்தவனம் என்ற இடத்திலிருந்து சாத்தாத வைணவர்களால் தொடுக்கப்பட்ட மலர் மாலை தான் சாத்துவார்கள். மற்றபடி வெளியில் இருந்து நாம் பணம் கொடுத்து வாங்கி கொடுக்கும் மாலைகளை சாற்றுவது கிடையாது என சொன்னார். 

அதே போல் வேறு ஒரு குடும்பம் அதன் தலைவர் பெண்ணுக்கு நாகதோஷம் நம்பெருமாளுக்கு பணிவிடை செய்யற ஆதிசேஷனுக்கு பன்னிரெண்டு முட்டை வாங்கி வைக்க  சொல்றாங்க என கூறினார். நான் மிரண்டு போய் ஶ்ரீரங்கத்தில் இப்படியெல்லாம் செய்ய முடியாது. என அவருக்கு புரியவைப்பதற்குள் பட்ட பாடு பெருமாளே முடியலை.

தெருவுக்கு நாலு ஜோசியக்கரர்கள் படித்த மற்றும் பாமர ஜனங்களுக்கும் எதை தின்னா பித்தம் தெளியும் என்ற நிலையில் அதை உபயோகப்படுத்தி பல ஜோதிடர்கள் ஆளுக்கொரு விதமாக இதுவரை கேட்டேயிராத பல பரிகாரங்கள் சொல்லுகிறார்கள்.

தேங்காயில் விளக்கெண்ணெய் விளக்கு, பூசணிக்காயில் விளக்கு 
வாழைப்பழத்துல விளக்கு என சிறப்பு பரிகாரங்கள் செய்ய சொல்கிறார்கள். ஜோசியக்காரங்க எல்லாம் குடும்ப பரிகாரம் என பக்கம் பக்கமாக நோட்டு போட்டு எழுதி தர நம்ம மக்களும் கர்ம சிரத்தையா அதை செஞ்சு முடிக்க கோவில் மற்றும் ஊர் ஊராக அலையறத பார்த்தால் மிகவும் கஷ்டமாக உள்ளது. நாள் கிழமைகளில் (வியாழன், வெள்ளி சனி, என பல நாட்களிலும்) பகவான் சந்நிதியிலோ தாயார் சந்நிதியிலோ ஒரு ஈ காக்கா காணோம். மொத்த கூட்டமும் அன்றய தினத்தில் நவக்கிரக சந்நிதில் அல்லது குடும்ப ஜோதிடர் பரிகாரம் செய்ய சொன்ன சன்னதிகளில் வரிசை கட்டி நிற்பது வேதனையான ஒன்று. எள் விளக்கு, கொண்டகடலை மாலை எலுமிச்சை விளக்கு, என ஒரே பரிகார அமர்க்களம். #ஜோதிடத்தில் பரிகாரம் என்ற ஒன்று கிடுயவே கிடையாது. பகவானை மட்டுமே நம்புங்கள் வாழ்வே நல்ல விதமான மாறும் உதாரணமாக ஒன்றே ஒன்றை மட்டும் குறிப்பிட்டு விளக்குகிறேன். 

பாரதத்தில் பாண்டவரான சகாதேவன் கௌரவ மன்னன் துரியோதன் தன்னிடம் பாரத போரில் பாண்டவர்களை ஜெயிக்க பூமி பூஜை போட நல்ல நாள் குறித்து தர கேட்டப்போது அருமையான நாளை குறித்து கொடுத்தான்.
அதன் படி யுத்த நாள் பூஜை நடந்தால் கௌரவர்கள் வெற்றி உறுதி ஆயிற்று. 

அதை அறிந்த தர்மர் கேட்டாராம். ஏன் சகாதேவா அப்படி ஒரு நல்ல  நாளை குறித்து கொடுத்தாய் அவன் நம் எதிரி அல்லவா என கேட்க? சகாதேவன் சொன்னாராம். உண்மையை சொல்லுவது ஜோதிட தொழில் தர்மம் அதனால் எதிரியே கேட்டாலும் சரியானதை மட்டுமே குறித்து கொடுப்பேன் என்றாராம். ஜோதிடம் என்பது உண்மைகளை மட்டுமே சொல்லுவது தவறாக வழிகாட்டுவதல்ல. உடனே தர்மன் பகவான் கிருஷ்ணனை சரணடைய பகவான் கிருஷ்ணன் சகாதேவன் குறித்து கொடுத்த அந்த அமாவாசை நாளுக்கு முதல் நாளே அமாவாசை தர்ப்பணம் செய்ய தன் செய்கையால் குழம்பிய சூரியனையும், சந்திரனையும் ஒருவருக்கு ஒருவர் நேரே பார்க்க வைத்து கௌரவர்களை குழப்பி விட்டு அமாவாசை இல்லா நாளில் பூஜையை போட வைத்து வெற்றியை பாண்டவர்கள் பக்கம் திருப்பினாராம்.

நண்பர்களே, அன்பர்களே பகவான் நினைத்தால் யார் வாழ்விலும் எத்தகைய நிலையிலும் எப்படிப்பட்ட மாற்றமும் நடக்கும். நமக்கு தேவை பகவான் மேல் முழு நம்பிக்கையும் உண்மையான பக்தியுமே. தினமும் அவர்கள் வீட்டில் உள்ள பூஜை அறையில் காலை, மாலை என இரு வேளையிலும் நல்லெண்ணை விளக்கேற்றுங்கள்.

முக்கியமாக உங்கள் குடும்ப குல தெய்வத்தை தினமும் வணங்குங்கள்.

ப்ரபந்தம், திருப்பாவை என எது தெரியுமோ அதில் குறைந்தது நாலு பாசுரங்கள் சொல்லுங்கள். இல்லை உங்களுக்கு பிடித்த தேவாரம் திருவாசகம் என சொல்லுங்கள். குழந்தைகளை பகவத் நாமாக்களை சொல்ல சொல்லுங்கள். ஆத்மார்த்தமாக பகவானை வணங்குங்கள்.
இல்லத்தின் அருகில் உள்ள ஒரு பகவத் கோவிலுக்குச் சென்று அங்கிருக்கும் பகவானை மனமாற வேண்டுங்கள். பிறருக்கு நல்லதை நினையுங்கள், நல்லதையே பேசுங்கள். பகவானை நோக்கி நாம் ஒரு அடி வைத்தால் அவர் நம்மை நோக்கி பத்து அடி எடுத்து வைக்கிறார். எதற்க்கும்  நாம் கவலைப்பட தேவையில்லை. அரிய பிறப்பு மானிடபிறவி. பகவானை வணங்கி அனைத்தும் பெறலாம்.

