ஓம் நமோ பகவதே தத்தாத்ரேயாய:
அத்திரி மகரிஷி - அனுசூயா தம்பதிகள் காட்டில் குடில் அமைத்து வசித்தனர். அவர்களுக்கு மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் குழந்தைகளாகப் பிறக்க வேண்டும் என்பது ஆசை. இதற்காக கடுமையாகப் பிரார்த்தித்து வந்தனர். கடவுளே குழந்தையாகப் பிறப்பதென்றால் சாமான்யமா? அதிலும் மும்மூர்த்திகளும் ஒன்றுசேர்ந்து வந்தாக வேண்டுமே! மூவரும், அவர்களது பக்தியைச் சோதிக்க முடிவெடுத்தனர். துறவிகள் போல் வடிவெடுத்து, அத்திரியின் குடில் முன் வந்தனர். அத்திரி அப்போது வீட்டில் இல்லை. அவர் மனைவி அனுசூயா தர்மபத்தினி. கணவருக்கு தினமும் பாதபூஜை செய்து, அந்த தீர்த்தத்தை தலையில் தெளித்த பின்பே பணிகளைத் துவங்குவாள். அந்த தீர்த்தம் எப்போதும் வீட்டில் இருக்கும்.
அனுசூயா வந்தவர்களை வரவேற்றாள்.துறவிகள் தங்களுக்கு பசிப்பதாகக் கூறினர். உள்ளே உணவெடுக்கச் சென்ற அனுசூயாவிடம், தாயே... எங்களிடம் ஒரு பழக்கம் உள்ளது. எங்களுக்கு யார் உணவிட்டாலும், திகம்பர (நிர்வாணம்) நிலையிலேயே வாங்குவது வழக்கம். அப்படி செய்தால் மட்டுமே உணவு பெறுவோம்... என்றனர். அனுசூயா நல்லறிவு மிக்கவள். சாதாரண மனிதர்கள் இப்படி கேட்க மாட்டார்கள். இது ஏதோ தெய்வ சங்கல்பம் என நினைத்தவள், சற்றும் பதட்டமின்றி, அதற்கென்ன... அவ்வாறே உங்கள் பசியை தீர்த்து விடுகிறேன்... என்றவள் வீட்டுக்குள் சென்றாள். கணவரின் பாத தீர்த்தத்தை எடுத்து வந்து,இறைவா... நான் என் கணவர் மீதும், உன் மீதும் கொண்ட பக்தி உண்மையென்றால், இந்த துறவிகளை குழந்தைகளாக மாற்று... என்று கூறி அவர்கள் மேல் தெளித்தாள்.
அந்த பத்தினி தெய்வத்தின் பக்தியால், மூவரும் குழந்தைகளாகி விட்டனர். அவர்கள் விரும்பியபடியே அவர்களுக்கு பாலூட்டி, பசி தீர்த்தாள். அத்திரி முனிவரும் வந்தார். நடந்ததைக் கேட்டார். தன் ஞான திருஷ்டியால், வந்திருப்பவர்கள் மும்மூர்த்திகள் என்பதைப் புரிந்து கொண்டார். அவர்களை அன்புடன் அணைத்தார். அந்த குழந்தைகள் மூன்று தலையும், ஆறு கைகள் மற்றும் ஓருடலும் கொண்டதாக மாறின. இந்த தகவல் நாரதர் மூலம், மூன்று தேவியருக்கும் தெரிய வரவே, அவர்கள் அனுசூயையிடம் வந்து, தங்கள் கணவன்மாரை திருப்பித்தர வேண்டினர்.தேவியரே... இந்தக் குழந்தை எங்களிடமே வளர வேண்டும் என்பது எங்கள் விருப்பம். அதை நிறைவேற்றி வைத்தால் உங்கள் கணவன்மாரைத் திருப்பித் தருவேன்... என்றாள். மூன்று தேவியரும் அதற்கு ஒத்துக் கொள்ளவே, அனுசூயை மும்மூர்த்திகளை மானசீகமாக வேண்டினாள். அப்போது மூன்று தெய்வங்களும் காட்சியளித்து, தங்கள் சக்தியாகிய அக்குழந்தை ஒரு முனிவராக விளங்குவான்... என்று கூறி ஆசியளித்து, குழந்தைக்கு, தத்தாத்ரேயன் என்று பெயர் சூட்டினர். தத்தாத்ரேயன் என்றால், மும்மூர்த்திகளுக்கு சமமானவர் என்று பொருள்.
நாமும் தத்தாத்ரேயரை வழிபட்டு மும்மூர்த்திகளை வழிபட்ட பலனை பெறுவோம்.
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
சனி, 12 டிசம்பர், 2020
ஓம் நமோ பகவதே தத்தாத்ரேயாய:
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக