ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

தெய்வங்களுக்கு வாழைப்பழம் வைப்பது ஏன்?

 எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள். மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது. எனது இறைவா! மீண்டும் பிறவாத நிலையைக் கொடு! என வேண்டவே நாம் நமது கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கிறோம். அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு. அது மட்டுமல்ல தேங்காய், வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை. மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது. ஆனால், தேங்காயை சாப்பிட்டு விட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. முழுத் தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும். அது போல வாழை மரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும். பழம் கொட்டை என்பது கிடையாது. அப்படி நமது எச்சில் படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள். நாமும் இந்த மரபினைப் பின்பற்றிவருகிறோம்.
தாலி கட்டும் போது சொல்லும் சமஸ்கிருத மந்திரத்தின் பொருள்…

இந்துக்களை அவமானப்படுத்தும் விசமிகளின் செயல் வருத்தத்திற்குரியது. உண்மைக்கு குரல் கொடுப்பதுகாலத்தின் தேவையாகின்றது. வைதீக முறைப்படி நடைபெறும் திருமணத்தில், தாலி கட்டும் போது சொல்லும் சமஸ்கிருத மந்திரத்தின் பொருள் என்ன என்று தெரியுமா ..?!

‘மாங்கலயம் தந்துனானே’ என தொடங்கும் இம்மந்திரத்தில், ”சோமஹ ப்ரதமோ விவிதே கந்தர்வோவிவித உத்ரஹ த்ரியோ அக்னிஸ்டே பதிதுரியஸ்தே மனுஷ்ய ஜாஹ” என்ற வரிகள் வரும்.

விசமிகளால் வெளியிடப்பட்டுள்ள பொய்யான விளக்கம் கீழ்வருமாறு.

”நீ(மணமகள்) முதலில் சோமனுக்கு (சந்திரன்) உரியவளாக இருந்தாய்,
பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய்.”

இந்த மந்திரத்திற்கு உண்மையான பொருள் கீழ்வருமாறு:

நம் உடலின் ஒவ்வொரு பாகத்திற்கும் ஒரு தெய்வத் தன்மையை உருவகித்திருக்கிறோம். கண்களுக்குச் சூரிய பகவான்; கைகளுக்கு இந்திரன் – இது போன்று. இதே போல குழந்தை ஜனித்ததிலிருந்து அது வளர்ந்து பெரியவனா(ளா)கும் வரை ஒவ்வொரு பருவத்திலும் உடல் பல மாற்றங்களைச் சந்திக்கிறது. ஓவ்வொரு பருவத்தையும் ஒரு தெய்வத்திற்கு – தெய்வத் தன்மைக்குப் ஒப்புமைப் படுத்தியிருக்கிறோம்.

இதன்படி ஒரு பெண் குழந்தை பிறந்ததிலிருந்து, ஆடை அணியும் வயது வரையான பருவம் வரை “ஸோமனின் (Moon God)ஆதிக்கத்தில்” இருக்கிறாள். அப்பருவத்தில் குழந்தை நிலவைப் போலவே “குளிர்ச்சியாக” இருக்கிறாள். (ஆண்கள் அணியும் வேஷ்டியின் பெயரும் சோமன்).

பிறகு இந்தச் “சோம பருவத்திலிருந்து” “பூப்பெய்தும் பருவம் வரை” விளையாட்டுத் தனமும் அழகும் நிரம்பியிருக்கும் பெண் குழந்தை. இப்பருவத்தில் அவள் “கந்தர்வனின் ஆதிக்கத்தில்” இருக்கிறாள் அவள். அதாவது விளையாட்டுத்தனமும் அழகும் நிரம்பிய கந்தர்வ பருவம்!

பூப்பெய்திய பருவத்திலிருந்து மூன்று ஆண்டுகள் வரை அவள் “அக்னியின் ஆதிக்கத்தில்” – அதாவது அக்னி போன்று எழுந்து தகிக்கும் காம உணர்வுகளுடன் – இருக்கிறாள்.

இப்பொழுதிருக்கும் எவ்வித வசதிகளுமற்ற, எந்தவித நவீனத் தாக்கங்களும், தேவைகளுமற்ற எளிய வாழ்க்கை வாழக்கூடிய காலகட்டத்தை மனதில் கொண்டால், பெண் வீட்டைப் பார்த்துக்கொள்ள, ஆண் வெளியில் வேலை செய்து பொருளீட்டி ஜீவனத்தை நடத்தும் குடும்ப அமைப்பை மனதில் கொண்டால், பருவமடைந்து அக்னியின் பிடியில் இருக்கும் – காம உணர்வுகளில் உந்தப்பட்டுக்கொண்டிருக்கும
ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொடுப்பதே பெற்றவர்களின் முக்கிய கடமையாக இருந்தது – அக்னியின் ஆதிக்கத்தில் இருக்கும் பெண் – குடும்ப வாழ்க்கைக்குத் தயாராகி, திருமணம் செய்விக்கப்பட்டு ஓர் ஆண்மகனின் கைகளில் ஒப்படைக்கப் படுகிறாள்.

ஆக, நிலவைப் போல் குளிர்ந்து நிற்கும் குழந்தை, விளையாட்டுத் தனம் நிரம்பி அழகு ததும்பும் பருவத்தைக் கடந்து, பூப்பெய்தி, பிறகு அவ்வயதிற்குரிய உணர்வுகளால் உந்தப்பட்டு காலத்தைக் கடத்திக்கொண்டிருக்கும் போது, ஆண்மகனைக் கைப்பிடித்து திருமண பந்தத்தின் மூலம் குடும்ப வாழ்க்கையைத் துவங்குகிறாள் – என்று இதைப் புரிந்துகொண்டால் நலம்.
ஆலயம் சென்று வழிபடுவோர் கவனிக்கவும்

1. ஆலய நுழைவாயிலில் கை கால்களை நீரால் அலம்பி விட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம்.
மூன்று வேளை வணங்க வேண்டிய தேவியர் !

காயத்ரி காலை வணக்கத்துக்குரியவள். இவள் ரிக் வேதத்தின் தலைவியாவாள். வீட்டில் வளர்க்கும் ஹோமத் தீக்கு இவளே அதிபதி. நான்கு முகங்கள், எட்டுக் கரங்களுடன் அன்ன வாகனத்தில் காட்சி தருபவள்.

நண்பகல் பிரார்த்தனைக்குரியவள் சாவித்ரி. யஜுர் வேதம் இவளுக்குரியது, இவள் நான்கு முகங்களையும் அதில் பன்னிரு விழிகளையும், நான்கு கரங்களையும் கொண்டவள். இவளது வாகனம் எருது.

அந்தி வேளை வணக்கத்துக்குரியவள் சரஸ்வதி. சாமவேதம் இவளுக்குரியது. ஆஹ்வனீய தீயின் ஒளி இவள். ஒற்றை முகமும் நான்கு கரங்களும் கொண்டு அருள்பாலிப்பவள். இவளது வாகனம் கருடன்.
சிவனின் சிறப்பு செய்திகள்

* பிருங்கி முனிவர் வண்டு வடிவெடுத்து சிவ பெருமானை வழிபட்டதால் சிவ லிங்கத்தில் வண்டு துளைத்த அடையாளம் ஏற்பட்டது. இந்த அரிய வடிவினை நாம் திருநல்லூரில் காணலாம். இங்கு இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திரு நாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

* நீடூரில் ஒரு நண்டு சிவபெருமானை வணங்கியதால் சிவலிங்கத்தின் உச்சியில் நண்டு வளை உள்ளது. இங்கு சுவாமியின் பெயர் அருட்சோமநாதர்.

* ரத்தினம் வேண்டிய ஒரு அரசனை இறைவன் சோதித்தபோது அவனுடைய வாளால் வெட்டப்பட்ட லிங்கத் திருமேனியை ரத்தினகிரியில் காணலாம். இங்கு சிவபெருமான் ரத்தினகிரீஸ்வரர் என்ற பெயருடன் காட்சி தருகிறார்.

* தலைச்சங்காட்டில் திருமால், சிவபெருமானை வழிபட்டு, பாஞ்சஜன்ய சங்கைப் பெற்றதால் அங்கு சங்கு வடிவில் மூலவராகக் காட்சியளிக்கிறார் ஈசன். இறைவனுடைய பெயர் சங்காரண்யேஸ்வரர்.

* கேரள மாநிலம் திருச்சூரில் வடக்குநாதர் சுவாமி கோயிலில் சிவன் நெய் மலையாக காட்சி தருகிறார். ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த லிங்கம் இது.

* அமர்நாத்தில் உள்ள பனிலிங்கம் சந்திரனைப்போலவே 15 நாளில் வளர்ந்து பௌர்ணமியில் முழு லிங்கமாகவும் அடுத்த 15 நாளில் தேய்ந்து அமாவாசையில் மறைவதும் சிறப்பம்சம்.

* கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் சிவலிங்கம் வடதுபுறம் சாய்ந்திருப்பதைக் காணலாம்.

* அர்ஜுனனின் அம்புபட்ட லிங்கத்தை திருவிஜயமங்கையில் தரிசிக்கலாம். இங்கு இறைவன் விஜயநாதேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

* செம்பனார்கோயிலில் உள்ள சிவபெருமான் சொர்ணபுரீஸ்வரர் என்ற பெயருடன் 32 இதழ்களை உடைய தாமரை வடிவ ஆவுடையாரில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருக்கிறார்.

* காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் ஆலயத்தில் சிவன் எட்டுக்கைகளுடன் சிற்பமாகக் காட்சியளிக்கிறார்.

* மகாராஷ்டிரா மாநில் எல்லோரோ குகைகளுக்கு அடுத்து உள்ள “குஸ்மேசம்’ என்னும் ஊரில் உள்ள சிவலிங்கம் குங்குமத்தால் ஆனது.

* பொதுவாக பெருமாள் கோயிலில்தான் சடாரி வைப்பார்கள். ஆனால் மூன்று சிவன் கோயில்களில் மட்டும் சடாரி வைக்கப்படுகிறது. அவை காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில், காளஹஸ்தி கோயில், மற்றும் சுருட்டப்பள்ளி சிவன் கோயில் ஆகும்.

* திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவபெருமானது பெயர் சந்திரமௌலீஸ்வரர். அவர் மும்முகலிங்கமாக தரிசனம் அளிக்கிறார். அதில் கிழக்கு முகம் தத்புருஷ லிங்கம் என்றும், வடக்கு முகம் வாமதேவ முகமாகவும், தெற்கு முகம் அகோர மூர்த்தியாகவும் வணங்கப்படுகின்றனர்.

* ஆலகால நஞ்சை உண்ட சிவபெருமான் அம்பிகையின் மடியில் சயனித்திருக்கும் அரிய காட்சியை காசியில் உள்ள “அனுமன் காட்’டில் காமகோடீஸ்வரர் கோயிலில் காணலாம். ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளியிலும் பள்ளிகொண்டீஸ்வரர் தரிசனம் கிடைக்கிறது.

* பெங்களூருக்கு அருகே சிவகெங்கா என்ற இடத்தில் சிவலிங்கத்தின் மேல் நெய்யை வைத்தால் வெண்ணெயாக மாறுகிறது. இந்த வெண்ணெயை வீட்டுக்குக் கொண்டு வரலாம். எத்தனை நாள் ஆனாலும் வெண்ணெய் உருகுவதில்லை.

* தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயிலில் உள்ள ராஜகம்பீர மண்டபத்தில் மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர் இருக்கிறார்.

* ஐந்துமுகம் கொண்ட சிவபெருமான் ஏழு தலங்களில் அருள்புரிகிறார். 1. காசி, 2. நேபாளம், 3. காளஹஸ்தி, 4. திருவானைக்காவல், 5. சித்தேஸ்வர் மகாதேவ், 6. ராசிபுரம், 7. காஞ்சி கைலாசநாதர் கோயில்.

