ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

உபவாசம் என்றால் என்ன?

தபோவனத்தில் ஒரு சம்பவம் : ஞானானந்த கிரி சுவாமி தபோவனத்தில் இருந்த போது இரண்டு பாகவதர்கள் வந்தார்கள். அன்று இரவு முழுதும் திவ்யநாம சங்கீர்த்தனம் நடந்தது.
பஜனை முடிந்ததும் சுவாமியும் பாகவதர்களும் ஓய்வெடுக்க சங்கல்பித்தார்கள். சுவாமி பாகவதர்களை பார்த்து "நன்கு ஓய்வெடுப்போம். நாளை இருந்து பூஜைகளைப் பார்த்து ஆகராம் செய்து பிறகு போவோம்" என்று சொன்னார்.

இருவர் முகத்திலும் ஏதோ கலவரம். புரிந்து கொண்ட சுவாமி என்ன என்று கேட்டார். உடனே அவர்கள் "நாளை ஏகாதசி வ்ரதம். முழுநாள் சாப்பிட மாட்டோம்" என்றார்கள். சுவாமியும் குறும்புத்தனமாக ஒரு சிரிப்பு சிரித்து விட்டு "சரி. நாளைய உபவாசம் நம்முடனேயே தபோவனத்தில் இருக்கட்டும்" என்று ஆணையிட்டார்.
மறுக்க முடியாமல் ஒப்புக்கொண்டு இரவு ஓய்வெடுத்தனர். மறுநாள் காலை விடியும் முன் எழுந்து நீராடி சுவாமியின் தரிசனத்திற்காக காத்திருந்தார்கள்.
ஞான பிழம்பாய் சுவாமி தன் அறையை விட்டு வெளியில் வந்தார்.

காலை தனுர் மாத பூசை முடிந்தது.
பாகவதர்கள் இருவரையும் சுவாமி அழைத்தார். தனுர் மாத பூஜை முடிந்தது. பொங்கல் பிரசாதம் வாங்கி சாப்பிட்டு சுவாமியின் அறைக்கு வெளியில் நிற்போம். சுவாமி இருவரையும் கூப்பிடும் என்று சொல்லி வேறு எதுவும் பேச சந்தர்ப்பம் கொடுக்காமல் அறைக்கு சென்றார். குருநாதரின் வார்த்தையை தட்ட முடியாமல் பாகவதர்கள் இருவரும் பிரசாதம் சாப்பிட்டு சுவாமியின் அறைக்கு வெளியில் சுவாமியின் அழைப்பிற்காக காத்திருந்தனர்.
சுவாமி அழைத்தார். ஓடினர் இருவரும். "பாத பூஜையை தரிசித்து விட்டு மீண்டும் வருவோம்" என்றார். அப்படியே செய்தனர். மதியம் ஆயிற்று. மீண்டும் சுவாமி அழைத்தார்.

"மதியம் உணவருந்தி வருவோம்" என்றார். மறுக்க முடியாமல் அவ்வண்ணமே செய்தனர். உத்தரவுக்காக காத்திருந்தனர். மாலை ஆனது. சுவாமி அழைத்தார். "சாய பூஜையை தரிசிப்போம்" என்று ஆணையிட்டார். பைரவர் பூஜை முடிந்தவுடன் சுவாமி இருவரையும் அழைத்தார் "இரவு உணவருந்தி சுவாமி அறைக்கு வருவோம்" என்று சொன்னதும் இருவரும் அவ்வன்னாமே செய்தனர்.

இரவு உணவு முடிந்து சுவாமியின் அறைக்கு வந்த இருவரையும் பார்த்து "இன்னைக்குத்தான் நாம உண்மையில ஏகாதசி விரதம் இருந்தோம்" என்று சொன்னார் சுவாமி. இவர்களுக்கு ஒன்னும் புரியவில்லை.

"இன்னைக்கு முழுதும் சுவாமி எப்போ கூப்டுவாரோன்னு முழுசா இருவரின் மனசும் ஸ்வாமியிடமே இருந்தது. எங்கு சென்றாலும் சாப்பிடும் போது கூட சுவாமி எப்போ கூப்பிடுவார்ன்னு சதா சுவாமியையே ஸ்மரணை இருந்தது. இது தான் உபவாசம் என்பது. உடம்பை பட்டினிப்போட்டு வருத்துவதில் ஒன்னும் பயன் இல்லை. உபவாசம் என்றால் அருகில் வாசம் செய்வது என்று பொருள். எப்பொழுதும் இறைவனை மனதில் ஸ்மாரிதுக்கொண்டு எப்பவும் இறைவன் அருகிலேயே இருப்பது தான் உபவாசம் என்பது. அதை எந்த வேலை செயும் போதும் கடைபிடிக்கலாம். உடம்பைப் பட்டினி போட்டு தான் என்று இல்லை" என்று சுவாமி சொன்னார்.

கருத்துகள் இல்லை: