திங்கள், 13 ஜனவரி, 2014

சூரியன் பிறந்த கதை!

சாம்ப புராணம் என்ற நூலில் சூரியன் அவதரித்த கதை விரிவாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. பிரம்ம தேவன் படைப்புத் தொழிலை செய்வதற்குத் துணையாக ஏழு ரிஷிகளைப் படைத்தார். அவர்களை சப்த ரிஷிகள் என்று அழைப்பார்கள். அவர்கள், மரீஷி, சுத்ரி, அங்கிரஸர், புலத்தியர், புலகர், கிருது, வசிஷ்டர் என்பவர் ஆவர். இவர்களுள் மரீஷி முதல்வர். மரீஷி சம்பூதி என்பவளை மணந்தார். அவர்களுக்கு ஒரு பிள்ளை பிறந்தான். அவன்தான் கச்யபர் எனப்பட்டார்.

மகா பண்டிதரான கச்யபர் எல்லாச் சாஸ்திரங்களையும், வேதங்களையும் நன்கு ஆழ்ந்து கற்று, தேர்ச்சி பெற்று, ஞான பண்டிதராகத் திகழ்ந்தார். தட்சனின் பெண்களில் 13 பேரை இவர் மணந்தார். இவருடைய மூத்த மனைவியின் பெயர் அதிதி. இவள் கற்புச் செல்வி. கணவனே கண்கண்ட தெய்வம் என்பதை என்பதை உலகுக்கு உணர்த்திய உத்தமி. தர்மதேவதை, இவள் பெருமையை உலகுக்குக் காட்ட நினைத்தார். ஒரு நாடகம் ஆடினார். அதிதி கருவுற்றிருந்த நேரம். அந்த நிலையி<லும் அவள் கணவனுக்குப் பணிவிடை செய்வதில் ஆர்வம் காட்டினாள். ஒரு நாள் அதிதி தன் கணவன் கச்யபருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள். அந்த நேரம் வாசல் பக்கத்தில் இருந்து தாயே, பிச்சை போடு என்ற குரல் கேட்டது. தர்ம தேவதை மாறு வேடத்தில் வந்திருந்தான். குரல் கேட்டது என்றாலும், கணவனுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த காரணத்தால், அதிதியால் உடனே சென்று உபசரிக்க இயலவில்லை. கணவன் உணவு உண்டு எழுந்தபின், அன்னமும் கையுமாக விரைந்தாள் அதிதி. அவள் வந்திருந்த நபரிடம், ஐயா பொறுத்தருள்க என்று மன்னிப்புக் கேட்டு, அன்னமிட முயன்றாள்.

வந்தவன் அதிதியைக் கோபத்துடன் நோக்கினான். உபசரிப்பு மிக நன்றாக இருக்கிறது. பெயர் மட்டும் அதிதி என்று வைத்துக் கொண்டால் போதுமா? அதிதியை (அறிவிக்காமல் வந்தவன்) எப்படிக் கவுரவிக்க வேண்டும் என்பது உனக்குத் தெரியாதா? சுவாமி கணவனுக்குப் பணிவிடை செய்ததால், வர காலதாமதமாகி விட்டது. நானோ கருவுற்றிருக்கிறேன். என்னால் இந்த நிலையில் வேகமாக நடக்கவும் முடியவில்லை நீங்கள் மன்னிக்க வேண்டும். நிலை என்ன பொல்லாத நிலை? உனக்குக் கணவன்தான் முக்கியம், அதைவிட உன் வயிற்றிலிருக்கும் கருவும் முக்கியம். உன் வீடு தேடி வந்த நான், மொத்தத்தில் அலட்சியப்படுத்தப்பட்டேன். எனவே சாபமளிக்கிறேன், உனது கரு மிருதம் ஆகக் கடவது. கடுமையான சாபம் தந்தான். மாறுவேடத்தில் இருந்த தர்ம தேவதை. மயக்கமுற்றாள் அதிதி. விரைந்து வந்த கச்யபர் நடந்ததைப் பார்த்து, ஞான திருஷ்டியால் உண்மையை அறிந்து கொண்டார். மனைவியின் மயக்கத்தை தெளிவித்தார். உண்மையை விவரித்தார். கரு அழியட்டும் என்று அவன் இட்ட சாபமானது அற்புதம் தான். புதல்வன் அற்புதமாகப் பிறப்பான் என்பதை அறிவிக்கக் கூடியது என்ற தெளிவினை மனைவிக்குத் தந்தார்.

மிருது பிண்டமாகாது. அண்டமாக மாறும் அந்த அண்டம் பிளக்கும். அதிலிருந்து ஒரு மகன் பிறப்பான். அவன் மார்த்தாண்டன் எனப்படுவான். விஷ்ணுவைப் போல வல்லமையுடன் இருப்பான். நவக்கிரகங்களுக்குத் தலைமை ஏற்பான் என்றார் கணவர், கச்யபர். மனம் தெளிந்தாள் மனைவி அதிதி. ஒரு பிரபவ ஆண்டு மகா சுக்ல சப்தமியில் விசாக நட்சத்திரத்தில் அதிதியிடமிருந்து தோன்றிய அண்டத்திலிருந்து ஒளி தோன்றியது. பன்னிரண்டு புதல்வர்கள் அவதரித்தார்கள். சரவணப் பொய்கையில் தோன்றிய ஆறு குழந்தைகள் ஒன்று சேர்க்கப்பட்டு ஸ்கந்தனானது போல் பன்னிரண்டு பிள்ளைகள் ஒன்று சேர்க்கப்பட்டு சூரியன் என்ற பெயரில் ஆயிரம் கிரணங்களோடு உலா வந்தான். இவர்கள் தனித்தனியே 12 மாதங்களுக்கு ஆதித்யர்கள் ஆனார்கள். இவ்வாறு சூரியனின் அவதாரப் பெருமையை விளக்குகிறது. சாம்ப புராணம்.
பொங்கல் பூஜை செய்வது எப்படி?

இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ஸ்டவ்வில் பொங்கல் வைக்கிறார்கள். ஆனால், சூழ்நிலைகளைக்காரணம் காட்டி, நமது பாரம்பரியத்தை மறந்து போவது முறையானதல்ல. மேலும், இளைய தலைமுறையினர், அக்காலத்தில் நாம் எப்படி பொங்கலிட்டோம் என்பதையும் தெரிந்து கொண்டு எதிர்காலத்திலும் கடைபிடிக்க வேண்டும்.