* தஞ்சை மாவட்டம் குடவாசல் அருகே உள்ளது நாலூர் திருமயானம். இங்கு உள்ள சுயம்பு லிங்கத்தின் மேற்பகுதி பலாபழம் போன்று முள்ளுமுள்ளாக உள்ளது. சுவாமியின் பெயர் பிலாச வனேஸ்வரர்.

* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு தெற்கே சிறிது தூரத்தில் “ஜ்வரஹரேஸ்வரர்’ என்ற பெயருடன் ஈசன் எழுந்தருளியுள்ளார். வேலூர் கோட்டை கோயிலிலும் மூன்று கால்களுடன் ஜ்வரஹரேஸ்வரர் காட்சியளிக்கிறார்.

* மயிலாடுதுறை அருகே திருவிற்குடியில் உற்சவமூர்த்தியான சிவபெருமான் திபருக்கரத்தில் சக்கரம் ஏந்தி நிற்கும் காட்சியைக் காணலாம். வலது மேல் கரத்தில், மழுவும், இடது மேல் கரத்தில் மானும் வைத்திருக்கின்றார். இங்கு சிவனுக்கு துளசியால் அர்ச்சனை செய்கின்றனர்.
திருவண்ணாமலை தீர்த்தங்கள்!

தெய்வத் திருமலை திருவண்ணாலையில் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் முந்நூற்று அறுபது தீர்த்தங்கள் இருக்கின்றனவாம்.

இந்தத் தீர்த்தங்களிலே கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி முதலான புனித நதிகள் திருவிழாக் காலங்களில் வந்து கலப்பதாக புராணங்கள் விரிவாக எடுத்துக் கூறுகின்றன. அவற்றுள் சில:

திருவண்ணாமலையின் கிழக்கே இந்திரனால் உண்டாக்கப்பட்ட தீர்த்தம் ஒன்று உள்ளது. இது இந்திர தீர்த்தம் எனப்படும். இத்தீர்த்தத்தில் தைப்பூசத்தன்று நீராடி ஒரு கையளவு நீர் உட்கொண்டால் கோடி பிரம்மஹத்தி தோஷம் போகும். அங்கு நீராடிய இந்திரன் தன் குற்றங்கள் நீங்கப்பெற்று தொடர்ந்து இந்திரப் பதவியை வகிக்கும் பேறு பெற்றான்.

திருவண்ணாமலைக்குத் தென்கிழக்கில் அக்னி தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் உண்டு. அதில் பங்குனி மாதம் பௌர்ணமி நாளில் மூழ்கி எழுந்தால் எப்பேர்ப்பட்ட பாவமும் நீங்கும். அறமும் தவமும் வந்து சேரும். அக்னிதேவன் தனக்கு ஏற்பட்ட பாவத்தை இந்தத் தீர்த்தத்தில் மூழ்கி இறைவனை வழிபட்டு போக்கிக் கொண்டான்.
திருவண்ணாமலையின் நிருதி மூலையில் நிருதி தீர்த்தம் இருக்கிறது. இத்தீர்த்தத்தில் மூழ்குபவர்களுக்கு பகை நீங்கும் என்று சொல்லப்படுகிறது. நிருதியானவள் இத்தீர்த்தத்தில் மூழ்கியதன் பயனாக நெருப்பு போன்ற கண்களையும், பிளந்த வாயினையும் உடைய ஒரு ராட்சஸப் பேயை தன் வயமாக்கிக் கொண்டான்.

திருவண்ணாமலைக்கு மேற்கு திக்கில் வருண தீர்த்தம் என்று ஒன்றுண்டு அதில் பக்தியோடு மூழ்கி எழுந்தால் ஒன்பது கிரகங்களும் நன்மையைச் செய்யும். அந்த ஒன்பது கிரகங்களும் அதன்படி மூழ்கி வேண்டிய வரங்களைப் பெற்றனவாம். அத்தீர்த்தத்தின் வாயு திசையில் வாயு தீர்த்தம் இருக்கின்றது. அத்தீர்த்தத்தில் மூழ்கினால் சகல துன்பங்களும் தீரும் என்பர்.

திருவண்ணாமலையில் வடதிசையில் குபேர தீர்த்தம் என்றொரு தீர்த்தம் உண்டு. அதில் மூழ்கி எழுந்தால் சகல பாவங்களும் நீங்கி மேலான நிலையை அடைவதோடு சிவபெருமானின் பாதங்களைச் சேர்வார்கள்.

திருவண்ணாமலையில் எமன் தீர்த்தத்திற்குத் தெற்கே அகத்தியத் தீர்த்தம் இருக்கிறது. புரட்டாசி மாதத்தில் அதில் மூழ்கி நீராடி தீர்த்தம் அருந்தினால் பெரும் பண்டிதர் ஆவார் என்றும்; திருமகளும் கலைமகளும் அவரிடத்திலே வந்து தங்கியிருப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

திருவண்ணாமலையில் குபேர தீர்த்தத்தின் அருகே வசிட்ட தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் உண்டு. அதில் நீராடிய வசிஷ்ட முனிவர் முனிவர்களுக்கெல்லாம் தலைமையைப் பெற்றார். அத்தீர்த்தத்தில் மூழ்கியவர்களுக்கு எல்லா சாஸ்திரங்களும் விளங்கும்.

திருவண்ணாலையின் வடக்கு பக்கத்தில் திருநதி என்று ஒரு நதியுண்டு. அதில் திருமகளான லட்சுமிதேவி மூழ்கி எழுந்ததால் திருமாலின் மார்பினைச் சேர்ந்தார்.
நர்மதை ஆற்றினால் வணங்கப்படும் சோணம் என்ற ஒரு நதி அண்ணாமலையின் தெற்கே இருக்கிறது. அதில் கங்கை, யமுனை, காவிரி ஆகியோர் வந்து மூழ்கித் தங்கள் துன்பத்தைப் போக்கிக் கொண்டார்களாம்.

திருவண்ணாமலையின் மேற்கு திசையில் புண்ணியநதி என்று ஒன்று உண்டு. அதன் அருகே புண்ணியாற்றூர் என்று ஒரூர் இருக்கிறது. அங்கு வாழ்ந்த ஈழன் என்ற அரசன் தனக்கு தீங்காக வந்தடைந்த பெண் உருவை அந்நதியில் மூழ்கிப் போக்கிப் பெரும் பேறு பெற்றான். இப்புண்ணிய நதிக்கு வடப்பக்கம் சேயாறு என்ற ஆறு உள்ளது. அது முருகப் பெருமானால் உண்டாக்கப்பட்டது என்பர். அதில் முருகப் பெருமானே மூழ்கி எழுந்து அசுரர்களைக் கொல்லும் வரமும் தேவசேனாதிபதி என்ற பேறும் பெற்றார்.

திருவண்ணாமலைப் பெருமான் கோயிலில், உள்ளே சிவகங்கைத் தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் உண்டு. இதனை தினந்தோறும் உள்ளத்தில் நினைத்தால் கங்கை நதியில் மூழ்கிய பயன் உண்டாகும். அநேக உருத்திரர்கள் அதில் மாசி மாதத்தில் மூழ்கி இடபாரூடராய் எல்லா தேவரினும் மேலான பேறு பெற்றார்கள்.

திருவண்ணாமலையில் உள்ள சிவகங்கை தீர்த்தத்தின் கிழக்கே சக்கர தீர்த்தம் இருக்கிறது. திருமால் வராக அவதாரம் எடுத்தபோது அதில் நீராடினாராம். அதில் நீராடுவோரும், அந்நீரை அருந்தியவர்களும் அதனை வலமாக வந்தவர்களும் துயரக்கடல் நீங்கி சிவபெருமானின் திருவடிகளைச் சேர்வர்.

திருவண்ணாமலையார் சன்னதியில் அக்னி திசையில் பிரம்மதேவனால் அமைக்கப்பெற்ற பிரம்ம தீர்த்தம் ஒன்றுண்டு. அதில் மூழ்கியவர்கள் பிறவிக் கடலில் நீந்தி சென்ற பிறப்புகளில் சேர்ந்த தீவினைகள் அனைத்தும் நீங்கப் பெறுவர். அந்த பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி அணுவளவுப் பொன்னை தானம் கொடுப்பாராயின், நவமணிகள் நிறைந்த நிலவுலகத்தையே ஒரு அடியவருக்குக் கொடுத்த புண்ணியத்தை அடைவர். இத்தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து தானங்களைச் செய்தவர்கள் சிவபெருமானின் திருவடித் தாமரையை அடைவார்கள்.

விநாயகர், முருகன், சூரியன், சந்திரன், கங்கை, பார்வதி, பைரவர், சப்த கன்னியர், அட்டவசுக்கள், தேவர்கள் ஆகியோர் மூழ்கி எழுந்த தீர்த்தங்கள் பலவுண்டு. அவற்றின் பெருமையை வேதங்களும் அறியாது.

திருக்கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களில் தீர்த்தவாரி என்பது ஒரு முக்கிய நிகழ்வாகும். இறைவனையும் இறைவியையும் தரிசித்தவர்கள் இருவினையும், மும்மலங்களும் அடங்கி இறைவியின் திருப்பாதம் பெற்று பேரின்பத்தில் மூழ்குவர் என்பதாகும். இதன் அடிப்படையில்தான் பத்தாவது நாளில் தீர்த்தவாரி என்ற நிகழ்ச்சி திருக்கோயில்களில் நடைபெற்று வருகிறது.

தீர்த்தவாரி நடைபெறும்போது மக்களின் ஆன்மா குளிர்ச்சியடைகிறது. அதாவது இறைவனோடு இறைபக்தியும் சேர்கிறது. திருவண்ணாமலை திருக்கோயில் இறைவன் மணலூர்பேட்டை சென்று தீர்த்தமாடுவதும், கலசப்பாக்கம் சென்று தீர்த்தமாடுவதும் அந்தந்த ஆற்றிற்கு சிறப்பாகும்.

எல்லா நதிகளும் அங்கு ஒன்றாகக் கலந்து இறைவனை வழிபடுவதாக அர்த்தம். ஆக, தீர்த்தவாரி என்பது மிகவும் முக்கியமானதாகும். லட்சக்கணக்கான பக்தர்கள்கூடி இறைவன் தீர்த்தவாரி செய்து அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்போது தாங்களும் நீராடுவதால் தங்களுடைய பாவங்களைத் தீர்த்தது போல் ஓர் உள்ளுணர்வு ஏற்பட்டு மனநிம்மதி அடைகின்றனர்.

ஆதிசங்கரர் அவதாரம்

ஆதிசங்கரர் அவதாரம்

கி.பி. 4ம் நூற்றாண்டில் கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள காலடியில் கடவுள் பக்தி கொண்ட சிவகுரு ஆர்யாம்பாள் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர்.அவர்கள் தங்களது புத்திர பாக்கியத்திற்காக திருச்சூர் வடக்குநாதரை வேண்டி கடுமையான விரதங்களை மேற்கொண்டனர். ஒருநாள் சிவகுருவின் கனவில் தோன்றிய சிவன் குறைந்த ஆயுளுடன் எல்லா நற்குணங்களும் ஞானமும் கொண்ட புத்திசாலிப் பிள்ளை வேண்டுமா அல்லது நீண்ட ஆயுளை உடைய சாதாரண மகன் வேண்டுமா? என்று கேட்டார்.அதற்கு சிவகுரு, புத்திசாலி குழந்தைதான் வேண்டும் என்றார்.சிவகுருவின் கனவைக் கேட்ட ஆர்யாம்பாள் மனமகிழ்ந்து ஒரு ஞானக்குழந்தை தன் மகனாகப் பிறப்பான் என்று எண்ணி ஆனந்தம் அடைந்தாள்.வைகாசி மாதம் பஞ்சமியன்று சூரியன் செவ்வாய் சனி குரு ஆகிய நான்கு கிரஹங்கள் உச்சத்தில் இருக்கும் சுபவேளையில் இறைவனின் அருளால் தெய்வீகக் குழந்தை இந்த பூமியில் அவதரித்தது. பிள்ளையில்லா தசரதனுக்கு மகாவிஷ்ணுவே ராமராக அவதரித்தது போல சிவகுரு ஆர்யாம்பாள் தம்பதியினருக்கு ஈசுவரனே குழந்தையாகப் பிறந்தது பெரும் பாக்கியமே.பிள்ளை பிறந்த மகிழ்ச்சியில் சிவகுரு தான தருமங்கள் செய்து சான்றோர்களுக்கு விருந்தளித்து கொண்டாடினார். சோதிடர்கள் இவன் ஒரு பெரிய ஞானியாவான் என்று கூறினார்கள்.

இளம் குழந்தையைச் சுற்றி நாகமொன்று சிறிது நேரம் விளையாடிய பின் விபூதியாகவும் ருத்ராட்சமாகவும் மாறியதாலும் உடலில் சிவச்சின்னங்கள் இருந்ததாலும் குழந்தைக்கு சங்கரர் என்று பெயர் சூட்டப்பட்டது.குறும்புக் கண்ணனைப் போலவே குட்டிச் சங்கரரும் குழந்தை பருவத்தில் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம் ஏராளம்.இரண்டு வயதிலேயே சங்கரர் எழுத்துக்களை வாசிக்க வல்லவரானார்.படிக்காமலேயே காவியம் முதலியவற்றை அறிந்தார். குழந்தைக்கு மூன்று வயது ஆகும்போதே தந்தை சிவகுரு காலமானார்.மிகவும் துக்கமடைந்த தாய் ஆர்யாம்பாள் உறவினர்களின் உதவியுடன் அவருக்கு பூணூல் போட்டு தகுந்த குருவிடம் வேதம் சாஸ்திரம் முதலியவைகளை பயில சேர்த்து விட்டார்.இவர் சிவனின் அவதாரமானதால் குருவால் கூறப்பட்டதையெல்லாம் ஒரு தடவையிலேயே புரிந்து கொண்டார். அத்துடன் அறிய வேண்டிய சகல முக்கிய சாஸ்திரங்களையும் இரு வருடங்களுக்குள்ளேயே கற்றுக் கொண்டார்.

பால லீலை

தினந்தோறும் சங்கரரின் தாய்  ஆர்யாம்பாள் குளிப்பதற்கு வெகுதொலைவில் உள்ள பூர்ணா நதி சென்று நீராட வேண்டியிருந்தது.  இதனால் மிகவும் சிரமப்படுவதாக எண்ணிய சங்கரர் நதி தேவதையைப் பிரார்த்தித்தார். உடனே அந்த நதி பராசக்தியின் உத்தரவின் பேரில் தன் திசையை மாற்றிக் கொண்டு சங்கரரின் வீட்டிற்குப் பக்கத்தில் ஓட ஆரம்பித்தது. (இந்த நதி தான் தற்போது காலடியருகில் ஓடும் பூர்ணா நதி). இதைக் கண்ட மக்கள் அனைவரும் வியப்புற்று தங்களுக்கு ஒரு மகான் கிடைத்துவிட்டதாக எண்ணி ஆனந்தம் அடைந்தனர். சங்கரரின் பெருமையை கேள்விப்பட்ட கேரள தேசத்து அரசன் ஒரு சமயம் யானை முதலிய காணிக்கைகளுடன் தன் மந்திரியை சங்கரரிடம் அனுப்பினார். இது கண்ட சங்கரர் பிரம்மச்சாரியான தனக்கு இது ஒன்றும் தேவையில்லை என்று கூறி காணிக்கைகளைத் திருப்பி அனுப்பிவிட்டார். இதைக் கேட்ட அரசன் தானே சங்கரரின் இருப்பிடத்திற்கு வந்து அவரை வணங்கி சந்தோஷம் அடைந்தான். பதினாராயிரம் பொன்களையும், தான் இயற்றிய மூன்று நாடகங்களையும் சங்கரருக்கு சமர்ப்பித்தார். நூல்களின் பெருமையைப் பாராட்டிய சங்கரர் அரசனைப் பார்த்து இந்த பொன் எனக்கு அவசியமில்லை. உன் ராஜ்யத்தில் உள்ளவர்க்கே கொடுப்பாய் என்று சொன்னார். தனக்கு நற்குணங்கள் நிறைந்த புதல்வன் பிறக்க வேண்டும் என்று அரசன் வரம் கேட்க, புத்திரகாமேஷ்டி யாகம் செய்து புத்திரனை பெறுவாய் என்று சங்கரர் அனுக்ரஹித்தார். ஏழுவயதுக்குள்ளாகவே இவ்வளவு ஞானமும், வைராக்கியமும், தவமும் பெற்ற சங்கரர், உலகத்தை ரக்ஷிக்க அவதரித்த பரமேஸ்வரரின் அவதாரம் தான் என்பதை நாம் அறியலாம்.

துறவறம்: ஒருநாள் உபமன்யு, ததீசி, கௌதமர், அகஸ்தியர் முதலிய மாமுனிவர்கள் சங்கரரின் இல்லத்திற்கு வந்தனர். அவர்களை தகுந்த மரியாதையுடன் உபசரித்த ஆரியாம்பாள், எனது குழந்தை மிகச்சிறுவயதிலேயே மிகப்பெரிய வித்வானாகவும் செயற்கரிய செய்கை உடையவனாகவும் திகழக் காரணம் என்ன என்று அம்முனிவர்களிடம் கேட்டாள். அகத்தியர் சிவபெருமானே இந்த திருக்குழந்தையாக அவதாரம் செய்திருப்பதாகவும், பதினாறு வயதே இவன் ஆயுள். ஆனால் சில காரணங்களுக்காக வியாசரின் அருளால் மீண்டும் 16 ஆண்டு கிடைக்கும் என்று கூறி மறைந்தனர். இதைக்கேட்ட ஆர்யாம்பாள் மிக்க வருத்தமுற்றாள். சிறுவயதிலிருந்தே சங்கரருக்கு, உலகைத் துறந்து சன்னியாசி ஆகவேண்டும் என்ற ஆசை இருந்தது. இதற்குத் தம் அன்னையின் அனுமதியைக் கேட்டார். ஆனால் அதற்கு ஆர்யாம்பாள் அனுமதி தர மறுத்துவிட்டாள்.

ஒருநாள் குளிப்பதற்காக தாயுடன், சங்கரர் பூர்ணா நதிக்குச் சென்றார். அப்பொழுது ஒரு முதலை சங்கரரின் காலைப் பற்றிக் கொண்டது. சங்கரர் உரத்த குரலில், அம்மா! முதலை என்னை இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது. சன்னியாசி ஆக எனக்கு அனுமதி கொடு. அப்பொழுது தான் முதலை என் காலைவிடும் என்று சொன்னார். செய்வதறியாது தவித்த ஆர்யாம்பாள் சங்கரர் சன்னியாசியாகலாம் என்று அனுமதி கொடுத்தாள். உடனே சங்கரர் அதற்குரிய மந்திரங்களை சொல்லி துறவறம் மேற்கொண்டார். இதனால் முதலை சங்கரரின் காலை விட்டு விட்டது. பிரம்மாவின் சாபத்திற்கு உட்பட்ட ஒரு கந்தர்வன் தான் அந்த முதலையாக மாறியிருந்தான். சங்கரரின் கால்பட்டதும் சாபவிமோசனம் பெற்ற கந்தர்வன் சங்கரரை வணங்கி வாழ்த்தி விட்டு தன் இருப்பிடம் சென்றான். கரைக்கு வந்த சங்கரர் வீட்டிற்கு வராமல், துறவியாய் உலக சஞ்சாரம் செய்ய வேண்டும் என்றும் உறவினர்கள் உன்னை கவனித்துக் கொள்வார்கள் என்றும் தாயிடம் கூறினான். அதற்கு தாய், என் கடைசிக்காலத்தில் நீயே வந்து எனக்கு இறுதிக்கடன்களை செய்ய வேண்டும் என்று கேட்க, அதற்கு சங்கரர் ஒப்புக் கொண்டு சன்னியாசம் புறப்பட்டார். அதற்கு முன் தாயார் வழிபாடு செய்வதற்காக பூர்ணாநதியின்  கரையில், தன் கைகளால் ஒரு கிருஷ்ணர் சிலையை பிரதிஷ்டை செய்தார். இதுவே தற்போது காலடியில் உள்ள திருக்காலடியப்பன் கோயிலாகும். இந்த சிலை குருவாயூர் கிருஷ்ணர் சிலையைப் போலவே "அஞ்சனா என்ற உலேகாத்தால் ஆனது.

குரு கோவிந்தபாதர்

காலடியிலிருந்து சன்னியாசிகளுக்கு உரித்தான காவி உடையில் இருந்த சங்கரர் ஒரு குருவைத் தேடிப் பாதயாத்திரை சென்றார். பல மாதங்களுக்குப் பின்னர் சங்கரர் நர்மதைக் நதிக் கரைக்கு வந்தார். அங்கிருந்த ஒரு குகையில் மிகப்பெரிய ஞானியான கோவிந்தபாதர் வசித்து வந்தார். ஆதிசேஷனின் அவதாரமாகிய அவரை சங்கரர் வணங்கி, தம்மை சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். கற்று உணர்ந்ததை எல்லாம், அனைவரும் ஏற்கும் அளவுக்கு, எளிமையாக எடுத்துக் கூறும் திறனைப் பெற்றதோடு, மாற்றுக் கருத்துக்களுக்கும், முழுமையடையாத சித்தாந்தங்களுக்கும், முதிர்ச்சி பெறாத போதகர்களுக்கும் எதிராக வாதமிட்டு அத்வைத தத்துவத்தை நிலைப்பிக்கும் திறமையையும், குருவருளால் ஆதிசங்கரர் விரைவிலேயே பெற்றார்.

முதல் சீடர் பத்மபாதர்: குருவின் விருப்பபப்படி சங்கரர் காசிக்குச் சென்று கங்கையின் புனித நதிக்கரையில் தங்கினார். வேதங்களையும், உபநிடதங்களையும் கற்க எத்தனையோ சீடர்கள் இவரை வந்தடைந்தனர். சில காலம் காசியில்  தங்கியிருந்து விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்குவதும், சீடர்களுக்கு வேதபாடம் சொல்லிக் கொடுப்பதுமாக இருந்தார். இவரை அடைந்த சீடர்களில் சனந்தனன் என்ற ஒரு சீடரும் இருந்தார். மிகச் சிறந்த அறிவாளி. ஒருநாள் இவர் கங்கையின் எதிர்க்கரையில் இருந்தார். வகுப்பு நேரம் நெருங்கி விட்டது, ஆற்றைக் கடக்க எண்ணிக்கொண்டிருக்கையில் கங்கையில் திடீரென்று வெள்ளம் ஏற்பட்டது. வகுப்பைத் தவறவிட்டு விடுவோமோ என்று கவலைப்பட்ட அவர், தன் குருவை மனதில் நினைத்துக் கொண்டு ஆற்றில் இறங்கினார். இவரின் குருபக்தியைப் பார்த்த கங்காதேவி, இவரின் பாதஅடிகளை தாமரை மலரால்(பத்மத்தால்) தாங்கிக் கொள்கிறது. அன்று முதல் இவர் பத்மபாதர் ஆனார். இவர் தான் சங்கரரின் முதல் சீடர். காசியில் இருந்தபோது சங்கரர் முக்கிய இறைநூல்களான பகவத்கீதை, பிரம்மசூத்ரம், உபநிடதங்கள் போன்றவற்றுக்கு பாஷ்யங்கள் (விளக்கவுரை) எழுதினார்.

