திங்கள், 28 ஏப்ரல், 2014

காஞ்சிப்பெரியவா

காஞ்சிப்பெரியவர் 1914 முதல் 1918 வரை கும்பகோணத்தில் தங்கி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தார். ஒரு சமயம், கலைமேதைகளை வரவழைத்து பாராட்டுவிழா நடத்தினார். அங்கு வந்த அஷ்டாவதானிகள், சதாவதானிகள் ஆகிய பல்கலை நிபுணர்கள் சுவாமிகளிடம் ஆசி பெற எண்ணினர். சதாவதானி என்பவர் நூறு விஷயங்களுக்குரிய கேள்விகளை மனதில் வாங்கிக் கொண்டு பின்னர் அவற்றுக்கு ஒன்றுவிடாமலும், தவறு இல்லாமலும் விடை கூறுபவர். அஷ்டாவதானி என்பவர் ஒரே நேரத்தில் எட்டு விஷயங்களை வாங்கிக் கொண்டு பதில் கூறுபவர். இவர்கள் பலமொழிகளிலும் கவிதை இயற்றும் திறன் படைத்தவர்களாக இருப்பர். சுவாமிகள் தலைமையில் இத்தகைய சிறப்புப்போட்டி ஒன்றுக்கு ஏற்பாடாகி இருந்தது. அப்போட்டியில் கலந்து கொள்ள மூத்த சதாவதானி ஒருவர் வந்திருந்தார். அவர் தன்னுடைய செயல்திறமையினை சுவாமிகளிடம் எடுத்துச் சொன்னதோடு யாரும் தன்னோடு போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்று கர்வத்துடன் கூறிக்கொண்டார். போட்டி துவங்கும் முன், சுவாமிகள் ஒருவரை அழைத்து, சதாவதானியிடம் கேட்கும் போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வைக்கும்படி கூறினார். பதில்களை சதாவதானி கூறும்போதே சுவாமிகளின் பதில்களும் வாசிக்கப்பட்டு வந்தது. இருவர் சொன்ன விடைகளும் ஒன்றாக இருப்பதை கண்டு சதாவதானி ஆச்சரியப்பட்டார். சுவாமிகளின் பாதங்களில் விழுந்து,தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். அதன்பின், சுவாமிகள் அவருக்குப் பொன்னாடை போர்த்தி ஆசி வழங்கினார்.

அக்காலத்தில் சர்க்கஸ் கம்பெனி நடத்திய பேராசியர் ராமமூர்த்தி யோகக்கலையில் நிபுணராக இருந்து வந்தார். இவர் சுவாமிகளைத் தரிசிக்க வந்திருந்தார். இருவரும் நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தனர். பேசிவிட்டு வெளியே வந்த பேராசிரியரின் கண்களில் நீர் பெருகியது. பிரம்மச்சர்யத்தின் தெய்வீக சக்தியை சுவாமிகளிடத்தில் உணர்ந்ததாகவும், இதைவிட வேறு பாக்கியம் வாழ்வில் தேவையில்லை என்று மகிழ்ச்சி அடைந்தார். கும்பகோணம் அரசுக்கல்லூரியில் பணியாற்றிய இயற்பியல் பேராசிரியர் ராஜகோபால் ஐயரும், இன்ஜினியர் பி.வி. மாணிக்கநாயக்கரும் சுவாமிகளிடம் பக்தி கொண்டவர்கள். இருவரும் சுவாமி களிடம் வானசாஸ்திரத்தைப் பற்றிப் பேசினர். அவர்களிடம், ஒரு டெலஸ்கோப் மூலமாக, இக்கலையில் நம் நாட்டு வழிமுறைக்கும், வெளிநாட்டவர் வழிமுறைக்கும் உள்ள ஒற்றுமைகளை எடுத்துச் சொல்லி, சுவாமிகள் விளக்கம் அளித்தார். அவரது நுணுக்கமான வானவியல் அறிவு கண்டு இருநிபுணர் களும் பெருமிதமும் ஆச்சரியமும் கொண்டனர்.
 
 
ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.

5. மூன்று மூர்த்திகளுக்கும் மேலே அதீதராகப் பரமசிவன் இருக்கிறார். அவர் ப்ரம்மாவுக்கு அனுக்ரஹம் பண்ணுகிறார். காமேச்வரனாக அருள் புரிகிறார். பராசக்தி காமேச்வரியாக அனுக்ரஹிப்பாள். பரமேச்வரனுடைய அனுக்ரஹத்தால் ப்ரம்மா வேதங்களை அறிந்து கொள்கிறார். நான்கு வேதங்களையும் நான்கு முகத்தில் சொல்லிக் கொண்டு சிருஷ்டியைச் செய்து கொண்டிருக்கிறார்.
 
