2. மனையறம்படுத்த காதை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
உரைசால் சிறப்பின் அரைசுவிழை திருவின்
பரதர் மலிந்த பயம்கெழு மாநகர்
முழங்குகடல் ஞாலம் முழுவதும் வரினும்
வழங்கத் தவாஅ வளத்தது ஆகி
அரும்பொருள் தருஉம் விருந்தின் தேஎம் 5
ஒருங்குதொக் கன்ன உடைப்பெரும் பண்டம்
கலத்தினும் காலினும் தருவனர் ஈட்டக்
குலத்திற் குன்றாக் கொழுங்குடிச் செல்வர்
அத்தகு திருவின் அருந்தவம் முடித்தோர்
உத்தர குருவின் ஒப்பத் தோன்றிய 10
கயமலர்க் கண்ணியும் காதல் கொழுநனும்
மயன்விதித் தன்ன மணிக்கால் அமளிமிசை
நெடுநிலை மாடத்து இடைநிலத்து இருந்துழிக்
கழுநீர் ஆம்பல் முழுநெறிக் குவளை
அரும்புபொதி அவிழ்ந்த சுரும்புஇமிர் தாமரை 15
வயற்பூ வாசம் அளைஇ அயற்பூ
மேதகு தாழை விரியல்வெண் தோட்டுக்
கோதை மாதவி சண்பகப் பொதும்பர்த்
தாதுதேர்ந்து உண்டு மாதர்வாள் முகத்துப்
புரிகுழல் அளகத்துப் புகல்ஏக் கற்றுத் 20
திரிதரு சுரும்பொடு செவ்வி பார்த்து
மாலைத் தாமத்து மணிநிரைத்து வகுத்த
கோலச் சாளரக் குறுங்கண் நுழைந்து
வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்
கண்டு மகிழ்வுஎய்திக் காதலில் சிறந்து, 25
விரைமலர் வாளியொடு வேனில்வீற் றிருக்கும்
நிரைநிலை மாடத்து அரமியம் ஏறி,
சுரும்புஉணக் கிடந்த நறும்பூஞ் சேக்கைக்
கரும்பும் வல்லியும் பெருந்தோள் எழுதி
முதிர்க்கடல் ஞாலம் முழுவதும் விளக்கும் 30
கதிர்ஒருங் கிருந்த காட்சி போல,
வண்டுவாய் திறப்ப நெடுநிலா விரிந்த
வெண்தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு
கழுநீர்ப் பிணையல் முழுநெறி பிறழத்
தாரும் மாலையும் மயங்கிக் கையற்றுத் 35
தீராக் காதலின் திருமுகம் நோக்கிக்
கோவலன் கூறும்ஓர் குறியாக் கட்டுரை
குழவித் திங்கள் இமையவர் ஏத்த
அழகொடு முடித்த அருமைத்து ஆயினும்
உரிதின் நின்னோடு உடன்பிறப்பு உண்மையின் 40
பெரியோன் தருக திருநுதல் ஆகஎன,
அடையார் முனையகத்து அமர்மேம் படுநர்க்குப்
படைவழங் குவதுஓர் பண்புண்டு ஆகலின்
உருவி லாளன் ஒருபெருங் கருப்புவில்
இருகரும் புருவ மாக ஈக்க, 45
மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின்
தேவர் கோமான் தெய்வக் காவல்
படைநினக்கு அளிக்கஅதன் இடைநினக்கு இடையென,
அறுமுக ஒருவன்ஓர் பெறுமுறை இன்றியும்
இறுமுறை காணும் இயல்பினின் அன்றே 50
அம்சுடர் நெடுவேல் ஒன்றுநின் முகத்துச்
செங்கடை மழைக்கண் இரண்டா ஈத்தது?
மாஇரும் பீலி மணிநிற மஞ்ஞைநின்
சாயற்கு இடைந்து தண்கான் அடையவும்,
அன்னம் நல்நுதல் மெல்நடைக்கு அழிந்து 55
நல்நீர்ப் பண்ணை நனிமலர்ச் செறியவும்,
அளிய தாமே சிறுபசுங் கிளியே.
குழலும் யாழும் அமிழ்தும் குழைத்தநின்
மழலைக் கிளவிக்கு வருந்தின வாகியும்
மடநடை மாதுநின் மலர்க்கையின் நீங்காது 60
உடன்உறைவு மரீஇ ஒருவா ஆயின,
நறுமலர்க் கோதை.நின் நலம்பா ராட்டுநர்
மறுஇல் மங்கல அணியே அன்றியும்
பிறிதுஅணி அணியப் பெற்றதை எவன்கொல்?
பல்இருங் கூந்தல் சின்மலர் அன்றியும் 65
எல்அவிழ் மாலையொடு என்உற் றனர்கொல்?
நானம் நல்அகில் நறும்புகை அன்றியும்
மான்மதச் சாந்தொடு வந்ததை எவன்கொல்?
திருமுலைத் தடத்திடைத் தொய்யில் அன்றியும்
ஒருகாழ் முத்தமொடு உற்றதை எவன்கொல்? 70
திங்கள்முத்து அரும்பவும் சிறுகுஇடை வருந்தவும்
இங்குஇவை அணிந்தனர் என்உற் றனர்க்கொல்?
மாசறு பொன்னே. வலம்புரி முத்தே.
காசறு விரையே. கரும்பே. தேனே.
அரும்பெறல் பாவாய். ஆர்உயிர் மருந்தே. 75
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே.
மலையிடைப் பிறவா மணியே என்கோ?
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ?
யாழிடைப் பிறவா இசையே என்கோ?
தாழ்இருங் கூந்தல் தையால் நின்னைஎன்று 80
உலவாக் கட்டுரை பலபா ராட்டித்
தயங்குஇணர்க் கோதை தன்னொடு தருக்கி
மயங்குஇணர்த் தாரோன் மகிழ்ந்துசெல் வுழிநாள்,
வாரொலி கூந்தலைப் பேர்இயல் கிழத்தி
மறுப்புஅருங் கேண்மையொடு அறப்பரி சாரமும் 85
விருந்து புறந்தருஉம் பெருந்தண் வாழ்க்கையும்
வேறுபடு திருவின் வீறுபெறக் காண
உரிமைச் சுற்றமொடு ஒருதனி புணர்க்க
யாண்டுசில கழிந்தன இற்பெருங் கிழமையின்
காண்தகு சிறப்பின் கண்ணகி தனக்குஎன். 90
(வெண்பா)
தூமப் பணிகள்ஒன்றித் தோய்ந்தால் எனஒருவார்
காமர் மனைவியெனக் கைகலந்து - நாமம்
தொலையாத இன்பம்எலாம் துன்னினார் மண்மேல்
நிலையாமை கண்டவர்ப்போல் நின்று.
உரை
அஃதாவது - கண்ணகியும் கோவலனும் பலரறிமணம் புரிந்து கொண்ட பின்னர்க்
கோவலனுடைய தாய் அவ்விருவரையும் இல்லற வாழ்க்கையில் இனிது பயின்று
சிறத்தற்பொருட்டுத் தனித்ததோர் இல்லத்திற் குடிபுகுவித்து அந்நல்லறத்தில்
கால் கொள்வித்ததனைக் கூறும் பகுதி என்றவாறு.
1-4 : உரைசால்......வளத்ததாகி
(இதன்பொருள்) முழங்குகடல் ஞாலம் முழுவதும் வரினும் - ஆரவாரிக்கின்ற கடலாற்
சூழப்பட்ட இந் நிலவுலகத்தின்கண் வாழ்கின்ற மாந்தரெல்லாம் ஒருகால்
நல்குரவான் நலிந்து ஒரு சேரத் திரண்டு தன்னைப் புகலிடமாகக் கருதி
வந்துற்றாலும்; வழங்கத் தவாஅ வளத்ததாகி-அவர்கள் அனைவருக்கும் உண்டி முதலியன
வழங்கத் தொலையாத வளத்தையுடைய தாகலின்; உரைசால் சிறப்பின் - ஏனைய நாட்டில்
வாழ்வோரெல்லாம் புகழ்தற்கியன்ற தனிச் சிறப்பினையுடைய; அரைசு விழை திருவின்
பரதர் மலிந்த - வேந்தரும் விரும்புதற்குரிய செல்வத்தையுடைய
பெருங்குடிவாணிகர் மிக்குள்ள; பயம் கெழு மாநகர் - பயன்மிக்க பெரிய அப்
பூம்புகார் நகரின்கண் என்க.
(விளக்கம்) இது புகாரின் இயற்கை வளம்
கூறிற்று. அஃதாவது, தள்ளா விளையுட்டாதல். என்னை? ஆசிரியர்
திருவள்ளுவனார்தாம் நாட்டிலக்கணம் கூறுங்கால் இச்சிறப்பினையே முதன்மையாகக்
கொண்டு தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு
என்றோதுதலுணர்க. ஈண்டு அடிகளாரும் அவ்வாறே அச்சிறப்பையே முழங்குகடல் ஞாலம்
முழுவதும் வரினும் வழங்கத் தவாஅ வளம் என்றார். பரதர் என்றது, வாணிகரை,
வள்ளுவனார் தாழ்விலாச் செல்வர் என்றதும் வாணிகரையேயாம். இதனை ஆசிரியர்
பரிமேலழகர் இக்குறளின் விளக்கவுரைக்கண் செல்வர் - கலத்தினும் காலினும்
அரும் பொருள் தரும் வணிகர் என்று விளக்குதலாலறிக. மற்று அவர்தாமும் ஈண்டு
அடிகளார் (7) கலத்தினும் காலினும் தருவனர் ஈட்ட என்றோதிய அடியை நினைந்தே
அங்ஙனம் விளக்கினர் என்பதூஉம் வெளிப்படை.
இனி, அரைசு விழை
திருவின் மாநகர் என நகர்க்கே அடையாக்கில் பிற நாட்டு மன்னரெலாம்
விரும்புதற்குக் காரணமான மேழிச் செல்வத்தையுடைய நகர் எனினுமாம். என்னை?
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர் (குறள் -1034)
என வள்ளுவனாரும் ஓதுதலுணர்க.
உரை - புகழ். உலக முழுவதும் வரினும் வழங்கத்தவாத வளமுடைமையால் இந்நகர்க்கே
சிறந் துரிமையுடைய சிறப்பு இஃதென்பது தோன்ற ஏதுவைப் பின்னர் விதந்தோதினர்.
புகார் நகரம் அத்தகைய புகழமைந்த நகரமாதலை,
சம்புத் தீவினுள் தமிழக மருங்கில்
கம்ப மில்லாக் கழிபெருஞ் செல்வர்
ஆற்றா மாக்கட் காற்றுந் துணையாகி
நோற்றோர் உறைவதோர் நோனகர் உண்டால்
என விஞ்சையர் நகரத்துள்ளான் ஒருவன் புகழ்ந்தோதுதலானும் உணர்க. (மணிமே : 17 : 62-5.)
முழங்குகடல்.......வளத்ததாகி என்னும் இதனோடு, பொறை யொருங்கு மேல்வருங்கால் தாங்கி எனவரும் திருக்குறளையும் ஒப்புநோக்குக.
மாநகர், புகார் நகரம் என்பது அதிகாரத்தாற் பெற்றாம்.
5-7 : அரும்பொருள்.......ஈட்ட
(இதன்பொருள்) கலத்தினும் காலினும் தருவனர் ஈட்ட - அங்கு மிக்கிருந்த
வாணிகர்கள் கடலிடையிட்ட நாட்டினும் மலை காடு முதலியன இடையிட்ட நாட்டினும்
சென்று முறையே மரக்கலங்களானும் சகடங்களானும் கொணர்ந்து குவித்தலானே;
அரும்பொருள் தரும் விருந்தின் தேசம் ஒருங்கு தொக்கு அன்ன- ஈண்டுப்
பெறுதற்கரிய பொருளைத் தருகின்ற புதுமையுடைய அவ்வேற்று நாடெல்லாம் ஒருங்கே
வந்து கூடியிருந்தாற் போன்ற; உடைப் பெரும் பண்டம் - தம்முடையனவாகிய பெரிய
பொருள்களையுடையாரும் ஆகி என்க.
(விளக்கம்) இஃது அப்புகார் நகரத்து
வாணிகர் மாண்பு கூறுகின்றது. மேலே பரதர் மலிந்த மாநகர் என்றாராகலின்
அப்பரதர் இவ்வாறு ஈட்ட என்க. புகார் நகரத்து வாணிகருடைய அங்காடித் தெரு
விருந்தின் தேஎம் ஒருங்கு தொக்கிருந்தாற்போன்று தோன்றும் என்பது கருத்து.
எனவே எந்த, நாட்டிற்றோன்றும் அரும்பொருளும் அவ்வணிகர் பாலுள்ளன
என்றாராயிற்று. விருந்தின் தேஎம்-புதுமையுடைய வேற்று நாடு. கடலிடையிட்டுக்
கிடந்த நாட்டின் பொருளைக் கலத்தினும் இந்நாவலந் தீவகத்திலே காடு மலை
முதலியன இடையிட்டுக் கிடந்த வேற்று நாட்டுப் பொருளைக் காலினும் தருவனர்
ஈட்ட என்க. தருவனர்: முற்றெச்சம். ஈட்ட என்னும் செய்தெனெச்சம் பின்னர்க்
(அ) கொழுங்குடிச் செல்வர் என்பதற்குக் குறிப்பேதுவாய் நின்றது.
