செவ்வாய், 22 அக்டோபர், 2013

வியாழக்கிழமைகளில் மவுனவிரதம் இருப்பது ஏன்?

மவுனமாக இருந்து பழகினால், மனசாட்சியின் மெல்லிய குரலை நம்மால் கேட்க முடியும் என்பர். மோனம் (மவுனம்) என்பது ஞானவரம்பு என்று அவ்வையார் குறிப்பிடுகிறார். சிவாலயங்களில் கல்லால மரத்தின் கீழ் தட்சிணாமூர்த்தி சீடர்களுடன் தெற்கு நோக்கி வீற்றிருப்பார். இவர் பேசும் மொழி என்ன தெரியுமா? மவுன மொழி. ஆம்..இவர் பேசுவதில்லை. சைகை மூலம் உலகத்துக்கு பெரும் தத்துவத்தைச் சொல்கிறார். இதனால் தான் இவருக்கு ஊமைத்துரை, மவுனச்சாமி என்ற பெயர்கள் உண்டு. வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பிக்கு ஊமைத்துரை என்று தான் பெயர். மவுனமாக இருப்பது வழிபாட்டு வகைகளில் ஒன்றாகும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை தியானித்து மவுனவிரதம் மேற்கொள்வது இதனால் தான். பெரும்பாலான துறவிகள் வியாழக்கிழமைகளில் பேசுவதில்லை. மவுனத்தில் மூன்று வகை உண்டு. அவை உடல் மவுனம், வாக்கு மவுனம், மன மவுனம் என்பன. உடலைச் சிறிதும் அசைக்காமல் கட்டைபோல இருப்பது உடல் மவுனம். இவர்கள் பத்மாசனத்தில் அமர்ந்து சின்முத்திரை காட்டி தியானத்தில் ஆழ்ந்திருப்பர். வாக்குமனம் என்பது பேசாமல் அமைதி காப்பதாகும். மனதாலும் மவுனமாக இருப்பதே மன மவுனம். இந்த மவுனங்களை கடைபிடிப்பவர்கள் ஞானநிலை எய்துவதுடன், கடவுளோடு பேசி உறவாடும் சக்தியையும் பெறுகிறார்கள்.
புது மணப்பெண்ணை தானியத்தை உதைத்து வீட்டிற்குள் வரவழைப்பது ஏன்?

வீட்டிற்கு வரும் புது மணப்பெண்ணை மகாலட்சுமியாகப் பார்க்கிறார்கள். அந்தக் காலத்தில் மருமகள் என்று எதற்கு சொன்னார்கள் என்றால், மகாலட்சுமியே வீட்டிற்கு வந்து வாசம் செய்கிறாள், இன்று முதல் மகாலட்சுமி குடிபுகுகிறாள் என்று சொல்லக்கூடிய வழக்கம் இருந்தது. இன்றைக்கும் சில ஊர்களில் திருமணம் முடிந்து நேராக மணமகன் வீட்டிற்கு அழைத்து வந்து அங்கு விளக்கேற்றச் சொல்வார்கள். புதுப்பெண்ணிற்கு ஒரு காமாட்சி அம்மன் விளக்கு கொடுத்து அதனை ஏற்றச் சொல்வார்கள். அவர்கள் நுழையும் போது லட்சுமியோடு உள்ளே வருகிறார்கள் என்று அர்த்தம். தானியங்கள் தான் குறிப்பாக லட்சுமியினுடைய அம்சம். அதன்பிறகுதான் வெள்ளி, தங்கம் எல்லாம். அந்தத் தானியத்திலும் முனைமழியாத பச்சரிசி, நெல் முதலியவற்றில் லட்சுமி முழுமையாக வாசம் செய்வதாக ஐதீகம். அதனால்தான் அதுபோன்று காலால் உதைக்கச் சொல்கிறார்கள். அதை அவர்கள் உதைக்கவில்லை, லட்சுமியே உதைத்து உள்ளே கொண்டு வருகிறாள். அந்தப் பெண் காலடி வைக்கும் நேரத்தில் இருந்து லட்சுமி கடாட்சம் சூழ்ந்து வருவது போன்று. அதனால்தான் வலது காலை எடுத்து வைத்து வரச் சொல்வது என்பது ஐதீகம். ஏற்கனவே அம்மி மிதித்து அருந்ததி பார்த்து மண மேடையில் அவர்கள் ஒரு புனித நிலையை அடைகிறார்கள். நாம் வைத்திருக்கும் சம்பிரதாயங்கள், சடங்குகளில் ஒரு பெண் புனித நிலையை அடைகிறார்கள். அந்த நேரத்தில் அவளுடைய மனநிலை ஒரு தெய்வ நிலையில் இருக்கிறது. அந்த நேரத்தில் அவளுக்கு கூடுதல் சக்தி கிடைப்பதாக ஐதீகம். அதனால்தான் அந்தப் பெண்ணை மகாலட்சுமியாக கருத்தில் கொண்டு தானியத்தை உதைத்து வீட்டிற்குள் லட்சுமி கடாட்சத்தை வரவழைப்பதாக ஐதீகம்.
எமகண்டம் மற்றும் குளிகை நேரத்தை எளிதாக கண்டுபிடிக்கும் வழிமுறை என்ன?

எமகண்டம்: சூரிய உதயமான காலை 6 மணியிலிருந்து தான் நல்லநேரம், ராகு, குளிகை, எமகண்டம் போன்றவை கணக்கிடப்படும். அதன்படி காலை 6 -7.30 மணிக்கு வியாழக்கிழமையில் எமகண்டம் ஆரம்பிக்கிறது. இதை கணக்கில் வைத்துக்கொண்டு கீழே கொடுத்துள்ள படி இந்த நேரத்துடன் ஒன்றரை மணி நேரத்தை கூட்டிக்கொண்டும், கிழமையை குறைத்துக்கொண்டும் வந்தால் அடுத்தடுத்த கிழமைக்கான  எமகண்ட நேரம் வந்து விடும்.

வியாழக்கிழமை எமகண்ட நேரம் - 6.00 - 7.30
புதன்கிழமை எமகண்ட நேரம் -     7.30 - 9.00
செவ்வாய்க்கிழமை எமகண்ட நேரம் - 9.00-10.30
திங்கள்கிழமை எமகண்ட நேரம் - 10.30-12.00
ஞாயிற்றுக்கிழமை எமகண்ட நேரம் - 12.00-1.30
சனிக்கிழமை எமகண்ட நேரம் - 1.30-3.00
வெள்ளிக்கிழமை எமகண்ட நேரம் - 3.00-4.30.

குளிகை: காலை 6 -7.30 மணிக்கு சனிக்கிழமையில் குளிகை நேரம் ஆரம்பிக்கிறது. இதை கணக்கில் வைத்துக்கொண்டு கீழே கொடுத்துள்ள படி இந்த நேரத்துடன் ஒன்றரை மணி நேரத்தை கூட்டிக்கொண்டும், கிழமையை குறைத்துக்கொண்டும் வந்தால் அடுத்தடுத்த கிழமைக்கான  குளிகை நேரம் வந்து விடும்.

சனிக்கிழமை குளிகை நேரம் - 6.00 - 7.30
வெள்ளிக்கிழமை குளிகை நேரம் - 7.30 - 9.00
வியாழக்கிழமை குளிகை நேரம் - 9.00-10.30
புதன் கிழமை குளிகை நேரம் - 10.30-12.00
செவ்வாய்க்கிழமை குளிகை நேரம் - 12.00-1.30
திங்கள் கிழமை குளிகை நேரம் - 1.30-3.00
ஞாயிற்றுக்கிழமை குளிகை நேரம் - 3.00-4.30.
தங்கம் கனவில் வரலாமா?

தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. ஒரு பவுன் பத்து ரூபாய் இருந்தது ஒரு காலம். இப்போழுது இருபது ஆயிரம் ரூபாயை தாண்டி விட்டது. அந்த தங்கம் கனவில் வந்தால் நோய்கள் உருவாகும், கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தொழிலுக்கு செய்த முதலீடுகளில் பிரச்சனைகள் உருவாகலாம், ஆனால் தஙகத்தேர் கனவில் வந்தால் காரிய வெற்றி கிட்டும் என்பது நம்பிக்கை.
நெல்லிக்காயின் மகத்துவம் தெரியுமா?