 
ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.
4. நம்முடைய மதம் எவ்வளவோ யுகங்களாக நீடித்து வாழ்ந்து வருகிறது. நமக்குத் தெரியாமல் ஏதோ ஒன்று இதைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. எவ்வளவோ வித்யாசங்கள் இருந்தாலும் இந்த மதம் அழியாமல் நிற்கிறது. லோகம் புரண்டு போனாலும் நம்முடைய கடமைகளைச் செய்து கொண்டு பயமின்றி அன்புடன் சாமாண்ய தர்மங்களை நன்றாக ரக்ஷித்து விசேஷதர்மத்தைக் கூடியவரை ரக்ஷிக்க வேண்டும். அதற்குரிய சக்தியைப் பகவான் அளிப்பாராக.
 
 
ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.

3. நாமாவும் ரூபமும் இல்லாத மதம் நமது மதம். பேர் ஏன் இல்லை? அடையாளம் ஏன் இல்லை? மற்ற மதங்களுக்கெல்லாம் இருக்கிறதே என்று ஒரு சமயம் யோசித்துப் பார்த்தேன். அப்புறம் எனக்கு நிரம்ப சந்தோஷமாக இருந்தது. பேரில்லாமல் இருப்பது ஒரு கௌரவம் என்பது ஏற்பட்டது.
 
 
ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.

2. இந்த ஜென்மத்திற்குப் பின்பும் உபயோகப்படக் கூடிய சில காரியங்கள் செய்யப்பட வேண்டியது அவசியம். விபூதி இட்டுக் கொள்ளுதல், ருத்ராக்ஷம் அணிதல், ச்ராத்தம் செய்தல் முதலிய காரியங்கள் நாம் எப்பொழுதும் சௌக்யமாக இருப்பதற்கு உதவுங்காரியங்கள்.
 
 
ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.

1. உடம்பினால் நல்ல காரியம் செய்யவேண்டும். கோயிலுக்குப் போய் பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்ய வேண்டும். தண்டம் சமர்ப்பித்தல் என்று சமஸ்காரத்தைச் சொல்லுவார்கள். தடியைப்போல் விழுவது தான் அது. இந்த உடம்பு நமதன்று, அவருடையது என்று நினைத்து அவர் சந்நிதியில் போட்டு விட வேண்டும்.
 
 

சனி, 26 ஏப்ரல், 2014

 திருவனந்தபுரம்: பத்மநாபசாமி கோவில்

திருவனந்தபுரம்: பத்மநாபசாமி கோவில் ரகசிய அறைகளில் உள்ள நகைகளின் மதிப்பு ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் என மதிப்பிடப்பட்டுள்ளன. இவற்றில் 10 கிலோ எடையுடன் 18 அடி நீள தங்க மாலை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்றது பத்மநாபசாமி கோவில். இது ஒரு வைணவத் திருத்தலம்.

திருவாங்கூர் மன்னர் பரம்பரைக்குச் சொந்தமான அறக்கட்டளையின் கட்டுப்பாட்டில் இந்த கோவில் இருந்து வருகிறது. இந்த கோவில் கருவறைக்கு அருகே 6 ரகசிய பாதாள அறைகள் நீண்ட காலமாக பூட்டப்பட்டு இருந்தன.
அந்த பாதாள அறைகளை திறந்து, உள்ளே இருக்கும் நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொக்கிஷங்கள் விவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, உச்சநீதி மன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது.
இதற்காக ஓய்வு பெற்ற கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவர் உள்பட 7 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர், 6 ரகசிய அறைகளுக்கும் ஏ,பி,சி,டி,இ,எப் என பெயரிட்டு ஒவ்வொன்றாக திறந்து நகைகளின் விவரங்கள் குறித்து கணக்கெடுத்து வருகிறார்கள்.
இந்த அறைகளில் மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த, தங்க மணிகள், தங்கத்திலான சாமி சிலைகள், தங்க கயிறு, தங்க கிரீடங்கள், தங்க மாலைகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டன.
கேரள பட்ஜெட்டை விட அதிகம்
அவற்றில் விலைமதிக்க முடியாத அபூர்வமான வைரம், வைடூரியம் உள்பட நவரத்தின கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. அனைத்து அறைகளில் உள்ள தங்கம், வைரம், வைடூரியம், ரத்தினம் ஆகியவற்றின் மதிப்பு ரூ.1 கோடிக்கு மேல் இருக்கும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.
கேரள மாநில ஆண்டு பட்ஜெட்டின் வருவாய் அளவே ரூ.35 ஆயிரம் கோடிதான். இந்த நிலையில் பத்மநாபசாமி கோவிலில் உள்ள நகைகளின் மதிப்பு ரூ. 1 லட்சம் கோடியை தாண்டி இருப்பது அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.