கலம்-மரக்கலம். கால் : ஆகுபெயர். சகடம் - (வண்டி) ஈட்டுதலானே கொழுங்குடி
ஆகிய செல்வர் என இயையும்.
இனி, அரும்பொருளாவன - நீரின் வந்த
நிமிர்பரிப் புரவியும், காலின் வந்த கருங்கறி மூடையும், வடமலைப் பிறந்த
மணியும் பொன்னும், குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும், தென்கடல் முத்தும்
குணகடற் றுகிரும், கங்கை வாரியும் காவிரிப் பயனும், ஈழத் துணவும் காழகத்
தாக்கமும், அரியவும் பெரியவும் என்பன. (பட்டினப் பாலை 185 - 162.)
8-11 : குலத்தின்...........கொழுநனும்
(இதன்பொருள்) குலத்தின் குன்றாக் கொழுங்குடிச் செல்வர்-தமது குலத்திற்கென
நூலோர் வகுத்த அறவொழுக்கத்தே ஒரு சிறிதும் குன்றுதலில்லாதவரும் கொழுவிய
குடியிற்பிறந்தோரும் ஆகிய, மாநாய்கனும் மாசாத்துவானும் ஆகிய
பெருநிதிக்கிழவர்க்கு நிரலே மகளும் மகனுமாக; அத்தகு திருவின் - அங்ஙனம்
அறத்தினால் ஈட்டிய நற்பொருளினாலே; அருந்தவம் முடித்தோர் - செயற்கரிய
தலைப்படு தானத்தைச் செய்த சான்றோர் சென்று பிறக்கும்; உத்தர குருவின்
ஒப்ப-அவர்தம் கொழுங்குடிகள் உத்தரகுருவென்னும் போக பூமியை ஒக்கும்படி;
தோன்றிய - தமது ஆகூழாலே பிறந்த; கயமலர்க் கண்ணியும் காதல் கொழுநனும்-பெரிய
செந்தாமரை மலர் போன்ற கண்களையுடைய கண்ணகியும் அவளால் காதலிக்கப்பட்ட
கணவனாகிய கோவலனும் என்க.
(விளக்கம்) குலம் - தமது குலத்திற்கு
நூலோர் வகுத்த ஒழுக்கம் என்க. அவையிற்றை, இருவகைப்பட்ட ஏனோர் பக்கமும்
எனவரும் தொல்காப்பியத்தானும் (புறத் -...........20) இதற்கு ஆசிரியர்
நச்சினார்க்கினியர் ஓதலும் வேட்டலும் ஈதலும் உழவும் நிரையோம்பலும்
வாணிகமுமாகிய அறுவகை இலக்கணத்தையுடைய வாணிகர் பக்கமும் என்றோதிய உரையானும்
உணர்க. இவற்றுள்ளும் அவர்க்கு வாணிக வாழ்க்கையே தலைசிறந்ததாம் என்பார்
ஆசிரியர் தொல்காப்பியனார் மரபியலில் வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை என்று
வரைந்தோதுதலும் அதற்குப் பேராசிரியர் வாணிகர்க்குத் தொழிலாகிய வாணிக
வாழ்க்கை உள்ளுறையாகச் செய்யுள் செய்தல் பெரும்பான்மையாம் என்று
விளக்கியதும் உணர்க. ஈண்டு அடிகளாரும் ஏனைய தொழிலை விடுத்து வாணிக
வாழ்க்கையையே விதந்தெடுத்தோதுதலும் உணர்க.
இனி, தங்குலத் தொழிலிற்
குன்றாமையாவது நெடுநுகத்துப் பகல் போல நடுவு நின்ற நன்னெஞ்சினோர், (ஆகி)
வடுவஞ்சி வாய்மொழிந்து, தமவும் பிறவும் ஒப்பநாடிக் கொள்வதூஉ மிகைகொளாது
கொடுப்பதூஉங் குறைகொடாது பல்பண்டம் பகர்ந்து வாழ்தல் என்க. இது
(பட்டினப்பாலை 206-22). ஆசிரியர் திருவள்ளுவனாரும், வாணிகர் அவ்வாறு
வாழ்தல் உலகிற்கு இன்றியமையாமை கருதி நடுவு நிலைமை என்னும் அதிகாரத்தில்
அவர்க்கென, வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோற் செயின்
(120) எனச் சிறப்பாக விதந்து அறங்கூறுதலும் உணர்க.
இனி, ஊழ்வினை
உருத்துவந்தூட்டும் என்னும் வாய்மையை அறிவுறுத்துதல் இக்காப்பியத்தின்
உள்ளுறையுள் ஒன்றாகலின் ஈண்டும் அடிகளார் கண்ணகியும் கோவலனும்
முற்பிறப்பிற் செய்த நல்வினை இவ்வாறு அவரைக் கொழுங்குடிச் செல்வர் மனைக்கண்
பிறப்பித்துத் தம் பயனாகிய பேரின்பத்தை இங்ஙனம் ஊட்டலாயிற்று எனக்
குறிப்பாக வுணர்த்துவார் அக்குறிப்பை உவமைக்கண் வைத்து அத்தகு திருவின்
அருந்தவம் முடித்தோர், உத்தரகுருவின் ஒப்பத்தோன்றிய, கயமலர்க் கண்ணியும்
காதற் கொழுநனும என நுண்ணிதின் ஓதுதல் நினைந்து மகிழற்பாலது. என்னை?
இக்காதைக்கண் அக்காதலர்களின் ஆகூழாகிய பழவினை அவர்க்கு
உருத்துவந்தூட்டுமாறிது வென்று கூறிக் காட்டுதலே ஆசிரியர் கருத்தென்றறிக.
நன்றாங்கால் நல்லவாக் காணுமாந்தர் அப்பொழுது அதற்குக் காரணமான நல்வினையை
நினைவதிலர். மற்று அவர்தாமே போகூழால் அன்றாங்காற் பெரிதும் அல்லற்பட்டு
அந்தோ வினையே என்றழுது வருந்துவர். நல்லூழ் வந்துருத்தூட்டும் பொழுது அதனை
நினைவோர் பின்னரும் நல்வினைக்கண் நாட்டமெய்துவர். தீயூழால் வருந்துவோரும்
அதனை நினையின் தீவினை யச்சமுடையராய்ப் பின்னர் அது செய்யாதுய்வாருமாவர்.
ஆகலான், அடிகளார் இருவகை வினையையும் நினைந்தே ஊழ்வினை உருத்துவந் தூட்டும்
எனப் பொதுவாக ஓதினர். புகார்க்காண்டத்தே கயமலர்க்கண்ணிக்கும் காதற்
கொழுநனுக்கும் நல்வினையாகிய ஊழ்வினை உருத்துவந்தூட்டுவதனை இக்காதையிற்
குறிப்பாக ஓதுகின்றார். மதுரைக் காண்டத்தே தீவினையாகிய ஊழ்வினை
உருத்துவந்தூட்டுதலை யாவரும் உணர ஓதுவர். ஆசிரியர் திருவள்ளுவனார் தாமும்
மாந்தர்க்கமைந்த இப்பேதைமையை நினைந்தன்றோ?
நன்றாங்கா னல்லவாக் காண்பவ ரன்றாங்கால்
அல்லற் படுவ தெவன் (குறள்-376)
என்று வினவுவாராயினர் என்க.
இனி, உத்தரகுருவின் ஒப்ப-என்புழி உத்தரகுருவாகிய உவமைக்கு (2) மாநகர்
என்பதனைப் பொருளாகக் கொண்டனர் அடியார்க்கு நல்லார். யாம் கொழுங்குடிச்
செல்வர் என அடிகளார் பாட்டிடை வைத்த குறிப்பினால் அச்செல்வருடைய கொழுங்குடி
உத்தரகுருவினை ஒப்ப என்று உரை கூறினாம். இவற்றுள் நல்லது ஆராய்ந்து கொள்க.
அத்தகு திருவின் தவம் என்ற குறிப்பினால் தவம் என்பது தானத்தைக் குறித்து
நின்றது. என்னை? திருவினாற் செய்யும் தவம் அதுவேயாகலின் ஏனைத்தவம்
திருவினைத் துறந்து செய்யப்படும். தானம் செய்யும் பொருளும் அறத்தாற்றின்
ஈட்டிய பொருளாதல் வேண்டும் என்பது போதர அத்தகு திருவின் என்றார். அருந்தவம்
என்றார் அத்தானந்தானும் என்பது தோன்ற; இனி அத்தானத்தின் அருமையை,
அறத்தி னாற்றிய வரும்பெரும் பொருளைப்
புறத்துறைக் குற்றமூன் றறுத்தநற் றவர்க்குக்
கொள்கெனப் பணிந்து குறையிரந் தவர்வயின்
உள்ளமுவந் தீவ துத்தம தானம்
எனவரும் திவாகரத்தா னறிக.
இனி உத்தரகுரு வென்பது ஈண்டுச் செய் நல்வினையின் பயனை நுகர்தற்குரிய
மேனிலையுலகம். போகபூமி என்பதுமது. இஃது அறு வகைப்படும் என்ப. அவையிற்றை,
ஆதியரி வஞ்சம் நல்லரி வஞ்சம்
ஏம வஞ்சம் இரண வஞ்சம்
தேவ குருவம் உத்தர குருவமெனப்
போக பூமி அறுவகைப் படுமே (திவாகரம்-12)
என்பதனா னறிக. இனி, இவற்றின்கட் பிறந்து போகநுகர்தலை,
பதினா றாட்டைக் குமரனும் சிறந்த
பன்னீ ராட்டைக் குமரியு மாகி
ஒத்த மரபினு மொத்த வன்பினும்
கற்பக நன்மரம் நற்பய னுதவ
ஆகிய செய்தவத் தளவு மவ்வழிப்
போக நுகர்வது போக பூமி (பிங்கலம் 12)
என்பதனானறிக.
ஈண்டுக் கண்ணகிக்கும் கோவலனுக்கும் முன்னைச் செய்தவத்தினளவே ஈண்டும்
போகநுகர்ச்சி நின்று பின்னர் இல்லையாதலைக் கருதியே அடிகளார் அதனை
உவமையெடுத்தோதினர் என்றுணர்க.
கயமலர் என்புழிக் கய வென்பது
பெருமைப் பொருட்டாகிய உரிச்சொல். கோவலன் காதல் இழுக்குடைத்தாதல்
கருதிப்போலும் கண்ணியும் அவளாற் காதலிக்கப்படும் கொழுநனும் என்பதுபடக்
காதற்கொழுநனும் என்றார். இக்கருத்தாலன்றோ மங்கலவாழ்த்துப் பாடலின்கண்
பெருங்குணத்துக் காதலாள் எனக் கண்ணகியைக் கூறிக் கோவலனைப் பிறமகளிர்
காதலாற் கொண்டேத்தும் கிழமையான் என்று கூறி யொழிந்ததூஉம் என்க.
இனி, (12) மயன் என்பது தொடங்கி (37) குறியாக் கட்டுரை என்பதுமுடியக் கண்ணகியும் கோவலனும் போகம் நுகர்ந்தமை கூறும்.
(தென்றல் வரவு)
12 - 25 : மயன்...........சிறந்து
(இதன்பொருள்) நெடுநிலை மாடத்து இடை நிலத்து - எழுநிலை மாடத்து
மாளிகையின்கண் இடையிலமைந்த நான்காம் மாடத்தின்கண்; மயன் விதித்தன்ன
மணிக்கால் அமளிமிசை - மயன் என்னும் தெய்வத்தச்சன் தன் மனத்தாற்
படைத்துவைத்தாற் போன்ற மணியாலியன்ற கால்களையுடைய சிறந்த கட்டிலின்கண்
இருந்தவளவிலே; கழுநீர் ஆம்பல் முழுநெறிக் குவளை - கழுநீரும் இதழொடியாத
முழுப்பூவாகிய செங்கழு நீரும்; அரும்பு பொதி அவிழ்ந்த சுரும்பு இமிர் தாமரை
- நாளரும்புகள் கட்டவிழ்ந்து மலர்ந்தமையானே வண்டுகள் வந்து முரலாநின்ற
தாமரைமலரும் ஆகிய; வயல்பூ வாசம் அளைஇ - மருதப் பரப்பிற் கழனிகளிலுள்ள
நீர்ப் பூக்களின் நறுமணத்தைக் கலந்துண்டு, அயல்பூ-அவற்றின் வேறாகிய
கோட்டுப்பூ முதலியவற்றுள், மேதகு தாழை விரியல் வெள் தோட்டு - மணத்தால்
மேன்மை தக்கிருக்கின்ற தாழையின் மலர்ந்த வெள்ளிய மடலிடத்தும்; சண்பகப்
பொதும்பர் -சண்பகப்பூம் பொழிலினூடே படர்ந்துள்ள; கோதை மாதவி தேர்ந்து தாது
உண்டு - மாலைபோல மலருகின்ற குருக்கத்தி மலரினிடத்தும் ஆராய்ந்து அவற்றின்
பாலுள்ள தேனைப் பருகிப் போந்து; வாள் முகத்து மாதர் புரிகுழல் அளகத்துப்
புகல் ஏக்கற்று - ஒளியுடைய முகத்தையுடைய இளமகளிரினது கை செய்த
குழற்சியையுடைய கூந்தலின்கணுண்டாகிய கலவை மணம் பெறவிரும்பி அவர்தம்
பள்ளியறைக்கண் புகுதற்கு வழி காணாமல் ஏக்கறவு கொண்டு; செவ்வி பார்த்துத்
திரிதரு சுரும்பொடு வண்டொடு - அம்மகளிர் சாளரந்திறக்கும் பொழுதினை
எதிர்பார்த்துச் சுழன்று திரிகின்ற பெடை வண்டோடும்; மாலைத் தாமத்து மணி
நிரைத்து வகுத்த கோலச் சாளரக் குறுங்கண் நுழைந்து-முத்து முதலிய மணிமாலைகளை
நிரல்பட நாற்றி இயற்றிய அழகையுடைய சாளரங்களை அம்மகளிர் திறத்தலாலே செவ்வி
பெற்று அச்சாளரங்களின் குறிய புழையாலே நுழைந்து புகுந்த; மணவாய்த் தென்றல் -
இயல்பாகத் தனக்குரிய ஊற்றின்பத்தோடே நறு நாற்றவின்பமும் உடைத்தாகிய
தென்றலின் வரவினை; கண்டு-உணர்ந்து; மகிழ்வு எய்திக் காதலில் சிறந்த -
அவ்வுணர்ச்சியாலே மகிழ்ந்து பின்னரும் அவ்வுணர்ச்சி காரணமாக இருவருக்கும்
காமவுணர்ச்சி பெருகுதலானே இருவரும் ஒருபடித்தாக மெய்யுறு புணர்ச்சியை
விரும்பி, என்க.