ஜோசியத்தை நம்புங்கள் ஆனால் பரிகாரம் சொல்லும் எந்த ஜோதிடர்களையும் அல்ல. பகவான் இருக்கிறான் நம்மை காப்பாற்ற நாம் பகவானின் குழந்தைகள். நம்மை கஷ்டப்பட வைத்து அவர் மகிழ்வாரா எனவே யாரும் எதற்க்கும் கலங்கமடைய வேண்டாம். பகவான் கொடுக்க நினைப்பதை எந்த கிரகங்களாலும் அல்லது யாராலும் தடுக்க முடியாது. கொடுக்க நினையாததை எந்த கிரஹங்களாலும் அல்லது யாராலும்  கொடுக்க முடியாது எனவே பரிகாரங்கள் என பணத்தை நேரத்தை வீணாக்காமல் பகவானை மட்டுமே வணங்குங்கள் வெற்றி தானாக வரும்.

ஜெய் ஶ்ரீராம்!
                                                                   
தர்மோ ரக்ஷதி ரக்ஷித
                                                             
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம்
                                                          பக்தகோடிகளின் கவனத்திற்கு

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் பக்தர்களாகிய நாம் அனைவரும் நமது குடும்பத்தில் அவ்வப்போழுது நடைபெரும் சுப நிகழ்ச்சிகளுக்கு பத்திரிக்கை தயார் செய்யும் போது கீழ் கண்ட வாசகங்களை முதலில் அமைப்பது சாலச்சிறந்தது. அவரவராத்து வாத்தியாரார் (சாஸ்திரிகள்)இதை எழுத மறந்தால் தாங்கள் அவசியம் தெரியப்படுத்தவும்.மேலும் வாத்தியார்களாக (சாஸ்திரிகள்) இருப்பவர்கள் இந்த வாசகத்தை தவராமல் பத்திரிக்கைகளில் எழுத பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.

"ஸ்ரீ மஹா த்ரிபுரசுந்தரி ஸமேத ஸ்ரீ சந்திர மௌளீஸ்வர ஸ்வாமி க்ருபையுடன், ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதாள் பரம்பராகத மூலாம்நாய ஸர்வஞ் பீடம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்வாமிகள் பரிபூர்ண அனுக்ரஹத்துடன்" என்ற இந்த வாக்கியத்தை தவராமல் பயன்படுத்துமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்

ஹர ஹர சங்கர                                                                                                                               ஜய ஜய சங்கர
ஆற்றல் இருந்தால் மட்டும் போதுமா?

எல்லாருக்கும், ஒரு சக்தியை, கொடுத்திருக்கிறான் இறைவன். எந்த ஓர் ஆற்றலும் இல்லாமல், யாரையும், அவன் படைக்கவில்லை. நம்மிடம் உள்ள சக்தியை, நாம் உணர வேண்டும். உணர்ந்த பின், அந்த சக்தியை நல்ல வழியில் உபயோகப்படுத்த வேண்டும். அதைவிட்டு, சுயநலமாக, நான் மட்டும் வாழ வேண்டும், மற்றவர்கள் முன்னேறக் கூடாது... என்று செயல்பட்டால், பெரும் தீங்கு விளையும் என்பதற்கு, இறைவனுடன், சலந்தரன் மோதிய கதையே உதாரணம். சலந்தரன் என்பவன், மிகுந்த சக்தி வாய்ந்தவன். அவனை எதிர்த்து நிற்க யாருமில்லை. அதற்காக, அவன் அமைதியாக இருந்துவிட வில்லை. யாருடனாவது மோதிக் கொண்டும், அவர்களை கொன்று விட வேண்டும் என்ற வெறி கொண்டவனாக இருந்தான். ஒருமுறை, சக்தியற்ற தேவர்கள், என் பேரைக்கேட்டாலே, ஓடி ஒளிகின்றனர். அதனால் தேவேந்திரனுடன் நேருக்கு நேராக மோதப் போகிறேன்... என்று, சொல்லி, தேவலோகத்தை நோக்கிப் படை எடுத்துச் சென்றான் சலந்தரன்.

சலந்தரன் வரும் தகவலறிந்து, தேவேந்திரன், கைலாய மலைக்கு சென்று மறைந்து கொண்டான். அதனால், கோபம் அதிகமான சலந்தரன்,  கைலாச மலைக்கு ஓடினால், விட்டு விடுவேனா... இந்திரனுக்கு ஆதரவு கொடுத்தால், அந்த சிவனையும் ஒரு கை பார்ப்பேன்... என்று, ஆணவத்தால் கூவினான். அப்போது, சிவபெருமான் ஒரு முதிய துறவி வடிவத்தில் வந்து, அப்பா, சலந்தரா... சிவபெருமானுடன், அப்புறம் சண்டை போடலாம். அதற்கு முன், நான் தரையில் போடும், இந்த வட்டத்தை எடுத்துத், தலையில் வைத்துக் கொள் பார்க்கலாம்... என்று சொல்லி, தன் காலால், தரையில் ஒரு வட்டம் வரைந்தார். சலந்தரனோ, கிழவரே, உமக்கு என் பலம் தெரியாது. இப்போது பாருங்கள்... என்று சொல்லி, தரையில் போடப்பட்டிருந்த வட்டத்தை, அப்படியே பெயர்த்து எடுத்து, தலையில் வைத்துக் கொண்டான். அது, சக்கராயுதமாக மாறி, சலந்தரனின் உடலை பிளந்து, அவனைக் கொன்றது. பின், அது சிவபெருமானின் திருக்கரத்தை அடைந்தது. இந்திரன் முதலான தேவர்கள் துயரம் நீங்கினர். படிப்போ, பதவியோ, அறிவோ, ஆற்றலோ எதுவாக இருந்தாலும், அதைக் கொண்டு, அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும். அதைவிட்டு, ஆணவம் கொண்டால், அது, மிகப்பெரிய ஆபத்தை உண்டாக்கி விடும்.
300 வயது வாழ அகத்தியர் கூறும் வழிமுறை!