அதிலும் குறிப்பாக ஏ அறையில் இருந்த சுமார் 10 கிலோ எடைகொண்ட 18 அடி நீளமுள்ள தங்கச் சங்கிலி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது பத்மநாபசுவாமிக்கு அணிவிக்க மன்னரால் வழங்கப்பட்டது என தெரிகிறது.
ஒரு பாதாள அறையின் உள்பகுதியில் 150 ஆண்டுகளுக்கு மேல் திறக்கப்படாத மற்றொரு சிறிய ரகசிய அறை திறக்கப்பட்டது. அந்த அறையில் விஷ வாயு மற்றும் விஷப் பூச்சிகள் இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டதால், முதலில் ஆக்சிஜன் வாயு செலுத்தப்பட்டது.
1200 தங்கச் சங்கிலிகள்

அதன்பின்னர் மதிப்பீட்டு குழுவினர், தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் முகக்கவசம் அணிந்து உள்ளே சென்றனர். அங்கும் குவியல் குவியலாக நகைகள்தான் இருந்தன. 1200-க்கு மேற்பட்ட ‘சரப்பொலி’ என்று அழைக்கப்படும் தங்கச் சங்கிலிகள் ஒரு அறையில் இருந்தன. அவற்றில் ‘அவல்’ என்று அழைக்கப்படும் ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டு இருந்தன.
அவை திருவாங்கூர் மன்னர்கள், ராணிகள் அணிந்த நகைகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 3 மணி மகுடங்கள், தங்கத் தாம்பாளங்களில் தங்க நாணயங்களும் இருந்தன. ‘சொர்ண தண்டு’ என்று அழைக்கப்படும் தங்க செங்கோல், நெக்லஸ் மற்றும் ஏராளமான பதக்கங்களும் குவிந்து இருந்தன.
ஜொலிக்கும் வைரங்கள்
பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள ரகசிய அறைகளில் அதிக அளவிலான தங்கக் குடங்கள் உள்ளன. அவற்றிற்குள் தங்க க்காசுகள் குவிந்திருந்தன. அவை அனைத்தும் புதிதாக செய்யப்பட்டது போல பொலிவுடன் காணப்பட்டன.

அதேபோல பெரிய ரத்தின கற்கள் பதித்த அரியாசனம், மன்னர்கள் அணியும் கிரீடங்கள், நவரத்தின கற்கள் பதித்த தங்க கிரீடங்கள், பத்மநாபசாமி சிலை என ஒவ்வொன்றும் ஒவ்வொரு கலை வண்ணத்தில் பளிச்சிட்டன.
நெப்போலியன் கால நாணயங்கள்

இவற்றில் பிரஞ்சுப் பேரரசன் நெப்போலியன் காலத்து நாணயங்கள் ஏராளமாக இருந்தன. அதே போல வெனிஸ் நாணயங்கள் மட்டும் 70 கிலோவுக்கும் அதிகமாக இருந்தன.



 


வியாழன், 24 ஏப்ரல், 2014

இப்படியும் தர்மம் செய்தாங்க!

உஞ்சவ்ருத்தி என்றால் பிச்சை ஏற்பது, அல்லது வீடு, வீடாகச் சென்று அரிசி போன்றதானியங்களை பெற்றுக் கொள்வது. தர்ம சாஸ்திரம் கூறும் உஞ்சவிருத்தி இதிலிருந்து வேறானது. அந்தக் காலத்தில் வயலில் நெல்லை அறுத்து, களத்து மேட்டில் குவிப்பார்கள். நெற்கதிரை அடித்து நெல்லை மலைபோல ஒன்று திரட்டி மூடையாக கட்டுவார்கள். எடுப்பதெல்லாம் கொடுப்பதற்கே என்னும்சிந்தனையோடு களத்தில் சிறிது அளவு நெல்லை விட்டுச் செல்வர். இதை தர்மம் செய்வதாகக்கருதினர். சோற்றுக்கு வழியில்லாத ஏழைகள் களத்தில் சிதறி கிடக்கும் நெல்லை எடுத்துச் செல்வர். உஞ்சவிருத்திஎன்பதற்கு சிதறிக் கிடப்பதை ஒன்று திரட்டுவது என்றும் பொருள் உண்டு.