விஸ்வநாதரின் திருவிளையாடல்

ஒருநாள் கங்கையில் நீராடி விட்டு, காசிவிஸ்வநாதரையும் தரிசித்து விட்டு, சங்கரர் தம் சீடர்களுடன் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது சிவபெருமான், சங்கரரிடம் திருவிளையாடல் புரியத் தொடங்கினார். நான்கு வேதங்களையும், நான்கு நாய்களாக அழைத்துக் கொண்டு ஒரு சண்டாளன்  (தீண்டத்தகாதவன்) உருவில் அவர் முன் தோன்றினார். அவனைப் பார்த்து சங்கரர், சண்டாளனே! விலகிப் போ என்றார். அதற்குச் சண்டாளன் சிரித்துக் கொண்டே, எதை விலகிப்போகச் சொல்கிறீர், இந்த சரீரத்தையா அல்லது அதன் உள்ளிருக்கும் ஆன்மாவையா. தாங்களோ எல்லோருக்கும் இரண்டும் வேறல்ல என்ற அத்வைதக் கொள்கையை போதித்து வருகிறீர்களே! வேற்றுமை இல்லாத உங்களுக்கு இப்போது எப்படி இந்த வித்தியாசம் தோன்றியது? என்று வினவினார். இதைக் கேட்ட சங்கரர் எவன் இப்படி ஆத்மநிலையை அடைந்திருக்கிறானோ அவன் சண்டாளனாயிருந்தாலும் சரி, பிராமணனாக இருந்தாலும் சரி, அவனே என் குரு என்ற பொருள்பட மனீஷா பஞ்சகம் என்று போற்றப்படும் 5 ஸ்லோகங்களைப் பாடி சாஷ்டாங்கமாக சண்டாளன் காலில் விழுந்தார். உடனே சண்டாளன் மறைந்துபோய், ஜடை, மகுடம், சந்திரன் முதலியவைகளை அணிந்திருந்த காசி விஸ்வநாதர் நான்கு வேதங்களுடன் அவருக்கு தரிசனம் கொடுத்தார். வியாசமுனிவரின் பிரம்ம சூத்திரங்களுக்கு விளக்கவுரை எழுதுக என்று கூறி விட்டு மறைந்தார்.

வேதவியாசரை சந்தித்தல்

சங்கரர் எழுதியிருந்த பிரம்மசூத்ர பாஷ்யத்தைப் பற்றி வாதிடுவதற்காக அதன் மூலநூலான பிரம்ம சூத்ரத்தை எழுதிய வியாசரே வயதான அந்தணர் வடிவில் சங்கரரைக் காண வந்தார். சங்கரர் தன் சீடர்களுக்கு பிரம்மசூத்ர விளக்கவுரையை கற்பித்துக் கொண்டிருந்தார். தம்மோடு விவாதிக்கும்படி கூறிய முதியவர், மூன்றாவது பிரிவின் முதலாவது சூத்திரமான ததனந்தரப்ரதிபத்தைள என்ற சூத்திரத்திற்கு என்ன உரை எழுதியிருக்கிறாய் என்று கேட்டார். சங்கரர் கூறிய விளக்கத்தைக் கேட்டு திருப்தியடைந்தார் முதியவர். இதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த சங்கரரின் சீடரான பத்மபாதர், பிரம்ம சூத்திரம் எழுதிய வேதவியாசர் தான் வந்துள்ளது என்பதை உணர்ந்தார். உடனே பத்மபாதர் இருவரின் காலிலும் விழுந்து, சங்கரரோ சிவபெருமானின் அவதாரம். வேதவியாசரோ சாட்சாத் நாராயணனே ஆகும். இந்த இருவரும் இப்படி விவாதித்தால் என்னைப் போன்ற வேலைக்காரன் என்ன செய்ய முடியும் என்று கேட்டார். வந்தவர் வியாசர் என்று தெரிந்ததும், சங்கரர் தம் விவாதத்தை நிறுத்தி, மிக்க மரியாதையுடன் அவர் காலில் விழுந்தார். வியாசர் அவரை மனம் குளிர ஆசிர்வதித்தார். என்னுடைய சூத்திரங்களுக்கு தகுந்த முறையில் அவைகளின் உட்கருத்தை நன்கு வெளிக்கொண்டு வரும் முறையில் உரை எழுதியிருக்கிறாய். எனவே நீ இந்த விளக்க உரையை உலகில் பிரசாரம் செய்வாயாக என்றும் கூறினார். அதுகேட்ட சங்கரர், தனக்கு ஏற்பட்ட ஆயுள் 16ம் முடிந்துவிட்டபடியால் கங்கையில் உள்ள மணிகர்ணிகா படித்துறையில் தம் உடலைத் தியாகம் செய்யப் போவதாக கூறினார். அதற்கு வியாசர் உலக நன்மைக்காக இன்னும் பல காரியங்கள் செய்ய வேண்டியிருக்கிறது எனவே மேலும் 16 ஆண்டுகள் நீ பூமியில் வாழ்வாயாக! என்று வரம் கொடுத்து மறைந்தார். வியாசரின் அருளால் சங்கரரின் வாழ்காலம் இரட்டிப்பாக்கப்படுகிறது. பிறப்பில் விதிக்கப்பட்ட வெறும் 16 வயதுடன், பரம்பொருளை உலகிற்கு உணர்த்துவிப்பதற்காக இன்னும் 16 வயது சேர்த்து சங்கரரின் வயது 32 வயதானது.

குமரில பட்டரும், மண்டன மிஸ்ரரும்: வியாசரின் அறிவுரைப்படி இமயம் முதல் குமரி வரை பல ஊர்களுக்கும் சென்று அத்துவைத தத்துவத்தை பிரசாரம் செய்தார். பிரயாகை என்னும் ஊரில் குமரிலபட்டர் என்னும் பெரிய அறிஞர் இருந்தார். இவர் வேதங்களை முழுவதும் கற்றறிந்தவர். யாகங்கள் செய்வதிலும் வல்லவர் என்பதை அறிந்த சங்கரர் இவர் இருக்குமிடம் வந்து சேர்ந்தார். பௌத்த மதத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக ஒரு பௌத்தரைப் போல வேஷம் போட்டுக் கொண்டு, ஒரு பௌத்த மடத்தில் சேர்ந்தார் குமரிலபட்டர். அங்கு பாடம் கற்றுக்கொண்டிருக்கும் போது, ஒரு பௌத்த குரு வேதங்களை கண்டனம் செய்வதைக் கேட்டு மனம் தாங்காமல் அழுதார். இதைக் கண்ட  பௌத்த குரு, இவன் உண்மையான பௌத்தர் அல்லர் என்று அவரை ஓர் உயர்ந்த கட்டிடத்தின் மேல்மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டார். வேதம் உண்மையாகில் என் உயிர் காப்பாற்றப்படட்டும் என்று கூறி கீழே விழுந்தும் ஒரு கண்ணை மட்டும் இழந்து உயிர் பிழைத்துக் கொண்டார். பௌத்த மதத்தை கண்டித்து நூல்களை இயற்றி, பௌத்த குருவிற்கு துரோகம் செய்ததற்கு பிராயச்சித்தமாக உமித்தீயில் தன் உடலை தியாகம் செய்ய எண்ணி தீயில் இறங்கிக் கொண்டிருந்தார். இதை அறிந்த சங்கரர், வேதத்தை பழிப்பவர்களை கண்டிக்க அவதாரம் செய்த முருகப்பெருமானே நீர் என்று அறிந்து கொண்டேன். எனது நூல்களுக்கு நீ தான் உரை எழுத வேண்டும் என்றார். தனக்கு அதில் விருப்பமில்லை என்பதை உணர்த்திய குமரிலபட்டர், நர்மதை நதிக்கரையில் உள்ள மகிஷ்மதி நகரில் மண்டனமிஸ்ரர் என்னும் வேதவிற்பன்னர் வசிப்பதாகவும், அவரோடு வாதிக்கும்படியும் கூறினார். குமரில பட்டருக்கு பிரம்ம தத்துவத்தை உபதேசம் செய்து விட்டு அவரிடம் விடைபெற்றுக் கொண்டு சங்கரர் மகிஷ்மதி நோக்கிச் சென்றார்.

சரஸ்வதி முன்னிலையில் வாதம் செய்தல்

சங்கரரும் அவருடைய சீடர்களும் நர்மதை நதியில் நீராடிவிட்டு மண்டன மிஸ்ரரின் வீட்டை அடைந்தார்.அவரது வீட்டின் கதவு மூடப்பட்டிருந்தது.சங்கரர் தம் யோக சக்தியைக் கொண்டு உள்ளே நுழைந்தார்.உள்ளே அவரது தந்தையாருக்கு திதி நடந்து கொண்டிருந்தது.திதி முடியும் வரை காத்திருந்த சங்கரர் மண்டன மிஸ்ரரை வாதத்திற்கு அழைத்தார்.மண்டன மிஸ்ரரின் மனைவி உபயபாரதியும் மிகச்சிறந்த பண்டிதை. உபயபாரதியை நடுவராக நியமித்து இருவர் கழுத்திலும் மாலை இடப்படுகிறது.யார் கழுத்தில் உள்ள மாலை வாடுகிறதோ அவர் போட்டியில் தோற்றவராவர் என முடிவு செய்யப்பட்டது.சங்கரர் தோற்றால் இல்லற வாழ்க்கையும், மண்டனமிஸ்ரர் தோற்றால் சன்னியாச வாழ்க்கையும் ஏற்க வேண்டும் என கூறப்பட்டது.ஏழு நாட்கள் தொடர்ந்து வாதம் நடைபெற்றபின் மண்டனமிஸ்ரரின் மாலை வாடத் தொடங்கியது. உபயபாரதி தன் கணவராகிலும் மண்டனமிஸ்ரரே தோல்வியுற்றார் என அறிவித்தார். தான் தோல்வியுற்றதாக மிஸ்ரரும் ஒப்புக்கொண்டார்.சங்கரர் அவருக்கு சன்னியாச தீட்சை கொடுத்து சுரேஷ்வராச்சாரியார் என்ற பட்டத்தையும் கொடுத்தார்.மண்டன மிஸ்ரர் பிரம்மாவின் அவதாரம் அவரது மனைவி உபயபாரதி சரஸ்வதியின் அவதாரம்.சங்கரர் மிஸ்ரரை வென்ற பிறகு உபயபாரதி தான் சத்யலோகத்திற்குச் செல்வதாகக் கூறினாள்.அதற்கு சங்கரர் வனதுர்கா மந்திரத்தால் அதை தடுத்து தாங்கள் சித்ரூபிணியான பரதேவதை பக்தர்களின் நன்மைக்காக லக்ஷ்மி முதலான தேவதைகளாகவும் நீங்கள் விளங்குகிறீர்கள்.நான் விரும்பும் சமயம் நீங்கள் போகலாம் என்று வேண்டவே அம்பிகையும் அதற்கு சம்மதித்தாள்.சங்கரர் மீண்டும் சீடர்களுடன் யாத்திரையாகப் புறப்பட்டு மஹாராஷ்டிரம் சென்று அத்வைத தத்தவத்தை பிரசாரம் செய்தார்.
காசி கயா போன்ற புன்னிய ஷேத்திரங்களில் ப்ரோகிதர் தாய்க்காக பிண்டம் வைக்கும் போது விளக்கத்துடன் சொல்லியது அப்போது அங்கிருந்த ஒவ்வொருவரும் அழுதேவிட்டனர். சிறிது நிதானமாகப் படியுங்கள். உங்கள் கண்களில் கண்டிப்பாக உங்கள் தாயை நினைத்து கண்ணீர் வரும்.

