புதன், 16 அக்டோபர், 2013

கோயில்களில் மணியடிப்பது எதற்காக?

மணிச்சத்தம் அதிரும் போது ஓம் என்ற பிரணவம் எழும். ஆத்மார்த்த சிந்தனையுடன், இறைவனுடன் கருத்தொமிருத்து கேட்டால் இந்த நாதத்தைக் கேட்கலாம். இதற்கு எல்லாம் நானே என்பது பொருள். இருப்பதெல்லாம் இறைவனே என்ற பொருளை உணர்த்துவதே மணிச்சத்தம்.
கோகுலாஷ்டமி அன்று கிருஷ்ணனை எவ்வாறு வழிபட வேண்டும்?

எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் பூமியில் தலையெடுக்கிறதோ அப்போதெல்லாம் நான் தோன்றுவேன். கொடியவர்களை அழித்து பக்தர்களைக் காப்பதற்காகவும், தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவும் யுகம்தோறும் அவதரிப்பேன், என்பது கீதைநாயகன் கிருஷ்ணரின் அருள்வாக்கு. இப்படியொரு நிலையைச் சீர்படுத்துவதற்காக துவாபரயுகத்தில் அவர் அவதரித்தார். தர்மநெறிதவறி நடந்த கொடிய அரசர்களிடம் இருந்து உலகைக் காப்பதற்காக குரு÷க்ஷத்திர யுத்தத்தை நடத்தினார். மகாபாரதம் என்னும் மகத்தான இதிகாசத்தில் இவருடைய வரலாறு இடம்பெற்றுள்ளது. முழுமுதற்கடவுளாகிய மகாவிஷ்ணுவே கிருஷ்ணராக வசுதேவரின் மகனாகப் பிறந்தார். யதுகுலத்தின் தலை வனான சூரசேனன் மதுராநகரை ஆட்சி செய்து வந்தார். அவரது மகனான வசுதேவர், தேவகர் என்பவரின் மகளான தேவகியை திருமணம் செய்து மகிழ்ச்சியில் திளைத்தார். தேவகியின் ஒன்று விட்ட சகோதரன் கம்சன். அவன் மகாகெட்டவன். உக்கிரசேனன் என்பவரின் மகன். தந்தையையே கொடுமைப்படுத்தியவன். ஆனால், தங்கை தேவகி மீது அன்பு கொண்டவன். அவன் புதுமணத்தம்பதியரை தேரில் அழைத்துக் கொண்டு வீதியில் வந்து கொண்டிருந்தான். அப்போது, ஆகாயத்தில் அசரீரி ஒலித்தது.

மூடனே கம்சா! உன் சகோதரிக்கு தேரோட்டிச் செல்கிறாயே! அந்தத்தங்கையின் எட்டாவது பிள்ளை உன்னைக் கொல்லப் போகிறான்! என்றது. கோபமடைந்த கம்சன், தங்கை என்றும் பாராமல் தேவகியைக் கொல்ல வாளை எடுத்தான்.  வசுதேவர் அவனிடம், கம்சா! உன் தங்கையால் உனக்கு ஒரு கெடுதலும் நேராது. அவளுக்குப் பிறக்கப்போகும் குழந்தைகளை உன்னிடமே ஒப்படைத்து  விடுகிறேன். அவர்களை நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள்!, என்று வாக்களித்தார். சமாதானமடைந்த கம்சன் அவர்கள் இருவரையும் சிறையில் அடைத்தான். அவர்களுக்குப் பிறந்த ஆறு குழந்தைகளை கம்சன் தன் கையாலே கொன்றழித்தான். பரம்பொருளான மகாவிஷ்ணு, ஏழாவது கர்ப்பத்தை வசுதேவரின் இன்னொரு மனைவியான ரோகிணியின் வயிற்றில் வளரச் செய்தார். அவரே, பலராமராக ஆயர்பாடியில் பிறந்தார். மகாவிஷ்ணு, எட்டாவது குழந்தையாக ஆவணி மாதம் அஷ்டமி நாள் நள்ளிரவில் வசுதேவர், தேவகி தம்பதியருக்கு குழந்தையாகப் பிறந்தார். அதே நேரத்தில் விஷ்ணுவின் மாயசக்தியான அம்பிகை, ஆயர்பாடியில் வசித்த நந்தகோபனுக்கும், யசோதைக்கும் மகளாகப் பிறந்தாள். வசுதேவரின் ஆத்ம நண்பராக விளங்கியவர் நந்தகோபன். குழந்தை பிறந்ததும், விஸ்வரூபம் எடுத்து தேவகி, வசுதேவர் தம்பதியருக்கு தெய்வீக வடிவத்தைக் காட்டியது. நான்கு கைகளிலும் சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை மலர் ஒளிவீசின.