(விளக்கம்) ஆம்பல் எனப் பொதுப்பெயராற் கூறினும்
ஈண்டுச் சேதாம்பல் என்று கொள்க வென்றும், இஃது அவற்றோடு ஒருதன் மைத்தாகிய
பகற்போதன் றெனினும் அவை விரியுங்காலத்து இது குவிதலின்மையிற் கலந்துண்டு
என்றார் என்பர் அடியார்க்குநல்லார். முழுநெறி-இதழொடியாத முழுப்பூ. ஈண்டுக்
குவளை - செங்கழுநீர் மலர். தீநீர்ப் பெருங்குண்டு சுனைப்பூத்த குவளைக்
கூம்புவிடு முழுநெறி எனப் புறப்பாட்டினும் (123) வருதலறிக. கோதைபோல மலரும்
மாதவி என்க. ஈண்டுக் கண்ணகிக்கு உத்தரகுருவின் ஒப்பப் பேரின்பம் நல்கும்
ஆகூழாகிய நல்வினையின் சிறுமையினையும் அவட்குப் போகூழ் அணித்தாகவே
வரவிருத்தலையும் அதுதானும் கோதைமாதவியாக உருத்துவந்திருத்தலையும்
நினைந்துபோலும் அடிகளார் இக்காதையிலேயே அவள் பெயரைப் பரியாய வகையில் கோதை
மாதவி என்று ஓதினர் போலும். இக்கூற்றுக் கண்ணகிக்கு ஒரு தீநிமித்தம்.
இவ்வாறு சொல்லிலேயே தீநிமித்தத்தைத் தோற்றுவிப்பது மாபெரும் புலவர் கட்
கியல்பு. என்னை? கம்பநாடர் தமது இராமகாதைக்கண் இராமனுக்குத் திருமுடி
சூட்டக் கணிகமாக்கள்பால் நன்னாள் வினவும் தயரதன் மைந்தற்கு முடிபுனை கடிகை
நாள் மொழிமின் என்று வினவினன் என அவன் கூற்றையே முடிபுனைதலைக் கடிதலையுடைய
நாள் எனவும் தீந்பொருளமையச் செய்யுள் யாத்துள்ளமையும் காண்க.
சுரும்பொடு வண்டொடு என இயைத்து எண்ணும்மை விரித்தோதுக. சுரும்பொடும்
வண்டொடும் வயற்பூவாசம் அளைஇ உண்டு அயற்பூவாகிய தோட்டினும் மாதவியினும்
தேர்ந்துண்டு செவ்வி பார்த்துக் குறுங்கண் நுழைந்துபுக்க மணவாய்த் தென்றல்
கண்டு சிறந்து என்க. இனி வாசம் அளைஇ, தாது தேர்ந்துண்டு திரிதரும்
சுரும்பொடும் வண்டொடும் புக்க தென்றல் எனினுமாம். புக்கமணவாய்த் தென்றல்
என்றது தனக்கியல்பான ஊற்றின்பத்தோடு பூ அளைஇச் செயற்கையானமைந்த மணத்தையும்
உடைய தென்றல் என்பது தோன்ற நின்றது. இத்தகைய தென்றல் அவர்தம் காமவேட்கையை
மிகுவித்தலின் அதனைக் கண்டமையை ஏதுவாக்ககினார். ஈண்டுக் கண்டென்றது
உணர்ந்து என்றவாறு. என்னை? தென்றல் மெய்க்கும் மணமுடைமையால் மூக்கிற்கும்
புலனாதலன்றிக் கட்புலனுக்குப் புலனாகாமையின் என்க. காதல் ஈண்டுக்
காமத்திற்கு ஆகுபெயர். ஆகவே, காமஞ்சிறந்து என்றவாறு. மணவாய்த் தென்றல்
என்புழி இரண்டாவதன் உருபும் பயனும் உடன்தொக்கன. வாய் - இடம். மணத்தைத்
தன்னிடத்தேயுடைய தென்றல் என்க.
இவை சண்பகத்தோடு மலர்தலின்
தேர்ந்துண்டென்றார் என வரும் அடியார்க்குநல்லார் உரை நுணுக்கமுடைத்து.
என்னை? சண்பகம் வண்டுணாமலர் ஆகலின் தேர்ந்துண்ணல் வேண்டிற்று என்பது அவர்
கருத்தென்க.
இன்ப நுகர்வு
26-27: விரைமலர்.............ஏறி
(இதன் பொருள்) வேனில் விரை மலர் வாளியொடு வீற்றிருக்கும் நிரை நிலை
மாடத்து அரமியம் ஏறி - அவ்வாறு தென்றல் வரவினால் காமப் பண்பு பெருகப் பெற்ற
அக்கண்ணகியும் கோவலனும் உள்ளமொன்றி வாய்ச்சொல்லொன்றுமின்றியே அவ்விடை நிலை
மாடத்தினின்றும் மேலே நிரல்பட்ட மாடங்கள் வழியாக அம்மாளிகையின்
உச்சியிலமைந்ததூஉம் அவ்விடத்தே வந்தெய்துகின்ற காதலரைக் காமுறுத்தற்
பொருட்டு வேனில் வேந்தனாகிய காமவேள் எப்பொழுதும் தனது படைக்கலமாகிய கருப்பு
வில்லினது, நாணிற்றொடுத்த மணமுடைய மலராகிய அம்புகளோடும் அவர் தம் வரவினை
எதிர்பார்த்திருத்தற் கிடனானதுமான நிலாமுற்றத்தின்மேல் ஏறி என்க.
(விளக்கம்) (25) சிறந்து............(27) அரமியத்தேறி என்றார் அவர் தாம்
ஒருவரை ஒருவர் அழையாமலே தம்முணர்ச்சி யொன்றினமை காரணமாகத்
தாமிருந்தவிடத்தினின்றும் வாய்வாளாதே சென்றமை தோன்ற. என்னை? இத்தகைய
செவ்வியிலே வாய்ச்சொற்கள் என்ன பயனும் இலவாகலின் என்க.
வேனில்:
ஆகுபெயர்; காமவேள். இனி, போர் செய்யப்புகுவோர் காலமும் இடனும் வாலிதின்
அறிந்து காலங்கருதி இருப்பராதலின் ஈண்டு வேனிலரசன் தனது போர்த்தொழிலைத்
தொடங்குதற்கு ஏற்ற இடமாக அவ்வரமியத்தைத் தேர்ந்து படைக்கலன்களோடு தனது
ஆணைக்கடங்காத இளைஞராகிய பகைவர் வருகையை எதிர்பார்த்திருந்தான் என்றார்.
இஃதென் சொல்லியவாறோவெனின் அந்நிலா முற்றத்தின்கட் செல்வோர் யாவரேயாயினும்
காமமயக்க மெய்துவர். அத்தகைய சீர்த்த இடம் அந்நிலாமுற்றம் என்றவாறு.
விரைமலர் வாளி-மணமுடைய மலர்க்கணை. இனி விரைந்துபாயும் மலர்க்கண் எனினுமாம்.
இனி, அடியார்க்குநல்லார், பகையின்றிக் கல்வியொடு செல்வத்திடை நஞ்சுற்ற
காமம் நுகர்ந்திருத்தலின் வாளியும் காமனும் வருந்தாதிருந்தமை தோன்ற
வீற்றிருக்கு மென்றார் என்னும் விளக்கம் நூலாசிரியர் கருத்திற்கு முரணாம்
என்க. மேலும் வாளியும் காமனும் வருந்தாதிருப்பின் அவ்விருக்கை இக்காதலர்
புணர்ச்சிக்கே இழிவாம் என்க.
தகுந்த இடத்தின்கண் படைவலியோடும்
துணைவலியோடும் (தென்றல் வரவு) இளைஞரை எய்துவென்று தன் ஆணைவழி நிற்பித்தற்கு
அவர் வரவை எதிர்பார்த்து வேனின்வேள் நெடிதிருக்கும் மாடம் என்பதே அடிகளார்
கருத்தாம் என்க.
இதுவுமது
28-32 சுரும்புண .......... காட்சிபோல
(இதன் பொருள்) சுரும்பு உணக் கிடந்த நறும் பூஞ் சேக்கை வண்டுகள் உழன்று
திரியாமல் ஓரிடத்திலேயே தாம் தாம் விரும்பும் தேனை நுகர்ந்து மகிழ்தற்
பொருட்டுப் பரப்பி வைத்தாற்போன்று கிடந்த நறிய மணமலரானியன்ற
படுக்கையின்கண்; முதிர்கடல் ஞாலம் முழுவதும் விளக்கும் கதிர் ஒருங்கு
இருந்த காட்சிபோல முற்றிய கடலையும் நிலவுலகத்தையும் எஞ்சாமல்
உயிரினங்கட்குத் தமது ஒளியாலே விளக்குகின்ற திங்களும் ஞாயிறுமாகிய
ஒளிமண்டில மிரண்டும் ஒரு காலத்தே ஓரிடத்தே வந்து கூடியிருந்தாற் போல
வீற்றிருந்துழி; பெருந்தோள் கரும்பும் வல்லியும் எழுதி - கோவலன் கண்ணகியின்
பெரிய தோளின் கண்ணே சந்தனக் குழம்பு கொண்டு கரும்பினது உருவத்தையும்
பூங்கொடியின் உருவத்தையும் அழகுற எழுதி முடித்த பின்னர் என்க.
(விளக்கம்) மலர்களின் செவ்வி கூறுதற்பொருட்டு அடிகளார் சுரும்புணக்கிடந்த
நறும்பூஞ் சேக்கை என்றார். இங்ஙனம் கூறியதனால் மலரின் பன்மையும் மிகுதியுந்
தோன்றுதலும் உணர்க. கதிர்-திங்களும் ஞாயிறும்; இஃதில் பொருளுவமம். போல
வீற்றிருந்துழி எனவும் கோவலன் கண்ணகியின் தோளில் எழுதி முடித்தபின்னர்
எனவும் அவாய் நிலையானும் தகுதியானும் ஆங்காங்குச் சில சொற்களைப்
பெய்துரைக்க. இவ்வாறு பெய்துரைக்கப்படுவன எஞ்சு பொருட் கிளவிகளாம். அவை
சொல்லெச்சமும் குறிப்பெச்சமும் இவையெச்சமும் என மூவகைப்படும். பிறாண்டும்
இவ்வெச்சக் கிளவிகளாக ஆங்காங்கு உரையின்கட் பெய்துரைக்கப் படுவனவற்றிற்கும்
இவ்விளக்கமே கொள்க.
இனி, கயமலர்க்கண்ணியும் காதற்கொழுநனும்
தென்றல் கண்டு காதல் சிறந்து நிரை நிலைமாடத் தரமிய மேறிப் பூஞ்சேக்கைக்கண்
இருந்துழியும் கண்ணகியின் காமம் நாணம் என்னும் தனது பெண்மை தட்பத்
தடையுண்டு நிற்றலான் அந்நாணுத்தாள் வீழ்த்த அவளது அகக்கதவைத் திறத்தல்
வேண்டி ஈண்டுக் கோவலன் அவளுடைய பெருந்தோளில் கரும்பும் வல்லியும் எழுதுதல்
வேண்டிற்று. இத்தகைய புறத்தொழில்களாலே மகளிரின் காமவேட்கையை ஆடவர் தமது
வேட்கையளவிற்கு உயர்த்திய பின்னரே புணர்ச்சி பேரின்பம் பயப்பதாம்.
