செவ்வாய், 22 அக்டோபர், 2013

பெண்கள் நெற்றியில் அணியும் குங்குமத்தின் சிறப்பு தெரியுமா?

பெண்கள் நெற்றியில் குங்குமம் அணிவதற்கு பல காரணங்கள் உண்டு. குங்குமம் மங்கலப்பொருள்களில் ஒன்று என்பதால் அதை நெற்றியில் அணியும் போது, தீய சக்திகள் விலகும். அதிலும் இரு புருவங்களுக்கிடையில் குங்குமம் வைத்தால், அவர்களை யாரும் அவ்வளவு எளிதில் வசியம் செய்ய முடியாது. மேலும் மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு போன்ற கிருமி நாசினிப் பொருட்களைக் கொண்டு குங்குமம் தயார் செய்யப்படுகிறது. அவ்வாறு தயார் செய்யப்பட்ட குங்குமத்தை பெண்கள் தங்களுடைய நெற்றியின் மையப் பகுதியில் அணிவதால் உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளின் வெப்பத்தை குங்குமம் தடுக்கிறது. மேலும் குங்குமத்தின் மேல் சூரிய ஒளிப்படும்போது குங்குமத்தில் உள்ள மூலிகை தன்மையும், சூரிய சக்தியிலிலிருந்து வெளிப்படும் வைட்டமின் டி சக்தியும் உடலுக்குள் சென்று நன்மையை ஏற்படுத்தி தருகிறது.அதேபோல் மன அமைதி, மங்களகரமான தோற்றம், உடல் நலத்தையும் தருவதால் பெண்கள் தங்கள் நெற்றியில் குங்குமம் அணிகிறார்கள்.

குங்குமத்தை மோதிர விரலால் தான் நெற்றியில் இட வேண்டும். மற்ற விரல்களைப் பயனபடுத்தக்கூடாது. கோயில்களிலோ, வீட்டிலோ குங்குமத்தை எடுத்து இடது கையில் போட்டுக் கொண்டு, வலது கைவிரலால் தொட்டு வைப்பதும் கூடாது. வீட்டில் யாராவது ஒருவரை வலது உள்ளங்கையில் சிறிதளவே போடச் சொல்லி, வலதுகை மோதிர விரலை வளைத்து குங்குமத்தை தொட்டு நெற்றியில் இட வேண்டும்.
இனிமையான இல்லறம் அமைய என்ன செய்ய வேண்டும்?

இன்று உள்ள காலகட்டத்தில் குடும்பத்தை நடத்தும் பொறுப்பு, பணிச்சுமை போன்ற பலவிதமான காரணங்களால் கணவன், மனைவி இருவரும் தங்களுக்குள் அன்பையோ, பிரச்சனைகளையோ பரிமாறிக் கொள்வது குறைந்து வருகிறது. மனம் ஒத்த தம்பதிகளாக நூற்றுக்குப் பத்து பேர் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். இருவரும் விட்டுக் கொடுத்து வாழ மனமில்லாமல் தங்களில் யார் பெரியவர் என்ற மனநிலையிலேயே காலத்தை கழித்து விடுகின்றனர். காலப்போக்கில் கணவன், மனைவி இருவருமே குழந்தைகளுக்காக மட்டுமே வாழ்கிறோம் என்ற சூழ்நிலை உருவாகி விடுகிறது. ஆனால் அப்படி இல்லாமல் வாழும் காலம் வரை கணவன் மனைவிக்காகவும், மனைவி கணவனுக்காகவும் மட்டுமே வாழ வேண்டும். இப்படி இல்லறத்தை நடத்துபவர்களும், இல்லற வாழ்க்கையில் ஈடுபடப் போகின்றவர்களும் கீழே உள்ள சிறுகதையைப் படித்து இல்லறத்தை எப்படி நடத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

சுமனை என்பவள் உத்தமமான பதிவிரதை. கணவனே கண் கண்ட தெய்வம் என்று வாழ்ந்தவள். இவள் திடீரென மரணம் எய்ததும், சொர்க்க லோகத்துக்குச் செல்கிறாள். நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அப்போது அங்கே சாண்டல்யன் என்பவன் எப்படியம்மா உனக்கு இப்படி ஒரு வரவேற்பு? ஏதேனும் சந்நியாச வாழ்க்கை வாழ்ந்து, உயர்ந்த நெறிகளைக் கடைப்பிடித்தாயா? என்று கேட்கிறான். அதற்கு சுமனை, சந்நியாச வாழ்க்கை எல்லாம் வாழவில்லை. பெண்களுக்கே உரிய தர்மப்படி என் கணவரைப் போற்றி வாழ்ந்தேன். அவருக்கு உரிய கடமைகளை நான் முறையாகச் செய்தேன். அவ்வளவுதான் என்றாள். வியந்தான் சாண்டல்யன். அப்படி, என்ன, எவரும் செய்யாததை நீ உன் கணவனுக்குச் செய்தாய்? என்று எதிர் கேள்வி கேட்டான். என் கணவர் மனம் வருந்தும்படி எந்த நாளும் ஒரு செய்கையை நான் செய்ததில்லை. எப்போதும் கனிவான வார்த்தைகளையே பேசி வந்தேன். கணவருக்கு எந்த ஒரு தொந்தரவையும் தர மாட்டேன். என் கணவருக்குப் பிடித்ததை மட்டுமே சமைப்பேன். பணி நிமித்தம் கணவர் வெளியே எங்காவது சென்றிருந்தால், அவர் திரும்பி வரும்வரை தெய்வ வழிபாட்டில் இருப்பேன்.

அசதியின் காரணமாக அவர் நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும்போது எத்தகைய முக்கியமான செய்தி என்றாலும், அவரை எழுப்பவே மாட்டேன். இதை வாங்கிக் கொடுங்கள்... அதை வாங்கிக் கொடுங்கள் என்று அவரை நச்சரிக்க மாட்டேன். எனக்குப் பணம் தாருங்கள் என்று அவரிடம் எந்த நாளும் நான் கேட்டதே இல்லை. அவர் ஊரில் இல்லை என்றால், நான் என்னை அலங்கரித்துக் கொள்ள மாட்டேன். என்றெல்லாம் சொல்லிக் கொண்டே போக... சாண்டல்யன் அதிசயித்தான். அவளை வணங்கினான். இதைப் படிக்கும் கணவன்மார்களுக்கு, தங்களது மனைவியும் இப்படி இருந்தால் எத்தனை சுகமாக இருக்கும் என்கிற ஏக்கம் வருவது இயற்கை! உண்மை ! எதிர்பார்ப்பு ! ஆனால், பதிவிரதா தர்மத்தில் இருந்து சுமனை இம்மியும் நழுவாமல் இருந்ததற்கு, உத்தமமான அந்தக் கணவனும் ஒரு காரணம் என்பது உண்மை. இல்லறம் என்பது கணவனும் மனைவியும் இணைந்து நடத்துகிற நல்லறம் ! அதில் கண்ணீரும், கவலையும் கலந்து விடாமல் இருக்க வேண்டும் ! கணவனும் மனைவியும் ஒருவர் மீது மற்றொருவர் செலுத்துகிற அன்பே, இந்த இல்லறத்தின் மூலதனம் ! இதயம் மட்டும் உறுதி கொண்டதாக அமைந்து விட்டால், ஒரு சுண்டெலிகூட யானையைத் தாக்கி விடும் என்பது மேலைநாட்டுப் பழமொழி. உங்கள் இதயங்களை உறுதி கொண்டதாக ஆக்குங்கள். இல்லறம் நல்லறமாக மாறும்.
சிவ பூஜையில் கரடி என்றால் என்ன?