நவீன அறிவியலின் படி ஒரு மனிதன் முன்னூறு ஆண்டுகள் வாழ்வதெல்லாம் சாத்தியமல்ல என்பது பல காலம் முன்னரே நிரூபிக்கப் பட்ட ஒன்று.இருந்தாலும் சித்தர்கள் பலநூறு வருடங்கள் வாழ்ந்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. ஹோமங்கள் செய்வதன் மூலமாக ஒருவன் முன்னூறு வயதுவரை வாழலாம் என்கிறார் அகத்தியர், இதன் சாத்தியங்கள் ஆய்வுக்குறியது. எனினும் நீண்ட ஆயுளைத் தரும் என்கிறவகையில் இந்த ஹோமத்தினை அணுகிடலாம். ஹோமங்கள் பற்றி அகத்தியரின் பாடல் ...

அறிந்துகொண்டு புவனையுட மந்திரந்தன்னால்
அப்பனே நெய்தனிலே அருகுதோய்த்து
தெரிந்தந்த ஓமகுண்டந் தன்னில்மைந்தா
சிறப்பான ஓமமது தீர்க்கமாக
வருந்திநன்றாய் மண்டலமே செய்தாயாகில்
மகத்தான பிரமமய மாவாய்பாரு
இருந்துரெண்டு மண்டலமே ஓமஞ்செய்தால்
என்னசொல்வேன் முன்னூறு வயதாம்பாரே

பொருள்: அறுகோண வடிவத்தை உடைய ஓம குண்டம் செய்து, அதில் வன்னி மரத்தின் குச்சிகளைக் கொண்டு தீ வளர்த்திட வேண்டுமாம். அப்படி தீ வளர்க்கையில் வழமை போலவே அக்கினி மூல மந்திரமான ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா என்ற மந்திரத்தை சொல்லி தீ வளர்த்திட வேண்டும். தீ வளர்ந்த பின்னர் புவனையின் மூல மந்திரமான ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா என்ற மந்திரத்தைக் கூறிக் கொண்டே அறுகினை, பசு நெய்யில் தோய்த்து போட வேண்டும் என்கிறார். இப்படி 1008 முறை செய்திட வேண்டும் என்கிறார் அகத்தியர். இந்த ஹோமத்தினை தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் செய்து வந்தால் பிரம்மத்தை உணரலாமாம். அதையே தொடர்ந்து  இரண்டு மண்டலம் அதாவது 96 நாட்கள் செய்து வர 300 வயதுக்கு மேல் வாழலாம் என்கிறார் அகத்தியர்.
மாலையில் வீட்டு வாசலில் கோலம் போடுவது கட்டாயமா?

மாலையில் சிலர் வாசல் தெளித்து கோலம் இடுகின்றனர். இதைப் பின்பற்றுவதில் ஒன்றும் தவறில்லை. உள்ளூர் விழாக்களில் சுவாமி புறப்பாடு, திருக்கார்த்திகை போன்ற விசேஷ நாட்களில் மாலையில் வாசல் தெளித்து கோலம் இடுவது அவசியம். மற்றநாட்களில் கட்டாயம் இல்லை.

செருப்பு அணிந்து கோலமிடலாமா: லட்சுமி நம் இல்லத்தில் நித்யவாசம் புரிய வேண்டும் என்பதற்காகவே, தினமும் காலையில் வாசல் தெளித்து கோலம் இடுகிறோம். இதுவும் கூட வழிபாட்டு முறையில் ஒன்று என்பதால், செருப்பு அணிந்து கொண்டு வாசல் தெளிப்பது கோலம் போடுவது கூடாது.
கடன்- கஷ்டம் தீர்க்கும் ஹேரம்ப கணபதி!

உலகில் பிறந்த பலருக்கும் பலவிதமான சங்கடங்கள்-துன்பங்கள்-தோன்றுவது இயற்கை. இந்தச் சங்கடங்களிலிருந்து விடுபடுவது எப்படி என்று புரியாமல் பலர் குழம்புகின்றனர். குடும்பத்தில் ஏற்படும் தர்ம சங்கடத்தைத் தீர்க்க அவசரமாகக் கடன் வாங்குவர். பணம் வந்ததும், திரும்பத் தந்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் வட்டிக்கு வாங்குவார்கள். இந்த அவசரத் தன்மையை அறிந்த கடன் கொடுப்பவர்கள் இரண்டு வட்டி, ஐந்து வட்டி, பத்து வட்டி, மீட்டர் வட்டி என்று ஏதேதோ பெயர்களில் தாராளமாகத் தருவார்கள்! இதற்கு கந்து வட்டி என்ற பெயரும் உண்டு.

இப்படி வட்டிக்குக் கடன் வாங்குபவர்கள் சில மாதங்கள் வட்டியைத் தவறாமல் கட்டுவார்கள். பிறகு மெல்ல மெல்ல தர முடியாத சூழல் ஏற்படும். வட்டி குட்டிமேல் குட்டிப் போட்டு அது வாங்கியதற்கு மேல் விஸ்வரூபம் எடுத்து விடும். இப்படிப்பட்டவர்களின் நிலைமையைப் பார்த்துத்தான் கடன் பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கம்பர் பாடினார். இப்படித் தாங்க முடியாத சங்கடங்களில் மாட்டிக் கொண்டு முழிப்போரும், ருணத்தால் விழி பிதுங்குவோரும் எல்லா நலமும் பெற வழிபட வேண்டியவர் ஹேரம்ப கணபதி. இவருக்கு நான்கு தலைகள்! கடன்களையும், சங்கடங்களையும் தீர்க்கும் சுபாவம் கொண்டவர். இவரைக் குளிரக் குளிர அபிஷேகம் செய்து அவருக்கே உரிய ஸ்லோகத்தை, குறைந்தது பதினாறு தடவை சொன்னால் சங்கடங்கள் விலகும். ருணம் (கடன்) தீரும்.

அவருக்குரிய ஸ்லோகம்:

ஓம் நமோ ஹேரம்ப
மத மோதித மம சங்கடம்ச
மஹா சங்கடம்ச
நிவாரய ஸ்வாஹா!