வீட்டு வாசலில் பொங்கல் வைக்க வசதியில்லாவிட்டால், தெருமக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, நல்ல நேரத்தை தேர்ந்தெடுத்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் இணைந்து பொங்கல் வைக்க வேண்டும். கோயில்களையும் தேர்ந்தெடுக்கலாம். பால் பொங்கும் போது, சூரிய நமஸ்காரம் செய்து, ""பொங்கலோ பொங்கல் என ஒரு சேர முழக்கமிட வேண்டும். ஏனெனில், இது ஒரு ஒற்றுமைத் திருவிழா. தேரோட்டம் என்ற நிகழ்ச்சியை ஊர் ஒற்றுமை கருதி எப்படி நம் முன்னோர்கள் நமக்கு அறிவுறுத்தி சென்றார்களோ, அதுபோல பொங்கலும் மக்களிடையே ஒருமைப்பாட்டை வளர்க்கும் விழா என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே வீட்டுக்குள் காஸ்ஸ்டவ், மண்ணெண்ணெய் அடுப்பு இவற்றில் பொங்கல் வைப்பதைத் தவிர்த்து வீதியில் வைக்க வேண்டும். நகரங்களாக இருந்தாலும் கூட, கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்புஅளிக்கும் வகையில், அங்கிருந்து பனை ஓலை அல்லது தென்னை ஓலை தருவித்து பொங்கலிட வேண்டும்.

பொங்கலன்று காலையில் நல்ல நேரம் பார்த்து, வீட்டு முற்றத்தில் பெரிய அளவிலான குத்துவிளக்கேற்றி, அதன் முன் ஒரு வாழை இலையைப் போட வேண்டும். அதன் இடது ஓரத்தில் நாழி நிறைய பச்சை நெல் வைக்க வேண்டும். இலையில் பச்சரிசியை பரப்பி, அதன் மேல் கத்தரிக்காய், கருணைக்கிழங்கு, சிறுகிழங்கு, வள்ளிக்கிழங்கு, அவரைக்காய், சீனிஅவரை, பூசணித் துண்டு, பிடிகிழங்கு, காப்பரிசி (வெல்லம், பச்சரிசி கலவை) வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள்கிழங்கு ஆகியவற்றை வைக்க வேண்டும். கரும்பின் ஓலையை வெட்டாமல் நீள கரும்பாக சுவரில் சாய்த்து வைக்க வேண்டும். ஒற்றைக் கரும்பாக வைப்பதைத் தவிர்த்து இரண்டு கரும்புகள் வைக்க வேண்டும்.

பொங்கல் பானையை மண்அடுப்பு அல்லது பொங்கல் கட்டி எனப்படும் கற்கள் மீது வைக்க வேண்டும். திருவிளக்கிற்கு பத்தி, கற்பூர ஆரத்தி காட்டியபிறகு, உங்கள் குல தெய்வம் இருக்கும் கோயிலின் திசையை நோக்கி காட்ட வேண்டும். பின்னர் சூரியபகவானுக்கு ஆரத்தி காட்டியதும், ஒரு தேங்காயை உடைத்து, அதன் நீரை பானையில் விட வேண்டும்.

சுத்தப்படுத்திய பச்சரிசியை நன்றாகக் களைந்து, அந்த தண்ணீரை பானையில் விட வேண்டும். அடுப்புக்கும், பொங்கல் பானைக்கும் தூபம் (பத்தி) காட்டி, பற்ற வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்து பால் பொங்கும் போது குலவையிட வேண்டும். குலவை தெரியாதவர்கள் "பொங்கலோ பொங்கல் என முழங்க வேண்டும். பின்னர் பானையிலுள்ள சுடும் நீரை, அரிசி வேகும்அளவிற்கு மட்டும் வைத்துக் கொண்டு, மீதியை முகந்து விட வேண்டும். அரிசியை போட்டு, வெந்ததும் அவ்வப்போது அகப்பையால் கிண்டி கொடுக்க வேண்டும். இல்லா விட்டால், பாத்திரத்தின் அடியில் பிடித்து விட வாய்ப்புண்டு. பொங்கலை இறக்கிய பிறகு, சர்க்கரைப் பொங்கல் வைக்க வேண்டும்.

இலையின் முன்னால் இந்த பானைகளை இறக்கி வைத்து, திருவிளக்கிற்கும், சூரியனுக்கும் பூஜை செய்ய வேண்டும். ஆதித்ய ஹ்ருதயம் தெரிந்தவர்கள் அந்த ஸ்லோகங்களைச் சொல்லலாம். மற்றவர்கள் சூரியன் குறித்த தமிழ் பாடல்களைப் படிக்கலாம். பின்னர் காகத்திற்கு பொங்கல் வைக்க வேண்டும். காகம் உணவை எடுத்த பிறகு, குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல் கொடுக்க வேண்டும். அதன்பிறகே பெரியவர்கள் சாப்பிட வேண்டும். பின், காய்கறி வகைகள் சமைத்து வெண்பொங்கலை மதிய வேளையில் சாப்பிட வேண்டும். இரவில் முன்னோரை நினைத்து, இனிப்பு வகைகள், புத்தாடை வைத்து வணங்க வேண்டும். புத்தாடையை தானமாக கொடுத்து விட வேண்டும்.
பொங்கல் பண்டிகையில் சூரியனை வழிபாடுவது ஏன்?

பொங்கல் விழாவே ஒரு சூரிய வழிபாட்டு விழாவாகும். ஆகாயத்தில் காற்றும், காற்றில் தீயும் உருவாகின்றன. தீயினால் புதுப்பானையில் (நிலம்) உள்ள அரிசி (நிலத்தின் பயன்) நீரில் வெந்து பொங்கலாகிறது. பொங்கலைப் படைத்து சூரியனை வழிபடுகின்றவர்கள், ஐம்பெரும் பூதங்களையே வழிபடுகின்றனர் என்பது ஐதீகம்.பாரதத்தில் சூரிய வழிபாடு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. ரிக்வேத காலத்துக்கும் முன்பிருந்தே இந்த வழிபாடு இருந்து வருகிறது. அசையும் பொருள்கள் அனைத்திற்கும் சூரியனே உயிர் தருகிறான் என்கின்றன, வேதங்கள் !இந்த வழிபாடு எப்படி ஏற்பட்டது என்பது பற்றி நிச்சயமாக ஒன்றும் கூறமுடியவில்லை கிமு 2000 - க்கு முன்பே சூரியன், அக்னி, வருணன் ஆகியோரை இந்தியர்கள் வழிபட்டு வந்துள்ளனர்.நம்நாடு சூரிய வெப்பம் மிகுந்த நாடு. ஆகவே, அவன் அருளைப் பெற அவனை மக்கள் வழிபட முற்பட்டதில் வியப்பில்லை. பல நோய்களை சூரிய கிரணங்கள் குணப்படுத்துவதாக அதர்வண வேதம் குறிப்பிடுகிறது. உபநிஷத்துக்களும் புராண இதிகாசங்களும் சூரியனின் புகழைப் பேசுகின்றன. பிற தெய்வங்களைப் போல் அல்லாமல் சூரியன் கண்ணெதிரே தோன்றும் தெய்வமாக விளங்குகிறான்.