பூஜை செய்யும்போது தடங்கல் வந்தால், சிவ பூஜையில் கரடி வந்த மாதிரி என்று சொல்வார்கள். இதில் கரடி என்பது மிருகத்தை குறிக்காது. கரடி என்பது ஒரு வகை வாத்தியம். முற்காலத்தில் மன்னர்கள் சிவபூஜை செய்யும் போது, கரடி வாத்தியம் வாசிக்கச் செய்வர். இதைத்தான், சிவபூஜையில் கரடி என்பர். ஆனால், பிற்காலத்தில் இதுவே பூஜைக்கு இடையூறு ஏற்படுவது போல அர்த்தம் மாறி விட்டது.
மனிதனுக்கு உண்மை தேவை அறிவியலா? ஆன்மிகமா?

படித்தவர், பாமரர் அனைவரும் அகத்தியரை அறிவார்கள். உலகின் முதல் சோதனைக்குழாய் குழந்தை அகத்தியர்தான் ! குடுவையில் கருத்தரித்து, வளர்ந்து வெளிப்பட்டதால் அவரை, கலயத்தில் பிறந்தோன் (கும்பசம்பவர்) என்றும், குடமுனி என்றும் கூறுவர்.செயற்கை முறையில் உருவாக்கப்படும் உயிரினங்கள், தொடக்க நிலையில் இயல்புக்கு மாறான உருவத்தைப் பெற்றிருக்கும் என்பதும், இயல்பான வளர்ச்சி, மேம்பட்ட ஆய்வுகளுக்குப் பிறகே சாத்தியமாகும் என்பதும் அறிவியல் உண்மை. முதல் சோதனைக் குழாய் குழந்தையாகிய அகத்தியர் இயல்புக்குக் குறைவான உயரமே பெற்றிருந்தார் என்பது இந்த உண்மையை நிரூபிக்கிறது.

வெய்யில் சுட்டெரிக்கும் போது உடல் எங்கும் வியர்த்து கொட்டுகிறது. வேலைகள் செய்ய முடியாத அளவுக்கு சோர்வாகயிருக்கிறது. ஆன்மிகத்தால் வியர்வையை போக்கும் ஒரு விசிறி மட்டை கூட செய்து தர முடியவில்லை. மார்கழி மாத கடுங்குளிரில் நடுங்கும் போது விஞ்ஞான கண்டுபிடுப்பான கம்பளி போர்வை தான் காப்பாற்றுகிறது,காலராவை ஒழித்தது விஞ்ஞானம்.  கால் கடுக்க
நடந்தவனுக்கு கார்களை தந்தது விஞ்ஞானம். கண்டம் விட்டு கண்டம் தாவும் ஆயுதங்களை படைத்தது விஞ்ஞானம். இத்தனையும் தந்த விஞ்ஞானம், இதை போற்றுவதை விட்டுவிட்டு ஆலகால விஷம் உண்ட ஆண்டவா போற்றி என பாடுவது எந்த வகையில் நியாயமாகும்? என்று கேட்கலாம். அறிவு கலப்பையை அகலமாக உழுவதை விட ஆழமாக உழுதால் இந்த கேள்விக்கு எல்லாம் நல்ல பதில் கிடைக்கும். வெப்பத்தில் வியர்க்கிறது.  வியர்வையினால் உடம்பில் உள்ளிருக்கும் கழிவு பொருள் எல்லாம் வெளியேறுகிறது. காற்றாடி கொண்டு வீசினால் சுகமாக இருக்கும்.  ஆனால் நாளடைவில் கழிவுகள் உடம்பில் தங்கி நோய்களாக வெளிவரும்.