இதனாலன்றோ ஆசிரியர் திருவள்ளுவனார் தாமும்,
மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார் (குறள் - 1289)
என, தலைவனைக் கூறவைத்தனர். ஈண்டுக் கோவலன் மலரினும் மெல்லிய அக்காமத்தின்
செவ்வி தலைப்படுதற்கே கண்ணகியின் பெருந்தோளில் கரும்பும் வல்லியும்
எழுதினான் என்க. ஈண்டு அடியார்க்கு நல்லார் கரும்பையும் வல்லியையும் தோளில்
எழுதி யெனவே தொய்யி லொன்றையும் முலைமேலெழுதி என்பதாயிற்று என வகுத்த
விளக்கம் பெரிதும் நுணுக்கமுடைத் தென்க. கடலையும் ஞாலத்தையும் விளக்கும்
கதிர் என்க.
இதுவுமது
32-37: வண்டுவாய் ......... கட்டுரை
(இதன் பொருள்) வண்டு வாய் திறப்ப நெடுநிலா விரிந்த வெள் தோட்டு மல்லிகை
விரியல் மாலையொடு முழுநெறி கழுநீர் பிணையல் பிறழ-வண்டுகள் புரிநெகிழ்க்க
வாய் அவிழ்ந்த மல்லிகையினது பெரிய மலர்ச்சியையுடைய மாலையோடே இதழொடியாது
முழுப் பூவாக இவ்விரண்டாகப் பிணைத்த செங்கழுநீர் மலர்மாலையும் குலைந்
தலையாநிற்ப; தாரும் மாலையும் மயங்கிக் கையற்று - கோவலன் மார்பிலணிந்த
தாரும் கண்ணகி மார்பிலணிந்த மலர் மாலையும் தம்முள் மயங்கப்பட்டு இருவரும்
பேரின்பத்தாலே விழுங்கப்பட்டுச் செயலற்ற புணர்ச்சியிறுதிக் கண்ணே; கோவலன்
தீராக் காதலின் திருமுகம் நோக்கி - கோவலன் தனது ஆராவன்பு காரணமாகத்
திருமகளைப் போல்வாளாகிய கண்ணகியின் முகத்தை நோக்கி; ஓர் குறியாக் கட்டுரை
கூறும் - அந் நங்கையின் பெருந்தகைமையைக் கருதாத நலம் பாராட்டல் என்னும்
பொருள் பொதிந்த உரையைக் கூறினான் என்க.
(விளக்கம்) மல்லிகைமாலை
கண்ணகியணிந்த அழகுமாலை என்றும், செங்கழுநீர்ப் பிணையல் கோவலன் அணிந்திருந்த
அடையாளப் பூமாலை என்றும் கொள்க. என்னை? இவற்றையே பின்னர்த் தாரும்
மாலையும் என்று பெயர் கூறியதனாற் பெற்றாம். என்னை? ஆசிரியர் தொல்
காப்பியனாரும் மரபியலின்கண், தார் என்னும் அடையாளப்பூ அரசர்க்குரித்தென்று
கூறிப்பின்னர் வாணிகர்க்கும் கண்ணியும் தாரும் எண்ணினர் ஆண்டே என்றோதுதல்
உணர்க. ஈண்டுக் கழுநீர்ப்பிணையல் வாணிகர்க்குரிய அடையாளப் பூமாலை என்பது
அதனைத் தார் என்றதனாற் பெற்றாம்.
இனி, காப்பியத்தின்கண்
இன்பவொழுக்கமாகிய அகப்பொருள் சுட்டித் தலைமக்களின் பெயர் கூறப்படுதலான்,
அகப்புறம் என்று கொள்ளப்படும். அகப்புறமாயினும் அகவொழுக்கத்திற்குரிய
மெய்ப்பாடுகள் ஈண்டும் ஏற்றபெற்றி கொள்ளப்படும். ஆசிரியர் தொல்காப்பியனார்
சிறப்பு நோக்கிக் களவொழுக்கத்திற்கே யுரியன போலக் கூறிய கூழைவிரித்தல்
முதலிய மெய்ப்பாடு கற்பொழுக்கத்தினும் கூட்டந் தோறும் மெல்லியல் மகளிர்பால்
காணப்படும். அதனாலன்றோ ஒரு குலமகள் பரத்தையர்க்கு நாணின்மை கண்டு
வியப்பவள் பன்னாளும் எங்கணவர் எந்தோண்மேற் படிந்தெழினும் அஞ்ஞான்று கண்டாற்
போல் நாணுதும்; இவர்க்கு அத்தகைய நாணம் என்னும் பெண்மை நலம் இல்லா
தொழிந்தது என்னையோ? என்று வியப்பாளாயினள் (நாலடி, காமத்துப்பால்). ஈண்டும்
கண்ணகியார் தென்றல்கண்டு மகிழ்ச்சியாற் காதல் சிறந்து இடைநிலைமாடத்திருந்து
தன் காதற் கொழுநனொடு வாய்வாளாது அம்மாடத்தின் உச்சியிலமைந்த நிலா
முற்றத்திற்கேறி அவனோடு நறும்பூஞ் சேக்கைக்கண் வீற்றிருந்தது புகுமுகம்
செய்தல் என்னும் மெய்ப்பாடாம் என்று நுண்ணிதின் உணர்ந்துகொள்க. அஃதாவது
புணர்ச்சிக்கு நிமித்தமாகிய மெய்ப்பாடாம். புகுமுகம் செய்தலாவது புணர்ச்சி
வேட்கையுற்ற மகளிர் தம்மைத் தங்கணவர் நோக்குமாற்றால் இயைந்தொழுகுதல்.
அவ்வாறு இயைந்தொழுகினும் உட்கும் நாணும் அவர்க்கியல்பாகலின் அவன் விரும்பி
நோக்கியவழி அவர்க்கு நுதல் வியர்க்கும். அவ்வழி தாம் புணர்ச்சி வேட்கை
யுடையராதலை மறைக்கவே முயல்வர். இதனை நகுநயமறைத்தல் என்னும் மெய்ப்பாடு
என்ப. இதன் பின்னரும் வேட்கையுற்ற உள்ளம் சிதையுமாகலின் அச்சிதைவு
கணவனுக்குப் புலப்படாமல் மறைத்தலும் அவர்க்கியல்பு. இதனைச் சிதைவு
பிறர்க்கின்மை என்னும் மெய்ப்பாடென்ப. அங்ஙனம் மறைத்துழி அகத்திலே வேட்கை
பெருகி அதனால் கூழை விரித்தல் காதொன்று களைதல் ஊழணி தைவரல்
உடைபெயர்த்துடுத்தல் அல்குல் தைவரல் அணிந்தவை திருத்தல் என்னும்
மெய்ப்பாடுகள் அவ்வேட்கை பெருகுந்தோறும் ஒன்றன்பின் ஒன்றாக நிழலா நிற்கும்.
ஆயினும் இவை தோன்றிய பின்னரும் அவர்க்கு இயல்பாகிய நாணம் அவ்வேட்கையைத்
தடைசெய்தே நிற்கும்; ஆதலால், அச் செவ்வியினும் மகளிர் புணர்ச்சியை
வேண்டாதார் போல்வதொரு வன்மை படைத்துக்கொண்டு தம் வேட்கையை மறைக்கவே
முயல்வர். இதனை இல்வலியுறுத்தல் என்னும் மெய்ப்பாடென்ப. இத்தகைய
மெய்ப்பாட்டோடு நறும்பூஞ் சேக்கைக்கண் தன்னொடு வீற்றிருந்த கண்ணகியாரின்
நாணநீக்கி அவரது காமவேட்கையைத் தனது வேட்கைக்குச் சமமாகக் கொணர்தற்
பொருட்டே ஈண்டுக் கோவலன் சந்தனக் குழம்பு கொண்டு அவரது பெருந்தோளிற்
கரும்பும் வல்லியும் எழுதினான் என்க.
இனி, இவ்வாற்றால்
கண்ணகியாரின் காமப்பண்பு முழுச்செவ்வி பெற்றமையை அடிகளார் கண்ணகியார்பால்
வைத்துக் கூறாமல் அவர் அணிந்திருந்த மல்லிகை மலர்மாலையின் மேல்வைத்துக்
குறிப்பாகக் கூறும் வித்தகப்புலமை வேறெந்தக் காப்பியத்தினும் காணப்படாத
அருமையுடைத்தென் றுணர்க. என்னை? இல்வலியுறுத்தல் என்னும்
மெய்ப்பாடெய்தியிருந்த கண்ணகியாரின் திருமேனியைத் தீண்டிக் கோவலன்
கரும்பும் வல்லியும் எழுதிய அளவிலே அதுகாறும் அவரது காமவேட்கையைத்
தளைத்திருந்த நாணமாகிய தளையவிழவே அவரது காமவேட்கை தடை சிறிதும் இன்றி
மலர்ச்சியுற்றுத் திகழ்ந்ததனையே அடிகளார் வண்டுவாய் திறப்ப நெடுநிலா
விரிந்த வெண்டோட்டு மல்லிகை வீரியன் மாலையொடு என எட்டுச் சீர்களைக்கொண்ட
இரண்டு அடிகளாலே கண்ணகியார் அணிந்திருந்த மாலையை வண்ணிப்பாராயினர். இதன்கண்
வண்டுவாய்திறப்ப என்றது கோவலன் கரும்பும் வல்லியும் எழுதுமாற்றால் அவரது
நாணத்தை அகற்றியது என்றும்; நெடுநிலா விரிந்த வெண்டோட்டு மல்லிகை என்றது
இச்செய்முறையானே அவரது காமவேட்கை பெருக அவர்பால் இருகையும் எடுத்தல்
என்னும் மெய்ப்பாடு தோன்றியதனை. அஃதாவது அங்ஙனம் படைத்துக் கொண்ட வலியானும்
தடுக்கப்படாது வேட்கை மிகுதியால் நிறை யழிதலின் கைகள் தாமே முயங்கல்
விருப்பத்தான் எழுவன போல்வதொரு குறிப்பு. இக்குறிப்பே அவர்தம் மலரினும்
மெல்லிய காமம் செவ்வி பெற்றமைக்கு அறிகுறியாம் என்க. இம்மெய்ப்பாடு
தோன்றுங் கால் மெல்லியதொரு புன்முறுவலாகவே வெளிப்படும்; இதனையே நெடுநிலா
விரிந்த வெண்தோடு என்றார். காமச் செவ்வி தலைப்பட்ட தலைவன் கூற்றாக
வருகின்ற,
அசையியற் குண்டாண்டோர் ஏவர் யானோக்கப்
பசையினன் பைய நகும் ( குறள் 1068)
என்னும் திருக்குறளானும் இதனை உணர்க. இனி, புணர்ச்சி நிமித்தமாக இம்மெய்ப்பாடுகள் தோன்று மென்பதனை,
ஓதியு நுதலு நீவி யான்றன்
மாதர் மென்முலை வருடலிற் கலங்கி
யுள்ளத் துகுநள் போல வல்குலின்
ஞெகிழ்நூற் கலிங்கமொடு புகுமிட னறியாது
மெலிந்தில ளாகி வலிந்துபொய்த் தொடுங்கவும்
யாமெடுத் தணைத்தொறுந் தாமியைந் தெழுதலின்
இம்மை யுலகத் தன்றியு நம்மை
நீளரி நெடுங்கட் பேதையொடு
கேளறிந் தனகொலிவள் வேய்மென் றோளே
எனவரும் பழம்பாடலான் (தொல்-மெய்ப்-15-உரைமேற்.) உணர்க.
கண்ணகியாரின் காமம் முழுதும் மலர்ச்சியுற்றமையை நெடுநிலா விரிந்த
வெண்டோட்டு மல்லிகை மாலை என்னாது விரியன்மாலை என விதந்தோது மாற்றால்
உணர்த்தினர். இவ்வடிகளில் இங்ஙனம் பொருள் காண்டல் பாட்டிடை வைத்த
குறிப்பாற் கண்டவாறாம். இவ்வாறு காணாக்கால் பின்வரும் தாரும் மாலையும்
மயங்கி என்பதே அமையும். இவற்றிற்கு இப்பொருளுண்மையால் விதந்தோதி மீண்டும்
இவற்றையே அத்தாரு மாலையும் என எதிர்நிரனிறையாகக் கூறினர். முன்னர்ப் பிறழ
என்றோதிப் பின்னர் மயங்க என்றோதியதூஉம் முன்னர்ப் புணர்ச்சியின் செயல்
நிகழ்ச்சியும் பின்னர் இன்பத்தால், அவசமாகி இருவரும் அவை செறிய
முயங்கினமையும் தோற்றுவித்தற்கு என்க.