ஸ்ரீயும் வேணும்! ஹ்ரீயும் வேணும்!!

பிறருக்கு தானம் அளிக்கும் போது மனசு ஸ்ரீயாக(லட்சுமிகரமாக) மகிழ்ச்சியோடு இருக்கவேண்டும். அப்போது ஹ்ரீயும் (வெட்கமும்) உண்டாக வேண்டும்என்கிறது தைத்திரீயோபநிஷத் என்னும் நூல். தானம் கொடுப்பவன் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்பது சரி. ஏன் வெட்கப்பட வேண்டும் என்றுஎண்ணலாம். இந்த வெட்கம், கவுரவக் கூச்சத்தால் உண்டாவது.தன்னை நாடி வந்தவருக்கு இன்னும் அதிகமாகக் கொடுக்க முடியவில்லையே என்பது ஒருபுறம். தானம் செய்வது வெளியில் நாலுபேருக்குத் தெரிந்து பாராட்டத் தொடங்கினால், நான் என்ற எண்ணம் வந்து விடுமே என்பதுமறுபுறம். அதனால், தானம்கொடுக்கிறோம் என்று கருதாமல். நம்மை இவ்வாறு கொடுக்க வைத்த கடவுளுக்கு நன்றி என்றஉணர்வோடு தானம்அளிக்க வேண்டும்.
உ போட்டு ஏன் எழுதுகிறோம்?

பிரணவ மந்திரமான ஓம் என்பது அ, உ, ம என்னும் மூன்று எழுத்துக்களின் கூட்டாகும். அ என்பது படைத்தலையும், உ என்பது காத்தலையும், ம என்பது அழித்தலையும் குறிக்கும். இதனை அகார, உகார, மகார சேர்க்கை என்று குறிப்பிடுவர். இந்த மூன்றிற்கும் இதயமாக நடுவிலுள்ள உ என்பதே பிள்ளையார் சுழியாக உள்ளது. இதயமே மனிதனைக் காக்கிறது. இதயம் நின்று போனால் ஜீவன் போய் விடும். அதுபோல், தன்னை நம்பி வந்தவரை காப்பது தான் என் கடமை என விநாயகர் காத்தல் எழுத்தான உ வைத் தனக்குரியதாக கொண்டிருக்கிறார். அதனால் தான், எதை எழுத ஆரம்பித்தாலும், உ என்ற பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்குகிறோம். அம்பிகைக்குரிய தேவி பிரணவம் எனப்படும் உமா என்ற மந்திரத்திலும் உ என்பது முதல் எழுத்தாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
குளிச்சா புண்ணியம் போச்சு!

காவிரி, கங்கை போன்ற நதிகள், ராமேஸ்வரம், சேதுக்கரை, திருச்செந்தூர் போன்ற கடல்களில் புனித நீராடிவிட்டு, மீண்டும், தங்கியிருக்கும் விடுதியிலோ (லாட்ஜ்), வீடுகளிலோ குளிக்கக்கூடாது. இவ்வாறு செய்தால், அந்த புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய புண்ணியம்கிடைக்காமல் போய்விடும். புனித நீராடல் மட்டுமில்லாமல், மந்திரச் சடங்குகளுக்கும் இது பொருந்தும். ஹோமம், யாகம் போன்றவற்றில் கலந்து கொண்டபின், வீட்டுக்கு வந்து குளித்தாலும் புண்ணியம் இல்லை.
பலிபீடத்தை தொடாதீர்!

கோயிலில் கோபுரவாசலுக்கும், கொடி மரத்திற்கும் இடையில் உள்ள மேடைக்கு பலிபீடம் என்று பெயர். நித்யபூஜையின் முடிவில், பலிபீடத்தில் கோயிலிலுள்ள அனைத்து தெய்வங்களுக்கும், அன்னம் (சாதம்) வைப்பர். இதை பலி போடுதல் என்பர். இதனை தெய்வங்கள் சாப்பிட்டுச் செல்வதாகஐதீகம். வழிபாட்டின் போது, பலிபீடத்தை தொட்டுக் கும்பிடுவதோ, உரசிச் செல்வதோ கூடாது. இன்னும் சொல்லப்போனால், பலிபீடம் நம் மீது பட்டு விட்டாலே ஒருமுறை குளிக்க வேண்டும் என்கிறது ஆகமங்கள்.