குளிரால் நடுங்கும் போது தசைகள் துடித்து முறுக்கேறுகிறது.  நரம்புகள் தாங்கும் திறனை அதிகரித்து கொள்கிறது. கம்பளி குளிரை தடுக்கலாம்.  நோயை தடுக்காது. எப்படி பார்த்தாலும் விஞ்ஞானம் தருகின்ற கருவிகள் எல்லாம் மனிதர்களுக்கு தற்கால சுகத்தை கொடுத்து நெடுங்கால கஷ்டத்தை தருவதேயாகும். ஆன்மிகம் துயரத்திலிருந்து தப்பிக்க வழி சொல்லாது.  அந்த துயரத்தோடு மோதி ஜெயிப்பதற்கு தான் வழிகாட்டும். நிரந்தரமான சந்தோஷமே ஆன்மிகத்தின் இறுதி நோக்கம். நாம் நினைப்பது போல விஞ்ஞானம் சுகமான வாழ்க்கையை நமக்கு தரலாம் ஆனால் மனித சமுதாயம் இன்று அனுபவித்து கொண்டிருக்கும் கஷ்டங்களுக்கும் அதுவே ஒரு வகையில் காரணமாக இருக்கிறது. அதற்காக விஞ்ஞானம் என்பதும் அறிவு தேடல் என்பதும் வேண்டாம் என்பது அர்த்தமல்ல. எல்லாமே விஞ்ஞான பூர்வமாக இருப்பது தான் சரி என்ற மனோபாவம் தவறு என்பதே. சொல்ல போனால் விஞ்ஞானம் என்பதே ஒரு வகை ஆன்மிகம் தான். மக்கள் கஷ்டம் தீர்க்க புறப்பொருளை நாடுவது விஞ்ஞானம்.  அகப்பொருளை தேடுவது மெய் ஞானம் ஆகும். சக்தி தான் சிவம், சிவன் தான் சக்தி.  இரண்டாக தெரிந்தாலும் இரண்டும் ஒன்று தான் என்கிறது ஆன்மிகம். பொருளும் பொருளின் சக்தியும் வேறு வேறானது அல்ல ஒன்று தான் என்கிறது அறிவியல். சொல்லும் முறையில் தான் மாற்றம் இருக்கிறதே தவிர உள் கருத்து என்னவோ ஒன்று தான்.

அறிவியல் மனிதனின் தேவையை பூர்த்தி செய்வதற்காக!
ஆன்மிகம் என்பது என்ன தேவை என்பதை அறிவது அல்ல
தேவையற்றது எது என்பதைப் புரிந்து கொள்வதற்காக!
தமிழ் மாதங்கள் பிறந்தது எப்படி?

தமிழ் மாதம் என்றால் சித்திரை, வைகாசி என ஆரம்பித்து மாசி, பங்குனி என முடிவது நம் அனைவருக்கும் தெரியும். இந்த மாதங்களுக்கு எப்படி பெயர் வந்தது, யார் பெயர் வைத்தார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆர்வமாக உள்ளதா, இதோ கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை படித்தால் மாதங்களுக்கு பெயர்கள் வந்தது எப்படி என்பது உங்களுக்கு சுலபமாகப் புரிந்து விடும். சம்ஸ்கிருத வார்த்தைகளே நாளடைவில் மருவி தமிழ் மாதப்பெயர்களாக அமைந்துள்ளன. பெரும்பாலும் ஒரு மாதத்தில் அமாவாசையும், பவுர்ணமியும் மாறி மாறி வரும். இதில் பவுர்ணமி அன்று எந்த நட்சத்திரமோ அதுவே அந்த மாதத்தின் பெயராக இருக்கும். அன்றைக்கு ஒரு பண்டிகையாகவும் விழாவாகவும் இருக்கும்.

சித்ரா நட்சத்திரத்தன்று தான் சித்திரை மாசத்தில் பவுர்ணமி வரும் .அதனால் சித்திரை மாதம் என்றானது.

விசாக சம்மந்தமானது வைசாகம். விசாக நட்சத்திரத்தில் பெரும்பாலும் பவுர்ணமி ஏற்படுகிற மாதம் தான் வைசாகி. மதுரை என்பது மருதை என திரிவது போல் சமஸ்கிருத வைசாகி தமிழில் வைகாசி ஆயிற்று.

அனுஷ நட்சத்திர சம்மந்தமானது ஆனுஷீ. அந்த நட்சத்திரத்தில் பவுர்ணமி ஏற்படுகிற மாதம் ஆனுஷீமாசம். தமிழில் ஷ என்ற எழுத்து உதிர்ந்து ஆனி என்றாயிற்று.