நெல்லியில் மகாவிஷ்ணு நித்யவாசம் செய்கிறார். எனவே நெல்லியமுதம் அவருக்கு மிகவும் பிடித்தமானது. ஏகாதசியில் நெல்லி மேல் பட்ட நீரில் நீராட, துவாதசியில் நெல்லி உண்பவன் கங்கையில் நீராடிய பயனும், காசியை பூஜித்த பலனையும் பெறுகின்றான். சூரியன் தவிர மற்றோரை நெல்லியால் பூஜிக்கலாம் அமாவாசையன்று நெல்லியை பயன்படுத்துதல் கூடாது. கோயில் கோபுரம் கலசங்களில் நெல்லியையும் போடுவர். மேலும் விமான உச்சிக் கலசத்தின் கீழாக நெல்லிக்கனி வடிவத்தில் ஒரு கல்லை செதுக்கி வைப்பார் இதற்கு ஆமலகம் என்று பெயர்.

ஒரு ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் சி யின் அளவைப்போல் இருபது மடங்கு வைட்டமின் சத்தைக் கொண்டது நெல்லிக்காய். கண்களுக்கு தெளிவை கொடுக்கிறது. தலைமுடி உதிராமல், வளர்ந்து, நரைமுடி தோன்றுவதை தவிர்க்கிறது. சகல வயதினருக்கும் பல வழிகளில் நிவாரணம் தரும் நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது. நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக இருக்க வழி செய்கிறது. உடல் திசுக்களுக்கு புத்துணர்ச்சியளித்து உடல் செல்கள் நன்கு செயல்பட உதவி புரிகிறது. கொழுப்புச்சத்து உடலிற்குத் தேவையான ஒன்று. உடலிற்குத் தேவைப்படாத அதிகப்படியான கொழுப்புச்சத்து இரத்தக் குழாய்களில் படிய ஆரம்பிக்கும். இதுதான் மாரடைப்பு ஏற்பட காரணமாகி விடுகிறது. நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்புச் சத்துக்களை சுலபமாக கரைத்து விடும்,இதனால் மாரடைப்பைத் தவிர்க்கலாம். இரவில் நெல்லிக்காய் சாப்பிட கூடாது. சாப்பிட்டால் புத்தி, வீர்யம், தேஜஸ் குறைந்து விடும்.
கடவுளுக்கு உருவம் உண்டா?

ஒரு சமயம் ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்த ஒரு பக்தர், கடவுளுக்கு உருவம் உண்டா? என்று கேட்டார். அதற்கு ராமகிருஷ்ணர், இறைவன் உருவம் உடையவர், உருவம் அற்றவர்-இந்த இரண்டும் அவரே! அதாவது பனிக்கட்டியையும், தண்ணீரையும் போல என்று பதில் கூறினார். இறைவன் என்பவன் முடிவில்லாமல் பரந்து கிடக்கும் மகா சமுத்திரத்தைப் போன்றவன். சமுத்திரம் அதீத குளிர்ச்சியின் காரணமாக சில இடங்களில் உறைந்திருக்கும். அவ்விதம் உறைந்த பனிக் கட்டிகள் பலவித வடிவங்களில் இருக்கும். ஆனால் சிறிது வெப்பம் அதிகரித்ததும் பனி உருகி நீரோடு நீராகக் கலந்து விடும். பனிக்கட்டியும் நீரும் ஒரே சமுத்திரத்தைச் சேர்ந்தவைதான். இறைவனும் அப்படித்தான். பக்தியின் குளிர்ச்சியால் அவன் பக்தர்களுக்கு தகுந்தாற்போல பலவேறு வடிவங்களில் தோன்றுகிறான். ஞானம் என்ற வெம்மை செயல்பட ஆரம்பித்ததும், அவனும் வடிவமற்றவானாகி விடுகிறான். இவ்வாறாக, சாதாரண பக்தனுக்கு வடிவம் தேவைப்படுகிறது. ஆனால் அனைத்தும் அறிந்த ஞானிக்கு வடிவம் தேவைப்படுவதில்லை.
தியானம் செய்வதால் என்ன நன்மை?

தியானம் செய்வதனால் உடலில் ஏற்படுகின்ற  கோபம், ஆணவம், பிடிவாதம், பற்றின்மை, அமைதியின்மை போன்றவை விலகி நம்மை நிம்மதிபடுத்துகின்றன. மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கு தியானம் முக்கிய பங்கு வகிக்கிறது. உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம். வட திசையும், கிழக்கு திசையும் சிவனாகவே கருதப்படுவதால், இத்திசைகள் சிறப்பானவை. எனவே கிழக்கு, வடக்கு என இரு திசைகளைப் பார்த்தே தியானம் செய்ய வேண்டும். வடதிசையில் வீசும் காந்தக் கதிர்கள் மூளையை பாதிப்படைய செய்யும் என்பதால், அத்திசையில் தலை வைத்து தூங்கவோ, உணவு உண்ணவோ கூடாது.

தியானம் செய்தால் நாம் பல நன்மைகளை அடைகின்றோம். ஞாபக சக்தி, புத்தி கூர்மை அதிகரித்து, மன உளைச்சல், மன அழுத்தம் நீங்குகிறது, அலைபாயும் மனம் அமைதியடைகிறது, சிந்தனை ஆற்றலும், ஞாபக சக்தியும் கூடுகிறது,நோய் இன்றி பெரு வாழ்வு கிடைக்கிறது, மூச்சு விடும் விகிதம் குறைகிறது. ஆதலால் ஆயுள் நீடிக்கிறது,உடம்பில் இருக்கும் நோய்கள் குறைகிறது. பொறுமை, விடாமுயற்சி தான் தியானத்தில் வெற்றி பெற ஒரே வழி.
ஐப்பசி மாத ராசிபலனும் பரிகாரமும்!

மேஷம்

எச்செயலையும் ஆர்வமுடன் செய்து வெற்றிபெறும் மேஷராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் செவ்வாய் இந்த மாதம் ராசிக்கு 4, 5ம் இடங்களில் பிரவேசிக்கிறார். இந்த நிலை சில எதிர்மறை பலன்களை உருவாக்கும். சனி, சுக்கிரன், புதன் அனுகூலமாக செயல்படுகின்றனர். உங்களிடம் வில்லங்கமாகப் பேசுபவர்கள், செயல்படுபவர்களிடம் விலகிப்போவது நல்லது. எதிர்நீச்சலடிக்கும் மாதம். வெகுநாள் தடைபட்ட செயல் அதிர்ஷ்ட வசமாக நிறைவேறும். கூடுதல் பணவரவு கிடைப்பதற்கான வழி உருவாகும். பூர்வசொத்தில் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். புத்திர வகையில் சுபநிகழ்ச்சி நிறைவேறும்.  உடல்நலம் சுமார். வீடு, வாகனத்தில் தகுந்த பராமரிப்பு, பாதுகாப்பு நடைமுறை அவசியம். கடனை ஓரளவு அடைப்பீர்கள். தம்பதியர் கருத்து ஒற்றுமையுடன் நடந்து குடும்ப நன்மையைப் பேணுவர். வெளியூர் பயணங்களை பயன் அறிந்து மேற்கொள்வது நல்லது. தொழிலதிபர்கள், உற்பத்தியை உயர்த்தி கூடுதல் ஒப்பந்தம் பெறுவர். வியாபாரிகள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணிகளைச் செய்து லாபமடைவர். பணியாளர்கள் நிலுவைப்பணிகளை நிறைவேற்றி நிர்வாகத்திடம் நற்பெயரும், சலுகையும் பெறுவர். பணிபுரியும் பெண்கள் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி, பணி நடைமுறையை எளிதாக்குவர். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் கருத்துக்களை மதித்து நடப்பர். குடும்பத்தில் மகிழ்ச்சி வளரும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனை சிறந்து ஆதாய பணவரவு காண்பர். அரசியல்வாதிகள் கடந்தகால சமூகப்பணிக்கு உரிய பலனை பெறுவர். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். விவசாயிகள் மகசூல் சிறந்து கணிசமான பணவரவு பெறுவர். மாணவர்கள் கவனமாகப் படிப்பதால் மட்டுமே எதிர்பார்க்கும் மதிப்பெண் கிடைக்கும்.