கயா கயா கயா என்று சொல்வது ஆதி சங்கரர் தனது தாயின் கடைசி காலத்தில் தான் வாக்கு கொடுத்தபடி அவளருகே வந்து அவள் மரணத்திற்கு பிறகு அவளது அந்திம கிரியைகளை செய்து இயற்றிய மனம் நெகிழும் மாத்ரு பஞ்சகம் ஸ்லோகங்கள்.

விஷ்ணு பாதம் : பித்ரு ஸ்ரார்தம் கயாவில் செய்வது உசிதம் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அக்ஷய வடத்தருகே பிண்ட பிரதானம் செய்வது ஒரு வழக்கம். 

கயா கயா கயா என்று சொல்வது நமது பித்ருக்களுக்கு ஸ்ரத்தையோடு அவர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் நாம் செய்யும் கடமை சம்பந்தப்பட்டது. ஒவ்வொரு ஹிந்துவும் வாழ்வில் ஒரு தடவையாவது செல்ல வேண்டிய இடம் கயா. குடும்பம் சகல சம்பத்துகளும் ச்ரேயஸும் பெறும்.

ஒரு பதினாறு ஸ்லோகங்கள் கொண்டது மாத்ரு. ஷோடசி தாய்க்கு மகன் அளிக்கும் பதினாறு பிண்டங்கள் பற்றியது. அதன் அர்த்தம் புரிந்து கொள்ளுதல் அவசியம். புரியும் தாயின் அருமை தெரியும்.

ஜீவதோர் வாக்ய கரணாத்
ப்ராத்யாப்தம் பூரி போஜணாத் 
கயாயாம் பிண்ட தாணாத்
த்ரிபி: புத்ரஸ்ய புத்ராய

அடே பயலே அம்மா அப்பா உயிரோடு இருக்கும் போதே அவர்கள் சொல்படி நட  அவர்களை சந்தோஷமாக வைத்து கொள். அவர்கள் ஆசீர்வாதம் தான் உன் படிப்பு மூலம் கிடைக்கும் சர்டிபிகேட்டை விட உன்னை நன்றாக வைக்கும். அவர்கள் காலம் முடிந்த பிறகு அந்தந்த திதியில் அவர்கள் பசியை போக்கு. அவர்களுக்கு தேவை அல்வா, ஜாங்கிரி, நெய் ரோஸ்ட் அல்ல. வெறும் எள்ளும் தண்ணீரும் தான். முடிந்தால் ஒரு தடவை கயாவுக்கு குடும்பத்தோடு போ. அங்கு நீ அளிக்கும் பிண்ட ப்ரதானம் அவர்களுக்கு தேவை. ''புத்'' என்ற  நரகத்திலிருந்து பெற்றோரை காப்பற்றுகிறவன் தான் 'புத்ரன்' என்று சாஸ்திரம் சொல்கிறது.

“அக்ஷய வடம் அக்ஷய வடம் என்று ஒரு வார்த்தை  காதில் விழுகிறதே. அது என்ன? கயாவில் நாம் அருபத்தி நான்கு ஸ்ரார்த்த பிண்டங்களை அங்கு தான் இடுகிறோம். ஸ்ராத்தம் பண்ணுபவர்கள் கயாவில் பித்ருக்களுக்கு நமது முன்னோர்களுக்கு மட்டுமல்ல தெரிந்தவர்கள் தெரியதவர்கள் அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் திருப்தியத திருப்தியத என்று மனமுவந்து அளித்து அவர்களை வேண்டுகிறோமே. அக்ஷய வடம் என்பது ஒரு மஹா பெரிய வ்ருக்ஷம். 'வடம்'  ஆல மரம். சென்னைகு அருகே ல் திரு ஆலம் காடு  (திருவாலங்காடு வடாரண்யம் என்று பெயர் கொண்டது.)

இந்த அக்ஷய வடத்தின் கீழே நிழலில் தான் பிண்ட பிரதானம் இடுவார்கள். இதில் முக்யமாக அருபத்தி நான்கு பிண்டங்களில் பெற்ற தாய்க்கு மட்டுமே பதினாறு பிண்டங்கள். ஆந்த பதினாறு பிண்டங்களை அம்மாவுக்காக ஒவ்வொரு வாக்யமாக சொல்லி இடுகிறோம். அந்த பதினாறு தான் “மாத்ரு ஷோடஸி”.

1. கர்பஸ்ய உத்கமநே துகம் விஷமே பூமி வர்த்மநி |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

கொஞ்சமா நஞ்சமா நான் உன்னை படுத்தியது. ஒரு பத்து மாத காலம் எப்படி எல்லாம் உன்னை உதைத்திருக்கிறேன். என்னையும் சுமந்தபடி மேடும் பள்ளமுமாக நீ அலைந்தாயே. நான் கொடுத்த கஷ்டத்தை துளி கூட நீ பொருட்படுத்த வில்லை. என்னை திட்டவில்லையே. சந்தோஷமாக என்னை உள்ளே அடக்கிய  உன் வயிறை எண்ணற்ற முறை ஆசையாக தடவி கொடுத்தாயே. இதோ நான் செய்த பாவங்களுக்காக உனக்கு இந்த முதல் பிண்டம் பரிகாரமாக ஏற்றுக்கொள்வாயா?

2.   மாஸி மாஸி க்ருதம் கஷ்டம் வேதநா ப்ரஸவே ததா |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

ஏன் சோர்ந்து போயிருக்கிறாய் உன் பிள்ளை உள்ளே படுத்துகிறானா? பிரசவ காலம் கஷ்டமானது தான். மாசா மாசம் நான் வளர வளர உனக்கு துன்பத்தை தானே அதிகமாக  கொடுத்துக் கொண்டே வந்தேன். இந்தா அதற்கு பரிகாரமாக  நான் இடும் இந்த இரண்டாவது பிண்டம் ஏற்றுக்கொள் அம்மா.

3. பத்ப்யாம் ப்ரஜாயதே புத்ரோ ஜநந்யா: பரிவேதநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

அம்மா நான் அளித்த வேதனையில் நீ  பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்து கொண்ட தாங்க முடியாத துன்பம் நான் உன்னை வயிற்ருக்குள் இருந்த போது உதைத்தது தானே. அதற்காக ப்ராயச்தித்தமாக இந்த மூன்றாவது பிண்டம் உனக்கு என் தாயே.

4. ஸம்பூர்ணே தசமே மாஸி சாத்யந்தம் மாத்ருபீடநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

அம்மா இந்த நான்காவது பிண்டம் உனது பூரண கர்ப காலத்தில் நீ என்னால் பட்ட வேதனைக்காக ஒரு பரிசு என்றே ஏற்று கொள். என்னைப் பொருத்தவரை எனது பிராயச்சித்தம் என்று நான் இடுகிறேன்.

5. சைதில்யே ப்ரஸவே ப்ராப்தே மாத விந்ததி துஷ்க்ருதம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

ஏண்டி மூச்சு விடறது கஷ்டமாக இருக்கா. கொஞ்ச காலம் தான் பொறுத்துக்கோ என்று உன் உறவுகள் நட்புகள் கேட்குமே அவ்வாறே மனமுன்வந்து நான் விளைத்த துன்பத்தை வேதனையை நீ தாங்கினாயே அதற்கு பரிகாரம் தான் இப்போது என் கையில் நான் தாங்கும் இந்த  ஐந்தாவது பிண்டம் ஏற்று கொள் என் அருமைத் தாயே.''

6. 'பிபேச்ச கடுத்ரவ்யாணி க்வாதாநி விவிதா நி ச|
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

குழந்தை வயித்திலே இருக்கும் போது இதெல்லாம் எனக்கு வேண்டாம். அப்புறமா சாப்பிடறேன் என்று உனக்கு பிடித்ததை எல்லாம் கூட வேண்டாமே என்று உதறினாயே எனக்காகவே பத்தியம் இருந்தாயல்லவா நான் நோயற்று வளர வாழ எத்தனை தியாகம் செய்தாய் நான் உனக்கு செய்த பாவத்திற்கு தான் இந்த ஆறாவது பிண்டம் அம்மா இதற்கு மேல் என்னால் என்ன செய்ய முடியும் சொல்?

7. அக்நிநா சோஷயேத்தேஹம்  தரிராத்ரோ போஷணேந |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நான் குவா குவா என்று பேசி பிறந்து சில நாட்கள் தான் ஆகிறது. அப்போது நீ பசியை அடக்கி வெறும் வயிற்றோடு எத்தனை நாள் சரியான ஆகாரம் இன்றி தூக்கமின்றி வாடினாய் எனக்கு மட்டும் பால் நேரம் தவறாமல் கிடைத்ததே. அந்த துன்பத்தை நான் உனக்கு கொடுத்ததற்கு பரிகாரம் தான் இந்த ஏழாவது பிண்டம்.

8. ராத்ரௌ மூத்ரபுரீஷாப்யாம் க்லிந்ந: ஸ்யாந்மாத்ரு கர்பட |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. கண்ணில் நீரும் சுரக்கிறது. எத்தனை இரவுகள் அசந்து தூங்கும் உன் புடவையை  ஈரம் பண்ணியிருக்கிறேன். படவா என்று செல்லமாக தானே  சிரித்து கொண்டே வேறு துணி எனக்கும் மாற்றினாய் இதற்கு நான் உனக்கு இடும் கைம்மாறு தான் இந்த எட்டாவது பிண்டம் இதையாவது ஈரமில்லாமல் தருகிறேனே.

9.  ''தயா விஹ்வலே புத்ரே மாதா ஹ்யந்தம் ப்ரயச்ச தி |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நான் சுகவாசி எனக்கு எப்போது தாகம், பசி,  தூக்கம் எதுவுமே தெரியாது. நீ தான் இருந்தாயே பார்த்து பார்த்து அவ்வப்போது எனக்காக நீ இதெல்லாம் செய்தாயே. இந்த பெரிய மனது பண்ணி என்னை வளர்த்த உனக்கு நான் எவ்வளவு துன்பம் தந்திருக்கிறேன். அதற்காக பிராயச் சித்தமாக இந்த  ஒன்பதாவது பிண்டம்.

10. திவாராத்ரௌ ஸதா மாதா ததாதி நிர்பரம் ஸ்தநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

ஒரு சின்ன செல்ல தட்டு என் மொட்டை மண்டையில் கடிக்காதேடா நான் பால் மட்டுமா உறிஞ்சினேன். என் சிறு பல்லால் உன்னை கடித்தேனே வலித்ததல்லவா உனக்கு இந்தா  அதற்காக இந்த பிண்டத்தை ஏற்றுக்கொள் அம்மா

11. மாகே மாஸி நிதாகே சசிரேத்யந்தது கிதா |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

வெளியே பனி குழந்தைக்கு ஆகாது இந்த விசிறியை எடு குழந்தைக்கு உள்ளே வியர்க்கும். வாடைக்காத்து ஜன்னலை மூடு எனக்கு காத்து வேண்டாம் குழந்தையைப் போர்த்த வேண்டும். கம்பளி கொண்டுவா குழந்தைக்கு குளிருமே. காலத்திற்கேற்றவாறு என்னை கருத்தில் கொண்டு காத்த என் தாயே நான் பிரதியுபகாரமாக கொடுப்ப தெல்லாம் இந்த சிறு பதினொறாவது பிண்டம் தான் எடுத்துக்கொள்.

12. புத்ரே வ்யாதி ஸமாயுக்தே மாதா ஹா க்ரந்த காரிணி
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

எத்தனை இரவுகள் எத்தனை மன வியாகூலம் குழந்தை நெற்றி எல்லாம் சுடறதே சுவாசம் கஷ்டமாயிருக்கே சளி உபாதையாக இருக்கிறதே என்று வருந்தி நாமக் கட்டி, மஞ்சள், விபூதி, பத்து எல்லாம் தடவி மடியில் போட்டு ஆட்டி, தட்டி கண்விழித்து என்னை வளர்த்தாயே உன் உடல் அதற்காகத்தான் இந்த பன்னிரெண்டாவது பிண்டம் தருகிறேன்.