மஞ்சள்நிறப் பட்டாடை, ஸ்ரீவத்சம், கவுஸ்துபமணி ஆகியவையும் அவருக்கு அழகு செய்தன. சிறையில் இருந்த தேவகியும், வசு தேவரும் பரம்பொருளே தங்களுக்குப் பிள்ளை யாகப் பிறந்திருப்பதை அறிந்து மகிழ்ந்தனர். அவர் வசுதேவரிடம், தந்தையே! என்னை ஆயர்பாடிக்கு எடுத்துச் செல்லுங்கள். உங்கள் நண்பர் நந்தகோபரின் மனைவி யசோதைக்குப் பிறந்த யோக மாயா என்னும் பெண் குழந் தையை இங்கு கொண்டு வந்து விடுங்கள், என்று கட்டளையிட்டு,தன் தெய்வீகக்கோலத்தை மறைத்து,சாதாரணக் குழந்தையாக மாறினார். அப்போது சிறையின் கதவுகள் தானாகத் திறந்தன. காவலர்கள் தூக்கத்தில் ஆழ்ந்தனர். தனக்கு பிறந்த கண்ணுக்கு கண்ணான கண்ணனைத் தூக்கிக் கொண்டு வசுதேவர் ஆயர்பாடிக்குக் கிளம்பினார். அப்போது பலத்த மழை பொழிந்தது. ஆதிசேஷன், குழந்தை நனையாதபடி குடையாக வந்து நின்றார். யமுனை ஆறு இரண்டாகப் பிளந்து வழி விட்டது. அதை எளிதில் கடந்த வசுதேவர், நந்தகோபன்மாளிகையில் கண்ணனை ஒப்படைத்து விட்டு, யோகமாயாவை எடுத்துக் கொண்டு மதுரா வந்து சேர்ந்தார். கம்சன் குழந்தையைக் கொல்ல உள்ளே வந்தான். பெண் குழந்தை பிறந்துள்ளதை எண்ணி ஏமாந்தான். ஏனெனில், ஆண் குழந்தையால் மட்டுமே அவனுக்கு அழிவு ஏற்படும் என்பது அசரீரி வாக்கு. இருப்பினும், சந்தேகத்துடன் அந்தப் பெண் குழந்தையின் கால்களைப் பிடித்து சுழற்றி வானில் வீசினான். அவள் காளியாய் மாறி, உன்னைக் கொல்லப்பிறந்த கண்ணன் ஆயர்பாடிக்கு சென்று விட்டான், என்று எச்சரித்து மறைந்தாள். இவ்வாறு அநியாயத்தை ஒழிக்க அவதரித்த கண்ணன் பிறந்த நாளையே கிருஷ்ண ஜெயந்தி என்று கொண்டாடுகிறோம். இந்நாளில் பாகவதம், பகவத்கீதை ஆகியவற்றை பாராயணம் செய்து பூரண அருள் பெறுவோம்.

எவ்வாறு வழிபட வேண்டும்: பொதுவாக குழந்தை கிருஷ்ணனுக்கு விருப்பமான பட்சணங்கள், வெண்ணெய், பால், திரட்டுப்பால், பழங்கள் ஆகியற்றை வைத்து, கிருஷ்ணன் காலடி வரைந்து வழிபடுவதே எங்கும் சகஜமாக இருக்கிறது. அறிவாற்றல், நற்புத்தி, நேர்மை, சமயோஜித புத்தி ஆகியவற்றின் மொத்த வடிவமான பகவானை வழிபட்டு அவர் காட்டிய கீதை வழி நடக்க முயற்சிப்பதே இப்பண்டிகையின் தத்துவார்த்தம்.
உங்களுக்கு பிடித்த சொல் பயமா? அபயமா?