உஷார் நாள்: 28.10.11 பகல் 2.14 முதல் 30.10.11 மாலை 5.33 மணி வரை வெற்றி நாள்: அக்டோபர் 18, 19 நிறம்: ரோஸ், ஆரஞ்ச்               எண்: 1, 9
பரிகாரம்: விநாயகரை வழிபடுவதால் தொழில் சிறந்து தாராள பணவரவு கிடைக்கும்.

ரிஷபம்

நடை, உடை, பாவனையில் மாற்றத்தை விரும்பும் ரிஷபராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் சூரியன் அமர்ந்து மிகுந்த நற்பலன்களை தரும் வகையிலும், ராசிநாதன் சுக்கிரன், புதன், ராகுவுடன் சப்தம
ஸ்தானத்தில் கெடுபலன் தரும் குணத்துடனும் உள்ளனர். அக்கம் பக்கத்தவருடன் நல்அன்பு பாராட்டி அன்பு, நட்பு பெறுவீர்கள். பணவரவுக்கேற்ப சிக்கனமாக இருப்பது நல்லது. வீடு, வாகன வகையில் விரும்பிய வளர்ச்சி மாற்றங்களை செய்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்கள் உதவிகரமாகச் செயல்படுவர். புத்திரர்கள் பிடிவாத குணங்களை சரிசெய்ய கூடுதல் பொறுமை தேவைப்படும்.உடல்நலத்திற்கு ஒவ்வாத பழக்க வழக்கங்களை தவிர்ப்பது நல்லது. வழக்கு, விவகாரத்தில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி இடையே தேவையற்ற சண்டையால் கருத்து வேறுபாடு ஏற்படும். வாக்குவாதங்களை தவிர்ப்பதால் சிரமம் குறையும். தொழிலதிபர்கள் அபிவிருத்தி பணிகளை நிறைவேற்றுவர். கூடுதல் உற்பத்தி, தாராள பணவரவு கிடைக்கும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் நற்பெயர் பெற புதிய திட்டம் செயல்படுத்துவர். விற்பனை சிறந்து பணவரவு கூடும். பணியாளர்கள் கூடுதல் வேலைவாய்ப்பு கிடைத்து தாராள பணவரவில் குடும்பத்தேவையை நிறைவேற்றுவர். பணிபுரியும் பெண்கள் குறித்த காலத்தில் இலக்கை நிறைவேற்றி நன்மதிப்பு பெறுவர். சலுகைகள் கிடைக்கும். குடும்ப பெண்கள் சுய கவுரவ சிந்தனையை பின்பற்றி எதிர் விளைவுகளால் மனக்கஷ்டம் அடைவர். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை அவசியம். சுயதொழில் புரியும் பெண்கள் அரசு தொடர்புடைய உதவி கிடைக்கப்பெறுவர். அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல் உண்டு. மாணவர்கள் லட்சியத்துடன் படித்து சிறந்த தேர்ச்சி அடைவர்.

உஷார் நாள்: 30.10.11 மாலை 5.34 முதல் 1.11.11 இரவு 10.34 மணி வரை
வெற்றி நாள்: அக்டோபர் 20, 21 நிறம்: வெள்ளை, மஞ்சள் எண்: 3, 6
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் சகல வளமும் பெறலாம்.

மிதுனம்

திட்டமிட்ட பின் எக்காரணம் கொண்டும் பின்வாங்காத மிதுனராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் புதன் ஆறாம் இடத்தில் அனுகூல பலன் தருகிற ராகுவுடன் உள்ளார். குருபகவானும் உங்கள் வாழ்வு வளம்பெற தேவையான முக்கிய செயல்களை நிறைவேற்றுவார். எவரிடத்தும் அளவுடன் பேசுவது நல்லது. செவ்வாய் மாத முற்பகுதியில் சிரமத்தையும் பிற்பகுதியில் மனம் மகிழும் வகையில் நற்பலனும் தருவார். இளைய சகோதரர்களால் நன்மை இல்லை. நம்பகத்தன்மை குறைந்தவர்களை வீட்டிற்குள் அனுமதிக்கக்கூடாது. அறிமுகம் இல்லாதவர்களுக்கு வாகனத்தில் லிப்ட் கொடுக்காதீர்கள். உடல்நலம் சீராக இருக்கும். நிலுவைப்பணம் வசூலாகும். வழக்கு, விவகாரத்தில் அனுகூலத் தீர்வு கிடைக்கும். தம்பதியர் கருத்துவேற்றுமை சூழ்நிலைகளை எதிர்கொள்வர். நண்பர்களின் செயல் மற்றும் கருத்துக்களை விமர்சிக்க வேண்டாம். தொழிலதிபர்கள் உற்சாகத்துடன் செயல்பட்டு நிர்வாக நடைமுறைகளை சீர்படுத்துவர். புதிய ஒப்பந்தம், தாராள பணவரவு கிடைக்கும். வியாபாரிகள் கூடுதல் சரக்கு கொள்முதல் செய்து மனதிருப்தி அடைவர். விற்பனை அதிகரித்து லாபவிகிதம் கூடும். பணியாளர்கள் திறம்பட செயல்பட்டு நன்மதிப்பு, சலுகைகள் பெறுவர். பணிபுரியும் பெண்கள் பணி இலக்கை எளிதில் நிறைவேற்றுவர். பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவர், உறவினர்களிடம் மனக்கிலேசம் வளரும் அளவிற்கு பேசுவது கூடாது. சுயதொழில் புரியும் பெண்கள் சந்தைப்போட்டி குறைந்து கூடுதல் உற்பத்தி, விற்பனை இலக்கை அடைவர். ஆதாய பணவரவு சேமிப்பாகும். அரசியல்வாதிகள் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெறுவர். சமூகத்தில் மதிப்பு உயரும். விவசாயிகளுக்கு சராசரி மகசூல்கிடைக்கும். மாணவர்கள் நன்கு படிப்பர்.

உஷார் நாள்: 1.11.11 இரவு 10.35 முதல் 4.11.11 காலை 5.54 மணி வரை
வெற்றி நாள்: அக்.,22, நவ.,8 நிறம்: சிமென்ட், நீலம் எண்: 4, 8
பரிகாரம்: துர்க்கையை வழிபடுவதால் செயல் வெற்றியும் எதிர்பார்த்த பணவரவும் உண்டு.

கடகம்

கருணை மனதுடன் பிறருக்கு உதவுகின்ற கடகராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சந்திரன் மாத துவக்கத்தில் திருவாதிரை நட்சத்திர சாரத்தில் தனது பிரவேசத்தை துவக்குகிறார். நற்பலன் தரும் கிரகங்களாக சனி, சுக்கிரன், கேது செயல்படுகின்றன. மனதில் உருவாகிற அர்த்தமற்ற குழப்பங்களை உங்கள் நலன் விரும்பும் நண்பர்களின் ஆலோசனையால் சரிசெய்வீர்கள். அவசியமான விஷயங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் தருவது நல்லது. இளைய சகோதரர்கள் உறுதுணையாக நடந்து கொள்வர். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்ற வேண்டும். புத்திரர்கள் நற்குணங்களை பின்பற்றி குடும்பத்திற்கு பெருமை தேடித்தருவர். நன்றாகப் படிக்கவும் செய்வர். உடல்நலத்திற்கு தகுந்த சிகிச்சை தேவைப்படும். கணவன் மனைவி குடும்ப சூழ்நிலையை உணர்ந்து முன்னேற்றம் தரும் செயல்களை மேற்கொள்வர். வெளியூர் பயணம் நன்மை தருகிற புதிய அனுபவங்களை ஏற்படுத்தும். தொழிலதிபர்கள் சீரான உற்பத்தியும் நிர்வாக நடைமுறையில் கூடுதல் செலவும் காண்பர் வியாபாரிகள் அளவான மூலதனத்துடன் கூடுதல் உழைப்பு, கவனத்தினால் சராசரி விற்பனை இலக்கை அடைவர். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் திறமையுடன் பணி செய்து வருமானத்தை அதிகரிக்கும் வழிவகைகளை ஏற்படுத்திக் கொள்வர். பணிபுரியும் பெண்கள் பணியில் உள்ள குறைபாடுகளை ஆர்வமுடன் சரிசெய்வர். சலுகைகளும் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரிடம் அன்புடன் நடந்து நற்பெயர் பெறுவர். சுயதொழில் புரியும் பெண்கள் புதிய சந்தை வாய்ப்புக்களை பயன்படுத்தி விற்பனையை உயர்த்துவர். லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் ஆதரவாளர்களின் செயல்குறையை விமர்சிக்கக் கூடாது. விவசாயிகளுக்கு அளவான மகசூல், கால்நடை வளர்ப்பில் கூடுதல் பணவரவு கிடைக்கும். மாணவர்கள் சிறப்பாகப் படித்து  தரத்தேர்ச்சி பெற்று, பரிசு, பாராட்டு பெறுவர்.