ஓம் நமோ ஹேரம்ப
மத மோதித மம ருணம்
அதி ஸீக்ரமேவ
நிவாரய ஸ்வாஹா!

சங்கடத்தில் தவிப்பவர்கள் முதல் ஸ்லோகத்தையும், ருண (கடன்)த்தால் தவிப்பவர்கள் இரண்டாவது ஸ்லோகத்தையும் கூறவேண்டும். கூடியவரை அபிஷேகத்தை சங்கடஹர சதுர்த்தியில் செய்வது நலம்.
மிளகாயை விரும்பும் அம்பாள்!

அதர்வண வேதத்தில் மந்திர காண்டத்தில் பிரத்யங்கிரா தேவிக்குரிய மந்திரங்கள் இடம்பெற்றுள்ளன. சிங்க முகத்துடன், கரிய உடலும் 18 கைகளில் சூலம், டமருகம், பாசம் முதலான ஆயுதம் தாங்கி இவள், பயம் போக்குவதோடு, மங்களத்தை அருள்கிறாள். அழகைக் கண்டு மகிழ்வதும், அழகற்றதைக் கண்டு வெறுப்பதும் உலக இயல்பு. ஆனால், அழகும், கோர வடிவும் கலந்தவளாக இவள் இருக்க காரணம், விருப்பு, வெறுப்பை சமமாக ஏற்கும் மனநிலை வேண்டும் என்பதால் தான். லலிதா சகஸ்ரநாமத்திலுள்ள "ஸகஸ்ராக்ஷி என்னும் பெயர் இவளைக் குறிக்கும். "ஆயிரம் கண்ணுடையாள் என்பது இதன் பொருள். பிரபஞ்சம் முழுவதையும் இவள் கண்காணிப்பதால் இப்பெயர் பெற்றாள். உக்ரமான இவளுக்கு, காரமான மிளகாய் விருப்பமானது என்பதால் அமாவாசை யாகத்தில் சிவப்பு மிளகாய் சேர்க்கப்படுகிறது. கும்பகோணம் அருகிலுள்ள அய்யாவாடியில் பாண்டவர்கள் வழிபட்ட பிரத்யங்கிராவுக்கு கோயில் உள்ளது.
ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா?

மலைவாழ் மக்களிடையே நிலவளப் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வந்த திருவிழாவே இன்று ஹோலியாக உருப்பெற்றிருக்கிறது என்பர். ஹோலி என்னும் வார்த்தை, ஹோலகா என்ற சொல்லின் திரிபே என்று கூறுவர். ஹோலகா என்பது முற்றிய நிலையில் உள்ள மொச்சைக் கதிர்களைக் குறிக்குமாம். முன் காலத்தில் இந்நாளில் கோதுமை, பார்லி முதலியவற்றால் வேள்வி செய்வர். வேள்வியின் நிறைவில் யாகத்தின் சாம்பலை நெற்றியில் பூசிக்கொள்வதோடு அனைத்து திசைகளிலும் தூவுவர். இதுவே வண்ணங்களைத் தூவும் வழக்கத்தின் காரணமாக இருக்கலாம். ஹோலியை ஹுதாஷிணி என்றும் கூறுவர். ஹுதாஷிணி இருளையும் தீமையையும் எதிர்த்துப் போராடுபவள் என்று பொருள்.வேடிக்கை விநோதங்கள் நிறைந்த வடநாட்டுப்பண்டிகை ஹோலி. கிருஷ்ணனைக் கொல்ல வந்த பூதனை என்னும் அரக்கியைக் கொன்ற நாளாக இந்நாளை மக்கள் கொண்டாடுகின்றனர். கேலியும் கூத்தும் மட்டுமே பிரதிபலிக்கும் விதத்தில் ஹோலி என்றாலே ஜாலி என்று மாறிவிட்டது. ஆனால், ஆன்மிக அடிப்படையிலேயே விழாக்கள் ஏற்படுத்தப்பட்டன. சாயத்தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பது, கலர்ப்பொடி தூவுவது ஆகியவை, உறவுகள் பலப்படவேண்டும், பகையை மறந்து ஒன்றுசேரவேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட விஷயங்களாகும். சிவபெருமான் மன்மதனை எரித்த காமதகனவிழாவாக தென்னிந்தியாவிலும், பூதனை என்னும் அரக்கியை பாலகிருஷ்ணர் கொன்ற நாளாக வடநாட்டிலும் இந்நாள் கொண்டாடப்படுகிறது. நம் மனதில் இருக்கும் வேண்டாத தீய எண்ணங்களை அழிப்பதற்காக மன்மதன், பூதனை போன்ற உருவபொம்மைகளை தீயிலிடுவர்.

தாயின் வயிற்றில் இருக்கும்போதே நாராயண நாமத்தைக் கேட்டு பக்தியில் திளைத்தவன் பிரகலாதன். உண்ணும்போதும் உறங்கும்போதும் ஓம் நமோ நாராயணாய என்னும் எட்டெழுத்து மந்திரத்தை அவன் மறந்ததில்லை. பிள்ளையின் விஷ்ணு பக்தி தந்தை இரண்யனுக்கு பிடிக்கவில்லை. அவனை அடித்துப் பார்த்தான். அடங்கவில்லை. மலையில் உருட்டி விட்டான். உயிர் போகவில்லை. நஞ்சைக் கொடுத்துப் பார்த்தான். அஞ்சவில்லை. அசுரகுரு சுக்ராச்சாரியாரிடம் படிக்க அனுப்பினான். மனதில் பக்தி வளர்ந்ததே ஒழிய பாடத்தில் ஈடுபாடில்லை. இறுதியில், தன் தங்கை ஹோலிகாவை அழைத்தான். அவளுக்கு விசேஷ சக்தியுண்டு. நெருப்பு அவளைத் தீண்டாது. பிரகலாதனை மடியில் வைத்துக் கொண்டு தீக்குள் புகுமாறு தங்கையிடம் கட்டளையிட்டான். ஆனால், வழக்கத்துக்கு மாறாக ஹோலிகாவின் உடலில் தீ பற்றிக் கொண்டது. பிரகலாதனோ, சிரித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். இறைசக்தியின் முன் தீயசக்திகள் அழிந்து போகும் என்ற உண்மையை இறைவன் உணர்த்தினார். இந்நாளே ஹோலிபண்டிகையாகக் கொண்டாடப்படுவதாக ஒரு கதை உண்டு. இந்நாளில் ஒம் நமோநாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரத்தை ஜெபித்தும், பிரகலாதனைப் போற்றியும் வழிபடுவது சிறப்பாகும். வடமாநிலங்களில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. அநியாயம் அழிந்தநாள் என்பதால், மக்கள் வண்ண  பொடிகளை தூவி மகிழ்கின்றனர்.
சூரிய பூஜையின் சிறப்பும் அவசியமும்!