13. யமத்வாரே மஹாகோரே மாதா சோசதி ஸந்ததம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நான் இந்த பூலோகத்தில் இப்போது கார், பங்களா வசதிகளோடு  கை நிறைய காசோடு. ஆனால் இதெல்லாம் அனுபவிக்காமல் நீ யமலோகம் நடந்து சென்று கொண்டிருக்கிறாயே. என் கார்  அங்கு வராதே வழியெல்லாம் எத்தனை இடையூறு அவை எதுவுமே உனக்கு துன்பம் தராமல் இருக்க நான் தர முடிந்தது இந்த பதிமூன்றாவது பிண்டம் தான் அம்மா.

14. யாவத்புத்ரோ ந பவதி தாவந்மாதுச்ச சோசநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நான் இப்போது பெரிய டாக்டர், எஞ்சினீயர், வக்கீல், ஜட்ஜ், ஹெட்மாஸ்டர், கம்ப்யூடர் ஸ்பெஷலிஸ்ட் நீ இல்லா விட்டால் நான் எது? ஏது? ஆதார காரணமே என் தாயே இந்த பதிநான்காவது பிண்டம் தான் அதற்கு பரியுபகாரமாக என்னால் உனக்கு தர முடிந்தது.

15. ஸ்வல்ப ஆஹாரஸ்ய கரணீ யாவத் புத்ரச்ச பாலக: |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

திருப்ப திருப்ப சொல்கிறேனே நான் வளரத்தானே நீ உன்னை வருத்திக்கொண்டாய் நீ வேண்டியதை திரஸ்கரித்தாய். நான் புத்தகத்தில் தான் ''தன்னலமற்ற'' தியாகம் என்று படிக்கிறேன்.  நீ  அதை பிரத்யக்ஷமாக புரிந்து அனுபவித்தவள். எனக்காக நீ இருந்த பட்டினி, பத்தியம் எல்லாவற்றிற்கும் உனக்கு நான் தரும் பிரதி உபகாரம் இந்த பதினைந்தாவது பிண்டம் ஒன்றே.

16. காத்ரபங்கா பவேந்மாதா ம்ருத்யு ஏவ ந ஸம்சய |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நான் சுய கார்யப் புலி சுயநல விஷமி உன்னில் நான் உருவாகி கருவாகி, சிறுவனாகி, பெரியவனாகி இப்போது உன் மரண வேதனையை சற்றே உணர்ந்தவனாக கண்களில் நீரோடு தரும் இந்த பதினாறாவது கடைசி பிண்டத்தை ஏற்றுக்கொள் என் தாயே தெய்வமே என்னை மன்னித்து ஆசிர்வதி.

மஹா பூதாந்தரங்கஸ்தோ
மஹா மாயா மயஸ்ததா
ஸர்வ பூதாத்மகச்சைவ
தஸ்மை ஸர்வாத்மனே நமஹ

(எவர் எல்லா உயிரினங்களில் உள்ளுறைபவராகவும் மஹா மாயையையுடையவராகவும் ஸர்வ பூதாத்மகமாகவும் இருக்கிறாரோ அந்த ஸர்வாத்மனை நமஸ்கரிக்கிறேன்.)

கயா க்ஷேத்திரம்  : முதலில் பிரயாகை அடுத்து காசி மூன்றாவதாக கயாவிற்க்கு வந்து சிரார்த்தம் செய்ய வேண்டும். காரணம் என்ன என்றால் இல்லங்களில் மூதாதையருக்கு திதி கொடுக்கும் போது அட்சய வடம் என்ற சொல் குறிப்பிடப்படுகிறது. அர்கம், மத்யம், மூலம் என்றும் கூறப்படுகிறது. அட்சயவடம் என்ற ஆலமரம் கயாவில் காணப்படுறது. இந்த ஆலமரத்தின் மூல வேர் பிரயாகையில் இருக்கிறது. நடுப்பாகம் மத்யம் காசியில் உள்ளது. நுனிப்பாகம் அகரம் கயாவில் உள்ளது. இந்த மூன்று ஸ்தலங்களையும் இந்த ஆலமரம் இணைத்து வைக்கிறது.

கயாவில் சிரார்த்தம் : செய்வதில் உள்ள விசேஷம் பிரம்மனின் வரம் பெற்ற கயாசுரன் என்ற அசுரன் தன் உடலைத் தொட்டவர்கள் அனைவரும் சொர்க்கம் சேர வேண்டும் என்று மகாவிஷ்ணுவிடம் வேண்டினான். அவரும் வரத்தை தரவே விபரீத பலனாக நல்லவர் கேட்டவர் யாராயிருப்பினும் கயாசுரன் மீது பட்டு சொர்க்கம் அடைந்தனர். அதனால் புண்ணியம் செய்தவர் செய்யாதவர் எல்லாம் ஒன்றாகி விட்டது. அதனால் மகாவிஷ்ணுவை சரணடைந்து தேவர்கள் வரத்தை திரும்ப பெற கோரினர். விஷ்ணுவும் கயாசுரன் சிரசில் தமது பாதத்தை வைத்து அழுத்தி பாதாளலோகத்திற்கு அனுப்பி விட்டார். விஷ்ணு பாதம் பட்டதால் கயாசுரன் புனிதமாகி விஷ்ணு விடம் வரம் கேட்டார். உலகில் மகனாகப் பிறந்தவன் பெற்றோர் உயிருடன் இருக்கும் வரை அவர்கள் மனம் கோணாமல் நடக்க வேண்டும். பெற்றோர் காலமான பிறகு அவர்களுக்கு திதி கொடுத்து அன்னதானம் செய்ய வேண்டும். என் சரீரமாகிய இந்த இடத்திற்கு வந்து பல்குனி நதி, விஷ்ணு பாதம், அட்சய வடம் ஆகிய மூன்று முக்கிய இடங்களில் பதவி அடைய வேண்டி வரம் கேட்டார். அதனால் கயாசுரனின் உடலான கயா புனித ஸ்தலமாக விளங்குகின்றது. பல்குனி நதி, விஷ்ணு பாதம் ஆகிய இடங்களில் இரண்ய சிரார்த்தம், அட்சய வடத்தில் அன்ன சிரார்த்தமும் செய்ய வேண்டும்.

சனி, 22 செப்டம்பர், 2018

அர்த்தமுள்ள இந்துமணம்

காசியாத்திரை விஷயம் என்ன?

இன்று பலர் நினைப்பது போல் மாப்பிள்ளைக்கு பெண் வீட்டாரிடமிருந்து ஒரு குடையும் - செருப்பும் கிடைக்கிற வியாபார விஷயம் தானா அது?

இல்லை; ஆண் சஞ்சலபுத்தியுள்ளவன். எதற்கெடுத்தாலும் 'நான் சந்தியாசியாகப் போய்விடுவேன்....அப்படிப் போனால் தான் நிம்மதி' என்று நினைப்பவன். ஒரு எஸ்கேபிஸ்ட்... நழுவல் பேர்வழி... அவனுக்கு வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே 'சாமான்ய மக்களால் கடைப்பிடிக்கக் கூடிய உண்மையான அறம், துறவறமல்ல; இல்லறம் தான்!' என்று உணர்த்துவது தான் அந்த நிகழ்ச்சி.

'இல்லறமல்லது நல்லறமல்ல' என்ற தமிழ் மூதுரையை விளக்கும் சம்பவம் அது!

வேண்டாம் இந்த துறவறம் குணம். இல்லறத்தில் நீ ஈடுபட நான் ஒரு வாழ்க்கைத் துணையைத் தருகிறேன் என்று பெண்ணின் தந்தை அவனை இல்லறத்தில் ஈடுபடுத்துகிறார். வாழ்க்கையில் பிற்காலத்தில் எப்போதாவது இந்தத் துறவுற சஞ்சல குணம் தலை காட்டினால் இந்தக் காசியாத்திரை குடை அவனுக்கு இந்த நற்போதனையை நினைவூட்டாதோ!

அதன் பின் வரனும் - பெண்ணும் தமது மனஒப்புதலைக் காட்டும் விதமாக மாலை மாற்றிக் கொள்கிறார்கள். மலரின் வாசனையாக மட்டும் இன்றி, மனத்தின் வாசனையாகவும் பரிமாறிக் கொள்கிறார்கள். எதைச் செய்வதனாலும், சொல்வதானாலும் அதை உறுதிப்படுத்த மூன்று முறை செய்வதுண்டு. அதை ஒட்டி இந்தப் பரிமாறலிலும், மூன்று முறை மாலை மாற்றப்படுகிறது.

பின் இருவரும் ஊஞ்சலில் அமருகிறார்கள். இங்கே இறைவனையும் இவ்வுலக வாழ்க்கையையும் இணைக்கும் தொடர்பாக மேலிருந்து தொங்கும் சங்கிலிகள் விளங்குகின்றன. வாழ்க்கையில் இருவருமாகச் சேர்ந்தும் - இணைந்தும் அசைக்கும் மனஊஞ்சலாக அந்த ஊஞ்சல் விளங்குகிறது.

இன்னொரு சடங்கு பாலிகை தெளிப்பது. திருமணம் செய்து கொள்ளும் இருவரும் குழந்தைச் செல்வங்களைப் பெற்று ஆரோக்கியத்துடன் நன்கு வளர்க்க வேண்டும். இதைக் காட்டும் விதமாகத்தான் மண் பாத்திரத்தில் மண்ணை இட்டு - அடியில் அருகம்புல், வில்வ இலை ஆகியவற்றை வைத்து - மண்ணுக்கு மேற்பரப்பில் நெல், உளுந்து, கொள்ளு, பச்சைப்பயிறு ஆகிய தானியங்களை முதல் நாளே ஊற வைத்திருந்து, பின் தெளிக்கிறார்கள். இந்தச் சடங்கு நிகழ்ச்சிகளை வயதான சுமங்கலிகளும், குழந்தை உள்ளவர்களுமே செய்து ஆசி கூறுவார்கள்.

பெரியோரின் ஆசிகளை விட பலம் எது?
அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:வேதகிரீஸ்வரர், பக்தவத்சலேஸ்வரர்
அம்பாள் :திரிபுரசுந்தரி
தல விருட்சம்:வாழை மரம்
தீர்த்தம்:சங்குதீர்த்தம்
பழமை:2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:கழுகுன்றம், திருக்கழுகுன்றம்
ஊர் :திருக்கழுகுன்றம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்:அப்பர் , சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர்

தேவாரப்பதிகம்

தோடுடையான் ஒருகாதில் தூயகுழை தாழ ஏடுடையான் தலைகலனாக இரந்துண்ணும் நாடுடையான் நள்ளிருளேம நடமாடும் காடுடையான் காதல் செய்கோயில் கழுக்குன்றே-திருஞானசம்பந்தர்.

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 28வது தலம்.
 
திருவிழா:சித்திரை பெருவிழா - 10 நாட்கள் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் இத்திருவிழாவில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வர் ஆடிப்பூரம் - அம்பாள் உற்சவம் -10 நாட்கள் - இவ்விழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர் பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷ நாட்களில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு தமிழ், ஆங்கில வருடபிறப்பு,தீபாவளி, பொங்கல் ஆகிய விசேஷ நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர் கிரிவலம்: பௌர்ணமி கிரிவலம் இத்தலத்தில் மிகவும் சிறப்பு. திருவண்ணாமலைக்கு முன்பே இங்கு கிரிவலம் சிறப்பு வாய்ந்தாக இருந்திருக்கிறது. இப்போதும் மாதந்தோறும் பௌர்ணமி அன்று கிரிவலத்தின்போது லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொள்கின்றனர்.  
      