உஷார் நாள்: 4.11.11 அதிகாலை 5.55 முதல் 6.11.11 பகல் 3.38 மணி வரை வெற்றி நாள்: அக்டோபர் 24, 25 நிறம்: சிவப்பு, நீலம் எண்: 3, 4
பரிகாரம்: சிவபெருமானை வழிபடுவதால் வாழ்வு வளம்பெற வழி பிறக்கும்.

சிம்மம்

எண்ணத்திலும் செயலிலும் உறுதி நிறைந்த சிம்மராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சூரியன் மூன்றாம் இடத்தில் நீச்சம் பெற்று குருவின் பார்வை பலத்தை பெற்றுள்ளார். அனுகூல பலன் தரும் கிரகங்களாக புதன், குரு, சுக்கிரன், சூரியன் செயல்படுவர். அளவுடன் பேசி நற்பெயர் பெறுவீர்கள். இளைய சகோதரர்கள் வாழ்வில் உயர்ந்து உங்களுக்கும் உதவிபுரிவர். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தாயின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். புத்திரர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர். பூர்வசொத்தில் கூடுதல் பணவரவும் புதிய சொத்து வாங்குவதுமான நன்னிலை இருக்கும். உடல்நலம் சீராகும். கடன் பாக்கிகளை அடைப்பீர்கள். தம்பதியர் விட்டுக்கொடுக்கும் மனப்பாங்குடன் நடந்து குடும்பத்திற்கு பெருமை சேர்ப்பர். உங்கள் திறமை வெளிப்பட நண்பர்கள் உதவுவர். திட்டமிட்ட சுபநிகழ்ச்சி சிறப்பாக நிறைவேறும். தொழிலதிபர்கள் குளறுபடிகளை சரிசெய்து உற்பத்தியை உயர்த்துவர். கூடுதல் ஒப்பந்தம், தாராள பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் திறமையுடன் செயல்பட்டு அதிக வருமானம் பெறுவர். உபரி பணவரவில் குடும்பத்தேவைகள் நல்லபடியாக நிறைவேறும். வியாபாரிகள் கூடுதல் சரக்கு கொள்முதல் செய்வர். வாடிக்கையாளர் நன்மதிப்பில் விற்பனை உயரும். பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை கவனமுடன் பின்பற்றுவர். பணி இலக்கு நிறைவேறி சலுகைப்பயன் பெற்றுத்தரும். குடும்பப் பெண்கள் உற்சாக மனதுடன் செயல்படுவர். குடும்பத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு தேவையான நன்மை கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். விற்பனை சிறந்து லாபவிகிதம் கூடும். அரசியல்வாதிகள், ஆதரவாளர்களிடம் நன்மதிப்பு பெறுவர். புதிய பதவி கிடைக்கும். விவசாயிகளுக்கு மகசூல் சிறந்து கால்நடை வளர்ப்பிலும் கூடுதல் லாபம் வரும். மாணவர்கள் ஆர்வமுடன் படித்து சிறந்த தேர்ச்சி பெறுவர்.

உஷார் நாள்: 6.11.11 பிற்பகல் 3.39 முதல் 9.11.11 காலை 3.01 மணி வரை வெற்றி நாள்: அக்டோபர் 26, 27 நிறம்: வயலட், சிவப்பு எண்: 1, 7
பரிகாரம்: பெருமாளை வழிபடுவதால் தொழில் வளர்ச்சியும் குடும்பத்தில் மங்கலமும் உண்டாகும்.

கன்னி

எவருக்கும் உரிய மரியாதை தருகிற கன்னிராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் புதன் ராசிக்கு மூன்றாம் இடத்தில் உள்ளார். சுக்கிரன், ராகு இந்த மாதம் அளப்பரிய நற்பலன்களை வழங்குவர். செவ்வாய் மாத முற்பகுதியில் தாராள பணவரவு தந்து மாத பிற்பகுதியில் சுபசெலவுகளை உருவாக்குவார். செயல்பாட்டு திறனை வளர்த்துக் கொள்வதால் துவங்குகிற காரியம்  எளிதாக நிறைவேறும்.  வீடு, வாகனத்தில் கிடைக்கிற வசதியை குறைவாக பயன்படுத்துவது போதுமானதாகும். குடும்பத்தேவை நிறைவேறும். புத்திரர்கள் இதமாக பேசி தாங்கள் விரும்பியதை கேட்டுப்பெறுவர். அரசு தொடர்பானவர்களிடம் கடினப்போக்கை பின்பற்றக்கூடாது. கணவன், மனைவி தங்கள் பொறுப்புக்களை உணர்ந்து செயல் படுவர். குடும்பத்தில மகிழ்ச்சி நிறைந்திருக்கும். நண்பரின் அன்பு, உதவி கிடைத்து மனம் நெகிழ்வீர்கள். தொழிலதிபர்கள் நிர்வாக நடைமுறைத் தேவைகளை நிறைவேற்ற அக்கறை கொள்வர். உற்பத்தி சீராகும்.வியாபாரிகளுக்கு விற்பனை அதிகமாகி, தாராள லாபம் பெறுவர். பணியாளர்கள் புதிய யுக்திகளைப் பின்பற்றி பணி இலக்கை நிறைவேற்றுவர். சம்பளம் கூடும். பணிபுரியும் பெண்கள் நிலுவைப்பணியை முழுமனதுடன் நிறைவேற்றுவர். சலுகைப்பயன் ஓரளவு கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவர் வழி உறவினர்களிடம் நன்மதிப்பு பெறும் வகையில் செயல்படுவர். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் கணவர், தோழியின் உதவியால் விற்பனை அதிகமாகப் பெறுவர். பணவரவு சீராக இருக்கும். அரசியல்வாதிகள் புகழ், அந்தஸ்தை தக்கவைக்க அதிக செலவு செய்வர். விவசாயிகளுக்கு சராசரி மகசூல் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் தேர்ச்சிபெற கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

உஷார் நாள்: 9.11.11 அதிகாலை 3.02 முதல் 11.11.11 பிற்பகல் 2.32 மணி வரை
வெற்றி நாள்: அக்டோபர் 28, 30 நிறம்: மஞ்சள், ரோஸ் எண்: 3, 9
பரிகாரம்: நரசிம்மரை வழிபடுவதால் வாழ்வில் சிரமம் குறைந்து நன்மை ஏற்படும்.