லட்சக்கணக்கான ஆலயங்கள் இருந்தாலும், சில நூறு பெரிய ஆலயங்களில், கருவறையிலுள்ள இறைத்திருவுருவின் மீது, சூரிய ஒளி படரும் அமைப்புடையவற்றை சூரிய பூஜைக் கோயில் என்று நம் முன்னோர்கள் போற்றி வந்திருக்கின்றனர். ஊர்தோறும், தெருதோறும் உள்ள கூரையே இல்லாத மேடைக் கோயில்களிலும் கருவறை மட்டுமே உடைய பல்லாயிரம் சிறிய கோயில்களிலும், அன்றாடம், இறைவடிவின் மேல் பல மணி நேரம் சூரிய ஒளி படுகின்றதை சிறப்பு அம்சமாகக் கருதாத போது, எப்போதாவது சில நாட்கள் மட்டுமே கருவறையில் சூரிய ஒளி பரவும் கோயில்களை பெருமையாகப் பேசுவது ஏன்? பல முன் மண்டபங்களைத் தாண்டிக் கருவறையில் சூரிய ஒளி படர்வது ஒரு பொறியியல் சாதனை மட்டுமா?

எல்லா மண்டபங்களையும் தாண்டி கருவறையில் கதிரவனின் ஒளி படருமாறு அமைப்பது ஏன்? நாம் உணராவிட்டாலும் கூட, காற்று ஓட்டம், காந்த சக்தி நகர்வு, ஒளிச் சிதறல், ஒலிப்பரவல் போன்ற பல இயற்கைச் சக்திகளின் இயக்கத்திற்கு நாம் ஒவ்வொரு நொடியும் ஆளாகிக் கொண்டேயிருக்கிறோம். குடிசையாயினும், மாளிகையாயினும், பலமாடிக்குடியிருப்பு ஆயினும், பொருள் கிடங்காயினும், பெரும் ஆலயங்களாயினும், சிறு பந்தலாயினும் சரி, நாம் உருவாக்கும் ஒவ்வொரு அமைப்பும் மேற்கண்ட இயற்கைச் சக்திகளின் நகர்வில் குறுக்கிடுகின்றன. இக்குறுக்கீட்டினால் நமக்கு தீங்கு ஏற்படக்கூடாது என்பதற்காக, தீவிர ஆராய்ச்சி செய்து எழுதப்பட்டவையே வாஸ்து சாஸ்திரம்.

வாஸ்து நியதிகள் எல்லா கட்டமைப்புக்கும் உண்டு. ஆலயங்கள் இதற்கு விதிவிலக்கல்ல. உண்மையில், ஆலயங்கள் கட்டுமானத்திற்குத் தான் வாஸ்து விதிகள் அதிகம். அதிலும், ஆலய வளாகம் பெரிதாகப் பெரிதாக நியதிகளும் அதிகமாகின்றன. கருவறையில் சூரிய ஒளி படர வழி வகுப்பதும், கருவறையைச் சுற்றி மண்டபங்கள் எழுப்பும்போது வெளிச்சமும், வெய்யிலும், காற்றும் உள்ளே பரவிடுதற்காக, மேல் விதானத்தில் ஆகாயம் தெரியுமாறு, பிரம்மவெளி என்று அழைக்கப்படும் ஜன்னல்கள் வைப்பது முக்கிய நியதிகளாகும். இயற்கைச் சக்தியோடு நமக்கு தடையற்ற தொடர்பு இருக்க வேண்டும் என்பதற்காகவே, இன்றும் பல ஊர்களில் பெரிய வீடுகளில் திறந்த வெளி முற்றங்கள் அமைக்கப்படுகின்றன. வீட்டு அறைகளில் இயற்கைச் சக்திகளின் இயல்பான ஓட்டம் தடைப்படுவது அதிகரிக்க அதிகரிக்க, நாம் செயற்கையாக, வெளிச்சத்துக்கு விளக்கும், காற்றுக்காக காற்றாடியும் உபயோகிக்கிறோம். பலமாடிக் குடியிருப்புக்களில் வீட்டிலுள்ள சமையல் வாடையும், கழிவறை நாற்றமும் வெளியேறிட காற்று வெளித்தள்ளியும் வைக்கிறோம். இது போன்ற ஒரு செயல்பாடே, ஆலயக்கருவறையில் சூரிய ஒளி படரச் செய்திடுவதும் ஆகும்.

அன்றாடம் இயலாவிட்டாலும், நாம் வருடாவருடம், எப்போதாவது அருவியிலும், ஆற்றிலும், கடலிலும் நீராடி ஆரோக்கியம் பராமரிப்பது போல, பல்லோரும் கூடிடும் ஆலயங்களிலும், அசுத்த நிலையை நீக்கி தூய்ப்பிக்கும் முயற்சியே மிக நுணுக்கமான, அளப்பரிய சக்தி வாய்ந்த சூரிய ஒளியை பரவச் செய்யும் ஆலய இயல் நியதியும் ஆகும். மூர்த்திக்கு எதிரே நின்று அர்ச்சகர் பூஜிக்கலாகாது என்றும், பக்தர்கள் வழிபடலாகாது என்றும் கூறுவதற்குக் காரணம், பின் இருப்பவர்க்கு இறைவனைக் காண முடியாது என்பது மட்டுமல்ல. கருவறைக்கும் பிற மண்டபங்களுக்கும் இடையிலான ஒளி, ஒலி, காற்றுப் பரவல் தடைப்படக்கூடாது என்பதுவே மிக முக்கியகாரணம்.