சூரிய வழிபாட்டினால் தோல் நோய், கண் நோய்கள் குணமாகிவிடும் என்று மக்கள் நம்பினார்கள். சூரியனுக்காகக் கட்டிய புராதனக் கோயிலில் ஒன்று ஒரிஸ்ஸாவிலுள்ள கொனார்க் கோயில். கலிங்கத்தை ஆண்ட நரசிங்கதேவன் (கி.பி 1238--64) இதைக் கட்டினான்.இந்த ஆலயத்தில் உள்ள சிற்பங்கள் உலகில் வேறு எங்கும் காண கிடைக்காத வேலைப்பாடு மிக்கவை.தமிழ்நாட்டில் கும்பகோணத்தை அடுத்துள்ள சூரியனார் கோயில் என்ற இடத்தில் சூரியனுக்கென்று தனி ஆலயமே இருக்கிறது. சூரியனைப் பரம்பொருளாக ஆதித்திய ஹிருதயம் கூறுகிறது. மார்க்கண்டேய புராணம், பவிஷ்ய புராணம் முதலியவை சூரிய வழிபாட்டை விவரிக்கின்றன. மந்திரங்களில் மிக சக்தி வாய்ந்ததாகக் கருதப்படும் காயத்ரி சூரியனுக்கு உகந்த மந்திரம். சூரிய நமஸ்காரம் என்பது உடற்பயிற்சி, யோகப் பயிற்சியுடன் கூடிய வழிபாடு. இன்று இது மேனாட்டிலும் பரவியுள்ளது. சூரிய வழிபாடு சௌரமதம் என்ற பெயரில் ஷண்மதங்களுள் ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. சௌரமதம் ஒரு காலத்தில் உலகளாவிய மதமாகவும் பரவியிருக்கிறது. தை மாதம் முதல் நாள் - சூரியன் மகர ராசிக்குள் (உத்தராயணம்) பிரவேசிக்கும் நாள் பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்பட்டு சூரிய வழிபாடு நடத்துகிறார்கள். கீதையில் கண்ணபிரான் ஜ்யோதிஷம் ரவிர் சும் சுமான் என்று கூறி ஜ்யோதிகளில் தாம் சூரியனாக இருப்பதாகத் தெரிவிக்கிறார். அந்தக் காலத்தில் ரிஷிகள் சூரியனின் கனிந்த ஒளியிலே நாள் தவறாமல் திளைத்து வந்தார்கள். சூரிய கிரணங்களை ஜீவத்திறல் என்றும் ஆயுளை வளர்க்கும் அன்னம் என்றும் போற்றினார்கள். அவர்கள் உடல், உள்ளம், உயிரில் தேவசக்தியும் தெய்வ ஒளியும் துள்ளின. சுற்றும் உலகுக்கே சூத்திரமாக விளங்கும் சூரியனின் பெருமை இன்று சுருங்கிப்போய் விட்டது. என்றாலும், பொங்கல் திருநாளில் மட்டும் ஆதித்தனைப் போற்றும் பழக்கம் இன்றும் தொடர்கிறது.
சூரியனின் குடும்பம்!

பெற்றோர்:காஷ்யப முனிவர்,அதிதி.
சகோதரர்கள்:கருடன்,அருணன்
மனைவியர்:உஷா,பிரத்யுஷா(சாயாதேவி)
மகன்கள்:எமதர்மன்,சனீஸ்வரர்,அஸ்வினி தேவர்கள்,கர்ணன்,சுக்ரீவன்
மகள்கள்:யமுனை,பத்திரை

பார்த்தபின் சாப்பிடுங்க:தாபனீய உபநிஷத் என்னும் நூலில் நரசிம்மருக்கு மூன்று கண்கள் உண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் வலக்கண் சூரியன், இடக்கண் சந்திரன், நடுக்கண் அக்னியாக விளங்குகிறது. புருஷ சூக்தம் என்ற நூல், விஷ்ணுவின் கண்களில் இருந்து சூரியன் உண்டானதாகச் சொல்கிறது. சூரியனை வணங்காமல் சாப்பிடுவது கூடாது என வேதம் கூறுகிறது. சூரியவழிபாடைத் தவறாமல் செய்தால் வாக்குவன்மை, ஆரோக்கியம் உண்டாகும். சூரியனைக் காணாத நாள் ஒவ்வொன்றும் வீண்நாளே என்கிறார் காஞ்சிப் பெரியவர்.

முதல் கடவுள்:மனிதன் தோன்றிய காலம் தொட்டே சூரியவழிபாடு இருந்து வருகிறது. இருளில் தவித்த மனிதன், தினமும் காலையில் கிழக்கு வெளுத்து சூரிய உதயமாவதைக் கண்டு மகிழ்ந்தான். தன் இருகைகளைக் குவித்து வணங்கி வழிபட்டான். விநாயகர், முருகன், சிவன், சக்தி, விஷ்ணு ஆகிய தெய்வ வழிபாடுகள் பிற்காலத்திலேயே தோன்றின. சூரிய வழிபாட்டுக்குரிய மதத்தை "சவுரம் என அழைத்தனர். இதனால் சூரியன், "முதல் கடவுள் என்ற சிறப்புக்கு <உரியவராகிறார்.

அம்பாளின் வலக்கண்: சூரியனைச் சிவ அம்சமாகக் கொண்டு சிவசூரியன் என்றும், விஷ்ணுவின் அம்சமாகக் கொண்டு சூரியநாராயணர் என்றும் சொல்வர். இவர் அம்பிகையின் வலக்கண்ணாக இருப்பதாகவும் கூறுவர். ஜோதிட சாஸ்திரம் சூரியனை நவக்கிரக நாயகனாகப் போற்றுகிறது. இவரைச் சுற்றியே மற்ற கிரகங்கள் நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. நவக்கிரக மண்டபத்தில் நடுவில் வீற்றிருந்து அருளுகிறார் சூரியன். இதுதவிர, சிவாலயங்களில் இவர் தனது துணைவியரான உஷா, பிரத்யுஷாவுடன் தனி சந்நிதியிலும் இருப்பார்.

சூரியமந்திரம் சொல்வோமா:சூரியவழிபாட்டுக்கு உகந்த நாள் ஞாயிறு. கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரங்கள் சிறந்தவை. திதிகளில் வளர்பிறை சப்தமி ஏற்றது. இந்த நாட்களில் காலையில் நீராடிய பிறகு, கிழக்கு நோக்கி நின்று சூரியனை வணங்க வேண்டும்.

நம:ஸவித்ரே ஜகதேச சக்ஷúஷே
ஜகத் ப்ரஸூதி ஸ்திதி நாச ஹேதவே
த்ரயீமயாய த்ரிகுணாத்ம தாரிணே
விரிஞ்ச நாராயண சங்கராத்மனே
ஜபாகு ஸும ஸங்காசம்
காஸ்யபேயம் மஹாத்யுதிம்
த்வாந்தாரிம் ஸர்வ பாபக்னம்
ப்ரணதோஸ்மி திவாகரம்
என்ற சூரிய மந்திரத்தைச் சொல்ல வேண்டும். இதன் பொருளையும் சொல்லலாம்.