தல சிறப்பு:இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவத்தலங்களில் கருவறைக்கு எதிரில் இருக்கும் நந்தி இங்கில்லாமல் இருப்பது மாறுபட்டதாகும். 565 படிக்கட்டுகளுடன் மலை மீது அமைந்த அமைதி தவழும் அழகிய தலம். 12 வருடத்திற்கு ஒரு முறை கன்னி லக்னத்தில் குரு பிரவேசிக்கும் காலத்தில் லட்ச தீப விழா நடைபெறும். புஷ்பகர மேளா எனப் புகழ் பெற்ற இவ்விழா வடஇந்தியாவில் நடக்கும் கும்பமேளா போன்ற மிகப் பெரிய புகழ் பெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு பிறக்கும் அதிசயமான தீர்த்தம்.இன்றும் இந்த அதிசயம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.இது மூலிகை கலந்த தடாகம் என்பது குறிப்பிடத்தக்கது.சித்தபிரமை உள்ளவர்கள் இத்தீர்த்தத்தில் மூழ்கிவிட்டு இறைவனை மணமுருக வேண்டினால் முழுமையாக குணமடைகின்றனர் என்பது இப்போதும் நடக்கும் அதிசயம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 261 வது தேவாரத்தலம் ஆகும்.  
      
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
    
முகவரி:அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில், திருக்கழுக்குன்றம் - 603109, காஞ்சிபுரம் மாவட்டம்.போன்:+91-44- 2744 7139, 94428 11149 
     
பொது தகவல்:இத்தலத்தில் இந்திரன் பூஜித்தான்.தொடர்ந்து இன்றும் பூஜித்து வருகிறான் என்பதற்கு அறிகுறியாக இம்மலைமீதுள்ள கருவறைக்கோபுரக் கலசத்தின் அருகில் உள்ள துவாரத்தின் வழியாக இடிவிழுந்து சிவலிங்கத்தைச் சுற்றிப் பரவிப் பாய்ந்து விடுகிறது.

தாங்கவே முடியாத வெப்பத்தை மறுநாள் கருவறை திறக்கும்போது காணலாம். சில ஆண்டுகளுக்கு ஒருமுறை இது நடக்கிறது.

10.11.1930 நடந்ததாக அறிவியலார்கள் கூறி இதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
 
பிரார்த்தனை:இத்தலத்து சிவபெருமானை வணங்கினால் முக்தி கிடைக்கும். தவிர மனநிம்மதி வேண்டுவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர்.

குறிப்பாக மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், சித்தபிரமை பிடித்தவர்கள் 48 நாட்கள்(ஒரு மண்டலம்)சங்குதீர்த்தத்தில் மூழ்கி விட்டுஇத்தலத்தில் வழிபடும் பட்சத்தில் அவர்கள் முழுமையாக குணமடையும் அதிசயம் நடந்து கொண்டிருக்கிறது.தீராத வியாதிகள் தீருகிறது.

குழந்தை பாக்கியம் வேண்டுவோரும் வழிபட்டு பலனடைகின்றனர்.இத்தலத்தில் பக்தர்களின் எல்லாவித வேண்டுதல்களும் .திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இத்தலத்து பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும்.

ஆஸ்துமா ரத்தகொதிப்பு இருதய நோய் உள்ளவர்கள் காலையும் மாலையும் சஞ்சீவிக் காற்று வீசும் இம்மலை ஏறி வந்து ஈசனை வழிபட்டால் அத்தகைய நோய்களிலிருந்து குணமடைகின்றனர் என்பது கண் கண்ட உண்மை.
 
நேர்த்திக்கடன்:சுவாமி அம்பாள் ஆகியோருக்கு வேஷ்டி சேலை படைத்தல், அன்னதானம் செய்தல், தவிர வழக்கமான அபிஷேக ஆராதனைகள் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர். இறைவனுக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் தரலாம். வசதி படைத்தவர்கள் கோயில் திருப்பணிக்காக பொருள் தருவதும் வழக்கமாக உள்ளது. 
     
தலபெருமை:கழு - கழுகு -கங்கம் என்பன ஒருபொருள் குறிக்கும் சொற்கள்.கழுகு வழிபட்டதால், வழிபடுகின்றதால் இத்தலத்திற்கு திருக்கழுகுன்றம் என பெயர் வந்தது. பிரம்மனின் எட்டு மானச புத்திரர்கள் சாருப்ய பதவிக்காக தவம் இருந்தனராம். முடிவில் சாருப்ய என வரம் கேட்பதற்குப் பதில், சாயுட்சய என கேட்டதால் கழுகாக மாறிவிட்டனராம். எனவே நான்கு யுகத்திற்கு இருவர் என கழுகுகளாக இங்கு வரும் அவர்கள், சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் உண்டு செல்வர். நண்பகல் நேரத்தில் இக்காட்சியைக் காணலாம்.

சுந்தரர் ஈசனிடம் பொன் பெற்ற தலம் வேதமே மலையாக அமைந்த தலம் கோடி ருத்ரர்கள் தவம் செய்து முக்தி அடைந்த தலம் சித்தர்கள் பலர் இம்மலையில் வாழ்ந்தால் தியானம் செய்ய ஏற்ற தலம்.

இறைவன் காதலித்துறையும் இடம் கழுகுன்றம் என திருஞானசம்பந்தரால் மகிழ்ந்து போற்றிய தலம் மாணிக்கவாசகருக்கு சுவாமி காட்சி தந்த தலம்.

என்உடல் வீழும்போதும் நீதான் எனக்கு துணை என்று ஈசனை பட்டினத்தார் உருக்கமாக வழிபட்ட தலம்.

உலகின் உச்சமான அமராவதி நகருக்கு நிகரான தலம் திருக்கழுக்குன்றம் என அருணகிரிநாதரால் பரவசமாய் புகழப்பெற்ற தலம்.

சுரகுரு மன்னனுக்கு சுயம்புவாய் சுவாமி காட்சி தந்த தலம். மார்க்கண்ட முனிவர் சிவபெருமான் அருளால் என்றும் பதினாறு வயது பெற்று காசி முதலிய தலங்களை வணங்கி இங்கு வந்தார்.

சிவலிங்க பிரதிஷ்டை செய்து அபிஷேகம் செய்தபோது இறைவன் அருளால் அத்தடாகத்தில் சங்கு தோன்றியது.மார்க்கண்ட தீர்த்தம் என்று வழங்கப்பட்ட இத்தீர்த்தத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு பிறந்து கொண்டிருப்பதால் சங்கு தீர்த்தம் என பெயர்பெற்றது.

மலையை சுற்றி அமைந்த 12 தீர்த்தங்கள் :

1. இந்திர தீர்ததம்
2. சம்பு தீர்த்தம்
3. உருத்திர தீர்த்தம்
4. வசிட்ட தீர்த்தம்
5. மெய்ஞான தீர்த்தம்
6. அகத்திய தீர்த்தம்
7. மார்க்கண்ட தீர்த்தம்
8. கோசிக தீர்த்தம்
9. நந்தி தீர்த்தம்
10. வருண தீர்த்தம்
11. அகலிகை தீர்த்தம்
12. பட்சி தீர்த்தம்

குளத்தில் மலரும் வலம்புரிச் சங்கு

வலம்புரிச் சங்கு கடலில்தான் கிடைக்கும். ஆனால் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வலம்புரிச் சங்கு இவ்வாலய சங்கு தீர்த்தக் குளத்தில் தோன்றுகிறது. இவ்வாலயத்தில் பல புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. அதில் புகழ்பெற்ற தீர்த்தம்தான் சங்கு தீர்த்தம். மண்டபத்துடன் கூடீய பெரிய திருக்குளம். இக்குளக்கரையில் வண்டு (சங்கு) வன விநாயகர் எழுந்தருளியுள்ளார். ஆதியில் மார்க்கண்டேய மகரிஷி இத்தலம் வந்தபோது ஈசனை வணங்க நினைத்தார். ஈசனை அபிஷேகித்து பூஜிக்க பாத்திரம் இல்லையே என இக்குளக்கரை அருகே அமர்ந்து வருந்தினார். அப்போது பெரியதொரு வலம்புரிச் சங்கு இக்குளத்திலிருந்து மேலெழுந்து அவரருகே மிதந்து வந்தது. அதைக் கண்டு மனம் மகிழ்ந்த மார்க்கண்டேயர், அந்தச் சங்கைக் கொண்டு ஈசனை நீராட்டிப் பூஜித்தார். அன்று முதல் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தீர்த்தத்திலிருந்து வலம் புரிச்சங்கு தோன்றி மிதந்து வருவது வழக்கமாக உள்ளது.

இதுவரை சிறிதும் பெரிதுமான பல வலம்புரிச் சங்குகள் தோன்றியுள்ளன. புதிய சங்கு தோன்றியதும் பழைய சங்கை பாதுகாப்புடன் ஆபரண அறையில் வைத்துவிடுவார்கள். இப்படி பழைய சங்குகள் இங்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.

சங்கு தோன்றப்போவதற்கு அறிகுறியாக குளத்தில் நுரை வருவதைக் காணலாம். மறுநாள் ஓங்கார சப்தம் கேட்கும். உடன் சங்கு வெளிவந்து நீரில் மிதக்கும். தயாராக, உள்ள குருக்கள் குளத்தின் நடுவே சென்று, அதை எடுத்து வந்து சுத்தப்படுத்தி, பொட்டிட்டு, பூவைத்து, பின் மேளதாளத்துடன்  பக்த வத்சலர் கோயிலுக்குள் எடுத்துச் செல்வார். பழைய சங்கினை ஆபரண அறையில் வைத்து விட்டு, இதனால் அபிஷேகம் செய்வார்.

மலைமேல் உள்ள வேதகிரீஸ்வரர் கருவறையில் அனைத்து தெய்வங்களும் உள்ளனர். ஈசனை இந்திரன் பூஜிக்கும் தலம் இது. இந்திரன் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சன்னதியில் நுழைந்து இறைவனை வலம் வந்து, பூஜித்து விட்டுச் செல்வான். இதற்கு ஏற்றாற்போல் கோயில் விமானத்தில் ஒரு துவாரம் உள்ளது. அதன் வழியேதான் இந்திரன் இடி உருவில் வந்து செல்வான். இடி இறங்குவதைப் பார்த்த முதியவர்கள் பலர் இத்தலத்தில் இன்றும் உள்ளனர். இடி இறங்குவதால் இவ்வாலயத்திற்கு எந்த சேதமும் ஏற்பட்டதில்லை.

அன்னை திரிபுரசுந்தரி சுயம்பு வடிவானவள். எனவே ஆடிப்பூரம், நவராத்திரி கடைசி நாள், பங்குனி உத்திரம் ஆகிய ஆண்டுக்கு மூன்று நாட்கள்தான் முழு அபிஷேகம் செய்வார்கள். மற்ற நாட்களில் பாதத்திற்கு மட்டும்தான் அபிஷேகம் செய்வார்கள்.
 
தல வரலாறு:பூஷா , விருத்தா என்கிற இரு முனிவர்கள் சாரூப பதவி வேண்டி தவஞ்செய்தனர்.இறைவன் தோன்றி வரம் தரும்போது மறுத்து சாயுஜ்ஜியப் பதவி தந்து,. இப்பதவியில் சில காலம் இருங்கள். பிறகு சாயுச்சியம் தருகிறோம் என்றார். அதை ஏற்க மறுத்த முனிவர்களை கழுகுருவம் அடைக என்ற சாபமிட்டார்.

கழுகுகளாய்ப் பிறந்து சம்பு ஆதி எனும் பெயருடன் மலைக் கோயிலை வலம் வந்து தாங்கள் உண்டாக்கிய பட்சி தீர்த்தம் அருகில் உள்ள பாறையில் நாள்தோறும் அமுதுண்டு இறைவனை வழிபட்டு வருகின்றனர்.