அ என்ற முதலெழுத்துக்கு அபார சக்தி உண்டு. ஒரு வேலையைச் செய்கிறோம். திருப்தி என்றால் கேட்பதற்கே சந்தோஷமாக இருக்கிறது. அந்த வார்த்தையின் முன்னால் அ சேர்த்து விட்டால் முகத்தை சுளிக்க வைத்து விடுகிறது. இதுபோல பயம் என்ற சொல் மற்றவர்களிடம் நம்மைத் தலை குனிய வைக்கிறது. பயப்படுபவனை கோழை, நம்பிக்கையில்லாதவன் என்றெல்லாம் திட்டுகின்றனர். இவர்கள் இறைவனைச் சரணடைந்து விட்டால் அவன் பயம் என்ற சொல்லுடன் அ  வை சேர்த்து அபயம் அளித்து விடுகிறான். அதாவது, படைத்தவன் இருக்கான் பார்த்துக் கொள்வான் என்று செயல்பாட்டில் இறங்குபவர்களுக்கு பயமே இருப்பதில்லை. ஆக, அ என்ற எழுத்து செய்யும் வேலையைக் கவனித்தீர்களா! அதனால் தான் வள்ளுவர் திருக்குறளை அகர முதல எழுத்தெல்லாம் என்று ஆரம்பித்திருக்கிறார் போலும்!
கடவுளின் ஆயுதங்களை பூஜிப்பது சரியா?

ஆயுதங்களை தனித்து பூஜிப்பது இந்து மதத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த கலாசாரம். தீயசக்திகளை ஆயுதங்களைக் கொண்டே தெய்வங்கள் அழித்திருப்பதாக புராணங்கள் வாயிலாக அறிகிறோம். இந்த ஆயுதங்களை தெய்வமாக வழிபடுவதும், அரசனின் போர்வாளை அவ்வரசனாக எண்ணுவதும் மரபு. ராஜஸ்தான் பகுதி அரச பரம்பரையினர் மணமகன் இல்லாத போதும் கூட அவனது போர்வாளை மணமகனாக எண்ணி, மணமகளை மாலையிடச் செய்வர். இதுபோலவே முருகப்பெருமானின் வேலாயுதமும், பெருமாளின் சங்கு, சக்கரமும், சிவசக்தியின் சூலாயுதமும், இன்னும் பிற தெய்வங்களின் ஆயுதங்களும் பூஜைக்குரியவனாக அமைந்துள்ளது. இந்த அடிப்படையில் தான் ஆயுதபூஜை கொண்டாடுகிறோம்.
கோயிலுக்கு செல்ல இயலாதவர்களுக்கு மட்டும்!

வீடுகளில் விரதம் இருப்பவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கோயிலுக்கு செல்ல நேரம் கிடைக்காமல் இருக்கலாம். சிலருக்கு உடல்நிலை ஒத்துழைக்காது. இதற்காக வருத்தப்பட வேண்டியதில்லை. குத்துவிளக்கில் ஒரு முகம் அல்லது ஐந்து முகம் ஏற்றிவைத்து அதை மூன்று முறை வலம் வந்தாலே கோயிலுக்கு சென்று வந்ததாக பொருளாகும். ஆனால் இந்த சடங்கை கோயிலுக்கு செல்ல முடியாத பட்சத்தில் மட்டுமே செய்ய வேண்டும். கோயிலுக்கு செல்ல நேரமிருந்தும் வீட்டில் இந்த வழிபாட்டை செய்யக்கூடாது.
பாலுக்குள் இவ்ளோ இருக்கா?