ஆஷாட நட்சத்திரத்தில் பூர்வ ஆஷாடம், உத்தர ஆஷாடம் என்று இரண்டு உண்டு. இதில் பூர்வம் என்றால் முன், உத்தரம் என்றால் பின். பூர்வ/ உத்தர ஆஷாடம் என்பதில் உள்ள அந்த ர்வ என்ற கூட்டெழுத்து சிதைந்தும், ஷ உதிர்ந்தும் தமிழில் பூராடம் உத்திராடம் ஆயிற்று. இந்த இரு நட்சத்திரங்களில் ஒன்றில் பவுர்ணமி வரும் மாதம் ஆஷாடி. இதில் ஷா என்ற எழுத்து உதிர்ந்து ஆடி ஆயிற்று.

ச்ராவணம் என்பது ச்ரவண நட்சத்திரத்தை குறிக்கும். முதலில் உள்ள ச்ர அப்படியே தமிழில் மறைந்து, மீதமுள்ள வண த்தை ஓணம் என்கிறோம். அது  மஹாவிஷ்ணுவின் நட்சத்திரமாதலால் திரு என்ற மரியாதை சொல்லை சேர்த்து திருவோணம் என்கிறோம். அனேகமாக பவுர்ணமி ச்ராவண நட்சத்திரத்தில் வருவதால் ச்ராவணி எனப்படும். இதில் சமஸ்கிருதத்திற்கே உரிய ச், ர என்ற கூட்டெழுத்து மறைந்து ஆவணி மாதமாயிற்று.

ப்ரோஷ்டபதம் என்பதற்கும் ஆஷாடம் போலவே பூர்வமும் உத்தரமும் உண்டு. பூர்வ ப்ரோஷ்டபதம் தான் தமிழில் பூரட்டாதி ஆயிற்று. அஷ்ட என்பது அட்ட என திரிந்தது. உத்திர ப்ரோஷ்டபதம் என்பது உத்திரட்டாதி ஆயிற்று. இந்த நட்சத்தில் பவுர்ணமி ஏற்படுவதால் ப்ரோஷ்டபதி என்பது எப்படியோ திரிந்து புரட்டாசி ஆயிற்று.

ஆச்வயுஜம், அச்வினி என்பதை அச்வதி என்கிறோம். அதிலே பவுர்ணமி வருகிற ஆச்வயுஜீ அல்லது ஆச்வினீ தான் திரிந்து ஐப்பசி ஆயிற்று.

க்ருத்திகை நட்சத்திரம் தான் கார்திகை. இந்த நட்சத்திரத்தில் பவுர்ணமி ஏற்படுவதால் அது கார்த்திகை மாதமாயிற்று.

மிருகசீர்ஷம் என்பது மார்கசீர்ஷி என்றாயிற்று. இதில் பெரும்பாலும் பவுர்ணமி வரும் மாதம் மார்கசீர்ஷி என்றாயிற்று. அதில் சீர்ஷி என்பது மறுவி மார்கழி என்றாயிற்று.

புஷ்யம் தான் தமிழில் பூசம். புஷ்ய சம்மந்தமானது பவுஷ்யம். புஷ்யத்திற்கு திஷ்யம் என்றும் பெயர். பவுர்ணமி திஷ்யத்திலே வரும் மாதம் தைஷ்யம். அதிலே கடைசி மூன்று எழுத்துக்களும் போய் தை என்றாயிற்று.

மக நட்சத்திரத்தில் பவுர்ணமி வருவதால் மாகி என்றாயிற்று. இதில் கி என்பது சி யாக மருவி மாசி ஆயிற்று.

பூர்வ பல்குனியை பூரம் என்றும் உத்தர பல்குனியை உத்திரம் என்கிறோம். இந்த இரு நட்சத்திரத்தில் பவுர்ணமி வருவதால் பல்குனி எனப்படும. அதில் ல எழுத்து மருவி பங்குனி ஆயிற்று.