இனி, இம்மெய்ப்பாடுகள்
கண்ணகியார்க்கே சிறந்தவை. கோவலனுக்கு அக்காமச் செவ்வி இயற்கையாலேயே
முழுமையுற்றுச் செவ்வியுறுதலின் அவன் அணிந்த தாரினை வாளாது கழுநீர்ப்
பிணையல் முழு நெறி என்றோதியொழிந்தார் என்க. கையறுதல் இருவருள்ளமும்
இன்பத்தால் விழுங்கப்பட்டுச் செயலறுதல். இவ்வாறு இடக்கரடக்கி அவர்தம்
கூட்டத்தை இனிதின் ஓதிய அடிகளார் அக் கையறவிற்குப் பின்னர்த்தாகிய
பாராட்டெடுத்தல் என்னும் மெய்ப்பாடு இருவர்க்கும் பொதுவாயினும் கோவலனுக்கே
சிறப்புடைத்தாதல் பற்றிக் கூற்று வகையால் கோவலன்பால் வைத்துக் கோவலன்
கூறுமோர் குறியாக் கட்டுரை என்றார். கண்ணகிக்கு இம்மெய்ப்பாடு உள்ளத்தே
அவனைப் பாராட்டுந் துணையாய் அமைதலின் அது கூறாராயினர்.
இனி,
கோவலன் கூறுமோர் கட்டுரை என்னாது குறியாக்கட்டுரை என்றார். ஈண்டுக் கோவலன்
இவ்வுலகத்துக் காதலர் தங்காதலிமாரை நலம் பாராட்டுமாறே பாராட்டினன் அல்லது
அத்திருமாபத்தினியின் சிறப்பெல்லாம் குறிக்கொண்டு பாராட்டினன் அல்லன்
என்றுணர்த்தற்கு. இஃதென் சொல்லியவாறோவெனின், கோவலன் ஈண்டுக் கூறும்
சிறப்பைவிடப் பன்னூறுமடங்கு உயர்ந்தனவாம் அப்பெருந்தகைப் பெண்ணின் சிறப்பு.
அவனுரை அவற்றைக் குறியாது வறிதே நலம் பாராட்டுதல் என்னும் பொருள்பற்றி
உலகத்துக் காதலர் கூறும்மரபு பற்றிய உரையேயாம், எனக் கண்ணகியாரின்
பெருஞ்சிறப்பைக் கருதி அங்ஙனம் ஓதினர். இனி இக்கண்ணகியாரின் சிறப்பெல்லாங்
கருதிக் கூறுங் கட்டுரையை அடிகளார், கொற்றவையின் கூற்றாக,
இவளோ, கொங்கச் செல்வி குடமலை யாட்டி
தென்றமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து
ஓருமா மணியா யுலகிற் கோங்கிய
திருமாமணி (வேட்டுவவரி - 47-50)
என இனிதின் ஓதுவர். ஈண்டு அத்தெய்வம் கூறுங் கட்டுரையே கண்ணகியாரின்
சிறப்பை உள்ளவாறே குறிக்கும் கட்டுரையாதல் நுண்ணிதின் உணர்க. இன்னும்
அடைக்கலக் காதையின் தவமூதாட்டியாகிய கவுந்தியடிகளார் இக்கண்ணகியாரோடு
ஒருசில நாள் பயின்ற துணையானே இப்பெருமகள் தான் மானுடமகளாயினும்
தெய்வத்திற்கியன்ற சிறப்பெலாம் உடையள் என மதித்து மாதரி என்பாட்குக்
கண்ணகியைக் காட்டி,
ஈங்கு,
என்னொடு போந்த விளங்கொடி நங்கைதன்
வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள் (அன்னளாயினும்)
கடுங்கதிர் வெம்மையிற் காதலன் றனக்கு
நடுங்கு துயரெய்தி நாப்புலர வாடித்
தன்றுயர் காணாத் தகைசால் பூங்கொடி
இன்றுணை மகளிர்க் கின்றி யமையாக்
கற்புக் கடம்பூண்ட வித்தெய்வ மல்லது
பொற்புடைத் தெய்வம் யாங் கண்டிலமால்.
என வியந்து பாராட்டுதல் கண்ணகியை உள்ளவாறுணர்ந்து அவள் நலங்குறித்த
கட்டுரையாகும். இங்ஙனம், தெய்வத்தானும் செய்தவத்தோரானும் வியந்து
பாராட்டுதற்குரிய இத்தகைசால் பூங்கொடியின் நலமுழுதும் இவன் உணர்ந்து
அவற்றைக் குறித்துப் பாராட்டினனல்லன் என்பார் கோவலன் கூறும் ஓர் குறியாக்
கட்டுரை என்று அடிகளார் இரங்கிக் கூறினர் என்க.
கோவலன் கண்ணகியை நலம் பாராட்டுங் கட்டுரை
37-41 : குழவித் திங்கள் ............... ஆகென
(இதன்பொருள்) பெரியோன் குழவித் திங்கள் இமையவர் ஏத்த அழகொடு முடித்த
அருமைத்து ஆயினும் - பிறவாயாக்கைப் பெரியோனாகிய இறைவன் தன்னை அடையாளங்
கண்டு தேவர் முதலிய மெய்யடியார் ஏத்துதற்பொருட்டு மேற்கொண்ட அழகிய
அருட்டிருவுருவத்திற்கு இதுவும் ஓர் அழகினைத் தரும் என்று தேர்ந்து இளம்
பிறையானது அவனால் தனது திருமுடிக்கண் விரும்பி யணியப்பட்ட பெறுதற்
கருமையுடைத்தாகிய பேரணிகலமேயாயினும்; நின்னோடு உடன் பிறப்பு உண்மையின் -
அப்பிறைதானும் நின்னுடன் பிறந்தது என்னும் ஓர் உறவுடைத்தாதலால்; உரிதினின் -
அது நினக்கே உரியது என்னும் அறத்தைக் கருதி; திருநுதல் ஆக என - அது
நினக்கு அழகிய நுதலாயிருந்து அழகு செய்வதாக என்று கருதி; தருக - (நினக்
கருளினன் போலும் அங்ஙனம் ஆயின்) தந்தருளுக அதனால் அவனுக்குப் புகழேயல்லாமல்
பழி யொன்றுமில்லை; என்றான் என்க.
(விளக்கம்) பிறை இறைவன்
விரும்பியணிந்த பேரணிகலனே ஆயினும் அவன் மன்னுயிர்க்கு அறமுரைத்த
பெரியோனாகலின் அப்பிறை தன்னினுங் காட்டில் நினக்கே பெரிதும்
உரிமையுடைத்தாதலால் பிறர்க்குரிய பொருளை அவர்க்கே கொடுப்பதுதான் அறமாகும்
என்று அது நினக்கு நுதலாயிருந்து அழகு செய்யும்பொருட்டு நினக்குத் தந்தனன்
போலும். அவன் செயல் அறத்திற்கும் ஒக்கும் என்றவாறு. இதனால் கோவலன்
கண்ணகியையும் அவள் நுதலையும் நிரலே திருமகளோடும் பிறைத்திங்களோடும் அவள்
பிறந்தகுடியைத் திருப்பாற் கடலோடும் ஒப்பிட்டுப் பாராட்டினானாதல்
நுண்ணிதின் உணர்க. இனி, அடியார்க்குநல்லார் தருக என்றது சூடின பிறை இரண்டு
கலையாகலின் அதனை எண்ணாட்டிங்களாக்கித் தருக என்பது கருத்து எனவும், என்னை?
மாக்கட னடுவண் எண்ணாட் பக்கத்துப் பசு வெண்டிங்கள் தோன்றி யாங்குக்
கதுப்பயல் விளக்குஞ் சிறுநுதல் (குறுந்-126) என்றாராகலின், எனவும் ஓதினர்.
மேலும், இதனால் மேற்கூறுகின்ற கரும்பையும் வச்சிரத்தையும்
அவ்வவ்வுறுப்புக்கட்கு ஏற்பத் திருத்தி ஈக்க, அளிக்க, என்பதாயிற்று. என்றது
கரும்பிற்கு நிறனும், வச்சிரத்துக்கு நேர்மையும் உண்டாக்கி என்றவாறு. இஃது
எதிரது போற்றலென்னும் தந்திரவுத்திவகை, என்றும் விளக்குவர்.
குழவித்திங்கள் என்றது இளம்பிறையை. ஈண்டுப் பிறையின் இளமைக்குக் குழவிப்
பெயர்க்கொடை பிள்ளை குழவி கன்றே போத்தெனக் கொள்ளவும் அமையும் எனவரும்
மரபியற் சூத்திரத்தில் (24) கொள்ளவும் அமையும் என்பதனை எச்சவும்மையாக்கி
அமைப்பர் பேராசிரியர். குழவி வேனில் (கலி - 36) குழவிஞாயிறு (பெருங்கதை -
1-33-26) எனப் பிறரும் ஓதுதலறிக.
42-45: அடையார் ........... ஈக்க
(இதன் பொருள்) உருவு இலாளன் - வடிவமில்லாத காமவேள்; ஒரு பெருங் கருப்பு
வில் - தான் போர் செய்தற்கு எடுத்த தனது ஒப்பில்லாத பெரிய கரும்பு வில்
ஒன்றே யாயினும் அதனையும்; இரு கரும்புருவமாக - நினக்கு இரண்டு கரிய
புருவங்களாம்படி; ஈக்க-திருத்தி ஈந்தருளினன் போலும் அங்ஙனம் ஈதல்
அவனுக்குரிய கடமையேயாம் ஆதலால் ஈந்தருளுக அஃதெற்றாலெனின், அடையார் முனை
யகத்து அமர் மேம்படுநர்க்கு - வேந்தராயினோர் தமது பகைவரோடு போர்எதிரும்
களத்தின்கண் மறத்தன்மையாலே தம்மை மேம்படுக்கும் படைஞர்க்கு; படை வழங்குவது
ஓர் பண்பு உண்டு ஆகலின் - படைக்கலம் வழங்கும் மரபொன்று உண்டாகலான்;
அம்மரபுபற்றி அவன் ஈந்தது முறைமையே ஆகலான்; என்றான் என்க.
(விளக்கம்) அடையார் - பகைவர். வழங்குவது என்னும் வினைக்குத் தகுதிபற்றி
வேந்தர் என எழுவாய் வருவித்தோதுக. ஒரு பெருங் கருப்புவில் இருகரும்
புருவமாக என்புழி முரணணி தோன்றிச் செய்யுளின்ப மிகுதலுணர்க. கருப்புவில்
ஒன்றனையும் நினக்குக்கரிய இருபுருவமாகத் திருத்தித்தரக் கடவன் என்று
உரைவிரித்த அடியார்க்கு நல்லார், விளக்க வுரைக்கண் இரு கரும்புருவமாக
வென்றது சேமவில்லையும் கூட்டி என்பது முறைமறந்தறைந்தபடியாம் என்க.
காமவேளாகிய மன்னனுக்கு மகளிரே படைமறவர் ஆவர் ஆகலின் அவன் செய்யும் போரில்
அவனுக்கு வெற்றிதந்து அவனை மேம்படுப்பாய் நீயே ஆகலின் நினக்கு அவன் தன்னொரு
பெருவில்லையே வழங்கி விட்டனன் போலும் என்கின்றான். இதனால் நின்னுடைய
கண்கள் மட்டும் அல்ல நின் புருவங்களுங்கூடத் தமது அழகாலே எம்மை
மயக்குகின்றன என்று அவற்றின் அழகைப் பாராட்டினன் ஆதலறிக.
இனி
மன்னர் தம்மை மேம்படுக்கு மறவர்க்குப் படைவழங்கும் மரபுண்மையை, படைவழக்கு
என்னும் துறைபற்றி முத்தவிர் பூண்மறவேந்தன், ஒத்தவர்க்குப் படைவழங்கின்று,
எனவும், கொடுத்த பின்னர்க் கழன்மறவர், எடுத்துரைப்பினும் அத்துறையாகும்,
எனவும் வரும் கொளுக்களானும் இவற்றிற்கு,
ஐயங் களைந்திட் டடல்வெங்கூற் றாலிப்ப
ஐயிலை எஃக மவைபலவும் - மொய்யிடை
ஆட்கடி வெல்களிற் றண்ணல் கொடுத்தளித்தான்
எனவும்,
துன்னருந் துப்பின் தொடுகழலார் சூழ்ந்திருப்பத்
தன்னமர் ஒள்வாளென் கைத்தந்தான் - மன்னற்கு
மண்ணகமோ வைகின்று மாலை நெடுங்குடைக்கீழ்
விண்ணகமும் வேண்டுங்கொல் வேந்து
எனவும் வரும் வரலாற்று வெண்பாக்களானும் உணர்க. (புறப்-மாலை-64-5)
46-48: மூவா மருந்தின் .......... இடையென
(இதன் பொருள்) தேவர் கோமான் - தேவேந்திரன்; தெய்வக் காவல் படை - தன்
கீழ்க்குடிகளாகிய தேவர்களை அசுரர் துன்புறுத்தாமல் காத்தற் பொருட்டுத் தான்
அரிதிற்பெற்ற வச்சிரப்படை பெறுதற்கு அருமையுடைத்தாயினும்; மூவாமருந்தின்
முன்னர்த் தோன்றலின் - தமக்கு மூவாமையையும் சாவாமையையும் அளித்த
அமிழ்தத்திற்கு நீ தவ்வையாகத் திருப்பாற் கடலின்கண் அதற்கு முன்னர்ப்
பிறத்தலின் அதனோடும் நினக்கு உடன்பிறப்பாகிய உறவுண்மையால் அதுவும்
நினக்குரித்தாதல் கருதி; அதன் இடை நினக்கு இடை என - அவ்வச்சிரப்படையினது
இடையானது நினக்கு இடையாகி அழகு செய்வதாக வென்று கருதி; நினக்கு அளிக்க -
நினக்கு வழங்கினன் போலும், அங்ஙனம் வழங்கின் வழங்குக அதுவும் அமையும்;
என்றான் என்க.
(விளக்கம்) திருப்பாற் கடல்கடையும் காலத்தே
வச்சிரப்படையும் திருமகளும் அமிழ்தமும் நிரலே பிறந்தனவாகக் கூறும்
பௌராணிகர் மதத்தை உட்கொண்டு இவளைத் திருமகளாக மதித்து வச்சிரம் அமிழ்தம்
பிறக்கு முன்னர் நினக்குப் பின்னாகப் பிறத்தலின் அவ்வுடன்பிறப்புண்மையின்
நினக்குரித்தென்று நினக்கு இடையாகுக என்று வழங்கினன் போலும். அவன்
அரசனாகலின் உரியவர்க்கு உரிய பொருளை வழங்குதல் செங்கோன் முறையாதலின்
வழங்கினன் என்றான்.
இங்ஙனம், (திருமகளோடு) வச்சிரமும் அமிழ்தமும்
கடல் கடைகின்ற காலத்துப் பிறந்தனவெனப் புராணம் கூறும் என அடியார்க்கு
நல்லாரும் ஓதினர்.
இனி, நீ அமுதாகலின் நினக்கு முன்னர் வச்சிரம்
பிறத்தலால் எனினும் அமையும் என்பர் அடியார்க்குநல்லார். இதற்கு
மூவாமருந்தாகிய நினக்கு முன்னர்ப் பிறத்தலின் எனப் பொருள் காண்க.
முன்னிலைப் புறமொழியாகக் கொண்டங்ஙனம் கூறினர் என்க.
இனி, மூவாமருந்து தனக்குச் செய்த நன்றியைக் கருதி அதனுடன் பிறந்த நினக்கு அளித்தான் போலும் எனினுமாம்.
இனி, வச்சிரம் ததீசி முனிவனுடைய முதுகென்பு என்றும் அதனை அம்முனிவர்
பெருமான் இந்திரனுக்கு வழங்கினன் எனவும் புராணம் கூறும். இதற்கியைய,
வச்சிரம் மீண்டும் பெறுதற் கருமையுடைத்தாயினும் அவ்வருமை கருதாமல் செய்ந்
நன்றியைக் கருதி நினக்கு அதனை அளித்தனன் என்றான் எனினுமாம்.
இதனால், கண்ணகியின் பிறப்பின் தூய்மையையும் அவளழகையும் அவளுடைய நுண்ணிடையையும் ஒருங்கே பாராட்டினன் ஆதல் அறிக.
49-52: அறுமுக வொருவன் ......... ஈத்தது
(இதன் பொருள்) அறுமுக ஒருவன் ஆறுமுகங்களையுடைய இறைவன்; ஓர் பெறும் முறை
இன்றியும் - முற்கூறப்பட்ட பிறை முதலியவற்றைப் போன்று நினக்குப்
பெறுதற்குரிய உரிமை யாதும் இல்லையாகவும்; அம்சுடர் நெடுவேல் ஒன்றுநின்
முகத்துச் செங்கடை மழைக்கண் இரண்டா ஈத்தது - தன் கையிலுள்ள அழகிய
ஒளியையுடைய வேல் ஒன்றையும் நின் முகத்தின்கண் சிவந்த கடைப்பகுதியையுடைய
குளிர்ந்த கண்கள் இரண்டுமாம் படி வழங்கியது; இறுமுறை காணும் இயல்பினின்
அன்றே தனக்கியல்பான தொழில்களுள் வைத்து உயிரினங்கள் இறந்து படுதலைச் செய்து
காண்பதுவும் ஒன்றாகலால் அன்றோ; அன்றெனின் பிறிதொரு காரணமுங் கண்டிலேன்
என்றான் என்க;
(விளக்கம்) பெரியோனும் உருவிலாளனும் தேவர் கோமானும்
நிரலே பிறையும் கருப்பு வில்லும் காவற்படையும் வழங்குதற்குக் காரணம்
தெரிகின்றது. அறுமுகவொருவன் தனது வேலை நினக்குக் கண்ணாக வென வழங்கியதற்குக்
காரணங் கண்டிலேன். ஒரோவழி அவன் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் மூன்று
தொழிலையும் தனக்கியல்பாக உடையனாகலின், அவற்றுள் அழித்தற் றொழில் நிகழ்தற்
பொருட்டு ஈந்தனன் போலும் என்றவாறு.
இனி, இறுமுறை காணும்
இயல்பினினன்றே என்பதற்கு, யான் இறந்துபடு முறைமையைத் தன் கண்ணாற் காண
வேண்டுதல் காரணத்தான் என்க என்று உரைவிரித்தார் அடியார்க்கு நல்லார்
இதற்கு,
(கொள்ளும் பொருளிலராயினும் வம்பலர்)
துள்ளுநர்க் காண்மார் (தொடர்ந்துயிர் வெளவலின்)
எனவரும் கலியடியை (4:5) மேற்கோளாகவும் காட்டினார். அரும்பதவுரையாசிரியர்
இவ்வாறு ஓர் உரிமையின்றியேயும் குமரவேள் தன்கையில் வேலொன்றையும்
இரண்டாக்கித் தந்தது என்னை வருத்தும் இயல்பினானன்றே என்றோதுவர். இவர் தம்
முரைகளோடு முருகவேள் இறுமுறை காணும் இயல்பினையுடையான் என்பது
பொருந்துமாறில்லையாதல் உணர்க.
இதன்கண் நின்கண் இறுமுறை காணும்
இயல்பிற்று என்னுமாற்றால் அது தன்னை வருத்துமியல்பு கூறி அதன் அழகை
வேலோடுவமித்துப் பாராட்டினன் ஆதலறிக. ஓக்கிய முருகன் வைவேல் ஒன்றிரண்டனைய
கண்ணாள் எனவருஞ் சிந்தாமணியும் (1291) ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது.
இவையெல்லாம் புகழுவமையணியின் பாற்படும் என்பது அடியார்க்கு நல்லார்
கருத்து.
இவற்றால் கட்புலனாய் எழுதப்படும் உறுப்புக்களைப் பாராட்டி இனிக் கட்புலனாயும் ஆகாதுமாய் எழுதப்படாதன பாராட்டுவான்.
53-61: மாயிரும்பீலி ............ ஒருவாவாயின
(இதன்பொருள்) (55) நல்நுதால் - அழகிய நுதலையுடையோய்; மா இரும் பீலி மணி
நிற மஞ்ஞை - கரிய பெரிய தோகையினையும் நீலமணிபோன்ற நிறத்தையும் உடைய
மயில்கள்; நின் சாயற்கு இடைந்து தண் கான் அடையவும் - நின் சாயலுக்குத்
தோற்று இழிந்த காட்டிடத்தே போய் ஒடுங்கா நிற்பவும்; அன்னம் மெல் நடைக்கு
அழிந்து - அன்னங்கள் தாமும் நினது மெல்லிய நடையழகிற்குத் தோற்று; நல்
நீர்ப்பண்ணை நளிமலர்ச் செறியவும் - தூய நீர் பொருந்தின கழனிகளிடத்தே
அடர்ந்த தாமரை மலர்களினூடே புக் கொடுங்கா நிற்கவும்; மடநடைமாது -
மடப்பங்கெழுமிய நடையினையுடைய மாதே!; சிறு பசுங்கிளிதாமே அளிய
நின்னோடுறைகின்ற சிறிய இப்பசிய கிளிகள் மாத்திரமே நின்னால்
அளிக்கற்பாலனவாயின காண்; எற்றுக்கெனின்; குழலும் யாழும் அமிழ்தும் குழைத்த
நின் மழலைக் கிளவிக்கு வருந்தின ஆகியும் - வேய்ங் குழலின் இசையினிமையையும்
யாழின் இசையினது இனிமையையும் அமிழ்தினது சுவைதரும் இனிமையையும் கலந்து
குழைத்தா லொத்த இனிமையையுடைய நின் மழலை மொழியினைக் கேட்டு அவற்றைத் தாமும்
கற்றற்குப் பெரிதும் விரும்பி, வருத்தமுடையனவாகியும்; நின் மலர்க்கையின்
நீங்காது உடன் உறைவு மரீஇ ஒருவா ஆயின-நின்னுடைய செந்தாமரைபோன்ற அழகிய
கையிலிருந்து விலகாமல் நின்னோடு வதிதலைப் பொருந்திப் பிரியாவாயின
ஆதலாற்காண்! என்றான் என்க.
(விளக்கம்) மாயிரு என்பது கோயில்
என்பதுபோல யகரவுடம்படு மெய் பெற்றது. இதனைப் புறனடைவிதியாலமைத்துக் கொள்க.
மா - கருமை. இருமை - பெருமை. மணி - நீலமணி. சாயல் - மென்மை. அஃதாவது நாயும்
பன்றியும் போலாது, மயிலும் குயிலும் போல்வதொரு தன்மை என்பர் இளம்பூரணர்.
இதனை, நாட்டிய மரபின் நெஞ்சு கொளின் அல்லது காட்டலாகாப் பொருள் என்பர்
தொல்காப்பியனார் (பொருளியல்-51.) ஐம்பொறியால் நுகரும் மென்மை என்பர்
நச்சினார்க்கினியர். ஐம்பொறியானும் நுகரப்படும் ஒண்டொடியார் பால் அஃது
எஞ்சாமற் காணப்படும். இதற்கு மயில் ஒருபுடையே அவர்க்கு ஒப்பாகும் என்க.
ஈண்டுக் கோவலன் ஐம்பொறியானும் கண்ணகியார்பால் நுகர்ந்த இன்பத்திற்கு
வேறுவமையின்மையால், மயிலும் நின் சாயற்கு இடைந்தது என்கின்றான். தண்கான்
என் புழித் தண்மை - இழிவு என்னும் பொருட்டு. அஃதப்பொருட்டாதல் பிங்கலந்தை
(3607) யிற் காண்க. பண்ணை - கழனி. செறிதல் - புக் கொடுங்குதல். ஒடுங்க
வேண்டுதலின் நளிமலர் எனல் வேண்டிற்று. நளி-செறிவு.
இனி குழலும்
யாழும் அமிழ்துங்குழைத்த மழலைக் கிளவி என நிகழும் தொடரின்கண் தமிழ்
மொழிக்குச் சிறப்பெழுத்தாகிய ழகர, வொலிமிக்கு மொழி யின்பம் பெரிதும்
மிகுதலுணர்க. இஃது இல்பொருள் உவமை. கரும்புந் தேனு மமுதும் பாலுங்கலந்த
தீஞ்சொல் எனத் திருத்தக்க தேவரும் ஓதுதல் (2438) உணர்க. இனி, குழல்
முதலியவற்றைக் குழைத்த (வருத்திய) எனினுமாம். நன்னுதல், மாது என்பன விளி.
இவை நன்னுதால் எனவும் மாதே எனவும் ஈற்றயல் நீண்டும் ஏகாரம் பெற்றும்
விளியேற்கும்.
இனி, மயிலும் அன்னமும் இடைந்தும் அழிந்தும்
தாமுய்யுமிடம் நாடிச் சென்றன. மற்று இச்சிறு கிளிகள் நின் மழலை கேட்டு
அழுக்காறு கொள்ளாமல் அவற்றைக் கற்கும் பொருட்டு நின்பால் உடனுறைவு மரீஇ
ஒருவா ஆயின; ஆகவே நின்னைப் புகலாகக் கொண்ட அவற்றை அளித்தல் நின்கடன்
என்றவாறு. அளியகிளி தாமே என மாறி ஈற்றினின்ற ஏகாரம் பிரிநிலை என்க. தாம்
அசைச்சொல். கிளிகள் தம்மனம் போனவாறு பறந்துதிரிதலை விட்டுக் கற்றற்பொருட்டு
அடங்கியிருந்தலின் வருந்தினவாகியும் என்றான் என்க. என்னை? கல்வி தொங்குங்
காற்றுன்பந் தருமியல்பிற் றென்பது முணர்க. இங்ஙனம் கூறாமல் மழலைக்
கிளவிக்குத் தோன்றனவாயும் என்னும் அடியார்க்கு நல்லார் உரை அவை
உடனுறைவுமரீஇ ஒருவா வாதற்குச் சிறவாமை நுண்ணுணர்வாற் கண்டுகொள்க.
கண்ணகியார் வளர்க்குங் கிளி பலவாகலின் பன்மை கூறினான்.
62 - 64: நறுமலர் .......... எவன்கொல்
(இதன் பொருள்) நறுமலர்க் கோதை - நறுமணமுடைய மலர் மாலையையுடையோய்; நின்
நலம் பாராட்டுநர் - நினது அழகுக்கு ஒப்பனையால் அழகு செய்கின்ற நின்
வண்ணமகளிர்; மறு இல் மங்கல அணியே அன்றியும் - குற்றமற்ற நின்னுடைய இயற்கை
யழகே அமைவதாகவும் அதனை யல்லாமலும்; பிறிது அணி அணியப் பெற்றதை எவன் கொல் -
அவ்வழகை மறைக்கின்ற வேறு சில அணிகலன்களை நினக்கு அணிவதனாலே பெற்ற பயன்தான்
யாதோ? என்றான் என்க.