பசுகள்  ஒன்றும் அறியாத ஜீவன்கள். அவற்றை பராமரித்து, அவற்றிடம் உள்ள பாலை பயன்படுத்தி, நல்ல பலனைப் பெறுவது எப்படி என்று உபதேசிப்பவன் கோபாலன். பால் என்றால் உள்ளம் என்று பொருள். முதலில் உள்ளத்தை பால் போல் சுத்தமானதாக்க வேண்டும். கோபாலனை அண்டி பக்தி என்னும் தீயில் அதை பதமாக காய்ச்ச வேண்டும். சாந்தத்தைக் கொண்டு உறை ஊற்றி தயிராக்க வேண்டும். இதயம் என்னும் குடத்தில் தயிர் ஊற்றி அது உறைந்ததும், பக்தியென்ற மத்தைக் கொண்டு கடைந்து, பூத்துவரும் வெண்ணெயைப் போன்ற அனந்தசயனனான பரமபுருஷனைக் காண வேண்டும். தயிரில் பால், வெண்ணெய், நெய் ஆகிய முப்பொருளும் அடங்கியிருந்தாலும், அவற்றை தக்க முறைகள் கொண்டே தனித்தனியாக்க முடியும் என்பது உண்மை. அதைப்போலவே நம் இதயத்தில் உறைந்திருக்கும் கடவுளை நாம் காண வேண்டுமானால், தக்க முயற்சிகள் எடுத்தால் தான் இயலும்.

-காஞ்சிப்பெரியவர்
வாழைப்பழத்தின் மகிமை தெரியுமா?

வாரம் ஒரு நாள் முழுவதும் வாழைப்பழங்களாகவே உண்டு வேறு எந்த உணவுகளையும் பானங்களும் அருந்தாமல் உபவாசம் போல் இருக்கலாம். நம் உடலில் சேர்ந்துவிடும் அமிலங்களை அழித்து வெளியேற்றுவதில் வாழைப்பழம் ஈடு இணைஇல்லாமல் செயல் புரிகிறது, இதர உணவுகளுடன் உண்ணப்படும் வாழைப்பழம் முழுமையாக செயல்பட இயலுவதில்லை. ஒருநாள் முழுவதும் வாழைப்பழம் மட்டும் உண்டால், மிக விரைவில் ரத்தம் சுத்த மடையும் இதேபோல், சாத்துக்குடி மட்டும் ஒருநாள் முழுவதும், ஆரஞ்சுப் பழம் மட்டுமே உண்டாலும் இதே பலன் கிடைக்கும். பழங்கள் எதுவானாலும் பழங்களுடன் தண்ணீர் அல்லது வேறு உணவுகளை உண்ணுதல் கூடாது. பழம் சாப்பிடுவதற்கு சுமார் 30 நிமிடங்களுக்கு முன்னாலும், 30 நிமிடங்களுக்குப் பின்னாலும் தண்ணீர் போன்றவை அருந்தலாம். எந்த வகை பழமானாலும் அதனுடன் வேறு பானங்களோ தண்ணீரோ சேர்ப்பதினால் பழங்களின் தன்மை கெட்டு விடுகிறது. அதனால் பழங்களின் பயன்களை நாம் அடைய முடியாது. தனியாக பழங்களை மட்டுமே உண்டால் முழுப்பயனும் கிடைக்கும்.
கோயிலில் மற்றவர் ஏற்றிய விளக்கில் நாம் விளக்கு ஏற்றலாமா?

பிறர் ஏற்றிய தீபம் என்பதால் அதற்கு ஏதாவது தோஷம் ஏற்படாது. அதுபோல, நாம் தீபம் ஏற்றினால் நமக்கு கிடைக்கவேண்டிய பலன் பிறருக்கும் போய்விடாது. சிவன் கோயில் சந்நிதியில் தீபம் எரிந்து கொண்டிருந்தது. ஒரு எலி அந்த விளக்கில் இருந்த நெய்யைக் குடிக்க வாயை வைத்தது. எதிர்பாராமல் எலியின் வாய்பட்டு அணைய இருந்த திரியில் சுடர், தூண்டப்பட்டு பிரகாசமாக எரிந்தது. இந்நிகழ்ச்சி பெரிய புண்ணியச் செயலாக அமைந்து, மறுபிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறந்தது. சுவாமி சந்நிதியில் விளக்கேற்றுவது தான் முக்கியமே தவிர மற்ற சந்தேகம் எதுவும் வேண்டாம்.
கோபத்தை இறைவன் ஏன் படைத்தான்?