பொருள்:உலகிற்குக் கண்ணாக இருப்பவனே! முத்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றைச் செய்பவனே! வேத வடிவமே! முக்குணங்களைப் பெற்றவனே! பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்தியாகவும் திகழும் சூரியனே! உமக்கு நமஸ்காரம். காஷ்யப முனிவரின் மகனே! செம்பருத்திப்பூவின் நிறத்தைக் கொண்டவனே! இருளின் எதிரியே! பேரொளி உடையவனே! பாவங்களைப் போக்குபவனே! திவாகரனே! உம்மைப் போற்றுகிறேன். இந்த மந்திரத்தை ஜெபித்தால் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் உண்டாகும்.

சத்ய நாராயண விரதமுறையும் பலனும்!

அனுஷ்டிக்க விதிமுறைகள்: ஆந்திராவில் மிகவும் பிரபலமானது சத்ய நாராயண விரதம். சமீப காலமாக தமிழக பக்தர்களும் இதைகடைபிடிக்கின்றனர். மகாவிஷ்ணுவே சத்ய நாராயணர். இந்தவிரதத்தை ஒவ்வொரு பவுர்ணமியன்றும் கடைபிடிக்க வேண்டும். (பவுர்ணமியன்று பெண்களுக்கு வசதிப்படாவிட்டால், தமிழ் மாதப்பிறப்பு அல்லது வளர்பிறை ஏகாதசி திதியன்று விரதமிருக்கலாம்) இந்தவிரதம் எளிமையானது. இதைகணவனும், மனைவியும் சேர்ந்து அனுஷ்டிக்க வேண்டும். அன்று பகலில் சாப்பிடக் கூடாது. மாலை 4.30-6.00 மணிக்குள் உறவினர்கள், நண்பர்கள், அயல்வீட்டாரை வீட்டுக்கு வரவழைக்க வேண்டும். சத்ய நாராயணர் படத்தின் முன், நெய் விளக்கேற்ற வேண்டும். பழம், பால், வெல்லம், தேன், கோதுமை நெய் அப்பங்களை சத்திய நாராயணருக்கு நைவேத்யம் செய்ய வேண்டும். அந்நாளில், சத்யநாராயணர் விரதக்கதைகளை படிக்க வேண்டும். இந்தவிரதத்தைகடைபிடிக்க இத்தனை வாரம் தான் நியதி இல்லை. ஒவ்வொரு பவுர்ணமி அன்றும், தொடர்ந்து அனுஷ்டித்தால், நம்மை ஜெயிக்க யாரும் இல்லை என்ற நிலை உருவாகும். பணவசதி பெருகும். புதுமணத்தம்பதிகள், வாழ்வின் துவக்கம் முதலே இதைதகடைபிடித்தால் தீர்க்காயுள் உள்ள புத்திசாலித்தனமான குழந்தைகள் பிறப்பார்கள். வசதி உள்ளவர்கள், கலசம் வைத்து புரோகிதர்களைதகொண்டு இந்தபூஜையை நடத்தலாம்.

ஆந்திராவில் சத்தியநாராயணர்: ஆந்திர மக்கள் சத்யநாராயண விரதத்தை தவறாமல் கடைபிடிக்கின்றனர். செல்வந்ததம்பதிகள், இந்தவிரதம் துவங்குவதற்கு முன்னதாக ஆறுமாதங்கள் வரை, ஏதாவது ஒரு புனிதத்தலத்தில் தங்கி வந்து இந்தவிரதத்தைதுவங்குகிறார்கள். விரதபூஜையை, பவுர்ணமியன்று பிரதோஷ நேரத்தில் (மாலை 4.30-6.00) நடத்துகிறார்கள். அன்று, மாலையில் அன்னதானம் செய்யும் நோக்கத்தில் பெருமளவு சமைக்கிறார்கள். சமைத்ததில் கால் பங்கை மட்டும் தங்களுக்கும், தங்கள் உறவினர்களுக்கும் எடுத்துதகொண்டு, மீதியை தானம் செய்து விடுகிறார்கள்.

பணம் வரப்போகுது சொல்பவர் நாரதர்: கலியுகத்தில், மனிதனுக்கு தேவை அதிகம். அவனது தேவைகளை நிறைவேற்ற பணம் வேண்டும். அது கிடைக்க எளிய வழி சத்ய நாராயண விரதம் என்கிறார் நாரதர்.சுதானந்தர் என்பவர் இந்த விரதத்தை முறையாகக் கடைபிடித்ததால், மறுபிறவியில் சுதாமா (குசேலர்) என்னும் பெயரில் பிறந்து, கிருஷ்ண தரிசனத்துடன் பெரும் செல்வத்தைப் பெற்றார். விறகு விற்றுக் கொண்டிருந்த பல்லன் என்ற தொழிலாளி, இந்த விரத மகிமையால், மறுபிறவியில் குகன் என்னும் பெயரில் பிறந்து ராமதரிசனம் பெற்று, அழியாச் செல்வமான முக்தியை அடைந்தான். உல்காமுகன் என்ற அரசரோ, இதை முறையாகச் செய்து, மறுபிறவியில் தசரதராகப் பிறந்து 60ஆயிரம் ஆண்டுகள் சகல செல்வத்துடன் வாழும் பாக்கியம் பெற்றதுடன், ராமனுக்கே தந்தையும் ஆனார். ஸ்காந்த புராணத்தில் (கந்த புராணம்) வரும் ஸ்லோகம் ஒன்றில், இந்த விரதத்தை அனுஷ்டித்தால், கஷ்டங்கள் குறையும். பணமும், தானியமும் பெருகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். பெற்றோருக்கு நற்பெயர் வாங்கித்தரும் குழந்தைகள் பிறக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
தாயார் திருவடிகள் சரணம்!

கமல வல்லி கனகவல்லி கற்பகவல்லி பாதம் !
அமுதவல்லி அம்ருதவல்லி அழகியவல்லி பாதம் !

குமுத வல்லி குருகூர்வல்லி குழைக்காதவல்லி பாதம் !
புஷ்பவல்லி பூர்ணவல்லி பளவவல்லி பாதம் !

அபிஷேக வல்லி அம்புஜவல்லி அஞ்சிலைவல்லி பாதம் !
செண்பகவல்லி செங்கமலவல்லி கோமளவல்லி பாதம் !

ஆதிநாதவல்லி அம்ருதகடவல்லி அரவிந்தவல்லி பாதம் !
குறுங்குடி வல்லி கோளூர்வல்லி குளந்தைவல்லி பாதம் !

வஞ்ஜுளவல்லி வாத்ஸல்யவல்லி வரகுணவல்லி பாதம் !
வேதவல்லி வேளுக்கைவல்லி வைகுந்தவல்லி பாதம் !