சமஸ்கிருதம்                                            தமிழ்

சைத்ர                                                            சித்திரை
வைஸாயுகயு                                            வைகாசி
ஆநுஷி / ஜ்யேஷ்ட                                  ஆனி
ஆஷாட                                                         ஆடி
ஸ்யுராவண​:                                                ஆவணி
ப்ரோஷ்டபதீ /பாத்யூரபதயூ                   புரட்டாசி
ஆஸ்யுவிந​:                                                  ஐப்பசி
கார்திக:​                                                            கார்த்திகை
மார்கயூஸீயுர்ஷ​:                                        மார்கழி
தைஷ்யம்/ பவுஷ​:                                       தை
மாக                                                                    மாசி
பாயுல்குயூந​:                                                   பங்குனி.
வழிபாட்டுக்கு காலை, மாலை எந்த வேளை சிறந்தது?

காலை வேளையே மிகவும் சிறந்தது. உங்களைப் பார்த்து உங்கள் வாரிசுகளும் காலையிலேயே எழும் பழக்கத்தை மேற்கொள்வார்கள். காலை 5.30 மணிக்கு எழுந்து, 6 மணிக்குள் வீடு சுத்தம் செய்து, ஏழு மணிக்குள் நீராடி, 7.30 மணிக்குள் பிரார்த்தனையை முடித்து விடுங்கள். 5 நிமிடம் வணங்கினாலும், குடும்பத்தினர் அனைவரும் இணைந்து வழிபட்டால் பிரார்த்தனைக்கு சக்தி அதிகம்.
அணில் கதைக்கு ஆதாரம் எது?

நாம் ஒருவர் செய்யும் பணியில், ஏதோ ஒரு உதவி செய்தாலே போதும்! அந்த சிறு பங்களிப்பை ராமருக்கு அணில் உதவி செய்தது போல என்ற உவமையுடன் குறிப்பிடுவர். உண்மையில், இந்த நிகழ்ச்சி ராமாயணத்தில் இடம் பெற்றதா என்றால் அதுதான் இல்லை. புகழ்பெற்ற வால்மீகி ராமாயணத்திலோ, தமிழில் கம்பராமாயணத்திலோ, இந்தியில் துளசிதாசர் எழுதியதிலோ சேதுபாலம் கட்டும் போது அணில் உதவியதாக தகவல் இல்லை. இது ஒரு கர்ணபரம்பரை கதை. ஆனால், எல்லா மொழி மக்களிடமும் இந்தக்கதை பிரசித்தமாகி விட்டது.  இந்தக் கதை எதில் தான் இருக்கிறது என்றால், திருமாலின் அடியவர்களான ஆழ்வார்களில் ஒருவரான தொண்டரடிப்பொடியாழ்வார் பாடிய திருமாலை 27வது பாசுரத்தில் இடம்பெற்றுள்ளது. அணில் பற்றிய குறிப்பு அதில் வருகிறது. அடியவர்களின் பாதத்தூளியை (தூசு) தலையில் ஏற்றுக் கொண்ட அடியவர் இவர் என்பதால், அணிலையும் பெருமையாகப் பாடிவிட்டார் என்றே தோன்றுகிறது.
விஞ்ஞானம் முடிவடையும் இடத்தில் மெய்ஞ்ஞானம் தொடங்குகிறது என்பது சரியா?

விஞ்ஞானம் ஒரு விஷயத்தை வெளிப்படையாக ஆராய்கிறது. மெய்ஞ்ஞானம் அதே விஷயத்திற்கு உள்முகமாக விளக்கம்தருகிறது. ஒவ்வொரு செயலுக்கும் நேர், எதிர்மறை பலன் உண்டு என்கிறது அறிவியல். (நியூட்டனின் மூன்றாம் விதி) அதையே ஆன்மிகமும், முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் எல்லாம் அவரவர் செய்த வினைப்பயன் என்று எச்சரிக்கிறது. விஞ்ஞானமும், மெய்ஞ் ஞானமும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை அல்ல. பாதை வெவ்வேறானாலும், உண்மையை அறிவது தான் இவற்றின் நோக்கம்.
வியாழக்கிழமைகளில் மவுனவிரதம் இருப்பது ஏன்?