(விளக்கம்) எனவே, அவர் பயனில செய்யும் பேதையரே ஆதல் வேண்டும் என்றான் என்க. இதனோடு,
அமிழிமைத் துணைகள் கண்ணுக் கணியென வமைக்குமா போல்
உமிழ்சுடர்க் கலன்க ணங்கை யுருவினை மறைப்ப தோரார்
அமிழ்தினைச் சுவைசெய் தென்ன வழகினுக் கழகு செய்தார்
இமிழ்திரைப் பரவை ஞாலம் ஏழைமை யுடைத்து மாதோ!
எனவரும் கம்பநாடர் செய்யுள் நினையற்பாலதாம். (கோலங் -3)
கோதை-விளி. மங்கலவணி-இயற்கையழகு. மாங்கலிய மென்பாருமுளர் என்பர் அடியார்க்கு நல்லார். எவன்-யாது.கொல்: அசை.
65 - 66 : பல்லிருங்கூந்தல் ................ என்னுற்றனர் கொல்
(இதன் பொருள்) பல் இருங்கூந்தல் சில் மலர் அன்றியும் - ஐம்பாலாகக் கை
செய்யப்படும் நினது கரிய கூந்தலில் மங்கலங்கருதி அதற்குரிய மலர் சிலவற்றைப்
பெய்தமையே அமைவதாக அவற்றை யல்லாமலும்; எல் அவிழ் மாலையொடு என் உற்றனர்
கொல்-ஒளியோடு மலருகின்ற இந்த மலர்மாலைகள் அக் கூந்தலின்கண் நின்னிடைக்குப்
பொறையாக அணிதற்கு அவற்றோடு அவர்கள் எத்தகைய உறவுடையரோ, அறிகின்றிலேன்
என்றான் என்க.
(விளக்கம்) இம்மாலைகள் நினது கூந்தலின் இயற்கையழகை
மறைப்பதோடல்லாமல் நின் சிற்றிடைக்குப் பெரும் பொறையுமாம் என்பது நினையாமல்
நின்றலையின்மேல் அவற்றை ஏற்றுதலால் அவற்றோடு அவர்க்கு உறவுண்டு போலும்
என்றவாறு. என்னை? உறவினரை மேலேற்றி வைத்தல் உலகியல்பாகலின் அங்ஙனம்
வினவினன் என்க.
சில்மலர் என்றது மங்கலமாக மகளிர் அணியும்
கற்புமுல்லை முதலியவை. சீவக சிந்தாமணியில் தேந்தாமம் என்று தொடங்குஞ்
செய்யுளில் (680) முல்லைப் பூந்தாமக் கொம்பு என்பதற்கு ஆசிரியர்
நச்சினார்க்கினியர் முல்லை கற்பிற்குச் சூட்டிற்று எனவும் சீவக செய்யுள்
624-ல் முல்லைச் சூட்டுவேய்ந்தார் என்பதற்கு முல்லைச் சூட்டைக் கற்பிற்குத்
தலையிலே சூட்டி என்றும் உரை கூறுதலுமுணர்க. சின்மலர் - அருச்சனை மலருமாம்
என்பர் அடியார்க்கு நல்லார்.
67-68: நான ............. எவன்கொல்
(இதன் பொருள்) நானம் நல் அகில் நறும்புகை அன்றியும் - அவ்வண்ணமகளிர் நினது
பல்லிருங்கூந்தலுக்கு நெய்யையுடைய சிறந்த அகிற்புகையை ஊட்டுதலே
அமைவதாகவும் அதனை யல்லாமலும்; மான்மதச் சாந்தொடு வந்ததை எவன்கொல் -
கத்தூரியையும் அணிதற்கு அதன்பால் அவர்க்கு உண்டான கண்ணோட்டத்திற்குக்
காரணம் யாதோ? என்றான் என்க.
(விளக்கம்) நானம் - நாற்றமுமாம்;
திருந்து தகரச் செந்நெருப்பில் தேன் தோய்த்து அமிர்தம் கொளவுயிர்க்கும்
கருங்காழ் அகிலின் நறும்புகை என்பான் (சிந்தா - 346) நல்லகில் நறும்புகை
என்றான். அதற்குப் பொறையின்மையின் அஃது அமையும் என்பது கருத்து.
மான்மதம்-கத்தூரி. வந்ததை என்புழி ஐகாரம் சாரியை. மான்மதத்தைச் சிறந்த
இடத்தில் வைத்தலால் வந்தது என்னும் வினையாலணையும் பெயர் கண்ணோட்டம் என்பது
தகுதியாற் கொள்ளப்பட்டது.
69-70 : திருமுலை ............ எவன்கொல்
(இதன்பொருள்) திருமுலைத் தடத்திடைத் தொய்யில் அன்றியும் - அவர்தாம், நினது
அழகிய முலைப்பரப்பின் மேல் தொய்யில் எழுதுதலே மிகையாகவும் அதனை
யல்லாமலும்; முத்தம் ஒரு காழொடு உற்றதை எவன்கொல் - முத்தாலியன்ற தனி
வடத்தையும் பூட்டிவிட்டமைக்கு அதனோடு அவர்க்குண்டான உரிமைதான் யாதோ?
என்றான் என்க.
(விளக்கம்) திரு என்பதற்கு அடியார்க்கு நல்லார்
முலைமேல் தோன்றும் வீற்றுத் தெய்வம், எனப் பொருள் கொண்டனர். சிந்தாமணியில்
(171) ஆமணங்கு குடியிருந்தஞ்சுணங்கு பரந்தனவே எனத் திருத்தக்க தேவர்
ஓதுதலும், அதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் தம் மேலுறையும் வீற்றுத்
தெய்வம் இருப்பிடமாக விருக்கப்பட்டுச் சுணங்கு பரந்தன என உரை விரித்தலும்
காண்க. அஃதாவது வேறொன்றற் கில்லாத கவர்ச்சியையுடைய அழகைத் தருவதொரு தெய்வம்
என்றுணர்க. காழ்-வடம்.
71-72: திங்கள் ......... என்னுற்றனர் கொல்
(இதன் பொருள்) திங்கள் முத்து அரும்பவும் சிறுகு இடை வருந்தவும்- அந்தோ
நின்னுடைய பிறைபோன்ற நுதலின்கண் வியர்வைத் துளிமுத்துக்கள் போன்று அரும்பா
நிற்பவும் நுண்ணிடை வருந்தா நிற்பவும் இங்கு இவை அணிந்தனர் - இங்குக்
கூறப்பட்ட பிறிதணி முதலிய இவற்றைப் பொறையின் மேல் பொறையாக அணிந்துவிட்ட
அவ்வண்ணமகளிர்; என் உற்றனர் கொல் - என்ன பேய் கொண்டனரோ? என்றான் என்க.
(விளக்கம்) திங்கள், முத்து என்பன சொல்லுவான் குறிப்பினால் முகம் என்றும்
வியர்வென்றும் பொருள்படுதலால் இவற்றைக் குறிப்புவமை என்ப; இவற்றைப்
பிற்காலத்தார் உருவகம் என்று வழங்குப.
மங்கல வணியும் சின்மலரும்
அகிற்புகையும் தொய்யிலும் ஆகிய, இவையே பொறையாக இவற்றைச் சுமக்கலாற்றாது
திங்கள் முத்தரும்பவும் இங்கு இவைகண்டு வைத்தும் மேலும் பொறையாகப்
பிறிதணியும் மாலையும் சாந்தும் முத்தும் அணிந்தாராகலின் அவர் பேயேறப்
பெற்றவரேயாதல் வேண்டும் என்பது கருத்து.
என்னுற்றனரோ என்பதற்கு என்ன பித்தேறினார் எனினுமாம்.
73-81 : மாசறுபொன்னே ............ பாராட்டி
(இதன் பொருள்) மாசு அறு பொன்னே - குற்றமற்ற பொன்னை ஒப்போய்! என்றும்;
வலம்புரி முத்தே - வலம்புரிச் சங்கீன்ற முத்தை ஒப்போய்! என்றும்; காசு அறு
விரையே - குற்றமற்ற நறுமணம் போல்வோய்! என்றும்; கரும்பே - கரும்பை ஒப்போய்!
என்றும்; தேனே - தேன்போல்வோய்! என்றும்; அரும்பெறல் பாவாய்-பெறுதற்கரிய
பாவை போல்வோய்! என்றும்; ஆர் உயிர் மருந்தே - மீட்டற்கரிய உயிரை மீட்டுத்
தருகின்ற மருந்து போல்வோய்! என்றும்; பெருங்குடி வாணிகன் பெருமடமகளே -
உயர்ந்த குடிப்பிறப்பாளனாய வாணிகர் பெருமகன் செய்தவத்தாற் பிறந்த
மாண்புமிக்க இளமையுடைய நங்காய்! என்றும் (ஒருவாறு உவமை தேர்ந்து
பாராட்டியவன்; பின்னர் அவள் நலத்திற்குவமை காணமாட்டாமல்) தாழ் இருங்கூந்தல்
தையால் நின்னை-நீண்ட கரிய கூந்தலையுடைய தையலே நின்னை யான்; மலையிடைப்
பிறவா மணியே என்கோ! மலையின் கட் பிறவாத மணி என்று புகழ்வேனோ? அலையிடைப்
பிறவா அமிழ்தே என்கோ - அல்லது, திருப்பாற்கடலிலே பிறந்திலாத அமிழ்தமே என்று
புகழ்வேனோ? யாழ் இடைப் பிறவா இசையே என்கோ - அல்லது, யாழின்கட் பிறந்திலாத
இசையே என்று புகழ்வேனோ? என்று உலவாக் கட்டுரை பல பாராட்டி - எனச் சொல்லித்
தொலையாத அக்கண்ணகியின் நலங்களைப் பொருள் பொதிந்த மொழிகள் பலவற்றாலே
புகழ்ந்து என்க.
(விளக்கம்) (46) தீராக்காதலாலே முகம் நோக்கி,
குறியாக் கட்டுரை கூறும் கோவலன் பெரியோன் தருக என்றும், உருவிலாளன் ஈக்க
என்றும், அறுமுக வொருவன் ஈத்தது இறுமுறை காணும் இயல்பினின் அன்றே என்றும்
மஞ்ஞை கான் அடையவும் அன்னம் மலர்ச் செறியவும் கிளி ஒருவா ஆயின ஆதலால் அளிய
என்றும் கோதாய்! நின் நலம் பாராட்டுநர் பிறிதணியை அணியப் பெற்றதை எவன்?
என்றும், மாலையொடு என்னுற்றனர் என்றும், சாந்தொடு வந்ததை எவன்? என்றும்,
முத்தொடுற்றதை எவன் என்றும், இவை அணிந்தனர் என்னுற்றனர் என்றும், பொன்
முதலியன போல்வோய் என்றும், மகளே என்றும், மணியே என்கோ? அமிழ்தே என்கோ?
இசையே என்கோ? எனவும், உலவாக் கட்டுரை பலவற்றானும் கண்ணகியின் நலத்தைப்
பாராட்டி என்றியையும்.
இனி, (74) கண்ணுக்கு இனிமை பயத்தல் கருதி
மாசறு பொன் என்றும், ஊற்றின்பம் கருதியும் மரபின் தூய்மை கருதியும்
வலம்புரி முத்து என்றும், உயிர்ப்பின் இனிமை கருதி விரையென்றும்,
சுவையின்பங் கருதிக் கரும்பென்றும், மொழியின்பம் கருதித் தேன் என்றும்
பாராட்டினன் எனவும், இவற்றாற் சொல்லியது ஒளியும் ஊறும் நாற்றமும் சுவையும்
ஓசையுமாகலின் கண்டு கேட்டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே
யுள (குறள்-1101) என நலம் பாராட்டப்பட்டன என்பது அடியார்க்கு நல்லார்
கருத்தாகும்.
இனி, கண்ணகியின் பால் தானுகர்ந்த ஐம்புல
வின்பங்களையும் கருதி அவற்றிற்குத் தனித்தனியே உவமை தேர்ந்து கூறியவன்
அவற்றிற்கு அவ்வுவமைகள் உயர்ந்தன வாகாமல் தான் கூறும் பொருள்களே சிறந்தன
என்னுங் கருத்தினால், பிறிதோராற்றால் அந்நலங்களைப் பாராட்டத் தொடங்கி
அரும்பெறல் பாவாய் என்றும், ஆருயிர் மருந்து என்றும், பெருங்குடி வாணிகன்
பெருமட மகளே என்றும், பாராட்டினன். இவற்றுள், கட்கினிமை பயத்தலின் முன்பு
மாசறு பொன் என்றவன், காணுமளவிலே தன்னுள்ளம் மயக்குற்றமை கருதி அத்தன்மை
பொன்னுக்கின்மையால் அங்ஙனம் மயக்குறுத்தும் கொல்லிப்பாவையே என்றான் என்க.