சூரிய ஒளி பரவல் அமைப்பு உள்ள கோயில்கள் பல இருந்தாலும், தமிழகத்தில் தான் அவை அதிகம் உள்ளன. தமிழகத்திலுள்ள சுமார் 100 சூரிய பூஜைக் கோயில்களில் மிகச் சிலவற்றில் மட்டுமே (கண்டியூர், சங்கரன் கோயில் போல) ஒளிப்பரவல் மாலையில் ஏற்படுகிறது. மற்றவற்றில் காலையில் தான். பலவற்றில் சூரிய பூஜை அமைப்புடைமை பொது மக்களுக்குத் தெரியாமலேயே உள்ளது. பஞ்சாங்கங்களில் கூட சிலவைப் பற்றி மட்டுமே குறிப்பு உள்ளது.

ஒளிப்பரவல் நேரத்தில் பல்லோரும் கூடி இறைநாமம் ஜபிக்கும்போது நல்ஒலி அதிர்வுகளும் சேருவதால் ஆலயம் புதுப்பொலிவும், ஈர்ப்பும் பெற்று நாம் அடையும் பயனும் பன்மடங்காகிறது. அடிக்கடி ஆலயம் செல்ல முடியா விட்டாலும் சூரிய பூஜை நேரத்திலாவது இறைவனை கண்டிப்பாக தரிசிக்க முயல்வோம்.
கடந்த ஜென்மம் அல்லது மறுபிறவி உண்டா? இல்லையா?

ஆன்மிக நோக்கிலும், அறிவியல் நோக்கிலும் கடந்த ஜென்மம் உண்டா? இல்லையா? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.  ராமாயணம், மகா பாரதம் போன்ற புராணங்கள் மறுபிறப்பைப் பற்றிக் என்ன கூறுகிறது? விஞ்ஞானிகள், சிந்தனையாளர்கள், பெரியோர்கள் என்ன கூறுகிறார்கள் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.ராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிகாசங்கள் புனர்ஜென்மங்களைப் பற்றிக் கூறும் நூற்றுக்கணக்கான சம்பவங்கள் மிகவும் சுவையானவை. பெரிய ஆராய்ச்சிக்கு உரியவை. பதினெட்டு புராணங்கள் தரும் மறுபிறப்பு சம்பவங்களில் நிறைய உண்மைகளை உணரலாம்.

சீதையின் முன் ஜென்மம்!

முதலில் ராமாயணத்தில் முக்கியமான சம்பவத்தைப் பார்க்கலாம்! சுந்தரகாண்டத்தில் அசோகவனத்தில் துன்பப்படும் சீதை, முன்  ஜன்மாந்தரத்தில் எப்படிப்பட்ட பாபம் என்னால் செய்யப்பட்டதோ! ஆகவேதான் கொடுமை கொண்டு மிக வருத்துகின்ற இந்தத் துயரம் என்னால் அனுபவிக்கப்படுகிறது (கீத்ருஸம் து மயா பாபம் புராஜன்மாந்தரே க்ருதம் / யேநேதம் ப்ராப்யதே துக்கம் மயாகோரம் ஸுதாருணம் / 26ம் அத்தியாயம் 18ம் சுலோகம்) என்று கூறுவது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்! சீதைக்கு ஏது முன் ஜென்மம் என்று ஆச்சரியப்படும்போதே, யுத்த காண்டத்தில் மீண்டும் ஒரு குட்டி சம்பவத்தைப் பார்க்கிறோம். ராவணன் வதம் செய்யப்பட்ட நிலையில் ஹனுமன், சீதையைக் கொடுமைப்படுத்திய ராக்ஷஸிகளைக் கொல்வதற்கு சீதையிடம் அனுமதி கேட்கிறான். நன்கு யோசித்து விட்டு சீதை கூறுகிறாள். அவர்கள் வெறும் ஊழியர்கள்தான் ! அவர்கள் மீது ஏன் கோபப்படுகிறாய்! நான் அடைந்த துன்பங்கள் அனைத்தும் எனது முன் ஜென்மங்களில் செய்த செயல்களின் விளைவுதான் என்று திட்டவட்டமாக கூறுகிறாள். (யுத்தகாண்டம் 113ம் அத்தியாயம், 39ம் சுலோகம்) சீதையின் முன் ஜென்மக் கதை சுருக்கமாக இதுதான். ஒருமுறை ராவணன் பூமியைச் சுற்றி வரும்போது இமயமலைக் காட்டுப் பகுதியில் தவம் புரியும் ஒரு மாபெரும் அழகியைப் பார்க்கிறான். காம வசப்பட்ட ராவணன் இளமை பொங்கி வழியும் அழகியிடம் தவத்தை விட்டு விட்டுத் தன்னை மணம் புரிய வேண்டுகிறான். அந்த அழகியோ, பிருஹஸ்பதியின் புத்திரரான பிரம்ம ரிஷி குஸத்வஜரின் புதல்வி தான் என்றும், வேதங்களின் பிறப்பாகத் தான் பிறந்ததாகவும், தன்னை அடையத் தக்கவர் விஷ்ணு ஒருவரே என்று தன் தந்தை கருதியதாகவும், இதைக் கேட்டுக் கோபம் கொண்ட தைத்ய அரசன் சம்பு இரவில் தூங்கிக் கொண்டிருந்த தந்தையைக் கொன்றதாகவும், இதனால் துக்கப்பட்டுத் தனது தாயார் அவருடன் சிதை ஏறியதாகவும், அதன் பின்னர் தந்தையின் ஆசையை நிறைவேற்ற நாராயணரை நோக்கித் தவம் புரிவதாகவும் கூறினாள்.