மவுனமாக இருந்து பழகினால், மனசாட்சியின் மெல்லிய குரலை நம்மால் கேட்க முடியும் என்பர். மோனம் (மவுனம்) என்பது ஞானவரம்பு என்று அவ்வையார் குறிப்பிடுகிறார். சிவாலயங்களில் கல்லால மரத்தின் கீழ் தட்சிணாமூர்த்தி சீடர்களுடன் தெற்கு நோக்கி வீற்றிருப்பார். இவர் பேசும் மொழி என்ன தெரியுமா? மவுன மொழி. ஆம்..இவர் பேசுவதில்லை. சைகை மூலம் உலகத்துக்கு பெரும் தத்துவத்தைச் சொல்கிறார். இதனால் தான் இவருக்கு ஊமைத்துரை, மவுனச்சாமி என்ற பெயர்கள் உண்டு. வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பிக்கு ஊமைத்துரை என்று தான் பெயர். மவுனமாக இருப்பது வழிபாட்டு வகைகளில் ஒன்றாகும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை தியானித்து மவுனவிரதம் மேற்கொள்வது இதனால் தான். பெரும்பாலான துறவிகள் வியாழக்கிழமைகளில் பேசுவதில்லை. மவுனத்தில் மூன்று வகை உண்டு. அவை உடல் மவுனம், வாக்கு மவுனம், மன மவுனம் என்பன. உடலைச் சிறிதும் அசைக்காமல் கட்டைபோல இருப்பது உடல் மவுனம். இவர்கள் பத்மாசனத்தில் அமர்ந்து சின்முத்திரை காட்டி தியானத்தில் ஆழ்ந்திருப்பர். வாக்குமனம் என்பது பேசாமல் அமைதி காப்பதாகும். மனதாலும் மவுனமாக இருப்பதே மன மவுனம். இந்த மவுனங்களை கடைபிடிப்பவர்கள் ஞானநிலை எய்துவதுடன், கடவுளோடு பேசி உறவாடும் சக்தியையும் பெறுகிறார்கள்.
புது மணப்பெண்ணை தானியத்தை உதைத்து வீட்டிற்குள் வரவழைப்பது ஏன்?