அவ்வாறு மயங்கி அழியுமுயிரைத் தன்கண் களவு கொள்ளும் சிறு நோக்கினால்
பெரிதும் தழைப்பித்தலின் ஆர் உயிர் மருந்தே என்றான், என்க. மருந்து
மிருதசஞ்சீவினி என்பர், அடியார்க்கு நல்லார். கட்பொறிக்கேயன்றி
ஏனைப்பொறிகட்கும் இன்பம் பயத்தலின் மலையிடைப் பிறவாமணி என்பேனோ என்றான்
என்க. மணி குழையாமையின் அங்ஙனம் கூறினன் என்பர் அடியார்க்கு நல்லார். இனி,
உண்டார்கண் அல்லது அலையிடைப் பிறக்கும் அமிழ்து கண்டார்க்கும்
தீண்டினார்க்கும், கழிபேரின்பம் நல்குதலின்மையின் அதிற்பிறவா அமிழ்தே
என்பேனோ என்றான் என்க. ஈண்டு உறுதோ றுயிர் தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு,
அமிழ்தி னியன்றன தோள் எனவரும் திருக்குறளையும் (1106) அதற்கு ஆசிரியர்
பரிமேலழகர் தோள்கள் தீண்டப்படுவதோர் அமிழ்தினாற் செய்யப்பட்டன என
உரைகூறுதலும் காண்க. அமிழ்திற்கு வடிவின்மையின் இங்ஙனம் கூறினன்
என்பாருமுளர்.
82-84 : தயங்கிணர் ......... நாள்
(இதன்பொருள்) வயங்கு இணர்த் தாரோன் - விளங்குகின்ற பூங்கொத்துக்களாற்
புனைந்த மலர்மாலையை அணிந்த கோவலன்; தயங்கு இணர்க்கோதை தன்னொடு -
விளங்குகின்ற பூங்கொத்துக்களாலியன்ற மலர்மாலையணிந்த கண்ணகியோடு; மகிழ்ந்து
தருக்கிச் செல்வுழி நாள் - இவ்வாறு பேரின்ப நுகர்ந்து செருக்குற்று ஏறுபோல்
பீடுற நடந்து வாழ்கின்ற நாள்களுள் வைத்து ஒருநாள்; என்க.
(விளக்கம்) வயங்கிணர், தயங்கிணர் என்பன ஒரு பொருளுடையன ஆதலால் இத்தொடையைத்
தலையாய எதுகைத் தொடையின்பமுடைத்தென்றும், பரியாய வணி என்றும், கூறுவர்
அடியார்க்கு நல்லார். இதனைப் பொருட்பின் வருநிலையணி என்பாருமுளர்.
84 - 90 : வாரொலி ........... தனக்கென்
(இதன்பொருள்) வார் ஒலி கூந்தல் பேரியல் கிழத்தி - நீண்டு அடர்ந்த
கூந்தலையுடைய பெருமைமிக்க மனைமாண்புடைய மாசாத்துவான் மனைவியாகிய மூதாட்டி;
மறப்பருங் கேண்மையோடு - இல்வாழ்வோர் எஞ்ஞான்றும் மறத்தலில்லாத
சுற்றந்தழாலோடே; அறப்பரிசாரமும் - அறவோர்க்களித்தலும்; விருந்துபுறந்தரூஉம்
பெருந் தண் வாழ்க்கை - விருந்தோம்பலும் இன்னோரன்ன பிற அறங்களையும் உடைய
பெரிய குளிர்ந்த இல்வாழ்க்கையை; வீறுபெறக் காண -தாமே நடத்தி அவ்
வாழ்க்கையின்கட் சிறப்புறுதலைத் தன் கண்ணாற் கண்டு களிக்க வேண்டி; வேறுபடு
திருவின் - தாமீட்டிய பொருளினின்றும் பகுத்துக் கொடுத்த செல்வத்தோடும்;
உரிமைச் சுற்றமொடு ஒரு தனி புணர்க்க - அவ்வாழ்க்கைக் கின்றியமையாத அடிமைத்
திரளோடும், கோவலனும் கண்ணகியுமாகிய தன் மகனையும் மருகியையும் தம்மினின்றும்
பிரிந்து வேறாக விருந்து வாழுமாறு பணித்தலாலே; இல்பெருங் கிழமையில் -
இல்லறத்தை நடத்துகின்ற பெரிய தலைமைத் தன்மையோடே; காண்தகு சிறப்பின்
பிறரெல்லாம் கண்டு பாராட்டத் தகுந்த புகழோடே; கண்ணகி தனக்கு-அக்கண்ணகி
நல்லாட்கு; சில யாண்டு கழிந்தன-ஒருசில யாண்டுகள் இனிதே கழிந்தன; என்க.
(விளக்கம்) வார் - நெடுமை. ஒலித்தல் ஈண்டு அடர்தன் மேற்று. பேரியல் - மனைவிக்குரிய பெருங்குணங்கள். அவையாவன:
கற்புங் காமமும் நற்பா லொழுக்கமும்
மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்துபுறந் தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்.
என்க; (தொல்-கற்பியல். 11) ஈண்டுப் பேரியற் கிழத்தி என்றது, மாசாத்துவானின் இற்கிழத்தியை (கோவலன் தாய்).
இனி, வாரொலி கூந்தல் பேரியற்கிழத்தி என்பதுவே அடியார்க்கு நல்லார் கொண்ட
பாடமாம் ஆயினும் வாரொலி கூந்தல் என்பதனை அன்மொழித் தொகையாகக் கொண்டு
(கண்ணகியை) வீரபத்தினியை என்பர் அடியார்க்குநல்லார். பேரியற் கிழத்தி
எனினுமமையும் என்றலின் அவர் கொண்ட பாடம் வாரொலி கூந்தல் பேரியற் கிழத்தி
என்பது பெறப்படும். வாரொலி கூந்தலைப் பேரியற் கிழத்தி என்று காணப்படும்
பாடம் பிழைபடக் கொண்டதாம். பேரிற்கிழத்தி என்பது அரும்பதவுரையாசிரியர்
கொண்டபாடமாம். இன்னும் அவர் அறப்பரிகாரம் என்று பாடங்கொண்டமை அவர் உரையால்
விளங்கும்.
வாரொலி கூந்தற் பேரியற் கிழத்தி என்று பாடங்கொண்ட
அடியார்க்கு நல்லார், கூந்தலையுடைய வீரபத்தினி எனப் பொருள் கூறுதல் மிகை.
பேரியற் கிழத்திக்குக் கூந்தலை அடையாக்குதலே அமையும். இவர் உரையால்
மயங்கிப் பின்னர் ஏடெழுதினோர் வாரொலி கூந்தலை என்றே எழுதி விட்டனர் போலும்.
கேண்மை-எல்லோரிடத்தும் கேளிராந்தன்மையுடையராதல், அன்புடையராந் தன்மை. இஃது
இல்லறத்தார்க்கு இன்றியமையாப் பண்பாகலின் அதனை மறப்பருங்கேண்மை என்றார்.
அறப்பரிசாரம்-அறங்கூறுமாற்றால் ஒழுகுதல். ஈண்டு, (கொலைக்-71-2.)
அறவோர்க்களித்தலும் துறவோர்க் கெதிர்தலும் எனக் கண்ணகியார் கூறியவை இதன்கண்
அடங்கும். பரிசாரம் என்பது ஏவற்றொழில் செய்தல் என்னும் பொருட்டாகலின்
அறவோர் முதலிய இம் மூவரும் ஏவிய செய்வதே இல்லறத்தார் கடனாகலின் இவற்றை
அடக்கி வேறு ஓதினர். எஞ்சிய விருந்தோம்பல் முதலியவெல்லாம் விருந்து
புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கை என்பதன்கண் அடங்கும். இல்லற வாழ்க்கை
ஏனையோர்க் கெல்லாம் தண்ணியநிழல் போறலின் அதனைப் பெருந்தண் வாழ்க்கை என்று
விதந்தனர். இவையெல்லாம் (கொலைகளக் காதையில்) தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் என்பதன்கண் அடங்கும். வேறுபடுதிரு - பிரிக்கப்பட்ட
செல்வம். கோவலனும் கண்ணகியும் இல்லறம் நடத்தற் பொருட்டுத் தமது பழம்
பொருள்களினின்றும் கூறுபடுத்துக் கொடுத்த செல்வம் எனக் கோடலே ஈண்டுப்
பெரிதும் பொருந்துவதாம். என்னை? கோவலன் பொருளிழந்த பின்னரும், அவனுடைய
இருமுது குரவரும் தமக்கெனப் பொருளுடையராயிருந்தமை, நீர்ப்படைக் காதையில்
கோவலன் இறந்தமை கேட்ட மாசாத்துவான் தன்பாலிருந்த மிக்க பொருளையெல்லாம்
தானமாக வீந்துபோய்த் துறவியாயினன் என்பதை மாடல மறையோன் கூற்றாக வருகின்ற
கோவலன்றாதை கொடுந்துயர் எய்தி மாபெருந் தானமாவான் பொருளீத்தாங்கு....
துறவியெய்தவும் என்பதனால் அறியப்படும். ஆதலானும் கனாத்திறம் உரைத்த
காதையில் குலந்தருவான்பொருட்குன்றம் தொலைத்த இலம்பாடு நாணுத்தரும் எனக்
கோவலன் குறிப்பது ஈண்டுத் தமக்கென வேறுபடுத்துக் கொடுத்த பொருளையே ஆதலானும்
என்க. இந்நுணுக்க முணரார் நானாவிதமான செல்வம் என்றும், பலபடைப்பாகிய
செல்வத்தோடே என்றும் தத்தம் வாய் தந்தன கூறலாயினர். வீறு - மற்றோரிடத்தே
காணப்படாத சிறப்பு.
ஒருதனி புணர்க்க என்றது அவள் நடத்தும் இல்லற
வாழ்க்கையினூடே தான் சென்று புகாமல் முழுவதும் அவள் தலைமைக்கே விட்டு
விட்டதை உணர்த்தும். இற்பெருங் கிழமையில் ஏனையோர் கண்டு பாராட்டத் தகுந்த
சிறப்புடைய கண்ணகி என்க. இதற்கு அடியார்க்கு நல்லாரை யுள்ளிட்டார் கூறும்
உரைகள் போலியாதலறிக.
இனி இக்காதையினை, செல்வர்க்குத் தோன்றிய
கண்ணியும் கொழுநனும் தென்றலைக் கண்டு மகிழ்சிறந்து ஏறிக் காட்சிபோல இருந்து
எழுதப் பின்னர் இருவரும் மயங்கிக் கையற்றுழிக் குறியாக் கட்டுரை
கூறுகின்றவன் உலவாக் கட்டுரை பல பாராட்டிச் செல்வுழி ஒருநாள்
பேரியற்கிழத்தி புணர்க்க, கண்ணகிக்கு இற்பெருங் கிழமையில் யாண்டு சில
கழிந்தன என வினையியைபு காண்க.
(இஃது எல்லாவடியும் நேரடியாய் வந்து முடிதலின்)
நிலைமண்டில ஆசிரியப்பா
வெண்பா
தூம ........ நின்று
(இதன்பொருள்) காமர் மனைவி எனக் கை கலந்து - முற்கூறிய கோவலனும் கண்ணகியும்
காமவேளும் இரதியும் போன்று தம்முள் உள்ளப்புணர்ச்சியால் ஒருவருள் ஒருவர்
கலந்து; தூம் அம்டணிகள் ஒன்றித் தோய்ந்தால் என - மற்று மெய்யுறு
புணர்ச்சிக்கண் காமநுகரும் அழகுடைய பாம்புகள் உடலாற் பிணைந்து புணருமாறு
போன்று புணர்ச்சி எய்தி; ஒருவார் - தம்மை ஊழ் கூட்டுவித்த அவ்வொரு சில
யாண்டுகளினும் ஒருவரை ஒருவர் பிரியாதவராய்; மண்மேல் நிலையாமை கண்டவர்
போன்று- இவ்வுலகின்கண் யாக்கையும் இளமையும் செல்வமும் ஆகியவற்றின்
நிலையாமையை உணர்ந்து அவை உளவாயிருக்கும் பொழுதே அவற்றாலாகும் இன்பத்தை
நுகர்தற்கு விரைவார் போன்று; நின்று நாமம் தொலையாத இன்பம் எலாம் துன்னினார்
- அழகிய அவ்வின்பவொழுக்கத்திலே நிலைபெற்று நுகர்ந்து நுகர்ந்தமையாத
காதலின்பம் எல்லாவற்றையும் நுகர்ந்தனர்.
(விளக்கம்) தூம் -
தூவும்; நுகரும்; துவ்வுதல் என்னும் வினைச்சொல் அடியாகப் பிறந்த எச்சம்.
இதன் ஈற்றுயிர் மெய்கெட்டது. இஃது எதிர்மறைக்கண் தூவா என வரும்.
தூவாக்குழவி எனவருதல், அறிக. ஈண்டுக் காமம் துய்க்கும் பணிகள் என்றவாறு.
அப்பணி என்பதன் விகாரம்; அம் - அழகு. பணி-பாம்பு. இவை
மெய்யுறுபுணர்ச்சிக்கு உவமம். நாமம்-அழகு. உளபோதே இன்பத்தை நுகர்தற்கு
விரைவராதலின் உவமமாயினர்.
இவ்வெண்பா பல பிரதிகளில் காணப்பட்டிலது என்பர்.
மனையறம்படுத்த காதை முற்றிற்று.