யார் அந்த விஷ்ணு? என்று ஏளனமாகக் கூறியவாறே வேதவதியின் கூந்தலைப் பிடித்து ராவணன் தூக்கவே வேதவதி தன் கையைத் தூக்கினாள். அது வாளாக மாற தன் கூந்தலை அறுத்துக் கொண்டு தீயை மூட்டி, நான் இனியும் உயிர் வாழ ஆசைப்படவில்லை; பெண்ணான என்னால் உன்னைக் கொல்ல முடியாது; நான் சாபமிட்டாலோ என் தவத்தை இழக்க வேண்டியிருக்கும். ஆகவே, அக்னியில் புகுந்து என் தவ வலிமையால் அயோனிஜையாக (கர்ப்பத்தில் பிறக்காதவளாக) மீண்டும் வருவேன் என்று கூறி அக்னியில் புகுந்தாள். பின்னர் மீண்டும் ஒரு தாமரை மலரிலிருந்து தோன்றினாள். அவளை மீண்டும் பிடித்த ராவணன் தன் அரண்மனைக்குக் கொண்டு வந்து தனது மந்திரியிடம் காண்பித்தான். அவளது சாமுத்ரிகா லட்சணத்தைக் கூர்ந்து கவனித்த மந்திரி, இவள் இங்கு இருந்தால் உன் அழிவுக்குக் காரணமாவாள் என்று கூறினார். இதனால் ராவணன் அவளை கடலில் தூக்கி எறிந்தான். கரையை நோக்கி வந்த அவள் ஒரு யாகபூமியை அடைந்தாள். அங்கு ஜனக மஹாராஜன் உழும்போது பூமியிலிருந்து அவள் வெளிப்பட்டாள். உழு சாலிலிருந்து (சீதை) வெளி வந்ததால் சீதை என்ற நாமகரணத்துடன் வளர்ந்தாள். ராமனை மணம் புரிந்தாள். கிருத யுகத்தில் வேதவதியாய் இருந்து த்ரேதா யுகத்தில் சீதையாக வெளிப்பட்ட சீதையின் முற்பிறப்பு ரகசியம் பற்றிய கதையின் சுருக்கம் இது தான்!

உத்தரகாண்டம் தரும் முன்பிறப்பு இரகசியங்கள்!

சாதாரணமாக ராம பட்டாபிஷேகத்துடன் சுபம் என்று நாம் ராமாயணத்தை முடித்து விடுவதால் உத்தர காண்டத்தில் உள்ள அரிய ரகசியங்களை நாம் தெரிந்து கொள்ள முடியாமல் போய் விடுகிறது. வால்மீகி அரிய முன்பிறப்பு ரகசியங்களையும், ராமாயணத்திற்கு ஆதாரமாக விளங்கும் பல ரகசியங்களையும் (பிருகு முனிவர் விஷ்ணுவை பூமியில் மானிடனாக அவதரிக்க சாபம் தந்ததால் அவர் ராமனாக அவதரித்தது உள்ளிட்டவற்றை) உத்தர காண்டத்திலேயே விளக்குகிறார். சீதையின் முற்பிறவியைப் போலவே ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் உள்ளிட்ட ராமாயண கதாபாத்திரங்களின் முற்பிறவி பற்றிய சம்பவங்கள் சுவையானவை. படித்து அறிந்து கொள்ள வேண்டியவை.

இந்து மதத்தின் அடிநாதமான உண்மை மறுபிறப்பு!

செமிடிக் மதங்கள் என்று கூறப்படும் யூத மதம், கிறிஸ்துவம், இஸ்லாமியம் ஆகியவற்றிற்கும் இந்து மதத்திற்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகளில் முக்கியமான ஒன்று புனர்ஜென்மம். மனிதப் பிறவியில் ஒருவர் ஆற்றும் நல்வினை, தீவினைக்கேற்ப அடுத்த பிறவி அமைகிறது. அனைத்து மானுடரும் படிப்படியாக முன்னேறி முக்தி அடையலாம்; அடைவர் என்பது இந்து மதம் கூறும் உண்மை. மாறாக செமிடிக் மதங்கள் ஒரே ஒரு பிறவிதான் ஒருவருக்கு உண்டு. அவர் இறந்தவுடன் தீர்ப்பு நாள் வரும் வரை காத்திருந்து தீர்ப்பிற்கேற்ப சுவர்க்கத்தையோ அல்லது நரகத்தையோ அடைய வேண்டும் என்று கூறுகின்றன. தர்க்கரீதியாக சிந்தித்துப் பார்த்தால் ஒரே ஒரு பிறவிதான் ஒருவருக்கு உண்டு என்றால் ஒருவர் நீண்ட ஆயுளுடன் இருக்க, பிறந்த குழந்தை ஒன்று ஏன் மரிக்க வேண்டும்? ஒருவர் ஏன் செல்வந்தராகவும், இன்னொருவர் ஏழையாகவும் இருக்க வேண்டும்? என்பன போன்ற ஏராளமான கேள்விகள் எழுந்து விடை காண முடியாமல் தவிக்க வேண்டியிருக்கிறது.

மறுபிறப்பில் நம்பிக்கை கொண்ட மாமனிதர்கள்!

பிளேட்டோ, பித்த கோரஸ், லியனார்டோ டா வின்ஸி, பெஞ்சமின் ஃப்ராங்க்ளின், எமர்ஸன், ஷெல்லி, மாஜினி, தோரோ, ஹென்றி ஃ போர்டு, சி.ஜே.ஜங், உள்ளிட்ட ஏராளமான அறிஞர்கள் இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கையான மறுபிறப்பில் நம்பிக்கை உடையவர்கள்! அன்னி பெஸண்ட் அம்மையார் இது பற்றித் தீவிரமாக ஆராய்ந்து ரீ இன்கார்னேஷன் என ஒரு அரிய புத்தகத்தையே எழுதி இந்தத் தத்துவத்தை விளக்கியுள்ளார்.

விஞ்ஞானியின் ஆராய்ச்சி!

வர்ஜீனியா மாநில பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானியான ஐயான் ஸ்டீவன்ஸன் 1040 புனர் ஜென்ம கேஸ்களை ஆராய்ந்து இது உண்மைதான் என ஆய்வு முடிவில் கூறியுள்ளார்! மிகவும் பிரபலமான எட்கர் கேஸ் 2000 பேரின் பூர்வஜென்மத்தைக் கூறி அவை சரி பார்க்கப்பட்டு அனைவரையும் பிரமிப்பின் உச்சிக்கே ஏற்றியிருக்கிறது
ஒருவன் குற்றவாளியாக காரணம் என்ன?