வீட்டிற்கு வரும் புது மணப்பெண்ணை மகாலட்சுமியாகப் பார்க்கிறார்கள். அந்தக் காலத்தில் மருமகள் என்று எதற்கு சொன்னார்கள் என்றால், மகாலட்சுமியே வீட்டிற்கு வந்து வாசம் செய்கிறாள், இன்று முதல் மகாலட்சுமி குடிபுகுகிறாள் என்று சொல்லக்கூடிய வழக்கம் இருந்தது. இன்றைக்கும் சில ஊர்களில் திருமணம் முடிந்து நேராக மணமகன் வீட்டிற்கு அழைத்து வந்து அங்கு விளக்கேற்றச் சொல்வார்கள். புதுப்பெண்ணிற்கு ஒரு காமாட்சி அம்மன் விளக்கு கொடுத்து அதனை ஏற்றச் சொல்வார்கள். அவர்கள் நுழையும் போது லட்சுமியோடு உள்ளே வருகிறார்கள் என்று அர்த்தம். தானியங்கள் தான் குறிப்பாக லட்சுமியினுடைய அம்சம். அதன்பிறகுதான் வெள்ளி, தங்கம் எல்லாம். அந்தத் தானியத்திலும் முனைமழியாத பச்சரிசி, நெல் முதலியவற்றில் லட்சுமி முழுமையாக வாசம் செய்வதாக ஐதீகம். அதனால்தான் அதுபோன்று காலால் உதைக்கச் சொல்கிறார்கள். அதை அவர்கள் உதைக்கவில்லை, லட்சுமியே உதைத்து உள்ளே கொண்டு வருகிறாள். அந்தப் பெண் காலடி வைக்கும் நேரத்தில் இருந்து லட்சுமி கடாட்சம் சூழ்ந்து வருவது போன்று. அதனால்தான் வலது காலை எடுத்து வைத்து வரச் சொல்வது என்பது ஐதீகம். ஏற்கனவே அம்மி மிதித்து அருந்ததி பார்த்து மண மேடையில் அவர்கள் ஒரு புனித நிலையை அடைகிறார்கள். நாம் வைத்திருக்கும் சம்பிரதாயங்கள், சடங்குகளில் ஒரு பெண் புனித நிலையை அடைகிறார்கள். அந்த நேரத்தில் அவளுடைய மனநிலை ஒரு தெய்வ நிலையில் இருக்கிறது. அந்த நேரத்தில் அவளுக்கு கூடுதல் சக்தி கிடைப்பதாக ஐதீகம். அதனால்தான் அந்தப் பெண்ணை மகாலட்சுமியாக கருத்தில் கொண்டு தானியத்தை உதைத்து வீட்டிற்குள் லட்சுமி கடாட்சத்தை வரவழைப்பதாக ஐதீகம்.
எமகண்டம் மற்றும் குளிகை நேரத்தை எளிதாக கண்டுபிடிக்கும் வழிமுறை என்ன?

எமகண்டம்: சூரிய உதயமான காலை 6 மணியிலிருந்து தான் நல்லநேரம், ராகு, குளிகை, எமகண்டம் போன்றவை கணக்கிடப்படும். அதன்படி காலை 6 -7.30 மணிக்கு வியாழக்கிழமையில் எமகண்டம் ஆரம்பிக்கிறது. இதை கணக்கில் வைத்துக்கொண்டு கீழே கொடுத்துள்ள படி இந்த நேரத்துடன் ஒன்றரை மணி நேரத்தை கூட்டிக்கொண்டும், கிழமையை குறைத்துக்கொண்டும் வந்தால் அடுத்தடுத்த கிழமைக்கான  எமகண்ட நேரம் வந்து விடும்.

வியாழக்கிழமை எமகண்ட நேரம் - 6.00 - 7.30
புதன்கிழமை எமகண்ட நேரம் -     7.30 - 9.00
செவ்வாய்க்கிழமை எமகண்ட நேரம் - 9.00-10.30
திங்கள்கிழமை எமகண்ட நேரம் - 10.30-12.00
ஞாயிற்றுக்கிழமை எமகண்ட நேரம் - 12.00-1.30
சனிக்கிழமை எமகண்ட நேரம் - 1.30-3.00
வெள்ளிக்கிழமை எமகண்ட நேரம் - 3.00-4.30.

குளிகை: காலை 6 -7.30 மணிக்கு சனிக்கிழமையில் குளிகை நேரம் ஆரம்பிக்கிறது. இதை கணக்கில் வைத்துக்கொண்டு கீழே கொடுத்துள்ள படி இந்த நேரத்துடன் ஒன்றரை மணி நேரத்தை கூட்டிக்கொண்டும், கிழமையை குறைத்துக்கொண்டும் வந்தால் அடுத்தடுத்த கிழமைக்கான  குளிகை நேரம் வந்து விடும்.

சனிக்கிழமை குளிகை நேரம் - 6.00 - 7.30
வெள்ளிக்கிழமை குளிகை நேரம் - 7.30 - 9.00
வியாழக்கிழமை குளிகை நேரம் - 9.00-10.30
புதன் கிழமை குளிகை நேரம் - 10.30-12.00
செவ்வாய்க்கிழமை குளிகை நேரம் - 12.00-1.30
திங்கள் கிழமை குளிகை நேரம் - 1.30-3.00
ஞாயிற்றுக்கிழமை குளிகை நேரம் - 3.00-4.30.