வேண்டாத குணம் என்று கோபத்தைச் சொல்கிறோம். தீ போன்ற கோபம் நம்மிடம் மறைந்து போகட்டும் என்ற பொருளில், அவ்வை ஆறுவது சினம் என்று நமக்கு வழிகாட்டுகிறாள். ஆனால், அக்கோபத்தையும் துதிக்கிறது ரிக்வேதம். கோபத்தை தேவதையாக்கி இரு சூக்த மந்திரங்கள் இடம்பெற்றுள்ளன. முதல் சூக்தத்தில், பலசாலிகள் எல்லாரையும் விட மிகுந்த பலசாலியான கோபமே! இங்கு வருவாயாக! நண்பனுக்காகத் தவத்தினால் எங்களுடைய எதிரிகளை விரட்டி விடுவாயாக. எல்லா எதிரிகளையும், அரக்கர்களையும் கொல்லும் கோபமே! எங்களுக்கு எல்லாச் செல்வங்களையும் கொண்டு வரவேண்டும் என்கிறது. மற்றொரு சூக்தம், எல்லாவற்றையும் வெல்லும் கோபமே! தீயைப் போல ஜொலித்துக் கொண்டிருக்கும் உன்னை எங்களுடைய படைத்தலைவனாக இருக்கும்படி அழைக்கிறோம். எங்களுடைய எதிரிகளைக் கொன்று வீழ்த்த வேண்டும். அவர்களுடைய செல்வங்களை எல்லாருக்கும் பகிர்ந்து கொடுப்பாயாக. உன்னுடைய வலிமையால் எங்களின் எதிரிகளை விரட்ட வேண்டும், என கோபத்தைப் துதிக்கிறது. கடவுள் ஏன் கோபத்தை தந்திருக்கிறான் தெரியுமா? எந்த உணர்வும் நன்மைக்குப் பயன்படுமானால், அது அருளின் வடிவமே! அதனால் தான் கோப தேவதையிடம் நல்லவர்கள் வாழவும், தீயவர்கள் அழியவும் ரிக் வேதம் வேண்டுகிறது. பிறர் நன்மைக்காக கோபப்பட்டால் அதில் தவறில்லை.
மாலையில் விளக்கேற்றிய பிறகு தண்ணீர், உப்பு பிறருக்கு தரலாமா?

விளக்கேற்றிய பிறகு, நம் வீட்டு வாசலில் ஒருவர் மயங்கிக்கிடக்கிறார் என்றால் தண்ணீர் கொடுக்க வேண்டும். உப்பெல்லாம் இப்போது யார் கேட்டு வருகிறார்கள்! உப்பு லட்சுமியின் அம்சம் என்பதால் இப்படி சொல்வதுண்டு. பகலிலேயே யாரும் கேட்டு வந்தாலும் கூட, கடையில் போய் வாங்கிக் கொள்ளுங்கள் என சொல்லி விடுங்கள். உதவுவது என்பது வேறு, கடன் கொடுப்பது என்பது வேறு.
பொறாமைக்காரர்களால் தொல்லையா?

வீட்டிலோ, பணியிடத்திலோ, தொழிலிலோ, உறவிலோ நாம் அறிந்தோ அறியாமலோ பொறாமைக்காரர்கள் முளைத்து விடுகின்றனர். காலப்போக்கில் இவர்கள் எதிரிகளாகக் கூட மாறி விடுகின்றனர்.  நான் யாருக்கும் ஒரு கெடுதலும் நினைக்கலே! ஏன் எனக்கு மட்டும் எதிரிகள் முளைக்கிறார்கள்! என்று சொல்லி வருத்தப்படுவர்கள் ஏராளம். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க சக்கரத்தாழ்வார், யோகநரசிம்மர் வழிபாடு உகந்தது. சனிக்கிழமைகளில் 12 முறை சக்கரத்தாழ்வார் சந்நிதியை வலம் வந்து வணங்கலாம். துளசிமாலை சாத்தி, கல்கண்டு பிரசாதத்தை நிவேதனம் செய்து பக்தர்களுக்கு கொடுங்கள். யோகநரசிம்மர் படத்தை கிழக்கு முகமாக வைத்து மாலையில் தீபமேற்றுங்கள். யோக நரசிம்மம் சரணம் பிரபத்யே என்று 108 முறை உள்ளம் உருகிச் சொல்லுங்கள். பொறாமைக்காரர்களின் துன்பத்தில் இருந்து விடுதலை பெறுவீர்கள்.