துலாம்

மற்றவர்களின் உணர்வுக்கும் மதிப்பளிக்கும் துலாம் ராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் இரண்டாம் இடத்தில் அமர்ந்து நல்ல பலன் தரும் வகையில் உள்ளார். குருவின் பார்வை ராசிக்கு உள்ளது. செவ்வாயின் 10, 11ம் இட அமர்வு மாத முற்பகுதியில் பெரும் செலவையும், பிற்பகுதியில் சேமிப்பையும் ஏற்படுத்தும். உங்களை அவமானப்படுத்துகிற நோக்கில் செயல்படுபவர்களிடம் விலகி இருப்பது நல்லது. புதிய திட்டங்கள் பின்வரும்நாட்களில்நிறைவேற்றலாம். வீடு, வாகனத்தில் பராமரிப்பு பணி தேவைப்படும். பூர்வ சொத்தில் அளவான பணவரவு கிடைக்கும். அரசு தொடர்பான காரியங்களில் அனுகூலம் உண்டு. உடல்நலம் சீராக இருக்க சத்தான உணவு, தகுந்த ஓய்வு அவசியம். தம்பதியர் குடும்பநலனைக் கவனத்தில் கொண்டு பொறுமையுடன் செயல்படுவர். நண்பர்களிடம் தகுதிக்கு மீறிய எந்த உதவியும் கேட்கக்கூடாது. தொழிலதிபர்கள் புதிய குறுக்கீடுகளை சமாளித்து உற்பத்தி இலக்கை எட்டுவர். பணவரவு சீராகும். வியாபாரிகள் கடும் முயற்சியின் பேரிலேயே விற்பனையை உயர்த்த முடியும். பெரிய அளவு வருமானம் இருக்காது. பணியாளர்கள் கூடுதல் பணிச்சுமைக்கு உட்படுவர்.  பணிபுரியும் பெண்கள் புதிய நடைமுறைகளைப் பின்பற்றி வேலையிலுள்ள குளறுபடிகளைச் சரிசெய்வர். வழக்கமான வருமானம் இருக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் வருமானத்திற்கு ஏற்ப செலவுகளை திட்டமிடுவர். குடும்பத்தில் மகிழ்ச்சி, நிம்மதி வளரும். சுயதொழில் புரியும் பெண்கள் கடும் உழைப்பால் உற்பத்தியை சீராக்குவர். புதிய ஆர்டர் கிடைத்து பணவரவு அதிகரிக்கும். அரசியல்வாதிகள் அரசு தொடர்பான செயல்பாடுகளை நிறைவேற்ற நிதான அணுகுமுறை பின்பற்ற வேண்டும். விவசாயிகளுக்கு சராசரி மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் லாபம் உண்டு. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர். பரிசு, பாராட்டு கிடைக்கும்.

உஷார் நாள்: 11.11.11 பகல் 2.33 முதல் 13.11.11 நள்ளிரவு 12.37 மணி வரை
வெற்றிநாள்: அக்டோபர் 31, நவம்பர் 1 நிறம்: சிமென்ட், சிவப்பு எண்: 1, 4
பரிகாரம்: கிருஷ்ணரை வழிபடுவதால் நன்மை அதிகரிக்கும்.

விருச்சிகம்

தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு உயரும் விருச்சிகராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் செவ்வாய் ராசிக்கு 9, 10 இடங்களில் அனுகூலக் குறைவாக பிரவேசிக்கிறார். சுக்கிரன், சனி நல்ல பலன்களை வழங்குவதில் முன்னுரிமை தருவர். தெய்வ வழிபாடு, சுற்றுலா பயணங்களில் ஆர்வம் வளரும். இளைய சகோதரரின் உதவி கிடைக்கும். உறவினர்கள் மீதான அதிருப்தி வளரும். தாயின் தேவை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். புத்திரர்கள் சிறு அளவிலான உடல்நலக்குறைவுக்கு உட்படுவர். சொத்து ஆவணங்களை பிறர் பொறுப்பில் தருவது, கடன் வாங்குவது ஆகியவற்றைத் தவிர்க்கவும். எதிரிகள் சிரமம் தர முயற்சிப்பர். கவனம். கணவன், மனைவி குடும்ப சூழ்நிலையை கவனத்தில் கொண்டு தியாக மனதுடன் நடந்துகொள்வர். நண்பர்கள் நல்ல ஆலோசனை, தேவையான உதவிகளை முன்வந்து வழங்குவர். பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்லக்கூடாது.தொழிலதிபர்கள் கூடுதல் பணத்தேவைக்கு உட்படுவர். உற்பத்தி இலக்கு நிறைவேறுவதில் தாமதம் உண்டு. வியாபாரிகளுக்கு போட்டி அதிகரிக்கும். லாபத்தைக் குறைத்து விற்க வேண்டிய நிர்ப்பந்தமான நிலைமை வரும். பணியாளர்கள் கவனக்குறைவால் பணியில் குளறுபடியை எதிர்கொள்வர். சிலர் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு ஆளாகலாம். பணிபுரியும் பெண்கள் கூடுதல் பணிச்சுமைக்கு உட்படுவர். அயராத உழைப்பு நிலைமையை சரிசெய்யும். குடும்பப் பெண்கள் கணவரின் பாசம் கிடைத்து மகிழ்வுடன் இருப்பர். பணவரவுக்கு ஏற்ப சிக்கன நடைமுறை பின்பற்றுவர். சுயதொழில் புரியும் பெண்கள் கடன் பெற்று வியாபாரத்தை நடத்த வேண்டி வரும். அரசியல்வாதிகள் அரசு தொடர்பான அனுகூலம் பெறுவதில் தாமதம் இருக்கும். விவசாயிகளுக்கு சுமாரான மகசூல் உண்டு. மாணவர்கள் அதிக முயற்சியுடன் படிப்பதால் மட்டுமே தேர்ச்சி பெற இயலும்.

உஷார் நாள்: 18.10.11 காலை 6.01 முதல் 19.10.11 நள்ளிரவு 12.48 மணி வரை மற்றும் 14.11.11 அதிகாலை 12.37 முதல் 16.11.11 காலை 8.23 மணி வரை
வெற்றி நாள்: நவம்பர் 2, 3 நிறம்: வெள்ளை, மஞ்சள் எண்: 3, 6
பரிகாரம்: முருகப்பெருமானை வழிபடுவதால் உடல்நலமும் தொழில்வளமும் சிறக்கும்.

தனுசு

குடும்ப உறுப்பினர்களிடம் அதிக பாசமுள்ள தனுசுராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் குரு ஐந்திலும், சூரியன் பதினொன்றாம் இடத்திலும் அனுகூலமாக அமர்ந்து சமசப்தம பார்வை பெற்றுள்ளனர். பணவரவை அதிகரிப்பதில் சாதகநிலை கூடும். இளைய சகோதரர்கள் அவர்கள் வேலையைப் பார்ப்பார்களே தவிர, உங்களுக்கு உதவமாட்டார்கள். வீடு, வாகனத்தில் தேவையான வளர்ச்சிமாற்றம் செய்வீர்கள். அக்கம் பக்கத்தவர் மதிப்புடன் நடத்துவர். புத்திரர்கள் உங்களின் எண்ணங்களுக்கு ஏற்ப நல்லவிதமாக நடந்துகொள்வர். பூர்வ சொத்தில் பெறுகிற வருமானம் தடையின்றி கிடைக்கும். எதிரிகள் செய்கிற கெடுதல் முயற்சி கூட உங்களுக்கு அனுகூலமாகும். பொன், பொருள் சேர்க்கை தகுதிக்கேற்ப கிடைக்கும். கணவன், மனைவி கடந்த கால மனக்கஷ்டங்களை மறந்து அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வர். நண்பர்கள் உதவுவதும், உதவி பெறுவதுமான நன்னிலை உண்டு. தொழிலதிபர்கள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்திப்பணி புரிவர். அரசு சார்ந்த அனுகூலம் கிடைக்கும். வியாபாரிகள் போட்டியை சமாளித்து தமக்கென முத்திரை பதிப்பர். பணவரவு சீரான வகையில் இருக்கும். பணியாளர்கள் திறம்பட செயல்பட்டு பணி இலக்கை நிறைவேற்றுவர். சலுகைகள் கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் ஆரோக்கிய உடல் நலத்துடன் பணியில் ஆர்வம் கொள்வர். நிர்வாகத்திடம் நற்பெயர் கிடைக்கும். குடும்பப் பெண்கள் சந்தோஷ சூழ்நிலை அமைந்து அன்றாட பணிகளை நிறைவேற்றுவர். தாய்வீட்டு சீர்முறை கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் சாதனை நிகழ்த்தும் எண்ணத்துடன் திறம்பட செயல்படுவர். உற்பத்தி விற்பனை சிறந்து தாராள பணவரவைத்தரும். அரசியல்வாதிகள் அதிகாரிகளின் ஆதரவைப் பெற்று முக்கிய பணிகளை நிறைவேற்றுவர். விவசாயிகளுக்கு மகசூல் சிறந்து கால்நடை வளர்ப்பில் முன்னேற்றம் பெறுவர். மாணவர்கள் ஞாபகத்திறன் வளர்ந்து படிப்பில் சிறந்த தேர்ச்சி பெறுவர்.

