புதன், 23 அக்டோபர், 2013

விரதம் மற்றும் பண்டிகை தினங்களில் ஆலயங்களில் செய்யக்கூடிய 18 பணிகள்!

நமக்கு அன்றாடம் எவ்வளவோ பணிகள் இருந்தாலும் விரத மற்றும் பண்டிகை நாட்களிலாவது ஆலயப்பணிகளை செய்து இறைவனின் பரிபூரண அருளைப் பெறுவோம்.

1. சன்னதிதோறும் கோலமிடுதல்
2. ஆலய வளாகத்தை அலங்கரித்தல்
3. தரைப் பகுதியைப் பெருக்குதல்
4. மேல்பகுதிகளில் ஒட்டடை நீக்குதல்
5. கட்டிடங்களில் உள்ள செடிகளை அகற்றுதல்
6. விளக்கு, திருவாசிகளைத் தேய்த்தல்
7. மின் அமைப்பைப் பராமரித்தல்
8. நந்தவனத்தைப் பேணுதல்
9. அபிஷேக நீர்த்தொட்டியை சுத்திகரித்தல்
10. மண்டபங்களைக் கழுவி விடுதல்
11.சிறப்பு வழிபாடுகளை நடத்துவித்தல்
12. பூஜைப் பணிகளில் உதவுதல்
13.தரிசிப்போரை வரிசைப்படுத்துதல்
14. பிரசாதம் வழங்களில் உதவுதல்
15. புதியவர்க்கு வழிகாட்டல்
16. இறைத் துதிகளை கற்றுவித்தல்
17. இறை நூல்களை விநியோகித்தல்
18. வழிபாட்டில் முழுமையாக பங்கேற்றல்.
கை குலுக்கும் பழக்கம் குரங்குகளிடமிருந்து மனித இனத்தைத் தொற்றியதா?

ஷேக் ஹாண்ட் கொடுக்கும் பழக்கம் மேல்நாட்டுக்காரர்களிடம் இருந்து இன்று உலகிலுள்ள எல்லாரையும் தொற்றியுள்ளது. வெளிநாட்டு பிரமுகர்கள் நம்மூர் பிரமுகர்களை சந்திக்க வந்தால் நீண்ட நேரமாக கை குலுக்குவதை டிவிகளில் காட்டுகிறார்கள். இந்தப் பழக்கம் குரங்குகளிடம் இருந்து மனித இனத்தைத் தொற்றிய சுவாரஸ்யமான கதை உங்களுக்கு தெரியுமா?

ஒரு பெண்ணை ஆணுக்கு தாரை வார்த்துக் கொடுப்பதை பாணிக்ரஹணம் என்பர். அதுபோல, ராமபிரானை சுக்ரீவன் சந்தித்து அவருடன் நட்பு ஏற்படுத்திக் கொள்ள விரும்பினான். அதற்கு அடையாளமாக தனது கையை அவர் பிடித்தால் போதும் எனக்கருதி க்ருஹயதாம் பாணினா பாணிம் என்றான். கையைப் பிடித்தாலே நம் நட்பு உறுதியாகி விட்டது என்று பொருள். ராமன் மனிதனாக வந்திருந்தார் என்றாலும் அவர் கருணாமூர்த்தி. அவரவர் தரத்தைப் புரிந்து கொண்டு, அதே தரத்திற்கு தானும் இறங்கி வந்து அனுக்கிரஹம் செய்பவர். எனவே, குரங்கு என்றும் பாராமல் சுக்ரீவனின் கையைப் பிடித்து நட்பை உருவாக்கிக் கொண்டார். இவ்வாறு முதன் முதலில் கைபிடித்து உருவாகிய நட்பு, இன்று பரிணாம வளர்ச்சி பெற்று கை குலுக்கும் அளவுக்கு போயிருக்கிறது. வெள்ளைக் காரர்கள் நம் நாட்டை ஆண்ட போது, அவர்களை குரங்குக்கு ஒப்பிட்டு பரிகாசம் செய்ய, ஆன்மிக உபன்யாசகர்கள் இந்த மேற்கோளை காட்டுவார்களாம்.
இடதுகண் துடித்தால் ஆண்களுக்கு கேடு என்பது ஏன்?