மதுரவல்லி மரகதவல்லி வித்துவகோட்டுவல்லி பாதம் !
சுதாவல்லி சுந்தரவல்லி புண்டரீகவல்லி பாதம் !

கல்யாணவல்லி செங்கமலவல்லி சௌந்தர்யவல்லி பாதம் !
ரமாமணி வல்லி மோகூர்வல்லி நேர்ஒருவரில்லா வல்லி பாதம்!

தஞ்தை நாயகி ரங்கநாயகி பரிமளரங்கநாயகி பாதம் !
சார நாயகி லோகநாயகி புரு÷ஷாத்தமநாயகி பாதம் !

பூமிதேவி பூர்வாதேவி சிறுதேவி பாதம் !
மகாதேவி இந்திராதேவி வாத்ஸல்ய தேவி பாதம் !

செண்பகச்செல்வி பங்கயச்செல்வி பொற்றாமரையாள் பாதம் !
மலர்மகள் பூமகள் கடல் மகள் பாதம் !

செங்கமலநாச்சியார் மதுரவேணி நாச்சியார் தாமரை நாயகி பாதம் !
தலைச்சங்க, திருப்பேரை நாச்சியார் நரசிங்கவல்லி பாதம் !

கல்யாண நாச்சியார் உபயநாச்சியார் பாமாருக்மணி பாதம் !
அல்லிமாமலர் திருமாமகள் பூங்கோவல் நாச்சியார் பாதம் !

மலர்மங்கை நிலமங்கை மடவரல் மங்கை பாதம் !
கிரீவரமங்கை அலர்மேல் மங்கை அணிமாமலர் மங்கை பாதம் !

பொற்கொடி ஆண்டாள் செல்வத்திருக்கொழுந்து பாதம் !
பத்மாசனி பத்மாமணி பெருஞ்செல்வநாயகி பாதம் !

பெருந்தேவி கண்ணபுரநாயகி உய்யவந்த நாச்சியார் பாதம் !
லட்சுமி ஹரிலட்சுமி கருந்தடக்கண்ணி பாதம் !

செல்வநாயகி செம்மலர் பாதங்களை மனம்குளிர நினைந்திடுவோம்!
தாயார் திருவடியை தினமும் நாம் தொழுது தனமழையில் நனைந்திடுவோம்!
காளியை வணங்கும் முறை (ராகுதோஷம் நீங்க )

ராகு திசை நடக்கும் போதோ, ராகு பெயர்ச்சியால் ஒருவரது செயல்பாடுகள் பாதிக்கும் போதோ, நமது பணிகளில் பிறரது தலையீடு தேவையின்றி வரும்போதோ, அவர்கள் நம் பக்கமே வராமல் இருக்கவோ காளிக்கு நாமாகவே அர்ச்சனை செய்யலாம். குறிப்பாக, நவராத்திரி காலத்தில் இதைச் செய்தால் மிகவும் நல்லது.எண் கணிதப்படி ராகுவுக்குரிய எண் 4. இந்த எண் தடைகளை தரும் என்பது நம்பிக்கை. எனவே தான் 22 (கூட்டினால் 4) ஸ்லோகம் கொண்ட அர்ச்சனையை காளிக்காக வடித்துள்ளதாக கருத வேண்டியுள்ளது. இந்த ஸ்லோகத்தை வீட்டில் மாரியம்மன் அல்லது துர்க்கை படம் முன் அமர்ந்து சொல்லலாம். கொலு வைத்திருந்தால் மேடை முன் அமர்ந்து சொல்லலாம். இந்த ஸ்லோகத்தைச் சொல்லும்போது, செவ்வரளி மலர்களை தூவ வேண்டும்.

ஓம் காள்யை நம:
ஓம் க்ருஷ்ண ரூபாயை நம:
ஓம் பராத்மகாயை நம:
ஓம் முண்டமாலாதராயை நம:
ஓம் மஹாமாயாயை நம:
ஓம் ஆத்யாயை நம:
ஓம் கராளிகாயை நம:
ஓம் ப்ரேதவாஹாயை நம:
ஓம் ஸித்தலக்ஷ்மையை நம:
ஓம் கால ஹராயை நம:
ஓம் ப்ராஹ்மை நம:
ஓம் நாராயண்யை நம:
ஓம் மாஹேஸ்வர்யை நம:
ஓம் சாமுண்டாயை நம:
ஓம் கவுமார்யை நம:
ஓம் அபராஜிதாயை நம:
ஓம் வராஹ்யை நம:
ஓம் நாரஸிம்ஹாயை நம:
ஓம் கபாலின்யை நம:
ஓம் வரதாயின்யை நம:
ஓம் பயநாசின்யை நம:
ஓம் ஸர்வ மங்களாயை நம:
 
மார்க்கபந்து ஸ்தோத்திரம்

அப்பய்ய தீக்ஷிதரின் கல்வி, அனுபூதி முதலியவற்றைக் கண்டு பொறாமையுற்ற சிலர் அவர் மீது சில கொடியவர்களை ஏவினர். கொடியவர்கள் தம்மை மடக்க எண்ணியதை அறிந்த தீக்ஷிதர் பின்வரும் ஐந்து சுலோகங்களால் பரமேஸ்வரனைத் துதித்தார். பரமேஸ்வரன் மார்க்க ஸஹாயனாக வந்து, அந்தக் கொடியவர்களை விரட்டியடித்தார்.

சம்போ மஹாதேவ தேவ, சிவ சம்போ மஹாதேவ தேவேச சம்போ, சம்போ மஹாதேவ தேவ

பாலாவநம்ரத்கிரீடம் பால நேத்ரார்ச்சிஷா தக்தபஞ்சேஷுகீடம்
சூலாஹதாராதிகூடம் சுத்த மர்த்தேந்துசூடம் பஜே மார்கபந்தும் (சம்போ)

திவ்யமான கிரீடத்தைத் தரித்தவரும் நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்தவரும் சூலத்தால் எதிரிகளை வதைத்தவரும் சந்திரனைத் தலையில் தரித்தவரும் வழித்துணைத் தெய்வமாக விளங்குபவருமான மார்க்கபந்துவை வணங்குகிறேன்.

அங்கே விராஜத்புஜங்கம் அப்ரகங்காதரங்கா பிராமோத்தமாங்கம்
ஓம்காரவாடீகுரங்கம் ஸித்தஸம்ஸேவிதாங்க்ரிம் பஜே மார்கபந்தும் (சம்போ)

பாம்பை ஆபரணமாக அணிந்தவர், கங்கையைத் தரித்தவர், ஓங்காரத் தோட்டத்துக்கு மான் போன்றவரும்(பிரணவப் பொருளானவரும்). சித்தர்களால் வணங்கப்பட்ட திவ்ய சரணாரவிந்தங்களை உடையவரும் வழித்துணைத் தெய்வமாக.....