உஷார் நாள்: 20.10.11 அதிகாலை 12.49 முதல் 22.10.11 காலை 5.21 மணி வரை மற்றும் 16.11.11 காலை 8.23 முதல் 17.11.11 காலை 6 மணி வரை. வெற்றி நாள்: நவம்பர் 4, 5 நிறம்: பச்சை, நீலம் எண்: 5, 7
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால் மன பலமும் தொழில் வளமும் சிறப்பாகும்.

மகரம்

அடுத்தவர்களின் உதவியை அளவுடன் ஏற்கும் மகரராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் சூரியன் அனுகூலமாக உள்ளார். நற்பலன் தரும் கிரகங்களாக சுக்கிரன், புதன், ராகு ஆதாய ஸ்தானத்தில் அமர்ந்து செயல்படுகின்றனர். இதனால் உங்களின் நல்முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். சமூகத்தில் கூடுதல் அந்தஸ்து கிடைக்கும். தாராள பணவரவு பெற தகுந்த வாய்ப்பு வரும். வீடு, வாகனத்தில் விரும்பிய நல்மாற்றமும், புதிய வாகனம் வாங்க நல்யோகமும் உண்டு. தாய்வழி உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு சரியாகும். புத்திரர்கள் நற்செயல் புரிந்து படிப்பில் திறமை வளர்ப்பர். உடல்நலம் பலம் பெறும். விருந்து உபசரிப்பில் ஆர்வமுடன் கலந்து கொள்வீர்கள். வழக்கு, விவகாரத்தில் அனுகூலத் தீர்வு கிடைக்கும். தம்பதியர் ஒருவர் நலனில் ஒருவர் அக்கறை கொள்வர். வாழ்வில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். நண்பர்கள் கடந்த காலத்தில் பெற்ற உதவிக்கு தகுந்த நன்றி பாராட்டுவர். தொழிலதிபர்கள் கூடுதல் மூலதனத்துடன்  உற்பத்தியை உயர்த்துவர். புதிய ஒப்பந்தம் கிடைத்து தாராள பணவரவு பெறுவர். வியாபாரிகள் விற்பனையில் முன்னேற்றம் காண்பர். லாபவிகிதம் அதிகரிக்கும். பணியாளர்கள் இலகுவாக பணிகளை நிறைவேற்றுவர். தாமதமான சலுகைகள் எளிதில் கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் குறித்த காலத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். பதவி உயர்வு, எதிர்பார்த்த சலுகை பயன் கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவரின் நல்அன்பு, பாசத்துடன் பணவசதியும் பெறுவர். சந்தோஷ வாழ்வு முறை அமையும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனை சிறந்து தராள பணவரவில் சேமிப்பை உயர்த்துவர். அரசியல்வாதிகள் புகழை அதிகரிக்க ஆதரவாளர்களின் முக்கிய தேவையை கவனமுடன் நிறைவேற்றுவர். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் பராமரிப்புச் செலவு கூடும். மாணவர்கள் உயர்ந்த தரதேர்ச்சி பெற்று சாதனை புரிவர்.

உஷார் நாள்: 22.10.11 காலை 5.22 முதல் 24.10.11 இரவு 8.36 மணி வரை வெற்றி நாள்: நவம்பர் 7, 8 நிறம்: ஆரஞ்ச், சந்தனம் எண்: 3, 7
பரிகாரம்: பைரவரை வழிபடுவதால்வாழ்வில்இன்பம் சேரும்.

கும்பம்

பேச்சில் சர்வ ஜாக்கிரதையைக் கையாளும் கும்பராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சனி அஷ்டமச் சனியாக செயல்படுகிறார்.மாத முற்பகுதியில் செவ்வாயும், மாதம் முழுவதும் புதனும் அதிர்ஷ்டகரமான பலன்களைத் தருவர். எந்த செயலையும் தகுந்த திட்டமுடன் நிறைவேற்றுவது நல்லது. பணவரவு பெற வருகிற வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொண்டால் தான் நிதிநிலையைச் சமாளிக்கலாம். வீடு, வாகன வகையில் பெறுகிற வசதியை முறையாக பயன்படுத்துவது போதுமானது.
புத்திரர்களின் உடல்நலம் நன்றாக இருக்கும். பூர்வசொத்தில் சுமாரான பணவரவு கிடைக்கும். எதிரிகளால் வருகிற தொந்தரவை பொறுமையால் சரிசெய்வீர்கள். நிர்ப்பந்த கடனை, புதுக்கடன் வாங்கி சரிசெய்வீர்கள். தம்பதியர் சுயகவுரவம் காரணமாக கருத்து வேறுபாடு கொண்டு, குழப்பமான சூழ்நிலையை எதிர்கொள்வர். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தொழிலதிபர்கள் அளவான மூலதனத்துடன் புதிய வழிமுறைகளைப் பின்பற்றி உற்பத்தி இலக்கை உயர்த்துவர். நிலுவைப்பணம் வசூலாகும். வியாபாரிகள் கூடுதல் போட்டியை எதிர்கொள்வர். லாபம் குறையும். பணியாளர்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை கவனமுடன் பின்பற்றுவதால் மட்டுமே பிரச்னை, நடவடிக்கைகள் வராமல் தவிர்க்கலாம். பணிபுரியும் பெண்கள் கூடுதல் பணிச்சுமையால் குழப்பம் அடைவர். உற்சாகத்துடன் செயல்படுவதால் மட்டுமே பணி இலக்கு நிறைவேறும். குடும்பப் பெண்கள் சிக்கனச்செலவில் கடன் சுமையை தவிர்ப்பது நல்லது. தாய்வழி உறவினர்கள் உதவிகரமாக நடந்துகொள்வர். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி இலக்கை அடைவதிலும் விற்பனையிலும் தேக்கநிலை காண்பர். முக்கிய செலவுகளுக்கு கடன் பெறுகிற நிலை உண்டு. அரசியல்வாதிகள், பிறர் விவகாரங்களில் ஈடுபடாமல் சொந்தப்பணிகளில் கவனம் கொள்வது நல்லது. விவசாயிகளுக்கு அளவான மகசூலும் சுமாரான பணவரவும் உண்டு. மாணவர்கள் கூடுதல் முயற்சியால் தரத்தேர்ச்சியை தக்கவைக்கலாம்.

உஷார் நாள்: 24.10.11 இரவு 8.37 முதல் 26.10.11 பகல் 11.48 மணி வரை வெற்றி நாள்: நவம்பர் 9, 10 நிறம்: சந்தனம், ரோஸ் எண்: 1, 3
பரிகாரம்: சாஸ்தாவை வழிபடுவதால் உடல்நலமும் தொழில் சிறப்பும் ஏற்படும்.

மீனம்

பிறருக்கு நன்மையை மட்டுமே விரும்பும் மீனராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் குரு இரண்டாம் இடத்தில் அனுகூலமாக உள்ளார். கேது, சுக்கிரன் மாதம் முழுவதும், செவ்வாய் மாத பிற்பகுதியிலும் நற்பலன் வழங்குவர். பேச்சில் தெளிவும் சாந்தமும் இருக்கும். அதிக வருமானம் பெறும் வகையில் செயல்படுவீர்கள். அக்கம் பக்கத்தவரின் நல்அன்பு மனதிற்கு ஊக்கம் தரும். வீடு, வாகனத்தில் பராமரிப்பு பணி செய்ய வேண்டி வரும். தாய்வழி உறவினர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். புத்திரர்கள் உங்கள் சொல் கேட்டு நல்லவிதமாக நடந்து கொள்வர். உடல்நலம் சீர்பெற தகுந்த சிகிச்சை எடுக்க வேண்டியிருக்கும். மருத்துவச்செலவு சற்று அதிகரிக்கும். எதிரிகளால் வருகிற தொல்லை படிப்படியாக சரியாகும். வெகுநாளாகக் காணாமல் தேடிய பொருள் கிடைக்கும்.  தம்பதியர் குடும்ப சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு விட்டுக்கொடுக்கும் மனப்பாங்குடன் நடந்து கொள்வர். நண்பர்களின் உதவி ஓரளவு கிடைக்கும். தொழிலதிபர்கள் நிர்வாக நடைமுறைகளை சரிவர பாதுகாப்பதால் அரசு தொடர்பான நடவடிக்கை வராமல் தவிர்க்கலாம். உற்பத்தி, லாபம் சுமாராக இருக்கும். வியாபாரிகள் கூடுதல் மூலதனத்துடன் விற்பனையை உயர்த்துவதில் ஆர்வம் கொள்வர். உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். பணியாளர்களுக்கு தற்போதைய நிலை தொடரும். அரியர்ஸ் கிடைக்க கடும் முயற்சி தேவைப்படும். பணிபுரியும் பெண்கள் நிதானமாகச் செயல்பட்டு பணி இலக்கை நிறைவேற்றுவர். குடும்பப் பெண்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு குடும்ப நலன் காத்திடுவர். கணவர் வழி உறவினர் அன்பு பாராட்டுவர். சுயதொழில் புரியும் பெண்கள் கணவர், சக தொழில் சார்ந்த தோழியின் உதவியால் புதிய சந்தை வாய்ப்பு பெறுவர். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். அரசியல்வாதிகள் அதிர்ஷ்டகரமாக பதவி, கட்சிப்பொறுப்பு பெறுவர். விவசாயிகளுக்கு சுமாரான மகசூல் கிடைக்கும். மாணவர்கள் கூடுதல் பயிற்சியினால் திட்டமிட்ட தேர்ச்சி அடைவர்.