இடதுகண் துடித்தால் பெண்களுக்கு லாபம், ஆண்களுக்கு கேடு என்பதை ராமாயணம் தெளிவாகக் காட்டுகிறது. ராமனும், சுக்ரீவனும் நட்பு கொண்டனர். அவர்கள் நட்பு கொண்டதற்கு அடையாளமாக கையைப் பிடித்தபடியே, புதுமணத் தம்பதிகள் போல அக்னியை வலம் வந்தனர். ""ராமா! நாம் நண்பர்களாகி விட்டோம். இனிமேல், சுகமோ கஷ்டமோ நம் இரண்டு பேருக்கும் உரியது, என்றான் சுக்ரீவன். ராமனும் அந்த வார்த்தைகளை அங்கீகரித்தார். அந்த சமயத்தில், எங்கோ இருந்த மூவருக்கு இடதுகண் துடித்தது. ஒன்று அசோகவனத்தில் இருந்த சீதை. பெண்களுக்கு இடதுகண் துடித்தால் நன்மை ஏற்படும். சீதையின் விடுதலைக்கான நேரம் அப்போதே குறிக்கப்பட்டு விட்டது. வாலி மற்றும் ராவணனுக்கும் இடது கண்கள் துடித்தன. ஆண்களுக்கு இது கெடுபலனை உண்டாக்கும். அவர்களின் அழிவுக்கான நேரமும் அப்போதே உருவாகி விட்டது. பெண்களுக்கு எந்த ஆண் துரோகம் இழைக்கிறானோ, அவனுக்கு இடதுகண் துடித்தால், அவனது முடிவுகாலம் நெருங்கி விட்டது என்று அர்த்தம்.
உள்ளங்கை அரித்தால் பண வரவு கிடைக்கும் என்பது உண்மையா?

நடைமுறை வாழ்க்கையில் பல்வேறு விதமான பழமொழிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒரு சிலர் சகுன சாஸ்திரங்களை நம்பி அதன்படி நடக்கின்றனர். எனினும், எல்லாம் அறிந்தவர் இறைவன் ஒருவரே. இந்தக் காரணங்களினால் இந்த காரியம் நடைபெற வேண்டும் என்று நம்மை வழிநடத்திச் செல்பபவர் அவரே. கடுமையாக உழைத்தால் அதற்கு ஏற்ற பலன்களை இறைவன் நமக்கு நிச்சயம் அளிப்பார். இதுபோன்ற மக்களின் மூடநம்பிக்கைகளில் நேரத்தை செலவழிக்காமல் நம்மால் இயன்ற உதவிகளை பிறருக்கு செய்வோம். இறை அருள் நமக்கு எதை அருளினாலும் அதை ஏற்றுக்கொள்வோம்.
இறைவழிபாட்டில் எலுமிச்சம்பழத்திற்கு முக்கியத்துவம் ஏன்?

எல்லாம் வல்ல இறைவனுக்கு நம்மால் இயன்றவற்றை பக்தியுடன் அளிப்பதே பூஜை. ஆண்டவனுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனானது அவருக்கு மட்டும் இல்லாமல் அனைத்து ஜீவராசிகளையும் சென்றடைந்து பயன் அளிக்கிறது. நாம் நமது சக்திக்கு ஏற்றவாறு பக்தியுடன் அளிக்கும் அனைத்து பொருட்களையும், இறைவன் அன்புடன் ஏற்கிறார். ஆகமங்களில் ஒவ்வொரு தெய்வ வடிவங்களுக்கும் அவர்களுக்கு உரிய சிறப்பான மலர், பழங்கள், மந்திரங்கள், வஸ்திரங்கள், எந்த நாட்களில் செய்ய வேண்டும் என மிகச் சிறப்பாக வகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒரு சில அனைத்து தெய்வங்களுக்கும் பொதுவானதாக உள்ளது. புஷ்பங்களைத் தொடுத்து மாலையாக அணிவிப்பதைப் போல, சில சிறப்பான பழங்களையும் மாலையாகக் கட்டி கடவுளுக்கு அர்ப்பணிப்பதை ஆகமங்கள் ஆமோதிக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று தான் எலுமிச்சம்பழம்.

தீயவற்றைப் போக்கி நன்மையை அளிக்கக்கூடிய மிகப் பெரிய மருந்து இது. வெற்றியின் அடையாளமாகவும் வீரத்தின் அடையாளமாகவும் எலுமிச்சம்பழம் உள்ளது. காளி, மாரி, துர்கா போன்ற வீரத்தை வெளிப்படுத்தி நம்மைக் காக்கும் தெய்வங்களுக்கு இவை மிக உகந்தது. எனினும், மற்ற தெய்வங்களுக்கும் இவற்றை அளிக்கலாம். இவ்வகையில் எலுமிச்சம்பழத்தை மாலையாகக் கடவுளுக்கு அளிப்பதினால், அந்தப் பழத்தின் சிறந்த மஞ்சள் நிறத்தினாலும் தன்மையாலும் நாம் நமது காரியங்களில் வெற்றியடையலாம் என்பது உறுதி. அக்காலங்களில் நாம் நமது பிரார்த்தனையைத் தெரிவிக்க வேண்டுமெனில், அவர்களாகவே தங்களின் பிரார்த்தனைகளை சங்கல்பித்துக்கொண்டு பூவையோ பழங்களையோ தொடுத்து கடவுளுக்கு அளித்து நன்மைகளைப் பெற்றார்கள். முயன்றவரை நாமும் நம் கைகளால் பூவையோ, பழங்களையோ மாலையாகத் தொடுத்து இறைவனுக்குப் படைத்து பயனடைவோம்.
பக்தர்கள் கருப்பு மற்றும் மஞ்சள் ஆடை அணிவது ஏன் தெரியுமா?

சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் கருப்பு, காவி மற்றும் கருநீலம், பச்சை ஆகிய நிறங்களில் ஆடைகள் அணிகிறார்கள். ஆனால் கருப்பு ஆடை அணிவது தான் ஏற்றது. கருப்பு ஆடை அணிந்தால் தீங்கு விளைவிக்கக் கூடிய மிருகங்கள் நெருங்காது. இதற்கு அடுத்ததாக காவி உடையை தேர்வு செய்யலாம் இந்த ஆடை அணிந்தால் தேள், பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் கிட்ட வரவே வராது.

மஞ்சள் ஆடையின் மகிமை: சில ஊர்களில் கோயில் திருவிழா ஆரம்பித்ததும், விரதம் இருக்கும் பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து கொள்வார்கள். அது பக்தியின் அடையாளம் தான் என்றாலும், அதனால் பல நன்மைகளும் இருக்கிறது. அதாவது, திருவிழா நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் கூடுவதால் நோய்க் கிருமிகள் பரவ வாய்ப்பு உண்டு. அந்த கிருமிகள் தாக்குதலை தடுக்கும் சக்தி இந்த மஞ்சள் ஆடைக்கு உண்டு. மேலும் மன ரீதியாக தெய்வ நம்பிக்கையையும் இந்த மஞ்சள் ஆடை அதிகரிக்கிறது.
சனி பெயர்ச்சியால் சங்கடமா? இருக்கு எளிய பரிகாரம்!

சனிதோஷம் விலக வழி: சனிபகவானுக்குரிய இலை வன்னி இலை. இந்த இலையால் நவக்கிரக மண்டபத்திலுள்ள சனி பகவானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். உங்கள் ஊர் கோயில்களில் வன்னிமரம் வைக்க ஏற்பாடு செய்யலாம். மேலும், சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்ற வேண்டும். நவக்கிரக மண்டபத்திலுள்ள சனீஸ்வரருக்கு நீலநிற வஸ்திரம் அணிவிக்கலாம். மாற்றுத்திறனாளிகள், அவலட்சணமாக இருப்பவர்களுக்கு உதவி செய்தால், மிகுந்த நன்மை தருவார். திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு ( திருவாரூர்), குச்சனூர்(தேனி) ஆகிய ஊர்களிலுள்ள  கோயில்களுக்கு சென்று  அர்ச்சனை செய்து வரலாம்.

அஷ்டமச்சனி பரிகாரம்: நல்லெண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் இந்த மூன்று எண்ணெயையும் கலந்து, ஒரு இரும்பு விளக்கில் எட்டு முகம் வைத்த திரியை கொண்டு சனீஸ்வரனுக்கு விளக்கேற்றி, அவரை வலம் வந்து வழிபட்டால் அஷ்டமச்சனி விலகிவிடும். நிம்மதி பிறக்கும். வாழ்க்கை சந்தோஷமாகும்.
யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா?

சாஸ்திரங்களில் 9 விஷயங்களை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த 9 விஷயங்கள் இவை தான்:

1. ஒருவரது வயது, 2. பணம் கொடுக்கல் வாங்கல் 3. வீட்டு சச்சரவு, 4. மருந்துகளில் சேர்க்கப்பட்ட பொருட்கள், 5. கணவன்-மனைவி அனுபவங்கள், 6. செய்த தானம், 7. கிடைக்கும் புகழ், 8. சந்தித்த அவமானம், 9. பயன்படுத்திய மந்திரம். இந்த 9 விஷயங்களையும் என்றும் ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
300 வயது வாழ அகத்தியர் கூறும் வழிமுறை!

நவீன அறிவியலின் படி ஒரு மனிதன் முன்னூறு ஆண்டுகள் வாழ்வதெல்லாம் சாத்தியமல்ல என்பது பல காலம் முன்னரே நிரூபிக்கப் பட்ட ஒன்று.இருந்தாலும் சித்தர்கள் பலநூறு வருடங்கள் வாழ்ந்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. ஹோமங்கள் செய்வதன் மூலமாக ஒருவன் முன்னூறு வயதுவரை வாழலாம் என்கிறார் அகத்தியர், இதன் சாத்தியங்கள் ஆய்வுக்குறியது. எனினும் நீண்ட ஆயுளைத் தரும் என்கிறவகையில் இந்த ஹோமத்தினை அணுகிடலாம். ஹோமங்கள் பற்றி அகத்தியரின் பாடல் ...