நித்யம் சிதாநந்தரூபம் நிஹ்நுதாசேஷலோகே சவைரிப்ரதாபம்
கார்த்தஸ்வராகேந்த்ரசாபம் க்ருத்திவாஸம் பஜே திவ்யஸந்மார்கபந்தும் (சம்போ)

நித்யரும் சிதானந்த ரூபியும், லோக பாலர்களுக்கு எதிரிகளான அசுரர்களின் பிரதாபத்தையும் அழித்தவரும், பொன்மலையை வில்லாக்கியவரும், யானைத் தோலை அணிந்தவரும் வழித்துணைத் தெய்வமாக....

கந்தர்ப்பதர்பக்நமீசம் காலகண்டம் மஹேசம் மஹாவ்யோமகேசம்
குந்தாபதந்தம் ஸுரேசம் கோடிசூர்யப்ரகாசம் பஜே மார்கபந்தும் (சம்போ)

மன்மதனின் திமிரை அடக்கியவர், விஷத்தைக் கழுத்தில் தரித்திருப்பவர், ஆகாசத்தையே கேசமாக உடையவர், வெண்பற்களை உடையவர், கோடி சூரியனுக்கு நிகரானவர், வழித்துணைத் தெய்வமாக....

மந்தாரபூதேருதாரம் மந்தராகேந்த்ரஸாரம் மஹாகௌர்யதூரம்
ஸிந்தூரதூரப்ரசாரம் ஸிந்துராஜாதிதீரம் பஜே மார்கபந்தும் (சம்போ)

மந்தாரம் என்ற கற்பக விருக்ஷத்தைவிட அதிகமாக வேண்டியவற்றை அருள்பவர், மந்தர மலையைவிட அதிக வலுவுள்ளவர், பார்வதி தேவிக்கு அருகில் உள்ளவர், ரிஷபத்தின் மீது ஏறி சஞ்சாரம் செய்பவர், சமுத்திரராஜனைவிட அதிக தீரராக இருப்பவருமான, வழித்துணைத் தெய்வமாக விளங்குபவருமான மார்க்கபந்துவைப் பூஜிக்கிறேன்.

அப்பய்யயஜ்வேந்த்ரகீதம் ஸ்தோத்ர
ராஜம் படேத்யஸ்து பக்த்யா ப்ரயாணே
தஸ்யார்த்தஸித்திம் விதத்தே மார்க
மத்யேபயம் சாதுதோ÷ஷா மஹேச (சம்போ)

அப்பய்ய தீக்ஷிதரால் அருளப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தை வெளியே செல்லும்போது பக்தியுடன் படிக்கின்றவருக்கு, பரமேச்வரர் காரிய சித்தியையும் வழியில் பயமின்மையையும் நல்குகிறார்.
கங்காஷ்டகம்

1. கத்யஸ்தீனி கரோடய: கதி சுதா தாம்னச்சகண்டா கதி காகோலா: கதி பன்னகா: கதி கதி த்வீபித் விஷாணாம் த்வச:
கிம் ச த்வம் ச கதி த்ரிலோக ஜனனி! த்வத்வாரி பூரோதரே மஜ்ஜஜ-ஜந்து கதம்பகம் ஸமுதயத்யே கைக மாதா யயத்

பொருள் : ஹே மூவுலகத் தாயே ! நீ எண்ணற்ற எலும்புத் துண்டுகள், மண்டையோடுகள் நிறைந்தவளாகவும், அம்ருத தாரைகளுக்கு இருப்பிடமாகவும், நீர்ப்பறவைகள், பாம்புகள் நிறைந்தும் <உள்ளாய். உன்னுள் மூழ்கும் எல்லா உயிரினங்களையும் வாழ்வில் மேலே தூக்கிவிடும் உன் பெருமையே பெருமை!

2. தேவி! த்வத்புலிநாங்கணே ஸ்திதிஜுஷாம் நிர்மாநினாம் ஞானினாம் ஸ்வல்பாஹார நிபத்த சுத்த வபுஷாம் தார்ணம் க்ருஹம் ச்ரேயஸே
நான்யத்ர க்ஷிதிமாண்ட லேச்வரசதை: ஸம்ரக்ஷிதோ பூபதே: ப்ராஸாதோ லலநாகணைரத கதோ போகீந்த்ர - போகோந்நத

பொருள் : நூற்றுக்கணக்கான அரசர்கள் காவலுள்ள, அந்தப்புரப் பெண்கள் பலர் சூழ்ந்துள்ள, படமெடுத்த ஆதிசேஷனைப் போல் உயர்ந்து விளங்கும் அரச மாளிகையை விட ஹே தேவி, உனது கரையின் மணலில் அமைந்த, கோபத்தை வென்ற, சிறிதே உணவருந்தி, தூயவர்களாகிய, உலகின் நன்மையை விரும்பும் ஞானிகளின் புல்லால் வேயப்பட்ட குடில் மேலானது.

3. தத் - தீர்த்தகதை: கதர்த்தனசதை: கிம் தைரநர்தாச்ரிதை: ஜ்யோதிஷ்டோ மமுகை: கிமீச விமுகைர்யக்ஞைரவ ஞாஹ்ருதை:
ஸூதே கேசவவாஸவாதி விபுதக் ராமாபிராமாம் ச்ரியம் கங்கே தேவி! பவத்தடே யதி குடீவாஸ: ப்ரயாஸம் வினா

பொருள் : ஹே கங்கையே! உனது கரையில் குடிலமைத்து வாழ்வது - விஷ்ணு, இந்திரன் போன்ற தேவர்களுக்கே வியப்பளிக்கும் விதமான செல்வத்தை (மனஅமைதி) அளிக்கும் எனில், எதற்காக உடலை வருத்திக் கொண்டு, பல தீர்த்த யாத்திரைகள் செய்ய வேண்டும்?
இறைநினைவின்றி (எந்திரம்போல) ஜ்யோதிஷ்டோமம் முதலிய யாகங்களை ஏன் செய்ய வேண்டும்?

4. கங்காதீரமுபேத்ய சீதலசிலாமாலம்ப்ய ஹைமா சலீம் யைராகர்ணி குதூஹலாகுலதயா கல்லோல கோலாஹல:
தே ச்ருண்வந்தி ஸூபர்வபர்வதசிலா ஸிம்ஹாஸனாத் யாஸின: ஸங்கீதாகம சுத்த ஸித்தரமணீ மஞ்ஜீர தீரத்வனீன்

பொருள் : கங்கைக்கரையை அடைந்து ஹிமாசலத்தின் குளிர்ந்த கற்பாறைகள் மீது அமர்ந்து, குதூகலத்துடன் (கங்கையின்) அலைகளின் கோலாகலமான ஒலியை யார் கேட்கிறார்களோ, அவர்கள் தேவபர்வதத்தின் (ஹிமாலயத்தின்) பாறைகளாகிய சிம்மாசனத்தில் (இந்திரன் போல) அமர்ந்து, தேவ மங்கையரின் சதங்கைகளின் ஓரங்களிலிருந்து உண்டாகும் சங்கீத (ஆகம) நூல்களின் கூற்றுப்படி அமைந்த (இனிய) ஒலியைக் கேட்கும் அனுபவம் பெறுகிறார்கள்.