உஷார் நாள்: 26.10.11 பகல் 11.49 முதல் 28.10.11 பகல் 2.13 மணி வரை வெற்றி நாள்: நவம்பர் 12, 13நிறம்: மஞ்சள், சிமென்ட் எண்: 3, 8
பரிகாரம்: லட்சுமி தாயாரை வழிபடுவதால் எதிர்பார்த்த பணவரவும் நன்மையும் ஏற்படும்.
அதிகாலையில் எழுந்ததும் என்ன செய்ய வேண்டும்?

அதிகாலையில் தூக்கம் கலைந்து எழும்போது பூமாதேவியை பிரார்திக்க வேண்டும். தாயே உலகில் அனைத்திற்கும் அன்னையான உன்னை நான் எனது காலால் மிதிப்பதை பொறுத்தருள வேண்டும் என்று கூறி முதலில் இடக்காலை ஊன்றி எழுந்து பூமியில் வைக்க வேண்டும். பின்னர் வலக்காலை எடுத்து வைத்து இன்றைய தின காரியங்கள் அனைத்திலும் எனக்கே வெற்றி உண்டாக நீயே அருள வேண்டும் என்று கூறி வலக்காலை எடுத்து வைத்து எழ வேண்டும்.
சரஸ்வதியின் சிறப்பும் வழிபாடும்!

சரஸ்வதியின் வாகனங்கள்: சரஸ்வதிக்கு ஞான சரஸ்வதி, ஆகமச் செல்வி, ஆகமசுந்தரி, ஞானச்செல்வி என்று பல பெயர்கள் உண்டு. சரஸ்வதியை வேதங்கள் அன்னத்தின் மீது அமர்ந்திருப்பவளாகப் போற்றுகின்றன. அன்ன வாகனத்துடன் உள்ள சரஸ்வதியை அம்சவல்லி என்பர்.  அன்னம், அப்பழுக்கற்ற வெண்மை நிறமுடையது. அதுபோல், ஒருவர் கற்கின்ற கல்வியும் மாசு மருவற்றதாக இருக்க வேண்டும் என்பதையும், படித்தவர்கள் வெள்ளை மனதினராக இருக்க வேண்டும் என்பதையும் குறிக்கிறது. அவளது வெள்ளைப்புடவை, அவள் அமர்ந்துள்ள வெள்ளைத் தாமரை ஆகியவையும் இதையே உணர்த்துகின்றன. தென்னகத்தில் கலைமகளை மயில் வாகனம் கொண்டவளாகப் போற்றுகின்றனர். ரவிவர்மாவின் ஓவியங்களில் சரஸ்வதிக்கு மயிலே வாகனமாக குறிக்கப் பட்டுள்ளது. மயில் தோகை விரிப்பதும், மடக்கிக் கொள்வதும் ஒருவன் கற்ற கல்வி பரந்து விரிந்ததாக இருக்க வேண்டும் என்பதையும், அவனுக்கு அடக்கம் வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறது.

சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை: தெட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலையும், சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை நைவேத்யமும் முக்கியம். இதற்கு காரணம் என்ன தெரியுமா? சரஸ்வதி,தெட்சிணாமூர்த்தி இருவருமே ஞானத்தை அருள்பவர்கள். இருவருமே ஜபமாலை, ஏட்டுச்சுவடிகளை ஏந்தியுள்ளனர். மனத்தூய்மை, சாந்தம், மெய்ஞானம் ஆகிய உயர்குணங்களை உணர்த்தும் வகையில் ஸ்படிக மாலை, ஜடாமகுடம், சந்திரக்கலை ஆகியவற்றை இருவரும் பெற்றிருப்பதைக் காணலாம். கொண்டைக் கடலை உ<யிர் காக்கும் சத்துக்களைக் கொண்டது. ஒருவரது ஜாதகத்தில் குரு பலம் இல்லையென்றால், அவரது <<உயிருக்கு பாதகம் வரலாம். எனவே, குரு பார்வை வேண்டி நவக்கிரகங்களில் குருவுக்கும், குருவின் அம்சமான தெட்சிணாமூர்த்திக்கும் கொண்டைக்கடலை மாலை படைத்து தீர்க்காயுள் கிடைக்க வேண்டுகின்றனர். மனித வாழ்வின் உயிர்நாடி கல்வி. அந்த <கல்வியில் சிறந்து விளங்க, சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை (சுண்டல்) நைவேத்யம் செய்கிறோம்.

சொல் கிழவியைத் தெரியுமா?

ஒட்டக்கூத்தர் கலைமகளின் பக்தராக விளங்கினார். நாமகளின் அருளால் பாடும் திறம் பெற எண்ணினார். இதற்காக ஹரிநாதேஸ்வரம் என்னும் கூத்தனூரில் ஓடும் அரசலாற்றில் நீராடி கலைவாணியின் திருவடிகளை சிந்தித்து தியானத்தில் ஆழ்ந்தார். கலைவாணி அவர் முன் தோன்றி, தன் வாயிலிருந்த தாம்பூலத்தை (வெற்றிலை) கூத்தருக்கு கொடுத்தாள். அப்போதிருந்து பேரறிவும், ஞானமும் பெற்றார் ஒட்டக்கூத்தர். கூத்தருக்கு கலைமகள் காட்சி கொடுத்து அருளிய திருத்தலம் என்பதால் கூத்தனூர் என்ற பெயர் ஏற்பட்டது. தாம் பாடிய தக்கயாகப்பரணியில் இத்தேவியை ஆற்றங்கரை சொற்கிழத்தி வாழியே என்று பாடியிருப்பது இவரின் பக்தியை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. கிழத்தி என்பதற்கு கிழவி என்றும், தலைவி என்றும் பொருளுண்டு. சொல்லுக்கு (வாக்கு) தலைவி என்பதால் இவளை ஒட்டக்கூத்தர் இப்பெயரிட்டு அழைத்தார். இவளுக்கு வாக்தேவி என்றும் பெயருண்டு.

கல்விக்கோயில்: சிவபெருமானை அலட்சியப்படுத்தும் விதமாக தட்சன் ஒரு யாகம் நடத்தினான். சிவன், தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பினார். அவர், யாகத்தை அழித்ததுடன், யாகத்தை முன்னின்று நடத்திய பிரம்மதேவனையும் தண்டித்தார். மேலும், அவரது மனைவியான கலைமகளின் மூக்கினையும் அரிந்தார். பயந்து நின்ற அவள் தன் கணவன் பிரம்மனுடன் சீர்காழிக்குச் சென்று சிவனை வழிபட்டாள். இந்த நிகழ்ச்சியை திருஞானசம்பந்தர், நாவினாள் மூக்கரித்த நம்பர் என்று குறிப்பிடுகிறார். மேலும், நாவியலும் மங்கையொடு நான்முகன் தான் வழிபட்ட நலங்கோயில் என்றும் பாடியுள்ளார். சீர்காழி ஒரு கல்வித்தலம் ஆகும். மாணவர்கள் ஒருமுறையேனும் சீர்காழி சென்று, அங்கு அருள்புரியும் தோணியப்பரையும், அம்பாளையும், திருஞானசம்பந்தரையும் வணங்கி வந்தால் கல்வியில் சிறப்பிடம் பெறலாம். இவ்வூரில் அவதரித்த சம்பந்தருக்கு, இத்தலத்தில் தான் அம்பிகை தாயாக இருந்து பால் புகட்டினாள்.
சரஸ்வதிபூஜை: கல்வி வளம் சிறக்க கலைமகளே வந்தருள்வாய்!