அறிந்துகொண்டு புவனையுட மந்திரந்தன்னால்
அப்பனே நெய்தனிலே அருகுதோய்த்து
தெரிந்தந்த ஓமகுண்டந் தன்னில்மைந்தா
சிறப்பான ஓமமது தீர்க்கமாக
வருந்திநன்றாய் மண்டலமே செய்தாயாகில்
மகத்தான பிரமமய மாவாய்பாரு
இருந்துரெண்டு மண்டலமே ஓமஞ்செய்தால்
என்னசொல்வேன் முன்னூறு வயதாம்பாரே

பொருள்: அறுகோண வடிவத்தை உடைய ஓம குண்டம் செய்து, அதில் வன்னி மரத்தின் குச்சிகளைக் கொண்டு தீ வளர்த்திட வேண்டுமாம். அப்படி தீ வளர்க்கையில் வழமை போலவே அக்கினி மூல மந்திரமான ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா என்ற மந்திரத்தை சொல்லி தீ வளர்த்திட வேண்டும். தீ வளர்ந்த பின்னர் புவனையின் மூல மந்திரமான ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா என்ற மந்திரத்தைக் கூறிக் கொண்டே அறுகினை, பசு நெய்யில் தோய்த்து போட வேண்டும் என்கிறார். இப்படி 1008 முறை செய்திட வேண்டும் என்கிறார் அகத்தியர். இந்த ஹோமத்தினை தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் செய்து வந்தால் பிரம்மத்தை உணரலாமாம். அதையே தொடர்ந்து  இரண்டு மண்டலம் அதாவது 96 நாட்கள் செய்து வர 300 வயதுக்கு மேல் வாழலாம் என்கிறார் அகத்தியர்.
பூஜையின் போது கோயில் மற்றும் வீடுகளில் மணியடிப்பது ஏன்?

பூஜையின் போது மணியோசை முக்கிய பங்குவகுக்கிறது. பூஜை முன்னால் மணி அடித்தால், அந்த மணி சப்தம் அசுரர், அரக்கர்கள் போன்ற கொடியவர்களை விரட்டியடித்து தேவர்களையும், தேவ கணத்தினரையும் அழைக்கவே பூஜையின் போது மணியடிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். நிருத்தம், வாத்தியம், கீதம் இந்த மூன்றில் மணியோசைக்கும் ஓர் இடம் உண்டு. சங்கு, மணி, சேமக்கலம் இம்மூன்றுமே கடவுள் வழிபாட்டிற்கான சிறந்த சாதனங்களாக இன்றளவும் விளங்குகின்றன. மணி சத்தம் கேட்கும் இடங்களில் தீய சக்திகள் நெருங்காது என்பது நம்பிக்கை.
யார் இறைவனாக மதிக்கப்படுகிறார்?

தானம் செய்வது மிகச் சிறந்த விஷயமாகும். இருப்பவன் இல்லாதவனுக்கு கொடுக்கும் போது இறைவனாகவே மதிக்கப்படுகிறான். அவ்வாறு தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்...

1. அரிசியை தானம் தர பாவங்கள் தொலையும்
2. வெள்ளியை தானம் தர மனக்கவலை மறையும்
3. தங்கம் தானம் தர தோஷம் விலகும்
4. பழங்களைத் தானம் தர புத்தி, சித்தி கிட்டும்
5. தயிர் தானம் தர இந்திரிய விருத்தியாகும்
6. நெய் தானம் தர நோயைப் போக்கும்
7. பால் தானம் தர துக்கநிலை மாறும்
8. தேன் தானம் தர பிள்ளைப்பேறு கிட்டும்
9. நெல்லிக்கனி தானம் தர ஞானம் உண்டாகும்
10. தேங்காய் தானம் தர நினைத்த காரியம் வெற்றி அடையும்
11. தீபங்களை தானம் தர கண்பார்வை தெளிவாகும்
12. கோ (மாடு) தானம் தர ரிஷி, வேத, பிதிர்கடன் விலகும்
13. பூமியை தானம் தர பிரம்மலோக தரிசனமும் ஈஸ்வரலோக தரிசனமும் கிட்டும்
14. ஆடையை தானம் தர ஆயுள் விருத்தியாகும்
15. அன்னத்தை தானம் தர தரித்திரமும் கடனும் தீரும்.