அதாவது, இமயப்பாறைகள் சிம்மாசனத்திற்கும், கங்கை அலை ஓசை தேவமங்கையரின் காற்சதங்கை ஒலிக்கும் ஒப்பாகும். இமயமலைப் பாறைகளின் மீதமர்ந்து கங்கை அலையோசையைக் கேட்பது, இந்திரன் சிம்மாசனத்தில் அமர்ந்து தேவலோகத்து இசையைக் கேட்பதற்கு ஒப்பாகும்.

5. தூரம் கச்ச ஸகச்சபம் சபவதோ நாலோகயாமோ முகம் ரே வாராக பராக ஸாகமிதரைர்நாகப்ரதைர் கம்யதாம்.
ஸத்ய: ப்ரோத்யதமந்தமாருதரஜ ப்ராப்தா கபோலஸ்தலே கங்காம்ப: கணிகா விமுக்த கணிகா ஸங்காய ஸம்பாஷ்யதே

பொருள் : சொர்க்கத்தை அளிக்கும் ஹோமத்தின் தூய புகை வெகுதூரம் செல்லட்டும். அது நமக்கு வேண்டாம். பெண்ணாசை துறந்த மகான்களின் நட்பைப் பெறும் தகுதி - மந்தமாருதத்தால் உந்தப்பட்டு, தூசியுடன் கலந்து, எங்கள் கன்னங்களில் படும் புனித கங்கை நீரின் கணங்களாலேயே ஏற்பட்டு விடுகிறது என்றல்லவா (பெரியோர்களால்) கூறப்படுகிறது!

6. விஷ்ணோஸ் ஸங்க திகாரிணீ ஹரஜடா ஜூடாட வீசாரிணீ பிராயச்சித்த நிவாரணீ ஜலகணை: புண்யௌக விஸ்தாரிணீ
பூப்ருத்கந்தரதாரிணீ நிஜஜலே மஜ்ஜஞ்ஜனோத் தாரிணிச்ரேயஸ்ஸ்வர்க விஹாரிணீ விஜயதே கங்கா மனோஹாரிணீ

பொருள் : மஹாவிஷ்ணுவுடன் தொடர்பை ஏற்படுத்துபவளும், பரமேஸ்வரனின் அடர்ந்த காடாகிய ஜடையில் சஞ்சரிப்பவளும், இமயமலையின் குகைகளில் எப்போதும் இருப்பவளும், தன் நீரில் நீராடுபவர்களை வாழ்வில் முன்னேற்றுபவளும், செல்வம் மிக்க சொர்க்கத்தில் உலவுபவளும், மனதைக் கொள்ளை கொள்பவளுமான கங்காதேவி வெற்றியுடன் விளங்குகிறாள்.

7. வாசாலம் விகலம் கலம் ச்ரிதமலம் காமாகுலம் வ்யாகுலம் சாண்டாலம் தரலம் நிபீதகரலம் தோஷாவிலம்சாகிலம்
கும்பீபாகக தம் தமந்தககராதா க்ருஷ்ய கஸ்தாரயேத் மாதர்ஜஹ்னுமுனீந்த் ரநந்தினி தவ ஸ்வல்போத பிந்தும் வினா

பொருள் : ஜஹ்னு முனிவரின் மகளாகிய கங்கையே! அளவுக்கதிகமாகப் பேசுபவன், ஊனமுற்றவன், தீய எண்ணமுடையவன், கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுபவன், ஆசை வசப்பட்டவன், மிகுந்த கலக்கத்துடன் இருப்பவன், இழிபிறவி, சஞ்சலமானவன், விஷம் உண்டவன், எல்லாப் பாவங்களுடன் இருப்பவன், கும்பீபாகம் என்ற நரகத்தை அடைந்தவன் - அப்படிப்பட்டவனை எமனிடமிருந்து பிடித்திழுத்து, உன் சில நீர்த் துளிகளாலன்றி வேறு யார்தான் காப்பாற்ற முடியும்?

8. ச்லேஷ்மாஷ்லேஷணயாமலேஷ்ம்ருதபி லே காலாகுலே வ்யாகுலே கண்டேகர்கரகோ ஷநாத மலினே காயே ச ஸம்மீலதி
யாம் த்யான்னபி பாரபங்குரதரம் ப்ராப்நோதி முக்திம் நர: ஸ்நாதுஸ்சேதஸி ஜாஹ்னவீ நிவஸதாத் ஸம்ஸாரஸந்தாபஹ்ருத்

பொருள் : கபம் நிறைந்த நெஞ்சுக் குழியுடனும், மரண பயத்தால் கலங்கியவனும், இறக்கும் தருவாயில் தொண்டையிலிருந்து வரும் ஓசை உடலுடன் அடங்கும்போதும் கங்கையைத் தியானித்து முக்தியை அடைகிறவனும், கங்கையில் நீராடித் தன் மனதில் ஸம்ஸாரம் என்ற பெரும் தாபத்தைக் களைபவனுமாகியவர்களின் மனதில் ஜாஹ்னவி (கங்கை) வசிப்பாளாக!
ஆதி சங்கரர் அருளிய நிர்வாணாஷ்டகம்!

சிவ வழிபாட்டின் உன்னத நோக்கத்துக்கு, பயனுக்கு நம் வேதாந்திகளின் முதல்வர் - மதச் சீர்திருத்தம் செய்தவரும் ஷண்மத ஸ்தாபகருமான ஆதி சங்கரர் அருளிய நிர்வாணாஷ்டகம் என்னும் பாக்களே சிறந்த சான்று. ஆதிசங்கரர் அருளிய ஆனந்த நிலையின் ஆறு சுலோகங்கள் : (நிர்வாணாஷ்டகம்)

1. மனமும் நானல்ல; புத்தியும் நானல்ல;
நான் என்ற அகங்காரமும் நானல்ல;
அறிவும் சக்தியும் நானல்ல.
உடலின் அங்கங்களும் நானல்ல; ஆகாயம், பூமியும் நானல்ல;
ஜோதியும் நானல்ல; காற்றும் நான் அல்ல.
ஆனந்த மயமான சிவனே நான் - நானே சிவன்.

2. உச் சுவாச, நிச் சுவாச மூச்சினால் ஆனவன் அல்ல, நான்.
கப, பித்தம் முதலிய ஏழு தாதுக்களால் ஆனவனுமல்ல; பஞ்ச (ஐந்து) கோசத்தால் ஆனவனும் அல்ல.
வாக்க நான் அல்ல, கை கால்களும் நான் அல்ல.
ஆனந்த மயமான சிவனே நான் - நானே சிவன்.