ஒருமுறை காளிங்கன் என்ற நாகம் யமுனை நதியை விஷமயமாக்கியது. அதில் குளிக்க வந்த பசுக்களையும், அவற்றை மேய்ப்பவர்களையும் சாகடித்தது. இதைக் கண்ட மற்ற மேய்ப்பர்கள் பகவான் கிருஷ்ணரிடம் சென்று முறையிட்டனர். கிருஷ்ணர் யமுனை நதிக்கரைக்கு வந்து. காளிங்கனிடம் சண்டைக்கு வருகிறாயா என்று சவால்விட்டார். பயங்கரமான சண்டைக்குப் பிறகு காளிங்கன் தோற்றது. பணிந்து போயிற்று! வெற்றி பெற்ற கிருஷ்ணர். காளிங்கனின் தலைமீது ஏறி நின்று வெற்றி நடனம் ஆடினார். அதைப் பார்த்துக்கொண்டிருந்த பசுக்களும், மேய்ப்பர்களும் அவரை உற்சாகப்படுத்தி மகிழ்ந்தார்கள். தோற்றுப்போன காளிங்கன் யமுனை நதியை விட்டே வெளியேறுகிறது. இனி யாரும் யமுனை நதியை விஷமிட்டு நாசப்படுத்த முடியாது என்று மகிழ்ந்தார்கள் மக்கள்.

இந்தப் புராணக் கதையினுள் இன்னொரு கதையும் இருக்கிறது. இந்தக் கதையின்படி, விஷமுள்ள நாகமான காளிங்கனை அழிக்க வந்த கிருஷ்ணர் உன் விஷம் யமுனை நதியைப் பாழாக்குகிறது. மாடுகளும் மாடு மேய்ப்பவர்களும் இறக்கவேண்டி வருகிறது. அதனால் நீ இந்த நதியை விட்டுப் போய்விடு! என்றார் அதற்குக் காளிங்கன் மறுத்துவிட்டது. ஏன் இங்கிருந்து போக மறுக்கிறாய்? என்று கிருஷ்ணர் கேட்க, இதுதான் எனக்குப் பாதுகாப்பான இடம். நதியின் இந்த வளைவுப் பகுதியை விட்டு நான் போய்விட்டால், என்னை கருடன் எளிதாக வந்து தாக்குவான். அதனால் நான் இங்கேயே இருக்கிறேன். எனக்கு நீரை விஷமாக்குவதில் விருப்பமில்லை. ஆனால், அதற்கு நான் என்ன செய்வது? எங்கே போவது? என்றது.

முதல் கதையில் காளிங்கன் வில்லன். இரண்டாவதில், காளிங்கன் பாதிக்கப்பட்டவன். இரண்டாவது கதை நம்மைக் கருணையோடும் அன்போடும் கவனிக்கச் சொல்கிறது. எல்லாக் கதைகளிலும் ஹீரோவும் உண்டு. வில்லனும் உண்டு. ஆனால் வில்லன் ஏன் உருவாகிறான் என்பது குறித்து நாம் யோசித்துப் பார்ப்பதில்லை. யாருமே பிறந்தவுடன் குற்றவாளி ஆகிவிடுவதில்லை. தேவைதான் ஒருவனைக் குற்றவாளி ஆக்குகிறது. பேராசைக்கு இடம் கொடுக்கிறது. இதை நாம் உணர்வதற்குள், அது நமக்குப் பழகிப் போய்விடுகிறது. இருந்தாலும் பாதிக்கப்பட்டவனுக்குள் வில்லத்தனம் விதைக்கப்பட்டு விடுகிறது என்பதால் கடுமையாக இருக்கின்றன என்பதால், நாம் அவற்றை மீறப் பார்க்கிறோம். அப்படி மீறுவதால், நாம் எதையும் செய்யலாம் என்ற விடுதலை உணர்வை அனுபவிக்கிறோம். விதிகள் நம்மைப் பாதுகாப்பற்றதாகவும் மகிழ்ச்சியற்றதாகவும் ஆக்கும்போது, நாம் சட்டத்தை மீறுகிறவர்கள் ஆகிறோம். குற்றவாளிகள் ஆகிறோம்!

நாகமான காளிங்கனுக்கு கருடன்மீது பயம் இருந்தது. கருடனால் தனது உயிருக்கு தீங்கு ஏற்படுமோ என்று அது அஞ்சியது. அதனால் இருக்கிற இடத்திலேயே.... அதாவது யமுனை நதியிலேயே இருக்க கிருஷ்ணரிடம் அனுமதி வேண்டியது. நதியில் இருந்து வெளியேற அதற்கு தைரியம் வரவில்லை. அதே நேரம், காளிங்க நாகமானது தனது விஷத்தன்மையால் நதியையே விஷமாக்கிறது. அதன்மூலம் அது வில்லனாகவும் மாறியது! கிருஷ்ணர் இதை உணர்ந்தார். அதனால்தான் தன் திருப் பாதத்தின் சுவடுகளை காளிங்கனின் தலை மீது பதித்தார். அதுதான் நாகப்பாம்பின் மீது காணப்படும் நாமம் போன்ற அடையாளம். காளிங்கனாகிய என்னை எதுவும் செய்துவிடாதே... என்று அந்த நாகம் கருடனிடம் தெரிவிப்பதற்காக கிருஷ்ணர் தந்த அடையாளமாகவும் நாம் அதை எடுத்துக்கொள்ளலாம்.

இந்துப் புராணங்களில் கடவுள் சாதாரணமாக வில்லனைக் கொல்வதில்லை. மாறாக அவனுக்கு விமோசனம் அளிக்கிறார். விடுதலை மாதிரிதான் அது. பாதிக்கப்படும் ஒவ்வொருவரும் (வில்லன் உட்பட) காப்பாற்றப்பட வேண்டியவர்தான். அதைத்தான் இரண்டாவது கதை சொல்கிறது. இன்றைக்குத் தப்பு செய்கிறவர்கள் பலரையும் நாம் வில்லனாகப் பார்க்கிறோம்; அடிக்கிறோம், உதைக்கிறோம், அபராதம் வாங்குகிறோம்; தண்டனை கொடுக்கிறோம்; சிறையில் தள்ளுகிறோம். இப்படி, அவர்களுக்குத் தண்டனை மட்டும் கொடுத்தால் போதாது; அதனுடன் அவர்களுக்கு விமோசனம் என்ன என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். நமக்குள் எழும் சினத்தையும் ஆத்திரத்தையும் காட்டுவதைவிட, பக்குவ நிலையில் யோசித்துப் பார்க்க வேண்டும். பக்குவ நிலை வராவிட்டாலும், அதைப்பெற முயற்சியாவது செய்ய வேண்டும். அதுதான் ஒவ்வொரு நல்ல மனிதனுக்கும் அழகு!