சரஸ்வதிபூஜையன்று மாணவர்கள் பாராயணம் செய்வதற்காக இப்பகுதி இடம் பெற்றுள்ளது. புத்தகங்களை அடுக்கி தூபதீபம் காட்டியபின், இதனை மனம் ஒன்றி படியுங்கள். கலைமகளின் அருளால் கல்வியில் முன்னேறலாம்.

அழகிய வெண்தாமரைப் பூவில் அமர்ந்திருப்பவளே! அன்னையே! என் மனத்தாமரையிலும் நீயே வீற்றிருக்க வேண்டும். பிரம்மதேவன் விரும்புகின்ற வெண்சங்கு போன்ற நிறமும், அழகிய திருவடிகளும் கொண்ட தாயே! உன்னை வணங்குகிறேன். அறுபத்து நான்கு கலைகளுக்கும் இருப்பிடமானவளே! வெண்பளிங்கு போல் ஒளி பொருந்தியவளே! எனது கல்வியில் தடை நேராதவாறு என்றென்றும் நீயே காத்தருள வேண்டும். வெண்பளிங்கு நிறமும், பவளம் போல் சிவந்த இதழும், உடுக்கை போல இடையும், தாமரை மலர் போன்ற கரங்களும் உடைய கலைமகளே! தினமும் உன்னை மறவாமல் நினைக்கும் பாக்கியத்தை  தந்தருளவேண்டும். அறிஞர்களால் விரும்பப்படுபவளே! பச்சை இலைகளைக் கொண்ட மணம் மிக்க தாமரையில் வாழ்பவளே! முத்துமாலையைக் கையில் ஏந்தியவளே! கலைகளின் நாயகியே! வேதம் நான்கையும் காத்தருள்பவளே! உன் அருளின் தன்மையை வியந்து போற்றுகின்றேன். சொர்க்கம், பூமி, பாதாளம் ஆகிய மூவுலகங்களையும் படைத்தவளே! சூரியோதய வேளையிலும், சந்திரோதய வேளையிலும் எழில் ஓவியம் போன்று காட்சி தருபவளே! அன்று மலர்ந்த பூவைப் போன்ற முகத்தையுடையவளே! என்னை ஆட்கொண்டு கல்வி நலம் தந்தருளி அருள்புரிய வேண்டும். அன்னையே! உன் திருவடியை வணங்குபவர்களின் மனதில் புகுந்து அக இருளைப் போக்குபவளே! அறிவிற்கு ஆதாரமாய் திகழ்பவளே! ஞானத்தின் பிறப்பிடமே!

நாவில் உறையும் நாமகளே! திருமாலின் உந்திக் கமலத்தில் வாழும் பிரம்மனின் துணைவியே! மாலை நேர நிலவொளியாய் குளிர்ச்சி கொண்டவளே! தாயே! உன்னருளை என் மீது பொழியச் செய்யவேண்டும். பெண் மான் போன்ற மருட்சி தரும் பார்வை உடையவளே! குற்றத்தைப் போக்கியருளும் குணக்குன்றே! அறியாமையை நீக்கும் மாமருந்தே! மெல்லிய பூங்கொடியாய் மகிழ்ச்சியில் திளைப்பவளே! உன் திருவடித் தாமரைகளை என் முடி மீது வைத்து அறிவுக்கண்ணைத் திறந்தருள்வாயாக. சுவடி, ஸ்படிகமாலையைத் தாங்கி இருப்பவளே! உபநிஷதங்களின் உட்பொருளானவளே! பாடுவோர், கல்வி பயில்வோர் நாவில் குடியிருப்பவளே! உலகத்தில் இருக்கும் பொருட்செல்வம் யாவும் அழிந்து போனாலும், என்றென்றும் அழியாத கல்விச் செல்வத்தை தந்தருள்பவளே! உன்னையன்றி வேறு கதி எனக்கில்லை! உன் கருணைப் பார்வையை என் மீது சிந்துவாயாக. கருணை விழிகாட்டி கல்வியை வாழச்செய். சரஸ்வதி தாயே! உன்னை நினைக்கும் நேரமெல்லாம் என் மனதிற்குள் புகுந்து விடு. பேசும்போது என் நாக்கில் அமர்ந்து கொள். என்னை நல்வழிப்படுத்து. சகலகலாவல்லியே! தரமான கல்வி, தர்ம வழியில் ஈட்டிய செல்வம், புகழ்மிக்க வாழ்வு ஆகியவற்றை எனக்கு தந்தருள்வாயாக.

சரஸ்வதிக்குரிய நட்சத்திரங்கள்: சரஸ்வதிக்குரிய நட்சத்திரம் மூலம். இந்த நட்சத்திரம் உச்சமாயிருக்கும் வேளையில் சரஸ்வதியை ஆவாஹனம் செய்து பூஜிப்பது வழக்கம். திதியின் அடிப்படையில் நவமியன்று பூஜை செய்வர். அதனால் சரஸ்வதி பூஜைக்கு மகாநவமி என்றும் பெயருண்டு. இந்த ஆண்டு அக்.4ல் மூலநட்சத்திரம் வந்தது. அக்.5ல் நவமி வந்துள்ளது. இந்தக் குழப்பத்தை தீர்க்கத்தான், ஒரு காலத்தில் மூலத்தன்று தொடங்கி திருவோண நட்சத்திரம் வரை நான்கு நாட்கள் சரஸ்வதிக்கு பூஜை செய்தனர். காலப்போக்கில் இவ்வழிபாடு மறைந்துபோனது. நட்சத்திரங்களில் மூலமும், திருவோணமும் கல்விக்குரியவை. திருவோணத்திற்கு சிரவணம் என்றும் பெயருண்டு. சிரவணம் என்பதற்கு குருவின் உபதேசங்களைக் கேட்டல் என்று பொருள்.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்: கல்வி தெய்வமான சரஸ்வதிக்குரிய பூஜையை ஆயுதபூஜை என்பர். தொழில்முறையில் அவரவருக்குரிய தொழிற்கருவிகளை இந்நாளில் வழிபடுவதால் இப்பெயர் வந்தது. வாழ்வில் வெற்றி பெற, ஒருவன் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது, வல்லவனாகவும் இருக்க வேண்டும்.  அம்பிகையின் அருள் ஒருவனுக்கு இருந்தால், அவன் தைரியசாலியாக இருப்பான். சரஸ்வதியின் அருள் பெற்றவர்களின் கையில் கத்திக்குப் பதிலாக எழுத்தாணியே இருந்தது. இதையே வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்று குறிப்பிட்டனர். எழுத்து என்பது மிகப்பெரிய சக்தி. பல வல்லரசுகளையும் ஒருவனது எழுத்து கவிழ்த்து விடும். மக்கள் மத்தியில் விழிப்புணர்வைத் தூண்டும்.

இலக்கிய விருதில் வாக்தேவி சின்னம்!

இந்திய மொழி இலக்கியங்களுக்கு ஞானபீடம் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதில் இடம்பெற்றுள்ள சின்னத்தை வாக்தேவி (வாக்குக்கு அதிபதியான சரஸ்வதி) என்பர். கி.பி.1034ல் போஜமகாராஜன் உஜ்ஜயினியில் நிர்மாணித்த கோயிலில் உள்ள சரஸ்வதியின் வடிவம் இது. தற்போது இந்தச்சிலை லண்டன் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ளது. ஞானபீடபரிசு பெறுபவருக்கு பஞ்சலோக வாக்தேவி சிலை வழங்கப்படும். அவள் 14 இதழ்களைக் கொண்ட பத்மபீடத்தில் நின்றபடி காட்சிதருவாள். இந்த இதழ்கள் 14 இந்திய மொழிகளைக் குறிப்பதாகும். இவளது கைகளில் கமண்டலம், பத்மம், ஜபமாலை, சுவடி இருக்கும்.