3. துவேஷம் எனக்கில்லை; ராகமும் (அன்பும்) எனக்கு இல்லை. லோபமும் எனக்கில்லை; மோகமும் எனக்கில்லை.
மதமும் எனக்கில்லை, மாத்சர்யமும் (சினமும்) எனக்கில்லை, தர்மத்துக்கும் தொடிசு இல்லை, சம்பத்துக்கும் சம்பந்தமில்லை.
ஆனந்தமயமான சிவனே நான் - நானே சிவன்.

4. புண்ணிய பாவமும் எனக்கேது? ஓதுவது, தீர்த்தாடனம் எனக்கேது? வேதம், வேள்வி எனக்கேது? சுகம் ஏது? துக்கம் ஏது?
ஹவிஸ் நானல்ல; அனுபவிக்கிறவனும் நானல்ல; அனுபவிக்கப்படுபவனும் நானல்ல!
ஆனந்தமயமான சிவனே நான்; நானே சிவன்.

5. மிருத்யுவிடம் (மரணத்திடம்) எனக்குப் பயமில்லை. ஜாதி வித்தியாசம் எனக்கில்லை.
தகப்பனும் இல்லை; தாயும் இல்லை; பிறவியும் எனக்கில்லை;
பந்துவும் இல்லை; சினேகிதனும் எனக்கில்லை. ஆசானும் இல்லை; சிஷ்யனும் எனக்கில்லை. ஆனந்தமயமான சிவனே நான் - நானே சிவன்.

6. சஞ்சலம் இல்லாதவன்; உருவங்களால் கட்டுப்படாதவன்; இந்திரியங்கள் அனைத்தையும் ஜயித்தவன்; பற்றை அறவே துறந்தவன்; எனக்கு முக்தியே.

பந்தமோ விஷயமோ இல்லை. ஆனந்தமய சிவனே நான் - நானே சிவன். சொல்லும் அதன் பொருளும் போல் இணைபிரியாத ஜகத்துக்கே தாய் தந்தையராக விளங்கும் பார்வதி பரமேசுவரரை நான் வணங்குகிறேன். சொல்லும் அதன் பொருளும் நான் நன்றாக அறிவதற்கு அருள வேண்டும்.
அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில்

மூலவர் :திருநீரகத்தான்
உற்சவர்:ஜெகதீசப்பெருமாள்
அம்மன்/தாயார்:நிலமங்கை வல்லி
தீர்த்தம்:அக்ரூர தீர்த்தம்
பழமை:2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:திருநீரகம்
ஊர் :திருநீரகம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்: மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார்

நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்
நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண்துறை நீர் வெஃகாகவுள்ளாய்
உள்ளுவார் உள்ளத்தாய் உலகமேத்தும்
காரகத்தாய் கார்வானத் துள்ளாய் கள்வா
காமரு பூங்காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராதென் நெஞ்சினுள்ளாய்
பெருமானுன் திருவடியே பேணினேனே.
-திருமங்கையாழ்வார்

திருவிழா:வைகுண்ட ஏகாதசி

தல சிறப்பு:பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 48 வது திவ்ய தேசம். இத்தலத்தில் உள்ள உலகளந்த பெருமாள் வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது காண்பதற்கரிய சிறப்பாகும். இக்கோயிலின் எதிரில் உள்ள ஆஞ்சநேயர் சதுர்புஜத்துடன் கையில் சங்கு, சக்கரத்துடன் அருள்பாலிக்கிறார்.

திறக்கும் நேரம்:காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:அருள்மிகு உலகளந்த பெருமாள் கோயில், திருநீரகம், காஞ்சிபுரம் - 631 502. காஞ்சிபுரம் மாவட்டம்.போன்:+91- 94435 97107, 98943 88279

பொது தகவல்:இத்தல இறைவன் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் ஜெகதீஸ்வர விமானம் எனப்படும். இத்தல இறைவனை அக்ரூரர் தரிசனம் செய்துள்ளார்.

பிரார்த்தனை:ஆணவம் நீங்க வழிபாடு செய்யப்படுகிறது.

நேர்த்திக்கடன்:பிரார்த்தனை நிறைவேறியதும் இங்குள்ள பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.

தலபெருமை:பெருமாளின் 108 திருப்பதிகளுள் இது திருநீரகம் எனப்படும். இது உலகளந்த பெருமாள் கோயிலின் உள்ளேயே உள்ள திவ்ய தேசம் ஆகும். இந்த கோயிலின் உள்ளேயே திருஊரகம், திருக்காரகம், திருகார்வானம் என்ற மூன்று திவ்ய தேசங்கள் உள்ளது. அதாவது ஒரு கோயிலுக்குள்ளேயே 4 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளது. இதைப்போல் வேறு எங்கும் பார்க்க முடியாது. திருஊரகத்தை தவிர மற்ற மூன்றும் வேறு இடத்தில் இருந்ததாகவும் பிற்காலத்தில் ஒரே தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் கூறுவதுண்டு. ஊரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகிய நான்கு திவ்ய தேசத்து பெருமாளையும் சேர்த்து திருமங்கை ஆழ்வார் ஒரே பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார்.

தல வரலாறு:"நீரகத்தாய்' என்று பாடலில் முதற்சொல்லாகவே திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்த "திருநீரகம்' முன் காலத்தில் எங்கிருந்ததென இதுவரை யாருக்கும் தெரியவில்லை. உற்சவரே மூலவரின் இடத்திலிருந்து அருள்பாலிக்கிறார். பெருமாள் நீர்மைத் தன்மை கொண்டவன். நீரிடை மீனாக அவதாரம் செய்தவன். நீர் மேல் அமர்ந்து அதையே இருப்பிடமாக கொண்டவன். பிரளய காலத்தின் போது இந்த பூமி நீரால் சூழ, அதன் மீது ஆலிலை கண்ணனாக மிதப்பவன். எனவே பெருமாளை நீரகத்தான் என திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். ஆனால் இந்த தலம் எங்கிருந்தது என்று மட்டும் அவர் யாருக்கும் சொல்லவில்லை. திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்ய இங்கு எழுந்தருளிய போது இந்த மூன்று தலங்களும் "திருஊரகத்துடன்' வந்து விட்டதா?. அல்லது வெவ்வேறு இடங்களில் இந்த திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்தாரா? அல்லது எந்த காலச்சூழ்நிலையில் இந்த மூன்று திவ்ய தேசங்கள் இங்கு வந்தது என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.

சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. இத்தலத்தில் உள்ள உலகளந்த பெருமாள் வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது காண்பதற்கரிய சிறப்பாகும். இக்கோயிலின் எதிரில் உள்ள ஆஞ்சநேயர் சதுர்புஜத்துடன் கையில் சங்கு, சக்கரத்துடன் அருள்பாலிக்கிறார்.