தினமும் இராமேஸ்வரத்தில் ஸ்நானம் செய்து கழுக்குன்றத்தில் ஆகாரம் உண்டு காசியில் அடைக்கலம் ஆவதாக ஐதீகம்.

கழுகுகளுக்கு அமுதூட்டும் செயல் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வருவதாக கூறுகிறார்கள்.

சுரகுரு மகாராஜாவுக்கு சுவாமி இத்தலத்தில் காட்சி தந்ததாகவும் அவரே இத்திருத்தலம் அமையக் காரணமாக இருந்தவர் என்றும் வரலாறு கூறுகிறது.
அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில்

மூலவர்:ஆட்சிபுரீஸ்வரர், உமைஆட்சீஸ்வரர் என இரண்டு மூலவர்கள் தனித்தனி கருவறைகளில் அருள்பாலிக்கிறார்கள்
அம்பாள் :இளங்கிளிஅம்மை, உமையாம்பிகை என இரண்டு அம்மன்கள் தனித்தனி கருவறைகளில் அருள்பாலிக்கிறார்கள்
தல விருட்சம்:சரக்கொன்றை
தீர்த்தம்:தேவ, பானு மற்றும் சங்கு தீர்த்தம்
ஆகமம் பூஜை : காமீகம்
பழமை:2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:அச்சுஇறுபாகம், அச்சிறுபாக்கம்
ஊர்:அச்சிறுபாக்கம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்

தேவாரப்பதிகம்

தேனினும் இனியர் பாலன நீற்றர் தீங்கரும்பு அனையர்தம் திருவடி தொழுவார் ஊன்நயந்து உருக உவகைகள் தருவார் உச்சிமேல் உறைபவர் ஒன்றலாது ஊரார் வானகம் இறந்து வையகம் வணங்க வயங்கொள நிற்பதோர் வடிவினை உடையார் ஆனையின் உரிவை போர்த்த எம்மடிகள் அச்சிறு பாக்கமது ஆட்சி கொண்டாரே.
-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 29வது தலம்.
 
திருவிழா:சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், பவுர்ணமியில் விசேஷ பூஜைகள் நடக்கிறது.  
      
தல சிறப்பு:ஆட்சிபுரீஸ்வரர், உமைஆட்சீஸ்வரர் என இரண்டு மூலவர்கள் தனித்தனி கருவறைகளில் அருள்பாலிக்கிறார்கள்.இளங்கிளிஅம்மை, உமையாம்பிகை என இரண்டு அம்மன்கள் தனித்தனி கருவறைகளில் அருள்பாலிக்கிறார்கள். இத்தல சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் . திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலத்தை திருநாவுக்கரசர் தனது க்ஷேத்திரக் கோவையில் குறிப்பிட்டிருக்கிறார். அகத்தியருக்கு இத்தலத்திலும் சிவன் தனது கயிலாய திருமணக் காட்சியை காட்டியருளியுள்ளார். சிவனால் வதம் செய்யப்பட்ட தாரகனும், வித்யுன்மாலியும் அவருக்கு துவார பாலகர்களாக இருக்கின்றனர். உமையாட்சீஸ்வரருக்கு முன்னே தியானநந்தி இருக்கிறது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 262 வது தேவாரத்தலம் ஆகும்.  
      
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
    
முகவரி:அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில், அச்சிறுபாக்கம்- 603 301. காஞ்சிபுரம் மாவட்டம்.போன்:+91- 44 - 2752 3019, 98423 - 09534. 
     
பொது தகவல்:சிவனின் பிறபெயர்கள்அச்சேஸ்வரர், அச்சுகொண்டருளிய தேவர் என்பதாகும். தலவிநாயகர்: அச்சுமுறி விநாயகர் ராஜகோபுரம்: ஐந்து நிலை பிரகாரத்தில் சீனிவாசர், அலமேலு மங்கைத்தாயார் தனிச்சன்னதியில் இருக்கின்றனர்.
 
பிரார்த்தனை:ஆட்சிபுரீஸ்வரரிடம் வேண்டிக்கொண்டால் ஆட்சி செய்யும் வாய்ப்பு, ஆளுமைத் திறன், பதவி உயர்வு கிடைக்கும் என்பதும், சுவாமி அட்சரம் எனும் எழுத்தின் வடிவமாக இருப்பதால் கல்வி, கேள்விகளில் சிறக்கலாம் என்பதும் நம்பிக்கை. இங்கு அமாவாசை தோறும் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. இதில் கலந்துகொண்டால் தோஷங்கள், ஜென்ம வினைகள், தொழில் தடைகள், மனக்குழப்பங்கள் நீங்கும் என நம்புகின்றனர்.
 
நேர்த்திக்கடன்:சுவாமிக்கு வஸ்திரங்கள் சாத்தி, சிறப்பு அபிஷேகங்கள் செய்யலாம். 
     
தலபெருமை:கண்ணுவ முனிவர், கவுதம முனிவர் இங்கு வழிபட்டுள்ளனர். விலகிய கோபுரம்: பாண்டிய மன்னன் ஒருவன் சிவதல யாத்திரை சென்று கொண்டிருந்தபோது இத்தலத்தின் அருகே அவனது தேர் அச்சு முறிந்தது. பணியாளர்கள் சக்கரத்தை சரிசெய்து கொண்டிருந்த போது தங்க நிறமான உடும்பு ஒன்று சென்றதைக் கண்ட மன்னன், அதனை பிடிக்கச் சென்றான். உடும்போ, ஒரு சரக்கொன்றை மரத்தினுள் புகுந்து கொண்டது. காவலர்கள் மரத்தை வெட்டியபோது, ரத்தம் வெளிப்பட்டது.

உடும்பு வெட்டுப் பட்டதாக நினைத்த மன்னன் மரத்தின் அடியில் தோண்டிப்பார்த்தான். எவ்வளவோ தேடியும் உடும்பு மட்டும் அகப்படவில்லை. அன்றிரவில் மன்னனுக்கு காட்சி தந்த சிவன், உடும்பு மூலமாக தான் திருவிளையாடல் புரிந்ததை வெளிக்காட்டி இவ்விடத்தில் சுயம்புவாக எழுந்தருளியிருப்பதை உணர்த்தினார். அவருக்கு இங்கேயே கோயில் கட்ட விருப்பம் கொண்டான் மன்னன். அப்போது அங்கு "திரிநேத்ரதாரி' எனும் மூன்று கண்களை உடைய முனிவர் ஒருவர் வந்தார்.

தீவிர சிவபக்தரான அவரைப் பற்றி அறிந்து கொண்ட மன்னன் இத்தலத்தில் சிவாலயம் கட்டித்தரும்படி கூறிவிட்டு தனது யாத்திரையை தொடர்ந்தான். நெடுநாட்கள் கழித்து மன்னன் திரும்பி வந்தபோது கோயில் மத்தியில் நந்தி, கொடி மரத்துடன் ஆட்சிபுரீஸ்வரருக்கு ஒரு கருவறையும், அவருக்கு வலது பின்புற பிரகாரத்தில் ராஜகோபுரத்தின் நேரே உமை ஆட்சீஸ்வரருக்கு ஒரு மூலஸ்தானமுமாக கட்டி வைத்திருந்தார். (இக்கருவறையில் லிங்கத்திற்கு பின்புறம் பார்வதியுடன், சிவன் திருமணக்கோலத்தில் காட்சி தருகிறார்). புரியாத மன்னன் காரணம் கேட்டான். ""உமை ஆட்சி செய்த ஈஸ்வரனே, உடும்பு வடிவாக்கி என்னையும் ஆட்சி செய்தார். எனவே, உங்களுக்கு காட்சி தந்த "உமை ஆட்சீஸ்வரருக்கு' பிரதான வாயில் கொண்டு ஒரு கருவறையும், "எமை ஆட்சி செய்த ஈஸ்வரருக்கு' பிரதான கருவறையுமாக வைத்து கோயில் கட்டினேன்'' என்றார் திரிநேத்ரதாரி. மன்னனும் ஏற்றுக்கொண்டான். சுயம்பு லிங்கமாக இருக்கும் எமையாட்சீஸ்வரரே இங்கு பிரதானம். திருவிழாக்களும் இவருக்கே நடக்கிறது. ராஜகோபுரத்தில் இருந்து கொடிமரமும், நந்தியும் விலகியே இருக்கிறது.

பிரகாரத்தில் உள்ள சரக்கொன்றை மரத்தின் அடியில் கொன்றையடியீஸ்வரர் சன்னதியில் சிவனை வணங்கிய கோலத்தில் திரிநேத்ரதாரி இருக்கிறார். இம்மரத்தில் சித்திரை மாத திருவிழாவின் போது மட்டும் பூக்கள் மலர்வது சிறப்பு. அச்சு முறித்த விநாயகர்: சிவனின் தேர் அச்சை முறித்த விநாயகர் "அச்சுமுறி விநாயகராக' கோயிலுக்கு வெளியே தனிச்சன்னதியில் மேற்கு திசையை பார்த்து அமர்ந்திருக்கிறார். அருணகிரிநாதர் இவ்விநாயகரை தரிசித்து விட்டு ""அச்சிறு பொடி செய்த'' என்று இவரது சிறப்புக்களை பாடித்தான் திருப்புகழை துவங்கியுள்ளார். புதிய செயல்கள் தொடங்கும் முன்பு இவரிடம் வேண்டிக்கொண்டால் அச்செயல் தடையின்றி நடக்கும் என்பது நம்பிக்கை.
 
தல வரலாறு:பிரம்மாவிடம் வரம் பெற்ற தாரகன், கமலாட்சன், வித்வன்மாலி ஆகிய திரிபுர (மூன்று) அசுரர்கள் சேர்ந்துகொண்டு தேவர்களை கொடுமைப்படுத்தி வந்தனர். அசுரர்களை எதிர்க்க முடியாத தேவர்கள், அவர்களை அழித்து தங்களை காக்கும்படி சிவனிடம் வேண்டினர்.

தேவர்களுக்கு இரங்கிய சிவன், வானுலகு மற்றும் பாதாள உலகை இணைத்து தேராக்கி அதில் ஏறி அசுரர்களை அழிக்கச் சென்றார். எந்த ஒரு செயலை செய்யும் முன்பாக முழு முதற்கடவுளான விநாயகரை வணங்கிவிட்டு அல்லது மனதில் நினைத்துவிட்டோதான் செல்ல வேண்டும் என்பது நியதி. சிவனுக்கும் இந்த நியதி பொருந்தும். ஆனால் அசுரர்களை அழிக்க வேண்டும் என்ற வேகத்தில் விநாயகரை நினைக்காமல் சென்றார் சிவன். அவருடன் சென்ற தேவர்களோ சிவனே நம்முடன் இருக்கும்போது வேறென்ன துணை வேண்டும்? என்ற எண்ணத்தில் அவரை வணங்காமல் சென்றனர்.

கோபம் கொண்ட விநாயகர், தேரின் அச்சை முறித்து சிவனை செல்லவிடாமல் தடுத்து விட்டார். தேர் அங்கேயே நின்றது. இது விநாயகரின் செயல்தான் என உணர்ந்த சிவன், அவரை மனதில் நினைத்து செல்லும் செயல் சிறப்பாய் நடந்திட காவலனாய் இருக்கும்படி வேண்டினார்.

தந்தை சொல்கேட்ட விநாயகர் தேர் அச்சை சரியாக்கினார். பின் சிவன் திரிபுர அசுரர்களை அழித்தார். தேர் அச்சு இற்று (முறிந்து) நின்ற இடமென்பதால் இத்தலம் "அச்சு இறு பாகம்' என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் "அச்சிறுப்பாக்கம்' என்றானது. சிவன் "அட்சீஸ்வரர்' என்றும், "ஆட்சிபுரீஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார்.